விஷ்ணு வந்தார்

0 comment

“மகா விஷ்ணு எலைக்கு ஆள் சொல்லீட்டேளா? போன வாட்டி மாதிரி விட்டு போய்டப் போறது? இந்த வாட்டி கண்டிப்பா வெறும்ன விடமுடியாதுனு எங்காத்துக்காரர் சொல்லிட்டார்.”

“ச்ராத்த பெரியவாளோட கொள்ளுப் பேரன ஒக்காத்தி வைக்கலாமே மாமி”

“என் புள்ள தான் ஆஸ்திரேலியா போயிட்டானே. இருந்துருந்தா பேரனை ஒக்காத்தி வச்சுருப்பேன். மாமா விடாப்பிடியா இருக்கார். மகாவிஷ்ணு வேணும்னு. போன வருஷம் வரை எப்படியோ பொறுத்துண்டுட்டார். இந்த வாட்டி கங்கணம் கட்டிண்டு நிக்கறார்.”

“சரி மாமி”

“என்ன சரி மாமின்னு இழுக்கறேள். ஒரு வாரம் முன்னாடி உங்கள்ட்ட சொல்லிருந்தேனோல்லியோ?”

“அது இல்ல மாமி. ஆள் கெடைக்க மாட்டேங்கறாளே”

“எப்படியாவது அரேஞ்ச் பண்ணிடுங்கோ.”

“பண்ணி வைக்கிறவருக்குலாம் சொல்லிட்டேளா மாமி?”

“இது என்ன புது கேள்வி? பண்ணி வைக்குறதுக்கு வாடிக்கையா வர பாலு சாஸ்திரிகள். விஸ்வேதேவர்க்கு உங்கள்ட்ட சொல்லிருக்கு.

பித்ரு பிராமணருக்கு எப்பவுமே வரப்போற அந்த வயசானவர் தான். மகா விஷ்ணுக்குத் தான் கை கொறயறது. அதுக்கும் நீங்களே வழிபண்ணிட்டேள்னா நல்லா இருக்குமே. நாலு எடத்துக்கு போறவராச்சே”

“சரி மாமி. ஏற்பாடு பண்ணிடறேன். கவலப்படாதேள். வைங்கோ”

“நாளானிக்கு காலம்பற ஒம்பது மணிக்குலாம் அழைச்சிண்டு வந்துடுங்கோ. மறந்துடாதேள்”

விஸ்வநாதய்யர் போனை வைத்தார். முன்பே சொல்லியிருக்கிறாள். இவர் தான் நினைவில்லாமல் விட்டுவிட்டார். அவரைப் போன்றே திவசத்திற்கு சாப்பிடப் போகும் அவரது வட்டாரத்திற்கு தெரிந்த இரண்டு மூன்று பேரிடமும் கேட்டுப் பார்த்தார். அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. திடீரென்று இஞ்சிக்குடி சாம்பமூர்த்தியின் ஞாபகம் வந்தது. சாம்பமூர்த்தி அவரைவிட வயதில் இளையவன். ஐம்பதை நெருங்கும் அகவை. முன்னரே அவருக்கு அவன் நன்றாக பழக்கம். கடைசியாக ராமநவமி நாளில் அதம்பாவூர் கோதண்டராமர் கோயிலில் வைத்து அவர் அவனைப் பார்த்தது. கோயில் குருக்களுக்கு ஒத்தாசையாக இருந்தான். நல்ல உழைப்பாளி.  தனிக்கட்டை தான். தாமதமாகத் தான் அவனுக்குத் திருமணம் நடந்தது.  மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னால் படுத்தப் படுக்கையாய் கிடந்து இறந்து விட்டாள். ஒரே ஒரு மகன். வயது பத்து இருக்கும். அவனும் கும்பகோணம் ராஜா பாடசாலையில் வேத அத்யயணம் செய்வதாகக் கேள்வி. “ஊர்ல ஏதாவது காரிய-தாரியம்னா சொல்லி விடுங்கோண்ணா. உபகாரமா இருப்பேன்” என்று அவரிடம் கேட்டிருந்தான். குடவாசல் நன்னிலம் வட்டாரத்துக்குள் தான் எங்கேயாவது சுழன்று கொண்டு இருப்பான். அலைச்சலில் தான் அவனுக்கு வரும்படியே. அவன் நாளை மறுநாள் சும்மா இருப்பானா என்று தெரியவில்லை. கேட்டுப் பார்ப்போமே என்று அவனுக்கு போன் செய்தார்.

“என்னடா சாம்பா. செளரியமா?”

“செளரியத்துக்கு என்ன அண்ணா கொறவு இங்க? உங்கள மாதிரி பெரியவா அனுக்ரஹம்” என்று சிரித்தான் சாம்பமூர்த்தி மறுமுனையில்.

“சரி ஒன்னு கேக்கணும். தவசத்துக்கு சாப்ட போற வழக்கம் உண்டா ஒனக்கு?”

“இல்லண்ணா. கோயில் கைங்கரியம்ன்னா கூடமாட செய்வேன். இது பழக்கமில்லையே.”

“நா கூப்டா வருவியா இப்போ?”

“ஸ்ராத்த மந்திரம் கூட பழக்கப்படுத்திக்கலையே அண்ணா நான். இத தெரிஞ்சு தான் எங்கப்பா சொல்வார். வேதத் தவளை தவழாத குளம்டா உன் நாக்கு. இவனுக்கு நாக்கப் பழக்கறதுக்கு பதிலா கையப் பழக்கிக்க சொல்லணும்னு வேடிக்கையா அவர் சொல்றதுண்டு” என்று சொல்லி தயக்கச் சிரிப்பு சிரித்தான் சாம்பமூர்த்தி.

“நாக்குல வேத மந்தரம் தவழலனா என்னடா? வேத மந்திரத்த அவிர்பாவமாக்கி எழும்பியிருக்கு இந்த முழுப் பிரபஞ்சம். தான்யம் செடி கொடி காய் கனியெல்லாம். அதப் புசிக்க ஒரு நாக்கு வேணும். அதுக்கு நாக்குல ருசி தவழ்ந்தா போதும். நாவுலேந்து எழும் வேதம் மறுபடியும் நாவுக்கே வர்றதுக்கு இப்படியொரு ரூட்டு உண்டு. அப்படி வந்து சேந்தா போறாதாடா. அதுக்கு ஒரு சான்ஸுடா சாம்பா.”

“சரிண்ணா. நீங்க சொல்றேள். நான் வரேன்”

“நீ ஒன்னும் கவலப்படாத. த்ருப்தியான போஜனம் உண்டு. கூடவே கைக்கு மேல நல்ல தக்ஷணையும் உண்டு. தக்காளி சுவாமிநாதய்யர் தெரியுமா? பட்டாமணியாரா இருந்தவர். தேதியூர்-விஷ்ணுபுரம் பக்கம்லாம் ப்ரசித்தி. கேள்விபட்டுருப்பியே? அவருக்கு தான் சிராத்தம். ”

“எல்லா ஊருக்கும் போய்ருக்கேனே ஒழிய ஒத்த கிணத்துத் தவளை மாதிரி தான்னா நானும்.  போனா போன எடம். வந்தா வந்த எடம் தான். உள்ளூர் வெவகாரங்கள்லாம் தெரிஞ்சுக்கறது இல்ல. எனக்கு எங்கண்ணா தெரிய போறது?”

“அது சரி. கர்மமே கண்ணு ஒனக்கு. அவர் புள்ள முத்துராமன்னு பேரு. ப்ராபல்யமான ஆடிட்டர் மெட்ராஸ்ல. அவர்தான் பண்றவர். வருஷத்து ஒரு வாட்டி இங்க அவாத்துக்கு வருவார். அவாத்து மாமி அதாவது முத்துராமனோட ஆம்படையா வாலாம்பாள்னு பேரு. அவ தான் அப்பப்போ இங்க வந்துட்டு போவா. அவதான் ஆள்படை வச்சு இந்த ஆத்த பாத்துண்டுருக்கறது. இப்போ முத்துராமன் பத்து பதினஞ்சு நாளா தகப்பனார் ஸ்ராத்தத்துக்காக வந்துருக்கார். இது நாள் வரை மகா விஷ்ணு எலைக்கு தனியா ஆள் ஒக்காத்தி வச்சதில்ல. இந்த வாட்டி வேணுங்கறார்னு சொன்னா மாமி. அதான் கை கொறயறதுன்னு உன்ன கேட்டுப் பாக்கறேன்”

“என்னிக்குண்ணா சிராத்தம்?”

“நாளானிக்குடா. காலம்பற ஒன்பது ஒன்பதரை மணிக்குலாம் அவாத்துல இருக்கணும்”

“சரிண்ணா, வந்துடறேன்.”

“காரைக்கால்லேந்து வர MOH காலம்பற ஆறரை மணிக்கு டான்னு பூந்தோட்டத்துல வந்து நிப்பான். அதப் புடிச்சு விஷ்ணுபுரத்துக்கு வந்துடு. நம்பாம் தெரியுமோல்லியோ நோக்கு. மேல அக்ரஹாரத்து தெருல நொழஞ்சா வடவண்ட பக்கத்துல ஒம்பதாவது வீடு.”

“சரிண்ணா”

2

சாம்பமூர்த்தி அக்ரஹாரத்து தெருவை நிரப்பி வாரப்பட்டிருந்த ஆற்று மணலில் சைக்கிளை அழுத்த முடியாமல் அழுத்தி ஓட்டி வந்து கொண்டிருந்தான். இருசாரிகளிலும் அக்ரஹாரத்து பாணி ஓட்டு வீடுகள். கிட்டத்தட்ட நூறு வீடுகள் இருக்கும். ஒவ்வொன்றும் வெவ்வேறானவை. ஆனால் அதன் வடிவமைப்பில் ஒன்றானவை.

வாசத்திண்ணையில் உட்கார்ந்திருந்த விஸ்வநாதய்யர் சாம்பமூர்த்தியை கண்டுகொண்டு விட்டார்.

“ஆரது. இஞ்சிக்குடி சாம்பமூர்த்தி தானே” என்றார்.

அவன் தூரத்தில் இருந்தே சைக்கிளில் மணியடித்து “ஆமாண்ணா” என்றான்.

“வாடா வா. கரெக்ட் டைமுக்கு வந்துட்ட. உன்ன தான் எதிர்பார்த்துண்டுருந்தேன். என்னடா வேர்க்க விறுவிறுக்க வந்துருக்க.”

“சைக்கிள இந்த மணல் பாதையில மிதிக்க முடியலண்ணா அதான்”

“ஊர்லேந்தே சைக்கிள்ல தான் வந்தியா?”

“ஆமாண்ணா. உள்ளூர் கோயில் சாமிக்கு நித்யபடி. ஒரு கொடம் தண்ணி ஊத்தி வஸ்திரம் சாத்திட்டு வந்தேன். MOH-அ புடிக்க முடில. அடுத்த பஸ் வேற ரெண்டு மணி நேரம் கழிச்சு தான? அதான் சைக்கிள்லயே வந்துட்டேன்.”

“வயசாரதுடா நம்பளுக்குலாம். ரொம்ப சிரமப்பட்டுக்காத.”

சாம்பமூர்த்தி சைக்கிளை நிறுத்தினான்.

“சாம்பா, சைக்கிள வாசல்ல வுடவேண்டாம். ஸ்ராத்தம் முடிய உச்சி பகல் ஆய்டும். திண்ணையில ஏத்தி ஆலோடில வுட்ரு”

“சரிண்ணா”

“காப்பி தூத்தம் எதாவது சாப்டுறியா?”

“வேணாம்ணா. வந்த காரியத்த பாக்க போலாம்”

“சரி நீ ரெடி ஆய்க்கோ. ஆத்தங்கரைல போய் குளிச்சுட்டு அவாத்துக்கு போலாம். போகும்போது அந்தக் கோடியாத்து பெரியவரையும் அழச்சிக்கணும். மாமி நேத்தி ராத்தியே வஸ்திராதானத்துக்கு மூணு பேருக்கு உண்டான எட்டு முழம் கதர் வேஷ்டியும் அங்கவஸ்திரமும் குடுத்தனுப்பிருக்கா. கூடவே எண்ணையும் சீயக்காய்த் தூளும். எண்ணைய தலைக்குத் தேச்சு குளிச்சுட்டு வேஷ்டிய கட்டிக்கணும். செத்த இரு. அதயெல்லாம் படுக்கையுள்ல தான் எங்கேயோ வச்சேன். எடுத்துண்டு வரேன்” என்று உள்ளே போனவர், அவற்றைக் கொண்டு வந்து சாம்பமூர்த்தியிடம் தந்தார்.

சாம்பமூர்த்தியும் விஸ்வநாதய்யரும் கோடியாத்தை நோக்கிச் சென்றனர். இடிந்த ஒட்டுத் திண்ணை. பெயர்ந்து செங்கல் தெரிந்தது.

திண்ணை முழுதும் தூசு படிந்திருந்தது. வாசல் பக்கமாக உள் நுழைந்த போது புழுதி வீச்சம் எழுந்தது. கதவு பூட்டியிருக்கவில்லை.

ரேழியைத் தாண்டி வீட்டிற்குள் நுழைந்தனர். கூடத்தில் ஓரமாக ஒரு கட்டில். கூடத்தை ஒட்டியிருந்த முற்றத்தில் புளியம்பழம் காயப் போடப்பட்டிருந்தது. முற்றத்தை ஒட்டியிருந்த சுவரில் சுண்ணக்காரை உளுத்து கொட்டியிருந்து செங்கல் அடுக்கு தெரிந்தது. கூடத்து தரையிலும் சுவரிலும் சில இடங்களில் ஈரம்காத்துக் கொண்டு காணப்பட்டது. தூண்களில் கரையான் அரித்து இருந்தது. மேலிருந்த ஓடுகள் அது அமைந்திருந்த மரச்சட்டங்கள் விலகி உடைந்து அதன் செம்மண் உதிர்ந்து ஆங்காங்கே தென்பட்டது. அருகில் தாழிடப்படாத ஒரு அறையில் சடசடப்புச் சத்தம். சாம்பமூர்த்தி கதவிடுக்கு வழியாக எட்டிப் பார்த்தான். அத்தனையும் வெளவால்கள். வெளவால் வீச்சம் தாங்க முடியாமல் முகத்தை எடுத்துக் கொண்டான். நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நூலாம்படை மண்டியிருந்தது. இருவரும் அடுக்களைக்குள் நுழைந்தனர்.

அங்கே சாம்பமூர்த்தி அந்த முதிய பெரியவரைக் கண்டான். நெஞ்சாங்கூடு ஒடுங்கியிருந்து. முதுகுக் கூன் தெரிந்தது. தசைச் சுருக்கங்கள் எலும்பைக் கவ்வி பிடித்திருப்பது போன்ற தேகம்.  பேச்சு சுத்தமாக நின்று போயிருந்தது. முகத்தில் வெண்ணிற மென்மயிர் படர்ந்திருந்தது. கண்கள் கண்கூட்டுக்குள் புதைந்து இருந்தது. கண்களின் ஓரங்களில் பீளை கட்டியிருந்தது. உடலிலும் கைகால்களிலும் நடுக்கம் இருந்தது. தாடை தன்னிச்சையாக அசைந்து கொண்டிருந்தது. அவர் அப்போது விறகு அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். காது கேட்பது போல் தெரிந்தது. அவரது கால்களில் கொஞ்சம் தெம்பு எஞ்சியிருந்தது. அதனால் அவரால் நடமாட முடிந்திருந்தது. அவர் அழுவது மாதிரி அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. கண்ணீராலேயே கரைந்து விடுபவர் போல.

விஸ்வநாதய்யர் அவர் காதருகில் போய், “மாமா போவோமா?” என்றார். அவர் திரும்பிப் பார்த்தார். ஒரு மெல்லிய தலையசைப்பு. அதை விஸ்வநாதய்யர் புரிந்து கொண்டார். அவரை கைத் தாங்கலாக விஸ்வநாதய்யர் பிடித்து கூட்டிக்கொண்டு வந்தார்.

“சாம்பா, வீட்ட சும்மா வெறும்மன தாப்பா போட்டுட்டு வா.”

மூவரும் தெருவில் நடந்து ஆற்றங்கரை பக்கமாய்ச் சென்றனர். விஸ்வநாதய்யர் சாம்பமூர்த்தியிடம் சொன்னார். “இவர் வீழி சார். வீழிநாதன்ன்னு பேரு. நடுநிலைப் பள்ளிகளில வாத்தியாரா இருந்து ரிட்டயர்டு ஆனவர்.”

“எத்தன வயசு ஆறதுண்ணா?”

“80 தொடப் போறது”

“இந்த தள்ளாத வயசுலயும் நடமாட முடியறதே? புண்ணியம் பண்ணிருக்கனும். இவர பாத்துக்க ஆளில்லையா? வீடு கெடந்த கெடையப் பாத்தேன்”

“ஆமா, இவர் ஒண்டிக்கட்டை தான். இவரது 30 வயசுல இவரோட ஆம்படையா செத்துப் போய்ட்டா.  கொழந்தேளும் இல்ல.”

“அடப்பாவமே. எப்படி காலந்தள்றார்?”

“பென்ஷன் பணம் ஏதோ வரும். மிச்ச நேரங்கள்ல இப்படி தவசத்துக்குன்னு போய் அவா குடுத்தனுப்புற அரிசி பருப்புதான்”

“ஓ! இந்த முடியாத வயசுலயும் தவசத்துக்குலாம் போறாரா?”

“ஆமா. அவர் போய் தான் தீருவார்.”

“என்னண்ணா இப்படி சொல்றேள்? கெடைக்கற அரிசி பருப்புக்காக அப்படி சொல்றேளாண்ணா?”

“இல்ல. அதலாம் அவருக்கு ரெண்டாம் பட்சம் தான்.”

“அவர் ஆம்படையா எறந்ததுக்கு பின்னாடிலேந்து. அவர் ஸ்கூல்ல வேலைப் பார்த்துட்டு இருந்த போதும் கூட அவர்  தவசத்துக்கு சாப்பிடப் போயிண்டுருந்தார். முக்கியமா இந்த வட்டாரத்துல நடக்கும் எல்லா தகப்பனார் ஸ்ராத்தத்துக்கும்.”

“ஏண்ணா அப்படி?”

“அதான். தன் வம்சத்த விருத்தி பண்ண ஒரு புத்திரன் வாய்க்கல அவருக்கு. அவரை அப்பான்னு சொல்லக்க நாதியில்லாம போச்சேன்னு ஏக்கம். தாளமுடியல அவரால. அந்த ஏக்கம் தான் கண்ணுலேந்து ஜலம் ஜலமா வழியறது எப்போதும். அவரோட ஆம்படையா போன பிறகு, தந்தைமைனு ஒன்ன உணராமலேயே செத்துப் போய்டுவோமோனு நடுக்கம் ஏற்பட்டுடுத்து அவருக்கு. அதுலேந்து இந்த ஊர்க்காரா எல்லார்ட்டயும் ஒரு விஞ்ஞாபனம் வச்சார் கண்ணீர் மல்க.

“யாரொருத்தர் அவரோட தகப்பனார்க்கு சிராத்தம் பண்றாளோ அவா தகப்பனார் சார்புல ஸ்ராத்தத்துக்கு என்னை அழைங்கோ. நான் உயிரோடு இருக்கற வரை வரேன்னு கேட்டுண்டார். அதுபடி இந்த ஊர் அவருக்கு குடுக்கற மரியாதை அது. அவர் இந்த ஊர்டேந்து மொதலும் கடைசியுமா எதிர்பார்த்ததும் எதிர்பாக்குறதும் அதான்” விஸ்வநாதய்யர் தொடர்ந்தார். “ஸ்ராத்தத்துல பித்ரு பெரியவரா நின்னு அவா புள்ளைகள வாழ்த்துறதுல ஆசுவாசத்தயும் ஆறுதலையும் தேடிண்டார். புள்ள இல்லாத கொறய இப்படி தீத்துண்டார். அந்த நேரத்துல அந்த புள்ளைகள் எல்லாரும் இவரைத் தன் தகப்பனாராத் தானே பாத்தாகணும். அந்த விதத்துல உங்க ஊர்ளாமும் வந்துருப்பார் பித்ரு பிராமணனா. எல்லா ஊருக்கும் அலைவார் இதுக்காகவே”

சாம்பமூர்த்தி திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான். பெருமாள் கோயிலைக் கடந்து வலப்பக்கம் திரும்பி அவர்கள் ஆத்தங்கரையை அடைந்தனர். கொண்டு வந்தவற்றை ஈரம் படாமல் படித்துறையின் கட்டைச் சுவரில் வைத்தான் சாம்பமூர்த்தி. விஸ்வநாதன் பெரியவரை கடைசி படியில் உட்கார்த்தி வைத்தார். மூன்று பேரும் கொண்டு வந்த எண்ணெயை தலையில் வைத்து தேய்த்துக் கொண்ட பிறகு நீரில் இறங்கினார்கள். பெரியவர் நடுங்கிய கைகளுடன் படித்துறையைப் பிடித்துக்கொண்டு உள்ளிறங்கினார். படியோரமாகவே நின்று ஸ்நானம் செய்தார். மற்ற இருவரும் படித்துறையின் இருமருங்கிலும் படர்ந்திருந்த காட்டாமணி கொடிகளை விலக்கியவாறு ஆற்றின் நடுப்பகுதிக்குள் இறங்கினர். நடுவில் கழுத்து வரை ஆழம். பச்சை பசேலென்று சுழித்துக்கொண்டு சென்றது ஆறு.

விஸ்வநாதய்யர் பேச்சுக்கொடுத்தார். “சாம்பா, இந்த ஊரப்பத்தி நோக்கு என்னடா தெரியும்?”

“எனக்கு தெரிஞ்சதுலாம் விஷ்ணுபுரம் – பதினெட்டு வாத்திமா கிராமங்கள்ல ஒன்னு. அவ்ளோ தான்”

“ஆமாடா. நாங்களாம் வாத்திமா. வாத்திமான்னா யாரு ஏவா தெரியுமோல்லியோ? “மத்யமர்கள்” தான் மருவி வாத்திமா ஆய்ருக்கு. பெளத்த மதத்துல மாத்யாமீகம்னு ஒரு பிரிவு உண்டு. நாகர்ஜுனர் ஸ்தாபனம் பண்ணியது.

ஆதிசங்கரரின் ஆச்சாரியார் கெளடபாதர் பெளத்த மாத்யாமீகர்களோட தத்துவம், உப நிஷத்தின் “நேதி, நேதி” அதாவது “இதுவல்ல, இதுவல்ல” என்கிற தத்துவத்தோட ஒத்து இருக்கறதுனால எங்கள அத்வைதத்தோட இனணச்சுண்டார். பிறகு வந்த ஆதி சங்கரரும் எங்கள்டேந்து பாத்த ஒன்ன வச்சுண்டு கூட வச்சுண்டார். பிறகு, அவரோட காஞ்சிபுரத்துக்கு கூட்டிண்டு வந்தார். அப்புறம் தான் அங்கேந்து தஞ்சாவூர் ஜில்லாக்கு வந்து அரசலாற்று கரைகளில குடியேறினோம். மொத்தம் 18 கிராமங்கள். ஆனதாண்டவபுரம், முடிகொண்டான், கோனேரிராஜபுரம், மாபடுகை, செம்மங்குடி, மேலப்பாலையூர், சேங்காலிபுரம், தூத்துக்குடி, தேதியூர், விஷ்ணுபுரம், அரசவனங்காடு, திப்பிராஜபுரம், கூந்தளூர், மாந்தை, மொழயூர், புலியூர், சித்தன் வாழூர், மரத்துரை. இருநூறு முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி ராஜா காலத்துல மானியமா கொடுத்த நெலங்கள் இந்த கிராமங்கள். அத அக்ரஹாரங்களா ஆக்கிண்டோம் நாங்க“ என்று விட்டு கிழக்கு பார்க்க நின்று முழுக்குப் போட்டார்.

பின்னர் நீரில் இருந்து எழுந்துகொண்டு, “சரி அந்த ஆதி சங்கரர் எங்கள்ட பாத்த அந்த ஒன்னு என்ன சொல்லேன் பாப்போம்?” என்று இளித்தார்.

சாம்பமூர்த்தி புரிந்து கொண்டான். “உங்களவாளோட கெட்டிகாரத்தனம் தானே” என்று வஞ்சகச் சிரிப்பு சிரித்தான்.

விஸ்வநாதய்யர் எழுந்து சத்தம் போட்டுச் சிரித்தார்.

சாம்பமூர்த்தி, “வாத்திமாகாராள்லாம் முகஸ்துதி ப்ரீயர்கள்னு எங்கப்பா அடிக்கடி சொல்வார்”

“ஹஹஹா…” என்று நீரை உமிழ்ந்தார் விஸ்வநாதய்யர்.

“வேற என்னல்லாம் உங்கப்பா எங்களப் பத்தி சொல்லிருக்கார்?”

“வாத்திமாக்காரா நல்லா நொள்ளநொட்ட சொல்வாளாம். அது சரி இல்ல இது சரி இல்லன்னு.”

“ஹஹஹா…” விஸ்வநாதய்யர் சிரித்து மூழ்கியே விட்டார். ஆற்றொழுக்கோடு சென்றுவிட்டு சிறிது தூரத்தில் சாம்பமூர்த்தியைப் பார்க்க எழுந்துகொண்டார்.

“நேதி, நேதி” என்றுவிட்டு மீண்டும் ஒரு வாய்விட்ட சிரிப்பு.

சாம்பமூர்த்தியும் சிரித்துவிட்டான்.

“அப்புறம், எங்க ஜென்மாலாம் சாபல்யம் அடைய வேண்டாமாடா சாம்பா?”

“போதும்ண்ணா சிரிச்சது. ஆத்துல போற ஜலம் உள்ள போய் பொரை எறிடப் போறது.”

“போனா போறதுடா. ச்சீன்னு போப்போற பிறவிய சிரிச்சு போக்கிப்போமே என்னங்கற? சிரிச்சே செத்தானாம் சீதக்காமங்கலம் சிவனாண்டி. என்னோட ஆத்மா இந்த ஆத்தோட போகட்டுமே? என்ன இப்போ? ஹிஹிஹி ”

“அங்க வாத்தியார் சுக்லாம் பரதரம் கொட்டிக்கச் சொல்லிடப் போறார்.”

“ஆதி சங்கரரே என்ன சொல்லியிருக்கார்? ஆத்மா இந்த ஆத்து தண்ணி போல. பிரம்மம் கடல் போல. தோ காரைக்கால்ல கலக்கறதே இந்த ஆறு. அதுமாதிரி ஆத்மம் பிரம்மத்துல கலக்கறது. ஆகவே ஆத்மம் பிரம்மஸ்வரூபம் தான்”

“போதும் ஆத்தங்கரையில் நின்னுண்டு அத்வைதம்…”

சாம்பமூர்த்தி ஏதோ சொல்ல வந்தான். பின்னர் நிறுத்திக்கொண்டான்.

அதைப் புரிந்துகொண்டு விஸ்வநாதன், “இதுக்கும் ஒங்கப்பா எதானு சொல்லிருப்பாரே?”

“சரியா புடிச்சுட்டேள் போங்கோ. அவர் சொல்வார். ஆத்துச் சகதில கூட காலை விட்டுடலாம். அத்வைதத்துல விட்டுடக்கூடாதுன்னு”

“ஹிஹிஹி. ஆத்துச்சகதியும் அத்வைதமும். உங்கப்பா ரசப்பேச்சுக்காரர்.”

விஸ்வநாதன் தொடர்ந்தார். “இந்த ஆத்து பேரு தெரியுமோல்லியோ உனக்கு?”

“என்னண்ணா இது தெரியாமையா? அரசலாறு”

“அப்படின்னா அதுக்கு ஏன் அந்தப் பேரு?”

“அது தெரிலையே”

“அரி சொல் ஆறு தான் அப்படி ஆகிருக்கு. அரி’னா யாரு? மகா விஷ்ணு. இந்த ஊருக்கு விஷ்ணு வந்தார். சக்கரத்த தொலச்சுட்டு இங்க வந்து தவம் செஞ்சார். அதனால தான் இந்த ஊருக்கு விஷ்ணுபுரம்னு பேரு. தொலச்ச சக்கரத்த திரும்ப பெற வேண்டி, தோ அக்கரைல திருவீழிமல கோயில் சுவாமி இருக்காரே சிவபெருமான் மாப்பிள்ளை சுவாமி, அவருக்கு தினப்படியா பூஜை பண்ணினார். பூஜை பண்றவன் நீ உனக்குப் புரியும். அந்தப் பூஜைக்கு தான் எவ்ளோ தடங்கல். அபிஷேகத்துக்கு தண்ணியில்ல. அதுக்காக வேண்டிண்டார் காவேரி மாதாகிட்ட. அவள் தன்னை கிளை பிரிச்சு இந்த வழியா பாய்ஞ்சா. அரி சொல்லி வந்ததுனால இது அரிசொல் ஆறு. அப்றம் அரசலாறுனு மருவிடுத்து. ஓடற தண்ணீலாம் என்னன்னு நெனைக்கிற? மகா விஷ்ணுவோட சொல்லு. அதோட மட்டும் தடங்கல் நிக்கல. அவரோட தவம் பூரணம் அடைய ஒரு மலர் குறைஞ்சுது. அவரோட பூஜைக்கு 1008 பூக்கள்ல ஒரு பூ கொறஞ்சுது. ஒடனே என்ன பண்ணினார் தெரியுமா? அவரோட ஒத்த கண்ண புடிங்கி அர்ச்சனை பண்ணினார். உள்ளங்குளிர்ந்த ஈசன் சக்கரத்த கொடுத்துட்டார். இன்னும் அவர் சக்கரம் அருளிய பீடம் திருவீழிமிழலை வீழி நாதஸ்வாமி கோயில்ல இருக்கு.”

இருவரும் கரையேறினர். பெரியவரை விஸ்வநாதய்யரோடு சேர்ந்து சாம்பமூர்த்தியும் தூக்கி விட்டான். ஈரத்துணியை நீரில் அலசி பிழிந்து எடுத்துக்கொண்டனர். வஸ்திராதானத்து வேட்டியைப் பிரித்து பஞ்சகச்சமாக உடுத்திக்கொண்டனர். மற்ற இருவரும் பெரியவருக்கு வேஷ்டி கட்டிக்கொள்ள உதவி செய்தனர்.

சாம்பமூர்த்தியிடம் விஸ்வநாதன் சொன்னார். “ஸ்ராத்தத்துக்கு மூணு பிராமணாள் தேவை. ஒன்னு பித்ரு பிராமணன் – இறந்து போன பித்ருவின் சாட்சியாக இருப்பவர். அவர் வெறும் தகப்பனாரோட சாட்சியாக மட்டும் இல்ல. அவரோட அப்பா, அவரோட அப்பான்னு இப்படி மூன்று பேரோட சாட்சியா இருப்பவர். பித்ரு, பிதாமகர், ப்ரபிதாமகர்னு அவாளா சொல்வா. பித்ரு லோகம் மூன்றடுக்குகளை கொண்டது. வசு, ருத்ர, ஆதித்யர்கள்னு. ‘வசு’ல பிதா. ‘ருத்ர’ல பிதாமகர். ‘ஆதித்யர்’ல ப்ரபிதாமகர். ரெண்டு – விஸ்வேதேவர் பித்ருகணங்களின் தலைமை. அவர் தான் பித்ருவ அழைச்சிண்டு சிராத்தத்துக்கு வரணும். மூனாவதா, மஹா விஷ்ணு. அவர் தான் சிராத்த சம்ரக்‌ஷகர். அத்தாரிட்டி. அவர் வந்து நின்னு சிராத்தம் நல்லபடியா நடந்ததுனு கையெழுத்துப் போட்டு தரணும். சில பேர் மகா விஷ்ணுவ அழைக்கமாட்டா. பூத சாட்சியா நெனச்சுண்டு மத்த ரெண்டு பேர வச்சுண்டு கர்மா பண்ணுவா. ஆனா மொத ரெண்டு பேரும் அவசியம் இருக்கணும்” என்றார்.

பின்னர், “இன்னிக்கு இவர் தான் பித்ரு பிராமணன். நான் விஸ்வேதேவர். நீ மகாவிஷ்ணு. இது போக, பண்ணி வைக்கிற வாத்தியார் உண்டு. அவர் வெறும் உபாத்தியாயத்துக்கு மட்டும் தான். போஜனம் கூட கெடயாது அவருக்கு. அதுக்கப்றம் கர்த்தா – சிராத்தம் பண்றவர்.”

வெறுங்காலோடு நடந்தே அந்த இல்லத்திற்குச் சென்றனர். வீடு வாசல் சாணியால் மொழுகப்பட்டு நீர் தெளிக்கப்பட்டு காய்ந்த பதத்தில் இருந்தது. இவர்கள் மூவரும் வருவதைப் பார்த்து வாசலுக்கு வந்துவிட்டாள் முத்துராமனின் மனைவி வாலாம்பாள். அவள் 9 கஜத்தில் இருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லை.

“வாங்கோ மாமா வாங்கோ. முத்தத்து பைப்படில கால் அலம்பிக்கோங்கோ. நான் துளி காப்பி போட்டு எடுத்துண்டு வறேன்” என்றுவிட்டு உள்ளுக்குள் சென்றாள். சாம்பமூர்த்தி பார்த்தான். நான்கு கட்டு ஓட்டு வீடு.  பண்ணை வீடு போல இருந்தது. நல்ல விஸ்தாரம். வாசலில் ஈரடுக்குத் திண்ணை. திண்ணை மூங்கில் தட்டியால் வெயிலுக்கு மறைக்கப்பட்டிருந்தது. படியேறி தான் வீட்டுக்குள் செல்ல முடியும். வாசல்படிகளுக்கு ஓரத்தில் திண்ணையைத் துருத்திக்கொண்டு ஒட்டுத்திண்ணை. மேலடுக்குத் திண்ணை தான் ஆளோடி. ஆளோடியில் இருந்து வீட்டிற்கு நுழையும் வாயிலில் தாழ்வான நிலைக் கதவு. குனிந்து தான் செல்ல வேண்டும். தேக்கு மரக்கதவு. வேலைப்பாடுகள் நிறைந்தது. இருபக்கங்களிலும் விளக்கு மாடங்கள். ஆளோடியைத் தாண்டி ரேழி. ரேழி என்பது ஒரு குறுகலான சந்து போலத் தான் இருக்கும். ரேழியின் பக்கவாட்டுச் சுவரின் கீழ்ப் பகுதியில் களிமண் வட்டவடிவில் பூசிய தடம். அது சுவருக்கு அந்தப் பக்கம் இருக்கும் நெல் குதிரின வாய். ஒரு வருடத்துக்கான நெல்லை அங்கே சேமித்து வைத்திருப்பார்கள். வேண்டும் என்கிற பொழுது களிமண் மொழுகப்பட்ட இந்த வாயைத் திறந்து எடுத்துக்கொள்வார்கள். ரேழியைத் தாண்டியவுடன் கூடம். கூடத்தை மூன்றாகப் பகுக்கலாம். முற்றம், தாழ்வாரம், கூடம். முற்றம் பக்கவாட்டுச் சுவரை ஒட்டியிருக்கும். முக்கால் முழங்கால் ஆழத்தில் இறங்கியிருக்கும். வீட்டுக்குள் மழைக்காலத்தில் மழையும் வெயில் காலத்தில் சூரியனும் விழும்.

முற்றத்தின் மேல் திறந்தவெளியில் கம்பிவேலி போட்டு கட்டியிருந்தார்கள். முற்றத்தின் மூலையில் நீருக்கென ஒரு கை பம்பு இருந்தது. முற்றத்தைச் சுற்றிய மூன்று பக்கத்திலும் உயர்த்திக் கட்டப்பட்ட தாழ்வாரம். தாழ்வாரமும் முற்றமும் சேரும் இடத்தில் இலகுவான தூண்களும் கூடமும் தாழ்வாரமும் சேரும் இடத்தில் கணமான தூண்களும் கூரையைத் தாங்கிப் பிடிக்கும். வேப்பமரத்தினால் ஆனவை. அவற்றின் உச்சி நான்கு மடல் கொண்ட பூவைப் போல விரிந்து இருக்கும். கூடத்தின் முன் பகுதியில் இரு அறைகள். மேலே ஓடு தெரியாமல் இருக்க பூவரசு மரப்பலகைகளை இணைத்து பரண் அமைத்திருந்தார்கள். பரணில்லாத இடங்களில் இரு பக்கச் சுவரையும் தாங்கிப் பிடிக்கும் உத்தரம். பரணுக்கு மேல் இருக்கும் காலியிடம் மச்சு. அதில் பழைய சாமான்களைப் போட்டு வைத்திருந்து இருக்கும். கூடத்தில் ஆங்கங்கே பொருட்கள் வைத்துக்கொள்ள சுவர்ப்புரைகளும் அலமாரிகளும். மத்தியில் மாம்பலகையால் ஆன ஊஞ்சல். பக்கவாட்டுச் சுவரில் மரச் சட்டம் அடித்து வரிசையாக சாமிப்படம் தொங்கவிட்டிருந்தார்கள். கூடவே அவர்களின் குடும்ப நபர்களின் படங்கள். மூதாதையர் படங்கள். பூசை அலமாரி பெரிதாக இருந்தது. தஞ்சாவூரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கக்கூடிய, ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த, இரு கோபியருக்கு நடுவே வெண்ணெய்த் தாழியுடன் வீற்றிருக்கும் கிருஷ்ணர் படம். கல்யாண திருக்கோலத்தில், கையில் தண்டத்தை ஏந்தி, பின்னிருந்த காளை கன்று நா மடிக்கி அவர் கை நுனியை நக்க வர, அருகில் தேவியுடன் காட்சியளிக்கும் மாப்பிள்ளை சுவாமி படம்.

இவை அனைத்தும் முதல் கட்டு. இதனை அடுத்து இரண்டாவது கட்டில் அடுக்களை. பண்டம் பாத்திரம் போடுவதற்கான அறை. கொல்லை ரேழி. அங்கே தானியங்களைச் சேர்த்து வைப்பதற்காக ஏழடி உயரத்தில் கருமை நிறப் பத்தாயம் இருந்தது. மூன்றாவது கட்டில் கொல்லை முற்றம். அங்கே தொட்டியில் தண்ணீர் நிறைக்கப்படும். மூலையில் குளியலறை. கழிப்பறை.  முற்றத்தைச் சுற்றி கொல்லைத் தாழ்வாரம். அங்கே விறகடுப்புக்கும் விறகுகளைப் போட்டு வைக்கவும் ஒரு இடம். அதனைத் தொடர்ந்து கிணற்றடி. துளசி மாடம். நான்காவது கட்டில் மாட்டுக் கொட்டில். வைக்கோல் போர் அடி. பூந்தோட்டம். அதன் பின்னர் கொல்லை. கொல்லைக்குக் கடைக்கோடியில் எருக்குழி. இப்படி அரைகிலோமீட்டருக்கு வீடு செல்லும். வாசல் ஆளோடியில் இருந்து பார்த்தால் கொல்லையின் கிணற்றடி வரை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இங்குள்ள அனைத்து வீடுகளும் சிறிய மாற்றங்களுடன் இதே அமைப்பில் இருக்கும்.

சாமி அலமாரிக்குக் கீழ் ஒருவரது படம் வைக்கப்பட்டிருந்தது. பழுப்பேறிய கருப்பு வெள்ளைப் படம். அவர்தான் தக்காளி சுவாமிநாதைய்யர். பார்க்க தளதளவென்று தக்காளி போன்று தான் இருந்தார். அதனால் தான் அப்பெயரோ என்னவோ. நல்ல சிவப்பு. சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு நாற்காலியின் கைப்பலகையில் ஒரு கையைத் தாங்கிக்கொண்டு மற்றொரு கையில் விசிறி வைத்திருந்தார். அவரது படத்திற்கு மாலையிடப்பட்டிருந்தது.

பெரியவர் முற்றத்து விளிம்பினில் தூணைப் பிடித்து, தாழ்வாரத்தில் சாய்ந்து அமர்ந்துகொண்டார். அருகில் விஸ்வநாதன் நின்றிருந்தார். மாமி பித்தளை டவரா டம்ளரில் காப்பியோடு வந்தாள்.  அதை அளித்துவிட்டு, “மாமா அதோ இருக்கார்” என்றாள்.

சாம்பமூர்த்தி கடைசியாகக் கால் அலம்பியபடி முற்றத்தில் இருந்தே அவரை எட்டிப் பார்த்தார். கூடத்து மறைவில் அதே சாய்வு நாற்காலி. கருங்காலி மரத்தினால் ஆனது. அதில் முத்துராமன் அமர்ந்திருந்தார். மேனியில் மயிரடர்ந்து இருந்தது. பஞ்சகச்சம் அணிந்திருந்தார். சாம்பமூர்த்திக்கு அவர் சற்று மூடிய மனிதனாகத் தெரிந்தார். சிராத்த கர்மா முடியும் வரை சில பேர் உபவாசம் இருப்பார்கள். எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று அவர்களுக்கு இருக்கும். பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இப்படி இருப்பார்கள். அவரை நோக்கி விஸ்வநாதன், “நமஸ்காரம்” என்று சொல்லி கைகூப்பினார். சாம்பமூர்த்தியும் சேர்ந்து கைகூப்பினான். அவர் நாற்காலியில் உட்கார்ந்தபடி அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து தலை தாழ்த்தி கைகூப்பினார்.  அசைவு தான். வாய் பதில் இல்லை. அவரது அந்த செய்கையிலும் விறைப்புத் தன்மை இருந்தது. ஒரு குழைவே இல்லை.

“சிரார்த்த பட்சம் இல்லையா? அதான் மாமா ஷவரம் பண்ணிக்கல. சிராத்தம் முடியும் வரை மற்ற சமாச்சாரங்கள் பேச மாட்டார். கடந்த நாலு நாளா விரதம்” என்றாள் மாமி.

“உக்காருங்கோ. வாத்தியார் மாமா வந்துரட்டும்.”

விஸ்வநாதய்யரைப் பார்த்து சாம்பமூர்த்தியைச் சுட்டி, “இவர் தான் மகா விஷ்ணுக்காக வந்திருக்கறவரா?” என்று கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அவனை நோக்கி, “வாங்கோ” என்று தலையை ஆட்டி வரவேற்று காப்பி டம்ளரை வாங்கிக்கொண்டாள்.

வாசலில் பாலு சாஸ்திரிகள் வந்துவிட்டிருந்தார். வாச ரேழியில் நுழைந்தபடி, “என்ன மாமி, மகா விஷ்ணு எலைக்கு ஆள் தேடிண்டிருந்தேளே? கடைச்சுட்டாளா?” என்றார்.

அடுக்களையில் இருந்து மாமியின் குரல் கேட்டது. “வாங்கோ மாமா.  வாங்கோ. கடைச்சுட்டார். விஸ்வநாதன் மாமா புண்யத்துல.”

சாம்பமூர்த்தியைப் பார்த்துவிட்டு, “இவர் தானா?” என்றார்.

சாம்பமூர்த்தி தலையாட்டி புன்னகைத்தான். “எந்த ஊர் உங்களுக்கு?” என்றார்.

“இஞ்சிக்குடி” என்றான் சாம்பமூர்த்தி.

“ஒஹோ. கோயில் உத்சவத்துலலாம் உங்கள அடிக்கடி பாத்துருக்கேன். அதான் கேட்டேன்.”

“ஆமா. எனக்கு கோயில் காரியங்கள் தான்”

“சந்தோஷம்” என்று விடைபெற்றுக் கொண்டார்.

பின்னர், “விஸ்வநாதய்யர் ஓய் எப்படி இருக்கீர்?” என்றார்.

“ஸ்ரேஷ்டம்ண்ணா” என்று பதிலளித்தார் விஸ்வநாதன்.

“சந்தோஷம்” என்றுவிட்டு முத்துராமனைப் பார்த்து நமஸ்கரித்துக் கொண்டார்.

“ஆரம்பிச்சுடலாமா?” என்றார். முத்துராமன் தலையசைத்தார்.

“ஆரம்பிச்சுடலாமா மாமி?” என்றார்.

“அதுக்கு முன்னாடி ஒரு வாய் காப்பி குடிச்சுடறேளா?”

“சிராத்தம் முடிஞ்சு தான் மாமி”

“சரி. அப்ப ஆரம்பிங்கோ.”

அவர் தன்னுடன் வரிக் கோடுகள் போட்டு கைப்பிடிவைத்த நைலான் பை ஒன்றை வைத்திருந்தார். மடி தீட்டு விழுப்பு போன்றவற்றுக்கெல்லாம் வசதியாக இருக்கும் என்று அவர் எங்கும் எடுத்துச் செல்வது அந்தப் பை தான். அந்தப் பையில் இருந்து  பூணூலை எடுத்துவைத்தார். தர்ப்பைக்கட்டைப் பிரித்து தர்ப்பைகளையும் பவித்ரங்களையும் எடுத்து வைத்தார். வாத்தியார் கர்த்தாவிடம் புதுப்பூணூலை எடுத்துக் கொடுத்து தரித்துக்கொள்ளச் சொன்னார். பின்னர் அன்றைக்கான ருதுவையும் வருஷத்தையும் மாசத்தையும் பக்‌ஷத்தையும் குறித்துக்கொண்டு கர்த்தாவின் கோத்திரத்தையும் சர்மாவையும் கேட்டறிந்தார். பின்னர், கர்த்தாவின் பித்ருக்களுடைய பெயர்களான சுவாமிநாதய்யர் பெயரையும், அவரது அப்பா, அவரது அப்பா ஆகியவர்கள் பெயர்களையும் எழுதிக்கொண்டார். பின்னர் அவர்களது மனைவிமார்களின் பெயர்களையும் எழுதிக்கொண்டார்.

பிறகு சொன்னார், “ஆதியில் அக்னியைத் தான் மனுஷன் கண்டான். எல்லாத்துக்கும் முதன் முதலாய் இருப்பது அக்னி தான். எந்தக் கர்மா தொடங்க போறதுக்கு முன்னாடியும் இந்த அக்னி தேவதையை வழிபட்ட பிறகுதான் தொடங்கணும். இந்த சிராத்த கர்மாக்கும் அது பொருந்தும்.”

தாழ்வாரத்தில் நன்றாக மொழுகப்பட்ட இடத்தில் ஆறு செங்கற்களை அடுக்கிவைத்து அதற்குள் ஆற்று மணல் நிரப்பினார். கர்த்தாவாகிய முத்துராமனை கிழக்குப் பக்கமாக அமரச்சொன்னார்.  கர்த்தாவிடம் பஞ்சப்பாத்திரத்தில் நீரும் உத்தரணியையும் கொடுத்தார். பிறகு நெய்க் கிண்ணமும் மரக்கரண்டியும்.

பின்னர் கொட்டிவைத்த மணலின் மீது தர்ப்பைப் புல்லால் கோடுகள் கிழிக்கச் சொன்னார். தர்ப்பையை அக்னிக்கு நான்கு பக்கங்களிலும் போடச் சொன்னார். பின்னர் வறட்டியில் கற்பூரத்தினை ஏற்றி வறட்டியோடு அந்த மணல் மேல் வைக்கச் சொன்னார். கனல் தழைந்து வந்தது. சின்னச் சின்ன கனல்களை ஒன்று சேர்க்கச் சொன்னார். ஒரு தர்ப்பையை எடுத்து தன்னிடம் கொடுக்கச் சொல்லி இந்தச் செயல்களில் தவறேதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எண்ணிக்கொள்ளச் சொன்னார். தர்ப்பைக்கட்டைக் கொடுத்து அக்னிக்கு அருகில் வைக்கச் சொன்னார். பின்னர் சமித்துகளை நெய்யைத் தொட்டு ஒவ்வொன்றாக வேள்வித்தீயில் வைக்கச் சொன்னார். அக்னிக்கு அருகில் வைத்திருந்த தர்ப்பைக் கட்டை மூன்றாகப் பிரித்து ஒவ்வொன்றின் அடி, நடு, முடிப்பகுதியை நெய்யில் தோய்த்து அக்னி மேல் வைக்கச் சொன்னார். பின்னர் மரக்கரண்டியால் மொத்தமாக நெய்யை வேள்வித்தீயில் ஊற்றச் சொன்னார். மாமியை அழைத்து ஒரு தர்ப்பையைக் கொடுத்து முத்துராமனின் வலது தோளில் அந்தத் தர்ப்பை படுமாறு நிற்கச் சொல்லி, வேள்வித்தீ வளர்ப்பதற்கான மந்திரங்களை முத்துராமனிடம் கூடவே சேர்ந்து சொல்லச் சொன்னார்.

வாத்தியார் ஒவ்வொரு சடங்கைப் பற்றிச் சொல்லி, அதற்கான மந்திரங்களையும் சொல்லி, முத்துராமனை வழி நடத்தினார்.

முத்துராமனும் எந்த ஒரு உதாசீனமுமின்றி கர்மங்களைச் செய்தார். வாத்தியார் விஸ்வநாதய்யரையும் பெரியவரையும் சாம்பமூர்த்தியையும் அழைத்து அம்மூவரையும் வரவேற்பதற்கான சடங்கொன்றை நிகழ்த்தினார். அவர்களை முறையே விஸ்வேதேவர், பித்ரு பிராமணர், மஹா விஷ்ணு என்று வரிசைப்படுத்தி வைத்தார். அவர்களை ஒவ்வொருவராக அவரவர்க்கு உண்டான இடங்களில் பலகைகளில் அமர்த்திவைக்கும்படி முத்துராமனிடம் சொன்னார். அவர்கள் மீது வரிசையாக எள்ளும் அட்சதையும் போடச் சொன்னார். பின்னர், தர்ப்பையை எடுத்து, அவரவர் பலகைக்கு அடியில் போடும்படி சொன்னார். அவர்கள் கைகளில் தீர்த்தம் இடச்சொன்னார். பின்னர், அவர்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. முத்துராமன் அவர்களின் பாதங்களை அகண்ட பித்தளை தாம்பாலத்தில் வைத்து நன்றாக நீரை விட்டு அலம்பினார். அவரது அருகில் மாமியும் இருந்தாள். எள்ளும் அட்சதையும் இட்டு சந்தனம் வைத்தார். கழுவிய நீரை, தன் மேலும் தன் மனைவி மேலும் தெளித்துக்கொண்டார். வாத்தியார் அவர்கள் மூவரையும் ”நல்வரவேற்பு” என்று சொல்லச் சொன்னார். விஸ்வநாதனும் சாம்பமூர்த்தியும் சொன்னார்கள். பெரியவர் தலையை மட்டும் அசைத்தார்.

பின்னர் மூவரையும் போஜனத்திற்கு அழைத்து செல்லச் சொன்னார். சாப்பிடும் இடம் சுத்தமாக மொழுகப்பட்டு இருந்தது. நுனிவாழையிலை ஒன்றுக்கு அடியில் மற்றொன்றாக இலையின் நுனி  இடப்பக்காய் இருக்குமாறு மூன்று இடங்களில் போடப்பட்டிருந்தது. விஸ்வேதேவர்க்கு கிழக்கு முகமாகவும் பித்ரு பிராமணருக்கு வடக்கு முகமாகவும் மஹாவிஷ்ணுவுக்கு தெற்கு முகமாகவும் போடப்பட்டது. மூவருக்கும் அவர்களின் இலைக்கு அருகினில் இரண்டிரண்டு வாழையிலைத் தொன்னைகள் வைக்கப்பட்டன.

அவர்கள் இலைகளில் அமர்த்தி வைக்கப்பட்டனர். முதலில் இலையின் வலது ஓரத்தில் கொஞ்சமாக பருப்புப் பாயசம் விடப்பட்டது. பின்னர் இடது ஓரத்தில் எள்ளுருண்டை. பயற்று மாவுருண்டை. கோதுமை ரவை அல்வா வைக்கப்பட்டது. தொடர்ந்து உளுந்த வடை. கோதுமை அதிரசம். தேன்குழல் முறுக்கு. வாழைக்காய் வறுவல். பின்னர் இலையின் மேல் அடுக்கில் வலமிருந்து இடமாக வெள்ளரிக்காய் தயிர் பச்சிடி, மாங்காய் பச்சிடியைத் தொடர்ந்து அவரைக்காய் பொறியல், வாழைக்காய் பொறியல். பாகற்காய் பொறியல். அதனைத் தொடர்ந்து மாஇஞ்சி பிசிறல். கருவேப்பிலை – பிரண்டை துவையல். தொன்னையில் மாம்பழத் துண்டமும், வாழைப்பழத் துண்டமும் தேனுடன் கூடிய பலாச்சுளையும் வைக்கப்பட்டது. இலையில் பருப்பு போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெய் ஊற்றப்பட்டது. பிறகு வெண்கலப் பானையில் இறக்கி வைத்த சாதம் பரிமாறப்பட்டது. இத்தனை தவச சமையலையும் வாலாம்பாள் ஒற்றை ஆளாகச் செய்திருக்கிறாள். அப்போது முத்துராமனும் அவளுமாகப் பரிமாறினார்கள். பானை, உருளி, அடுக்கு, சம்புடம், கிண்ணம், அன்னவெட்டி, இதர கரண்டிகள் மற்றும் பல வகைத் தட்டுகள் என வெங்கலப் பாத்திரங்களும் பித்தளைப் பாத்திரங்களும் செம்புப் பாத்திரங்களும் தான் சமைக்கவும் பரிமாறவும் முழுக்க முழுக்க பிரயோகிப்பட்டன.

வாத்தியாரின் அறிவுரைப்படி முத்துராமன் ஒவ்வொருவரின் இலையின் முன்பும் பித்தளைத் தாம்பாலத்தில் அன்னத்தைக் கொண்டு வந்து ஒரு கோடு போல அந்த அன்னத்தை உதிர்த்தார். இது விஸ்வேதவருக்கு. இது வசு ருத்ர ஆதித்யர்களாய் இருக்கும் தன் பிதா பிதாமகர் ப்ரபிதாமகருக்கு. இது ஸ்ராத்ததை உடன் இருந்து இரட்சிப்பவரான மகா விஷ்ணுவுக்கு என்று முறையே அவர் அன்னத்தை உதிர்த்தார்.

வாத்தியார், முத்துராமனை உத்தரனியில் நீர் அள்ளி பிராமணர்களின் கையில் விடச்சொல்லி போஜனத்தை ஆரம்பித்து வையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். முத்துராமனும் அதன் படி செய்தார். நீர் விட்ட பின்பு அனைவரின் முன்பும் கைகூப்பி, “அனைவரும் சங்கோஜப்படாமல் அனைத்தையும் கேட்டு வாங்கிச் சாப்பிடவும்” என்று கேட்டுக்கொள்ளச் சொன்னார். முத்துராமனும் அப்படியே செய்தார். பருப்பு சாதத்திற்குப் பின்னர், சாதம் இட்டு சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு, சாதம் இட்டு புடலங்காய் பொறித்த குழம்பு, சாதம் இட்டு மிளகு ஜீரக ரசம். மீண்டும் நடுஇலையில் பாயசம். கடைசியாக சாதம் இட்டு தயிர் பரிமாறப்பட்டது. சாம்பமூர்த்தியும் விஸ்வநாதய்யரும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். பெரியவர் மட்டும் முடிந்ததை சாப்பிட்டு மீதியை இலையில் ஒரு பகுதியில் குவித்தார்.

அதன் பின்னர் அவர்களுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் தேனுடன் கலந்த பால் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களது கரங்களில் நீர் விடப்பட்டது. போஜனத்தில் எதேனும் குறை நிறைகள் இருந்தால் பொறுத்தருளும் படி பிராமணர்களிடம் முத்துராமன் பணிந்து கேட்டுக் கொண்டார். அவர்கள் அன்னதாதா சுகிபவா என்று எழுந்துகொண்டு கைகழுவ முற்றத்திற்குச் சென்றார்கள்.

வாத்தியார், வேறொரு தாம்பாலத்தில் அன்னத்தைக் கொண்டு வரும்படி சொன்னார். அக்னிக்கு தென்கிழக்கே மேலும் கீழுமாக இரு தர்ப்பைப் புல்களை முத்துராமனிடம் கொடுத்து, போடச் சொன்னார். பின்னர் அது ஒவ்வொன்றிலும் அடி, நடு, முடி என்று மூன்று குழிகளாக மொத்தம் ஆறு குழிகளாக நினைத்துக் கொள்ளச் சொல்லி, ஆறு இடங்களிலும் நீர் தெளிக்கச் சொன்னார். பிறகு, அன்னத்தை உருட்டி முதல் பிண்டம் வசு ரூபமாக இருக்கும் பிதாவிற்கு என்றுவிட்டு மேல் தர்ப்பையின் அடிக்குழியில் வைக்கச் சொன்னார். முத்துராமன் அவரது தந்தை சுவாமிநாத சர்மாவின் பெயரைச் சொல்லி வைத்தார். அடுத்த பிண்டத்தை மேல் தர்ப்பையின் நடுக்குழியில் ருத்ர ரூபமாக விளங்கும் பிதாமகருக்கு என்றார். முத்துராமன் அவரது தாத்தன் சுப்ரமணிய சர்மாவின் பெயரைச் சொல்லி வைத்தார். பிறகு மூன்றாவது பிண்டத்தை மேல் தர்ப்பையின் முடிக்குழியில் ஆதித்த ரூபமாக விளங்கும் ப்ரபிதாமகருக்கு என்றார். முத்துராமன் தன் கொள்ளுத் தாத்தன் வெங்கட்ராம சர்மாவின் பெயரைச் சொல்லி வைத்தார். கீழ்த் தர்ப்பையில் முறையே அந்தந்த பித்ருக்களின் சக பத்தினிகளின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு அவர்களுக்கும் மூன்று பிண்டம் வைக்கப்பட்டது. பிண்ட ரூபத்திலான பித்ருக்களுக்கு எள்ளையும் அட்சதையும் இட்டு, தீபம் காட்டி, அதிரசமும் வடையும் காண்பித்து நைவேத்யம் செய்தார்.

கை அலம்பிவிட்டு பிராமணர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு முறையே வெற்றிலைத் தாம்பூலத்துடன் கொஞ்சம் அரிசியும் பருப்பும் சேர்த்து தலைக்கு ஆயிரம் ரூபாய் தக்ஷிணை கொடுக்கப்பட்டது. வாத்தியாருக்கு வெறும் அரிசியும் வாழைக்காயும் பிறகு பண்ணி வைத்ததற்கான சம்பாவணையாக இரண்டாயிரத்து ஐநூறு தாம்பூலத் தட்டில் கொடுக்கப்பட்டது. வாத்தியார் பிராமணர்களிடம், “நல்லுபச்சாரம்” என்று சொல்லுங்கள் என்றார். பிராமணர்களைச் சுற்றி வந்து  நமஸ்காரம் செய்து அவர்களது ஆசிகளைப் பெறும்படி முத்துராமனிடம் சொல்லப்பட்டது. பிராமணர்களிடம் அட்சதை கொடுக்கப்பட்டது. முத்துராமன் தன் மனைவியுடன் அவர்களை மும்முறை சுற்றினார்.

பின்னர் பித்ரு பெரியவருக்கு நேராக நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தார். சாம்பமூர்த்தி அவரைக் கண்டான். ஏதோ கொடியிலிருந்த துணி கீழே விழுந்தது போல மொத்த எடையும் இழந்து விழுந்தவர் போல் இருந்தார் முத்துராமன். அவரில் சிறு உடைவு. ஒரு சமன் குலைவு. இந்த கணத்திற்காக அது காத்துக் கிடந்ததோ என்னவோ! பித்ருபெரியவரின் காலைப் பற்றினார் முத்துராமன். விழி நீர் உகுத்தார். பின்னர் சிரசை உயர்த்தி அப்பெரியவரின் முகத்தைப் பார்த்தார். பெரியவர் நெகிழ்ந்து கண்களில் நீர் பெருக நின்றிருந்தார். பாதத் தொடுகை அவரை நெகிழச் செய்ததோ என்னவோ? இதற்கு முன் இத்தகைய ஒன்றை சாம்பமூர்த்தி கண்டதில்லை. பெரியவரின் துளி தரையை நோக்கிச் சொட்டியது. எத்தகைய உருக்கம் இது? சாம்பமூர்த்தி நினைத்தான். பெரியவர் முத்துராமனை மகனாய் எண்ணிக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறார். அவரிடம் இல்லாத தந்தைமையை அக்கணங்களில் நிறைவேற்றிக் கொள்கிறார். முத்துராமனுக்கு அவர் தந்தை சுவாமிநாதய்யர் இப்பெரியவர் வடிவில் எழுந்து இருக்கிறார். அதனால் தான் இந்த மன்றாடல். ஆனால் அது மட்டும் இல்லை. முத்துராமனிடத்தில் உடைந்த ஒரு துளிக்கும் அப்பெரியவரின் வற்றாத ஒழுக்கின் ஒரு துளிக்கும் இடையே அங்கே நிகழ்ந்தது ஓர் உரையாடல்.

சாம்பமூர்த்திக்கு கொஞ்ச நேரத்திற்கு அருகில் நின்ற அனைவரும் மறைந்து விட்டனர். காலில் விழுந்து முத்துராமனும் கையில் அட்சதையுடன் நடுங்கி கண்ணீர் உகுக்கும் அப்பெரியவர் மட்டுமே தெரிந்தார்கள். ஒரு கணத்தில், அப்பெரியவர் மறைந்து, படத்தில் சாய்வு நாற்காலியில் பார்த்த தக்காளி சுவாமிநாதய்யர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் இருவரும் மறைந்து சென்றனர். சாம்பமூர்த்தி தன் தந்தைக்கு அடியில் உட்கார்ந்துகொண்டு, அவருக்கு தாம்பூலம் மடித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அதுவும் மறைந்து தனது மகன் வேதபாடசாலை சிறுவன் தன் கையைப் பற்றி சுற்றிச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். என்ன இது என சாம்பமூர்த்திக்குப் புரியவில்லை. அவனும் நெகிழ்ந்து விட்டான். தந்தையர்களின் கணம் இது. தந்தையும் தனயனும் மட்டும் இப்பிரபஞ்சம் முழுதும் வியாபித்து இருக்கிறார்கள். தந்தைமை, தந்தைமை, பூரண தந்தைமை. அதுவன்றி வேறொன்று இங்கில்லை. அதுவே எங்கும் பெருகி நிறைகிறது. நிறைந்து வழிகிறது. கண்ணீர் வழிந்து சிந்தி தன் மார்பில் பட்டவுடன்தான் தெளிவுற்றான்.

முத்துராமன் கலங்கிய விழிகளுடன் எழுந்துகொண்டார். விசும்பலுடன் தன் உத்தரீயத்தை தோள்மேல் போட்டுக்கொண்டு இருகைகளாலும் விரித்துப் பிடித்து அவர்கள் முன் குனிந்து நின்றார். மூவரும் அவர்களது அட்சதையை அந்த வஸ்திரத்தில் போட்டு ஆசிகள் வழங்கினர். பின்னர் அந்த ஆடையில் இருந்த அட்சதையை கையில் கொட்டிக்கொண்டு அருகில் நின்ற மனைவியிடம் கொடுத்தார். பின்னர் ஓரிடத்தில் அந்த வஸ்திரத்தை நீள வாக்கில் மடித்து சுருட்டிப் போட்டு பிராமணர்களை அதை மிதித்துக் கடந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார். பிராமணர்களை வழியனுப்பி வைக்கும் சடங்கு இதுவென்றார் வாத்தியார். பிராமணர்கள் கடந்து போனவுடன் அவர்கள் காலடித் தடம்பட்ட அந்த வஸ்திரத்தை எடுத்து, தன் நெற்றியில் ஒற்றிக் கொண்டார்.

வாத்தியார், ”மாமி நெத்திக்கு இட்டுக்கோங்கோ. வாசலிலும் சாமி கிட்டயும் கோலம் போட்டுடலாம்” என்றார்.

மாமி, “மாமா வந்ததுலேந்து ஏதும் சாப்டலையே. வெறும் வயித்தோட இருக்கேளே. ஒருவாய் காப்பி தரட்டுமா?” என்றாள்.

“சரி தாங்கோ” என்றார்.

அவர் முத்துராமனிடம் இலைக்கு முன் உதிர்த்த அன்னத்தை காக்காய்களுக்கும் பிண்டம் வைத்ததைப் பசுமாட்டுக்கும் போடச் சொன்னார்.

அதன் பிறகு அவர்கள் போஜனம் செய்யலாம் என்றார். பிராமணாளின் எச்சில் இலைகளை சாயங்காலமாக ஆற்றில் விடச்சொல்லி சொன்னார்.

உதிர்த்த அன்னத்தை எடுத்துக்கொண்டு கொல்லை முற்றத்தில் கொண்டு போய் போட்டுவிட்டு “ஹோ மஹாதேவா வா. கா கா கா” என்று உரக்கக் கத்திவிட்டு வந்தார் முத்துராமன். காகங்கள் கரையும் சத்தம் கூடத்து வரையில் கேட்டது. மாமி கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்துவிட்டு “அப்புறம் நான் உத்தரவு வாங்கிக்கறேன்” என்றுவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு பாலு சாஸ்திரிகள் கிளம்பினார்.

முத்துராமன் வாளியில் நீரை நிறைத்து, அதில் அந்தப் பிண்டங்களைப் போட்டுக் கரைத்து, வாசலில் போய் நின்றார். அப்போதெனப் பார்த்து, பத்துப் பாத்திரம் தேய்க்கும் சரஸ்வதி, மாட்டை மேய்த்துக் கொண்டு வந்துகொண்டிருந்தாள். அதில் ஒரு பசுமாட்டிற்குக் கொண்டுபோய் அந்த வாளியை இவர் வைத்தார். சாம்பமூர்த்தியும் விஸ்வநாதய்யரும் பெரியவரைப் பிடித்துக் கொண்டு வாசல் படியில் இறங்கிக் கொண்டிருந்தனர். இருவரும் முத்துராமனைப் பார்த்துவிட்டு விடைப்பெற்றுக் கொண்டனர். முத்துராமனின் கண்கள் இன்னும் ததும்பிக் கொண்டிருப்பதை சாம்பமூர்த்தி பார்த்தான்.

மூவரும் அப்பெரியவரின் வீட்டை நோக்கி நடந்தார்கள். பெரியவரின் கண்களில் வழிந்து கொண்டிருந்த நீரை அவரது மேல் துண்டால் துடைத்து விட்டான் சாம்பமூர்த்தி. விஸ்வநாதய்யரும் சாம்பமூர்த்தியும் பெரியவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு விஸ்வநாதய்யரின் இல்லம் நோக்கி நடந்தார்கள்.

3

விஸ்வநாதய்யர் அவர் வீட்டுக்கூடத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் வந்து ஒரு காலை இன்னொரு கால் மேல் போட்டுக்கொண்டு சம்மணமிட்டு அமர்ந்தார். சாம்பமூர்த்தியை அமரச்சொன்னார். அவன் முன்னிருந்த தென்னை நார்க்கயிறுக் கட்டிலில் அமர்ந்தான். உத்தரத்தில் இருந்து முன் தொங்கிய ஆட்டு கயிறைப் பிடித்து ஊஞ்சலாடிய படி விஸ்வநாதய்யர் சொன்னார்.

“அந்த பிரண்ட தொகையலோட ருசி இன்னும் என் நாக்குலயே தங்கிண்டுருக்குடா சாம்பா. தொகையல ருசியாக்குறது என்னன்னு நீ நெனைக்கிற? வெறும் தழைகளோட ருசியும் மணமும் மட்டும் இல்ல. அதுல அரைப்படுற கல்லோட ருசியும் தான் சேந்துக்கறது. தொகையல் அரைச்ச கைக்கு பவுன் மோதிரமே போடலாம்” என்றார் விஸ்வநாதன்.

சாம்பமூர்த்தியிடம் இருந்து எதிர்வினை இல்லை. அவர் மனதை எதுவோ உறுத்திக் கொண்டிருந்தது.

“என்னடா ஏதோ யோசனையாவே இருக்க?”

“ஒன்னும் இல்லண்ணா.”

“அட என்னன்னு சொல்லுடா. உனக்கு எல்லாம் திருப்தியா இருந்தது தானே?”

“அதம்பாவூர் ராமன் சாட்சியா நான் எந்தக் கொறையும் பட்டுக்கல. அந்த பெரியவரப் பத்தி தான் என் சிந்தனையே. புள்ள பாசத்துக்காக இப்படி கரைஞ்சு ஆறா ஓட முடியுமா? ஆசீர்வாதத்தின் போது அப்படி ஒரு உருக்கம் அவருக்கு. நீங்க சொல்லும் போது சாதாரணமாத் தான் இருந்தது. ஆனா நேர்ல பாக்கறச்ச எனக்கே கண் கலங்கிடுத்து. அந்த முத்துராமனப் பாத்தேளா? அவ்ளோ நாழியா பாறாங்கல்லு போல இருந்தவர் பொடி மணலா கரைஞ்சு அந்த பெரியவரோட ஆற்றொழுக்கோட போய்ட்டாரே? அந்த சுவாமிநாதய்யர் நிச்சயமா இந்த ச்ராத்தத்த ஏத்துக் கொண்டிருப்பார். எத்தன பேருக்கு அமையும் இதலாம்? எத்தன பேர் இவ்ளோ சிரத்தையா கர்மா பண்றா? தோ நானே இருக்கேன். என்னால இவ்ளோ பிராமணாள கூப்டு போஜனம் போட முடியலனாலும் எங்கப்பாக்கு வாத்தியார்ட அரிசி வாழைக்காய் நூறு இருநூறுனு வச்சு கொடுத்து பிண்டத்த கமலாலயத்துல கரைச்சிடுவேன். எங்கப்பா இப்படி வந்ததே இல்லையே?” என்றான் சாம்பமூர்த்தி.

“நான் உன்கிட்ட ஒன்னு சொல்றேன். சிராத்தப் பித்ரு இருக்காரே தக்காளி சுவாமிநாதன். தக்காளிப் பழம் போல இருக்கறதுனால அவர அப்படி கூப்படறானு கிண்டலுக்குச் சொல்றதுண்டு. ஆனா அது இல்ல காரணம். அவருக்கு அரசலாத்துக்கு அக்கரையில் திருவீழிமலை பக்கம் ஆத்த ஒட்டியே பண்ணையும் தோட்டமும் உண்டு மூனு ஏக்கர்ல. அரசலாத்துலேந்து வடிகால் வழியாத் தான் அந்த தோட்டத்துக்கு நீர் பாசனம். அங்க அவர் தக்காளி சாகுபடி பண்ணினார். சுத்துபத்து கிராமங்களுக்குலாம் அவர் தோட்டத்து தக்காளி தான் விநியோகம். இவர் எங்காவது வெளி கிராமத்துக்குப் போனா சில பேர் அவரண்ட சொல்வா. அண்ணா, உங்க தோட்டத்துத் தக்காளி நல்ல ருசி. ஆனா ஒரு ஓரமா எங்கயோ கடுக்கறது. அது மட்டும் இல்லன்னா அது இந்திரத் தோட்டத்து கனிக்கு சமானமாய்டும்னு. ஆனாலும் நல்லபடியா வித்துது. அது பெரிய கொறையா தெரில. அமோக வெளைச்சலும் இருந்தது. சுப்பையர்னு அவருடைய பால்ய காலத்துலேந்தே சினேகிதன். அவரோட அவ்ளோ அணுக்கம். அவர்தான் இவரோட தோட்டத்தலாம் பாத்துண்டார். சுப்பையரை சும்மா சொல்லக்கூடாது. தோட்டக் கலைல கைதேர்ந்தவர். தோட்ட விஷயங்களில சுவாமிநாதன் பெருசா பட்டுக்கறது கெடையாது. மொத்த பொறுப்பையும் சுப்பையர் தான் பாத்துண்டார். அந்த கடுக்கும் சமாச்சாரம் அவருக்குத் தெரிஞ்சுது. அதைத் தடுக்க ஏதாவது பண்ண முடியுமான்னு நெனச்சார். உரக் கணக்க மாத்திப் பார்த்தார். நீர் பாய்ச்சறத மாத்திப் பாத்தார். ஒன்னும் எடுபடல.”

“ஒரு வாட்டி தஞ்சாவூர் போய்ட்டு வந்தார். கவர்மெண்ட் ஹார்டிகல்சர் ஆபீஸுக்கு. தோட்டத்தில இருந்த காலி எடங்கள்ல உருளைக் கிழங்கு சாகுபடி பண்ணினார். அது நல்லா வளந்தப்பறம் அதோட நடுத்தண்ட வெட்டினார். தக்காளித் தோட்டத்துச் செடிகள்ல இருந்து நடுத் தண்டுகள வெட்டிக் கொண்டு வந்தார். உருளைக் கிழங்குச் செடியோட தண்டு மேல தக்காளிச் செடித் தண்டை உரியபடி சீவி இணைச்சு அதச் சுத்தி செல்லோடேப்பால கட்டு கட்டினார். இப்படி அந்த எல்லா உருளைக் கிழங்குச் செடிகளிலயும் செஞ்சார். மூனு மாசம் சரிவர பராமரிச்சார். அப்புறம் பாக்கணுமே? அப்படியே அத்தன செடியும் தழைச்சுண்டுருத்து. மண்ணுக்கு கீழ உருளைக் கிழங்கும் வெளஞ்சுது. மண்ணுக்கு மேல தக்காளியும் வெளஞ்சுது. ஒரே செடில. தாவரத்தின் ஒட்டுமுறை விஞ்ஞானம். ஒட்டுப்பழம்னு சொல்வாளே மாங்காய்ளலாம். அது மாதிரி. இது போமெட்டோ அதாவது உருளைத் தக்காளி. எந்த ஒரு பக்க விளைவுகளும் கெடையாது. முற்றிலும் இயற்கையான முறை. இதனால ரெட்டை லாபம். உருளையும் வெளஞ்சுது தக்காளியும் வெளஞ்சுது. ரெண்டு செடி பயிரிடர எடத்துல இப்போ ஒரு செடிதான். அதனால் இன்னொரு செடி பயரிடும் இடமும் மிஞ்சி லாபமாச்சு.”

“இந்த முறையப் பத்தி எத்தனையோ வாட்டி சுவாமிநாதய்யர் காதுல போட்டு வைக்கணும்னு அவர்கிட்ட சுப்பையர் பேச்சு கொடுப்பார். ஆனா அத அவர் பெருசா பொருட்படுத்தல. லாபம் வந்தா போதும்னு இருந்துட்டார். அதுக்கப்றம் சுப்பையரும் இதப் பத்தி பேச்சுக் கொடுக்கறத நிறுத்திண்டுட்டார். வெளஞ்சு வந்த தக்காளில இப்போ அந்தப் பழைய கடுப்பு தெரியல. அடியில் இருக்கறது உருளைக் கிழங்காச்சே. அதோட சக்கரைய அது தக்காளிக்குக் குடுத்துருக்கு. பழைய பேச்சு ஓஞ்சு போனது.”

“ஒரு நாள் எதேச்சையா சுவாமிநாதய்யர் அந்தத் தோட்டத்து வழியா போய்ருக்கார். எல்லா தக்காளிச் செடிலயும் எதோ கட்டு கட்டிருந்தத பாத்துருக்கார். அதப் பாத்துட்டு ஒரு செடிக்குப் பக்கத்துல போய் நின்னுருக்கார். அந்தச் செடிய பிடிங்கியிருந்துருக்கார். கீழே பாத்தா வேர்ல குண்டு குண்டா உருளைக் கிழங்கு. என்ன ஆச்சோ தெரில. எல்லாச் செடியையும் பிடிங்கி எறிஞ்சுட்டார். அப்படியே நெஞ்சப் புடிச்சுட்டு உக்காந்துருக்கார். எல்லைக்கோயில் காத்தவராயன் அரைஞ்ச மாதிரி. இது நடந்தப்போ அவர் பட்டாமணியார். அவர் புள்ள இந்த முத்துராமன் திருச்சில அவர் அக்கா ஆத்துல தங்கிண்டு எஸ்.எஸ்.எல்.சி படிச்சுண்டுருந்தான். மறுநாள் சுப்பையர் எல்லாத்தையும் வெளக்கினார். இவர் சுப்பையர்ட்ட இந்த மாதிரிலாம் எம்மண்ணுல காய்க்க வைக்க வேணாம். எல்லாத்தயும் பழைய படியா மாத்திடுடா. இது வேணாம். உன்ன கெஞ்சிக் கேட்டுக்கறேன்ன்னு சத்தம் போட்டு கேட்டுண்டார். சுப்பையரும் அதற்கு எணங்கி பழையபடி சாகுபடி பண்ணினார்.”

“சுப்பையருக்கு பின்னாடி தான் மெதுவா தெரிஞ்சுது அது ஏன்னு. சுவாமிநாதனுக்கு வாரிசு இல்ல. அவர் மனைவி வயித்துல புழு பூச்சி உண்டாகல. அவரோட குடும்பத்தினர் கட்டாயப்படுத்த யாரையாவது தத்தெடுத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணினார். அவா குடும்பம் பெரிய குடும்பம். குடும்ப பெரியவர்கள்லாம் வம்சத்த வழி நடத்த ஒரு வாரிசு வேணும்னு நம்ம சாஸ்திரத்துல இருக்கே “புத்ர ஸ்வீகாரம்”. அத முன்மொழிஞ்சு அவர சமாதானப்படுத்தினா. இதோ இந்த பித்ரு பெரியவரா இருந்தாறே வீழி சார். அவருக்குப் புள்ள பொறந்தது. பொறந்த உடனேயே அந்த குழந்தைக்கு ஜாதகம் பாத்தது. பிதா அரிஷ்ட ஜாதகம். ப்ரகலாதன்னோடது மாதிரி. ஹிரண்ய கசிபுவ சிம்மம் அப்டியே முழுங்கிடுத்தே. அவாத்துல எல்லாரும் இவருக்கு ஏதோ ஆகிடுமோனு பயந்தா. அவரோட துணைவியாருக்கு கூடுதல் பயம். பொறந்த கொழந்தைய கொல்லவா முடியும் அதுக்குன்னு. மகா பாவம் ஆச்சே. அப்போ தான் சமயம் பார்த்து வந்து சுவாமிநாதன் கேட்டார் ஸ்வீகாரம் பண்ணிக்கொடுக்கும்படி”

“ஸ்வீகாரம்னா வெறும் பெயரளவுல மட்டும் சொல்றது இல்ல. பெத்தத் தாய் தந்தையரோட ஒட்டுறவு  இருக்கக்கூடாது. குலம் கோத்ரம்ன்னு குழந்தைக்கு எல்லாமே மாறிடும். புது கோத்திரத்தாரின் புண்ணியக் கணக்கு பாவக்கணக்கு எல்லாம் சேத்து தான் அந்தக் குழந்தை சொமக்கணும். வீழிசார் ஆத்துலயும் அவருக்கு இதான் சரி. இவர் வேணும்னா வேறொரு பிள்ளை பெத்துக்கலாம். ஆனா அத விட அவரோட உயிர் முக்கியம்னு வீழி சார வற்புறுத்தி தத்துக் கொடுக்க வச்சா. அவருக்கு மனசே இல்ல. வேற வழியில்லாம தான் செஞ்சார். எம்புள்ள செத்துட்டான்னு நெனச்சு பிறந்த சிசுவுக்குப் பிண்டம் வச்சார். பிறந்த உடனே செத்த கொழந்தேளுக்கு இந்த உலகத்தோட உறவு இல்ல. அதனால வருசாவருஷ திவசமோ தீட்டோ அதுக்குக் கெடையாது. பொறந்து பதிமூனு நாள் வரைதான் அதுக்கு எழுதி வச்சுருக்கு.”

“சுவாமிநாதன் அவாத்துல அந்தக் கொழந்தைக்கு பத்தாம் நாள் புன்யாஜனம் பண்ணினார். முத்துராமன்னு பேர் வச்சார். ஊர்க்காராளும் இதுக்கு ஒடந்தை. வீழி சார் அழுது அரற்றினார். அவருக்கு மனசுலேந்து முழுசா அந்தக் கொழந்தைய விட முடியல. மூனாவது வருஷம் அவரோட மனைவிக்கு காச நோய் வந்துது. படுத்தப்படுக்கையா கெடந்து செத்துப் போனாள். வீழி சாருக்கு அடுத்து வாரிசே இல்லாம போச்சு. மறுபடியும் அவா குடும்பத்தார் அவர மறு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தினா. அவர் மண்ணெண்ணய ஊத்திண்டு தன்ன எரிச்சுக்கப் போய்ட்டார். மண்ணெண்ண வாடையோட இந்த அக்ரஹாரத்து தெருல ஒவ்வொரு வீடா போய் நான் முன்னாடி சொன்னா மாதிரி கேட்டுண்டார்.”

“அங்க சுவாமிநாதன் வீட்ல இந்த குழந்த நன்னா வளந்தது. அடி மனசுல சுவாமிநாதன் வீழி சார பாக்குறத்துக்கே பயந்தார். புள்ளையையும் பாக்க உடல. அவன பொத்திப் பொத்தி வளத்தார். திருச்சில அவர் அக்காவாத்துல அவன படிக்க வச்சார். மாசம் ஒருமுறை போய் பாத்துட்டு வந்தார். ஒரு வாட்டி அஞ்சாங்கிளாஸ் படிச்சுண்டு இருந்தப்போ முத்துராமன் ஊருக்கு வந்திருந்தான். தெருல கொழந்தேளோட வெளையாடிண்டு இருந்தான். அப்போ தெரு வழியா வீழி சார் போய்ருக்கார். திண்ணைல ஒக்காந்து சுவாமிநாதன் பாத்துண்டு இருந்துருக்கார். அவருக்கு அடி கலங்கித்து. ஆனா வீழி சார் அந்தக் கொழந்தைய பாத்தும் பாக்காத மாதிரி கடந்து போனார். மனுஷன் மொத்தத்தையும் தொடச்சு எறிஞ்சவர் மாதிரி, மொத்தமா உதறிவிட்டு நின்னா மாதிரி தான் தெரிஞ்சார். சுவாமிநாதன் பெருமூச்சு விட்டார்.”

“ஆச்சரியம் தான் சுவாமிநாதனுக்கு. அதை அவர் யோசிச்சு பாத்தார். வீழி சார் அவர் மனச அப்படி பழக்கிண்டார்னு தான் சொல்லணும். ஒரு பழக்கத்த ஏற்படுத்திட்டு காரண காரணிகள் மறைஞ்சு போய்டறது. அதன் பிறகு அந்தப் பழக்கம் மட்டும் எஞ்சறது. இங்கல்லாம் வாசல் தெளிச்சு கோலம் போடுவா. காக்கை குருவி எதானும் சாப்ட்டு வைக்கறதுக்காக. ஆனா அமெரிக்கால அடுக்குமாடி குடியிருப்புல போயும் நம்மவா இப்படி கோலம் போட்றாளே. அது மாதிரி வெறும் பழக்கம் தான் சடங்கா எஞ்சிருக்கு. வீழி சார் பாரபட்சமே இல்லாம ஒவ்வொரு ஆத்துலயும் போய் சிராத்தத்துல பங்கேத்துகறது, இப்படி ஒரு சடங்கா அத மாத்திண்டதுனால தான். இப்பக் கூட வேற ஒரு சமயத்துல முத்துராமன கூட்டிண்டு போய் அவர் முன்னாடி இவர் தான் உங்க புள்ளன்னு நிறுத்தி வச்சாலும் அவர் எனக்குத் தான் புள்ளயே கெடையாதே மடையானு தான் சொல்வார்.”

“சுவாமிநாதனுக்கு அந்தக் குற்றவுணர்வு இருந்துண்டு வந்தது. பல வழிகளில் வீழி சாருக்கு உதவப் பாத்துருக்கார். ஆனா வீழி சார் ஒரு பட்டுப் புழு. தன்னச் சுத்தி தானே கூடு கண்டிண்டுட்டார். வெளிலேந்து எதுவும் உள்ள போக முடியாது. முத்துராமன் வளந்தார். அஹமதாபாத்துல சி.ஏ.
படிச்சார். டெல்லி லக்னோவ் பாம்பேன்னு வடஇந்தியால இருந்தார். அவர் இந்த ஊருக்கு எப்பவாவது தான் வருவார். அவருக்கு சுவாமிநாதன் இந்த வாலாம்பாளை கல்யாணம் பண்ணி வச்சார். வாலாம்பாள் யார் தெரியுமோ? சுப்பையரோட சீமந்த புத்ரி. சுவாமிநாதன், தான் இருந்தவரை குடும்ப ரகசியம் முத்துராமனுக்கு தெரியாமலேயே பாத்துண்டார். முத்துராமனுக்கு அப்பா சுவாமிநாதய்யர் மேல நல்லாவே பாசம் இருந்தது. கடைசி காலத்துல வாலாம்பாளும் அவரும் சுவாமிநாதய்யரை நல்லா பாத்துண்டா. எந்தக் கொறையும் இல்லாம. சுவாமிநாதனோட எறப்பு முத்துராமன உளுக்கிடுத்து பாவம். அப்பா செத்ததுக்கு அப்படி அழுதார்.”

“சுவாமிநாதன் மரணப் படுக்கையில் இருந்த போது சுப்பையர் கிட்ட கேட்டுண்டார். “டேய் சுப்பு, உம் பொண்ண ஏன் என் மகனுக்கு கட்டிவச்சேன் தெரியுமா? இந்த விஷயம் யார்க்கு தெரிஞ்சாலும் என் புள்ளைக்கோ அவன் புள்ளைக்கோ தெரியவே கூடாதுன்னு தான். நீ என் சினேகிதன் ஆச்சே. அதான் உன்கிட்ட கேட்டுக்கறேன். நான் செத்தப்பிறகு நீ வாலாம்பாள் கிட்ட சொல்லு. அவள் காலத்துக்குப் பிறகு அவள அவளோட மாட்டுப் பொண்ணுக்கு சொல்லச் சொல்லு. அவதான் என் வம்சத்துக்கு காப்பு. எனக்குத் தெரியும் வீழியப் பத்தி. அவன் இந்த வழிக்கு வரவே மாட்டான். ஆனா மத்தவாள நெனச்சாத் தான் பயம். அன்னிக்கு அந்தச் செடிய பிடிங்கி போட்டு நெஞ்சடைச்சுப் போய் உக்காந்திருந்தேனே உன் முன்னாடி. ஞாபகம் இருக்கா?” எப்படி இருக்கு பாரு. தலைமுறை தலைமுறையா வரும் தன் குலவழி மாட்டுப் பொண்கள இப்படி நிறுத்தி வைக்கிற அளவுக்கு எது அவரை இயக்கித்து?”

சாம்பமூர்த்தி இடைமறித்துச் சொன்னான்.

“தன் தலைமுறை தன் கையவிட்டுப் போயிடக் கூடாதுங்கிற பயம் தான் அவரை அப்படி மூர்க்கமா செலுத்திருக்கு. தன் குலத்து மூக்கணாங்கயித்துப் பிடி தன்னை விட்டு நழுவிட கூடாதுன்னு நெனைச்சிருக்கார். அவர் அவாள அங்க நிறுத்தி வைக்கல. தன்னையே தான் நிறுத்தி வச்சுருக்கார்.”

விஸ்வநாதன் தொடர்ந்தார், “அப்புறம் அவர் சுப்பையர்ட்ட இன்னொன்னும் கேட்டுண்டார்.”

“டேய் சுப்பு, எனக்கு ஒரு சத்தியம் பண்ணித்தா. நான் செத்ததுக்கு அப்றம் இந்த ஊர்லதான் இந்த வீட்ல தான் எம்புள்ள எனக்கு சிராத்தம் பண்ணணும்ன்னு. சுவாமிநாதன் இறந்து போனார். சுப்பையர் அவரது வேண்டுகோளை தன் பெண்ணைக் கூப்பிட்டுச் சொன்னார். அவரும் வயசு முதிர்ச்சியால சில வருஷத்துக்கு முந்தி எறந்து போய்ட்டார். சுபவதி வாலாம்பாள் புண்யத்துல வருஷா வருஷம் சுவாமிநாதய்யருக்கு ஸ்ராத்தம் இங்க தான் நடக்கறது.” விஸ்வநாதன் சொல்லி முடித்தார்.

சாம்பமூர்த்தி திகைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தான்.

“கடைசி வரை இந்த விஷயம் முத்துராமனுக்கு தெரியாதா என்ன?“

“கண்டிப்பா தெரிஞ்சுருக்க வாய்ப்பில்ல. வாலாம்பாள் விட்ருக்க மாட்டா.”

“அப்போ ஆசீர்வாதத்தின் போது நான் பாத்தது வீழி சார் வழியா எழுந்த சுவாமிநாதனை இல்லை. சுவாமிநாதன சாக்கா வச்சுண்டு வந்து நிக்கும் வீழி சாரையா?” என்று புருவம் உயர்த்தினான் சாம்பமூர்த்தி.

சிறிது யோசனைக்குப் பின் அவனாகவே  சொன்னான். ”சுவாமிநாதனுக்கு அந்தக் குற்றவுணர்வு சாகற வரை இருந்துருக்கும். தன்னோட சுயநலத்துக்காகவும் ஆசைக்காகவும் யாரோ ஒரு தந்தையோட புத்ர பாசத்த பலி கொடுத்துட்டோமேன்னு, பாவம் பண்ணிட்டமேன்னு. அதனால தான் தன்னோட சிராத்தத்தின் மூல்யமா அந்த அப்பாவையும் மகனையும் ஒருத்தர் பார்த்து ஒருத்தரா நிக்க வச்சுருக்கார். தானே செத்து இந்தப் பிராயச்சித்தத்த தேடிண்டுட்டார். தன்னோட ஒவ்வொரு சிராத்ததுலயும் அந்தப் பிராயச்சித்தக் கணக்க அவர் தீத்துக்கறார். அதுக்குத் தான் கடைசியா சுப்பையர்கிட்ட அந்த சத்தியத்தை வாங்கிண்டுருக்கார். என்ன ஆனாலும் தன்னோட சிராத்தத்த இங்க இந்த ஊர்ல நடத்தச் சொல்லி. அப்போ தானே ஊர்க்காரா வீழி சார்கிட்ட ஏத்துக்கொண்ட பிரமாணத்துபடி அவாத்துக்கு வீழி சார் வரமுடியும்.”

விஸ்வநாதய்யர் இணைந்து கொண்டார்.

“தண்ட இணைச்சு ரெண்டு செடியயும் ஒன்னா கட்டின மாதிரி சாஸ்திரம் அவா ரெண்டு குடும்பத்தையும் கட்டிருக்கு. மனுஷன் வெறுமன இந்த லோகத்துல வாழ முடியாது. அவன் கரையேற எதையாவதை அவன் புடிச்சுண்டாகணுமே. அது தான் இந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம். அது அவனுக்கு அடைச்ச வாசல்கள தெறந்து விட்ருக்கு. அவன் செய்யக் கூடியதுலாம் அந்த வாசல தேடிப் போய் நிக்க வேண்டியது மட்டும் தான். சுவாமிநாதனுக்கு அவர் கொண்ட ஸ்வீகாரம் மாதிரி. ஆனா பாரு, எதுவோ எங்கயோ பிசகி தப்பா போய்ருக்கு. அது இப்போ அவரோட சிராத்ததுல வந்து சரி ஆகிண்டுருக்கு.”

மீண்டும் சாம்பமுர்த்தி சொன்னான். ”விஷயம் முத்துராமனுக்கு தெரிஞ்சுருக்குமோனு எனக்கு தோனறதுண்ணா”

“ஏன்டா அப்படி சொல்ற?”

“கண்டிப்பா வெளிலேந்து விஷயம் போய்ருக்காது. வாலாம்பாளயும் நான் எதுவும் சொல்லல. ஆனா உள்ளூர அவர் உணர்ந்திருப்பார்ன்னு தோனறது. எனக்கு அவரும் பட்டுப்புழுவாத் தான் தெரிஞ்சார். தோ அந்தச் செடி இருந்துதே. மண்ணுக்கு கீழ உருளைக்கிழங்கு. மண்ணுக்கு மேல தக்காளின்னு. என்னதான் மேல தக்காளியா வெளஞ்சு குலுங்கினாலும் மண்ணுல மூடி மறைஞ்சிருக்கும் உருளைக் கிழங்கோட வேர் தன்ன காட்டிக்கொடுக்காமல் இல்ல. அந்த தக்காளிகளில ஏறிப்போன சுவையை நீங்க என்னன்னு சொல்வேள்? இப்போ நெனச்சுப் பாத்தா அந்த சுவையத் தானே நான் இன்னிக்கு உணர்ந்துருக்கேன்” என்றான் சாம்பமூர்த்தி.

“எது எப்படி இருந்தா என்ன? அங்க நான் பாத்ததுலாம் அவாள மீறி நடந்தது தான். அவாளோட கட்டுக்குள்ள அடக்கிட முடியாத ஒன்னு வெளிப்பட்ருக்கு. பரப்பிரம்மம் ஏதோ ஒன்னு  நிகழ்த்தி வச்சுருக்கு. பரிபூரண தந்தைமை. அது மட்டும் சத்தியம். நான் அடிச்சு சொல்வேன்” என்று தளும்பி விட்டான் சாம்பமூர்த்தி.

பின்னர் நிலை திரும்பி, “சரி அப்புறம் நான் கெளம்பவாண்ணா? வந்த காரியம் முடிஞ்சுதே” என்றான்.

“உச்சி ஏறி வெய்ய அடி சவட்டுதே. சித்த சிரமப் பரிகாரம் பண்ணிக்கோயேன். கண் அசந்துட்டு சாயறச்ச கெளம்பேன். இந்த கயித்து கட்டில்லேயே கட்டைய நீட்டேன்.“ என்றார் விஸ்வநாதய்யர். அதுவும் சரிதான் என்றுபட்டது சாம்பமூர்த்திக்கு. மேல் துண்டை உதறி கட்டில் மேல் விரித்து படுத்துக் கொண்டான். விஸ்வநாதன் படுக்கை அறைக்குள் சென்று படுத்துக்கொண்டார்.

4

விஸ்வநாதய்யர் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டார். படுக்கையுள் ஜன்னல் வழியாக சாம்பமூர்த்தி ஆளோடியில் இருந்து சைக்கிளை இறக்கி வைப்பதைப் பார்த்தார். உள்ளிருந்தவராக ஜன்னல் வழியே, “என்னடா மகாவிஷ்ணு! உன் கருட வாகனத்த ரெடி பண்ணிண்டுருக்கியா?” என்று குரல் கொடுத்தார்.

“நீங்க கை காமிக்கறவன் தானே இங்க மகாவிஷ்ணு” என்று பதில் சொன்னான் சாம்பமூர்த்தி. பின்னர், “ஆமாண்ணா, மணி நாலரை ஆயிடுத்து. ஊர்ல காரியங் கெடக்கு. அஸ்தமணத்துக்குள்ள போய்ச் சேரணும் பாத்தேளா” என்றான் அவரிடம். அவன் உள்ளே வந்து தன் இத்யாதிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வேஷ்டியை சரிபண்ணிக்கொண்டு வாசலில் நின்றிருந்தவராக வழியனுப்பினார் விஸ்வநாதய்யர்.

“நான் போய்ட்டு வரேண்ணா”

“கடைசி நேரத்துல கேட்டு நீ வந்தது ரொம்ப உபகாரமா இருந்ததுடா. போய்ட்டு வா. சந்தோஷம்”

சாம்பமூர்த்தி அவரைப் பார்த்துப் புன்னகைத்தான். பின்னர் சைக்கிளை செலுத்தினான். கொஞ்ச தூரம் ஓட்டியபோது பெருமாள் கோயிலுக்கு அருகில் முத்துராமன் மூங்கில் கூடைக்குள் அடுக்கியிருந்த எச்சில் இலைகளோடு ஆற்றங்கரைப் பக்கம் செல்வதைப் பார்த்தான். இவன் சாலைப் பக்கமாய் வளைந்து சென்றான்.