சவச்சீலை – முன்ஷி பிரேம்சந்த்

1 comment

குடிசைக்கு வெளியே அணைந்து போன தீக்குழிக்கு முன்பாக தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். உள்ளே பேறுவலி கண்ட மகனின் இளம் மனைவி, புத்யா அவ்வப்போது இதயத்தைக் கிழிக்கும் கூரிய ஓலங்களை அவர்களுக்கு அனுப்பித் துணுக்குற வைத்தாள். அவள் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவ்வோலமே அறிவித்தது. கடுமையான குளிர் இரவு. எங்கும் உறைவு நீக்கமற நிறைந்திருந்தது. அந்தக் கிராமத்தை இருள் மெல்ல மெல்ல மொத்தமாக விழுங்கியிருந்தது.

‘இவள் உயிர் பிழைப்பாள் என்று தோன்றவில்லை’ என்றார் கிஷு. ’இந்த நீண்ட நாள் முழுவதும் அவள் வலியால் விதிர்த்தபடியே இருக்கிறாள். நீ உள்ளே சென்று அவளைப் பார்த்தால் பரவாயில்லை.’

’அவள் சாகப் போகிறவள் எனில் நான் எட்டிப் பார்ப்பதால் என்ன நலம் விளையப் போகிறது?’ துயர்மிகு குரலில் பதிலளித்தான் மது.

’நீ நன்றி கெட்டவன். அந்தப் பெண் உனக்கு ஓராண்டாக மனைவி தரவேண்டிய அத்தனை சுகங்களிலும் தவறாமல் இருந்திருக்கிறாள்!’

’இந்த நரக வேதனையில் அவள் துடிதுடிப்பதை என்னால் பார்க்க முடியாது.’

அவர்கள் சாமர்கள். அவர்களது பழக்கங்கள் அந்த ஊரில் அத்தனை விரும்பப்படுவன அல்ல. கிஷு ஒரு நாள் வேலைக்குப் போனால் மூன்று நாட்கள் ஓய்வெடுப்பான். தன்னால் உதவ இயன்ற வேலைகளைக்கூட மது தவிர்ப்பான். ஒருவேளை ஒருமணி நேரம் வேலை செய்தால் அதே அளவு நேரத்திற்குத் தன் சைலக் குழலைப் புகைத்துக்கொண்டிருப்பான். இதனாலேயே இந்தச் சோம்பேறிகளுக்கு யாரும் வேலை தருவதில்லை. பல காரணங்களைத் தேடி வேலை செய்யாமலிருப்பது அவர்கள் வழக்கம். வீட்டில் ஒரு பிடி அரிசி இருந்துவிட்டாலே அதுவும் வேலையை ஒதுக்கப் போதுமானது. ஒருமுறை உண்ண அரிசியும் இல்லாமல் சில வேளைகள் பட்டினி கிடக்க நேர்ந்தபோது கிஷு ஒரு மரத்தில் ஏறி கிளைகளை உடைத்துப் போட அதை எடுத்துச் சென்று சந்தையில் விற்று வந்தான் மது. அந்தக் காசு செலவாகும் வரை அவர்கள் வேலையைப் பற்றி சற்றும் பொருட்படுத்தவில்லை.  அடுத்தப் பட்டினித் தொடர் உண்டான பிறகே அவர்களுக்கு மீண்டும் உடைக்கப்பட வேண்டிய மரக்கிளைகள் நினைவில் எழும். வேலை தேடலாம் என்று கிளம்பி வெறுங்கையோடு திரும்பும் சம்பவங்களும் நிகழும். இந்த உழவர்களின் கிராமத்தில் வேலைக்கொன்றும் அவ்வளவு பஞ்சமில்லை. கடினமாக உழைப்பவர்களுக்கு உரிய ஊதியத்துடன் நூறு வேலைகள் உண்டு.  

எப்போதாவது ஒரு ஆள் செய்யும் வேலைக்கு இருவர் தேவைப்படும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியில் தேவையற்ற ஊதியம் கோருவது அல்லது தனக்குச் சொந்தமற்ற ஒன்றை எடுக்க நினைப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்கனவே துறவு வாழ்க்கை வாழ்ந்த இவர்களுக்கு இருந்ததில்லை. கூடவே இறை நம்பிக்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டிய உறுதிமொழியும் சுயக்கட்டுப்பாடும் இங்கு தேவைப்படவில்லை. ஏற்கனவே விலகலில் துய்த்திருக்கும் ஆட்களுக்கு எதற்குத் தன்விளக்க ஒப்பந்தம்? அவர்களது வாழ்க்கை விசித்திரமானது. சில களிமன் பானைகளைத் தவிர அவர்களுக்கு உடைமை ஏதுமில்லை. திகம்பரத்தை மறைக்க கந்தல் துணியைச் சுற்றியிருந்தனர். கடன்சுமை மிகுந்திருந்தது. மக்கள் வசைபேசி அவமதிப்பது இயல்பாகி இருந்தது. என்றபோதும் உலகியல் மாயைகளின் பிடியில் சிக்காத ஞானிகளைப் போல் சொல்வதற்கு எந்தக் கவலையும் அற்றவர்களாய் இருந்தனர்.  அவர்களது பரிதாபகரமான ஏழ்மை நிலையை அறிந்திருந்த போதும் எப்போதாவது அவர்களுக்கு அவ்வூரார் கடன் தந்தனர். அது ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்த பின்னும். அறுவடையின் போது சில தானியங்களைத் திருடுவதும் பிறருடைய நிலத்தில் இருந்து உருளைகளைத் தோண்டி அவற்றை வேகவைத்து வயிற்றை நிரப்பிக்கொள்வதும் உண்டு. சில இரவுகளில் கரும்புக்கொல்லையில் நுழைந்து ஒரு சில கரும்பைத் திருடிச் சுவைப்பதும் உண்டு. 

அறுபதாண்டுகளாக இந்த துறவுச் சுகத்தை அனுபவித்து வாழ்ந்திருக்கிறான் கிஷு. தன் தந்தையின் ஒவ்வொரு இம்மி பிசகாத வாரிசான மதுவும் அவர் காலடியைப் பின்பற்றுகிறான். அவன் செய்த சாதனை என ஏதேனும் உண்டெனில் தன் தந்தையின் துறவு மகுடத்தில் தன் சோம்பேறித்தனத்தின் மூலமாக இன்னொரு மணிக்கல்லைச் சேர்த்தது மட்டும்தான். கீஷுவின் மனைவி சில காலத்திற்கு முன் இறந்தாள். மதுவுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தான் வந்தது முதலே இந்தக் குடும்பத்தின் ஒழுங்கையும் தன்மானத்தையும் காத்து மேம்படுத்த தன் ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டாள் இப்பெண். பிற வீடுகளில் தானியங்களை அரைத்து, புல்வெட்டி கொஞ்சம் சம்பாதித்தாள். அதைக்கொண்டு இந்த வெட்கம் கெட்ட ஆண்பிள்ளைகளின் தொந்தியை நிரப்புவதற்காக மாவு வாங்குவாள். அவள் இருப்பு அவர்களை இன்னும் படு சோம்பேறியாகவும் வலியறியாத மாக்களாகவும் மாற்றியது. யாராவது வேலை தந்தால் இருமடங்கு கூலி கேட்டு அதற்கு ஒரு பைசா குறைந்தாலும் ‘வேறு ஆளைப்பார்’ என்று மிதப்புடன் பதிலளித்தனர். இப்போது அதே பெண் நாள் முழுக்க இடுப்பு வலியால் துடித்தபடி இருக்க இந்த இரண்டு ஆண்களும் அநேகமாக அவள் தன் கடைசி மூச்சை எப்போது விட்டொழிவாள், நாம் சென்று நிம்மதியாகத் தூங்கலாம் என்ற நினைப்புடன் அமர்ந்திருக்கின்றனர். 

சாம்பலிலிருந்து உருளைக்கிழங்குகளை வெடுக்கென எடுத்து உரித்தவாறு, ‘எழுந்திரு. உள்ளே போய்ப் பார். அவளுக்குள் ஏதோ ஆவி புகுந்தது போல் இருக்கிறது. சூனியக்காரி! இந்தக் கொள்ளைக்கார ஊரில் பேயோட்டுபவன்கூட ஒரு ரூபாய் கேட்பான். அதை யார் நமக்குத் தரத்தயாராக இருக்கிறார்கள்?’ என்று மதுவிடம் கிஷு சொன்னான்.

தான் உள்ளே போனால் எல்லா உருளையையும் கிஷுவே உரித்திடுவார் என்ற தயக்கத்தில் ’எனக்குப் பயமாக இருக்கிறது’ என்றான் மது.

’என்ன பயம்? நான் இங்குதானே இருக்கிறேன்?’

’அப்படியெனில் நீங்களே சென்று பார்க்கலாமே?’

’என் பொண்டாட்டி சாகக்கிடந்த போது மூன்று நாட்கள் அவள் பக்கத்திலேயே நானும் இருந்தேன். புத்யா எனைக் கண்டால் சங்கடப்படுவாள். அவள் முகத்தை முக்காடு போடாமல் இருந்து நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை. இத்தகைய உணர்ச்சி மீறிய நிலையில் அவள் என்னைப் பார்த்தால் நாணம் கொண்டு தன்னிச்சையாக அசையவோ வலியைச் சமாளிக்கவோ தடை உண்டாகும்.’

’ஒருவேளை அவள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தால் என்னாகும்? அரிசி, எண்ணெய், சர்க்கரை என்று எதுவுமே வீட்டில் இல்லையே.’

’ஓ! சரிதான். நாம் எல்லாவற்றையும் சேகரிப்போம். முதலில் பகவான் நமக்குக் குழந்தையைத் தரட்டும். இதுவரை நமக்கு ஒற்றைப் பைசா தர யோசித்தவர்கள் எல்லாம் பிள்ளை பிறந்ததும் தானாக வந்து தானம் தருவார்கள். எங்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்து நொடித்துப் போனோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தானாக எல்லாம் சரியாகிவிட்டது.’

இத்தகைய மனவோட்டம் உருவானது அத்தனை வியப்பிற்குரியதல்ல. அல்லும் பகலும் பாடுபடும் மக்களின் வாழ்க்கைத் தரம் கிஷு மதுவின் வாழ்க்கையைவிட அத்தனை மேம்பட்டதாக இருக்காத இந்தக் குமுகச் சூழலில் இந்த மனநிலை உருவாகி வளர்வது தவிர்க்கவியலாததே. குடியானவர்களின் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்பவர்கள் இருக்கும் நிலையில் பற்றற்ற மனநிலை என்பது பலனளிப்பதே. ஒருவகையில் கிஷு சொல்வது உண்மையின் பிரதிபலிப்பு. நிலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரிடம் நட்பு பேணுவதைவிட நெருக்கமாகச் சண்டைக்கும் கட்டப்பஞ்சாயத்திற்கும் தயாராக இருக்கும் போக்கிரித்தனமான ஆட்களுடன் கைகோர்த்து நல்லுறவு பேணும் குடியானவர்கள் நிறைந்திருக்கும் சூழலில் அவர் பேச்சு விவேகமானது என்றும் சொல்லலாம். அவனிடம் இல்லாமல் இருந்தது கட்டப்பஞ்சாயத்துக்காரர்களிடம் இருந்த விதிமுறைகளைப் பின்பற்றும் பழக்கமே. எனவே இவரைப் போன்றவர்கள் எல்லாம் முன்னேறி அதிகாரம் கொண்டவர்களாக ஆகிவிட்ட நிலையில் இவர் மட்டும் அவர்களால் அவமானத்திற்கு உள்ளாக்கப்படும் நிலையிலேயே தொடர்ந்து இருக்கிறார். குறைந்தது இன்னும் அடிநிலையில் கடினமாக உழைத்து முன்னேறாமல் இருப்பவர்களைப் போல முதுகொடிய தான் வேலை செய்ய வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் தன்னிறைவு கொள்கிறார். இவரது எளிய சிந்தனையும் பொறுப்பேற்காத மனமும் தன்னைச் சுரண்ட நினைப்பவர்களுக்கு எதிரான வலுவான ஆயுதங்கள். 

இருவரும் சூடான உருளைத் தோலை உரித்து கோரப் பசியில் இருப்பவர்களைப் போல வாயிலிட்டனர். நேற்றிலிருந்து ஒரு உருண்டைச் சோற்றைக்கூட உட்கொள்ளாத நிலையில் அவர்களால் அதன் சூடு குறையும் வரை காத்திருக்க முடியவில்லை. அடிக்கடி நாச்சூடு பட்டது. கிழங்கின் வெளிப்புறம் அவ்வளவு சூடாக இல்லாததால் வாயில் போட்டனர். அவர்களது பற்கள் கிழங்கைக் கடித்ததும் உள்ளிருந்த மாவுப்பகுதியின் அதீத சூடு அவர்களது நா, அன்னம், தொண்டை அனைத்தையும் பதம் பார்த்தது. அந்தக் கனல் துண்டங்களைக் கடித்துச் சுவைத்துத் தின்பதைவிட நேரடியாக விழுங்குவது நல்லது என்று தோன்றியது. எப்படியோ வயிற்றுக்குள் அனுப்பிவிட்டால் அது தன் சூட்டை இழந்து குளிர்ந்துதானே ஆகவேண்டும்? துண்டுகளைத் துரிதமாய் விழுங்கினார்கள்; இருந்தும் இந்த முயற்சி விழிகளை நீரால் ததும்ப வைத்தது. 

மடமடவென விழுங்கிய போது இருபதாண்டுகளுக்கு முன்பு தாக்கூரின் திருமண விழாவில் தான் பங்கேற்றதன் நினைவுகள் கிஷுவின் மனத்தில் எழுந்தன. விருந்தில் அளவுக்கு அதிகமாக அவன் உண்டதால் அந்தத் தினம் தன் வாழ்வின் பிடித்தமான தினங்களுள் ஒன்றாக நிலைத்துவிட்டது. இப்போதும் அந்த நினைவுகள் உயிரோட்டமாக இருக்கின்றன. ’அந்த அற்புதமான சாப்பாட்டை நான் உயிருள்ளவரை மறப்பேனா! அதற்குப் பிறகு அது போல ஒரு சாப்பாட்டை நான் உண்டதே இல்லை. பிரமாதம்! நான் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். பெண் வீட்டார் பூரிகளை அடுக்கினர். அது மட்டுமா – நெய்யூற்றிய இனிப்புகள், ரைத்தா, மூன்று வகை உலரிலை உணவுகள், இன்னும் நிறைய காய்கறிகள், கெட்டித்தயிர், சட்னி! அந்த உணவின் சுவை எத்தகையது என்று விவரிக்க முடியாது. எதையும் கோரலாம். இனி முடியாது எனும் நிலை வரும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். மக்கள் தண்ணீருக்கு வயிற்றில் இடமில்லை என்ற அளவிற்கு உண்டனர். ஆனால் பரிமாறுபவர்களோ நாங்கள் வேண்டாம் என்றாலும் கை வைத்து தட்டை மறைத்தாலும் அதையும் மீறி வட்டவட்ட நறுமண கச்சோரிகளைச் சுடச்சுட தட்டில் வைத்தபடி இருந்தனர். அவர்களுக்குப் போதும் என்ற சொல்லுக்குப் பொருளே தெரியவில்லை. கைகழுவி வாய் கொப்பளித்த உடன் தயாராக நின்றிருந்தவர் பான் தந்தார். எனக்கோ அதை வாயில் வைத்து அசைபோட விருப்பமில்லை. என்னால் எழுந்து நிற்கவே முடியவில்லை. எப்படியோ தத்தித் தடுமாறி வந்து போர்வையை விரித்து நீட்டிப் படுத்துக்கொண்டேன். தாக்கூரின் பெருந்தன்மை அத்தகையது. அதற்கு எல்லையே இல்லை!’

மது தன் கற்பனையில் இந்த உணவுகளின் சுவையை உணர்ந்தவனாய், ’நமக்கு மட்டும் இப்போது அத்தகைய உணவை யாரேனும் பரிமாறினால் எப்படி இருக்கும்?’ என்று வாய் பிளந்து வியந்தான்.

’யார் தருவார்? வாய்ப்பே இல்லை. அது ஒரு காலம். இப்போது மக்கள் கஞ்சக் கைகள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ”திருமணத்திற்கு நிறைய செலவழிக்காதீர்கள்! காரியங்களுக்கு நிறைய செலவழிக்காதீர்கள்” என்று அறிவுரை தருகிறார்கள். அவர்களிடம் “சரி ஏழைகளைப் பிழிந்து கட்டுக்கட்டாகச் சம்பாதித்து வைத்திருக்கிறீர்களே? அதை என்னதான் செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்க வேண்டும். பிழிந்து சம்பாதிப்பது நிற்பதே இல்லை. ஆனால் செலவு என்று வரும்போது மட்டும் கஞ்சத்தனம் ஒட்டிக்கொள்கிறது பாரேன்.’

’நீங்கள் குறைந்தது இருபது பூரியாவது உண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.’

’அதற்கும் மேல்.’

’நான் மடமடவென ஐம்பது விழுங்கி இருப்பேன்.’

’நானும் ஐம்பதுக்குக் குறையாமல் உண்டிருப்பேன். அப்போது இளமையின் மிடுக்கு வேறு. உனக்கு அதில் பாதி வலிமைகூட இல்லை.’

உருளைக்கிழங்குகளைத் தின்று தீர்த்ததும் தண்ணீர் அருந்திவிட்டு கந்தல் வேட்டியைச் சுற்றிக்கொண்டு, தீக்குழியின் அருகிலேயே கருவிலிருக்கும் தோரணையில் சுருங்கிப் படுத்தனர். இராட்சத அரவங்கள் அசையாமல் கிடப்பது போலிருந்தது. அதே சமயம் புத்யா இடுப்பு வலியால் இன்னும் அவதியுற்று முனகியபடி இருந்தாள்.

பொழுது விடிந்தது. மது குடிசைக்குள் சென்று பார்த்தான். மனைவியின் உடல் விறைத்து குளிர்ந்திருந்ததை உணர்ந்தான். அவள் வாயைச் சுற்றி ஈக்கள் மொய்த்தன. அவளது நிலைகுத்திய கல்விழிகள் மேல் நோக்கி எதையோ முறைத்துப் பார்ப்பது போல் இருந்தது. அவளுடலில் தூசியும் கறையும் படிந்திருந்தது. அவள் கருவிலேயே குழந்தை இறந்திருந்தது. 

அவன் கிஷுவை நோக்கி விரைந்தான். இரு ஆண்களும் உரக்க ஒலியெழுப்பி நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தனர். வருத்தம் தோய்ந்த அவர்களது குரலைக் கேட்ட சுற்றத்தார் ஓடி வந்தனர். காலம் காலமாக நடப்பதைப் போல தம் இரக்கத்தைத் தெரிவித்து அவர்களை ஆறுதல்படுத்த சில வார்த்தைகளைக் கூறினர். 

இருப்பினும் இப்படியே மாரடித்து ஒப்பாரி வைக்க போதிய நேரமில்லை. அவர்களுக்கு உடனே சவச்சீலையும் பிணத்தை எரிக்க விறகுகளும் தேவைப்பட்டன. வீட்டிலிருந்த பணம் எல்லாம் பருந்துக் கூட்டத்தில் சிக்கிய மாமிசத்தைப் போலத் தீர்ந்துவிட்டது. 

அப்பனும் மகனும் அழுது ஓலமிட்டபடி அந்த ஊரின் நிழக்கிழார்களைப் பார்க்கச் சென்றனர். வேலைக்கு அழைத்தால் வராமல் சின்னச் சின்னத் திருட்டு செய்யும் இந்த இருவரிடம் அந்தப் பெரிய மனிதர்கள் கடுமையான சினத்தில் இருந்தனர். சிக்கினால் அடித்து உதைக்கவும் தயாராக இருந்தனர். இருப்பினும், ‘என்னாயிற்று கிஷு? ஏன் அழுகிறாய்? இப்போதெல்லாம் உன்னைக் காண்பதே அரிதாகிவிட்டதே. கிராமத்தை விட்டு வெளியேறும் கணக்கேதும் வைத்திருக்கிறாயா என்ன?’ என்று கேட்டனர்.

கிஷு தன் நெற்றி நிலம்பட அவர்கள் காலில் வீழ்ந்தான். ‘ஐயா ஒரு கொடிய சம்பவம் எங்களுக்கு நிகழ்ந்துவிட்டது. நேற்றிரவு மதுவின் மனைவி செத்துவிட்டாள். நாள் முழுவதும் வலியால் துடித்திருந்தாள். நாங்கள் இருவரும் அவளருகிலேயே நேற்றிரவு முழுவதும் இருந்தோம். மருந்து, பானம், மூலிகை என எல்லாவற்றையும் – பாருங்களேன் முயன்றுவிட்டோம். இருந்தாலும் எங்களை அம்போ என்று விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். எங்களுக்கு இப்போது யார் சோறிடுவார்கள்? தலைவரே, நாங்கள் நாசமாகிப் போனோம். இந்த வீடு களையிழந்துவிட்டது. நான் உங்கள் அடிமை. நீங்கள் மட்டுமே அவளை எரியூட்ட உதவ முடியும். எங்களிடம் இருந்த மிச்ச சொச்சத்தையும் மருந்து வாங்க செலவழித்து விட்டோம். உங்கள் மேலான கருணையினால் மட்டுமே அவளது இறுதிச் சடங்கு நிகழ முடியும். உங்கள் வீட்டுக் கதவை விட்டால் இந்த ஏழை பிச்சை எடுக்க எந்தக் கதவு இருக்கிறது?’

நிலக்கிழார் நிதானமான கருணைமிக்க மனிதன். ஆனால் கிஷுக்குக் கருணை காட்டுவது மழையில் நனையும் காக்கைக்கு வெள்ளை வர்ணம் பூசுவது போல. அவனிடம், ‘இங்கிருந்து ஓடிச் செல்! அழுகும்வரை வீட்டிலேயே சவத்தை வைத்துக்கொள்! வேலைக்குக் கூப்பிட்டால் காற்றோடு காற்றாக பறந்துவிடுவது. ஆள் கண்ணில் அகப்படுவதே இல்லை. இன்று உனக்குக் காரியம் என்றதும் என்னைப் புகழ்ந்து பேசி காசு பிடுங்க வந்திருக்கிறாய். பிச்சைக்கார நாயே!’ என்று சொல்ல மனத்தில் நினைத்துக்கொண்டார்.

ஆனால் இது பழிவாங்கவோ வெகுண்டெழவோ சரியான தருணமன்று. சரியோ தவறோ தன் சட்டைப்பையில் இருந்து இரண்டு ரூபாயை எடுத்து ஒரு வருத்தச் சொல்கூட சொல்லாமல் அவனிடம் எறிந்தார். இந்தச் சங்கடத்திலிருந்து விரைந்து வெளியேறும் விதமாக அவன் முகத்தைக்கூட பார்க்கவில்லை. 

நிலக்கிழாரே இரண்டு ரூபாய் தந்துவிட்ட பிறகு அந்தக் கிராமத்தின் வணிகர்களும் வட்டிக்காரர்களும் அவனை எப்படி புறக்கணிப்பார்கள்? அவன் நிலக்கிழார் இரண்டு ரூபாய் அளித்த செய்தியை ஊரெங்கும் கேட்கும்படி தண்டோரா போட்டான். மக்களுள் சிலர் இரண்டு அனா, நான்கு அனா என அவனுக்குத் தந்தனர். சிலர் அரிசி பருப்பு தந்தனர். சிலர் விறகுகளை. இரண்டு ஆண்களும் சவச்சீலை வாங்குவதற்காக நண்பகலில் சந்தைக்குச் செல்ல வேறு சில ஆட்கள் பிணத்தைத் தூக்கிச் செல்வதற்கான பாடை செய்ய மூங்கில் கழிகளைப் பொருத்தினர். 

இளகிய மனம் படைத்த சில பெண்கள் வந்து துர்பாக்கியசாலியான புத்யாவின் உடலைப் பார்த்து சில துளிக் கண்ணீர் சிந்திவிட்டு அங்கிருந்து நீங்கினர்.

சந்தைக்குச் சென்றதும் ’நம்மிடம் ஏற்கனவே சிதையேற்றுவதற்குப் போதுமான விறகுகள் இருக்கின்றன மது. என்ன சொல்கிறாய்?’ என்றான் கிஷு. 

’ஆம். நிறையவே உள்ளன’ என்று பதிலளித்தான் மது. ’இப்போது நமக்குச் சவச்சீலை மட்டுமே தேவை.’

’அப்படியானால் விலை மலிவான ஒன்றை வாங்கலாம்.’

’ஆமாம். மலிவானதே போதும். பிணத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது இருட்டிவிடும். இருளில் சவச்சீலையின் தரத்தையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள்?’

’என்ன கொடுமையான பழக்கம் இது! உயிரோடிருக்கையில் உடம்பை மூட போதிய கந்தல் துணிகூட கிடைக்காதவளுக்கு இறந்த பிறகு புதிய துணியில் சவச்சீலை போர்த்தியாக வேண்டுமாம்.’

’சவச்சீலை பிணத்தோடு சேர்ந்து எரியத்தானே போகிறது.’

’வேறென்ன நடக்கும்! இந்த ஐந்து ரூபாய் நம் கையில் முன்னரே கிட்டியிருந்தால் அவளது மருத்துவச் செலவுக்காவது பயன்பட்டிருக்கும்.’

ஒருவர் மற்றவரது பூடகமான அர்த்தத்தை ஏற்பதை நோக்கியே பேசினர். மாலை நிழல்கள் நீளும் வரை அந்தச் சந்தையிலேயே அலைந்து திரிந்தனர். தற்செயலாகவோ திட்டமிட்ட நிகழ்வாகவோ ஒரு சத்திரத்தின் முன்பு வந்து சேர்ந்தனர். சொல்லாமலேயே புரிந்துணர்வு கொள்ளும் ஒப்பந்தம் செய்தவர்களைப் போல உள்ளே நுழைந்து சில நொடிகள் தயங்கி நின்றனர். கிஷு ஒரு நாட்டுச் சாராய போத்தலையும் அதனோடு தொட்டுக்கொள்ள சில கஜக் துண்டுகளையும் வாங்கினான். வாசற்படியில் அமர்ந்து அருந்தத் தொடங்கினர். 

தொண்டையில் ஓரிரு குடுவைகள் வேகமாக உள்ளிறங்கியதுமே இரு ஆண்களின் தலையும் சுற்றலெடுத்தன.

’சவச்சீலையின் பயன்தான் என்ன? எப்படியோ எரிந்து சாம்பலாகத்தான் போகிறது. மருமகள் அதைத் தன்னுடன் சேர்த்து எரிக்க நிச்சயம் ஒப்பமாட்டாள்.’

தெய்வங்களிடம் தன் களங்கமின்மையை முன்வைப்பது போல வானத்தை நிமிர்ந்து பார்த்தான் மது. ‘உலக வாழ்க்கையே இத்தகையதுதான். ஏன் இந்தப் பணப்பைகள் பிராமணர்களுக்கு மட்டும் ஆயிரமாயிரமாக அள்ளி இறைக்கின்றனர்? அவர்கள் இறந்த பிறகு மறு உலகில் நன்கு கவனிக்கப்படுவார்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?’

’சரி, பெரும்புள்ளிகளிடம் நிறைய பணமிருக்கிறது. அவர்கள் கொட்டட்டும். ஆற்றில் போடுவதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது?’

’சரி மக்களிடம் போய் நாம் என்ன சொல்வது? அவர்கள் எங்கே சவச்சீலை எனக் கேட்க மாட்டார்களா?’

கிஷு கொக்கரித்தான். ’நம் மடியில் இருந்த பணம் நழுவி விழுந்துவிட்டது. அதைத் தேடிப் பார்த்தும் கிட்டவில்லை என்று சொல்வோம்.’

மதுவும் சிரித்தான். எதிர்பாராத இந்தப் பாக்கியத்தையும் ஊழை விஞ்சிய தம் சாதுரியத்தையும் எண்ணினான். ’பாவம் புண்ணியவதி. நமக்கு நல்லவிதமாக இருந்தாள். செத்த பிறகும் நமக்கு வயிறு நிறைய உணவு கிடைக்க வழி செய்திருக்கிறாள்.’

இப்போது பாதிக்கும் மேலாகப் போத்தலைக் காலி செய்திருந்தனர். கிஷு மதுவை அனுப்பி இரண்டு இணை பூரிகள், குழம்புக்கறி, ஈரல் வறுவல் ஆகியவற்றோடு வறுத்த மீன்களையும் வாங்கி வரச்சொன்னான். சத்திரத்திற்கு நேர் எதிரில் அந்தக் கடை இருந்தது. இரண்டு இலைத்தட்டுகளில் இவை அனைத்தையும் வாங்கி உடனடியாகத் திரும்பினான் மது. அதற்கு ஒன்றரை ரூபாய் ஆனது. இப்போது கொஞ்சம் சில்லறை மட்டும் மீதி இருந்தது.

வரவிருக்கும் இழிசொல்லைப் பற்றிப் பொருட்படுத்தாமல், தம் செயல்களுக்கான விளைவுகளை எண்ணாமலும் சிம்மம் சிறுவிலங்கை உண்ணத் தயாராக இருப்பது போல் மிடுக்காக அமர்ந்து, உண்ணலாயினர். அது போன்ற சிற்சிறு மன உறுத்தல்களை எல்லாம் நெடுங்காலம் முன்பே கடந்துவிட்டிருந்தனர். கிஷு, ‘நாம் மனநிறைவு கொண்டாலே அது வானத்தில் இருக்கும் அவளது ஆன்மாவைச் சாந்தியடையச் செய்யும்’ என்று தத்துவார்த்தமாகப் பேசினான்.

அளவுக்கு மீறிய மரியாதையுடன் அதை ஏற்பவனாய் தலை குனிந்தான். ’கண்டிப்பாக அவள் ஆன்மா சாந்தியடையும். சந்தேகமே இல்லை. கடவுளே, உலகெல்லாம் அறிந்தவனே. அவளுக்குச் சொர்க்கத்தில் இடம் கொடு. எங்கள் இதயப்பூர்வமாக அவளுக்காக வேண்டுகிறோம். இன்று நாங்கள் சுவைப்பதைப் போன்ற ஒரு இன் உணவை இதுவரை எங்கள் வாழ்வில் சுவைத்ததே இல்லை.’

ஒரு கணத்தில் ஏதோ ஒரு ஐயத்தால் தாக்கப்பட்டவனைப் போல, ’அப்பா! நாமும் என்றோ ஒரு நாள் அந்தச் சொர்க்கத்திற்குப் போக வேண்டும்தானே?’ என வினவினான் மது.

கிஷு இந்தச் சிறுபிள்ளைத்தனமான வினாவை விழியால் புறக்கணித்துவிட்டு மதுவைப் பார்வையாலேயே கடிந்துகொண்டான்.

’அவள் நம்மைப் பார்த்து “ஏன் நீங்கள் என் சடலத்திற்குரிய சவச்சீலையைத் தரவில்லை?” என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?’

’உளறலைக் குறை.’

’ஆனால் அவள் நிச்சயம் நம்மைக் கேட்பாள்.’

’அவளுக்கான சவச்சீலை நிச்சயம் அவளுக்குக் கிடைக்கும். நான் என்ன மடையன் என்று நினைத்தாயா? இல்லை ஈனப்பிறவி என்றா? என் அறுபது வயது முழுதும் சோம்பித் திரிந்தேன் என்று நினைத்துவிட்டாயா? அவளுக்குச் சவச்சீலை கிடைக்கும். அதுவும் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல துணியில்.’

அவர் சொல்லில் நம்பிக்கையற்றவனாய், ’யார் அதைக் கொடுப்பார்களாம்? நீங்கள்தான் எல்லாப் பணத்தையும் ஊதித்தள்ளிவிட்டீரே?’ என்று மது கேட்டான்.

’அவளுக்கான சவச்சீலை அவளுக்குக் கிடைக்கும்.’ சடுதியில் கோபமடைந்தவனாய், ‘ஏன் என்னை நம்ப மறுக்கிறாய்?’ என்றான் கிஷு.

’சரி அதை யார் கொடுக்கப் போகிறார் என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய்?’

’இப்போது பணம் கொடுத்த அதே ஆட்கள்தான். ஆனால் பணமாகத் தர மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒரு வேளை பணமாகத் தந்தால் இன்னொரு முறை இதே போல நன்கு சாப்பிட்டுக் குடிப்போம். மூன்றாவது முறை சவச்சீலை கிடைக்கும்.’

இருள் பெருகியபடி இருக்க தாரகைகள் ஒளிர்ந்து சத்திரத்தை இன்னும் மிளிரச் செய்தது. அங்கிருந்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, தன் நண்பர்கள் வாயில் தன் கோப்பையைத் திணித்து ஆர்ப்பரித்தனர். சூழ்நிலை மகிழ்ச்சியை ஊக்குவித்தது. காற்றில் கட்டுப்பாடின்மை பரவியது. இன்னும் சில மிடறுகள் எடுத்துக்கொண்டால் போதை தலைக்கேறிவிடும் என்கிற நிலையில் பலர் இருந்தனர். மக்கள் இங்கு வருவதே தினசரி பாடுகளில் இருந்து மறதி கொள்ளத்தான். அவர்களது பெருகும் உவகைக்குச் சாராயத்தைவிட சத்திரத்தின் மிளிர்வுதான் காரணமாக இருந்தது. சில சொற்கள் ஆறுதலாக அவர்களை இங்கு அழைத்து வந்திருக்கலாம். இங்கு வாழ்வா சாவா அல்லது வாழ்வின் சாவா என்ற வேறுபாடு தெரியாமல் இருக்கும் அளவிற்கு மறதி கொள்ளலாம். 

சொல்ல முடியாதபடிக்கு எடையின்றி பறக்கும் இதயத்துடன் இங்கு தம் பானங்களை உறிஞ்சியபடி தந்தையும் மகனும் மகிழ்ந்திருந்தனர். எல்லோருடைய பார்வையும் அவர்கள் மீது பதிந்திருந்தன. எத்தனை நற்பேறுடையவர்கள். இருவரும் பகிர்ந்துகொள்ள ஒரு முழு போத்தல்!

அவர்கள் உண்ட பிறகு எஞ்சிய பூரியை இலைத்தட்டில் வைத்து, அருகே நின்று பேராசையுடன் பார்த்த பிச்சைக்காரனிடம் தந்தான் மது. வாழ்வில் முதல் முறை கொடுப்பதன் ஆணவத்தை, உவகையை, துள்ளலை உணர்ந்தான்.

’இதோ எடுத்துக்கொள். வயிறு நிறைய சாப்பிடு’ என்றான் கிஷு. ’உன் ஆசிகளைச் சொல். இந்த உணவைத் தந்த மகராசி இப்போது உயிரோடு இல்லை. உன் ஆசியோ நிச்சயம் அவளைச் சென்று சேரும். உன் உடலில் உள்ள அனைத்து துவாரங்களின் வழியாகவும் அவளை ஆசிர்வதித்துச் சொல். இது கடும் உழைப்பில் ஈட்டிய பணம்.’

இப்போது மது மறுபடியும் வானத்தைப் பார்த்துச் சொன்னான். ‘அப்பா அவள் நிச்சயம் சொர்க்கத்திற்குப் போவாள். இல்லையா? அவள் சொர்க்கத்தின் அரசியாக இருப்பாள்.’

மகிழ்ச்சியால் அலையடிக்கப்பட்டவனைப் போல கிஷு இருந்தான். ‘ஆமாம் மகனே. நிச்சயமாக. அவள் சொர்க்கம் செல்வாள். அவள் யாருக்கும் தொந்தரவு செய்யவில்லை. அவள் இறந்து தரையில் கிடக்கும் போதும் நமது அதிகப்படியான ஆசையை நிறைவேற்றி விட்டாளே? அவள் போகாமல், பிறகென்ன இரு கைகளாலும் ஏழையைச் சுரண்டி கோயில்களில் தீர்த்தம் போஜன தானம் செய்துவிட்டு கங்கையில் பாவத்தைக் கழிப்பதற்காக முங்கி எழும் இந்தப் பணப்பைகளா சொர்க்கத்திற்குச் செல்வார்கள்?’

அவர்களது ஊக்கமான நிலை திடீரென்று பரலோக ராஜ்ஜியத்தின் மீது ஒளியேற்றி உருவாக்கிய உவகையான நம்பிக்கை விரைவிலேயே வடிந்து ஏமாற்றமும் துயரமும் கொண்ட கொள்கலனாகிப் போயினர்.

’ஆனால் அப்பா’ என்றழைத்த மது ’அவள் தன் வாழ்வில் மிகவும் துன்பத்தை அனுபவித்தாள். இப்போது செத்துக் கிடக்கையிலும் அதற்குக் குறையாமல் துன்பம் அனுபவிக்கிறாள்.’ தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு உடைந்து விசும்பினான்.

கிஷு அவனை ஆறுதல்படுத்த முயன்றான். ‘மகனே, ஏனடா அழுகிறாய்? மகிழ்ச்சியுடன் இரு. அவளாவது இந்த உலக மாயவலையில் இருந்து விடுபட்டு இங்கிருக்கும் அச்சங்கள் பதற்றங்களின் துரத்தல்கள் இல்லாமல் இருக்கட்டும். மோகம், மாயை என்ற சுழலில் இருந்து தப்பிய அவள் பாக்கியவதி.’

அங்கேயே எழுந்து நின்று இருவரும் பாடத் தொடங்கினர்.

மாயா தேவியே 

உன் காந்தக் கண்களால் 

ஏன் எங்களைக் கவர்கிறாய்?

மாயாதேவியே!

ஒட்டுமொத்தச் சத்திரமும் உலகைப் பற்றி எந்தவித சஞ்சலமும் பொருட்டுமின்றி பாடிக்கொண்டிருந்த இந்த இருவரையும் வியப்பில் பார்த்தது. அதன் பின் அவர்கள் ஆடத் தொடங்கினர். குதித்தும் தாவியும் ஆடினர். தடுமாறி வீழ்ந்தனர். வசீகரிப்பவரைப் போல இடுப்பசைத்தனர். இறுதியில் போதையால் விளைந்த மடமை விலகவே உடைந்து நொறுங்கியது போல் வீழ்ந்தனர்.

*

ஆங்கில மூலம்: The Shroud by Munshi Premchand, Collected stories, Published by Maple Press, August 2012 Edition.

1 comment

Kasturi G October 19, 2021 - 11:30 am

Fantastic story in Premchand Munshi’s own classic signature style narrative.
Well translated.
Good luck
Thanks

Comments are closed.