இளையராஜாவும் பிம்பத் தயாரிப்பாளர்களும் – அரவிந்தன் கண்ணையன்

0 comment

சமீபகாலமாக இளையராஜாவே தனக்கு வரித்துக் கொள்ளாத, அவருக்குப் பொருந்தாத சில பிம்பங்களை, பல காரணங்களுக்காக சில தரப்புகள் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை சமூத்தின் சம்பிரதாயமான வரம்புகளைத் தகர்த்து, திரையிசைத் தாண்டி, தனக்கென பிரத்யேகமான ஒரு பீடத்தை அடைந்திருக்கிறார் என்று நிறுவும் முயற்சியில் பேராசிரியர் தருமராஜ் முன்னிலையில் இருக்கிறார்.

தருமராஜின் அயோத்திதாசர் பற்றிய புத்தகத்தில் சமர்ப்பணமாக “நந்தனைக் கடந்த, அயோத்திதாசரைக் கடந்த, பெரியாரையும் கடந்த இசைஞானி இளையாராஜாவிற்கு சமர்ப்பணம்” என்று சொல்கிறார். அப்படிச் சொன்னதை பற்றிய விவாதம் முகநூலில் நடந்த போது தன்னுடைய “இளையராஜாவை வரைதல்” என்கிற குறுநூலில் அப்படிச் சொன்னதற்காக மேலதிக விளக்கங்கள் இருக்கின்றன என்றார். அந்நூல் பற்றிய விமர்சனமும் மேலதிக விமர்சனமுமாக இக்கட்டுரை எழுதப்பட்டது.

ராஜாவும் நானும்:

நானும் மற்ற எல்லா தமிழர்களையும் போல் பொழுதுபோக்கு என்றால் தமிழ் சினிமா என்ற சூழலில் தான் வளர்ந்தேன். அந்த வகையில் எஸ்.பி.பி, ஜானகி, ராஜா எல்லாம் என் வாழ்விலும் ஓர் அங்கம் தான். 90-களில் ரஹ்மானும் வேறு சிலரும் அந்த வரிசையில் சேர்ந்தார்கள்.

ராஜாவின் பாடல் கேட்காமல் எந்த வாரமும் கடந்ததில்லை. திரையிசை என்பது சராசரி தமிழனின் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்று. ஆனால் சராசரி தமிழனைப் போலல்லாமல் எனக்குத் தமிழ்த் திரையிசையைத் தாண்டி மற்ற இசை மரபுகளில் நாட்டமும் பரிச்சயமும் உண்டு.

இக்கட்டுரையில் நான் ஏற்கும் அல்லது மறுக்கும் கருத்துகள் பெரும்பாலும் இசையை நான் எப்படி உள் வாங்குகிறேன் என்பதைப் பொறுத்தது. என் பார்வையோடு ஒத்துப் போகிறவர்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இது என் தரப்பு. ஏற்பதும், ஏற்காததும் உங்கள் இஷ்டம்.

துண்டுத் துண்டாகக் கழன்று கொள்ளும் திரைப்படங்கள்:

தருமராஜின் குறு நூலில் அற்புதமான இடம், திரைப்படங்கள் பொது வெளியில் எப்படிக் கழன்று கொள்கின்றன என்று அவர் அடையாளப்படுத்துவது தான். ‘ஆளவந்தான்’ படம் வயது வந்தோருக்கு மட்டுமே என்று தணிக்கைச் சான்று கிடைத்த போது, “நம்மூரில் தான் ஒரே படத்தில் எல்லாமும், காதல், காமெடி, காமம், குடும்பப் பாசம், வில்லத்தனம், இருக்கவேண்டுமென்று நினைக்கிறோம்” என்றார் கமல். அவர் தொட்டுக்காட்டிய அபத்தத்தை தருமராஜ் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார்.

“வெளியான கொஞ்ச நாட்களிலேயே ஒரு திரைப்படம் துண்டுத் துண்டாகக் கழன்று கொள்ளத் தொடங்குகிறது”. கட்டபொம்மன்-ஜாக்சன் துரை, பராசக்தி கோர்ட் சீன் வசனங்கள் இப்படி “வெளியேறிய துணுக்குகள்” என்கிறார் தருமராஜ். இந்தக் “கதம்ப குணமே” இந்தியத் திரைப்படங்கள் “ஈசலைப் போல்” குறைந்த ஆயுளோடு இருப்பதற்கு காரணம்.

துணுக்குகளாக வெளியேறும் ராஜாவின் பாடல்களை இரசிகர்கள் மனம் போன போக்கில் தொகுத்து புதிய தொகுப்புகளாக வலம் வருகின்றன. இத்தொகுப்புகளுக்கு “‘ராஜா பாடல்கள்’ என்று பெயர்”. “இதை உருவாக்கியது இளையராஜா இல்லை, அவரது இரசிகர்கள்! எனவே காப்புரிமை பிரச்சனைக்கெல்லாம் அப்பாற்பட்டது இது” (இது பற்றி ராஜாவின் கருத்தறிய மிக ஆவல்!!).

ஒரு சினிமாவில் இருந்து கழன்று விழும் வடிவேலுவின் காமெடித் துண்டு “செய்யாத வேலையை” ராஜாவின் துண்டு செய்கிறது என்கிறார் ஆசிரியர். திரைப்படக் காட்சிகளின் நோக்கம் காலம் கடப்பதை உணர்த்துவதே என்றும் அதற்கு உதவியாக இருக்கும் இசை தன்னந்தனியாக நிற்கும் குணமும் இருப்பதால் “தன்னிச்சையாக செயல்படத் தொடங்குகின்றன”. அதனாலேயே “ராஜா பாடல்கள், இரவு நேரத்தில் கேட்க விரும்பும் ராஜா பாடல்கள் என்று விதவிதமான அவதாரங்களை எடுக்க ஆரம்பிக்கின்றன”.

தருமராஜின் குறுநூலின் பிரச்சனையே இங்கு தான் ஆரம்பிக்கிறது. இரண்டு குறைகள், அதீதங்கள் (exaggerations), சம்பந்தமில்லாமல் ஆசிரியரின் மனச்சாய்வை நிரூபிக்க தைக்கப்பட்ட காரண காரியங்கள், நூலின் மைய நோக்கை சிதைக்கின்றன.

அதீதங்களின் களி நடனம்:

“ராஜா பாடல்கள், அரை நூற்றாண்டுக் காலமாக தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை வடிவமைத்து வந்திருக்கின்றன” என்கிறார் தருமராஜ். ராஜா பிறப்பதற்கு முன்பே பல நூற்றாண்டாக தமிழர்கள் காதலித்திருக்கிறார்கள், காமம் கொண்டிருக்கிறார்கள், பெண்களை போகப் பொருளாக அனுபவித்திருக்கிறார்கள், உடலுறவில் முக்கி முனகியிருக்கிறார்கள், ஒப்பாரி வைத்திருக்கிறார்கள் இன்னும் என்னென்னமோ.

‘வாழ்க்கையை வடிவமைப்பது’ என்றால் வாழ்வின் தருணங்கள் அப்பாடல்கள் இல்லாமல் நிகழாமலோ அல்லது அர்த்தமிழந்தோ இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. சினிமாவில் இடம் பெறும் காட்சிகளுக்கு ராஜா இசை அமைத்தார். அதே தருணங்கள் தங்கள் வாழ்வில் இடம்பெறும் போது தமிழன் அந்த இசையைப் பின்னணியாக பயன்படுத்திக் கொண்டான். இப்போது அதே தமிழன் வேறு இசையமைப்பாளரின் இசையை நாடியிருக்கலாம்.

ஆசிரியரே அதிரடியாக, “பெண்களின் காதல் உணர்வுகளைப் பேசுகிற திரைப்படங்களோ அல்லது ராஜா பாடல்களோ இந்த உலகத்தில் இல்லை. அதே போலத்தான், பாசமும். எல்லா ராஜா பாடல்களும் தாய்ப்பாசப் பாடல்கள் தான். அதுவும் கூட பெரும்பாலும் மகனுக்கும் தாய்க்குமான பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள்” என்கிறார்.

ராஜாவின் இசையே தமிழர்களின் வாழ்வை வடிவமைக்கிறது என்றால் பெண்கள் நம்மூரில் காதலிக்கவேயில்லையா? பெண்கள் தத்தம் தாயை நேசிக்கவில்லையா? இயக்குனர்களும், பாடலாசிரியர்களும் பெரும்பாலும் ஆண்கள். மேலும் திரைப்படங்கள் பெரும்பாலும் நாயகனையே சுற்றி வருபவை. சிச்சுவேஷனுக்கு இசை அமைத்த ராஜா பெண்களின் காதலுக்கு இசை அமைக்கவில்லை. அவ்வளவு தான்.

திராவிட அரசியல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் தமிழனும் திரைப்படங்களும் மாறிவிட்டன என்கிறார் தருமராஜ். “அரசியல் பேசிக்கொண்டிருந்த தமிழ்மகன்கள் காதல் மொழிகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்… இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் தான் ராஜாவும் பெருங்கலைஞனாக உருவெடுக்கத் தொடங்குகிறார்”. எங்கே போய் முட்டிக் கொள்வது? எம்.ஜி.ஆரின் படங்களில் இல்லாத காமமா? சரோஜா தேவியை கேட்டுப் பாருங்கள். காதல் மன்னன் என ஜெமினி கணேசன் எப்படி பெயரெடுத்தார்? ராஜா இசையில் வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி படங்களைப் பார்த்துத் தான் தமிழன் காதலிக்கக் கற்றுக் கொண்டான் என்றால் நம் தலையெழுத்து அவ்வளவு தான் என்றே கொள்ள வேண்டும்.

திரையிசைப் பாடலில் கவிதை சாத்தியமேயில்லை என்கிறார் தருமராஜ். “ராஜா பாடல்களில் அந்த மெட்டும் அதைப் பாடும் சுகமுமே நமக்குச் சுட்டப்படுகிறது… ராஜா பாடல்களில் மட்டுமல்ல, எந்தவொரு திரைப்படப்பாடலிலும் இது சாத்தியமில்லை”.

திரையிசைப் பாடலில் கவிதைக்கான இடம் இல்லை. ஆனால் பாடலில் கவித்துவமே தேவையில்லை என்றும் பாடலும் மொழியும் கூட தேவையில்லை என்றும் அவை தன் இசைக்கு இடைஞ்சல் என்றும் ராஜா கருதினார். ஆனால் இன்றும் கண்ணதாசனின் கவித்துவம் திரைப்பாடல் இரசிகர்களை ஈர்க்கிறது. மொழியின் முக்கியத்துவம் அறியாத ராஜா கண்ணதாசனின் மொழியை கிண்டலடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு தலைமுறையையே மொழியின் வளமை அறியா வண்ணம் அர்த்தமில்லாத மெட்டுகளில் மூழ்கடித்தப் பெருமை ராஜாவையே சேரும். ரஹ்மான் – வைரமுத்து கூட்டணி பாடலில் மொழியின் இடத்தை மீட்டெடுத்தது.

ஒலிப்பேழைகளும் அவற்றுக்காக தொகுக்கப்படும் பாடல்களும் ராஜா இரசிகர்களுக்கு ‘ராஜா பாடல்கள்’ உருவாக்க வாய்ப்பளித்தன என்று சொல்லி அப்படிப்பட்ட ஒலிநாடாக்களை தொகுத்தளிக்கும் கடைகள் பற்றி, “அப்படியொரு கடையை ஆரம்பிப்பதற்கு மூலதனமாக ஒலி நாடாக்களையும் பதிவுக் கருவிகளையும் கொண்டிருந்ததோடு ராஜா இரசிகராகவும் இருப்பது அவசியம் என்று கருதப்பட்டது” என்கிறார். தொகுப்புகளை உருவாக்குவது இரசிகன் என்றால் கடைக்காரரின் இரசனை எதற்கு? மேலும் ராஜா பாடல்கள் மட்டுமா இப்படித் தொகுக்கப்பட்டன? எங்கள் வீட்டிலேயே அப்பா ‘நிலாப் பாடல்கள்’ என்று ஒரு தொகுப்பு வைத்திருந்தார். பெரும்பாலும் எம்.எஸ்.வி.

“தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த நினைக்கிற தனி நபருக்கோ அல்லது குழுவிற்கோ ராஜா பாடல்கள் சாதகமான வெளிப்பாட்டு வடிவமாக விளங்கின”. இதே ஆசிரியர் தான் ராஜாவின் பாடலை இரசிப்பதற்கு கொஞ்சமே தமிழ் தெரிந்தால் போதும் என்றார். கொஞ்சமே தமிழை வைத்துக்கொண்டு எந்தப் பையன் எந்தப் பெண்ணிடம் தன் விருப்பத்தை சொல்லியிருக்க முடியும்? ‘வாடி என் கப்பங்கிழங்கே’ என்று சொல்வானோ?

பேருந்துகளில் ராஜாவின் பாடல்களை ஓட்டுனர்கள் அதிகம் பயன்படுத்தினர் என்கிறார் ஆசிரியர். 80-களில் டி.ராஜேந்தர் பாடல்களும் பேருந்துகளில் அதிகம் ஒலித்தன. அந்த இடத்தில் ரஹ்மானும், தேவாவும் 90-களில் இடம்பெற ஆரம்பித்தார்கள். மேலும் இம்மாதிரிச் செய்தி சொல்லும் போது ஏதேனும் புள்ளியியல் விபரம் இருந்தால் நன்று.

ராஜா பாடல்கள் பிரபலமடைந்ததில் மேடை நிகழ்ச்சிகள், ஆர்கெஸ்டிரா, முக்கியப் பங்கு வகித்தன என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதீதமாக, “பாடல் வரிகளைச் சரியாகப் பாடுகிறார்களா என்று கவனித்து வந்த மக்கள், ராஜாவின் வருகைக்குப் பின்பே, சரணங்களுக்கிடையிலான இசைக் கோர்வையை சரியாக இசைக்கிறார்களா என்றும் கவனிக்கத் தொடங்கினார்கள்” என்று அடித்து விடுகிறார். கர்நாடக சங்கீதமும், திரை இசையும் பெரும் பங்கு வகித்த சமூகத்தில் இது எப்படி சாத்தியம்? அதுவும் எம்.எஸ்.வியே இசைக் கோர்வைகளை ஆரம்பித்து விட்டாரே?

மேற்சொன்ன விஷயத்தில் உள்ள நகைச்சுவை என்னவென்றால், இன்று ராஜாவின் இசை நிகழ்ச்சிகளிலேயே தவறுகள் நடக்கும். ஒரு முறை ராஜா ஒரு வாத்தியக்காரரை மோசமாகத் திட்டிவிட்டு (இவ்விஷயத்துக்கு திரும்ப வருவேன்) சபையைப் பார்த்து “உங்களால் இந்தத் தவறுகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் என்னால் இத்தவறைக் கவனிக்காமல் மேலே செல்ல முடியாது” என்று எகத்தாளமாகச் சொன்னார். இரசிகர்களில் பலருக்கு அங்கு என்ன தவறு நடந்தது என்றே தெரியவில்லை என்பதே உண்மை. ராஜா நிகழ்ச்சிகளுக்குப் போகும் கர்நாடக சங்கீத பரிச்சயம் உள்ள பலர் நிகழ்ச்சியின் போதே, ‘இந்தப் பாட்டில் தாளம் தப்பியது, அந்தப் பாட்டில் பீட் மிஸ் ஆனது’ என்று முகநூலில் பதிவிடுவார்கள். கடைசியாக, நிகழ்ச்சி மகிழ்ச்சி அளித்தது என்றும் எழுதுவார்கள். அது தான் ராஜாவின் மந்திரம்.

மெல்லிசைக் கச்சேரிகளைப் பற்றி, “ராஜா பாடல்களை ஆடிக்கொண்டே பாடக்கூடிய பாடகர்கள், தபேலாவில் சாகசங்களை செய்யக்கூடிய இளைஞர்கள், ஸ்டைலாக கிதார் வாசிக்கும் நவீனர்கள் என்று பல்வேறு கதாபாத்திரங்களை இந்த மெல்லிசைக் கச்சேரிகளே நமக்கு அடையாளம் காட்டின” என்கிறார் தருமராஜ். இன்று அதே பாடகர்களும், இளைஞர்களும் ரஹ்மான், அனிருத் பாடல்களை வைத்து அதே ஜாலம் காட்டிக் கொண்டிருப்பார்கள். எண்பதுகளில் பொருளாதாரம், தொழில் நுட்பம் என்ற சில காரணங்களால் துளிர் விட்ட மெல்லிசைக் கச்சேரிகள் அப்போது பிரபலமாகியிருந்த எல்லாப் பாடல்களுக்கும் இதே போல் ஜாலம் காட்டியிருப்பார்கள்.

ராஜாவும் அகச்சிக்கல் பேசிய படங்களும்:

தருமராஜ், “புறச்சிக்கல்களில் வெற்றியடைந்ததாக நம்பிய திராவிட ஆண், தனது அகச்சிக்கல்களுக்கு வெற்றிகரமாகத் திரும்பிய காலகட்டம் இது” என்கிறார். 1967-க்கு பின் தான் தமிழன் அகச்சிக்கலுக்குத் திரும்பினான் என்பதெல்லாம் அபத்தக் களஞ்சியம். அப்படியே அது நிகழ்ந்தது என்றாலும் அதற்கான பாராட்டு கே.பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்களை அல்லவா சேரும்?

கே. பாலசந்தர் மிகத் தாமதமாகத் தான் ராஜாவிடம் வந்தார். 1985-இல் சிந்து பைரவியில் ராஜா – வைரமுத்து கூட்டணியில் ஆரம்பித்து நான்கே வருடங்களில் 1989-இல் புதுப்புது அர்த்தங்களோடு ராஜா – பாலசந்தர் கூட்டணி முறிந்தது. 1977- இல் ஆரம்பித்த பாரதிராஜா-இளையராஜா கூட்டணி 1992-இல் வெளியான நாடோடித் தென்றல் படத்தோடு முடிந்தது. அதற்கு முன்பே அவ்வப்போது வேறு இசையமைப்பாளர்களையும் பாரதிராஜா பயன்படுத்தினார். பாக்யராஜும் அதிக காலம் எம்.எஸ்.வி, கங்கை அமரன் ஆகியோரைத் தான் பயன்படுத்தியிருக்கிறார். 1982-இல் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் ஆரம்பித்து 1987-இல் ‘சின்ன வீடு’ படத்தோடு கூட்டணி முறிந்து பிறகு ஷங்கர் – கணேஷ், அப்புறம் தானே இசையமையக்க ஆரம்பித்தார் பாக்யராஜ். இந்த மூவர் தான் அந்தக் காலத்தில் மிக அதிகமாக அகச்சிக்கல்கள் பேசியவர்கள்.

ஒரு குறுகிய காலம், அதிகப்பட்சம், 1977-1992, ராஜா கோலோச்சினார். பிறகு 1992-இல் ரஹ்மான் புயலென நுழையும் வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக வேறு இசையமைப்பாளர்கள் வந்தனர். இதனிடையே நாம் டி. ராஜேந்தரையும், ஷங்கர்-கணேஷையும், கங்கை அமரனையும் மறக்கக் கூடாது.

நிற்க, வாசகர்களே நான் என்னமோ ராஜாவும் டி. ராஜேந்தரும் ஒன்று என்று சொன்னதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். முன்பு சொன்ன திரையிசை வரலாற்று வரிசையை மீண்டும் பாருங்கள். ராஜா இயங்கிய தளம் வேறு. ஆனால் இங்கே சமூகத்தில் அவரின் பங்களிப்பு அதீதமாக மதிப்பிடப்படுவதைத் தான் நான் கேள்வி கேட்கிறேன்.

ராஜா பாடல்களும் காட்சிப்படுத்தலும்:

“இன்றைக்கு, எந்தவொரு ராஜா பாடலையும் அதன் திரைக்காட்சிகளோடு நாம் நினைவு வைத்துக் கொள்வது இல்லை”. ராஜாவின் பாடல்கள் சரியாகவே படமாக்கப்படவில்லை என்பது அதீதமான குற்றச்சாட்டு. அதற்கு முன் இந்தப் பாடல்களின் இடத்தைப் பார்ப்போம். அன்றாட வாழ்வில் யாரும் காதலியோடு மரத்தைச் சுற்றி வந்து பாட்டு பாடுவதில்லை. மியூஸிக்கல் என்ற வகைமையை ஹாலிவுட் ஒழித்துக் கட்டி பல தசாம்சங்கள் ஆகிவிட்டன.

சினிமாவில் ஆடல்-பாடல் என்பது இந்திய சினிமாவை பீடித்த நோய். இதில் முக்கியப் பங்கு வகிப்பது இந்தியத் தணிக்கை முறை. உடலுறவுக் காட்சிகளைக் காண்பிக்க முடியாமல் பாடல் காட்சிகளில் உடலுறவுக்குச் சற்றே குறைவான சித்தரிப்புகளின் சாத்தியம் முக்கியமானது. பாடலுக்கு ஏற்ற நடனம் என்பது மிகப் பெரிய கலைத் திறனைக் கோரும் ஆழகியல். நம் நடன இயக்குனர்கள் பலருக்கும் அதில் ஸ்நான பிராப்தி கூட கிடையாது. மேலும் பாடலின் பேண்டஸி சூழலை பயன்படுத்தி வெளிநாடு, நடிக-நடிகையரின் அலங்கார உடைகள் என்று ஒரு மாய உலகை நிர்மானித்து பார்வையாளனை வேறு ஓர் உலகுக்குக் கடத்த முடியும்.

முக்கியமாக ஒரு பாடலை எடுத்துக் கொள்வோம். “அந்திமழை பொழிகிறது” பாடலின் படமாக்கல் பிரமாதம் தான். கமலுக்கு நூறாவது படம். அப்போது அவருக்கு காதல் இளவரசன் இமேஜ் இருந்தது. படத்திலோ அவர் பார்வையற்றவர். பாடலின் பேண்டஸி சூழலை வைத்து அழகியலோடு காட்சிகள் படமாக்கப்பட்டு வைரமுத்துவின் வரிகளுக்கும் ராஜாவின் இசைக்கும் அழகு சேர்க்கும். நாயகி பார்வை தெரியாதவள் போல நடிக்க, நாயகன கைப்பிடித்துச் செல்வான். ஓரிடத்தில் ஓவியமே காட்சியாக மாறும். சிகரம் வைத்தது போல் நீச்சல் குளக் காட்சி.

காதல் இளவரசன் இமேஜ் இருந்த கமல் நாயக பிம்பம் பற்றிக் கவலைப்படாமல் பார்வையற்ற ஒருவன் காமத்தை அறியத் துடிக்கும், ஆனால் கூச்சப்படும் வாலிபனாக நிற்க, துணிச்சலான வழிகாட்டும் காமக் கிழத்தியாக, கமலின் உடையைக் களைவார் மாதவி. பின்னர் குளத்தில் குதிப்பவர்,  கரையில் செய்வதறியாது மலங்க மலங்க விழிக்கும் கமலை குளத்துக்குள் இழுத்து நீருக்கடியில் இருவரும் தழுவ, பாடல் வரிகள், “தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது; நெஞ்சுபொறு கொஞ்சமிரு; தாவணி விசிறிகள் வீசுகிறேன்; மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்” என்று ஒலிக்க அங்கு காதலும், காமமும் போட்டியிடும் அழகியல் தருணம் உருவாகும். இதற்கென்ன குறைச்சல் ஐயா?

“இன்றைக்கு, எந்தவொரு ராஜா பாடலையும் அதன் திரைக்காட்சிகளோடு நாம் நினைவு வைத்துக் கொள்வது இல்லை” என்று சொல்கிறாரே, இன்று அப்பாடலை கேட்கும் ரசனையுள்ள எந்த ரசிகனுக்கும் மேலே சொன்னதெல்லாம் நினைவில் வந்து போகும். இல்லையென்றால் அவன் ராஜாவையும் இரசிக்கத் தகுதியற்றவனே.

தருமராஜே தான் எழுதியதற்கு முரணாக, பேருந்தின் ஓரத்தில் உட்கார்ந்து பயணம் செய்து கொண்டே “செந்தாழம் பூவில்” பாடலைக் கேட்க நேரும் போது மலைப் பாதையில் ஜீப் ஓட்டிச் செல்லும் சரத்பாபு இடம் நினைவுக்கு வந்து அந்த சரத் பாபுவாக கேட்பவனே உணர்வான் என்கிறார்.

நிச்சயமாக காட்சியமைப்பில் சிதைக்கப்பட்ட ராஜாவின் பாடல்களுண்டு, காட்சி நினைவுக்கே வராமல் ரசிக்கும் பாடல்களுமுண்டு. ஆனால் அதெல்லாம் எம்.எஸ்.வி – கண்ணதாசன் பாடல்களுக்கும் பொருந்துமே? “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” நல்ல பாடல். ஆனால் படமாக்கலோ கந்தரகோலம். “தொட்டால் பூ மலரும்” பாட்டை நாம் சரோஜா தேவி பிருஷ்டத்தை நெளித்து நடப்பதையும், எம்.ஜி.ஆரின் கொனஷ்டைகளையும் மறந்தால் தான் இரசிக்கவே முடியும்.

முத்தாய்ப்பாக, சமீபகாலத்தில் ராஜா இசைக் கச்சேரிகளின் போது பாடல் கம்போஸிங் பற்றி சொல்லும் தகவல்கள் பற்றி தருமராஜ், “அப்பாடல்கள் குறித்து ராஜா வெளிப்படுத்துகிற விபரங்கள் அக்காட்சியை மேலும் மேலும் செறிவூட்டிக் கொண்டிருக்கின்றன” என்கிறார். Wait a minute. இவரே தான் காட்சியின் நினைவே தேவையில்லை என்றாரே அப்புறம் என்ன செறிவூட்டுவது? மேலும், இத்தகைய நினைவுப் பகிரல்களை ராஜா இப்போது மார்க்கெட் இல்லாமல் மேடையேறும் போது பேசிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் எம்.எஸ்.வியும் புதிதாக குறுந்தகடுகள் வெளியிட்ட ரெக்கார்டிங் கம்பெணி வெளியீடுகளில் செய்திருக்கிறார். கண்ணதாசனின் பல பாடல்களின் பின்னே மிகச் சுவையான கதைகள் உண்டு.

பண்டிகைகளும் ராஜா பாடல்களும்:

புத்தாண்டு கொண்டாட்டங்கள், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது ராஜாவின் பாடலே “ஒழுங்கப்படுத்தப்பட்ட ஆரவாரங்களாக இருந்தன” என்கிறார். கொண்டாட்ட மன நிலை ஆரவாரம் கோருவது. ஆனால், அது வெறும் கூச்சலாக இல்லாமல் இசையைப் போர்த்திக் கொண்டு வரும் போது ஆணும்-பெண்ணும் கூச்சமின்றி சந்தோஷ வெளிப்பாடு செய்ய முடிகிறது என்கிறார்.

தீபாவளி என்றால் முன்பெல்லாம் பல இடங்களில் ஒலிக்கும் பாடல்களான, “உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீயாட”, “பட்டாச சுட்டுச் சுட்டு போடட்டுமா”, “நான் சிரித்தால் தீபாவளி” போன்றவற்றின் வரிகளின் தரமும் அந்த வரிசையில் இறங்குமுகமாக இருக்கும். புத்தாண்டு என்றால் ‘சகலகலா வல்லவன்’ பாட்டு நிச்சயம். இந்தப் பாடல்கள் எல்லாம் பண்டிகைகளை ஒட்டி வெளிவரும் தமிழ்ப் படங்களில் அந்தப் பண்டிகையை பிரதிபலிக்கும் சூழல்களுக்கு இயக்குனர், தயாரிப்பாளர் தேவைகளுக்கு ஏற்ப சமைக்கப்பட்ட பாடல்கள் தாம். இதில் ராஜாவின் பங்கு வாங்கிய காசுக்கு தரமான பாடல் அளிப்பது மட்டுமே.

கிறிஸ்துமஸ் காலத்தில் அமெரிக்காவே கிறிஸ்துமஸ் பாடல்களில் மூழ்கும். டீக்கடைகள், துணிக்கடைகள் என்று எங்கு திரும்பினாலும் இசை நம்மைச் சூழும். எத்தனை வகை வகையான பாடல்கள். பிரபல பாடலான ‘ஜிங்கிள் பெல்ஸ்’ மட்டுமே எத்தனையெத்தனை மரபில் ஒலிக்கும். ஓ! அது ஒரு சுகானுபவம். சினிமா இசை, மற்ற எல்லா இசை மரபுகளையும் சீரழித்து, இன்று தமிழனுக்கு விழாக்களின் போது கொண்டாட்டத்தைத் தெரிவிக்க விரல் விட்டு எண்ணக் கூடிய பாடல்களே இருக்கின்றன.

ராஜா குறித்து தருமராஜ் மறந்தது:

இயக்குனர்களின் காட்சிகளுக்கு இசையமைத்த ராஜா அந்த இசைக்கெல்லாம் புகழை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மழுப்புவது ராஜா கடைப்பரப்பிய ஆபாசத்தை. “பொன்மேனி உருகுதே” பாட்டை எந்த தந்தையாவது மகன், மகளோடு கேட்க முடியுமா? அதுவும் அந்த ஆரம்ப விநாடி முக்கல் முனகலை? ஆமாம் பாலு மகேந்திரா அதைச் சரியாக காட்சிப்படுத்தாமல் வெறும் போட்டோ மாண்டேஜ் ஆக்கிவிட்டார். அவர் சரியாகப் படமெடுத்திருந்தால் சன்னி லியோன் தேவைப்பட்டிருப்பார். சிலுக்கு கூட மறுத்திருப்பார்.

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு நிகழ்ச்சியில் ராஜாவைப் பேட்டி எடுத்தவர், அந்த முனகலுக்கு கிரெடிட் ஜானகிக்கா என்ற போது, ராஜா அலட்சியமாக சிரித்து, “அந்தம்மாவுக்கு என்ன தெரியும், நான் சொன்னதைப் பாடுவார்” என்றார். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ராஜாவுக்கே.

80-களின் சினிமாவின் சாபக்கேடு கிளப் டான்ஸ். சிலுக்கு, டிஸ்கோ சாந்தி, அனுராதா, ஜெயமாலினி என்று ஒரு பட்டியலே இருந்தது. ராஜா முகம் சுளித்ததே இல்லை. ‘நேத்து ராத்திரி யம்மா’ மறக்குமா? கிளப் டான்ஸ் மட்டுமல்ல, மற்ற பாடல்களிலும் ராஜா ஆபாசத்திற்கு அசந்ததே இல்லை. ‘நிலா காயுது’ பாட்டின் முனகல், அப்புறம், விரசம் சொட்டும் “காள மாடு ஒண்ணு, கறவை மாடு மூணு”.  இதில் கவனிக்க வேண்டியது, ரஹ்மான் இசையில் வெளியான, ஆபாசம் என்று முத்திரை குத்தக்கூடிய, பாடல்கள் மிக மிக சொற்பம்.

ராஜாவுக்கு அரசியல் முகம் உண்டா? தலித் அடையாளம்?

வேறொரு கட்டுரையில் ராஜா, தலித் அரசியல் பற்றி முக்கியமான சில வாதங்களை தருமராஜ் முன் வைக்கிறார்.

“அவரைத் தொடர்பு கொண்ட, தங்களோடு நிற்கும் படி அழைத்த தலித் அமைப்புகளுக்கெல்லாம் அவர் கோபத்தையே உருவாக்கினார். இளையராஜா, பார்ப்பனராகி விட்டார் என்ற குற்றச்சாட்டு எந்த மூலையிலிருந்து உருவானது என்று நினைத்தீர்கள்? இந்தப் பகுதியிலிருந்து தான்” என்கிறார் தருமராஜ்.

ராஜா தனக்கென்று இசையைத் தாண்டி எந்த ஒரு அடையாளமும் இருக்கக் கூடாதென்று நினைக்கிறார். என் பார்வையில் ராஜா தலித் என்ற அடையாள அரசியலுக்கானவர் அல்ல. அதனாலேயே “எல்லோராலும் ஏற்கப்பட்ட அவரை நாங்கள் ஆதர்சமாக பார்க்கிறோம், அவர் தன் அடையாளத்தை முன் நிறுத்தாமல் போனாலும்” என்கிற தலித் தரப்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

இசையோடு நமக்குண்டான உறவைப் பற்றி எழுதிய லெவிட்டின் இசைக் கலைஞர்களின் அரசியல் பற்றிக் குறிப்பிடுவார். அந்தக் கலைஞர்களின் அரசியலே நம்மிடம் அவர்களைக் கொண்டு வரும் அல்லது விலக்கும். இதைத் துல்லியமாக பா. ரஞ்சித், டி.எம்.கிருஷ்ணா விஷயத்தில் பார்க்கலாம். இருவரும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகள் உடையவர்கள். அதனாலேயே அவர்களை விலக்கியோ, பாராட்டியோ பேசுபவர்களுண்டு. அவர்கள் அரசியலுக்காகவே ஆதரிப்பவர்களுமுண்டு. ராஜா சுயமாகவே அரசியல் பேசுவதில் இருந்து விலகியவர் அதனால் அவருக்கு நன்மை தான் விளைந்திருக்கிறது. அரசியல் பற்றிய அவர் மௌனத்திற்கு, தான் எப்படி அறியப்பட வேண்டும் என்கிற வரையறை தான் காரணம்.

அடிப்படையே இல்லாத ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார் தருமராஜ், “தலித் அமைப்புகளின் ஆகப் பெரிய குழப்பம் இது தான் என்று நான் நினைக்கிறேன். அரசியல் அதிகாரம், சமூக விடுதலை, சமூக மேம்பாடு குறித்து தலித் அமைப்புகளிடம் தெளிவான திட்டங்கள் இல்லை. …நாம் உடனடியாக அவர்களை முதல்வராக்கிப் பார்க்கத் தான் விரும்புகிறோம். கொடுப்பதற்கு வேறொரு சிறப்பான பொருள் நம்மிடம் இல்லை; அது தான் உயரிய பொருள் என்றும் நினைக்கிறோம்… ஆனால், இளையராஜாவின் பிம்பம் முதல்வர் வேட்பாளராகக் கற்பனை செய்வதற்கு அப்பால் இருக்கிறது என்பது தான் அதன் பலம்”. எத்தனை தலித் அமைப்புகள் ராஜாவை நெருங்கி முதல்வர் ஆசை காட்டின? அப்படி எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. தலித் அரசியலுக்காக அதிகம் செய்தவர் நிச்சயமாக பா.ரஞ்சித் தான்.

ராஜா, இசையைத் தாண்டி எதுவுமில்லை, அப்படி இருக்கும் எதுவும் தனக்கானதல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார். தவறேயில்லை. கறுப்பு இசைக் கலைஞர்கள் பலர் தங்கள் இசையினூடாக, குறிப்பாக ஜாஸ் மற்றும் ஹிப்-ஹாப், மிகப்பெரிய கலக அரசியல் செய்திருக்கிறார்கள். அதற்கு விலையும் கொடுத்திருக்கிறார்கள். ராஜாவை பாப் மார்லியோடு ஒப்பிடுவதெல்லாம் அதீதத்திலும் அதீதம் (இது வேறொருவரின் ஒப்பீடு, தருமராஜ் அல்ல).

“தேவர் காலடி மண்ணே” பாடலுக்கு இசை இளையராஜா தான். கமல் ‘விருமாண்டி’ எடுத்த போது, முதலில் ‘சண்டியர்’ என்று பெயரிடப்பட்டது, கிருஷ்ணசாமி ‘தேவர் மகன்’ படத்தாலும் அந்தப் பாடலாலும் தலித்துகளுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளைச் சுட்டிக் காட்டி ‘சண்டியர்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பின்னர் தான் அப்படம் ‘விருமாண்டி’ என்று பெயர் மாற்றப்பட்டது. ராஜா தயாரிப்பாளருக்காக இசையமைப்பவர். அவ்வளவு தான்.

வைரமுத்து:

இங்கே வைரமுத்து பற்றிப் பேசும் போது அவரது திரையிசை பங்களிப்பு பற்றி மட்டுமே பேசுகிறேன். அவருடைய குற்றங்களுக்கான தண்டனைகளை அவர் இன்று அனுபவிக்கட்டும்.

ரஹ்மான் நியூ யார்க் பிராட்வேக்கு “பாலிவுட் ட்ரீம்ஸ்” என்ற இசை நிகழ்வை ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் கொண்டு வந்த போது முதன்மைப் பத்திரிக்கைக் கலை விமர்சகர்கள் பலரும்
வைத்த முக்கியமான விமர்சனம் பாடல்களின் அபத்தமான வரிகள் பற்றி. பாடலுக்கு மொழி தேவையில்லை என்பது அறிவிலித்தனம்.

கண்ணதாசனுக்குப் பிறகு திரையிசைப் பாடலுக்கான மொழியை சிறப்பாகக் கையாண்டது வைரமுத்து தான். ராஜா, ரஹ்மான் இருவரின் மிகச் சிறந்த பாடல்களில் வைரமுத்தின் பங்கு கணிசம். தருமராஜ் சொல்வது போல் ‘கொஞ்சமே தமிழ்’ போதுமென்பது சரியல்ல. அதற்கான விலையை ராஜா நிச்சயமாகக் கொடுத்தார்.

ராஜாவின் செருக்கும், சீண்டலும், வன்மமும்:

சந்தர்ப்ப சூழல் தெரியாமல் ராஜாவிடம் சர்ச்சைக்குரிய பாடல் ஒன்று பற்றிக் கருத்துக் கேட்ட மீடியா (ஊடகம் என்று சொல்ல மாட்டேன் என்கிறார் தருமராஜ்) ஆள் ஒருவரை ராஜா, “அறிவு இருக்கா” என்று திட்டி விட்டார். அது பரப்பரப்பானது. தருமராஜுக்கு அந்த ஆணவம் பிடிக்கிறது, சிலாகிக்கிறார்.

“இசையையெல்லாம் கடந்து இளையராஜாவின் இந்தத் தெனாவெட்டான நடத்தை பாதுகாக்கப்பட வேண்டியது என்று நான் நினைக்கிறேன். இது அபூர்வமானது; லேசில் வாய்க்காது… இளையராஜா இசையின் ராஜாவாக்கும், மீட்பராக்கும் என்று புளகாங்கிதம் கொள்வது அனைத்தும் அவரது செருக்கை மறுதலிக்கும் முயற்சி தான் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்”, “இளையராஜாவின் கோபம், நக்கல், எரிச்சல், திமிர் அனைத்தும் வெகுஜன பாவ்லாக்களின் மீது தான் செய்யப்படுகிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன்”, “அவர் தனது இரசிகர்களை தொடர்ச்சியாக சீண்டிக்கொண்டும், அவர்கள் இளையராஜா என்ற நபரை வெறுப்பதற்கான வாய்ப்புகளை வழங்கியபடியும் இருப்பது தான் அந்தப் பிம்பத்தின் நேர்மை என்று நினைக்கிறேன்”.

தலை சுற்றுகிறது. கலைஞனுக்கு தன்கலையின் மீது கர்வம் இருக்கலாம், தன்னம்பிக்கை இருக்கலாம், மற்றவர்களைப் பற்றி எள்ளலும் இருக்கலாம். ஆனால் ராஜாவின் அகங்காரம் வானளாவியது. அதன் சீண்டலுக்குத் தப்பியவர் யாருமில்லை, பாரதிராஜா முதல் இரசிகன் வரை. இழப்பு கடைசியில் ராஜாவுக்குத் தான். எல்லோரையும் இழந்தார். பாரதிராஜாவை, மணிரத்னத்தை இழந்து ராமராஜனும், ராஜ்கிரணும் மட்டுமே எஞ்சினார்கள்.

ஒரு படத்துக்கு, தன் பாடல் வலுசேர்த்தது என்று நினைக்க ராஜாவுக்கு உரிமையுண்டு. ஆனால் ராஜாவோ தன் இசை மட்டுமே ஒரு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது என்று நினைக்கிறார். ‘முதல் மரியாதை’ தமிழ் சினிமா அளவில் நல்ல படமே. ராஜா அது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் ஆனாலும் இசையில் குறை வைக்கவில்லை என்றும் சொல்கிறார். கையை நீட்டி காசு வாங்கியாச்சு. அப்புறம் வாங்கிய காசுக்கு நேர்மையாக உழைக்க வேண்டியது தானே? பிடிக்கவில்லை என்றால் ஒரு நல்ல கலைஞன் குறைந்தபட்சம், “இந்தா உன் முன் பணம், நான் வெளியேறுகிறேன்” என்று வெளியேறி இருப்பான்.

ராஜாவின் இசையைப் பற்றி தருமராஜ் குறு நூலே எழுதுகிறார். ஆனால் ராஜாவோ கெத்தாக “இசை என்பதே ஏமாற்று வேலை” என்று பேட்டியளிக்கிறார். கங்கை அமரன் அது உண்மை என்று போட்டு உடைத்திருக்கிறார்.

ஒரு பேட்டியில், கமல் “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி அன்பேன்” போன்ற துள்ளல் இசை வேண்டுமென்று கேட்டார் என்றும் அதையே “புது மாப்பிள்ளைக்கு” என்று மெட்டமைத்துக் கொடுத்ததாகவும் சொல்லிவிட்டு, “இது ஏமாற்று வேலையில்லாமல் வேறென்ன?” என்று சொல்லி, உண்மையாகவே, வெள்ளெந்தியாகச் சிரிப்பார் ராஜா.

https://www.youtube.com/watch?v=Ti2xHyedMHU

வைரமுத்தை எவ்வளவு வன்மத்தோடு தமிழ்த் திரையுலகை விட்டே ராஜா ஒழிக்கப் பார்த்தார் என்று தருமராஜ் முதலானோர் பேசுவதேயில்லை. ஒரு மனிதனின் வாழ்வியல் ஆதாரத்தையே ராஜா வன்மத்தோடு ஒழித்தார். அதே வன்மத்தை, பணத்தேவை கருதி, உற்ற நண்பரான எஸ். பி. பியிடமும் காப்புரிமை வழக்கில் காண்பித்தார். ரஹ்மான் ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறார் என்று தெரிந்ததும் ராஜா அப்பட்டமான வயிற்றெரிச்சலைத் தெரியப்படுத்தினார். “படமே 10 அவார்டுக்கு நாமினேட் ஆகியிருக்கு, இவருக்கே இரண்டு நாமினேஷன், ஒரு அவார்டாவது நிச்சயம்” என்றாராம். ரஹ்மான் வென்ற போது தமிழ்த் திரையுலகில் வெளிப்படையாக வயிற்றெரிச்சல் காண்பித்தவர்கள் இருவர், கமலஹாசனும் இளையராஜாவும்.

அதிகார மமதை இளையராஜாவுக்கு கவசக் குண்டலம். சாதாரண ஊழியர்களை, சக கலைஞர்களை அதீத ஆண்டான் – அடிமை மனோபாவத்தில் கையாண்டவர் ராஜா. கலிபோர்னியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில், ஏதோ தவறு நிகழ்ந்து விட்டதென்று, இசைக் குழுவில் இருந்த ஒருவரை மேடையிலேயே, ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில், திட்டி விட்டார். வந்திருந்த ரசிக சிகாமணிகளுக்கோ தவறு நிகழ்ந்ததே தெரியவில்லை. ஒரு இசை நிகழ்வில் குழுவினர் தவறிழைத்தால் நடத்துனர் தான் குழுவின் சார்பில் சபையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் ராஜாவோ கேவலமாக ஒரு ஊழியரிடம் சினத்தைக் காண்பித்தார். எத்தனை காணொளிகளில் அது பதியப்பட்டிருக்கும்? அந்தக் குழு உறுப்பினரின் குடும்பம் எவ்வளவு துயரப்பட்டிருக்கும்?

இன்னொரு நிகழ்ச்சியில் யாரோ ஒரு மேடை வேலை செய்பவர் குறுக்கே நடந்து விட்டார் என்று ராஜா தாளித்தார். மேடையில் இருந்த மனோ, “போய்யா, அவரு கால்ல விழுந்துடு” என்று நெட்டித் தள்ள அந்த ஊழியர் ராஜாவின் காலில் விழுந்தார். இரத்த நாளங்களில் ஆதிக்க மனோபாவம் ஊறிப் போனவர் ராஜா. செருக்காம்?

ரஹ்மான் வந்த பிறகு தான் ஆடியோ கேஸட்டுகளில் பிரதானப் பாடகர் தவிர முக்கிய இசைக் கலைஞர்களின் பெயர்கள் இடம் பெற்றன. போஸ்டரில் தன் முகம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்த ராஜாவுக்கு சக கலைஞர்களை மதிக்கும் குணமோ அவர்களை அங்கீகரிப்பதோ லவ லேசும் கிடையாது.

தருமராஜின் கட்டுரையைத் தாண்டி சில விமர்சனங்களைப் பார்ப்போம். வேறொரு இடத்தில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்குத் தருகிறேன்.

ராஜாவும் பி.ஜி.எம் பிம்பமும்:

சமீபத்திய பேட்டி ஒன்றில் மிஷ்கின் ‘நந்தலாலா’ படத்துக்கு இசை அமைத்த போது ராஜாவுடனான உறவு குறித்துப் பேசினார். ஓர் அழகிய இயற்கைக் காட்சியினைப் பார்த்து விட்டு ராஜா, “இந்த இடத்தில் இசை சேர்க்கலாம்” என்றாராம். மிஷ்கின், “ஏன், காட்சியே நன்றாக இருக்கிறதே. இதற்கு மேல் எதற்கு இசை?” என்று கேட்டாராம். இத்தனை வருடங்கள் கழித்து, திரை இசையில் மௌனத்துக்கான இடம் எது என்பதை மிஷ்கின் போன்ற இயக்குனர் சொல்லித்தான் தெரிய வேண்டியிருக்கிறது ராஜாவுக்கு. இதையெல்லாம் சொல்லி விட்டு ராஜாவை அப்பா என்று விளித்து வானளாவப் புகழ்ந்தார் மிஷ்கின்.

‘ஹவ் டு நேம் இட்’ எனும் கந்தரகோலம்:

இசைக்கு மொழி கிடையாது என்றும் பாகுபாடுகள் கிடையாதென்பதும் மிகப் பிரபலமான கருத்து. அதில் உண்மையுண்டு. ஆனால் அந்தக் கருத்து முழு உண்மையுமல்ல. ஒவ்வொரு கலாசாரத்திலும் பண்பாட்டிலும் வெவ்வேறு தத்துவ மரபுகளினூடாக மலரும் இசை மரபுகள் வித்தியாசமானவை. ப்யூக்கின் அடிப்படையான ‘கவுண்டர்பாயிண்ட்’ இந்தியத் தத்துவ மரபுக்கு எதிர்மறையானது. ஆகவே, அதன் அடிப்படை இருந்தும் அது ஒரு முழு மரபாக வளரவில்லையோ என வயலின் மேதையும் எழுத்தாளருமான யெஹுதி மெனூயின் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியம் எப்படி ஒவ்வொரு பண்பாட்டின் பிரதிபலிப்போ அப்படித் தான் இசையும். இசைக் கலப்பு முயற்சிகள் முயற்சிகளாகவே முற்றுப்பெறுவது இதனால் தான். ரவி ஷங்கரை இன்று உலகம் சிதார் கலைஞனாகத் தான் கொண்டாடுகிறது, பீட்டில்சோடு ஜுகல்பந்தி நடத்தியவராக அல்ல. பாலமுரளியின் மேதமை கர்நாடக சங்கீதத்தில் தான். சினிமா சில சுதந்திரங்களைக் கொடுக்கும். அந்தச் சுதந்திரத்தில் சில பரிசோதனைகளைச் செய்ய முடியும். மேலும், இந்த இசை மரபுகளைக் கலந்து சமைத்துக் கொடுப்பதில் இந்திய திரையிசைக்கென ஒரு மொழி உருவாகி விட்டது. அதில் தமிழ் திரையிசையில் ராஜாவின் பங்களிப்பு முக்கியமானது. அது வேறு.

இசையை அதன் வேர்களில் இருந்து பிடுங்கி வேரற்ற ஒரு அவியலை வெகுஜன ரசனை என்னும் “lowest common denominator”-க்கு இசையமைத்தே பழக்கப்பட்டவர் தன் தகுதிக்கு மீறி முயன்று பார்த்தார்.

தமிழ்த் திரையிசை என்பது எந்த மரபையும் பேணாத எந்தப் பண்பாட்டையும் முன்னெடுத்துச் செல்லாத வெறும் வணிகத்துக்காகவும் கேளிக்கைக்காவும் சமைத்துக் கொடுக்கப்படுவது. இந்த தெளிவு முக்கியம். அதிலேயே உழன்ற ஒருவர் திடீரென்று காவியம் படைக்க முடியாது.

மெட்டுக்குப் பாட்டு போட்ட மாணிக்கவாசகர்:

இளையராஜாவின் ‘திருவாசகம்’ ஆல்பத்தை ராஜா பக்தர்கள் “ஆஹா, இதோ எங்கள் ராஜாவும் சிம்பொனி எழுதிவிட்டார்” என்றார்கள். அது சிம்பொனி கிடையாதென்பது வேறு விஷயம், மேற்கத்திய இசை மரபில் எழுதப்பட்ட தமிழ்த் திரையிசை அவ்வளவே. ஒரு நல்ல இசைக் கலைஞன் என்றால் பாடலுக்கு இசை அமைக்க வேண்டும். ஆனால் ராஜாவோ ‘மெட்டுக்குப் பாட்டு’ என்றே வாழ்க்கையை நடத்துபவர். தன் மனதில் தோன்றிய மெட்டுக்கு எந்தப் பாட்டு ஒத்து வரும் என்று யோசித்து பாட்டைத் தேர்ந்தெடுத்தார்.

ஷூபர்ட் (Franz Schubert) இசையமைத்த ‘விண்டரீஸ்’ (Winterreise) எனும் இசைத் தொகுப்புப் பற்றி ஒரு அற்புதமான புத்தகம் சமீபத்தில் வெளிவந்தது. அப்புத்தகம் பற்றி அறிய நேர்ந்த போது எனக்கு ‘விண்டரீஸ்’ பற்றித் தெரிய வந்தது. இலக்கியத்துக்கு இசையை ஆடையாக அணிவிப்பதென்றால் அது தான். அப்புத்தகத்தை எழுதியவர் இசைக் கலைஞர் பாஸ்ட்ரிஜ் (Bostridge). ஷூபர்ட் தேர்ந்தெடுத்த கவிதையை அதன் பின்புல ஜெர்மானிய கலாச்சார மரபு, என்ன வகையான இசை, ஏன் அப்படி எழுதப்பட்டது என்றெல்லாம் விஸ்தாரமாக எழுதியுள்ளார். ஷூபர்ட்டுக்கு கொடுக்கும் மரியாதையை என்னால் எப்படி ராஜாவுக்குக் கொடுக்க முடியும்?

ராஜாவின் இடம்:

ராஜாவை சிலாகிப்பவர்கள் ஏனோ கே.ஜே.யேசுதாசை பற்றிப் பேசுவதில்லை. வறுமையில் உழன்றவர் அவர். மதத்தாலும் சாதியாலும் திரையிசையைத் தாண்டி கர்நாடக சங்கீத உலகில் மிகுந்த எள்ளல்களை சம்பாதித்தவர். ராஜா நுழைய முடிந்த கோயிலுக்குள் யேசுதாஸ் நுழைய முடியாது.

தமிழ்த் திரையிசையைத் தாண்டி எந்தத் தளத்திலும் ராஜாவுக்கு இடம் கிடையாது. அதிலும் அவரை இசையைக் கடந்த அடையாளம், சமூக வரையறைகளைத் தகர்த்தவர் என்பதெல்லாம் எவ்வித அடிப்படையுமில்லாமல் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் தாம்.

ராஜாவுக்குக் கொடுக்கும் மரியாதையை யாரும் தேவா, ஹம்ஸலேகா, மரகதமணி, ஜீ.வி. பிரகாஷ் ஆகியோருக்கு கொடுப்பதில்லை. ராஜா ரசிகர்கள் ரஹ்மான் குறித்து மனத்தாங்கல் கொள்வது ஏனென்றால் அவர் ஒதுக்க முடியாமல் வளர்ந்துவிட்டவர் என்பதால் தான். தரப்படுத்துதல் ஏன் என்றும் கேட்கும் ராஜா ரசிகர்கள் தர வரிசையில் ராஜா முதலில் நிற்பதாக நினைப்பதால் தானே அவரைத் தொழுகிறார்கள்? அத்தரப்படுத்தலைத் தான் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

ரஹ்மானுக்கும் எல்லைகள் உண்டு. சங்கர், மணிரத்னம் என்ற கும்பலில் உழன்று கொண்டிருக்கும் போது ‘ஹாமில்டன்’ போன்ற ஒரு மாபெரும் இசை நிகழ்வை அவரால் எழுதி விட முடியாது. ரஹ்மானுக்கு, ராஜாவைப் போன்றே, திரை இசை என்பதைத் தாண்டி வரலாற்றில் இடம் கிடையாது. என்ன ஒன்று ராஜாவைப் போலல்லாது கொஞ்சமாவது சர்வதேசத் தரத்தை எட்டிப் பிடித்தார் ரஹ்மான்.

பெரியாரை இளையராஜா கடப்பது இருக்கட்டும், பெரியார் அயோத்திதாசரைக் கடந்து விட்டார் என்று தருமராஜ் சொல்வதை தலித் தரப்பில் எப்படிப் பார்க்கிறார்கள்? திராவிட இயக்கம் தலித் அளுமைகளை பெரியாருக்கு இரண்டாமிடத்தில் வைக்கிறார்கள் என்று தலித் தரப்பில் அவ்வப்போது கோபப்படுகிறார்கள். ஆனால், அயோத்திதாசரைப் பேசும்போதெல்லாம் அயோத்திதாசர் – பெரியார் என்று ஒரு இருமையை (binary) வலியுறுத்தும் வ. கீதா முதல் தருமராஜ் வரை ஏன் ஏற்கப்படுகிறார்கள்?

அயோத்திதாசர் பற்றிய நூல் சமர்ப்பணம் எதற்காக என்பதை விளக்கும் நூல் இது என்று ஆரம்பித்து கடைசி வரை ராஜாவின் பாடல் பிரபலமானதற்கு அவரளவில் உண்மையும் அதீததும் கலந்த காரணங்களைச் சொன்னார். அவ்வளவு தான். “நந்தனைக் கடந்த அயோத்திதாசரைக் கடந்த பெரியாரையும் கடந்த இசைஞானி இளையாராஜா” ஏன் என்று தெளிவாக்கவில்லை.

ஐம்பதுகளுக்குப் பின்னான தமிழ்த் திரையிசை வரலாற்றில் ஒரு வரிசையை உண்டாக்கினால் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் என்று சொல்லலாம். அது தான் ராஜாவின் இடம். அது மட்டும் தான் அவர் இடம்.

சுட்டிகள்:

  1. இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? http://tdharumaraj.blogspot.com/2015/12/blog-post.html
  2. இளையராஜாவும் சினிமாவுக்குப் போன சித்தாளும் https://contrarianworld.blogspot.com/2016/10/blog-post_23.html
  3.  https://contrarianworld.blogspot.com/2013/06/ilayarajas-how-to-name-itperils-of.html
  4. முதல் மரியாதை பற்றி ராஜா https://youtu.be/RgYoS45-i30
  5. மிஷ்கின் பேட்டி https://youtu.be/MIvvCq-qaqg