ஜெயமோகனின் கதைத் திருவிழா

0 comment

சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் ஒரு பிடி யானையை வெடி வைத்துக் கொன்ற செய்தியைக் கேட்ட போது நினைவுக்கு வந்த முதல் விஷயம், ஜெயமோகன் எழுதிய ராஜன் என்ற சிறுகதை தான். ராஜன் ஒரு யானையைப் பற்றிய கதை. தென் திருவிதாங்கூரில், சிற்றூர்களின் மாடம்பிகளான இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு கர்வப் போட்டியில், பர்வதராஜன் என்ற அந்த யானையை விஷம் வைத்துக் கொல்ல ஒரு தரப்பின் எஜமானன் முடிவெடுத்து தனது பாகனிடம் பேசுவதில் தொடங்குகிறது அக்கதை.

பூதத்தான் நாயர் என்ற அந்தப் பாகனை அந்த இல்லத்தில் நடத்தும் முறையில் இருந்தே அவன் அவர்களிடம் எப்படிப்பட்ட அடிமட்ட சேவகனாக உள்ளான் என்று நமக்குப் புரியும். யானையின் காலில் சாவது மோட்சத்துக்கான வழி என்று நினைத்து வாழ்ந்திருக்கும் பாகன்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்த அவனிடம் யானையைக் கொல்வதற்கான சகல நியாய தர்மங்களையும் எஜமானனின் உதவியாளன் எடுத்துச் சொல்லி இச்செயலைச் செய்யச் சொல்கிறான். அதோடு இந்தத் திட்டத்திற்கு உடன்படாவிட்டால் பாகனின் குடும்பம் கருவறுக்கப்படும் என்ற மிரட்டலும் சேர்ந்து கொள்கிறது. பதறித் தவித்துக் குழம்பி நிற்கும் பாகன், தனக்குள் இதன் நியாய தர்மங்களைத் தேடும் போது, தொன்மங்களின் வழி வந்து சேர்கிறது ஒரு நியாயம். அதன்படி அவன் நின்றதும், பின் நடந்ததும் இக்கதையின் உச்சப்புள்ளி.

கேரளத்தில் பரசுராம ஷேத்ரம் என்பது மிகப் பழமையானதொரு தொன்மம். பரசுராமரின் மழுவைக் கடலில் வீசி அதிலிருந்து மீட்ட நிலமே கேரளம் என்பது அவர்களின் நம்பிக்கை. அதில் புதிதாக இன்னொரு முடிச்சை சேர்க்கிறார் ஆசிரியர். பரசுராமரின் தெற்கு விஜயத்தின் போது, உண்பதற்கான பசும்புல் இன்றி வாடும் ஒரு குட்டி யானைக்காகத் தான், இந்தப் புல்வெளிப் பச்சை நிலத்தை மீட்டெடுத்துக் கொடுக்கிறார். கேரளத்தின் தொல்குடிகளின் மூதன்னையர் அனைவரும் யானைகளுக்குப் பாத்தியப்பட்ட இந்த நிலத்தின் உரிமையை யானைகளின் மூதன்னையின் கருணையினாலே வாங்கி, தன் சந்ததியினருக்குக் கொடுக்கின்றனர். இது யானையின் நிலம், அதன் கருணையினால் நமக்குத் தரப்பட்டது என்று அந்தத் தொன்மம் போகும். பிரமாதமானதொரு நாடகீய உச்சப்புள்ளியில் முடியும் இந்தக் கதையின் முடிவில் யார் ராஜன் என்று யோசிக்கத் தொடங்கி விடுவோம்.

கொரானா ஊரடங்கு காலத்தில் தினமும் ஒரு கதை எழுதப் போவதாக அறிவித்த ஜெயமோகன், மொத்தமாக அறுபத்து ஒன்பது கதைகளை எழுதியிருக்கிறார். இவற்றில் சில, குறுநாவல் அளவுக்குப் பெரியவை, மற்றவை அவரது அளவுகளில் பெரிய சிறுகதைகள். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வித்தியாசமான பின்புலத்தில் வெவ்வேறான உணர்ச்சிகளைத் தருவனவாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் உட்கார்ந்து படிக்க மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு கதை காட்டும் உலகத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவே நேரம் தேவைப்பட்டது. அதன் பின்னர்தானே அடுத்தக் கதைக்குள் புக முடியும்? அப்படியான வலுவான பிணைப்புகளுடனும் ஆழமாகவும் வேறு உலகத்திற்கு எடுத்துச் செல்வனவாக அவை இருந்தன. தவிர, அறுபத்து ஒன்பது கதைகள் என்பது பெரிய எண்ணிக்கை. ஒவ்வொரு கதையைப் பற்றிக் கொஞ்சமாக எழுதினாலும் ஒரே கட்டுரைக்குள் கொண்டுவர முடியாத அளவு பெரியதாகி விடும். இதில் முடிந்த அளவுக்கு ஒரு பொதுவான பார்வையை முன்வைக்க சிரத்தை எடுத்திருக்கிறேன். அதோடு சில கதைகளைப் பற்றிய குறிப்புகளை மட்டும் கொடுத்திருக்கிறேன்.

இக்கதைகள் அனைத்தையும் பொதுவான அடைப்புகளுக்குள் கொண்டு வரவேண்டுமானால் இப்படி பிரித்துக் கொள்ளலாம்: 1. அனந்தன் கதைகள் 2. ஔசேபச்சன் கதைகள் 3. திருவிதாங்கூர் வரலாறு – நாட்டார் பாடல் கதைகள் 4. பி.எஸ்.என்.எல் கதைகள் 5. கலை – கலைஞன் பற்றிய கதைகள் 6. நித்தியா – ஞானம் – அகப்பயணம் சார்ந்த கதைகள் 7. இவையல்லாத பொதுவான கதைகள்.

அனந்தன் என்ற கதாபாத்திரம், கிட்டத்தட்ட ஜெயமொகனின் சிறுவயதுப் பாத்திரம் என்ற கருத்து உண்டு. ஏற்கனவே தீயறியும், கிளி சொன்ன கதை போன்ற ஜெயமோகனின் பழைய படைப்புகளில் அனந்தன் வந்ததுண்டு. அவரது புறப்பாடு 1 & 2 மற்றும் இந்த அனந்தன் வரும் படைப்புகள் என்று ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அது தனிப்பட்டதொரு புனைவுத் தளமாக கூடி வரும். கிட்டத்தட்ட மால்குடி டேஸ் போல, கன்னியாகுமரி மாவட்ட கிராமத்துப் பின்னணியில் இந்தக் கதைகள் அனைத்தும் தனித்த சுவை கொண்டதாக இருக்கும். கொரானா காலத்தில் எழுதப்பட்டிருக்கும் அறுபத்து ஒன்பது கதைகளுள், கிட்டத்தட்ட பன்னிரண்டு  சிறுகதைகளை, அனந்தன் கதைகள் என்று ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அந்தப் புனைவுலகுடன் தொடர்புபடுத்தலாம்.

இதில் ஆனையில்லா, வருக்கை, பூனை, துளி, கோட்டை, தங்கத்தின் மணம், இடம், மதுரம், பிடி, தேவி போன்ற கதைகளை அனந்தன் கதைகள் என்று சொல்லலாம். இந்த வகைச் சிறுகதைகள், பொதுவாக யதார்த்தவாத சித்தரிப்புடனும் பெரும்பாலும் திடுக்கிடும் திருப்பங்கள் ஏதுமின்றியும் எளிய கன்னியாகுமரி வட்டார கிராமத்துச் சூழலில், அங்குள்ள எளிய மனிதர்களின் உரையாடல் வழியாகவும் நடவடிக்கைகள் வாயிலாகவும் அவர்களது வாழ்க்கையைக் காட்டி, புன்முறுவல் அல்லது மனமலர்ச்சியோடு முடிகிறது.

முந்தைய ஜெயமோகனின் அனந்தன் படைப்புகளில் அனந்தனது அப்பா ஒரு இறுக்கமான மனிதராக, முன் கோபம் உள்ளவராக, அவ்வப்போது கடந்து செல்லும் துணைப் பாத்திரமாக இருப்பார். ஆனால் இந்தக் கதைகளில் அவரது பாத்திரம் கொஞ்சம் நெகிழ்வுடையதாக மாறி கிட்டத்தட்ட முக்கியப் பாத்திரமாகவே பல கதைகளில் வருகிறார். கரடி நாயர் என்று அழைக்கப்படும் முரட்டுத்தனமான முன்கோபியான இந்த அப்பா பாத்திரம், மதுரம் கதையில் பிரசவிக்கும் எருமைக்காகவும், பிறந்த எருமைக் குட்டிக்காகவும் அழுகிறார், “மொழி”யில் பத்தாய அறைக்குள் அகப்பட்டுக் கொண்ட சிறிய மகளுக்காக அறைந்து அறைந்து அழுகிறார்.

இடம், துளி, பூனை, ஆனையில்லா போன்ற கதைகளில் விலங்குகளுக்காகவும் சக மானுடருக்காகவும் எதோ தன்னளவிலான உதவிகளை இயல்பாகச் செய்ய முயல்கிறார் என்பதே முந்தைய புனைவுகளில் இருந்து இந்தக் கதாப்பாத்திரம் அடைந்து வந்த பரிணாம வளர்ச்சி என்று சொல்லலாம். டீக்கனார், தங்கையா பெருவட்டர் போன்ற இவரது சகாக்களும் அவர்களது குணாம்சத்தால் ஈர்க்கிறார்கள், இது தவிர தங்கம்மை, கேசவன் தம்பி நாயர், அச்சு ஆசான், கள்ளன் தங்கன், தவளைக் கண்ணன், லாரன்ஸ் போன்றவர்களும் வருகிறார்கள். இந்தக் கதைகளில் முக்கியப் பாத்திரங்களாக யானை வருகிறது, குரங்கு வருகிறது, சிறுத்தை, நாய், எருமை எல்லாம் வருகின்றன. கள்ளக் காதல், காமம், கலை, ரசனை எனக் கலந்து வருகின்றன. ஒருமுறை படிக்க ஆரம்பித்தால், இந்தப் புனைவு உலகத்தில் இருந்து எளிதாக வெளியே வரமுடியாது. மேலே கொடுக்கப்பட்ட கதைகள் அனைத்தையும் ஒரே வரிசையில் படிக்கலாம்.

ஔசேபச்சன் பாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. இவர் துப்பறிந்த காலகட்டத்தில் நடந்த சில வித்தியாசமான கதைகளை இப்போதுள்ள தனது நண்பர்களுக்குக் குடி விருந்தினிடையே, அடுக்கடுக்கான சம்பவங்களின் வழியே, ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு, பின் ஆற அமர ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து இயல்பாகப் பகிர்கிறார். அவர் தூக்கி வீசும் சம்பவக் கோவைகளின் அடுக்கு வழியாகக் கதை துலங்கி வரும் இந்தக் கதை சொல்லல் முறையே ஒரு பெரிய கவர்ச்சி. ஒரு துப்பறியும் கதைக்குத் தேவையான எல்லா விஷயங்களும் இருந்து, அது கொடுக்கும் சில்லிடும் அனுபவங்கள் வழியாக, சாதாரணமானதொரு வெகுஜனப் புனைவாக இல்லாமல், இதை இலக்கியமாக்குவது இந்தக் கதை சொல்லல் முறையும், அதன் பாத்திரப் படைப்புகளும், அதன் பல்பரிமாணங்களும், கொட்டிக் கிடக்கும் தகவல்களும், நுணுக்கமான விவரணைகளும் தான்.

வேட்டு, வேரில் திகழ்வது, பத்து இலட்சம் காலடிகள், ஓநாயின் மூக்கு, கைமுக்கு என்ற ஐந்து கதைகளையும் ஔசேபச்சன் கதைகள் என்று சொல்லலாம். இதில் உச்சம் என்று பத்து லட்சம் காலடிகளையும், ஓநாயின் மூக்கினையும் சொல்லலாம், அடுத்து கைமுக்கு, பின் வேரில் திகழ்வது. வேட்டு ஒரு நல்ல வெகுஜனத் துப்பறியும் புனைவு, ஆனால் அது மற்ற கதைகளின் ஆழத்துக்குச் செல்லவில்லை என்பது அதன் பலவீனம். பத்துஇலட்சம் காலடிகளில், கேரளத்தின் கடற்கரையோர மாப்பிள்ளா முஸ்லிம்களின் கலாச்சாரத்தைப் பற்றியும், அவர்களின் கடற்கலமான பத்தேமாரியைப் பற்றியும், அரபிக்கடலோர கடத்தல் குழுக்களின் வழக்கங்கள் பற்றியும் நிறைய குறிப்புகள் வருகின்றன. அவற்றால் இந்தக் கதையின் கனம் வேறொரு தளத்துக்குச் சென்றுவிடுகிறது, அதற்கேற்றாற் போன்ற ஒரு முடிவுடன் நிறைவடைகிறது.

ஓநாயின் மூக்கு தென் திருவிதாங்கூர் அரசின் முக்கியமான ஒரு குடும்பத்துச் சாபத்தில் ஆரம்பித்து, திருவிதாங்கூர் வரலாறு, யக்‌ஷி, மனநலக் கோளாறு, சொத்தின் பொருட்டு நடக்கும் சதி என்று பலவாறாக மாறி யாருமே எதிர்ப்பார்க்காத முடிவுடன் முடிகிறது. கைமுக்கு தமிழகப் பின்னணியில் வறிய குடும்பத்தில் பிறந்த ஒரு எளிய மாணவன் விரட்டப்படும் தூரத்தையும் அது திறந்து விடும் குற்றச் செயல்களையும் காட்டுகிறது. ஔசேபச்சன் கதைகளில் அவர் யாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்பதில்லை, அப்படிக் கொடுத்தாலும் அவர்கள் அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். அவர் எடுத்து வைப்பதெல்லாம் கேள்விகள் தான், நிலைத்த சரி தவறு எதுவுமில்லை, எல்லாம் பார்க்கும் பார்வையில் மாறிவிடுகிறது. கடைசியில் ஒரு பெருமூச்சுடன், அறிதலின் பாரத்தின் பொருட்டே அதிகம் குடிக்கிறார். ஔசேபச்சன் கதைகளின் ஒரே இடைஞ்சல் என்று சொல்வதானால் ஆரம்பத்தில் நடக்கும் நீண்ட குடி சம்பாஷனைகள் தான். அதிலும் கணினி யுகத்து ஃபேக் ஐடி போல ஔசேபச்சன் எல்லோரையும் வசைபாடி விடுகிறார், அதில் அவரது சுயசாதி கூடத் தப்புவதில்லை. சில சமயங்களில் அதுவே ஒரு சிறுகதையின் அளவுக்கு
வந்துவிடுகிறது. ஆனால் அதன் பின்னரே மையக் கதைக்குள் நகர்கிறது. இதைத் தவிர்த்துப் பார்த்தால், தமிழ்த் துப்பறியும் புனைவிலக்கியத்துக்கு கிடைத்த மிகச்சிறந்த வரவு ஔசேபச்சன் கதைகள்.

தமிழ் எழுத்தாளர்களில் திருவிதாங்கூர் வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகள் சார்ந்த சிறுகதைகளை எழுத ஒருவர் உண்டென்றால் அது ஜெயமோகனைத் தவிர வேறு யாராய் இருக்க முடியும்? பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து வந்த வரலாற்றுக் கதைகள் தமிழில் ஆயிரம் இருந்தாலும், ஒரு கட்டத்தில், எம்ஜியார் சிவாஜியின் ராஜா காலப் படங்களை நினைவுறுத்தும்படியான வரலாற்றுப் புனைவுகளையே தமிழில் அதிகம் காண்கிறோம். ஆனால், ஜெயமோகன் எழுதும் திருவிதாங்கூர் சார்ந்த வரலாற்றுக் கதைகளோ முன்னெப்போதும் சுவைத்திராத சுவையில் வருவன. இந்த அறுபத்து ஒன்பது கதைகளில் அப்படிப்பட்ட சில சிறுகதைகள் உண்டு. இந்தக் கதைகள் ஒன்றல்ல. ஆனால், ஒன்றை ஒன்று தொட்டுச் செல்லும் கண்ணுக்குத் தெரியாத நாண், இதன் பின்னணிச் சம்பவங்களை இணைக்கின்றது.

திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மா, தனது அதிகாரத்தைத் தக்க வைக்க, அவரை எதிர்த்த குறுநிலத் தலைவர்களும் திருவிதாங்கூரின் பலம் பொருந்திய கூட்டாகவும் திகழ்ந்த எட்டு வீட்டில் பிள்ளைமார் என்ற எட்டுக் குடும்பங்களை இருநூற்று சொச்சம் ஆண்டுகளுக்கு முன் அழிக்கிறார். ராமனாமடத்தில் பிள்ளை, மார்தாண்ட மடத்தில் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை , செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை ஆகிய எட்டுக் குடும்பங்கள். அதன் ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு அந்தப் பாவம் தீர அந்த இடத்திலேயே குளங்கள் கட்டப்படுகின்றன. அந்தக் குடும்பங்களின் பெண்கள் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு மீனவர்களுக்கும் பிற தேசத்தவருக்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அங்கிருந்து ஒரு புல் பூண்டு கூட மகாராஜாவை எதிர்த்து எதிர்காலத்தில் கிளம்பிவரக் கூடாது என்ற எண்ணத்தில் செய்த அழித்தொழிப்புகள் இவை.

இதன் கசப்புகள் மறையவும், பாவங்கள் நீங்கவுமே மகாராஜா தனது கிரிடத்தைப் பத்மநாபனின் காலடிகளில் வைத்து அவனது தாசனாக அவனது பேரால் திருவிதாங்கூரை ஆளும் வழக்கம் வந்தது. ஆனால் வரலாறு என்பது ஒரு பக்கமான சங்கதிகள் மட்டும் அல்ல. நாணயத்தின் இன்னொரு பக்கம் போல், எந்தக் கோரமான அழித்தொழிப்பில் எட்டுவீட்டில் பிள்ளைமார் குடும்பங்கள் அழிந்ததோ அதை போன்றதொரு கோரமான அரசப் படுகொலைகளை, அதற்கு முன் நிகழ்த்தியது, இதே எட்டுவீட்டில் பிள்ளைமார் கூட்டணியே. மார்த்தாண்ட வர்மாவுக்கு முன்னான காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்யத்தை நடத்திச் சென்ற உமையம்மை ராணியின் ஆறு புதல்வர்களை, அதாவது பட்டம் தரிக்கத் தயாராயிருந்த ஆறு இளவரசர்களை, துள்ளத் துடிக்க அரசியல் படுகொலை செய்தது அப்போது பலம்பொருந்தியவர்களாக இருந்த எட்டுவீட்டில் பிள்ளைமார் மாடம்பிகளின் கூட்டு. அந்த இரத்தம் அவர்களின் கைகளில் கடைசிவரை இருந்தது.

திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இன்னொரு இரத்த சரித்திரமானது, அந்த ராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற / பிரச்சனைக்குரிய தளவாயும் பின்னர் சுதந்திரப் போராட்டத் தியாகி எனப் போற்றப்பட்டவருமான வேலுத்தம்பி தளவாயின் காலத்தில் நடக்கிறது. முதல் சம்பவமானது, நாயர் குலத்தில் பிறந்து நாயர் படைகளின் ஆதரவில் ராஜ்ஜியத்தின் தளவாய் ஆன வேலாயுதன் என்ற வேலுத்தம்பி தளவாய், அதே நாயர் படைகளை இறக்கமின்றி கழுவிலேற்றிக் கொல்வதிலும் யானைகளால் உடலைக் கிழித்து கொல்வதிலும் நடக்கின்றது. இதன் ஆடிப் பிம்பமான எதிர் இரத்த சரித்திரமானது, எந்த பிரிட்டிஷ் படைகளின் துணைகொண்டு இவற்றையெல்லாம் செய்தாரோ, அதே பிரிட்டிஷாரால் வேலுத்தம்பி வேட்டையாடப்பட்டு தற்கொலையில் முடிவதில் இருக்கின்றது. இந்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் புனையப்பட்ட கதைகளே ஆயிரம் ஊற்றுக்கள், ஓநாயின் மூக்கு, போழ்வு, இணைவு ஆகியன. இதுபோக, அம்மண்ணின் நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியில் அமைந்த ராஜன், ஆகாயம், நற்றுணை, முதுநாவல் போன்ற கதைகளையும் இவற்றோடு சேர்க்கலாம்.

ஜெயமோகன் இருபதாண்டுகளுக்கும் மேலாக அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்று யாவரும் அறிந்திருப்பர். ஆனால், ஆச்சரியகரமாக அவரது கதைகளில் இதுவரை அந்தக் களத்தை பற்றிப் பெரிதாகப் பேசியதில்லை என்ற குறையை இந்தப் புனைவுக் களியாட்டுச் சிறுகதைத் தொடர் மூலம் உடைத்திருக்கிறார். வானில் அலைகின்றன குரல்கள், சுற்றுகள், லூப், குருவி, நகைமுகன், வான்கீழ், வான்நெசவு, உலகெலாம், மலைகளின் உரையாடல் போன்ற கதைகள் இந்தப் பின்னணியில் எழுதப்பட்டவை. சில கதைகள் குமரி மாவட்டப் பின்னணியிலும், சில கதைகள் காசர்கோடு பின்னணியிலும் உள்ளவை. கதையின் காலமானது பெரும்பாலும் எண்பதுகளில் நடப்பவை. அதன் நாயகர்கள் ஒருவரல்லர். அந்த நிறுவனத்தின் பலதரப்பட்ட முகங்களை அவர்களின் அனுபவத்தில் ஏற்பட்ட சிறு உச்சப்புள்ளிகளைப் பதிவு செய்திருப்பதன் மூலம் இந்தத் துறையின் மறக்கப்பட்ட, அல்லது விஞ்ஞான வளர்ச்சியால் அடித்துச் செல்லப்பட்ட இன்னொரு உலகத்தையும் அதன் சமன்பாடுகளையும் நமக்குக் காட்டுகிறார்.

இந்த வரிசையில் அமைந்த அருமையான கதைகளுள் லூப் சிறுகதையும் ஒன்று. ஆரம்பகால தொலைபேசித் தொடர்புத்துறை ஊழியர்கள், முதிர்வுறாத வாடிக்கையாளர்களையும் அபரிமிதமான வேலை அழுத்தங்களையும், தங்களுக்குக் கிடைத்த குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு சமாளிப்பதைக் காட்டும் கதையில், மனிதத்தன்மையும் விட்டு போகாமல் ஒரு எளிய மலைப்பாம்பின் பொருட்டு சிந்திக்கும் அழகிய ஒரு நாடகீயத் தருணத்தில் கதை முடியும்போது உச்சம் பெருகிறது. இதே போன்ற களத்தில், எண்பதுகளின் தேர்தலுக்கு முன்னான ஒரு தினத்தில், உச்சபட்ச வேலை அழுத்தத்தில் பணியாற்றும் ஊழியரின் பார்வையில், அழுத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இதற்கு மேல் போக ஒன்றும் இல்லை என்ற உச்சப்புள்ளியில் எல்லாமே அணைந்து, ஒரு குளிர்ந்த எரிமலையின் நிசப்தமாய் மாறுவதும், அதன்பின்னுள்ள ஒரு ஆசுவாசமான நகைச்சுவையுடன் முடிவும் வெகு கச்சிதமான வடிவ நேர்த்தி அமைந்த கதை நகைமுகன்.

அடையாளமற்ற உதிரியாய் சமூகத்தில் கரைந்து போக இருந்தவனுக்கு அடையாளமளிக்கும் ஒரு புதுத் துறையானது, என்னவென்றே பலராலும் அறிந்திராத அறிவியலைச் சுமந்து வந்து கொண்டிருக்கும் நவீன உலகின் இராட்சச இரும்புக் கூடாரங்கள், அவன் வணங்கும் மாடனின் விண்முட்டும் பூடமாய் உருவகம் கொள்கிறது வான்கீழ் சிறுகதையில். பின்னர் அதே இரும்பு மாடனே வானத்துக்கான ஏணியாய் மாறி அவனது வாழ்வின் காதலை அவனுக்கு அருளிச் செய்கிறது. இதன் தொடர்ச்சியாக, வாழ்ந்து முடித்த கட்டத்தில் கடந்து வந்த காலங்களையும், நாட்டை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்ற அந்த அறிவியல் மாற்றங்களையும் அசை போட்டபடி, அதே காதல் இணையர் தங்களது காதலின் தொடக்கப் புள்ளியான இரும்புக் கோபுரத்தின் வான் நுனி அனுபவத்தை, மறுபடியும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கத் தேடிச் செல்வது வான்நெசவு கதை.

கலைஞனின் மனம் என்பது சிக்கலான இறுகிய உள்ளடுக்குகளைக் கொண்டது. சகஜமான சராசரி மனிதனின் மன அமைவில் இருந்துகொண்டே கலையின் உச்சத்தைத் தொடமுடியாது என்ற சூத்திரங்களோ கட்டுப்பாடுகளோ இல்லையெனினும், கலையின் உச்சத்தைத் தொடுவதற்கான ஒரு திறவுகோல், சராசரி சகஜத்தன்மையை உதறிய ஒரு கட்டத்தில் வருகிறது. அதனாலோ என்னவோ அதிகலைஞர்களில் பலர் நிலைத்த தன்மையற்ற குறுகிய காலப் பித்துநிலை கைவரப் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்தக் கதைத் தொகுதியில், ‘கலைஞன்’ என உபயோகிக்கப்படும் வழக்கமான சட்டகத்தில் இருந்து மாறுபட்டு, வாழ்வின் போக்கில் நம்மிடையே உலவும் சாதாரண மனிதர்கள், கலை என்னும் சன்னதம் புகுந்து உச்சம் பெறும் புள்ளிகளைப் பல கதைகளில் கொண்டு வருகிறார். அந்தப் புள்ளிக்குப் பின், அவர்களது சன்னதம் மறைந்து, மறுபடியும் நம்மை அச்சப்படுத்தாத கைதொடு தூரத்திலான சாதாரண மனிதர்களாகி விடுகின்றனர்.

இறைவன் கதையில், ஒரு சித்திரக்கார ஆசாரிக்கான எந்தவொரு வழக்கமான அடையாளங்களும் அற்றவனாக அறிமுகமாகி, பகவதியின் சித்திரம் வரைய நேரம் எதிர்பார்த்து பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மாணிக்கம் ஆசாரி, அந்தக் குறிப்பிட்ட கணத்தில், உயிர்ப்புள்ள தெய்வச் சித்திரமாய் பகவதியைச் சுவரில் கொண்டுவரும் இறைவன் ஆகிறான். முன்னிலும் அணுக்கமாய், அன்பான தெய்வ வடிவமாய், எசக்கியம்மைக்கு இந்தப் பகவதி தெரிகிறாள். அதனால் தான், அவனிடம் அவன் பார்த்தேயிராத தனது சிறுவயதில் இறந்து போன மகளின் சித்திரத்தைக் கேட்டு இறைஞ்சுகிறாள். ‘புது ராகம் படைப்பதாலே நானும் இறைவன்தான்’ என்று இசைஞன் சொல்லும் அதே உச்ச மனநிலையிலே மாணிக்கம் ஆசாரி தனது வாக்கை அவளுக்கு அளிக்கிறான், ஏனெனில் அந்தக் கணத்தில் அவனே இறைவன்.

‘வனவாச’த்தில் கூத்தில்லாத நாட்களில் ஆடு மேய்க்கும் சம்சாரியாக வனவாசம் புரியும் தலைவன்கோட்டை சாமியப்பா, கூத்துக் கட்டி அர்ஜூனனாக மேடையேறும் அந்தக் கணத்தில் தனது இன்னொரு கனவு வாழ்க்கையில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகிறார். இந்தக் கனவை பகிர்ந்து கொள்ளும் அல்லி வேடமிடும் குமரேசனும் இதே போன்றதொரு இரட்டை வாழ்வை வாழ்ந்து, கூத்தின் மூலமே தங்களது மீட்சியை அடைபவர்கள். வாய் பேசமுடியாத சிற்பக் கலைஞனைக் காட்டும் ‘ஆகாயம்’ சிறுகதையில், அவன் கொண்டுவந்த பெயரில்லாத மூர்த்தியைப் பற்றிய தண்டனை விவாதத்தில், அந்த ஊமைக் கலைஞனை, பரந்து விரிந்த இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் பெயர் தெறியாத தெய்வங்களின் மூர்த்தியைக் கூட மண்ணுக்குக் கொண்டுவரும் பணியின் திறவுகோலாக்கி, சிற்பியின் உன்னதத்தை மிரட்டிச் சொல்கிறார். செய்யும் வேலையைக் கலையாகக் கண்டு, அதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்து, அதன் உன்னதத்தைத் தொடமுயலும் கர்மயோகி, அதைத் தொட்ட கணம், தனது மோட்சத்தை அடைகிறான், பரிநிர்வாணத்தை ஒரு வலிய கடுத்தாப் புலியாக வந்து அருளும் தெய்வம், ஆட்கொள்ளுவது ஒரு சாராயம் காய்ச்சும் கலைஞனை.

தேவி கதையும் நிகழ்வாழ்வில் சாதாரணமாக இருந்து நாடக மேடையில் உச்சம் பெறும் ஒரு நடிகையைப் பற்றி பேசுகிறது. பிடி கதையில் பாடலும் வாழ்வுமாக திருவாரூர் தேர் போல பிரமாண்டமாக வாழும் கர்னாடக சங்கீதப் பாடகர் ராமையாவின் ஒருநாளைப் பேசுகிறது. கச்சேரிக்கு அடுத்த நாளில் ஊரெல்லாம் பவனி வந்து எல்லோருக்கும் பாடல் பாடி மகிழ்விக்கும் அவர், தனது கச்சேரியைத் தவறவிட்ட எளிய ரசிகையின் வீடுதேடிச் சென்று பாடிக்காட்டும் போது தெய்வமே தன் வீடு வந்து அணுகிரகிக்கும் அருளென பொசிந்து அழுகிறார் அவ்வீட்டுக் கிழவர். வாழ்வெல்லாம் நகைப் பட்டறையிலேயே வாழ்ந்து அதிலேயே தனது ஜென்மக் கடனைத் தீர்க்கும் ஆசாரியின் பாடலே இல்லாத பாடலின் ரசனையை பேசும் தேனீயில், ஒரு உன்னத ரசிகன் ஒரே ஒரு பாடலின் வழி கலையைத் தனதாக்கிக் கொள்கிறான். இந்தக் கதைகள் எல்லாம் கலையின், கலைஞனின் வெவ்வேறான பரிமாணங்களை, உன்னதத்தைப் பேசி ஓர் உச்ச நிகழ்வில் முடிகின்றன.

ஜெயமோகனின் ஆன்மீக குருவான நித்ய சைதன்ய யதி இதுவரையிலான அவரது கதைகளில் எங்கும் பெரிதாக வந்ததாகத் தெரியவில்லை. முதன்முதலாக இந்தக் கதைத் தொகுதியில் தான் வருகிறார். அதுபோக ஞானம், தேடல், அது சார்ந்த அகவெளிப் பயணம் ஆகியவற்றை மையப்படுத்திய கணிசமான கதைகள் இதில் உண்டு. கரு, சிவம், கூடு, காக்காய்ப் பொன், நிழல்காகம், முதுநாவல் கதைகளை இந்த வகைமையில் கொண்டுவரலாம். அதுசார்ந்த தேடல் உள்ளவர்களுக்கும் இரசனை கொண்டவர்களுக்கும் இந்தக் கதைகள் புதுவிதமான அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும்.

இது தவிர இன்னும் பல வித்தியாசமான கரு மற்றும் தளங்களில் பயணிக்கும் கதைகளும் உண்டு. விதவிதமான திருடர்களும் அவர்தம் தொழில் நுணுக்கங்களுடன் வரும் எழுகதிர், கரவு, முத்தங்கள், பிறசண்டு போன்ற கதைகளும் உண்டு. அனுபவங்களைத் தேடிச் செல்பவர்களைக்
கொண்ட அனலுக்கு மேல், விலங்கு, ஆடகம், அங்கி போன்ற கதைகள். இந்தக் கட்டுக்குள் எதிலும் வராத, இந்தத் தொகுதியின் சிறந்த கதைகளான பொலிவதும் கலைவதும், பலிக்கல் போன்ற கதைகளும் உண்டு. இதுபோக ஒரு குறுநாவலை மூன்று தொடர்புள்ள சிறுகதைகளாகப் பிரித்தது போல் இருக்கும் யாதேவி, சர்வஃபூதேஷு, சக்திரூபனே கதைகள்.

இளம் எழுத்தாளர்களே வருடத்திற்கு பத்து இருபது சிறுகதைகளுக்கு வருந்தி உழைக்கும் போது, தினம் ஒரு சிறுகதையென அறுபத்து ஒன்பது சிறுகதைகளை எழுதுவதென்பது அசாத்தியமான விஷயம். அந்த எல்லாக் கதைகளிலும் உச்சபட்ச இலக்கியத்திற்குச் சாத்தியமிருக்காவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு பதினைந்து கதைகள் காலத்தை மீறி நிற்கும். தமிழின் உச்ச சிறுகதை இலக்கியமாக பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் இத்தனை கதைகளில் குறைகள் எனப் பார்த்தால் சிலவற்றைச் சொல்லலாம். நிறைய கதைகள் சிறுகதைக்கான வடிவ ஒருங்கு பற்றியதான எந்தவிதமான பாவனைகளும் இன்றி கட்டற்று மீறிச் செல்வது ஜெயமோகன் போன்ற மாஸ்டர்களுக்கு கைவரப் பெற்றதுதான். அதன் சரியான இரசாயன கலவை கூடி வரும்போது உன்னதமான இலக்கியமாகவும், மற்ற நேரங்களில் அதன் குறைகளுடனான ஒரு படைப்பாகவும் ஆகி விடுகிறது.

ஆயிரம் ஊற்றுக்கள் போன்ற ஒரு படைப்பில் வடிவ ஒருங்கு அமைந்து சிலபல திருத்தல்களுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தால் அதன் பிரமாதமான கருவுக்கும், தளத்திற்கும், உச்சமான கவித்துவ முடிவுக்கும், அது இன்னும் ஒரு சிறந்த படைப்பாகியிருக்கும். இதையே கைமுக்கு கதைக்கும் சொல்லலாம். அடுத்ததாக, சில படைப்புகளில் வரும் மிக நீண்ட வர்ணிப்புகளும் அதீதமான முன் உரையாடல்களும் கதையைத் தொடங்கும் புள்ளியைத் தாமதமாக்கி சிறு அயர்ச்சியைக் கொடுக்கிறது. இந்தத் தொகுதியில் பலவீனமான கதைகள் என்று சொல்வதனால் நவீன கால இளைஞர்களின் மனதைப் பற்றிய ஆழி, நஞ்சு, சீட்டு போன்ற கதைகளைச் சொல்லலாம். நவீன இளைஞர்கள் மனதைப் பற்றி சமகால இளைய தலைமுறை எழுத்தாளர்கள் வேறு தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போது, இளைய மனதைப் பெரிதும் நெருங்க முடியாத இக்கதைகளின் போதாமை, இவற்றைக் கீழிழுப்பது உண்மை.

இவற்றையெல்லாம் மீறித் தான் இந்தப் புனைவுக் களியாட்டுச் சிறுகதைகள், அதன் பரந்த தளங்கள், பரிசோதனைகள், வித்தியாசமான வாழ்வனுபவங்கள், சில்லிடும் மேஜிக்கல் ரியலிச கதைகள், பெரும்பாலான கதைகள் அளிக்கும் வாசிப்பின்பம் போன்றவற்றால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் புனைவுக் களியாட்டுச் சிறுகதைகளில் பிரமாதமான கதைகள் என்று பின்வருவனவற்றைச் சொல்லலாம்.

  1. பத்து இலட்சம் காலடிகள்
  2. ஓநாயின் மூக்கு
  3. பொலிவதும் கலைவதும்
  4. போழ்வு
  5. மதுரம்
  6. மாயப்பொன்
  7. ராஜன்
  8. கைமுக்கு
  9. பலிக்கல்
  10. முத்தங்கள்
  11. நற்றுணை
  12. வனவாசம்
  13. மொழி
  14. தேனீ
  15. ஆயிரம் ஊற்றுக்கள்
  16. இறைவன்
  17. அனலுக்குமேல்
  18. பூனை
  19. லூப்

*

அனந்தன் கதைகளைத் தனித்தொகுப்பாகக் கொண்டுவந்தால் சிறந்த வாசிப்பின்பம் அளிக்கக் கூடிய படைப்பாக இருக்கும். ஔசேபச்சன் கதைகள் தமிழில் இதுவரை வந்துகொண்டிருந்த துப்பறியும் கதைகளை ஒரு திருப்பத்திற்கு உட்படுத்தி இலக்கிய அந்தஸ்து கோரும் படைப்பாக மாறி விடுகிறது. இன்னும் பல ஔசேபச்சன் கதைகளை வேண்டி நிற்கும் தீவிர இரசிகர்களைக் கொண்ட இந்தக் கதைத்தளம், தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சினிமா, வெப் சீரிஸ் போன்ற பிற கலை வடிவங்களிலும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்த போகின்றது என்று கவனிக்க வேண்டும். திருவிதாங்கூர் வரலாறைத் தமிழில் படிக்கக்கூடிய வாய்ப்பாக அமைந்த சிறுகதைளைப் போன்று, தமிழகத்தின் மற்ற பகுதிகளின் பேசப்படாத வரலாற்றுப் பகுதிகளை புனைவில் கொண்டு வருவதில் ஒரு புது அலையைக் கொண்டுவரலாம். மொத்ததில், தமிழ் இலக்கியத்திற்கு, இது பெருவரவான ஒரு காலகட்டம்.