அரும்பு

by கமல தேவி
0 comment

சாயங்கால வெயில் தணிந்திருந்தது. எங்கள் சுற்றுக்குள் உள்ள நான்கு வீடுகளிலும் மதிய உறக்கம் முடித்த அம்மாக்களின் நடமாட்டம் தொடங்கியது. நான்கு வீடுகள் சுற்றியிருக்க, வீடுகளுக்கு நடுவில் உள்ள சிமெண்ட் தளம் இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சிக்களம் அளவுக்கு மேல் இருக்கும். தெற்கு ஓரத்தில் பழைய கிணறு ஒன்று. அதன் முடிவில் கிழக்கு பார்த்த சுற்றுச்சுவரில் பெரிய இரும்புக் கதவுகளின் முன்னே வண்டி வந்து நின்றது.

சனிக்கிழமை என்பதால் வங்கியிலிருந்து சீக்கிரமே அப்பா வந்துவிட்டார். நான் அவருக்குக் கை காட்டிவிட்டு ஓடிப்போய் கதவுகளைத் திறந்துவிட்டேன். திரும்பி வந்து துவைக்கும் கல்லில் அமர்ந்துகொண்டேன். அவர் ஹீரோ ஹோண்டாவை உள்ளே தகரத் தாழ்வாரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, கறுப்புத் தோள்பையைக் கையில் பிடித்தபடி என் அருகில் வந்து நின்றார்.

“எப்பப் பாத்தாலும் இந்த ஹெட்ஃபோனை மாட்டிக்கிட்டே திரியற. யாரு பேசறதையும் கேக்கறதில்ல.”

“பாட்டு கேக்கறது ஒரு தப்பாப்பா?”

“பொழுதன்னைக்கும் பாட்டா.. லீவ்ல கம்ப்யூட்டர் கிளாஸ் போகனுன்னியே? என்னாச்சு? இப்படி ஒக்காந்து ஒக்காந்தே துவைக்கற கல்லை தேய்க்கப் போறியா..”

“இல்லப்பா.. ஸ்டார் கம்ப்யூட்டர்ஸ்ல விசு கேட்டுட்டு வந்திருக்கான்.. மண்டே வரச்சொன்னாங்க.”

“என்னவோ பண்ணுங்க. லீவை வேஸ்ட் பண்ணாதீங்க. படிக்கப் பிடிக்கலேன்னா ட்ரைவிங் கிளாஸாச்சும் போங்க. வர வழியில கண்ணனூர் ரோட்ல பிள்ளைங்க கார் பழகுது. துறையூர் டவுன்ல இருந்துக்கிட்டு எதாவது கிளாஸ் போகனுன்னு தோனுதா உனக்கு?” என்றபடி வடக்குப் பக்கமிருந்த வீட்டிற்குள் நுழைந்தார். ஒலிவாங்கியை அலைபேசியில் இருந்து எடுத்தேன். விசு கையாட்டியபடி வந்தான். பாடல் வெளியே கேட்டது.

புள்ளிமான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்…

“கேட் ஓப்பன்ல இருந்தா மூடி வைன்னு சொன்னா கேக்கறியா நீ?” என்றவாறு உள்ளே வந்து கதவைச் சாத்தினான்.

“டேய்.. இந்தப் பாட்டு நல்ல மெலடி பீட். சூப்பரா இருக்கு” என்று தலையை ஆட்டி ஆட்டிக் காண்பித்தேன்.

“குளிச்சிட்டு வந்து நான் ஒரு பாட்டு வைக்கிறேன் பாரு.”

எப்பொழுது முடிவெட்டச் சென்றாலும் கொடூரமாகத் திரும்பிவருவான். இன்று முகத்தைச் சுருக்கும்போதும் அழகாக இருந்தான்.

“அப்பா கோவமா இருக்காரு.. நாளைக்கு கிளாஸ்க்கு கேட்டுட்டு வரலாம்.”

“ம்.. போலாம். எங்கூடவே வரக்கூடாது. தனியா உன் சைக்கிள்ல முன்னாடி போ. பின்னாடிதான் வருவேன். ஒன்னாவே போனா பசங்க கிண்டல் பண்றானுங்க.”

“அப்பா ட்ரைவிங் கிளாஸ் போறீங்களான்னாரு.. போலாமா?”

“எங்கம்மாக்கிட்ட சொல்றேன். அப்பா என்ன சொல்வாருன்னு தெரியலையே.”

“கார் ஸ்டேண்ட் கணேஷ் அண்ணாக்கிட்ட ட்ரைவிங் கிளாஸ் எங்க போலான்னு விசாரிக்கலாம்.”

‘இவனிடம் சொல்லியாச்சு’ என்ற திருப்தியுடன் விட்ட இடத்திலிருந்து பாடலைக் கேட்கத் தொடங்கினேன்.

“டேய் விசு.. மீசையெல்லாம் வச்சு அழகா மாறிட்டியே? காலேஜ் வேற போகப்போற” என்று மாமி வேகமாகச் சொல்லியபடி வாளியில் இருந்த துணிகளைக் கொடியில் விரித்தாள். விசு குனிந்து முகத்தில் கை வைத்துக்கொண்டான். துண்டைக் காயப்போட வந்த அப்பா, விசுவைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சென்றார். சத்தத்தைக் குறைத்து அவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு அவன் முகத்தைப் பார்த்தேன். தெரிந்தும் தெரியாமலும் பென்சில் ட்ராயிங் போல மெல்லிய மீசை. பார்க்க ஒருமாதிரி இருந்தது. கம்பி வலையிட்டு மூடியிருந்த கிணற்றின் பக்கமாகத் திரும்பினேன்.

விசுவின் அம்மா அவனையே பார்த்துக்கொண்டு வீட்டு வாசல்படியில் அமர்ந்திருந்தார். சில நேரங்களில் அம்மாக்களின் கண்கள் நிலைகுத்தி நின்றுவிடும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள முடியாது.

நான்கு நாட்களுக்கு முன் காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போகலாம் என்று மாமி அழைத்தார். நான்கு அம்மாக்களும் விசுவும் நானும் சேர்ந்து சென்றோம். ஊரிலிருக்கும் தாய்மாமா எடுத்துக்கொடுத்த ஒரு பாவாடை தாவணி புதிதாகவே இருந்தது. அதை எடுத்து உடுத்தும்போது அம்மா இப்படித்தான் பார்த்தாள். நான் அவளைப் பார்ப்பதை உணர்ந்து கண்களை ஜன்னல் பக்கமாகத் திருப்பிக்கொண்டாள்.

அம்மாக்கள் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து புதிதாக வந்திருந்த கிரேப் சில்க் புடவை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். “பழைய மாடல்தான். மறுபடி வந்திருக்கு” என்ற மாமியிடம், “பிள்ளைங்களை யூனிஃபார்ம்லயே பாத்துக்கிட்டே இருக்கறதால வளர்றது தெரியல மாமி. காயத்ரி ஹாஃப் சாரியில பெரியவளா தெரியறா” என்றாள் அம்மா.

உடனே விசு, ”இந்த ட்ரஸ் காயாவுக்கு ஸூட் ஆகல ஆண்ட்டீ. இவளால நடக்கவே முடியல” என்றான்.

“ஹேண்டில் பண்ணத் தெரியலன்னு சொல்லனுண்டா. இந்த ட்ரஸ்ல அழகா இருக்கா” என்று விசு அம்மா அவன் தோளில் கை போட்டுச் சிரித்தாள். அம்மா அவனை இழுத்து இழுத்து அருகில் வைத்திருந்தாள். எங்காவது ஓடிவிடுவான் என்பதைப் போல இருந்தான்.

“இவதான் சடசடன்னு முருங்க மரமாட்டம் வளந்துட்டாளே… எங்க கீதாக்கூட இப்படிதான் இருந்தா. கல்யாணம் முடிவு பண்ற வரைக்கும் அவ புடவை கட்டினா எனக்கு பக்கு பக்குன்னு இருக்கும்.. இவ வளந்தாலும் வெடவெடன்னு இருக்கா பாரு.”

அன்றிலிருந்து அம்மா பத்து நாட்களுக்குள் மூன்று முறை மீன், கறி கடைகளுக்கு அப்பாவை அனுப்பிவிட்டாள். பீரோவை அடுக்கி வைத்து என் ஆடைகளை, உள்ளாடைகளைச் சரிபார்த்து பலவற்றைப் பழைய துணியில் போட்டாள்.

ஒன்பதாவது படிக்கையில் இருந்தே அம்மா தொடுவது குறைந்து போயிருக்கிறது. அதற்கு முன் கட்டிப்பிடித்துக்கொண்டே இருப்பாள். இப்போதோ முடியைத் துவட்டிவிடும் போதும் தள்ளி நின்றுதான் துவட்டுகிறாள். மற்றதில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறாள். எப்போதும் அதட்டிக்கொண்டே இருப்பதால் அம்மா மீது எரிச்சலாக வருகிறது. என்றாலும், எனக்குமே அம்மாவிடமிருந்து தள்ளிப்படுத்தால்தான் உறங்க முடிகிறது. எப்போதாவது அம்மாவின் கை பட்டால் நான் விழித்துக்கொண்டு தள்ளிப் படுப்பதெல்லாம் அம்மாவிற்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது.

“ஏண்டீ என்னைய டென்சனாக்கற?” என்றுதான் அடிக்கடி சொல்கிறாள். விடுமுறை என்பதால் நாள் முழுவதும் அம்மாவுடன் இருக்க முடியவில்லை. நான் செய்யும் எதையுமே சரியாகச் செய்யவில்லை என்றுதான் சொல்கிறாள். அதனால்தான் இப்படி தனியே வந்து நிற்க வேண்டியிருக்கிறது. சற்றுமுன் சம்மணம் போட்டு அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். “சும்மா பாக்க முடியாதா? மடக்கி வச்சும் காலை ஆட்டிக்கிட்டே இருக்க. பாக்கறதுக்கு நல்லாவா இருக்கு?” என்று கத்தினாள்.

பள்ளிக்கூடம், சிறப்பு வகுப்பு என்று அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்தால் எப்போது தூங்கலாம் என்றிருக்கும். காலையிலேயே திட்டித்திட்டி எழுப்புவாள். அம்மாவின் குரலை அலாரம் போலக் கேட்டுக் கேட்டு எரிச்சலாக வரும். அன்று பிரதோசம் என்பதால் கோவில் கூட்டத்தில் அம்மா அருகில் நெருங்கி நின்றுகொண்டேன். கோவிலுக்குள் மெல்லிய இருள். மல்லிகைப்பூவும் அம்மாவின் பாண்ட்ஸ் பவுடர் மணமும் வியர்வை வாசமுமாக என் அம்மாவை நீண்ட நாட்கள் கழித்து உணர்ந்தேன். அதோடு இணைந்து கோவிலின் பத்தி, சாம்பிராணி, கதம்ப வாசனைகள். பின்னாலிருந்து அனிச்சையாக அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன். அம்மா என் கழுத்துக்குத்தான் இருந்தாள். தலையை உயர்த்தி அண்ணாந்து என் முகத்தைப் பார்த்தாள். சின்னஞ்சிறிய ஒற்றை வைரக்கல் மூக்குத்தி மைக்ரோஸ்கோப்பிற்கு அடியில் இருக்கும் ட்ராப்லெட்டைப் போல அசையாமல் அழகாக மின்னியது. கண்களும் அது போலவே இருந்தன. மை தீட்டிய கண்கள், அழகான பெரிய ட்ராப்லெட். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அம்மா சிரித்தபடி மெல்ல கைகளை எடுத்துவிட்டாள்.

கோவிலைச் சுற்றிவிட்டு வெளியே வந்தால் வெளிச்சம் கண்களைச் சொடுக்கியது. மின்னல் போல ஒரு வலி வந்து மறைந்தது. மருத்துவர் இருளில் அலைபேசியைப் பார்க்கக்கூடாது என்று கண்டித்தது நினைவில் வந்தது. கண்ணாடியைக் கழற்றி அம்மாவின் பருத்திப்புடவை முந்தானையை இழுத்துத் துடைத்தேன். அம்மா சிரித்தபடி, “நம்மள்லாம் இவளுகளுக்கு துடைக்கிற துணி மாதிரி மாமி” என்றாள்.

“பிள்ளைக நம்ம முந்தானையைப் பிடிக்கறதே ஒரு சொகம். நீ வேற? கீதா இப்படித்தான் முந்தானையை இழுத்து இழுத்து முகத்தைத் துடைப்பா. ஏண்டின்னு கேட்டா.. இதைவிட நல்ல காட்டன் துணி கிடைக்குமாம்பா.”

“ஸ்கூல் பஸ்ஸிலயே போயிட்டு வந்து பழகிட்ட. எங்க பாத்தாலும் கும்பலா தாண்டீ இருக்கும். தள்ளி நின்னு பழகிக்கணும்” என்றாள். மாமி தலையாட்டிச் சிரித்தாள். கூசிச் சுருங்கும் கண்களால் பார்ப்பதற்கு அம்மா ஆயில் பெயிண்டிங் மாதிரி இருந்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டேன். அம்மா இப்படியே இருந்தால் என்ன?

இப்போது விசுவின் அம்மாவும் அப்படித்தான் அவனைப் பார்த்துக்கொண்டே அசையாமல் இருக்கிறாள். அப்படியே தன் கண்களை அகலத் திறந்து விசுவை விழுங்கப் போவதைப் போல.

விசு அம்மாவின் குரலால் சட்டென்று தலையை உலுக்கிக்கொண்டேன். “போய் குளிச்சுட்டு வாடா.. மீன் வறுக்க சொன்ன? அப்படியே கிடக்கு” என்றபடி எழுந்து சென்றார். நான்கு வீடுகளுக்கும் வெளியே பொதுவான ஒரு குளியலறை உண்டு. இறந்தவர்கள் வீட்டிற்குச் சென்று வரும்போதும், அப்பாக்கள் பையன்கள் முடிவெட்டிவிட்டு வரும்போதும் அங்கேதான் குளிப்பார்கள். விசு அம்மா துண்டும் சோப்பும் கொண்டுவந்து அவனிடம் கொடுத்தார்.

அவன் குளியலறைக்குள் சென்றபின் விசு அப்பாவின் புல்லட் சத்தம் கேட்டது. வட்டிக்கடையில் இருந்து வந்துவிட்டார். இந்த வீடுகள் அனைத்தும் அவர்களுடையதுதான். அனைவரிடமும் நன்றாகத்தான் பேசுவார். என்றாலும், அவர் வீட்டில் இருக்கும்போது அத்தனை கலகலப்பு இருக்காது. ‘இந்த மனுஷன் எப்ப கிளம்புவாருன்னு மனசுக்குள்ள ஒரு கண்ணு இருந்துண்டே இருக்கு. இவரைப் பாத்துதான் மாமா தேவலைன்னு ஆயிடுது’ என்று மாமி அடிக்கடி சொல்வாள். உடனே விசு அம்மா, ‘பிறந்த விதியை செத்துதான் மாத்தணும்’ என்பார். புல்லட்டுக்கு ஏற்ற உடல் அவருக்கு. கார் இருந்தாலும் புல்லட்டைத்தான் பயன்படுத்துவார். 

அவர் வண்டிச் சத்தம் கேட்டு தயா மாமா வெளியே வந்தார்.

“சார்.. இந்த லீவ்ல ஒருவாட்டி வீட்டுக்கெல்லாம் பெயிண்ட் பண்ணிறலான்னு தோன்றது.”

அவர் தலையாட்டினார். அப்பாவும் பேசத் தொடங்கினார். ஊருக்குச் சென்றிருந்த பெருமாள் மாமாவும் கலை அத்தையும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள். விசு அம்மா சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தார்.

“ஊர்ல எல்லாம் சௌக்கியமாங்க?” என்ற விசு அப்பாவின் குரல் கணீரென்று ஒலித்தது. அனைவரும் இருந்ததால் வீடுகளுக்கு என்னென்ன செய்யலாம் என்று பேச்சு மாறியது. குளியலறை கம்பி முதல் சமையலறை கழுவுத்தொட்டி வரை மாற்ற வேண்டியவைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

“இப்பெல்லாம் அபார்ட்மெண்ட்டாதான் கட்டி வாடகைக்கு விடறாங்க… இந்த வீட்டுக்கு ரொம்ப சீர் பண்ணி செலவு செய்ய முடியாதுங்க. எழுபத்தி ஒன்னுல கட்டின வீடு இது. முப்பத்தேழு வருஷமாச்சு. இன்னும் நாலஞ்சு வருசத்துல இடிச்சுட்டு சின்னதா ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டலான்னு யோசனை.”

விசு வெளியே வந்து ஓரமாக நீண்டிருந்த கொடிகளில் ஒன்றில் துண்டை விரித்தான். தலைமுடியைத் தட்டிக்கொண்டான். டீ-சர்ட்டை இழுத்துவிட்டபடி கிணற்றின் பக்கமாக நின்றான். பைகளை வீட்டினுள் வைத்துவிட்டு வந்த கலை அத்தை, விசுவின் கன்னத்தில் கை வைத்துச் சொடுக்கினாள். அவள் கிராமத்துப் பழக்கம் அது.

“கலையான முகம் விசுவுக்கு” என்று அவள் சிரித்தபோது விசுவின் அப்பா சட்டென்று திரும்பி விசுவைப் பார்த்தார். அவரின் பார்வை மாறியது. கலை அத்தை சற்றுத் தள்ளி நின்றுகொண்டாள். நெற்றியைச் சுருக்கி, “என்னடா..” என்றார். அமைதியாகக் கைகளைக் கட்டிக்கொண்டான்.

“கேக்கறனில்ல?”

தலையைக் குனிந்துகொண்டான்.

“எதுக்கெடுத்தாலும் உங்கம்மா மாதிரியே தலை குனிஞ்சுக்கோ..”

“ஏண்ணே இப்படி வெரட்றீங்க? நீங்க என்ன கேக்கறீங்கன்னு தெரியாம அவன் எப்பிடி பதில் சொல்வான்?” என்று கலை அத்தை மெதுவாகக் கேட்டாள்.

“நீ பேசமா இரும்மா. உன்னைய யாரு மீச வைக்க சொன்னா?”

“ஏன் சார்? காலேஜ் போகப் போறான். வச்சா நல்லாருக்குன்னு யாராவது ஃபிரண்டு சொல்லியிருப்பான்” என்று கூறிய அப்பா, அவரின் பேச்சை மாற்றுவதற்காக மறுபடியும் வீட்டுப் பேச்சை இழுத்தார்.

“இல்ல சார்.. எங்கக் குடும்பத்துல பழக்கமில்ல. உங்கம்மா எதுவும் சொல்லலியாடா?”

மெதுவாக ஒவ்வொருவராக வீட்டிற்குள் சென்றோம். வெளியே விசு கைகளைக் கட்டிக் குனிந்து நின்றான்.

“வீட்டுக்குள்ள வரக்கூடாது.”

“இருட்டிருச்சுங்க.. நாளைக்கு பாத்துக்கலாம்.”

“அப்ப நான் சுடுகாட்டுக்கு போறேன்… நீயும் உம்மவனும் வீட்ல இருந்துக்கங்க” என்ற சத்தமும், வெளிக்கதவை வேகமாகத் திறக்கும் சத்தமும் கேட்டது. அரைமணி நேரம் கழித்து அப்பா சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

விசு அம்மா வெளியே சிமெண்ட் தரையில் கால்களை ஒருபுறமாக மடக்கி அமர்ந்திருந்தார். எப்போதும் கஞ்சிபோட்ட பருத்திப்புடவைதான் கட்டுவார். நல்ல உயரம். திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர். ‘விசு அம்மா ரொம்ப அழகு. அவங்கப்பாவுக்கு மேட்சே இல்லை’ என்று சொல்லி அம்மாவிடம் ஒருநாள் கன்னத்தில் வாங்கினேன்.

விசு கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தான்.

“என்கிட்டாயாச்சும் சொன்னியாடா?”

“பிரசன்னாவும் நானும் சேந்து சலூனுக்குப் போனோம்மா. சலூன்காரர்தான் நல்லாருக்கும் இனிமே பெரிய பசங்கதானேன்னு இப்பிடி சேவ் பண்ணினார். நல்லாதானே இருக்குன்னு வந்துட்டோம்.”

நேரம் ஆக ஆக ஆள் மாற்றி ஆள் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

“நான் போய் தேடிக் கூட்டிட்டு வரேன். நீங்க பதறாதீங்க. விசு நீயும் வா” என்று அப்பா வண்டியை எடுத்தார். இரவு நேரமாகிக்கொண்டிருந்தது. மாமி விசு அம்மாவின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார்.

இரவு சாப்பிடும் நேரம் கடந்துகொண்டிருந்தது. வீடுகளில் இருந்து சப்பாத்தி, தோசை, சாம்பார் வாசனைகள் கலந்து வந்தன. சாப்பிட்டதும் நான் சோபாவில் படுத்துக்கொண்டேன். அனைவரும் பத்து மணிவரை வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். விசு அம்மா எவ்வளவு சொல்லியும் சாப்பிடவில்லை. இரண்டு வீடுகளில் கதவைத் திறந்து வைத்து விளக்கு அணைக்கப்பட்டது. இன்னும் அப்பா வரவில்லை. விசு அம்மா வாசல் கதவுக்கும் வீட்டுக்குமாக நடந்தாள்.

வண்டியின் ஓசை கேட்டதும் அம்மா அவசர அவசரமாக ஓடி கதவைத் திறந்தாள். மூவரின் கால்களிலும் புழுதி படிந்திருந்தது. அப்பாக்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டு வந்தார்கள். ஏதோ பேசிய அப்பா, விசு அப்பாவின் தோளில் தட்டினார். அவர் உள்ளே சென்றதும் அனைவரும் வாசலில் கூடினோம்.

விசு அம்மாவிற்குப் பேசவே முடியவில்லை. முகம் முழுக்கச் சிவந்திருந்தது. மூக்கும் காதுமடல்களும் ரத்தச்சிவப்பு நிறத்தில் இருந்தன.

“நிஜமாலுமே சுடுகாட்டுல போய் ஒக்காந்திட்டார்.”

விசு அம்மா முந்தானையைச் சுருட்டி இறுக்கிப் பிடித்துக்கொண்டார். யாரும் ஒன்றும் சொல்லவில்லை.

“வரவே மாட்டேனுட்டார். சின்ன பையன்.. எவ்வளவு நேரமா நின்னான்? இவரா வாயே திறக்கல. இழுத்துட்டு வரதுக்குள்ள என் ஜீவன் போயிருச்சு.”

மாமி அவசரமாக உள்ளே போய் சிறிய தட்டுடன் வந்து அப்பாவுக்குத் திருநீறு வைத்தாள். அம்மாவிடம் ஏதோ சொல்லி இழுத்துச் சென்றாள். அப்பா வீட்டினுள் சென்று அவருடைய ரேசரைக் கொண்டுவந்து விசுவிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டான். அவன் தோளில் தட்டி, பக்கவாட்டில் அணைத்தபடி, “இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் மீசை வைக்கலாம். இப்ப வேணாம்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்தார். அப்பாவின் முகத்தைப் பார்த்து மாமியின் முகமும் அழுந்தியது. எனக்கும் விசுவிடம், ‘கிளாஸ் போலாண்டா’ என்றோ ‘கார் பழகலாண்டா..’ என்றோ சொல்ல வேண்டும் போலிருந்தது. அவன் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

விசு வெளிக்கதவைப் பூட்டிவிட்டு இருட்டில் நடந்து சென்றான். அவன் அம்மா முன்பு போலவே துண்டு ஒன்றை அவனிடம் தந்தார். உள்ளிருந்து அம்மா, “லைட் ஆஃப் பண்ணுடீ”  என்று என்னைச் சத்தமாகக் கூப்பிட்டாள். திரும்பினேன். அவன் நிழல் நீண்டு விழுந்து நடந்து சென்றது. அது கிணற்றின் மேலிருந்து கீழே மடங்கி கொடிக்கம்பியில் வளைந்து தகரக்கதவில் ஒடிந்து வேறொன்றாக மாறி உள்ளே சென்றது. அது விசுவைவிட மிகப்பெரியது.