கார்த்திக் நேத்தா கவிதைகள்

0 comment

பரிசு

ஒளி
குறைந்து
குறைந்து
இருளில் இயைகிறது
நீ செய்ய வேண்டியது
இருளைக்
குறைத்துக்
குறைத்து
ஒளியை எடுத்துக் கொள்வதுதான்.

தூய்மை

பிரகாசத்தில் இருள்
வேறாய் நிற்பதில்லை
அவிழா மலரின் அந்தரத்தில்
மணத்தின் பெருவிழிப்பு.
அந்தர மணமும்
பிரகாசத்தில் இருளும்
விழிப்பின் லயிப்பு.
சுடர்ந்து அசையும் பிரகாசத்தில்
இருளின் தூய்மை.
அந்தர வெளியில்
மணத்தின் தவம்.
விழிப்பும் செயலும் வேறு வேறு.
விழிப்பு அநாதி.
விழிப்பில் செயலை கவனித்தல்
எனது விதி.
எண்ணத்தை கவனமுறுதலே
எனக்கு வேலை.
இருளும் மணமும்
சாட்சியிருக்கும் போதே வேறு வேறு.
நான் சாட்சி இல்லை.
எனது சொந்த பிரகாசத்தில்
அபிரகாசம் நான்.

தவ விளையாட்டு

அதோ அங்கே
முதல் படியிலிருந்து
ஏழாவது படிக்கும்
ஏழாவது படியிலிருந்து
முதல் படிக்கும்
அதுவாக உருண்டு கொண்டிருக்கும்
தீப்பந்தை
உனது பிரக்ஞையால்
அமைதியாக
சலனமுறாமல்
அவதிப்படாமல்
மெல்ல எடுத்து
ஒவ்வொரு படியாக வைத்துக்கொண்டு
வா பிள்ளாய்!

மதன மினுங்கல்

உனது மூக்கின் செங்குத்தில்
நிகழ்ந்தடங்குவதே எனது தவம்.
ஞானத்தின் பாலுறுப்பு
உனது பேரழகான மூக்கென்றால்
நீயும் சிரிப்பாய்.
எனது பாலின்பத்தைத் தூண்டுவதும்
உனது மூக்கு தான் என்றால்
வெடித்துச் சிரிப்பாய்.
உண்மையில் அதுதான் பேருண்மை.
பளபளக்கும் மூக்கு நுனியில்
மெய்மையின் தீரா நடனத்தையே
தரிசிக்கிறேன்.
நுண்மையாக அதிரும்
மூக்கின் மதன மினுங்கல்
நீ பேசப் பேச
எனக்கான உடலாக விரிந்து படுப்பதை
நீ அறிவாயா அழகே!
எனது பூஜையறையில் வீற்றிருக்கும்
ஆளுயர மூக்குச் சிலை உன்னுடையதின் பிரதி.
எனது படைப்பாற்றலைத் தூண்டியபடி
புறத்தில் மினுங்கும் மூக்கின் நுனி
அகத்தின் உறுப்பாகவும் கனிந்திருக்கிறது.
உனது மூக்கை மோகித்துக் கிடக்கும் எனக்கு
தன்மதனமே தீராக் கலவிபோகம்.
நினைவில் ஊன்றப்பட்ட
உனது மூக்கின் இரு தாளம்
எனது பிரக்ஞையைக் கருவியாக்கி
இசைத்துக் கொண்டேயிருக்கிறது.
உனது மூக்கின் பிரணவம்
எனது படைப்புகளின் ஓம் சுழி.

ராஜ கணம்

நிசப்தமான
வடிவான
அந்தக் குளத்தின் மையத்தில்
அமர்ந்திருக்கிறது ராஜஹம்சப் பறவை.
செழித்த முலையில் பூத்திருக்கும்
காம்பு போல.
எடையின்மையின் மேல் அது
எத்தனை ஜோராக அமர்ந்திருக்கிறது!
தனது பிரதியைப் பார்த்திருந்துவிட்டு
மெல்ல சிறகெடுத்துப் பறக்கிறது.
பறவையே பறவையின் சுவடுகளாக
நீரில் பதிந்து பதிந்து போவதை
நீயும் பார்க்க வேண்டும் அன்பே.
உனது கவனம் முழுதும்
பறவையின் மேல் இருந்தாலும்
அதன் நிழலும் காட்சிக்குள் வந்துவிடும் .
சின்னஞ்சிறிய அந்த ராஜஹம்சம்
அத்தனை பெரிய ஆகாயத்தை
லகுவில் மறைத்துக் கொண்டு பறப்பதை
ஒருமுறையேனும் நீ பார்த்துவிட வேண்டும் அன்பே!

காலக் கணக்கு

காலத்தில் நிகழ்வதே
காலையும் காலைக்கடனும்
காலத்தில் நிகழ்வதே
தாகமும் சிறுநீரும்
காலத்தில் நிகழ்வதே
விதையும் காட்சியாகும் அதன்
கனியும்
காலத்தில் நிகழ்வதே
பறவையும் அதன் அமர்தலும்
காலத்தில் நிகழ்வதே
இளமையும் ஈயென்ற சிரிப்பும்
காலத்தில் நிகழ்வதே
குழந்தையும் அதன் குட்டிக்கரணமும்
காலத்தில் நிகழ்வதே
முதுமையும் நாய்ப்புத்தியும்
காலத்தில் நிகழ்வதே
ஏழரையும் ஈனப்போக்கும்
காலம் தவறி
அங்கே பார்
புதன் கிரகம் செவ்வாயில் முட்டுகிறது
அதைப் பார்த்துக்கொண்டே
ஏற்காடு எக்ஸ்ப்ரஸ்
மல்டி நேஷனல் மாலில் நுழைகிறது.

போலி

ஒவ்வொரு முறையும்
அவர்கள் வர்ணித்த ஒருவனைத் தான்
கண்ணாடியில் காண்கிறான்
தானென சொல்லப்பட்ட அவன்தான்
தலை வாரிக் கொள்கிறான்
ஈக்காட்டி பல்லைப் பார்த்துக் கொள்கிறான்
மீசையை ரசிக்கிறான்
தாடியைத் தடவிக் கொடுக்கிறான்
கருவளையங்களில்
தூக்கிட்டுத் தொங்கும் தூக்கத்தைப்
பார்த்துக் கலங்குகிறான்
கண்ணாடியில் பார்த்த
அந்த அவனைத் தான்
தானென நம்பி
வாழ்க்கையை ஓட்டுகிறான்
கண்ணாடிக்கு வெளியிலும் அவன்.

இயைபு – சார்பு

காற்று
சிறுகச் சிறுக
ஒளி ஆவதைக்
கண்டு களித்தேன்
ஆவதின் ஒலியை
எப்படி விளக்குவேன்!
ஒருமையின் நுண்செவியை
என்னவென்று வரைவேன்!
ஒரு தூக்கம் போட்டு வந்து
காற்று
இரவானதைக்
கண்டு களித்தேன்
ஆனதின் அமைதியை
எப்படி விளக்குவேன்!
அப்பால் நிறத்தை
எதைக்கொண்டு வரைவேன்!
ஆவதும் ஆனதும்
இயைபை ஏங்கியன்றோ
இயைபை ஏங்குதல்
சார்புக்கு எதிர்வினையன்றோ?

குற்றவுணர்வு

கைகளைக் கழுவுவதில்
ஒரு நிறைவு கண்டான்
அடிக்கடி கைகளைக் கழுவுவதில்
இன்னும் நிறைவு கண்டான்
வீட்டை நீரூற்றிக் கழுவி
தீபம் ஏற்றுவதில்
பாவம் அழிவதாக நிம்மதி அடைந்தான்
அடிக்கடி வீட்டைக் கழுவி
தீபம் ஏற்றி
நிம்மதி அடைந்து கொண்டேயிருந்தான்
நீரால் குற்றவுணர்வைக்
கழுவ முடியவில்லை
தனது எழுதுகோலை
எழுத்துக்கு ஒருமுறை
நீரில் கழுவி எடுத்து எழுதும் அவன்
ஒரு முடிவுக்கு வந்தான்
நீருக்குப் பதிலாக
மண்ணெண்ணெய் எடுத்து
திரிக்குப் பதிலாக தன்மேல் ஊற்றிக்
கொளுத்திக் கொண்டான்
தகதகத்து எரியும் நெருப்பின் கதறலை
அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது
ஏதொன்றாலும் கழுவ முடியாத
குற்றவுணர்வு.

ஒன்றே கணம்

ஒரே கணத்தில்
ஒரே லயத்தில்
ஒரே செயலில்
ஒரே நிலையில்
அந்தப் பறவைகள் இரண்டும்
அந்தரத்தில் என்ன செய்கின்றன!

நாத – விந்து

ஓரமான ஒரு மூலையில்
உதித்த ஒளியைப் பார்த்து
லொள் என்றது அந்நாய்
அப்புறம் ஒரு காலத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
தெரிந்த ஒளியைப் பார்த்து
லொள் லொள் என்றது
பொறிப் பொறியாக
வலுக்கத் தொடங்கிய ஒளியைப் பார்த்து
ஊளையாக மாறிப் பிறகு
பேரூளையாகிக் களைத்து அடங்கியது
ஓங்கி வளர்ந்து உலகளந்த ஒளிக்குள்
ஒய்யாரமாக அமர்ந்து
லொள்ளை நினைத்துச் சிரிக்கத் தொடங்கியது.