பொட்டை

by போகன் சங்கர்
1 comment

ஒரு கிழவியின் பழைய கண்ணாடியின் ஒடிந்த காலை மாட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் போது ஓர் ஆள் வந்து நின்ற மாதிரி இருந்தது. பக்கத்து வீட்டுப் பையன். ”ஆச்சி உடனே வரச் சொல்லிச்சி.”

நாதன் நிமிர்ந்து, “ஏம்லே.. என்ன விஷயம்?” என்று கேட்டான். பையன், “தெரியலை, உடனே வரணுமாம்” என்றான்.

நாதன், “கிழவி, போட்டுப் பாரு… பார்ப்போம்” என்று கண்ணாடியைக் கொடுத்தான். அவள் அதைப் போட்டுக்கொண்டு “ஆங்” என்று முகம் மலர்ந்தாள். “எவ்வளவு கொடுக்கணும் ராசா?”

“இருக்கிறதை கொடு.”

அவள் தனது சுருக்குப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றைத் தேடியெடுத்துக் கொடுத்தாள். அதில் விபூதி வாசம் அடித்தது. பையன், “உடனே வரணுமாம்” என்றான் மறுபடியும்.

நாதன் தத்தளித்தான். அந்தி கறுக்கிற சமயம். இதுபோல் அல்லாமல் உருப்படியான ஏதாவது கிராக்கி வந்தால் இப்போதுதான் வரும். ஆபீசுக்குப் போய்விட்டுத் திரும்புகிறவர்கள் வழியில் பழைய கண்ணாடி மாற்றிக்கொள்ளவும் புதிதாய்ப் பரிசோதனை செய்து வாங்கிக்கொள்ளவும் வருவார்கள். மேலும் இந்த நேரத்தில் கதவடைத்தால் லக்ஷ்மி எப்படி வருவாள்?

“ஏலேய்.. கடையில கொஞ்சம் நிக்கியா? நான் போயி என்னன்னு பார்த்துட்டு வாரேன்.”

அவன், “ஹுக்கூம். எனக்குப் படிக்கணும்” என்று ஓடிவிட்டான்.

அந்த நேரம் பார்த்து சரம் போட சரோஜம் வந்தாள்.

“ஏய் சரோஜம், கடைல கொஞ்சம் இரி. வீட்ல அம்மை எதுக்கோ கூப்பிடுதா. போய்ப் பார்த்துட்டு இந்தா வந்துடுதேன்.”

“ஆத்தாடி… இதைப் பத்தி எனக்கென்ன தெரியும்? என்னை உட்கார வைச்சிட்டுப் போனா?”

“ஒன்னும் தெரிய வேண்டாம். ஓனர் இந்தா போயிருக்காரு… வந்துருவாருன்னு யாரும் வந்தா சொல்லி உட்கார வை. நீ சிரிச்சிக்கிட்டே சொன்னா யாரு தப்பிச்சுக்க முடியும்?”

அவள், “அது சரி” என்றாள். முகத்தில் இலேசாக புன்னகை ஏறியது. “சீக்கிரம் வந்துடு. எனக்கு இன்னும் ஆறு கடை இருக்கு.”

“இதோ வந்துடறேன். பெரும்பாலும் எனக்கு நெஞ்சு கரிக்காப்ல இருக்கு.. குல்கந்து வாங்கியா, அஞ்சால் வாங்கியான்னு சொல்லக் கூப்பிடுவா. இந்தப் பையன்கிட்ட ஒரு ரூபா கூட கொடுத்தா வாங்கிக் கொடுப்பான்.”

“காந்திமதி அம்மைக்கு அந்த ஒரு ரூபா கொடுக்க மனசு வராதுல்லா?” என்றாள் சரோஜம்.

2

“ஏலேய்.. இந்த லட்சுமி சனியன் மதியம் பனிரெண்டு மணிக்கு டைப் ரைட்டிங் கிளாசுக்குப் போறேன்னு இறங்கிப் போனது. இன்னும் வரலைலே… நானும் இப்போ வருவா, அப்போ வருவான்னு இருந்தேன்.”

நாதன் தளர்ந்து அமர்ந்துவிட்டான்.

“என்ன சொல்லுதே? மதியம் நான் சாப்பிட வந்தப்ப ஒன்னுமே சொல்லல?”

“எதுவும் பிரண்டு வீட்டுக்குப் போயிருப்பான்னு நினைச்சேன்.”

“அங்கே போகலியா?”

“அவ போகக்கூடிய எல்லா இடத்துக்கும் இந்தப் பயலை விட்டு விசாரிச்சேன். எங்கியும் இல்லை”.

“பட்டப்பகல்ல யார் கண்லயும் படாம எங்கே போயிருப்பா?”

“டைப் கிளாசுக்கு பத்து நாளா வரலியாம்..”

“அவ ரூம்ல பார்த்தியா?”

“பார்த்தேன். கொஞ்சம் துணிமணி மட்டும் எடுத்துட்டு போயிருக்கா. கைல கால்ல போட்டதோட போயிருக்கா.”

நாதன் மெதுவாய் எழுந்து அவள் அறையைத் திறந்து பார்த்தான். பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. கட்டிலில் வழக்கம் போல் அவள் துணிகள் குவிந்து இறைந்து கிடந்தன. சினிமா பத்திரிகைகள். முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு மாய வாய் சிரிப்பது போன்ற வடிவில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் பொட்டுகள்.

நாதன், “யாரு?” என்றான்.

“யாரோ? நான் தலைதலையா அடிச்சிக்கிட்டேன். உனக்கு இவளுக்கு ஒரு பையனைப் பிடிச்சிக் கொண்டுவரத் துப்பில்லே. உங்க அப்பா செத்ததோட இந்த வீட்டோட சீவன் போச்சி.”

அம்மை புலம்ப ஆரம்பித்தாள்.

நாதன், “இப்போ நிறுத்தப் போறியா இல்லியா? அப்பா இருக்கும் போதுதானே அந்த ஜான்ஸ் காலேஜ் பையனோட பாபநாசத்துக்கு ஓடிப்போயி பிடிச்சிட்டு வந்தீங்க? என்னமோ ஒழுக்க மயிரா பேசுறே? ஒரு பொட்டைப் புள்ளையைச் சரியா வளர்க்கத் துப்புண்டா? எங்க.. உனக்கே மார்னிங் ஷோவும் மேட்னி ஷோவும் பார்க்க நேரம் சரியா இருந்திச்சி.”

அம்மை புலம்புவதை நிறுத்திவிட்டாள். பிறகு, “இப்போ என்ன செய்யப் போறே சொல்லு? பக்கத்துல தெரிஞ்சா அசிங்கம்.”

“இனி என்ன அசிங்கம்? இன்னேரம் அந்தப் பய போயி எல்லா இடமும் சொல்லிருப்பான். எங்கே போயிருக்கான்னு மட்டும் தெரிஞ்சா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.”

3

கடைக்குப் போகும்போது சரோஜம் தவித்துப் போயிருந்தாள். “ஏய்.. என்ன இவ்வளோ நேரம் ஆக்கிட்டே? மூந்தி கறுத்துப் போன பிறகு யாரு பூ வாங்குவா?”

நாதன், “போய்த் தொலை” என்றான்.

சரோஜத்தின் முகம் சுருங்கியது. “என்ன அக்கா வாயில வரா?” என்றாள்.

நாதன் தாழ்வான குரலில், “இந்த லட்சுமிப் புள்ளை இல்லே? காலைலருந்து வீட்டுக்கு வரலியாம். யார் கூடயோ போயிடுச்சு போலிருக்கு” என்றான். “யாருன்னு தெரிஞ்சா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். இது கொஞ்சம் பேக்கு. விவரம் பத்தாது. அதான் பயமா இருக்கு.”

சரோஜம், “அய்யோ” என்றாள். பிறகு, “நீ ஒன்னும் கவலைப்படாதே. எல்லாம் சரியாயிடும். நான் உன்கிட்ட வேற ஒன்னு சொல்ல வந்தேன்.”

“என்ன?”

“பெரிசா ஒன்னுமிலே. கோலார்ல இருந்து இது லெட்டர் போட்டிருக்கு. அடுத்த பத்தாம் தேதி இங்க வருதாம். இந்த தடவை கட்டாயம் கூடப் போகணுமாம்.”

நாதன், “ஓ!” என்றான்.

“அது ஒன்னுமில்லே. நீ மண்டையைப் போட்டு உடைச்சுக்காத. நான் கொஞ்சம் விசாரிச்சிப் பார்க்கேன்.”

4

இரண்டாம் மாலை வரை எந்தத் தகவலும் இல்லை. அம்மா, ‘சாத்தான் குளத்தில அவ பெரியம்மா வீட்டுக்குப் போயிருக்கா’ என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சமாளித்துக்கொண்டிருந்தாள். லட்சுமி பத்தாம் வகுப்பு படிக்கும்போதும் இதே போல் ஒரு நாள் காணமால் போயிருக்கிறாள். ஆனால் அன்று இரவுக்குள் பாபநாசத்தில் ஜான்ஸ் காலேஜில் படிக்கும் பையன் ஒருவனுடன் அப்பாவின் நண்பர் ஒருவர் பார்த்துப் பிடித்துவிட்டார்கள். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. வீட்டுக்கு வந்தவளைப் பிடித்து ஈர்க்குவாரியல் பிய்ந்து போகும்வரை அம்மா அடித்தாள். “பொட்டைக் கழுதைக்கு இப்பமெ தொடை ஊறுது… என்ன?”

உடலெல்லாம் இரத்தக் கோடுகளுடன் லட்சுமி இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கிடந்தாள். அப்பா ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் உள்ளுக்குள் உடைந்து போய்விட்டார் என்று தெரிந்தது. இரண்டாவது நடு ராத்திரி கடையிலிருந்து வந்தவர், நேராக லட்சுமியின் அறைக்குப் போய் அவளை அப்படியே வாரி எடுத்துவந்து பட்டாளையில் வைத்துச் சாதம் ஊட்டியதை அம்மா பார்த்துவிட்டு, “உங்கப்பனுக்கு கிறுக்குதான் பிடிச்சிருக்கு. இவரு இப்படி இருந்தா இவ இப்படித்தான் இருப்பா” என்றாள். அத்தோடு லட்சுமியின் படிப்பு முடிந்தது. அப்பா அன்றிலிருந்து ஒரு வருடத்துக்குள் இதய நோய், சர்க்கரை நோய் என்று என்னென்னவோ நோய்கள் வந்து இறந்துபோனார்.

சாகும் முன்பு ஹைகிரவுண்டில் சேர்த்திருந்தது. “முழுக்க குணமாகிட்டாரு. நாளைக்குப் போயிடலாம்” என்று டாக்டர் சொன்ன அன்றிரவு அவனைக் கூப்பிட்டு, “சரியாயிடுச்சின்னு நர்ஸ் சொல்லுதா. இல்லை, நான் பொழைக்க மாட்டேன். எனக்கு இந்த லட்சுமிப் பிள்ளையை நினைச்சாத்தான் கவலைய இருக்கு. அது உண்மையிலேயே நல்ல குணமுள்ள புள்ளை. கொஞ்சம் வெகுளி. அவ்ளோதான். நிறைய கனா காணும். மனுஷங்களை ஈசியா நம்பிடும். அது ஒரு தப்புன்னு அதுக்கு தெரியாது. வேற ஒரு இடத்தில வேற ஒரு ஊர்ல அது நல்லாருந்திருக்கும். இந்த ஊர்ல பிறந்ததுதான் அது தப்பு. நீ எக்காரணம் கொண்டும் அதை வெறுத்திரக் கூடாது” என்றார். சொன்னபடியே மறுநாள் காலையில் இறந்துபோனார்.

ஆனால் இந்தக் கணத்தில் அவனால் லட்சுமியை, அப்பாவை, அம்மாவை வெறுக்காமல் இருக்க முடியவில்லை. அவனுக்கே இப்போது முப்பத்து மூன்று வயதாகிறது. அவனுக்கும் லட்சுமிக்கும் ஏறக்குறைய பத்து வயது வித்தியாசம். வியாபாரத்திலும் விருத்தியில்லை. அப்பா ஆரம்பித்துக் கொடுத்த கண்ணாடிக்கடை அப்படியே அசையாது வளராது நிற்கிறது. தன்னிடம் என்ன குறை என்று அவனுக்குத் தெரியவில்லை. எதுவோ கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்டமான ஒன்று எப்போதும் வழியில் படுத்துக்கொண்டிருப்பது போல இருந்தது.

அம்மாவின் அண்ணன் வந்து போலீசுக்குப் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். “ஊர் சிரிக்க வச்சிராதே. போலீசுக்குப் போனா அவளுக்குக் கல்யாணமே ஆகாது. அவளுக்கு மட்டுமில்ல, உனக்கும்தான். கொஞ்சம் தேடிப் பார்க்கலாம்” என்றார். உண்மையில் வீட்டுக்குப் பெரிய ஆள் என்ற முறையில் போலீஸ் கீலீஸ் என்று அலைவதுதான் அவருக்குப் பிரச்சினையாக இருப்பது போல் பட்டது. “கல்யாண வயசில நமக்கும் ஒரு மக இருக்கு. நீங்க இதில அதில இடைபடாதீங்கோ” என்று அத்தை சொல்லியிருப்பாள்.

மூன்றாம் நாள் மாலை சரோஜம்தான் செய்தி கொண்டுவந்தாள். “நம்ம தங்கச்சி பால்சாமி வீட்ல இருக்கு” என்றாள். நாதன் திகைத்தான். “எந்த பால்சாமி? கந்துவட்டி பால்சாமியா?”

அவள், “ஆமா” என்றாள்.

“இவ எங்கே அவனோட? அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சில்லா?”

“ஒரு புள்ளைகூட இருக்கு.”

அவன் மறுபடியும் நம்ப முடியாதவனாய், “இவ எப்படி அவனோட?” என்றான்.

“இந்தி படிக்கறேன்னு போனாள்லா? அவன் வீடு இந்தி மாஸ்டர் வீட்டுக்கு அடுத்த வீடுதான்”.

நாதனுக்குக் கடும் சினம் எழுந்தது. “இவளுக்கு எதுக்கு இப்போ இந்தியெல்லாம்?” என்று கேட்ட அம்மாவிடம், “சும்மா இரு. வீட்லெயே கிடந்து டிவில சினிமா பார்த்துப் பார்த்து ஆனை மாதிரி ஆயிட்டிருக்கா” என்று அவன்தான் அனுப்பிவைத்தான். “அப்படிப் பண்ணதுக்கு நல்லா என் மூஞ்சில மோண்டுட்டு போய்ட்டா” என்று நினைத்தான். பெண்கள் எல்லோரும் ஏன் இப்படிச் சுயநலமாய் இருக்கிறார்கள் என்று நினைத்தான்.

சரோஜம், “இப்போ என்ன பண்ணப் போறே?” என்றாள்.

அவன், “என்ன பண்றது? எல்லோருமே தேவடியாளா இருக்கீங்க!” என்று வெடித்தான். அவள் முகம் கறுத்தது. “என்ன சொல்லுதே?”என்றாள்.

அவன், “போடி.. பெரிய பத்தினியாட்டம்” என்றான். அவள் சட்டென்று எழுந்து பூக்கூடையை எடுத்துக்கொண்டு இறங்கி விடுவிடுவென்று போய்விட்டாள். அவள் விசுக்விசுக்கென்று இடுப்பு அசையப் போவதைப் பார்த்தபடியே அவன் அமர்ந்திருந்தான்.

5

இதே கேள்வியை இரவு அம்மாவும் கேட்டாள். அவன், “என்ன செய்யணும்?” என்றான். அவள், “என்னலே.. பொட்டை மாதிரி என்ன செய்யணும்னு என்னைக் கேக்கே? போயி பொடதில நாலு போட்டு வீட்டுக்கு இழுத்துட்டு வாலே” என்றாள். “இழுத்து வந்து….?” என்றான் அவன். “அவளாத்தானே போயிருக்கா?”

“அது உனக்குத் தெரியுமா? அந்தப் பய ரொம்ப கிருத்திரமமான பய. தூக்கிட்டுப் போயிருந்தான்னா? அந்தக் குடும்பமே மோசமான குடும்பம். முதல்லே அவளைப் பார்த்துப் பேசு. அதுக்கப்புறமும் அவ அங்கதான் இருப்பேன்னு சொன்னா நாம தலைமுழுகிடலாம். நாதனில்லாத குடும்பம் நடுத்தெருவிலன்னு சொல்றது சரியாப் போச்சே? நாளைக்கு உனக்கே ஒரு கல்யாணம் ஆயி உன் பொண்டாட்டியை யாராவது தூக்கிட்டுப் போனாலும் இப்படித்தான் குத்த வைச்சு பொட்டப் பய மாதிரி அழுதுட்டு இருப்பே போல.”

நாதன் மறுநாள் மாமாவையும் கூப்பிட்டுக்கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனான். அவர் இப்போது, “போலீஸ் மூலமாப் போவோம்” என்று மாற்றிச் சொன்னார். “அந்தப் பயலுவ ரவுடிப் பசங்க. கடன் கொடுத்து வட்டி கட்டலன்னா வீட்டை எழுதி வாங்கிக்கறது, பொண்ணைத் தூக்கிட்ட்டுட்டுப் போயிடறது… இதுதான் அவங்க பிசினெஸே. இதில நாம தனியா போயி என்னத்த புடுங்க முடியும்?” என்று முணுமுணுத்துக்கொண்டே வந்தார்.

அந்த வீடு உச்சிமாகாளி அம்மன் கோவிலுக்கு இடதுபுறம் இருந்த தெருவில் இருந்தது. முதலில் வாடகைக்கு வந்து பிறகு வீட்டு ஓனரிடம் பிரச்சினை பண்ணி மிரட்டி தங்கள் பெயரில் வாங்கிவிட்டதாக மாமா சொன்னார். “இவனுங்க கையில போய் இந்தப் புள்ளை மாட்டிக்கிட்டிருக்கு. நீ என்ன பண்ணிட்டிருந்தே? புடுங்கிட்டிருந்தியா? உனக்குப் பூக்காரியோட சரசம் பண்ணவே நேரம் சரியா இருந்திருக்கும்.”

நாதன் விதிர்த்து விழிக்க, “தெரியாதுன்னு நினைக்காதே. ஊருக்கே தெரியும். பண்ற தப்பை மறைவா பண்ணவும் துப்பில்லை.”

தாழ்வாரத்தை அடுத்து ஒரு மேடை மீதிருந்த நாற்காலி போன்ற அமைப்பில் அமைந்திருந்தது வீடு. கீழே அடிபம்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்த நடுவயதுப் பெண் இவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் தொடர்ந்து தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தாள். நாதன், “பால்சாமி இருக்காப்லியா?” என்றான். “ஆரு?” என்றொரு குரல் மேடையிலிருந்து கேட்டது. அப்போதுதான் அந்தப் பெண்மணியைப் பார்த்தான். மேடை மீதிருந்த பெரிய நாற்காலியில் கைப்பிடியில் இருபுறமும் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள். அறுபது வயது இருக்கலாம். வெற்றிலையை மென்று மென்று உதடுகள் சிவந்த புண் போலிருந்தன.

“பால்சாமி வீடுதானே இது?”

“அது இருக்கட்டும். நீங்க ஆரு?”

“நாங்க.. நான் லட்சுமியோட அண்ணன்.”

“லட்சுமி யாரு?”

நாதன் திகைத்தான்.

“லட்சுமி… லட்சுமி இங்கே இருக்கான்னு சொன்னாங்க.”

“யாரு சொன்னா?”

அந்த அம்மாள் வெற்றிலையை மெல்லுவதை நிறுத்திவிட்டு அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

“சொல்லு தம்பி, யாரு சொன்னா? சும்மா திடீர்னு ஆம்பிளங்க இல்லாதப்ப வந்து உன் வீட்டுப் பொண்ணு இங்கே இருக்குன்னு சொல்றியே? எங்க வீட்டு ஆளுங்க வந்தா என்ன ஆவும் தெரியுமா?” என்றவள் திரும்பி, “ஏய்.. என்ன வேடிக்கை பார்த்துட்டு நிக்கே? பின்னால போயி தண்ணியை மாட்டுக்கு ஊத்து. சும்மா கோழை வடிச்சிட்டு நிப்பா” என்று அந்தப் பெண்ணிடம் சீறினாள். அவள் அவசரமாகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு பின்னால் தொழுவம் போன்றிருந்த முடுக்கை நோக்கிப் போனாள்.

இப்போது அவள் மாமாவின் பக்கம் திரும்பி, “அய்யா பெரியவரே, நீங்க சொல்லுங்க”.

மாமா கையெடுத்துக் கும்பிட்டு, “அம்மா எங்க வீட்டுப் பொண்ணை மூணு நாளாக் காணோம். இங்க இருக்குன்னு ஒரு தகவல் கிடைச்சது, இருந்தா பார்த்து ஒரு வார்த்தை பேசிட்டுப் போயிடறோம். வீட்ல நிம்மதியா யாரும் ஒரு வாய்த் தண்ணி குடிச்சி மூணு நாளாச்சி. தயவு பண்ணுங்க. அவ நல்லா இருக்கான்னு தெரிஞ்சா போறும்.”

“என்னவே பேசுதீரு? உம்ம வீட்டுக் கழுதை ஓடிப்போயிட்டா தெருவில போயித் தேடும்வே. இல்லே எங்கியாவது கிணத்துல குளத்தில எட்டிப் பாரும். என் வீட்ல ஏறிச் சாடுதே? உன் நல்லவேளை. என் வீட்டுக்காரரும் பயலும் இருந்தாம்னா உங்க இரண்டு பேரு காலு கையை முறிச்சிருப்பான்”.

மாமா வெலவெலத்துவிட்டார், “அம்மா மன்னிச்சிடுங்க. தப்பான தகவல். நாங்க போயிடறோம்.”

“வே இரும்வே… உன் மன்னிப்பு மயிரை உடைப்புல போடும். இப்போ நீங்க பண்ணதுக்கு அபராதம் என்ன?”

இருவரும் ஏறக்குறைய வெளியே ஓடிவந்தார்கள். மாமா, “எலே.. யார்லே சொன்னா இந்த தகவல்? நீ சொன்னது சரியானதுதானா? நீயும் உன் தங்கச்சியும் என்னையும் சேர்த்துக் குழில இறக்கிட்டுத்தான் விடுவீங்க போல இருக்கே” என்றார். நாதன் தெருவில் நின்று வேதனையுடன், “மாமா எங்களுக்கு உதவி பண்ணணும்னு உங்களுக்குத் தோணுச்சுன்னா பண்ணுங்க. இல்லேன்னா வேணாம்” என்றான். அவர், “ஓ! உங்களுக்கு ரோஷம் வேற வருது. எனக்கு என் குடும்பத்தைப் பார்க்க வேணூம்டே. எனக்கென்ன தலையெழுத்தா.. உங்ககூடக் கூட வரணும்னு?” என்றபடி விடுவிடுவென்று விலகிப் போனார்,

நாதன் வேதனையுடன் என்ன செய்வதென்று தெரியாமல் உச்சிமாகாளி கோவிலின் முன்பு நின்றான். கோவில் பூட்டிக்கிடந்தது. உள்ளே இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. காய்ந்த பூக்கள் சிதறிக் கிடந்தன. முன்னால் சப்பரம் மட்டும் சாய்த்தி வைக்கப்பட்டிருந்தது. எல்லாத் தெய்வங்களும் தன்னிடமிருந்து பூட்டிக்கொண்டு மறைந்திருப்பது போல் தோன்றியது. உதவி என்று வந்ததும் மறைந்துவிடுகிற, பலி மட்டும் தவறாது கேட்கும், சுயநலத் தெய்வங்கள். ஓர் ஆள் தெருவில் இறங்கி முகத்தில் அறைவது போல் வெயில் அடித்துக்கொண்டிருந்தது. நாதன் உள்ளிருக்கும் நீர்மையெல்லாம் வற்றி சருகு போல் அப்படியே நின்றிருந்தான்.

அப்போது அந்தப் பெண்ணைப் பார்த்தான். குப்பை வாளியை எடுத்துக்கொண்டு அவனைக் கடந்து போனாள். குப்பையைத் தொட்டியில் கொட்டியபடியே அவனை ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்தாள். திரும்பி வரும்போது ஒருகணம் கோவிலின் முன்பு நிழலில் காலாற்றி நிற்பது போல் நின்றாள். பிறகு அவன் கண்களைப் பார்க்காமல், “உங்க பொண்ணு அங்கேதான் இருக்கு. இன்னும் ஒரு வாரம் இருந்ததுன்னா செத்துப் போயிடும். தாங்காது. கூட்டிட்டுப் போயிடுங்க. போலீஸ்கிட்ட போனாக்க உடம்புகூட கிடைக்காம சீனி போட்டு எரிச்சிடுவாங்க. அங்கே இருக்கிறது இவங்க சொந்தக்காரந்தான். கேக்கிறதைக் கொடுத்துட்டு கூட்டிட்டு போயிடுங்க. புரியுதா? காணாமப் பண்ணிடுவாங்க. புரியுதா? பொண்ணு பார்த்து வளர்க்க வேணாமா?” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று போய்விட்டாள்.

6

ஐந்து இலட்சம் கேட்டார்கள். அவர்கள் நியாயம் விநோதமாய் இருந்தது. “எங்க பையன் மனசைக் கெடுத்ததுக்கு” என்றார்கள். “விஷயம் தெரிஞ்சதும் அவன் தூக்கில தொங்கப் போயிட்டான். உங்க பொண்ணு ஏற்கனவே ஒரு பையனோட ஓடிப்போச்சாமே? அவளுக்கு இப்படி அறியாப் பையங்களை மயக்கிச் சாவடிக்கிறதே சோலி போல”.

நாதன், “என்கிட்ட அவ்வளவு பணம் இல்லியே ஐயா.”

“இந்தக் கடை இருக்கே? அதை வச்சி கடன் வாங்கிக்கொடும். பொண்ணு வேணுமா இல்லியா?”

அவர்களே பத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டு கடன் கொடுத்தார்கள். உண்மையில் அந்தப் பணத்தை அவன் கண்ணால்கூடப் பார்க்கவில்லை. “ஒரு வருஷத்தில திருப்பிக் கொடுத்துடணும். இல்லேன்னா இரட்டை வட்டியாகும்” என்று ஒரு வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். அம்மாவிடம் சொன்னபோது, “பொட்டைப் பய.. பொட்டைப் பய.. எல்லாத்தியும் தொலைச்சிட்டுத்தான் வந்து நிப்பான்.. பொட்டைப்பய. ஒன்னுக்கும் கூறு கிடையாது. போ எல்லாத்தியும் தொலைச்சிட்டு நடுத்தெருவில நில்லு” என்று கத்தினாள். மறுநாள் அதிகாலையில் பால்காரன் வரும் முன் வீட்டின் முன்பு லட்சுமி உட்கார்ந்திருந்தாள். பாய்ந்து அடிக்கப் போனவளைக் கோலம் போட வந்த பக்கத்து வீட்டு அம்மா, “உள்ளே கூட்டிட்டுப் போய்ப் பேசுங்க. ஏதாவது பண்ணிக்கப் போவுது” என்றாள். வாரியலை எடுத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தவளைத் தடுத்து அவளை அறைக்குள் கொண்டுபோய்ப் படுக்க வைத்தான். “முதல்ல தூங்கு. நீ எதாவது சாப்பிட்டியா?”

லட்சுமியின் கண்கள் அதற்குள் குழி விழுந்து, முடி பஞ்சாகி, உச்சி மாகாளி அம்மன் கோவிலில் பார்த்த காய்ந்த பூச்சரம் போலாகியிருந்தாள். யார் கண்களையும் பார்க்காமல் தரையில் எதையோ தேடுவது போன்ற எலிப்பார்வை வந்துவிட்டிருந்தது. கழுத்தின் ஓரம் ஒரு காயம் இருந்தது. சேலையைக்கூடத் தாறுமாறாய்க் கட்டியிருந்தாள். நடக்கும்போது தடுக்கி விழப் பார்த்தாள். கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. “முதல்ல இவளை ஒரு லேடி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போணும்லே.. சேலையைப் பார்த்தியா? ஒரே ரத்தம்” என்றாள் அம்மா.

7

நீண்ட நாட்கள் கழித்து கடையைத் திறக்கும்போது ஏதோ பெரிய வியாதிக்காக ஆஸ்பத்திரியில் நிறைய நாள் இருந்துவிட்டு வீட்டுக்கு வருவது போல் இருந்தது. கடையில் சாமிப் படங்களில் போடப்பட்டிருந்த பழைய சரங்களைக் களையும் போதுதான் சரோஜத்தின் நினைவு வந்தது. அவளை ஒரு வாரமாய்ப் பார்க்கவே இல்லை என்பதும். மாமாவுக்குத் தெரிந்திருக்கிறது என்பது வியப்பாய் இருந்தது. அவள் பழக்கம் ஏற்பட்ட பிறகு அவன் அவளைச் சேர்ந்தாற்போல் இத்தனை நாட்கள் காணாமல் இருந்ததே இல்லை. அவள் கணவன் அவளைக் கூட்டிப்போக வருவதாய் அவள் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அதன் பிறகு அவளைக் காணாமலே போய்விடக்கூடும். நாதன் சட்டென்று திறந்த கடையை அதே வேகத்தில் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கினான். வேகமாக நடந்து கிருஷ்ணன் கோவில் அடுத்து உள்ள அவள் தெருவுக்குப் போனான். சாக்கடைகள் எப்போதும் தெருவில் வழிந்துகொண்டிருக்கும் முடுக்கு அது. போகும்போது அவள் திறந்த நடு முற்றத்தில் குத்த வைத்து அமர்ந்துகொண்டு பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்ததும், “என்ன ஆச்சரியமா இருக்கு… பகல்லியே தைரியமா வந்துட்டே?” என்றபடி எழுந்தாள். நாதன் திண்டில் நின்றபடியே, “லட்சுமியைக் கூட்டி வந்துட்டேன்” என்றான். அவள் தூணைப் பிடித்தபடி சிரமத்துடன் மேலே எழ முயன்றாள். “கொஞ்சம் கைகொடு” என்றாள்.

“காப்பி குடிக்கியா?”

அவன், “வேணாம்” என்றான். “அன்னிக்கி உன்னைக் கண்டமானிக்கு பேசிட்டேன்” என்றான்.

அவள், “விடு” என்றாள். “பால் இல்லியே… கடுங்காப்பி போடட்டா?”

“என்னை மன்னிச்சிடு சரோ.”

“விடுங்கறேன்.”

அவன் பாய்ந்து சென்று அவள் இதழ்களைக் கவ்வினான். கையை அவள் சேலைக்குள் செலுத்தினான்.

அவள் மெல்ல விலக்கி, “கொஞ்ச நாளைக்கி முடியாது” என்றாள். அவன் ஏன் என்பது போலப் பார்க்க, “நாளு தள்ளிப் போச்சி. நாப்பது நாளு. அதான் அன்னிக்கு உன்கிட்ட சொல்ல வந்தேன். நடுவில உனக்கு இந்தப் பிரச்சினை. முந்தா நேத்திதான் கற்பகவல்லி கிட்ட போய் கழுவிட்டு வந்தேன்.”

அவன் அதிர்ந்து, “நம்முதா?” என்றான். அவள், “ம்ம்ம்… தெருவில போறவனுடையது. அதான் சொல்லிட்டியே தேவடியான்னு.”

அவன் தளர்ந்து நாற்காலியில் அமர்ந்தான். அவள் அருகில் வந்து, “ஒன்னுமில்லை. இப்போ என்ன? அதை வச்சுக்கவா முடியும்?”

அவன், “ஆமா முடியாது” என்றான். “என்னால எதையுமே பத்திரமா வச்சுக்க முடியாது” என்றான். “ஏன்னா.. நான் ஒரு பொட்டை”.

“ஏய்.. என்ன இது? ரொம்ப டென்ஷனா இருக்கியா? வேணும்னா வாயில பண்ணிவிடவா?” என்று வேஷ்டிக்குள் கைவிட்டு அவன் ஆண்குறியை எழுப்ப முயன்றாள். அது சுருங்கிக் கிடந்தது.

“நான்தான் சொன்னேனே? நானொரு பொட்டை” என்றான் அவன்.

1 comment

Bharathi October 23, 2021 - 7:34 pm

Good One

Comments are closed.