சுழல்காற்றும் சருகுகளும்

0 comment

சம்சாரம் ரொம்ப நச்சரித்ததின் பேரில் அவளோடு செங்கமோட்டுக்கு புறப்பட்டுப் போயிருந்தேன். அங்கே அவளுடைய அக்காள் இருக்கிறாளாம். வீட்டுக்கு விரோதமாய் ‘லவ் மேரேஜ்’ பண்ணிக் கொண்டு வாத்தியார் உத்தியோகம் பார்க்கும் அவரோடு புறப்பட்டுப் போனதிலிருந்து ஒருநாளும் பிறந்தவீட்டை எட்டிப் பார்த்ததே இல்லையாம். அழுத கண்ணீரோடு அவள் புறப்பட்டுப் போய் ஏழு வருஷம். இவளுக்கும் அக்காளைப் போய்ப் பார்க்க வாய்ப்பில்லை. வயசுக்கு வந்த பெண் எப்படி தனியே போவாள்?

இவளுக்கென்று நானும் வந்து வாய்த்துவிடவே, “எப்பிடியிருக்குதோ பாவம்… ஒரு கடுதாசி கூடப் போடல; எனக்காக வாங்களேன். ஒரே ஒரு தாட்டி, போய்ப் பார்த்துட்டு ஒடனே வந்துடலாம்… என்னா செலவாயிடப் போவுது…” என்று தன் நீண்ட நாள் ஏக்கத்தை ஒன்றரை வருஷம் கழித்து வெளிப்படுத்தினாள். மறுக்க முடியாது என்பது கல்யாணம் பண்ணினவர்களுக்குத் தெரியும் என்பது மட்டுமில்லை, எனக்கும் அவளைப் பார்க்க என்னமோ மாதிரி இருக்கவே இந்தக் கோடை விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு வந்தது.

ஊர், சின்ன ஊர். தார்ச்சாலையை விட்டு ரெண்டுமைல் உள்ளே தள்ளியிருந்தது. இருக்கிற குடிசைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். சும்மா மருந்துக்கு ரெண்டு மூன்று கல் வீடு. அக்கா சுகமாய்த் தானிருந்தாள். அக்காளும் தங்கையும் பிரிவை வார்த்தைகளால் வடிக்க முடியாமல் திகைப்பும் வியப்பும்கூட்டி, வெதும்பி கண்ணீரால் வெளிப்படுத்தி, கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது கரைத்தார்கள். என்ன பாசமோ… என்று ஒதுங்கி நின்று தனியனாய் உணர்ந்தேன். மாமூலாய் எனக்கு அடைக்கலம் கொடுக்கும் புத்தகங்களை மறக்காமல் கையோடு கொண்டு வந்திருந்தது மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலளித்தது. கைகால் கழுவிக் கொண்டு சாப்பாடெல்லாம் ஆனபிறகு உள்ளே அதுகளின் வாத்சல்யத்துக்கு இடைஞ்சலாய் இருப்பானேன் என்று திண்ணையில் பாயை விரிக்கச் சொல்லி வெளியே வந்தேன்.

வெளியே மத்தியான நேரத்து வெயில் உக்கிரமாக காய்ந்து கொண்டிருந்தது. வெறிச்சென்றிருந்தது தெரு. வீடுகள் சயனத்தில் ஆழ்ந்திருந்தன. மக்களெல்லாம் விவசாய வேலைகளுக்கும் மேய்ச்சலுக்கும் சென்றிருப்பார்களோ..

“டிங்டிங்.. டிங்டிங்…”

பிள்ளையார் கோயில் மணி ஆட்டுவதைப் போல ஒரு ஓசை. தெருவில் பஞ்சு மிட்டாய்க்காரக் கிழவன், வலது கையில் வெண்கல மணி, இடது தோளில் கயிறு கட்டி மாட்டியிருந்த தகர டின், சிவந்த பஞ்சு மிட்டாய் கண்ணாடி வழியாக உருண்டை, உருண்டையாகத் தெரிந்தது.

சொக்காயைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் பனியனோடு குந்தினேன். சுவரில் முட்டுக் கொடுத்த தலையணையில் உடம்பைச் சாய்த்து புத்தகத்தை விரித்தேன்.

“த முட்டாயி…”

கொஞ்ச தூரத்தில் மிட்டாய்க்காரக் கிழவனைச் சுற்றி நாலைந்து வாண்டுகள். எல்லாம் இந்நேரம் அம்மா அப்பாவிடம் காசுக்குக் கொரம்பாடிக் கேட்டு வாங்கி வந்திருக்கும். காசைக் கொடுத்து மிட்டாயை வாங்கிச் சுவைத்துக் கொண்டே ஓடின.

எனக்கு எதிர்த்த குடிசையில் ஒரு பையன். எட்டுப் பத்து வயதிருக்கும். தாழ்ந்த சிறிய வாயிற்படியில் குத்துக் காலிட்டுக் குந்தி இதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். கைகளைக் கட்டி கால் முட்டிமேல் தாங்கி முகவாயைப் பதித்திருந்தான். கண்கள் மிட்டாய் டின்னையும், சப்பி நாக்கைத் தட்டும் குழந்தைகளையும் ஏக்கத்துடன் நோக்கின. முகம் வெறித்துக் கிடந்தது. தொண்டைக் குழி ஏறி இறங்குவதைக் கண்டேன்.

பாவம்! அவனிடம் காசு இல்லையா.. அல்லது வாங்கிக் கொடுக்க யாரும் இல்லையா..

எனக்குச் சுபாவத்தில் ஒரு கோளாறு உண்டு. சாதாரணமாய்ப் பிச்சைக்காரர்களையோ, ஸ்தலப் படிக்கட்டுப் பண்டாரங்கள் தவசிகளையோ கண்டால் எல்லாம் எனக்கு மனசு இரங்குவதில்லை. இந்த மாதிரி சின்னப் பசங்களை, பெண் குழந்தைகளைப் பார்க்க நேர்ந்தால் தான் ரொம்ப இளகிப் போய்விடுவேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு. பிச்சைக்காரன் சமாச்சாரம் ஊரறிந்த வறுமை. ஒருத்தன் இல்லாவிட்டால் ஒருத்தன். எப்படியோ அவன் வயிறு ரொம்பிவிடும். ஆனால் இந்தக் குழந்தைகள்.. பாவம்! அதுகள் யாரிடம் போய் கையேந்த முடியும்? மனசிலேயே ஆசைப்பட்டு, உள்ளேயே மக்கி மக்கி, மருகி தொண்டைக் குழிக்குள்ளேயே முணறு கூட்டி விழுங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதானோ..! அதைப்போல ஒரு கொடுமை உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்…! இந்த மாதிரி காட்சிகளைக் காண எனக்குக் கண்கள் கலங்கிவிடும்.

புறப்பட இருந்த மிட்டாய்க்காரனைக் கைதட்டி அழைத்தேன். கொஞ்சம் இருப்பா என்று சொல்லி உள்ளே போய் சட்டை பாக்கெட்டிலிருந்து சில்லறை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

“தம்பி இங்க வாப்பா…” எதிரிலிருந்த பையனை அழைத்தேன். மிட்டாய்க்காரக் கிழவனையும் கூப்பிட்டு, காசைத் தந்து, “அந்தப் பையன்கிட்ட ஒரு மிட்டாய் குடுப்பா!”

காசை வாங்கிக் கொண்ட கிழவன் டின்னுக்குள் கையை விட்டு எடுத்துக் கொடுத்துவிட்டு, மணியை ஆட்டியபடியே போய்விட்டான்.

பையன் கையில் ஏந்திய மிட்டாயுடன் பொடி ஒட்டிக் கொள்ளும் தெருவில் பேசாமலேயே நின்று கொண்டிருந்தான். எதிர்பாராமல் கையில் வந்து விழுந்த ஏதோ ஒரு விநோத வஸ்துவைப் போல அவன் மிட்டாயைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏம்ப்பா… தின்னு….”

அவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான். அவன் கண்களில் நன்றி பளிச்சிட்டதா, அல்லது பிரமை வெளிப்பட்டதா என்பதை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எதுவும் தெரிந்துகொள்ள முடியாதபடி கண்கள் கலக்கமுற்றிருந்தன.

“அங்க வெய்யில்ல நிக்காத, இப்பிடி வா இங்க…”

அவன் மெதுவாய் நடந்து வந்து திண்ணையோரமாய் நின்றான். கண்களில் ஒருவித மிரட்சியிருந்தது. கிராமத்திலேயே இருக்கிற பையன். புது ஆளைப் பார்த்ததால் ஏற்பட்ட மிரட்சியோ என்று நினைத்துக் கொண்டேன். வெறும் உடம்பில் கிழிந்த காக்கி நிசாரும், அது கீழே நழுவி விடாமலிருக்க மேலே எடுத்துவிட்டு ஏற்றிய சிகப்பு அண்ணாக்கயிறுமாக காட்சி தந்தான். தொப்புளுக்கு மேலே வயிறு ஒட்டிப் போயிருந்தது. சருமம் பூராவும் சொரா பூத்தாற்போன்ற ஒரு வறட்சி. ஒடுங்கிய நெஞ்சுக்கூடு, விலா எலும்புகள் தெரிய மொட்டைத் தலையில் மயிர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அவன் தெளிவில்லாமல் நின்றான்.

“ஏன் கையிலேயே வச்சிக்னு இருக்கிற… சாப்பிடேன்.”

தலையைக் குனிந்து மிட்டாயைப் பார்த்தவன், என்னை ஒருமுறை நிமிர்ந்து நோக்கினான். பிறகு மெல்ல மிட்டாயைக் கொஞ்சம் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டான். சப்பிச் சுவைக்காமல் கம்மென்று வாயிலேயே வைத்திருந்தான்.

“உம்ப் பேரு என்னா?”

“ஏழுமலை…”

அவன் வாயைத் திறக்க சிவந்த மிட்டாய் வாயில் கரைந்து வண்ணம் காட்டியது.

“ஊட்டுல அம்மா அப்பா எல்லாம் இல்ல?…”

அவன் தலையை ஆட்டினான். வாயில் கரைந்ததை உள்ளுக்கு விழுங்கிய பிறகு சங்கடத்தோடு “இல்ல” என்றான்.

“சரி சரி சாப்டு. அப்புறம் பேசிக்கலாம்..”

அம்மாவும் அப்பாவும் இல்லை என்பது எனக்கு ஒரு அனுமானத்தையும் ஏற்படுத்தவில்லை தான். என்றாலும் ஒரு அஞ்சு பைசாவுக்கு மிட்டாயை வாங்கிக் கொடுத்து, தின்னுகிற ஆசையையும் தூண்டிவிட்டு, திருப்தியாய் அவனைத் தின்னவும் விடாமல், சும்மா நிருபர் மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மனசு இடம் தரவில்லை. காத்திருந்தேன்.

தின்னு முடியும் வரைக்கும் புத்தகம் படிக்கிற பாவனையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் தயக்கத்தோடும் கூச்சத்தோடும் கொஞ்ச கொஞ்சமாய் கிள்ளிச் சாப்பிட்டான். சத்தம் போட்டுச் சப்ப தடைப்பட்டவன் போல. ஒரு வழியாய் தீன்று தீர்த்தான். பிறகு கையில் ஒட்டிக் கொண்டிருந்த மிட்டாய்ப் பஞ்சுகளையெல்லாம் நுனிநாக்கில் ஒட்டி எடுத்துச் சுத்தமாய் சாப்பிட்டு விரல்களை நிஜாரில் துடைத்துக் கொண்டான்.

“உட்கார்”

அவன் தூணை ஒட்டி நுனித் திண்ணையில் உட்கார்ந்தான். கையில் இன்னும் பிசுபிசுப்பு இருந்ததோ என்னவோ… தூணில் துடைத்துக் கொண்டான்.

“எல்லாம் கொல்லிக் கில்லிக்குப் போயிருக்காங்களா?…”

அவன் அதற்கும் இல்லையென்றே தலையாட்டினான்.

“ஊருக்குப் போயிருக்காங்களா…?”

“இல்ல. எனக்கு யாருன்னே தெரியாது…” அப்படிச் சொல்வதற்கு அவன் ரொம்ப பயந்த மாதிரி தெரிந்தது. எங்கே நான் படாலென்று எழுந்து இழுத்துப் போட்டு அறைந்து விடுவேனோ என்பதைப் போல உட்கார்ந்திருந்தான்.

எனக்கு என்னமோ மாதிரியிருந்தது. குரலைத் தாழ்த்தி என்னால் முடிந்த வரைக்கும் வாஞ்சையை வரவழைத்துக் கொண்டேன்.

“பின்ன இந்த ஊடு?”

“எங்க பாட்டி ஊடு”

“பாட்டி எங்க…?”

“இல்ல. அது கூடம் செத்துப் பூடுத்தாம். எல்லாம் சொல்றாங்க. ஆனா நான் நம்பல. என்னைக்கினா ஒரு நாளைக்கி வரும்”. அவன் கண்கள் எங்கோ தொலைதூரத்தில் மானசீகக் காட்சியில் லயித்திருந்தன. என்னை நிமிர்ந்து நோக்கினான். தம் நம்பிக்கைக்கு அத்தாட்சி தேடுகிற பாவனையில் என் முகத்தை ஆராய்ந்தானோ என்னவோ, தொங்க விட்டிருந்த கால்களுக்கிடையில் விரல்களைப் பிசைந்து கொண்டான்.

நான் கலக்கமடைந்தேன். “செத்ததுகூடம் உனக்குத் தெரியாதா..?”

“இல்லை” என்பது போல தலையாட்டினான்.

“அப்ப யாரு இருக்கிறது ஊட்டுல?”

“யாருமில்ல. நா ஒண்டிதான்”

“சாப்பாடெல்லாம்…”

அதற்கு அவன் மௌனமாயிருந்தான். சீக்கிரம் பதில் எதுவும் சொல்லவில்லை. தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

“சொல்லுப்பா… எங்க சாப்புடற?”

“எங்க வோணும்னாலும்… ஆரு ஊட்டன்னா எதுனா வேல செஞ்சா கொஞ்சம் சோறு குடுப்பாங்க. இல்லண்ணா… இல்ல… பாட்டியிருந்த வரிக்கும் அது சோறு போட்டுது…”

“ஒங்க அப்பா அம்மாவே ஒனக்குத் தெரியாதா…!”

“ம்…ஹும்”

“பின்ன எப்படி ஒனக்குப் பாட்டி?”

“சின்னக் கொளந்தையிலிருந்து அவங்கதான் எடுத்து வளத்தாங்களாம். சந்தையில் கெடந்து ஆப்புட்டனாம்…”

எனக்கு விசித்திரமாக இருந்தது. அவன் அழத் தொடங்குகிற கோலத்தில் இருந்தான். அங்கேயே குந்த வைத்து அவனோடு பேசிக் கொண்டிருந்தால் வீட்டிலிருக்கிற புடவைகள் சும்மாயிருக்காது. “சும்மாயில்லாம எல்லாரியும் இழுத்து வச்சி ராமாயணம் கேட்டுக்னு..” என்று புலம்பும். அவன் தோளைத் தொட்டு சமாதானம் செய்கிற தொனியில், “பரவால்ல; அழாத” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வந்தேன். “வா.. போவலாம்..” என்று அவனை அழைத்துக் கொண்டு வெளியே இறங்கி நடந்தேன்.

தலைக்கு மேலே வெயில் கொளுத்தியது. தெருமண் புழுதியாகக் கொப்பளித்தது. காற்று, தூசு தும்புகளை வாரிக்கொண்டு வந்து வீசியது. அவனைப் பக்கவாட்டில் விட்டு மெல்ல நடந்தேன். எங்காவது ஏரிக்கரையோரம் வேப்ப மர நிழலிலோ, குளத்தங்கரை நிழலிலோ அரசமரத்து நிழலிலோ குந்தினால் தேவலாம். “எங்கியாவது நெழலா இருக்குமா?” என்றேன்.

“அங்க ஒரு ஆலமரம் இல்ல? பெருசா, கீழ நீட்டா பாறாங்கல்லு கூடம் இருக்கும்” என்றான் அவன். கொஞ்சம் கூச்சம் தெளிந்த மாதிரியிருந்தது குரல்.

“காலையில சாப்டியா…?”

“ம்..”

“எங்க?”

“கூத்து ஆடறாரு ஒருத்தரு. அவுங்க ஊட்ட சோளக் கூழு கரைச்சுக் குடுத்தாங்க.. ஒரு கெளாசு”

நாங்கள் புழுதியில் கால் கிளற தெருவில் நடந்து ஊரைக் கடந்து எல்லையை அடைந்தோம். கணுக்கால் முட்டி வரைக்கும் மேலே செம்மண் அப்பியிருந்தது. அவன் எதிலும் பற்றற்று, பழக்கத்துக்கு ஆட்பட்டவனைப் போல மௌனமாய் நின்றான். கொஞ்சம் தள்ளி ஆலமரம் நின்றது. பின்னால் அறுவடையாகிக் காய்ந்த கழனிகள், இடையில் கொஞ்சம் பொட்டல் வெளி. நடுநடுவே திட்டாக கொஞ்சம் புரவடைகளில் பயிர் செய்திருந்ததைத் தவிர, மற்றபடி எங்கும் வெறுமையாகவே கிடந்தது. ஆலமரத்து நிழல் லேசாய் சிலுசிலுப்பூட்டியது. பையன் சொன்ன மாதிரியே பாறாங்கல் கிடந்தது. காலரைத் தூக்கிவிட்டு நெஞ்சை ஊதிக்கொண்டேன்.

“எங்கியாவது தண்ணி இருக்குமா? கால கழுவிக்னு வந்துடலாம்”

“அங்க ஒரு கொளம் இருக்குது. ஆனா தண்ணி கூடம் ரொம்ப வத்திப்போய் கொஞ்சோண்டு தான் இருக்கும்.”

இடது பக்கம் தெரிந்த பார் மேட்டுக்கு அப்பால் சின்னக்குளம் தெரிந்தது. சின்னக் குட்டை மாதிரி. சரிவில் பார்த்து இறங்கி பக்குவமாய்க் கால் கழுவிக் கொண்டேன். அவனையும் கழுவிக் கொள்ளச் செய்தேன்.

“கையெல்லாம் நல்லா தேச்சி கழுவு. இனிமே எது சாப்புட்டாலும் கையெக் கழுவிக்கணும். நக்கக் கூடாது. டிரௌசர் பின்னால் எல்லாம் தொடைக்கக் கூடாது. தெரியுதா!”

அதை ஏற்றுக்கொண்ட மாதிரி அவன் தலையை ஆட்டி என்னை ஒருவித சங்கோஜத்தோடு நோக்கினான். நான் முகத்தைத் துடைத்துக் கொண்டேன். வேட்டி முனையைத் துடைத்துக் கொள்ளக் கொடுத்தேன்.

“வேண்டாம்” என்றான்.

நாங்கள் இருவரும் பாறைக்கு நடந்து வந்து நிழலில் அமர்ந்தோம். அவன் தேவையான அளவுக்கு ஒதுங்கி ஒரு புறமாகக் குந்தினான். அவனது புருவங்கள் நனைந்து பளபளத்தன. கண்கள் தெளிவோடு இருந்தன. எனக்குக் கொஞ்சம் திருப்தியாக இருந்தது. மெல்ல பேச்சைத் தொடங்கினேன்.

“நீ சந்தையிலா கெடந்து ஆப்டே?”

“ஆமா!” என்றான் அவன்.

“எந்த சந்தையில?”

“கூட்டேரிப்பட்டு சந்தையிலியாம்..” என்று இழுத்து நிறுத்தினான் அவன். எப்படி ஏது என்று நானாகக் கேட்கும் முன்பாக தொடர்ந்து விளக்க ஆரம்பித்தான்.

“நான் குந்திக்கனு இல்ல? அந்த ஊட்டுல தான் எங்க பாட்டி இருந்துதாம். தலலெல்லாம் வெள்ளையா தலக்காணி பஞ்சு மாதிரி. மூஞ்செல்லாம் சுருக்கம் சுருக்கமா தோலு சுருங்கி ரொம்ப மெல்லிசா கையி காலெல்லாம் குச்சாட்டம். அது எம்மா நாளா இங்க இருக்குதோ.. அது வாரா வாரம் எலதச்சி எடுத்தும் போயி சந்தையில வித்துட்டு, காசு வாங்கி வந்து சோறு ஆக்கி துன்னுக்குனு இருந்துதாம். ஒரு நாளு சந்தையில் எலக்கட்டல்லாம் வித்துக்கினு இருக்கும்போது அங்க ஒரு புளிய மரத்துக்கும் பக்கத்துல நான் அழுதுக்னு நின்னுக்னு இருந்தனாம். அது பாத்துட்டு என்ன இட்டுப்போயி கண்ணத் தொடச்சி மடிமேல குந்த வச்சிக்னு இருந்துதாம். பொழுது போயி, பூரா எலக்கட்டும் வித்துட்டப்புறமும் ஆரும் என்னத் தேடிக்னு வராத பூடவே, “புள்ள ஆருது புள்ள ஆருதுன்னு பாட்டி ஆராரியோ கேட்டுப் பாத்துட்டு கடசீல கூடவே இட்டுக்னு வந்துடுத்தாம். அதுலேருந்து நான் எங்க பாட்டி கூடவே தான் இருக்கறனாம். எங்க பாட்டி சொல்லிச்சி..”

அவன் சாதாரணமாகச் சொன்னான். அது எனக்கு எப்படியோ இருந்தது. அது தனக்குச் சொந்தப் பாட்டியா அந்நிய ஜீவனா என்பதைப் பற்றி கவலையே தோன்றாதவனைப் போலப் பேசினான். ஆனால் அவனது குரலிலே இழையோடிய இரக்கம் பாட்டிமேல் அவனுக்கிருந்த பிணைப்பை உறுதிப்படுத்தியது. நான் கலக்கத்தோடு நோக்கினேன்.

“அதுலருந்து இங்கியே தான் இருக்கிறியா..?”

“ஆமா! நானும் பாட்டியும் ஒண்ணாவே தான் இருந்தோம். காலையில எழுந்ததும் பாட்டி வாசல்ல சாணி தெளிச்சி, சட்டி பான எல்லாம் கழுவி கவுத்து வச்சிட்டு பல்லு வௌக்க என்ன கூப்புடும். நான் அதுக்குள்ளா சோளத்தட்டெல்லாம் நறுக்கி மெலீஸ், மெலீசா ஈர்க்குச்சில்லாம் கிழிச்சி வைப்பேன். அப்புறம் ரெண்டு பேரும் ஒண்ணா பழஞ்சோறும் நீராகாரமும் சாப்பிட்டு எல தக்ய ஒக்காருவோம். பாட்டி கிடுகிடுன்னு அழகா தக்யும். எனக்கு செரியா தக்யத் தெரியாது. கொஞ்ச நேரம் கையப் புடிச்சிக் காட்டிக் குடுக்கும். நான் தச்சித் தச்சிப் பாப்பேன், ஈர்க்கு குத்திட்டா ஒடிக்க வராது; கொஞ்ச நேரம் பார்த்துட்டு, ‘எனக்குத் தெரில பாட்டி’னிட்டு எழுந்து வெளையாடப் பூடுவேன். தெருவுல பசங்கல்லாம் வெளையாடிக்னு கெடக்கும். நானும் வெளையாடுவேன். மத்தியானத்துக்கு வந்து சாப்ட்டு, எலயெல்லாம் எண்ணி அடுக்கிட்டு அப்புறமும் வெளையாட பூடுவேன். நான் வெளையாட போனா பாட்டி ஒண்ணுமே சொல்லாது…”

அவன் கண்கள் மங்கிச் செருகின. ஆலமரக் கிளை சலசலத்தது. குட்டையில் எவனோ எருமை மாட்டைக் குளிப்பாட்டி ஓட்டிக் கொண்டு வந்தான். சேறும் சகதியும் சொட்ட எருமை மாடு நடந்தது. சேற்றுக் குளம்புகள் தெருப் புழுதியில் பதிந்தன. அவன் மூக்கைப் புறங்கையால் தேய்த்துக் கொண்டு, பசங்களோடு விளையாடிய கனவுகளிலிருந்து மீண்டான். தன்னைத் தேற்றிக் கொள்கிற பாவனையில் குரலை மாற்றிக் கொண்டு அவன் தொடர்ந்தான்.

“எலயெல்லாம் நாங்க இங்கதான் வந்து பொறுக்குவோம். ஊட்டுல இருந்து ஒரு கிழிஞ்சி போன கோணியும், ஒரு பிஞ்சிபோன புட்டுக்கூடையும் எடுத்துக்னு வருவோம். கீழ கிடக்கிற பழுப்பு எலயெல்லாம் பொறுக்கிப் போட்டுக்குவோம். பழுப்பு எல அப்பெல்லாம். கீழ ஒண்ணு உட மாட்டோம். எல்லாத்தியும் எடுத்து கோணிலியும் புட்டுக் கூடையிலியும் நெறையா துருத்துக்குவோம். புட்டுக்கூட நெறையா பொறுக்கி, பாட்டி என் தலையில் தூக்கி உட்டுட்டு அது கோணியெத் தூக்கிக்கும். மொனைய புடிச்சிக்னு, வண்ணான் துணி மூட்டைய தூக்கினு போவமாட்டான் தொவிக்க. அந்த மாதிரி தூக்கிக்னு போவும், அத பாட்டியால சுலபமா தூக்கிம் போவ முடியாது. செரியா நடக்கக்கூட முடியாது. தள்ளாடிக்னே போவும். ஊட்ட போய் எறக்கி வச்சிட்டதும் அப்பாடான்னு கீழ குந்தி செவுத்துல சாந்துக்கினு கால நீட்டிப்போட்டு மூச்சி வாங்கும்.

“அப்போ பாட்டிய பாக்க எனக்குப் பாவமா இருக்கும்! நாம்ப ஏண்டா பெரிய பையனா இல்லாத பூட்டம்னு நெனைச்சிக்குவேன். பெரிய பையனா இருந்தா பூரா எலையையும நம்பளே தூக்கியாந்து போட்டுடலாமே. பாட்டி மட்டும் அதுபாட்டுனு ஊட்டுலியே குந்தி தச்சிக்னு கெடக்கலாமேன்னு நெனைப்பேன். பழுப்பு எல உழாத நாளுல ரொம்ப கஷ்டம். கீழ கெடந்து எல பொறுக்க முடியாது. மரத்துல இருந்து தான் பறிக்கணம். ஆக்கரிவா எடுத்தாந்து பறிப்போம். பெரிய ஆக்கரிவா. என்னால அத தூக்கக் கூடம் முடியாது. அது கூடம் பாட்டிதான் பறிக்கும். அம்மாம் நீட்டு ஆக்கரிவா அது. நெலைக்கப் புடிச்சிக்னு அண்ணாந்து மரத்தப் பாத்து. எல பறிக்கும்போது முடியாம ஆடும். எங்க உழுந்துடுமோன்னு பயம்மா இருக்கும். நான் எலயக்கூடம் பொறுக்கி இணுக்காம பாட்டியையே பார்த்துக்னு இருப்பேன். பாட்டி ஆக்கரிவாள தரையல நிறுத்தி மேல சாத்திக்னு கஷ்டத்தோட மூச்சு வாங்கும். யாருன்னா வந்து பாட்டிக்கு எல பறிச்சி குடுக்க மாட்டங்களான்னு நெனைப்பேன். இந்த எல ஏன் மின்ன மாரி பழுத்து உழாம மரத்துலியே இருக்குதுன்னு நெனைப்பேன்…”

“ஏன் பாட்டிக்கு வேற ஆரும் தொணையே கெடையாதா..!”

“இல்ல. ரெண்டு புள்ளையும் ஒரு பொண்ணும் இருந்தாங்களாம். நல்லா ஒசரமா பெரிய பெரிய புள்ளைங்களாம். நான் பாக்கல. பாட்டி தான் சொல்லிச்சி. பெரிய புள்ள பட்டாளத்துக்குப் போயிட்டாராம். அவரு மட்டும்தான் மாசாமாசம் பாஞ்சிரூவா அனுப்பிக்னுகிறாராம் பாட்டிக்கி. சின்னப் புள்ள கொஞ்ச நாளு பாட்டி கூடவே இருந்தாராம். கழினில ஏர் ஓட்ட, கட்டு அடிக்க, அண்ட வெட்ட தண்ணி எறைக்க இப்பிடி வேலைக்கிப் போய்க்னு இருந்தாராம். நல்லா வேல செய்வாராம். ஆனா சம்பாதிக்கிற காசி எதுவும் பாட்டிகிட்ட குடுக்காம சாராயம் குடிப்பாராம். சீட்டு ஆடுவாராம். அப்பப்ப சினிமாவுக்கு போயிடுவாராம். எப்பனா ஒரு தாட்டி டவுன் ஓட்டல்லேருந்து பாட்டிக்கு நாஸ்டா, முட்டாய்ப் பலகாரம் எதுனா தின்றதுக்கு வாங்கியாந்து குடுப்பாராம். சில சமயத்துல பாட்டி கூட சண்ட போட்டுக்னு திட்டி பாட்டிய அடிச்சி கூடம் பூடுவாராம். அவரும் ஆரோ ஒரு பொண்ணு மேல ஆசப்பட்டு அந்தப் பொண்ண இழுத்துக்னு ஊர உட்டே ஓடிட்டாராம். எங்க போனாரு என்ன ஆனாருன்னு பாட்டிக்குக் கூடம் தெரியாது.

“அவர நெனச்சிதான் பாட்டி எப்பவாவது அழுவும். அவரு நாஸ்தா வாங்கியாந்து குடுத்ததெல்லாம் பாட்டி சொல்லி அழும். எங்கிட்ட கூட அவரப் பத்திதான் பெருமையா சொல்லும். அவர் போயி கொஞ்ச நாள் கழிச்சுதான் பொண்ண… அது என்னுமோ ஒரு ஊரு சொன்னாங்க.. அந்த ஊருல கட்டிக் குடுத்துதாம். அதுவும் கட்டிம் போனதுலேருந்து ஒரு நாள்கூடம் இங்க வந்து எட்டிப் பாக்கலியாம். அதுலருந்து பாட்டி தனியாதான் இருந்துதாம். கள வெட்ட, நடவு நட எதுனா வேலைக்குப் போயி சம்பாரித்து வயித்த கழுவுச்சாம். அப்புறம் வயசானதிலேருந்து பாட்டிய ஆருமே வேலைக்குக் கூப்பிடலியாம். பாட்டியா வரேன்னா கூட, ‘வேணாம் போ.. என்னாத்துக்குத் தெண்டத்துக்கு’ன்னு சொல்லிடுவாங்களாம். பாட்டிக்கு ஒண்ணுமே வழியில்ல. அப்புறம்தான் எல தக்ய ஆரம்பிச்சுதாம். எத்தினியோ வருஷமா தக்யுதாம். எங்கிட்ட சொல்லிச்சு. நீ கூடம் எல தக்ய கத்து வச்சுக்கோ.. பின்னால ஒதுவும்னு…”

அவன் கண்கள் கலங்கின. இலேசாகப் பூத்த வியர்வையை வெப்பக் காற்று வரள வைத்தது. முகம் இறுகிப் போய் கனத்திருந்தது. அவனை நேருக்கு நேராக நோக்கும் சங்கடத்திலிருந்து அவகாசமளிப்பது போல் மெல்ல தலையைத் திருப்பினேன். தூரத்திலிருந்த கேழ்வரகுக் கழனிகளில் கதிர்கள் வெயிலில் வாடின. காற்று ஆலமரத்தைச் சுழன்று வந்தது. அந்தக் கிழவியை என்னால் காண முடியவில்லை. பையன் சொன்னதிலிருந்து என்னால் உய்த்துணர முடிந்தது. நெஞ்சைக் கீறும் இந்த மாதிரி எத்தனையோ சிராய்ப்புகளெல்லாம் மூலை முடுக்குகளிலே எங்கெங்கோ கண்ணுக்குத் தெரியாமல் இருண்டு கிடக்கின்றன. நானே இந்தப் பையனைப் பார்க்காமலிருந்தால்.. எனக்கே கூட இது எங்கிருந்து தெரியப் போகிறது… யோசனையில் என்னையறியாமல் நானே கொஞ்சம் மௌனமாயிருந்தேன்.

அவன் மூக்கை உறிஞ்சிக் கொண்டான். கீழே கிடந்த சுள்ளிகளை எடுத்து கருங்கல் பாறையில் உருத்தெரியாத கோடுகளை வரைந்தான். பிறகு சுள்ளியை தூர வீசியெறிந்துவிட்டு நீண்ட பெருமூச்சு விட்டான்.

“பாட்டி யார் கிட்டிமே எதுவும் பேசாது. அண்டையில பக்கத்துல இருக்கறவங்ககிட்ட கூட எதுவும் பேசறது இல்ல. அவங்களும் எதுவும் பேசமாட்டாங்க. பாட்டிக்கி அதுக்கு மின்ன ஊடு இருந்துதாம். அந்தாண்ட பள்ளத் தெருவுல. அந்த ஊட்ட வித்துத்தான் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுச்சாம். அதுக்கப்புறம் பாட்டிகிட்ட ஒண்ணுமே இல்ல. பிற்பாடுதான் இங்க வந்து பொறம்போக்கு எடத்துலே மணிகார் அய்யாவ கேட்டு அந்த ஊட்ட கட்டிக்கிச்சாம். அதுவே மண்ணு பெசஞ்சி, செத்த வாரியாந்து போட்டு, கூட ஒரு ஆள் வச்சி கஞ்சி காசி ஊத்தி கட்டுச்சாம்.

“சந்த வாரத்துலே ஒரு நாளு. ஞாயித்துக் கெழம.. ஞாயித்துக் கெழமதான் வரும். வாரம் பூராவும் பாட்டி ஊட்டுலியே தான் எல தச்சிக்னு இருக்கும். நான் ஈர்க்குக் கிழிச்சி குடுத்துக்னே இருப்பேன். காலையில நீராகாரம் குடிச்சிட்டு தக்ய ஒக்காந்துதுன்னா… அதும் பாட்டுக்னு தச்சிக்னே இருக்கும். கால் நோவும் போலக்குது அப்படியே குந்திக்னுகிறது.. அப்பப்ப மட்டி போட்டு, சப்ளாங்கால் போட்டு, அப்புறம் குந்தாங்கால் போட்டு மாத்தி மாத்தி குந்தி பொறுமையா தச்சிக்னே இருக்கும். நான் எங்கனா வெளையாடிப்புட்டு வந்தன்னா ‘கிண்ணத்துல பழையது கெடக்குது பார் கண்ணு. எடுத்து வச்சி சாப்டு’ன்னும். நீ பாட்டின்னா… நான் அப்பறமா சாப்புட்டுக்கறேன்னு சொல்லிட்டு மத்தியானத்துல சாப்டாமலேயே கூடத் தக்யும்.

“எலயெல்லாம் தச்சி ஆனப்புறம் நான் எல்லாத்தியும் எடுத்து அழகா அடுக்கி வைப்பேன். ஒண்ணு ஒண்ணா எண்ணுவேன். பாட்டிதான் கத்துக் குடுத்திச்சி. நூறு வரிக்கும் எண்ண. நூறு ஆனதும் காசற நாறால எடுத்து நல்லா இறுக்கி ஒரு கட்டு போடணும். கட்டு போட்டதும் எடுத்துப் படிய வக்யணம். மூலையில ஒரு ஏந்தர கல்லு இருக்குது. அததான் பாரமா வக்யறது. பாட்டியால அத ஒண்டியா தூக்க முடியாது. நானும் கூட புடிப்பேன். ரெண்டு பேருமா சேந்து புடிச்சித் தூக்கி அத எலக்கட்டு மேல வப்போம். இந்த மாரி சேர்த்துச் சேர்த்து வச்சி மூணு கட்டோ நாலு கட்டோ சேர்ரதெல்லாம் எடுத்துக்னு, ஞாயித்துக் கெழம காத்தால பாட்டி கௌம்பிடும். எல்லாத்தியும் தூக்கி தலையில வச்சிக்னு சந்தைக்குப் போவும். சந்த மூணு மைலாம் கால்நடையா தான் நடந்து போவணம். ‘ஊட்டுலியே இரு கண்ணு, எங்கியும் வெளையாட பூடாத’ன்னு சொல்லிட்டு போவும். நாலு கட்டியும் தூக்கி வச்சிக்னு கழுத்து தடதடன்னு ஆட பாட்டி போறதப் பாத்து, பாவம் அது எப்பிட தான் நடந்து போவுமோன்னு வாசப்படியாண்டியே நின்னு பாத்துக்னு இருப்பேன்.

“அண்ணைக்கி மட்டும் நான் யார் கூடவும் வெளையாட போவே மாட்டேன். பாட்டியவே நெனச்சிக்னு குந்திக்னிருப்பேன். என்னமோ மாரி இருக்கும். பாட்டி எப்ப வரும்னு இருக்கும். பாட்டி சந்தையில இருந்து வர்றதுக்குள்ள நான் புட்டுக்கூட எடுத்துக்னு, படல இழுத்து சாத்திக்னு ஆலமரத்துக்குப் போவேன். கொஞ்சக் கொஞ்சமா எலயெல்லாம் பொறுக்கி ரெண்டு மூணு புட்டூர குவிச்சாந்து கொட்டுவேன். எலதான் சரியா தக்ய முடியல. இதியாவுது செய்வமேன்னு நெனைச்சிக்னு செய்வேன். ஆருன்னா கூப்டா கூடம் வெளையாட போவ மாட்டேன். பாட்டி வந்தா தான். ‘எங்க பாட்டி இல்ல நான் வரமாட்டேன்’னு சொல்லிடுவேன். பாவம் பாட்டி! நான் பெரிய ஆளா இருந்தா பாட்டி கஷ்டப்படவே வேண்டிதில்லை”

அவன் இயலாமை முகத்திலே சோகமயமாக வெளிப்பட்டது. துடிப்பும் ஜீவனும் நிறைந்த இதயத்தின் வேகம் வெளிப்பட இயலாதவாறு துவண்டு கிடந்தது. அவன் ஆழ்ந்த துக்கத்தில் உறைந்தவனைப் போல வருத்தத்தோடு சொன்னான்.

“ஈர்க்குக் கிழிக்கறதையும் ஏந்தரக் கல்ல புடிக்கறதும் எப்பியாவது எலப் பொறுக்கறதையும் உட்டா எனக்கு வேற எந்த வேலையுமே இல்ல. என்னாட்டம் பசங்களெல்லாம் பக்கத்தூர்ல இருந்த பள்ளிக்கூடத்துல பாடம் படிச்சிக்னுருந்தது. நான் மட்டும் போவல. பாட்டிய உட்டுட்டு அம்மாந்தூரம் போறதுக்கு எனக்குப் புடிக்கல. பாட்டியும் அனுப்பல. எப்பப் பாத்தாலும் பசங்களோட வெளையாடிங் கெடக்க வேண்டிது தான். திடுக்னு பாட்டி ஞாபகம் எடுத்துக்னா எனக்கு வெளையாடவே புடிக்காது. பேசாம ஊட்டுக்கு ஓடியாந்துருவேன்.

“பாட்டி பக்கத்துலியே முட்டி போட்டு குந்திக்னு அது எல தக்யறதே அச கொட்டாம பாத்துக்னே இருப்பேன். பாட்டி, ‘ஏங் கண்ணு’ன்னும். ‘நான் எப்ப பாட்டி பெரிய ஆம்பளையா ஆவே’ன்னு கேப்பேன். பாட்டி ஒண்ணுஞ் சொல்லாம சிரிச்சிக்கும். எல தக்யறத உட்டுட்டு என்ன இழுத்து மடில குந்த வச்சி தலையத் தடவிக் குடுத்து, ‘என் ராஜா! எங்கண்ணு’ன்னு சொல்லி நெட்டி முறிக்கும். நான் பேசாம எலையில குத்தன ஈர்க்கியே பாத்துக்னு இருப்பேன். பெரிய ஆளா ஆனா எதுனா வேல செஞ்சி சம்பாரிச்சாந்து பாட்டிக்கிட்ட குடுக்கலாம் இல்லியா?..”

அவன் கேள்விக்குறியோடு நிறுத்தினான். நான் மௌனமாக இருந்தேன். அந்தப் பிஞ்சு உள்ளம் என்ன மாதிரியான அபிலாஷைகளை தன்னுள்ளே வளர்த்து வதையை வைத்துக் கொண்டிருக்கிறதோ.. எனக்குள் எதுவும் சிக்காமல் ஸ்மரணையின்றி அவனை நோக்கினேன்.

“பொழுதூக ஆனதும் சந்தையிலயிருந்து பாட்டி திரும்பி வந்துடும். ஒண்ணு ரெண்டு எல கட்டு விக்யாத போனா எப்பணா மீதி எடுத்துக்னு வரும். எனக்குத் துன்றத்துக்கு உண்ட, மசால் வட, பொகோடா இந்த மாதிரி எதுனா வாங்கி வரும். எப்பனா சோளப் பொறி, மல்லாட்டப் பயிறு வறுத்துக் குடுக்கும். தெருவுல முட்டாய் வித்தும் போனாலும் பாம்பு முட்டாய், மசுரு முட்டாய் எதுனா அரியணா, ஓரணாவுக்கு வாங்கிக் கொடுக்கும். ஆனா அது எதுவுமே ஒரு நாளு கூடம் வாங்கித் துன்னதில்லே. வாங்கியாரப் பொட்டலத்தைக் கூடம் துன்னாது. வெத்தல பாக்கு மட்டும் அப்பப்ப இடிச்சுப் போட்டுக்கும். ஒரு நாளு மல்லாட்டப் பயிரக்கூடம் இடிச்சிதான் வாயிலப் போட்டுகிச்சி. வெல்லம் போட்டு இடிச்சது. ரொம்ப தித்திப்பா இருந்துச்சி. எதுவுமே பாட்டி என்ன உட்டுட்டுத் தனியா துன்னதேயில்ல. கோவமா என்னை எதுவும் ஒருநாளு கூடம் பேசினது இல்ல. என்னை எப்பவுமே எதுவுமே சொல்லாது. ஆனா ஒரே ஒரு நாள்தான் அது என்ன அடிச்சிடுச்சி…”

திடீரென்று அவன் குரல் கரகரத்தது. வார்த்தைகள் தடைபட்டன. கண்களில் மளமளவென்று நீர் பெருகியது. இப்படி வெடுக்கென்று பொங்கிவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தேறுதல் சொல்ல வார்த்தைக்கு வக்கில்லாமல் மௌனமாயிருந்தேன். அழுவது தேறுதலாயிருக்கும் என்று சொல்வார்களே, அழுதாவது தேறட்டும் என்று இருந்தேன். என் கண்களும் பனிக்க, தலையைக் குனிந்து கண்களை ஒற்றிக் கொண்டேன். முகத்தைத் தேய்த்துக் கொண்டு அவன் சொன்னான்.

“ஒரு நாளு காத்தால பாட்டி சந்தைக்குப் போயிடுச்சி. அது போனப்புறம் நான் ஊட்டுலியே குந்தி ஈர்க்குக் கிழிச்சிக்னு இருந்தேன். அப்புறம் பவலுக்கு மேல பழையது துன்னுட்டு புட்டூர எடுத்துக்னு ஆலமரத்துக்கு வந்துட்டேன். எல பொறக்க வரும்போது நெனப்பு இல்லாம படல் கதவத் தெறந்து போட்டுட்டு வந்துட்டேன் போலருக்குது. எனக்குத் தெரியாது. எலையெல்லாம் பொறுக்கிக்னு வந்து பாத்தா செவுத்தோரம் சோத்துப் பான ஒடஞ்சி சோறும், நீசு தண்ணியும் எங்க பாத்தாலும் ஊடு பூறா எறஞ்சு கெடந்தது.  மண்ணுத் தர ஊறிப்போய் சேறு மாதிரி நொதநொதன்னு. நாய் வந்து இருக்கும் போலருக்குது. பானையில் தலைய உட்டுகினு இருக்குது. அப்புறம் வெளில எடுக்க முடியாம கலவட மாட்டிக்கவே செவத்திலியும் கிவுத்திலியும் மோதி ஒடச்சிபோட்டுச் சுத்தமா நக்கி குடிச்சிட்டுப் போய் இருக்குது.

“எனக்குத் ‘திக்’குன்னு ஆயிடுத்து. நான் கூடம் செரியா சாப்பிடல. பாட்டி சந்தையிலேருந்து வந்ததும் ரவ சாப்பிடும். அப்புறம் அதுக்கு மேலதான் அடுப்பு பத்த வச்சு ஆக்கும். பாவம் அதால சட்டுபுட்டுனு எதுவும் செய்ய முடியாது. எழுந்தா ஒக்கார முடியாது. ஒக்காந்தா எழுந்திருக்க முடியாது. ‘அப்பப்பா..!’ன்னு இடுப்பப் புடிச்சிக்னு பல்லக் கடிச்சிக்னு அவஸ்தபடும். வலி தாங்காம மெல்லமா ‘ஐயைய்யெய்யோ…’ன்னு மொணவிக்கும். எவ்வளோ கஷ்டப்பட்டு ஆக்கன சோறு ஆரும் செரியா சாப்பிடாம இப்பிடி வீணா ஆயிடுத்தே… பசி காதடய்க்க வெய்யில்ல கெடந்துட்டு நடந்து வர்ற பாட்டி வந்ததும் என்னா பண்ணும்னு எனக்கு ஒரே வெசனமாயிடுச்சு.. பாட்டி வந்திருமோன்னு பயமாவும் இருந்துச்சி.

“பயந்துக்னே சோத்தெல்லாம் கையால் தெரட்டி போட்டு, தொடப்பம் எடுத்து தள்ளிட்டு, ஓட்டாங்குச்சியெல்லாம் பொறுக்கி எடுத்து சேத்து, மொத்தமா எல்லாத்தியும் எடுத்துக்னு வெளில போட்டுருவமேன்னு.. இருக்கும்போதே பாட்டி வந்துடுது. தலைமேல் இருந்த நாலு அஞ்சி எல கட்டியும் தொபீல்னு மூலையில போட்டுட்டு ‘என்னாடா இது!’ன்னு கேட்டுச்சு. பாட்டி மூஞ்ச அது மாதிரி எப்பவுமே  நான் பாத்ததில்ல. எல கூடம் விக்யல போலருக்குது. அதான் இம்மாம் கோவமாகிதுன்னு நான் பயந்துக்னே, நான்தாம் பாட்டி தெரியாம ஒடைச்சிட்டேன். தெரியாம கீழே உழுந்து போச்சின்னேன். பாட்டி பட்டுன்னு என்ன இழுத்துப் போட்டு முதுவுலியும் கன்னத்திலியும் பளார் பளார்னு நாலு குடுத்து, ‘எதுக்குடா புண்ணியம் நீ! இப்ப எங்க போறது பானைக்கும் அரிசிக்கும்’னு சொல்லிட்டு என்ன இழுத்து அப்பால் தள்ளிவிட்டு அப்படியே போய் மூலையில் உழுந்துது. அதுக்குமேல அதால பேசக்கூட முடியல.

“என்னென்னுமோ சொல்லி அழ ஆரம்பிச்சிச்சி. எனக்குக் கோவம் தாங்காம, பொறுக்கன ஒட்டாங் கச்சிங்களக் கூடம் எடுக்காம நான் டக்குனு எழுந்து வெளியே வந்துட்டேன். தேம்பித் தேம்பி அழுதேன். பாட்டி எலும்பு கை வெரவெல்லாம் முதுவுல பதிஞ்சு ரொம்ப நோவுச்சு. பேசாம அழுதுக்னே நேரா இந்த ஆலமரத்துக்கிட்ட வந்து, இந்தப் பாறையில் தான் குந்திக்கினேன். வானம் இருட்டிக்னு ஒரே மப்பும் மந்தாரமுமா இருந்துச்சி. மழை வர்றாப் போல இருந்தது. மழை வந்தாக் கூடம் நனையறதே தவிர இனிமே பாட்டி ஊட்டுக்குப் போவவே கூடாதுன்னு நெனச்சிக்னேன்.

“கொஞ்சநேரம் கழிச்சி செத்தைக்கெல்லாம் பாட்டியே தேடிக்னு வந்துடுத்து. நான் வரமாட்டேன். ஏன் என்ன அடிச்சேன்னேன். அது என்னென்னுமோ சொல்லி அழுதுது. நான் வராம தனியா ஊட்டுக்குப் போவ மாட்டேன்னு சொல்லிடுத்து. பொட்டுப் பொட்டுன்னு தரையில் தூறலும் போட ஆரம்பிச்சுடுத்து. மழையும் வந்திடும் போல இருந்தது. நான் எழுந்து பாட்டி கூடவே போயிட்டேன். பாட்டி பொடவையால் தலயத் தொவட்டி, மூஞ்சத் தொடச்சி உட்டுது. கன்னத்த தடவிக் குடுத்தது. இனிமே அடிக்க மாட்டேன். அழாதறா கண்ணுன்னு சொல்லிச்சி. அன்னைக்கி ராத்திரி நல்ல மழ. கொட்டுக் கொட்டுன்னு கொட்டுச்சி. படுக்கக் கூடம் எடம் இல்ல. ஏந்தரக் கல்லு ஓரம் ஈச்சம் பாயில் பாட்டியும் நானும் ஒண்ணாவே படுத்துக்னோம். ரெண்டு பேருமே ராத்திரி எதுவுமே சாப்பிடல. சந்தையிலேருந்து வாங்கியாந்த ஒரே ஒரு தோசையக் கூடம் பாட்டி அதுக்கு வேணாம்னு என்னியே தின்னுடச் சொல்லிடுச்சி.

“எனக்குத் தூக்கம் வரல்லே. இடி இடிக்கும் போது நான் பாட்டிய கெட்டியா புடிச்சிக்கினேன். பாட்டியும் என்னை அணைச்சி புடிச்சிக்கும். ராவெல்லாம் அது அழுதுக்னே இருந்தது. நடுப்புற ஒரு தாட்டி, “நீயும் என்ன உட்டுட்டு எங்கனா போயிடுவியாடான்னு” கேட்டுது. போவமாட்டேன் பாட்டீன்னேன். “எல்லாம் இப்படித்தான்டா சொல்லுவீங்க. அப்புறம் உட்டுட்டுப் போயிடுவீங்க”ன்னு சொல்லிட்டு அழுதுது. “சத்தியமா நான் போவெ மாட்டேன் பாட்டீன்னேன். அதுல இருந்து நான் பாட்டிய உட்டுட்டு எங்கியுமே போனது இல்ல. அதுதான் என்ன உட்டுட்டு வாராவாரம் சந்தைக்கிப் போயிடும். நானும் கூட வர்றேன் பாட்டின்னாலும் ‘வேணான்டா ராஜா! அம்மாந்தூரம் உன்னால நடக்க முடியாது. கால் நோவும்’னிட்டு அது மட்டும் பூடும்.”

எங்கிருந்தோ பெரிய காற்று ஒன்று சுழன்றடித்துக் கொண்டு வந்து, ஆலமரத்தைச் சுற்றி சீறியெழுந்தது. கீழே பழுத்து விழுந்த இலைகள் சருகுகள் மேலெழுந்து காற்றில் சுழன்றன. சுழலும் காற்றில் ‘சர்’ரென்று மனதுக்கு ஒவ்வாத ஒரு ஒலி எழுந்தது. சிவந்த விழிகளில் ஈரம் கசிய, அவன் கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டான்.

“அதே மாதிரிதான் ஒரு நாளு காத்தால எழுந்து சோறு எல்லாம் சாப்டு பாட்டி சந்தைக்கி போச்சு. அதுக்கு மொத நாள் சனிக்கெழமதான் தபால்காரு பாஞ்சி ரூவா கொண்ணாந்து குடுத்துட்டுப் போனாரு. பாட்டி அந்தக் காசிக்கி, ‘உனக்குச் சொக்கா, நிஜாரு எல்லாம் வாங்கிக்னு வர்ரேன். ஊட்லியே பத்திரமா இரு. எங்கியும் விளையாடப் பூடாதேன்னு’ சொல்லிட்டு எப்பவும் போல எல கட்ட தூக்கி தலையில வச்சிக்னு போயிடுத்து. தெருவு கோடி போயி மொடக்கு திரும்பற வரிக்கும் படல் ஒட்டுலியே நின்னு பாத்துக்னு இருந்துட்டு, ஊட்டும் எதுரவே பூரசம் மரத்து நெழல்ல பசங்ககூட கொஞ்ச நேரம் வெளையாடிக்னு கெடந்தேன்.

“எல்லா பசங்க கிட்டியும் ‘நான் நாளைக்குப் புது சொக்கா, புது ட்ரௌசர் போட்டுக்குவேன்’னு சொல்லி வச்சிருந்தேன். வெளையாடி முடிஞ்சி இங்க ஆலமரத்துங் கீழே வந்து மூணு கூட எல பொறுக்கிம் போயி வச்சிட்டு, பொழுது போவ சோறு துன்னக்கூடம் ஆச வராம படல் ஒட்டுலியே ஒக்காந்திக்னு தெருவியே பாத்துக்னு இருந்தேன். எம்மாம் நேரம். இருட்டிகூட போயிடுத்து. வௌக்கு வக்யற நேரம் ஆயிடுச்சு. பாட்டியக் காணம். ஊட்டுல வௌக்கக் கொளுத்தி வச்சிட்டுப் பழைய படியே வந்து குந்தி தெருவியே பாத்துக்னிருந்தேன். வௌக்கு காத்துல அணஞ்சி போயிடறா மாதிரி ஆடுச்சி. சந்தைக்குப் போனவங்க எல்லாம் திரும்பி வந்துட்டாங்க. ஆனா பாட்டிய மட்டும் காணம்.”

அதற்குமேல் அவனுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. அவன் தேம்பத் தொடங்கினான். தேம்பல் அழுகையாக மாறி முற்றியது. வெயில் வெகுதூரம் வரைக்கும் கனலாய்த் தகித்தது. தூர இருந்த சவுக்கைத் தோப்பில் மரங்கள் காற்றில் இப்படியும் அப்படியும் ஆடி ஸ்…ஸ்… என்று இரைந்தது. பக்கத்திலிருந்த கரம்பில் மாடுகள் மேய்ந்தன. அழுகை ஓய்ந்து மறுபடி அவன் பேசத் தொடங்கிய போது, விசும்பினான். ஒட்டிய அடி வயிறு விசுக் விசுக்கென்று அள்ளில் ஒட்டியது. அவன் சொன்னதிலிருந்து நான் ஊகித்தறிந்தது இதுதான்.

அவன் வெகுநேரம் வரைக்கும் காத்திருந்துவிட்டு, கடைசியாக சந்தையிலிருந்து திரும்பியவர்களை விசாரித்திருக்கிறான். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கோடி வீட்டு நாடகக்காரப் பெரியவர் மட்டும் இவனைத் தேடி வந்து, பாட்டி லாரியில் அடிபட்டு செத்துவிட்டாள் என்று சொல்லியிருக்கிறார். கூட்டேரிப்பட்டில் எந்நேரமும் டிராபிக் சர்…புர்… என்று பயங்கரமாய் இருக்கும். இவள் சந்தைத் தோப்புக்குப் போக வேண்டி சாலையைக் கடந்தபோது அது நடந்து விட்டிருக்கிறது. இலைக் கட்டெல்லாம் எகிறி மூலைக்கொன்றாய் சிதற அங்கேயே விழுந்து உயிரை விட்டுவிட்டாள் என்று சொல்லியிருக்கிறார்.

பையன் நம்பாமல் இரவெல்லாம் கிடந்து தவித்து, யார் யாரையோ வழி கேட்டுக்கொண்டு கூட்டேரிப்பட்டுக்கு ஓடியிருக்கிறான். “போலீஸ் வந்து எல்லாவற்றையும் வாரிப் போட்டுக்கொண்டு போய் விட்டதாகவும் கிழவியிடம் பதினைந்து ரூபாய்ப் பணமும் சில்லரையும் இருந்ததாகவும் போஸ்ட்மாட்டத்துக்குப் பிறகு அனாதைப் பிணம், தற்செயல் விபத்து என்று கேசை முடித்து, சவ அடக்கம் எல்லாம்கூட நடந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் பையன் நம்பவில்லை, பாட்டி செத்துப் போயிருப்பாள் என்று.

“செத்துப்புட்டா, தபால்கார் ஏன் பணம் எடுத்தாந்து கேட்டுட்டுப் போறாரு.. அப்பப்ப..” என்றான்.

ஆலமரம் தலையாட்டிச் சுழன்றது. காம்பு இற்றுப்போன பழுப்பு இலைகள் தரையிலே மடிந்தன. அவனது கண்களிலே ஒளிர்ந்த நம்பிக்கையை சிதைக்க தைரியம் இல்லாதவனாக, ஈரம் உலராத அவனது விழிகளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் மௌனமாகவே இருந்தான்.

“பேசாம எங்கூட வந்துட்றியா..?”

“எங்க?”

“எங்க ஊட்டுக்கு அங்கியே இருந்துக்னு.. அங்கியே சாப்டுட்டு நல்லபடியா இருக்கலாம்…” ஒண்டிக்காரியாக கைக் குழந்தையை வைத்துக் கொண்டு லோல்படும் மனைவியை நினைத்துக் கேட்டேன்.

“பாட்டிய உட்டுட்டா…?”

“பாட்டிதான் செத்துப் போச்சே..”

அவன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“பாட்டி சாவல. செத்து இருக்காது” என்றான்.

நான் தலையைக் கவிழ்த்தேன். என் பலமெல்லாம் எங்கேயோ நழுவுவதைப் போல உணர்ந்தேன்.

“எப்பிடி சாவும் பாட்டி… நான்தான் தெருக்கோடி போற வரிக்கும் பார்த்துக்னே இருந்தேனே… எங்கியும் போயிடாத இங்கியே இரு கண்ணு சொக்கா நிஜாரெல்லாம் வாங்கியாரன்னு சொல்லிட்டுப் போச்சே.. எப்பிடி வராம போவும்? அதுக்காக நான் ஈரக்குக் கிழிச்சு வச்சிக்கிறேன். எல பொறுக்கிம் போய் கொட்டி வச்சிக்கிறேன். ஊட்டுல கிழிச்சி போட்ட தாரெல்லாம் இருக்குது. ஏந்தரம் இருக்குது. வெத்தல பாக்கு இடிக்கிற ஒரலு இருக்குது. எல்லாத்தியும் உட்டுட்டு எங்க போயிடும் பாட்டி… எங்கியும் போவாது…”

அவனது நம்பிக்கையைப் பார்த்து எனக்கு வேதனையும்  துயரமும் தான் மிஞ்சியது. அவன் தெளிவோடும் பளிச்சென்றும் இருந்தான். கொஞ்ச நேரம் யோசனையோடு அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மேற்கொண்டு பேச ஏதுமின்றி மெல்ல எழுந்தேன்.

“போலாமா?”

அவனும் எழுந்தான். ஆலமரம் தலையாட்டிச் சுழன்றது. காம்பு இற்றுப்போன பழுப்பு இலைகள் தரையிலே மடிந்தன. தூரத்திலே திட்டுத்திட்டாக பசுமை கட்டிய புரவடைகளை வேலி கட்டித் தடுத்திருந்தார்கள். சுற்றிலும் ஒரே பொட்டல் வெளியாயிருந்தது. வயிறு ஒட்டி எலும்பு துருத்திய மாடுகள் தரையிலே தலை கவிழ்ந்து மேய்ந்தன.