ஒரு சம்பவமும் ஐந்து படைப்புகளும்: படைப்புக்காரணிகளும் ஊடகங்களும் – ஸ்டாலின் ராஜாங்கம்

0 comment

இந்தக் கட்டுரை ஐந்து படைப்புகளை முன்வைத்து எழுதப்படுகிறது. எனவே, அப்படைப்புகளின் சுருக்கத்தை முதலில் தொகுத்துக் கொள்வோம்.

I

மனுசங்கடா

சென்னையில் விடியப்போகும் வேளை. தூக்கத்திலிருக்கும் கோலப்பனுக்கு கிராமத்திலிருக்கும் அவன் தந்தை சின்னய்யன் இறந்துவிட்டார் என்று போன் வருகிறது. சிதம்பரம் வட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த அவன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு அறையெடுத்து தங்கியிருக்கிறான். பஸ்ஸில் ஊருக்குக் கிளம்பும் அவனுக்கு அப்பா இறந்த கவலையோடு மற்றொரு கவலையும் சேர்ந்து கொள்கிறது. ஊரில் மயான பாதை பிரச்சினை இருந்து வருகிறது. ஒவ்வொரு சாவு நடக்கும்போதும் அப்பிரச்சினை முன்னுக்கு வரும்.

பஸ்ஸில் போகும்போதே இது தொடர்பான ஊர் நிலவரத்தை போனில் கேட்டபடியே சென்று சேர்கிறான். எதிர்பார்த்து போலவே அப்பிரச்சினை எழுகிறது. ஊரில் மயானத்திற்கான பொதுப்பாதை இல்லாமல் இல்லை. ஆனால் ஊரிலிருக்கும் ஆதிக்க வகுப்பினர் இப்பாதையை தலித் மக்களுக்கு அனுமதிப்பதில்லை. தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாதை உள்ளூர் நிர்வாகத்தால் ஒழுங்குபடுத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் கோலப்பனும் இளைஞர்களும் பிணத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச் செல்வதற்கான சட்ட ரீதியான உரிமையில் உறுதியாக நிற்கின்றனர்.

உள்ளூர் காவல்துறை, வட்டாட்சியர் போன்றோரிடம் சென்றும் அவர்கள் ஆதிக்க வகுப்பினருக்கு ஆதரவாக மழுப்புகின்றனர். சில சமயங்களில் மிரட்டுகின்றனர். ஊரில் இம்மக்களுக்காக பணியாற்றும் உள்ளூர் அரசியல் தலைமை மூலம் இப்பிரச்சினையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறான் கோலப்பன். பொதுமயான பாதையைப் பயன்படுத்தும் சட்ட ரீதியான உரிமையை கோலப்பனுக்கு உறுதி செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் உத்தரவிடுகிறது நீதிமன்றம்.

இதற்குள் மூன்று நாட்கள் கடந்து விடுகிறது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பிணத்தை அடக்கம் செய்ய வேண்டியதே மிச்ச வேலை. ஆனால் போலீஸோ தீர்ப்பு இருந்தாலும் உள்ளூர் நிலவரத்தை அனுசரித்து போகும்படி தலித் தரப்பினரிடம் வற்புறுத்துகிறது. மெல்ல மெல்ல இப்பிரச்சினையில் பதட்டம் அதிகரிக்கிறது. இவர்கள் தோண்டிவைத்த குழி இரவோடு இரவாக மூடப்பட்டு முள் அடைக்கப்படுகிறது. பொதுப்பாதையில் கற்கள் கொட்டப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் ஆதிக்க வகுப்பினர் பகுதிக்கே வந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸே பிணத்தை அகற்ற முயலும்போது எதிர்ப்பு தெரிவித்து பிணத்தோடு வீட்டினுள் சென்று தாழ்ப்பாள் இட்டுக் கொள்கின்றனர். பிணம் அழுகினால் வெளியே வருவார்கள் என்று கருதி போலீஸ் ஐஸ்பெட்டிக்குச் செல்லும் மின் இணைப்பைத் துண்டிக்கிறது. அதோடு வீட்டுக்கு வெளியே நின்று மிரட்டலும் விடுக்கிறது. உள்ளே இருப்போர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். பிறகு நீதிமன்றம் செல்ல கோலப்பனுக்கு உதவிய உள்ளூர் தலைவர் அறிவுறுத்தலால் வெளியேவந்து பாடைகட்டி பிணத்தை எடுத்துச் செல்கின்றனர். பொதுப் பாதைக்கு பிரியும் இடத்தில் காத்திருக்கும் போலீஸ், கூட்டத்தினர் மீது திடீரென தாக்குதல் நடத்தி பலரையும் கைது செய்து வேனில் ஏற்றுகிறது.

அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி சீரமைக்கப்படாத பாதைவழியே பாடையை எடுத்துச் சென்று போலீஸே புதைக்கிறது. மறுநாள் பால் ஊற்றும் சடங்கிற்காக கோலப்பன் உறவினர்களோடு புதைவிடம் நோக்கிச் செல்கிறான். தோண்டி மூடப்பட்ட இடமொன்றைக் கண்டு அதுதான் புதைக்கப்பட்ட இடம் என்று கருதி பாலூற்றப் போகிறான். அதற்குள் உடன் வந்தோரில் ஒருவன் அதேபோன்ற அடையாளத்தோடு அருகிருக்கும் மற்றொரு இடத்தைக் காட்டுகிறான். கோலப்பன் குழப்பத்தோடு அந்த இடம் நோக்கிப் பார்க்கிறான். அதற்குள் இன்னொருவர் மற்றொரு இடமும் அதே அடையாளத்தோடு இருப்பதைக் காட்டுகிறார். அதாவது பிணத்தை விரும்பிய பாதையில் எடுத்துவர முடியாதது மட்டுமல்ல புதைத்த இடத்தைக்கூட அவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளாதவாறு திட்டமிட்டுக் குழப்பத்தை உருவாக்கிச் சென்றிருக்கும் அவலத்தை அவர்கள் சந்திக்கிறார்கள். கோலப்பனுக்கு கதறி அழுவதைத் தவிர வேறு வழியில்லை. படம் முடிகிறது.

சாதியமைப்பின் நுட்பமான கண்ணிகள் சமூகத்தில் எவ்வாறெல்லாம் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை அதன் யதார்த்தம் குறையாமல் தந்திருக்கும் இப்படத்தின் பெயர் ‘மனுசங்கடா’ (2018 அக்டோபர்). ஒடுக்கப்பட்ட மக்கள் பாடுவதைப் போன்று இன்குலாப் எழுதிய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ எனத் தொடங்கும் பாடலின் முதலடியே படத்தின் தலைப்பாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாடல் ஒலிப்பதோடு தான் படம் முடிகிறது. எழுத்தாளரும் இயக்குநருமான அம்சன்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மாவீரன் கிட்டு

பின்புலத்தில் ஒலிக்கும் குரலோடு படம் தொடங்குகிறது. கிராமங்களில் பாதைகள் சார்ந்தும் சாதிமுறை கடைபிடிக்கப்படுவதை அக்குரல் விவரிக்கிறது. அதன்படி பாதைக்காக போராடிய கதை ஒன்றை அக்குரல் சொல்ல ஆரம்பிக்கிறது. அதற்கேற்ற கதாபாத்திரங்களும் காட்சிகளும் விரிகின்றன. பழனிவட்டம் புதூர் கிராமத்தில் பொதுப்பாதை பயன்பாட்டுக்காக போராடி வந்த உள்ளூர் தலைவர் காளிமுத்து அய்யா இறந்து போகிறார். அவர் எந்தப் பாதை பயன்பாட்டுக்காக போராடினாரோ அந்தப் பாதையில் அவரையே எடுத்துச் செல்ல முடியாதநிலை உருவாகிறது. ஊரின் தெருவழியே ஐந்து பர்லாங்கு தூரத்தில் கடந்துவிட முடிகிற அப்பாதையைப் பயன்படுத்த ஊர் நாட்டாமை மறுத்து வருகிறார். இந்தப்பாதை இல்லாவிட்டால் மழை பெய்து நீர் நிரம்பியிருக்கும் ஏரி வழியாக ஆறு மைல் தூரம் சுற்றிப்போக வேண்டும்.

காளிமுத்தோடு இணைந்து செயல்பட்டு வந்த மற்றொரு உள்ளூர் தலைவரான சின்ராசு, காளிமுத்தை போராடிவந்த பாதை வழியிலேயே எடுத்துச்செல்ல வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுக்கிறான். மூன்று நாட்களாகின்றன. முடிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சின்ராசுக்கு ஆதரவாக வருகிறது. இன்றைக்குப் பொது மயானப்பாதை போன்றவற்றுக்கு இடம் தந்தால் நாளை பெண் கேட்கக்கூட வருவார்கள் என்று கூறி ஆதிக்க வகுப்பினர் மறுக்கின்றனர். காவல் துறையிலிருக்கும் ஆதிக்க வகுப்பினரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே சிந்திக்கின்றனர்.

போலீஸே அடக்கம் செய்துவிடுவதாகக் கூறி பிணத்தைக் கேட்கிறது. முதலில் மறுத்தாலும் “இன்னைக்கு அய்யாவோட பொணம் போகட்டும். அதேபோல நாம் பொணத்தை தூக்கிக்கிட்டு அதே பாதை வழியா போகும் அடுத்தக் கட்டம் வரும்” என்று கூறி சின்ராசு ஒத்துக் கொள்கிறான். காவல்துறையே பிணத்தை சுமந்து செல்கிறது. இதோடு அப்பகுதி முடிவடைந்து டைட்டில் காட்சிகள் ஆரம்பிக்கின்றன. அதாவது பின்னால் வரப்போகிற முழுப்படக்கதைக்கு இதுவே முன்னோட்டக் காட்சி. இக்காட்சிகள் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘மாவீரன் கிட்டு’ என்ற படத்தில் இடம்பெற்றன. 2016ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இப்படம் வெளியானது.

போலீஸ்

ராஜேந்திரன் என்ற தலைமைக் காவலரை அவர் பணியாற்றும் காவல்நிலையத்தைச் சேர்ந்த சீனிவாசன், அவர் வீட்டில் சந்திப்பதோடு கதை தொடங்குகிறது. தன்னை காவல் நிலையத்திலேயே பார்ப்பதை விடுத்து வீட்டிற்குத் தேடி வந்தது அவருக்குப் புதிதாக இருந்தது. அவன் சொன்ன காரணம் ராஜேந்திரனுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தன்னுடைய காவலர் பணியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அதற்கு அவர் உதவியை நாடி வந்திருப்பதாகவும் சொல்கிறான். சீனிவாசனின் சாதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பதால் அவன் அவரை நாடி வந்திருக்கிறான்.

பணித்தளத்தில் நிலவும் சொல்லப்படாத இணக்கம் அது. அவன் மீது அவருக்கொரு கரிசனம் இருக்கிறது என்பது அவர்களுக்கிடையிலான கடந்தகால அனுபவங்கள் மூலம் அவன் அறிந்திருக்கிறான். ராஜினாமா செய்வதைவிட, அதற்காக அவன் கூறிய காரணம் அவருக்கு பெரும் வியப்பை அளித்தது. அதாவது இந்தக் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் தலித் ஒருவர் இறந்துபோகிறார். அவர் உடலை அடக்கம் செய்ய பொதுமயானப் பாதையை மறுக்கின்றனர் அவ்வூர் ஆதிக்க வகுப்பினர். அதனால் அவர்கள் நீதிமன்றம் சென்று சாதகமாக தீர்ப்பு வாங்கி வருகிறார்கள்.

ஆனால், “கலெக்டரும், எஸ்பியும் வந்து ஊர்க்காரங்ககிட்ட பேசினாங்க. நாலு நாள் பேச்சு வாத்த நடத்துச்சி. விஷயம் முடியல. ‘கோர்ட் ஆர்டற நடமுறப்படுத்து’ன்னு சொல்லி ஒரு குரூப் சாலைமறியல் செய்யுது. எங்க தெரு வழியா பொணத்த எடுத்துட்டுப் போனா, சாமி குத்தமாயிடும், மீறி பொணத்த தூக்கிட்டுப் போனா ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடிய திரும்பத் தந்துடுறோம்னு சொல்லி ஒரு குரூப் உண்ணாவிரதம் இருக்கு. சாலை மறியல் செஞ்சவங்கள கலைக்கிறதுக்கு லத்தி சார்ஜ் செய்யுங்கன்னு கலெக்டரு உத்தரவு போட்டாரு. லத்தி சார்ஜ் செஞ்சி நெறயா பேர உள்ளற புடிச்சிப் போட்டு கூட்டத்த கொறச்சாச்சி. வேணுமின்னே ஃபிரீசர்ல பொணத்த வச்சிக்கிட்டுத் தான் தகராறு வளத்துறானுவோன்னு கலெக்டர் சொல்லி கரண்டயும் நிறுத்தியாச்சு” என்று இதில் நடந்ததை பிறகு விவரிக்கிறார் ராஜேந்திரன்.

பிறகு போலீஸே பிணத்தை எடுக்கத் திட்டமிட்டது. மறியல் செய்த ஐம்பது பேரை கைது செய்து பிணத்தை எடுத்து அடக்கம் செய்தது. அவ்வாறு பிணத்தைத் தூக்கிச் சென்ற போலீஸ்காரர்களில் ஒருவனே இந்த சீனிவாசன். இச்சம்பவம் தொலைக்காட்சி செய்திகளிலும் செய்தித்தாள்களிலும் படத்தோடு வெளியானது. இதில் சீனிவாசன் தூக்கிச் சென்ற காட்சி பளிச்சென்று இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்துவிட்டு ஊரிலிருந்துகூட ஒருவன் போன் செய்து விசாரித்திருந்தான். ‘ஒரு கீழ்ச்சாதிகாரன் பிணத்தை தூக்கிய தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவமானமாக இருக்கிறது’ என்று கூறி அவன் ராஜினாமா செய்ய வந்திருக்கிறான். தலைமைக் காவலர் ராஜேந்திரன் எவ்வளவோ சொல்லியும் அவன் முடிவிலிருந்து மாற மறுக்கிறான்.

“எங்க ஊர்ல மாட்டுவண்டியில்கூட ஒக்காந்து அவனுங்கள போக விடமாட்டம். சைக்கிள்ள, மோட்டார் பைக்கில ஒக்காந்துகிட்டுப் போவ விட மாட்டம். மீறி வந்தால் மறிச்சி வச்சி, டயர்ல இருக்கிற காத்தப் புடுங்கிவுட்டுடுவோம். அப்படிப்பட்ட ஊர்ல பொறந்த என்னெ கீழ்ச்சாதி பொணத்தத் தூக்கி பாடையில வைக்கவும், பொணத்தத் தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்குப் போகவும், குழியில எறக்கி மண்ணைத் தள்ளி மூடவும் வச்சிடாங்க. இந்த வேலையால தான் இந்த அசிங்கம். எனக்கு மட்டும் அசிங்கம்னா வுட்டுருவன். நம்ம சாதிக்கே அசிங்கமா போயிடிச்சி. அதத் தான் என்னால தாங்க முடியல” என்று சொல்லும் சீனிவாசன், “விஷயம் தெரிஞ்சா எங்கப்பா என்னெ கொன்னு போட்டுடுவாரு. எங்கப்பா வுட்டாலும் எங்கம்மா வெஷத்த வச்சிக் கொன்னுட்டுதான் ஒக்காரும். ஒருத்தன் எனக்கு பொண்ணுதர மாட்டான்… ரெண்டு தங்கச்சிங்க இருக்கு. விஷயம் தெரிஞ்சா ஒரு பய பொண்ணு கேட்டு வரமாட்டாய்யா. விஷயம் தெரிஞ்சா ஊரவுட்டே ஒதுக்கிடுவானுங்க. அந்த விஷயத்தில மட்டும் அப்படியே ஒத்துமயா இருப்பானுங்க” என்று விளைவுகளையும் சொல்லுகிறான்.

அதாவது அவன் சாதி ஒரு அமைப்பாக இயங்குவதையே விவரித்து விடுகிறான். சீனிவாசனுடைய பிடிவாதத்தைப் பார்த்துவிட்டு தள்ளிப்போட்டால் சரியாகிவிடும் என்று கருதி அவனை வீட்டுக்குப் போகச் சொல்லுகிறார் ராஜேந்திரன். ஆனால் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தால்தான் என்னால் உயிரோடு இருக்க முடியும் என்று கூறி வெளியேறுகிறான் சீனிவாசன். “டேய் தம்பி, நில்லுடா நில்லுடா… டேய் மெண்டல் பயலே” என்று ராஜேந்திரன் கத்தியது சீனிவாசனுடைய காதில் விழவில்லை என்று கதை முடிகிறது. போலீஸ் என்ற தலைப்பில் இமையம் எழுதிய இச்சிறுகதை அக்டோபர் 2017இல் (உயிர்மை இதழ்) வெளியானது.

எல்லா உயிர்க்கும்

‘எல்லா உயிர்க்கும்’ என்பது பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடகம். அதில் தொடக்கமாக, பெண் ஒருவர் கட்டியங்காரியாக பறை அடித்தவாறு அரங்கில் வருகிறார். பாரதியின் எல்லோரும் ஓர் குலம் என்ற பாடலின் தொடக்க அடிகளைப் பாடுகிறாள். கிடையாது, கிடையாது என்று குரல்கள் கேட்கின்றன. அதாவது எல்லோரும் ஒரு குலம் கிடையாது என்பது இதன் பொருள். குயவனுக்கு ஒரு பானையும் நெசவாளிக்கு ஒரு முழத்துணியும் உழவனுக்கு நெல்லும் வெட்டியானுக்கு ஆறடி நிலமும் கிடையாது என்கிறது அப்பெண்ணின் குரல். தொடர்ந்து 2016ல தஞ்சை மாவட்டத்துல நடந்த உண்மை சம்பவத்தைப் பற்றி இமையம் எழுதிய கதை குறிப்பிடப்படுகிறது. அதைச் சொல்லி முடித்ததும் இரண்டு ஆண் பாத்திரங்கள் வருகிறார்கள். இமையம் எழுதிய போலீஸ் கதையில் வரும் சீனிவாசன், தலைமைக் காவலர் ராஜேந்திரன் வீட்டுக்கு வருகிறான். கதையில் வரும் உரையாடல்கள் மீச்சிறு இடங்கள் தவிர மற்றவை நாடகத்தில் அப்படியே இடம்பெற்று உள்ளன. இமையத்தின் விவரிப்புப் பகுதிகள் பெரும்பாலும் நாடக வடிவத்திற்கு மாறியிருக்கின்றன.

கதையில் போலவே நாடகத்திலும் மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே. இமையம் எழுதிய பகுதிகளும் பாதி நாடகத்திலேயே நிறைவடைகின்றன. இரண்டாம் பகுதி பாடல், கவிதைகள், பேச்சு என்றமைகின்றன. இரண்டாம் பகுதியை கட்டியங்காரியே நிகழ்த்துகிறார். நிலத்திற்கும் கூட சாதியுண்டு என்று கூறிவிட்டு பாடுகிறாள். பார்ப்பனனும் சண்டாளனும் உயிர்போய் விட்டால் ஒன்றுதான் என்று சொல்கிறது அப்பாடல். சாதி ஒரு பிசாசு என்று தொடங்கும் நெடிய விவரணை. மண்ணுக்கும் சாதியவாதிகளுக்கும் தொடர்பேயில்லை. நிலப்பத்திரங்களுக்கும் மண்ணுக்கும் தொடர்பேயில்லை. தன்னைப் பண்படுத்தி விளைநிலமாக்கியது யாரென்று மண்ணுக்குத் தெரியும் என்கிறாள்.

அடுத்து கவிதை ஒன்றை சொல்லிவிட்டு மற்றொரு பெண் பாத்திரத்தை அழைக்கிறார். நாடகத்தில் வரும் நான்காவது பாத்திரம் அது. இரண்டாம் பகுதியில் வரும் இரண்டாவது பாத்திரம். சுடுகாட்டில் புதைக்க பாதை மறுக்கப்பட்டவனின் மகள் என்று அவள் அறிமுகப்படுத்தப்படுகிறாள். “அப்பன் செத்து ரெண்டுநாள் கூட ஆகலை. அதுக்குள்ள வேலைக்கு வந்துட்ட” என்று கேட்க அவள் பேசத் தொடங்குகிறாள். ‘எங்கள் பாட்டி அவள் கதையையும் அவளுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க கதையையும் எனக்குச் சொல்லியிருக்கிறாள். அவளுக்கு முன்னோர் நஞ்சை புஞ்சை வைத்திருந்தார்கள். அதிலிருந்து விரட்டப்பட்டோம்’ என்கிறாள். அதைக்கேட்ட பிறகு பௌத்தம் வீழ்த்தப்பட்டு ஊருக்கு வெளியே துரத்தப்பட்டோம். பார்ப்பன குடியிருப்புக்காக நிலங்கள் எடுக்கப்பட்டன. ஊரும் சேரியுமாக வாழ்கிறோம் என்று முழங்குகிறாள் கட்டியங்காரி. வாழிய வாழிய மணித்திருநாடு என்று பாடுவதோடு நாடகம் முடிகிறது.

இந்நாடகம் 2019ஆம் ஆண்டு அக்டோபரில் நிகழ்த்தப்பட்டது. நாடகத்தின் முதல்பகுதி இமையத்தின் போலீஸ் என்ற கதையைத் தழுவியது. இரண்டாம் பகுதி இயக்குநரால் எழுதப்பட்டது. நாடகத்தில் இடையே சல்லபள்ளி ஸ்வரூபாராணி, ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் கவிதைகள் இடம்பெறுகின்றன. உரையாடலிலும் ஆதவனின் பங்களிப்பு இருந்தது. நாடகப் பின்னணிக்கான ஓவியங்கள் க. நட்ராஜால் தீட்டப்பட்டிருந்தன.

இரண்டு துக்கம்

கதை சென்னையில் தொடங்குகிறது. தான் பணியாற்றும் அலுவலகத்தின் மேலாளர் பிறந்த நாளுக்கான இரவு விருந்தில் மகேந்திரன் பங்கெடுத்திருக்கிறான். அங்கு பலவிதமான உரையாடல்கள். அவற்றில் மேலாளரின் உறவினர் இறந்ததால் மரண அஸ்தியை பெற்றுத் திரும்பியதில் நடந்த தாமதம் பற்றியும் கிராமங்கள் போன்று இங்கு இல்லாதது பற்றியும்  உரையாடல் வந்துபோகிறது. அந்த விருந்தில் துப்புரவாளராக பணியாற்றுவோர் மகேந்திரன் ஜாதியாக இருப்பது பற்றியும் உரையாடல் நடக்கிறது. உரையாடல்களில் தென்பட்ட மேட்டிமை பார்வை பற்றிய விளக்கத்தினை மறுநாள் மேலாளரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வீடு திரும்புகிறான். ஆனால் மறுநாள் காலை கிராமத்திலிருந்து அவன் அப்பா சின்னச்சாமி நோயுற்றிருப்பதாகப் போன் வருவதால் ரெயிலில் ஊர் கிளம்புகிறான். போகும்போது அவன் அப்பா, இவனோடு சேர்த்து சகோதர சகோதரியையும் படிக்கவைத்து வேலைக்கு அனுப்பியது பற்றி நினைத்தவாறே செல்கிறான்.

தர்மபுரி அருகிலுள்ள பெத்து நாயக்கன்பட்டி, மேலூர் கீழூர் என்ற இரண்டாக இருக்கிறது. பெயருக்கு ஏற்றவாறு மேலூரில் மேட்டுக்குடினரும் கீழூரில் சேரி மக்களும் இருக்கின்றனர். சேரியில் ஐம்பது வீடுகள். மேலூரில் ஐநூறு அறுநூறு வீடுகள். ஆனாலும் ரேஷன் கடை தொடங்கி எல்லாத் தேவைகளுக்கும் மேலூரின் நடுத்தெரு வழியாக  போகவேண்டும். மகேந்திரனின் அப்பா ஊர்க்கவுண்டர் வீட்டில்தான் வேலை பார்த்தார். சிறுவயதில் சாதியால் பட்ட அவமானங்களால் உடன்படித்தவர்களுடன் சண்டையிட்டவன் மகேந்திரன். அவனுடைய அப்பா பணிந்து போகிறவர். படித்து மேலே வருவதுதான் முக்கியம் என்று கருதி இவனை அடுத்த ஊர் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார். சென்னைக்கு சென்று படித்து முடித்த பிறகு அங்கேயே வங்கி வேலைக்கு அமர்ந்தவன் மகேந்திரன்.

ஆனால் படிப்புக்கென வாங்கிய கடனைக் கேட்டு ஊர்க் கவுண்டர் தம்பி ஒருநாள் அவன் தந்தையை நடுத்தெருவில் வைத்து அடித்தான். அதைத்தெரிந்து வழக்கு தொடுக்கத் துடித்தான் மகேந்திரன். அதைத் தடுத்த அவன் அப்பா, “ஒன்னே ஒன்னு செஞ்சா போதும். நீ இப்ப திருப்பியடிக்கனும்னு துடிக்கிறயே, அவங்க எப்பவும் நெனைக்கிற மாதிரி என்ன இந்த ஊருலயே கௌரவமா எடுத்துப்போடு. அதமட்டும் செஞ்சாப் போதும்” என்று சொல்லியிருந்தார். மகேந்திரன் ஊரில் சென்று இறங்கும்போது அப்பா இறந்துவிட்டிருந்தார். இப்போது அடுத்த பிரச்சினை உருவெடுக்கிறது. கீழூர் மக்களுக்கு புதைகாடு இல்லாமலிருந்தது. ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள் குடியானவர்களுக்கே சொந்தம். அதில் சேரி மக்களுக்கு மயான இடம் ஒதுக்கித் தரப்பட்டதில்லை. எனவே காட்டோடையில் புதைத்து வந்தார்கள். ஆனால் மழைக்காலங்களில் அதுவும் கடினம். நீரோட்டத்தால் பிணம் வெளியே வந்து நாய் நரிகளால் இழுபடும். எனவே ஓடைக்கரையில் புதைக்க முற்படுவார்கள். இல்லையென்றால் அங்குமிங்கும் தூக்கிக்கொண்டு அலைவார்கள்.

ஒவ்வொரு அரசிடமும் முறையீடுகள் செய்துகூட விடையில்லை. மகேந்திரனின் நண்பர் அருள் அரசாங்கக் காகிதங்களில் தேடி கொஞ்சம் புறம்போக்கு நிலத்தைக் கண்டுபிடித்து மயான நிலமாக்க வேலி போட்டபோது வன்முறை செய்து தடுக்கப்பட்டனர். பிறகு நடந்த கடும் போராட்டத்தை ஒட்டி நான்கு கி.மீ. தொலைவில் புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் ஒதுக்கினார்கள். ஆனால் பிணத்தை எடுத்துச்செல்வதற்கு ஒரே பாதைதான் இருந்தது. அது மேலூரின் நடுத்தெரு. அதையொட்டி அடுத்த பிரச்சினை. ஒரு வழியாக அரசு சேரிக்குப் பின்னால் சுடுகாட்டுக்குப் பாதை ஒன்றை ஒதுக்கியது. ஆனால் அதையும் ஆக்கிரமிப்பு செய்தனர். பிரச்சினை மேல் பிரச்சினை.

இந்தப் பின்னணியில்தான் இப்போது இறந்து போயிருக்கும் தன் தந்தையை மரியாதையாகப் புதைக்க முடிவெடுக்கிறான் மகேந்திரன். முதலில் காவல்நிலைய ஆய்வாளர், பிறகு சட்டமன்ற உறுப்பினர், ஊர்க்கவுண்டர் என்றெல்லாம் போய் அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகிறது. பிறகு அவன் சென்னை உயர்நீதிமன்றம் செல்கிறான். தீர்ப்பு, மகேந்திரனுக்கு சாதகமாக வருகிறது. ஆனால் உள்ளூர் நிர்வாகம் சட்ட ஒழுங்கைக் காட்டி இவர்களையே பணிந்து போகச் சொல்கிறது. மகேந்திரன் மறுக்கிறான். மேலூர்க்காரர்களும் மறியல் செய்கின்றனர். அதனால் பிணத்தை தாங்களே எடுத்துப் போவோம் என்று அறிவிக்கிறது காவல்துறை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னச்சாமியின் உடலை ஃபிரீசரோடு தூக்கி வீட்டிற்குள் வைத்துக்கொண்டு பூட்டிக் கொள்கின்றனர்.

அழகியபெரியவனால் எழுதப்பட்ட இந்தக் கதை இரண்டு துக்கம் என்ற பெயரில் (2018 நவம்பர் உயிர்மை இதழ்) வெளியானது. சேரியில் பிணம் விழுந்தால் இரண்டு சிக்கல். செத்தவர்களுக்காக அழுவது ஒன்று. புதைப்பதற்காக படுகிற பாடுகள் மற்றொன்று. இந்த இரண்டையே இந்தக் கதை இரண்டு துக்கம் என்ற தலைப்பால் கூறியிருக்கிறது.

போலீஸ் நிபந்தனைகளோடு அனுமதிப்பது போல் அமையும் இக்கதை முடிவு என்கிற விதத்தில் மூன்று சாத்தியங்களைச் சொல்லி முடிக்கிறது. ஒற்றை முடிவை வைக்கவில்லை. மூன்று வெவ்வேறு முடிவுகளை கதையின் இறுதிப் பகுதியில் எழுதியிருக்கிறார் அழகியபெரியவன். போலீஸார் அந்தரங்கத் திட்டமொன்றை மனதில் வைத்துக்கொண்டு அனுமதிக்கிறார்கள். மேலூர் நடுத்தெருவை பாடை நெருங்கும்போது மேளம் அடிப்பதை நிறுத்திக்கொள்ளச் சொல்கிறார்கள். அவர்கள் மறுக்கிறார்கள். அதனால் ஊர்வலத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எங்கிருந்தோ கல் ஒன்று வந்துவிழுகிறது.

காவல்துறை பிணத்தோடு வந்தவர்களை அடிக்கத் தொடங்குகிறார்கள். எல்லோரும் சிதறி ஓடுகிறார்கள். பாடை நடுவீதியில் தனியாகக் கிடக்கிறது. போலீஸாரையே பிணத்தைத் தூக்கும்படி ஆணையிடுகிறார் எஸ்.பி. ஆனால் அதற்குள் கீழூரிலிருந்து நான்கு இளைஞர்கள் ஓடிவந்து பாடையைத் தூக்கிக்கொண்டு நடுத்தெரு வழியே ஓடுகிறார்கள். சுற்றி அரண்போல சென்ற இளைஞர்களின் கையில் மண்ணெய் கேன்களும் தீக்குச்சிகளும் இருந்தன. நடுத்தெரு மையத்தில் பாடையை வைத்துவிட்டு உரக்க முழக்கமிட்டார்கள். எஸ்.பி.யும் ஆய்வாளரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுமுதல் முடிவு.

பிரச்சினை நடக்கும்போது நடுரோட்டில் கிடந்த பாடையை நாலு போலீஸாரை தூக்கச் சொல்கிறார் எஸ்.பி. அவர்கள் பாடையை எடுத்துக்கொண்டு ஓடைக்கரை வழியாக ஓடினார்கள். ஆனால் அங்கு ஆளிறங்க முடியாதபடி பெருங்குழி தோண்டப்பட்டிருந்தது. காலனி ஆட்களுக்கான சுடுகாட்டு பாதைக்கு ஓடினார்கள். அதிலும் பெருங்குழி ஒன்று வெட்டப்பட்டிருந்தது. வேறு வழியில்லாமல் மேலூர் நடுத்தெரு வழியாகவே போகத் திட்டமிட்டார்கள். தீச்சட்டியுடன் போனான் மகேந்திரன். அவர்களுடன் கீழூர் சனங்கள் சிலரும் போனார்கள். இவ்வாறு பெத்த நாயக்கன்பட்டி பொதுச்சாலை வழியாக முதன்முதலாக ஒரு தலித்தின் பிணம் போனது. இது இரண்டாவது முடிவு.

பிரச்சினை பெரிதானதும் போலீஸிடம் வந்த மகேந்திரன் என் அப்பாவை இந்த ஊரில் புதைக்க விரும்பவில்லை. மெட்ராசுக்கு கொண்டுபோய் எரிக்கப் போகிறேன் என்று உடலை ஃபிரீசரில் வைத்து ஆம்னியில் கொண்டு செல்கிறான். ஆம்னி ஊரைவிட்டு ஒரு கிலோ மீட்டர் சென்றதும் நிறுத்தப்பட்டது. சின்னச்சாமியின் உடலை செடிமறைவிற்கு கொண்டு சென்றார்கள். இருட்டில் சிறிதுநேரம் நடந்து சென்றதும் சமாதிகள் இருந்தன. மகேந்திரன் சிறுவனாயிருந்தபோது அப்பாவோடு அங்கு வந்ததுண்டு. ஊர்க்கவுண்டர் நிலத்தின் தெற்குமூலை அது. கவுண்டருடைய முன்னோர்களின் சமாதிகள் அங்குண்டு. அங்கேயே அவர்களின் குலசாமி கோயிலும் இருந்தது. தெய்வக் களத்தில் வேப்பமரத்துக்கு அடியில் சின்னச்சாமியைப் புதைத்து அடையாளம் தெரியாதபடி மூடிவிட்டுப் புறப்பட்டு விடுகிறார்கள். அதாவது தங்கள் முன்னோர்களை வணங்கும் போது அவர்கள் அறியாமலேயே அங்கு புதைக்கப்பட்ட தீண்டப்படாதவனின் இந்த உடலையும் அவர்கள் சேர்த்தே வணங்குவார்கள். வாழும்போது புறக்கணிக்கப்பட்டவன் இறந்தபின் வணங்கப்படுகிறவன் ஆகிறான். இது மூன்றாவது முடிவு.

II

மேற்கண்ட படைப்புகளைப் பார்க்கும்போது ஒரே பிரச்சினை, அதையொட்டி ஒரு மாதிரியான சம்பவங்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளதை கவனிக்க முடிகிறது. உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து யதார்த்த பாணியில் எழுதப்பட்டதால் இவ்வாறு அமைந்திருக்கின்றன. அந்த உண்மைச் சம்பவத்தை இனி காணலாம்.

நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் திருநாள் கொண்டச்சேரி. அங்கிருக்கும் இரண்டு தெருக்களில் இருநூறு ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் குடும்பங்கள் உள்ளன. அம்மக்களுக்கென தனிச்சுடுகாடு கிடையாது. மூன்றரை கிலோ மீட்டர் சென்று ஆற்றுக்கரையில் தான் புதைக்க வேண்டும். அவ்வாறு செல்வதற்கும் ஒற்றையடிப் பாதை, அதுவும் சிறுவாய்க்கால்துறை தான். பாதை வேண்டுமென்பது நீண்டநாள் கோரிக்கை. 2002ஆம் ஆண்டு வழுவூர் வீரட்டேஸ்வரா கோயில் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை வாங்கி ஊராட்சியிடம் கொடுத்தும் முறையான சாலை அமைக்கவில்லை. மாறாக, பாதைக்காக வாங்கப்பட்டிருந்த அந்த இடத்தையும் சாதி இந்துக்கள் தரப்பினர் ஆக்கிரமித்து விட்டனர்.

இந்நிலையில்தான் 26.11.2015 அன்று எண்பது வயது குஞ்சம்மாள் காலமானார். மழைக்காலம் என்பதால் வெள்ளக்காடாக இருந்தது. அதனால் இம்மக்கள் பொதுப்பாதையைப் பயன்படுத்த வேண்டிய நிலை. சாதி இந்துக்கள் தரப்போ மறுத்தது. பேரன் கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறையிடமும் புகார் தருகிறார். 3 நாட்கள் பேச்சு வார்த்தை நடக்கிறது. சடலத்தை வயல் வழியாக எடுத்துச் செல்லுங்கள். இல்லையேல் நாங்களே அடக்கம் செய்கின்றோம் என்கிறது நிர்வாகம். அம்முயற்சிக்கு இணங்கவில்லை என்பதால் 29.11.2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் வயல்வெளி வழியாக எடுத்துச்சென்று குஞ்சம்மாள் அடக்கம் செய்யப்பட்டார்.

குஞ்சம்மாள் அடக்கம் செய்யப்பட்ட இடம்

இந்நிலையில் 03.01.2016 அன்று குஞ்சம்மாளின் கணவர், 90 வயது செல்லமுத்து இறக்கிறார். முந்தைய பிரச்சினைகளை கணக்கில்கொண்டு பேரன் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். 04.01.2016-இல் வெளியான தீர்ப்பில் செல்லமுத்தின் சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச்சென்று அடக்கம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் வயல்வெளி வழியாகவே எடுத்துச்செல்ல வற்புறுத்தியுள்ளனர். அதோடு வயல்வெளி பாதையில் அவசர அவசரமாக பாதையை உருவாக்கி உள்ளனர். ஆனால் தலித் தரப்பினரோ நீதிமன்ற உத்தரவைக் கூறி அதிகாரிகளின் இம்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலில் மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். அதனால் பிணம் அழுகத் தொடங்குகிறது. பிறகு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாகக் கூறியுள்ளனர்.

உடனே காவல்துறை பொதுப்பாதையில் எடுத்துச் செல்வதற்கான வாக்குறுதியைத் தந்து சடலத்தை எடுக்க ஏற்பாடு செய்தது. ஆனால் பொதுப்பாதை பிரியும் இடத்தில் தடியடி நடத்தி மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறை, வயல்வெளி வழியே எடுத்துச் சென்று புதைத்தனர். இதுதான் நடந்த சம்பவம். மேலே சொல்லப்பட்ட ஐந்து படைப்புகளுக்கும்  அடிப்படையாக அமைந்த உண்மைச் சம்பவம் இது தான். இவற்றில் எது உண்மை எது புனைவு என்று தெரியாத அளவிற்கு இச்சம்பவம் புனைவுகளாக மாற்றப்பட்டன. படைப்பாகப் படிக்கும்போது இவ்வாறு நடந்திருக்குமா என்று எண்ணிக்கொள்வோம். இவை யதார்த்தத்தை புனைவு வடிவில் எழுதிப் பார்த்தவை எனலாம்.

மண்மூட்டை சாலை

இரண்டு சிறுகதைகள், இரண்டு திரைப்படங்கள், ஒரு நாடகம் என்ற அளவில் திருநாள் கொண்டச்சேரியின் இந்தச் சம்பவம் ஐந்து படைப்புகளாகியுள்ளன. சம்பவம் நடந்த மூன்று ஆண்டுகளில் வந்த படைப்புகள் இவை. அண்மையில், இந்த எண்ணிக்கையிலோ, இவ்வளவு விரைவாகவோ வேறெந்த சமகாலப் பிரச்சினையும் தமிழில் பதிவாகவில்லை எனலாம். இரண்டு திரைப்படங்களில் ஒன்றான மாவீரன் கிட்டு புனைவு. குறிப்பாக வணிகத் திரைமொழியில் அமைந்த படம். அண்மைச் சம்பவங்களை எடுத்தாளுதல் என்ற முறையில் திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தை புனைவு மொழியில் இப்படம் பிரதிபலித்தது. தன் கதைக்கான கருவை திருநாள் கொண்டச்சேரி சம்பவத்திலிருந்து விரித்துக்கொண்டது.

ஆனால் திருநாள் கொண்டச்சேரி சம்பவம் ஒரு பகுதியாக – படத்தின் தொடக்கக் காட்சியாக மட்டும் அமைந்தது. ஆனால், மனுசங்கடா படம், மாவீரன் கிட்டு போலில்லை. முதலில் இப்படம் புனைவும் அல்ல; வணிகமொழியிலான படமும் அல்ல. மாற்று சினிமா. திருநாள் கொண்டச்சேரி பிரச்சினைக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம். புனைவு சார்ந்த வேறெந்த அம்சமும் அப்படத்தில் இல்லை. அதேவேளையில், இதனை ஆவணப்படம் என்றும் கூறிவிட முடியாது. அச்சம்பவம் திரைப்படத்தில் மீண்டும் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆவணப் புனைவு என்று கூறலாம்.

இரண்டு கதைகளைப் பொருத்தவரையில் போலீஸ் நேரடியாக ஒரு சிறுகதை. இரண்டு துக்கம் சிறுகதையாகவும் சிறுகதைத் தன்மையோடு கூடிய வரலாற்று வரைவாகவும் அமைந்தது என்று கூறலாம். இதழில் வெளியானபோது சிறுகதை என்று தலைப்பின்கீழ் வெளியானது. எனினும் இதனை குறுநாவல் வடிவம் எனக் கூறுலாம். இரண்டு துக்கம் கதைக்கும் மனுசங்கடா படத்திற்கும் தொடர்புண்டு. மனுசங்கடா இயக்குநர் அம்சன்குமார் திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தை படமாக்கவிருப்பதால் அதை ஒரு நாவலாக எழுதித்தரும்படி அழகிய பெரியவனிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் எழுதிய கதையே இரண்டு துக்கம்.

இதன்படி இச்சம்பவத்தை ஒரு படைப்பாக எழுதி, பின்னர் அதைப் படமாக்க வேண்டும் என்று அம்சன்குமார் திட்டமிட்டிருந்தார் என்றும் தெரிகிறது. ஆனால் ஏனோ அவ்வாறு நடக்கவில்லை. அழகிய பெரியவனின் இந்தக் கதையை அல்லாமல் தானே உருவாக்கிய திரைக்கதையையே படத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் அம்சன்குமார். படத்துடன் சேர்த்து அழகியபெரியவன் கதை, அதற்கு அம்சன்குமார் எழுதப்போகும் திரைக்கதை ஆகியவற்றை தனிநூலாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்ததையும் அழகியபெரியவன் குறிப்பிட்டுள்ளார். அவையும் கைகூடவில்லை என்று தெரிகிறது.

இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது அழகியபெரியவனின் இக்கதை திரைக்கதையை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை எனலாம். அதனால் அவர் கதையில் எப்போதும் இல்லாத அளவிற்கான முடிவு, அதிலும் திரைக்கதைக்கேற்ப சாத்தியப்பட்டதை கையாள வேண்டுமென்பதற்கான மூன்று முடிவுகள் என்றமைத்திருக்கிறார். சாதியமைப்பின் எல்லா சிக்கல்களையும், இப்பிரதிக்குள்ளே கொண்டு வந்துவிட வேண்டுமென்று எழுதியதால் கதையின்மீது வரலாறு சொல்லும் தன்மை வந்துவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

செல்லமுத்தின் சடலம் இருந்த வீடு

பிரசன்னா ராமசாமி இயக்கிய ‘எல்லா உயிர்க்கும்’ என்ற நாடகம் இமையத்தின் போலீஸ் கதையைத் தழுவியது. திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தைத் தழுவியது போலீஸ் கதை என்றால், அந்தக் கதையை தழுவியது இந்த நாடகம். இந்த நாடகத்திற்கும் மாவீரன் கிட்டு படத்திற்கும் ஒற்றுமை உண்டு. திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தைத் தொடக்கக் காட்சியில் சிறுஅளவில் சித்திரித்துவிட்டு அதிலிருந்து புனைவுக்கான மையத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது திரைப்பிரதி. நாடகப்பிரதி திருநாள் கொண்டச்சேரியின் போலீஸ் கதையை பெருமளவு சித்திரித்துவிட்டு மறுபாதியை அப்பிரச்சினையோடு தொடர்புடையதென்ற முறையில் நிலம், நிலம் பறிக்கப்பட்டு இல்லாதவர்களாக்கப்பட்ட பௌத்தர்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகளுக்கு நகர்கிறது. திரைப்பிரதி அசலிலிருந்து தொடங்கி புனைவாகிறது. நாடகப்பிரதி புனைவிலிருந்து தொடங்கி யதார்த்தத்திற்கு நகர்கிறது.

திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தைப் பிரதிபலிக்கும் ஐந்தும் யதார்த்தவாத படைப்புகளாகும். நேரடித் தன்மை கொண்டவை. திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தை அறிந்த ஒருவர் இப்படைப்புகளை படிக்கவோ, பார்க்கவோ செய்தால் இது இந்தச் சம்பவமே என்று தெரிந்துகொள்ளக் கூடிய அளவிலேயே படைப்புகள் அமைந்துள்ளன. சம்பவத்தை அப்படியே சித்திரிப்பதைத் தாண்டி புனைவின் வேறெந்த சாத்தியத்திற்கும் இப்படைப்புகள் செல்லவில்லை. எதிர்காலத்தில் இச்சம்பவத்தை அறியாத ஒருவர் இப்படைப்புகளைப் பார்க்கவோ, படிக்கவோ செய்தால் அவருக்கு இவை எத்தகைய அனுபவத்தைத் தரும் என்று சொல்லமுடியவில்லை.

ஏனெனில் சாதியமைப்பும், அதில் சுடுகாட்டுக்கான பாதைகூட விடுப்படுவதில்லை என்பதும் ‘இயல்பாக’ தெரிந்திருக்கும் பட்சத்தில் இச்சம்பவம் எந்தப் புதிய அனுபவத்தையும் தராமல்கூட போகலாம். எனவே இப்படைப்புகளில் சொல்லப்படும் சம்பவம் யதார்த்தத்தில் நடந்தது என்ற தகவல் தான் இப்படைப்புகளுக்கு ‘அர்த்தம்’ கிடைப்பதற்கான காரணமாகின்றன. சமூக அவலம் என்ற முறையிலும் சமகால ஆவணம் என்ற முறையிலும் எதிர்காலத்தில் இவை கருதப்படலாம். இந்நிலையில் இப்பிரச்சினையைப் படைக்க வேண்டுமென்று படைப்பாளிகளை எது ஈர்த்திருக்கும்? எது எழுத உந்தியிருக்கும்?

திருநாள் கொண்டச்சேரி பிரச்சினையில் இதைத் தீர்க்கவேண்டிய அரசாங்க அமைப்பு நடந்து கொண்ட முறையே இப்பிரச்சினை மீதான கவன ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஐந்து படைப்புகளிலும் இந்தப் பகுதியே விவாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க இயந்திரத்தின் அணுகுமுறையே இவற்றில் புதுமை. ஏனெனில், அவற்றில் இருப்பது ஒரு முரண்பாடு. அதாவது, சமூகப் பாகுபாடு என்ற உள்ளூர் பாரம்பரியத்திற்கு எதிராக பாகுபாட்டை களைதல் என்ற நவீன சட்டவாதம் அங்கு நிறுவப்பட வேண்டும். ஆனால் இந்த எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக நவீன அரசு இயந்திரங்கள் உள்ளூர் பாரம்பரியத்தோடு இணைந்து போகின்றன அல்லது எதுவும் செய்ய முடியாமல் பணிந்து போகின்றன.

கண்டன சுவரொட்டி

இந்தப் பாதிப்பு தான் இதை படைப்பாக எழுத வைத்துள்ளது எனலாம். இப்படைப்புகளை ஆக்கியவர்கள் எல்லோரும் தலித்துகள் அல்ல. பல்வேறு தரப்பினரும் இதன் நியாயம் உணர்ந்து இதில் ஈடுபட்டுள்ளனர். தலித் பிரச்சினையை தலித் தான் எழுத வேண்டும் என்ற தலித் இலக்கிய வரையறை தளர்ந்திருக்கிறது. ஆனால் தலித்தின் பாதிப்பு படைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் எல்லா காலத்திலும் இழப்போ பாதிப்போ படைப்பின் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் இப்படைப்புகளின் தனித்தன்மைகளையும் பொதுத்தன்மைகளையும் பார்க்கலாம்.

இப்படைப்புகளில் இமையம் எழுதிய போலீஸ் சிறுகதை உண்மைச் சம்பவமே எனினும் அதன் யதார்த்தத்தை புனைவின் தன்மைக்கு ஏற்ப மாற்றியமைக்க முற்பட்டிருக்கிறது. திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தை பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து அல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தியோர் தரப்பிலிருந்து, அதாவது, எதிர்ப்பக்கமிருந்து எழுதிப் பார்த்திருக்கிறார். சாதி என்பது பாதிக்கப்பட்டோர் பிரச்சினை மட்டுமல்ல. பாதிப்பை ஏற்படுத்தியோர் பிரச்சினையும் கூட என்ற வாதத்திற்கு இது வலுசேர்க்கிறது. பாதிப்பை ஏற்படுத்தும் பிரிவிலிருந்து பாதிப்பைத் தடுக்க வேண்டிய, ஒருவகையில் பாதிக்கப்பட்டோருக்கு அரணாகச் செல்லவேண்டிய, பொறுப்பிலிருக்கும் ஒருவனின் மனநிலையை ஆராய்வதாக இக்கதை அமைந்திருக்கிறது.

பிரச்சினையைத் தீர்க்க வேண்டியவனே பாதிப்பை உருவாக்குவோர் மனநிலையில் இருந்தால் நிலைமை என்னவாகும்? இந்தக் கதை ஏன் போலீஸை மையப்படுத்தி இருக்கிறது? போலீஸ் பார்வையில் ஏன் நகர்கிறது? பிரச்சினையைப் பேச ஏன் போலீஸை தேர்ந்தெடுத்திருக்கிறது என்கிற கேள்விகளுக்கான விடை இதில் கிடைக்கலாம். பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல வேண்டிய போலீஸே அதைச் செய்ய மறுக்கும்போது, அவனுடைய மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறது இக்கதை.

தலித் மக்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதல்

சம்பவத்தை உள்ளது உள்ளவாறே காட்டும் ஆவணத்தன்மைக்கான உதாரணமாக மனுசங்கடா படத்தைக் கொள்ளலாம். இந்த வகையில் கரு ஒன்றே என்றாலும் போலீஸ் கதைக்கு எதிரில் இப்படத்தை வைக்கலாம். அதாவது புனைவு X அபுனைவு என்று நிறுத்தலாம். திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தில் நடந்த ஒவ்வொன்றையும் வரிசைக்கிரமமாக படத்திற்குள் கொணர்ந்திருக்கிறது மனுசங்கடா. கோலப்பனின் தோழி, சாவுக்காக ஊரில் வந்திறங்கி வழிகேட்கும் போதே ஆதிக்கச் சாதியினர் தங்களுடைய வெறுப்பை வார்த்தைகளில் காட்டுகின்றனர்.

காவல்துறை அதிகாரி கோலப்பன் தரப்பை அணுகும் விதம், ஆர்.டி.ஓ.வின் நம்பகமற்ற உறுதிமொழிகள், ஆதிக்கச் சாதியினர் பாதையில் கற்களை கொட்டி வைத்தல் என்று எதையும் கூடுதலாகவோ புனைவாகவோ சேர்க்காமல் உள்ளதை உள்ளவாறு காட்டி இப்பிரச்சினையை ஆவணமாக்கியிருக்கிறார். நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தை எடுக்க முடியாததால் அச்சம்பவத்தில் நடந்திருப்பவற்றை சேகரித்து இப்படம் அதைப் போலவே சம்பவம் ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. கோலப்பன் ஊர்த்தெருவை நோக்கிப் பேசும் ஒரு வசனமும், கோபத்தில் செய்வதறியாது சாவு நடனம் ஆடுவதும், இறுதிக் காட்சியில் புதைத்த இடம்கூட அறியாததால் வீறிட்டழுவதும் இப்பிரச்சினையின் தீவிரத்தைக் கருதி இயக்குநர் சேர்த்த பகுதியாக இருக்கிறது.

இரண்டு துக்கம் கதையையும் போலீஸ் சிறுகதைக்கு எதிரில் வைக்கலாம். இது புனைகதை என்றாலும் ஆவணப்பண்பு கொண்டதாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் பிரச்சினையில் எப்படியெல்லாம் நடக்குமோ அவற்றை கதையில் கொணர்ந்துள்ளார் அழகியபெரியவன். இப்பிரச்சினைகள் இந்தியக் கிராமங்கள் பலவற்றின் உள்ளூர் யதார்த்தம் என்றாலும் இக்கதைகள் யாவும் ஒரு கதாபாத்திரத்தைப் படைத்து அதன் வழியாகவே பிரச்சினையை சொல்லியிருக்கின்றன. மகேந்திரன் (இரண்டு துக்கம்) சீனிவாசன் (போலீஸ், எல்லா உயிர்க்கும்) கோலப்பன் (மனுசங்கடா), சின்ராசு (மாவீரன் கிட்டு) ஆகியோர் பாத்திரங்களாக உள்ளனர்.

வயல் வழியே செல்லமுத்தின் சடலத்தை எடுத்துச் செல்லும் காவல்துறை

திருநாள் கொண்டச்சேரியில் இறந்த செல்லமுத்தின் பேரன் கார்த்திக் செயல்பட்டார் என்றாலும் அப்பிரச்சினை அளவுக்கு அவர் பிம்பம் பெரிதாகவில்லை. ஆனால் புனைவுகளுக்கு அப்பண்பு தேவைப்பட்டிருக்கின்றன. இந்த எல்லாப படைப்புகளிலும் கார்த்திக்கே வேறுவேறு பெயர்களில் வந்திருக்கிறார். இதுதான் வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம். திருநாள் கொண்டச்சேரி வரலாற்றில் சிறுபாத்திரமாக தெரிந்த ஒருவன் புனைவில் முக்கியமானவன் ஆகியிருக்கிறான்.

அதேபோல, இப்படைப்புகள் திருநாள் கொண்டச்சேரி சம்பவத்தை மையப்படுத்தினாலும் சமூகத் தளத்தில் நிலவும் எல்லா விதமான சாதிய நடைமுறைகளையும் சுட்டுவதற்கான படைப்புகளாகவும் விரிந்திருக்கின்றன. இரண்டு துக்கம் கதையும் போலீஸ் கதையும் அத்தகைய சாத்தியத்தை நிகழ்த்தியிருக்கின்றன. இரண்டு துக்கம் கதையில் நகரத்தில் படித்த வகுப்பினரிடையே வெளிப்படையாக அல்லாமல் நிலவும் சாதிய நுட்பம், கிராமத்தில் வாழ்ந்த கடந்த தலைமுறையினரின் நிலை, கல்வி மீதான நம்பிக்கை, நிலத்தின் மீதான உரிமையின்மை, ஆண்ட சாதிகளின் பிடிவாதம், நவீன நிறுவனங்கள் சாதியத்திற்கு ஒத்துப்போகும் தன்மை என்று எல்லாமும் ஒரே பிரதிக்குள் கொணரப்பட்டிருக்கின்றன. போலீஸ் கதையில் ஒரு கிராமத்தில் சாதிய ரீதியாக என்னென்ன நடந்திருக்கின்றன / நடக்கின்றன என்பவை நுட்பமாக காட்டப்பட்டிருக்கின்றன. அதேபோல, காவல்துறையில் சொல்லப்படாமல் நிலவும் சாதிக் கண்ணிகளும் தொடப்பட்டுள்ளன.

இக்கதைகளில் உள்ளூர் அல்லது சிறிய தலைவர்கள் பிதிபலிக்கப்பட்டிருக்கிறார்கள். சுடுகாட்டுப் பொதுப்பாதை போன்றவை உள்ளூர் யதார்த்தங்கள். அதற்கேற்ப போராடும் உள்ளூர் செயற்பாட்டாளர்கள் உண்டு. அவர்கள் மக்களோடு நேரடித் தொடர்புடையவர்கள். மாவீரன் கிட்டு படத்தில் இறந்துபோகும் காளிமுத்தே சுடுகாட்டுப் பாதைக்காக போராடி வந்த உள்ளூர் பெரியவர் தான். அவரோடு உடன் இருந்து அப்பகுதியில் பேராடுபவனே சின்ராசு. மனுசங்கடா கதையில் உள்ளூர் அளவில் இருக்கும் அண்ணன் ஒருவர் தான் கோலப்பனை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்று சாதகமான தீர்ப்பு வாங்கி வருகிறார்.

ஆனால் இறுதியில் அவர்தரும் உறுதிமொழியை நம்பித்தான் பிணத்தை வெளியே தூக்கி வருகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட தொலைவு வந்ததும் பிணத்தை போலீஸ் கைப்பற்றிக் கொள்கிறது. இதில் அண்ணனையும் போலீஸ் நம்பவைத்ததா அல்லது அண்ணனைப் பயன்படுத்தி போலீஸ் எடுத்த முயற்சியா என்று நமக்குத் தெரிவதில்லை. இந்த எல்லாவித சாத்தியத்திற்கும் உட்பட்டவர்களே உள்ளூர் செயற்பாட்டாளர்கள். இரண்டு துக்கம் கதையில் பாண்டியன் என்ற செயற்பாட்டாளர் வழக்கு போட உதவுகிறார்.

III

தமிழகத்தில் நடந்த வேறெந்த வன்முறைகளை விடவும் திருநாள் கொண்டச்சேரி மயானப் பாதைக்கான போராட்டம் இவ்வளவு படைப்புகளை உருவாக்கியிருக்கிறது. நடந்திருப்பதிலேயே இதுதான் பெரிய – கொடூரமான வன்முறை என்பது இதன் பொருளா? திருநாள் கொண்டச்சேரி வன்முறையை விடவும் கொடூரமான – பெரிய வன்முறைகள் இங்கு நடந்திருக்கின்றன. அவை சிறிய பதிவாகக் கூட இலக்கியத்தில் இடம்பெற்றதில்லை. இடம்பெறாத சம்பவங்களே அதிகம். சமூகப் பிரச்சினைகள் குறித்து படைப்புகள் எழுதப்படுவது குறித்த விவாதங்கள் எப்போதும் இருந்து வருகின்றன. தலித் இலக்கியம் எழுச்சிபெற்ற போதும் தீண்டாமையின் தனிமனித அனுபவங்கள் எழுதப்பட்ட அளவிற்கு அவற்றில் சமகால சமூக வன்முறைகள் பதிவானதில்லை. இந்தப் பின்னணியில் திருநாள் கொண்டச்சேரி வன்முறைக்கு மட்டும் படைப்புத் தளத்திலான அங்கீகாரம் எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

சில காரணங்கள் உடனடியாகத் தோன்றுகின்றன. ஒன்று தலித் இலக்கியமும் எழுத்தாளர்களும் எழுச்சிபெற்ற பின்னணி. மற்றொன்று தலித் இயக்கங்கள் உருவாகியிருப்பது. இவை தலித் அடையாளம் பற்றிய ஓர்மையை மட்டுமல்ல, தலித் பிரச்சினைகளை ஏதோவொரு விதத்தில் பொருட்படுத்த வேண்டிய, முகங்கொடுக்க அவசியத்தை சூழலில் ஏற்படுத்தியுள்ளது. தலித் ஓர்மையுடன் கூடிய திரைப்படங்களும் வெளிவரத் துவங்கிவிட்டன. மற்றொரு காரணமும் முக்கியமானது. அதாவது இது ஊடகங்களின் காலகட்டம். இது இன்றைய போக்கில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. குறிப்பாக 24 மணிநேர செய்தி சேனல்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இணைய இதழ்கள் பரவாகியுள்ளன.

அதற்கு முன்புவரை செய்தித்தாளிலோ, தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகும் செய்திகளிலோ வந்தால் மட்டுமே ஒரு பிரச்சினை வெளிவரும். அதன் தொடர்ச்சியைத் தெரிந்துகொள்ள மறுநாள்வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்கிடையே எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிடும். இவ்வாறு நாள், நேரம் பார்த்து வெளியாகும் செய்திகள் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றிலும் பெரும்பாலும் சாதித் தொடர்பான வன்முறைகள் இடம்பெறாது. இடம்பெற்றாலும் அவற்றிற்கு வேறு காரணம் காட்டப்படும். ஆனால், இப்போதைய ஊடகச் சூழல் இவற்றைத் தலைகீழாக மாற்றிவிட்டது எனலாம்.

24 மணிநேர செய்தி சேனல்கள் உருவாகிவிட்ட பின்னால் அவைகளுக்கு செய்திகள் தேவைப்படுகின்றன. பிரச்சினை ‘புதுமை’யானதாக இருக்கும்போது நேரடி ஒளிபரப்பு தொடங்கி முடியும்வரை தொடருவதாக அமைகிறது. இணைய இதழ்கள் ஒருநாளின் குறிப்பிட்ட நேரத்திற்கொருமுறை செய்திகளை புதுப்பிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. குறிப்பிட்ட பிரச்சினையை ஆழமான பார்வையிலிருந்தும் அக்கறையிலிருந்தும் அணுகுகின்றனவா என்கிற கேள்விக்கே இப்போக்கில் அவகாசம் இல்லாமல் போய்விடுகின்றது. பரபரப்பு, அவசரம் என்கிற நோக்கிலிருந்து இவை செய்திகளாகின்றன. முன்புபோல இதுபோன்ற பிரச்சினையில் கருத்தே சொல்ல முடியாத நிலை அரசியல் கட்சிகளுக்கு இருப்பதில்லை. செய்தி சேனல்களின் விவாதங்களுக்கான கருப்பொருளாகவும் மாறிவிடுகின்றன.

இவற்றோடு மற்றொரு பிரதான போக்கையும் இணைத்துப் பார்க்க வேண்டும். முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள். இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணருபவர்கள் செய்தியாளர்களே என்கிற வரையறைகள் தகர்ந்திருக்கின்றன. எதிரும் புதிருமாக பதிவுகள், படங்கள், விவாதங்கள் என்று அமைகின்றன. குறிப்பாக, செய்தி மதிப்பு பெற்றிராத சாதி போன்ற பிரச்சினைகள் இவற்றில் இடம்பெறுகின்றன. இவற்றிற்கும் செய்தி சேனல்களுக்கும் இடையே செய்தி பரிமாற்றம் சொல்லாமலேயே நடக்கின்றன.

அதுகாறும் சாதியப் பார்வையோடு சமூக வன்முறைகளை வெளியிட முடியாத ஊடகங்களின் அதிகாரம் இச்சூழ்நிலையால் தகர்ந்திருக்கிறது. இப்பின்னணியில் தான் திருநாள் கொண்டச்சேரி வன்முறையைப் பார்க்க வேண்டும். இப்பிரச்சினை பரவலாக ஊடகங்களில் இடம்பெற்றது. விவாதங்கள் நடந்தன. முன்னணி அச்சு இதழ்களில் செய்திக் கட்டுரைகளும் தலையங்களும் (ஆனந்த விகடன்) இடம்பெற்றன. பிணம் எடுக்கும் மூன்று நாட்கள் வரையிலும் இப்பிரச்சினையின் அடுத்தடுத்தக் கட்டங்களை நேரலையாகத் தரும் வாய்ப்பு உண்டானது.

ஊடகங்களின் தலையீடு பற்றிய குறிப்புகள் இப்படைப்புகளிலே இடம்பெற்றிருப்பதைக் கூட இதற்கான சான்றாகக் கொள்ளலாம். போலீஸ் கதையில் பிணத்தைத் தூக்கிச் செல்வது போன்ற படம் செய்தித்தாளில் வெளியானதாலேயே போலீஸ்காரனான சீனிவாசனுக்கு மானப் பிரச்சனை எழுகிறது. கதையில் மூன்று இடங்களில் ஊடகங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஓரிடத்தில் “பேப்பர்காரனும், டி.வி.காரனும் பண்ற அட்டகாசம் தான் இப்ப பெருசா இருக்கு. இப்ப அவனுவோ தான் கலவரத்த பெருசாக்கறானுவோ, உண்டாக்குறானுவோ” என்கிறது போலீஸ்காரரின் குரல். ஊடகங்கள் பற்றிய எதிர்மறைப் பதிவு இது. இவை முழுக்க சமகாலச் செய்தி சேனல்கள் பற்றிய குறிப்பு. இதே குறிப்பு அக்கதையைத் தழுவிய நாடகத்திலும் இடம்பெற்றுள்ளது.

மனுசங்கடா படத்தில் பிணத்தைத் தூக்கமுடியாமல் காத்திருப்பதை ஒட்டி ஊருக்குள் செய்தி சேனல் ஒன்றிலிருந்து செய்தியாளரும் கேமராமேனும் வருகிறார்கள். அவர்கள் செய்தி சேகரிக்கப் போக முடியாத வண்ணம் தடை ஏற்படுத்தும் காட்சி படத்தில் அமைகிறது. இரண்டு துக்கம் கதையில் சென்னை சென்று நீதிமன்றத் தீர்ப்பு பெற்றுத் திரும்பும்போது மகேந்திரனுடன் அவனுக்கு உதவிய பாண்டியனும் ஆங்கில நாளேடு ஒன்றின் செய்தியாளரும் வருகின்றனர். இறுதிவரை அவர்கள் இருக்கின்றனர். தலித் பிரச்சினைகள் தமிழைவிட ஆங்கில ஏடுகளில் அதிகம் இடம்பெறும் என்பதைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

சின்னச்சாமியின் பாடையைத் தூக்கி வரும்போது சிக்கல் வருகிறது. ஊர்வலத்தையும் அவர்கள் பேசுவதையும் கேமராவில் பதிவாக்கிக் கொண்டிருந்த செய்தியாளரை அப்போது பார்க்கும் எஸ்.பி. மேலும் பதற்றமாகிக் கத்துகிறார். “அங்க யாருய்யா இது? அந்த கேமராவ நிறுத்தச் சொல்லுயா’ என்கிறார். எனவே இப்பிரச்சினையில் ஊடகங்களின் தலையீடு முக்கியமாக இருந்ததையும் அவை எதிர்மறையாகப் பார்க்கப்பட்டன என்பதையும் அப்பிரதிகள் மூலமாக விளங்கிக் கொள்கிறோம்.

ஊடகங்களால் தான் படைத்தார்கள் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, இக்காலகட்டத்தின் ஊடகத் தாக்கமும் இவர்களிடையே இப்பிரச்சினை பற்றிய யோசனையையும் அழுத்தத்தையும் மறைமுகமாகவேனும் உருவாக்கியிருக்கும். தீவிர படைப்பாளிகள் அன்றாடத்திலிருந்து புறமெய்யாக விலகியிருந்தாலும் உள்மெய்யாகவேனும் தாக்கத்தைப் பெறவே செய்வார்கள். அதைவிட முக்கியமானது படைப்பூக்கத்தோடு தொடர்பில்லாத வேறு ஏதோ ஒன்றுகூட படைப்புக்கான காரணியாக அமைந்துவிட முடியும் என்பது தான்.

இங்கு வேறொரு கேள்வியெழுகிறது. ஊடகப் பரவலாக்கம் தான் இத்தனை படைப்புகள் உருவாவதற்குக் காரணமென்றால் எத்தனையோ பிரச்சினைகள் நடந்தும் இச்சம்பவம் மட்டும் படைப்புகளாகி இருப்பதற்குக் காரணம் என்ன?  மனித உணர்ச்சிகளில் மரணமும் அதை அடக்கம் செய்வதும் முக்கிய இடத்தைப் பிடித்து வந்திருக்கிறது. அந்தப் பிரச்சினை எப்போதும்  உணர்ச்சிப்பூர்வமாகவும் படைப்பாளிகளை ஈர்ப்பதாகவும் இருந்து வந்திருக்கிறது. இறந்தோரைப் புதைக்க கற்றுக்கொண்டதிலிருந்தே மனித ‘நாகரிகம்’ தோன்றுகிறது. சாவுக்குப் பின் மனிதன் என்னவாகிறான் என்ற கேள்வி தத்துவார்த்தப் பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. எல்லாப் பகுதிகளிலும் எல்லாக் காலத்திலும் இது பொதுவான பிரச்சினை.

சோஃபோகிள்ஸ் நாடகம்

இந்நிலையில்தான் புதைக்கும் இடம், புதைக்கும் உரிமை, சடங்குகள் போன்றவை மனிதகுல வரலாற்றில் முக்கியமானதாகி இருக்கிறது. இறந்தோரை அச்சுறுத்துபவராகப் பார்த்த மனிதன் அவரை வழிபடுவதின் மூலம் அவற்றிலிருந்து விடுபட முற்படுகிறான். விசுவாசம், சாபம், வழிகாட்டல், அச்சம் என யாவும் கலந்ததாய் அவை இருக்கின்றன. சாவைப் பற்றிய கேள்வியோடு தொடர்புடைய படைப்புகள் உன்னத படைப்புகளாகியிருக்கின்றன. Antigone: Burying Textual – Performative Binaries (Nov 2015, University of Madras) என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வை  மேற்கொண்ட பேராசிரியர் டேவிட் வைஸ்லியுடன் (David Wisely) உரையாடிய போது அவர் சொன்ன தகவல்கள்  சில இணைப்புகளை உணர்த்தின.

பண்டைய கிரேக்க நாடக ஆசிரியர் சோஃபோகிள்ஸ் (Sophocles) எழுதிய நாடகத்தில் அரசனால் தேசத் துரோகியாக அறிவிக்கப்பட்டவனுக்கு ஆண்டிகான் சடங்கு செய்துவிட்டு வந்து அரசனிடம் அது தொடர்பாக வாதிடுகிறாள். அரசன் தன் தரப்பைப் பேசுகிறான். அவை மனித உணர்ச்சியில் சாவு பெறுமிடத்தை விவாதிப்பதாக அமைகின்றன. சாவும் சாவுச் சடங்கும் அரசியலுக்கு அப்பாற்பட்ட உணர்வோடு தொடர்பு கொண்ட விஷயம் என்று கருதுகிறாள். சாவுச் சடங்கு என்பதே நாடகத்தன்மையுடன் இருக்கும்போது அது நாடக வடிவம் கொண்டிருக்கிறது என்றார் டேவிட்.

Antigone நாடகத்தில் சாவுச் சடங்கை தேசத் துரோகம் என்னும் பெயரால் அதிகாரம் கட்டுப்படுத்துகிறது. இங்கும் அதேபோல  உள்ளூர் அதிகார விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை மீறியே பிணத்தை அடக்கம் செய்ய முற்படுகிறார்கள். அதில் இம்மக்கள் விரட்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள், அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதுவொரு உணர்ச்சிப்பூர்வமான தருணம். இந்தத் தருணம் தான் படைப்பாளிகளை அவர்களை அறியாமலேயே உள்ளூர  ஈர்த்திருக்கிறது. இவை எப்போதும் இருந்து வந்திருப்பதை தாம். அரசியல் போராட்டமாக அமைந்திருக்கிறது என்றாலும் மனிதனின் அடிப்படை உணர்ச்சியோடு இணைந்தவையாக இருக்கிறது. செவ்வியல் மரபில் கண்ணகியின் துயரமும், வழக்காற்று மரபில் துரியோதனன் படுகளமும் மரணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் பிணத்தை அடக்கம் செய்யவும் சடங்குகள் நிகழ்த்தவும் மறுப்பு எழுந்திருக்கிறதோ அங்கெல்லாம் அவற்றைப் பற்றிய படைப்புகள் எழுந்திருக்கின்றன.

*

நன்றி: திருநாள் கண்டச்சேரியின் படங்கள் வினவு தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.