பொறியியல் கலந்தாய்வை முடித்துவிட்டு நானும் என் தந்தையும் கிண்டியில் இருந்து தஞ்சாவூர் பஸ் ஏறியிருந்தோம். அன்று முழுதும் அயர்ச்சியாக இருந்தது. நான் சற்று நேரத்திலேயே உறங்கிவிட்டேன். நள்ளிரவில்தான் முழிப்பு தட்டியது. காற்றுக்காக பேருந்தின் கண்ணாடி ஜன்னலை இன்னும் கொஞ்சம் தாராளமாக திறந்து வைத்தேன். காற்று சட்டென என் முகத்தில் பட்டு அறைந்தது. இரவு நேரத்தின் குளிர் எனக்கு சற்று ஆசுவாசத்தினை ஏற்படுத்தியது. நான் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தேன். அது வரைக்கும் நான் எண்ணியிராத சிந்தனை அப்போது என்னில் எழுந்தது. நான் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.

*

அன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. காலையிலேயே கணினி மையத்தில் என் மதிப்பெண் பட்டியலைப் பார்த்து வீட்டில் தெரிவித்துவிட்டு, மதிய நேரத்தில் என் பள்ளிக்குச் சென்றேன். சூழ்ந்திருந்த ஆரவாரங்களின் புழுதி அடங்கிய பின் நாங்கள் எங்கள் பள்ளிக்கு வெளியே இருந்த ஆலமரத்தடியில் சைக்கிள்களில் அமர்ந்தபடியே குழுமியிருந்து பேசிக்கொண்டிருந்தோம்.

“டேய் நல்லவேளை. கெமிஸ்ட்ரிதான் பயந்துட்டே இருந்தேன்” என்றான் நரேந்திரன்.

“அட ஆமாடா. நான் போச்சுன்னே இருந்தேன் கெமிஸ்ட்ரில. ஜஸ்ட் பாஸ். 150 க்கு 35 மார்க்கு. ஒத்த மார்க்கு போய்ருந்தாலும் காலி” என்றான் சந்தோஷ் என் சைக்கிளை அவனது முன் சைக்கிள் டயரால் ஹாண்ட்பாரை பிடித்து இடித்தபடி. எங்கள் பேச்சுமுறையே அப்படித்தான் இருக்கும். குழுமி நின்று பேசிக்கொண்டிருந்தால் அருகிலும் எதிரிலும் நிற்பவரது தோளில் கைபோட்டுக் கொண்டோ தட்டியோ அடித்தோ பேசிக்கொள்வோம் இல்லையா? அதுபோல. எங்கள் பேச்சுகளில் எதையாவது ஆமோதித்தாலோ ஆட்சேபித்தாலோ கவனத்தைத் திருப்ப இப்படி சைக்கிளில் இடித்துப் பேசிக்கொள்வோம். அது எங்களை மீறியே நடக்கும்.

சந்தோஷ் எதையோ திடீரென நினைவுகூர்ந்து சொன்னான். “அந்த ஒத்த மார்க்கும் திருவாத்து புண்யத்துல கெடச்சுருக்கு. உங்களுக்கெல்லாம் அந்த ஒன் மார்க் கேள்வி ஞாபகம் இருக்கான்னு தெரில. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. வேற எந்த யோசனையுமே இல்லாம அதுக்கு கரெக்டா விடை எழுதியிருக்கேன்”.

அவன் சொன்ன அந்தக் கேள்வி எங்களுக்கு நினைவிருந்தது. அது சம்பந்தப்பட்ட திருவாத்தையும் அந்த நிகழ்வையும் நாங்கள் நினைவில் திரட்டிக்கொண்டோம். எனக்கும் அந்தக் கேள்விக்கு சரியாக பதிலளித்திருந்தது நினைவிருந்தது. நரேந்திரனும் வானும்கூட சரியான பதிலை எழுதியிருந்ததாய் சொன்னார்கள்.

சந்தோஷ் தொடர்ந்தான். “கண்டிப்பா சொல்வேன். நாம எல்லாரும் அந்த ஒத்த மார்குக்கு திருவாத்துக்கு கடன்பட்ருக்கோம். எனக்குத் தெரிஞ்சு நம்ம கிளாஸ்ல எல்லாருமே அந்த கேள்விக்கு கரெக்டா பதில் எழுதிருப்பானுவ. திருவாத்து என் கொல சாமி. என்னை பாசாக்கி விட்டுருக்கு”

வான்குமாரின் சைக்கிளை இடித்து அருகிலிருந்த மணியண்ணன் சர்பத் கடையைச் சுட்டிக்காட்டி, “எல்லாருக்கும் சர்பத் சொல்லட்டா?” என்றான்.

“அண்ணா, குலுக்கி சர்பத் நாலு போடுங்கண்ணா” என்றான் அங்கிருந்தபடி.

அது தள்ளுவண்டிக் கடை. மணியண்ணனின் பையனும் எங்கள் பக்கத்து கிளாஸில்தான் படிக்கிறான். ரொம்ப காலமாகவே இங்கு அவர் கடை நடத்திவருகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் எங்கள் சைக்கிள்களோடு அந்தக் கடைக்கு அருகில் சென்று மொய்த்தோம்.

சந்தோஷ் என்னிடம், “கெமிஸ்ட்ரில 200க்கு நாலு மார்கு கொறச்சல். உனக்கு நீ எதிர்பாத்த காலேஜு கெடச்சுடுமா?” என்றான். நான் கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு அவனிடம் கிடைக்கும் என்று சொன்னேன்.

“அப்ப நீ அவனுக்கு கடன்பட்ருக்க மாட்ட, இல்ல?” என்றான்.

வான், “ஏன்டா அவனுக்குலாம் அது ஒரு மேட்டராடா? அவனப் போய் கேக்குற” என்றான்.

சந்தோஷ் சொன்னான், “சரி அவனுக்கில்லன்னா என்ன இப்போ? அண்ணன் திருவாத்து B. விக்னேஷ்வரன நெனச்சு இந்த சர்பத்தை குடிப்போம்” என்று வைத்திருந்த சர்பத்தை உயர்த்திக் காட்டி சிரித்துக்கொண்டே குடித்தான். நாங்களும் குடித்தோம். அவன் மற்றவர்களை ஒவ்வொருவராக சுட்டிக்காட்டி, “டேய் நீங்கள்லாம் வாங்கின அந்த ஒரு மார்குல திருவாத்தோட வாசனை கலந்துருக்கு. விசுவாசம் கெடாம நடந்துக்கணும்” என்று மப்பு ஏறியவன் போல சொல்லிச் சிரித்தான்.

வான் கேட்டான், “திருவாத்து எங்கடா போனான்? ஆளப்பாக்க முடிலியே. ரிஸல்ட் பாக்கக்கூட அவன் வரலயே?”

“அவனுக்குலாம் தந்திப் பேப்பர்ல அவனோட ரோல் நம்பர் வந்தாப் போதும். இப்படி ஒவ்வொரு மார்க்கா அவன் பாத்துட்டிருக்க போறது இல்ல. நான் பாத்தேன், ஒட்டியிருந்த லிஸ்ட்ல. திருவாத்து ஆல் பாஸ்” என்றான் நரேந்திரன். பின்னர் நாங்கள் சர்பத்துக்கு மணியண்ணன் கடையில் காசு கொடுத்துவிட்டு கலைந்து சென்றோம்.

*

நான் அந்தப் பள்ளியில் பதினோராம் வகுப்பில்தான் சேர்ந்தேன். முதன்முதலாக திருவாத்தோடு அறிமுகம் ஏற்பட்டது என் பதினோராம் வகுப்பின் இரண்டாவது மாதத்தில்தான். என் வீடு மேலவீதி கவி சந்தில் இருந்தது. என் பள்ளி அரசர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சை கீழவீதியில் அரண்மனை வளாகத்திற்குள் இருந்தது. கலெக்டரின் உடனடி கட்டுப்பாட்டுக்குக் கீழ் இயங்கிய பள்ளி என்று சொல்வார்கள். எப்போதும் காலை 9:15 மணிக்கு ப்ரேயர் ஆரம்பித்துவிடும். நான் 9:13க்கு தான் என் வீட்டை விட்டு கிளம்புவேன். இரண்டு நிமிடங்களில் என் சைக்கிளில் சகாநாயக்கன் தெரு சந்தில் விட்டு, அய்யங்கடைத் தெரு வழியாகக் கடந்து, மானோஜியப்பா வீதியில் வலது பக்கம் திரும்பி, வலப்பக்கமாய் அமைந்த மேட்டில் ஏற்றினால் அரண்மணை மைதானம். அது கடந்து சரஸ்வதி மஹால் நுழைவுவாயில் வழியாக என் பள்ளி வந்தடைவேன்.

தஞ்சாவூரின் சந்துகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மிகக் குறுகிய சந்துகள். அதிகபட்சமாக ஆட்டோ நுழையலாம். இருபக்கமும் அகலமான சாக்கடைகள் ஓடும். மூடப்பட்டே இருக்காது. அதில் வரத்து குறைந்து நான் கண்டதே இல்லை. நித்தியமும் ஓடும் காலக்கணக்கு அவற்றுக்கு உண்டு என்று தோன்றும். அவற்றுக்கு மேல்தான் வாழ்க்கையை நகர்த்தியாக வேண்டும். அக்குறுகிய சந்துகளில் இடர்ப்படும் வாழ்க்கைகளுக்கு மத்தியில் சைக்கிள் ஓட்டுவது எனக்கு சவாலான விஷயம். சைக்கிள் ஸ்டாண்டில் வழியை அடைத்து நின்றுகொண்டிருக்கும் சைக்கிள்களை ஒழுங்குபடுத்திவிட்டு என் வண்டியை நிறுத்தும் போது அங்கே பள்ளி வளாகத்தில் “நீராரும் கடலுடுத்த” கேட்டுக்கொண்டிருக்கும்.

அவசர அவசரமாக உள்ளே நுழைந்து விடலாம் என்று எண்ணியிருந்த போது பள்ளி வளாகத்தின் கேட் உள்பக்கமாக மூடப்பட்டு இருந்தது. அப்போது எனக்கு துணையாக வியர்க்க விறுவிறுக்க திருவாத்து ஓடி வந்துகொண்டிருந்தான். அவனும் நானும் வெளியிலே நின்றோம். ப்ரேயர் முடிந்து கூட்டம் கலைந்த பிறகு பி.டி சார் வந்து கதவைத் திறந்து விட்டு எங்களை அணுகினார். திருவாத்து உடல் பருமனானவன். கரிய நிறம். அவன் திருவையாறிலிருந்து இங்கே படிக்க வருபவன். வீட்டில் 7:30 மணிக்கு கிளம்பிவிடுவான் என்று பின்பு கேட்டுத் தெரிந்துகொண்டேன். 8 மணிக்கு பஸ் ஏறுவான். திருவையாறில் இருந்து தஞ்சாவூருக்கு டவுன் பஸ்ஸில் வர ஒரு மணி நேரமாவது ஆகும். காலைப் பேருந்தில் அப்படியொரு கூட்டம் இருக்கும். கொடிமரத்து மூலையில் இறங்கி பள்ளிக்கு நடந்தே வருவான். அவன் நெற்றியில் சிறிய சந்தனக் கீற்று மினுங்கியது. அவன் கரிய மேனி முழுதும் பவுடர் இருந்தது. அந்த பவுடர் பரப்பில் வியர்வை துளிர்த்து, மணிமணியாக அவன் நெற்றி மேட்டில் நின்றிருந்தது.

பி.டி சார் எங்களை அழைத்தார். எந்த கிளாஸ் என்று விசாரித்துவிட்டு இருவருக்கும் செவிளில் ஓர் அறை விட்டார். என்னைப் பார்த்து, “ஒவ்வொரு வாட்டியும் சொல்லிட்டுருக்க முடியாது, புரியுதா?” என்றார். நாங்கள் இருவரும் கொஞ்சம் கலங்கிப் போயிருந்தோம். பின்னர் கன்னத்தில் கை வைத்தபடியே, எங்கள் வகுப்புக்கு நடந்தோம். அப்போது முதல்முறையாக அவன் என்னைப் பார்த்து சிரித்தான். நான் பதில் சிரிப்பு சிரித்தேன்.

*

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, எனக்கு அந்தப் பள்ளியில் நட்பு வட்டம் கூடியது. வான்குமார், நரேந்திரன், சந்தோஷ் இவர்கள் மூவரும் நீண்ட காலமாகவே நண்பர்கள். இப்பள்ளியிலேயே தொடர்கிறார்கள். என்னால் அவர்களுடன் பொருந்திப்போக முடிந்தது. அப்போது தமிழ் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. காலைப் பொழுதின் முதல் வகுப்பு. தமிழய்யா புகழேந்தி சார், “பல்சான்றீரே பல்சான்றீரே பயனின் மூப்பில் பல்சான்றீரே. நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்கிற செய்யுளை விளக்கிக்கொண்டிருந்தார்.

நாங்கள் கடைசிக்கு முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தோம். ஒரு பெஞ்சுக்கு ஆறு பேர் அமர்ந்திருப்போம். திருவாத்து கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தான்.

சந்தோஷ் ஒரு சிணுங்கு சிணுங்கினான். அவ்வப்போது கடைசி பெஞ்சை திரும்பிப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“என்னடா?” என்றான் அருகில் இருந்த வான்குமார். நான் அவர்கள் பக்கம் திரும்பவில்லை.

மீண்டும் காலால் அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்த நரேந்திரனை இடித்தான் சந்தோஷ்.

“டேய் நான் சொன்னேன்ல அந்த வாடை வருதுடா” என்றான் சந்தோஷ்.

“டேய் அமைதியா இருடா”

கொஞ்சம் நேரத்திற்குப் பிறகு, வான் சொன்னான், “டேய் ஆமாடா. அந்த வாடை ஒரு மாதிரி வருதுடா”  என்றான்.

நரேந்திரனும், “ஆமாம்” என்றான்.  என் கைகளை இடித்துத் தட்டி, “என்னடா உனக்குத் தெரியுதா?” என்றான் சந்தோஷ்.

“டேய் அமைதியா கவனிடா” என்றேன்.

தமிழய்யா, எங்கள் சலசலப்பை உணர்ந்து என்னவென்று கேட்டார்.

“ஒன்னுமில்லை சார்.”

“என்னடா?” என்று அருகில் வந்தார். எங்களை எழுந்து நிற்கச்சொன்னார். எங்கள் பெயர்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். எங்கிருந்து வருகிறோம் என்கிற விபரத்தையும். சந்தோஷ் அடிக்கடி பின்பக்கம் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்ததனால் பின் பெஞ்சுகாரர்களையும் விசாரித்தார்.

திருவாத்தை எழுப்பி “உன் பேர் என்ன?” என்றார்.

“B. விக்னேஷ்வரன் சார்” என்றான்.

“எந்த ஊர்லேந்து வர?”

“திருவாத்துலேந்து வரேன் சார்” என்றுவிட்டான். அவன் சொன்ன விதத்தைக் கேட்டு வகுப்பறையே சிரித்துவிட்டது.

புகழேந்தி சார் சுற்றி ஒரு பார்வை பார்த்தவுடன் வகுப்பு அமைதியானது. அந்த வார்த்தை என்னவென்று சாருக்கு சட்டெனப் புரிந்தது. அவருக்கும் அது பழக்கப்பட்ட ஊர்தான் என்று தெரிந்தது. “திருவையாத்துல எங்க?” என்று கேட்டார். பின்னர்தான், ‘ஐயாறு ச. புகழேந்தி’ என்ற அவர் முழுப்பெயரையும் பொருத்திப்பார்த்து அவரும் திருவையாற்றுக்காரர்தான் என்று புரிந்துகொண்டோம். அன்றிலிருந்து திருவாத்தை அவர் கனிவோடு நடத்தினார். தினமும் வகுப்பிலோ வெளியே எங்கேயாவதோ பார்த்தால் ஐந்து நிமிடம் அவனிடம் வந்து ஊர் விவகாரங்களைக் கேட்டறிவார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் அவனுக்கு “திருவாத்து” என்ற பட்டப்பெயர் வந்தது.

ஒருவகையில் எங்களுக்கு அது வசதியாக மாறிப்போனது. எங்கள் வகுப்பில் திருவாத்தைச் சேர்த்து மொத்தம் 5 விக்கிகள் இருந்தனர். அவர்கள் S. விக்னேஷ்வரன், B. விக்னேஷ்குமார், R. விக்னேஷ்வரன், P. விக்னேஷ். அவர்களை முறையே சவிக்கி, பவிக்கி, ரவிக்கி, பிவிக்கி என்று அழைத்தோம். அவர்களின் இனிஷியலை சேர்த்துக்கொண்டு சற்று நாராசமாக கெட்ட வார்த்தை போல ஒலிக்கக்கூடிய  இப்பெயர்களை நாங்கள்தான் சூட்டினோம். B. விக்னேஷ்வரனான திருவாத்துக்கு B. விக்னேஷ்குமார் பெயரோடு கிளாஷாகி குழுப்பம் ஏற்பட்டுவிடுமே என்று நினைத்து இச்சந்தர்ப்பத்தின் வாயிலாக அவனுக்கு “திருவாத்து” என்ற பெயரை வைத்துவிட்டோம்.

*

அன்று மாலை நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். “அந்த வாசனை தமிழய்யாவுக்கு அடிச்சுருக்கும்டா. அவர் மூக்க நான் கவனிச்சு பாத்துட்டே இருந்தேன்” என்றான் சந்தோஷ்.

பிறகு, “அந்த வாடை என்னவோ திருவாத்து மேலேந்து தான் வருதுன்னு தோனுது” என்றான்.

“எப்படிடா சொல்ற?”

“ஆமா போன வாரம் திருவாத்து ஒரு நாள் லீவுல்ல. அப்போ நான் கிளாஸ்குள்ள நொழைஞ்ச போது அந்த வாடையே இல்ல.”

“என்ன வாடைடா அது?”

“பழக்கப்பட்ட வாடையா தான் தெரியுது. ஆனா என்னன்னு புடிபடமாட்டேங்குது. இந்த எடத்துக்கு அது பொருத்தமான வாடை இல்ல. தூசி – தும்ம நெடியோ ஈர வாடையோ வேர்வ நாத்தம் மாதிரி எதுவான்னாலும் அதுவும் கெடையாது. என்னன்னு தெரியல”

நாங்கள் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். அவன் அதிலேயே இருந்தான்.

பின்னர் ஒரு நேரத்தில், “எந்த வாடையயும் நம்மலால கண்ணால பாக்க முடியாது. ஆனா சில வாட்டி ஏதோ ஒரு எடம் அந்த மாதிரி ஒரு வாடையா நம்ம மனசில பதிஞ்சிருக்கும். அந்த மாதிரி ஒரு எடத்துக்கு போனா என்னன்னு கண்டுபுடிச்சுறலாம்.” என்றான். பின்னர் அவனாகவே, “கண்டுபுடிக்கிறேன் இரு. ஆனா அது என்னன்னு தெரிஞ்சுட்ட பிறகு சப்புனு ஆய்டுசுன்னா?”

நரேந்திரன் கிண்டலாகச் சொன்னான். “பீ வாசனைய தேடி மோருகிற பன்னி, பீய கண்டதும் முகத்த சுழிச்சுக்குமாம். அதுமாதிரி ஆய்ட போகுது பாரு”.

வான் சொன்னான், “இவன் அதயும் நோண்டாம விடுவான்னு நெனைக்கறியா?”

சந்தோஷ், “நீ சாத்து” என்றுவிட்டு தொடர்ந்தான். “எங்க ஆச்சி முந்தி வெள்ளப் பன்னி பண்ணை வச்சு நடத்திட்டு இருந்துது. சின்ன வயசுல பாத்துருக்கேன். ஊர்ல களிமேட்டுல. இப்போ அது கைமாறி போயிருச்சு. ஆச்சி அப்பப்போ பன்னிங்களுக்கு கெழங்கு வைக்கும். எப்படி தெரியுமா? கெழங்க அடில பொதச்சு அது மேல காய்கறி சத்தையலாம் போட்டு கூளத்த மூடிரும். அப்றம் மூடின கூளத்து மேல பன்னீங்கள விடும். இது மாதிரி எப்போதும் பண்றது இல்ல. எப்பாயாவது தான். நான் ஏன்னு கேட்ருக்கேன். அதுக்கு சொல்லும். இப்படி பண்ணலன்னா பன்னீங்களுக்கு மூக்கு சிறுத்துரும்ன்னு. மூக்கு சிறுத்தா என்ன ஆகும் ஆச்சின்னு கேட்டேன். பன்னி தன்ன பன்னின்னு நம்பனுமானா அதுக்கு அது மூக்க நாம தெரிய வைக்கணும். பன்னின்னா அதோட மூக்கு தான. என்னங்கற? மூக்கு சிறுத்தா பன்னி இனமே இல்லாம போயிடுமே? அப்ப நாம எப்படி பொழப்பு பாக்குறது?

“அடில கிடக்குற கெழங்கோட வாசன அதுங்களுக்கு மூக்க வளத்துவுடும். பன்னிக்குதான் இருக்கறதுலயே மோப்ப சக்தி ஜாஸ்தி. நாய்க்குலாம் அடுத்து தான். மோப்பம்னா என்னன்னு சொல்லு. மோப்பம் புடிக்கிற நீ இங்க இருக்க. மோப்பம் புடிக்கற பொருள் அது எங்கயோ இருக்கும். அந்தப் பொருள் நம்ம மூக்கோட ஒரு பகுதிதான்னு நாம உணரும் போது நம்ம மோப்பம் தொடங்குது. நம்ம மூக்கு நம்மள தரதரன்னு இழுத்துட்டு போய் அங்க சேக்குது.

“மனுஷனுக்கு காலு தட்டுற எடத்துல பூமி. பன்னிக்கு மூக்கு தட்டுற எடத்துல தான் பூமி பாத்துக்கோ. அதுங்கள பொருத்த வரைக்கும் பூமிங்கிறது நாம நிக்கிற இந்த வெளி கெடையாது. அதுங்களுக்கு அது ஆழத்துல எங்கயோ பொதஞ்சு கெடக்குற இன்னொரு கெழங்கு தான். பூமிக்குன்னு ஒரு வாசன உண்டு. அந்த வாசனைய அடியில விளையுற இந்த கெழங்குகள்லேந்து அதுங்க உணருதுங்க. ஒவ்வொரு கெழங்கயும் பூமிக்கெழங்குன்னு நெனச்சுகிட்டு அந்த வாசனைய வச்சு மோர்ந்து மோர்ந்து நெலத்த தோண்டுதுங்க. கெடைக்கவே போகாத பூமிக்கெழங்குக்காக கூளத்த கிண்டி கெழங்கெடுக்குதுங்க.

“ஏன்னு கேளுன்னு சொல்லிட்டு ஆச்சி சிரிச்சா. ஏன் சிரிக்கிற மேல சொல்லு ஆச்சின்னு கேட்டேன். அதுக்கு சொன்னுச்சு பன்னீங்களுக்குள்ள ஒரு போட்டி. எல்லா பன்னிகளுக்கும் உள்ளுக்குள்ள பெருமாள் ஆகணும்னு ஆசை. எந்தப் பன்னிக்கு பூமிக்கெழங்கு மாட்டுதோ அது தான பெருமாள் ஆகுறது. அந்த ஆசைய நாம தூண்டணும். என்னிகாச்சும் பூமிக்கெழங்க பாத்துட மாட்டோமான்னு அதுங்கள கடந்து ஏங்க வைக்கணும். அப்பதான் தின்னு செழிக்குங்க.

“பின்ன இன்னொன்னு கூட சொல்லுச்சு. அது என்ன தெரியுமா? நாம இருக்கற இந்த பூமியே கண்ணுக்கு தெரியாத ஒரு பன்னியோட மூக்கு மேல அதோட மூக்குப்பல்லு தாங்கியபடி தான் சொழலுது. அதான் பூமி கொஞ்சம் சாஞ்ச படி இருக்குன்னு. அப்றம் நானும் எப்பயோ ஒரு வாட்டி டிஸ்கவரி சேனல்ல பாத்தேன். நாய்ங்கள விட பன்னிங்களுக்குதான் மோப்ப சக்தி ஜாஸ்தியாம். பன்னி எட்டு அடி ஆழத்துல இருக்கற கெழங்கயும் கண்டுபுடிச்சு குழி தோண்ட ஆரம்பிக்குமாம். அதுங்களுக்கு மூக்கு நெறஞ்சா போதாது. வயிறு நெறையணுமே. வாசனையை தீனியா மாத்தியாகணுமே. அதுக்கு அந்த வாசனையை அறிவா மாத்தி ஏத்திக்காம எப்படி முடியும்னுலாம் டிவில ஓடிட்டு இருந்துது.”

நான் சந்தோஷ் சொல்லிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தேன். அன்று முதல் சந்தோஷ் தன் மோப்ப படலத்தில் தன்னை அதிதீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டான் என்று மட்டும் தெரிந்தது.

வகுப்பறையில் உள்ள பிற அனைவருமே அவ்வாடையை உணரத்தொடங்கினார்கள். வகுப்பறைக்குள் நுழையும் போது சில சமயம் அது அவர்களை சற்று துணுக்குறச் செய்தது. அந்தத் துணுக்குறல் கூட அது என்ன வாடை என்று தெரியவில்லை என்பதனால்தான். அது என்னவென்று தெரிந்துவிட்டால் ஒருவேளை அது ஒன்றுமே இல்லாத விஷயமாகி மாறிப்போய் சகஜமாகி விடலாம். திருவாத்தும் அதனை அறிந்திருந்தான் என்றுதான் பட்டது. அவனும் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சகஜமாக இருந்தான்.

*

ஒன்று சொல்ல வேண்டும். எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. என் ஆறாவது வகுப்பில்தான் எனக்கு அது தெரியவந்தது. எனக்கு வாசனை என்றால் என்ன என்பதே தெரியாது. “Anosmia” என்கிற மோப்பக் குமிழ் குறைபாடு. அதாவது காது கேளாமை, கண் பார்வையில்லாமை போல மோப்ப சக்தி இல்லாமை. எவராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாத குறைபாடு. நமது மூக்கின் மேல் தளத்தில் நம் மோப்பத்திற்கான இடம் இருக்கும். அங்கே மோப்ப நரம்புகள் காணப்படும்.  ஒவ்வொரு மோப்ப நரம்பின் நுனியிலும் மோப்பத்திற்கான ஏற்பிகள் இருக்கும். அவை தான் அங்கு வந்து படியும் ஒவ்வொரு வாசனையையும் மூளைக்குக் கடத்தி உணர வைக்கும். வெறும் புரதப் பரிமாற்றம்தான். ஆனால் அந்த ஏற்பிகளில்தான் எனக்குக் கோளாறு. பிறந்ததில் இருந்தே இக்குறைபாடு எனக்கு இருக்கிறது. என் பெற்றோருக்கு அதுபற்றித் தெரியவில்லை.

எனக்கும் தெரிந்துகொள்ள முடியவில்லை. எப்படித் தெரிந்து கொள்ளமுடியும்? பார்வைக் குறைபாடாகவோ செவிக் குறைபாடாகவோ இருந்தால் எளிதில் தெரிந்துகொண்டு விடலாம். ஐந்து வயதில் ஐந்து புலன்களைப் பற்றியும் படித்திருப்போம்தான். ஆனால், ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டுப் பரிசோதித்து பார்த்திருப்போமா என்ன? எத்தனை பேருக்குத் தோன்றும்? மற்றவர்களும் என்னைப் போன்றே வாசனையற்ற உலகத்தில்தான் வாழ்கிறார்கள் என்றே வளர்ந்திருக்கிறேன். பின்புதான் அது பற்றிய பிரக்ஞையே எனக்கு உருவானது. நம் உடல் தானே நமக்குத் தெரிந்த உண்மை. அதை வைத்துத்தானே நாம் அளக்க முடியும்?

மூக்கடைத்துக் கொண்டால் வாசனையை  நுகரமுடியாமல் ஆகிவிடும் அல்லவா? அப்படி மொத்தமாக என் நாசி அடைபட்டுப் போகவில்லை. காற்று உள்நுழைந்து வெளிவரும். தடை என்பது வாசனைக்கு மட்டும்தான்.

என் அம்மா என் ஆறாம் வகுப்பில் ஒருமுறை சமையல் அறையில் எரிவாயுவை அணைக்காமல் விட்டுவிட்டார்கள். அது கசிந்து வீடு முழுதும் பரவியது. ஒரு மணிநேரம் கழித்து வந்தவள் நான் மூர்ச்சையாகி இருப்பதைப் பார்த்திருக்கிறாள். பின்னர் விஷயம் தெரிந்து அடுப்பை அணைத்துவிட்டு ஜன்னல்களை எல்லாம் திறந்து வைத்துவிட்டு என்னை எழுப்பினாள். நான் எழுந்திருக்கவே இல்லை. பின்னர் பதற்றத்துடன் என் தந்தையைத் தொடர்புகொண்டு வரவழைத்து இருவரும் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். சிகிச்சை அளித்தார்கள்.

மூர்ச்சையில் இருந்து தெளிவடைந்து எழுந்துகொண்ட பின்னர் டாக்டர் என்னைக் கேட்டதற்கு நெஞ்சில் கைவைத்து, “இங்கே எறிஞ்சது போல இருந்தது அவளோதான். அப்பறம் அப்டியே விழுந்துட்டேன் டாக்டர்” என்றேன். எதுவும் எரிவதன் மணம் மாதிரி வந்து எழுந்து போக வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா என்று அவர் கேட்டார். இல்லை என்றேன். எண்டோஸ்கோபியும் MRI ஸ்கேனும் எடுத்துப் பார்த்த போதுதான் எனக்கு அந்தக் குறைபாடு இருப்பதாகத் தெரிய வந்தது. அதனை இனி குணப்படுத்த முடியாது என்றும் சொல்லிவிட்டார்கள்.

அன்றிலிருந்து வாசனை என்றால் என்ன என்று நான் என் அம்மாவிடம் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவளும் சளைக்காமல் சொல்வாள். வெளியே இருந்து பார்த்தால் எனக்கு இத்தகைய குறை இருப்பது தெரியவே தெரியாது. இது புலப்படாத குறைபாட்டு வகைமையில் சேரும்.

கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கும் ஒருவரையோ செவிக்கருவி பொருத்தியிருக்கும் ஒருவரையோ விரைவாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் என் போன்றவருக்கு அப்படி இல்லை.  ஒவ்வொரு தடவையும் நான் இக்குறைபாடு உடையவன் என்று பிறருக்கு ஞாபகப்படுத்த வேண்டும். அந்த அசௌகரியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த அசௌகரியத்தை சந்திக்காமல் இருந்துவிட்டாலே போதும் என்று இருக்கும். என் தந்தையும் தாயும் எனக்குப் பக்கபலமாய் இருந்தார்கள். அவர்களின் துணைகொண்டு இந்தக் குறைபாட்டை என்னால் அணுகிப் பார்க்க முடிந்தது. இத்தகைய அசௌகரிய நிலைமை ஏற்படாமல் எப்படி சமாளிப்பது என்றும் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது என்றும் அவர்கள் எனக்குப் பொறுமையுடன் கற்றுக்கொடுத்தார்கள்.

என் அம்மா, அவளுக்குத் தெரிந்தவரை, வாசனை என்றால் என்ன, அதை மனிதர்கள் எப்படி உணர்கிறார்கள், ஒவ்வொரு பொருளும் எப்படி வாசனைப்படுகிறது என்றும் மற்ற புலன்கள் வழியாக அந்தப் பொருளின் தன்மையை விளக்கி அதன் வாசனையை எப்படி தொகுத்துக்கொள்ளலாம் என்றும் விளக்குவாள். அது ஒருவகையில் எனக்கு உதவியது.

வாசனை மூலமாக மனிதர்களின் கூட்டு பாவனை என்னென்ன, அவர்களது மனப்பான்மையை எப்படி அது கட்டமைக்கிறது என்றெல்லாம் சொல்வாள். அந்தக் கூட்டு பாவனையை ஒட்டி நான் எப்படி நடந்து கொள்வது என்றெல்லாம் ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன். உதாரணமாக, மூத்திரம் போய் அசுத்தமாக இருக்கும் இடத்தைக் கடக்க நேரிட்டால் மூக்கைப் பொத்திக்கொள்வது. அந்த வாடை என் நாசியைத் துளைத்து அசூயை ஏற்படுத்தாவிட்டாலும் நான் மூக்கைப் பொத்திக்கொள்வேன். இப்படி பிறரது கூட்டு பாவனையிலிருந்து கற்றுக்கொண்டேன். எல்லா சந்தர்பங்களிலும் இல்லை என்றாலும் அது ஒருவகையில் கைகொடுத்தது.

மனிதர்களும் அவர்களது வாசனையும் பற்றி அவள் ஒருமுறை சொன்னாள். தச்சு வேலையைப் பார்க்கும் ஆசாரிகளின் மேல் மரத்துகள்களின் வாசம் எப்பவுமே வரும் என்றும், மண் பானை செய்யும் குயவர்களின் மேல் மண் வாசனையைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், மளிகைக் கடையில் வேலை பார்ப்பவரை அந்த மளிகைப் பொருட்களின் வாசம் எப்படித் தொற்றுகிறது என்றும், யாகம் செய்து முடித்த பிராமணர்களின் மேல் புகைந்த நெய் மணம் ஏறி இருக்கும் என்றும் சொல்லிக்கொடுத்தாள். இப்படி நான் மனிதர்களை வைத்தும் வாசனையை அறிந்துகொண்டேன்.

இதுநாள் வரை ஒருவாறாக சமாளித்துக்கொண்டு வந்துவிட்டேன். ஆனால் அக்குறைபாடு என்னை எந்த விதத்திலும் கீழிறக்கவில்லை. நான் மற்ற மாணவர்களைப் போன்றே இருந்தேன்.

*

ஒருநாள் சந்தோஷ் எங்களிடம் வந்து சொன்னான்.

“அது என்ன வாடைன்னு கண்டுபுடிச்சுட்டேன்ல”

“பாத்தியாடா. இத ஒரு விஷயம்னு கண்டுபுடிச்சுட்டேன்னு வந்து நிக்கிறான் பாரு” என்றான் வான்குமார்.

“டேய், உனக்கு தெரியலல? தெரிஞ்சா அன்னிக்கே நொட்டிருக்க வேண்டியது தான?”

“சரி, சரி, நீ சொல்லுடா” என்றான் நரேந்திரன்.

“நரேனு டேய். அந்த வாசனை ஞாபகப்படுத்தற எடம்னு சொன்னேன்ல. தோ நம்ம நாட்டுமருந்து கடத்தெரு, காமராஜ் மார்க்கெட்டு, தஞ்சாவூர் சாக்கடை வடவாத்துல கலக்கற இடம்னு ஒரு எடம் உடாம போய் நின்னேன் தெரியுமா? நான் தேடி போகல. என் மூக்குல்ல என்னை இழுத்துட்டுப் போச்சு.  நான் நின்னாலும் என் மூக்கு நிக்க விடல பாத்துக்கோ”

“தஞ்சாவூர் சாக்கடைய மொத்தமா மூக்கால உறிஞ்சுட்டு வந்து நிக்குது நாயி” என்றான் வான்.

அவன் அதனை கவனிக்காமல் முழு ஈடுபாட்டுடன் சொல்லிக்கொண்டிருந்தான். “ஆனா ஒரு பிரயோசனமும் இல்ல. போன வாரம் களிமேட்டுல இருக்கற என் தாத்தா வீட்டுக்குப் போனேன்டா.  அங்க தான் கண்டுபுடிச்சேன். எங்க வீட்டு மாட்டு தொழுவத்துல மாட்டுக்கு தீவணம் கலக்கிட்டு இருந்த எங்க ஆச்சிய பாத்தேன். போய் நின்னா இந்த வாசன தான். என்ன வாசன தெரியுமா அது? புண்ணாக்கு இருக்குல்ல புண்ணாக்கு, நல்ல தென்னம் புண்ணாக்கு. நான் அப்படியே கையில வாங்கி மோந்து பாக்குறேன். திருவாத்து மேல வர அதே வாசம் சொட்டு கொறையாம. என்னைப் பாத்த ஆச்சி சொன்னுச்சு, “இந்த புண்ணாக்கு மணம் வேறெங்கும் வாராது பாத்துக்கோ. காவேரி தண்ணிய குடிச்சு ஏறி நிக்கிற தென்னை. அதுக்குள்ள தேங்கி நிக்கிற காவேரியோட வாசனமில்ல இதுன்னு. இந்த நாத்தம் நாறுது இத வாசனைனு சொல்றியேன்னு கேட்டேன். உங்களுக்குலாம் அப்படித்தான் தெரியும். போடான்னு வெரட்டி உட்ருச்சு.”

“அப்ப புண்ணாக்கு நாத்தம் தானா அது? ஆமாடா இப்போ புரியுது.”

“இப்ப நல்ல தூக்கிட்டு வா. அப்ப கேட்டப்போ ஒன்னும் சொல்லல”

*

எங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை ஐந்து மணிக்கு பள்ளி முடிந்த பின்னர் கெமிஸ்ட்ரி ஸ்பெஷல் டெஸ்ட் இருக்கும். வகுப்பறையில் அல்லாமல் வெளியே பள்ளி மைதானத்தில் மூன்று நீளமான வரிசைகளாக உட்கார்ந்துகொண்டு தேர்வை எழுதுவோம். அந்தந்த வாரப் பாடத்தில் இருந்து கேள்விகள் இருக்கும்.

எங்கள் பள்ளியே வேதியியல் பாடத்துக்குப் பேர் போனது. மற்ற பாடங்களில் நூறு சதவிகிதம் தேர்ச்சி இருக்குமோ இல்லையோ, வேதியியலில் பள்ளிக்கு இருந்தது. காரணம் செங்குட்டுவன் சார். அவர் கொடுக்கும் பாட வேலைகளுக்கே முழு நேரமும் செலவிடுவது போல இருக்கும். மற்ற வகுப்புகளின் போது கெமிஸ்ட்ரி ரெகார்ட் எழுதிக்கொண்டோ அன்றைய அசைன்மெண்ட் எழுதிக்கொண்டோ இருப்போம். மாட்டிக்கொள்வோம். மற்ற ஆசிரியர்கள், இப்படி அவர் தொடர்ந்து கொடுக்கும் வேலைகளில் மற்ற பாடங்களை கவனம் செலுத்த மாணவர்கள் தவறுகிறார்கள் என்று தலைமை ஆசிரியரிடம் எல்லாம் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால், அது எல்லாம் செங்குட்டுவனிடம் எடுபடவில்லை. வேண்டும் என்றால் மற்றவர்களையும் அப்படி நடத்திக்கொள்ளச் சொன்னார். அது அவர்களது சாமர்த்தியம் என்று பந்தை திருப்பி அடித்திருக்கிறார். ஒற்றை ஆதிக்கம்தான். ஆனால் மற்றவர்கள் எவரும் அவரைப் போல அல்ல.

மாணவர்கள் அவரைக் கண்டால் கழிவார்கள். அவரது பார்வையே கழிய வைக்கும். வேதியியலை அப்படி பகுப்பாய்ந்து புரியும்படி நடத்துவார். அவர் கொண்ட அந்தக் கர்வத்தை அவர் நடத்தும் விதமே சொல்லும். ஒவ்வொரு நாளும் நடத்தப்போகும் பாடத்தை அவர் அப்படி தயார் செய்துகொண்டு வருவார். இன்றைக்கு இது எடுக்கப்போகிறோம் என்ற வரைபடம் அவர் மனதில் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாள் வகுப்புக்குள் வரும்போதும் சரி, விட்டுப்போகும் போதும் சரி, அந்த வரைபடத்தை நினைவுகூர்ந்து எல்லாவற்றையும் முடித்துவிட்டோமா என்று தலையசைத்துக்கொண்டே தனியாக பேசிக்கொண்டு போவார். சில பையன்கள், “சைக்கோ, தனியா பேசிட்டு போறான் பாரு” என்பார்கள்.

முதல் வகுப்பு இங்க்லீஷ் மீடியம் பசங்களுக்கு எடுத்துவிட்டு அடுத்த வகுப்பு தமிழ் மீடியம் பசங்களுக்கு எடுப்பார். ஒவ்வொரு வேதியியல் கலைச்சொல்லும் அப்படியே தமிழில் வரும். நேரயனி, எதிரயனி இப்படி. நாங்கள் சுவர் மறைவில் சாய்ந்து ஒட்டு கேட்போம்.

வெளியில் எவராவது, “எந்த ஸ்கூல்?” என்று கேட்டு “ராஜாஸ்” என்றால், “செங்குட்டுவன் ஸ்கூலா? அவர்தானே கெமிஸ்டரிக்கு”  என்பார்கள். தஞ்சாவூர் ஜில்லாவுக்கே தெரிந்த கெமிஸ்ட்ரி வாத்தியார். அவர்தான் எங்கள் பள்ளிக்கே அடையாளம்.

அரசர் பள்ளி என்று சொன்னேன் அல்லவா? இவர்தான் உண்மையான அரசர் என்பது போல இருக்கும். தலைமையாசிரியர் பன்னீர் செல்வம் சார் தான். ஆனால் இவர்தான் அரசர். ‘சோழ தேசத்தில் இருக்கும் இந்த அரசர் பள்ளிக்கு வேற்றுநாட்டு சேரன் பெயரில் ஒரு அரசனா?’ என்று அவர் பேரை இணைத்துக்கொண்டு, அவரைப் பிடிக்காதவர்களுக்கு மத்தியில் நையாண்டிப் பேச்சு எழும். அவர்களுக்கு விஷயம் புரியவில்லை. வரலாறு தெரியவில்லை. இங்கு “அரசர்” என்று எங்கள் பள்ளிப் பெயரில் இருப்பது சோழர்களைக் குறிப்பது அல்ல. தஞ்சாவூரை ஆங்கிலேயர்களுக்கு முன்பு வரை ஆண்ட மராத்திய அரசை. அவர்களது அரண்மனைதான் இங்கே உள்ளது. அந்த அரண்மனை வளாகத்தில் அமைந்த பள்ளிதான் எங்களுடையது.

செங்குட்டுவன் தனியாக டியூஷன் நடத்த மாட்டார். அவர் நினைத்தால் அப்படியும் சம்பாதிக்கலாம். அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பலரும் அவர்களது பள்ளிகளில் பாடம் நடத்த முடையாக எண்ணிக்கொண்டு, தனியே டியூஷனில் வெறித்தனமாக நடத்தி பணம் பண்ணுவார்கள். ஆனால் இவருக்கு அப்படியொரு தேவை இருந்ததில்லை.

மற்ற ஆசிரியர்கள் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதைச் சொன்னால் “கெமிஸ்ட்ரிக்கு டியூஷன் வைக்கலன்னா என்ன இப்போ? ஸ்கூல்ல ஒக்காந்து ஃபுல்லா கெமிஸ்ட்ரி படிச்சுட்டு, மத்த பாடத்துக்குல்லாம் டியூஷன் வச்சுதானே ஆகணும்? அப்படி அவர் மற்றவர்களுக்கு வரும்படி பார்த்து கொடுக்கிறார்” என்று சொல்வார்கள். ஒருவகையில், அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தான். நான் கெமிஸ்டரிக்கு டியூஷன் வைக்கவே இல்லை. மற்றதுக்கெல்லாம் டியூஷன் வைத்திருந்தேன்.

செங்குட்டுவனைப் பொருத்தவரை தன் பள்ளி மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வளவு தான். வகுப்புகள் இல்லாத நேரங்களில் இவர் மற்ற ஆசிரியர்களுடன் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் உட்காரந்திருக்க மாட்டார். சில வருடங்களுக்கு முன்னால்தான் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு பாடத்துக்கான ஆய்வுக்கூடங்களை விஸ்தரித்து கட்டினார்கள். அப்படி கெமிஸ்ட்ரி லேபையும் விஸ்தரித்தார்கள். அங்குதான் அவருக்கான இருக்கை. அதற்கு முன்புவரை அவர் எங்கே அமர்ந்திருந்தார் என்பதெல்லாம் தெரியாது. கெமிஸ்ட்ரி லேப் மிகவும் நன்றாகவே இருக்கும். அனைத்து சாதனங்களுக்கும் குறை இருக்காது. எல்லாம் இவர் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்தது. மற்ற  லேப்களில் விஸ்தாரம் மட்டும்தான் இருக்கும்.

அந்த லேபில் சாருக்கு ஒரு அஸிஸ்டென்ட் உண்டு. அவர்தான் அந்த லேபை பாராமரித்தார். எங்கள் பள்ளியில் அந்த ஒரு லேபுக்கு மட்டும்தான் அசிஸ்டெண்ட் இருந்தார். அவரும் செங்குட்டுவனுக்கு நன்றாகத் தெரிந்தவர். அதனால்தான் அவர் கூட வைத்திருக்கிறார். அவர் என்ன படித்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் லேப் சம்பந்தமான அத்தனை விஷயமும் மனுஷனுக்கு அத்துப்படி. பிப்பெட்டில் திரவத்தை எப்படி மூச்சு பிடித்துக்கொள்ளாமல் உறிய  வேண்டும், ப்யூரட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்பதில் இருந்து அமிலக் கரைசலை கையில் பட்டுக்கொள்ளாமல் எப்படி உறிஞ்சுவது என்பது வரை முறையாகச் சொல்லிக்கொடுப்பார். அவ்வப்போது கேலி பேச்சுகளும் தெறிக்கும். ஊரை வைத்தே அவர் மாணவர்களை விளிப்பார். “என்ன கரந்தட்டாங்குடி இங்க வா, என்ன கீழவாசல் ரெக்கார்ட்டு நோட்டு கொண்டு வந்தியா இல்லையா?”

ஒருமுறை நானும் மற்றொருவனும் பிப்பெட்டின் நடு உருளைக்கு மேல் திரவத்தை இழுக்க முடியாமல் உறிஞ்சிக்கொண்டிருந்தோம். அங்குமிங்குமாக சாய்த்து ஒரே மாதிரியாக ஆட்டிக்கொண்டிருந்தோம். அவர் பார்த்துவிட்டார். ஜதி வரிசை சொல்லி கையில் தாளமிட்டுக்கொண்டு வந்து, எங்கள் பின் நின்றார்.  எங்கள் காதுகளைத் திருகி தலைகளைச் சீராக ஆட்டியபடி, “என்ன முன்னாடி ஒரு பந்தல் போட்டு மாப்பிள்ளைய பொண்ணுக்குத் தாலி கட்ட சொல்லீடுவோமா? பெரிய நாயனக்காரவுங்க. திருவீழிமலை பிரதர்ஸு. வச்சு ஊதுரானுவ” என்றார். அத்தனை பேரும் சிரித்துவிட்டனர். அவமானமாகப் போய்விட்டது.

அவரது பெயரும் பன்னீர் செல்வம் தான். அடிக்கடி பான்பராக் போட்டு வருவார். வாயின் ஓரங்களில் அது ஒட்டிக்கொண்டிருக்கும். கருப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு சைக்கிளில் வருவார். பள்ளிக்குப் பின்பக்கம்தான் அவர் வீடு இருந்தது.

அவரும் செங்குட்டுவன் சாரும் அங்கேயே தான் இருப்பார்கள். மதிய சாப்பாட்டைக் கூட அங்கேயே முடித்துவிடுவார்கள். இரசாயன நெடிகளை எல்லாம் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். கெமிஸ்ட்ரி லாபில் ஓர் உள்ளறை உண்டு. அங்கு வள்ளலார் படம் மாட்டியிருக்கும். எண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருக்கும். உள்ளே ஒரு பாய் எப்போதும் விரிந்து கிடக்கும். கெமிஸ்ட்ரி சார் அவ்வப்போது அங்கே போய் தியானம் செய்வார்.

அன்றைக்கு சந்தோஷ் திருவாத்துக்கு ஒரு அடி தள்ளி பின்னே அமர்ந்திருந்தான். அருகில் இருந்த வரிசைகளில் நானும் நரேனும் அமர்ந்திருந்தோம். சந்தோஷ் கீழே இருந்த மணலில் இருந்து சிறிய கற்களைப் பொறுக்கி எங்கள் மேல் எறிந்து எங்கள் கவனத்தைக் குலைத்தான். நாங்கள் என்னவென்று கேட்டோம்.

“புண்ணாக்கு மூட்டைய பிரிச்சி வெச்ச மாதிரி ஒரு வாடை வருது இல்லடா?” என்றான்.

இதனை முன்னிருந்து கேட்டுக்கொண்டிருந்தான் திருவாத்து. அவனைத் தான் சொல்கிறான் என்று தெரிந்திருந்தது. ஆனால் வெளியே காட்டிகொள்ளவில்லை. கொஞ்சம் உள்ளுக்குள்ளே கொந்தளித்தவனாய் பேப்பரை கொடுத்து புறப்பட்டான் திருவாத்து. சந்தோஷ் அவனை குரூரப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். நாங்களும் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்தோம். சந்தோஷ் அதில் திருப்தி அடைந்ததாகத் தெரிந்தது.

அடுத்தநாள் காலை திருவாத்து வகுப்பறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தபோது சந்தோஷ், “அந்தப் புண்ணாக்கு மூட்டைய எவன்டா பிரிச்சது? வர வர இது கிளாஸ் ரூமா இல்ல மாட்டுத் தொழுவமானே தெரில” என்றான் நக்கலாக. திருவாத்து சீண்டப்பட்டான். முகம் வியர்த்து வழிந்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டவன் போல அமர்ந்தான்.

வகுப்பறைக்கு எந்த ஆசிரியரும் வரவில்லை. பின்னிருந்து சந்தோஷ், “ம்ம்ம்மா……” என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு அடிவயிற்றில் இருந்து மாடு போல சத்தம் கொடுத்தான்.

திருவாத்து இருமுறை பொறுத்துப்பார்த்தான். அடுத்தமுறை வெறிகொண்டு குலுங்கி எழுந்து பின்னிருந்த சந்தோஷின் சட்டையைப் பிடித்து இழுத்து, “மயிரு, மரியாதை அவ்ளோ தான்” என்றான். அருகில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டோம். சந்தோஷ் சிரித்துக்கொண்டே, “கோவப் படாதடீ என் செல்ல தென்னம்புண்ணாக்கே” என்று அவன் கன்னத்தில் தட்டி, தடவிக்கொடுத்து அவனை சமாதானப்படுத்தினான்.

திருவாத்து ஒரு மாதிரியாக சமாதானப்பட்டுக்கொண்டு அமர்ந்தான். அவ்வப்போது திருவாத்தை சந்தோஷ் சீண்டிக்கொண்டிருந்தான். மற்றவர்களும் அவனிடம் இருந்து வந்த அந்தப் புண்ணாக்கு வாசனையை வைத்து கேலிகளை வெளிப்படுத்தினார்கள்.

ஒருநாள் மதிய உணவு முடிந்து வரும்போது வழக்கமாக நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். சட்டென சந்தோஷ் திருவாத்திடம், “ஏன்டா திருவாத்து, உங்க ஊர்ல தான் ஒன்னுக்கு அஞ்சாறு ஓடுதே. ஒன்னொன்னுத்தலயும் முங்கி ஏந்திரிச்சு வந்தாலே உன்ன விட்டு இந்த நாத்தம் போய்டுமே?” என்று கேட்டுவிட்டான். அதைக் கேட்ட திருவாத்து உக்கிரமாக மாறி சந்தோஷைத் தாக்கினான். அவனது நெஞ்சில் ஓங்கி ஒரு அறை. அந்த அடியின் கணத்தை தாளமுடியாதவனாக சந்தோஷ் சுருண்டு கீழே விழுந்தான். தரையில் கிடந்த அவனைப் புரட்டி எடுத்தான் திருவாத்து. நாங்கள் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டோம். எலும்பு முறிந்தது போல கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தான் சந்தோஷ். நரேனும் வானும் அவனை கூட்டிக்கொண்டு சென்றனர். திருவாத்து வியர்த்து வழிந்து ஒழுகி நின்றுகொண்டிருந்தான். கண்கள் வேறு கலங்கி இருந்தான். நான் அவனை தனியே அழைத்துச் சென்றேன். அவனைத் தொட்டபோது அவன் உடம்பில் அனல் தகித்தது.

அவன், “டவுன் பசங்க இப்படிலாம் கிண்டல் பண்ண மாட்டாங்கன்னு நெனச்சு தான் பதினொன்னாவதுக்கு இந்த ஸ்கூல்ல வந்து சேந்தேன். ஆனா நீங்களும் இப்படி பண்றீங்களேடா? இந்த மசுத்துக்கு நான் எங்கூர்லயே படிச்சுருப்பேன்” என்றான்.

“இந்த வாசனைக்கு நான் என்னடா பண்றது? என்னவிட்டு இது போக மாட்டேங்குது ” என்றான். அவன் அழுதது போல குரல் தழுதழுத்தது. அன்று முதல் அவனுடன் இன்னும் நெருக்கமாய் பழக நேர்ந்தது.

பின்னர் ஒருநாள் அவன் என்னிடம் சொன்னான். “நாங்க எங்கூர்ல செக்காட்டுறோம். எங்க கொலவழி தொழிலு அதான். எங்க பாட்டன் பூட்டன் காலத்துலேந்து செக்கு ஓட்டி எண்ணெயெடுக்குறோம். பருப்புலேந்து எண்ணைய பிரிச்செடுத்த பிறவு மீதி நிக்கிறது புண்ணாக்கு. தேங்காய் புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, கடலை புண்ணாக்குன்னு எல்லாமே இருக்கும் எங்க மில்லுல்ல. அந்த வாசனைதான் என மேல அடிக்கிறது”

“நான் இந்த வாசனைய போக்க என்னன்னவோ பண்ணிப் பாத்துட்டேன். வீட்ல எங்க அய்யாகிட்ட பேசி பாத்துருக்கேன். அய்யா, இந்த வாசனை என்ன விட்டு போவ மாட்டேங்குது. நான் என்ன பண்ணட்டும். பயலுவலாம் பள்ளிக்கூடத்துல ஒரு மாதிரி ஏறயெறங்க பாக்குறானுவ. கேலிப்பேச்சு பேசுறானுவனு சொல்லிப் பாத்தேன். நம்ம குடும்ப வாசனடா மகனே அது விட முடியாதுன்னு சொல்லிப்புட்டாரு. அத கேட்ட அப்பச்சி ஆத்தா சொல்லுச்சு, “ஏன்டா இதுக்கு போய் கொறபட்டு கெடக்கறதா? ஒன்னு சொல்லவா? நீ பொறந்த போது உங்க அம்மாவுக்கு பிரசவம் எந்த ஆஸ்பத்திரிலயும் வச்சு பாக்கல்ல. தோ அங்க ஒரு கொட்டகை உண்டு தனியா. அத இப்போ இடிச்சு அங்க இப்போ இன்னொரு ஆட்டுச்செக்கு போட்டாச்சு. அங்க தான் வச்சு பாத்தது. பாத்தது யாருங்கற உன் அப்பச்சி நான் தான். உன்ன உங்கம்மா ரத்தமும் சதைபத்துமா வெளியேத்தினப்போ அந்த பச்சிளம் வாசனைய மோருரதுக்காக உன்ன அள்ளி என் நாசிக்கிட்ட வச்சுப்பாத்தேன். அப்ப என்ன வாசனை வந்துச்சு தெரியுமா? ரத்த வாசனையோ மாமிச வாசனையோ இல்ல. இந்த புண்ணாக்கு வாசனைத் தான்னு சொல்லி சிரிச்சிச்சு” என்றான்.

நான் அவனைப் புரிந்துகொண்டேன். பின்னர் ஒரு சமயத்தில் எனக்கிருக்கும் இந்த வாசனை குறைபாட்டினை அவனிடம் எடுத்துச் சொன்னேன். அதை இங்கே நான் முதல்முறையாக அவனிடத்தில் மட்டும்தான் சொல்கிறேன் என்றும் சொன்னேன். அதைக் கேட்ட அவன் முதலில் திகைத்தான். “மெய்யாலுந்தான் சொல்லுறியா? உனக்கு வாசனையே அடிக்காதா? என் வாசனை கூடவா?” என்றான். எனக்காக அவன் வருத்தப்பட்டான்.

அடுத்தநாள் பார்த்தபோது, “எனக்கு பரவால்லன்னு தோனிப்போச்சு. நேத்து நைட்டெல்லாம் தூக்கமே வரல்ல. நீ ரொம்ப பாவம்” என்று ஆதங்கப்பட்டான்.  நான் அவனிடம் சிரித்துக்கொண்டே, ‘ஒன்றும் கவலையில்லை. நான் அதனை கடந்துவிட்டேன்’ என்றேன். “டாக்டர்லாமும் எதுவும் பண்ண முடியாதுன்னுட்டாங்களா?” என்று கேட்டான். நான் பதிலுக்கு முறுவலித்தேன். அதனை அவன் வேறு யாரிடமும் சொல்லவில்லை.

நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கியிருந்தோம். அவ்வப்போது சந்தோஷ் அவனை சீண்டிக்கொண்டு தான் இருந்தான். “என்ன திருவாத்து, நாட்டுல புண்ணாக்கு ரேட்டுல்லாம் கூடி போயிருச்சு போல” என்று வருவான். இப்போதெல்லாம் திருவாத்து முன்பு மாதிரி விழுந்து பிடுங்குவது இல்லை. “ஓடிரு நாயே” என்று எச்சரித்து ஈயை விரட்டுவது போலத்தான் அவனைக் கையாண்டான்.

*

சால்ட் அனாலிஸிஸ் பற்றி ஒரு விரிவான உரையை செங்குட்டுவன் சார் முதல் வாரம் தான் அறிமுகப்படுத்தியிருந்தார். அடுத்தடுத்த வாரங்களில் அது சம்பந்தப்பட்ட ஆய்வுக்கூட வகுப்புகள் இருக்கும் என்று கூறியிருந்தார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உப்பாக எடுத்துச் சொல்லி விளக்கினார். அந்த உப்பின் மூலக்கூறுகள் என்னென்ன, அதன் நேரயனி எதிரயனி என்னென்ன, வேறுபட்ட வேதி வினைகளில் அவை எவ்வாறு ஈடுபடும், அதன் மூலம் எப்படியெல்லாம் அவற்றைக் கண்டுகொள்ளமுடியும் என்பதெல்லாம் தான் பாடங்கள். இவர் பாடம் நடத்த லேப் அசிஸ்டெண்ட் பன்னீர் எங்களுக்கு அது சம்பந்தப்பட்ட சோதனையை மேற்கொண்டு விளக்குவார். அதனை நாங்கள் எங்கள் அப்ஸர்வேஷன் நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து வரும் வாரத்தில் அந்தக் குறிப்புகள் எங்கள் ரெக்கார்ட் நோட்டுகளில் இருக்க வேண்டும். இப்படி ஒரு பத்து உப்புகள் இருந்தன. வாரம் ஒரு உப்பு. அதற்குப் பிறகு, நாங்களே எங்களுக்கு கொடுக்கப்பட்ட உப்புகளை கண்டறியவேண்டும்.

இதற்கு முன்பு வரை கெமிஸ்ட்ரி சாருக்கு என் மேல் கொஞ்சம் மதிப்பு இருந்து வந்தது. ஒழுங்காக பாடங்களைப் பயின்று வந்திருந்தேன். ஆனால் கடந்த இரு மாதங்களாக வகுப்புத் தேர்வுகளில் நான் சோபிக்கவில்லை. நான் கொஞ்சம் லட்சியப்படுத்தாமல் அசட்டையாக இருந்துவிட்டேன்.

கெமிஸ்ட்ரி லேபின் வாசலில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். லேப் அசிஸ்டெண்ட் வழக்கமான தன் கூலிங் கிளாஸை அணிந்துகொண்டு சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். எங்கள் கூட்டத்தில் இருந்த சந்தோஷ், “தோரணையப் பாத்தியா? அப்படியே இந்த ஸ்கூலோட ஹச்.எம் ன்னு நெனைப்பு மனசுல” என்று அவரை நக்கலடித்துவிட்டான். அதுவரை சலசலப்பாக இருந்த கூட்டம் அப்போது திடீரென்று அமைதியாகி விட்டது. அவன் சொன்னது அவர் காதில் விழுந்திருக்கலாம். எங்கள் கூட்டத்தைக் கவனித்தவாறு சைக்கிள் ஸ்டாண்டை போட்டார். அவர் அத்தனை கடுப்பில் இருந்தது தெரிந்தது. இதனால் அவர் சீண்டப்பட்டாரா இல்லை முதலில் இருந்தே அவர் கடுப்பில் இருந்தாரா என்று தெரியவில்லை. எங்களை வெறித்துப் பார்த்தவாறே லேபுக்குள் நுழைந்தார்.

அவர் வந்த பின்னர் லேப் அசிஸ்டெண்ட், “போன வாரம் வரை நான் சொல்லிக் கொடுத்தாச்சு. இப்ப நீங்கதான் என்னென்னனு கண்டுபுடிக்கணும்” என்று ஒரு சால்டை எடுத்தார்.

அவர் சுற்றிமுற்றிப் பார்த்தார். அவர் கடுத்த கண்கள் எங்கள் குழுவின் மேல் அலைபாய்ந்தது.

அவர் என்னைச் சுட்டி, “மேல வீதி, நீ வா?” என்றார்.

நான் அவரருகே சென்றேன். அவர் கையில் வைத்திருந்த உப்பு என்னவென்று கண்டுபிடிக்கும்படி சொன்னார்.

நான் அதனைப் பார்த்தேன். அது வெள்ளையாக இருந்தது. அதிலிருந்து என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை.

என்னை ஒட்டுமொத்த வகுப்பறையும் பார்த்துக்கொண்டிருந்தது. நான் பதில்சொல்லத் திணறினேன்.

“என்ன கண்டுபுடிச்சுட்டியா?” என்றார்.

நான் தயங்கினேன். “என்ன, எதாவது சொல்லு?” என்றார். அவர் கண்கள் சிவப்பேறியிருந்தன.

“என்ன சொல்லு?”

“நான் என்ன சொல்லி குடுத்துருக்கேன். முதல்ல சால்ட வாங்கிப்பாத்துட்டு நாம என்ன செய்யணும். சொல்லு பாப்போம்”

அதற்கும் என்னால் அப்போதைக்கு பதில் கூறமுடியவில்லை. நினைவுபடுத்திப்பார்த்தேன். முடியவில்லை.

என் காதைத் திருகினார்.

“கலர ஃபர்ஸ்ட் பாக்கணும். கலர்ல என்னன்னு புடிபடலன்னா என்ன செஞ்சு பாக்கணும்னு சொல்லிருக்கேன்?”

நான் வாயைத் திறந்து, “ஆஆஆ” என்று கத்தி, “சார், சார் வலிக்குது சார்” என்றேன்.

“மோந்து பாக்கணும். மோந்து பாரு”.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் வேறுவழியில்லாமல் அதை எடுத்து முகர்ந்தேன்.

“இப்ப என்னன்னு சொல்லு பாப்போம்?”

“இப்பயும் எனக்குத் தெரியல சார்” என்றேன். என்னால் சொல்லக்கூடுவது அதுமட்டுமாகத் தான் இருந்தது.

அவர் எரிச்சலடைந்தார். காதைப் பிடித்து என்னை அங்குமிங்குமாக கை போன போக்கில் ஆட்டினார். எனக்கு காதுக்குள் வலித்தது.

“இன்னும் நல்லா மோந்து பாரு” என்றார்.

நான் மீண்டும் என் நாசிக்கு அருகில் வைத்து முகர்ந்தேன்.

“கண்டுபுடிக்க முடில சார்” என்றேன்.

“என்ன நக்கல் மயிறா?” என்றார். “கூட்டமா நின்னுட்டு கமெண்ட் அடிக்கத் தெரியுதுல்ல? என்ன வாசனை அடிக்குது சொல்லு?”

“என்ன வாசனைனு தெரியல சார்.”

அவர் எங்கள் குழுவில் நின்றிருந்த வான்குமாரை அழைத்தார். “டேய், நீ இங்க வா.”

“என்ன வாசனை வருதுன்னு சொல்லு பாப்போம்”

அவன் வேகமாக வந்து என் கையிலிருந்த உப்பை வாங்கி நாசிக்கு அருகில் வைத்து முகர்ந்து பார்த்தான். விருட்டென்று நாசியை நீக்கிக்கொண்டான்.

“சார், அழுகின முட்டை வாடை சார்” என்றான்.

“உன் ப்ரெண்டுக்கு சொல்லு அத? இந்த நெடி அடிக்குது என்னன்னு தெரியலங்கறான்” என்று அவன் கையில் இருந்து அதை வாங்கிக்கொண்டார்.

“அழுகின முட்டை வாடை வந்தா என்ன சொல்லிருக்கேன்” என குழுமியிருந்தவர்களை நோக்கிக் கேட்டார்.

“ப்ரெசன்ஸ் ஆஃப் சல்பைடு சார். பன்ஜெண்ட் ஸ்மெல்” என்றார்கள் கூட்டமாக.

பின்பு என்னைச் சுட்டிக்காட்டி “ஹ்ம்ம்ம். நான் சொல்லிக் கொடுக்கறத நல்ல கேட்டுக்கணும். இந்த மாதிரி நிக்ககூடாது” என்றார், அவர்களிடம்.

என் பக்கம் திரும்பி, “அந்த நெடி அடிக்குது, நாறுது, அத கூட  நான் கேட்டதுக்கு உன்னால சொல்ல முடியாம போச்சுல்ல?  என்னைக் கண்டா அவ்ளோ அதுப்பு, எகத்தாளம் என்னங்கடா? நக்கல் விட்றீங்க”

பதில் தெரியவில்லை என்றாலும் அந்த வாசனையையாவது நான் சொல்லியிருக்கலாம் தான். அப்படி சொல்லாமல் விட்டதனால் அது அவருக்கு கூடுதல் எரிச்சல் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் என் பிரச்சனையை நான் எப்படி சொல்வது?

“எல்லாம் சேர்க்கை. இந்த வயசுலயே தெனாவட்டு எடுத்து திரியிறீங்க” என்று எங்கள் குழுவைப் பார்த்துச் சொன்னார். அப்போது பார்த்து செங்குட்டுவன் சார் வந்தார். பன்னீர் அவரிடம் நடந்ததைச் சொன்னார். செங்குட்டுவன் சார் என்னைப் பார்த்தார். அவருக்கு எதுவென்றாலும் ஒரே பார்வை தான். கண்களைச் சுருக்கிப் பார்ப்பார். அதில் ஒரு அலட்சியம் இருக்கும்.

“நாளைக்கு நீ என் பெர்மிஷன் இல்லாம என் கிளாஸ் அட்டெண்ட் பண்ணக்கூடாது. போய் உன் பேரண்ட்ஸ கூட்டிட்டு வா. அதுக்கப்றம் என்னன்னு பேசிக்கலாம்” என்று என்னை எச்சரித்துவிட்டு சென்றார்.

வகுப்பு முடிந்த பின்னர் சந்தோஷ் என்னிடம் நடந்ததைச் சொல்லிச் சிரித்துக்கொண்டே, “மாப்ள நீ நல்லா அந்த லாப் அஸிஸ்டெண்ட்ட காண்டேத்துனடா. செம்ம காண்டாகிட்டான் அவன்” என்று சொல்லிவிட்டுப் போனான். என் விஷயம் தெரிந்த திருவாத்தும் அன்று வரவில்லை. வந்திருந்தால் மட்டும் அவனால் என்னைத் தேற்றுவதை தவிர என்ன செய்திருக்க முடியும்? ஒருவர் என்னைத் தேற்றும் அளவுக்கு நான் இருக்கவில்லை.

*

அன்று நடந்ததை என் பெற்றோர்களிடம் சொன்னேன். அவர்கள் அந்த வாரத்திலேயே செங்குட்டுவன் சாரை வந்து பார்த்தார்கள். என் குறைபாட்டைப் பற்றி எடுத்துச்சொன்னார்கள். அதன் பிறகு என் விஷயம் பள்ளி வளாகத்தில் எல்லா இடத்திற்கும் பரவிவிட்டது. ஆரம்பத்தில் என்னை வருத்தத்தோடு பார்த்தார்கள். அதன் பிறகு கனிவோடு நடத்தினார்கள். லேப் அசிஸ்டெண்ட் வருத்தப்பட்டு என்னைக் கூப்பிட்டுப் பேசினார். எனக்கு முடிந்தவரை உதவினார். பையன்களுக்கும் என்மேல் ஆரம்பகட்ட அனுதாபம் இருந்தது. பிறகு பழகிப்போனது. ஒருமுறை சந்தோஷ் என்னிடம் கேட்டான். “இத்தன நாள் வரை நம்மகிட்ட கூட சொல்லாம கமுக்கமாவே இருந்துருக்கான் பாரு. இவனுக்கு குசுவும் காத்தும் ஒன்னுதான்” என்று கிண்டலடித்தான். அந்தக் கிண்டல் எனக்குத் தேவையாக இருந்தது. அவர்களின் அனுதாபத்தில் இருந்து சகஜத்துக்கு மீள அவனது இத்தகைய கிண்டல்கள் தேவைப்பட்டன.

நிலைமையை சில மாதங்களுக்குள்ளேயே மீண்டும் பழையபடி சகஜமாக்கிக்கொண்டேன். பிறகெப்போதும் என் மேல் புகார் வராமல் பார்த்துகொண்டேன். அப்போது இருந்த கவனச்சிதறலை சரி செய்துகொண்டேன். நன்றாகவே படித்தேன். செங்குட்டுவன் சாரிடம் மீண்டும் என் பெயரை சீர் செய்துகொண்டேன். ஒரு கட்டத்தில் நான் மதிப்பெண்ணுக்காக கற்கவேண்டாம் என்று எண்ணினேன். ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்வதற்காகவே கற்றுக்கொண்டேன். எல்லா பாடங்களையுமே அப்படித்தான் எதிர்கொண்டேன். அவ்வப்போது எதிலாவது ஒன்று புரியவில்லை என்றால், அதில் ஆழ்ந்து போகமுடியாமல் போனால், அந்தந்த ஆசிரியர்களிடமே போய் கேட்டுவிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். வார இறுதி நாட்களில் மாவட்ட மைய நூலகத்திற்குச் சென்று தேடிப்பார்ப்பேன். வேதியியல் என்றால் சில நாட்கள் செங்குட்டுவன் சார் இருக்கும் வரை லேபில் இருந்து சந்தேகங்களைக் கேட்டறிந்தேன்.

அவர் பாடம் நடத்தும் அணுகுமுறையைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். எளிய தத்துவத்தைச் சொல்லி வேதியியல் கோட்பாடுகளுக்குள் நுழைவார். ‘இரும்புக்குண்டுக்கு வழியே இல்ல. தண்ணிக்கு நாலாப்பக்கம் வழி. காத்துக்கு மேல கீழ சைடுன்னு சேர்த்து எல்லா பக்கமும் வழி. எப்படி இது? ‘காற்றாதல்’னா என்ன? காத்துக்கு ஒழுங்கு இருக்கா?’ என்று ஒரு தத்துவக் கேள்வியில் இருந்து ஆரம்பிப்பார். ‘அணுக்களோட மூலக்கூறுகளோட ஒழுங்கு கூடி இருந்தா அது திடப்பொருள், அந்த ஒழுங்கு சிதைஞ்சு போனா அது திரவம், ஒழுங்கே இல்லாம போனா அது காத்தா மாறிடுது. காத்துன்னா அது கட்டுக்கடங்காமை தான். இதத்தான் ஒழுங்கின்மை விதி சொல்றது. எண்ட்ரோபினா ஒழுங்கின்மையோட அளவீடு தான்’ என்று விளக்கி வெப்ப இயக்கவியல் பாடத்துக்குள் செல்வார்.

பன்னிரெண்டாம் வகுப்பில் எங்களுக்கு 50 மதிப்பெண்ணுக்கு செய்முறைத் தேர்வுடன் கூடிய இண்டெர்னல் அசெஸ்மெண்ட் இருந்தது. அதன் ஒரு பகுதியாக நம் அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படும்படியான எளிதாக சந்தையில் கிடைக்கக்கூடிய கச்சாப் பொருட்களை வைத்துக்கொண்டு ஊதுபத்தி, சோப்பு, டிடர்ஜண்ட், ஷாம்பூ ஆகிய வாசனாதி திரவியங்களைத் தயாரித்தல் அடக்கம். மாணவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து தயாரிக்க வேண்டும். அதனை மினி ப்ராஜக்ட் என்று சொல்வோம். இதில் எல்லாருக்குமே முழு மதிப்பெண் வந்துவிடும். இதற்கு மாணவர்களிடத்தில் பெரிய ஈடுபாடு இருக்காது. முன்பு தெரிந்த சூத்திரங்களைக் கேட்டுத் தெரிந்து மரியாதைக்காக எதோ ஒன்றைத் தயாரித்துக் காண்பிக்கும் அளவுக்குத்தான் பொருட்படுத்தினார்கள். இரண்டு நபர் கொண்ட அணியாக மாணவர்கள் பிரிக்கப்பட்டார்கள். ரோல் நம்பரை வைத்து எடுக்கப்பட்ட லாட்டில் என் பெயரும் திருவாத்து பெயரும் வந்தது. நாங்கள் இருவரும் ஓரணியினர். நான் அந்தச் செயல்பாட்டில் முழுதுமாக ஈடுபடவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து நாங்கள் இதனைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தனர். பிற மாணவர்கள் போல நானும் அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். ஆனால் திருவாத்து தீவிரமாக இருந்தான். என்ன பொருள் தயாரிக்கலாம் என்று முடிவு செய்ததில் இருந்து அனைத்தையும் அவனே பார்த்துக்கொண்டான். “என்கிட்ட விட்ரு. பாத்துக்கலாம்” என்றான். நான் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

ஒருநாள் மாலை வேளை, நான் வகுப்பறையில் இருந்தேன். திருவாத்தும் வீட்டுக்குப் போகாமல் அன்றைக்கு இருந்தான். என் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டு வந்தான். திரும்பிய அவன் அவசர அவசரமாக என்னை கெமிஸ்ட்ரி லேபிற்கு அழைத்தான். தேவையான கச்சாப் பொருட்களை வாங்கி வைத்திருந்ததாக முதல்நாளே சொல்லியிருந்தான். லேப் அசிஸ்டெண்டிடம் லேபின் சாவியை வாங்கி வைத்திருக்கிறான்.

அவன் வெள்ளை நிறத்தில் எதோ கலவையைக் கலந்து வைத்திருந்தான். ஈரம் தட்டியிருந்தது. அதனை உலரப்போட்டுவிட்டு என்னை வந்து கூப்பிட்டுச் சென்றான். நான் ஈரமாய் இருந்த அந்த பவுடரை எடுத்துப்பார்த்தேன். கைகள் நறநறத்தன.

அவன், “சர்ஃப் பவுடர் பண்ணிருக்கோம்” என்றான்.

நான், “சூப்பர்” என்றேன்.

பின்னர், “என்னன்னு சொல்லி இதல்லாம் வாங்கின? என்னென்ன கலந்துருக்க?” என்றேன்.

“ஊர்ல ஒரு காரைக் கடை அண்ணன் சொல்லி வாங்குனது. அவர் சொல்லி ஊர்லேந்தே வாங்கி வந்துட்டேன். வாசனைக்கு மட்டும் எதோ லாவேண்டர் சொல்யூஷன் வாங்கி ஊத்திக்கச் சொன்னாரு. அத இப்பத்தான் தெற்கலங்கம் போய் வாங்கிட்டு வந்தேன். அத இனிமே தான் கலக்கப் போறோம்” என்றான்.

அவன் லேபில் மேடையை துடைக்கும் ஒரு கரித்துணியைக் கொண்டுவரச் சொன்னான். அவன் உலர வைத்திருந்த அந்தக் கலவையில் சில சிட்டிகை பவுடரை எடுத்து கோனிகல் ப்ளாஸ்கில் கரைத்து வைத்திருந்தான். நுரை ததும்பி நின்றிருந்தது. அதில் நான் கொண்டுவந்திருந்த துணியின் நுனியை நுழைக்கச் சொன்னான். நுழைத்து சிறிது நேரம் கழித்து எடுத்துப் பார்த்தேன். நுனியில் அப்படி ஒரு வெளுப்பு. அவன் ஓரக்கண்ணால் சைகை காட்டிச் சிரித்தான்.

நான், “சூப்பர்டா” என்றேன்.

“இது மட்டும் பத்தாது. இந்த லாவெண்டர் சொல்யூஷன கலந்து காய வைக்கணும். வாசனை அள்ளும்” என்றான்.

அவன் அதனை மிகவும் பதமாக ஊற்றினான்.

“ரொம்ப ஊத்திரக்கூடாது. வாசனையே எழாதுன்னு அண்ணன் சொல்லிருக்கார். மனசு கேக்கற வரை ஊத்தலாம். ரொம்ப பேராசப்பட்டுறக் கூடாது. வாசனையும் வராது, வெளுப்பும் வராதுன்னாரு”

“இப்ப எந்த வாசனையும் இல்லையா?” என்றேன்.

“இல்ல, இத ஊத்தினா தான். இதுல இருக்கறது இதுல இருக்கறதோட சேந்து கமக்கும்ன்னாரு”

அவன் மனது கேட்கும்வரை அதனைக் கலந்தான். “போதும்ன்னு நெனைக்கறேன்”

“இப்ப வாசனை வருதா?” என்றேன்.

“இல்ல. உடனேலாம் வராது. அதுகளுக்குள்ள இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்காது. கொஞ்சம் காய விடணும்” என்றான்.

“சரி” என்றேன்.

“சரி இத எங்க வச்சுக்கலாம்?”

“இங்கேயே”

“லேப் அசிஸ்டெட்ண்ட் ஒன்னு உட்டுட்டு போய்டக் கூடாதுன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.”

அவன் உலர வைத்திருந்த கலவையை செய்தித்தாளில் போட்டு எடுத்துக்கொண்டான்.

“பேசாம நம்ம டெஸ்க் ட்ராயர்லயே வெச்சுக்கலாம் என்ன? எவனும் தூக்க மாட்டானுவ” என்றான்.

லேபை விட்டு வெளியே வந்தோம். நான் லேபை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டேன். வகுப்பறையில் வந்து என் டெஸ்குக்கு அடியில் அந்தக் கலவையை வைத்தோம். எங்கள் பள்ளிகளின் வகுப்பறைக்கு கதவுகள் கிடையாது. இருந்தாலும் அங்கே வைத்தோம்.

“இப்ப வாசனை வருதா?” என்றேன்.

“அவசரப்படாத” என்றான்.

பின்பு, நான் சாவியை கொடுத்துக் கொள்கிறேன் என்று அவனிடம் சொல்லி அவனை கொடிமரத்து மூலையில் என் சைக்கிளில் இறக்கிவிட்டேன்.

*

மறுநாள் பள்ளிக்கு எட்டரை மணிக்கே வந்துவிட்டேன். காலையில் வீட்டிலிருந்து கிளம்பி நேராக ஃபிசிக்ஸ் டியூஷனுக்கு சென்றுவிட்டு அப்படியே பள்ளிக்கு வந்துவிட்டேன். வகுப்பறைக்குள் முதல் ஆளாக நுழைந்தேன். என் டெஸ்க்கில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பக்கத்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

சிறிது நேரங்கழித்து, நான் எழுந்து வெளியே வந்தேன். எதிரில் வந்தவர்கள், “செம வாசனை அடிக்குதே, எங்க?” என்று நாசியை உயர்த்தி முகர்ந்துகொண்டு அலைந்துகொண்டிருந்தார்கள். அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. நான் மறந்தேவிட்டிருந்தேன்.

வழியில் எவனோ சந்தோஷைப் பார்த்து, “டேய் உங்க கிளாஸ்லேந்து ஏதோ ஒரு வாட வருதுடா” என்றிருக்கிறான். இவன், “திருவாத்து வந்துருப்பானா இருக்கும்” என்றிருக்கிறான். “டேய் இது வேற எதோ வாடைடா” என்றிருக்கிறான். அதனைக் கேட்டு இவன் வேகவேகமாக வந்ததாகச் சொன்னான்.

நான் திரும்ப வகுப்பறைக்குள் நுழைவதற்குள் ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. நான் சென்று என் டெஸ்க்குக்கு அடியில் இருந்ததைச் சுட்டிக்காட்டினேன். நேற்று நடந்ததைச் சொல்லி எடுத்துரைத்தேன். பின்னர் மெதுவாக கூட்டம் கலைந்துசென்றது.

நான் வானிடம், “செம வாசனை அடிக்குதாடா வானு?” என்றேன்.

அவன், “ஆமாடா” என்றான். எப்போது அந்தக் கலவையில் வாசனை ஊறி வந்திருக்கும்? அந்தக் கணத்தை நம்மால் கண்டறிய முடிந்து சொல்லிவிட முடியுமா என்ன? இத்தனைக்கும் வகுப்பறைக் கதவுகளும் ஜன்னலும் திறந்திருந்து இரவு முழுதும் இங்கேயே இருந்திருக்கிறது. அப்படியும் அந்த வாசனை போகாமல் அதிலிருந்து ஊறிக்கொண்டே இருந்து இப்படி பரவிக்கொண்டிருக்கிறதா என்ன? அவ்வாசனையை நான் அறிந்துவிடலாகாதா?

திருவாத்து வகுப்பறைக்குள் நுழைந்தான். அவனும் நாசியை உயர்த்திக்கொண்டே வந்தான். தூரத்தில் வரும்போதே அவன் உதடு புன்னகைத்திருந்ததைக் கண்டிருந்தேன். எல்லாரும் அவனை மெச்சினார்கள். இருக்கையில் அமர்ந்தபோது, “திருவாத்து, எல்லாம் உன் கைமணமாமே? கேள்விப்பட்டேன். கலக்குறியேடா”, என்று இடக்காய் கேட்டு அவன் முதுகைத் தட்டினான் சந்தோஷ். திருவாத்து பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

வகுப்பறை முழுதும் அவ்வாசனை பரவியிருந்தது. அவ்வாசனை அனைவரது மனதிலும் நிறைந்து பரவி அவர்களது பேச்சிலும் மெச்சுதலிலும் உறைந்திருந்தது. நாள் முழுக்க அவ்வாசனை ஏதேனும் ஒரு சொல் வடிவிலோ ஒரு செய்கையின் காரணியாகவோ ஒருவரது புன்னகையாகவோ அல்லது ஆச்சரியமாகவோ வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. வகுப்பறையில் வந்த ஆசிரியர்கள் அனைவரும் அந்த வாசனையைப் பற்றி வினவினார்கள்.

அன்று, பின்மதிய வேளைக்கு மேல் எங்களுக்கு கெமிஸ்ட்ரி வகுப்பு இருந்தது. அன்றைக்கான வகுப்புக்கு லேபுக்கே வரச்சொல்லியிருந்தார் செங்குட்டுவன். நாங்கள் அக்கலவையைச் சமர்ப்பிப்பதற்காக எடுத்து வைத்திருந்தோம். எங்கள் கூடவே கொண்டுசென்றோம். லாபுக்குள் நுழைந்தோம். சாரின் அருகில் லாப் அசிஸ்டெண்டும் இருந்தார்.

திருவாத்து, “சார், மினி ப்ராஜக்ட் சப்மிஷனுக்காக சர்ஃப் பவுடர் செஞ்சுருக்கோம் சார்” என்று அக்கலவையை நீட்டினான்.

“அடுத்த வாரம்தான சப்மிஷன் சொல்லியிருந்தோம். இன்னிக்கே கொண்டு வந்துட்டீங்களா?” என்று கேட்டார். அவரும் அந்த வாடையை நுகர்ந்திருந்தார். கையில் கொண்டுவருவதைப் பார்த்திருந்த அவர், அதை முன்பே அறிந்திருந்தது போலத் தெரிந்தது. ஒரு இனிமையான புன்னகை அவரிடம் எழுந்தது.

பின்னர், “பன்னீரு இதக் கொஞ்சம் பாருங்க” என்றார்.

பன்னீர் பார்த்துவிட்டு, “நல்ல வாசம்” என்றார்.

“நேத்து சாவி வாங்கிட்டு போனியே? இதுக்குத்தானா?” என்றார் திருவாத்தைப் பார்த்து.

“ஆமாம் சார்”

பின்னர் அந்த பவுடரில் சில சிட்டிகையை எடுத்து மக்கில் கொட்டிக் கரைத்தார். அது நுரைத்துக்கொண்டு வந்தது.

அதே அழுக்குத்துணியைக் கொண்டு வந்தார். திருவாத்து என்னை நோக்கி பல்லிடுக்கில் நுனி நாக்கைத் துருத்தி குறும்பாய்ச் சிரித்துவிட்டு, “நாம டெஸ்டு பண்ணின அதே துணி” என்றான். அந்தத் துணியின் ஓரத்தில் நாங்கள் நேற்று ஏற்படுத்தியிருந்த வெளுப்பு தெரிந்தது. மொத்தமாக முக்கி எடுத்தபோது அந்தத் துணியே வெளுத்து கறைகளற்று காணப்பட்டது. பிழிந்து எடுத்து உதறியபோது அந்த வாசனை அலை எழுந்தது. அதை மற்றவர் முகத்திலிருந்து நான் கண்டுகொண்டேன்.

“நல்ல வாசனை. நல்ல வாசனை”

“அதுதான பன்னீரு” என்றார் செங்குட்டுவன்.

“ஆமா சார் அதேதான்”

சிறிது நேரத்திலேயே வாசனை லேப் முழுதும் பரவிவிட்டிருந்தது.

செங்குட்டுவன் சார், “அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். இந்த வாசனைய சாக்கா வச்சு இன்னிக்கே ஆரம்பிச்சுடறேன்” என்றார். தொடர்ந்து பாடம் எடுக்க ஆரம்பித்தார். அவர் எப்போதும் வெவ்வேறு நிறங்களில் சாக்பீஸ்களை வைத்திருப்பார். அதை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தி கரும்பலகையில் பாடம் நடத்துவார்.

“உள்ளுக்குள்ள எப்பவும் சலசலப்பாவே இருக்குற ஒன்னு. ஆனா அத்தன சலசலப்புக்கு மத்திலயும் அத ஒடைக்கவே முடியாது?” என்று கேட்டுவிட்டு கரும்பலகையில் பச்சை நிற சாக்பீஸால் படம் வரைந்தார்.

ஒரு அறுகோணத்தை வரைந்தார். அருகிலேயே இன்னொரு அறுகோணமும் வரைந்தார். முதல் அறுகோணத்தில் உட்புறமாக ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய பக்கங்களுக்கு அருகில் அவற்றுக்கு இணையாக மூன்று வெவ்வேறு நேர்க்கோடுகளை வரைந்தார். பின்னர் அடுத்த அறுகோணத்தில் இரண்டு, நான்கு, ஆறு ஆகிய பக்கங்களுக்கு அருகிலும் அதே போன்ற கோடுகளை வரைந்தார்.

“அது ஒரு ஆர்கானிக் கெமிக்கல் காம்பவுண்ட். இந்த காம்பவுண்ட் பேரு பென்ஸீன். இதுக்கு மொத்தம் ஆறு கார்பன் அணுக்கள். அந்த ஆறு கார்பனோட ஒட்டி ஆறு ஹைட்ரஜன் அணுக்கள். இது எந்த வடிவத்துல இருக்கும்னு உங்களால சொல்லிட முடியாது. ஒரே சமயத்துல ரெண்டு வடிவத்துல இருக்கும்” என்று சொல்லிவிட்டு வரைந்து வைத்த இரு படங்களையும் சுட்டிக்காட்டினார்.

“இது ஏன் இப்படி இருக்கு?”

“கார்பன் அணுக்களோட ஃப்ரீயா நிக்கிற பை (pi) எலக்ட்ரான்கள், அதாவது எங்கெல்லாம் டபுள் பாண்டுகள் இருக்கோ அந்த எலக்ட்ரான்கள் நிலையாக இல்லாம அடுத்தடுத்த கார்பன் அணுக்களுக்கு தாவித் தாவி அதுக்குள்ளயே ரவுண்டு வருதுங்க. சலசலப்புன்னு சொல்லியிருந்தேன் இல்லையா? அது இந்த எலக்ட்ரான்கள்னால தான். அதனால பென்ஸீன இப்படித்தான் வரையணும்” என்று சொல்லிவிட்டு கீழே இன்னொரு அறுகோணம் ஒன்றை வரைந்து உட்புறமாக ஒரு வட்டத்தை வரைந்தார். “இத பென்சீன் ரிங்னு சொல்லணும்.”

“இன்னொன்னும் சொல்லிருந்தேன். இந்த பென்சீன வெளிலேந்து ஒடைக்கவே முடியாதுனு. அது எதனால? எலக்ட்ரான்கள் எப்பவும் இந்த ஓயாத சலசலப்புலயே இருக்கறதுனால வெளிலேந்து ஒன்னு வந்து அதுங்கள எதுவும் செய்ய முடியல. அதனால இந்த சலசலப்புதான் அதோட ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கிறது. இந்த மாதிரி ஸ்டெபிலிட்டிய கெமிஸ்ட்ரில எப்படி சொல்றது? அரோமாட்டிசிட்டின்னு” என்று சொல்லிவிட்டு, மஞ்சள் நிற சாக்பீஸால் “aromaticity” என்று எழுதினார்.

“இதோ இவங்க ரெண்டு பேரும் கொண்டு வந்திருக்காங்களே இந்த டிடர்ஜண்ட் பவுடர். லாவண்டர் ஃபிளேவர் கலந்துருக்குற சர்ஃப் பவுடர். நல்ல வாசனை அடிக்குதே. இதுல எல்லாம் இருக்குறது பென்சீன் ரிங் ஸ்ட்ரக்ச்சர்ஸ் தான். பொதுவாவே இந்த மாதிரி காம்பவுண்ட்களை, ‘அரோமாடிக் ஹைட்ரோகார்பன்ஸ்’னு சொல்வோம். ஏன் அப்படி? சொல்லி வச்சாப்பல இது எல்லாத்துலேந்தும் இந்த மாதிரி ஒரு நல்ல வாசனை அடிக்கும். அதுக்காக அப்படி ஒரு பேரு” என்று விளக்கினார்.

மீண்டும் இன்னொரு அறுகோணத்தை வரைந்தார். உட்புறமாக ஏதாவது வரைவார் என்று எதிர்பார்த்தோம். எதுவும் வரையவில்லை. பின்னர் எங்களைப் பார்த்து, “இது பென்சீன் இல்ல. சைக்ளோ ஹெக்ஸேன். இதையும் பென்ஸீனையும் வச்சுப் பார்த்தோம்ன்னா பென்சீனைவிட இதுக்கு ஸ்டெபிலிட்டி கம்மி. ரொம்ப ரொம்பக் கம்மி. ஏன்? இதுக்குள்ள அந்த சலசலப்பு இல்லவே இல்ல. பை எலக்ட்ரான்களே கிடையாது. அதான் காரணம்” என்றார்.

அன்று வழக்கமான சலசலப்புகள் இல்லாமல் அனைவரும் உறைந்து போய் கவனித்துக்கொண்டிருந்தோம். அந்தப் பாடம் அனைவருக்குள்ளும் எளிதில் சென்றடைந்தது போல சகஜமாக இருந்தார்கள். அதற்கு அந்த வாசனைகூட காரணமாக இருக்கலாம்.

“பென்ஸீன் போன்ற ஹைட்ரோ கார்பன்களில் பை எலக்ட்ரான்களின் தாவலினால் ஏற்படும் சலசலப்பு எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது?” என்ற இந்தக் கேள்விதான் பின்னர் எங்கள் பொதுத்தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றது.

வகுப்பு முடிந்தவுடன் திருவாத்து அந்தக் கலவையை அவன் வீட்டிற்கு எடுத்துச்செல்லத் திட்டமிட்டிருந்தான். அந்தக் கலவையைப் பயன்படுத்தியே தன் பள்ளிச் சீருடையை சலவை செய்யப் போவதாகச் சொன்னான்.  அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு அந்த இன்மணம் வகுப்பறையில் வீசிக்கொண்டிருந்தது.

“வாசனையா இருந்தாலும் நாத்தமா இருந்தாலும் பரிபூரணமா உம்மேல வேதாளம் மாதிரி தொத்திக்கிது போல. என்னடா திருவாத்து?” என்றான் சந்தோஷ் ஒருமுறை அவனிடம்.

*

இன்று பொறியியல் கலந்தாய்வின் முதல்நாளின் போது நாங்கள் அன்றைய நாளின் இறுதியை நெருங்கிவிட்டிருந்தோம். நான் நினைத்த கல்லூரியில் நான் நினைத்த துறையின் கீழ் இருக்கும் இடங்கள் நிரம்ப ஆரம்பித்தன. கடைசி இரு இருக்கைகள் இருந்தன. டிஸ்ப்ளேயில், “தேவைப்படும் கட் ஆஃப் மதிப்பெண் 199” என்று நின்றிருந்தது. எனது கட் ஆஃபும் 199 தான். சான்றிதழ்களை சமர்ப்பித்து இடம்பெற்றுக்கொண்டேன். எனக்கு அடுத்து நுழைந்த நபரிடம் அவருடைய கட் ஆஃப் என்னவென்று என் தந்தை கேட்டார். அதுவும் 199 தான். இருக்கைகள் முடிந்துவிட்டன.

அப்பா, “நல்லவேளை நூலிழைல சீட் கெடச்சுப்போச்சு” என்றார்.

இப்போது நான் தவறவிட்ட ஒவ்வொரு மதிப்பெண்ணையும் நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன். கணிதப் பாடத்திலும் இயற்பியலிலும் மதிப்பெண் எதுவும் குறையவில்லை. குறைந்தது வேதியியலில் தான். அதுவும் நான்கு மதிப்பெண்கள். வேதியியலில் ஒரு மதிப்பெண் குறைந்தால் கட் ஆஃபில் கால் மதிப்பெண் குறையும். அந்தக் கால் மதிப்பெண்ணில் எனக்கு அந்த இடம் தவறிப்போயிருக்கும்.

அன்று தேர்வு முடிவு வெளியான போது சந்தோஷ் சொன்ன அந்தக் கூற்றை ஒரு கணம் நினைவுபடுத்திக்கொண்டேன். “நீங்க எல்லாரும் திருவாத்துக்கு கடன்பட்டிருக்கீங்கடா”. அது திருவாத்தின் நினைவை எழுப்பியது.

நானும் திருவாத்துக்கு கடன்பட்டிருக்கிறேன் போல. இப்போது உறக்கக் கலக்கத்திலும் மலர்ச்சியுடன் அதனை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது இந்த இரவுப் பயணத்தில் – பேருந்தில் – இருட்டில் என் உதடுகளில் ஒரு புன்னகை எழுவதை கவனித்துக்கொண்டிருப்பீர்களானால் அதற்கு திருவாத்துதான் காரணம்.

நான் மற்ற கேள்விகளுக்கு சரியாக விடை எழுதியிருந்தால் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தல் நிகழ்ந்திருக்கும். என் தவறான விடைகளுக்குமே அந்தச் சரிபார்த்தல் நிகழ்ந்திருக்கிறது தான். ஆனால் அந்தக் கேள்விக்கு மட்டும் என்னால் ஆணித்தரமாக பதிலளிக்க முடிந்திருந்தது, எந்தவொரு யோசனைகளுக்கும் இடம்கொடுக்காமல். அது உள்ளுணர்வின் வெளிப்பாடு. அறிவு சம்பந்தப்பட்டது அல்ல. அகம் சம்பந்தப்பட்டது. என் அறிவால் எனக்கு வேதியியலில் 195 மதிப்பெண்தான். அகத்தால், அந்த உள்ளுணர்வால்தான் நான் 196 மதிப்பெண். அந்தக் கேள்வியை வினாத்தாளில் பார்த்ததுமே அறிவால் அணுகாமல் ஒரு புன்னகையுடன் அணுகி, நான் மட்டும் இல்லை, அனைவருமே சரியான விடையை அளித்திருப்போம் தான்.

எங்கள் அந்த ஒற்றை மதிப்பெண்ணில் திருவாத்து கலந்துவிட்டிருக்கிறான். அந்த மதிப்பெண்ணே ஒரு கூட்டு அனுபவத்தின் விளைவுதான். அந்த ஒற்றை மனிதன், அவன் சம்பந்தப்பட்ட அந்த ஒற்றைச் சம்பவம்தான் குறுகி எங்களின் அந்த ஒற்றை மதிப்பெண்ணாக விரவியிருக்கிறது போல. ஒவ்வொரு கேள்விக்கும் இப்படி ஒரு நிகழ்வையோ அது சம்பந்தப்பட்ட நபரையோ தொடர்புபடுத்தி நினைவு வைத்துக்கொண்டால் எல்லாக் கேள்விக்கும் எளிதாக எவராலும் பதிலளிக்க முடிந்திருக்கும்.

“என்னோட வாசனை கூட அடிக்காதாடா உனக்கு?” என்று அவன் கேட்டது சட்டென நினைவுக்கு வந்தது. இந்த ஒற்றை மதிப்பெண் அவன் மணம் தானோ? அதுதான் கசிந்து வந்திருக்கிறதோ என்னவோ? அவ்வாடையை நான் உணர்கிறேனா இப்போது?

*

ஊருக்கு வந்து சேர்ந்தேன். செங்குட்டுவன் சாரை பார்த்துவிட்டு வர வேண்டும். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு அவரை நேரில் சந்திக்க நேரிடவில்லை. போனில் ஒருமுறை வாழ்த்து சொன்னார். நேரில் சென்றால் கண்டிப்பாக கெமிஸ்ட்ரியில் மார்க் குறைந்ததற்காகத் திட்டுவார். நானும் கலந்தாய்வுக்குப் பிறகு, “எந்தக் கல்லூரி?” என்ற விஷயத்தோடு அவரைச் சந்தித்துவிட்டு வரலாம் என்றிருந்தேன். இப்போதே சென்று பார்த்துவிட வேண்டும்.

அன்று அவர் அடுத்த வருட மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்காக பள்ளிக்கு வந்திருந்தார் என்று தெரிந்துகொண்டபின் மதியவேளையில் சென்று பார்த்தேன். லாபில் அவர்களது பயிற்சி தேர்வுத்தாள்களைத் திருத்திக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் வாழ்த்தி வரவேற்றார். பின்பு கோபத்தில் கடிந்துகொண்டார். “நான் என்ன பண்ணிட்டேன் உனக்கு? ஏன் கெமிஸ்ட்ரில மட்டும் மார்க் கொறஞ்சு போச்சு?” என்றார்.

நான் தலையைச் சொறிந்துகொண்டு நின்றேன்.

“சரி, அத விடு” என்றார்.

பின்னர், கலந்தாய்வு பற்றியும் நான் தேர்ந்தெடுத்திருந்த கல்லூரி பற்றியும் துறை பற்றியும் என்னிடம் கேட்டறிந்தார். அவற்றைப் பற்றி பேசி முடித்து சிறிது நேரங்கழித்து, “இப்போ என்ன சாப்டர் சார் அடுத்த பாட்ச் பசங்களுக்கு போயிட்டிருக்கு?” என்றேன்.

“க்ரிஸ்டல் டிபெக்ஸ் சொல்லிக் கொடுத்துட்டுருக்கோம்” என்றார்.

நான் அருகில் இருந்த கெமிஸ்ட்ரி புத்தகத்தை எடுத்து கைபோன போக்கில் திருப்பிக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பக்கத்தைப் பார்த்துவிட்டு சட்டென ஏதோ தோன்றியவனாகி, “சார், பென்சீனோட அரோமாட்டிசிட்டிக்கும் அதோட அரோமாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்றேன்.

அவர் நகைத்து புருவமுயர்த்தி, “இவ்ளோ நாள் உனக்கு இதக் கேக்கணும்னு தோணலயோ?” என்றார். நான் தயங்கிவிட்டு மீண்டும் சிரித்தேன்.

பின்னர் அவரும் சிரித்து, “ஒரு சம்பந்தமும் இல்லை” என்றார்.

“ஏன் சார் அப்படி?.”

“பென்சீனோட இந்த அரோமா அதோட பிசிக்கல் ப்ராப்பர்டி. அரோமாட்டிசிட்டிங்கறது கெமிக்கல் ப்ராப்பர்டி. அந்த கெமிக்கல் ப்ராப்பர்டிய வச்சு அதோட ஸ்டெபிலிட்டிய சொல்றாங்க. இந்த ஸ்டெபிலிட்டியும் ரிங் ஸ்டரக்சரும் அந்த மாதிரி வாசனை அடிக்கிற எல்லா ஆர்கானிக் காம்பவுண்ட்லயும் அமைஞ்சு போச்சு. அதனால அரோமாட்டிசிட்டின்னு பேர் வச்சுட்டாங்க. ஸ்டில், அது ஒரு மிஸ் நாமர் தான். இல்லாஜிக்கல். விளக்க முடியாமை தான். என்னதான் அறிவுன்னு சொன்னாலும் அதுக்கு அடில இன்ஸ்டிங்க்ட்ன்னு ஒன்னு இருக்குல்ல? அதுப்படி வந்த டெர்மினாலஜி அது” என்று சொல்லிச் சிரித்தார்.

நான் விடைபெற்றுக்கொண்டேன். லாப் அசிஸ்டெண்ட், “மேல வீதி. அடிக்கடி வந்து பாத்துட்டுருக்கணும், என்ன?” என்று அதட்டி என்னை வழியனுப்பி வைத்தார்.

1 comment

Shankar February 11, 2021 - 3:11 pm

அருமையான அறிவியல், இல்லை, இல்லை, வேதியல் புனைவு

Comments are closed.