இசையின் முகங்கள் (பகுதி 1): கமல்ஹாசன்

2 comments

1

இசை மானுட வாழ்வின் வினோதம். உணர்வுகளின் துல்லியத்துக்கும் உணர்தலின் நுட்பத்துக்கும் இடையிலான பெருங்கால அலசலை இசை சாத்தியப்படுத்துகிறது. சுயத்தில் மூழ்கிக் கனிந்தபடி திரும்பி வராத பாதையின் இருளே ஒளியெனப் புறப்பட்டுச் செல்கிற தீராப் பயணம் இசை. இருந்த இடத்திலிருந்தபடி நாடோடியின் உலாவலைப் பரிசளிப்பது இசையின் வசீகரம். இசையில்லாத திசையிலிருந்தபடிதான் இந்தப் பிரபஞ்சத்தின் அழிதல் தொடங்கும். இசையே இறை. இசையின்றி வாழ்வில்லை.

“Music is the one incorporeal entrance into the higher world of knowledge which comprehends mankind but which mankind cannot comprehend”. பீத்தோவன் சொல்வதை அப்படியே மேலெழுதிக் கையொப்பமிடச் சம்மதம். இசையை உணர்வதிலிருந்துதான் மனிதனின் ஆகச்சிறந்த பண்படுதல் தொடங்குகிறது என்பது என் அபிப்ராயம். பீத்தோவன் சொல்லிச் சென்றதில் இன்னொரு கூற்று எனக்கு மிகவும் உவப்பானது. எல்லா ஞானத்தையும் தத்துவத்தையும்விட இசை ஒரு உயர்ந்த வெளிப்பாடு. மனிதகுலத்தின் ஆன்மா வாழ்வதற்கான சிந்தனையைக் கண்டறிவதற்கான மின்னூடும் நிலமே இசை. என்ன அழகான தத்துவார்த்தம்!

இசையின் தேவை என்று எதையும் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இசையின் தேவை உயிர்க்காற்றின் இருப்பைப் போன்றது. இசை தேவையே இல்லை என்று சொல்பவர்களுக்குக்கூட இசை தேவை. வாழ்ந்துகொண்டே தற்கொலையைச் சிந்திக்கிறவர்களுக்கும் உயிர்க்காற்று தடையின்றிக் கிடைப்பதன் தொடர்ச்சி போல அது. இசையை வெறுப்பதாகச் சொல்வது ஒரு பாவனை. அது ஒரு அறிதல் குறைந்த இயலாமை மட்டுமே. வெளியேறுவதோ வெகுதூரம் செல்வதோகூட இசையினின்றும் அகற்றித் தராத பெருவாழ்வு ஒன்றின் துளிகள்தான் நாமெல்லாருமே. இசையின்றி ஏதுமில்லை.

இசையில் கரைபவன் தன் பிழைகளுக்கு நாணுகிறான். தன்னை உற்று நோக்குவதை இசை யாதொருவருக்கும் சாத்தியம் செய்கிறது. அது முற்றிலும் கலையாக மட்டும் உறைந்துவிடுவதில்லை. மாறாக அது தன்னை நாடுவோரிடம் சதா உரையாட விழைகிறது. முற்றுப்பெறாத உரையாடல் என்றே நம்மால் இசை குறித்த முதற்சொற்களை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. இசையின் கூடுதல் வசீகரம் அது மறுதலிப்பாளர்களையும் ஏற்பாளர்களையும் சமன் செய்வதில் அடங்கியிருக்கிறது. உதாரணமாக, எந்த ஓரு விடயப் பிடிவாதம் கொண்ட இரு தரப்பாருமே தத்தமது கூற்றுகளுக்கு ஆதரவாகவும் மறுப்பாகவும் இசையை முன்வைக்க முடியும். ஆத்திக, நாத்திகவாதங்களை எடுத்துக்கொண்டால் இரண்டு தரப்புக்கும் வலுசேர்ப்பதற்கான நுட்பமான உப-வாதங்களை இசையால் ஏற்படுத்தித் தரவியலும். ஆன்மீக வாழ்கைக்கும் லௌகீகங்களுக்கும் இடையிலான மத்தியஸ்தமாகவே இசையை முன்மொழிந்தவரும் பீத்தோவன்தான்.

கடவுளின் எண்ணங்கள் நேரடியாக என்னுள் பாய்ச்சப்படுகின்றன. என் மனதின் கண்களால் அவற்றை என்னால் காணமுடியாத போதிலும் அவை சரியான வடிவம், இசை, கோர்வைகள் ஆகியவற்றை அணிந்தபடியே தோன்றிவிடுகின்றன என்கிறார் ப்ராஹ்ம்ஸ். உலகில் மீண்டும் மீண்டும் காணக் கிடைக்கிற இசையாளர்கள் பெரும்பாலும் அதனை ஒரு இறைவடிவமாகவே முன்வைக்கின்றனர். தன் சாத்திய விளிம்புகளைத் தாண்டிய வேறோரு மலர்நிகழ்தலாகவே இசையின் உருவாக்கத்தைப் பார்க்க எண்ணுகின்றனர். எப்படித் தனக்குள் உருவானது என்பதைத் தன்னிலிருந்து வெளியேறி வந்து பிறர் எனும் கூட்டத்துள் மற்றொருவராகவே நின்றுகொண்டு வியப்பதைப் பல இசைக்கலைஞர்களும் செய்வதை உலகம் தொடர்ந்து கண்ணுற்றவண்ணமே உருள்கின்றது. இசையென்பது இயல்பான ஒன்றெனத் தன்னை ஒளித்துக்கொண்டிருக்கிற மாயம்.

இசையின் முகங்கள் மனதின் கண்களால் பார்க்க விழைபவை. இசையின் உயிராய்க் கசிவது குரல். மனிதனுக்கு இயற்கை அல்லது இறைவன் அள்ளித்தந்த செல்வம் குரல். மொழி என்னும் கலயத்தில் குரலின் மலர்களை நாளும் நிரப்பிச்செல்வது மனித வாழ்தலின் நியமம். வாழ்க்கையில் முகம், கையொப்பம், சிந்தனை இவற்றுக்கருகே இன்னுமோர் வேறுபடுதலின் பேரழகு மனிதக் குரல். பேசுவது குரலின் நியதி என்றால் பாடுவது வாழ்வின் கனிதல். அக மேதமையின் துல்லியம் மனிதன் பாடுவதினூடாகக் கசிந்து பெருகுகிறது. பாடல் என்கிற பெருவடிவத்தை இசை வந்தடைந்த பிறகு இசையின் பேருலகம் அடைபட்ட அத்தனை கதவுகளையும் திறந்தது. எல்லா இருளும் தகர்ந்தது. பாடல்களின் பெருவனமாகக் கிளைக்கத் தொடங்கியது உலகம். இந்த உலகத்தின் ஆகத்தீமையான கண்டுபிடிப்பு அணுகுண்டு என்றால் அதிநன்மையான வந்தடைதல் என்று நம்மால் இசையைச் சுட்ட முடிகிறது. பாடல்கள் வாழ்வின் ஆசீர்வாதங்கள். பாடல் மீன்கள் ஆன்மக் குளத்தில் வளைய வருவதன் நீர்ப்பூர்வத்தின் பெயரல்லவா வாழ்தல்? பாடிப் பெருகி வாழ்தல் இனிது.

இசைக்கருவிகளை யார் உற்பத்தி செய்திருப்பார்கள்..? இன்றைக்கு இருக்கக்கூடிய வடிவ ஒழுங்குக்கு இசைக்கருவிகள் வந்துசேர்ந்த நெடிய பயணம் ஆச்சரியமூட்டுகிறது அல்லவா..? முதல் கிடார் அல்லது வயலினை வாசித்து வாசித்து உருவாக்கி அதன் குறை நிறைகளைக் கற்றுக் களைந்து அத்தனை நாராசப் பேரொலித்தலைத் தாண்டி வந்ததுதான் இந்தக் கணம் நாம் நுகர்ந்து இன்புறக் கூடிய இசையின் நவ வடிவம். உலகத்தின் ஆகப் பழைய இசைக்கருவிகளில் ஒன்றுதான் மனிதக் குரல். தன் குரல்வளையிலிருந்து இசைவனைந்து ஒலிபுனைந்து தருபவர்கள் மீது உடனடியாக ஏற்படக்கூடிய விலக்கமும் பிரமிப்பும் எந்த நாளிலும் குன்றாமல் பெருகத்தான் செய்கின்றது. இசையின் மீதான மனிதனின் வாஞ்சை பொறாமையற்ற பேரன்பு. சுமாராகப் பாடுகிறவர்களும் பாடத் தெரியாதவர்களும் மனதின் ஆழத்திலிருந்து தட்டிக் குவிப்பதுதான் ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் எழக்கூடிய கரவொலிப் பெருமழை. இசையில்லாத திசையில்லை.

சலன சினிமா பேசும் படமாக மாறும் போது கண்கண்ட கடவுளாகத் தென்பட்டதன் பெயர்தான் பாடல். அன்றைய காலத்தில் சினிமாவின் பேச்சுநீளத்தைக் காட்டிலும் பாட்டுநீளம் அதிகம். நாற்பது ஐம்பது பாடல்களெல்லாம் மிகச் சாதாரணம். அன்பே, சுவாமி என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தெரியாமல் உதிர்த்துவிட்டால்கூடப் போயிற்று. அடுத்த கணம் பாட்டு, அதைத் தொடர்ந்து அடுத்த சில சொற்களுக்குள் மீண்டும் ஒரு பாட்டு, பிறகு மூன்றாவதாய் ஒரு பாட்டு என்றெல்லாம் பாட்டாய்ப் படுத்தினார்கள். கிறங்கிக் கிடந்தது இரசிகக் குழாம். எம்கேடி என்றழைக்கப்படுகிற மாயவரம் கிருஷ்ணஸ்வாமி தியாகராஜ பாகவதர் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர். அவருக்குப் படர்க்கை நட்சத்திரமாக விளங்கியவர் புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா எனும் நாமத்துக்குரிய பி.யு.சின்னப்பா.

பாபநாசம் சிவன், எஸ்.ராஜம், சுந்தரம் பாலச்சந்தர், செருகளத்தூர் சாமா, டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.வி.வெங்கட்ராமன், கொத்தமங்கலம் சீனு, ஜி.என்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எம்.தண்டபாணி தேசிகர், கே.ஆர்.ராமசாமி, சி.எஸ்.ஜெயராமன், சித்தூர் வி.நாகைய்யா, சொக்கலிங்க பாகவதர், எஸ்.எஸ்.மணி பாகவதர், சி.ஹொன்னப்ப பாகவதர், வீ.என்.சுந்தரம், ரஞ்சன், ஏ.எல்.ராகவன், பி.வி.நரஸிம்மபாரதி, டி.எம்.சவுந்தரராஜன், ஜேபி.சந்திரபாபு, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.ஏ.அசோகன், எஸ்.டி சுப்புலக்ஷ்மி, கேபி சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, டி.பி.ராஜலக்ஷ்மி, டி.ஏ.மதுரம், ராவ் பாலசரஸ்வதி தேவி, ‘சிலோன் குயில்’ கே தவமணி தேவி, கே.எல்.வி.வசந்தா, யூ.ஆர்.ஜீவரத்தினம், எம்.வி.ராஜம்மா, என்.ஸி.வசந்தகோகிலம், எம்.எஸ்.சுந்தரிபாய், டி.எஸ்.ஜெயா, எஸ்.வரலட்சுமி, சி.டி.ராஜகாந்தம் , பி.ஏ.பெரியநாயகி, பி.பானுமதி, டி.ஆர்.ராஜகுமாரி, வசுந்தராதேவி, எஸ்.ஜெயலக்ஷ்மி, பசுபுலேட்டி கண்ணாம்பா, டி.ஜி.கமலாதேவி, ருஷ்யேந்திரமணி, (மனதேசம்) கிருஷ்ணவேணி, வைஜயந்தி மாலா, (மாயக்காரி) கஸ்தூரி சிவராவ், ரேலங்கி, சாவித்திரி, மனோரமா, ஜெயலலிதா என்று பாடி நடிக்கிற ஆற்றலோடு விளங்கிய குரல் நிலாக்களின் பட்டியல் மிகப் பெரியது.

பாடினால்தான் நடிக்க முடியும் என்றிருந்தது திரையுலகத்தின் ஆரம்ப நிலவரம். திரையில் முகம் தோன்றுவதற்குப் பாடற்திறன் முதன்மையான தகுதியாகவும் நடிப்புத்திறன் அதனை ஒட்டி இயங்குகிறதாகவும் கருதப்பட்டது ஐம்பதாம் ஆண்டுவாக்கில் மாறலாயிற்று. எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன் ஆகிய மூவரும் பின் வந்த காலத்தின் முதலிடம் வகித்தனர். இந்த மூவருக்குமே பேசுவதற்குச் சொந்தக் குரலும் பாடல்களுக்கு குரல்-இரவலும் பயன்பட்டன. டி.எம்.சவுந்தரராஜன் எம்ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமான பிரதான பாடகரானார். ஏ.எம்.ராஜா, பிபி.ஸ்ரீனிவாஸ் ஆகியோரது குரல்கள் ஜெமினிக்குப் பெரிதாய்ப் பொருந்தின. எழுபதுகளில் எம்ஜி.ஆர் அரசியலில் தீவிரமாகித் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த அதே நேரத்தில் தமிழ் சினிமா கதை, வசனம், நடிப்பு தொடங்கி இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, நடனம் என உள்ளும் புறமும் உருவ உள்ளடக்க வித்தியாசங்களை நோக்கி வேகமாய்ப் பயணிக்கலாயிற்று.

2

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதாம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் தனது ஆறாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருதைப் பெற்ற கமல்ஹாசன் திரைப்படங்களில் உதவி நடன இயக்குனராகச் சில காலம் பணியாற்றிவிட்டு எழுபதுகளில் மீண்டும் நடிகராகத் தொடர்ந்தார். தனது 21ஆம் வயதில் நேதாஜி எழுதிய ஞாயிறு ஒளி மழையில் என்ற பாடலை அந்தரங்கம் படத்தில் ஜி.தேவராஜன் இசையில் பாடி நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகம் கண்டடைந்த குரல்நிலவுகளின் வரிசையில் தானும் ஒருவரானார் கமல். பின்னதான 46 வருடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகராகவும் 25 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிற பாடலாசிரியராகவும் விளங்கி வருகிறார்.

ஜி.தேவராஜன், எம்.பி.சீனிவாசன், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணூர் ராஜன், சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால், தேவா, கார்த்திக்ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, ஷங்கர்-எஸான்-லாய், வித்யாசாகர், ரமேஷ் விநாயகம், பரத்வாஜ், ஹிமேஷ் ரேஷமியா, ஸ்ருதி ஹாஸன், தேவிஸ்ரீ பிரசாத், ஜிப்ரான், கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகிய இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்களைப் பாடியிருக்கும் கமல்ஹாசன் அதிகபட்சமாக இளையராஜா இசையில் 44 பாடல்களைப் பாடியிருக்கிறார். இசையின் முகங்களில் முதல் முகமாக பாடகர் கமல்ஹாசனின் பாடல்வானைத் திறந்து பார்க்கலாம்.

ஜி.தேவராஜன் இசையில் ஒரு தனிக்கடல். கேரளத் திரையிசையில் உச்சரித்தே ஆக வேண்டிய திறமைசாலிகளில் தேவராஜனின் பெயருக்கு நிச்சய ஸ்தானம் உண்டு. பல நல்ல பாடல்களை திரையிசையினூடாகப் பிறப்பித்தவர். ஜெயகாந்தன் எழுதி கே.விஜயன் இயக்கிய காவல் தெய்வம், ஜெமினிகணேசன்- ஜெயலலிதா நடித்த அன்னை வேளாங்கண்ணி போன்ற தமிழ்ப் படங்களிலும் தேவராஜனின் நல்லிசை ஒலித்தது. கமல்ஹாசனை முதன்முதலில் பாட வைத்தவர் ஜி.தேவராஜன். பாதிப் படத்துக்கு மேல் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டு பிறகு கொஞ்சம் கேவாகலரில் படம்பிடித்து உருவான படம் அந்தரங்கம். இந்தப் பாடல் கேவாகலரில் வந்தது. கமல்ஹாசனின் பேசும் குரலை நினைவுபடுத்துவதன் நன்மை தீமைகளுடன் இந்தப் பாடல் ஒலித்தது. இன்றளவும் கேட்கப்படுவதாக ஒரு பாடகரின் முதற்பாடலுக்குத் தேவையான பிரபலத்தைப் பிசகின்றி அடைந்து காற்றில் தவழ்கிறது.

ஞாயிறு ஒளி மழையில்

திங்கள் குளிக்க வந்தாள்

நான் அவள் பூ உடலில்

புது அழகினைப் படைக்க வந்தேன்

ஒரு விதமான தேவாலயப் பிரார்த்தனைப் பாடலுக்குரிய சார்தலுடன் அமைந்திருந்த இந்தப் பாடலின் மெட்டும் நேதாஜியின் புத்திளம் சொற்களுடனான பாடல் வரிகளும் இந்தப் பாட்டின் முக்கியத்துவத்தைக் கூட்டின. இதன் ஈற்றுச் சரணம் அந்தக் காலத்தின் பாடலாக்கத்திலிருந்து பெரிதும் விலகி அமைந்த பாடலாக ஒளிர்வதைப் பாருங்கள்.

தங்கங்கள் இங்கு வருக

தரம் இன்னும் அதிகம் பெறுக

வைரங்கள் நம்பி வருக

புது வடிவம் தாங்கிப் பொலிக

புது வடிவம் தாங்கிப் பொலிக

கமல்ஹாசன் இந்தப் பாடலை சமாளித்தார் என்றுதான் சொல்வேன். அவருடைய குரலின் நன்மை தீமைகளைப் பொறுத்தமட்டில் இந்தப் பாடல் அவருடைய பாடல் சரளியில் முதல் எண்ணைப் பெற்றிருந்தாலும் என்னளவில் அவருக்கு அமைந்த நல்ல துவக்கப்பாடல் 1978ம் ஆண்டு வெளிவந்த ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் படத்தில் இடம்பெற்ற பன்னீர் புஷ்பங்களே என்று ஆரம்பிக்கிற பாட்டுதான். இளையராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய இந்தப் பாடல் ஒவ்வாத வாழ்வின் அபத்தத்தைத் தன் உலர்ந்த குரலில் அலட்சியம் பொங்கப் பதிவுசெய்தபடி நகரும் பாத்திரமேற்றலைப் பிரதிபலித்துப் பாடினார் கமல். இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் ஆண்குரலில் ஒலித்தன. இன்னொன்றான ‘உறவுகள் தொடர்கதை’ ஜேசுதாஸ் பாடியது. அதன் அபரிமிதமான ஒலித்தலுடன் எந்தவிதத்திலும் குன்றாவொளியோடு நின்று ஒலித்தது பன்னீர் புஷ்பங்களே பாடல். அந்தப் பாட்டின் முதலிரண்டு வரிகளே பொருள்முரணோடு பெருகுபவை.

“பன்னீர் புஷ்பங்களே” என்று பன்மையில் தொடங்கி அடுத்த வரியிலேயே “ராகம் பாடு” என்று ஒருமைக்குத் தாவி “உன்னைப் போலே எந்தன் உள்ளம் ஆடுது புதுத் தாளம் தொட்டு புது ராகமிட்டு” என்று பல்லவி நிறையும். பின்னாட்களில் எத்தனையோ பாடல்களும் பல்லவி சரணங்களும் இதற்கிணையான- இவற்றைவிடவும் அதிகமான முரண்களோடு பிரவகித்திருந்தாலும் இந்தப் பாடலின் காலத்தில் அதுவும் முதல் இரண்டு வரிகளிடை முரண் என்பது சற்று அபூர்வம்தான். ஆனாலும் இந்தப் பாடலின் இடையிசையும் தொனியும் மெட்டும் எல்லாவற்றையும் விடவும் கமல் இந்தப் பாட்டைப் பாடிய விதம் அலாதியாக இருந்தது.

நியாயங்களோ பொதுவானது

புரியாமல் போனது

என்ற வரிகளைக் கமல் கவித்துவம் பொங்கக் கடந்திருந்தார். அன்றைய பாடகரில் பி.ஜெயச்சந்திரனின் குரலுக்கு அருகே வைத்துப் பார்க்கவல்ல குரலாக கமலின் குரல் அமைந்திருந்தது. மொத்தமாய் இந்தப் பாடல் ஏற்றித்தந்த சோகமும் பாடலின் படமாக்கலின் சிறப்புகளும் ஒன்று சேர்ந்து மிளிர்ந்தது.

சிவதாண்டவம் என்ற மலையாளப் படத்தில் எம்.பி.ஸ்ரீனிவாசன் எழுதி இசையமைத்த ‘பீதாம்பரா ஓ கிருஷ்ணா’ என்ற பாடலைப் பொறுத்தமட்டில் கமல், உஷா உதுப் இருவரும் பாடியிருந்தாலும் அதனை முழுவதுமான டூயட்டாகக் கணக்கில்கொள்ள முடியாது. மரியா மை டார்லிங் படமாகட்டும், அதன் கன்னடப் பதிப்பாகட்டும், கமல் பாடியவை ஸோலோ என்கிற தனிப்பாடல் வகைமைதான். அவருக்குக் கிடைத்த முதன்மையான டூயட் பாடல் என்றால் அது பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்களில் இளையராஜா இசையில் வாலி எழுதிய நினைவோ ஒரு பறவை பாடல்தான். அந்தப் பாடலை எஸ்.ஜானகியோடு சேர்ந்து பாடினார் கமல். கதைமுரண் நாயகனாகக் கமல் ஏற்ற பாத்திரத்தின் வாசனை அந்தப் பாடலின் உள்ளேயும் பிரதிபலிக்கவே செய்தது. இந்தப் பாடலை கமல் பாடியது படத்தில் அந்தப் பாடலின் இருத்தலை இயல்பான இடம்பெறலாக உருவாக்கிற்று. பின்னால் ஏற்படக் கூடிய சிதறல்களை அந்தப் பாடலின் இசை, மெட்டு, தாளப்பயணம், குரலின் ஆழம், தொனி என எல்லாவற்றிலும் தோற்றுவித்திருப்பார் இளையராஜா. கமல் பாடிய விதம் அந்தப் பாடலுக்கான நிகர் நியாயமாகவே விளைந்தது. ஜானகியின் குரல் ஸ்ரீதேவி ஏற்ற சாரதா என்ற பாத்திரத்துக்கான குரல் வழி நியாயமாகவே படர்ந்தது. அறியாமையின் பேரழகைத் தன் குரலால் சாட்சியம் செய்திருப்பார் ஜானகி. அதே பாடலின் பிரதிபாகத்தை திலீப் என்கிற பாத்திரத்தின் சிதைந்த மனதின் சிதையாத கனவு ஈரத்தைத் தொட்டெடுத்துப் பாடியிருப்பார் கமல். இந்தப் பாடல் மொத்தத்தின் கனத்தையும் இரண்டே சொற்களில் கடந்திருக்கும் விதம் பேரழகு. அந்த இரு வரிகளைக் கமல் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இந்த அளவுக்குச் சிறந்திருக்காது என்பது என் அபிப்ராயம். கமலின் குரல்வழி கையெழுத்து அந்தச் சொற்கள்-

அதற்காகத்தான்

அலைபாய்கிறேன்

சந்திரபோஸ் இசையில் தசரதன் இயக்கிய படம் சரணம் ஐய்யப்பா, ஆண்டு 1980. இந்தப் படத்தில் ‘அண்ணா வாடா தம்பி வாடா’ என்ற ஒரேயொரு பாடலைப் பாடினார் கமல்ஹாசன். அவர் நடிக்காத படங்களில் அவர் பாடியது அதுதான் முதல்முறை. சந்திரபோஸ் இசையில் அவர் பாடிய ஒரே பாடலும் இதுதான். இந்தப் பாடல் படம் வந்த காலத்தோடு அப்படியே உறைந்துவிட்டது. இன்றும் கேட்பதற்கு இனிமையான சோலோ பாடல். சந்திரபோஸின் ஆரம்பகாலப் பாடல்களில் மிக முக்கியமான பாடலாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய பாடல்.

ஜெயிலில் இருந்து மூன்று கைதிகள் தப்ப முடிவுசெய்கிறார்கள். காவலர்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தப் பாடலை மற்ற கைதிகள் பாடி ஆடுவதாகக் காட்சி. மெல்லிய விரக்திச் சார்போடு இந்தப் பாடலைப் பாடினார் கமல். இந்தப் பாட்டின் மைய இசை துள்ளும் தாளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருந்தது. மொத்தப் பாட்டுமே உறுத்தாத நல்லிசைச் சரடுகளால் நகர்ந்து ஒலித்து நிறைந்தது. கமலின் குரல் இந்தப் பாட்டில் மிகப் பாந்தமாகப் பொருந்தியது.

சின்ன மனசுலே ஆசை பெருசுடா

இந்த உலகிலே வாழ்க்கை சிறுசுடா

இந்த வரிகளைக் கமல் கடக்கும் இடம், தொழில்முறைப் பாடகர்களின் குரலெடுப்புக்கு எவ்விதத்திலும் குறைவின்றி ஒலிக்கும்.

தண்ணியைப் போட்டா சந்தோசம் பிறக்கும் என்ற இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சவால் படத்தில் கமல்ஹாசன் பாடிய பாடல்.

கங்கை அமரன் எழுதிய பாடல், விழியோரத்துக் கனவு என்று தொடங்குவது. பரீட்சார்த்த முயல்வுகளைத் தன் சம்பாத்தியத்திலிருந்து தொடர்ந்து முனைந்து வருகிற திரைக்கலைஞரான கமல்ஹாசன், ராஜபார்வை என்ற படத்தைத் தன் நூறாவது படமாக உருவாக்கினார். கதைப்படி நாயகனுக்குப் பார்வை கிடையாது. அகவிழிகளால் அவன் தன் உலகைப் பார்ப்பதும் பார்க்க வைத்ததும்தான் கதையாயிற்று. பி.எஸ்.சசிரேகாவும் கமல்ஹாசனும் இணைந்து பாடிய டூயட் இந்தப் பாடல். காணாவுலகத்தின் கானவழிச் சாட்சியங்களாகவே இதன் வரிகளும் இசையுமெல்லாமும் நிரம்பி நிறையும். இந்தப் பாடலில் இடம்பெற்ற இடை ஹம்மிங்களைக் கமல் பாடிய விதம் மெச்சத்தக்க ஒன்று. முழுப்பாடலையும் நாயகனின் பாத்திரம் மீது குவியும் பரிவை, பச்சாதாபத்தைச் சிதறடித்தும் குவித்தும் விளையாடுகிற மென்சோகக் குரலால் பாடினார். உடன் பாடிய சசிரேகா அதிகம் பாட்டிலறியாத கமலின் மாயத்தொனிக்கு கஷ்டப்பட்டு ஈடுதந்து பாட முனைந்தார் எனச் சொல்லலாம். கேட்க வேண்டிய கமல் கீதம் இந்தப் பாடல். பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை படத்தில் நரிக்கதை கமல் சொந்தக்குரலில் பேச்சும் பாட்டுமாய்ப் பகிர்ந்தளித்த பாடல். அந்தப் படத்தின் பெருவெற்றியின் மாமழை ஈரம் அந்தப் பாடலையும் சேர்த்தே நனைத்தது. படத்தைத் தாண்டியும் விரும்பிக் கேட்கப்பட்டது.

பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் கோகிலா. கன்னடத்தில் கமல் நடித்த இந்தப் படத்தில் அவருடைய ஆப்த சினேகிதராகத் தோன்றியவர் மோகன் ராவ் என்கிற இயற்பெயரைக் கொண்டவரான கோகிலா மோகன் என்றே திரையுலகில் தன் வலத்தைத் தொடங்கியவர். எண்பதுகளில் தமிழின் மிக முக்கியமான கதாநாயகராக வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்டவர். இவர் நடித்த ஓ மானே மானே என்ற படத்திற்கு இசையமைத்தார் இளையராஜா. மு.மேத்தா எழுதிய பொன்மானைத் தேடுதே என்ற பாடலைப் பாடினார் கமல்ஹாசன்.

இதற்கிடையே இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவ்வப்போது சில பாடல்களைப் பாடிய கமல் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பாக எண்பத்து ஆறாம் வருடம் தயாரித்த படம் விக்ரம். சுஜாதா அந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதினார். இளையராஜா இசையில் வைரமுத்து இதன் டைட்டில் பாடலை எழுதினார். அந்தப் பாடலைத் தன் குரலில் பாடினார் கமல். கதை நாயகனின் பெயர் விக்ரம். அது வரை பெரிதாகக் கதாபாத்திரத்தைத் தனியே பேர் சொல்லிப் புகழ்ந்து பாடல் எதுவும் கமல்ஹாசன் படங்களில் இடம்பெற்றதில்லை என்ற அளவில் இந்தப் பாடல் தனிக்கவனம் பெற்றது. படத்தின் டைட்டில் பல லட்சம் பேரைப் பட ரிலீசுக்கு முன்பாகச் சென்று சேர்வதற்கான ஊடகமாகவே படத்தில் ஒலியுருவப் பாடல்கள் நிகழமுடியும் என்பதை முதன்முதலில் பெரிய அளவில் மெய்ப்பித்த பாடல் ‘விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன்’ என்ற பாடல். இந்தப் படத்தின் பாடல்கள்தான் இந்திய அளவில் முதன்முதலாக கணிப்பொறி உதவியுடன் பதிவாக்கம் செய்யப்பட்டன . விக்ரம் டைட்டில் பாடல் அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த கமல்ஹாசனின் மென்மையும் காத்திரமும் கலந்த குரலில் ஒலிக்கவில்லை. முன்பிருந்ததைவிடப் பன்மடங்கு செறிவுகூடிய மிகக் கனமும் ஆழமுமான குரலில் ஒலித்தது. இந்தக் குரலை இக்காலகட்டத்தில் வந்தடைந்த கமல்ஹாசன் அதன் பிறகு தன் வசனம், பாடல் இரண்டுக்குமான குரலையும் அந்தக் குறிப்பிட்ட புள்ளியிலிருந்தே நிலையாகத் தருவித்தார். நிழலும் இருளுமாய் அந்தப் பாடலின் மேற்கத்திய பாணி இசைப்புழக்கமும் ஒப்பனையற்ற தொனியும் இன்றளவும் அந்தப் பாடலைத் தனித்து ஒலிக்கச் செய்பவை.

இளையராஜா இசையில் சத்யா படத்தில் ‘போட்டா படியுது படியுது’ என்ற குழுப்பாடலைப் பாடினார் கமல். சத்யாவும் அவரது சொந்தத் தயாரிப்புதான். ஹரே ராதா ஹரே கிருஷ்ணா, பேர் சொல்லும் பிள்ளை ஆகிய படங்களிலும் கமல் குரல் பாடல்களை இசைத்தளித்தார் இளையராஜா.

மணிரத்னம் இயக்கிய நாயகன் இந்தியத் திரைவரிசையில் முக்கியமான இடத்தைப் பற்றி நிற்கும் படங்களில் ஒன்று. இதன் டைடில் பாடல் படம் ஆரம்பித்து மூன்றரை நிமிடங்கள் கழித்துத் தொடங்கும். “தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனை யாரடிச்சாரோ” என்ற பாடல் முதல் பகுதி ஒலித்தலை இளையராஜா தன் குரலில் பாடியிருப்பார். அதே குரலின் மறு ஒலித்தலை கமல்ஹாசன் தன் குரலில் பாடுவார். யாருமே இல்லாத ஒருவனாக புதிய ஊருக்கு வந்து சேர்கிற சிறுவனின் கையறு நிலையை இளையராஜா தன் குரலில் பிரதிபலித்திட அதே ஊரில் தனக்கென்று மனிதர்களைக் கண்டறிந்துகொண்டவனின் மாற்றம், நம்பிக்கையைக் கமல் தன் குரலில் ஒலிக்கச் செய்வார். இந்தப் பாடல் தமிழ்த் திரையின் சின்னஞ்சிறு பாடல்களின் வரிசையில் தனக்கென்று அழியாப் பேரிடம் ஒன்றை அடைந்தது. இன்றளவும் காற்றைப் பலமுறை ஒலித்தவண்ணம் ஆள்கிறது.

எண்பதுகளின் பிற்பகுதியில்  கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடிக்க சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படம் அபூர்வ சகோதரர்கள். இளையராஜா இசையில் இந்தப் படத்தில் ‘ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்லை’ என்ற பாடலைத் தன் குரலில் பாடினார் கமல்ஹாசன். அந்தப் பாடல் பெரிய வெற்றியை அடைந்து நற்பிரபலம் கண்டது. சென்னை ஸ்லாங்கில் பேசுகிற ராஜா கதாபாத்திரம் தனது கார் ஒர்க் ஷாப்பில் கனவும் நனவுமாகப் பாடுகிற பாடல். இந்தப் பாடலின் சரணத்தில் கமல்ஹாசன் தன் குரலை முன்பு பாடியிராத மேற்சுரத்தில் பாடினார். அந்தப் பாடலும் அதனுள் நிலவிய மெல்லிய சவாலும் பாடகராக கமல்ஹாசனை இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பல்வேறு வகைமைகளில் பாடி வெற்றிகரமான பாடற்குரலாக இசைவானில் மிளிர்வதற்கு உதவின. இதே படத்தில் ‘அம்மாவ நான் காலத்தொட்டுக் கும்பிடணும் டோய்’ என்ற பாடல் படமாக்கப்பட்டு பிறகு படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டது. இதனையும் கமல் தன் சொந்தக் குரலில் பாடியிருந்தார்.

கமல் நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன். இளையராஜா இசையில் இந்தப் படத்தின் பாட்டுகள் வான்விஞ்சி ஒலிப்பவையே. இதில் இடம்பெற்ற பாடல் ‘சுந்தரி நீயும் சுந்நரன் ஞானும்’ என்று தொடங்கும் பாலக்காட்டு மலையாளப் பாடல். பூவாச்சல் காதர் எழுதிய இதனை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடினார் கமல். இந்தப் பாடல் இசை, வரிகள், பாடலாக்கம் என எல்லாவற்றுக்காகவும் போற்றத் தகுந்த பாடல் என்றாலும் இதன் முதன்மை ஈர்ப்பாகத் திகழ்வது நிச்சயமாக கமல்ஹாசன் இதனைப் பாடிய விதம்தான். சொற்களைப் புழங்கும் தெளிவுடனும் இசைபிறழாத வழங்கலுடனும் இதனைப் பாடினார் கமல். கேதார ராகத்தில் அமையப் பெற்ற இந்தப் பாடலைத் தொழில்முறைப் பாடகர்க்கு இணையான இலாவகத்தோடு பாடினார் கமல். இந்தப் பாட்டின் இன்னுமோர் சிறப்பு கமலின் குரல் துல்லியம். இந்தப் பாடல் முழுவதையும் ஒரே குரலில் சீராகப் பாடியிருக்க மாட்டார், தொடக்கத்திலிருந்து சற்றே சன்னமும் கனமும் கலந்தொலித்த வண்ணம் பாடி வருபவர் ஜானகியும் தானுமாய் மாறி மாறிப் பாடலை எடுத்தவண்ணம் வருகையில் “சயன நேரம் மம்மத யாயம்” என்பதைப் பூர்த்தி செய்துவிட்டு அடுத்த எடுப்பில் உயர்ந்து நிரவித் தீர்க்கும் விதமிருக்கிறதே சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் என்று பல்லவிக்குத் திரும்புவது அத்தனை உக்கிரமாகத் திரும்புவார். சற்றுப் பிசகி இருந்தாலும் அதல பாதாளம் என்ற அளவில் அந்தரத்தில் ஆடிக்காட்டிய சன்னத நடனமாகவே அந்தக் குரலைப் பார்க்கலாம்.

குணா படத்தில் கடிதம் ஒன்றின் உட்பொருளைக் கமல் சொல்லச்சொல்ல அதனை எஸ்.ஜானகி ராகத்தோடு பாடுவதாய் அமைந்த ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடல் அடைந்த உயரம் அனாயாசம். அந்தப் படத்தின் இசையுருவ முகவரியாகவே “கண்மணி அன்போடு” பாடல் மாறியது. தமிழ்த் திரையில் கையாளப்பட்ட காதலின் வித வினோதங்களின் வரிசையிலும் குணா படத்தில் அபிராமி மீது குணா கொள்ளுகிற தேடல் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. சிங்காரவேலனில் ‘சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே’ பாடலொடு சேர்த்து ‘போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி’ என்ற பாட்டைப் பாடினார் கமல். இதனை அவருடன் சேர்ந்து பாடியவர்கள் அருண்மொழி, சாய்பாபா ஆகிய இருவரும். இந்தப் பாடலில் கமல் பாடிய ஸ்தாயி மிரட்சி தருவது. இன்றைக்குக் கேட்டாலும் இதன் பலமான இசைக்கட்டமைப்பும் குரல் தெளிவும் பாடல் நகர்ந்த விதமும் எல்லாமும் சேர்ந்து அதே ஆச்சரியத்தை நல்கவல்லது. ஆண்டுகள் பல கடந்தாலும் தகர்க்க முடியாத தமிழ்ப் பாடல்களில் ஒன்றென விளங்கித் தொடர்வது.

தேவர் மகன் படத்தில் வாலி எழுதிய ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் இன்னுமோர் கமல்-எஸ்.ஜானகி-இளையராஜா காம்பினேஷன். தாங்கவொண்ணாத மகிழ்வும் அதனுடனே பிறந்து வருகிற கண்ணீர்த் துளிகளும் கலந்த ஆனந்தக் கலைதல் தருணமொன்றின் உள்ளே நின்றபடி இந்தப் பாடலைப் பாடினார் ஜானகி. இந்தக் கணம் போதும் என்றும் இந்தக் கணம் போதவே போதாது என்றுமான இரட்டை மனோபாவமும் “உன்னைத்தான் நம்புகிறேன், உன்னை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன்” என்கிற சரணடைதலும் ஒளியும் இருளும் நீயாயிரேன் என்கிற பதைபதைப்பும் கிராமம் சார்ந்த அப்பழுக்கற்ற மனச்சமன் ஒன்றுமாக ஜானகி இந்தப் பாட்டின் உள்ளே நிரப்பித் தந்த உப-நுட்ப-நிரவல்கள் அனேகம். கேள்வியும் பதிலுமாய்ப் பெருக்கெடுக்கும் வினாவிடை நேரமாகவே காதலின் அணுக்கமான பொழுதொன்றை ஆக்கிக்கொண்ட இருவரின் பாடலாக இந்தப் பாடலை அமைத்தார் இளையராஜா. இதன் ஆகச்சிக்கலான பகுதிகள் கமலிடம் வழங்கப்பட்டன. தன் வேடத்தின் குரலிலிருந்தே இந்தப் பாடலைப் பாடவேண்டிய நிர்ப்பந்தத்தை வென்றெடுத்தார் கமல்ஹாசன். இந்தப் பாடலை நன்றாகக் கவனித்தால் தேவர் மகன் திரைப்படத்தில் அவர் ஏற்ற சக்திவேல் என்கிற வேடத்தின் அதுவரையிலான கதாபயணத்தின் சங்கடம், அயர்ச்சி, வினோதம், இருள், பகை, முரண் எனப் பலவற்றையும் நிகர்செய்த அதன் குரலாகவே ஒலித்ததை உணர்ந்துகொள்ள முடியும். தன் குரலை அழித்தும் வேடத்தின் குரலைப் பிறப்பித்தும் இந்தப் பாடலைப் பாடினார் கமல். “உள்ளம் மட்டும் ஒன்வழியே நானே” என்று முதல்முறை இறுகும் இடத்தையும் “உள்ளம் மட்டும் ஒன்வழியே நா…..னே….வா” என்று உருகும் இடத்தையும் பார்த்தால் மிடுக்கும் துவளலுமாய் அந்தப் பாத்திரத்தின் அந்தக் கணத்துக் கதை அடைதலை அட்சரம் பிசகாமல் பாட்டினுள்ளே பிறப்பித்திருப்பதைக் கண்டுணரலாம். தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடல் பாடகராக கமல்ஹாசன் பாடிய முதன்மையான பாடல்களில் ஒன்றாக உயர்ந்தொலிக்கிறது.

மகாநதி படத்தில் இசை ஒரு கூடுதல் கதாபாத்திரமாகவே மாறி இருக்கும். வாலி எழுதிய பாடல்கள் படத்தின் ஓட்டத்தினூடே பிரித்தறியத் தேவையற்ற பிணைத்தலுடன் பின்னியொலித்தன. ‘பேய்களை நம்பாதே’ என்கிற பாட்டு ஜாலியான தொடக்க நேரப் பாட்டு. ‘எங்கேயோ திக்குதிசை’, ‘தன்மானம் உள்ள நெஞ்சம்’ ஆகிய இரண்டும் துளிப்பாடல் வகையிலானவை. இதனைக் கதையின் கனத்தைக் கேட்பவர் மனமெங்கும் தைத்துப் பார்க்கிற ஊசித் துளைகளாய்த் தன் குரலைப் பிறப்பித்துப் பாடினார் கமல். “பிறர்வாடப் பல செயல்கள் செய்து” என்கிற பாரதியின் காலங்கடந்த வரிகளைக் கமல் பேச்சுக்கும் பாடலுக்கும் இடையிலான சலன ஒழுங்கோடு உச்சரித்தது கலங்கடித்தது. ‘கோவை’ சரளாவோடு இணை சேர்ந்து கமல் நடித்த சதிலீலாவதி படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற மாறுகோ மாறுகோ ஒரு ஜாலி ஜூகல்பந்தி. அந்தப் பாடல் அதிரிபுதிரியாய் ஹிட் அடித்தது. கோவை ஸ்லாங் என்பதன் பேச்சுமொழியை நிரவி நினைவுபடுத்திய குரலில் அந்தப் பாடலைப் பாடியிருந்தது பேரழகாயிற்று.

முன்னரே மோகன் உள்ளிட்ட தான் நடிக்காத வேறு படங்களின் நாயகர்களுக்கும் தன் குரல் பாடல்களைப் பாடியிருந்த கமல் 90களின் மத்தியில் கார்த்திக்ராஜா இசையில் உல்லாசம் படத்தில் அஜீத் நடிப்பதற்கான ‘முத்தே முத்தம்மா’ பாடலைப் பாடினார். “கடலுக்குக் காதல் வந்தா கரையேறி வந்தா போதும், கவிதைக்குக் காதல் வந்தாத் தாங்காதம்மா” என்ற வரியை லேசான கிண்டலுடன் சிருங்காரம் குழைத்துப் பாடிக் கடந்தார் கமல். பார்த்தி பாஸ்கர் எழுதிய இந்தப் பாடலைக் கமலோடு சேர்ந்து பாடியவர்கள் பவதாரணி, ஸ்வர்ணலதா. கார்த்திக் ராஜா இசையமைப்பில் காதலா காதலா படத்திலும் கமல் பாடிய பாடல்கள் (காசு மேலே காசு வந்து) இடம்பெற்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா’ பாடலைக் குழந்தைமையின் குதூகலமும் மனப் புதிர்மையும் குழைத்துப் பாடினார் கமல். அந்தப் பாடல் வேறு எந்தப் பாடகர் வசம் அளிக்கப்பட்டிருந்தாலும் எடுபட்டிருக்காது என்று மெச்சத்தக்க மெல்லிய குரலிழையைப் பற்றிக்கொண்டு நடப்பதற்குப் பதிலாக கமல் நடனமாடிக் காட்டிய தொனிவழி நாட்டியம் அந்தப் பாடல்.

ருக்கு ருக்கு ருக்கு என்ற பாட்டைப் பெண் பாத்திரத்துக்கான குரலில் பாடியது அவ்வை சண்முகி படத்தில் இடம்பெற்றது. தேவா இசையமைத்த முதல் கமல் படம் இது. இந்தப் பாடல் அளவற்ற வரவேற்பைப் பெற்றது. பிறகு வந்த காலத்தில் தேவா இசையமைப்பில் பஞ்சதந்திரம் படத்திலும் ‘காதல் பிரியாமல்’ என்ற பாடலைக் கமல் பாடினார். பாடகராக கமல் பாடிய தகர்க்க முடியாத பாடல்களின் வரிசையில் பம்மல் கே சம்மந்தம் படத்துக்காகப் பாடிய ‘கந்தசாமி மாடசாமி’ பாடல் என்றென்றும் இடம்பெறத்தக்கது. பாத்திர அறியாமையைத் துல்லியப்படுத்தி இதனைப் பாடினார் கமல். இன்னும் சொல்லப்போனால் அவர் குரலோடு சேர்ந்து ஒலிக்கும் உப குரல்களோடு சேர்ந்து ஒரு கூட்டுப் பிரார்த்தனை போன்ற தொனிக்குழைவில் இதனைப் பாடியது எத்தனை கேட்டாலும் தீராவியப்பைத் தருவது எனலாம். ஹேராம் படத்துக்காகக் கமல் பட்ட இசை மெனக்கெடல்கள் மிக அதிகம். இந்தப் படத்தின் பிரம்மாண்டமான இசையாக்கங்களோடு தானும் ஒருங்கிணைந்து ஓடிய சமபலக் குதிரையாகவே கமலின் குரலும் இருந்தது. ராம் ராம் பாடலாகட்டும் ராமரானாலும் பாபரானாலும் பாடலாகட்டும், ஹேராம் ஒரு இசைச்சூறாவளி.

தமிழில் ஆளவந்தான், இந்தியில் அபே என்று இருமொழித் தயாரிப்பாக உருவானது. இதில் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற பாடலை வைரமுத்து எழுத ஷங்கர் எஸான் லாய் மூவரும் இசையமைத்தனர். கதையின் ஒட்டுமொத்தத் தன்மையை எடுத்தோதுகிற வரிகளைத் தன் குரலின் மூலம் பன்மடங்கு விரித்துக் கற்பனை செய்ய இயலாத பிரம்மாண்டத்தைத் தன் குரலினூடாக நிகழ்த்தினார் கமல். மனம் நசிந்த நந்தகுமாரன் என்ற பாத்திரம் அந்தப் பாடலைப் பாடுவதாகக் கதையின் அமைப்பு. பார்ப்பவர் மன மத்தியில் முதலில் ஒரு அபத்த வியப்பாக மலர்ந்து பிறகு மெல்ல அந்தக் கதாபாத்திரம் மீது ஏற்படக்கூடிய பரிதாபம், வாஞ்சை, பரிவு, இன்னபிற உணர்வுகள் எல்லாமும் தற்காலிகமாக அந்தப் பாடலுடனேயே தோன்றி மறையும் வண்ணம் நிகழ்த்தப்பட்டிருக்கும். இந்தத் தற்காலிக உணர்வித்தலைக் காட்சிப்படுத்துவதைவிடக் குரலின் வழியாகத் தோற்றுவிப்பது எள்ளளவும் கடினம் குறைந்ததல்ல. காட்சிக்கும் குரலுக்குமிடையிலான நூறு சதப் பொருத்தப்பாடு இன்றும் கேட்கையில் காட்சிகளைத் தோன்றச்செய்தும் பார்க்கையில் கதையாழத்தில் இலயிக்க வைத்தும் மாய ஆட்டத்தைத் தொடர்கிறது. கமலின் சிறப்பான பாடல்களில் இதுவுமொன்று.

வைரமுத்து எழுதி வித்யாசாகர் இசைத்த படம் அன்பே சிவம். அதில் ‘யார் யார் சிவம்’ பாடல் ஒரு அபாரம். பெரும்பயணத்தின் வழியில் வன அலைதலின் எதிர்பாரா இருளைக் கனவில் அடைகிற ஒருவனது கேவலைப் பிரதிசெய்தபடி ஒலித்தது கமலின் குரல். கூடியும் குறைந்தும் மாறியும் நிலைத்தும் அயர்த்தியும் பணிந்தும் தன் குரல்வழியே பெருநடனம் ஒன்றை நிகழ்த்தினார் கமல். பாடலின் நிறை கணத்தில் கேட்பவரின் எண்ணம் கதாபாத்திரம் அடையக்கூடிய அதே புள்ளியில் அதே நிம்மதி-அநிம்மதியை அடைவதாகத் தோன்றும். சிறந்து வழியும் நதிவலம். ரமேஷ் விநாயகம் இசையில் ஒரு ஆங்கிலப் பாடலைப் பாடியிருக்கிறார் கமல். அந்தப் படம் நளதமயந்தி. (Stranded on the streets) நிசமாகவே கமல் குரலில் எதோவொரு வெள்ளைக்காரர் பாடியிருக்கிறார் பாரேன் என்றுதான் கிண்டலாய்ச் சொன்னான் என் நண்பன் பரணி. அவனே நாலைந்து முறை கேட்டுவிட்டு இன்னொன்றும் சொன்னான். “இவரு எதைச் செஞ்சாலும் அததுக்கு உண்டான செய்முறையோட செய்றாப்ல பாரேன்” என்றான். அவன் வாயால் அப்படிப் பாராட்டுவது கஷ்டம். அதற்குப் பிறகு கமல் படங்கள் பார்த்து வித வினோத விடயங்களுக்கெல்லாம் வியந்துகொள்ள நேர்கையில் நானும் பரணியும் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்போடு செய்முறை என்று ஒரே வார்த்தையால் சொல்லிக்கொள்வோம். கமலறிவார் கமல்முறைகள் அன்றோ?

விருமாண்டி படத்தில் இடம்பெற்ற ‘ஒன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல’ பாடல் ஒரு காதல் ஜர்தா. இறுக்கமான வேடம் நெகிழ்கிற தருணமாய்ப் பாடல் ஒலித்தது. கமலின் குரலுக்கு இன்னுமோர் சவால் பாடல் என்று இதைச் சொல்வது பொருந்தும். ஆளற்ற பிரதேசங்களின் அனாதித் தன்மையும் இரவின் இருளும் பெருக்கெடுக்கும் இசையும் வரிகளுமாய்ப் பாடல் நிலைத்தொலிக்க அதனைக் கமல் பாடிய விதம் ஏதோ நிசமாகவே அந்தக் காட்சி நிகழ்கிற இடத்தின் மன அடைதலாய்ப் பாடியது வல்லமை. கொசுக்கடியும் வண்டுகளின் ரீங்கரித்தலும் காற்றுறைந்த இரவின் கசகசப்பும் அதிகரித்துத் தரக்கூடிய அசௌகரியங்களைத் குரலால் கேட்பு அனுபவமொன்றினூடே கடத்துவதெல்லாம் யதார்த்தத்தின் உலகத்தரம்.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் ‘நெருப்பு வாயினில்’ எனத் தொடங்கும் பாடல் கதைசொல்லியின் குரலாகப் பெருகும் பின்புலப் பாடல். “இது என்ன கடவுளே? புரியாது கடவுளே!” என்ற வரிகளை இசையோடு இணைந்தியைந்து பாடியது ரசம். தான் நடிக்காத படம் என்றால் பாடும்போது தன் நடிகமுகம் தோன்றியும் தோன்றாமலும் நின்றுகொள்கிற எல்லையில் நின்றுகொள்வதைத் தொடர்ந்து நிகழ்த்திவருவது போலவே இதிலும் பாடினார் கமல். அந்தப் படத்தின் கதைப் பெருக்கத்துக்கு யூகிக்க முடியாத ஒரு வண்ணப் பொழிவு அந்தப் பாடலைக் கமல் கடந்த விதம்.

கமல் பாடிய ‘அல்லா ஜானே’ பாடல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் இடம்பெற்றது. இதே பெயரில் ஜெயகாந்தன் இயக்கி தேசிய கவனத்தை அடைந்த படம் 1965ம் ஆண்டு வெளிவந்தது. அதில் பாடல்களே இடம்பெறவில்லை. அதே பெயரில் இந்தியில் எ வெட்னஸ்டே என்ற படத்தின் மறு-உருப்படத்தை எடுக்கையில் இடம்பெற்ற இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் மனத்தைக் கலங்கச் செய்வது. மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஸ்ருதிஹாஸன். மன்மதன் அம்பு படத்தில் ‘நீலவானம்’ என்கிற கவித்துவமான பாடலை எழுதிப் பாடினார் கமல். தசாவதாரம் (ஓஹோ சனம்), உத்தமவில்லன் (லவ்வே லவ்வா), தூங்காவனம் (நீயே உனக்கு ராஜா), விஸ்வரூபம் 1 ,2 (துப்பாக்கி எங்கள் தோளிலேஅணு விதைத்த பூமியிலே) போன்ற படங்களிலும் பாடிய கமல், இளையராஜா இசையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான முத்துராமலிங்கம் படத்திலும் ஒரு பாடலைப் பாடினார். Happi என்ற இந்திப் படத்திலும் கமல் இளையராஜா பாடல் கூட்டணி தொடர்ந்தது. பெருந்தொற்றுக் காலத்தில் ‘பொதுநலம் என்பதும் தனி மனிதர்கள் செய்வதே’ என்று தொடங்கும் பாடலைத் தானே எழுதிப் பாடினார் கமல்ஹாசன். அவரோடு யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான், சித்ஸ்ரீராம், பாம்பே ஜெயஸ்ரீ, சங்கர் மகாதேவன், தேவிஸ்ரீபிரசாத், சித்தார்த், ஆண்ட்ரியா, முகென் ராவ் எனப் பல குரல்கள் ஒன்றிணைந்து ஒலித்தன.

பாடலினால் விளைகிற பேரின்பம் என்று தனியாக எதாவது இருந்தே ஆக வேண்டும். இசை கற்றுக்கொண்ட பலரும் வாசிக்கத் தெரியும் ஆனால் இசையுருவாக்கம் கைவராது என்கிற புள்ளியில் தடுமாறி நிற்பதைப் பார்க்க முடியும். நிசத்தில் அது இயலாமை அல்ல. இசையென்பது பெருங்கடல் நீச்சல். நதியில் விளையாடி அருவியில் தலை நனைத்து மழையில் பரவசமாகிக் குளத்தில் வலம்வந்த பிற்பாடும் கடல் என்பது அயர்த்தும். பயம் தரும். எல்லோருக்குமான நீந்துகணங்களைக் கடல் தனதே வைத்திருப்பதில்லை. அந்த வகையில் இசைக்கு நிகரான இன்னொரு அம்சம்தான் பாடல் பாடுவதைக் குறித்த கட்டுமானங்களும். உலகம் ஏற்கிற வகையில் குரல் இருந்தாக வேண்டும் என்பது எந்தச் சட்டத்திற்கும் உட்படாத சுய ஒழுங்கைப் போன்ற ஆதார நியமம். அந்த வகையில் இனிமையான குரல் என்றவொன்றின் இலக்கணத்தை யாராலும் வரையறுத்துவிட முடியாது. பாடுவதற்கான குரல் இனிமையானதாக இருப்பதெல்லாம் பாடற் திறனடைதலுக்குத் தொடர்பே இல்லாத விடயங்களே. பல நூறு பாடல்களைப் பாடிய பலரது பெயர்களும் வரலாற்றின் அடுத்தடுத்த பக்கங்களுக்குத் தம்மை மேலெழுதிக் கொள்ளவியலாமல் காலப் பேரேட்டின் தத்தமது தருணங்களின் பக்கங்களோடு உறைந்து விடுவது ஆசியும் சாபமுமற்ற யதார்த்தம். நடிக வாழ்வும் சிறந்து பாடகராகவும் தனிவான் நட்சத்திரமாய்ப் பிரகாசிப்பதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் கைவரும் சகஜவரம் அல்லவே அல்ல. பாடல் என்பதைக் குழந்தைமை வியத்தலோடு பாடிக் கடக்காமல் தன்னை வேட்டையாடத் துடிக்கிற மிருகத்தோடு உடனாடுகிற வல்லடிக் களமாகவே தனக்குப் பாடக் கிடைக்கும் ஒவ்வொரு பாடலையும் எதிர்கொண்டு வெற்றிகரமாகப் பாடிக் கடக்கிற “பாடகர் கமல்ஹாசன்” பாடலைத் தீராத வேட்கையாக குறையாத தாகமாக முன்னெடுத்துச் செல்கிற கானவிரும்பி.

பாடி நடித்தவர்களுக்கான குரல்நிலவுகளின் பேரேட்டில் என்றென்றும் ஒளிர்வதற்கான தகுதிகொண்ட பெயராக கமல்ஹாசன் எனும் பெயர் நிச்சயம் இருக்கும்.பல நூறாண்டுகள் கடக்கும். வாழ்க இசை!

-தொடரலாம்.

2 comments

Kulashekar T July 27, 2021 - 10:37 am

நாதத்திலிருந்து உலகம் என்பது பெருவெடிப்பு கோட்பாடு எழுப்பிய முதல் பேரொளியை குறிக்கிறது. சவுண்ட் ஆஃப் மியூசிக். கமலின் சாதனை அளப்பரியது. பாலமுரளி கிருஷ்ணா தன் பிரதான சீடராகவே பாவித்திருக்கிறார். இசையின் பயன்பாடு குறித்த விளக்கம் தாண்டி, இசையில் கரையும் அனுபவம் ரஸவாதம் செய்கிறது.

Amar August 23, 2021 - 12:57 pm

You missed this beautiful song in the list: https://www.youtube.com/watch?v=UctvCWF9nAI

Comments are closed.