அலெஹந்த்ரா பிஸார்நிக்: உரையாடலும் கவிதைகளும் – தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்

0 comment

கேள்வி: குறியீடுகள் என நான் கருதும் வார்த்தைகள் உங்கள் கவிதைகளில் அதிகமாக இருக்கின்றன. அவை உங்கள் கவிதைகளை தனிமை நிரம்பியவையாக, குழந்தைப் பருவ ஈர்ப்புகள் போன்ற, கவிதை போன்ற, அன்பு போன்ற, மரணம் போன்ற பொருத்தமற்ற களங்களாக உருவாக்குவதற்கான பங்களிப்பைச் செய்கின்றன. தோட்டம், வனம், சொல், மெளனம், அலைதல், காற்று, உடைந்து போதல், இரவு போன்ற வார்த்தைகள் குறிகளும் குறியீடுகளும்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: எனது கவிதைகளில் திரும்பத் திரும்பத் தொடர்ச்சியாக, சமரசமில்லாமல், இரக்கமில்லாமல் கூறும் வார்த்தைகள் இருப்பதாக நினைக்கிறேன். குழந்தைப் பருவம் பற்றிய, அச்சங்கள் பற்றிய, மரணம் பற்றிய, எஞ்சிய இரவுகள் பற்றிய வார்த்தைகள் அல்லது மேலும் துல்லியமாகக் கூற வேண்டுமெனில், உங்கள் கேள்வியில் நீங்கள் சுட்டிக்காட்டும் வார்த்தைகள் குறிகளும் குறியீடுகளுமாகத்தான் இருக்கின்றன.

கேள்வி: மிகுந்த உற்சாகமூட்டும் வெளிகளுக்குள் நுழைவதன் மூலமாக இந்த உரையாடலைத் தொடங்குவோம். தோட்டமும் வனமும்.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: என்னை மிகவும் பேய்த்தனமாகத் தொந்தரவு செய்த வாக்கியங்களில் ஒன்று வொண்டர்லாண்டின் சிறிய பெண் ஆலிஸ் பேசுவது – “நான் தோட்டத்தை மட்டுமே பார்க்க வந்தேன்.” ஆலிஸுக்கும் எனக்கும், தோட்டம் என்பது நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வெளி.

கேள்வி: நீங்கள் என் கேள்விக்கு பதிலளித்த போது, எனக்குள் இருந்த உங்கள் குரல் உங்கள் கவிதைகளில் ஒன்றிலிருந்து என்னிடம் சொன்னது. என் வேலை கோருவதும் பேயோட்டுவதும்.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: மற்ற விஷயங்களுக்கு மத்தியில், நான் பயப்படுவது நிகழக்கூடாது, என்னைக் காயப்படுத்துவது எதுவும் இருக்கக்கூடாது, தீயவைகளை அகற்றுவதற்காக, அதனால் எழுதுகிறேன். கவிஞர் சிறந்த சிகிச்சையாளர் என்று கூறப்படுகிறது. இந்த அர்த்தத்தில், கவித்துவத்தின் பணி தீயவைகளை விரட்டுவது, கோரிக்கையிடுவது, அதற்கு அப்பால், ஆற்றுப்படுத்துவது. கவிதை எழுதுவதென்பது உள்ளே இருக்கும் காயத்தை, நிலைகுலைந்து போவதை ஆற்றுவதற்காக. ஏனென்றால் நாம் அனைவரும் ஒருவிதத்தில் காயமடைந்தவர்கள்.

கேள்வி: இந்த உள் காயத்தை நீங்கள் கட்டமைக்கும் பல்வேறு உருவகங்களில், அது எவ்வளவு ஆழமாக என்னைத் தாக்கியது, ஒரு ஆரம்ப கவிதையில் என் உதிரத்துளிகளின் வழியாக ஒரு உறைந்து போன உயிரினத்தைப் பற்றி விவரிப்பதை நினைத்துப் பார்க்கிறேன். காற்று காயத்தின் கோட்பாட்டு ஆசிரியர்களில் ஒருவர் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் சில நேரங்களில் அது உங்கள் எழுத்துகளில் பெரும் துயரமாகத் தோன்றுகிறது.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: என் கற்பனை மூர்க்கத்தனமான வடிவங்களையும் நிறங்களையும் துல்லியமாக வெளிப்படுத்த முனைவதாக இருந்தாலும், நான் காற்றை நேசிக்கிறேன். காற்றினால் துவம்சம் செய்யப்பட்டு, வனத்தைக் கடந்து, தோட்டத்தைத் தேடி அலைகிறேன்.

கேள்வி: இரவில்?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: இரவு பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். நான் அதை என்னுள் இணைக்கிறேன். நான் ஒரு கவிதையில் சொன்னேன் – ஒரு இரவு முழுவதும் நான் அந்த இரவை உருவாக்குகிறேன். இரவு முழுவதும் எழுதுகிறேன். வார்த்தை வார்த்தையாக நான் அந்த இரவை எழுதுகிறேன்.

கேள்வி: ஆரம்பக் கவிதை ஒன்றில், நீங்களும் மௌனத்துடன் ஒன்றிணைகிறீர்கள்.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: மெளனம் – ஒரே கிளர்ச்சி, மிகப்பெரிய உறுதிப்பாடு. “ஓயாத ரீங்காரம்” எப்போதும் நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன் (அலைந்து கொண்டிருக்கும் மொழியின் ஊற்று எங்கே பாய்கிறது என்பது எனக்குத் எப்படித் தெரியும்?) அதனால்தான் மௌனம் என்ற ஒன்று இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது எனச் சொல்லத் துணிகிறேன்.

கேள்வி: இரவுடன் தன்னை இணைக்கும் உங்கள் “நான்” உடன் ஒரு வகையான எதிர்புள்ளியில், நான் அந்த “அந்நியனை”, “பாலைவனத்தில் உள்ள ஒரு மெளனத்தை”, “சிறிய பயணியை”, “அவளிடமிருந்து புலம்பெயர்ந்தவளை”, “ஒரு தாய்நாடு பெற ஏதுவாக இசைக்குள் நுழைய விசைப்பலகையை மீட்ட விரும்பும் ஒருவரை” நான் காண்கிறேன்.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: Trakl-ன் ஒரு வரியை நினைத்துப் பார்க்கிறேன். மனிதன் பூமியில் ஒரு அந்நியன். கவிஞன்தான் அனைத்திற்கும் மிகவும் அந்நியன் என்று நினைக்கிறேன். கவிஞனுக்கு ஒரே அடைக்கலம் வார்த்தை என்பதை நம்புகிறேன்.

கேள்வி: இந்தப் புகலிடத்தை ஆபத்துக்குள்ளாக்கும் ஒருவித பயம் உள்ளது. இல்லாதவற்றிற்குப் பெயரிடுவது எப்படி என்று தெரியாமல் இருப்பது. அது நீங்கள் மொழிக்குள் ஒளிந்துகொள்ளும் போதுதான்.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: ஒரு இருண்மையுடன் அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் மொழிக்குள்ளே மறைந்திருக்கிறேன். ஒன்றுமில்லாதது உட்பட ஏதோ ஒன்றிற்கு ஒரு பெயர் இருந்தால், அது சற்று குறைவான எதிர்ப்பு என்றுதான் தோன்றுகிறது. இருப்பினும், அவசியமானதைச் சொல்லமுடியாததாக இருக்கிறது என்று சந்தேகிக்கிறேன்.

கேள்வி: அவற்றை மறைமுகமாகச் சுட்டும் ஒரு செயல்மொழி மூலம் உயிருடன் தோன்றும் உருவங்களை நீங்கள் ஏன் காண வேண்டும் என்பதா அது?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: குறிகள், வார்த்தைகள், தொனி, குறிப்பீடு என்று உணர்கிறேன். மொழியை உணரும் இந்தச் சிக்கலான வழி, மொழி எதார்த்தத்தை வெளிப்படுத்த முடியாது. வெளிப்படையானதை மட்டுமே பேச முடியும் என்று நம்புவதற்கு என்னை இட்டுச் செல்கிறது. என் உள்ளார்ந்த சர்ரியலிசத்துடன், உள்வய நிழல்களின் கூறுகளுடன், நான் வேலை செய்யும் உண்மைகளுடன், மிகவும் துல்லியமான கவிதைகளை உருவாக்க வேண்டும் என்ற என் ஆசையின் வேர் இதுதான். இதுதான் என் கவிதைகளை வகைமைப்படுத்துகிறது.

கேள்வி: இருப்பினும், நீங்கள் அந்த நுட்பம் எதையும் தேடவில்லை.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: உண்மை. தான் விரும்புவதை கவிதை எழுத வேண்டும் என்று நான் தேடுகிறேன். ஆனால், அது அரிதாகவே எழுதப்படுகிறது என்பதால் இப்போது நான் பேச விரும்பவில்லை.

கேள்வி: எவ்வளவு எழுதினாலும்!

அலெஹந்த்ரா பிஸார்நிக்: …..

கேள்வி: பெயரிடுவது எப்படி என்பது தெரியாமல் இருப்பது முற்றிலும் உங்களுடையதாக இருக்கும் சில சொற்றொடர்களைக் கண்டுபிடிப்பது தொடர்பானது. செயல்பாடுகளும் இரவுகளும் என்ற உங்கள் புத்தகம் ஒரு தீர்மானமான பதில். அங்கு உங்கள் குரல்கள் பேசுகின்றன.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: நான் அந்தக் கவிதைகளுக்காக கடினமாக உழைத்தேன். அவற்றைக் கட்டமைக்க நான் என்னைக் கட்டமைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் மாறிவிட்டேன். எனக்குள் கவிதையின் ஒரு இலட்சியப் பிம்பம் இருந்தது, அதை நான் சாதிக்க முடிந்தது. நான் யாரையும் போல் இல்லை என்று எனக்குத் தெரியும் (இது ஒரு துரதிர்ஷ்டம்) அந்தப் புத்தகம் மூலம் எனக்கு எழுத்துச் சுதந்திரம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். நான் சுதந்திரமாக இருந்தேன், நான் விரும்பியபடி என்னை ஒரு வடிவமாக மாற்றும் சக்தி எனக்கு இருந்தது.

கேள்வி: இந்த அச்சங்கள் திரும்பி வரும் வார்த்தைகளின் பயத்துடன் இணைந்தது. எவை அவை?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: அது நினைவகம். என்ன நிகழ்கிறது என்றால், நான் அவசரகதியில் வந்து மோதும் வார்த்தைகளின் ஊர்வலத்தைப் பார்க்கிறேன், நான் ஒரு நிச்சலனமான, பாதுகாப்பு இல்லாத பார்வையாளனைப் போல உணர்கிறேன்.

கேள்வி: நான் அந்தக் கண்ணாடியை, மறு பக்கத்தை, மறுக்கப்பட்ட நிலப்பரப்பை, அதன் வெறுமையைக் கண்டடைகிறேன். உங்கள் படைப்பில் இரட்டையாக இருப்பதன் பயத்தை அது செயல்படுத்துகிறது. உங்கள் எல்லோரையும் உள்ளடக்க doppelgänger-ன் வரம்புகளை அது தப்பிக்க வைக்கிறது.

அலெஹந்த்ரா பிஸார்நிக்: சரிதான், அது எனக்குச் சவால்விடும் அனைத்தின் பயம். மிச்சாக்ஸ் எழுதிய ஒரு கவிதை – நான் இருக்கிறேன்; யாராக-நான்-இருந்தேன் – என்னுடன் பேசிய- நான்- யார் பற்றி நான் பேசுகிறேன். ஒருவர் உடலில் ஒருவர் மட்டும் தனியாக இல்லை.

கேள்வி: இது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறதா?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: “என் மகளின் குரல்” என்னை வஞ்சித்த போது.

கேள்வி: உங்கள் கவிதை ஒன்றில், உங்கள் மிக அழகான காதல் – கண்ணாடிகளின் மீதான காதல் என்று கூறினீர்கள். அவற்றில் நீங்கள் யாரைக் காண்கிறீர்கள்?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: நான் மற்றவராக இருக்கும் என்னைப் பார்க்கிறேன். (உண்மையில், எனக்குக் கண்ணாடிகளின் மீது ஒரு குறிப்பிட்ட பயம் இருக்கிறது) சில சந்தர்ப்பங்களில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இது கிட்டத்தட்ட நான் எழுதும்போது எப்போதும் நடக்கும்.

கேள்வி: சர்க்கஸில் ஒரு இரவு, தீச்சுடர்களைச் சுமந்து செல்லும் வீரர்கள், கறுப்புக் குதிரைகளில் ஒரு மூர்க்கமான வளையத்தில் சவாரி செய்த போது ஒரு இழந்த மொழியை  நீங்கள் மீட்டீர்கள். நிலைப்பாட்டிற்கு எதிராக குளம்புகளின் சூடான ஒலிகளை என் இதயம் உணர்ந்தது போல இருந்தது, அது என்ன?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: நான் கண்டுபிடிக்க முயற்சிக்கும் கண்டுபிடிக்கப்படாத மொழி.

கேள்வி: ஒருவேளை நீங்கள் அதை ஓவியத்தில் கண்டுபிடித்திருக்கலாம்?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: நான் ஓவியத்தை விரும்புகிறேன், ஏனெனில் ஓவியத்தில் நான் என் உள்வய நிழல்களின் படிமங்களை மெளனமாகக் குறிப்பிட ஒரு வாய்ப்பைக் கண்டடைகிறேன். கூடுதலாக, நான் ஓவிய மொழியின் Mythomania போதாமையால் ஈர்க்கப்பட்டேன். வார்த்தைகளுடன் செயலாற்றுவது அல்லது இன்னும் குறிப்பாக, என் வார்த்தைகளைத் தேடுவது ஒரு பதற்றத்தினுள் ஈடுபடுத்துகிறது, அது ஓவியத்தில் இல்லை.

கேள்வி: ரூஸோவின் “The Sleeping Gypsy”-ல் உங்களைக் கவர்ந்தது எது?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: இது சர்க்கஸ் குதிரைகளின் மொழிக்கு இணையானது. நான் சுங்க முகவர் “Gypsy” உடன் ஒத்த ஏதாவது எழுத விரும்புகிறேன். ஏனெனில் அங்கு அமைதி, அதே நேரத்தில், கல்லறையில் ஒளிரும் விஷயங்களின் குறிப்பீடு இருக்கின்றன. போஸ்ச், க்ளீ , எர்னஸ்ட் ஆகியவர்களின் படைப்புகளால் நான் அதிதீவிரமாக ஊக்கம் பெற்றேன்.

கேள்வி: இறுதியாக, ஆக்டேவியோ பாஸ், The Bow and the Lyre முன்னுரையில் உருவாக்கிய ஒரு கேள்வியை உங்களுக்குள் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன் – அது வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு கவிதையை உருவாக்குவதை விட கவிதையே ஒரு வாழ்வாக மாறுவது சிறப்பாக இருக்காதா?

அலெஹந்த்ரா பிஸார்நிக்: என் மிக சமீபத்திய கவிதை ஒன்றிலிருந்து இது குறித்து பதிலளிக்கிறேன். நான் பரவசத்தில் மட்டுமே வாழ விரும்புகிறேன், என் சொந்த உடலாக கவிதையின் உடலை உருவாக்குகிறேன், என் நாட்கள், வாரங்களுடன் ஒவ்வொரு வாக்கியத்தையும் மீட்டெடுக்கிறேன், ஒவ்வொரு வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் வாழ்க்கைக் கொண்டாட்டத்தில் அர்ப்பணிக்கப்பட்டது போல் என் சுவாசத்தால் கவிதையை உள்ளே செலுத்துகிறேன்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/41s-K9KwHDL._SX316_BO1,204,203,200_.jpg

அலெஹந்த்ரா பிஸார்நிக் கவிதைகள்:

கண்ணாடியின் பாதைகள்

I

அனைத்துக்கும் மேல், பவித்திரமான பார்வையிடல். எதுவும் நிகழாதது போல், அதுதான் உண்மை.

II

இரவின் கூர்விளிம்பில் உள்ள பறவை போல் உன் முகம் என் அச்சத்திலிருந்து வெகுதொலைவு நகரும் வரை உன்னைக் காண விழைகிறேன்.

III

ஒரு சிறுபெண் இளஞ்சிவப்புநிறச் சாக்கட்டியால் ஆதிகாலச் சுவரில் வரைந்ததை, திடுக்கென ஒரு பெருமழை அழித்தது போல்.

IV

ஒரு மலர் தன்னிதழ் திறக்கும் பொழுது, தன்னிடம் இல்லாத இதயத்தைத் திறந்து காட்டுவது போல்.

V

என்னிடமிருந்து ஒரு சமர்ப்பித்தலை வழங்குவதற்காக என் உடலும் என் குரலின் அனைத்து சமிக்ஞைகளும் கதவருகில் காற்றிடமிருந்து விடைபெறும் கிளைகள்.

VI

உன் எதிர்கால இருத்தலின் முகமூடியுடன் உன் முகத்தின் நினைவைத் திரையிட்டு, உன் கடந்த கால இருத்தலால் சிறுபெண்ணைப் பயமுறுத்து.

VII

அவர்களால் பகிர்ந்துகொள்ளப்பட்ட இரவு, பனியில் கலைந்து சென்றது. அது குளிரூட்டும் பருவகாலம்.

VIII

தாகம், என் நினைவில் தாகம், கீழே, அடித்தளத்தில், கிணற்றில், நான் அருந்துவேன், என் நினைவில் உள்ளது.

IX

வெளிப்படுத்தப்படுவதாக இருந்த இடத்தில் காயம்பட்ட விலங்கைப் போல் வீழ்வது.

X

எதையும் விரும்பாத சிலரைப் போல். ஒன்று மட்டும் அல்ல. தைக்கப்பட்ட வாய். தைக்கப்பட்ட கண்ணிமைகள். நான் மறந்து விட்டேன். உள்ளே, காற்று. அனைத்தும் திரையிடப்பட்டது. காற்று உள்ளே.

XI

அமைதியின் கருப்புச் சூரியனில் சொற்கள் பொன்னாக மாறின.

XII

ஆனால், அமைதி உறுதியானது. அதனால் நான் எழுதுகிறேன். நான் தனிமையில் இருக்கிறேன், எழுதுகிறேன். இல்லை, நான் தனிமையில் இல்லை. பயந்து நடுங்கும் யாரோ இங்கே இருக்கிறார்.

XIII

சூரியன், நிலவு, நட்சத்திரம் என நான் கூறினாலும், எனக்கு நிகழ்ந்தவை பற்றியே நான் குறிப்பிடுகிறேன். நான் எதை விரும்பினேன்? ஒரு நேர்த்தியான அமைதியை நான் விரும்பினேன். அதனால்தான் நான் பேசுகிறேன்.

XIV

ஓநாயின் அலறல் வடிவத்தை இரவு கைப்பற்றுகிறது.

XV

முன் அறிவிக்கும் இயல்புகொண்ட படிமத்தில் தொலைந்து போகும் மகிழ்ச்சி. நான் என் சடலத்திலிருந்து எழுந்தேன். நான் யார் என்பதை அறிய விழைந்தேன். எனக்குள்ளிருந்து காற்று வரை தேடியலைந்து, ஒரு நிலப்பரப்பில் உறங்கும் அவளை நோக்கிச் சென்றேன்.

XVI

எனக்காக யாரும் காத்திராத இடத்தில் என் முடிவற்ற வீழ்ச்சிக்குள் என் முடிவற்ற வீழ்ச்சி, யார் எனக்காகக் காத்திருக்கிறார் என்பதைக் காண்பதிலிருந்து நான் கண்டேன், வேறு யாருமல்ல நான்தான் என்று.

XVII

ஏதோ ஒன்று அமைதிக்குள் வீழ்ந்து கொண்டிருந்தது. ஒளிரும் விடியலைக் குறிப்பிட்டதுதான் என் இறுதிச் சொல்லாக இருந்தது.

XVIII

நீலநிறப் புவியின் வட்டவடிவ நட்சத்திர மண்டலத்தில் மஞ்சள்நிறப் பூக்கள். காற்று நிரம்பிய நீர் நடுங்குகிறது.

XIX

பகல்வெளிச்சக் கூச்சம், காலைவேளையில் மஞ்சள்நிறப் பறவைகள். ஒரு கரம் இருளின் கட்டவிழ்க்கிறது. கண்ணாடியைக் கடந்து செல்வதை நிறுத்தாமல் கண்ணாடிக்குள் மூழ்கிய பெண்ணின் தலைமுடியைக் கைப்பற்றி இழுக்கிறது ஒரு கரம். மெய்யுணர்வுக்குத் திரும்புவதற்கு, என் துயர்மிகு எலும்புகளிடம் நான் திரும்ப வேண்டும், என் குரல் என்ன சொல்கிறது என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும்.

*

இரவுப் பாடகி

நீலநிற உடையுடன் இறந்தவள் பாடிக்கொண்டிருக்கிறாள். அவளுடைய பாடல் இறப்பினுள் மூழ்கி உள்ளது. அவளுடைய குடிபோதை பற்றி அவள் சூரியனிடம் பாடுகிறாள். அவளுடைய பாடலினுள் ஒரு நீலநிற உடை, ஒரு வெள்ளைக் குதிரை, அவளுடைய மரணித்த இதயத்தின் எதிரொலிகளுடன் பச்சை குத்தப்பட்ட ஒரு பசுமையான இதயம் ஆகியவை இருக்கின்றன. தொலைந்து போன அனைத்துக்குமாக காட்சிமைப்படுத்தியபடி, ஒரு நாடோடிப் பெண்ணுடன் இணைந்து பாடுகிறாள்.

அந்த நாடோடிப் பெண்ணும் அவள் தான். அவளுடைய மந்திர தாயத்துமானவள். அவளுடைய உதடுகளில் பசும்பனியும், கண்களில் சாம்பல்நிறக் குளிரும் இருந்தாலும், தாகத்திற்கும் தண்ணீரை அணுகும் கரத்திற்கும் இடையில் விரிந்த தொலைவை அவளுடைய குரல் உடைத்தெறிகிறது. அவள் பாடிக்கொண்டிருக்கிறாள்.

* 

பாதைவழிக்கு ஒளியூட்டுவது யார்

நீ என்னை உற்று நோக்கும் பொழுது
என் விழிகளே அர்த்தங்கள்,
இந்தத் தடுப்புச் சுவர் ரகசியங்களைப் பொத்தி வைத்துள்ளது,
என் அச்சம் சொற்களை, கவிதைகளைச் சுமக்கிறது.

உன்னால் மட்டும் என் ஞாபகங்களை
ஒரு ஈர்ப்புள்ள சாகசக்காரனுக்குள்,
ஒரு அணையாத நெருப்பினுள்
சுழற்ற முடியும்.

*

கூண்டு

வெளியே சூரியன்.
சூரியனைத் தவிர வேறொன்றுமில்லை
ஆனால் மனிதர்கள்
அதை நோட்டமிடுகிறார்கள்
பின்னர் பாடுகிறார்கள்.

எனக்குச் சூரியனைப் பற்றி எதுவும் தெரியாது.
தேவதையின் மெல்லிய இசை பற்றியும்
கடைசிக் காற்று சிடுசிடுத்த ரீங்காரம் பற்றியும்
எனக்குத் தெரியும்.
மரணம் என் நிழலில்
அப்பட்டமாய் நிலைபெறும் அதிகாலை வரை
அழுதுகொண்டிருக்கிறேன்.
 
என் பெயரின் கீழ் அழுகிறேன்.
இரவில் கைக்குட்டையை அசைக்கிறேன்.
நா வறண்ட படகுகள்
என்னுடன் நடனமாடுகின்றன.
என் தீய கனவுகளை எள்ளி நகையாட
நான் நகமும் சதையுமானவற்றை
ஒளித்து வைக்கிறேன்.
 
வெளியே சூரியன்.
எனக்குச் சாம்பலுடை அணிவிக்கப்பட்டிருந்தது.

*

ஒப்புதல்

இளஞ்சிவப்புநிற மலர்களின் அமைதியை நீ வடிக்கிறாய்
அவை காற்றின் துயரத்தில் படபடக்கின்றன
அதுதான் என் இதயத்தில் உழல்கிறது.
என் வாழ்வை சிறுவர்களின் புனைவாக மாற்றுகிறாய்
அதில் கப்பல் கவிழ்தலும் மரணமும்
அன்புமிகுந்த கொண்டாட்டங்களுக்கு ஒரு மன்னிப்பு.

*

சாம்பல் வளையங்கள்

என் குரல்கள் பாடுகின்றன
அதனால் மற்றவர்கள் பாட முடியாது-
அந்த வடிவங்கள் அதிகாலையில் சாம்பல்நிறத்தில் முணுமுணுத்தன,
அவை மழையில் தனித்துவிடப்பட்ட பறவைகளைப் போல்
ஆடைகளை அணிந்திருந்தன.
இந்தக் காத்திருத்தலில்
இளஞ்சிவப்பு மலர்களைப் பிரிக்கின்றன என்றொரு வதந்தி.
பகல்வேளையின் வருகையில்
சூரியன் சிறுசிறு கருப்புச் சூரியன்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இரவில் எப்பொழுதும்
சிதைவுற்ற சொற்களின் இனம்
என் தொண்டையில் அடைக்கலம் தேடுகிறது,
அதனால் அவர்கள் பாடப் போவதில்லை-
சபிக்கப்பட்டவர்கள், மெளனத்தின் உடைமையாளர்கள்.

*

கடிகாரம்

ஒரு சிறு பெண், மிகச் சிறியவள்
ஒரு பறவையின் இதயத்தில் வாழ்பவள்
அதிகாலை வேளையில் வெளியே செல்கிறாள்
தன் ஒரே அசையை உச்சரிக்க:
இல்லை.

*

சுயத்தை விடுவிப்பதற்கான ஒரு இடத்தில்

பரந்த வெளி. நீண்ட காத்திருத்தல்.
ஒருவரும் வரவில்லை. இந்த நிழல்.
 
ஒவ்வொருவரும் தருவதை அதற்குத் தாருங்கள்:
அர்த்தங்கள், அவை இருண்மையானவை,
முழுமையாக வியப்பூட்டுவன அல்ல.
 
பரந்த வெளி. தகிக்கும் அமைதி.
நிழல்கள் ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்வது என்ன?

*

டயானாவின் மரம்

1.

விடியலுக்காக நானே அந்தத் துள்ளலை உருவாக்கினேன்.
ஒளியின் அருகில் எனது உடலை நிலைப்படுத்தி
பிறப்பின் துயரம் பற்றி பாடினேன்.

2.

இவை சில சாத்தியமுள்ள பதிப்புகள்:
ஒரு துளை, ஒரு நடுங்கும் சுவர்…

3.

வெறும் தாகம்
மெளனம்
முரண் இல்லை
என்னிடம் சற்று எச்சரிக்கையாயிரு, என் அன்பே
வெறுமையான கோப்பைகளுடன் உள்ள பயணியின் பாலைவனத்தில்
மெளனமாக இருக்கும் பெண்ணிடம் சற்று எச்சரிக்கையாயிரு
மற்றும் அவள் நிழலின் நிழலுடனும்.

4.

அவ்ரோராவுக்கும் ஜூலியோ கொர்த்தஸாருக்கும்
இப்போது பிறகு:
நினைவிலிருந்து அகன்ற பெண்ணுக்கான அஞ்சலிகளைத் தேடும்
அவர்களின் கரங்கள் மூழ்குவதை யார் நிறுத்துவது?
குளிர் அஞ்சலி செலுத்தும். காற்று அஞ்சலி செலுத்தும்.
மழையும் அஞ்சலி செலுத்தும். அதேபோல, இடிமுழக்கமும். 

5.

ஒரே ஒரு முறை திறந்த கண்களுடன்
வாழ்தலின் ஒரு சிறு தருணத்திற்காக மட்டும்
அறிவார்த்தத்தின் மீது சிறு பூக்களையும்
குரல் இழந்த ஒரு மனிதனின் வாயில்
உள்ள சொற்களைப் போல நடனமாடுவதையும்
காணும் ஒரு நிமிடத்திற்காக மட்டும்

6.

அவளுடைய நினைவின்
பொன்னுலகத்தில் அவள் ஆடைகளைக் களைகிறாள்
அவளுடைய பார்வைக் கோணங்களின்
அச்சம் மிகுந்த விதி பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது
இருத்தலற்ற ஒன்றுக்குப் பெயரிடுவது எவ்வாறு
எனத் தெரியாமல் இருப்பது பற்றி அவள் அச்சம் கொள்கிறாள்.

7.

அவள் தாவிக் குதிக்கிறாள், மேற்சட்டை நெருப்பு பற்ற,
நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரத்திற்கு,
நிழலிருந்து நிழலுக்கு.
காற்றின் இந்தக் காதலனின்
நெருங்கிப் பழகாத ஒரு மரணத்தில் அவள் மரணிக்கிறாள்.

8.

ஒரு ஒளிரச் செய்யும் நினைவு, நான் எதிர்பார்த்திருந்த
நிழலால் தொல்லை தரும் ஒரு படி அரங்கம்.
அது வருகை தரும் என்பது உண்மையல்ல. அது வருகை தராது
என்பதும் உண்மையல்ல.

9.

இந்த உறுப்பெச்சங்கள் இரவில் பளிச்சிடுகின்றன,
ஒரு திண்மமான பறவையின் உயிர்ப்புள்ள தொண்டையில்
இந்தச் சொற்கள் மதிப்புமிக்க கற்கள் போல,
வசீகரமான இந்தப் பச்சை,
வாட்டும் இந்த இளஞ்சிவப்பு,
வெறுமையான இந்த மறைபொருள் இதயம்.

*

எழுத்தாளர் குறிப்பு: அலெஹந்த்ரா பிஸார்நிக் (Alejandra Pizarnik) அர்ஜெண்டினிய கவிஞர். ஏப்ரல் 29, 1936-ல், அவெலனேடாவில் பிறந்தார். இது கிரேட்டர் ப்யூனஸ் அயர்ஸ் பெருநகரப் பகுதியிலுள்ள ஒரு நகரம். அர்ஜெண்டினாவின் ரோனோவிலிருந்து (இப்போது உக்ரைன்) புலம்பெயர்ந்த யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர்.

அவருடையது ஒரு கடினமான குழந்தைப் பருவம். சிறிய வயதில் கடினமான சுவாச நோயாலும் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டார். எடை கூடுவது அவருக்கு ஒரு வியாதியாக மாறிவிட்டது. அவருடைய எதிர்மறை உடல் தோற்றம், ஒப்பீடுகள் காரணமாக வாழ்க்கை மேலும் சிக்கலானதாக மாறியது. இதே காரணத்திற்காக, அவர் ஆம்ஃபீடமைன் மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளத் தொடங்கினார். அதற்கு அவர் கடுமையாக அடிமையாகிவிட்டார். இது நீண்டகால உறக்கக் கோளாறுகளை ஏற்படுத்தியது. தூக்கமின்மையால் அவதிப்பட நேர்ந்தது.

இலக்கியம், இதழியல், தத்துவம் பயின்றார். 1955-ல் தனது முதல் கவிதை நூலை வெளியிடுகிறார். அர்ஜெண்டினாவின் மிகவும் சக்திவாய்ந்த தீவிர கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவரது கவிதை இலத்தீன் அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை ஆணாதிக்கத்தால் உடல்ரீதியாக அழிவுக்கு உள்ளாவதைச் சித்தரிக்கிறது.

ஆக்டோவியா பாஸ், ஜூலியா கொர்த்தஸார் ஆகியோருடன் நட்புகொண்டிருந்தார். அவருடைய படைப்புகளில் ஆர்தர் ரைம்போவின் தாக்கம் அதிகம் இருந்தது. மாபெரும் கவிதைகளை உருவாக்க பாதிக்கப்படுதல் இன்றியமையாதது என்பதை அதிகமாக நம்பினார். செப்டம்பர் 25, 1972-ல், தனது 36-ஆவது வயதில், அதிக அளவு மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

*

பேட்டியின் ஆங்கில மூலம்: A Conversation with Alejandra Pizarnik by Martha Isabel Moia