நெருநல் உளளொருத்தி

15 comments

உள்ளே இருக்கும் குழந்தை வெளியே வருவதற்காக எலும்புகள் விரிவடையத் தொடங்கியதும், உடலை நகர்த்த முடியாதபடிக்கு நடுமுதுகில் சடசடவெனெ வலி பரவ ஆரம்பித்தது. தசையில் வரும் வலியைப் பொறுத்துக்கொள்வதைப் போல எலும்பில் வரும் வலியை அவ்வளவு எளிதாகத் தாங்கிக்கொள்ள முடிவதேயில்லை.

கணவனிடம் ஆட்டோவை வரவழைக்கச் சொன்னாள் பூங்கொடி. இரண்டு நாட்களுக்கு முன் வலி வந்தபோது கசாயம் வைத்துக் குடித்தவுடனேயே பொய்வலி என்று தெரிந்தது. ஆனால் இன்றைய வலி, அடுத்த எட்டிலேயே ஆஸ்பத்திரிக்குப் போய் இறங்க வேண்டுமெனத் தாங்க முடியாமல் உந்தித் தள்ளியது. கடுமையான வலி இருப்பினும், முந்தைய இரண்டு பிள்ளைப்பேறு தந்த அனுபவத்தினால் பிரசவம் குறித்த எந்த அச்சமும் பூங்கொடிக்கு இருக்கவில்லை. 

ராமஜெயம், ஆட்டோவுக்குப் போன் செய்த கையோடு கிருஷ்ணவேணிக்கும் போன் செய்து, பூங்கொடியை மருத்துவமனையில் சேர்க்கவிருக்கும் தகவலைச் சொன்னான்.

பையன்கள் இருவரையும் எதிர்வீட்டுக் கிழவியிடம் விட்டுவிட்டு மனைவியை  ஆட்டோவுக்குள் தூக்கி அமரவைத்தான் ராமஜெயம்.

பூங்கொடியை ஸ்ட்ரெட்ச்சரில் கிடத்தி, ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்லும்போதே வேணி வந்துவிட்டாள். ஓடிவந்து, ”அண்ணீ ” என்றாள். அணைந்து கருகிய நெருப்புத் துண்டங்களில் தீப்பிடித்துக்கொண்டதைப் போலப் பூங்கொடி முகத்தில் வலி மறைந்து வெறுப்பு தகித்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து அவிழ்த்து எறியப்பட்ட துணியைப் போலப் பிரசவ வார்டில் கிடந்தாள் பூங்கொடி. எடை குறைந்து பிறந்ததால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருந்தார்கள். ராமஜெயம் சென்று பார்த்துவந்த பிறகு, குழந்தையைப் பார்க்கும் ஆவலில் இன்குபேட்டர் அறைக்குள் சென்றாள் கிருஷ்ணவேணி. உள்ளே நுழைந்ததும் உடல் அதிர, கூசிய பாதங்களை மெல்ல அடியெடுத்து வைத்து, ஒவ்வொரு இன்குபேட்டராகப் பார்த்துக்கொண்டே வந்தாள். 

பிறந்த குழந்தைகள் அத்தனைக்கும் ஒன்று போல ஒரே முகமாய் இருந்தது. ஒருவேளை இதுதான் கடவுளின் முகமோ எனத் தனக்குள் நினைத்துக்கொண்டாள். 

“ஏழாம் நம்பர்ல இருக்கு ஆச்சி!” வெளியே இருந்து மெதுவாகச் சொன்னான் ராமஜெயம். 

கண்களில் ஆவல் சுடராய் ஒளிர ஏழாம் நம்பரில் இருந்த குழந்தையைப் பார்த்தாள். தோலுரிந்த எலியைப் போலச் சின்னூண்டு கண்களும் வாயுமாக வெள்ளைத் துணிக்குள் சுருட்டப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து, முகமெல்லாம் பற்களாய்ப் புன்னகைத்தாள். பிஞ்சு, பார்ப்பதற்கு ராமஜெயத்தின் குட்டி உருவமாகத் தெரிந்தது. தன் அண்ணனைப் போல இருக்கிறதென்றால் தன் ஜாடையும் இருக்குமே என்ற ஆவல் மேலிட இன்னும் சற்றுத் தலையைத் தாழ்த்தி ஆழமாக ஊடுருவிப் பார்த்தாள். அவளது மூக்கினையும், காதுகளையும் சிறு அச்சில் வார்த்தது போலத் தெரிந்ததும், உடல் சிலிர்த்தது. உடனே குழந்தையை உள்ளங்கைக்குள் தூக்கிக்கொள்ள வேண்டுமெனத் தோன்றியது.

“போதும் வாங்கம்மா” என்ற செவிலியின் குரலைக் கேட்டுத் திரும்பியவள், மனமின்றி வெளியே வந்து ராமஜெயத்திடம், “அண்ணே மொகத்த உரிச்சி வெச்சாப்புல அப்புடியே நம்பள மேறியே இருக்காண்ணே புள்ள.. ” என்றாள். 

”பூங்கொடி கண்ணு முழிச்சதும் அவகிட்ட புள்ளையக் காட்டிட்டு நீ எடுத்துட்டுப் போயிடு ஆச்சி” சொல்லும்போது ராமஜெயத்தின் குரல் தாழ்ந்திருந்தாலும் தடங்கலின்றி அவன் சொன்னது வேணிக்குச் சற்று நிம்மதியளிப்பதாக இருந்தது. 

“அவுருக்கு இன்னைக்கும் லீவு போட முடியலண்ண.. இந்தா இப்ப மூனு மணிக்கெல்லாம் டூட்டி முடிஞ்சதும் நேரா இங்கதான் வரன்னு சொன்னாரு. வந்துரட்டும்ண.” 

ராமஜெயம் தலைநிமிர்த்தி மருத்துவமனைச் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தபோது மணி ஒன்றைக் காட்டியது. இன்னும் மூன்று மணி நேரம் என நினைத்துக்கொண்டு நெடுமூச்சுவிட்டான். 

பிரசவ வார்டிலிருக்கும் மூத்த செவிலி ஒருவர் இவர்கள் இருவரையும் நோக்கி வந்து, “ம்மா.. புள்ளைக்குப் பால் கொடுக்கணும், பேபியோட மதர எழுப்புங்கம்மா” என்றதுமே வேணிக்கு உள்ளே வலிய கரமொன்று ஈரக்கொலையைக் கொத்தாகப் பிடித்திழுப்பதைப் போல இருந்தது.

குழந்தைக்குப் பால் கொடுக்கத் தொடங்கிவிட்டாள் என்றால், குழந்தையைக் கொடுப்பாளோ மாட்டாளோ என்ற பயம் மனதைக் கவ்வியது.

நாள் தள்ளிப் போனதிலிருந்தே ஜோசியம் பார்க்கச் சோழம்பேட்டைக்குச் செல்ல வேண்டுமெனப் பூங்கொடி ராமஜெயத்தை நச்சரித்துக்கொண்டே இருந்தாள். அவனுக்கோ நிலத்தை உழுவதற்கும், நாற்றடிப்பதற்கும், வயல் வேலைக்கு ஆள் கூப்பிடப் போவதற்குமே நேரம் சரியாக இருந்தது. 

நடவு எந்திரம் வந்துவிட்டாலும் கூடக் கைநடவு போல ஆகாது என்பதாலேயே நத்தம், திருநன்றியூர், ஆலவேலி எனப் பக்கத்து ஊர்களிலிருந்து உதிரி உதிரியாய் வேலைக்கு ஆட்களை அழைத்து வந்து, ஐம்பது ரூபாய் அதிகமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. கால்நடைகளிடமிருந்து நட்ட வயலைக் காப்பதற்காக வரப்புகளைச் சுற்றிப் போட்டிருந்த கிளேரியா வேலியையும், மூங்கில் முட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒடித்து அடுப்பெரிக்க எடுத்துப் போய்விடுகிறார்கள் வழிப்போக்கர்கள்.  

இதற்கிடையே ஒருநாள் எல்லாவற்றையும் ஓரமாக ஒதுங்க வைத்துவிட்டு, இருவரும் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோழம்பேட்டைக்குச் சென்றார்கள்.

ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர் சொன்னார்: “ஸ்கேன் ரிப்போர்ட் மாதிரி சொல்ல முடியிலன்னாலும், கிரகங்களோட கணக்குப்படி பாக்கும்போது மறுபடியும் ஒங்களுக்கு ஆம்பளப் புள்ளன்னுதான் காட்டுது.. அதோட ராமஜெயம், ஜாதகப் பிரகாரம் உனக்குப் புத்திரப் பாக்கியம் ஏழும் ஆண் வாரிசுதான்னு கட்டம் சொல்லுது” என்று அவர் சொல்லி முடிக்க பூங்கொடிக்குத் தாங்க முடியாமல் கண்களில் நீர் மின்னியது.

வீட்டுக்குப் போகும்போது ராமஜெயம்தான் ஆரம்பித்தான்.

“பூங்கொடி நான் ஒரு விசியம் ஒங்கிட்ட சொல்ணும்னு நெனச்சிகிட்ருந்தேன்.. இன்னைக்கி ஜோசியரு சொன்னதும் இப்பியே சொல்லிடுலாம்னு நெனைக்கிறேன்.”

அவன் பீடிகை போட்டதும், வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு என்ன என்பது போலப் பார்வையால் கேள்விக்குறி வரைந்தாள் பூங்கொடி.

“இல்ல, நம்ப ஆச்சிக்கி கல்யாணம் ஆயி ஏழெட்டு வருசமா புள்ளையில்லீல்ல.. நம்பளுக்கு ஏற்கனயே ரெண்டு புள்ளையா ஆயிடுச்சி.. மூனாவதா பொறக்குறப் புள்ளைய அதுகிட்டக் குடுத்துருவமான்னு நெனச்சேன்.. அதுவும் என்னுகிட்ட வாய்வுட்டுக் கேட்டுடுச்சி.. அதான் ஒன்கிட்ட ஒரு வார்த்த கேக்குலாம்னு..” முதல்முறையாக யாசகம் கேட்பவனுடையதைப் போலிருந்தது அவன் குரல்.

”ஓகோன்னான்னாம்.. என்னாடா இன்னைக்கு அதிசிய மசுரா புருசன் வயல தெடல உட்டுட்டு கூப்ட ஒடனே அழச்சிகிட்டு வந்தானேன்னு பாத்தா இதான் சங்கதியா? அடேயப்பா… பத்து மாசம் செமந்து புள்ளைய பெத்து நோவாமா ஒன் தொங்கச்சிக்கு நொட்டுனும்ங்கற.. என்னா நெனச்சிகிட்டு இருக்குற?” என்று அவனிடம் உரத்த குரலில் கத்தினாள். 

“இல்ல இந்தப் புள்ள ஒன் ஆசப்படி பொம்பளப் புள்ளையா பொறந்தா நம்ப வளத்துக்குவோம்.. ஆணாப் பொறந்தா ஆச்சிக்கிக் குடுத்துருவோம்”.

யோசனை சொல்பவனைப் போல அவன் சொன்னதும் அவனை நேருக்கு நேர் மறித்துக்கொண்டு சொன்னாள். “எதுக்குங்கறேன்? ஒன் தங்கச்சிக்கு கைகாலு இல்லீன்னா என் கைகால வெட்டி குடும்பியா? வூட்டுக்கு வந்து அவ என் புள்ளைவோளத் தூக்குனாலே என் அங்கம் கொதிக்கும்.. ஊரு ஒலகத்துல பொறந்த வூட்ல அது வேணும் இது வேணும்னு கேப்பாங்கன்னு கேள்விப்பட்ருக்கேன்.. இவ புள்ளை வேணும்னு கேட்ருக்கா பாரேன்..” என்று அவனிடம் சீறியவளைப் பார்த்துத் திரண்ட கோபத்தை உள்ளங்கைக்குள் வைத்து, நசுக்குவது போலக் கையை இறுக மூடிக்கொண்டவன் அதன் பிறகு எதுவுமே பேசாமல் நடந்தான். ஆனால், அவள் வீட்டிற்கு வந்துதான் பேச்சை நிறுத்தினாள்.

இருபது வயதுக்குள்ளேயே தாய் தந்தையை இழந்தவன் ராமஜெயம். இருப்பினும், வேணி ஒருபோதும் பாதித் தூக்கத்திலெழுந்து அம்மாவைக் கேட்டு அழுததில்லை, அப்பா இருந்திருக்கலாமோ என்று ஒருநாளும் அவளை வீட்டுக்கு வெளியே அவன் யோசிக்கச் செய்ததுமில்லை. வேணியின் சிந்தனையில் இன்னது வேண்டும் எனத் தோன்றி, அவள் கேட்கும் முன்னமே அவள் உள்ளங்கைகளில் அதை அளித்திருப்பான்.

தங்கையை டீச்சராக்க வேண்டுமென்ற கனவு ராமஜெயத்துக்கு இருந்தது. ஆனால், வேணிக்குப் பத்தாம் வகுப்பு கணிதப்பாடம் பேயாய்ப் பயமுறுத்த அண்ணனிடம் பிடிவாதம் பிடித்துப் பள்ளிக்குப் போவதை நிறுத்திக்கொண்டாள்.  

வேணிக்குத் திருமண வயது வந்ததும் தன் ஊர்ப்பெண்களைப் போல மாடு மேய்க்கவும், சாணம் பொறுக்கி ராட்டி தட்டவும் ஆளாகிவிடக் கூடாது என்று தினமும் சொக்காயி முன் நின்று வேண்டிக்கொள்வாள். மாதச் சம்பளம் வாங்கும் வேலையிலுள்ள மாப்பிள்ளைக்குத்தான் மணம் செய்துவைக்க வேண்டுமெனப் பிடிவாதமாக இருந்து வரன் தேடினான் ராமஜெயம். பல இடங்களிலும் விசாரித்த பிறகு சீர்காழியில் தனியார்ப் பேருந்து ஒன்றில் டிரைவராகப் பணிபுரியும் சம்பத்துக்குத் திருமணம் செய்து வைத்தான். சொந்தமாக ஒரு சிறிய வீடு, கெட்டப் பழக்கம் எதுவுமில்லை. நிறைவான வாழ்க்கையாகப் போய்க்கொண்டிருந்தது.

எல்லாம் இருந்தும், அவையெதுவும் ஒன்றுமே இல்லை என்றாக்கிவிடும் குழந்தை பிறக்காத துயரம் ஒருவருடம் கழித்து வேணி மனதில் உண்டானது. வருடங்கள் கரையைக் கரைய அந்தக் கவலை அவளது உடலிலொரு உறுப்பாகவே வளரத் தொடங்கியது.

பிரபலமாக இருக்கும் மகப்பேறு மருத்துவமனை அத்தனைக்கும் சம்பத்தும் வேணியும் அலைந்தார்கள். ஆங்கில மருத்துவத்தின்மீது நம்பிக்கையிழந்தபோது சித்த மருத்துவச் சூரணங்களையும், மாத்திரைகளையும் உட்கொண்டார்கள். திருவெண்காடு கோவிலில் உள்ள மூன்று குளங்களிலும் மூழ்கி, திருக்கருகாவூரில் பரிகாரம் செய்தார்கள். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அடிக்கடி நடந்தார்கள். ஒவ்வொரு மாதமும் குருதிப்பெருக்கு நாளுக்கு முந்தைய நாளில் வேணி அத்தனை தெய்வங்களையும் நினைத்துப் புலம்புவாள்.

இயற்கையாகவே கெச்சலான உடலைக் கொண்டிருந்ததால் அவளது வயிறு எப்போதும் ஒட்டி உள்ளடங்கியே இருந்தது. கண்ணாடிக்குமுன் நின்று நீள்மூச்சுவிட்டு வயிறை உப்பச் செய்து சந்தோஷப்பட்டுக்கொள்வாள்.

இதற்கிடையே ராமஜெயத்துக்கும் பூங்கொடிக்கும் திருமணமான பதினோராவது மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணவேணியும் சம்பத்தும் குழந்தையைப் பார்ப்பதற்கு ஒரு பவுனில் சங்கிலியும், வெள்ளிக் காப்பும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அடுத்த இரண்டு வருடத்தில் அடுத்ததும் ஆண் குழந்தையே பிறக்க வேணி சீர்காழியில் இருந்து அடிக்கடி பனம்பள்ளிக்குக் குழந்தைகளைப் பார்ப்பதற்காகவே வரத்தொடங்கினாள். 

வேணி ஊருக்கு வந்திருக்கும் சமயங்களில் பூங்கொடி குழந்தைகளுக்குச் சோறூட்டும்போது அவள் கண் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே வேடிக்கை காட்டிச் சாப்பிட வைப்பதைப் போலக் குழந்தைகளைப் புறவாசலுக்குத் தூக்கிச் சென்றுவிடுவாள். குறிப்பாக, வேணி அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களைப் பார்க்கப்போகும் நேரத்தில்தான் குழந்தைகளுக்கு உணவளிப்பாள். அவள் இருக்கும்போது குழந்தைகள் பசியில் அழுதால்கூட வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லிப் பேச்சை மாற்றிவிடுவாள்.

இந்த நிலையில்தான் அண்ணன் மனைவி மூன்றாவது முறையாகக் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியை அறிந்தவுடனே சம்பத்திடம், “அண்ணன்கிட்ட இந்தக் கொழந்தயக் கேட்டு வளக்கலாமாங்க?” என்று கேட்டாள்.

“யாரோ ஒரு அநாதை புள்ளைய எடுத்து வளத்தாக்கூட ஒன்னும் தெரியாதுடி. அண்ணன் புள்ளன்னா ஆயிரம் பிரச்சன வரும் “ என்று கணவன் சொன்னது வேணிக்கு ஏமாற்றமாக இருந்தது. 

“ஏதோ ஒரு புள்ளய வளக்கறதுக்கு எங்க வூட்டு அண்ணன் புள்ளைய என் புள்ளையா வளத்துக்குறேன்” என்று திண்ணமாகப் பதில் சொன்னாள்.

சம்பத்துக்கு இதில் உவப்பில்லையென்றாலும் வேணி தன் முடிவில் திடமாக இருந்ததால், அவள் பக்கமே தலையாட்டினான்.

ஒருநாள் அண்ணனிடம் இதைக் கேட்டுவிடுவது என முடிவுசெய்து ஊருக்கு வந்தாள். பிள்ளையார் கோவில் தெருமுனையில் அவள் முகம் தெரிந்ததுமே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் ஓடிப்போய், “ஐ.. அத்த வந்துதுக்கு ஐ அத்த வந்துதுக்கு” என்று அவளது புடவையைப் பிடித்துக்கொண்டார்கள். கையில் வைத்திருந்த பையோடு குழந்தைகள் இருவரையும் வாரி அணைத்து, இரண்டு இடுப்பிலும் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தாள். அவள் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வருவதை வாசலில் நின்று பார்த்த பூங்கொடிக்கு முகத்தில் அனல் பறந்தது. ஆத்திரத்தை மறைத்துக்கொண்டு, “வா ஆச்சி” என்று கூப்பிட்டாள். 

பையன்கள் இருவருக்கும் கை நிறைய தின்பண்டங்களைக் கொடுத்தாள். அவர்கள் மாறி மாறி அவள் கன்னங்களை முத்தமிட்டார்கள். 

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சின்னவனை வலிய இழுத்து மடியில் இருத்திக்கொண்டு கேட்டாள், “அண்ணன் எங்க அண்ணி ஆளக்காணும்?” 

“உளுந்து வெறச்சிருக்கு. அததான் பாக்கப் போயிருக்காரு.. இப்ப வர்ற நேரம்தான்” என்றாள் பூங்கொடி. வேணிக்கு அண்ணனிடம் தனியே பேச இதுதான் சரியான சமயம் என்று தோன்றியது. “வயலுக்குப் போயி ரொம்ப நாள் ஆவுது.. நான் போய்ப் பாத்துட்டு வர்றேன் அண்ணி” என்று சொல்லிவிட்டுக் கிழக்கே வயலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பூங்கொடிக்கு என்னவோ மிகவும் உறுத்தலாக இருந்தது. 

அரிதாளுக்கு இடையே வளர்ந்திருக்கும் ஆமணக்கம்பூண்டுச் செடிகளைக் குந்திப் பறித்துத் தூக்கி வரப்பில் எறிந்துகொண்டிருந்தான் ராமஜெயம்.

வேணி வயலின் மறுகோடியில் அமர்ந்து களைகளைப் பறிக்க ஆரம்பித்தாள்.

இரவுப் பனியில் நனைந்து இளம்பச்சை நிறத்தில் முளைவிட்டிருந்த உளுந்தும் பயிறும் மூடியிருக்கும் துணியிலிருந்து வெளியே தெரியும் குழந்தையின் கால் விரல்களைப் போல மண்ணைப் பொத்துக்கொண்டு எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. எதேச்சையாகத் திரும்பியவன் வேணி வந்திருப்பதைப் பார்த்ததும் அடைப்புக்குறிகள் விரிந்ததைப் போலச் சிரித்தான்.

“எப்ப ஆச்சி வந்த?” 

“இப்பத்தான் அண்ண.. கும்பகோணத்துக்கு டூட்டிக்குப் போறாங்க. அப்டியே என்ன எறக்கி விட்டுட்டுப் போனாங்க.”

“சாப்ட்டியா ஆச்சி..”

“வரும்போதே சாப்ட்டுதான் அண்ணன் வந்தேன்.. அண்ணி வூட்டுக்கு வந்ததும் காப்பி போட்டுக் குடுத்துச்சு.”

“உளுந்து வெறச்சிட்டு ரெண்டுநாள் சென்டு பாக்க வந்தோம்னா வய முழுக்க பச்ச பல்லக் காட்டுதுன்னு நம்ப அம்மா சொல்லுமே நாபகம் இருக்கா ஆச்சி?”

“ஆமாண்ண..”

“வெறச்சது போவ ரெண்டு படிக்குமேல பயிறு வூட்ல கெடக்கு.. நீ வேணுங்கறத எடுத்துகிட்டுப் போ.” 

வேணியின் கண்கள் எதையோ சொல்லத் தயங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த ராமஜெயம், “என்னா ஆச்சி.. பணங்காசு எதாவது வேணுமா?” என்றான்.

“பணத்துக்கு என்னா கொற அண்ண.. சொக்காயி புண்ணியத்துல அதுல்லாம் நல்லாதான இருக்குறோம்.”

 ”பின்ன சொல்ல வந்தத கடவாயில அதக்குனாமாறி இருக்கியே? என்னான்னு சொல்லு.”

“இல்லண்ண நம்ப அண்ணி முழுவாம இருக்குல்ல.. அதான் ஒரு ரோசன. நேத்தைக்கே அவுருகிட்டயும் கேட்டன்.. இப்பப் பொறக்கப் போறப் புள்ளய நான் சீர்காழியில கொண்டு வளத்துகிட்டுமான்னு கேக்குலாம்னு வந்தன்.”

சொல்லிவிட்டு முகத்தை நிலத்தை நோக்கித் தாழ்த்திக்கொண்டாள்.

“அட இதானா.. நானே ஒரு புள்ளைய வளத்துக்குறியா ஆச்சீன்னு கேக்குலாம்னு இருந்தேன்.. அவ என்ன சொல்லுவாளோன்னு ரோசிச்சேன்.. நான் நேரம் பாத்து அவள்ட்ட பேசுறன்..”

“அண்ணன் அண்ணி எதாவது தப்பா நெனச்சிக்கப் போவுது.”

“அவ என்னா நெனைக்கப் போறா? நீதான ஆயி எனக்குத் தலச்சன்புள்ள… உன்னவிட எனக்கு என்னா கெடக்கு.. பொறக்குற புள்ள ஒனக்குத்தான் ஆயி.”

ராமஜெயம் சொன்ன அந்த நொடியே வயிற்றுக்குள் எதுவோ ஊர்வதைப் போலத் தோன்றி, அடிவயிறு கூசியது வேணிக்கு. 

ஜோசியம் பார்க்கச் சென்ற நாளிலிருந்தே குழந்தையைக் கொடுப்பது பற்றிய பேச்சைத் தொடங்கினாலே காளியாய் மாறிவிடுவாள் பூங்கொடி. ஏழாவது மாதம் வயிறு மேடிட்டிருந்த சமயம் தாங்க முடியாத நமைச்சல் வயிற்றைச் சுற்றித் தோன்றிக்கொண்டே இருக்கும். வறக்வறக்கென்று நகத்தைப் போட்டுச் சொறிந்து வயிறைப் புண்ணாக்கிக்கொள்வாள். பொழுது முழுவதும் வயலில் கிடந்தாலும் இரவில் அவளுக்கு வெந்நீரில் உப்புக்கல்லைப் போட்டு, அந்தத் தண்ணீரால் கர்ப்ப வயிறின் மீது தடவிக்கொடுப்பான் ராமஜெயம். அவளுக்கு அது மிகுந்த ஒனக்கையாக இருக்கும். தன்னைமறந்து அப்படியே உறங்கிப்போவாள். ஒருநாள் உப்புநீர் ஒத்தடம் கொடுக்கும்போது திடுமென விசும்பத் தொடங்கியவன், “ஆயிக்கி இந்தப் புள்ளய குடுத்துருவோம் பூங்கொடி.. புள்ளய பாக்கணும்னா இந்தா இருக்கு சீயாழி ஓடுன ஓட்டத்துல பாத்துட்டு வந்துடலாம்.. புள்ள இல்லாத ஏக்கத்துல ஆயிக்கி எதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு” என்று சொல்லி அழுதான். என்றுமே இல்லாமல் அவன் அழுததைப் பார்த்தது அவள் மனதை மாற்றியது. 

குழந்தை பலவீனமாக இருப்பதால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க நிச்சயமாகப் பத்து நாட்களாவது தாய்ப்பால் கொடுத்த பிறகு வேண்டுமானால் குழந்தையை வேணியிடம் கொடுக்கலாம் என்று மருத்துவமனையில் வேலை பார்த்த உள்ளூர் நர்ஸ் அவர்களிடம் அறிவுறுத்தினாள். 

பதினைந்து நாட்கள் கழித்து ஆனந்த தாண்டவபுரம் சொக்காயி கோவிலில்  வைத்துக் குழந்தையை வேணிக்குக் கொடுப்பதற்குச் சென்றார்கள். ஒரு மரக்கால் முழுக்க தவிடு நிரப்பப்பட்டு, அதன்மீது வெற்றிலை பாக்கோடு, ஐநூறு ரூபாய் பணம் வைக்கப்பட்டிருந்தது. சொக்காயி சந்நிதியின் முன் குழந்தை படுக்க வைக்கப்பட்டிருந்தது. தவிட்டு மரக்காலை வேணியும், சம்பத்தும் கொடுக்க, பூங்கொடியும் ராமஜெயமும் வாங்கிக்கொண்டு, ”எங்க புள்ள இனிம்மே உங்க புள்ள” என்று சொல்லிக் குழந்தையை மாற்றிக்கொடுத்தார்கள். குழந்தைக்குத் திருவரசன் என்று பெயர் வைத்தார்கள்.

பதினைந்து நாட்கள் குழந்தை பால் குடித்திருந்ததால் பூங்கொடிக்கு மார்புகளில் பால் ஊறிக்கொண்டே இருந்தது. குழந்தை குடிக்காத பால் கட்டிக்கொள்ளும்போதெல்லாம் வலியால் துடிப்பாள். ரவிக்கையில் பால் கசிந்து கவிச்சி அடித்துக்கொண்டே இருக்கும். அந்நேரங்களிலெல்லாம் பிள்ளை பசியில் அழக்கூடும் என்ற நினைப்பு தீ வளர்வதைப் போல மனதில் எழும். கொல்லைப்புறத்திற்குச் சென்று தன் மாரை அழுத்தி அங்கிருக்கும் தென்னம்பிள்ளையில் பாலைப் பீய்ச்சி அடிப்பாள். அப்போது அவளுக்குக் கோபம் தலையை மீறும். இதனாலேயே பால் கசியும் தருணங்களில் தினமும் வேணிக்குத் தொலைபேசியில் அழைப்பாள்.

“புள்ளை சாப்ட்டானா? புள்ள பசியில அடிக்கடி அழுவுதா? வெளிய என்னா கலர்ல போவுதுன்னு பாத்தியா? குளுப்பாட்டும்போது கைகால வழிச்சி உடுறியா?” எனக் கேள்விகளால் துளைப்பாள். ஒருநாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் இப்படி போன் செய்து அவள் கேட்கும் கேள்விகள் வேணியை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தும்.

வீட்டில், ”ஆளும் பேருமா அண்ணனுவோளோட வளர வேண்டிய என் புள்ளைய பொட்டப்பிராந்து கோழிக்குஞ்சத் தூக்கிட்டுப் போனாப்ள அவகிட்ட குடுத்துட்டுக் குந்தியிருக்கேனே ஐயோ” என்று வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பாள்.

பாத்திரங்களைப் போட்டு உருட்டுவாள், சம்பந்தமே இல்லாமல் இரண்டு பையன்களையும் திட்டத் தொடங்குவாள். ராமஜெயம் எதிர்வினை செய்யாமல் இருந்திருந்து நாளடைவில் அவளது கோபத்துக்குப் பழகிவிட்டான்.

உறவினர்களின் வீட்டுப் பொதுவான தேவைகள் நடக்கும் இடங்களில் எங்கு வேணியைப் பார்த்தாலும் பிள்ளையைக் கையில் வாங்கிக்கொண்டு, ஏன் குழந்தை இளைத்திருக்கிறது, முகம் வாட்டமாக இருக்கிறதே என்றும் கேட்பாள். அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் ஜாடையில் வேணியைக் குத்திக்காட்டித் திட்டுவாள். உண்மையில் குழந்தை ஆரோக்கியமாகவே இருந்தது. பூங்கொடி குழந்தைக்கு எப்போது பசிக்கும் என முன்னறிந்து பால் கலந்து கொடுத்துவிடுவாள். 

ஒரு உறவினர் கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தாள் வேணி. உறவினர்கள் எல்லோரும் ஜமக்காளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். தூக்கத்திலிருந்த குழந்தை திடீரெனக் கண்விழித்து வீறிட்டுக் கத்தத் தொடங்கியது. கைப்பையில் இருந்து பால் புட்டியை எடுத்துப் பால் பவுடரைக் கலப்பதற்காக வெந்நீர் எடுக்க ஓடினாள். அப்போது அங்கு வந்து குழந்தை அழுவதைப் பார்த்த பூங்கொடி சட்டென்று குழந்தையை மடியில் கிடத்திப் புடவையை விலக்கிப் பால் கொடுக்கத் தொடங்கினாள். புட்டியோடு வேணி வர, அவள் பக்கமாக வேண்டுமென்றே திரும்பினாள் பூங்கொடி. வேணியை அவமானம் பிடுங்கித் திங்க இமைகளைத் தாழ்த்திக்கொண்டு, வந்த கண்ணீரை மறைத்துக்கொண்டவள் அன்றிலிருந்து பொது நிகழ்வு எதற்கும் போவதை முற்றிலுமாகத் தவிர்த்தாள்.  

வேணி குழந்தையைப் பெறவில்லையே தவிர பெற்றவளைக் காட்டிலும் நுண்கவனத்தோடுதான் பராமாரித்தாள். அதன் மூச்சொலியைக்கூட ஆழ்ந்து கவனித்தாள். தூக்கத்தைத் துறந்து இரவெல்லாம் கண்விழித்து பால் கலக்கிக் கொடுப்பாள். குளிப்பாட்டி, சாம்பிராணி புகைகாட்டி, உடல் முழுக்கப் பவுடர் அடித்து, நெற்றி மூலையிலும் கன்னத்திலும் தாடையிலும் புறங்காலிலும் மை பொட்டு வைத்து அழகு பார்ப்பாள். தங்கச் சங்கிலியும் வெள்ளிக் கொலுசும் போட்டுக் குழந்தையைத் தூக்கி அசைத்து, அதன் சிரிப்பை இரசிப்பாள். 

குழந்தையின் வருகைக்குப் பின்னர் வேணியின் உடல் சற்றுச் சதை வைத்தது. கண்கள் ஒளிகொண்டு, கன்னம் விரிந்து பார்ப்பதற்கு முன்பைவிடவும் அழகாகத் தெரிந்தாள்.

முதன்முதலாகக் குழந்தை, நாவசைத்து “அத்த” என்றுதான் சொல்லும் என  அண்டைவீட்டார் சொல்லியிருந்தார்கள். வேணிக்கு அதை நினைக்கும்போதெல்லாம் திக்கென்று துணுக்குறலாக இருக்கும். 

ஒருநாள் சட்டநாதர் கோவிலுக்குக் குழந்தையைத் தூக்கிச் சென்றிருந்தாள்.

அப்போது தத்தித்தத்தி நடைபழகத் தொடங்கியிருந்தான் குழந்தை.

“அம்மாட்டகிட்ட வாங்க.. அம்மாட்டகிட்ட வாங்க.. ஓடியாங்கடி..” என்று கைதட்டி அழைத்தாள். ஒரு பொம்மை அசைந்து வருவதைப் போல நடந்து வந்த குழந்தை, “ம்மா..” என்றது. முதல்முறையாகத் தன்னை அம்மா என்று அழைக்கக் கேட்ட வேணிக்கு முதுகுத்தண்டில் ஐஸ் கட்டியால் கோடிழுப்பதைப் போலிருந்தது. கால்கள் நிலத்தில் பாவாமல் மிதப்பதைப் போல உணர்ந்தாள். சந்தோஷ மிகுதியில் ஓடிப்போய்க் குழந்தையை வாரி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

*

வீட்டுக்கு முன் இருந்த பள்ளத்தால் குழந்தைகள் சறுக்கி விளையாடி, அடிபட்டுக் காயமாவதுடன் அடிக்கடி உடல் வழண்டு போகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லி விளக்கிப் புரிய வைக்கவும் முடியவில்லை. 

தெரு அளவிற்கு வாசலுக்கு இரண்டு வண்டி மண் அடித்து மட்டப்படுத்தலாம் என்று நினைத்தான் ராமஜெயம். பக்கத்துத் தெரு கோவிந்தராஜின் மாட்டுவண்டியை வாங்கிக்கொண்டு வந்தான். நீண்ட வருடமாக உள்ளங்கை அளவிற்குக்கூடத் தண்ணீர் இன்றி வறண்டுபோய்க் கிடக்கும் பெரிய குளத்தில் ஊர்மக்கள் மண் எடுக்கப் பயன்படுத்தி வந்தார்கள். மேல் கொத்தில் களிப்பு மண்ணும், கொஞ்சம் ஆழமாகத் தோண்டினால் ஓரளவிற்கு நல்ல மணலும் கிடைத்தது. மக்கள் மண்ணெடுத்து மண்ணெடுத்துக் குடைந்ததால் குளத்திற்குள்ளேயே சிறு சிறு குகைகள் தோன்றியிருந்தன.

ராமஜெயம் உதவிக்கு ஆளின்றித் தானே மண்ணை வெட்டி அன்னக்கூடையில் சுமந்து, வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் மண் அடித்தான். இரண்டு வண்டி மண்ணையும் உள்வாங்கிக்கொண்ட வாசல் பள்ளம் இன்னமும் நிறையாமல் இருந்தது. மூன்றாவது முறை வண்டியை ஓட்டிக்கொண்டு மண் அடிக்கப் போனபோது, காட்டாமணி மறைத்திருந்த குடைவில் தெரிந்த மண், ஆற்றுமணலைப் போல வெளுத்து இருந்ததைப் பார்த்தான். செங்கல் சூளைக்குத் தோண்டப்பட்டதைப் போலப் பத்தடியைத் தாண்டி ஆழமாக இருந்தது அந்தக் குடைவு. ராமஜெயத்துக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. மண்வெட்டியின் முதல் இரண்டு கொத்துக்கு எளிதாகப் பெயர்ந்தது மண். மூன்றாவது கொத்து கொத்துவதற்காக ராமஜெயம் மண்வெட்டிக் காம்பை இறுக்கிப் பிடிக்கும்போது, அவன் முதுகின்மீது தலைக்குமேல் குடைந்திருந்த பெரும் எடைகொண்ட மண்பார் பொத்தென்று பாளம் பாளமாகப் பெயர்ந்து விழுந்து அவனைப் போட்டு மூடியது. நடுமுதுகில் விழுந்ததால் முதுகெலும்பு நன்றாக நொறுங்கிப்போனது. 

பூங்கொடியும் பிள்ளைகளும் துடிதுடித்துக் குளத்தை நோக்கி ஓடினார்கள்.

தஞ்சாவூரில் ஒரு பெரிய மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். பின் மண்டையில்பட்ட அடியால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். கையில் இருந்த பணமெல்லாம் போதாமல் இருந்த சொற்ப நிலங்களையும் அடகு வைத்து மருத்துவச் செலவைப் பார்த்தாள் பூங்கொடி. அதுவும் போதாமல் இருக்கத் தாலிக்கொடி உட்பட எல்லா நகைகளையும் விற்கும்படியானது. அண்ணனுக்காக வேணியும் கணவனிடம் சொல்லித் தன்னாலான உதவிகளைச் செய்தாள். கிட்டத்தட்ட பதினொரு இலட்ச ரூபாய் செலவு செய்தும், மூன்று மாதங்களில் ராமஜெயம் இறந்துபோனான்.

தலை வீழ்ந்த பின் குடும்பம் நொடித்துப்போனது. பத்தாயத்தில் இருந்ததெல்லாம் உணவானது போய், பத்தாயத்தையே விற்று உணவு சமைக்கும் நிலை வந்தது. அக்கம்பக்கத்திலெல்லாம் வாங்கிய கடனுக்கு அவமானத்தால் வட்டி கட்ட வேண்டியிருந்தது. சொந்த வயலும் திடலும் போன பிறகு கூலி வேலைக்குப் போகும் ஆட்களிடம் வேலை கேட்டுச் சென்றாள் பூங்கொடி.

“ஆம்பளப் புள்ளைவோள ஒரு கடக் கண்ணிக்கு வேலைக்குப் போடுறத உட்டுட்டு எதுக்கு இப்புடி வேவாத வெயில்ல கெடந்து அல்லாடுற?” என்று யோசனை சொன்னார்கள் ஊர்க்காரர்கள்.

வேணி அவ்வப்போது அண்ணிக்குப் பணம் காசு கொடுத்தனுப்பினாலும் நேரில் வந்து பார்ப்பதைத் தவிர்த்தாள். அண்ணன் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும் நேரில் சென்றால் திரும்பக் குழந்தை குறித்துப் பிரச்சினை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

இரண்டு வருடங்கள் மேகம் கரைவதைப்போல ஓடிப்போயின. ராமஜெயம் இறப்புக்குப் பிறகு பூங்கொடி குன்றிப்போய்விட்டாள். குரலறுந்து யாரிடமும் பேசாமால் வதங்கிய கீரைத்தண்டைப் போல ஆனாள். கணவனின் மறைவுக்குப் பின் உதவிக்கு ஆளின்றி நாற்று நடவு, களை பறிப்பு போன்ற வயல் வேலைகளுக்குச் சென்று வருவாள். சரியான உணவின்றி நாளாக நாளாகப் பிள்ளைகள் இளைத்துப் போனார்கள். வாசலில் நின்றிருந்த முருங்கை தினசரி குழம்புக்கு ஆனது. மாற்றுச் சீருடை எடுக்க வேண்டுமென்ற ஏக்கத்தை நிதம் பூங்கொடியிடம் சொல்வார்கள். இரண்டு பிள்ளைகளையும் வெறும் வயிறோடு தூங்க வைத்துவிடக்கூடாது என்பதால் கிடைக்கும் வேலையைச் செய்து வந்தாள் பூங்கொடி.

திருமணமாகிப் பன்னிரண்டு வருடங்கள் கழித்து வேணி கருவுற்றாள். பூங்கொடிக்கு இதைச் சொல்ல வேண்டுமெனப் போன் செய்தாள்.

“அண்ணீ! கருவு தங்கிருக்குன்னு சொல்றாங்க அண்ணீ.. ஆனா என்ன.. இதப் பாத்து சந்தோசப்பட அண்ணன் இல்லியேன்னு நெனைக்கிம் போதுதான் எனக்கு ஆத்து ஆத்துப் போவுது அண்ணீ” என்று குரல் தழுதழுத்தாள்.

“அதுல்லாம் ஒங்க அண்ணன் நம்ப கூடவேதான் ஆயி இருப்பாரு.. வருத்தப்படாத எல்லாம் நல்லாதான் நடக்கும்”

“அதான் அண்ணீ ஒடம்பப் போட்டு அசங்கிக்காம நல்லா ரெஸ்ட் எடுக்குணும்னு சொல்லிருக்காங்க. அண்ணீ.. அதனால..” அவள் இழுப்பது பூங்கொடிக்குத் தொண்டைக்குள் எதுவோ உருள்வதைப் போலிருந்தது.

“பிரசவம் வரைக்கிம் புள்ளை கொஞ்ச நாளு அங்கியே இருக்குட்டுமா அண்ணீ.. நானும் அவரும் நாளைக்கிக் கொண்டாந்து உட்டுட்டு வர்றோம்.. ” என்றாள். அதற்குப் பிறகு அவள் பேசிய எதுவும் பூங்கொடிக்குக் கேட்கவே இல்லை. 

துணி மூடிய எலும்புக்கூடுகளைப் போலக் கிடந்த பிள்ளைகளைப் பார்த்தாள். ஒடுங்கிய கண்களோடு தூங்கிக்கொண்டிருந்தவர்களின் குடலில் இன்றைய நாளின் பசி இன்னும்கூட ஆறாமல் மிச்சமிருக்கலாம் என்று நினைத்தபோது, அவள் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது. கிழிந்த கால்சட்டைகளும், ஊக்குப் போட்ட சட்டைகளும் போட்டுக்கொண்டு, இரண்டு வேளை மட்டுமே சாப்பிடும் இந்தப் பிள்ளைகளோடு நல்ல சாப்பாடு சாப்பிட்டு, நல்ல துணி உடுத்தும் அந்தப் பிள்ளையும் சேர்ந்து பசியில் அழும் காட்சி மனக்கண்ணில் ஓடியது. மறுநாள் அதிகாலையிலேயே கொட்டும் பனியில் கையில் பெரியவனைப் பிடித்துக்கொண்டு, இடுப்பில் சின்னவனைத் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுக் கண் காணாத இடத்திற்குச் சென்றுவிட வேண்டுமெனச் சாலையை நோக்கிய ஒற்றையடிப் பாதையில் எட்டு வைத்து நடக்கத் தொடங்கினாள் பூங்கொடி.

15 comments

Balajawahar December 25, 2021 - 7:55 am

❤❤❤

ஜெகநாதன்.பெருமாள்சாமி December 29, 2021 - 7:58 pm

கணத்த இதயத்துடன் படித்து முடித்தேன். கற்பனை செய்து எழுதவில்லை நிஜத்தை பார்த்து எழுதியது போல் உள்ளது..எழுத்தாளருக்கு எனது வாழ்த்துக்கள்.

Chella December 31, 2021 - 9:38 am

நெருநல் உளனொருத்தி – என்னே ஒரு தலைப்பு!!!! அபாரம்!!! மழைக்கண்ணிலிருந்தே இன்னும் மீளவில்லை நான்?
அதியற்புதமான கதை செந்தில்!! மென் மேலும் எழுதி நவீன இலக்கிய உலகிற்குப் பெருமை சேருங்கள்!நல்வாழ்த்துகள்!

Senthil Jagannathan January 9, 2022 - 5:53 pm

மிக்க நன்றி

செந்தில் ஜெகன்நாதனின் “நெருநல் உளனொருத்தி” » Vimarsanam Web January 3, 2022 - 7:44 am

[…] டிசம்பர் மாதம் வெளியாகிய ‘தமிழினி’ இணைய இதழில் செந்தில் ஜெகன்நாதன் […]

KARTHIK ANBAZHAGAN January 4, 2022 - 11:32 am

தம்பி, கதையை கனத்த இதையத்துடன் படித்து முடித்தேன், கதை நடக்கும் பகுதி நமது ஊரை சுற்றி நடப்பது போல் எழுதி இருந்தாய், இது உண்மை கதையா அல்லது உண்மை கதையை தழுவி எழுதப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை,ஆனாலும் கதை நமது வீட்டில் நடப்பது போலவே இருந்தது, ஏனென்றால் நான் ஊரில் இருந்த 15 வருட காலங்களில் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்களை நான் அறிந்திருக்கவில்லை, மொத்தத்தில் இதயம் கணத்து விட்டது.
உனக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்
அன்புடன் Annan- கமல் @ கார்த்திக்

Jawahar January 4, 2022 - 4:11 pm

ஊருல சனங்களோட இருந்திட்டு வந்த ஒரு நெனப்ப இருக்கு. வாசிக்கையில் 23 வயதுவரை நான் புழங்கிக் கிடந்த இடமும் ஊர்களும் பேச்சும் உள்ளுக்குள் மெல்லப் புரளுது.

Senthil Jagannathan January 9, 2022 - 5:49 pm

மிக்க நன்றி

Seran sengutuvan May 17, 2022 - 8:40 pm

அருமை தம்பி.இரண்டு பெண்மணிகளின் உணரச்சிகளை அப்படியே வடித்தெடுத்திருக்கின்றீர்கள்.அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அருமையாக கையாண்டு இருக்கின்றீர்கள்.நடந்த சம்பவங்களின் கோர்வையாகவே உள்ளது.அருமையான எழுத்து நடை.
உங்களது எதிர்காலம் மிகச்சிறப்பானதாக அமைய மனமாற வாழ்த்துகிறேன்.

காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி January 5, 2022 - 11:49 pm

செந்தில் ஜெகநாதன்,

நெருநல் உளனொருத்தி – அருமை படைப்பு!
தலைப்பின் தேர்வு நேர்த்தி தங்கள் ஆழ்ந்த தமிழ் ஆர்வத்திற்கு சான்று. தங்கள் பணியும் பயணமும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சில மணித்துளிகள் மட்டுமே ஆனது படைப்பை வாசிக்க. இருந்தும் ஏனோ பூங்கொடி, வேணி, ராமஜெயம், வேணியின் கணவர் மற்றும் மூன்று ஆண் பிள்ளைகள் என அணைத்து கதாபாத்திரங்களும் காலத்திற்கும் நினைவில் நீங்கா இடம் பிடித்து விட்டதை போல உணர்கிறேன்.

கதைக்காக தலைப்பையும், தலைப்பிற்காக கதையையும் செதுக்கிய விதம் சிறப்பு!

தலைப்பின் அர்த்தம் புரிந்துகொள்ளும் முயற்சியின் தேடலில்…
குறள் அதிகாரம் : நிலையாமை ( குறள் எண் : 336 )
“நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு”

விளக்கம்:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

Senthil Jagannathan January 9, 2022 - 5:48 pm

மிக்க நன்றி

Karthika Nagarajan January 6, 2022 - 9:52 am

அருமை.

அரிதாளுக்கு என்றால் என்ன ?

Senthil Jagannathan January 9, 2022 - 5:48 pm

நெற்கதிர் அறுவடை முடிந்து வயலில் விடப்படும் அடிப்பாகம்

செ. ஆடலரசன் May 8, 2022 - 11:06 am

அருமை

Comments are closed.