சிறிய உலகின் பெரிய விஷயங்கள்: சாரா ஜோசஃபின் ‘ஆலாஹாவின் பெண்மக்கள்’

0 comment

“முகத்தை வெளியே காட்டாமல் பாயைத் தொங்கவிடும் கொடியின் கீழே இருட்டில் மெல்ல மெல்ல கரைந்து போய்க்கொண்டிருக்கும் பெரிய அத்தை, எங்கே இருக்கிறார்களெனத் தெரியாமல் அலைந்து திரியும் நோனு அத்தையும் பேபியும், மெளனமாகிப் போன அம்மா, சிரிக்காத சின்னம்மா, இரண்டாயிரம் ரூபாய் சீதனத்தைத் தராததைக் காரணம்காட்டி குஞ்ஞிப்பாலுவால் பிறந்த வீட்டிற்கு வர அனுமதி மறுக்கப்பட்ட சிய்யம்மா, தொடர்ந்து வேதனைகளைப் பார்த்துப் பார்த்தே வயதாகிப் போன பாட்டி, ஆன்னியிடம் கூட மகிழ்ச்சியாக உரையாடாத குட்டிப் பாப்பன். எழுதியதை மாய்த்து விடலாம், இங்கு யாருக்கும் எந்தச் சுகமும் இல்லையென எழுதத் தோன்றியது..”

தன் வீட்டிற்கு அருகில் தலைமுறைகளாக வசித்து வந்தவர்களைக் காலி செய்ய மிரட்டி நிர்பந்தப்படுத்துபவனுக்கு குட்டி பாப்பன், ஆன்னி மூலம் எழுதச் செய்யும் கடிதத்தையொட்டி ஆன்னியின் மனதிற்குள் எழும் வரிகளே இவை.

அப்படி எவருக்கும் எந்தச் சுகமுமில்லாத கோக்காஞ்சறவில் உள்ள வீடு ஆன்னியினுடையது.  மனதிற்குள் சுகமில்லாது வாழ்பவர்களின் சான்றாகத் திகழும் அக்குடும்பத்தின் கடைசி அங்கத்தினள் அவள். ’செல்லக்குட்டீ’ என்பதன்றி அவளைப் பெயரிட்டு நாவலில் ஒருவர்கூட அழைப்பதில்லை. துயரத்தின் கூரைக்கடியில் அன்றாடங்களின் அல்லாடல்களுக்கு மத்தியில் கொஞ்சம் சிரிக்கவும் ஜீவிக்கவும் பழக்கப்பட்டவர்கள். பாட்டி வீட்டு முற்றத்தின் அவரைப் பந்தலை சரிசெய்வதினூடாக அந்த இடத்தின் பூர்வக் கதைகளை தன் செல்லக்குட்டிக்கு கூறுவதிலிருந்து நாவல் தொடங்குகிறது.

மருமகளான ஆன்னியின் அம்மா தவிர, அதீத அழகும் ஆரோக்கியமும் கொண்ட ஐந்து பெண்மக்கள்தான் ஆன்னியின் பாட்டியான மரியக்காவின் பிரச்சினை. ஐவருடன் இரண்டு ஆண் பிள்ளைகளும். கம்யூனிஸ்ட்டான தகப்பன், ஆன்னியை பத்தொன்பது நாள் பிராயத்தில் விட்டுவிட்டு ஓடிப் போகிறான். காங்கிரஸ்காரனும் மற்றொருவனுமான குட்டி பாப்பன் காசநோயால் படுக்கையிலேயே கிடக்கும் நிரந்தரச் சீக்காளி. தகப்பன் இல்லாது வளரும் செல்லக்குட்டிக்கு இவனுடன் நல்லதொரு அன்யோன்யம் உள்ளது. மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள், நாவலுக்குள் குறுக்கும் நெடுக்குமாக பேசியபடியே அலைபவர்கள் என பெரும்பான்மையினர் பெண்களே.

இந்தப் புறமொதுக்கப்பட்டவர்களின் ஒன்றுபோலில்லாத கதைகளின் ஊடே தேக்கின் காடு என்றறியப்பட்ட அடர்ந்த காட்டுக்குள்ளிலிருந்து திருச்சூர் நகரம் எவ்வாறு வசிப்பிடமாக ஆனது என்கிற காலத்தின் கதையும் அதற்கு இணையாக உடன்வந்து கொண்டிருக்கிறது. பெண்களால் ஆன சிறியதோர் உலகிலிருந்து அவர்களின் மென்று விழுங்கப்பட்ட துக்கங்களிலிருந்து கிளம்பி கோக்காஞ்சற முழுவதையும், ஏன் ஒரு அர்த்தத்தில், திருச்சூரின் தோற்றுவாய் வரை சென்று திரும்புகிற முக்கியமான ஆக்கம், சாரா ஜோசஃபின் ‘ஆலாஹாவின் பெண்மக்கள்‘.

குடிக்கும் பானத்தின் பெயரென்றோ அயல்தேசத்து உணவுவகை என்றோ ஐயங்கொள்ள வைக்கும் ஒலிப்புகொண்ட ‘கோக்காஞ்சற’ என்பது வேறொன்றுமில்லை. ஒரு காலத்தில் அநாமதேயமாக பிணங்களை வீசியெறியப் பயன்பட்ட இடம். மனிதர்களும் பிராணிகளும் நாய்களும் ஒன்றாகக் கூடிக் கழித்து அழுகிப் போன பூமி. அதற்குப் பின் மலம் அள்ளுபவர்கள் , கசாப்புக்காரர்கள், கேடிகள், சாராயம் காய்ச்சிகள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், சுமை தூக்கிகள், திருடர்கள், உடலை விற்பவர்கள் என பொதுச் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களதும் சச்சரவுகளும் கூக்குரல்களும் வசவுகளும் வாடிக்கையாகிப் போனவர்களதுமான கூரைகள் நிரம்பிய இடமாக ஆகிறது. அதனால்தான், ஆன்னியை அவளது டீச்சர் பிரம்பின் நுனியால் மட்டும் தொடுகிறாள். அவளைத் தவறுதலாக தொட்டுவிடும் போதுகூட கையை நன்கு கழுவுகிறாள். அவள் வாழுமிடத்தின் பெயர் கோக்காஞ்சறவின் கொடிச்சி அங்காடி (தெருப் பொறுக்கி நாய்கள்) என அறிந்ததும் முகத்தைச் சுளித்து, கஞ்சிக்கு அவள் நிற்கும் வரிசையின் கடைசிக்கு இழுத்தும்விடுகிறாள். ஆனால், மனிதர்கள் வசிக்குமிடமாக கோக்காஞ்சற சுலபத்தில் மாறிவிடவுமில்லை.

வாழும் ஊராக திருச்சூர் மாறிக்கொண்டிருந்த ஆரம்ப நாட்களில், சாதாரணர்கள் பாதை ஓரங்களில் கழிக்கும் மலத்தால் ஊரே நாற்றமெடுக்கிறது. அதற்காக எர்ணாகுளத்திலிருந்து பனிரெண்டு தோட்டிகளைக் கூட்டி வருகிறார்கள். அவர்கள் சற்று தள்ளி வந்தாலே ஒதுங்கிக் கூசி அவர்களை தங்கள் இடங்களிலிருந்து உள்ளூர்வாசிகள் கிட்டத்தட்ட விரட்டி விடுகிறார்கள். அப்படி அவர்கள் வேறு வழியேயின்றிக் குடியேறியதே அனாதைப் பிணங்கள் இறந்துகிடக்கும் கோக்காஞ்சற. யுத்தம் நடக்கும் காலத்தில் பட்டாளக்காரர்களால் ரோட்டோர வீட்டை இழந்த மரியக்கா, அந்த பீ அள்ளுபவர்களின் வீடுகளுக்கிடையே குழந்தைகளை இழுத்துக்கொண்டு வந்து கூரை போட்டுக் கொள்கிறாள். மழை பெய்யும் அந்த இரவில் சகலருக்கும் பசியை ஆற்ற அவளிடம் இருப்பது நீலம் பாரித்த நாலு ராத்தல் மரவள்ளிக் கிழங்குகளே. அக்கிழங்கை வேக வைக்கவும் வழியில்லை.

திடீரென இயேசுவால் அருளப்பட்டது போல அங்கு நெருப்பைக் காண்கிறாள். மழையிடை நடந்து அருகே சென்றால் அங்கு வேறு ஒன்றுமில்லை. அது யாரோவொரு கிழவியின் பிணத்தை எரியூட்டிதால் உண்டான நெருப்பு. மூடாத பிணத்தின் கண்ணைப் பார்த்து அஞ்சுகிறாள். ஆனால், அக்கிழவியின் மார்பு மேல் கிடந்த நான்கு கொள்ளிக்கட்டைகளை எடுத்துவந்து கிழங்கை வேக வைக்கிறாள். அப்போது மரியக்கா என்கிற ஆன்னியின் பாட்டி சொல்கிறாள், ‘பசியை விடப் பெரிய பிசாசு ஏது?’ அப்படி அங்கே வாழ்க்கை கொதிக்கிறது, என்ன செய்வதென்று தெரியாமல் மருகுகிறது. எப்படியெங்கிலும் மேடேறி விடத் துடிக்கிறது. பிறகு முன்னதை விடவும் மோசமான பள்ளத்தில் வீழ்கிறது. ஆனால் சுணங்கிவிடாமல் அடுத்த நாளை எதிர்நோக்கிப் போகிறது.

மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா

தளராத முயற்சியால் குடும்பத்தைக் கரையேற்ற ஓயாது முயலும் ஆன்னியின் அம்மா, அவளுக்கு கூடக்குறைய ஒத்தாசையாக உள்ள பாட்டி, மணமாகி  ஏழாவது நாளில் விதவையாகத் திரும்பி வந்த குஞ்ஞிலை அத்தை, இரண்டாயிரம் ரொக்கம் தராததால் பிறந்த வீட்டிற்குத் திரும்பிவிடும் சின்னம்மா, மணமே வேண்டாம் எனக் கூறி பிறகு கருக்கலைப்பும் செய்து கிறிஸ்துவின் சேவையில் இணையும் சிய்யம்மா, கட்டினவனின் அடிகள் தாளாமல் வேறு எவனுடனோ உடனேகும் நோனு அத்தையும் அவளது பிள்ளையும், எப்போதேனும் எட்டிப்பார்க்க மட்டுமே செய்யும் செறிச்சி அத்தை. இவ்வளவுதான் பாத்திரங்கள். அவர்களின் ஒற்றை வரிப் பின்புலங்கள்.

இவர்களை இணைக்கவும் இட்டு நிரப்பவும் அங்குமிங்கும் தலைகாட்டி மறையும் சிலர். ஆனால் இதற்குள் சாரா ஜோசஃப் வைத்திருக்கும் பொருள் பொதிந்த மெளனங்கள், ஆற்றுப்படுத்த முடியாத கேவல்கள், குழிழ்கள் போல சட்சட்டெனத் தோன்றி உடையும் சந்தோஷச் சிரிப்பின் திவலைகள்,  சிறு ஒளிப்புள்ளிகள் மட்டுமே கொண்ட இருள், நிச்சயமற்ற வெளிச்சம். அப்படித்தான் நகர்கிறது வாழ்க்கை. எனவே நாவலும் அவ்வாறுதான் அமைந்திருக்கிறது. ஆனால் சாரா எதையும் விளக்குவதோ பின்னால் நின்று அவர்களைத் தூண்டிவிடுவதோ இல்லை. நவீனத்துவ நாவலின் இறுக்கமும் செறிவான மொழியும் கழிவிரக்கம் அண்டாத நடையுமாக விளிம்புநிலையினரின் உலகை, ஆன்னியின் வீட்டில் எரியும் மண்ணெண்ணெய் விளக்கு போல, அதற்குரிய இருளுடன் சிறிதேயான வெளிச்சத்துடன் எரியவிடுகிறார்.

வீசி எறிந்து விட்டுச் சென்ற பிணங்களைப் பேய்கள் தூக்கிக்கொண்டு ஊர்வலம் போவதாகச் சொல்லப்படுகிற பீதியூட்டுகிற இடம் மெதுவாக வாழிடமாக மாறுகிறது. அது மேலும் சற்றே வளர்வது பிறரது கண்களை நிறைக்கும்போது கபளீகரம் செய்யப்பட்டு அம்மண்ணின் பூர்வகுடிகள் வெளியேற்றப்படுகின்றனர். அங்கே வசித்த கேடிகள் செல்வாக்குமிக்க அபகரிப்பாளர்களின் மிரட்டலுக்குப் பயந்து பின் ஒதுங்குகையில், அங்கு திரியும் நோஞ்சான் நாய்களோ, எழுப்பப்படும் புதிய பங்களாவின் கொழுத்த நாய்களின் குரைப்பொலிக்குப் பயந்து வாலை கால்களுக்கு நடுவே சொருகிக்கொண்டு ஓடிவிடுகின்றன.

அப்படி ஆன்னி ஓடிக்கழித்த தோட்டங்கள், புகுந்து வெளிவந்த வீடுகள், வசதிமிக்க வேற்றாள்களின் கைகளுக்குச் சென்றுவிடுகின்றன. அந்தக் கட்டிடங்களுக்கு பழைய கோக்காஞ்சறவாசிகளே கூலிக்குச் செல்லும்படி நேர்கிறது. கோக்காஞ்சறவின் பூர்வக் கதையை அறிந்தவளான பாட்டி, நினைவுதவறிப்போய் பழைய நாட்களுக்குள் வீழ்கிறாள். அந்தப் பாட்டி அங்கு வந்துசேர்ந்த போது பெய்ததை விடவும் உக்கிரமாக மழை கொட்டுகிறது. அதில் சாவதைக் குறித்து ஆன்னியின் அம்மாவுக்கு பயமில்லை. ஆனால் அதற்குள் தன் செல்லக்குட்டிக்கு அவளது அப்பாவைக் காட்டிவிட வேண்டும். அவ்வளவே. மூழ்கும் வீட்டைக் காப்பாற்ற போராடுகையில் குட்டி பாப்பன் தன் துயரை ஆன்னிக்கு அளித்துவிட்டு உயிர் அடங்குவதுடன் நாவல் முடிகிறது, கவித்துவத் துயருடன்.

மணமான முதல் வாரத்திலேயே வீட்டுக்குத் திரும்பிவந்த பிறகும் அம்மா மரியக்கா (ஆன்னியின் பாட்டி) நான்கு பிள்ளைகள் பெறுகிறாள். பிரசவிக்க வழியின்றி முக்கித் திணறும்போது மகளே அம்மாவின் பிள்ளைப்பேறுக்கு மருத்துவச்சி ஆகிவிடுகிறாள். பிறகு குஞ்சன் கம்பெளண்டருடன் இணைந்து பிரசவத்திற்குச் செல்லும்படிக்கு அதுவே அவளது தொழிலாக மாறுகிறது. அவளுக்கு அடுத்து பிறந்த இரு பெண்கள் பட்டன் கம்பெனிக்கு சொற்ப ஊதியத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் மேலேற எந்த நல்வாய்ப்புமற்று இயலாதவர்களின் இறுதிப் புகலிடமான கண்ணீரிடம் சென்று சேர்கிறார்கள். இவர்களிடமிருந்து வேறுபட்ட ஆன்னியின் அம்மாவோ இந்த ஒன்றுமில்லாத உலகத்திற்குள் உழன்றபடியே அவர்களை மேடேற்றிவிட ஓயாது முயல்கிறாள்.

மரியக்காவின் குடும்பத்து இரு ஆண்கள் தவிர்த்து, நாவலுக்குள் சிறிது தூரத்திற்கு வருபவர்கள், குஞ்சன் கம்பெளண்டரும் குட்டி பாப்பனின் சிநேகிதனான குட்டி சாமியாரும். நிற்கக்கூட தெம்பில்லாது படுக்கையிலேயே கிடக்கும் குட்டி பாப்பனின் குரல் அவ்வீட்டின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலித்து அடங்குகிறது. குட்டி பாப்பன் தோட்டிகளின் விசேஷ வீடுகளில் ஒலிக்கும் தமிழ்ப் பாடல்களுக்காக ஆன்னியுடன் காத்திருப்பதாகக் காட்டப்படுவதினூடாக தமிழகத்திலிருந்து அங்கு கூட்டிச் செல்லப்பட்ட தோட்டிகள் பற்றிய குறிப்பு பொதிந்துள்ளது.

கிறிஸ்துவத்தின் உட்பிரிவுகளுக்குள் நிகழும் பூசல்களை, ஒவ்வாமைகளை, கேலிகளை, ஆன்னியின் அம்மாவுக்கும் பாட்டிக்குமான (ரோமன் கத்தோலிக்கர் Vs. சுராயிகள்) பேச்சுகளின் மூலம் அவர்களது முற்றுப்பெறாத பரஸ்பர சீண்டல்கள் வழி தொடர்ந்து காண முடிகிறது. ரோமன்களுக்கு சுராயிகளைக் கண்டால் ஆகாது. சுராயிகளுக்கோ சமயம் கிட்டும் போதெல்லாம் அவர்களை கால் வாரிவிடுவதில் அலாதி இன்பம். போலவே மார்த்தோமாக்களும். ஆனால் வரதட்சணை பெறுவதில் எந்தப் பிரிவுக்கும் எந்தப் பேதமும் இருப்பதில்லை. இந்த மோதல்கள் நிகழும் இடைவெளியிலேயே திருச்சூருக்கு கிறிஸ்துவம் பரவிய வரலாறு, ‘அறுபத்தி நாலு கிறிஸ்துவ குடும்பங்களைக் கூட்டிவந்து புத்தன்பேட்டைய்ல குடி வைச்சாங்க’ எனச் சில வரிகளில் பாட்டியால் சொல்லப்பட்டு விடுகிறது. பாட்டியின் வாய்மொழிக் கதைகள்தான் மாறிய காலத்தின் ஒரே சாட்சி. இந்தப் பாட்டி ஆலாஹாவின் (God of the Father) நாமத்தை ஒருபோதும் மறப்பதேயில்லை.

எட்டு வயதேயான செல்லக்குட்டியின் கண்களும் கால்களும்தான் நாவலின் பாதையாக இருக்கின்றன. ஆன்னி இல்லாத உலகத்தின் கதைகள் அவளது குடும்பத்தினரின் பேச்சுகளின் வழி வீட்டுச்சுவர்களுள் உறங்கியிருக்கக்கூடும். அதை ஆன்னி எப்படியோ கேட்டிருப்பாளாக இருக்கும். பாட்டி, அம்மா, அத்தை என நாவலில் பாத்திரங்களின் உறவுமுறைகள் சுட்டப்படுவது கூட  ஆன்னியின் இடத்திலிருந்தே. கசப்புகள், செல்லங்கள், கோபங்கள் என அவளது உணர்ச்சி நிலையிலிருந்து தொடங்கி சம்பந்தப்பட்டவர்களின் உலகிற்குள் நாவலின் அத்தியாயங்கள் மெதுவாக நுழைகின்றன. அவளது தீர்க்க முடியாத ஐயங்கள் களங்கமின்மையின் அழகுடன் பெரியவர்களால் அப்படியே விடப்படுகின்றன. தொட்டால் சுடுகிற வயசு என்றாலோ ஓடிப்போவது என்றாலோ பிள்ளை பெறுதலோ லவ்வு என்றாலோ செல்லக்குட்டிக்கு என்னவென்று தெரியாது. அது விளங்கிக்கொள்ள இயலாத புதிர் போல அந்தரத்தில் அப்படியே நிற்கிறது.

சாரா ஜோசஃப்

பாழாகி மூலையில் முடங்கும்படியான சம்பவங்களை விவரிக்கும்போது கூட, சாரா அதன் மீது நின்று நிலைத்து பேசுவதில்லை. ஒப்பாரிக்கும் ஓலமிடுவதற்கும் கிட்டிய வாய்ப்புகளின் மீது நிராசையின் நிழலை மட்டும் படரவிட்டு நகர்ந்தபடியே இருக்கிறார். ஆனால், அவரது சொல்முறை பாரங்களை ஏற்றுகிறது. ஜவ்வு போல எத்தனை தூரத்திற்கும் நாவலை இழுத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் அந்த விபரீதத்திற்கு ஆளாகவேயில்லை அவர். இதை ஏறக்குறைய தகழி சிவசங்கரன் பிள்ளையின் நடையுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அவரிடமிருந்து சாராவை வேறுபடுத்தும் பிரத்யேக அம்சம் கவித்துவம். எளிய விஷயங்களின் அல்லது இயல்பான செயல்பாடுகளின் மீது அதுவோர் ஒப்பற்ற அழகை அளிக்கிறது. உதாரணமாக,

//இருவரும் அவள்மீது படுத்து உருண்டார்கள். சிரிப்பின் கண்ணாடிக் கோப்பைகள் உடைந்து கொண்டிருந்தன.//

//அகட்டி ஆன்னி படுத்தாள். காற்றின் எதிரே எல்லாத் துவாரங்களும் சாத்தப்பட்ட ஒரு வீடு தான் ஆன்னியினுடையது.//

1999ல் மலையாளத்தில் வெளிவந்த சாரா ஜோசஃப் (1946)-ன் ‘ஆலாஹாவின் பெண்மக்கள்’ அவருக்கு கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதை மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல் தமிழில் சாகித்ய அகாதமிக்காக மொழிபெயர்த்திருப்பவர் நிர்மால்யா. இந்நூல் வெளியாகி அதே பத்தாண்டுகளுக்குப் பின்னும் அப்படி ஒரு நாவல் வெளிவந்ததற்கான முனகல்கள் கூட இங்கு எழவில்லை. வாஸ்தவத்தில், தமிழ் தலித் இலக்கியத்திற்குள் இந்நாவலை முன்னிட்டு ஓர் உயிர்ப்புள்ள உரையாடலும் விவாதமும் நிகழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை.

முக்கியமான ஆக்கம் இங்கு கண்டுகொள்ளாமல் விடப்படுவது ஒன்றும் புதிதுமல்லவே. இந்நாவலுக்குள் வரும் வெவ்வேறு பேச்சுவழக்குகளை நிர்மால்யா தன் அனுபவத்தால் சிறப்பாகத் தமிழாக்கியிருக்கிறார். கறுத்த குஞ்ஞிசரம்மாவின், அங்காமாலிக்காரனின் மலையாள உச்சரிப்புகளை தமிழில் கண்டபோது நிர்மால்யாவின் மொழியாக்கத் திறனை மெச்சத் தோன்றியது. மேலும், இது மலையாளத்தின் விளிம்புநிலைச் சமூகத்தின் கொச்சை வழக்குகளால் ஆன நாவல். அதை பிற மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதாரணமாகக் காட்டும் வகையில் நிர்மால்யாவின் மொழியாக்கம் அமைந்துள்ளது. அதுவே இந்த மொழிபெயர்ப்பு நாவலின் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

*

ஆலாஹாவின் பெண்மக்கள் – சாரா ஜோசஃப் – தமிழில் : நிர்மால்யா, சாகித்ய அகாதமி வெளியீடு, முதல் பதிப்பு: 2009, பக். 208, விலை: ரூ.130.