மோடி அரசின் “மகத்தான” சாதனைகளில் முதன்மையானது, அடுக்குமொழியில் கவர்ச்சிகரமான, அலங்கார வார்த்தைகளையும், முழக்கங்களையும் உருவாக்கியதேயாகும். 2014 வரை மோடி மட்டுமே பிரயோகித்து வந்த சொற்றொடர்கள் – பின்னாளில் அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பரந்து விரிந்து தற்சமயம் அரசின் முக்கிய அங்கமாகிவிட்டன. தொழிற்முறை விளம்பர நிபுணர்கள் வழியே புதுப்புது வாசகங்கள், முழக்கங்கள், பிரகடனங்கள் போன்றவை நாள்தோறும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அடுக்குமொழி அரசை அதன்வழியிலேயே புரிந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் இந்த அரசை ‘3D சர்க்கார்’ என்கிறார் பொருளியலாளர் பிரவீன் ஜா. Delusion, Deception, Denial (மாயை, மோசடி, மறுப்பு) இவையே அந்த 3D. மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த மூன்று Dக்கள் வழியாகவே புரிந்துகொள்ள முடியும். பொருளாதாரம், விவசாயம், தொழிலாளர் நலன், தொழில் வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், பணப்பறிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, சீனாவுடனான எல்லைத் தகராறு என அனைத்தையும் இதன் வழியாக விளக்க முடியும். புதிய கல்விக் கொள்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.
கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நாளில் ஆவணம் ஒன்று வெளியிடப்படுகிறது. 3-18 வயதினருக்கு கட்டாய இலவசக் கல்வி வழங்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் திருத்தப்படும் என்று உத்தரவாதம் வழங்குகிறது (பாகம் 8.8, பக்கம்29). இந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் அரசு ஆதரவு தரப்பினரும், யோகேந்திர யாதவ் போன்ற செயல்பாட்டாளர்களும் “கட்டாய இலவசக் கல்வி” அடிப்படையில் கல்விக் கொள்கையைப் புகழ்ந்து தள்ளினார்கள்.
அதன்பிறகு, இரண்டு நாட்கள் கழித்து புதிய ஆவணம் ஒன்றை இறுதியான “கல்விக் கொள்கை” என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடுகிறது. அந்த ஆவணத்தில் ஏழை / பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி வழங்கும் பகுதி நீக்கப்பட்டு இருந்தது. கொள்கையைப் புகழ்ந்த ஆட்கள் நீக்கப்பட்ட பகுதியைப் பற்றி பேசவில்லை. புகழ்வதற்கான அடுத்த காரணத்தைத் தேடிப்போனார்கள். ‘6 சதவீத உள்நாட்டு உற்பத்தியை கல்விக்காக ஒதுக்கப் போகிறார்கள், அதனால் பாராட்டுகிறோம்’ என்கிறார்கள். தற்சமயம் கல்விக்காக மோடி ஒதுக்கும் விழுக்காட்டின் அளவு வெறும் 2.6 சதவீதம். கடந்த பத்தாண்டுகளில் கல்விக்கு குறைவாக நிதி ஒதுக்கிய அரசு இதுதான்.
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய விரும்பினால், கல்விக் கொள்கை வெளியாகும் வரை காத்திருக்கத் தேவையில்லை. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் வரவு – செலவு அறிக்கையிலே அதைச் செய்ய முடியும். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பத்து இலட்சத்திற்கும் மேல் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை. மத்திய பல்கலைக்கழங்களின் நிதி ஒதுக்கீடு பாதியாக குறைக்கப்படுகிறது. ஆய்வகங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது. ஆசிரியர் பயிற்சிக்கென ஒதுக்கப்படும் நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்பதை மத்திய அரசின் தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டி கண்டிக்கிறார்.
ஒரு பக்கம் நிதி ஒதுக்கீட்டை குறைத்து, இன்னொரு பக்கம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதென்பது சாத்தியமில்லை. ஆசிரியர்கள் எண்ணிக்கையையும், தரத்தையும், கற்பித்தலுக்கான சுதந்திரத்தையும் வழங்காமல் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த முடியாது. எண்ணற்ற வாக்குறுதிகளை, விதவிதமான சொல்லாடல்களை, விண்ணைத்தொடும் சாத்தியங்களை உள்ளடக்கிய 66 பக்க ஆவணத்தை தனியாக ஆராய்வதன் மூலம், இந்த அரசின் கொள்கை முடிவுகளை புரிந்துகொள்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று. சமகாலத்தில் அரசு எடுக்கும் வேறுசில முடிவுகள், அரசின் சுற்றறிக்கைகள், இதர நடவடிக்கைகளோடு இணைத்துப் பார்க்கும்போது மட்டுமே புதிய கல்விக் கொள்கையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் மூன்று பெரும் போக்குகளை நாம் உணர முடிகிறது. 1) கட்டற்ற தனியார்மயம். அதன் பக்கவிளைவாக பெரும்பாலானோருக்கு எட்டாத கல்வி, 2) சிந்தனையை வளர்ப்பதை பின்னுக்குத் தள்ளி திறனுக்கும் தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம், 3) மையப்படுத்துதல் வழியாக இந்துத்துவ – நியோ லிபரல் சர்வாதிகார கட்டமைப்பு உருவாக்கம்.
பள்ளிக் கல்வியில் தனியார் பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி பூசி மெழுகுகிறது கல்விக் கொள்கை ஆவணம். ஆனால் நிதி ஆயோக் அமைப்பின் 2017ம் ஆண்டு அறிக்கையில் அந்த வெட்கமெல்லாம் இல்லை. பள்ளிகளை தனியார் நடத்தட்டும் என்கிறது. ஒவ்வொரு மாணவனுக்கான செலவையும் தனியாரிடம் கொடுத்துவிட்டால் போதும் என்கிறது. இந்த யோசனை ராஜஸ்தானில் ஏற்கப்பட்டு, அதன்படி இயக்கத்தில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளை தனியார் எடுத்து நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் நெருங்கியதாலும், அரசு மாறியதாலும், ஆசிரியர்களின் கடும் எதிர்பாலும் திட்டம் நிறைவேறவில்லை. ராஜஸ்தானில் நிறைவேற்ற முடியாத திட்டத்தை, உத்தர பிரதேசத்தில் நிறைவேற்ற யோகி அரசு உத்தேசித்திருக்கிறது. கல்விக் கொள்கையின் இறுதி வடிவம், இதைப் பற்றி நேரடியாக விரிக்காமல், நல்கை – நன்கொடைகள் வழியாக தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்கிறது. எப்படி இருந்தாலும் விளைவு ஒன்றுதான். கல்விக்கான செலவினங்களை அரசு குறைத்துக்கொள்ளும். பள்ளிகள், இதர உட்கட்டமைப்புகளில் தனியார் ஆக்கிரமிப்பு அதிகமாகும்.
பள்ளிநிர்வாகப் பொறுப்புகளை அரசு குறைத்துக்கொண்டால், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பயிற்சி என்னவாகும்? அதற்கான தீர்வு தொழில்நுட்பம் / ஆன்லைன் தொலைதூரக் கல்வியில் உள்ளது என்று நம்புகிறது. ஒரு உதாரணம். தொடக்கப் பள்ளிகளையும், அங்கன்வாடிகளையும் ஒன்றாக இணைத்து, அங்கே பணியாற்றுபவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வழியே பயிற்சி நடத்துவார்களாம். நாட்டில் 56 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கு மின்சார இணைப்பு இல்லை, 26% பள்ளிகளுக்கு கணினி இல்லை. பயிற்சி எப்படி நடைபெறும்? தொடக்கக் கல்வி ஆசிரியர்களில் 20 சதவீதம் போதிய பயிற்சி இல்லாதவர்கள். இந்த ஆன்லைன் சர்க்கஸ், தொடக்கக் கல்வி முதல், உயர்கல்வி வரை திணிக்கப்படுகிறது. ஆசிரியர்களை எங்கெல்லாம் நீக்க சாத்தியம் உண்டோ, அங்கெல்லாம் ஆன்லைன் பாடம். இந்த ஆன்லைன் கல்விக்குப் பின்னால் பெருநிறுவனங்கள், ஆலோசகர்கள், நிதி முதலீட்டாளர்கள் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. நமது கல்விக் கொள்கையை அவர்களே முதலில் முடிவுசெய்கிறார்கள்.
2015க்குப் பிறகு, கல்விக்காக குடிமக்கள் செய்யும் செலவு, சராசரியாக 50 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார் சுரஜித் மஜூம்தார். வரம்பற்ற தனியார்மயம், அதன் விளைவாக அதிகரிக்கும் கல்விச் செலவு, புதுமை என்ற பெயரில் பாடாவதியான ஆன்லைன் வகுப்புகள் உருவாக்கும் அந்நியத்தன்மை, அதன் அரைவேக்காட்டு அறிவு, அதையும் கடந்து சென்றால் தரம் என்ற பெயரில் திணிக்கப்படும் தேர்வு முறை. இந்த மூன்று வடிகட்டிகளின் கூட்டுச் செயல்பாட்டில் தப்பிப் பிழைத்துத் தேறுவது, பின்தங்கிய சமூக – பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து வரும் மாணவ / மாணவியருக்கு எளிதல்ல.
தப்பித்தவறி மேலே உயர்கல்வி பயில வேண்டுமானால், அதுவும் எளிதல்ல. அங்கும் வடிகட்டிகள். முழுக்க முழுக்க வணிகமயமான கல்வி, கார்ப்பரேட் மயமான உயர்கல்வி நிர்வாகம், மாணவன் மீது சுமத்தப்படும் கடன் சுமை. அதையும் கடந்துசென்றால் எல்லாவற்றையும் கலந்து கட்டிய கல்விமுறை, சான்றிதழ், டிப்ளமோ, பட்டம், ஹானர்ஸ் என்று வெவ்வேறு நிலைகள். அங்கும் ஆன்லைன் அரைவேக்காட்டுக் கல்வி. எதோ ஒரு கட்டத்தில் ஒரு சில திறன்களைக் கற்றுக்கொண்டு வெளியேறுவது தான் பெரும்பாலான மாணவர்களுக்கான வழியாக இருக்கும். கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்ட கொள்கையல்ல, அரைகுறையான கல்வி அறிவைக் கொடுத்துவிட்டு பெரும்பாலானவர்களை வெளியேற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட கல்விக் கொள்கை இது.
உயர்கல்வி முழுமையாக வணிகமயமாக்கப்பட்ட பின், அங்கே சிந்தனைகளுக்கெல்லாம் இடமிருக்கப் போவதில்லை. ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரமின்மை, சமத்துவமற்ற ஊதியம், உயர்கல்வி நிறுவனங்கள் மீதான தொடர் கண்காணிப்பு, ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்கும் அமைப்பு மையப்படுத்தப்படுவது என எல்லாமாக சேர்ந்து மிஞ்சியிருக்கும் சிந்தனைக்கான வெளியை முற்றிலும் அழித்துவிடும். அதற்கான வேலைகளும் எப்போதோ தொடங்கிவிட்டன. 2016-17க்குப் பிறகு, மத்திய பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியைப் பாதியாகக் குறைத்து, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 450 கோடியை, உயர்கல்வி நிதி நிறுவனத்திடம் கடனாகப் பெற்றுள்ளது. புதிய துறைகளை உருவாக்குவதற்காக இந்தக் கடன் பெறப்பட்டுள்ளது. இந்தக் கடனை அடைக்க இனி எல்லாத் துறைகளுக்கும் கல்விக்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். அப்படிச் செய்வது பொருளாதார / சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களை வெளியேற்றிவிடும். முறையான கல்வியைப் பெறுவதற்கு, அடுத்த வேலையை அவர்கள் தேடியாக வேண்டும். சிந்திப்பதற்கெல்லாம் இடம் ஏது? பல்கலைக்கழகத்தின் தன்மையும் காலப்போக்கில் மாறும். இத்தகைய சூழலில் மிஞ்சுவது எது? சந்தையில் அதிக பரிமாற்ற விலை (exchange price) போகும் தொழில்நுட்பக் கல்வியும் சில திறன் வளர்ப்புக் கல்வியும் மட்டும் பிழைத்திருக்கும். அவர்கள்தான் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டுவது பற்றி யோசிக்க முடியும். அதுவும் சந்தேகத்திற்குரியதே. அரசியல் செயல்பாடுகள், சமூக செயல்பாடுகளுக்கெல்லாம் உயர்கல்வியில் இடமுண்டா என்பதெல்லாம் சந்தேகமே.
கல்விக் கொள்கை ஆவணமானது, அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமக்கள் பயில வேண்டிய கடமைகள் பற்றி விளக்குகிறது. ஆனால் அவர்களுக்கான உரிமைகளைக் கற்பதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. கல்வியை தன்னுடைய இலக்குகளை அடையும் கருவியாகப் பார்க்கிறது மோடி அரசு. உயர்கல்வியை முழுமையாக தனியார் மயமாக்கல், சிந்தனையைக் கட்டுப்படுத்துதல், மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறைகள், கடன்கள் ஆகியவற்றின் வழியாக தனது அன்றாடத் தேவைகளைக் கடந்து யோசிக்க முடியாத தலைமுறை ஒன்றை உருவாக்க முயல்கிறது. அங்கே தான் தனது இந்துத்துவ கனவை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறது. சம்ஸ்கிருதத்திற்கு முன்னிலை, பாரம்பரிய அறிவு பற்றிய விதந்தோதல்கள் வழியாக அதைத் தொடக்கி வைத்திருக்கிறது இந்த அரசு.