நிர்வாணம்

1 comment

தங்கக்கொப்புளம் போலச் சுடர் அசைவற்று நின்றிருந்தது. கையிலோ காலிலோ மினுமினுவென்று மினுங்குமே.. அதுபோல ஒன்றல்ல, பல கொப்புளங்கள் கருவறைக்குள். விளக்குகளில் குண்டுமணி போலப் பொன் கொப்புளங்கள் மினுங்கியதைப் பார்த்துக்கொண்டேயிருந்ததில் கண்ணெதிரே வட்ட வட்டப் பொன்துகள்கள் பறப்பது போன்ற உணர்வு.

பக்கவாட்டு வாசற்படியில் புறாக்கள் தத்தின. இளஞ்சிவப்பு நிறக் கால்கள் மெலிந்த கீரைத் தண்டுகளை நினைவூட்டின. கற்கூரை இடப்பட்ட உட்பிரகாரம் குளிர்ந்து கிடந்தது. படிக்கட்டுகள் ஈரமாயிருந்தன. யாரோ அலம்பிவிட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே ஒரு சேரளவு தண்ணீர் தேங்கியிருந்தது. 

கன்னம் வைத்துப் படுத்துக்கொண்டால் சில்லென்றிருக்கும். ஆசையாயிருந்தது. கன்னம் என்ன கன்னம்… முழு உடம்பும் தரையில் படுமாறு படுத்துக்கொள்ளலாம். முலைக்காம்புகள் அழுந்த, வயிறு அழுந்த, அல்குல் அழுந்த, வெற்றுடம்புடன் கைகள் விரித்துப் படுத்துக்கொண்டால் உள்ளே எரிவது குளிர்ந்துவிடும். புறாக்கள் கழுத்து, முதுகு, பிருஷ்டங்கள் மீதேறித் தத்தும்போது கண்கள் சொருகிவிடும்.

“அங்க என்ன பார்வை… தீபாராதனையப் பாரு…”

அத்தை இடித்தபோது சுள்ளென்றிருந்தது. ஐந்தடுக்கு தீபாராதனை. மூன்று சுழற்றுகள் இடமிருந்து வலமும், வலமிருந்து இடமுமாகச் சுழற்றி மேலும் கீழுமாய் ஒருமுறை தூக்கிக்காட்டிய போது தீபங்கள் அசைந்தாடின. மித்ரா கன்னத்தில் போட்டுக்கொண்டாள். 

‘பார்த்தால் பார்க்கும் இடத்தில் நினைப்பு நிலைத்திருக்க வேண்டும். அது தவறுதல் இயல்பான நிகழ்வாக, அறியாமல் கைதவறி விழும் பாத்திரம் போல, அவ்வளவு இலகுவாக எப்படி நிகழ்கிறது? ஒரு பூ மலர்வது போல அறிந்துகொள்ள முடியாத கண்கட்டு வித்தையாகவே அது உள்ளது.’

புறாக்கள் குனுகின. குதுக்குதுக்கென அதுகள் தொண்டைக்குழிக்குள்ளிருந்து எழுப்பிய சத்தத்தில் கோவிலுக்கான பூரணத்துவத்தை அவ்விடம் அடைந்துவிட்டது போலத் தோன்றிற்று. கல் தூண்களில் எண்ணெய்ப் பளபளப்பு. எண்ணெயின் கசண்டு வாசம் குப்பென்று அடித்தது. 

அத்தை பயபக்தியோடு விபூதி வாங்கிக்கொண்டாள். மித்ரா கைநீட்ட, அர்ச்சகர் இணுக்கு எடுத்துப் போட்டார். வியர்த்த உடலில் நீர்க்கொப்புளங்கள். மார்புகள் மதகின் ஷட்டர் போல பலகைப் பலகையாய்… பெயர்த்தெடுத்துக்கொள்ளலாம் போல… வயிறு படிந்து கிடந்தது. மூச்சை அடக்கி மந்திரம் சொல்லி உடம்புத் தங்கப்பாளமாயிருக்க வேண்டும்.

“சாமிக்கு நீலப்பட்டு வஸ்திரம் நல்லாயிருக்குல்ல?”

அப்போதுதான் கவனித்தாள். ஒன்றை ஊன்றி கவனிக்கும்போதே நிலைகொள்ளாத தவிப்பு. வயிற்றில் தடுப்புக்கம்பி சில்லிட்டது. அதில் அழுந்தப் பதித்துக்கொண்டு கண்கள் மூடி கும்பிட்டாள். 

“பன்னண்டு மணிக்கு விடங்கர் அபிஷேகம் …”

யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். 

ஒரு மௌனப்புள்ளியில் உறைந்து கிடக்க மித்ரா பிரயத்தனப்பட்டாள். உட்கதவு திறந்தே கிடக்கிறது. அதைப் பூட்டிக்கொள்ள ஆவலாதியிருந்தும் ஏனோ வாய்க்கப் பெறவேயில்லை. ஓரிருமுறை சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் காற்றுக்குத் திறக்கும் கதவாய் அது இருந்து தொலைத்ததில் பட்டென உடனேயே விரியத் திறந்துகொண்டது. 

“இருபதுல கேட்டப்ப முடியாதுன்னுட்ட. நெறையப் படிக்கணும், இப்ப வேணாம்னு நீ சொன்னதுல நாங்களும் சரின்னு ஒத்துக்கிட்டோம். வீட்ல நீதான் புத்திசாலி. கற்பூர புத்தி. அதனால அப்பாவுக்கு ஏகப்பெருமை. படிக்கட்டும்னு பெருந்தன்மையா ஒத்துக்கிட்டாரு.”

பிரகாரம் சுட்டது. நடுவே கோடாக கார்பெட் விரித்ததுபோல வெள்ளை பெயிண்ட் அடித்திருந்தார்கள். அதில் சூடு குறைவாக இருந்தது. 

‘இலேசான சூடு. குளிர்ந்த சூடு… இப்படித்தான் வித்தியாசமா ஏதாவது தோனும்.’

மித்ரா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள். விடக்கூடாது என்றெண்ணும்போதே விடாப்பிடியாக வந்தமரும் எண்ணம்.

“தொப்புளும் முலைகளும் தரையில் அழுந்தி சிவந்து போயினவா…”

களுக்கென்று சிரித்துவிட்டாள். 

“தோடுடைய செவியன்…”

அத்தை பாடுவதை நிறுத்திவிட்டு நெற்றியைச் சுருக்கிப் பார்த்தாள். மித்ரா அவசரமாய் காதில் வழிந்த முடிக்கற்றையை ஆள்காட்டி விரலால் காதுக்குப் பின்புறம் ஒதுக்கிவிட்டுக்கொண்டாள். விபூதி, குங்குமம் உள்ளங்கை குழிக்குள் சங்கமமாயிருந்தன. 

“சாமி முன்னாடி எதையும் நினைக்கக்கூடாது. சாமியத்தான் நினைக்கணும்.”

கோவில் கோபுர வாசலில் கால் வைத்தபோதே அந்த எண்ணம் உள்நுழைந்துவிட்டிருந்தது. கதை முடிந்தது என்று நினைத்துக்கொண்டாள். 

லிங்கத்தைப் பார்த்ததுமே தலையை உலுக்கிக்கொண்டாள். கூப்பிய கரங்கள் எதிரே எரிந்த தீபத்தின் ஒளியில் செந்தாமரை மலரின் இதழ்கள் போலக் கூம்பியிருந்தன. 

“ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க… இங்க வந்து எதுக்கு இந்தப் பாட்டு… லிங்கத்தைப் பாத்தாப்ல உடனே இதைத்தான் பாடணும்னு தோனுமா… லூசு…” 

கடிந்த மனதை அடக்கி, “பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும், பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்…” என ஸ்பஷ்டமாகச் சொன்னாள். கொஞ்சம் ஆசுவாசமாய் உணர முடிந்தது.

மித்ரா கோபுர நிழலில் ஒதுங்கி நின்றாள்.

“அதிகமா படிச்சிட்டா கிறுக்கு புடிச்சிடும். ஞானக்கிறுக்கு. யார்கூடவும் ஒட்டாம தண்ணியில விழுந்த எண்ணெயாட்டம் அதுபாட்டுக்கு தனிச்சுக் கெடக்கும்.”

அண்ணன் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பான். படிப்பு.. அதுவொரு போதை. அடுத்தது, அடுத்தது என்று ஆவலாய்ப் பரந்த மனசுக்கு அடங்கத் தெரியாத ஆர்வம். 

“வயசாயிட்டே வருது. அது இந்தப் பொண்ணுக்குப் புரிய மாட்டேங்குது. கல்யாணமாகியிருந்தா இந்நேரத்துக்கு ரெண்டு கொழந்தைங்களாயிருக்கும்.”

கன்னத்தில் கைவைத்து முழங்கையை இன்னொரு கையால் தாங்கிப் பிடித்தபடி அம்மா முன்பெல்லாம் யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்பாள். 

“ஏண்டி நின்னுட்ட?”

அத்தை திரும்பி நின்று கேட்டாள். 

“சும்மாதான். வர்றேன்.”

மித்ரா சேர்ந்துகொண்டாள். பிரகாரத்திலிருந்த நெல்லிமரம் இலைகள் உதிர நின்றிருந்தது. முழு நெல்லிக்காய்கள் பறிக்கப்படாமல் பழுத்துத் தொங்கின. ராகுகால துர்க்கையிடம் சரியான கூட்டம். பெண்கள் தலைக்குக் குளித்து ஈரக்கூந்தலைத் தளர்வாகப் பின்னியிருந்தனர். அர்ச்சகருக்கு இரண்டு கை போதவில்லை. அர்ச்சனைத் தட்டுகள் நிரம்பி வழிந்தன. 

“நம்ம ராகவன்டி. உங்கூட படிச்சவன். அடையாளம் தெரியலையா?”

மித்ரா அப்போதுதான் கவனித்தாள். காதோரம் இலேசாக நரையோடி உருவத்தில் சற்று முதிர்வைக் காட்ட, அவனும் பார்த்துவிட்டு முகம் சுருக்கி உடனே புன்னகைத்தான். 

“மித்ரா….”

அவசரமாய் அருகிலிருந்தவரிடம் தட்டுகளை ஒப்படைத்துவிட்டு கூட்டத்தை விலக்கி அருகில் வந்தான். 

“நல்லாயிருக்கியா?”

பதினைந்தில் இருந்த தயக்கம் இப்போது இல்லை. படிப்பு தந்த நிமிர்வு, பதவி தந்த கௌரவ அடையாளம் மித்ராவை இயல்பாகப் புன்னகைக்க வைத்தது. அவன் குழைந்து நின்றிருந்தான். 

“நீ நல்லாப் படிக்கிற, அழகாயிருக்க… ஒன்ன எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.”

பத்தாம் வகுப்பின் ஒரு மதிய உணவு இடைவேளையில் அவன் குழறியபடி சொன்னது நினைவுக்கு வந்தது. அதன்பிறகு இரகசியமாய் பார்த்துப் புன்னகைப்பான். சிரிப்பதா, வேண்டாமா என்ற குழப்பதோடு மித்ரா நின்றிருப்பாள். 

‘நீ முட்டைகூட சாப்பிட மாட்டியேடா? இந்த முட்டைய எடுத்துட்டுப் போயி என்னடா பண்ணுவ?” என்று அவன் பேப்பரைக் காட்டி வாத்தியார் கிண்டல் செய்வார். 

பால் முகம் சுண்ட அவன் கண்கள் மித்ராவைத் தேடும். பத்தாம் வகுப்பில் முக்கி, முனகி பாசாகிவிட்டவனை அவன் அப்பா வெளியூரிலிருந்த வேத பாடசாலையில் சேர்த்துவிட்டார். அதன்பிறகு அவனைப் பார்க்கவில்லை. 

“பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு. ரெண்டுபேரும் என்னை மாதிரியில்ல. ரொம்ப நல்லாப் படிக்கிறா.”

அவசரமாய்ச் சொன்னான். அவனுடைய படர்ந்த வெண்மார்பில் அடர்ந்திருந்த முடிச்சுருளைக் கண்டபோது மித்ராவுக்கு என்னவோ போலிருந்தது. வயிறு குழைந்து ஒருமாதிரி செய்தது. முப்பத்தெட்டு வயதுக்கும் வற்றாத உணர்வுகள்..

சுண்டச் சுண்டக் காய்ச்சிய பாலின் பதம் மாறி சுவைக்கூடிக்கொண்டே போகிறது. உண்டால் நாக்கில் ருசி தங்கிவிடும். மேலும் மேலும் என்று தின்னப் பறக்க வைக்கும். ஆனால் யாருக்குத் தின்னக் கொடுப்பது? பாத்திரம் பழசாயிருப்பதா பிரச்சினை? பதம் சரியாயிருப்பது பெரும் வரமல்லவா? கிடந்து கிடந்து சுண்டிவிட்ட சுவையைப் பற்றி ஒருகுறை சொல்லிவிட முடியுமா?

அது அமுதமல்லவா.. அள்ளித் தின்ன யாருக்குக் கொடுப்பினை இருக்கிறது? ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாமென மறுத்துவிட்டு இப்போது வேண்டும் வேண்டுமென்றால் அதுகூட இங்கு தவறுதான்.

“பன்னண்டுக்கு விடங்கர் அபிஷேகம். இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?”

மித்ரா தலையசைத்தாள்.

“இப்பவே போனா முன்னாடி ஒக்காந்து பார்க்கலாம். எல்லாருக்கும் கெடைக்காது. போ…”

அவசரமாய் அவளை அனுப்ப முயன்றான்.

“வாடி போவோம்.”

அத்தை பரபரத்தாள்.

“வரேன்.”

உணர்வற்ற ஒரு சொல்லாய் அது பிரகாரத்தில் அலைந்தது. அவன் அவள் கண்களைத் தவிர்த்து திரும்ப நடந்தான். உடல் நகர்ந்தது. மனம் அவனோடே சென்றது.

அண்ணி அவளுடைய தம்பிக்கு மித்ராவைப் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டாள்.

“அவர் படிப்புல ரொம்ப சுமார். இதனால ரெண்டு பேருக்கும் பிரச்சினை வரும்.”

இரண்டாவது வாக்கியத்தைச் சொல்லவில்லை. அண்ணிக்குச் சுள்ளென்று ஏறிவிட்டது. இப்போதும் ஒரு ஏளனப் பார்வையோடுதான் ஏறிடுவாள்.

“அவன் ஜோரா செட்டிலாயிட்டான். விக்ரகமாட்டம் பொண்டாட்டி. சிமிழ் மாதிரி ஒரு கொழந்தை. அதெல்லாம் ஒரு கொடுப்பினை. எல்லாருக்கும் கெடைச்சிடாது.”

இதையே ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்ல அவளுக்குத் தெரிந்திருந்தது.

“ஒனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா பண்ணிக்கயேன்டி.”

அம்மா இறுதியாக அந்த முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.

“உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

எதிரே வருபவனிடம் நிறுத்திக் கேட்டால் எப்படியிருக்கும்?

மித்ரா சிரித்துவிட்டாள். அம்மா பரிதாபமாக அவளைப் பார்த்தாள்.

இரவுகள் குளிர்ந்து கிடந்தன. நிலவின் வெண்பொழிவில், குளிரின் தன்மையில், அடர்த்தி கூடிப்போயிருந்தது.

“பெரிய பதவியில இருக்கா. கீழ அம்பது பேராவது வேலை செய்வாங்க. எல்லாருக்கும் மேடம்தான். வயசு வித்தியாசமெல்லாம் கெடையாது. அவ்ளோ மரியாதை. எல்லாம் படிப்பு தந்த கௌரவம்.”

அப்பா பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லுவார்.

இரவில் மித்ரா சிறுமி போலத் தலையணையை இறுக அணைத்துக்கிடந்தாள். முற்றின தேங்காயின் பருப்புமணி உருள்கிறாற்போல உள்ளுக்குள் உருண்டு திரண்ட கொப்புளமொன்று கீழ்மேலாய், மேல்கீழாய் அலைந்தது. சன்ன இழையாய் உள்நுழையும் மூச்சுக்காற்றில் அது நெருப்புத்துளி போல ஜ்வலித்தது. நடுமார்பை, அடிவயிற்றை, அல்குலை அது தடவிச்சென்றதில் உயிர்வரை சிலிர்த்தது.

பிரகாரம் காய்ந்திருந்தது. புறாக்கள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. படியிலமர்வதும், எதிரேயிருந்த நாயன்மார்கள் சந்நிதிக்குப் பறப்பதுமாயிருந்தன.

‘இரவுகளில் நாயன்மார்கள் புறாக்களிடம் பேசிக்கொண்டிருப்பார்களா? ஆனால் அவை உறங்கிக்கொண்டிருக்குமல்லவா? பின்னே மூலவர் எதற்கிருக்கிறார்? அவரிடம் உலக நடப்புகள் குறித்துப் பேச வேண்டியதுதான். குளிர்ந்த படியிலமர்ந்து எதைப் பற்றியும் கவலைப்படாது பேசலாம். வௌவால்களின் அட்டகாசம் பற்றி அவரிடம் புகார் செய்யலாம். தேங்கும் அபிஷேகப் பொருட்களின் வாடை பற்றிச் சொல்லி ஏதாவது வழி பண்ணச் சொல்லலாம்.’ 

அந்தகார இருட்டுக்குள் இரண்டோ அதற்கு மேற்பட்டோ குரல்கள் பேசிக்கொள்வது போலத் தோன்றிற்று. 

படியோரங்களிலிருந்த கைப்பிடிச் சுவர் வளைவாய் இறங்கி சுருட்டி வைக்கப்பட்ட பாய் போல முடிந்திருந்தது. கையை வைத்து அழுத்தியபோது உள்ளங்கையில் எச்சில் தோய்ந்த உதடுகள் ஸ்பரிசிப்பது போலிருந்தது. தடவிப் பார்த்தாள். மெத்தென்ற உள்ளங்கையில் சில்லிடல் கொஞ்சமாய் தங்கியிருந்தது. சம்மங்கி, அரளி, கதம்ப, மல்லிகையின் வாசம் எண்ணெய்க் கசண்டுடன் கலந்து மனக்கிளர்ச்சியை உண்டாக்கிற்று. 

இனந்தெரியாத உணர்வு, தேவாமிர்தம் போலப் பொங்கி வழியும் மனதில் நுரைத்துத் தளும்பிற்று. தளும்பி வழிந்து உடலெங்கும் பரவி மயிர்க்கால்களில் ஏறி குத்திட வைத்தது. படிக்கட்டின் ஓரத்தில் ஒரு துளி இடத்தில் மித்ரா முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தாள். பெயர் பின்னால் நீண்டிருந்த வால் மறந்து போயிருந்தது. 

கூட்டத்தை விடங்கர் அள்ளிக்கொண்டு விட்டிருந்தார். அவள் நிர்மலமான குளத்தின் ஒற்றைச் செம்பருத்தியாய் தனித்துக் கிடந்தாள். வண்ணதாசனின் தனுமையில் வரும் செம்பருத்தி. குடத்துக்குள் ஏறிடத் துடிக்கும் செம்பருத்தி. மித்ரா தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

சற்று பள்ளமான ஓரிடத்தில் நீர் தேங்கி வீசிய காற்றுக்குத் தளும்பிற்று. ஒரு புறா பறந்துவந்து அவள் காலருகே அமர்ந்தது. கருப்பு வெள்ளை உடலில் கண்கள் குண்டுமணி போல மினுங்கின. அது இவளை உறுத்துவிட்டு மீண்டும் பறந்துபோய் நாயன்மார்கள் சந்நிதியில் அமர்ந்தது. அங்கிருந்து மீண்டும் இவளைப் பார்த்துவிட்டு அருகிலிருந்த நாயன்மாரைப் பார்த்தது.

“அவர்கிட்ட என்னைப் பத்தி என்ன சொல்ற?”

கையாட்டிக் கேட்டாள். அது சட்டென எங்கோ பறந்துபோனது. அத்தை உள்ளே தவித்துக்கொண்டிருப்பாள் என்று நினைத்துக்கொண்டாள்.

“நான் போய் ஒக்கார்றேன். லேட்டாப் போனா முன்னால ஒக்கார இடம் கெடைக்காது.”

சொல்லிவிட்டுத்தான் போனாள்.

“நின்னுக்கிட்டேயிருக்காம சீக்கிரம் வந்து சேரு.”

இறுதியாகக் காற்றில் மிதந்துவந்த அவளது சொற்கள் மித்ராவின் காதுகளை எட்டும் முன்னே கரைந்து போயிருந்தன. 

சிறுவயதில் அம்மணச் சாமியார் ஒருவரை அவள் பார்த்திருக்கிறாள். ஏனோ அது ஞாபகத்துக்கு வந்தது. சடை முடியுடன் அழுக்கு உடலோடு அவர் ஆங்காங்கே தென்படும்போதெல்லாம் படபடப்பாக வரும். முழு நிர்வாணமாய் அவர் சாலையிலோ, ஏதாவது கடை வாசலிலோ நின்றுகொண்டிருப்பார். கடைக்காரர்கள் அவருக்குப் பயபக்தியுடன் ஏதாவது சாப்பிடத் தருவார்கள். அவர் சாப்பிட்டால் வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பது நம்பிக்கை. 

பள்ளிக்கூடம் போகும் வழியில் எங்காவது அவரைப் பார்த்துவிட்டால் குனிந்த தலை நிமிராது சென்றுவிட வேண்டுமென்று அம்மா சொல்லித் தந்திருந்தாள். அப்படியும் ஒருநாள் முழுமையாகப் பார்த்துவிட்டாள். கண்களை இழுத்து நிறுத்த முடியவில்லை. பார்வை கீழிறங்கி விட்டது. ஒருமாதிரி சொரசொரத்துப்போனது. 

அவரிடம் எந்த வித்தியாச நெளிவுமில்லை. மீதூறும் பார்வையின் பிரக்ஞையின்றி அவர் சென்றுகொண்டிருந்தார். அதுகூட ஒரு தெளிவுநிலை என்று இப்போது தோன்றிற்று. ஊசலாட்டம் அற்ற மனசு. அது வாய்த்துவிட்டால் அனைத்தையும் கழற்றி வீசிவிடலாம். ஆசையை, ஆடைகளை, காம உணர்வுகளை…

சிரிப்பு வந்தது, கூடவே அழுகையும் வந்தது. அவள் வெற்றுடம்போடு நடந்து செல்வதாய் காட்சி கண்ணெதிரே தோன்றியது. நனைந்த கீழிமைகளோடு அவள் வாய்பொத்திச் சிரித்தாள். நிர்வாணம்.. ஆடை தொலைத்த உடல் நிர்வாணம், ஆசை தொலைத்த மன நிர்வாணம்.. மொத்தத்தில் நிர்வாணம்.

உள்ளே விடங்கர் பால் அபிஷேகத்தில் குளிர்ந்துகொண்டிருந்தார்.

1 comment

எஸ். சுரேஷ்பாபு April 26, 2022 - 7:10 pm

மிகவும் அருமை திருமணம் ஆகாத முதிர் கன்னியின் உணர்வுகளை மித்ரா பாத்திரத்தில் அருமையாக வடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

Comments are closed.