தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 1) : கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம்

by மானசீகன்
0 comment

காமம் மனித மனதின் ஆதாரமான உணர்வு. பிரபஞ்ச இயக்கமும், மனித உணர்வுகளும் பஞ்ச பூதங்களால் மட்டுமல்ல காமத்தாலும்  பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஈர்ப்பு, காதல் ஆகியவற்றுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் முற்போக்கான நகர்வுகளுக்கும் தனி மனிதனின் அளப்பரிய சாதனைகளுக்கும் கூட காமமே அடிப்படையாக இருக்கிறது. நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போல் பிரபஞ்சத்தின் உயிர்கள் காமத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றன அல்லது சபிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு மகத்தான படைப்பாளியை மதிப்பிட காமம் குறித்த சித்திரிப்புகளை மிக முக்கியமான அளவுகோலாகக் கொள்ளலாம். தமிழிலக்கியப் பரப்பில் காதல், பாசம், அன்பு, பக்தி என்று பூசிமெழுகப்பட்ட இடங்களைத் தாண்டி, காமம் தன் நிஜ சொரூபத்தை அப்படியே வெளிப்படுத்தும் தருணங்களும் ஏராளமாய் காணக் கிடைக்கின்றன.

‘மேட்டு நிலத்தில் வளர்ந்த காய்ந்த புற்களை பற்கள் விழுந்த கிழப்பசு உண்ண முடியாமல் சப்பிச் சாப்பிடுவதே காமம்’ என்று காமத்தை வெல்ல முடியாத மனிதப் போதாமையை சுட்டுவதாகட்டும், ‘வெயிலடிக்கும் மொட்டைப் பாறை உச்சியில் கையில்லாத ஊமை வெறுமனே பார்த்துப் பார்த்து நோகும் வெண்ணெய்த் திரட்டே காமம்’ என்று காலத்திற்குக் கட்டுப்படாத அதன் புதிரையும்  மனிதனின் இயலாமையையும் அடையாளம் காட்டுவதாகட்டும், ‘முட்டுவென் கொல் தாக்குவென் கொல் ஆ ஒல் எனக் கூவுவேன் கொல்’ என்று இராத்திரி விரகத்தால் ஆர்ப்பரிக்கும் பெண்ணின் பித்துநிலையை அப்படியே காட்டுவதாகட்டும், ‘கன்றுக்கும் பயன்படாமல் பாத்திரத்திலும் விழாமல் வீணாகக் கழியும் பாலே என் இளமை’ என்று உடலரசியல் பேசுவதாகட்டும், ‘ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த தடமுலைகளைக் கொண்டாடி, கண்ணன் எச்சில் சுவையை அவன் ஊதும் சங்கிடம் கேட்கிற’ உன்மத்த நிலையைப் படம் பிடிப்பதாகட்டும், ‘ராப்பிச்சைக்காரனே! எத்தனை இட்டாலும் நிரம்பாத உன் ஓட்டைப் பாத்திர நாற்றத்தில் என் சுவாசங்கள் கூசுகின்றன’ என்று காமத்தின் மீது பூசப்பட்ட வண்ணங்களைக் கலைத்து நிர்வாணக் கவிச்சியோடு திரை விலக்கிக் காட்டுவதாகட்டும், 2000 ஆண்டுகளுக்கும் மேலே நீண்டிருக்கிற தமிழ்க் கவிதை மரபில் காமம் விதவிதமான படிமங்களாலும் உருவகங்களாலும் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கிறது.

நவீன வாழ்வில் காமம் உண்டாக்கியிருக்கும் சிக்கலை உரைநடையே யதார்த்தமாகப் பேச முடியும். சிறுகதை, நாவல் போன்ற வடிவங்கள் ஆரம்ப காலத்தில் நீதிபோதனை செய்வதற்கும், பொழுதுபோக்குவதற்கும் மட்டுமே பயன்பட்டாலும் புதுமைப்பித்தன் எனும் இராட்சசன் புனைவுவெளியில் சமகால யதார்த்தத்தைச் சுவை குன்றாமல் பேசினான். ஆனால், அவனுடைய படைப்புகளில் ‘காமத்திற்குக்’ குறைவான இடமே வாய்த்திருந்தது. விதிவிலக்காக, ‘கல்யாணி’ போன்ற ஒன்றிரண்டு கதைகளில்  மீறல்களைப் பேசியிருந்தார். ‘பொன்னகரம்’ கதையும் காமம் குறித்த கதையன்று. சமூகம் கட்டி எழுப்பியிருக்கிற போலித்தனமான பண்பாட்டிற்கும் அப்பட்டமாக மூஞ்சியில் அடிக்கும் வாழ்வியல் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியையே அந்தக் கதை பேசியது.

இருட்டுக்குள் தன் மீது கண் வைத்தவனோடு மறையும் அம்மாளுவின் வறுமை, பதிபக்தி இரண்டுக்கும் நடுவில் நின்று சிரிக்கும் வாழ்வின் அபத்தம் ஆகியவற்றையே புதுமைப்பித்தன் பேசினாரே அன்றி அம்மாளுவின் காமத்தின் மீது தன் கவனத்தைக் குவிக்கவில்லை. ‘கவந்தனும் காமனும்’ கதையில் கூட வேசியின் காமமோ அல்லது பாதசாரியின் காமமோ பேசப்படவில்லை. இவனது எந்திர வாழ்க்கையும் வறுமையையும் மீறி அந்த வேசிக்குள் எட்டிப் பார்க்கும் ரோஷமுமே அங்கே விவாதப் பொருளாக இருந்தது. வேசியைக் காட்டி விட்டாலே ‘மன்மதன்’ வந்துவிடுதாக புதுமைப்பித்தன் நினைத்திருக்கலாம். அந்தக் கதையில் மட்டுமல்ல, புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகளில் ‘காமன்’ தலைமறைவாகவே ஒளிந்திருக்கிறான்.

அவருடைய சமகாலத்தவரான கு.ப.ரா.வை காமத்தையும் பெண் மனதின் ஆழங்களையும் விரிவாகச் சித்திரித்தவர் என்றே பலரும் நம்புகின்றனர். புதுமைப்பித்தனுடன் ஒப்பிட்டால் அது உண்மைதான் என்றாலும் கூட அவருடைய சித்திரிப்புகள் ஒரே விதமான தன்மை கொண்டவை. பெரும்பாலும், ‘இந்த விஷயம் இப்படித்தான் இருக்க முடியும். பிற சாத்தியங்களுக்கு வாய்ப்பில்லை’ என்கிற பொதுப்புத்தியின் ஊகமே அவருடைய கதைகளின் மையம். அந்தக் காலகட்டத்தில் பிராமண சமூகத்தில் ஏராளமான இளம் விதவைகள் இருந்தனர். அவர்கள் மறுமணம் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. அவர்கள் மீதான அனுதாபத்தை சில காந்தியவாதிகளும் ஆரம்பகால  திராவிட எழுத்தாளர்களும் பிரச்சாரக் கவிதைகளாகவும் கதைகளாகவும் எழுதித் தள்ளினர்.

பாரதிதாசன் கவிதைகளில் வருகிற நாயகி கண்டிப்பாக விதவையாகவே இருப்பாள். இந்த வகையான சித்திரிப்புகளை பிரச்சார தொனியின்றி வடிவ அமைதியுடன் படைத்துக் காட்டியதே கு.ப.ரா.வின் வெற்றி. விதிவிலக்காக, ‘ஆற்றாமை’, ‘கனகாம்பரம்’ போன்ற சில கதைகளில் மட்டுமே மனித மனதின் ஆழத்திற்கு அவர் செல்கிறார். அவருக்கு இது ஒருவகையான ‘செயற்கை உத்தி’ என்கிற உறுத்தல் இருந்திருக்கிறது. எனவேதான் இதுபோன்ற கதைகளை விமர்சித்து, ‘உண்மைக் கதை’ என்ற சிறுகதையை எழுதினார். அந்தக் கதையில் இளம் பெண்ணை மணந்த கிழட்டுக் கணவன் ஓர் எழுத்தாளரைப் போட்டு வாங்கு வாங்கென்று வாங்குவார். அதைப் பார்த்த போது, ‘அது கண்ணாடி ஓய்’ என்றே எனக்கு சொல்லத் தோன்றியது.

ஆனால் தமிழ்ப்புனைவுலகின் மாபெரும் சாதனையாளரான கு. அழகிரிசாமி, காமத்தை தன் வாழ்வியல் பார்வையிலிருந்து அணுகியவர். அவர் கதைகளில் காமமானது, தி.ஜா கதைகளைப் போல் மறைத்து வைக்கப்பட்ட சூடான அல்வா தருகிற பரபரப்பையோ, கு.ப.ரா மாதிரி திடீரென்று கதவு திறப்பதால் உருவாகும் அதிர்ச்சியையோ, வேசிகளின் உலகத்தையே மீண்டும் மீண்டும் பேசி ஜி.நாகராஜன் உருவாக்க நினைக்கிற இரக்கத்தையோ குமட்டலையோ, படுக்கையறைக் காட்சிகளைக் காட்டிக்கொண்டே ஒலிவாங்கியில் கீதா உபதேசம் செய்யும் பாலகுமாரனின் உபன்யாஸத்தையோ பார்க்க முடியாது.

கு.அழகிரிசாமி கதைகளில் காமம் வெறும் காமமாக மட்டுமே வருகிறது. அதன்மீது அவர் எந்த வண்ணத்தையும் பூசுவதில்லை. அதை தைரியமாக எதிர்கொள்வதற்கு மட்டுமே நம்மைத் தயார்படுத்துகிறார். பெரும்பாலும் அவர் கதைகள் இந்த நிலையிலே நின்று விடுகின்றன. இதுவே அவரது தனித்தன்மை என்று கருதுகிறேன்.

அழகிரிசாமி கிட்டத்தட்ட 20 கதைகளில் காமம் குறித்து எழுதியிருக்கிறார். ஆனால் தமிழ் இலக்கியப் பரப்பில் காமம் பற்றிப் பேசுகிற போது பெரும்பாலும் அவருடைய பெயர் இடம்பெறுவதேயில்லை. மற்ற நேரங்களில் ‘அழகம்மாள்’ கதையை விதந்தோதுபவர்கள் இது மாதிரித் தருணங்களில் அழகம்மாளை அறைக்குள் வைத்துப் பூட்டி விடுகிறார்கள். ‘அவர் குழந்தைகளைப் பற்றி மட்டுமே நன்றாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்’ என்று அவர்களாகவே முடிவுகட்டி சிலேட்டுக் குச்சியோடு கு. அழகிரிசாமியை திண்ணையிலேயே உட்கார வைத்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவன்று. தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் அவரளவிற்கு விதவிதமான மனித உணர்வுகளைப் பேசிய எழுத்தாளர் வேறு யாருமில்லை. ‘காமம்’ என்கிற ஆதிப்பேருணர்வையும் தன் இயல்புப்படியே வகை வகையாய் படைத்துக் காட்டியிருக்கிறார் கு. அழகிரிசாமி.

காமத்தின் பல்வேறு விசித்திரங்களில் ஒன்று, அதன் திடீர் உதயமும் சட்டென்று வடிந்து போகிற அஸ்தமனமும்தான். நம் வரையறைகளுக்குச் சிக்காத வஸ்துவாக இருப்பதே காமத்தின் மீதான நம் தீரா விருப்பிற்கு மிக முக்கியமான காரணம். ஞானிகள் காமத்தைக் கடக்க முயன்றால் படைப்பாளிகள் அதன் சூட்சுமத்தை விதவிதமாய் ஆராய முனைகிறார்கள். அந்த மாதிரியான கதை ஒன்றை (இரவு) கு. அழகிரிசாமி எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் அவர் இரவுக்கும் காமத்துக்கும் இடையிலான உறவினை ஆராய்கிறார். பொதுவாக, காமம் நபர் மீதுதானே உருவாக முடியும்? இந்தக் கதையில் ஆள் பின்னகர்ந்து ‘இரவு’ விஸ்வரூபம் எடுக்கிறது.

வெங்கடாசலத்தின் மனைவி குரூபி. அவளைப் பார்ப்பதற்குக் கூட முருகேசனுக்குப் பிடிக்காது. ஆனால் அவர்களோடு உல்லாசப் பயணம் போன ஓரிரவில் எல்லாம் தலைகீழாய் மாறுகிறது. ஒரே அறைதான் எடுத்திருக்கிறார்கள். வெங்கடாசலம் பணிநிமித்தம் மனைவியை நண்பனின் பாதுகாப்பில் விட்டுவிட்டு நாகர்கோவில் போய் விடுகிறான். இவளைப் போய் என்ன செய்துவிடப் போகிறான் என்கிற அசட்டையாகக் கூட இருக்கலாம். ஆனால், அந்த இரவு முருகேசனை ஒரு பேயைப் போல் ஆட்டி வைக்கிறது. விடிந்து எழுந்தால் அவனுக்கே அருவருப்பாக இருக்கிறது. மறுநாள் இரவும் அதே கதைதான். காமம் இரவுக்குள்ளிருந்து இறங்கி உடலுக்குள் புகுந்துவிடும் பேரற்புதத்தை அழகிரிசாமி மட்டும்தான் நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

மனிதர்கள் தங்கள் வசதிக்காக உருவாக்கிக்கொள்கிற மதிப்பீடுகளை மணல்வீட்டைப் போல் கலைத்து விடுகிற பேரலைதான் காமம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். ‘ரச விகாரம்‘ கதையில் ஆண்வாரிசு இல்லாத சங்கரலிங்க முதலியார் ஒரு விசேஷத்தில் கண்டு வியந்த தியாகராஜனை தன் சொத்துகளுக்கு கங்காணியாகவும் மகள் பார்வதிக்கு அண்ணனாகவும் அழைத்து வருகிறார். ஆனால், அண்ணனும் தங்கையும் புனுகு மணக்க, ரோஜா மலர்கள் உதிர்ந்திருக்க, பூட்டிய அறைக்குள் கலைந்த உடைகளோடு ‘பாசத்தைப் பரிமாறிக்கொண்டதைக்’ கேள்விப்பட்டவுடன் முதலில் அவனைக் கொல்ல நினைக்கிறார். பிறகு நிதானமடைந்து கணக்கு பார்த்து ஊரை விட்டு அனுப்புகிறார். அனுப்பிய பிறகு ஏன் விட்டுவிட்டோம் என்று எண்ணிக் குமைகிறார். ஆனால் இந்தத் தலைப்பில்தான் கதையின் மையம் ஒளிந்திருக்கிறது. அண்ணன் தங்கையாகப் பழக வேண்டியவர்களுக்கு இடையில் முளைத்து விட்ட காமத்தை அவர் ‘ரச விகாரமாகப்’ பார்க்கவில்லை. அவர் சுட்டும் ரச விகாரமே வேறு. கதையின் இறுதியில் அந்த நுட்பத்தை ஒளித்து வைத்திருக்கிறார். ‘கோபத்தின் உச்சத்தில் கோபத்தையே துணையாகக் கொண்டு உள்ளே இழையோடியிருந்த ரசம் தன் கத்திரிப்பை பழையபடியும் பொருந்தி முதலியாரை பிரக்ஞைக்கு கொண்டு வந்து மனிதனாக்கியது’ என்கிற இடத்தில் நமக்கு திரை விலகுகிறது. அவள் பெண், அவன் ஆண். இயற்கையின் ரசம் இதுதான். மனிதன் தன் வசதிக்காக உருவாக்கிக்கொண்ட மதிப்பீடுகள்தான் விகாரம். இதை உணர்ந்ததும் முதலியார் அமைதியாகி விடுகிறார். உண்மையில் இது அழகிரிசாமியின் உணர்தல். முதிர்ந்த தகப்பனின் கனிவோடுதான் அவர் எப்போதும் மனிதர்களுக்கு இடையிலான காமத்தை அணுகுகிறார்.

காமம் என்பது இருவருக்கும் உரியதாக இருந்தாலும் ஆணின் மனம் பெண் உடலை எப்போதும்  கற்பனையில் கண்டு காமத்தில் திளைக்கிறது. விதவிதமான பெண் உடல்கள் அவனுக்குள் அலையாக எழுந்து அவனையே உள்ளிழுக்கின்றன. அதை மீறி நீந்துவதற்கு அவனுக்குரிய கரமாகவும் ஒரு பெண்ணே தேவைப்படுகிறாள். ‘காடாறு மாதம்‘ – ஆணின் மனதில் எப்போதும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் காமம் பற்றிய உருவகக் கதை. ஆனால், கதையில் ‘காமம்’ வெளிப்படையாக பேசப்படவில்லை. ‘ஊர் வாசமே’ இல்லாமல் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்று இரு இளைஞர்கள் வெளியூர் சென்று அறை எடுத்துத் தங்குகிறார்கள். அந்த அறையின் கட்டிலில் பவுடர் வாசம் அடிக்கிறது. அந்த வாசம் இருவருக்கும் விதவிதமான கற்பனைகளைக் கொண்டு வருகிறது. அந்த அறையில் ஏற்கனவே ஒரு பெண் தங்கியிருந்ததாக நினைத்து அவளைப் பற்றி விதவிதமாக கற்பனை செய்து பரவசப்படுகிறார்கள். கொஞ்ச நேரத்தில் அதே கட்டிலில் மூட்டைப்பூச்சி கடிக்க ஆரம்பிக்கிறது. சற்றுமுன் பரவசப்படுத்திய அதே கட்டில் இப்போது அருவருப்பானதாக மாறுகிறது. அதைத் தூக்கி வெளியில் போட்ட பிறகே தூக்கம் வருகிறது. அவர்கள் சிகரெட் அடிப்பதை ஊர்க்காரன் ஒருவன் தற்செயலாக இங்கே வந்து பார்த்து விடுகிறான். ‘அடுத்த நொடியே நாங்கள் பழையபடி ஊர்வாசிகள் ஆகி விட்டோம்’ என்று சொல்வதோடு கதை முடிகிறது..

இந்தக் கதையில் வெளிப்படையாக புணர்ச்சியோ, முத்தமோ, ஸ்பரிசங்களோ, பாலியல் உரையாடல்களோ இடம்பெறவில்லை என்றாலும் இது நுட்பமாக காமம் குறித்துப் பேசுகிற கதைதான். ஊர் என்பது சமூகக் கட்டுப்பாடுகளுக்கான குறியீடு என்றால் அதிலிருந்து விலக நினைப்பதே துறவு. ஆனால் அங்கும் அடக்கப்பட்ட காமம் கூடுதல் வலிமையோடு கூடவே வந்து விடுகிறது. கட்டிலில் அடிக்கிற பவுடர் வாசம் அதுதான். ஆண் எந்த அளவு காமத்தைத் தேடி அலைகிறவனோ அதே அளவுக்கு அதைக் கண்டு அருவருப்படைகிறவன். அந்த அருவருப்பே மூட்டைப்பூச்சியாக வந்து பவுடர் கனவைக் கலைக்கிறது. சிகரெட் பிடிக்கிற போது ஊர்க்காரன் பார்த்து விடுவதை அந்தரங்கம் கலைவதாக உணர்ந்து அப்போதே மீண்டும் ஊர்வாசிகளாகி விட்டோம் என்று கூறியிருப்பது அழகான நுட்பம். மிகச்சிறந்த உருவகக் கதையை துளியளவும் யதார்த்தம் கெடாமல் எழுதியிருப்பது அழகிரிசாமிக்கே உரிய எழுத்து மேதைமை.

இரண்டு பெண்கள்‘ காமம் குறித்த சமூகத்தின் போலித்தனங்தளைக் கட்டுடைக்கும் கதை. காம்பௌண்டு வீடுகள் அமைந்த குடித்தனப் பகுதியில் ஒரு சிறு அறையில் ராகவன் தங்கியிருக்கிறான். அவனுடைய எதிர்வீட்டில் சுமாரான பெண். சற்று தள்ளி வேறொரு வீட்டில் ஒரு பேரழகி. சுமாரான பெண் இவனிடம் அப்பா, தம்பி மூலமாக பத்திரிகை வாங்கிப் படிக்கிறாள். இவன் மூலமாக அவள் கதை பத்திரிகையில் வருகிறது. அந்த வீட்டோடும் அவளோடும் நட்பு உருவாகிறது. ஒரே பேருந்தில் பேசிக்கொண்டே அலுவலகம் போகிற அளவுக்குப் பழக்கமாகி விடுகிறார்கள். ஒருநாள் மழை பொழிகிற போது அவளுக்கும் குடை பிடித்தபடி அறை திரும்புகிறான். அதைப் பார்த்த வீட்டு உரிமையாளர், ‘பிறர் தவறாக நினைக்கக்கூடும்’ என்று மென்மையாக அறிவுரை கூறுகிறார். ஒருநாள் பேரழகி  டைப்ரைட்டரை தம்பியிடம் கேட்டனுப்புகிறாள். இவனே அதை எடுத்துக்கொண்டு போய் தருகிறான். இந்தச் சாதாரண விஷயத்துக்கு காம்பௌண்டில் இருக்கிற எல்லாக் குடித்தனக்காரர்களும் அவனை வெறுக்கிறார்கள். எதிர் வீட்டுக்காரர் அவனைப் பொறுக்கியாக பாவித்து திட்டுகிறார். வீட்டு உரிமையாளர் வீட்டையே காலி செய்யச் சொல்கிறார். அவனுக்கு எதுவுமே விளங்கவில்லை. ‘சுமாரான பெண்ணோடு பழகிய போது ஒன்றும் சொல்லாமல் பெருந்தன்மையாக நடந்துகொண்டவர்கள், ஒரே ஒரு நாள் பேரழகிக்கு டைப்ரைட்டர் கொடுத்ததற்காக ஏன் இப்படி துள்ளிக் குதிக்கிறார்கள்? தான் என்ன தவறு செய்து விட்டோம்?’ என்று யோசித்துக் குழம்பி பத்திரிக்கை ஆசிரியரிடம் கூறுகிறான். அவர், ‘களங்கமில்லையென்றால் குற்றம் சாட்டத் தோணாதே சார்! நீங்கள் குடியிருந்த வீட்டுக்காரரும் உங்கள் எதிர் வீட்டுக்காரரும் அந்தத் தெருவில் இருக்கும் அத்தனை பேரும் அந்த அழகான பெண்மீது வெறியோடு இருக்கிறார்கள் என்று நான் உறுதியாகச் சொல்வேன். சந்தர்ப்பம் கிடைத்தால் எவனுமே அந்தப் பெண்ணைக் கெடுக்கத் தயங்க மாட்டான்’ என்று சொல்கிறார். ‘அட, அயோக்கியப் பயல்களா! இந்த லட்சணத்திலா அடுத்தவனைக் குறை சொன்னீர்கள்?’ என்று அவன் திருப்பிச் சொல்வதோடு கதை முடிவடைந்து விடுகிறது.

உண்மையில் கதை முடியவில்லை. இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்தக் கதைக்கு அவர் ‘இரண்டு பெண்கள்’ என்று பெயர் வைத்திருந்தாலும் உண்மையில் இது ‘ஆண்களின் காமம்’ பற்றிய கதை. இந்தக் கதையில் நுட்பமான வேறொரு விஷயம் உண்டு. எதுவுமே தெரியாத அப்பாவி போல் அவன் பத்திரிகை ஆசிரியரிடம் இதைக் கேட்க அவர் உளவியல் நிபுணரைப் போல் மனித மனங்களை அறுவை சிகிச்சை செய்து பதில் சொல்கிறார். உண்மையில் அவன் நிறைய விஷயங்களை அவரிடம் மறைத்திருக்கிறான். அவனும் அந்தப் பேரழகி மீது பித்தாக இருந்தவன். அவள் விரல்கள் பட்ட டைப்ரைட்டரில் பரவசத்தோடு எதை எதையோ அடித்துப் பார்த்தவன். முன்பே இவனுடன் பேரழகி பேசாவிட்டாலும் கூட, ‘பெண்’ என்பதற்காகவே எதிர் வீட்டுக்காரியையும் விதவிதமாக நினைத்தவன். அவல்-உரல் கதையாகவே அவளை  நினைத்து இவளோடு பழகியவன். இந்தக் கதைகளை அவன் ஆசிரியரிடம் கூறவில்லை. இவற்றை அவன் சொல்லாமலே அவராகவே கூட ஊகித்திருக்கலாம். ஆனாலும் முக தாட்சண்யத்துக்காக அவன் விரும்பும் பதிலைச் சொல்லியிருக்கலாம். இதே கண்ணியைப் பிடித்தபடி நாம் அவர் மனதிற்குள்ளும் பயணிக்க முடியும். ‘பெண் சார்ந்த அனைத்து ஒழுக்க விதிகளுக்கான காரணங்களை ஆண் தன் மனதின் வக்கிரங்களிலிருந்து கண்டறிகிறான்’ என்கிற புரிதலை இந்தக் கதை நமக்குத் தருகிறது.

இதன் நீட்சியாக இன்னொரு கதையை அழகிரிசாமி எழுதியிருக்கிறார். தொடர்வண்டியில் பருவமடையாத இரு மகள்களோடு வரும் ஆசிரியர் அங்கு உட்கார்ந்திருக்கும் இரண்டு வாலிபர்களைக் கண்டு பதட்டமடைந்து, சிறுமிகளாயிருக்கும் தன் மகள்களையே அவர்களோடு இணைத்து விதவிதமாக கற்பனை செய்து சண்டை போடும் கதை, ‘தகப்பனும் மகளும்‘. இந்தத் தலைப்பில் இருக்கிற உம்மைத் தொகையை நாம் விதவிதமாக விரித்துப் பார்க்க முடியும். அந்த தலைப்பே நம் மன விகாரத்தின் மீது விழுகிற படைப்பாளியின் கோபம் நிறைந்த அறைதான். உண்மையில் அந்தத் தகப்பனின் சித்திரம் பரிதாபகரமான ஒன்று. அவனுக்கு, தன் மகளே பிறரின் காமத்தைத் தூண்டுகிற பண்டமாகத் தோற்றமளிக்கிறாள். அந்தத் தகப்பனை ஆழ்ந்து யோசித்தால் நமக்கு உண்மை புரியும். அந்தத் தகப்பனின் மன விகாரமே நம் சமூகமாகி பெண்களைக் கடுமையாகக் கண்காணித்து ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. இயல்பான மனித உணர்வாகிய காமம் மனதின் விதவிதமான விகாரங்களால் நோய்க்கூறாக மாறியிருப்பதை நுணுக்கமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இதையும் உருவகக் கதையாகவே கொள்ள முடியும் என்றாலும் வழக்கம் போல் இயல்புவாதச் சித்திரிப்பு கொஞ்சமும் குன்றாமல் கதையில் கூடி வந்திருக்கிறது.

இதன் உச்சமாக, ‘ஆண் மகன்‘ கதையைக் கூறலாம். உண்மையில் ஆண்மை என்று ஆண் கருதுகிற பெருமைக்குரிய ‘கல்யாண குணங்கள்’ எந்தப் புள்ளியில் மையம் கொண்டிருக்கினறன என்பதைத் திரை விலக்கிக் காட்டுகிற கதைதான் இது. சமையல்காரனாக பணக்கார வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருக்கிற ரங்கன் அமைதியானவன். நல்லவன். பிற சமையல்காரர்களைப் போல் முதலாளி வீட்டுப் பெண்களைப் பற்றி நண்பர்களோடு கேலியாகப் பேசாதவன். அவனுடைய முதலாளிக்கு இரு பெண்கள். இவனோ நல்ல வாலிபப் பிராயம் கொண்டவன். சில நாட்களுக்குப் பிறகு இரு ,பெண்களையும் குறித்து ‘பொண்ணா அவளுக’ என்று அவன் குறை சொல்ல ஆரம்பிக்கிறான். பல தருணங்களில் அவன் முகம் அமைதியிழந்து காணப்படுகிறது. அவனுக்குள் ஏதோ தீர்க்க முடியாத பிரச்சினை இருப்பதை வெங்கு உணர்கிறான். ஒருநாள் ரங்கன் வேலையை விட்டும் நின்றுவிடுகிறான். அப்போதுதான் வெங்குவிற்குக் காரணம் புரிகிறது. சமையல்காரனாக இருப்பதால் அந்த இரு பெண்களும் தன்னை ஆணாகவே கருதவில்லை என்பதுதான் ரங்கனின் புகார். வயதானவர்கள் வந்தால் கூட வெட்கப்படும் பெண்கள் தன் முன்னால் சாதாரணமாக இருப்பது அவன் ஆண்மையை அதிர்ச்சியடைய வைக்கிறது‌‌. ‘மற்றவர் கண்ணுக்குப் பேடியாய் தெரிவதை விட பட்டினி கிடப்பதே மேல்’ என்கிறான்.

இந்தக் கதையை மேலோட்டமாகப் படிக்கும் போது இப்படியும் ஒரு ஆளா என்று நமக்குச் சிரிப்பு வரலாம் அல்லது ரங்கனின் மீதே இரக்கம் தோன்றலாம். ஆனால் கதை சொல்ல வந்திருக்கும் விஷயமே வேறு. ஓர் ஆண் எப்போதும் பெண் உடலால் சீண்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். அவனைப் பொருத்தவரை இரண்டே வகையான பெண்ணுடல்கள் மட்டுமே இருக்க முடியும் 1. தான் அடக்கியாளும் பெண் உடல் 2. தன்னைக் கண்டு பயந்து விலகி ஓடும் பெண் உடல். இந்த இரண்டுக்கும் அப்பால் தன்னைப் பொருட்படுத்தாமல் சாதாரணமாக நடமாடும் பெண் உடல் இருக்க முடியாது என்று அவன் பிடிவாதமாக நம்புகிறான். அப்படி நடமாடுவதை ஆண்களை அவமதிக்கும் செயலாகவே உள்ளுக்குள் கருதுகிறான். பணம், புகழ், உடல் வலு, அதிகாரம் நிரம்பிய ஆண்களுக்கு மட்டுமல்ல, எந்த உயர் தகுதிகளும் இல்லாத அப்பாவி ஆணாகிய ரங்கனுக்கும் கூட அதே ஆணாதிக்க எண்ணம்தான். இது ஓர்  அபாயகரமான மனநிலை. ரங்கனின் இந்த வார்த்தைகளோடுதான் கு. அழகிரிசாமி கதையை நிறைவு செய்திருக்கிறார். “நான் ஆண்பிள்ளைதான் என்பதை அவள் புத்தியில் படும்படி காட்டியிருப்பேன். ஆனால் என்னை சிபாரிசு செய்து வேலையில் சேர்த்த உங்களுக்கு கெட்ட பெயர் வரக்கூடாதே என்று பேசாமல் விட்டு விட்டேன்”. இந்த வார்த்தைகளின் செயல்வடிவம்தானே வரலாறெங்கும் பெண்களின் மீதான தீராத துயரங்களாக வந்து ஆக்கிரமிக்கின்றது? சாதாரணமான ஒரு மனநிலை வழியாக அழகிரிசாமி நமக்குக் காட்டுவது ஆணின் காம விகாரத்தாலும் ஆண்மை குறித்த பெருமிதத்தாலும் வெட்டி வைத்த பல நூற்றாண்டுப் பள்ளம். அதை சர்வசாதாரணமாகக் காட்டிச் செல்வதே அவர் கதைகளின் சிறப்பு.

வேசிகள் குறித்து பிற மொழிகளில் அப்போதே நிறைய கதைகள் எழுதப்பட்டிருந்தன. பெரும்பாலான கதைகள் ஆணின் தன்னிரக்கத்திலிருந்து எழுதப்பட்டவை. அந்தக் கதைகளில் ஆண் திடீர் நீதிமானாகி அபலையாகி விட்ட பெண்ணின் சோகக் கதை கேட்டு கண்ணீர் சிந்துவான். பிரிவினையால் வேசிகளாக்கப்பட்ட பல பெண்களின் கதைகளை சாதத் ஹசன் மண்டோ இதே தொனியில் எழுதியிருக்கிறார். ஆனால், அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் வேசிகளின் உலகம் குறித்து நடுத்தர வர்க்க ஆண்மகன் கொள்கிற மிகை கற்பனை சார்ந்த உளவியலைக் கொண்டாடவோ, விமர்சிக்கவோ, பகடி செய்து கடந்துவிடவோ செய்யாமல், உள்ளது உள்ளபடி அப்படியே பதிவுசெய்து, தீர்வு குறித்த எந்த வாதமும் வைக்காமல் பந்தை நம் பக்கம் தள்ளிவிட்டு யோசிக்கச் சொல்கிற அற்புதமான கதை ‘மாறுதல்‘.

இந்தக் கதையை, ஒருவகையில், ‘கவந்தனும் காமனும்’ கதையின் நீட்சி என்றே கொள்ளலாம். சில்லறையை வீசிவிட்டு அந்த ‘அலுவலக எந்திரம்’ உடனே ஓடிப்போகாமல் அவள்மீது கருணை கொண்டு வீட்டிற்குப் போயிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யோசித்தால் இந்தக் கதையை வந்து அடைந்து விடலாம். கதையில் மூன்று நிகழ்வுகள் வருகின்றன.

முதல் நிகழ்வில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிற மத்தியதர வர்க்க ஆசாமியிடம் ஒரு சிறுவன், ‘அக்காவுக்கு உடம்பு சரியில்லை’ என்று கூறி காசு கேட்கிறான். வழக்கமான பிச்சைக்கார உத்தி என்று விலகினாலும் சிறுவன் விடவில்லை. ‘வீட்டுல கூட வந்து பாருங்க சார்’ என்கிறான். ஏதோ ஓர் உந்துதலில் அவனோடு நடந்து போனால் அது வேசைத்தனம் செய்யும் வீடு. அந்த வீட்டிலிருக்கும் பேரிளம்பெண் தன் இள வயது மகளை திண்ணையில் அவனோடு அமர்த்திவிட்டு கதவைச் சாத்திக் கொள்கிறாள். அவன் மனம் கசியும் துயரத்தோடும் கனிவோடும் ‘அம்மா’ என்று விளிக்க, அவள் விம்மி விம்மி அழுகிறாள். சத்தம் கேட்டு பெரியம்மா வெளியில் வந்து விட இவன் ஓடிவந்து விடுகிறான்.

இரண்டாவது காட்சியில் அவனே அவர்களைத் தேடிச் செல்கிறான். ஆனால் கடந்த முறை போல் அந்தப் பெரியம்மா வரவேற்கவோ, கண்ணீர் சிந்தவோ இல்லை. ‘நாங்கள் கௌரவமாக தொழில் செய்து பிழைக்கிறோம். எங்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கி விடாதீர்கள்’ என்று விரட்டி விடுகிறாள்.

இதற்குப் பின் இந்தியாவுக்கு சுதந்திரமெல்லாம் கிடைத்து விடுகிறது. மூன்றாவது காட்சியில் அதே பேருந்து நிறுத்தத்தில் அம்மாவும் மகளும் வேசைக்கான அலங்காரங்களோடு நிற்கிறார்கள். அந்தப் பையன் என்னவானான் என்று கதைசொல்லி யோசிப்பதோடு கதை முடிவடைகிறது.

கதைப்போக்கின் நடுவே முதல் இரண்டு சம்பவங்களையும் அவன் நண்பரோடு விவாதிக்கிறான். நண்பன் யதார்த்தவாதி. அவன் எந்தவிதமான இரக்க பாவனையுமின்றி ‘இதெல்லாம் இயல்புதான்’ என்கிற தொனியோடு கடந்து விடுகிறான். ஆனால், கதைசொல்லியால் இதை இயல்பாகக் கடக்க முடியவில்லை.

கதைசொல்லியின் குற்றவுணர்விற்கான காரணம் சமூகப் பிரக்ஞை மட்டுமல்ல. ஓர் ஆணாக தன்னுடைய பாலியல் மீறல் உணர்வை சரியாகப் புரிந்துவைத்திருப்பதால் வருகிற குற்றவுணர்வாக அதனை அடையாளம் காண முடியும். கதையோட்டத்தில் அந்த நுட்பம் ஒளிந்திருக்கிறது. அந்தச் சிறுவன் பேருந்து நிறுத்தத்தில் இருப்பவர்களிடம், ‘அக்காவுக்கு உடம்பு சரியில்லை’ என்றுதான் காசு கேட்க ஆரம்பிக்கிறான். இதுவொரு நுட்பமான உளவியல் வலை. அந்த வலையில் சிக்கித்தான் அவன் வீட்டை நோக்கி நடக்கிறான். அக்கா என்று சொல்லாமல் அப்பா, அண்ணன், அம்மா என்று சொல்லியிருந்தால் சிறுவனின் அழைப்பு வீடுவரை செல்லத் தூண்டியிருக்காது. தன்னையறியாமல் ஆழ்மனதில் முளைக்கும் திடீர் கோரைப்பல்லே அவன் கால்களை நகரச் செய்திருக்கிறது.

ஒருவேளை, அது வேசியின் வீடாக இல்லாமல் குடும்பப் பெண்ணின் வீடாக இருந்திருந்தால் அவனே வேறுமாதிரி நடந்திருக்கலாம். ‘மாறுதல்’ என்கிற கதைத் தலைப்பை மூன்று விதமான பரிமாணங்களில் அணுகுவதற்கு கதை இடம் தருகிறது. கதை நாயகனுக்குள் ஒளிந்திருக்கும் பாலியல் வேட்கை, குற்றவுணர்ச்சியாக மாறுவதை தலைப்பு குறிப்பதாகப் பொருள் கொள்ள முடியும். தனிமனித பாலியல் உணர்வுக்கும் சமூக மாற்றங்களுக்கும் இடையிலான தொடர்பை அக விசாரணை செய்யும் நுட்பத்தோடு அழகிரிசாமி இக்கதையை எழுதியிருக்கிறார். மூன்றாவது காட்சியில் நாடு விடுதலையாகி விட்ட செய்தியை அழகிரிசாமி வேண்டுமென்றே வலிந்து பேசுகிறார். வீட்டில் இருந்தபடி பயந்து பயந்து தொழில் நடத்திய அவள் இப்போது சுதந்திரமாக நடுவீதிக்கு வந்து விட்டாள். யாருக்கோ சொந்தம் என்று நினைத்தது யார் யாரிடமோ கைமாறி விட்டது. உண்மையில் மனித உயிர் ‘பாலியல் சுதந்திரத்தால் சபிக்கப்பிட்டிருக்கிறது’ என்று விதவிதமாக நாம் பொருள் கொள்ளும் வகையில் குறியீட்டுத்தன்மையுடன் கதையைப் படைத்திருக்கிறார் அழகிரிசாமி.

மனித மனங்களில் அகம் பிரம்மாஸ்மியாக உள்ளுறைந்திருக்கும் காமத்தை அடையாளம் காட்டி, ‘நீதான் அது’ என்று  கூவாமல், ‘இதுவும் நீதான்.. பரவால்ல வாப்பா.. அடுத்து என்னன்னு பார்ப்போம்’ என்று தோளில் கை போட்டு சம்மந்தமே இல்லாமல் வேறொரு விஷயத்தைப் பேசியபடி கடந்து செல்லும் லௌகீக முதிர்ச்சி பெற்ற கிழவனின் கனிவு நிரம்பிய கரங்களாகவே அழகிரிசாமியின் கதைகள் நம் அகம் தொட்டு எழ வைக்கின்றன.

-தொடரும்.