சித்தார்த்தருக்கு உணவை எடுத்து வந்தாள் சுஜாதா. அரசமரத்தடியில் அவர் இளங்காலைப் பொழுதில் எழிலார்ந்து அமர்ந்திருந்தார். அவரின் உடலும் முகமும் சாந்தத்தையும், உவப்பையும், உள்ளச் சமநிலையையும் காட்டின. கம்பீரமும் ஆழமைதியும் கொண்ட அவரை அரச மரத்தடியில் பலமுறை அவள் கண்டிருந்தபோதும் அன்றைய நாள் அவர் வெகுசிறப்புடன் காணப்பட்டார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவளது துயரமும் வருத்தமும் ஒழிந்துபோயின. இளந்தென்றலென மகிழ்ச்சி அவள் இதயத்தை நிறைத்தது. இப்பூமியில் தனக்கு வேறெதுவும் தேவையாயிருக்கவில்லை என்றுணர்ந்தாள். இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் நன்றெனவும் உதவிகரமாக இருப்பதாகவும், எவ்வொருவரும் வருந்தவோ பரிதவிக்கவோ தேவையில்லை எனவும் அறிந்தாள். சில அடிகள் முன்னெடுத்த சுஜாதா, கொண்டுவந்த உணவை அவர்முன் வைத்தாள். சித்தார்த்தரின் சாந்தமும் உவப்பும் அவளூடே படர்வதை உணர்ந்தாள்.
அவளைக் கண்டு முறுவலித்த சித்தார்த்தர், “இங்கே, என்னுடன் வந்தமர். இதுகாறும் எனக்கு உணவும் குடிநீரும் கொணர்ந்தளித்தமைக்கு நன்றி. எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியானது இந்நாள். ஏனெனில், நேற்றிரவு உன்னதப் பாதையை நான் கண்டறிந்தேன். தயவுசெய்து எனது மகிழ்ச்சியில் நீயும் பங்குகொள். வெகுவிரைவில் இப்பாதையைப் பற்றி அனைவருக்கும் நான் கற்றுத்தருவேன்” என்றார்.
ஆச்சரியத்துடன் அவரை நோக்கினாள். “நீங்கள் இங்கிருந்து கிளம்புகிறீர்களா? எங்களை விட்டுப் போகிறீர்களா?”
கனிவுடன் சித்தார்த்தர் புன்னகைத்தார். “ஆமாம், நான் கிளம்பியாக வேண்டும். ஆனால் சிறுவர்களாகிய உங்களையெல்லாம் கைவிட்டுவிட மாட்டேன். நான் கிளம்புமுன் நான் கண்டறிந்த அப்பாதையை உங்களனைவருக்கும் காண்பிப்பேன்.”
அவளால் தேற்றிக்கொள்ள முடியவில்லை. மேலும் எதையோ கேட்பதற்குள் அவர் பேச்சைத் தொடர்ந்தார். “சிறுவர்களாகிய உங்களுடன் குறைந்தபட்சம் மேலும் பல நாட்களைக் கழித்து உங்களிடம் நான் கற்றுக்கொண்டதைப் பகிர்வேன். அதன்பிறகே நான் என் வழி செல்வேன். அதுவும் அப்படி முற்றாக உங்களை விட்டுச் சென்றுவிட மாட்டேன். அவ்வப்போது உங்களை வந்து பார்த்துச் செல்வேன்” என்றார்.
சுஜாதா ஆறுதலடைந்தாள். தரையிலமர்ந்து வாழையிலையில் பொதிந்து வைத்திருந்த சோற்றைப் பிரித்துப் படைத்தாள். உண்ணத் தொடங்கிய சித்தார்த்தரின் அருகில் மௌனம் காத்தாள். சோற்றுருண்டையைப் பிட்டு அதை எள்ளு உப்பில் தொட்டுண்பதைக் கவனித்தாள். அவளின் இதயம் சொல்லொணா மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
உண்டு முடித்ததும், சித்தார்த்தர் அவளை வீடு செல்லும்படி பணித்தார். அன்று மதியம் காட்டில் கிராமத்துச் சிறுவர்களைச் சந்திக்கப் போவதாக அவளிடம் கூறினார்.
நிறைய சிறுவர்களுடன் சுவாஸ்தியின் தங்கைகளும் தம்பியும் அங்கு வந்தனர். சிறுவர்கள் அனைவரும் குளித்து நல்லாடைகளை அணிந்திருந்தனர். சிறுமிகள் எழில்மிகு உடைகளில் வலம் வந்தனர். சுஜாதா தந்தத்தின் நிறத்திலும் நந்தபாலா வாழைத்துளிர் நிறத்திலும் இளஞ்சிவப்பில் பீமாவின் தாவணியும் மிளிர்ந்தன. பூக்களைப் போல சிறுவர்கள் புதிதாய் வனப்புடன் காணப்பட்டனர். அரசமரத்தடியில் அனைவரும் சித்தார்த்தரைச் சுற்றி அமர்ந்தனர்.
ஒரு கூடை நிறைய தேங்காயையும் பனைவெல்லக் கட்டிகளையும் சிறப்பு விருந்தென சுஜாதா கொண்டுவந்திருந்தாள். அனைவரும் தேங்காயுடன் பனைவெல்லத்தைச் சேர்த்து அரசிலையில் வைத்து சுவைத்து மகிழ்ந்தனர். நந்தபாலாவும் சுபாஷும் கூடையில் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டுவந்திருந்தனர். சிறுவர்களுடன் அமர்ந்து களித்த சித்தார்த்தரின் மகிழ்ச்சி பூரணமானது. ரூபக் அரசிலையில் தேங்காச்சில்லையும் பனைவெல்லத்தையும் வைத்து சித்தார்த்தருக்கு அளித்தான். நந்தபாலா அவருக்கொரு ஆரஞ்சு சுளையைத் தந்தாள். அவர்களனைவரின் பரிசுகளைப் பெற்று அவர்களுடன் சேர்ந்து சுவைத்தார்.
எல்லோரும் சுவைத்திருந்த வேளையில் சுஜாதா ஓர் அறிவிப்பைத் தெரிவித்தாள். “அருமை நண்பர்களே, இன்றைய நாள் நமது ஆசிரியருக்கு மேலான மகிழ்ச்சி தந்த நாளாகும். அவர் உன்னதப் பாதையைக் கண்டறிந்துவிட்டார். இந்நாள் எனக்கும் முக்கியமானதெனக் கருதுகிறேன். சகோதர சகோதரிகளே, நாமனைவரும் இந்நாளை பேருவகையும் கொண்டாட்டமுமான நாளாகக் கொள்ளவேண்டும். நம் ஆசிரியரின் உள்ளொளி கண்ட நாளாகக் கொண்டாட இங்கு கூடியிருக்கிறோம். பெருமரியாதைக்குரிய ஆசிரியரே, மாபெரும் பாதையைக் கண்டடைந்து விட்டீர்கள். எங்களுடன் இனி நீங்கள் நீண்டகாலம் இருக்க இயலாது. எங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நீங்கள் கருதுவதை தயவுகூர்ந்து எங்களுக்குக் கற்றுத்தாருங்கள்.”
மனவிழிப்புநிலையுடன், ஆரஞ்சுப் பழக்கூடையை சிறுவர்கள் பரிமாறினர். சுஜாதா கை கூப்பி, தனது மரியாதையையும் அர்ப்பணிப்பையும் சித்தார்த்தருக்குத் தெரிவித்தாள். நந்தபாலாவும் பிற சிறுவர்களும் அவளைப் போலவே தத்தமது உள்ளார்ந்த மரியாதையை வணங்கித் தெரிவித்தனர்.
சைகையில் உட்காருமாறு அச்சிறுவர்களை மௌனமாய் உணர்த்தி சித்தார்த்தர் பேசினார். “நீங்கள் அனைவரும் புத்திசாலியான குழந்தைகள். நான் பகிரப்போகும் சொற்களை உங்களால் புரிந்துகொள்ளவும் பயிலவும் முடியுமென நான் உறுதிகொள்கிறேன். எனினும், அறிவையும் மனதையும் கொண்டு ஊன்றிக் கவனித்தால் எவ்வொருவரும் அதை முழுதாகப் புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் முடியும்.”
“ஆரஞ்சுப் பழமொன்றை நீங்கள் உறிக்கையில் விழிப்புடனோ விழிப்பின்றியோ அதன் சுளையை நீங்கள் சுவைக்கலாம். ஆரஞ்சுப் பழத்தை விழிப்புடன் சுவைப்பதென்றால் என்ன அர்த்தம்? அதன் சுளையை உண்கையில், அச்சுளையை உண்கிறேன் என்கிற விழிப்பைக் கொண்டிருக்கிறீர்கள். அதன் அருமையான மணத்தையும் இனிப்புச் சுவையையும் அனுபவிக்கிறீர்கள். பழத்தை உறிக்கையில், அத்தோலை உறிக்கிறீர்கள் என்பதை அறிகிறீர்கள். அதனொரு சுளையைப் பிரித்து வாய்க்குள் இடுகையில், அதன் தோலை உறித்து சுளையை வாயில் போடுகிறேன் என்றறிகிறீர்கள். அப்பழத்தின் அருமையான மணத்தையும் சுவையையும் அனுபவிக்கையில் அதன் அருமையான மணத்தையும் சுவையையும் அனுபவிக்கிறீர்களென அறிகிறீர்கள். நந்தபாலா எனக்குக் கொடுத்த பழத்தில் ஒன்பது சுளைகள் இருந்தன. அதன் ஒவ்வொரு சுளையையும் விழிப்புடன் உண்கையில் அப்பழம் எத்தனை அரிதானதெனவும் அற்புதமானதெனவும் நான் கண்டறிந்தேன். அவ்வாரஞ்சுப் பழத்தை நான் மறதியாகச் சுவைக்கவில்லை. எனவே அப்பழத்தை மிக யதார்த்தமாக உணர்ந்தேன். அப்பழம் யதார்த்தமென்றால் அதை உண்பவரும் யதார்த்தமே. அதுவே ஆரஞ்சுப் பழத்தை விழிப்புடன் சுவைப்பது என்பதன் அர்த்தம்.
“குழந்தைகளே, ஆரஞ்சுப் பழத்தை விழிப்பற்றுச் சுவைப்பது என்பதன் அர்த்தம் என்ன? அதன் சுளையை உண்கையில், அச்சுளையை உண்கிறேன் என்கிற விழிப்பில்லாமல் உண்பதாகும். அதன் அருமையான மணத்தையும் இனிப்புச் சுவையையும் அனுபவத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதாகும். அப்பழத்தை உறிக்கையில், அத்தோலை உறிக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பதாகும். அதனொரு சுளையைப் பிரித்து வாய்க்குள் போடுகையில், அதன் தோலை உறித்து சுளையை வாயில் போடுகிறேன் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பதாகும். அப்பழத்தின் அருமையான மணத்தையும் சுவையையும் அனுபவிக்கையில் அதன் அருமையான மணத்தையும் சுவையையும் அனுபவிக்கிறேன் என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள் என்பதாகும். அதன் ஒவ்வொரு சுளையையும் உண்கையில் அப்பழம் எத்தனை அரிதானதெனவும் அற்புதமானதெனவும் நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். அவ்வாரஞ்சுப் பழத்தை விழிப்புடன் நீங்கள் சுவைக்கவில்லை என்றால் அப்பழம் யதார்த்தத்தில் இல்லாமல் போகிறது. அப்பழம் யதார்த்தத்தில் இல்லையென்றால் அதை உண்பவரும் யதார்த்தத்தில் இல்லை என்றாகிறது. அதுவே ஆரஞ்சுப் பழத்தை விழிப்பற்று சுவைப்பது என்பதன் அர்த்தம்.
“குழந்தைகளே, ஆரஞ்சுப்பழத்தை விழிப்புடன் சுவைப்பதென்றால் என்ன அர்த்தம்? மனவிழிப்புநிலையுடன் சுவைப்பதென்றால் அப்பழத்தைச் சுவைக்கையில் நீங்கள் அத்துடன் நிஜமான தொடர்பைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களின் மனம் நேற்றைய அல்லது நாளையதைப் பற்றிய சிந்திப்பை விரட்டிச் செல்லாமல் தற்கணத்தில் முழுதாக வாசம் கொண்டிருக்கிறது என்றாகிறது. அவ்வாரஞ்சுப் பழம் இத்தருணத்தில் உண்மையில் இங்கிருக்கிறது. மனவிழிப்புடன் வாழ்வதென்பது தற்கணத்தில் வாழ்வதாகும், மனமும் உடலும் இங்கே இப்பொழுதில் வாசம் கொண்டிருப்பதாகும்.
“மனவிழிப்புநிலையைப் பயிலுகையில் பிறரால் காணவியலாதவற்றை ஒருவரால் காணக்கூடும். விழிப்புடனிருக்கும் ஒருவரால் அப்பழத்தின் மரத்தைக் காணக்கூடும், வசந்தத்தில் அம்மரத்தின் பூக்களை, அப்பழத்திற்கு ஊட்டமேற்றிய சூரிய ஒளியையும் மழையையும் கூட. ஆழ்ந்து நோக்குகையில், அப்பழம் உருவாவதை சாத்தியமாக்கிய ஓராயிரம் காரியங்களைக் காணக்கூடும். ஆரஞ்சுப் பழமொன்றைக் காண்கையில் விழிப்புணர்வைப் பயிலும் ஒருவரால், இப்பிரபஞ்சத்தின் எல்லா அற்புதங்களையும், யாவும் எப்படி ஒன்றோடொன்றென ஊடாடிப்போகின்றன என்பதையும் காணலாம். குழந்தைகளே, நமது அன்றாட வாழ்வு சாதாரண ஆரஞ்சுப் பழத்தைப் போன்றதே. அப்பழம் கொண்டிருக்கும் சுளைகளைப் போன்றே ஒருநாளில் இருபத்தி நான்கு மணிநேரம் உள்ளது. ஒருமணி நேரமென்பது அப்பழத்தின் ஒரு சுளையாகும். ஒருநாளின் இருபத்தி நான்கு மணிநேரம் முழுதுக்கும் வாழ்வதென்பது அப்பழத்தின் அத்தனை சுளைகளையும் உண்பதாகும்.
“நான் கண்டறிந்த பாதையானது, நாளின் ஒவ்வொரு மணிநேரத்தையும் விழிப்புணர்வுடன் வாழ்வதாகும். மனமும் உடலும் தற்கணத்தில் வாசம் செய்திருப்பதாகும். அதற்கு நேரெதிரானது மறதிக்குள் வாழ்வது. நாம் மறதியில் வாழ்ந்தால் நாம் உயிர்த்திருப்பதை அறியாதிருக்கிறோம். இவ்வாழ்வை நாம் முழுமையாக அனுபவத்திற்குட்படுத்துவதில்லை. ஏனென்றால் நமது மனமும் உடலும் தற்கணத்தில் வாசம் செய்வதில்லை.”
கௌதமர், “சுஜாதா” என்று அழைத்தார்.
“ஆம் ஆசிரியரே” என சுஜாதா கைகூப்பினாள்.
“விழிப்புடன் வாழும் ஒருவர் கொஞ்சமாக அல்லது அதிகமாக, எப்படித் தவறிழைக்கிறார் என்று நீ நினைக்கிறாய்?”
“விழிப்புடன் வாழும் ஒருவர் கொஞ்சமாகவே தவறிழைக்கிறார், ஆசிரியரே. தனக்கும் பிறருக்கும் துயரத்தைத் தரக்கூடிய எண்ணங்களையும் சொற்களையும் செயல்களையும் தவிர்க்கும் பொருட்டு, தான் எப்படி நடக்கிறோம், நிற்கிறோம், பேசுகிறோம், சிரிக்கிறோம், வேலை செய்கிறோம் என்பதில் ஒரு பெண் கவனத்தைச் செலுத்தவேண்டும் என்று என் தாய் எப்போதும் கூறுவாள்.”
“அதேதான் சுஜாதா. விழிப்புடன் இருக்கும் ஒருவருக்கு, தான் என்ன நினைக்கிறோம், சொல்கிறோம், செய்கிறோம் என்பது தெரியும். அந்நபரால் தனக்கும் பிறருக்கும் துன்பத்தைத் தரக்கூடிய எண்ணங்களையும், சொற்களையும் செயல்களையும் தவிர்க்க முடியும்.”
“குழந்தைகளே, விழிப்பில் வாழ்வது என்பது தற்கணத்தில் வாழ்வதாகும். தனக்குள்ளும் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது பற்றிய விழிப்பு ஒருவருக்கு இருக்கும். அவர் தனது வாழ்வுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறார். அந்நிலையில் ஒருவர் தொடர்ந்து வாழ்ந்தால் அவர் தனக்குள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஆழ்ந்து புரிந்துகொள்ள இயலும். அப்புரிதல் சகிப்புத்தன்மைக்கும் அன்பிற்கும் இட்டுச் செல்லும். எல்லா உயிர்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டால், அவர்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, அன்பு செலுத்துவார்கள். அப்போது இவ்வுலகில் மிகு துன்பமேதும் இருக்காது. நீ என்ன நினைக்கிறாய் சுவாஸ்தி? புரிந்துகொள்ள முடியாவிட்டால் மக்களால் அன்புகூர முடியுமா?”
“புரிந்துணர்வு இல்லாவிட்டால் அன்பு இல்லாததாகிவிடும், ஆசிரியரே. அப்படித்தான் என் தங்கை பீமாவுக்கு நேர்ந்தது. ஓரிரவில் அவள் ஓயாது அழுதுகொண்டே இருந்தாள். எனது மூத்த தங்கை பொறுமையிழந்து பீமாவை அறைந்தாள். பீமாவோ முன்னைவிட இன்னும் அழுதாள். நான் அவளைத் தூக்கினேன். அவளுக்கு ஜுரமென்று அப்போதுதான் தெரிந்தது. பாலாவை அழைத்து பீமாவின் நெற்றியைத் தொட்டுப் பார்க்கச் சொன்னேன். உடல் கொதிப்பதைக் கண்டு அவள் ஏன் அழுதாள் என்பதை பாலா புரிந்துகொண்டாள். அவளது மனம் இளகியது. உடன் பீமாவைத் தூக்கிக்கொண்டு, ஆறுதலுக்காக ஒரு பாட்டு பாடினாள். ஜுரம் குறையாவிட்டாலும் அப்போது பீமா அமைதியுற்றாள். மரியாதைக்குரிய ஆசிரியரே, அந்த அமைதிக்குக் காரணம் பீமா அழுவதன் காரணத்தை பாலா புரிந்துகொண்டதுதான். எனவே புரிதலின்றி அன்பு சாத்தியப்படாது.”
“சரிதான் சுவாஸ்தி! புரிந்துகொள்ளும்போது தான் அன்பு சாத்தியம். அன்பிருந்தால் மட்டுமே ஏற்புடைமை வரும். விழிப்பில் வாழப் பயிலுங்கள், குழந்தைகளே. அப்போது உங்களால் புரிதலை ஆழங்காண முடியும். அப்போது உங்களையும், பிறரையும், எல்லாவற்றையும் புரிந்துகொள்ள இயலும். நீங்கள் அப்போது அன்பின் இதயங்களைக் கொண்டிருப்பீர்கள். அதுவே நான் கண்டறிந்த அற்புதமான பாதை.”
சுவாஸ்தி கை கூப்பினான். “மரியாதைக்குரிய ஆசிரியரே, அப்பாதையை நாங்கள் ‘விழிப்புணர்வின் பாதை’ என்றழைக்கலாமா?”
புன்னகைத்த சித்தார்த்தர், “ஆம். அதை விழிப்புணர்வின் பாதை என்றழைக்கலாம். அது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. விழிப்புணர்வின் பாதை பூரண விழிப்படைவிற்கு வழிவகுக்கிறது.”
தான் பேசலாமா என்றவாறு சுஜாதா கை உயர்த்தினாள். “நீங்களே விழிப்படைந்தவர். நீங்கள்தான் விழிப்புடன் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருபவர். உங்களை ‘விழிப்படைந்தவர்’ என அழைக்கலாமா?”
சித்தார்த்தர் தலையசைத்தார். “அது எனக்குப் பெரிதும் உவப்பூட்டும்.”
சுஜாதாவின் கண்கள் ஒளிர்ந்தன. அவள் தொடர்ந்தாள், “விழிப்படைவு என்பது மகதி மொழியில் ‘புத்’ என உச்சரிக்கப்படுகிறது. விழிப்படைந்த ஒருவரை மகதியில் ‘புத்தன்’ என்று கூறலாம். எனவே உங்களை நாங்கள் ‘புத்தர்’ என்றழைக்கிறோம்.”
அவர் தலையசைத்தார். எல்லாச் சிறுவர்களும் குதூகலித்தனர்.
இருப்பதிலேயே பெரிய பதினான்கு வயது நலகா பேசினான், “அன்பிற்குரிய புத்தரே, விழிப்புணர்வின் பாதையைப் பற்றிய உங்களின் போதனையைப் பெற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கடந்த ஆறுமாத காலமாக இந்த அரசமரத்தினடியில் அமர்ந்து நீங்கள் தியானித்ததைப் பற்றி சுஜாதா கூறியிருக்கிறாள். கடந்த இரவில் நீங்கள் ஞானமடைந்ததைப் பற்றியும் கூறினாள். வனமெங்கிலும் இவ்வரச மரமே பேரழகு மிக்கது. இந்த மரத்தை ‘விழிப்படைவின் மரம்’ என்றும் ‘போதி மரம்’ என்றும் அழைக்கலாமா? ‘போதி’ எனும் சொல் ‘புத்தன்’ எனும் வேர்ச்சொல்லைப் பகிர்ந்துகொள்கிறது. அது விழிப்படைவு என்றும் அர்த்தப்படும்”.
சித்தார்த்தர் இசைந்தார். பெரிதும் மகிழ்ந்தார். அச்சிறுவர்களின் ஒன்றுகூடலின்போது தான் கண்ட பாதைக்கும், தனக்கும், அந்த பேரரச மரத்திற்கும் சிறப்புப் பெயர்கள் தரப்படும் என்று சற்றும் அனுமானிக்கவில்லை. நந்தபாலா கை கூப்பினான். “இருட்டிக்கொண்டு வருகிறது. நாங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். விரைவில் உங்களின் போதனையை மேலும் பெற்றுக்கொள்ள வருவோம்.”
தாமரை மொக்கெனத் தம் உள்ளங்கைகளைக் குவித்து அச்சிறுவர்கள் அனைவரும் எழுந்து நின்று புத்தருக்கு நன்றி கூறினர். மகிழ்ச்சியில் திளைக்கும் பறவைகளென அச்சிறுவர்கள் சலசலவெனப் பேசியபடி வீடு சென்றனர். புத்தரும் மகிழ்வுற்றார். விழிப்பிற்கான விதைகளை ஊன்றும் சீரிய முறைகளைக் கண்டறியவும், ஞானமடைந்த பிறகு பெற்ற பேரமைதியையும் பேருவகையையும் அனுபவிப்பதற்கான சிறப்பு நேரத்தைத் தனக்கும்கூட அனுமதிக்கவும் வேண்டி காட்டிற்குள் இன்னும் நீண்டகாலம் தங்கியிருக்க முடிவு செய்தார்.
*
தினமும் புத்தர் நிரஞ்சரா நதியில் நீராடினார். கரையோரம் நடைத்தியானம் பழகினார். அவரின் பாதங்கள் காட்டு வழிகளில் ஒற்றையடித் தடங்களை உருவாக்கிப் போயின. ஓடிச்சரியும் நதிக்கரையிலும் கிளைகளினூடே பாடித் திரியும் நூற்றுக்கணக்கான பறவைகள் கொண்ட அரச மரத்தினடியிலும் அமர்ந்து தியானித்தார். அவர் தனது இலட்சியத்தை நிறைவேற்றியவர். தான் கபிலவத்துவிற்குப் போக வேண்டும் என்று தெரியும். ஏராளமானோர் அவர் அடைந்த ஞானம் சார்ந்த செய்திக்காக அங்கே காத்திருக்கின்றனர். அதைப்பற்றி எல்லாம் எண்ணிப்பார்த்தார். ராஜகிருக நகரின் அரசர் பிம்பிசாரர். அவ்விளம் அரசரிடம் அவர் ஒரு சிறப்பு ஒட்டுதலை உணர்ந்தார். அவரையும் போய் சந்திக்க நினைத்தார். அந்த ஐந்து முந்தைய நண்பர்களையும்தான். அவர்கள் ஒவ்வொருவரும் துரிதத்தில் ஞானமடையும் திறன் கொண்டவர்களாய் இருந்தனர் என்பது அவருக்குத் தெரியும். அவர்களைக் காண விரும்பினார். அவர்கள் அண்மையில் இருப்பதில் சந்தேகமேதுமில்லை.
நதி, வானம், நிலவு, விண்மீன்கள், கானகம், புல்லின் ஒவ்வொரு மடல், ஏன், ஒவ்வொரு எள் முனைத் துகள் என யாவும் புத்தனுக்கென மறுரூபமடைந்தன. நீண்டகாலத் திரிதலும் தேடலும் வீணாகிப் போகவில்லை என்பதை உணர்ந்தார். நன்றிகூறத்தக்க அவரது பரிசோதனை முயற்சிகளையும் இன்னல்களையும் தாண்டி இறுதியில் தன் இதயத்திற்குள்ளேயே ஞானப் பாதையைக் கண்டறிந்தார்.
ஒவ்வொரு உயிரும் உள்ளொளிக்கான இதயத்தைத் தன்னுள் கொண்டுள்ளது. உள்ளொளிக்கான விதைகள் ஒவ்வொருக்குள்ளும் பொதிந்துள்ளன. உள்ளொளியை தனக்கு வெளியே உயிர்கள் தேடத் தேவையில்லை. ஏனெனில் பிரபஞ்சத்தின் அனைத்து ஞானமும் பலமும் அவற்றுக்குள் ஏற்கெனவே திகழ்ந்திருக்கின்றன. இதுவே புத்தரின் மாபெரும் கண்டடைவும் பேருவகைக்கான காரணமும்.
சிறுவர்கள் அடிக்கடி அவரைச் சந்திக்க வந்தனர். விடுதலைக்கான பாதையை எளிமையாகவும் இயல்பாகவும் வெளிக்காட்ட முடியும் என்பதில் புத்தர் மகிழ்வுற்றார். பள்ளிக்குச் செல்ல முடியாத வறிய கிராமத்துச் சிறுவர்களும் கூட அவரின் போதனையைப் புரிந்துகொள்ள முடிந்ததில் அவர் உற்சாகமடைந்தார்.
ஒருநாள் சிறுவர்கள் ஒரு கூடை ஆரஞ்சுப் பழத்துடன் அங்கு வந்தனர். புத்தர் அவர்களுக்கு முதல் பாடமாகக் கற்றுத்தந்த விழிப்புடன் அப்பழங்களைச் சுவைப்பதைப் பழக விரும்பினர். நயமுடன் சுஜாதா அவரின் முன் வணங்கி பழக்கூடையை அவரிடம் நீட்டினாள். கமலமென கைகூப்பி வணங்கி, ஒரு பழத்தை எடுத்துக்கொண்டார். பிறகு புத்தரின் அருகே அமர்ந்திருந்த சுவாஸ்தியிடம் நீட்டினாள். அவனும் வணங்கி, பின் ஒரு பழத்தை எடுத்துக்கொண்டான். பிறகு அங்குள்ள ஒவ்வொரு சிறுவரிடமும் பழத்தைக் கொடுத்தாள். கடைசியில் தானும் அமர்ந்து தனக்கான ஒரு பழத்தை எடுத்துக்கொண்டாள். எல்லோரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர். புத்தர் அவர்களைத் தத்தமது மூச்சைப் பின்தொடர்ந்தபடி புன்னகைக்கக் கூறினார். பின்னர், தனது இடக்கையில் பழத்தை எடுத்து உயர்த்தி அதை ஆழ்ந்து நோக்கினார். சிறுவர்கள் அவரைத் தொடர்ந்தனர். அவர் மெதுவாக பழத்தோலை உரித்தார். அவர்களும் உரித்தனர். ஆசிரியரும் மாணவர்களும் மௌன விழிப்பில் தத்தமது ஆரஞ்சுப் பழத்தில் திளைத்தனர். எல்லோரும் சுவைத்து முடித்ததும், பாலா எல்லாத் தோலையும் சேகரித்தாள். புத்தருடன் சேர்ந்து ஆரஞ்சுப் பழங்களை மனவிழிப்புடன் மேலாகச் சுவைத்து மகிழ்ந்ததில் திருப்தியுற்றனர். சிறுவர்களுடன் தனது பயிற்சியைப் பகிர்ந்துகொண்டதில் புத்தரும் பேருவகை அடைந்தார்.
மதிய வேளைகளில் சிறுவர்கள் புத்தரைச் சந்தித்துச் சென்றனர். கோபத்தையோ சோகத்தையோ உணர்கையில் அசைவற்று அமர்ந்து, மனதை அமைதிப்படுத்த வேண்டி அவர்களின் மூச்சை எப்படிப் பின்பற்றுவது என்று புத்தர் சொல்லிக்கொடுத்தார். மனதையும் உடலையும் புத்துயிர்ப்பு ஊட்ட நடைத்தியானத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். பிறரையும் தமது சொந்தச் செயல்களையும் ஊன்றிப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் அன்புகூரவும் கற்றுக்கொடுத்தார்.
நந்தபாலாவும் சுஜாதாவும் தமது முழுநாளையும் செலவழித்து புத்தருக்கு அங்கி ஒன்றைத் தைத்து வைத்தனர். புத்தர் ஏற்கெனவே அணிந்திருக்கும் செங்கல் வண்ணத்தில் அப்புதிய அங்கி இருந்தது. ஆனால், சமீபத்தில் விஷ ஜுரத்தால் இறந்துபோன சுஜாதாவின் வீட்டுப் பணிப்பெண் ராதாவின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துப்போகையில் போர்த்தப்பட்ட துணியைத்தான் புத்தர் அணிவார் என்பதை அறிந்த சுஜாதா மிகவும் துக்கித்துப்போனாள்.
தாம் தைத்திருந்த புதிய அங்கியைத் தரும்பொருட்டு புத்தரைக் காண வந்தபோது அவர் போதி மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவர் தியானத்தை முடிக்கும்வரை அமைதியாகக் காத்திருந்தாள். அப்புதிய அங்கியை அவர்கள் காணிக்கையாகத் தந்ததும் புத்தர் மிகவும் மகிழ்ந்தார்.
“எனக்கு இந்த அங்கிக்கான தேவையிருக்கிறது” என்றார். துவைக்கும்போது மாற்று உடுப்பு தேவையென்பதால் பழைய அங்கியையும் தான் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். நந்தபாலாவும் சுஜாதாவும் இன்னுமொரு புதிய அங்கியைத் தைக்க ரகசியத் திட்டமிட்டனர்.
ஒருநாள், சுஜாதாவின் பன்னிரண்டு வயதுத் தோழியான பாலகுப்தாவிடம் நட்புபற்றி பேசுமாறு புத்தரிடம் கேட்டுக்கொண்டாள். முந்தைய நாள்தான் அவளது உற்ற தோழியான ஜடிலிகாவுடன் வாய்ச்சண்டை முற்றியது. அன்றுகூட புத்தரைக் காண வரும்வழியில் ஜடிலிகாவின் வீட்டைத் தாண்டும்போது அவளுக்காக நிற்காமல் வந்துவிட எத்தனித்து, சுஜாதா கேட்டுக்கொண்டதன் பேரில் நின்றாள். ஜடிலிகாவும்கூட சுஜாதா இருந்ததால்தான் அவர்களுடன் இணைந்துகொண்டாள். போதிமரத்தை அடைந்தபிறகு ஜடிலிகாவும் சுஜாதாவும் தள்ளிப்போய் தூரமாய் அமர்ந்துகொண்டனர்.
புத்தர் சிறுவர்களுக்கு நட்பைப் பகிர்ந்துகொண்ட ஒரு மான், ஒரு பறவை, ஒரு ஆமையைப் பற்றி கூறினார். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தானொரு மானாக முற்பிறவியில் வாழ்ந்தபோது நடந்த நிகழ்வு. சிறுவர்கள் அதைக் கேட்டு வியந்துபோயினர். புத்தர் விளக்கமளித்தார். “முற்பிறவிகளில், பூமியாகவும், கற்களாகவும், பனி, காற்று, நீர், நெருப்பாக நாம் இருந்துள்ளோம். பாசி, புல், மரம், பூச்சி, மீன், ஆமை, பறவை, பாலூட்டிகளாகவும் வாழ்ந்துள்ளோம். இதை எனது தியானத்தின்போது உற்றறிந்துள்ளேன். எனவே, ஒரு பிறவியில் நான் மானாக இருந்தேன். அது ஒரு சாதாரண காரியம்தான். ஒரு பிறவியில் மலைச் சிகரமொன்றில் கரடுமுரடானதொரு பாறையாகவும் இன்னொரு பிறவியில் ஒரு சம்பங்கி மரமாகவும் நானிருந்தது எனக்கு இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. உங்களுக்கும் அதுபோலத்தான். நான் சொல்லப்போகும் கதை ஒரு மான், பறவை, ஆமை, கூடவே ஒரு வேடனையும் பற்றியது.
“பூமியில் மனிதர்களோ, ஏன் பறவைகளோ பாலூட்டிகளோகூட இல்லாத காலத்தில் நாமனைவரும் உயிர்த்திருந்தோம். கடலுக்கடியில் தாவர இனங்களும், பூமிப்பரப்பில் மரங்களும் மட்டுமே அப்போதிருந்தன. அப்படியானதொரு காலகட்டத்தில் நாம் கற்களாகவும் பனியாகவும் தாவரங்களாகவும் இருந்தோம். அதன்பிறகு பறவைகளாகவும், அனைத்து விலங்கினங்களாகவும், இறுதியில் மனிதர்களாகவும் வாழ்ந்திருந்தோம். தற்போது நாம் மனிதர்களிலும் ஒருபடி மேலாக இருக்கிறோம். நாம் நெற்பயிராகவும், ஆரஞ்சுப் பழமாகவும், நதிகளாகவும், காற்றாகவும் இருக்கிறோம். ஏனெனில் அவையின்றி நாம் இருக்க முடியாது. சிறுவர்களாகிய நீங்கள் நெற்பயிர்களையும் தேங்காய்களையும், ஆரஞ்சுகளையும் நீரையும் காண்கையில், இப்பிறவியில் நீங்கள் உயிர்வாழ அவையனைத்தையும் சார்ந்தே இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிற அனைத்தும் நம்முடைய ஒரு பகுதிதான். அவ்வாறு உங்களால் பார்க்க முடிந்தால் உண்மையான புரிதலையும் அன்பையும் அனுபவப்படுவீர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதை நிகழ்ந்திருந்தாலும், இக்கணத்திலும்கூட அது சுலபமாக நிகழலாம். கவனமாக கதையைக் கேட்டு, இக்கதையிலுள்ள விலங்குகளுக்கும் உங்களுக்கும் பொதுவான ஏதோவொன்று இருக்கிறதா என்று பாருங்கள்.”
தனது கதையை இப்போது சொல்லத் தொடங்கினார். அப்போது புத்தர் காடொன்றில் மானாக வாழ்ந்தார். அங்கொரு தெளிந்த ஏரி இருந்தது. அம்மான் எப்போதும் அதில் நீரருந்த விரும்பியது. ஆமையொன்றும் அந்த ஏரியில் வாழ்ந்து வந்தது. ஏரியின் அருகிலுள்ள இச்சி மரத்தில் கரிச்சான் குருவியொன்றும் இருந்தது. மூவரும் உற்ற நண்பர்களாகினர். ஒருநாள் வேடனொருவன், மானின் அன்றைய வழித்தடம் பற்றி ஏரிக்கரைக்கு வந்துவிட்டான். திடக்கயிறு கொண்டு வேயப்பட்டதொரு கண்ணியை அங்கே பதித்துவிட்டு காட்டிற்கு அப்பாலுள்ள தனது குடிசைக்குத் திரும்பினான்.
அந்நாளின் பிற்பகுதியில் ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த மான் அக்கண்ணியில் அகப்பட்டது. அது ஓலமிட்டதை ஆமையும் கரிச்சான் குருவியும் கேட்டன. ஏரியிலிருந்து ஆமை உடன் வெளிவந்தது. அதேபோல குருவியும் தன் கூட்டிலிருந்து பறந்து வந்தது. அவையிரண்டும் தனது நண்பனைக் காப்பாற்றி உதவ என்ன செய்யலாமென ஆலோசித்தன. “ஆமை அக்கா, உனது தாடை மிகவும் வலியது. உறுதி மிக்கது. அதைக்கொண்டு, இக்கயிறாலான வலையைக் கடித்து பிரித்துப் போடு. அதற்குள் நான் பறந்துபோய் அவ்வேடன் இங்கே வராதபடிக்கு திசைதிருப்புகிறேன்” என்ற குருவி பதற்றத்துடன் பறந்து சென்றது.
ஆமை வலையின் கயிறிழைகளை மெல்ல கடித்துப் போடத் தொடங்கியது. வேடனின் குடிசைக்கருகில் சென்ற கரிச்சான் குருவி, இரவு முழுக்க அக்குடிசையின் வாசலில் இருந்த மாமரத்தில் வேடன் வெளிவரக் காத்திருந்தது. பொழுது புலர்ந்ததும் கையிலொரு கத்தியை ஏந்தி வேடன் வெளிவந்தான். அவனைக் கண்டதும், கரிச்சான் குருவி தனது முழு பலத்தையும் தேற்றி, அவ்வேடனின் முகத்தைப் பறந்துசென்று தாக்கியது. அதைச் சற்றும் எதிர்பார்க்காத வேடன், கலங்கிப்போய் மீண்டும் குடிசைக்குள் ஓடிப்போனான். தனது படுக்கையில் சரிந்து சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். பின்னர் தெளிந்தெழுந்து, சற்றே நிதானித்து, திட்டத்தை மாற்றி, குடிசையின் பின்வாசல் வழியே கையில் கத்தியுடன் வெளியேறினான். ஆனால் அதை எதிர்பார்த்த கரிச்சான் குருவி அங்கிருந்த பலா மரக்கிளையில் புத்தியுடன் அவனுக்காகக் காத்திருந்தது. அவன் வெளிவந்தவுடன் இன்னும் பலமாக அவன் முகத்தைக் கொத்தித் தாக்கியது. இருமுறை அடிபட்ட வேடன் என்ன நடக்கிறதென்று புரியாமல் மலங்கி குடிசைக்குள் ஒடினான். அதுவொரு மோசமான நாள் என்றெண்ணி குடிசைக்குள்ளேயே தங்கி மறுநாள் வெளிச் செல்லலாமெனத் தீர்மானித்தான்.
அடுத்தநாள் பொழுதோடு எழுந்து, மீண்டும் கத்தியை எடுத்துக்கொண்டான். எச்சரிக்கையாக முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு வெளி வந்தான். இந்தமுறை அவ்வேடனைத் தடுக்க இயலாதெனக் கணித்த குருவி தனது நண்பர்களை எச்சரிப்பதற்காக காட்டிற்குள் அவசரமாகப் பறந்தோடியது.
“வேடன் வந்துகொண்டிருக்கிறான்!” என்று கத்தியது. வலையின் கடைசி இழையைக் கடித்துக் கொண்டிருந்தது ஆமை. ஆனால், அக்கடைசியிழை இரும்பிழையாய் கடிக்கக் கடினமாயிருந்தது. ஈரிரவும் ஒரு நாளுமாய் தொடர்ந்து வலையைக் கடித்ததில் ஆமையின் வாய் புண்ணாகி ரத்தம் கசிந்தது. எனினும் வலையைக் கடிப்பதை நிறுத்தவில்லை. அக்கணத்தில் வேடன் அங்கு வந்தான். பதறிப்போன மான், பயத்தில் எட்டி உதைக்க அக்கடைசி இழையும் அறுந்து மான் விடுபட்டது. அது வேகமாய் காட்டிற்குள் ஓடியது. இச்சி மரத்திலேறப் பறந்துபோயிற்று கரிச்சான் குருவி. எனினும், ஆமையோ தொடர்ந்த வலையறுப்பின் அயர்வால் பலமற்றுச் சரிந்தது. தப்பிப்போன மானால் வெகுண்ட வேடன், தனது தோல்பையில் ஆமையை எடுத்துப் போட்டான். பிறகு அப்பையை அங்கிருந்த இச்சி மரக்கிளையில் மாட்டித் தொங்கவிட்டபின், அம்மானைத் தேடிப் போனான்.
அண்மைப் புதரில் தன்னை மறைத்துக்கொண்டு ஆமைக்கு ஏற்பட்ட துயரத்தைக் கண்டு மான் வருந்தியது. “என் உயிரைக் காப்பாற்ற என் நண்பர்கள் தன்னுயிரைப் பணயம் வைத்தனர். இப்போது அவர்களை நானும் என்னுயிரைக் கொடுத்து காப்பாற்ற வேண்டும்” என்றெண்ணியது. அதற்கென, வேடன் கண்ணில் படும்படி வெளிவந்த மான், தான் அயர்வுற்றதுபோல தள்ளாடி நடித்தது. பின்னர் திரும்பி வழியோரம் வலிமையற்றுப் போனதாய் நடந்தது.
“அம்மானின் உடலில் கிஞ்சித்தும் வலிமை இல்லை. அதைப் பிடித்து என் கத்தியால் கொன்றுவிடுவேன்” என்றெண்ணினான் வேடன்.
எனவே மானைப் பின்தொடர்ந்து காட்டிற்குள் வெகுதூரம் சென்றான். அவ்வேடனிடம் பிடிபடாத தூரத்தில் அம்மான் நகர்ந்தது. ஏரியிலிருந்து போதிய தூரம் தொலைவாகச் சென்றதும், மான் சட்டென்று ஓட்டம் பிடித்து வேடனின் கண்ணுக்கு முற்றிலுமாய் மறைந்துபோனது. தன் குளம்புப் பதிவுகளை அழித்தபடி, ஏரிக்குத் திரும்பியது. தன் கொம்பால் மரத்தில் தொங்கிய தோல்பையைத் தூக்கி எடுத்தது. ஆமை பையிலிருந்து வெளிவந்தது. கரிச்சான் குருவியும் அவர்களுடன் இணைந்துகொண்டது.
“நீங்கள் இருவரும் வேடன் கையில் உறுதியாகிப் போன என் சாவிலிருந்து என்னை மீட்டெடுத்தீர்கள். வெகு விரைவில் அவ்வேடன் இங்கு வருவான் என அஞ்சுகிறேன். கரிச்சானே, நீ இக்காட்டிற்குள் பாதுகாப்பான ஓரிடத்திற்குப் பறந்துவிடு. ஆமை அக்கா, நீ ஏரிக்குள் மூழ்கி உன்னை மறைத்துக்கொள். நான் காட்டிற்குள் திரும்ப ஓடி விடுகிறேன்” என்றது மான்.
ஏரிக்கரைக்கு வேடன் திரும்ப வந்ததும், தனது தோல்பை காலியாக தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டான். மிகுந்த கோபத்துடன் அப்பையை எடுத்துக்கொண்டு, கையில் கத்தியுடன் விருட்டென்று குடிசை நோக்கி விரைந்தான்.
சிறுவர்கள் ஆர்வம் மீதுற புத்தரின் கதையைக் கேட்டனர். தனது நண்பனைக் காப்பாற்ற அந்த ஆமை தன் வாயைப் புண்ணாக்கி ரத்தம் கசிய வலையை அறுத்தது என்பதைக் கேட்டபோது ரூபக்கும் சுபாஷும் கண்கலங்கினர். புத்தர் சிறுவர்களிடம் கேட்டார், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சிறுவர்களே? வெகு காலமுன்பு நான் மானாக இருந்தேன். உங்களில் யாரெனும் ஆமையாக இருந்தீர்களா?”
சிறுவர்களில் நால்வர் கைகளை உயர்த்தினர், சுஜாதாவும் கூட. பின்னர் புத்தர் கேட்டார், “உங்களில் யார் கரிச்சான் குருவி?” ஜடிலிகா, பாலகுப்தாவுடன் சுவாஸ்தியும் கைகளை உயர்த்தினர். சுஜாதா ஜடிலிகாவையும் பிறகு பாலகுப்தாவையும் கண்ணுற்றாள். “நீங்கள் இருவரும் கரிச்சான் குருவி என்றால், நீங்கள் இருவரும் ஒரே நபராகின்றீர்கள். அப்படியென்றால், ஒரு கரிச்சான் குருவி இன்னொன்றிடம் கோபம் கொள்வதால் என்ன பயன்? நம்மனைவரின் நட்பும் அந்தக் குருவி, ஆமை, மான் ஆகியற்றின் நட்புக்கு இணையானது அல்லவா?”
பாலகுப்தா எழுந்து ஜடிலிகாவை நெருங்கினாள். தன்னிரு கைகளால் தன் தோழியின் கரத்தைப் பற்றி எடுத்தாள். ஜடிலிகா பாலகுப்தாவைத் தன்னிரு கரங்களால் இழுத்து, பக்கவாட்டில் நகர்ந்து அவள் தன்னருகில் அமர இடமளித்தாள்.
புத்தர் முறுவலித்தார். “சிறுவர்களாகிய நீங்கள் கதையை மிகச் சரியாகப் புரிந்துகொண்டீர்கள். நான் கூறிய இதுபோன்ற கதைகள் நமது அன்றாட வாழ்க்கையில் எல்லா வேளைகளிலும் நிகழ்ந்தபடிதான் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”
*
பழைய பாதை வெண் மேகங்கள் – திக் நாட் ஹஞ், தமிழில்: வி.அமலன் ஸ்டேன்லி, தமிழினி வெளியீடு.