Editor’s Picks

1 comment

நித்யவெளியில் துயருறும் ஆன்மா- ஃபௌஸ்ட் தொன்மம்

I

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கைவசமாயிருக்கும் விருப்புகளையும் வெறுப்புகளையும் வகையறுக்கும் விதத்திலேயே தொன்மக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. அதனாலேயே அவற்றிற்கு வயதாவதில்லை. அவை காலத்தால் பழையதாகி தாழக்குதியிடுவதில்லை. என்றும் புதியவை போலிருக்கின்றன. எல்லாக் காலத்திற்கும் பொருந்திப் போகின்றன. எல்லோருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிப்பதைப் போன்று உயிரோடிருக்கின்ற அனைவருக்கும் ஆகாயத்தைக் காட்டுகின்றன. அதில் கடந்துசெல்கிற பறவையின் செய்தியை எல்லோரிடமும் பாகுபாடின்றிக் கொண்டு சேர்க்கின்றன. நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்குமான பிரயாசைகளை நித்யகாலமாக அறியச் செய்கின்றன. நீதிக்கும் அக்கிரமத்துக்கும் இடையேயான சமரில் எழும் பலிபீடங்களை உற்று நோக்குகின்றன. மழுங்கி மறைந்திருக்கும் பொய் வேடங்களில் இடறுவதே அவற்றின் நோக்கமாய் இருக்கின்றது. ஏனெனில் மனித மனங்கள் பைத்தியம் கொண்டிருக்கின்றன. அவர்கள் செத்துப் போனவர்களிடம் சேர்கிறவரை தத்தம் மதிகேட்டின் மிகுதியினால் அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்வார்கள். காரிருளில் பிரகாசத்தைத் தேடி அலைவுறுவார்கள். வெளிச்சப் பொட்டில் மையிடுவார்கள்.

அத்தகைய மனங்கள் இருக்கின்ற வரை சில தொன்மங்களுக்கு அழிவே இல்லை. அவை மீண்டும் மீண்டும் புத்துருவாக்கம் செய்யப்படும். காலத்தின் தேவைக்கேற்ப வளைந்துகொடுத்து தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும். கலையின் நவீனப் போக்குகளுக்கு ஒப்புக்கொடுத்து புதிய பரிமாணங்களைப் பெறும். ஜெர்மனியில் தோன்றி உலகெங்கும் பாதிப்பைச் செலுத்திய ‘ஃபௌஸ்ட்’ (Faust) தொன்மமானது அத்தகைய சமகால முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு வகையான கலைஞர்களை இன்றைக்கும் தன்பால் ஈர்த்துக்கொண்டிருப்பதால் அழிவற்றது. நிகரில்லாதது. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் மருத்துவர் ஃபௌஸ்ட்டின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. மருத்துவனாகவும் உடற்கூராய்வாளனாகவும் இரசவாதியாகவும் மந்திரவாதியாகவும் அல்லலுற்று அலைந்த பல்கலை வித்தகன். அந்தத் தொன்மத்தை எடுத்தாண்டு எழுதப்பட்டிருக்கும் சில புனைவுகளையும் எடுக்கப்பட்டிருக்கும் சில திரைப்படங்களையும் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன் அவனது கதையைச் சுருக்கமாக எழுதிவிடுகிறேன்.

தற்சமயம் கிழவனாகிவிட்ட ஃபௌஸ்ட்டை மயக்கி அவனைத் தீங்கிழைக்கச் செய்ய முடியும் என்று கடவுளிடம் சாத்தான் சவால் விடுகிறான். ஃபௌஸ்ட்டோ, இன்னமும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எத்தனையோ இருக்க, வாழ்க்கை தீர்ந்துகொண்டிருக்கிறதே எனும் கவலையில் முடங்கிக்கிடப்பவன். நிராசைகள் சூழ்ந்து நிர்க்கதியும் வெறுமையும் ஆட்டுவிக்கிற காலம். மேலும், அவன் இப்போது தனிமையில் இருக்கிறான். பிணங்களுக்கும் புத்தகங்களுக்கும் நடுவே அவனது அறிவின் மறுப்புகளும் யதார்த்தத்தின் முரண்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. மௌனம் உண்டாக்குகிற கசப்பை விழுங்கிச் செரிக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் எரிகிற நெருப்பை ஒருகணமும் ஆற்றுப்படுத்த இயலவில்லை. சகலமும் பறிபோய்க்கொண்டிருக்கிறதே என சர்வகாலமும் மனம் அடித்துக்கொள்கிறது. அவன் நல்லவன்தான். ஆனால், அவனது ஆன்ம பலத்தின் ஒளி குன்றிக்கொண்டிருக்கிறது. சரிகளுக்கும் தவறுகளுக்குமான இடைவெளி குறுகிக்கொண்டிருக்கிறது.

பலமுள்ளவற்றின் உறுதி குலையும்போது அவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் விபரீதமானவை. மலைப்பாறை உருண்டு வீழ்கையில் மலர்க்கொத்துகளின் நசிவைப் பற்றி யாருக்குமே அக்கறை இருக்க முடியாதே! எதையாவது கண்டெடுத்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஃபௌஸ்ட் வந்துவிட்டான். தர்க்கங்களின் மேலிருந்த அவனது ஆர்வம் வடிந்துவிட்டது. தீர்வுகள் நாசமாகப் போகட்டும். தான் நிலையழிந்து கொண்டிருக்கையில் உலகம் எக்கேடு கெட்டால்தான் என்ன? அவன் வேண்டுவது ஓர் அற்புதம். அவனது ஆசைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு. அப்போதுதான் அவனிடத்து சாத்தான் வந்து சேர்கிறான். அவனுடைய இளமையைத் திருப்பி அளிக்கிறான். உலகியல் இன்பங்களைக் கைக்காட்டுகிறான். அவற்றிற்கு ஈடாக, ஃபௌஸ்ட்டின் ஆன்மாவைக் கேட்கிறான்.

ஃபௌஸ்ட் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயற்றப்பட்டிருக்கும் படைப்புகளின் வரிசையை எடுத்துப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. நாடகம், கவிதை, செவ்வியல் இசை, ஓவியம், புனைவு என அனைத்து வகையான வெளிப்பாட்டு முறைமைகளிலும் காலங்காலமாக ஃபௌஸ்ட்டின் ஆதிக்கம் தொடர்ந்தவண்ணம் இருந்திருக்கிறது. வாக்னரும் (Faust Overture) பீத்தோவனும் (Aus Goethes Faust) ஃபௌஸ்ட்டுக்குப் பண் அமைத்திருக்கிறார்கள். பைரனும் (Manfred) கெரொல் ஆன் டஃப்பியும் (Mrs.Faust) கவிதை எழுதியிருக்கிறார்கள். A Scene from Faust என்ற பெயரில் அலெக்ஸ்சாண்டர் புஷ்கினின் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவான் துர்கனேவ் (Faust), மிக்கேல் புல்ககோவ் (The Master and Margarita), க்ளாஸ் மன் (Mephisto), தாமஸ் மன் (Doktor Faustus), ஆஸ்கர் வைல்ட் (The Picture of Dorian Gray), ஹாருகி முரகாமி (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) என நாம் மதிக்கும் நவீனப் படைப்பாளிகள் பலரும் ஃபௌஸ்ட்டினால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

The Strange case of Dr.Jekyll and Mr.Hyde போன்ற ஆக்கங்கள் பலவும் ஃபௌஸ்ட்டையும் சாத்தானையும் பிரதியெடுத்தும் முன்மாதிரியாகக் கொண்டும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டவையே. திரைப்படங்கள் எடுக்க ஆரம்பிக்கப்பட்ட தொடக்க காலத்திலேயே ஃபௌஸ்ட் படம் வந்துவிட்டது (F.W.Murnau, 1926). இன்றுவரை இருபதுக்கும் மேற்பட்ட ஃபௌஸ்ட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சித்திரக் கதைகளிலும் (Ghost Rider) அனிமேஷன் படங்களிலும் (Sebastian Faust, Felix Faust) மாங்கா காமிக்ஸ்களிலும் (Osamu Tezuka’s Faust) கூட ஃபௌஸ்ட்டின் அல்லாட்டதைக் காண முடிகிறது. அமெரிக்கக் கலாச்சாரத்தின் பகுதியாகவே மாறிவிட்டிருக்கும் The Simpsons தொடரின் ‘The Bart Sells His Soul’ எனும் அத்தியாயத்தில் ஃபௌஸ்ட் பகடி செய்யப்பட்டிருக்கிறான். ஆக, கலையின் புதுப்புது சாத்தியங்களை வரலாறு கண்டடையும் போதெல்லாம் அதில் ஃபௌஸ்ட்டின் இடம் மறுக்கப்பட முடியாததாகவே இருந்திருக்கிறது. இவ்வனைத்திலும் தலையாயது என கதேயின் ஃபௌஸ்ட்டைச் சொல்லலாம்.

II

கிறிஸ்டோஃபர் மர்லோவின் ‘Doctor Faustus’ நாடகத்தை முன்மாதிரியாகக் கொண்டே தனது ஃபௌஸ்ட் காவியத்தை எழுதத்தொடங்கினார் கதே (Goethe). கவிதை வடிவில் இயற்றப்பட்டிருக்கும் நாடகம். இரண்டு பாகங்களைக் கொண்டது. ஜெர்மன் கலையின் மணிமகுடமாகக் கருதப்படும் பேரிலக்கியம். தனது வாழ்நாளின் இறுதிக்கணம் வரை இதன் வரைவை கதே செப்பனிட்டுக்கொண்டிருந்தார். அப்போதும் அவருக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை (ஃபௌஸ்ட்டைப் போலவே!). அதனால், இந்நூலின் இரண்டாம் பாகம் அவரது இறப்புக்குப் பிறகே வெளியானது. நாட்டுப்புறக் கதையாகவும் பொம்மை நாடகமாகவும் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த கதைக்கருவிற்கு கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் வடிவத்தை அளித்து, மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் ஒப்பற்ற நவீனக் கூறுகளை அதனுடன் இணைத்து, அதைச் செவ்வியல்தன்மையுடையதாக அவர் உருமாற்றுகிறார். கதேயின் ஃபௌஸ்ட், அறிவுத்தேட்டம் உள்ளவனாக இருக்கிறான். கிறித்தவ மரபிலும் தத்துவத்திலும் ஆழ்ந்த தேர்ச்சி உடையவன். நாட்டுப்புறக் கதையில் பயின்று வருவதைப் போல மருத்துவம் கற்றவனும் கூட. பிறரது நோயைக் கண்டறிந்து குணப்படுத்திவிட்டு தனக்கான நேரத்தில் வாழ்வுக்கான மீட்பைப் பரிசோதிக்கிறவன். மரணம் நெருங்கிக்கொண்டிருப்பதை அறிந்துவிட்ட அவனது மனத்தின் ஒடுக்கத்தில் எந்நேரமும் பயம் வீற்றிருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றின கனவுகளை முதுமை தடுத்தாட்கொண்டு விட்டது. கடந்து வந்த பாதையை எண்ணி பெருமூச்செறிவதைத் தவிர இனி வேறு வழியில்லை.

மனிதர்தம் வாழ்வுக்கான அர்த்தத்தைத் தேடி அலைந்தவன். தன் உயிராற்றல் மொத்தத்தையும் அதற்காகவே அர்ப்பணித்தவன். அறிவின் மீதான அவனது தீவிர பற்றும் மூர்க்கமும் அதனிலிருந்து கூர்கொண்டவை. ஆனால், எல்லோருக்கும் நிகழ்வதுதான் இறுதியில் ஃபௌஸ்ட்டுக்கும் நேர்கிறது. வாழ்க்கைக்கு அப்பால் இருப்பதை அறிய முயன்றவன் என்பதால் வாழ்வு அவனைத் தடவிக்கொடுப்பதில்லை. அவனுக்கு சலுகைகள் தருவதில்லை. அசோகமித்திரனின் சொற்களில் சொல்வதானால், தேடத் தேட நழுவிக்கொண்டேயிருந்த அர்த்தத்தின் பிடிகிடைக்காமல் அவனது நிம்மதி குலைகிறது. நிறைவின்மையுடன் சமாதானம் செய்துகொள்ள அவனது அகங்காரம் இடங்கொடுப்பதில்லை. அவனுக்கு ஆத்திரமாக இருக்கிறது. நூறாண்டுகள் போதவில்லையே என வருந்துகிறான். இன்னும் சிலகாலம் வாழ முடிந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறான். அவ்வாறு ஆயுளை நீட்டிக்க முடிந்தால், தன் அறிவைக்கொண்டு மனிதன் அடையக்கூடிய உச்சங்களைத் தொட்டுவிட முடியுமே என பேராசைப்படுகிறான்.

விவிலியத்தைப் பொறுத்தவரை ஏழு கொடிய பாவங்களுள் கர்வச்செருக்கும் ஒன்று. அதன்பொருட்டு சாத்தான் கீழிறங்கி வருகிறான். ஃபௌஸ்ட்டுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்கிறான். அவனுக்கு இருபத்து நான்காண்டுகள் இளமையையும் லௌகீக இன்பங்களை அடைவதற்குண்டான முற்றதிகாரத்தையும் அளிக்கிறான். இந்த இளமைக்காலம் முழுவதும் அவனது பணியாளாக சாத்தான் சேவகம் புரிவான். ஒப்பந்த காலத்தின் முடிவில் ஃபௌஸ்ட்டின் ஆன்மா சாத்தானுக்குச் சொந்தம்.

அறிதலின் துயரத்தைக் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஃபௌஸ்ட்டின் சிக்கல்கள் அத்தனையும் அவனது அறிதலில் இருந்தே தொடங்குகின்றன. அவனது கட்டுப்பாடான ஒழுங்குகளும் களங்கமின்மையை இழந்துவிட்ட முதிர்ச்சியுமே அவனுக்குப் பாரமாகின்றன. திட்டவட்டமான எந்த ஒழுங்கின் மீதும் வெகுவிரைவில் பாசி படிந்துவிடுகிறது. மீறலையே இயல்பாகக் கொண்ட நுட்பமான மனமானது அந்த உறுதியான கட்டமைப்பின் பலவீனங்களை எப்போதும் கண்டுகொள்ளும். அதன்பிறகு அத்தகைய பூஞ்சையான ஒழுங்குகளுடன் இசைந்து போவதென்பது அறிஞர்களால் இயலாத காரியம். அதே சமயத்தில், தன் மனம் வேண்டுவது இதுவல்ல இதுவல்ல என ஒவ்வொன்றாக விலக்குந்தோறும் அந்த மனத்தில் தோன்றுகிற இழப்புணர்ச்சி விசித்திரமானது. இவற்றுடன் தன்னிரக்கமும் கலைப்பித்தும் தத்துவ நாட்டமும் கூட்டாக இணைந்து துடிப்பு கொள்கையில் அவர்தம் நெஞ்சத்து நீர்மை சலசலக்கிறது. அழியாத ஒன்றைத் தேடித் திரிந்து சஞ்சலமுறுகிறது. சீர்மைக்கான இலட்சியம் பேருருக் கொள்கிறது. நெடுநாள் அடைபட்டுக் கிடக்கிற போதம் திடீரென வெடித்துப் பிரவாகமெடுக்கும் போது உண்டாகிற வேட்கை சாதாரணமானதல்ல. அதன்பிறகு, நாம் காண நேர்வதெல்லாம் அளப்பரிய ஆற்றலின் ஊற்றுமுகம். கட்டற்று திமிறிப் பாய்வதொன்றே அதன் இலக்கு.

இக்காப்பியத்தின் முதற்காட்சியே கடவுளுக்கும் சாத்தனுக்குமான விவாதமாகத்தான் தொடங்குகிறது. அவர்கள் வானிலிருந்து பூமியை நோக்கும்போது, ஃபௌஸ்ட் விவிலியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறான். ‘In the beginning was the word’ என்பதை மந்திரம் போல திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்க்கிறான். அவனுக்கு அவ்வாக்கியம் திருப்தியளிக்கவில்லை. ‘சொல்’ என்பதற்குப் பதிலாக அதிகாரத்தையும் ஆசையையும் பொருத்திப் பார்த்து, ஏமாற்றமடைந்து, இறுதியாக, ‘In the beginning was the deed’ என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறான். ஆம், செயல்! ஃபௌஸ்ட்டின் வாழ்வினுடைய அர்த்தம் செயல்புரிவதில்தான் உள்ளது. இலக்கை அடைவதைப் பற்றி எண்ணிப்பார்க்காத செயல். உள்ளுக்குள் பொதிந்திருக்கும் ஒவ்வோர் அணுவிலும் விகசிக்கும் செயலூக்கம். அந்தக் கட்டற்ற ஆற்றலைக்கொண்டு அவன் ஈடுபட வேண்டிய காரியங்களில்தான் அவனது முழுமை செழுமையுறும். அதை அவன் அறிந்துகொள்வதற்குக் கொடுத்த விலைதான் எத்தனை எத்தனை! அவன் செய்த பாவங்கள்தான் எத்தனை எத்தனை!

அத்தகைய செயலூக்கம் பொங்கிப் பெருக்கெடுக்கும் போதெல்லாம் ஃபௌஸ்ட் பின்வாங்குகிறான். அவனுக்கு இடைஞ்சலாக இருப்பது அவனுடைய மிகுதியான அறிவுத்தேடல்தான். அது செயலை எள்ளலுடன் அணுகச் செய்கிறது. இந்த வாழ்வில் இட்டு நிரப்பிக்கொள்வது எதுவும் நிலையற்றது எனும் அச்சம் அவனைத் தீவிரமாக அலைக்கழிக்கிறது. நாம் தேர்ந்தெடுத்த பாதையின் முடிவில்தான் அர்த்தத்தை அறிந்துகொள்ள முடியுமெனில் அதுவரை வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்வும் வீண்தானா? அதுகாறும் அனுபவித்த அத்தனை துயரமும் தேடலும் ஒரே ஒரு உச்ச கணத்திற்காகவா? அதை அடையும் முன்பே இறந்தவர்களின் ஆன்ம ஓலம் எத்தனை வீரியமிக்கது? எதன் ஒன்றிற்குப் பிறகும் வேறொன்று நிகழக் காத்திருக்கிறது எனும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தினத்தையும் நீட்டித்து வைக்கிறோம். அதெல்லாம் அற்ப மாயை எனத் தெளிந்துவிட்டாலும் எத்தனை பேர் உடனடியாக மரணத்தைச் சந்திக்கத் தயாராவார்கள்? அபாயகரமான வழிகளில் எதை எதையோ முயன்று பார்த்தும் இந்த ஊசிமுனையளவு விஷத்தின் உறுத்தலை ஃபௌஸ்ட்டினால் பிடுங்கி எறியவே முடியவில்லை. அதன் விளைவாக அவனது உறுதி குலைகிறது. எண்ணங்களில் சிடுக்கேறுகிறது. ஊரையும் உற்றவர்களையும் பகைத்துக்கொண்டு பிழைத்துவிடலாம். வாழ்வைப் பகைத்துக்கொண்டு விட்ட பிறகு விமோசனம் ஏது? இந்த வாழ்வில் அவன் எதிர்பார்த்ததுதான் என்ன?

நமது வாழ்வுக்கான அர்த்தத்தையும் சிக்கல்களுக்கான தீர்வையும் நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்திருப்பதென்பது வாடிக்கையான நிகழ்வு. அர்த்தத்தை ஏன் தேடுகிறோம் எனில் நாம் முக்கியமானவர்கள் என நம்புகிறோம் என்பதனால்தான். ஆனால், இந்த உலகமும் அதன் அர்த்தமும் பிரம்மாண்டமான விஷயங்கள். அவற்றின் காலவெளியின் முன்பு உயிரினங்களின் வாழ்க்கையானது மிகச் சிறியது. குறுகிய காலத்தை கையிருப்பில் வைத்துக்கொண்டு பிரம்மாண்டங்களுக்கான தீர்வை எட்ட முடியாது. அதனால்தான் வரலாறு உருவானது. மனிதர்களது தேடல்களும் அறிதல்களும் தொகுக்கப்பட்டு அறிவாகவும் பண்பாடாகவும் காலந்தோறும் கைமாற்றப்படுகிறது. எனவே, நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நூறாண்டுகளுக்குள் வாழ்வின் அர்த்தத்தை கண்டடைந்துவிட முடியும் எனப் பகற்கனவு காண்பதென்பது தீராத மன உளைச்சல்களுக்கும் வெறுமைக்குமே இட்டுச் செல்லும். நம்மால் இயன்றதெல்லாம் அந்த மாபெரும் கால இயந்திரத்தில் ஒரு சிறிய பற்சக்கரத்தைச் சேர்ப்பது மட்டுமே. இவ்வுலகம் அழியும்போது, அதன் பிரம்மாண்டம் சரிந்து வீழும்போது, வாழ்வின் அர்த்தத்தை மனித இனம் கண்டுணருமோ என்னவோ?

அதைக் காண நாம் உயிருடன் இருக்கப்போவதில்லை. ஆனால், அந்தக் கடைசி மனிதனின் மனம் பொங்கும்போது நான் உடனிருப்பேன். அந்தக் கணத்தில் அவன் சிலிர்க்கும்போது எனக்கும் மயிர்க்கூச்செறியும். அதற்காகவே இந்த வாழ்வு. இதை உணர்ந்துகொள்ளாததே ஃபௌஸ்ட்டின் துரதிர்ஷ்டம் என நினைக்கிறேன். அவன் தன்னை முன்னிட்டு உலகத்தைக் காண்பவன். உலகின் போக்கை மாற்றிவிட முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறவன். வரலாற்றின் ஆற்றொழுக்கில் தன்னை ஒரு சாதாரண கண்ணியாக அவனால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. இதை மேற்குலகின் தத்துவ விசாரங்களில் இருந்தே அவன் பெற்றுக்கொள்கிறான். ரெனே டெகார்ட்டே (René Descartes) தொடங்கி இமானுவல் காண்ட் (Immanuel Kant) வரை அனைவருமே ‘நான்’ என்பதை முன்னிறுத்தியவர்கள். இந்த ‘நான்’-ஐ விட்டொழித்திருந்தால் மட்டுமே ஃபௌஸ்ட்டுக்கு மீட்சி சாத்தியமாகியிருக்கும்.

கதேவுக்கு ‘Superhuman’ (தெய்வ மனிதன்?) என்கிற கருத்தாக்கத்தின் மீது அதீத பற்றிருந்திருப்பதை அறிய முடிகிறது. தனது சாயலிலேயே ஃபௌஸ்ட் கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். ஏனெனில், இதன் மூலக்கதையிலும் கிறிஸ்டோஃபர் மர்லோவின் துன்பியல் நாடகத்திலும் கடவுளின் விசுவாசியாகவே ஃபௌஸ்ட் வலம்வருகிறான். அவற்றில் கிறித்தவ மதத்தின் தாக்கமும் அதை அடியொற்றியே கதையை நகர்த்தவேண்டிய கட்டாயமும் தென்படுகிறது. ஆனால், கதேயின் ஃபௌஸ்ட்டோ, தன்னைத் தவிர வேறெவருக்கும் அடிமையாக இருக்க விரும்பாதவன். கதேயின் காப்பியத்தில் மதம் என்பது கதைச்சூழலுக்கான பின்னணியை வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது. அதனுடன் விவாதித்தும் முரண்பட்டும் தன்போக்கில் கதை வளர்கிறது. கதையின் முடிவில் மட்டுமே அது விவிலிய தொன்மத்துடன் மீண்டும் இணைந்துகொள்கிறது. உதாரணமாக, க்ரெச்சன் (Gretchen) எனப்படும் மார்கரெட் (Margarette) பரிசுத்த ஆன்மாவாக இருக்கிறாள். அவள் மீது காதல்கொண்டு, அவளை மயக்கி கர்ப்பிணியாக்கிவிட்டு, சாத்தானின் சூழ்ச்சியால் அவளது அண்ணனைக் கொன்றுவிட்டு, ஃபௌஸ்ட் தலைமறைவாக நேரிடுகிறது. திருமணமாகாதவள் கர்ப்பவதியாகி விட்டதால் அக்கால வழக்கப்படி அவளைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்.

இறைவனுக்கு அஞ்சுகிறவளாகவும் ஊழியம் செய்கிறவளாகவும் அவள் இருக்கின்ற போதிலும் மனமறிந்து பாவம் செய்யாதவள் என்றாலும் அவளது பரிசுத்தம் அவளைக் காப்பாற்றுவதில்லை. அவள் இறந்தபிறகே சொர்க்கத்திற்குச் செல்கிறாள். நாட்டுப்புறக் கதையாதலால், இன்னும் கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு, கதேயின் சௌகரியத்திற்கேற்ப வேறெப்படியும் முடித்திருக்க முடியாது என்பதாக இதைப் புரிந்துகொள்கிறேன். ஃபௌஸ்ட் மாதிரி தேடல் உடையவனாக இருந்தாலும் சரி, க்ரெச்சன் போல களங்கமற்றவளாக இருந்தாலும் சரி, இவ்வாழ்வின் பெருங்கருணைக்குட்பட்டே மனிதர்கள் இயங்க முடியும் என்பதைத்தான் கதே உணர்த்த விரும்புகிறாரா? நம்முடைய அசாத்திய நம்பிக்கைகள் அத்தனையும் இப்பிரபஞ்சத்தின் இரகசியங்கள் முன் துச்சமானதா? எதைத்தான் செய்வது? செய்யாமலிருப்பது?

III

1926ம் ஆண்டு வெளியான F.W.முர்னோவின் படத்தில் ஃபௌஸ்ட் காப்பியத்தின் முதல் பாகத்தை மட்டும் படமாக்க எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மூலநூலுக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலான காட்சிகளையே அமைத்திருக்கிறார்கள் எனலாம். ஃபௌஸ்ட்டும் சாத்தானும் புயல்காற்றை எதிர்த்து ஊருக்குள் பறந்து வருகிற காட்சியை இப்போது பார்க்கையிலும் வியப்பாக இருக்கிறது. அந்த ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டின் மீதும் அவர்களது பிரம்மாண்ட நிழலுரு படிந்து படிந்து மேலெழுவதை, ஒரு துர்சகுனமாக, திகிலூட்டும் விதத்தில் காட்டிவிடுகிறார்கள். ஃபௌஸ்ட்டுக்கும் க்ரெச்சனுக்கும் இடையேயான காதற்காட்சிகள் குழந்தை விளையாட்டு போல அமைக்கப்பட்டிருக்கின்றன. நாடக வடிவில் எடுபடக்கூடிய நகைச்சுவைப் பகுதிகள் மட்டும் படத்திற்குப் பொருத்தமாய் இருக்கவில்லை. படம் உருவாக்கப்பட்ட காலத்தைக் கணக்கில்கொண்டால் அவற்றையும் மன்னிக்கலாம். மற்றபடி, வலுவான காட்சிப்படிமங்கள் நிறைந்த படம்.

‘Faust bargain’ என்கிற சொற்றொடர் புகழ்வாய்ந்தது. அறத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுந்தோறும் ஏதோவொரு வகையில் நடைமுறை யதார்த்தங்களுடன் சமரசம் செய்துகொள்கிறோம் இல்லையா? ஒன்றை இழந்து மற்றொன்றைப் பெறுதல். அந்தந்த நேரத்து நியாயப்படி நம்மில் ஒரு பகுதியையோ மொத்தமாகவோ அடகுவைத்து, நமது மனசாட்சியை அல்லது ஆன்மாவை விட்டுக்கொடுத்து, நாம் நிறைவேற்றுகிற அத்தகைய காரியங்கள் அத்தனையுமே தீமையுடனான ஒப்பந்தமே! அரசியல், ஆன்மீகத்திலிருந்து அன்றாட குடும்ப விஷயங்கள் வரை சூழ்நிலைக்குத் தக்கவாறு எல்லோரும் எப்போதாவது விலைபோவதுதான். பெரிய பேரம் படிந்தால் இன்னும் பெரிய விலையைக் கொடுக்கத் தயாராகப் போகிறோம். கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளாமல் அப்படியென்ன பெரிய வாழ்க்கை வேண்டியிருக்கிறது? வளைய முடியாது என முறுக்கிக்கொண்டும் தலையைச் சிலுப்பிக்கொண்டும் திரிந்தவர்கள் எல்லாம் கோமாளிகளாக்கப்பட்டதன் கதை தெரியும்தானே? இந்தப் போக்குகள் குறித்து அறிந்திருந்தும் கண்டும் காணாததைப் போன்று வாழ்வதை விடவும் ஆபாசமான விஷயம் வேறுண்டா? காலப்போக்கில் பழகிவிட்டது என்றாலும் ஆன்மாவை அரிந்து கொடுப்பதே வெற்றிக்கான சூத்திரமாகக் கருதப்படுவதன் விநோதத்தைப் பற்றி என்றைக்காவது திகைப்படைந்ததுண்டா?

Mephisto, 1981

நீண்டகாலம் கழித்து, அங்ஙனம் திகைத்து, ஹெண்ட்ரிக் விழித்துக்கொள்கிறான். இஸ்த்வான் ஸாபோ (István Szabó) இயக்கிய ஹங்கேரியத் திரைப்படமான Mephisto-வின் கதாநாயகன். 1981ம் ஆண்டு வெளியான படம். க்ளாஸ் மன் (Klaus Mann)-னின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஹெண்ட்ரிக், ஒரு நாடக நடிகன். அரசியல் சார்பற்றவன். உறவுகள் மீது பிடிப்புகள் இல்லாதவன். தன்னலம் மிகுந்தவன். ஆனால், தன்னால் இயன்றதை பிறருக்குச் செய்கிறவன். கண்ணியமானவன். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் நடித்து பெரும்புகழ் அடைய வேண்டும் என்கிற விருப்புறுதி கொண்டவன். ஃபௌஸ்ட் நாடகத்தின் மெஃபிஸ்டோ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக விதந்தோதப்படுபவன். மெஃபிஸ்டோ என்பது சாத்தானின் பெயர். தன்னுடைய எல்லைக்குள் நின்று மனிதத்தன்மை பேணுகிறவனையும் இழுத்துப்போட்டு கபடத்தனங்களில் கூட்டு சேர்ந்துகொள்ள வைக்கிறது காலம். ஹெண்ட்ரிக்கின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக நாஜிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகிறது. அவனது நடிப்புத்திறனைப் பயன்படுத்தி, உலகின் பார்வையில் தங்களை கலாச்சாரக் காவலர்களாக முன்னிறுத்த வேண்டிய நிர்பந்தம் நாஜிக் கட்சியினருக்கு இருக்கிறது. மாற்றுக் கருத்துடையோர் அனைவரும் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகிற சமயத்தில், தனது இலக்கை நோக்கித் தடையின்றி முன்னேறிச் செல்லவேண்டிய கட்டாயம் ஹெண்ட்ரிக்கிற்கு உள்ளது. நான் உமி கொண்டு வருகிறேன், நீ அரிசி கொண்டு வா.

ஃபௌஸ்ட் தொன்மத்தை நவீனகால அரசியல் பின்னணியில் வைத்து மீளுருவாக்கம் செய்த வகையில் இத்திரைப்படம் முக்கியமானது. மெஃபிஸ்டோ பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருப்பவனை மெல்ல மெல்ல ஃபௌஸ்ட்டாக உருமாற்றுகிறார்கள். கதாபாத்திரங்கள் இடம்மாறுகின்றன. இதில் யார் சாத்தான் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. நம்முடைய தேர்வுகளை யார் யாரோ நிர்ணயம் செய்கிறார்கள். நம்மை உலுக்கியெடுக்கிறார்கள். நாம் வெறும் கைப்பாவைகளாகிறோம். தப்பியோடவும் வழியில்லாது தவிக்கையில் நமது செருக்கிற்கு எந்த மதிப்புமில்லை என்றாகிவிடுகிறது. நமது திறன்களும் நாம் வளர்த்தெடுத்த ஆளுமையும் நொறுங்கிப் போகிறது. குரூரத்தின் காலடியில் சரணடைந்த பிறகு வாழ்வை வெறுமனே சகித்துக்கொள்ளப் பழகுகிறோம். விதி புன்முறுவலிக்கிறது. அற்பனே என்கிறது. நமது உத்வேகங்கள் தணிகின்றன. காலம் முன்னைவிட வேகமாகச் சுழல்கிறது.

மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது, அலெக்ஸ்சாண்டர் சொகுரோவ் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான ஃபௌஸ்ட் படத்தைத்தான் மிகச் சிறந்த தழுவல் என்பேன். தாமஸ் மன்னின் Doktor Faust நாவலையும் கதேயின் காப்பியத்தையும் அடிப்படையாகக் கொண்டது. தெய்வீகக் காரணிகளை முற்றிலுமாக புறமொதுக்கிவிட்டு ஃபௌஸ்ட்டின் வாதையையும் தத்தளிப்புகளையும் தனிமனிதனின் அகச்சிக்கல்களுடன் தொடர்புறுத்தி இருக்கிறார்கள். அதன்மூலம் அவனது குணாம்சத்திற்கு ஓர் உலகளாவிய பொதுத்தன்மையை வழங்க முடிந்திருக்கிறது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிச் சட்டகமும் டச்சு ஓவியத்தைப் போலுள்ளது. எந்நேரமும் நகர்தலில் இருக்கிற காமெரா, ஃபௌஸ்ட்டின் தடுமாற்றங்களின் போது மட்டும் உறைந்து நின்றுவிடுவதை கவனிக்க முடிகிறது. அந்தச் சமயங்களில் எல்லாம் அக்காட்சியின் ஒழுங்கு சிதைந்து (distorted image) கதாபாத்திரங்களின் முகங்கள் விகாரமடைகின்றன.

Faust, 2011

முந்தைய ஆக்கங்களைப் போல, இப்படத்தில் க்ரெச்சனை (Isolda Dychauk எனும் பேரழகி நடித்திருக்கிறார்) ஃபௌஸ்ட் கர்ப்பிணியாக்குவதில்லை. அவளை மயக்கமுறச் செய்தாலும் அவளை அடையும் முன்னமே அவனது குற்றவுணர்ச்சி முந்திக்கொண்டு விடுகிறது. அந்தப் பாவத்தைச் செய்யாவிட்டாலும் அவனுக்கு மீட்பு கிடைப்பதில்லை. மீண்டு வர முடியாத பாழ்வெளியில் சிக்கிக்கொள்கிறான். Man still must err, while he doth strive.

IV

கீழைத்தேய தத்துவ மரபுடனும் அதன் மனப்பரப்பின் வீச்சுடனும் ஒப்பிடுகையில் ஃபௌஸ்ட், ஃபிராங்கன்ஸ்டெய்ன் போன்ற மேற்கின் தொல்கதைகள் அத்தனையுமே நன்மை X தீமை என்கிற இருமைக்குள் அடங்கிவிடுகின்றன. அதனால், அவற்றிலிருந்து விரித்தெடுக்கப்பட வேண்டிய சாத்தியங்களும் அவற்றின் நீட்சியாகத் தொடர்ந்து வருகின்ற நவீனப் படைப்புகளின் எல்லையும் குறைபட்டதாகவே இருக்கின்றது. அந்தக் குறுகிய வட்டத்திற்குள் நின்றபடி, பல்வேறு நிகழ்தகவுகளை ஆராய்ந்து பார்த்து, வெவ்வேறு வகையான ஆட்டங்களை விளையாடிப் பார்த்திருக்கிறார்களே ஒழிய, சிறிய அளவிலேனும் அவற்றின் பாதிப்பிலிருந்து துண்டித்துக்கொண்டு விலகியிருந்தால் அவை தொட்டிருக்கக்கூடிய உயரங்கள் வேறாக இருந்திருக்கும். மெஃபிஸ்டோ, டிராகுலா என எல்லாப் பேய்களும் ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அருவருப்பான தோற்றம் கொண்டவர்கள், வஞ்சகர்கள், நயமான ஆடைகளை உடுத்துபவர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள், சூதும் தந்திரமும் கொண்ட புத்திசாலிகள், கடவுளுக்கு எதிரான சூழ்ச்சிக்காரர்கள் என அவர்களது எந்தப் பேய்க்கதையிலும் இத்தகைய ஒற்றுமைகளைக் காண முடியும். அவை எல்லாமே தேவாலயத்திற்கும் சிலுவைக்கும் அஞ்சுகிறவை. விவிலியக் கூண்டில் அடைபட்டவை.

ஆனால், கீழை நாடுகளில் புழங்குகிற பேய்களைப் பாருங்கள். வேதாளத்தில் இருந்து யட்சி வரை நம் ஊரிலேயே எத்தனை விதமான பேய்கள் உலா வருகின்றன! நமது மரபைப் பொருத்தமட்டில் அவை தீமையின் உருவகங்கள் மட்டும் அல்ல. மனிதர்களைச் சீண்டிப் பார்க்கிற பேய்கள் இருக்கின்றன, துடுக்குத்தனமும் பரிகாசமும் கொண்ட விளையாட்டுப் பேய்கள், வழிகாட்டுகிற பேய்கள், இரத்த பலி கேட்கிற ஆவிகள், மனிதர்களின் உதவியைக் கோருகிற பேய்கள், இரக்க சுபாவமுள்ள ஆன்மாக்கள், இன்னும் எத்தனை எத்தனை! இங்கிருந்து மேற்கை நோக்கும்போது அவர்களது பிசாசுகள் சலிப்படையச் செய்கின்றன. மீண்டும் மீண்டும் ஒரே கதையை வாசிப்பது போன்ற உளமயக்கு ஏற்படுகின்றது. அது தொடர்பான புதிய ஆக்கங்களைத் தேடிச் செல்லும் ஆர்வம் மட்டுப்படுகிறது. அவர்களது பேய்கள் சாண்டா கிளாஸாக உருமாறி கிச்சுக்கிச்சு மூட்டுகிற தருணம் அது.

*

தாவீதுகளின் சங்கீதம் – பொலான்யோவின் ‘டிஸ்டண்ட் ஸ்டார்’

1973ம் ஆண்டு, சிலே. சல்வதோர் அயெந்தேயின் (Salvador Allende) சோஷலிச ஆட்சியை இராணுவம் கைப்பற்றி அகஸ்தோ பினொஷேயின் (Augusto Pinochet) சர்வாதிகாரம் கோலோச்சிய சமயம். பாழ்நில வெளியில் உரிமைகளின் கூக்குரல் நசிந்துவிட்டிருந்தது. தகிக்கும் வெம்பாலையில் அனலருவியென கொட்டிக்கொண்டிருந்தது கானல் நீர். மணற்புயலின் நெருப்புக் காற்றுக்கு அஞ்சி, மூக்கைப் பொத்திக்கொண்டு, கண்களை இறுக்கிக்கொண்டவர்கள் அனைவரும் எதிர்காலத்திற்குத் தகுதி பெற்றார்கள். அதை எதிர்த்துப் போராடிய நெஞ்சுரமுடையவர்களோ காணாமற் போய்க் கொண்டிருந்தார்கள் – இடதுசாரிகள், கொரில்லா போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள்.

அர்த்துரோ பெலானோவும் (Arturo B.) கவிஞன்தான். சின்னச் சின்னக் கவிதை வரிகளை எழுதியிருக்கிறான். கவிதைப் பாசறைகளில் தவறாமல் பங்கெடுக்கும் வழக்கமும் வாசிப்பு அரங்குகளுக்கு வருகிற அழகான பெண்களைக் கவர்ந்திழுக்க முடியுமா என நோட்டம் விடுவதில் ஆர்வமும் உள்ளவன். எழுத்தாளர் ரொபெர்டோ பொலான்யோவின் சாயல்கொண்ட கதாபாத்திரம். அவரது புனைவுகளுக்கான மறுவார்ப்பு (alter ego). இந்த நாவலின் கதைசொல்லி. அவனது நண்பர்களுக்கு நிகழ்ந்தது மாதிரி அர்த்துரோ காணாமலாக்கப்படவில்லை. ஆனால், சிறையில் அடைக்கப்பட்டான்.

சாம்பல்நிற மேகங்கள் சூழ்ந்திருந்த அந்தப் பின்மதியப் பொழுதை தன் வாழ்நாள் முழுவதும் அர்த்துரோ நினைவில் வைத்திருக்கப் போகிறான். அவனுக்கு அப்போது பத்தொன்பது வயது. நேரத்தைக் கடத்துவதற்காக, அவன் வானத்தை வெறித்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர்களது சிறைக்கூடத்தின் மேலே ஒரு விமானம் பறக்கிறது. மேலும் கீழும் முன்னும் பின்னுமாக இலக்கின்றி வட்டமடிக்கிறது. ஏதோவொரு பைத்தியக்கார விமானியின் ஆர்வக்கோளாறான செயல் என நினைத்து முடிப்பதற்குள், அந்த விமானம் வெளியேற்றும் கறுப்புப் புகையையே தூரிகையாக்கி, ‘Book of Genesis’-இன் முதல் வரியை ஆகாயத்தில் வரைகிறான் அந்த விமானி. “In principio creavit deus caelum et terram” (In the beginning, God created the heavens and the earth). கைதிகள் பரபரப்படைகிறார்கள். பாதுகாவலர்கள் திகைப்படைகிறார்கள்.

கரும்புகை மறைய மறைய தன்னுடைய கவிதையின் ஒவ்வொரு வரியையும் அந்த விமானி ஆகாயத்திலேயே தீற்றுகிறான். இதைக் காணும் அர்த்துரோவின் நண்பனான நார்பெர்த்தோ, நிலத்தை ஓங்கி அறைந்தவாறே வெறிக் கூச்சலிடுகிறான். வேலியின் முட்கம்பிகளைப் பற்றித் தாவியபடியே, ‘இரண்டாம் உலகப்போர் மீண்டும் நிகழவிருக்கிறது’ என உற்சாக மிதப்பில் அரற்றுகிறான். கவனிக்க, மூன்றாம் உலகப்போர் மூளும் எனச் சொல்லவில்லை. இரண்டாம் உலகப்போர் மீண்டும் நிகழவிருக்கிறது. ‘புத்தொளி பிரகாசிக்கட்டும்’ என்று கவிதையை முத்தாய்ப்பாக முடித்துவிட்டு மேகங்களுக்குள் விமானம் மறைகிறது. ஆம், சிலேயில் புது யுகம் பிறந்திருக்கிறது. ஒளிக்கீற்றை மேவி மூடும் இருட்காலம். வீழும் நட்சத்திரத்தை விழுங்கிச் செரிக்கக் காத்திருக்கும் கடல்.

Distant Star-ஐ எழுதுவதற்கு முன் ‘Nazi Literature in the Americas’ நாவலை வெளியிட்டிருந்தார் பொலான்யோ. அதன் இறுதி அத்தியாயத்தில் இடம்பெறும் ரமிரெஸ் ஹாஃப்மெனின் (Ramirez Hoffman) கதாபாத்திரத்திற்கு முழுமுற்றான நியாயத்தை வழங்க முடியவில்லை என பொலான்யாவும் அவரது எதிரீட்டு ஆளுமையான அர்த்துரோ பெலனோவும் கருதியதால் ஹாஃப்மேனை மையக் கதாபாத்திரமாக வைத்து தன்னுடைய அடுத்த நாவலை எழுதத் திட்டமிடுகிறார். அவனுக்குப் புதிய நாமத்தைச் சூட்டுகிறார். கார்லோஸ் வெய்தர் (Carlos Wieder). சிலேயினுடைய நவீன கவிதை இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாகவும் பினொஷே ஆட்சியதிகாரத்தின் ஆதரவாளனாகவும் கவர்ச்சிகரமான ஆளுமையாகவும் அவன் உருத்திரண்டு எழுகிறான். முந்தைய பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் விமான சாகசத்திற்குச் சொந்தக்காரன். அர்த்துரோவின் நண்பர்கள் காணாமற் போனதற்கும் கொல்லப்பட்டதற்கும் காரணமான சூத்திரதாரி.

அரசியல் கொந்தளிப்புகள் நிகழும் காலகட்டத்தில்தான் கலைச் செயல்பாடுகளின் தீவிரம் துடிப்பு கொள்கிறதென உளமார நம்புகிறேன். இதற்கான எண்ணற்ற உதாரணங்களை வரலாறு நெடுக எடுத்தாள முடியும். The Third Man (1949) படத்தில் ஹாரி சொல்வது நினைவுக்கு வருகிறது – “பூர்ஷ்வாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் முப்பது ஆண்டுகளாக சிக்குண்டிருந்த இத்தாலியில் போரும் பயங்கரவாதமும் அறப்பிறழ்வுகளும் பேரழிவை உண்டாக்கின. ஆனால், அந்த நெருக்கடியான சூழலில் இருந்தே டாவின்ஸியும் மிக்கெலேஞ்சலோவும் மேலெழுந்து வந்து உன்னதமான கலைப் பொக்கிஷங்களைப் படைத்தார்கள். சுவிட்சர்லாந்தில் ஐநூறு ஆண்டுகளாக ஜனநாயகமும் அமைதியும் நிலவுகிறது. அவர்களால் குக்கூ மணியைத் தவிர உருப்படியான வேறெதையும் உலகிற்குக் கொடையாகத் தர முடியவில்லை.” சிலேயும் இதற்கு விதிவிலக்கல்ல. 1973 முதல் 1990 வரை அதன் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது. பண்பாடான மனங்களின் எளிய உணர்வுகள் மீது கூர்மையான ஈட்டியை சர்வாதிகாரம் எறிந்தது. அடக்குமுறையின் விளைவாக, அவர்தம் மனவெளியின் பரப்புகள் சுருங்கி, சர்க்கஸ் கூண்டுகளுக்குள் அவர்கள் அடைபடலானார்கள். காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு அஞ்சி ஒடுங்கி கிளிப்பேச்சு பேசுவதற்கா படைப்பின் ஊற்று வற்றாது சுரக்கிறது? விழித்துக்கொண்ட சுரணையுள்ள கலைஞர்கள் பலரும் தலைமறைவானார்கள். வெளிநாடுகளில் தஞ்சமடைந்தார்கள்.

இதில் கோழைத்தனம் என்கிற நினைப்புக்கே இடமில்லை. எங்கோ தூரத்திலிருந்தவாறு சொந்த நாட்டை வேடிக்கைப் பார்க்கிற அவலத்தை எண்ணி நெஞ்சுருகும் போதெல்லாம் அவர்களது அகம்பாவம் சீண்டப்படாமல் இருந்திருக்காது. ஆனால், அந்த கர்வச் செருக்கைப் புறமொதுக்கி விட்டு, வாழ்வை சூறையாடிச் செல்கிற மலினமான நாடகங்களில் இருந்து விலகி, தம்மை இழக்காமல் தத்தம் கண்ணியத்தை காத்துக்கொள்வதே கலைஞர்களின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். அத்தகைய இடர்ப்பாடுகளைப் புடம்போட்டு அணி செய்கையிலேயே கலையின் விஸ்தீரணம் புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. விடுதலையின் சிறகடிப்பில் மதர்க்கும் ஞானப் பொலிவானது அவர்களுடைய படைப்பில் பொசிகிறது.. எனவே, கலையும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பிரித்தறிய வேண்டாதவை. கற்பனா சக்திக்கான கிரியா ஊக்கியாகச் செயல்படும் ஆற்றல் மிகுந்தவை. அதனால்தான், சிலேயில் எந்தப் பாறையை உருட்டினாலும் அதிலிருந்து ஐந்து கவிஞர்கள் வெளியே வருவார்கள் என பாப்லோ நெரூதா வேடிக்கையாக சொன்னார்.

இந்தப் பின்னணியிலேயே நான் பொலான்யோவின் வருகையைப் புரிந்துகொள்கிறேன். விடிவெள்ளிக்காக காத்திருந்த தீர்க்கதரிசிகள் நடுவே அவரொரு மெஸ்ஸையா போல தோன்றினார். கவிதை என்கிற பெயரில் நான்கு வரிகளைக் கிறுக்கிவிட்டு, நூறு பக்கங்களைத் தேற்றியவுடன் முகவாய்க் கட்டையை உயர்த்திப் பிடித்தவாறு இறுமாப்பு கொள்கிற கத்துக்குட்டி கவிஞர்களுக்கு, புனைவின் அசலான பிரம்மாண்டங்களைக் காட்டினார். கொப்பளித்து வெடிக்கிற எரிமலையின் நெருப்புத் தழல் அருகே நின்றபடி மற்றவர்களை குனிந்து நோக்கினார். அவர் எரிமலைக் குழம்பாலான நதி. அது கடலில் அமிழும் போது வெண்புகை எழுவதைப் பார்க்க முடிந்தது. அதன் தகிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் புரண்டு படுத்த கடலின் அபயக்குரலைக் கேட்க முடிந்தது. நம்மால் ஆகக்கூடிய காரியம்தான் என்ன? நமது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பிரார்த்திப்பதைத் தவிர வேறென்னதான் செய்துவிட முடியும்? இந்த ஒப்பற்ற நிகழ்வுக்கு சாட்சியானதே மிச்ச வாழ்வுக்குப் போதாதா?

புனைவின் வழியாக பொலான்யோ கண்டடைகிற முகங்களும் உணர்ச்சிகளும் பாசாங்கில்லாமல் இருக்கின்றன. அவர் அடுக்கிவைக்கிற சம்பவங்களின் பேரமைதியில் ஒத்திசைந்திருக்கும் நுட்பமான ஆவேசத்தை எண்ணி வியக்காமல் எந்தப் பக்கத்தையும் நான் கடந்து சென்றதில்லை. நிகழ்ச்சி நிரல்களை வெறுமனே ஒப்புவித்துச் செல்லாமல் கதாபாத்திரங்களின் அடர்த்தியான எண்ணவோட்டங்களையும் உளவியற் சிக்கல்களையும் பகுக்கத் துணிந்திருக்கும் விதமும் அபாரமானது. அதற்காகவே பல்வேறு வகையான வெளிப்பாட்டு உத்திகளைப் பயன்படுத்துகிறார். மன விகாரங்களின் ஓயாத பொருமல்களின் முன்பு அதிகார ஆணவத்தின் ஊசலாட்டங்கள் எம்மாத்திரம்? மனிதர்களைப் பற்றின நமது உறுதியான அபிப்ராயங்களைக் குலைத்து, கொஞ்சம் மனக்கிலேசங்களைக் கூட்டியிருப்பதில், கலையின் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்வேன். பொலான்யோவிடமிருந்து வேறு மாதிரி திரண்டு வந்திருந்தால்தான் ஏமாந்திருப்பேன்.

இருளில் ஒளியைக் காணும் சொகுசும் கொடுப்பினையும் எல்லோருக்கும் எப்போதும் வாய்த்து விடுவதில்லை. பாதாளத்தின் அடியாழங்களில் சிறிய வெளிச்சப் பொட்டு தென்பட்டாலும் அதைக்கொண்டு மற்றவரை அளந்து பார்க்கவே முற்படுவோம். இன்னும் சொல்லப்போனால், நாம் நமது மனக்குகைகளில் விழிகள் மின்னக் காத்திருப்பதெல்லாம் அருகிலிருப்பவரை அஞ்சும் கூர்மையுணர்வின் வெளிப்பாடுதான். அதிலும், பேய்கள் அரசாளும் இக்கட்டான சூழ்நிலையில், தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, எந்த எல்லைக்கும் செல்ல அநேகம் பேர் தயாராக இருப்பார்கள். எவரையாவது அண்டிப் பிழைத்து, தமது சௌகரியங்களுக்கு ஏற்ப பிறரை வளைத்துப் போட்டு, சுற்றத்தையும் நட்பையும் சுரண்டித் தின்பதில் எந்தவிதமான கூச்சமும் உண்டாகப் போவதில்லை. நண்பர்கள் உளவாளிகளாக இருப்பார்கள். கையில் மதுக்கோப்பையுடன் கபடதாரிகள் வலம் வருவார்கள். உயரிய விழுமியங்களைப் பற்றி நமக்குப் பாடமெடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்புகிற வழியில் நம்மையே காட்டிக் கொடுப்பார்கள். அங்ஙனம் நேர்கையில் நமது நம்பிக்கைப் பிடிமானங்கள் அத்தனையும் சடுதியில் நழுவி விடுகின்றன. மானுடக் கரிசனம் பொய்த்துப் போகிறது. நம்மைச் சூழ்கிற நிச்சயமின்மையும் நிர்க்கதியும் திகிலூட்டுகிறது.

ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்குப் பலியாகி தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் அர்த்துரோவுக்குள்ளும் அத்தகைய எச்சரிக்கையுணர்வின் உறுமல்கள் எக்களித்தவாறே இருக்கின்றன. இதிலுள்ள அவலம் என்பது தன் கையாலாகாத நிலைமையை நினைக்கையில் அவன் மனத்துள் குறுகுறுக்கும் குற்றவுணர்ச்சியல்ல. மாறாக, வேறு யாரோ ஒருவரது பழி வேட்கையின் அங்கமாக அவன் உருமாறி விடுகிறான் என்பதுதான். பிழைத்திருத்தல் ஒன்றே நோக்கமாகி விட்ட பின் தேவைகளின் ஈடேற்றமே மனிதர்களை உய்விக்கிறது, இல்லையா? பினொஷேயின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்திருந்த காலம். இருபது ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. அப்போது பார்சிலோனாவில் வசித்துவந்த அர்த்துரோவை, அவனது உற்ற நண்பனான பிபியானோவின் (Bibiano O’Ryan) உதவியுடன், ரொமீரோ (Abel Romero) கண்டுபிடிக்கிறார். வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தப்பி மறைந்து தற்சமயம் பொந்துகளுக்குள் இடுங்கி வாழும் கார்லோஸ் வெய்தரைக் கொல்வதற்கு அர்த்துரோவின் உதவியைக் கேட்கிறார். ‘பழைய புண்ணை வீணாகக் கிளறி வம்பில் மாட்டிக்கொள்வானேன்?’ எனத் தயங்கும் அர்த்துரோவிற்கு பெரும் பணத்தை ஊதியமாக அளிக்க முன்வருகிறார். பேரம் படிகிறது.

பல வருடங்கள் கழித்து அவன் வெய்தரைச் சந்திக்கும் காட்சியைப் பற்றி என்னவென்று சொல்வது? ஒரு மின்னல்வெட்டின் அவகாசத்திற்குள் வரலாறே திரும்பிவிட்டிருக்கிறது. பீடத்தில் வீற்றிருந்தவர்கள் எல்லாம் படுகுழிக்குள் பிணமாகக் கிடக்கிறார்கள். எந்தச் சித்தாந்தமும் காலத்தின் விரிவின் முன்னே தோற்றாக வேண்டும். அதன் மர்மப் புன்னகையின் உதட்டு மடிப்புகளுக்குள் அடங்கியாக வேண்டும். விதிவிலக்குகளே இல்லை. ஒரு சமூக அமைப்பு பிழைத்திருப்பதற்கும் உய்வடைவதற்கும் தனி மனிதர்களின் பெருவிழைவே ஆதாரக் காரணமாக இருக்கிறது. அந்தத் தனிமனிதர்கள் ஒருங்கிணைந்து, ஒருவிதமான சமரசத்தை எட்டி, கூட்டாக நிலைகொள்கையில் அதிகாரப் படிநிலைகள் உருவாக்கப்படுகின்றன. யார் யாருக்கு எந்தெந்த இடம் எனத் தீர்மானித்து, அவரவர்களை அந்தந்த வட்டத்திற்குள் நிறுத்திவிட்டால், தங்களுடைய ஆணைகளைச் சுலபமாக நிறைவேற்றி விடலாம் என்கிற நப்பாசை பலருக்கும் இருந்திருக்க வேண்டும்.

அதிகார அமைப்பின் அடிப்படை நோக்கமானது மனித நல்லிணக்கத்தை மேம்படுத்தி எல்லோரையும் கொண்டாட்டமான வாழ்க்கைக்குத் தயார்படுத்துவது அல்ல. மனிதரின் விழைவை ஊதிப்பெருக்கி அந்த நெருப்பை அணைந்துவிடாமல் கண்காணிப்பதுதான். சித்தாந்தங்கள் தோன்றிய தொடக்க காலத்தில் என்னென்ன மாதிரியான முழக்கங்களை எழுப்பினார்கள் என்பதை நினைவூட்டிப் பாருங்கள். பழைய அமைப்பைத் தகர்த்துவிட்டாலே எல்லாம் மாறிவிடும் என்றார்கள். புரட்சி செய்து அனைத்தையும் புரட்டிப் போடுவோம் என கோஷமிட்டார்கள். வீதியில் நின்று வேடிக்கை பார்த்த நமக்கும் புல்லரிக்கத்தான் செய்தது. ஆனால், நடைமுறை யதார்த்தத்தில் அவை என்னவாக உருமாறின? புதிய இலட்சியவாதங்கள் ஆட்டிப்படைக்கும் போது கிளுகிளுவென்று இருந்ததா? முன்னதற்கு நிகரான அல்லது முன்னதைக் காட்டிலும் மோசமான பேரழிவுகளுக்கே அவை இட்டுச் சென்றன.

இந்த நாவலிலும் அப்படியோர் அமைப்பு இருக்கிறது. குடிமக்களின் நன்னடத்தையையும் அடிபணிதலையும் கோருகிற அமைப்பு. நட்பார்ந்த தோரணையுடன் நம் தோளை அணைத்தவாறு கழுத்தருகே (இரகசியமாக) கத்தியைப் பிடித்திருக்கும் தந்திரம் நிரம்பியது. நம்மைப் பயன்படுத்திய பிறகு, கடைசிச் சொட்டு இரத்தம் வரை கசக்கிப் பிழிந்த பிறகு, சக்கையாகத் துப்புவது அதன் வாடிக்கை. உதாரணத்திற்கு வெய்தரையே எடுத்துக்கொள்வோம். ஒருகாலத்தில், சிலேயின் கதாநாயகன். உயர்மட்டத் தொடர்புகள் உடையவன். உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்களுக்கு அணுக்கமானவன். அவன் கண்ணசைத்தால் போதும். பேரழகிகள் எல்லோரும் அவன்மீது விழுந்து புரள்வதற்குத் தயாராக இருந்தனர். ஆனால், கலை ஈடுபாட்டின் கிறுக்குத்தனங்களுக்கு வரையறை ஏது? தன்னுள் முகிழ்க்கும் கவிஞனுக்கும் கொலைகாரனுக்கும் இடையேயான அல்லாட்டத்தில் கலைஞனைத் தேர்வு செய்தது மட்டுமே அவன் கைக்கொண்ட ஒரே பிழை. அதிகார வர்க்கத்திற்கு அவனது கலைச் செயல்பாடுகள் உவப்பளிக்கவில்லை. அந்த அமைப்புக்காக அவன் தொண்டாற்றியதெல்லாம் சொடக்கு போடுகிற நேரத்திற்குள் மறக்கப்படுகின்றன. அவனைக் கைது செய்கிறார்கள். சிறையிலிருந்து அவன் தப்பித்துச் செல்கிறான். தேடப்படும் குற்றவாளியாகிறான். ரொமீரோவால் கொல்லப்படும் வரை அடையாளமற்ற அகதியாக வாழ்கிறான்.

இருபதாண்டுகள் கழித்து, ஒரு மதுக்கூடத்தின் மெல்லிய வெளிச்சத்தில், வெய்தரை அர்த்துரோ சந்திக்கும் போது அவனது கண்களில் உயிரே இல்லை. இருவருமே தங்களது தேசத்திலிருந்து துரத்தப்பட்டு வெகு தொலைவில் இருக்கிறார்கள். சர்வாதிகாரத்திற்கு ஆதரவானவனையும் எதிரானவனையும் ஒரே புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது காலம். விசித்திரம்தான்! அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ரொமீரோவுக்கு தகவல் தெரிவிக்கும் முன், அவனைக் கொஞ்ச நேரம் வேவு பார்க்கிறான் அர்த்துரோ. உடல் வலுவிழந்தும் தசைகள் சுருங்கியும் விட்டேற்றியான மனோபாவத்துடனும் அசிரத்தையான நடத்தையுடனும் அவன் காணப்படுகிறான். அவனது பார்வையில் ஒருவகையான வெறிப்பு நிரந்தரமாகத் தங்கி விட்டிருக்கிறது. இவன் இரத்த வேட்கையும் இரும்புறுதியும் கொண்ட பழைய வெய்தர் அல்ல. பல் பிடுங்கப்பட்ட நாகம். இப்போது இவனைக் கொல்வதில் எந்தப் பயனும் இல்லை. இத்தனை காலத்திற்குப் பிறகு இவனைக் காட்டிக்கொடுக்கவும் வேண்டுமா என்கிற சஞ்சலம் அர்த்துரோவின் மனதில் மெல்ல எட்டிப்பார்க்கிறது. ஓர் அரசியல் படுகொலைக்குத் துணைபோகவிருக்கிறான். அதுதான் உண்மையான காரணமா அல்லது தனிநபர் பழிவாங்கலா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கை நீட்டி காசு வாங்கியாகி விட்டது. இனிமேல் பின்வாங்க முடியாது. காரியத்தை முடித்துவிட்டுத் திரும்புகிற ரொமீரோவிடம், ‘வெய்தரை என்ன செய்தாய்?’ என வினவும் போது அர்த்துரோவின் குரலில் வேதனையின் சுவடே இல்லை. நீண்டகால பாரத்தை இறக்கி வைத்துவிட்ட ஆசுவாசம்தான் அவன் முகத்தில் புன்னகையாக மலர்கிறது.

காலத்தின் மட்டுறுத்தலில் நம் வாழ்வின் பூதாகர நிகழ்வுகள் கூட புள்ளியாய் மறைந்துவிடுன்றன. அதன் வெவ்வேறு பரிமாணங்களில் ஈக்களென மொய்க்கும் கோடான கோடி வாழ்க்கைகளை ஒற்றைச் சரடில் கோர்த்து வைப்பதே வரலாறு எனப்படுகிறது. அந்த வரலாற்றின் சீரான ஒழுக்கைப் பின்தொடர்ந்து கூராய்பவர்களுக்குத் தெரியும். அது பெருஞ்சுழிகளை நிரப்பிக்கொண்டு பாய்கிற நதிகளின் தொகுப்பு. அந்த நதியில் எறியப்படும் வைரங்களுக்கும் கூழாங்கற்களுக்கும் ஒரே பெறுமதிதான். காலத்தின் தாய்மடியில் அண்டுகிற பிள்ளைகளை அரவணைப்பதில் வேறுபாடு காட்ட முடியாது, இல்லையா? இங்குதான் ஓர் எழுத்தாளரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது. எதை கொண்டு சேர்க்க வேண்டுமோ, எதை அழுத்தமாக நிறுவ வேண்டுமோ, அதைக் கண்டெடுத்து வேரூன்றும் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது. ஒரு நல்ல எழுத்தாளரால் சாதாரண கூழாங்கற்களைப் பொறுக்கியெடுத்து திருப்தியடைய முடியுமா? அவர் வேண்டுவது மாணிக்கங்கள் அல்லவா? கரையிலிருந்து வலைவிரித்துக் காத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் கடலாழத்தில் முங்கி முத்தெடுத்தவராக பொலான்யோ சிறந்து விளங்கினார்.

பொலான்யோ

டிஸ்டண்ட் ஸ்டார் நாவலுக்குப் பிறகே அவர் The Savage Detectives-ஐ எழுதினார். அதிலும் அர்த்துரோ என்கிற கதாபாத்திரம் உண்டு. அதாவது, பெரிய நாவல்களைப் படைப்பதற்கான முன்னோட்டமாக இதை எழுதினார் எனச் சொல்லலாம். போர் விளையாட்டுகளை (Wargames) அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட The Third Reich நூலுக்கான விதையும் இந்த நாவலில் இருக்கிறது. (போர் விளையாட்டின் மூன்று படிநிலைகளைப் பற்றிய குறிப்பு வருகிறது. அந்த விளையாட்டை உருவாக்கியது வெய்தராக இருக்கலாம் என பிபியானோ சந்தேகிக்கிறான்) சிலேயின் கொடுங்கனவை விவரிப்பதன் ஊடாக அதன் முக்கியமான ஆளுமைகளை அறிமுகம் செய்கிறார். அந்நாட்டின் இலக்கிய வரலாறையும் கோடிழுத்துக் காட்டுகிறார். நிக்கனோர் பர்ரா, ஒக்டாவியோ பாஸ், அர்த்துரோ ப்ராட் (Arturo Prat – வக்கீலாகவும் கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றியவர். அவருக்கு இயேசுவின் முகச்சாயல்!) போன்ற பெயர்கள் அனாயசமாக வந்து விழுந்தவாறு இருக்கின்றன. அவை வெறுமனே பெயர் உதிர்த்தல்களாக அல்லாமல் சிலேயின் இலக்கியச் சூழல் குறித்த கூர்மையான விமர்சனங்களாகவும் இடித்துரைத்தல்களாகவும் அமைந்திருக்கின்றன.

இந்நாவலின் தொனியிலும் மொழிநடையிலும் ஒருவிதமான செய்தித்தன்மை விரவியிருக்கிறது. அது புனைவின் குணாம்சங்களை மட்டுப்படுத்தவும் உண்மைக்கு மிக அருகில் கொழுவியிருப்பதைப் போன்ற பாவனையை வாசகரிடையே தோற்றுவிக்கவும் வெற்றிகரமாக உதவியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பொலான்யோவின் சுயசரித நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே தூவப்பட்டிருப்பதால் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து சிறிதும் சந்தேகம் எழுவதில்லை. (பொலான்யோவும் கவிதைகள் எழுதியிருக்கிறார். சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். வேறு நாட்டிற்குத் தப்பியோடி இருக்கிறார். லொரென்சோவின் கதையைச் சொல்லும்போது – அவனும் கவிஞன் – தன்னுடைய கல்லீரல் அறுவை சிகிச்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.)

நகைச்சுவைத் தெறிப்புகளுக்கும் (“பொதுவுடைமைக் கவிதைகளை எழுதுவதாக பேர் பண்ணிக்கொண்டு அவமானத்திற்குரிய அற்ப வாழ்வையே அவன் வாழ்ந்து வந்தான். தனது பரிதாபத்திற்குரிய இருப்பின் வழியாக கோமாளித்தனங்களை அரங்கேற்றுவதைத் தவிர வேறெதையுமே அவன் செய்யவில்லை. அவனொரு வலதுசாரியாக வாழ்ந்திருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும்”, “பல் மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் நிலவும் அமைதி”) தத்துவ விசாரங்களுக்கும் (“An epiphany of madness”, “Pain is our only connection with life”) குறைவில்லை. இப்படி ஆசிரியரின் புத்திசாலித்தனங்களை விதந்தோதக் கூடிய ஏராளமான தருணங்கள் இருக்கின்றன. இந்த நாவலின் பலவீனமான அம்சம் என்பது பொலான்யோவின் அத்தனை படைப்புகளுக்கும் பொதுவானது. அது அவரது கதைக்களங்களும் பார்வைக் கோணங்களும் முழுக்க முழுக்க அறிவுசார் உலகின் நுண்ணுணர்வுத் தளத்திலேயே நிகழ்கின்றன என்பதுதான். அதில் சாமான்யர்களின் இருப்பை நுண்ணோக்கி வைத்து தேட வேண்டியிருக்கிறது.

நாவலை வாசித்து முடித்ததும் அர்த்துரோவுடனும் பிபியானோவுடனும் கார்மெந்திய சகோதரிகளுடனும் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது. மகிழ்ச்சிக்குக் கூட்டு, துயருக்குத் தனிமை என்கிற தேய்வழக்கைக் கேள்விப்பட்டிருப்போம். அதில் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. நம்முடைய இனிமை அத்தனையும் நான்கு சுவர்களுக்குள் முடிந்துவிடக் கூடியது. எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் அலை ஒதுக்கும் நுரையின் ஆவேசத்தை மணல் செரிக்கிற அவகாசத்திற்குள் நமது சந்தோஷங்கள் எல்லாம் மறைந்து விடும். அந்தத் தற்காலிகப் பூரிப்பைக் கண்டும் வயிறெரிபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், துயரம் இன்னும் பிரம்மாண்டமானது. ஏதோ ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் உழன்றிருந்தாலும் நான் தனியன் அல்ல. என்னைப் போன்ற கோடிக்கணக்கானவர்களின் கண்ணீருடன் நான் இணைந்திருக்கிறேன். ஒருவரையொருவர் மானசீகமாக உணர்ந்திருக்கிறோம். கை நீட்டுகிற தூரத்தில் புகை நடுவிலே அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னை உந்திச் செலுத்தி மேலெழுவதற்கு அந்த நினைப்பின் வலிமையே போதும். நம் மகிழ்ச்சியை சொற்ப நபர்களுடனேயே பகிர முடியும். ஆனால், துக்கத்தில் எவருமே பங்கெடுக்கலாம். ஒட்டுமொத்த மானுடமும் அத்தகைய கருணையின் தீண்டலிலேயே உயிர்த்திருக்கிறது.அந்தக் கருணையைப் பற்றிக் கொண்டு பலவீனமான தாவீதுகள் சிலிர்த்தெழுவார்கள். கோலியாத்துகள் வீழ்த்தப்படுவார்கள்.

(சொல்வனம் பொலான்யோ சிறப்பிதழில் வெளியான எனது கட்டுரை)

1 comment

K Chitra September 9, 2021 - 12:51 pm

எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள். என் சொற்களின் பலவீனம் எனக்கு புரிவதால் மேற்கொண்டு எழுத விரும்பவில்லை. கோடியில் ஒருவருக்கே வாய்க்கும் நுண்ணறிவு வாய்க்கப் பெற்றவர் நீங்கள். ❤

Comments are closed.