கடைசியாக எப்படியோ அப்பா தப்பியோடிவிட்டார் – புரூனோ ஷூல்ஸ் – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்

0 comment

இது நடந்தது, எங்களுடைய வியாபாரம் நொடித்துப்போன நேரத்தில், இறுதியும் கையறுநிலையும் கொண்ட ஒரு பரிபூரண தகர்ப்புக் காலத்தில். எங்கள் கடையின் மேலிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, பாதியளவு கீழிறக்கப்பட்ட ஷட்டர்களுடன், எஞ்சியிருந்த பொருட்களை வைத்து, யாருமறியாமல் கடையின் உள்ளேயிருந்தபடி, வியாபாரத்தை நடத்திவந்தாள் என் அம்மா. அடெலா அமெரிக்காவுக்குப் போனாள். அவள் பயணித்த படகு மூழ்கிவிட்டதாகவும், பயணிகள் எல்லோருமே உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வதந்தியை விசாரித்து உண்மையை அறிய எங்களால் முடியவில்லை. ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றிய அனைத்து தடையங்களும் மறைந்துவிட்டன. அவளைப் பற்றிய செய்தி, மறுபடியும் எப்போதும் எங்களுக்கு எட்டவில்லை.

ஒரு புதிய யுகம் பிறந்தது – வெறுமையான, எழுச்சியற்ற, மகிழ்ச்சியற்ற, ஒரு வெற்றுக் காகிதம் போன்ற யுகம். புதிய வேலைக்காரப் பெண்மணி, சோகையாய், வெளுத்து, எலும்பற்றவளாய், அறைகளைக் குறித்து முனகிக்கொண்டேயிருக்கும் ஜென்யா. அவளை யாராவது பின்புறமாகத் தட்டிவிட்டால், வளைந்து நெளிந்து, ஒரு நாகத்தைப் போல் படமெடுப்பாள் அல்லது பூனையைப் போல் பிறாண்டிவிடுவாள். மங்கிய வெண்நிற மேனியையுடைய அவளுக்கு, அவளது கண்ணிமைகளின் உட்புறம்கூட வெளுமையாய் இருக்கும். அவள் மிகுந்த மறதிக்குணம் கொண்டவள். பழைய கடிதங்களையும் விலைப்பட்டியல்களையும் கொண்டு, வெண்ணிற சாஸைத் தயாரித்து விடுவாள். அது தின்ன முடியாததாயும் பிசுபிசுப்பாயும் இருக்கும்.

இந்தக் காலத்தில்தான், உறுதியாக, என் அப்பா செத்திருக்க வேண்டும். அவர் பல தடவைகள் செத்திருக்கிறார். அவரது இறப்பைப் பற்றிய உண்மையைக் குறித்த எங்களது பார்வைகளை, மறுபரிசீலனை செய்ய, எங்களை உந்தித்தள்ளும் சில ஒதுக்கீடுகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதற்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கும். அவரது மரணத்தை தவணைமுறைகளாகப் பிரித்துக்கொள்ளும் வகையில், அவரது மறைவு குறித்து அப்பா எங்களைப் பழக்கப்படுத்தியிருந்தார்.

அவரது திரும்பிவருதல் குறித்து நாங்கள், போகப்போக அக்கறை எடுத்துக்கொள்ளாதவர்களாக ஆனோம் – ஒவ்வொருமுறையும் அது குறுகிக்கொண்டே வந்தது, ஒவ்வொன்றும் மேலும் கவலைக்கிடமாகவே ஆனது. அவரது தோற்றங்கள், அவர் வாழ்ந்துவந்த அறை முழுக்க முன்னதாகவே சிதறியிருந்தன. அதில் தளிர்விட்டிருந்தன. சில வேளைகளில் மிகவும் அழுத்தமான தோற்றச் சாயல்களைக் கொண்ட விசித்திரமான முடிச்சுகளைப் படைத்தன. நரம்பத்தளர்ச்சியால் ஏற்பட்ட முக இசிவுகளை, சுவர்க்காகிதங்கள் சில இடங்களில் போலிசெய்தன. அதிலிருந்த பூ வேலைப்பாடுகள், அவரது துயரார்ந்த தன்மைகொண்ட புன்னகையை, முச்சுற்றுடலையுடய தொல்லுயிரூழி விலங்கின் – டிரைலோபைட்டின் – தொல்படிவப் பதிவு போன்ற செவ்வொழுங்கு முறையை, தம்மில் ஏற்படுத்திக்கொண்டன.

கொஞ்ச காலம், மரநாய்த் தோலால் பட்டியிடப்பட்ட அவரது கம்பளிக் கோட்டுக்கு,  அகன்ற ஒரு படுக்கையை அளித்தோம். அந்த கம்பளிக்கோட்டு உயிர்த்து மூச்சுவிட்டது. சிறு விலங்குகளின் பயப்பீதிகளை ஒன்றாக்கித் தைக்கப்பட்ட அதில், கையறுநிலையில் அவை, இழுப்பினால் அதன் உள்ளே போகையில் ஒன்றையொன்று பிறாண்டிக்கொண்டு கம்பளிமயிரின் கட்டுக்குள் தம்மையிழந்து போயிருந்தன. அதன்மேல் யாராவது காது வைத்துக் கேட்டால், தூங்கும் விலங்குகளின் இனிய சீறல்களின் இசையொழுங்கைக் கேட்க முடியும். நன்றாகப் பதப்படுத்தப்பட்ட அந்த வடிவத்தில். மரநாயின் இலேசான வாசனையின் மத்தியில், வேட்டைக் கொலை, இரவுநேரக் கலவிகள் ஆகியவற்றின் இடையில், என் அப்பா பல ஆண்டுகளாக தம்மை இழந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படித் தன்னை இழக்கவில்லை.

ஒரு நாள், சிந்தனையில் ஆழ்ந்த முகத்துடன், நகரத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தாள் அம்மா. “இதோ பார் ஜோசப்,” என்று சொன்னாள், “என்ன ஒரு அதிர்ஷ்டமான,  தற்செயலான நிகழ்ச்சி? நான் அவரைப் படிக்கட்டின்மேல் பிடித்தேன், படிக்குப் படி தாவிக்கொண்டு இருந்தார்-” தட்டில், கைக்குட்டையால் மூடியிருந்த ஏதோ ஒன்றை, அதை விலக்கித் தூக்கிக்காட்டினாள். நான் உடனே அவரைத் தெரிந்து கொண்டேன். இப்போது அவர் ஒரு நண்டாகவோ அல்லது ஒரு பெரிய தேளாகாவோ இருந்தபோதும், அவரது அந்தச்  சாயல் மிகத் துல்லியமானது. அம்மாவும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். உருமாற்றம் நிகழந்தபின்னும் கூட, சாயல் மிகவும் வியக்கத்தக்கதாய் ஒன்றியிருந்தது.

“அவர் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்டேன்.

“நிச்சயமாக. என்னால் அவரைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவரைக் கீழே தரையில் இறக்கி வைக்கட்டுமா?”

தட்டை அவள் கீழே வைத்தாள். அவரது மேலாக குனிந்தபடி, அவரை நாங்கள் நெருங்கிப் பரிசோதித்தோம். அவரது கணக்கற்ற வளைந்த கால்களுக்கு இடையில், ஒரு குழிந்த இடம் இருந்தது. அதனால் அவர் மெதுவாக நகர முடிந்தது. உயர்த்தியிருந்த அவரது கொடுக்குகளும் உணர்கொம்புகளும், எங்களைக் கவனிப்பது போல் தோன்றின. நான் தட்டைக் கவிழ்த்தேன். அப்பா, ஒருவிதத் தயக்கத்துடன் எச்சரிக்கையாக தரைக்கு நகர்ந்தார். தனக்குக் கீழ் இருந்த தட்டையான தரைதளத்தைத் தொட்டதும், தனது எல்லாக் கால்களாலும், தீடீரென்று ஒரு ஓட்டத் தொடக்கத்தை அவர் மேற்கொண்டார். ஒட்டுத்தோலுடைய இணை உடலி உயிர் வகையிலான அவரது இணைப்புகள் ஒருவித சடசடப்பு ஓசையை உண்டாக்கின.

அவரது வழியை நான் மறித்தேன். அவர் தயங்கிவிட்டு, தனது உணர்கொம்புகளால் தரையைப் பரிசீலித்த பிறகு, தனது கொடுக்குகளைத் தூக்கிக்கொண்டு பக்கவாட்டில் திரும்பினார். தான் தேர்ந்தெடுத்த திசையில், அவருக்கு உறைவிடம் தரும் எந்தச் சாமான்களும் அற்ற இடத்திற்கு, நாங்கள் அவரை ஓடவிட்டோம். தமது பல கால்களால் அலைபோன்ற வேகத்தில் தாவி ஓடியபடியே, சுவரை அடைந்தார். நாங்கள் அவரைத் தடுத்து நிறுத்துமுன், எங்கும் தாமதித்து நிற்காமல், அதன்மேல் எளிதாக ஏறி ஓடினார். சுவர்க்காகிதத்தின் மேல் அவரது முன்னேற்றத்தை நான் கவனித்தபடி இருந்தபோது,  இயல்பாக எனக்குள் ஒரு அருவருப்பு அதிர்ந்தெழுந்தது. இதற்கிடையில், சமையல் அறையின் வசதிக்காக மேலே கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய அலமாரியை அடைந்திருந்தார். அதன் முனையில் ஒரு கணம் தொங்கி, கொடுக்களால் அந்தப் பிரதேசத்தைப் பரிசோதித்த பின்பு, அதற்குள் ஊர்ந்து புகுந்தார்.

ஒரு நண்டின் புதிதான கண்டறிதல்முறையில், புதிதாக அந்த அபார்ட்மெண்டை அவர் கண்டுகொள்ளலானார். கவனமாகச் சரிபார்ப்பதோடு, தனது வாசனை உணர்வாலும், எல்லாப் பொருள்களையும் அவர் கண்டறிந்தார் என்பது புலப்பட்டது. தனது வழியில் எதிர்ப்பட்ட பொருள்களை, அவர் எச்சரிக்கையாகவும் கவனமாகவும், தீர்மானம் செய்வதுபோல் தோன்ற, நின்றுநின்று தமது உணர்கொம்புகள் மூலம் அவற்றை உணரலானார். பின்பு, அவற்றைப் பரிசோதிப்பது போலவும் உறவாடுவது போலவும், தம் கொடுக்குகள் மூலம் அணைத்துக்கொண்டார். அதன்பிறகு, அவர் அவற்றை விட்டுவிட்டு, தம் அடி வயிற்றைத் தனக்குப் பின்பாக இழுத்துக்கொண்டு, தளத்திலிருந்து இலேசாக அதை உயர்த்தியபடி, தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார்.

துண்டுதுணுக்குகளிடமும், அவர் சாப்பிடுவார் என்ற நம்பிக்கையில் தரையில் அவர்முன் எறிந்த மாமிசத் துணுக்குகளிடமும், அக்கறையான பரிசோதனையை அவற்றுக்கு அளித்துவிட்டு, அவை உண்பதற்கானவை என்ற அறிதலை அடையாமல், அவர் தொடர்ந்து ஓடினார். அறை பற்றிய அவரது இந்தப் பொறுமையான அளவிடல்களைப் பார்த்தால், பிடிவாதமாகவும் சலிப்பே இல்லாமலும் அவர் எதையோ பார்த்துக்கொண்டிருப்பதாக ஒருவருக்கு தோன்றக்கூடும். சிலவேளைகளில், நேரத்திற்கு நேரம், சமையலறையின் ஒரு மூலைக்கு ஓடி, நீர் ஒழுகிக்கொண்டிருக்கும் பீப்பாயின் கீழ ஒளிந்துகொண்டு, தேங்கிய நீரை எட்டிப் பிடித்துக் குடிப்பது போலவும் தோன்றும்.

சில வேளைகளில், நாள் முழுக்க அவர் மறைந்து கொள்வார். சாப்பாடில்லாமல் அவரால் நன்றாகத் தம்மை நிர்வகிக்க முடிந்தது போலத் தோன்றியது. ஆனால், அவரது சக்தியை இது பாதிக்க முடியாததாகவும் தோன்றியது. அவமானமும் அருவருப்பும் கலந்த உணர்வுகளுடன், இரவு வேளையில் அவர் படுக்கைக்குள் வந்துவிடக்கூடும் என்ற எங்களது இரகசியமான பயத்தை, பகல் பொழுதுகளில் நாங்கள் ஒளித்து வைத்திருப்போம். ஆனால், பகல் நேரங்களில், எல்லாவிதத் தட்டுமுட்டுச் சாமான்களின் மேலும் அவர் உலாவுவார் என்றாலும், இது நிகழவில்லை. துணி அலமாரிகளுக்கும், சுவருக்கும் இடையிலுள்ள இடங்களில் தங்கி இருப்பதையே குறிப்பாக அவர் விரும்பினர்.

ஒருவித காரணகாரியத் தோற்றத்தையும் சிரிக்கவைக்கும் உணர்வையும், எங்களால் நீக்கிக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, உணவு  வேளைகளினின் போது சாப்பாட்டு அறையில் தாம் தோன்றுவதை அவர் தவறவிட்டதே இல்லை. அவரது பங்களிப்பு என்பது அப்போது வெறும் குறியீட்டு ரீதியானது என்பதாக இருந்தது. சாப்பாட்டு அறையின் கதவு சந்தர்ப்பவசமாய் சாப்பிடும் நேரத்தில் மூடியிருந்தால், அவர் அடுத்த அறையில் தனித்து விடப்படுவார். அவருக்காக கதவை நாங்கள் திறந்துவிடும் வரை கதவின் அடியில் பிறாண்டுவார். அதன் சந்துக்கு நேராக முன்னும் பின்னும் ஓடுவார். கொஞ்ச காலத்தில், கதவுக்கு அடியில் தமது கொடுக்குகளையும் கால்களையும் எவ்வாறு நுழைப்பது என்பதை அவர் கற்றுக்கொண்டார்.

அதன்பிறகு, சில விரிவான முயற்சிகளுக்குப் பிறகு, கடைசியாக, சாப்பாட்டறைக் கதவின் பக்கவாட்டில் தன் உடலை நுழைத்து, அதன் வழியாக உள்ளே வருவதில் அவர் வெற்றி அடைந்தார். அது அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தோன்றியது. மேசைக்கு அடியில் அவர் வந்து நின்று, அவரது அடி வயிறு மெதுவாகத் துடிதுடிக்க, அசைவற்றுப் படுத்திருப்பார். இலயத்தோடான இந்தத் துடிதுடிப்புக்கு என்ன அர்த்தம் என்று எங்களால் கற்பனை செய்ய முடியவில்லை. அது ஆபாசமாக, விஷமத்தனமானதாக, ஆனால் அதேசமயம் வெகுவாக ஒட்டுமொத்தமாக, ஆசை நிறைவடைந்த திருப்தியை வெளிப்படுத்துவதாகவும் தோன்றியது. எங்களது நாய் நிம்ராட், அவரை மெதுவாக நெருங்கும். தீர்மானம் இல்லாமல், ஜாக்கிரதையாக அவரை முகர்ந்துபார்த்து தும்மும். எந்த முடிவுக்கும் வரமுடியாதது போல அசட்டையாகத் திரும்பிச் செல்லும்.

இதற்கிடையில், எங்களது குடும்பத்தில் முறைகேடுகள் அதிகரித்து வந்தன. ஜென்யா, நாள் முழுக்கத் தூங்குவாள். அவளது ஆழ்ந்த மூச்சில், மெல்லிய உடல், எலும்பற்று அலைவுறும். காய்கறிகளுடன் சேர்த்து யோசனையற்று அவள் கலந்துவிட்ட பருத்தி நூல் சுருள்களை, சூப்பில் அடிக்கடி நாங்கள் கண்டுபிடிப்போம். இரவும் பகலும் ஓய்வில்லாமல் திறந்திருக்கும் எங்கள் கடையில், சிக்கலான பேரங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் இடையில், தொடர்ந்து விற்பனை நிகழும். இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக, சாரலஸ் மாமா தங்குவதற்காக இங்கு வந்து சேர்ந்தார்.

அவர் விசித்திரமான முறையில் மனச்சோர்வுடனும் மௌனமாகவும் இருந்தார். ஒரு பெருமூச்சுடன், தனது அதிருஷ்டமற்ற அனுபவங்களைப் பற்றிக் கூறி,  தமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க முடிவுசெய்திருப்பதாகவும், மொழிகளைக் கற்பதற்குத் தம்மை அர்ப்பணித்துக்கொள்வதாகவும் அவர் அறிவித்தார். எப்போதும் வெளியில் செல்லாமல், மிகத் தொலைவில் இருந்த ஒரு அறையில் அவர் – எங்களது விருந்தாளியை ஜென்யா ஏற்றுக்கொள்ளாதது போலவே, அந்த அறையிலிருந்த எல்லாத் தளவிரிப்புகளையும் திரைகளையும் அவள் நீக்கித்தர – தம்மைத் தாழிட்டுக்கொண்டவராய் இருந்தார். அங்கே அவர் தன் நேரத்தை, பழைய விலை விபரப் பட்டியல்களைப் படிப்பதில் செலவழித்தார்.

பலதடவை அவர், வேண்டுமென்றே அப்பாவின்மேல் மிதிப்பதுபோல் பாவனை செய்வார். பயங்கரத்தால் கூச்சலிட்டபடியே, அப்படிப்பட்ட செய்கையை நிறுத்தும்படி அவருக்குச் சொன்னோம். அதன்பிறகு, அவர் கோணலாகத் தமக்குள் சிரிப்பதை மட்டுமே செய்தார். அப்பா, தனக்கு நிகழவிருந்த அபாயத்தைப் பற்றிய உணர்வேயில்லாமல், தளத்திலுள்ள சில கறைப்புள்ளிகளை ஆராய்ந்தபடி, சுற்றித் திரிந்தார்.

என் அப்பா, தமது கால்களில் நடந்தபோது இருந்ததைப் போலவே, விரைவாகவும் தங்குதடையற்றும் போய்வந்தாலும், எல்லா நண்டுவகைகளைப் போலவே, அவற்றின் குணாம்சங்களைப் பகிர்ந்தவர் போல், பின்புறமாகத் திருப்பிப்போடப்படும் போது பெரிதும் அசைவற்றுவிடுவார். தனது எல்லாக் கைகால்களையும் பரிதாபமாக அசைத்தபடி, தமதான ஒரு சொந்த அச்சில் சுழன்றபடியே, உதவியற்று சுற்றுவருவதைப் பார்க்கும்போது, துக்ககரமாகவும் பரிதாபமாகவும் இருக்கும். அவரது உடல்கூறின் மறைக்கப்பட்ட, ஏதும் வெட்கமற்ற எந்திர அமைப்பை, சுவாசத்தால் சுருங்கி விரியும் வயிறு முழுமையாக வெளித்தெரிவதை, நாங்கள் பார்ப்பதிலிருந்து கண்களை மீட்க, மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், அப்பாவை மிதித்துத் துவைக்க தம்மை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டார் சார்லஸ் மாமா. கையில் கிடைத்த ஏதாவது ஒரு பொருளோடு, அவரைத் தப்பிக்க வைக்க நாங்கள் ஓடுவோம். தனது முட்கரங்களால் அதைப் பிடித்துக்கொண்டு விரைவில் தமது பழைய நிலைக்கு அவர் வந்துவிடுவார். உடனே அவர் தமது மின்னல் வேகக் குறுக்கும் நெடுக்குமான ஓட்டத்தை, காணச் சகிக்காத வீழ்ச்சியை, தனது நினைவிலிருந்து துடைத்தழிக்க நினைப்பவரைப் போல், இரட்டிப்பான வேகத்தில் தொடர்வார்.

நம்பமுடியாத அச்செயலை, உள்ளபடியே அறிவிக்க, என்னை நான் நிர்பந்தித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தநாள் வரை, நாங்கள் எப்படி அந்த பிரக்ஞைபூர்வமான குற்றத்தை, எனது நினைவு இப்போதுகூட சுருங்க முனையும் நம்பவியலாத ஒரு காரியத்தைச் செய்தவர்களானோம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு விசித்திரமான விதிவசம், எங்களை அதை நோக்கி உந்திச் சென்றிருக்க வேண்டும். பிரக்ஞையையோ அல்லது மனோ சக்தியையோ விதியால் தவிர்த்திருக்க முடியாது என்றாலும், அவற்றை அதன் இயக்கவியல் மூழ்கடித்துவிட்டது. சாதாரண சந்தர்ப்பங்களில் எங்களை பயங்கரத்தில் ஆழ்த்தக்கூடிய, ஆகவே நாங்கள் ஒத்துக்கொள்ளவும் அனுமதிக்கவும் முடியக்கூடாத விசயம், ஒரு ஹிப்னாடிஸ மயக்கத்தில் நிகழ்ந்துவிட்டது.

மோசமாக நடுநடுங்கியபடி, நிர்க்கதியாய், என் அம்மாவை நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். “அதை எப்படி உன்னால் செய்ய முடிந்தது. ஜென்யா அதைச் செய்திருந்தாலும் –  ஆனால், நீ – நீயும் கூடவா?” அம்மா தமது கைகளைப் பிசைந்து கொண்டு கதறினாள். அவளால் எந்தப் பதிலையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அப்பா நல்லவிதமாய் முடிவு அடைவார் என்று அவள் நினைத்தாளா? நம்பிக்கையற்ற சூழ்நிலையில் ஒரே ஒரு தீர்வாக அந்தச் செயலை அவள் கண்டடைந்தாளா? அல்லது கற்பனை செய்ய முடியாத சுயநினைவு அற்ற நிலையிலும் அற்பத்தனத்திலும் இருந்து அதை அவள் செய்தாளா? விதி, அதன் ஆழம் காணவும் சகிக்க முடியாததுமான ஓராயிரம் தந்திரங்களில் ஒன்றை, எங்கள் மேல் திணிக்கத் தேர்ந்ததா?

ஒரு தற்காலிக இருள் சூழ்தல், கவனமின்மையின் ஒரு தருணம் அல்லது குருட்டுத்தனம் போதுமானது. பசப்பலானதும் மெல்ல நுழைக்கக்கூடியதுமான ஒரு நடவடிக்கையை, இரு பேரிடர்களுக்கு இடையிலான – ஸ்கைல்லாவுக்கும் ஸாரிக்டிஸுக்கும் – ஆறுதலைப் பூதத்திற்கும் அழிகடற்சுழிக்கும் – இடையில் தப்பிக்கும் தீர்மானத்தைச் செய்திருக்கிறோம். அதன்பிறகு, தீர்க்கதரிசனத்துடன் நாங்கள் அந்தச் செயலை முடிவற்று ஆராய்ந்து இருக்கிறோம். எங்கள் நோக்கங்களை விளக்கியிருக்கிறோம். எங்கள் உண்மையான நோக்கங்களைக் கண்டுபிடிக்க முயன்றிருக்கிறோம். ஆனால், இச்செயல் திரும்ப உயிர்ப்பிக்க முடியாததாகவே இருந்திருக்கிறது.

ஒரு தட்டின் மீது அப்பா உள்ளே கொண்டுவரப்பட்ட போதுதான்,  எங்கள் சுயநினைவுக்கு நாங்கள் திரும்பி, என்ன நடந்துள்ளது என்ற முழுமையான புரிதலுக்கு வந்தோம். பெரிதாகவும் வேக வைத்ததால் உப்பியும், வெளுத்த சாம்பல் நிறத்தில் பாகுபோல அவர் கிடந்தார். நாங்கள் மௌனமாக, பேச்சற்றுப்போய் அமர்ந்திருந்தோம். சார்லஸ் மாமா மட்டும் தட்டைநோக்கி தன் ஃபோர்க்கை உயர்த்திவிட்டு, ஆனால் நிச்சயமில்லாமல் உடனே அதைக் கீழே வைத்துவிட்டு, எங்களைக் கேள்விக்குறியுடன் நோக்கினார். அதை, உட்காரும் அறைக்கு எடுத்துச் செல்ல அம்மா உத்தரவிட்டார். அதன்பின், அங்கே அது, மேசையின்மேல் ஒரு வெல்வெட் துணியால் மூடப்பட்டு, குடும்பத்துப் புகைப்பட ஆல்பத்திற்கும் இசை எழுப்பும் ஒரு சிகரெட்டுப் பெட்டிக்கும் அருகில் வைக்கப்பட்டிருந்தது. எங்கள் எல்லோராலும் தவிர்க்கப்பட்டு, அது அங்கே சும்மா கிடந்தது.

ஆனால் எனது அப்பாவின் உலகியலான அலைதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அடுத்த பயண நிலுவை – கதையின் விரிதலுக்காக அனுமதிக்கப்பட்ட எல்லைக்கும் எட்டாத விதத்தில் – எல்லாவற்றையும்விட மிகவும் வலிதரக் கூடியது. ஏன் அவரால் அதை விடமுடியவில்லை, விதியானது சுத்தமாகத் தன்னை அவமானப்படுத்தியதற்கு மேல் போகாதிருந்தும், தான் தோற்கடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள அனைத்துவித காரணங்கள் இருந்தும், ஏன் அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை? பல வாரங்களுக்கு மேல் அசையாமல் உட்காரும் அறையில் இருந்தபிறகு, அவர் எப்படியோ புத்தூக்கம் பெற்று, மெதுவாகச் சுகமாகி வருவதாகத் தோன்றியது. ஒருநாள் காலை, அந்த இடம் காலியாக இருப்பதை நாங்கள் கண்டோம்.

அவர் தப்பிப்போய் விட்டதற்கான அறிகுறிகளுடன், கால் ஒன்று தட்டின் முனையில், உறைந்துவிட்ட கொஞ்சம் தக்காளி சாஸிலும் மசியலிலும் கிடந்தது. சமைக்கப்பட்டும், வழியில் தனது கால்களை உதிர்த்துவிட்டும் சென்றிருந்தாலும், தனது மிச்சமுள்ள வலிமையால், வீடற்ற அலைதலை எங்கோ தொடங்குவதற்கு, அவர் தன்னை இழுத்துக்கொண்டே போய்விட்டார். மீண்டும் நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை.

*

ஆசிரியர் குறிப்பு: புரூனோ ஷுல்ஸ் (Bruno Schulz: 1892 – 1942), போலந்து.

எதார்த்தத்தைப் புரணிக – கனவுத்தன்மையுடன் படைத்த இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த போலிஷ் மொழிப் படைப்பாளி, விமர்சகர், ஓவியர், ஓவியக்கலை ஆசிரியர். ஆஸ்ட்ரோ – ஹங்கேரிய அரசில் காலிசியா பிராந்தியத்தைச் சேர்ந்த Drohobycz-ல் ஒரு யூதக் குடும்பத்தில், துணி வியாபாரிக்கு மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கலைகளில் ஆர்வமிருந்தது. 1902 முதல் 1910 வரை கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்று, பின்பு ஒரு பாலிடெக்னிக்கில் கட்டடக் கலை கற்கலானார். அவரது கல்வி 1911ஆம் ஆண்டில் நோய் காரணமாகத் தடைபட்டது. உடல்நிலை தேறி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1913ல் அவர் மீண்டும் படிக்கலானார். 1917ல் சிறிதுகாலம் வியன்னாவில் கட்டடக் கலை பயின்றார்.

முதல் உலகப்போர் முடிவடைந்த பிறகு, Drohobycz-ல் இருந்த கலிசியா பிராந்தியம் போலந்திற்குத் திருப்பித் தரப்பட்டது. 1924லிருந்து 1941 வரை ஒரு போலிஷ் பள்ளியில் வரைகலையைக் கற்பித்தார். அவரது வருமானத்திற்கான ஒரே தொழிலாக அது இருந்ததுதான் காரணம். ஆசிரியர் தொழில் பிடிக்கவில்லை என்றாலும், அவரது பணி அவரது சொந்த ஊரில் அவரைத் தக்க வைத்தது.

தனது அசாதாரண கற்பனை மூலம் இன அடையாளத்தையும் தேசியத் தன்மையையும் அவர் உருவாக்கினார். ஜெர்மன் மொழியில் கைதேர்ந்தவர் என்றாலும், ஈட்டிஷ் மொழி இன்னும் அறிமுகமில்லாதிருந்ததால், போலிஷ் மொழியில் எழுதிய, யூதக் கலாச்சாரத்தில் மூழ்கிய ஒரு யூதர் அவர். அவரிடம் நகர்ப்பொதுமைத் தன்மை எதுவும் இல்லை. அவருடைய மேதமை குறிப்பிட்ட உள்ளூர் – இன மூலாதாரங்களைக் கொண்டு தனிமை பெற்றது. ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசு, போலந்து, சோவியத் ஒன்றியம், உக்ரைன் என்று அவர் தனது வாழ்நாளில் நான்கு நாடுகளின் சொந்தமாக இருந்தாலும், அவரது மாகாணத்தை, சொந்த ஊரை விட்டுப்போக அவர் விரும்பியதில்லை. வெளியிலிருந்து கணிப்போருக்கு அவரது வாழ்க்கை பெரும்பாலும் ஒரு சந்யாசித்தனமான, சம்பவங்களற்றதான, மூடுண்ட வாழ்க்கையாகவே இருக்கும்.

அவருடைய ஆரம்பகாலச் சிறுகதைகளை வெளியிடுவதற்கு சக தோழர்கள் ஊக்கம் அளிக்கவில்லை. ஆனால், அவரது தனித்த வாழ்க்கை, அவரது குடும்பம், பழகிய மக்களின் வாழ்க்கை விவரங்கள் என்று மிக நுணுக்கமாகவும் நூதனமாகவும் ஒரு நண்பருக்கு எழுதிய பல கடிதங்கள் நாவலாசிரியர் Zofia Nałkowska-வின் கவனத்திற்கு வந்தன. அவள், அவை சிறு புனைகதைகளாக வெளியிடப்பட ஊக்குவித்தாள். அவை 1934ஆம் ஆண்டில் ‘இலவங்கக் கடைகள்’ (Sklepy Cynamonowe) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன. ஆங்கிலம் பேசும் நாடுகளில், அது பெரும்பாலும் முதலைகளின் தெரு என அறியப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ‘Sanatorium’ வந்தது. மூல வெளியீடுகள் ஷூல்ஸினுடைய சித்திரங்களுடன் விளங்குகின்றன. 1936ல் அவரது வருங்கால மனைவி Ozefina Szelińska-க்கு, பிரான்ஸ் காஃப்காவின் விசாரணை நாவலை போலிஷ் மொழியில் மொழிபெயர்க்க உதவினார். 1938ல் இலக்கியத்திற்கான மதிப்புமிக்க கோல்டன் லாரல் விருதை அவருக்கு போலிஷ் அகாடமி வழங்கியது.

1939ல், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த Drohobycz-ல்தான் வசித்து வந்தார். அவர் மெசியா என்ற நாவலை எழுதிவந்ததாக அறியப்பட்டது. ஆனால் அதன் கையெழுத்துப் பிரதி பற்றி எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜெர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து, ஒரு யூதர் என்று அறியப்பட்ட அவர், Drohobycz-ன் ஒரு வதைமுகாமில் வாழும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அவரது சித்திரங்களால் கவரப்பட்ட ஃபெலிக்ஸ் லாண்டவ் என்ற ஒரு நாஜி கெஸ்டபோ அதிகாரியின் பாதுகாப்பில் தற்காலிகமாக இருந்தார். அவரது வாழ்க்கையின் கடைசி வாரங்களில், Drohobycz-ல் உள்ள லாண்டவ் வீட்டின் ஒரு சுவரில் முயூரல் ஓவியங்கள் அவரால் வரையப்பட்டிருந்தன. விரைவில் வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது, அவர் மற்றொரு கெஸ்டேப்போ அதிகாரி கார்ல் குந்தர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். குந்தரின் பிரியத்துக்குரிய யூதரான ஒரு பல் மருத்துவரை லாண்டவ் கொன்றதன் போட்டியாக இது நிகழ்ந்தது. ஷூல்ஸின் சுவரோவியம் பூசப்பட்டு மறக்கப்பட்டது.

ஷுல்ஸினால் எழுதப்பட்டவை சிறிய அளவே உள்ளன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மட்டுமே வெளிவந்தன. சேகரிக்கப்பட்ட கடிதங்களும், பத்திரிகைகளில் எழுதிய விமர்சன கட்டுரைகள் சிலவும் 1975ல் போலிஷ் மொழியில் வெளியிடப்பட்டன. 1940களின் முற்பகுதியில் பத்திரிகைகளில் வெளியிட அனுப்பப்பட்ட சிறுகதைகள், அவரது முடிக்கப்படாத நாவல் மெசியா உட்பட, எல்லாம் தொலைந்து போய்விட்டன.

ஷுல்ஸின் கதைகள் 1957ல் வெளியிடப்பட்டு, பின்பு பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கில மொழிபெயர்ப்புகளாக முன்னணிப் பதிப்பாளர்களால் பிரசுரிக்கப்பட்டன. Celina Wieniewska மொழிபெயர்ப்பில் The Street of Crocodiles (1963 – Sklepy Cynamonowe / Cinnamon Shops), Sanatorium Under the Sign of The Hour-Glass (1988 –  The Hour-Glass Sanatorium / Pod Klepsydrq) (ஜான் அப்டைக் முன்னுரையுடன்) வெளிவந்தன. இரு தொகுதிகளும் இணைந்து The Complete Fiction of Bruno Schulz என்ற பெயரில் 1989ல் வெளிவந்தது.

ஷுல்ஸின் எழுத்துகள் இரண்டு திரைப்படங்களுக்கு அடிப்படையை வழங்கியுள்ளன. Wojciech Has இயக்கிய The Hour-Glass Sanatorium (1973), அவரது பல சிறுகதைகளின் கனவுத்தன்மையை மீள் படைப்பு செய்துள்ளது. Quay சகோதரர்கள் இயக்கிய Street of Crocodiles (1986) என்ற 21 நிமிட அனிமேஷன் திரைப்படம் ஷுல்ஸின் எழுத்துகளினால் பாதிப்பு பெற்றது.

1992ல், முதலைகள் தெரு கதையை அடிப்படையாகக்கொண்ட ஒரு பரிசோதனை நாடகம் லண்டனின் நேஷனல் தியேட்டருடன் இணைந்து Simon McBurney-யால் தயாரிக்கப்பட்டது. மிகவும் சிக்கலான பலவித உத்திகளைக் கையாண்டிருந்த அந்த நாடகம் லண்டன், மாஸ்கோ. நியூயார்க், டோக்கியோ, ஆஸ்திரேலியா என்று உலகின் பல நகரங்களிலும் நிகழ்த்தப்பட்டு பிரமாதமான பாராட்டையும் பல பரிசுகளையும் பெற்றது. ஷுல்ஸின் எழுத்துகளை அடிப்படையாகக்கொண்டு மேலும் பலவித நவீன முறைகளில் பல இடங்களில் நிகழ்த்துதல்கள் செய்யப்பட்டுள்ளன.

போலிஷ் எழுத்தாள விமர்சகர் Jerzy Ficowski, புருனோ ஷுல்ஸின் எழுத்துகள், சித்திரங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தார். ஆங்கிலத்தில் 2003ல் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நூல், மெசையா என்ற ஷுல்ஸின் கடைசிப் படைப்பையும் மியூரல் ஓவியங்களின் மீள் கண்டுபிடிப்புச் சர்ச்சைகளையும் மேலதிகமாக விளக்குகிறது.

2001ல் ஒரு ஜெர்மன் ஆவணப் படத்தயாரிப்பாளரால் லாண்டவுக்காக ஷுல்ஸால் உருவாக்கப்பட்ட மியூரல் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புனரமைக்கப்பட்ட அந்த ஓவியங்கள், இஸ்ரேலிய ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தாலும் உக்ரேனுக்குச் சொந்தமானது என்று Drohobycz-ல் அமைக்கப்பட்ட ஷுல்ஸ் நினைவு அருங்காட்சியகத்தாலும் உரிமை கொண்டாடப்பட்டு, ஒரு சர்வதேச சர்ச்சை உண்டாகி, ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது.

*

Father’s Last Escape’, Sanatorium Under The Sign Of Hourglass, Bruno Schulz, Translated from Polish by Celina Wieniewska, Picador, 1979.