வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்

1 comment

மிக நெடிய தேடல். எதிர்ப்பட்ட அனைத்திலும் மிகத் தீவிரத்துடன். விவேகானந்தர், வேதாந்தம், உபநிடதங்கள், ஓஷோ, ஜேகே, ரமணர் என்று. பதஞ்சலி யோகசூத்திரம் ஆழ்ந்துபோக வைத்தது. ஒரு பொறியாளரிடமுள்ள பழுதுபார்க்கும் கருவிப்பெட்டி போன்றது இவ்வழிகாட்டிகளின் போதனைகள். ஒவ்வொரு மகான்களும் வேறுபட்டதொரு கருவிபோல. சுத்தியல்போல ஓஷோ உள்ளே இறுகிப்போனதை உடைக்க உதவினார். ஒவ்வொரு கருவிக்கும் ஒரு குறிக்கோளுண்டு. ஜேகே திருப்புளி அல்லது மரைகழற்றி. கோட்பாடுகளோ கருத்தியலோ அன்றி வார்த்தைக்கு அப்பாற்பட்டதை மொழிக்குள் வரிக்கப் பார்த்தவர்.

ஜேகேயின் நூல்களை ஆரம்பகால பெளத்தத் துறவிகளுக்கு மனவிழிப்புநிலை பற்றிய புரிதலுக்கென வழங்குவார்களாம். தாய்லாந்திலும்கூட. மிக ஆழ்ந்துபோனது ரமண மகரிஷியில். அதைத் தொடர்ந்து பௌத்த தியானத்திற்குள் புகுந்தோடித் தொடர்கிறது. சரி இங்கென்ன இருக்கிறதென்று பார்க்க, தமிழ் தியான மரபுகள் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. இங்கேயே தமிழில் இவ்வளவு இருக்கிறதேயென பிரமிப்பு கூடிற்று. அருணகிரிநாதர், ஒளவைக்குறள், சிவபோதம், தாயுமானவர், பட்டினத்தார், திருமூலர், வள்ளலார் என நீண்டு போகிறது தியானத் திரட்டுகளும் அருட்செல்வங்களும்.

எல்லா ஆன்மத் தேடலும் மரணம் பற்றிய சிந்தனையால் உருவானதாய்த் தோன்றியது. கடவுளெனும் கருத்தாக்கம்கூட. உடல் நமதல்ல, உணர்ச்சி, மனம், மனப்பண்பு யாவுமே. இதுவென்றில்லாதோர் உருவாக்கம், தனித்தும், இணைந்தும். நான், எனது என்ற அடையாளம் அனைத்தையும், பெயரைக்கூட, எடுத்துத் தனியே ஒதுக்கி வைக்க எஞ்சியிருப்பது யாதென உள்ளபடிப் பார்க்க முடிந்தால் புரியும்.

தனிம மூலக்கூறு அட்டவணையில் காணப்படும் வகைப்பாடுகள்தான் எத்தனை! ஆண்டுதோறும் அப்பட்டியல் நீண்டுகொண்டேதான் போகிறது. அப்படித்தான் இன உயிர்களின் வகைமைகளும், ஒரே இனத்தினுள் காணப்படும் வேறுபாடுகளும். மூலக்கூறு எடை, எண், உருகுநிலை, கொதிநிலை, மணம், சுவை, வினையாற்றலென ஒவ்வொரு தனிமமும் வகையும் மாறுபடுகின்றன. தனிப்பட்ட குணமாகின்றன. ஒரு தனிமத்தால் தன் குணங்கள் அறிய முடியாதிருக்கலாம். மனிதருக்கு சாத்தியம். அதை அறிகையில் உள்ளொளி கிடைக்கிறது. மானுடத் தேற்றம் நிகழ்கிறது. விடுதலைப் பெற்றதாய் உணரவும் பிறருடன் பகிரவும் முடிகிறது.

இதில் வினையே முனையாத இனெர்ட் வாயுக்களுண்டு. அதனாலேயே அவற்றை வேதிப் பகுப்பாய்வுக்குப் பயன்படுத்துகின்றனர். இவ்விளைவையும் தன்வினையால் கூட்டாததால் வேறு வேதி வினைகளுக்குப் பயனாகின்றன. தன் வினையற்ற பிற பயனது. அதுவோ ஞானமர்க்கம்!

திருமுடிவாக்கத்தில் கற்றதை கொடைக்கானலில் அமைந்திருக்கும் போதி ஜென்டோவில் நீடித்துப் பழக ஏதுவாயிருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று பயிற்சி பெற்று வரமுடிந்தது. தியான நிலைகளை அக்கக்காக ஆழ்ந்து பழக அழகிய அச்சூழலும், பருவநிலையும் உதவின. அத்தியான மையம் எனது மறுவீடாயிற்று.

தொண்ணூறுகளின் மத்தியில் ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரால் நிறுவப்பட்டது போதி ஜென்டோ. அவர் ஜப்பானில் ஜென் பௌத்தம் பயின்று வந்து அமைத்தது. பெருமாள் மலையிலுள்ள ஜோசப் பண்ணைப்புரத்தின் உள்ளே அமையப்பெற்ற அருமையான தியான மையம். சூழவும் காபி, வாழை, சில்வர் ஓக், யூகலிப்டஸ் போன்ற மலைப்பயிர்கள். பெருமாள் மலையிலிருந்து வளைந்து நெளிந்து மேலேறும் குறுகிய சாலை. வழியில் பழைய தேவாலயம். சாலை முடிவில் இடதில் திரும்ப போதி ஜென்டோ. வலதில் மீண்டும் ஏறினால், உப்புப்பாறை உச்சியில் சூசையப்பர் தேவாலயம். ஞாயிறு மட்டும் திருப்பலி நடக்கும். பிறகு சூசையப்பர் திருவிழா. மற்றபடி உள்ளே சென்று செபிக்கவேண்டுமானால், அல்போன்ஸ் மிட்டாய்க் கடையில் பெரிய சாவியைப் பெற்றுச் சென்று அங்கிருந்துவிட்டு பிறகு பூட்டி சாவியைத் திருப்பித் தரலாம்.

மூடிக்கிடக்கும் அத்தேவாலயத்தின் வாசலில் அமர்ந்து எதிரில் நிற்கும் பள்ளத்தாக்கைப் பார்த்தபடி தியானித்தல் சுகம். திரண்டெழும் மேகங்களும் குளிர்காற்றும் அவ்வப்போதான சாரல் மழையும் திவ்யம். புலனூடான அப்பெருவெளியின் லயிப்பு உயிர்ப்பூட்டும். அதுவே கதி, வீடு, மோட்சம்.

ஜென்டோ என்றால் தியானக்கூடம். சுமார் நாற்பது பேர் தங்கிப் பயிலலாம். பெரும்பாலும் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், கீழ்த்திசையிலிருந்து தென்கிழக்காசியர்கள் என எப்போதும் வெளிநாட்டவர் தங்கிப் பயிற்சி செய்வர். அப்படியொரு அற்புதமான தியானக்கூடம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் இந்தியர்கள் குறைவு. வெளிநாட்டவர் ஓரிரு வருடம் தங்குவர். சிலர் பக்கத்திலேயே வீடு கட்டி வாழ்கின்றனர். அவ்வப்போது ரமணாசிரமம் போய்வருவர் அல்லது அங்கிருப்பவர்கள் கோடையில் ஜென்டோ வருவர்.

ஜென்டோவின் தோட்டத்தில் பூக்களும் காய்கறிகளும் விளையும். பயிற்சிக்கு வருவோர் தினமும் ஒருமணி நேரமாவது ‘சாமு’ எனும் சேவைப்பணி செய்யவேண்டும். காய் நறுக்குவது, பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது, பொது இடங்களை, கழிவறைகளை, தியானைக் கூடத்தைச் சுத்தம் செய்வதென.

ஜென்டோவில் ஐந்து நாள் ஜென் பயிற்சியில் மூன்றாம் நாளன்று இரவு கடைசிக்கு முந்தைய அமர்வில் ஆழ்தியானப் பரப்பு உள்ளே எழுந்தது. வெளியே நெடிய கரிய ஓக் மரங்கள் மெல்ல தலைவிரித்தாடின. குளிர் தாங்கக்கூடியதாய் இருந்தது. நிலவு தண்மையாய் மிதந்துகொண்டிருந்தது. உடலில் கதகதப்புடன் சூடேறியது.

அனைத்தும் ஒன்றி ஒருமித்து, உள்ளே போகப் போக சட்டென மூடிய கண்கள் மேலேற, உடல் விதிர்த்து ஒளிர்ந்து வெண்ணொளி சுடர்ந்து பின் ஒரு சரமாய் சுழன்று வளியில் தெளி நீருக்குள் விழுந்த மணிமாலையாய் மிதப்புற்றது. சிறிய வேறுபட்ட அளவில் மெர்க்குரி மணிகளென மிளிர்ந்து பின் வெளியில் மறைவுற்றது. ‘ஒல்லிதாயுள்ள சுடரை உற நோக்கில் வெள்ளியும் மாலை விளக்கு.’ ஒளி உற்றறியும் தியான முறையில் ஒளவைக்குறள் சுடர் வெள்ளி போன்ற மாலையாய் மாறுமென உரைத்திருந்தது.

காலையில் தியானம் முடித்தபின் தோட்டக் குடிலில் தனியே அமைதியாய் அமர்ந்திருக்க விழிப்புநிலை நிகழ்கணத்தை உற்றறிய ஏதுவாயிற்று. கணத்திற்குக் கணம் தொடரும் காலமென்ற மன நீட்டத்தைக் காண இயன்றது. எல்லையற்ற வெளியில் காலை வேளையில் தெளிமனம் களங்கமற்றுத் திளங்கியது. எல்லையற்றதென்றால் சிவன், கிறிஸ்து, பிரம்மன் என்ற கற்பனை வரையறைகளைத் தாண்ட வேண்டும்.

இதுவெனக் குறிப்பிடவியலாதது. எதுவெல்லாமாகவோ மனம் வரையறுக்கும். அதுவெல்லாவற்றையும் புறம் தள்ளி, விடுபடுவதே நிறையறிவு, தெளிஞானம். விடுதலை என்பதுவும் அதுவேயாம். அதைத்தான் பல கேள்விகளுக்கு பதிலிறுத்தவரிடம் சீன அரசன் நீ யாரெனக் கேட்க போதி தருமர் ‘தெரியாது’ என்று கூறியது. அது அறியாமையல்ல. இதுவென வரையறுக்காத முழுமை. ஆங்கிலத்தில் ‘நாட் நோயிங் மைண்ட்’, அதுவே ஜென் மனம்.

தியானத்தில் ஆழ்வதற்கு போதி ஜென்டோவை விட மேலான இடம் காண்பதரிது. தங்குவதற்கு தனியறைகள் உண்டு. அது ஒரு பர்ணசாலை போன்றது. எல்லாக் காலங்களிலும் சில்வண்டுகள் சேர்ந்திசை பாடும். அதுவே தவத்திற்கானதொரு மந்திரோபாயமாக இருக்கும். அமைதியும் தண்மையும் சூழ்ந்த பேரிடம்.

தியான ஆசானை ‘ஆமா’ என்றழைப்பார்கள். அருள் மரிய ஆரோக்கியசாமி தான் ஆங்கில முதலெழுத்தைச் சேர்த்து ஆமா சாமி ஆகியிருந்தது. யாமதா கௌன் எனும் ஜப்பானிய ஆசிரியரின் மாணவர். அரிய எளிய மனிதர். இத்தியான ஆற்றல் கூறுகளை வெறுமனே ஒரு ஆன்மீகப் புறவழிச்சாலையாகக் கருதலாகாது. ஸ்பிரிசுவல் பைபாஸிங் என்பார்கள் – இந்த இயலுலகை விட்டு எங்காவது ஆசிரமம், தியான மையம் என்று ஒளிந்துகொள்வது. தெரிந்தும் தெரியாமலும் அமைத்துக்கொண்ட இவ்வாழ்க்கையை ஒவ்வொருவரும் நேரடியாகச் சந்திக்க தைரியமும் நம்பிக்கையும் வேண்டும். அதை உள்வாங்கி பயிற்சி செய்ய வேண்டும். தியானம் நேர்வழி மார்க்கமே, தப்பிப்பதற்கான மாற்று வழியல்ல என்பார் ஜென் ஆசிரியர் ஆமா. அதேபோல, மெய்ஞானம் பற்றியதொரு புனைவு இங்கிருக்கிறது. அதுவுமே ஒரு இல்யூஷன் தான்.

மாயையைக் களைய இன்னொரு மாயைக்குள் விழுவது என்பார். அதைக் களைய ஜென் கோவான் முறையைக் கற்றுக்கொடுப்பார். ஆமா அதில் வித்தகர். ஜென் கோவானில் ‘ஒருகை ஓசை’, ‘தூரத்து ஆலயமணி ஒலியை இங்கிருந்து அமைதிப்படுத்துவது’, ‘அமையவியலா இடத்தில் அமைதல்’ போன்ற முரண்முறையைப் பின்பற்றி மெய்ஞான வழி போதிக்கப்படுகிறது. திருவருட்பாவில் ‘வல்லதா யெல்லாமாகியெல்லாமும் அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி’ போன்ற சில அகவல்களில் குறிப்புணர்த்தி இருப்பதைப்போல முரணாகத் தோன்றும் அவர் தொடுக்கும் கோவான் கேள்விகளுக்கு விடையைத் தேடித்தேடி மனம் கனன்று, ‘சுருள்விரிவுடை மனச்சுழலெலா மறுத்தே அருளொளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி’ என ஒருநாள் உள்ளொளி சட்டெனப் பிறக்குமென்பது கோவானின் சிறப்பு.

ஆமா பர்மாவிலிருந்து இங்கு வந்து பாதிரியாராகி, பின்னர் ரமணாசிரமத்தில் தங்கி, மேலும் சுற்றித் திரிந்து, திண்டுக்கல்லில் சிலகாலம் பிச்சையில் வாழ்ந்து பின்னர் ஜென் துறவியானார். ஜப்பானிய மொழியில் ‘தீஷோ’ எனும் பௌத்தப் பிரசங்க அறிஞர். அதுவும் கோவான் எனும், ஒரு புதிரைப் போல, முரணைப் போல, சொற்பொருளுக்கு அப்பாற்பட்டதைப் புரிந்து கொள்ளுதற்குட்படுத்தும் முறையில் உலகிலேயே உள்ள ஆசிரியர் சிலருள் ஒருவர். பௌத்த தியானத்தின் ரூப அரூப ஜான நிலைகளை உய்த்துணர ஏற்ற நல்லிடமது.

இடையில் வியட்நாமில் ஜென்துறவி திக் நாட் ஹஞ்சை சந்திக்க முடிந்தது. வியட்நாமைத் தாய்நாடாகக் கொண்டிருந்த ஜென் துறவி அவர். வியட்நாம் போரின்போது பல போராட்டங்களை உள்நாட்டில் அடியெடுத்து தன் சக துறவி நண்பர்கள் நெருப்பால் தம்மை மாய்த்துக்கொள்வதைக் கண்டவர். அமெரிக்காவிற்கே சென்று போர் நிறுத்தத்திற்கு அடிகோலியவரை தாய்நாடு தள்ளிவைத்தது. அகதியாய் பிரான்சில் சுமார் நாற்பதாண்டுகள் கழித்தவர். பிளம் வில்லேஜ் எனும் மடத்தை உருவாக்கியவர். தாய்நாடு அவரை ஏற்றுக்கொண்ட போது உலகெலாம் இருந்து சுமார் நானூறு பேர் அவருடன் ஹனோய் சென்று பத்து நாட்கள் தங்கி தியானித்திருந்தோம். கலந்துகொண்டவர்களுக்கு அங்கியும், துறவுப்பெயரும் பயிற்சியும் தரப்பட்டது.

அச்சூழலில் விபஸ்ஸனா பயின்றால் சிறப்பாய் இருக்குமென எண்ணி ஆமாவின் ஒப்புதலோடு ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் எனும் விபஸ்ஸனா ஆசிரியரை மூன்று வருடம் தொடர்ந்து அழைத்து வந்து சர்வதேச அளவில் பயிற்சிதர ஏற்பாடு செய்தது பெருங்காரியம்தான். பாட்ரிக் பர்மாவில் மஹாசி சாயாதாவிடம் பயின்றவர். அத்தியானத்தை ஜென் கூடத்தில் நடத்த ஒப்புக்கொண்டது ஆமாவின் சிறப்பு. அதுவும் ஜென் பெளத்த வழியும், தேரவாத வழியும் என இரு ஆசிரியர்கள் இசைந்து ஒத்திசைவாய் நிகழ்ந்துபோனது பெருஞ்சிறப்பு.

இவ்வாழ்வின் தளைகளிலிருந்து தற்காலிக விடுதலைக்காக வெறுமையை இட்டு நிரப்பவன்றி, பௌத்தத்திலும், சைவ சித்தாந்த நூல்களிலும், சில பக்திப் பாடல்களிலும், சித்த வேதத்திலும், மேதா சுக்தம் போன்ற வேதாந்த சூத்திரங்களிலும் இதன் தாத்பரியமும் பல்வேறு நிலைத்தளங்களும் தெள்ளத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் சரியான வழிகாட்டி தேவை. அது வெறும் அதிகாரத்திற்கானதன்று. துல்லியமாகவும் கவனமுடனும் நிதானத்துடனும் பயிலவும் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். அதற்கு உண்மையான, கற்றுத்தேர்ந்த வழிகாட்டுதல் தேவை. அதைப் பூர்த்தி செய்பவரே குரு. அவரும் தற்காலிகமே. தரிப்பின்றி தீவிரமாகவும் ஆழமாகவும் இறங்க, நீங்கள் சுயமாகவே நடத்திச் செல்லப்படுவீர்கள்.

தியானத்தில் ஊறித் திளைத்திருந்த காலம் அது. பாண்டியிலிருந்து விழுப்புரம் போகும் வழியில் சின்னபாபுசமுத்திரம் என்றொரு ஊருள்ளது. பணியிட நண்பரான மருத்துவர் அருணின் புதுமனை புகுவிழாவிற்கெனச் செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையிலேயே பூஜைகளும் யாகங்களும் முடிவுற்றதால் மதிய சாப்பாட்டிற்குப் பிறகு காலார இருவரும் நடந்தோம். மிக செழிப்பான பகுதியது நெல், கரும்பு, வாழையென. ஆற்றுப்பாசனம். அப்படியே சுற்றித்திரிகையில் அங்குள்ள படேசாகிப் எனும் தர்ஹாவுக்குச் சென்றோம். மிகச் சிறிய சமாதி. அப்படியொன்றும் பிரஸ்தாபிக்க ஏதுமில்லாதது போல் காணப்பட்டது. பக்கத்தில் கொஞ்சம் பெரிய சிவன் கோவில்.

உள்ளே ஒரு பிரகாரம். மையத்தில் படேசாகிப் சமாதி. வலதிலொரு மகிழ மரம். பின்னே சமையலறை. முப்பது பேர் சாப்பிடும்படியான அறை. பிரகாரத்தைச் சுற்றி மக்கள் சிதறி அமர்ந்திருந்தனர். நானும் அமர்ந்தேன். சுமார் முக்கால் மணிக்கப்புறம் மெல்ல எழுந்து மையத்திலுள்ள சமாதியை வணங்கிப் பார்க்க, ஒரு இஸ்லாமியக் கல்லறை போன்றிருந்தது வண்ண மலர்கள் தூவிய சமாதி. தாழ்ந்து பணிந்து திரும்பினேன், துளசி தீர்த்தமும் திருநீறும், தீப ஆரத்தியும் பெற்று. சுமார் இருநூறு வருடத்திய ஜீவசமாதி. இஸ்லாமிய சித்தர். மக்கள் நோய் தீர வேண்டி அங்கு வந்து பணிகின்றனர்.

சும்மா பேசியபடி அம்மகிழ மரத்தடியில் அமர, சில நிமிடங்களில் பூமியோடு உடல் ஒன்றியது. மூச்சு செவ்வமைதி கொண்டது. மனமும் உடலும் லேசாகிக் காற்றென ஆயிற்று. நண்பர் எனது இரத்த அழுத்தம் பார்த்து திகைப்புற்றார். இப்படியொரு ஆழமைதியை நாடியில் கண்டதில்லை என்றார். திளைத்துக் கிடந்தேன். மகிழ மரத்தின் வேர்களுடன் உடலின் ஆதார ஆற்றலும் இழுபட்டு மண்ணுக்குள் புதைந்து நின்றது. எங்கும் போவதற்கில்லை, அங்கே அதுவே அப்படியே ஒன்றுமற்று, யாவுமாய். பத்து நாள் தியானப் பயிற்சியின் பலன் ஓரிரு நிமிடங்களுக்குள் அங்கே நிகழும் அற்புதம். மத்திய நரம்புமண்டல சக்கரங்களின் வழி உயிராற்றல், உயிர்காந்த, மின்காந்த ஆற்றல் பரவுகிறது. ‘விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்தறிந்து அறியா ஆங்கவை போல, தாம்தம் உணர்வின் தமிஅருள் காந்தம் கண்ட பசாசத்து அவையே’ என்று காந்தம் கண்ட இரும்புத் துண்டென புலன்கள் ஒன்றடங்கிவிடும் என்கிறது சிவஞானபோதம்.

புலன்கள் தாண்டி, சூட்சும உணர்வு தாண்டி விதிர்ப்புண்டாகி உயிர்தரிக்காது மென்மேலும் தேடிப்போகத் தூண்டும். உயிருக்குள் காந்தமாய் அவரவருக்கு அனுபவமாகும். ஊன்வழி ஊடேறி, உச்சியில் நின்று, நெற்றியில் புருவ மத்தியில் நிலைத்து, தலைக்கு மேலாகப் பொங்கிப் பிரவகித்து, உடலின் பல முனைகளைத் திருகி, ஒன்றிணைத்து, விழிப்பின் வெகு உச்சத்திற்குக் கொண்டுபோய் அமரவைக்கும் அற்புத அமுதகலையது. விழிப்பானது உடல் தாண்டி, மனம் தாண்டி, வளியில் லயித்து, ஒளிர்ந்து, ஒளிச்சுடராய் மெய் தகித்து நிற்கும். உடல் எல்லை அல்லது பௌதீக எல்லைப்பரப்பு தாண்டி அண்டத்தில் சுடர்ந்து விரிந்து எதனுடனும் பிரித்தரிய முடியாததாய் விரவிக்கிடக்கும் விழிப்பு. தற்பரமே பிரபஞ்சமெனும் அனுபவம்.

*

தியான வாரம் முடிந்து இரண்டு நாட்கள் கொடைக்கானலில் தங்கிவிட்டு, பின்னர் வீடு திரும்ப முடிவு. போதி ஜென்டோவில் நிர்வாகியாக இருக்கும் சசி மறுநாள் அஞ்சுவீடு எனும் காட்டுப் பகுதிக்குள் கூட்டிச் செல்கிறேன் எனக் கூற ஆர்வம் கிளர்ந்தது. கூடவே தாமஸ், கணேஷ் எனும் நண்பர்களும் சேர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். முழுநாளும் காட்டுக்குள் என்பது உற்சாகமளித்தது.

குளிருடை, ஜெர்கின், சாண்ட்விச், குடிநீர் துணையுடன் காலையில் இரண்டு பைக்கில் நால்வரும் பயணித்தோம். சரிந்து நெளிந்து பெருமாள்மலை பழநி மலைப்பாதையில் நீண்டு பின் வலதில் சரிவிலிறங்கி ஓடிற்று வண்டி. சில மலைவாழிடங்கள் தாண்டி குறுக்கே ஓடையொன்றில் நிற்க, பைக்குகளை அங்கே ஒரு வீட்டுவாசலில் பூட்டிவிட்டு நடந்தோம். பழம்பெரும் மரங்கள், நீர்த்திட்டுகள் தாண்டி நடந்தோம். முதல் சிற்றருவி கண்ணுக்குப் புலனாகியது. கிட்டேதான் இருக்கிறோமென மேலும் நடக்க, மலைவழி பல தளங்களில் ஏற்றி இறக்கி, திசைமாற்றி, சுற்றிச் சுற்றிக் காட்டி, பின் அருகழைத்து அவ்வருவி அணைத்தது. கன்னிக் காட்டிற்குள் நுழைவதேயொரு தியானானுபவம்தான்.

கற்புநிறை காடு அடர் பச்சையாய் விரிந்திருந்தது. எங்கணும் பசுமை. பார்க்குமிடமெலாம் ஊற்றுகள். ஓடைகள். ஆங்காங்கே ஆர்ப்பரித்துக் கொட்டும் சிற்றருவிகள். மேகங்கள் இறங்கி மலைமுகடுகளை உச்சி முகர்ந்து தழுவிப்போயின. சாரல் துமியாய் விரவிப் படர்ந்து பரவசப்படுத்தி மறைந்தது. திடுமென நிசப்தமும், சட்டென சலசலப்பும், எதிர்பாரா ஆச்சரியமும் பரவசங்களுமென நிறைந்து ததும்பும் அனுபவங்கள். மரக்கிளைகளின் வழியொழுகும் படர்கொடிகள் தம் கரம் நீட்டி அவ்வப்போது தலைக்குமேல் அளவளாவிச் சென்றன. வளைவுகளில் சட்டென சரிந்து தாழும் பெரும் பள்ளத்தாக்குகள், சூழ்ந்து தழுவும் மகாத்மிய பசும்பெருவெளி.

காட்டினூடே ஒற்றைத் தார் சாலை புகுந்தோடியது. மிகப்பழைய வழித்தடம். சிதைந்திருந்தது. போகும் வழியெல்லாம் யானைச் சாணமும் சிறுநீரும் கலந்த மணம். யானைகளின் சாணத்தால் காடே ஊட்டமேறிக் கொழுத்துப் போயிருந்தது. பூமியிலிருந்து பிடுங்கப்பட்டு, சுழன்று பெருவாய்க்குள் புகுந்து, பாறைக் கடைவாயில் அரைபட்டு, குடலூடே சீரணித்துக் குதப்பி, குதம்வழிப் போயிருந்த சக்கைகள் தரையெங்கும் கிடந்தன. காடு கரும்பச்சை யானையாய் விண்ணளவு பொலிந்து மதர்த்து நின்றது.

ஆங்காங்கே யானைகள் பிளிறின. பூச்சிகள் காற்றில் இசைவரிகளை எழுத பறவைகள் இன்குரலில் பாடின. இப்பெருங்காட்டில் மனிதனின் இடம்தான் எது? மானுடத்திற்கு முன்பே இங்கே காடுகளும் விலங்குகளும் நீர் நில வான் உயிர்களும் தழைக்கத்தான் செய்திருந்தன. சூழியலின் நிலைப்பு விதிகளில் மனிதனுக்கான தனித்துவமான பொறுப்பென்று ஏதுமில்லை. அவனின்றியும் எதுவும் அசையும்.

குரங்குகள் குறுக்குமறுக்குமாக குதித்தோடின. படர்கொடிகளைப் பற்றி, தாவித் திரிந்து ஆடின. சில காட்டுப் பழங்களைக் கொய்து தின்றன. தித்தித்தது போலும், மேலும் உற்சாகமாகி விளையாடிப் புரண்டன. மலைத்தேனடையின் பகுதியொன்று கேட்பாரற்றுக் கிடக்க குரங்குகள் பிய்த்துப் போட்டுச் சுவைக்க இனிப்பு சுரந்ததாய் கிரீச்சிட்டுக் கத்தின. ஆங்காங்கே யானைத் தடமென எச்சரிக்கைப் பலகைகள் தொங்கின.

நகரத்தை, கிராமத்தை, பெருஞ்சாலைகளைக் கடந்து காட்டின் உள்ளே உள்ளே எனப் பல மைல்களுக்கு புகுந்து பயணிக்க மனிதன் அடையாளமற்றுப் போய்விடுவதாய்ப் படுகிறது. புவியியல் வரைவுகள் கடந்துபோக, பின் மெல்ல காட்சிகள் முழுதும் தாவரங்களும் விலங்குகளுமாய்த் திகழ, பரிச்சயமற்ற ஒலிகள் சூழ்ந்து, புலனுணர்வுகளில் புத்தனுபவங்கள் வாய்க்க, காலம் திசையென யாவும் முற்றிலும் வேறாக, உடல் சாரமிழந்து, மனமறுந்து, தன்னிலை தப்பி நமக்கு நாமே யாரோவென உணர்த்திக் காட்டும் பெருங்காடு.

மனிதனின் சேகரிப்பு, பாதுகாப்பு, அகங்காரம் அனைத்தும் காட்டின் விரிவுக்குள் தனிமைக்குள் நரையிருளுக்குள் அமைதிக்குள் துடைக்கப்பட்டும் அடையாளமற்றும் காணாமல் போகிறது. நிரந்தரத்தன்மை பறிபோய் பாதுகாப்பும் பறிபோய் நிராதரவாய் நிர்கதியாய் நிற்கவேண்டி இருக்கிறது. ஒன்றுமற்ற நிர்வாணியாய் உணர்த்திப் போகிறது காடு. கூடவே வருவது அறிவும் அதுகடந்த மனவிழிப்பும் மெய்ஞானமும் மட்டுமே. காட்டிற்குள் இன்னாரென்று எதுவுமின்றி ஆனால் வழிநடத்தப்படுவதாய் உள்ளொளி உணரப்படுகிறது. காட்டின் சஞ்சாரங்களுக்கு மத்தியில் உள்ளே தஞ்சமென அமைந்திருக்கும் உயிரிருப்பு. பிரக்ஞை.

‘காடும் மலையும் கருதி தவம்செய்தால் கூடும் உணர்வின் பயன்’ என்கிறது ஒளவைக்குறள். உணர்வென்பது யாது? வெறும் புலனுணர்வா அல்லது அவைதம் தொழில் மறந்த பேரனுபவமா? காடு மாயையாகவும் மலை தியானமும் ஞானமுமாகக் கொள்ளப்படலாம். காட்டின் பிரம்மாண்டத்தில் புலனும் மனதும் தாண்டிய வெறும் விழிப்பாய் சுரந்தூறி சுடர்ந்து நிற்கிறது தவப்பெரு தற்பர சாரம். சலனங்களூடே சலனமற்றும், அவசங்களின் ஊடே பரவசம் மூண்டும் அவ்வுணர்வில் தான் பிறன், உள் வெளி எனும் பேதமற்று அனுபவமாகிறது. இன்னும் உட்புக பரவசம் தாண்டி, தடாகத்தின் பள்ளத்தாக்கின் சிகரத்தின் குணங்குன்றாத் தகைமையும் நுட்பமும் மாட்சியும் அண்டத்தின் விழிப்பென அனுபவமாகும் பரவெளி.

கவனம் முழுக்க விழிப்பாய்த் திகழ காடு பௌதீக உடலுக்குள்ளேறி மனம் புகுந்து, எலும்புகள் மரங்களாய் இரத்த ஓட்டம் ஓடையாய் உயரத்திலிருந்து குதித்தோடும் அருவி உயிராற்றலாய் நீள, அந்தகாரமழிந்து உள்விழிப்பு மலைமுகட்டின் முனையில் குவிந்து நின்று மேலும், மென்மெலுமென விரிவுற்று விண்ணாய் ஒளியாய் அந்தமற்ற தீராவெளியாய், ரூப அரூப பேதமற்று பூரண நிறைவுற்றிருந்தது.

எல்லாத் தன்னிலைக் கேள்விகளும் இறுதியில் ‘நான் யார்’ என்பதில் வந்து முட்டி நிற்கின்றன. தனித்து நின்ற அக்காட்டுவெளியில் சுழன்று திரும்பி மீண்டும் மீண்டும் சுட்டி நின்ற அதே கேள்வி.  இதுகாறுமான சரிதையில் அப்போதும் இப்போதும் இதற்குப் பிறகு இருக்கப் போவதுமான ஆள் யார்? கடந்தது வெறும் ஞாபகத்தில், கடக்கப்போவது வெறும் கற்பனையில். அதில் நானென்பது ஒன்றா வேறா இரண்டுமா இரண்டும் அற்றதுவா என எவ்வகைப் பதிலுமாயன்றி, ‘ஒன்றென விரண்டென வொன்றிரண்டென இவையன்றென விளக்கிய அருட்பெருஞ்ஜோதி’ எனத் தற்கணத்தில் இது இப்படியாக இங்கே இக்கணத்தில் மட்டுமே என்பதாகிறது இருப்பு. படைப்பின் உள்ளியல்பு அஃதே என்பதாய் போதித்தது நிகழ்வு.

தாற்காலிகமேயாயினும் அது விடுதலையின் சுவை தந்தது. ‘ஆசாநிகளம் துகளாயின பின்’ எனும் அருணகிரிநாதரின் விடுதலையுணர்வு புரிபட்டது. சங்கிலி, தளை எனப் பற்றது இற்று உற்றது பொடியாகிப் போயிற்றாம். இங்கே கரைந்துற்றது.

உடல் அயர்வுற்றிருந்தாலும் மனம் மிளிர்ந்தது. அப்படியே அறைக்கு வந்து படுத்தாயிற்று. விடியுமுன்னே உறக்கம் பிரிந்தது. படுக்கையோர சன்னல்வழியே இரும்புச்சட்டத்தின் கீழ்ச் சதுரத்தில் நட்சத்திரமொன்று ஒளியுருகி நின்றது. வான் கனியின் சுடர் மனத்துள் நின்று மிளிரும் ஆன்மவொளி. அது விவரிக்க இயலாதது. மொழியால் முடியாதது. உணர்ந்தே அனுபவமாகும் உயிரொளி, அருளொளி. மலைச்சாரலெங்கும் அமைதி தவழ்ந்தது. பனிச்சாற்றில் ஊறிக் காற்று திடங்கொண்டிருந்தது. ஓசைகள் சேர்ந்திசை ஏதுமில்லை. அதனதன் நிலையில் யாவும் இளைப்பாறின.

மேலுமொரு சிறுதுயில் ஓய்வைக் கூட்டியிருந்தது. உடலை நீட்டிக் கிடத்தி மற்றுமொரு பூவுறக்கம். விழிக்கையில் மலைப்பரப்பில் அடர்ந்திருந்த சிற்றொளி சன்னலின் நடுச்சதுரத்தில் அமர்ந்திருந்தது. தன்னுறக்கத்தால் பிற யாவும் செயலூக்கம் இழக்கவில்லை. அச்சிறுதுயில் இடைவெளியில் மலர்கள் உதிர்ந்திருக்கலாம். புத்திலைத் தளிர்கள் துளிர்த்திருக்கலாம். மலைச்சாரலில் பல மொக்குகள் பூத்திருக்கலாம். சருகாகி இலைகள் பல கிளையைத் துறந்திருக்கலாம்.

கூர்ந்து நோக்கின் ஓய்வென்றறிவது ஏதுமில்லை. ஓய்வுற்றதாய்க் கருதப்படும் சடலமும்கூட செயலூக்கப்பட்டபடிதான் கிடக்கிறது. உருச்சிதை மாற்றம் கொள்கிறது. நுண்ணுயிர்க்கு ஏதுவாகிறது. மண்ணிடுக்கில் ஊட்டமேற்றுகிறது. ஓய்ந்ததென்று காண்பதரிது இப்பிரபஞ்சமெங்கணும்.

உறக்கமேகூட ஒரு செயல்பாடுதான். ஆயிரமாயிரம் அணுக்கள் இவ்வுடலில் மாய்ந்திருக்கலாம். புத்தணுக்கள் முகிழ்த்திருக்கலாம். நரை வெண்மை சற்றே கூடியிருக்கலாம். நினைவுகள் சில மறக்கப்பட்டிருக்கலாம். ஞாபகத்தில் புதியன சேர்ந்திருக்கலாம். அதனுள் ஒன்றென இம்மலையும் வான்கனியும் பள்ளத்தாக்கும் தூவெளியும் நிலைத்துவிட்டிருக்கலாம்.

முன்மாலையின் காபி செடிப்பரப்பின் மேல்முகட்டினூடே குடிசைக் குழந்தையொன்று எழுந்து வந்தது. புள்ளினமாய்க் கூவி வெண்மணியாய்ச் சிரித்தது. வெளியே மரத்தூணில் கயிற்றில் கட்டிக்கிடந்த நாய் தன் பின்னங்கால்களில் நின்றபடி முன்னங்கால்களை உயர்த்திக் குழைந்தது. அவ்வீட்டுப் பெண் கண்டுங்காணாமல் துணிகளைத் துவைத்து உதறினாள்.

சற்றைக்கெல்லாம் நான் பருகப்போகும் சூடான காபியில், அதன் உற்ற சுவையில் அவளதும் அவளது கணவரதின் உழைப்பும் ஊடேறி நிற்குமோ? அக்குழந்தையின் கழிவில் துளிர்த்த கீரைகள் உணவு மேசையில் பரிமாறப்படுமோ? அரிந்து தரும் கனிகளில் அவர்களின் வியர்வை உப்பு சுவைகூட்டிப் போகுமோ? இவர்களுக்கும் எனக்குமான நட்புறவுதான் என்ன? இம்மலையகத்திற்கும் இவர்களுக்குமான தொடர்பென்ன? நிஜத்தில் எங்கே இருக்கிறது என் வீடு?

இருப்பின் சிறப்பு உறவுகளின் நீட்சியா? பசி, ஆசை, அன்பு, அமைதி, கருணை, துறவு என யாவுமே உறவின் வேறுபட்டதொரு பரிமாணமோ? இச்சொற்களின் உள்ளார்ந்த அர்த்தங்களின் அனுபவச் செறிவாய் வியாபித்திருக்கிறது இவ்வுடலெனும் ஊடகம். அதனுள் இவ்வுலகமும் அடக்கம். பேரண்டமும்தான். இவ்வுடல் அழிந்த பின்னும் உயிர்வழி நீளும் அத்தொடர்பு.

அவ்வான் கனிகளில் ஒன்றாய், இவ்விருள் பள்ளத்தாக்கில், ஓடுநீரில், நின்றசையும் வானுயர மரவரிசையில் தவழ்ந்து அக்குடிசைகளின் உடைந்த கதவினிடுக்கில் சன்னமாய் சுடர் காட்டி எரிந்து நிற்பேன், அக்குழந்தைக்கு வெளிச்சம் தந்து.

1 comment

Kasturi G November 22, 2021 - 8:54 pm

Thanks for the great philosophical discussion
For laymen reader like me, even to grasp and understand the stream of thoughts of Amalan Stanley is a big effort.
I get a wafer thin understanding of all that is said about Self Awarness and keeping still. “Summa IRU SOLL ARA” OF ARUNAGIRINATHAR.
Good luck

Comments are closed.