ராமாயணம் முதல் ரணில் வரை: எரியும் இலங்கை

0 comment

“பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அரசுகள் வழங்கும் தீர்வுகள், எப்போதும் குறிப்பிட்ட பிரச்சினைக்கு இணையான இன்னொரு பிரச்சினையாகவே இருக்கும்” – நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியல் மேதை மில்டன் ஃபிரைட்மென் கூறிய பிரபஞ்சப் பேருண்மை மிக்க வாக்கியம் இது. சிறிலங்காவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல் பதற்றங்களையும் அவற்றுக்கு அரசு ‘சப்ளை’ செய்துகொண்டிருக்கும் தீர்வுகளையும் மில்டனின் இந்த ஒற்றை வாக்கியத்திற்குள் அடக்கிவிடலாம்.

வரலாற்று ரீதியாக வசதிமிக்க பேரினவாத மனநிலையில் ஊறிப்போன சிங்கள தேசம், எப்படித் தீர்ப்பது என்று வழி தெரியாத புதிரான பேரிடருக்குள் சரித்திரத்தில் முதல் தடவையாகச் சிதறிக்கிடக்கிறது. இந்தப் பேரிடரின் முகங்கள் பல்வேறு திசைகளில், சிறிலங்காவையும் அதன் பொருளாதாரத்தையும் மக்களையும் குறிவைத்திருக்கிறது. இதற்கான காரணங்களைப் பல்வேறு தரப்பினர் பல்வேறு விடயங்களாக முன்வைத்தாலும், ராஜபக்ஸ சகோதரர்களின் நீண்ட ஆட்சிப் பாரம்பரியமே, நாட்டின் பெருஞ்சீரழிவினைத் துரிதப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.

இதன் விளைவாக, உதிர்ந்து விழத்தொடங்கிய ஒரு தேசத்தின், ஊழிப்பதற்றத்தைக் கடந்த நான்கு மாதங்களாக உலகமே நுனிக்கதிரையிலிருந்து பார்த்து அதிர்கிறது.

இச்சரிவின் சலாகை வரைவை சற்றுப் பின்சென்று பார்த்தால் –

2009ஆம் ஆண்டுவரைக்கும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை, உலக அரங்கில் காண்பித்து, பற்பல கோடிகளை வசதியான உதவிகளாப் பெற்று, நாட்டின் பொருளாதாரத்தினைக் கரைசேர்ப்பதில் வெற்றிகண்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கு, யுத்த நிறைவு என்பது, தங்களது நிர்வாகத் திறமையில் நாட்டை ஆட்சி செய்யவேண்டிய சவாலான புள்ளியை நோக்கித் தள்ளியது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் யுத்த வெற்றி நாயகனாகப் போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ஸவுக்கு, பொருளாதார நிர்வாகம் பெருமளவில் கைகூடவில்லை. முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதங்களை வாங்கி வாங்கியே ரேகை தேய்ந்த கைகளால் நாட்டுக்குள் அந்நியச் செலாவணியைக் கொண்டுவரத்தக்க, உருப்படியான திட்டங்கள் எதையும் தேவையானளவு உருவாக்க முடியவில்லை. கூடவே, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பதில் அவர்களுக்கிருந்த புரிதலும் நாட்டுக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை.

உதாரணமாக, போர் முடிந்த கையோடு மகிந்த ராஜபக்ஸ அரசு, தென்னிலங்கை முழுவதும் கோடிக்கணக்கான நிதியைக் கொட்டி, அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தது. நாடு முழுவதும் மின்சாரத்தை விநியோகித்தது. எல்லோருக்கும் கல் வீடுகளைக் கட்டிக்கொடுத்தது. எத்தனையோ கவர்ச்சிகரமான பெயர்களில், பெரும்பான்மை சிங்கள மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ் மக்களுக்கும் ஆங்காங்கே சென்று பொசிந்தது.

ஆனால், இந்த உள்நாட்டு அபிவிருத்தியெல்லாம் – வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்காத – தன்னிறைவான டொலர் வருமானத்தை தரப்போவதில்லை என்பதை மகிந்த அரசோ அதற்குப் பிறகு வந்த அவரது சகோதரர் கோட்டபாய அரசோ புரிந்துகொள்ளவில்லை.

தேயிலை, உடு புடவைகள் போன்ற ஏற்றுமதிகளில் அதிகம் தங்கியுள்ள சிறிலங்காவின் பொருட்களுக்குப் போட்டியாக பங்களாதேஸ், கென்யா போன்ற நாடுகள், உலகச் சந்தையில் ஒரே பொருட்களுடன் போய் நின்றுகொண்டன. இதன் விளைவாக, சிறிலங்காவுக்கு டொலர்களை ஈட்டித்தருகின்ற ஏற்றுமதிப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடிவாங்கத் தொடங்கின.

மறுபக்கத்தில், கொரோனா பேரிடர் உலகையே விழுங்கிக்கொண்டிருந்த பெருந்தொற்றுக் காலப்பகுதியில், இலங்கையிடம் மீதமிருந்த சுற்றுலாத்துறையும் ஒரே அடியாகச் சாய்ந்தது. இலங்கையின் இறுதி ஊர்வலத்திற்குச் சர்வதேசச் சந்தையில் அலாரம் அடித்துக்கொண்டிருந்த நிலையிலும்கூட, ராஜபக்ஸக்கள் நாட்டின் பொருளாதாரம் குறித்த துரித கரிசனைகள் எதுவுமற்றுக் கிடந்தது மாத்திரமல்லாமல் –

சிங்கள பௌத்த தேசியத்தின் பரவலான அடித்தளத்துக்குத் தமிழர் பகுதிகளில் விகாரைகளைக் கட்டுவதிலும் சிங்கள மக்களுக்குத் தங்களது வெற்றுத் தலைமைத்துவத்தைப் போலியாக நிரூபிப்பதிலும் குறியாயிருந்தன.

பொருளாதார ரீதியில் மண்டைவளமற்ற ரீதியில் எடுக்கப்பட்ட இவ்வாறான பல்வேறு கூட்டுக்காரணிகளின் விளைவாக, இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை உத்தியோகபூர்வமாகப் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த வங்குரோத்து நிலை, இலங்கையின் அரசியல் – இராஜதந்திர – கேந்திரக் காரணிகளில் கரிசனைகொண்ட தரப்புக்களுக்கு, சுப நேரமாக அமைந்தது.

இதற்குக் காரணம் –

சிங்களப் பெரும்பான்மை வாக்குகளுடன் – நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியிலும் தங்கிக்கொள்ளாமல் – மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் – ஏகபோக அதிகாரத்திலிருந்த கோட்டபாய அரசாங்கமானது, அமெரிக்கா உட்பட மேற்குலகத்திற்கு நீண்டகால இடைஞ்சலாகத் தொடர்ந்து வந்தது. ஏனெனில், சிறிலங்கா போன்ற – பல்வேறு வல்லாதிக்கச் சக்திகளின் போட்டி நிறைந்த நாடொன்றில் – அரசாங்கங்கள் மக்களாதாரவோடு வலுவாக அமைந்து செழிப்பதை வெளிச்சக்திகள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இது பூகோள அரசியல் வாய்ப்பாடு. சிறிலங்கா ஏற்கெனவே, அமெரிக்க – இந்தியத் தரப்புகளை விலத்திக்கொண்டு போய், சீனாவின் பக்கம் சாய்ந்திருந்த நிலையில், தருணம் பார்த்து இந்த அரசாங்கத்தினை உருட்டிவிட வேண்டும் என்று விரல் மடித்துக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வறட்சி அரிய வாய்ப்பாக மடியில் வந்து விழுந்தது.

ஈராக், ஆப்கான், லிபியா போல நேரடியாகப் போய் இறங்கி அல்லது தங்களது மறைமுக ஆதரவுகளை வெளிப்படையாகவே காண்பித்துக்கொண்டு, ஆட்சி மாற்றங்களை நிகழ்த்துவதெல்லாம் அமெரிக்காவின் பாரம்பரியமான ஊடுருவல் பாணி.

அந்தந்த நாடுகளுக்குள் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக அல்லது உள்ளூர் கட்சிகளை, அமைப்புகளைக் கிளறிவிட்டு – மக்களை வைத்தே – அரசுகளைக் கலைப்பது இன்னொரு பாணி.

சிறிலங்காவில் அவ்வாறானதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, நாட்டில் மிகப்பெரிய பசியை ஏற்படுத்துவதே உசிதமான உபாயம் என்பதை அமெரிக்கா கணித்தது. (பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர், எத்தனை லட்சம் தமிழ் மக்கள் இறந்தாலும் பரவாயில்லை, விடுதலைப்புலிகளை அழிப்பது என்று எவ்வாறு கணக்கு போட்டார்களோ, அதே முடிவை இம்முறை வேறொரு வடிவத்தில் சிங்கள தேசத்திற்குள் செருகிவிட்டார்கள்.)

விளைவாக, வறண்டிருந்த சிறிலங்காவுக்கு வரவிருந்த அபயக் கொடுப்பனவுகள் தடுக்கப்பட்டன. உதவப்போன நாடுகளையும் அமெரிக்கா தன்பக்கம் இழுத்துத் தடுத்துக்கொண்டது. அமெரிக்க நிழலில் இருந்துகொண்டு, சர்வதேச உதவி அமைப்புகள், சிறிலங்காவுக்குக் கைகொடுப்பதற்குப் பல்வேறு நிபந்தனைகளைப் போட்டு இழுத்தடித்தன.

நாட்டில் பெட்ரோல், அரிசி என்று ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளாக வற்றத் தொடங்கியது. துறைமுகத்துக்கு வருகின்ற சரக்குக் கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்குவதற்கு, டொலர் இல்லாமல் ஒவ்வொரு நாளும் யாராவது கடன் தந்தால்தான், நாடு மூச்சுவிடும் என்ற கொடிய நிலைக்குச் சிறிலங்கா தள்ளப்பட்டது.

பசிகொண்ட மக்கள் நீண்ட வரிசைகளில் உணவுக்காகக் காத்திருந்தனர். ஆங்காங்கே வரிசையில் நின்றவர்கள் செத்தும் வீழந்தனர். பலர் மத்திய கிழக்கு நாடுளுக்குச் சென்று வேலை செய்வதற்காகப் பறந்தனர். இன்னொரு தொகுதி மக்கள் படகுகளில் வெளியேறி ஆஸ்திரேலியா, தமிழகம் என்று கரையொதுங்கத் தொடங்கினர். தலைநகர் ‘பாஸ்போட்’ அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.

சிறிலங்கா வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத பெருங்கொடுமைகள் எல்லாம் ஒவ்வொன்றாகக் கண்முன்னால் அரங்கேறத் தொடங்கின. பொறுப்பற்ற அரசினால் கைவிடப்பட்ட குடிமக்கள் ஒவ்வொருவரும் அச்சத்தினால் நடுங்கிப் போயினர்.

இந்த நிலையில்தான், சினங்கொண்ட மக்களின் பார்வை, ஆளும் கோட்டபாய- அவரது ராஜபக்ஸ சகோதரர்களின் மீது திரும்பியது.

போர் முடிந்தது முதல், நாட்டுக்கு வந்த பெருந்தொகையான வெளிநாட்டு முதலீடுகளில் – உதவிப் பணங்களில் வகைதொகையாக ஏப்பமிட்ட ஊழல் பெருச்சாளிகள் என்று அவ்வப்போது குற்றஞ்சாட்டப்பட்டு வந்த ராஜபக்ஸக்களின் அரசு – இன்னும் சொல்லப்போனால் போரை முடித்ததற்காக இந்தக் குற்றங்களிலிருந்தெல்லாம் சலுகை முறையில் சிங்கள மக்களால் மன்னிக்கப்பட்ட அரசு – கொடிய பொருளாதார வறட்சியின்போது அம்மணமாகியது.

பசியின் பெருந்துயரில் துடித்துக் கிடந்தவர்கள் எல்லோரும் ராஜபக்ஸக்களுக்கு எதிராகக் கிளர்ந்தார்கள். தலைநகர் கொழும்பில் திரண்டு மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டத்தில் வெகுண்டார்கள். ராஜபக்ஸக்களை ஆட்சியிலிருந்து விரட்டும் வரைக்கும் நாட்டுக்கு விடிவேற்படப் போவதில்லை, இந்தக் கொடிய வறட்சியிலிருந்து மீளப்போவதில்லை என்ற உண்மையை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். பசியில் இறப்பதிலும் பார்க்க, ராஜபக்ஸக்களுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை ஆகுதியாக்குவது என்று மூர்க்கமாக வீதியில் இறங்கினார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டதால், ராஜபக்ஸக்களின் ஆட்சிச் சீத்துவம் வெளிநாட்டுத் தெருக்களிலும் நாறியது.

அமெரிக்கா மிக நிதானமாகத் தனது தாயக்கட்டைகளை உருட்டிக்கொண்டிருந்தது.

முதலில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ஸவை விலக்கியாவது மக்களின் கோபத்தைத் தணிக்கலாம் என்று ஜனாதிபதி கோட்டபாய போட்ட திட்டம் பலிக்கவில்லை. ஈற்றில், வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டே ஓடி ஒளியவேண்டிய நிலையில் ராஜபக்ஸக்களின் சாம்ராஜ்யம் சரிந்தது.

தமிழர்களது அமைதி வழிப்போராட்டங்களைத் துப்பாக்கி முனையில் அடக்கி – போராட்டக்காரர்களை வெள்ளை வேனில் கடத்திச் சுட்டுக்கொல்வதைப் பாரம்பரியமாகக் கொண்டிருந்த ராஜபக்ஸக்களுக்கு, சொந்த மக்களுக்கு எதிராக அந்த வன்முறைகளை நிகழ்த்த முடியவில்லை. இராணுவத்தை ஏவிவிட்டு சில நூறுபேரைச் சுட்டுக் கொன்றிருந்தால், இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் பஸ்பமாகியிருக்கும். ஆனால், ஏற்கெனவே, தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுடன் இன்றைக்கும் சர்வதேச அரங்கில், தீர்மானம் – உடன்படிக்கை என்று தடுக்கி விழுந்துகொண்டிருக்கும் சிறிலங்கா, தங்களது துப்பாக்கிகளை அம்மணமாக்கிக் காண்பிக்க விரும்பவில்லை. (இதற்கு வேறு காரணங்களும் இருந்திருக்கலாம்)

இந்த நிலையில், நாட்டைவிட்டு ஓடிய கோட்டபாயவுக்கு பதிலாக – எஞ்சியுள்ள அவரது பதவிக் காலத்துக்குப் – புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யவேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தின் கைகளில் விழுந்தது.

அப்போதுதான், “இடைவேளைக்குப் பின்” – என்பதுபோல, கடந்த நான்கு மாத காலச் சிங்களவர்களின் போராட்டத்தினது ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது.

அதாவது, கோட்டபாயவினால் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ஸ நீக்கப்பட்டபோது, அந்த இடத்துக்கு யாரும் சென்று பொறுப்பெடுக்க மறுத்த நிலையில், துணிச்சலாக உள்ளே நுழைந்த ரணில் விக்ரமசிங்க, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏகோபித்த ஆதரவுடன் ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.

ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவமுடைய ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி கனவு – கடந்த காலங்களில் இரண்டு தடவையும் விடுதலைப்புலிகள் கொழும்பு அரசியலில் மேற்கொண்ட காய் நகர்த்தலினால் தகர்க்கப்பட்டது. கனவு – போன வாரம் ஒருவாறு நிறைவேறியது.

இப்போது இலங்கை அரசியலில் பேசுபொருளாகியிருப்பது இரண்டு விடயங்கள் –

1) ஜனாதிபதி தெரிவில் தமிழர் தரப்பு ரணிலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவோடு, எதிரில் போட்டியிட்ட டலஸ் அலகப்பெருமவுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானித்து, தமது கட்சியின் பிளவினை – ஒற்றுமை குலைந்து போயிருப்பதை – வெளிப்படையாக் காண்பித்துவிட்டார்கள். (தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி உறுப்பினர்கள் கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதிக்கான இரகசிய வாக்கெடுப்பில் – கட்சியின் கூட்டுத் தீர்மானத்தினை மீறி – ரணிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்)

2) பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பழைய ராஜபக்சக்களின் உற்ற தோழன் என்றும் இவரை நாட்டின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவரும் பதவி விலக வேண்டும் என்றும் நாட்டின் அடிப்படை சிஸ்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் நான்கைந்து மாதங்களாகப் போராடி வருகின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தமிழர்களது அரசியல் ஒற்றுமை என்பது நாடாளுமன்றத்தில் சிதைந்திருப்பது உண்மை. இதனைச் சீர்படுத்துவதும் அதற்கான வழிவகைகளைக் கண்டடைவதும், அடுத்தடுத்த மாதங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சவாலாகப் போகிறது என்பதற்கு அப்பால், அடுத்தத் தேர்தலில் இது இன்னும் பல சிக்கல்களை இறக்குமதி செய்யப் போகிறது என்பது உறுதி.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, புதிய அரசமைப்பினைக் கொண்டுவருவது என்ற நெடுங்காலத் திட்டத்துடன், அரசாங்கத்துடன் பேச்சு நடத்திவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது புதிய ஜனாதிபதியுடன் முரண்டு பிடிக்கின்ற ஒரு நிலைப்பாட்டுடன், எதிர்நிலையில் நின்றுகொண்டிருக்கிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், வாக்களித்த மக்களின் ஆணைக்குப் புறம்பானதொரு அரசியல் போராட்டத்திற்குள் தேவையில்லாமல் தனது வலுவை வீணடித்துக்கொண்டிருக்கிறது.

இது எங்கே போய் முடியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மறுபக்கம், புதிய ஜனாதிபதியையும் பதவி விலகுமாறு கோரிக்கை முன்வைத்தபடி, சிறிலங்காவின் அடிப்படை சிஸ்டத்தையே மாற்றுவதற்கு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கும் போராட்டக்காரர்கள்.

இதில் இரண்டு விடயங்கள் –

ஒன்று – ரணில் என்பவர் இன்றைய நிலையில் உலகம் கையாள விரும்புகின்ற சிறிலங்காவின் தலைவர். ஆக, அவரது அரசியல் ஸ்திரத்தன்மையை சிறிலங்காவின் நாடாளுமன்றம் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இணையாக, அமெரிக்கா உட்பட வெளிச்சக்திகளும் வலுசேர்ப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றன. ஆக, மகிந்தவையும் கோட்டாவையும் அகற்றுவதற்குத் தாங்கள் மேற்கொண்ட போராட்டம் ரணிலையும் அகற்றிவிடும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணினால், அது அவர்களது ஏமாற்றமாகவே முடியப் போகிறது.

இரண்டு – ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்ற ‘சிறிலங்காவின் சிஸ்டம் சேஞ்ச்’ என்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. ஒரு நாட்டின் சிஸ்டம் சேஞ்ச் என்பது எத்தகையது, அது எவ்வளவு படிநிலைகளில் சிக்கலானது என்பதை அறிந்துகொள்ளாதவர்கள் எழுப்புகின்ற சிறு முனகலே இது.

உதாரணத்துக்கு –

சிறிலங்காவுக்குள் இன்று பல நூறு வெளிநாட்டு கோப்பரேட் நிறுவனங்கள், ஏற்கெனவே செய்துகொண்ட பல்வேறு ஒப்பந்தங்களோடு, உள்நாட்டு வளங்களைக் குழாய்கள் வழி உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பிடியிலிருக்கும் நாட்டில், சிஸ்டத்தை மாற்றுவது என்பது அந்த வெளிநாட்டு நிறுவனங்களோடு மல்லுக்கட்டுவதுதான் அல்லது வெளிநாடுகளுடனேயே போராடுவது.

இந்தப் பொருளாதாரக் கூட்டுப்பொறிதான், அரசியலை இயக்கிக்கொண்டிருக்கிறது.

சிறிலங்காவின் அரசியல் என்பது நாடாளுமன்றத்திற்குள்ளேயும் ஜனாதிபதி மாளிகைக்குள்ளேயும் இருப்பதாக எண்ணிக்கொள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு, இந்த அடிப்படைகள் புரியவுமில்லை. அதற்குரிய பரந்த திட்டங்களோடு தங்களது நடவடிக்கைகளை முன்நகர்த்துவதாகவும் தெரியவில்லை.

நாட்டு மக்களைப் பொறுத்தவரை, இத்தனை காலமும் திறனற்ற தலைவர்களோடு திறைசேரி காய்ந்த நாட்டோடும் மல்லுக்கட்டியவர்கள், தற்போது, மேலும் புதிய சிக்கல்களோடு மல்லுக்கட்டுவதற்குத் தலைப்பட்டிருப்பதுதான் பரிதாபம்.