ஆன்னாவின் மனப்போரும் மரணத்தின் அமைதியும்: ஆன்னா காரனீனா

by நவீனா அமரன்
2 comments

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.”

ஆன்னா காரனீனா நாவலின் முதல் வரி.

ரயில் பெட்டிகளும் தண்டவாளங்களும் போல, காலமும் மனிதனின் விருப்பங்களும் தெரிவுகளும் (Choices) முடிவில்லாதவை. எதிர்காலம், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தன்னகத்தே கொண்டு, காலத்தின் முடிவிலி தன்மையை பிரதிபலிக்கும் பிம்பமாக, மனிதனால் தகர்த்து உடைக்க முடியாத பெரும் மதிலாக, அவனால் குடித்துத் தீர்க்க முடியாத பரந்த சமுத்திரமாக, காட்சிப்பிழையாக உருப்பெறும் போது, மனிதன் தனது தெரிவுகளின் மூலம் அதைக் கடந்து செல்லவும், வெற்றிகொள்ளவும் முற்படுகிறான். தல்ஸ்தோயின் ஆன்னா காரனீனாவும் அவ்வாறான மனிதத் தெரிவுகளின் வழி நிகழ்ந்த இலக்கியமாகும்.

கதையின் நாயகியான ஆன்னா, பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த எண்ணற்ற ரஷ்ய இலக்கியங்களின் நாயகிகளைப் போல அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றாலும், அவர்களில் மிகுதியானவர்களைப் போல இறுதியில் தற்கொலை செய்துகொண்டவள் என்றாலும், பாத்திரப் படைப்பிலும், சித்தரிப்பிலும், எண்ணவோட்டங்களிலும் ஆன்னா காரனீனா அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். அவள் தன் சமகால கற்பனைக் கதாபாத்திரங்களோடு ஒன்றி வாழ்ந்தவள் என்பதைவிட, நிஜ உலகில் வாழ்ந்தவள். ஏனெனில் அவளது தெரிவுகளும், தடுமாற்றங்களும் கற்பனையுலகை விட அன்றாடங்களுக்கே அதீத நெருக்கமானவை.

https://images.theconversation.com/files/194957/original/file-20171116-19845-16qthdu.jpg?ixlib=rb-1.1.0&q=45&auto=format&w=1200&h=1200.0&fit=crop

கால நகர்வின் தீவிரத்தை ஒத்த வேகத்தோடு பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவும் மாற்றுரு பெற்றுக்கொண்டிருந்தது. கட்டுக்கோப்பாக ஜார் மன்னர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த பரந்து விரிந்த ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தில் தொழில் வளங்களும், ரயில்கள், மின்சார விளக்குகள் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும், குடியாட்சிக்கான வேட்கையும் ஒருசேர வளர்ச்சியடைந்துகொண்டிருந்தன. கிட்டத்தட்ட விக்டோரியன் இங்கிலாந்தின் பிரதிபலிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா திகழ்ந்தது. மத நம்பிக்கைக்கும், அறிவியல் வளர்ச்சிக்குமிடையில் நிகழ்ந்த பனிப்போர் மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்தது.

பிரெளனிங், மொக்காலே, ரஸ்கின், சால்ஸ் டிக்கன்ஸ் போன்ற எழுத்தாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் சீரழிந்த குடும்ப அமைப்பினைப் பற்றி தங்கள் படைப்புகளில் பேச முற்பட்டது போலவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியப் படைப்புகளின் பின்னணியிலும் ‘குடும்ப அமைப்பு’ முக்கியக் கருவாக இடம்பெற்றிருந்தது. எந்தவொரு சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல், அறிவியல் முன்னேற்றங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பது குடும்பம் என்னும் அடிப்படையைத்தான்.

குடும்ப அமைப்பில் ஏற்படும் சிக்கல் மீண்டும் சமூகத்தைப் பாதிக்கிறது. இதன் வழி, சமூகமும், குடும்பமும் மாறி மாறி தகர்க்கப்படுவது, முடிவற்ற ஒரு தொடரி வட்டமாக மாறுகிறது. கடைசி ஜார் மன்னரான இரண்டாம் அலெக்சாண்டரின் மனைவிக்கும் அவருக்கும் குடும்ப உறவில் ஏற்பட்ட முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஒட்டுமொத்த ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தையே பாதித்ததும், ரஷ்யாவில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி குடியாட்சி மலர்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக அலெக்சாண்டரின் குடும்பச் சிக்கல்கள் இருந்ததாக வரலாறு உரைப்பதையும் மேற்கூறிய உண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

https://i.pinimg.com/originals/39/45/b3/3945b395cddbc8f4633911b6f8f6752c.jpg

ரஷ்யாவில் அப்போது எழுச்சி கண்டிருந்த இளைய சமுதாயம், குடும்பம் என்னும் கட்டமைப்பின் மீது முழுமுற்றான அவநம்பிக்கையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இளம் எழுச்சியாளர்கள் குடும்ப அமைப்பிலிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டு, தனிமனித சந்தோஷத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்களைப் பொருத்தமட்டில் குடும்பம் என்பது தொல்லைகளும், சிக்கல்களும், கூடுதல் பொறுப்புகளும் நிறைந்தது. தனித்துவமான வாழ்க்கைக்கு தடையாக இருப்பது. மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள தடை விதிப்பது. ஒரே ஆணுடனோ, பெண்ணுடனோ மட்டுமே வாழ்நாள் முழுவதும் உடலுறவு கொள்ள வற்புறுத்துவது. கிறித்தவ மதம் சொல்லும் கொடிய பாவங்களை மனிதனுக்கு அன்றாடம் நினைவுபடுத்தும் அடையாளமாகத் திகழ்வது. ஒட்டுமொத்தத்தில் குடும்பம் அவர்களின் மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பதாக அவர்கள் நம்ப ஆரம்பித்திருந்த காலகட்டத்தில்தான் தல்ஸ்தோய் தனது ஆன்னா காரனீனாவை எழுதுகிறார். ஏனெனில், ஆன்னா காரனீனாவைப் போன்ற ஒரு புதினம் எழுதப்பட வேண்டிய கட்டாயத்தில் அன்றைய ரஷ்யா இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆன்னா காரனீனாவில் தல்ஸ்தோய் சித்தரித்திருக்கும் குடும்பங்கள் அன்றைய எழுச்சியடைந்த ரஷ்ய இளைஞர்களின் அவநம்பிக்கைக்குரிய குடும்பப் பின்னணியில் இருந்தும், குடும்பம் சார்ந்த அவர்களின் மனவோட்டங்களில் இருந்தும் வேறுபட்டதல்ல. ஆன்னா காரனீனாவில் புனையப்பட்டிருக்கும் அத்தனை குடும்பங்களும் ஏதோவொரு வகையில் மகிழ்ச்சியின்மையாலும், அமைதியின்மையாலும் சூழப்பட்டதுதான். அதை உணர்த்தும் பாங்கிலேயே ஆன்னா காரனீனாவின் முதல் வரியும் அமைந்துள்ளது. ஒருவகையில், குடும்ப அமைப்பின் மீது எழுச்சி பெற்ற ரஷ்ய இளைஞர் சமுதாயம் கூறிய குறைகளை தல்ஸ்தோய் ஆன்னா காரனீனாவின் முதல் வரியிலேயே ஒப்புக்கொள்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒன்றையொன்று ஒத்தவை, மகிழ்ச்சியற்றவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட விதத்தில் மகிழ்ச்சியற்றவையாக இருக்கின்றன என்று கூறுவதிலிருந்து, அனைத்து குடும்பங்களிலும் நிலவும் மகிழ்ச்சியின்மையையும், அமைதியின்மையையும் உணர்ந்த தெளிவோடுதான் தல்ஸ்தோய் ஆன்னா காரனீனாவை எழுதியுள்ளார் என்பது தெளிவாகிறது.

இளைய சமுதாயத்தின் மனப்போக்கினை அடியொற்றி தனது புதினத்தைத் துவங்கும் தல்ஸ்தோய், உண்மையில் எது மகிழ்ச்சி என்னும் கேள்வியை நோக்கி ஆன்னா காரனீனாவை நகர்த்தும் கட்டத்தில்தான் சமூக உறவுகளிலும், முன்னேற்றத்திலும், குடும்பத்தின் பங்களிப்பு குறித்து சிந்திக்க வைக்கிறார். குடும்பம், தனிமனித விருப்பம் இவையிரண்டில் எதனைத் தெரிவுசெய்வது என்னும் மனக்குழப்பத்தினை தனது எழுத்தின் வழி நின்று ஆய்வுக்கு உட்படுத்துகிறார். இரண்டிலும் நிறைந்திருக்கும் சாதக பாதகங்களைச் சொல்லி, எது உண்மையான மகிழ்ச்சி என்ற கேள்வியை எழுப்புகிறார். குடும்பத்தைத் தெரிவுசெய்யும் எவருக்கும் மகிழ்ச்சியின்மை மட்டுமே மிஞ்சுகிறதா, தனிமனித விருப்பங்களைத் தெரிவுசெய்யும் எவருக்கும் மகிழ்ச்சி மட்டும் நிலைத்திருக்கிறதா போன்ற தத்துவார்த்தமான கேள்விகள் வலைப்பின்னல் போல ஆன்னா காரனீனாவின் கதைக்கருவைப் பிணைத்திருக்கின்றன.

https://i.pinimg.com/originals/11/f8/13/11f813bd08170e76dcdcea67a7668389.jpg

ஏறத்தாழ எண்ணூறுக்கும் மேற்பட்ட பக்கங்களையும், எட்டு தொகுதிகளையும் கொண்ட இந்தப் புதினம் தல்ஸ்தோயின் சிறந்த படைப்பாகக் கருதப்படுவதன் பின்னணியில், இந்தப் புதினம் எழுதப்பட்டு நூற்றைம்பது ஆண்டுகள் கடந்த பின்னும், ஆன்னாவின் வாழ்வோடு, உலகின் கடைக்கோடி மாந்தரின் வாழ்வையும் பொருத்திப் பார்க்கக்கூடிய சாத்தியக்கூறுகளும், அதன்வழி அவளது கதாபாத்திரம் காலத்தை வெல்லும் தன்மையுடையதாக மாறி, அழிவின்மையை நோக்கி நகர்ந்திருப்பதும் காரணங்களாக இருக்கின்றன. தல்ஸ்தோயின் தத்துவங்களும் தன்னிலை விளக்கங்களும், விருப்பங்களாலும் தெரிவுகளாலும் புரட்டிப் போடப்பட்ட மனித வாழ்க்கைச் சித்தரிப்புகளும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வையும் ஊடறுத்துச் செல்லக்கூடியவை.

மனிதன் அடிப்படையில் ஆசைகளாலும், விருப்பங்களாலுமானவன். தான் ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் இயக்கத்திலும் சலிப்புத் தட்டும் போதும், அதில் மனநிறைவு அடைய இயலாத போதும், அதனின்று விலகி புதிய தெரிவுகளைத் தேர்ந்தெடுத்து, புதிய செயல்பாடுகளில் ஈடுபட்டு, அதில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தேட முற்படுவது மனித இயல்பு. மனிதனின் அத்தகைய தெரிவுகள் உண்மையிலேயே தெரிவுகள்தானா எனும் கேள்வியைத்தான் ஆன்னாவின் கதாபாத்திரத்தின் மூலம் தல்ஸ்தோய் முன்வைக்கிறார். மனித வாழ்க்கை இரண்டு விதமான தெரிவுகளுக்கு ஆட்பட்டது. ஒன்று,  கலாச்சார ரீதியான, மத ரீதியான தெரிவுகள். அவை பெரும்பாலும் பிறப்பிலிருந்தே மனிதன் மீது திணிக்கப்பட்ட தெரிவுகள், நாளடைவில் அவனது அடையாளமாக மாறிவிடக்கூடிய தன்மையுடையவை.

எடுத்துக்காட்டாக, பிறப்பிலிருந்தே ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தழுவியவராக இருந்தாலும், இடையில் வேறு ஒரு புதிய மதத்தைப் பின்பற்றியவராக இருந்தாலும் அல்லது மத நம்பிக்கையற்றவர் எனும் நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தாலும், ஏதேனும் ஒரு வகையில் ஒரு கட்டமைப்பைத் தெரிவு செய்யவேண்டிய சூழலுக்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படுகிறான். இவ்வாறு வலிந்து திணிக்கப்படும் தெரிவுகளை, மனிதன் தனது சுய விருப்பத்தோடு தெரிவுசெய்வது போன்றதொரு மாயையை இந்தத் தெரிவுகள் ஏற்படுத்துகின்றன. இத்தகைய தெரிவுகள் மற்ற கலாச்சார கட்டமைப்புகளின் மீது அவனது ஒருதலைப்பட்சமான அணுகுமுறைக்கு வழிவகுக்கின்றன.

https://i0.wp.com/s3.amazonaws.com/magnoliasoft.imageweb/foliosociety/supersize/frontis_akr.jpg

இரண்டாவது வகையான தெரிவுகள் சமூக ரீதியானவை. மனிதன் வளர்ந்து, கல்வியறிவு பெற்று, சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் போது, இத்தகைய தெரிவுகள் அவனுக்கு நிகழ்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒருவர் தன்னைப் பெண்ணியவாதி என்றும், பின்நவீனத்துவவாதி என்றும் அழைத்துக்கொள்வதைக் குறிப்பிடலாம். இத்தகைய தெரிவுகள் அறிவு முதிர்ச்சி சார்ந்து சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதாக கருதப்பட்டாலும், இவையும் ஒரு மாய பிம்பத்தை மட்டுமே கட்டமைக்கின்றன.

ஏனெனில் இரண்டு வகையான தெரிவுகளும், அவற்றைத் தேர்ந்தெடுக்கும் எவரையும், அவை சார்ந்த கட்டமைப்பின் ஆளுகைக்குக் கீழ் உட்படுத்துகின்றன. உண்மையில் மனிதன் தனது விருப்பத்தின் அடிப்படையில் எதையும் தேர்வு செய்வதில்லை. அவன் தேர்ந்தெடுக்கும் தெரிவுகள்தான் அவனைத் தேர்வு செய்கின்றன. இது ஒருவகையில் ஒரு பாதையில் பயணிக்கும் ஒரு மனிதன், அதே காலகட்டத்தில் அதற்கு இணையாக செல்லும் மற்றொரு பாதையில் பயணிப்பது இயலாத காரியம் என்பதைப் போல, ஒரு குறிப்பிட்ட தெரிவினைத் தேர்வு செய்யும்போது மற்ற தெரிவுகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை இழக்கிறான். மேலும் தனது தெரிவுக்கு அப்பாற்பட்டு, மற்ற கட்டமைப்புகளில் இருக்கும் நன்மைகளைப் பகுத்தறியும் திறனையும், அவற்றிற்கு ஆதரவாக செயல்படும் உரிமையையும் இழக்கிறான். எனில் தெரிவுகள் என்பது உண்மையில் தெரிவுகள் அல்ல. அவை மனிதன் மீது சர்வாதிகாரம் செலுத்தக்கூடிய கட்டமைப்புகள் என்றேயாகும்.

இவ்வாறாக மனிதன் மீது சர்வாதிகாரம் செலுத்தக்கூடிய தெரிவுகளில் ஒன்றை விடுத்து மற்றொன்றை மனிதன் தேர்வு செய்யும்போது, அவனது தேர்வுகளே அவனது அழிவிற்கு வித்திடுகின்றன. அவ்வாறான அழிவை நோக்கிய பயணத்தைத்தான் இந்தப் புதினத்தில் ஆன்னா காரனீனா மேற்கொள்கிறாள். அரச குடும்பத்தைச் சேர்ந்த காரனீனுடன் பதினெட்டு வயதான ஆன்னாவிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது. அவன் அவளைவிட இருபது வயது மூத்தவன். அது ஒருவகையில் அவள்மீது திணிக்கப்பட்ட தெரிவு. காரனீனுடனான திருமண வாழ்க்கையில் அவளுக்குப் பெரிய பிடித்தம் எதுவுமில்லை என்றாலும் அவர்களுக்கிடையில் சச்சரவுகளும் மனப்பிறழ்வுகளும் பெரிதாக ஏற்பட்டிருக்கவில்லை.

தனது எட்டு வயது மகன் செர்யோலாவை, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் விட்டு மாஸ்கோவுக்கு ரயிலில் பயணப்படும் போது தனது மகனைப் பிரிந்த ஆற்றாமையில், அவனது புகைப்படத்தைப் பார்த்தவாறு பயணிக்கும் ஆன்னா காரனீனாவின் வாழ்வை, சில மணி நேரங்களில் மாஸ்கோவில் அவள் சந்திக்கவிருக்கும் வெரோன்ஸ்கி எனும் மனிதன் புரட்டிப்போடவிருக்கிறான் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. வெரோன்ஸ்கியுடனான அவளது முதல் சந்திப்பின் போது, அவள் பயணப்பட்டு வந்த அந்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட ஒரு மனிதனை, காரனீனை விடுத்து வெரோன்ஸ்கியைத் தேர்வு செய்வதினால் ஆன்னாவிற்கு நிகழவிருக்கும் கொடூர முடிவைக் குறிக்கும் ஒரு குறியீடாகக் கொள்ளலாம்.

https://i.etsystatic.com/5369125/r/il/ada7e5/403789487/il_794xN.403789487_20h3.jpg

‘Love ’em, leave ’em’ எனும் கோட்பாடு கொண்ட வெரோன்ஸ்கி, ஆன்னாவைப் பார்த்தவுடன் கிட்டியுடனான தனது காதலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதோடு, ஆன்னாவின் பால் தனது கவனத்தைத் திருப்புகிறான். அவளை உண்மையாக காதலிக்கிறான். ஆன்னாவிற்கும் வெரோன்ஸ்கியின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. இருவரும் காதலிக்கத் துவங்கும்போது அவர்களுக்குள் உருவாகும் அப்ஸ்டிராக்சன் (Abstraction) அல்லது இயல்நிலை மறந்த தன்மை, இருவரையும் அவர்களது காதல் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக சித்தரிக்கச் செய்கிறது. சமூகம், குடும்பம் என அனைத்து கட்டமைப்புகளையும் மறந்து, அவர்கள் இருவரும் தங்களுக்கான தனித்த பிரத்யேக உலகைச் சித்தரிக்கிறார்கள். அந்தச் சித்தரிப்பில் ஆன்னாவிற்கு குடும்பம், கணவன், குழந்தை என்று எதுவுமில்லை. வெரோன்ஸ்கியைப் பொறுத்தவரை ஆன்னா திருமணமானவள் இல்லை. அவர்களது உலகம் அவர்கள் இருவருக்கு மட்டுமே உரியது.

கணவனையும், குடும்பத்தையும், சமூகத்தையும் எதிர்த்து, வெரோன்ஸ்கியின் குழந்தைக்குத் தாயாகிறாள் ஆன்னா. அவர்கள் இருவரும் காதல் மயக்கத்தில் இருந்து தெளிந்து, மெய்யுலகச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரும்போது, ஆன்னா தனது அப்ஸ்டிராக்சனில் இருந்து விடுபட்டு, வெரோன்ஸ்கியுடனான வாழ்க்கையின் நிரந்தர சாத்தியக்கூறுகளைப் (Perpetual Possibility) பற்றி சிந்திக்கத் துவங்குகிறாள். அந்தச் சிந்தனையின் பின்னணியில் அவளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும், இந்தச் சமூகத்தைக் குறித்து அவளது பயம், அவளை ஒரு மீயுலக வெளிக்குள் (Heterotopic Space) தள்ளுகிறது. எவரொருவருக்கும் விருப்பம் இருக்கிறது என்பதற்காக கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று குழி பறித்து அதில் உறங்கிவிட முடியாது. ஏனெனில், தனிமனித விருப்பங்களை இந்தச் சமூகமும், மனிதனின் தெரிவுகளும் ஏற்றுக்கொள்வதில்லை, மாறாக அவற்றின்மீது அவை முழுமையான ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதுதான் உண்மை.

https://russianbroadway.com/s1/files/image/mariinsky2/annakarenina/gallery/annakarenina.jpg

ஆன்னாவும் வெரோன்ஸ்கியைத் தெரிவுசெய்ததில் இருக்கும் சிக்கல்களை மெல்ல உணரத் துவங்குகிறாள். அதேவேளையில், தனது முந்தைய தெரிவான காரனீனிடம் திரும்பிச் செல்ல முடியாத தொலைவின் ஒரு புள்ளியில் அவள் இருப்பதையும் புரிந்துகொள்ளத் துவங்குகிறாள். ரயில் தண்டவாளங்களைப் போல அவளது போராட்டமும் முடிவற்றதாகிறது. இந்த மனப் போராட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள, அவள் மரணத்தைத் தெரிவுசெய்கிறாள். அவள் வெரோன்ஸ்கியை முதன்முதலில் சந்தித்த ரயிலின் முன் விழுந்து மரணிக்கிறாள். காலமும் தெரிவுகளும் முடிவற்றவை. தெரிவுகள் காலத்தின் காரணிகள். அவை மனித வாழ்க்கையை காலம் எனும் முடிவிலியை நோக்கி நகர்த்துகின்றன. தெரிவுகளைத் தேர்வுசெய்வதும், தேர்வுசெய்யாமல் புறக்கணிப்பதுமாகிய இரண்டுமே தெரிவுக்குள் அடங்கும் என்பதால் மனிதன் அதனைப் புறக்கணிப்பது சாத்தியமற்றுப் போகிறது. ஏனெனில், ஒன்றைத் தேர்வு செய்வது (choosing something), ஒன்றைத் தேர்வு செய்யாமல் இருப்பது (choosing not to choose something) ஆகிய இரண்டு காரணிகள்தான் மனித வாழ்க்கையின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன.

தெரிவுகள் உருவாக்கும் சித்தரிப்புகளில் மயங்கி இயல் நிலைத்தன்மையை மறப்பதும், அந்த மயக்கத்தில் இருந்து தெளிந்து சாத்தியக்கூறுகளை உற்றுநோக்கும் போது, அந்தத் தெரிவில் இருந்து விலகி மற்றொன்றைத் தெரிவுசெய்ய முயற்சிப்பதும் மனித வாழ்வின் அன்றாடம். இதை உணர்வது எளிதில் சாத்தியமாவதால் ஆன்னாவின் தடுமாற்றங்களைத் தீர்ப்பிட முற்படுவதற்கு மாறாக அவள்மீது பச்சாதாபம் கொள்ள முடிகிறது. ஆன்னாவின் கதை அனைவருக்குமானது. அவளது மரணம் அனைவருக்குமானது. நம் அனைவருக்குள்ளும் ஒரு ஆன்னா வாழ்கிறாள். முந்தைய தெரிவுகளைத் துறந்து, புதிய தெரிவுகளுக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் அவள் மரணிக்கிறாள். அவளை தல்ஸ்தோய் உருவாக்கவில்லை. அவளே அவரையும் உருவாக்குகிறாள். ஏனெனில், நம் எல்லோருக்குள்ளும் ஆன்னா வாழ்வது நிதர்சனம் என்றால், தல்ஸ்தோய்க்குள்ளும் அவள் நிச்சயம் வாழ்ந்திருக்க வேண்டும்.

2 comments

Comments are closed.