நம் எழுத்தாளர் தனது நாற்பதுகளில் இந்த விளையாட்டை ஒரு தற்காலிக டாம்பீகம் எனக் கருதினார். ஆனால் பிற்காலத்தில் அதில் மகிழ்ச்சியும் திருப்தியும் கண்டார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது அறுபதுகளில், தீவிர முதியோர்- டென்னிஸ் ஆட்டக்காரனாக மாற முயல்வது குறித்த ஒரு புத்தகத்திற்காக நான் ஆய்வு செய்துகொண்டிருந்த போது ’த மில்லியன்ஸ்’ இலக்கிய இணைய தளத்தின் பதிவுகள் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைக் காண நேர்ந்தது. அதில் பிரதானமாக ஒரு வயதான ஆள் தனது வலது கையால் மரத்தாலான டென்னிஸ் மட்டையை விளாசியபடி நின்றுகொண்டிருக்கிறார். பழமைவாத கிழக்கு தேவாலய மரபினாலான வெண்தாடி வைத்திருக்கிற அவர், ஒரு கிராமத்துத் திருமணத்திற்காக ஆடையுடுத்தித் தயாராகியிருக்கிறாரா? – தெரியவில்லை. அவர் தல்ஸ்தோய் என்கிறது குறிப்பு. வலையின் மறுபுறம் கணுக்கால் வரை கவுன் அணிந்த ஒரு பெண் இருக்கிறார். அதுதான் அவரது மகளும் அந்தரங்கத் துணையுமான அலெக்ஸாண்ட்ராவா? முடிவிற்கு வரமுடியவில்லை. அடுத்ததாக, அவருக்கு இடதுபுறம் இருப்பது யார்? தல்ஸ்தோயை விட இளையவரும் இரட்டையர் ஆட்டத் துணையும் தல்ஸ்தோயின் தலையால் முகம் மறைக்கப்பட்டும் நிற்கிற அவர் யார்?
புகைப்படத்தில் இருக்கிற மற்றவர்களையோ புகைப்படக்காரரையோ அடையாளம் காண முடியவில்லை. தல்ஸ்தோயின் மனைவி சோஃபியாவிற்கு 1880களின் இறுதியில் புகைப்படக் கலையில் ஆர்வம் ஏற்பட்டு அவர் தங்கள் குடும்பத்தின் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை விட்டுச்சென்றிருக்கிறார். எனவே இப்புகைப்படத்தை எடுத்தவர் அவராகவும் இருக்கக்கூடும். ஆனால் புகைப்படத்தில் தேதி குறிப்பிடப்படவில்லை. ‘த மில்லியன்ஸ்’ வலைத்தளத்தின் பதிவர் ஒருவர், தங்கள் அலுவலக எழுத்தாளரும் ரஷ்ய இலக்கியம் பயின்றவரும் அதுகுறித்து எழுதுகிறவருமாகிய இலெஃப் பட்யுமனின் ட்வீட் ஒன்றில் இப்புகைப்படத்தைக் கண்டிருக்கிறார். அந்தப் பெண்மணியோ, நானறிந்த வரையில், இத்தாலியின் பெரிய பதிப்பகமான இன்னாவுதியைச் சேர்ந்த யாரோ, பிண்ட்ரெஸ்ட் வலைதளத்தில் அதை இட்டிருந்ததைக் கண்டு அங்கிருந்து எடுத்திருக்கிறார். ஆனால் இவை எதுவுமே புகைப்படத்தைப் பற்றியோ அது எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றியோ கூடுதல் தகவல்களை எனக்குத் தரவில்லை.
ஆனால் புகைப்படத்தில் இருக்கிற தல்ஸ்தோய் என்னை விட மூத்தவராய் இருப்பதாகத் தோன்றியதால் அது அந்த நூற்றாண்டின் இறுதியாய் இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். பிறகு, “தல்ஸ்தோய் டென்னிஸ் விளையாடினாரா?” என்கிற யோசனை எனக்கு எழுந்தது.
இதைப்பற்றி எனக்கு மேலும் அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. (ஒருவேளை எழுதிக்கொண்டிருக்கிற புத்தகத்திலிருந்து நான் சற்று விலகியிருக்க விரும்பியிருக்கலாம். மிக மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது அது). தல்ஸ்தோய் மைதானத்தில் இருக்கிற மாதிரியான வேறு சில புகைப்படங்களையும் நான் காண முடிந்தது. “த பட் கோல்லின்ஸ் ஹிஸ்டரி ஆஃப் டென்னிஸ்” (The Bud Collins History of Tennis) என்கிற புத்தகத்தில் 1896 என தேதியிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்த புகைப்படமும் அவற்றில் ஒன்று. அந்த ஆண்டில் தல்ஸ்தோய்க்கு 68 வயது. அப்புகைப்படத்தில் வேளாண் மக்களுடையது போன்ற, பட்டையுடன் கூடிய கெட்டிப்பருத்தித் துணியாலான, அடர்நிற மேல்சட்டை அணிந்திருக்கிறார். அடர்நிற கால்சட்டையும் காலணியும் கொஸ்ஸாக் தொப்பியும்கூட. அவரது வலது கையில் டென்னிஸ் மட்டை தொங்கிக்கொண்டிருக்கிறது. அவரது வலது காலிற்கு அருகில் கிடப்பது பந்து போல்தான் தெரிகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி இருக்கிற அவரது முகபாவம் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது- இப்போதுதான் அவர் ஒரு புள்ளியை இழந்திருக்கிறார்.
வாழ்வின் அத்தனை அந்திமத்தில் தல்ஸ்தோயை டென்னிஸை நோக்கி நகர்த்தியது எது? இன்னும் சரியாகச் சிந்திப்பதானால், அவரை அவ்விளையாட்டை ஏற்றுக்கொள்ள வைத்தது எது? தன் நாற்பதுகளில் இருந்தபோது அவர் டென்னிஸை ஒரு தற்காலிக டாம்பீகம் என்றும் புதுப்பணக்காரர்களின் பொழுதுபோக்கென்றும் அயலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றென்றும் போலியானதென்றும் பணக்காரப் பெரியவர்களால் வளர்த்துவிடப்படுகிற குழந்தைகள் விளையாட்டென்றும் கருதினார். 1870களில் மேஜர் க்ளாப்டன் விங்ஃபீல்ட் என்கிற ஆங்கில இராணுவ அதிகாரி ’புல்தரை டென்னிஸ்’ என்கிற நவீன விளையாட்டை வடிவமைத்து காப்புரிமை பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தல்ஸ்தோயால் எழுதப்பட்ட ஆன்னா காரனீனாவின் பகுதி 6 அத்தியாயம் 22லிருந்து நாம் இதைத் தெரிந்துகொள்ளலாம். விங்க்ஃபீல்ட் தனது விளையாட்டின் வடிவினை பல்வேறு மூலங்களிலிருந்து திரட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது. உள் அரங்கில் ஸ்க்வாஷ் போன்ற மட்டையுடன் ஆடப்படுகிற ஆங்கிலேயர்களது விளையாட்டு, மன்னன் எட்டாம் ஹென்றியின் அரங்குகளில் வளர்க்கப்பட்ட ’ரியல் டென்னிஸ்’, ஃப்ரான்ஸின் ஜூ டி பௌம், பெலொடா எனப்படுகிற பஸ்க்கிகளின் விளையாட்டு மற்றும் பேட்மிண்டன்.
’பந்தினைக் கையாளும் திறன்’ எனப் பொருள்படும்படி ”Sphairistike” என்கிற கிரேக்கச் சொல்லையே விங்க்ஃபீல்ட் தன் விளையாட்டிற்கு ஆரம்பத்தில் பெயராய் இட்டார். ஆனால் அவரது வியாபாரத் திறனின் சான்று, விளையாட்டிற்குத் தேவையான மட்டைகள், பந்துகள், வலை மற்றும் கம்பங்களை ஒரு பெட்டியில் அடைத்து கப்பலில் அனுப்புவதற்காகத் திட்டமிட்டதில் இருக்கிறது. தன் வியாபாரத்தின் முதல் ஆண்டான 1874ல் அவர் அதுபோன்ற ஆயிரக்கணக்கான பெட்டிகளை இங்கிலாந்தின் நாட்டுப்புறங்களுக்கும் ஃபிலடெல்ஃபியாவின் முக்கியப் பகுதிகளுக்கும் இன்னும் தூரங்களுக்கும் – தொலைதூரங்களுக்கும் அனுப்பி வைத்தார். அப்படி அவர் அனுப்பி வைத்த இடங்களில் ஒன்றுதான், கற்பனையாக, தல்ஸ்தோயின் ஆன்னா மாஸ்கோ நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும்படி தன் கணவனையும் மகனையும் விட்டுவிட்டு காதலன் வெரோன்ஸ்கியுடன் வசிக்கச் சென்ற வீட்டின் “கவனமாகச் சமப்படுத்தப்பட்டு புல் விரிக்கப்பட்ட தரை”. அந்த வீட்டில்தான், நாவலின் பிற்பகுதியில், அவள் கைவிட்ட- அவளைக் கைவிட்ட – அவளுக்காய் உலகில் எஞ்சியிருந்த ஒரே நிஜ ஆதரவும் அண்ணியுமான டாலியால் பார்வையிடப்படுகிறாள்.
டாலியை அயர்ச்சிக்கும் அசதிக்கும் உள்ளாக்கும் ஒரு வழக்கமான இரவு விருந்திற்குப் பிறகு விருந்தினர்கள் டென்னிஸ் மைதானத்திற்குச் சென்று விளையாடத் துவங்குகிறார்கள். இக்காட்சியில் கதாசிரியர் தல்ஸ்தோயின் குரலாகவே டாலி ஒலிக்கிறார் என்பதாக வாசகர் ஒருவர் கணிக்கிறார். முன்பெல்லாம் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இவ்விளையாட்டில் பங்கு கொண்டிருக்கிறார்கள். ஓடியும் சிரித்தும் குரலெழுப்பியும் தங்கள் இரவு உடை முழுக்க வியர்வையில் நனையும்படியும். தல்ஸ்தோயின் மீதும் டென்னிஸ் மீதும் காதல்கொண்ட, ஆன்னா காரனீனாவின் மிகச்சிறந்த வாசகர் என கருதப்படக்கூடிய, நபகோவின் “Lectures on Russian Literature” குறித்த கையெழுத்துப் பிரதிகளின் அடியில் நான் கண்ட ஒரு குறிப்பு இவ்வாறு கூறுகிறது- ”இங்கே ஒரு சிறந்த விவரணை வருகிறது. ஆண்கள் தங்களது பெண்களின் அனுமதியுடன் மேலங்கிகளைக் கழட்டிவிட்டு கைவைத்த சட்டையுடன் விளையாடத் துவங்கினார்கள்.” அவர்களைப் பார்க்கப் பார்க்க தன் மனம் இருள்வதை டாலி உணர்கிறாள்.
“குழந்தைகளின் விளையாட்டை, குழந்தைகளுடன் அல்லாமல், தாங்களே விளையாடுகிற பெரியவர்களிடம் வெளிப்படுகிற செயற்கைத்தன்மை” அவளை வருத்தமுறச் செய்கிறது. மைதானத்தில் விளையாடுகிறவர்கள் மைதானத்திற்கு வெளியேயும் அப்படிப்பட்டவர்களாகவே இருப்பதாக அந்த டென்னிஸ் அவளை எண்ணச் செய்கிறது. அதாவது – வெரோன்ஸ்கியும் அவனது நண்பர்களும் புதிய வகையினர், அடிப்படையில் வாழ்வை ஒரு ”நாடக அரங்காகவும்” அதன் அத்தனை அம்சங்களிலும் தங்களை ”நடிகர்களாகவும்” கருதிக்கொள்கிற, முதலாளிகளாகப் போராடுகிற நவீனர்கள். இதிலிருந்து, இவை அனைத்தும் தல்ஸ்தோயின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவும் அவர் டென்னிஸை வெறுத்ததாகவும் நாம் கருதக்கூடும். அப்படியாயின், வயதாக ஆக, துறவு மனநிலைக்காட்பட்டு, தீவிரமான அறநெறிச் சிந்தனைகளுக்குள் தன்னை மூழ்கடித்துக்கொண்டவருக்கு டென்னிஸின் மீதான இந்த வெறுப்பு அதிகமாகத்தானே செய்திருக்கும்?
தல்ஸ்தோயின் காலத்தைச் சேர்ந்த பி. ஏ. ஸெர்கீயென்க்கா என்கிற பத்திரிகையாளர் எழுதி 1899ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட “தல்ஸ்தோயின் வாழ்வு மற்றும் எழுத்தின் முக்கியத்துவம்” (How Count Tolstoy Lives and Works) என்கிற சிறிய புத்தகம் என் கைக்குக் கிட்டியது. தேசிய அடையாளமாகவும் சர்வதேச சக்தியாகவும் அவர் மாறியிருந்த அவரது அறுபதுகளின் பின்பகுதியிலான வாழ்வைப் பற்றிய விரிவான சிறந்த சித்திரமாக அப்புத்தகம் இருக்கிறது. அப்புத்தகத்தின் பெரும்பகுதி எழுத்து, கலை, அரசியல் மற்றும் விவசாயம் பற்றி எழுத்தாளர் விளக்குகிற பேட்டிகளால் நிரம்பியிருக்கிறது. ஆனால் புதிய இதழியலின் ஆரம்பகட்ட சாயைகளும் ஸெர்கீயென்க்காவின் எழுத்தில் துருத்தி நிற்கத்தான் செய்கின்றன. அவரது அவதானிப்புகளும் நேரில் கண்ட பேட்டிகள் பற்றிய குறிப்புகளும் தல்ஸ்தோயின் அதீத தார்மீக மற்றும் அறவுணர்வு பற்றிய அசலான சித்திரத்தை நமக்கு வழங்குகின்றன.
தனது சொத்துகள் அனைத்தையும் அவர் துறக்க விரும்பியது (மனைவியின் கண்டனத்திற்கு ஆளாகும்படியாக), சைவத்தைத் தேர்ந்தெடுத்தது (தனது காஃபிக்கு பாதாம் பாலையே அவர் பயன்படுத்தினார்!), காமத்தைத் துறந்தது (ஒரு வகையில்). இவையனைத்தும் அவரது தனிப்பட்ட கிறிஸ்துவ ஆன்மீக அடையாளத் தேடலின் பகுதிகள்தான். அவை அவரது ஆன்மாவில் குழப்பத்தை ஏற்படுத்தின. ’தல்ஸ்தோயிஸம்” என்கிற புதிய இஸத்திற்கான ஆதரவாளர்கள் திரண்டு வழக்கமான மரபார்ந்த தேவாலயத்திற்கு எதிரானவராக அவர் திரும்பியிருந்தார்.
இவை எல்லாவற்றிற்கும் நடுவில்தான் – எனக்குக் கிடைத்த சமகால தல்ஸ்தோய் வரலாறுகளில் இல்லாவிட்டாலும் – டென்னிஸ் வருகிறது. மாஸ்கோவிற்குத் தெற்கில் 120 கிலோமீட்டர் தொலைவில் யாஸ்னயா போல்யானாவில் இருந்த, தல்ஸ்தோயிற்குச் சொந்தமான, நாலாயிரம் ஏக்கர் நிலத்தில் அவர் அமைத்திருந்த மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் பல மணி நேரங்கள் அவர் டென்னிஸ் விளையாண்டதாக ஸெர்கீயன்க்கா குறிப்பிடுகிறார். உயர்ந்து நிற்கும் வாயிலிலிருந்து வரிசையான பிர்ச் மரங்களோடு நீண்டு செல்லும் சாலையின் இறுதியில் அமைந்திருக்கிற அந்த மைதானத்திற்கு அருகில்தான் முப்பத்து இரண்டு அறைகள் கொண்ட வீடும் அமைந்திருக்கிறது.
தான் கண்ட, இரவு உணவிற்குப் பின்னதான, ஒரு விளையாட்டை ஸெர்கீயன்க்கா இப்படி விவரிக்கிறார்- “நரையும் தளர்ந்த கன்னங்களுமாயிருந்த தல்ஸ்தோயும் மற்ற ஆட்டக்காரர்களும் ஓடியும் ஆரவாரமெழுப்பியும் விளையாடிக்கொண்டிருந்தனர். லெய்ஃப் நிகோலொவிச்சிற்கு (தல்ஸ்தோயிற்கு) இந்த ஆட்டத்தில் அதீத ஆர்வமிருந்ததென்பதை வெளிப்படையாகக் காண முடிந்தது” என்கிற ஸெர்கீயன்க்கா, “அது அவரது தசைகளுக்கு குறிப்பிட்ட அளவு வேலை நல்குகிறது. உற்சாகத்துடனும் தீவீரத்துடனும் விளையாடிய போதும் அவர் உணர்ச்சிவயப்படவில்லை. தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வருகிற அவரது இயல்பானது இந்தப் புல்தரை டென்னிஸ் விளையாட்டிலும்கூட வெளிப்பட்டது.” எனக் குறிப்பிடுகிறார்.
ஏல்மர் மாட் என்கிற ஆங்கிலேயரும் அவர் மனைவியும் தல்ஸ்தோயுடன் நட்பாய் இருந்து அவரது பல நாவல்களையும் கட்டுரைகளையும் ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்திருக்கிறார்கள். அந்த மாட் எழுதி 1910ல் வெளிவந்த தல்ஸ்தோயின் வரலாறு புத்தகத்தின் இரண்டாம் பாகமும் இவ்விஷயத்தில் நான் கண்டடைந்த உபயோகமான புத்தகங்களில் ஒன்று. ”தல்ஸ்தோயின் வாழ்க்கை: பிந்தைய காலம்” (The Life of Tolstoy: Later Years) புத்தகத்தில், தல்ஸ்தோயை விட முப்பது வயது குறைவான மாட், தானே அவருடன் டென்னிஸ் ஆடியது பற்றிக் குறிப்பிடுகிறார். 1890களில் இங்கிலாந்தின் ஆண்கள் விளையாடிய அடித்து ஆடுகிற டென்னிஸாக தல்ஸ்தோய் விளையாடிய டென்னிஸ் உருப்பெற்றிருக்கவில்லை. யாஸ்னயா போல்யானாவில் அது இன்னமும் மேஜர் விங்க்ஃபீல்டின் விளையாட்டாகவே இருந்தது.
“மையப் பகுதியில் மூன்று அடி உயரம் கொண்ட, தற்போதைய வலைகளை விட அதிக உயரமுடையவையாய் இருந்த, வலைகளைத் தாண்டி பல அடிகள் உயரப் பறந்து, தரையில் மோதுகிற இடைவிடாத தொடர் வீச்சுகளையும் சுழற்சிகளையும் அது உள்ளடக்கியிருந்தது. கீழிருந்து மேலாக அடிக்கிற சர்வ் முறையே பின்பற்றப்பட்டது. ஆனால் தல்ஸ்தோய் மிகத் தீவிரமாய் இருந்தார். கிட்டப்பார்வை உடையவராய் இருந்த போதிலும் அவரது நகர்வுகளின் வேகம் அதிசிறப்பாய் இருந்தது. நான் தொடர்ந்து டென்னிஸ் விளையாடுகிறவனாய் இருந்தும் அன்றைய ஆட்டங்களை ஓரளவு சிறப்பாகவே விளையாடிய போதும் அவர் அவற்றில் என்னைத் தோற்கடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.”
இந்த எல்லாப் புத்தகங்களையும் விரிவாக அலசிய பிறகு, பட்யூமனின் ரஷ்ய இலக்கியம் பற்றிய வசீகரமான கட்டுரைகள் அடங்கிய “ஆட்கொள்ளப்பட்டவை” (The Possessed) என்னும் புத்தகத்திலிருந்து, யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர், யாஸ்னயா போல்யானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்கில், தனது இறுதி ஆண்டுகளில் தல்ஸ்தோய் டென்னிஸிற்குத் திரும்பியது குறித்துப் பேசியிருப்பதாக அறிந்துகொண்டேன். பட்யூமனிற்கு மின்னஞ்சல் அனுப்பிய போது அந்தப் பேராசிரியரின் பெயர் விளாடிமிர் அலெக்ஸாண்ட்ரா என அவர் தெரிவித்தார். இணையத்தில் அலசியும் அவரது உரையை என்னால் கண்டடைய முடியவில்லை. மிசிஸிப்பியைச் சேர்ந்த பழைய கருப்பு அடிமைகளின் மகனாய்ப் பிறந்து ட்சாரிய மாஸ்கோவில் செல்வம் மிக்க வணிகனாய் உருமாறிய ஃப்ரட்ரிக் தாமஸ் பற்றி “கருப்பு ரஷ்யன்” (The Black Russian) என்கிற புத்தகத்தை பேராசிரியர் அலெக்ஸாண்ட்ரா எழுதியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். புத்தகத்திற்கான இணையதளத்தின் சுயகுறிப்பில் அலெக்ஸாண்ட்ரா பின்வருமாறு எழுதியிருக்கிறார்-
“கருப்பு ரஷ்யன்” புத்தகத்தை எழுதும் முன்பு நான் ஒரு தீவிர டென்னிஸ் ஆட்டக்காரனாக இருந்திருக்கிறேன். ஆனால் ஃப்ரட்ரிக் தாமஸ் ஒரு வசீகரமான கதாபாத்திரமாக இருந்தான்… நான் செய்ய விரும்பிய வேலையில் இருந்து டென்னிஸ் என் கவனத்தைச் சிதைப்பதாக உணரத் தொடங்கினேன்.” எனவே நான் அவரைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்தேன்.
இந்த விளையாட்டைப் பற்றி தனது நாட்குறிப்புகளிலோ வேறெங்குமோ தல்ஸ்தோய் எழுதியிருப்பதை நான் காணவேயில்லை. ஆனால் டென்னிஸிற்குள் நுழைந்த அதே சமயத்தில் அவர் சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொண்டிருக்கிறார். அவரது ஏழு வயது மகன் வனிச்க்கா ஒரு மாதம் முன்பு இறந்து விட்டதால் அதீத துயரத்தில் மூழ்கியிருந்திருக்கிறார். மாஸ்கோவின் மிதிவண்டிக் காதலர்கள் சங்கத்தினர் (The Moscow Society of Velocipede – Lovers) அவருக்கு இலவசமாக மிதிவண்டி அளித்து அதை ஓட்டக் கற்றுத் தந்திருக்கிறார்கள். தனது நிலத்தில் தோட்டத்தினூடாக அதை அவர் ஓட்டித் திரிந்திருக்கிறார். அதை மிகவும் நேசித்திருக்கிறார். டென்னிஸைப் போலவே மிதிவண்டி விடுதலும் அவரது தினசரியின் ஒரு பகுதியாய் மாறியிருக்கிறது. தினமும் காலை வேலைகள் முடிந்ததும் அவர் அதில் ஒரு சுற்று சென்று வருவார்.
சில விவசாயிகளை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மிதிவண்டி ஓட்டுதலை அற்பமானதெனவும் கிறித்துவ அபவாதம் எனவும் கருதிய அவரது சில நண்பர்கள் மற்றும் சீடர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்தப் பௌதீக உலகைத் துறக்கிற அவரது மற்ற செயல்பாடுகளோடு இதை எவ்விதம் பொருத்திப் பார்க்க முடியும்? மட்டுமல்லாது அவர் ஓர் ஆன்மீகத் தலைவரும் துறவியும் கூட. ஒரு குழந்தையைப் போல் அவர் சைக்கிள் மிதித்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
இக்கேள்விகளுக்கான பதிலை தல்ஸ்தோய் தனது நாட்குறிப்புகளில் தருகிறார். அதை வாசிக்கும் போது, ஒருவேளை வெரோன்ஸ்கி – உறங்குவதற்கு முன் தனது சுயத்துடன் தொடர்ந்து மல்யுத்தம் செய்கிற ஒருவனாய் இருந்திருந்தால் – இரவு உணவிற்குப் பின்னான டென்னிஸ் ஆட்டத்திற்குப் பிறகு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எழுதியிருக்க வாய்ப்பிருகிற நாட்குறிப்புகளில் வெளிப்பட்டிருக்கக் கூடிய தொனியில் தல்ஸ்தோய் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதை என்னால் காண முடிந்தது. ஆனால் அவன் அப்படிப்பட்டவனாய் இருக்கவில்லை. தல்ஸ்தோய் தனது உடலைச் சீர்ப்படுத்திக்கொள்ள விரும்பினார். புதிய விஷயங்களை முயல விரும்பினார். உடல் செயல்பாடுகள் மூலம் அடையச் சாத்தியமுள்ள மகிழ்ச்சியையும் திருப்தியையும் கண்டுணர்ந்தார். அவர் தனக்குத்தானே எழுதிக்கொள்கிறார், “ஒரு சிறுவனைப் போல வெறுமனே மகிழ்ந்திருப்பதில் தவறொன்றுமில்லை”. வயோதிகமடைந்த, தீவீர கட்டுரையாளரான, மரணம் குறித்த சிந்தனைகளால், ‘பெரிய விஷயங்களால்’ பீடிக்கப்பட்டிருந்த தல்ஸ்தோய், இவை எல்லாவற்றிற்கும் நடுவில், விளையாடவும் விரும்பினார்.
*
ஆங்கில மூலம்: Why Tolstoy took up Tennis? by Gerald Marzorati
1 comment
[…] […]
Comments are closed.