ஒரு கதையும் மூன்று கதைசொல்லிகளும்

1 comment

உலக இலக்கியத்தில் தல்ஸ்தோய் தவிர்க்கவே இயலாத ஒரு பெயர். அவரது தர்க்கம் இலக்கிய வட்டங்களில் மட்டும் அல்லாமல் அரசியல், சமூக செயல்பாடு என்ற பல தளங்களிலும் இன்றளவும் உண்டு. காந்தி முதற்கொண்டு ஜெயமோகன், போகன் சங்கர் வரை பல வரலாற்று ஆளுமைகளும் ஏதோவொரு வகையில் தல்ஸ்தோயால் ஈர்க்கப்பட்டவர்களே. ஆன்னா காரனீனா நாவலுக்குப் பிறகு தல்ஸ்தோய் ஒரு பரப்புரையாளராக மாறினார். தல்ஸ்தோயியர்களால் குறுந்தெய்மாக வழிபடப்பட்டார். (அவர்களது பெருந்தெய்வம் கிறிஸ்து. விவிலியத்தின் கிறிஸ்து அல்ல, தல்ஸ்தோயால் உருவாக்கப்பட்ட கிறிஸ்து)

தல்ஸ்தோயின் படைப்புகளில், தமிழ்ச்சூழலில், அதிகம் விவாதிக்கப்படாத ஒன்று The Kreutzer Sonata (1889). 1890-ல் இக்குறுநாவல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது. அடிப்படையில், Kreutzer Sonata என்பது பீத்தோவனால் உருவாக்கப்பட்ட சிக்கலான நீண்ட இசைத் தொகுப்பு. வயலின் மற்றும் பியானோ கருவிகளுக்கானது. ‘Kreutzer’ என்ற பெயருடைய வயலின் இசை மேதைக்கு இத்தொகுப்பு அர்ப்பணிக்கப்பட்டதால் அப்பெயரால் சுட்டப்படுகிறது. (ஆனால் க்ராய்ட்சருக்கு இத்தொகுப்பு சற்றும் பிடிக்கவில்லை. ஆகையால் அவர் தம் வாழ்நாளில் ஒருமுறை கூட இதனை வாசிக்கவில்லை)

https://www.berfrois.com/uploads/2010/11/kreutzer_sonata.jpg

தல்ஸ்தோய்க்கு இசையுடன் இருந்த உறவு சிக்கலானது. ஒருபுறம் இசை அவரை ஈர்த்தது. இன்னொரு புறம் அப்படியான ஈர்க்கும் ஆற்றல் இருந்ததாலேயே இசையைக் கேட்க அஞ்சவும் செய்தார். தல்ஸ்தோய்க்கும் பெண்களுக்கும் இடையே இருந்த உறவும் ஏறத்தாழ இது போன்றதே. எனவே திருமணம், பாலுறவு தொடர்பான தனது கருத்துகளையும் தன் மனைவி மீது கொண்டிருந்த சில கசப்புகளையும் காழ்ப்புகளையும் வெளிப்படுத்தும் விதமாக அவர் எழுதிய குறுநாவலுக்கு ஒரு இசைக்கோர்வையின் பெயரை வைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. குறுநாவல் எழுதப்பட்ட பின்னணியைத் தெரிந்துகொள்வதற்கு முன்னர், குறுநாவலுக்குள் செல்வதற்கு முன்னர், நாம் கட்டாயமாக தல்ஸ்தோயின் மனைவியைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

Sophia (Sonya) Andreyevna Tolstaya-ஐ தல்ஸ்தோயின் மனைவி என்று மட்டுமே அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டியிருப்பதே ஒரு துரதிர்ஷ்டம்தான். அதிலும் பெரிய துரதிர்ஷ்டம் அவர் தல்ஸ்தோய் வீட்டை விட்டு வெளியேறி ஒரு இரயில் நிலையத்தில் அநாதையாகச் சாவதற்குக் காரணமாக இருந்தவர் என்று நினைவுகூரப்படுவது. சோஃபியா தன்னளவிலேயே ஒரு குறிப்பிடத்தக்க அறிவாளுமையாகத்தான் இருந்தார். மேற்கத்திய செவ்வியல் இசையில், தத்துவத்தில் எல்லாம் அவருக்கு நல்ல ஞானம் இருந்தது. அதே போல அவர் ஒரு ஓவியரும் கூட. சோஃபியா உயிருடன் இருந்த காலத்திலேயே அவர் எழுதிய சிறார் புதினம் ஒன்று வெளிவந்திருக்கிறது. அவர் மறைந்த பிறகு அவரது டயரிகளும் (My Life), Whose Fault, Song Without Words ஆகிய நாவல்களும் வெளிவந்தன. இவையனைத்தையும் விட முக்கியமான விஷயம் தல்ஸ்தோய் என்ற மனிதனையும் தல்ஸ்தோய் என்ற கலைஞனையும் அவர் தன்னால் இயன்ற அளவிற்கு பேணிக்காத்தார் என்பது.

தல்ஸ்தோயின் பெரும்பாலான நாவல்களை (அச்சிற்கு அனுப்பத்தக்க) பிரதியெடுத்தது சோஃபியாதான். தல்ஸ்தோயின் கையெழுத்தைப் புரிந்துகொள்ள அவரால் மட்டுமே முடிந்தது. போரும் அமைதியும் நாவலின் பல வடிவங்களை சோஃபியா மீண்டும் மீண்டும் பிரதி எடுத்தார். இது அத்தனை எளிதான விஷயம் அல்லவே. தல்ஸ்தோய் பல்வேறு வகையான பண்ணைப் பரிசோதனைகளைச் செய்து பணத்தை விரயம் செய்தபோதிலும் அக்குடும்பம் பட்டினியால் வாடாமல் இருந்ததற்குக் காரணம் சோஃபியாவின் மதிநுட்பமும் கடின உழைப்புமே.

சோஃபியா தல்ஸ்தோயை திருமணம் செய்தபோது சோஃபியாவிற்கு 18 வயது. தல்ஸ்தோய்க்கு 34 வயது. திருமணத்திற்கு முன்பாகவே தல்ஸ்தோய் எல்லா விதக் களியாட்டங்களையும் கொண்டாடியிருந்தார். ஒரு பண்ணைப் பெண்ணுடன் இருந்த உறவு காரணமாக அவருக்கு ஒரு குழந்தையும் இருந்தது. அன்றைய ருஷ்ய உயர் வகுப்பினரிடையே இவையெல்லாம் சகஜமான விஷயங்கள்தான். ஆனால் கட்டாயம் சோஃபியாவால் அதனை அத்தனை எளிதில் கடந்துசென்றிருக்க முடியாது.

திருமணமான உடனேயே ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுப்பது போல தனது டைரிகளை சோஃபியாவிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் தல்ஸ்தோய். அவரைப் பொறுத்தவரை அது ஒரு வகையான பாப மன்னிப்பு மன்றாடல். அதனை எதிர்கொண்ட சோஃபியா எத்தகைய மனநிலையில் இருந்திருப்பார் என்று நம்மால் எளிதில் ஊகிக்க முடியும். தல்ஸ்தோய்க்கும் சோஃபியாவிற்கும் இடையே இருந்த உறவு விருப்பும் வெறுப்பும் கலந்த ஒன்றே. பெரும்பாலும் தல்ஸ்தோயின் கலைப் பித்துகள் அவர்கள் இடையே முரணை உருவாக்கின. சில நேரங்களில் தல்ஸ்தோய்க்கும் சோஃபியாவிற்கும் இடையே இருந்த முரண்பாடு ஆதர்சவாதத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையே இருந்த முரண்பாடும்கூட. இத்தகைய பிரச்சனைகளைத் தாண்டி தல்ஸ்தோய் குடும்பத்தையே குலைத்துவிடுமோ என்று அவர்களது நண்பர்கள் அஞ்சிய விவகாரம் ஒன்றும் நிகழ்ந்தது.

https://www.history.com/.image/t_share/MTU3ODc4Njg0ODUxMTE5NDMz/image-placeholder-title.jpg

சோஃபியாவிற்கு அவர்களுடைய பண்ணைக்கு விருந்தினராக வந்த Serjeev Taneev என்னும் இசைக்கலைஞன் மீது மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது. இந்த ஈர்ப்பு தல்ஸ்தோய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளுக்கு அவர்களது தாயின் செயல் அவமானகரமாக இருந்தது. ஆனால் ஈர்ப்பு என்பதைத் தாண்டி அந்த உறவு செல்லவில்லை.

இந்தச் சம்பவங்களை மனதில்கொண்டே தல்ஸ்தோய் க்ராய்ட்சர் சொனாடா குறுநாவலை எழுதினார். வழக்கம்போல, இந்தக் குறுநாவலை பிரதி எடுத்ததும் சோஃபியாதான். குறுநாவலை வாசிக்க வாசிக்க அது தன் நற்பெயரையும் ஒழுக்கத்தையும் கேள்விக்குரியதாக்கும் என்று சோஃபியாவிற்குத் தெளிவாகப் புரிந்தது. குறுநாவலில் சில மாற்றங்கள் செய்யச்சொல்லி அவர் தல்ஸ்தோயிடம் கேட்டுக்கொண்டார். அவர் வேண்டுகோளை தல்ஸ்தோய் ஏற்றுக்கொண்டதாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்தக் குறுநாவலின் இப்போதைய வடிவம்கூட சோஃபியாவைக் குற்றம்சாட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

குறுநாவலை வெளியிட முயன்றதும் அதனை ரஷ்ய தணிக்கைத் துறையினர் தடைசெய்தனர். தடைசெய்யப்பட்ட எந்தப் புத்தகத்தைப் போலவும் அப்புத்தகமும் ஆவலுடன் பலரால் வாசிக்கப்பட்டது. தல்ஸ்தோயின் உறவினரான சீமாட்டி ஒருவர் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு இரகசிய வாசிப்பரங்கையே நடத்தினார். நூற்றக்கணக்கானவர்கள் அதில் கலந்துகொண்டனர் (இக்காட்சி ஒரு புகழ்பெற்ற ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது) குறுநாவல் பலரால் பிரதியெடுக்கப்பட்டு ரஷ்யாவிலும் ரஷ்யாவிற்கு வெளியிலும் புழங்கியது.

https://media.gettyimages.com/photos/the-reading-of-the-novella-the-kreutzer-sonata-at-the-leo-tolstoy-picture-id464424175
இரகசிய வாசிப்பரங்கு ஓவியம். இதனை வரைந்தவர், Grigoriy Myasoyedov

ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையினரால் இந்தக் குறுநாவல் ஆபாசப் புத்தகம் என்று அறிவிக்கப்பட்டு அதன் அஞ்சல் பரிமாற்றம் தடைசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த வழக்கின் தீர்ப்பும் சுவாரஸ்யமானது. நீதிபதி தனது தீர்ப்பில் அந்தப் புத்தகம் கிறுக்குத்தனமானதாக இருக்கலாம், ஆனால் ஆபாசமானது அல்ல என்று கூறினார். மேலும் அவர்- ரஷ்ய தணிக்கைத் துறையினர், ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையினர் ஆகியோர் ஒரு இலக்கியப் படைப்பைக் குறித்து சொல்லும் கருத்திற்கு ஐக்கிய அமெரிக்க சட்ட உலகிலோ இலக்கிய வட்டாரத்திலோ எந்த மதிப்பும் இல்லை என அழுத்தம் திருத்தமாக கூறினார்.

இந்தக் குறுநாவல் ரஷ்ய மொழியில் அதிகாரப்பூர்வமாக அச்சானது சோஃபியாவின் கடும் முயற்சியால்தான். தல்ஸ்தோயின் ஒட்டுமொத்தப் படைப்புகளை அச்சிடும் வேளையிலும் ரஷ்ய தணிக்கைத் துறையினர் இந்தக் குறுநாவலுக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். சோஃபியா நேரடியாக ஜார் மன்னனைச் சந்தித்துப் பேசி அனுமதி வாங்கினார். விலை உயர்ந்த சேகரிப்பாளர்களுக்கான தல்ஸ்தோயின் படைப்புகளின் தொகுப்பை வெகு சிலர்தான் வாங்குவார்கள். அதனால் இந்தக் குறுநாவல் அத்தொகுப்பில் இருப்பது எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தாது என்று எண்ணித்தான் ஜார் மன்னர் அதற்கு அனுமதி வழங்கினார். ஆனால் அந்தத் தொகுப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஷ்யாவெங்கும் பலர் வாங்கினர். ஒருசிலர் க்ராய்ட்சர் சொனாடாவிற்காகவே வாங்கினர்.

அடிப்படையில், க்ராய்ட்சர் சொனாடா ஒரு பரப்புரை படைப்பே. ஆன்னா காரனீனாவிற்குப் பிறகு தல்ஸ்தோய் எழுதியதெல்லாம் பரப்புரைகளே என்று அவரது மகள் குறிப்பிடுவது சரிதான் என்றே தோன்றுகிறது. ஆனால் தல்ஸ்தோய் தனது குறிப்புகளில், இந்தப் படைப்பை எந்தவித முன் திட்டமிடல்களும் சித்தாந்த நிலைப்பாடுகளும் இல்லாமலேயே தான் எழுதத் தொடங்கியதாகவும் படைப்பை எழுத எழுத திருமணம், பாலுறவு போன்றவற்றைக் குறித்த சில நிலைப்பாடுகள் உருவாயின என்றும் கூறுகிறார். சொனாடா குறுநாவல் ஒரு ரயில் பயணத்தில் சில கதாபாத்திரங்கள் இடையே நிகழும் உரையாடலின் வடிவில் எழுதப்பட்டுள்ளது.

https://cdni.rbth.com/rbthmedia/images/2017.11/article/5a04145415e9f96ce4799705.jpg

ஒரு நீண்ட ரயில்பயணத்தின் போது ஒரு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் ஆண் பெண் உறவைக் குறித்து சர்ச்சை செய்தவாறு இருக்கின்றனர். தூய அன்பு, ஆன்மீகமான உறவு என்றெல்லாம் பேசிப் போகும்போது, அப்பயணிகளில் ஒருவர், தான் தினசரியில் சமீபத்தில் வாசித்த ஒரு நிகழ்வைக் குறித்துப் பேசுகிறார். ஒரு ரஷ்ய பிரபு அவரது மனைவியைப் படுகொலை செய்தது குறித்தான செய்தி அது. இத்தருணத்தில் அதுவரை அமைதி காத்துக்கொண்டிருந்த ஒரு நபர் பயணிகளை நோக்கி அச்செய்தியில் குறிப்பிடப்படும் நபர் தான் தான் எனக் கூறுகிறார். உடனடியாக அவ்விடம் நிசப்தமாகிறது. பயணிகள் ஒவ்வொருவராக அப்பெட்டியை விட்டு நீங்கத் தொடங்குகின்றனர். ஒரேயொரு பயணி மட்டும் அந்த நபருடன் பேசிக்கொண்டிருக்கிறார். இதன் பிறகு ஒட்டுமொத்த குறுநாவலும் அந்தக் கொலை செய்த நபரின் ஒற்றை உரையாடலாகத் தொடர்கிறது.

இந்த மையக் கதாபாத்திரத்தின் குரல் தல்ஸ்தோயின் குரலேதான். தனது மாளிகைக்கு வந்த இசைக்கலைஞன் ஒருவனுடன் தனது மனைவி தொடர்புவைத்திருந்ததைக் கையும் மெய்யுமாக பிடித்ததினால்தான் தனது மனைவியைக் கொலை செய்ததாக அந்தக் கதாபாத்திரம் கூறுகிறது. ஆனால் இது ஒற்றை வரி விவரிப்பல்ல. தல்ஸ்தோய் தனக்கே உரிய பாணியில் சமூக அறச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அக்கொலை என்பது வெறும் துரோகத்தின் விளைவு அல்ல என்று கதாபாத்திரத்தின் வாயிலாக நிறுவ முயல்கிறார். போஸ்ட்னிஷெவ் (Pozdnyshev) தானொரு பரமபரை செல்வந்தர் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மேலும் அவர் தனது இளமைக் காலத்தில் பல பெண்களுடன் தொடர்புவைத்திருந்ததாகவும் கூறுகிறார். ஒருகட்டத்தில், தனது மனைவியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து உடனே காதல் வயப்பட்டதாகக் கூறுகிறார்.

போஸ்ட்னிஷெவைப் பொறுத்தவரையில் அந்தக் காதலானது முழுமையான உடல்ரீதியான ஈர்ப்பு மட்டுமே. ஆனால் இதனை இவர் அக்காலகட்டத்தில் உணர்ந்துகொள்ளவில்லை. சமுதாய அமைப்பு பலவிதங்களில் ஆண்களை வசீகரிக்க பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது என்றும் அறிந்தோ அறியாமலோ பெண்கள் அச்செயலைக் கச்சிதமாகச் செய்கின்றனர் என்றும் கூறுகிறார். தனது திருமணம் நடந்து சில காலம் ஆனபிறகே அதிலுள்ள அர்த்தமின்மையைப் போஸ்ட்னிஷெவால் உணரமுடிகிறது. திருமணத்திற்கு முந்தைய போஸ்ட்னிஷெவ்வின் ஒழுக்கக்கேடுகளை அவர் வாயிலாகவே தெரிந்துகொள்ளும் அவரது மனைவி போஸ்ட்னிஷெவை வெறுக்கத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் என்ற விலங்கினால் பிணைக்கப்பட்ட இரு கைதிகளைப் போல பரஸ்பர வெறுப்புடன் நாட்களை நகர்த்துகின்றனர்.

போஸ்ட்னிஷெவிற்கு  தனது மனைவி துரோகம் இழைக்கக்கூடும் என்ற எண்ணம் வருவது ஒரு வினோதமான தருணத்தில். அவர்களுடைய முதல் குழந்தை பிறந்தபிறகு அவரது மனைவிக்கு ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளால் குழந்தைக்குப் பாலூட்ட முடியவில்லை. உடனடியாக போஸ்ட்னிஷெவின் மனைவி வேறொரு பெண்மணியை பாலூட்டும் தாயாக பணிக்கு அமர்த்துகிறார். தனது குழந்தைக்கான கடமையை மிக எளிதில் தட்டிக்கழித்த ஒரு பெண்ணால் எதுவும் செய்யமுடியும் என்று போஸ்ட்னிஷெவ் எண்ணத் தொடங்குகிறார். சில குழந்தைகள் பிறந்தபிறகு மீண்டும் மருத்துவ ஆலோசனையின் பேரில் போஸ்ட்னிஷெவின் மனைவி கருத்தடை முறைகளைக் கைக்கொள்கிறார். குழந்தைப்பேறு என்னும் விஷயத்திலிருந்து அவர் விடுதலை ஆன பிறகு அவரது நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மாறின என்று போஸ்ட்னிஷெவ் கருதுகிறார். போஸ்ட்னிஷெவ் நவீன மருத்துவத்தையும் நவீன மருத்துவர்களையும் திட்டித் தீர்க்கிறார். நாட்டிலிருக்கும் பெரும்பான்மையான ஒழுக்கக்கேடுகளுக்கு மருத்துவர்களே பொறுப்பென்று கருதுகிறார்.

https://www.akg-images.com/Docs/AKG/Media/TR3_WATERMARKED/0/5/2/8/AKG1087712.jpg

பாலுறவு இச்சை இயல்பானது என்று கூறுவதன் மூலமும் பாலியல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமும் மருத்துவர்கள் ஒழுங்கீனத்தை முன்னெடுக்கிறார்கள் என்று போஸ்ட்னிஷெவ் கருதுகிறார். மருத்துவத்திற்கு நிகராக போஸ்ட்னிஷெவ் வெறுக்கும் இன்னோரு விஷயம் இசை. (இவ்விஷயங்களில் தல்ஸ்தோயின் கருத்தும் போஸ்ட்னிஷெவின் கருத்தை ஒத்ததே என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்) இந்நிலையில் ஒரு இசைக் கலைஞன் அவர்களது வீட்டிற்கு வருகிறான். ஆரம்பம் முதலே அவன்மீது சந்தேகம் இருந்தாலும் தன் பெருந்தன்மையைக் காட்டிக்கொள்ளவும், கேவலம், இசைக் கலைஞன் மீது தனக்கு எந்தப் பயமும் இல்லை என்பதை நிறுவுவதற்காகவும் அவன் வருகையை போஸ்ட்னிஷெவ் ஊக்குவிக்கிறார். இந்த இசைக் கலைஞனைக் காரணங்காட்டி போஸ்ட்னிஷெவிற்கும் அவர் மனைவிக்கும் இடையே பலமுறை வாக்குவாதங்கள் நடக்கின்றன.

ஒவ்வொரு முறையும் தான் அப்படிப்பட்ட நபர் அல்ல என்று போஸ்ட்னிஷெவின் மனைவி பலமாக வாதிடுகிறார். இந்நிலையில் போஸ்ட்னிஷெவ் ஊரை விட்டு சில நாட்கள் வெளியே செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவர் வெளியூரில் தங்கியிருக்கும்போது உள்ளுணர்வால் உந்தப்பட்டு திடீரென கிளம்பி பீட்டர்ஸ்பர்க்கிற்கு வருகிறார். இடையில் வண்டியின் அச்சு முறிவதாலும் ரயில் தாமதமாவதாலும் போஸ்ட்னிஷெவ் வீடு வந்து சேரும்போது நள்ளிரவு ஒரு மணியாகிறது. அந்நேரத்திலும் அவரது மனைவியும் அந்த இசைக் கலைஞனும் தனியறையில் இருப்பது அவருக்குத் தெரிகிறது. கோப மிகுதியால் ஒரு குத்துவாளை உருவிக்கொண்டு சத்தம் எழுப்பாமல் அவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைகிறார் போஸ்ட்னிஷெவ். அந்த இசைக் கலைஞன் உடனடியாகத் தப்பிக்க முயல்கிறான். தனது மனைவியைக் கொல்லக்கூடாதென்ற எண்ணம் ஒரு நொடி போஸ்ட்னிஷெவின் மனதில் வருகிறது. ஆனால், அவள் கண்களில் சலிப்பும் தங்களது இசைப் பயிற்சி இடையூறு செய்யப்பட்டதால் உண்டான எரிச்சலும் மின்னி மறைவதைக் காண்கிறார். அந்தக் கணத்தில் அவர் தன்னையும் மீறி குத்துகிறார். சில மணிநேரம் மரணத்துடன் போராடி, போஸ்ட்னிஷெவை சபித்துத் தீர்த்த பிறகு அவரது மனைவி இறக்கிறார்.

போஸ்ட்னிஷெவ் தனது மனைவியைக் கொலை செய்யும் காட்சி ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவில் வரும் Desdemona கொலைக் காட்சிக்கு நிகரானது. போஸ்ட்னிஷெவ் நமக்கு ஒத்தல்லோவை நினைவுபடுத்துகிறார். (இவ்வரிகளை வாசித்தால் தல்ஸ்தோய் கட்டாயமாக எரிச்சலடைந்திருப்பார். வேறு பலவற்றைப் போல அவர் ஷேக்ஸ்பியரையும் வெறுத்தார்) பிறகு நீதிமன்றத்தில் தனது செயல் வெறுமனே துரோகத்தால் தூண்டப்பட்ட செயல் அல்ல என்றும் அது நெடுநாட்களாக உருவாகித் திரண்டு வந்த கசப்பின் விளைவு என்றும் போஸ்ட்னிஷெவ் விளக்க முயல்கிறார். ஆனால் நீதிமன்றம் அந்த வாதத்தை அவர் தனது இறந்துபோன மனைவியின் நற்பெயரைக் காக்கும் முயற்சியாகவே செய்கிறார் என்று கருதி அசட்டை செய்கிறது. போஸ்ட்னிஷெவ் இந்தக் கொலையை உணர்ச்சி வேகத்தில்தான் செய்தார் என்று எண்ணி நீதிமன்றம் அவரை விடுதலையும் செய்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தான் நீதிமன்றத்தில் சொல்ல நினைத்தை எல்லாம் அந்த ரயில் பயணத்தில் சொல்லித் தீர்க்கிறார் போஸ்ட்னிஷெவ். ஆண் பெண் உறவில் எந்தப் புனிதத் தன்மையோ தம்பதியரிடையே எந்த ஆன்மீக இணக்கமோ இருக்க முடியாது என்ற தல்ஸ்தோயின் கருத்தை போஸ்ட்னிஷெவ் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார். போஸ்ட்னிஷெவை  ஒரேயடியாக ஆணாதிக்கவாதியென்று கூறிவிட முடியாது. இந்தக் குறுநாவலில் ஒரு இடத்தில் பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பதாகச் சொல்வதெல்லாம் அவர்களை இன்னமும் அதிகமாக சுரண்டுவதற்கான முயற்சியே என்று கூறும் போஸ்ட்னிஷெவ், பெண்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென்றால், பெண்களைப் பாலியல் இச்சைக்கான பொருளாகக் கருதுவதை நிறுத்துவது மட்டுமே பெண்களுக்கு நன்மை கொடுக்கும் என்று கூறுகிறார்.

பின்னாட்களில் தல்ஸ்தோய் இந்தக் குறுநாவலுக்கு ஒரு பின்குறிப்பையும் எழுதினார். அந்தப் பின்குறிப்பு திருமணம், பாலுறவு, மக்கட்பேறு போன்றவை அனைத்தும் ஒரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் என்ற தனது கருத்தை மீண்டும் ஒருமுறை அழுத்தமாகக் கூறுகிறார். பூரண பிரம்மச்சரியமே இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபட ஒரே வழி என்றும் கூறுகிறார். தல்ஸ்தோயின் இத்தகைய கருத்துகள் அன்று பலரிடமும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிகிறது. சோஃபியாவின் டைரி குறிப்புகளில் ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது. இந்தக் குறுநாவல் எழுதப்பட்டு சில வருடங்களுக்குப் பிறகு ஒருவர் தல்ஸ்தோயைச் சந்திக்க அவரது பண்ணைக்கு வருகிறார். அவர் தல்ஸ்தோயின் கருத்துகளால் கவரப்பட்டு ஆண்மை நீக்கம் செய்துகொண்டவர். தல்ஸ்தோய் கூறியபடியே மிக எளிமையான வாழ்க்கையையும் வாழ்கிறார்.

ஆனால் பண்ணையில் தல்ஸ்தோயை நேரடியாகப் பார்க்கும்போது அவர் பரப்புரை செய்ததற்கும் வாழ்வதற்கும் இடையே உள்ள பெருத்த வித்தியாசத்தை உணர்கிறார். இதனால் ஏமாற்றமடைந்து தனது வாழ்க்கையையே தல்ஸ்தோயை நம்பி வீணடித்துவிட்டதாக சோஃபியாவிடம் அழுது புலம்புகிறார். ஒருவகையில் பார்த்தால் பிரம்மச்சரியம் தொடர்பான காந்தியின் பல கோட்பாடுகள் தல்ஸ்தோயிடம் இருந்து வந்ததாகக் கருதலாம். இந்தக் குறுநாவலுக்கான செம்பிரதியைத் தயார்செய்து கொண்டிருக்கும்போதே இந்தப் படைப்பு தனது நற்பெயருக்கு தீராக் களங்கத்தை உருவாக்கும் என்று சோஃபியா உணர்ந்தே இருந்தார். இருப்பினும், ஒரு எதிர்நாவல் எழுதவேண்டும் என்று அவர் தீர்மானித்தது அரசவை வட்டாரங்களில்கூட தனது குடும்ப வாழ்க்கை விவாதப் பொருளாகிவிட்டது என்று தெரிந்த பிறகுதான்.

எதிர்நாவல் என்பது பெண்ணியச் செயல்பாடுகளிலும் பின்காலனித்துவ கோட்பாட்டிலும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மையத்திலிருந்து உரக்கச் செய்யப்படும் பொதுமைப்படுத்துதலுக்கு எதிரான விளிம்புநிலை மறுமொழிகளாகவே எதிர்நாவல்கள் செயல்பட்டுள்ளன. Jane Eyre-ற்கு எதிர்க்குரலாக வந்த Wide Sargasso Sea ஒரு உதாரணம். சோஃபியாவின் ‘Whose Fault?‘ குறுநாவலை முதல் பெண்ணிய எதிர்நாவல் என்று சொல்லலாம். தன்மீது ஏற்பட்ட அவதூறை விளக்குவதற்காக அவர் இந்நாவலை எழுதியிருந்தாலும் இதில் சோஃபியா முன்வைக்கும் பல கருத்துகள் ஒரு பெண்ணின் தரப்பை விளக்கும் தன்மைகொண்டவை. சோஃபியா இந்த நாவலை எழுதி முடித்திருந்தாலும் அவர் இதனை வெளியிடவே இல்லை.

1990களில் முதன்முறையாக தல்ஸ்தோய் வம்சத்தினரின் அனுமதியுடன் இந்நாவல் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. 2014ஆம் வருடம் Michael R. Katz என்னும் ரஷ்ய இலக்கிய அறிஞரால் மொழிபெயர்க்கப்பட்டு யேல் பல்கலைகழகத்தால் The Kreutzer Sonata Variations என்ற பெயரில் தல்ஸ்தோயின் குறுநாவலும் சோஃபியா, Lev Lvovich Tolstoy ஆகியோரின் எதிர்க்கதைகளும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிறகே ஆய்வுலகம் இக்குரல்களைக் கருத்தில்கொள்ளத் தொடங்கியது. சோஃபியாவின் எதிர்க்கதையில் தல்ஸ்தோயின் குறுநாவலில் காணப்படும் இலக்கியத் தரமோ வார்த்தை ஜாலங்களோ இல்லை என்றபோதிலும் அதில் நீக்கமற நிறைந்திருக்கும் உண்மையுணர்வும் உறுதியும் அக்கதையை உதாசீனம் செய்யப்பட முடியாத ஒன்றாக மாற்றுகிறது.

சோஃபியாவின் எதிர்க்கதையில் அந்தக் கொல்லப்பட்ட பெண்ணே கதைசொல்லியாகவும் மையக் கதாபாத்திரமாகவும் இருக்கிறார். அற்பத்தனமும் போலித்தனமும் நிறைந்த ஒரு எழுத்தாளரை அவர்களிடையே உள்ள வயது வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் திருமணம் செய்துகொள்கிறார் கதாநாயகி. (தல்ஸ்தோய்க்கும் சோஃபியாவிற்கும் இடையில் சுமார் 16 வருட இடைவெளி இருந்தது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்). திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண் தனது கணவனது காதல் களியாட்டங்களை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அதுமட்டுமில்லாமல் தனது கணவருக்கு பண்ணைப் பணிப்பெண்களிடம் தொடர்பும் அதன் வாயிலாக குழந்தைகளும் உண்டு என்று அறியும்போது இடிந்துபோகிறார். ஒருகட்டத்தில் கணவனை எந்த விதத்திலும் திருத்தவே முடியாது என்று அறிந்த பிறகும் தனது குழந்தைகளுக்காக அவருடன் சேர்ந்து வாழ்கிறார். கசப்பும் எரிச்சலும் வன்மமும் சந்தேகமும் தளும்பும் அவர்களது திருமண வாழ்வு மலையில் பயணிக்கும் நொண்டிக் குதிரையைப் போல் செல்கிறது.

https://www.bookvica.com/pictures/977.jpg?v=1582657265

இந்நிலையில் உடல் நலம் நலிவுற்ற கணவனது பால்ய கால நண்பர் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வருகிறார். கதாநாயகி அவரதுபால் ஈர்க்கப்படுகிறார். அந்த ஈர்ப்பு எவ்வகையிலும் உடல் சார்ந்தது அல்ல. ஒத்த இரு மனங்கள் இடையேயுள்ள நட்பாகத்தான் அது இருக்கிறது. தனது அந்திம நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அந்தக் கலைஞனும் அவ்வாறே கதாநாயகி மீது களங்கமற்ற தூய அன்புடன் இருக்கிறார். ஆனால் இந்தத் தூய அன்புகூட தவறானது என்ற குற்றவுணர்வு அப்பெண்ணை வாட்டுகிறது. தனது குழந்தைகள் நோயுறுவதற்கு தனக்கு ஏற்பட்டுள்ள இந்த உணர்வே காரணம் என எண்ணுமளவுக்கு அவரது குற்றவுணர்ச்சி அவரை வாட்டுகிறது. இந்த நுட்பங்கள் எதுவும் உணராத அவரது கணவன் அவள்மீது தீரா சந்தேகம் கொள்கிறார். ஒருகட்டத்தில் ஒரு வாக்குவாதத்தின் உச்சத்தில் அவளது கணவன் ஒரு கனமான பொருளை எறிந்து கொல்கிறான். டால்ஸ்டாயின் கதைகளில் வருவது போலல்லாமல் கதாநாயகி எந்தவிதக் கசப்புமில்லாமல் தனது மரணம் யாருடைய தவறும் இல்லை- விதியின் தவறு என்று கூறி இறக்கிறார். அதன்பிறகு உண்மையை உணர்ந்த அவளது கணவன் தீரா சோகத்தில் அமிழ்கிறான். 

தல்ஸ்தோயின் படைப்பை சோஃபியா முழுமையாக மறுக்கவில்லை. ஆனால் பார்வைக் கோணத்தை மாற்றுகிறார். அத்தகைய ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு அப்பெண் மட்டும் பொறுப்பல்ல என்றும் அத்தகைய ஒரு ஈர்ப்பு உடல்ரீதியானதல்ல மன ரீதியானது என்றும் நிறுவ முயல்கிறார். ஒத்த மனம்கொண்ட ஒரு நபர் பால் ஏற்படும் தூய அன்பே ஒரு குடும்பத் தலைவிக்கு குற்றவுணர்வைத் தூண்ட போதுமானதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தனது மனசாய்விற்கும் தனது குழந்தைகளின் உடல்நலத்திற்கும் இடையே முடிச்சு போடுவதன் மூலம் எந்நிலையிலும் கதாநாயகி ஒரு தாய்தான் என்று நிறுவுகிறார். அனைத்தையும் உடல்ரீதியான இச்சையாக மட்டுமே பார்க்கும் ஆண் மையப் பார்வைக்கு எதிரான குரலாக இக்கதை இருக்கிறது. தல்ஸ்தோய் இந்தக் கதையை வாசித்து இது இலக்கியத் தரமற்றது என்று கூறுகிறார். அவர்களது புதல்வனான லெவ்வும் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார். மேலும் தனது தாயிடம் இக்கதையை வெளியிடுவது அனாவசிய சர்ச்சைகளையும் வதந்திகளையும் உருவாக்கும் என்று எச்சரிக்கவும் செய்கிறார். சோஃபியா இப்படைப்பை வெளியிட முயலாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.  

தல்ஸ்தோய் – சோஃபியாவின் புதல்வனான லெவ்வும் தனது கோணத்திலிருந்து இதே கதையைச் சொல்கிறார். லெவ்வின் கதைக்கு இலக்கியத் தரமோ உணர்வின் வலிமையோ அறவே இல்லை. இருப்பினும் இதனை ஒரு எதிர்வினை என்ற அளவில் கணக்கில்கொள்ள வேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் லெவ் வைக்கும் தீர்வு பதின்மப் பருவத் திருமணமே. எத்தனைக்கு எத்தனை விரைவாக திருமணம் செய்துவைக்கப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை கணவன் மனைவியிடையே உள்ள பந்தம் பலமாக இருக்கும் என்பது லெவ்வின் நிலைப்பாடு. இத்தருணத்தில் ஒரு கேள்வி எழுகிறது. சுவாரசியமான ஒரு இலக்கிய வம்பு என்பதைத் தாண்டி இந்த நாவல்களுக்கோ அல்லது இது தொடர்பான ஒரு கட்டுரைக்கோ என்ன மதிப்பு இருக்கிறது?

மூன்று விதங்களில் இந்தப் படைப்புகளும் இது தொடர்பான கட்டுரைகளும் முக்கியமானவை என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே சொன்னது போல் யாருடைய தவறு என்ற எதிர்க்கதை விளிம்பிலிருந்து வந்த ஒரு மறுமொழி. தல்ஸ்தோயின் பிரம்மாண்ட படைப்புகள்- அதுகுறித்த திறனாய்வுகள் ஏற்படுத்திய பேரிரைச்சல் இடையே அந்தக் குரலைக் கேட்க நமக்கு நூறு ஆண்டுகள் ஆனது. இருப்பினும், ஒரு நெடுங்காலத் தாமதத்திற்குப் பிறகும், தான் சொல்ல வந்ததை இவ்வுலகிற்கு சோஃபியா சொல்லிவிட்டார் என்றே நாம் கருத வேண்டும். இரண்டாவதாக, இலக்கியத்தில் நாம் எதையும் கருப்பு வெள்ளையாகப் பார்க்க முடியாது என்பதை இப்படைப்புகள் உணர்த்துகின்றன. பெண் என்ற உருவில் வந்ததோர் மாயப் பிசாசு என்ற தொனியில்தான் தல்ஸ்தோய் எழுதுகிறார் என்றபோதிலும் அவரை ஒரேயடியாக பெண் வெறுப்பாளர் என்று முத்திரை குத்த முடியாது. ஒரு பெண்ணின் விடுதலை என்பது அவளைப் பாலியல் பொருளாக மட்டுமே பார்ப்பதை நிறுத்துவதில் தொடங்குகிறது என்ற பேருண்மையையும் தல்ஸ்தோய் என்னும் ஆணாதிக்கவாதிதான் சொல்கிறார்.

https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1400939226l/20663394.jpg

மூன்றாவதாக, பெரும் படைப்புகளையும் நிகரற்ற படைப்பாளிகளையும் அரசியல் சரி என்னும் அரையடி அளப்பானைக் கொண்டு புரிந்துகொள்ள முயல்வது அபத்தமான ஒன்றாகவே இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். பெண்களைக் குறித்த தல்ஸ்தோயின் கருத்துகள் மிகவும் பிற்போக்குத்தனமானதாக இருக்கலாம். ஆனால், அதற்கென்று தல்ஸ்தோயை நாம் மறுதலிக்கவோ ஒதுக்கிவைக்கவோ முடியாது. இந்த விதி எல்லாக் கலைஞர்களுக்கும் பொருந்தும். பெரும் இசைமேதையான வாக்னரை யூத வெறுப்பாளர் என்ற காரணத்தால் நாம் ஒதுக்க முடியாதே? ஒரு படைப்பாளியையும் அவரது படைப்புகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் முன்னெப்போதை விடவும் இப்போது அதிகமாக உள்ளது. வாக்னரை நாம் வெறுப்பதற்கான அத்தனை காரணங்களும் உண்டு. ஆனால், வாக்னரின் இசைப் படைப்புகளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. அதே விதிதான் டால்ஸ்டாய்க்கும்.

நாணயத்தின் இன்னொரு பக்கமாக வேறொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு படைப்பாளியின் படைப்புகளில் இருந்து தனக்கான வாழ்க்கை முறையையும் அரசியலையும் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளும் வாசகன் ஏமாற்றம் அடைவதே இல்லை. ஆனால் ஒரு படைப்பாளியின் பரப்புரையைத் தனது வாழ்க்கைமுறையாகக் கொள்ளும் வாசகன், பலநேரங்களில் தல்ஸ்தோயின் வார்த்தைகளை நம்பி ஆண்மைநீக்கம் செய்துகொண்ட இளைஞனைப் போல, ஏமாற்றமும் வெறுப்புமே அடைகிறான்.

*

பின்குறிப்பு: இந்தக் கட்டுரைக்கு உதவிய மூலநூல்- The Kreutzer Sonata Variations, Edited and translated by Michael R.Kartz, Yale University Press, 2014

1 comment

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020 November 22, 2020 - 4:15 pm

[…] ஒரு கதையும் மூன்று கதைசொல்லிகளும் – B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் […]

Comments are closed.