தல்ஸ்தோயின் காதல்

1 comment

நான் முதல்முதலில் ஆன்னா காரனீனாவைப் படிக்க ஆரம்பித்தது வருடங்களுக்கு முன் என் முதுகலைப் பட்ட ஆய்வுக் கட்டுரைக்காக. அப்போது எனக்கும் காதலில் விழும் வயது – கவனியுங்கள், காதலிக்கும் வயதில்லை, காதலில் விழும் வயது.

ஒரு காதல் கதையைப் படிக்கும் மனநிலையில்தான் அதை முதலில் வாசித்தேன். கதாமாந்தர்களுடைய மனப்போராட்டங்களையும் தேர்வுகளையும் காதல் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்த்து, அவர்கள் எதைச் சரியாகச் செய்தார்கள், எதைத் தவறாகச் செய்தார்கள் என்றெல்லாம் என்னுடைய தனிப்பட்ட நெறிமுறைகளின் வழியே மதிப்பிட்டு, அவர்களின் செயல்களை மெச்சி அல்லது கண்டித்து ஆராய்ந்தேன்.

பிறகு ஆன்னாவை எட்டு முறை படித்துவிட்டேன்.

ஒவ்வொரு முறை படிக்கும்போதும் எத்தனை குறுகிய கண்ணோட்டத்துடன் என் கட்டுரையை எழுதியுள்ளேன் என்பது விளங்குகிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் என் கட்டுரையை ஏற்று எனக்கு எப்படிப் பட்டம் கொடுத்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. கத்துக்குட்டி நான் கூறினாலும் ஆன்னாவின் காதல் புறவய அகெடெமியர்களையும் மயக்கவல்ல அத்தனை வசீகரமானது போலும்.

தல்ஸ்தோய் ஆன்னா காரனீனாவை எழுதும்போது காதலை மட்டும் சொல்லவில்லை. அன்பையே ஒரு விதியாக, சாபமாக, மதிப்பீடாக, உலகத்தின் இன்பத்தை மட்டுமன்றி துன்பத்தையும் ஏற்றி வரும் பாத்திரமாக, விளங்காப் புதிராக அமைத்துள்ளார். அன்பை அவர் இன்பம் தரும் தென்றலாகக் காட்டவில்லை, வாழ்க்கையையே புரட்டிப்போடும் சூறாவளியாகக் காட்டியுள்ளார். தல்ஸ்தோய் ஆன்னா காரனீனாவை தனி நாவலாக எழுதியிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. ‘வார் அண்டு பீஸ்’ என்று போரையும் வாழ்வையும் எழுதும் போது பொங்கி வழிந்தோடிய எண்ணங்களின் வடிகாலாக எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. சமுதாயத்தில் போரும் அமைதி வாழ்வும் தனி மனிதக் கட்டுப்பாடுகளுக்கும் இச்சைகளுக்கும் மீறி தன்னிட்டமாய்த் தோன்றி மறைவதைப் போல, தனி மனிதன் வாழ்க்கையில் உருவாகும் போர்களும் அமைதிகளும் பல நேரங்களில் அவனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு அமைவதின் உண்மையைத்தான் ஆன்னாவின் வழியே கூறுகிறாரோ?

https://m.media-amazon.com/images/M/MV5BMzE2ZWY5NjAtYTc2NC00M2E3LWE0M2UtNDA3MzdkNDY2MTM2XkEyXkFqcGdeQXVyNTQxMTIxMTk@._V1_.jpg

ஆக, ஆன்னா காரனீனாவும் ஒருவிதமான வார் அண்ட் பீஸ் தான் – ‘வார் அண்ட் பீஸ்’ சமுதாயத்தைப் பற்றியென்றால், ஆன்னா எனும் வார் அண்ட் பீஸ் தனி மனித விதிவசங்களைப் பற்றியது.

ஆன்னா காரனீனாவை தல்ஸ்தோய் எப்படி எழுதத் தொடங்கினார் என்பதை அறிந்தால், அவர் எழுதியது காதல் கதையன்று, மனப் போராட்டங்களின் காவியம் என்பது விளங்கும். ‘பீட்டர் த கிரேட்’ என்ற சரித்திர மகா காவியத்தை எழுத முற்பட்டுத் தோல்வியுற்று, மனத்தளர்ச்சியுற்று இருக்கையில் நடந்த ஒரு விபத்தே தல்ஸ்தோயிற்கு ஆன்னா காரனீனாவின் வித்தாக அமைந்தது. ஆன்னா ஸ்டெபனொவ்னா பிரொ கவா என்ற தல்ஸ்தோய்க்குத் தெரிந்த பெண் தன் குழந்தைகளின் ஜெர்மன் ஆசிரியையுடன் கணவன் வைத்திருந்த தொடர்பினால் வருந்தி, பித்துப் பிடித்தாற்போல் அலைந்து, ‘என்னைக் கொலை செய்தவன் நீயே’ என்று கணவனுக்குக் கடிதம் எழுதிவிட்டு, சரக்கு ரயில் வண்டியின் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டது தல்ஸ்தோயை உலுக்கிவிட்டது.

அவளது உடலைப் பரிசோதனை செய்தபோது, கணவனுக்கு எத்தனை இன்பங்களை அளித்த அந்த மார்பகங்களும் இடையும் உருத் தெரியாமல் குலைந்து இருப்பதைப் பார்த்து, இதற்கான காரண காரியங்களை ஆராய முற்பட்டு, அன்பின் முடிவு இப்படிச் சாதாரணமான அருவருப்பான மரணம் மட்டுந்தானா என்று வெதும்பிய அவர் மனத்தில் தோன்றியதே இக்கதை என்று தல்ஸ்தோய் கூறியுள்ளார்.

ஆம். ஆன்னா காரனீனா ஒரு காதல் கதையும் கூடத்தான். ஆனால் காதலைப்பற்றி அன்று. காதலின் தீவிர விளைவுகளைப் பற்றியது. காதல் மனித மனத்தின் அடிப்படை உந்துசக்தி. ஆனந்தம், ஆத்திரம், அன்பு போல. சில சமயம் களிப்பானது, பல சமயம் கொடுமையானது. ஆபத்தானதும் கூட. லெவினும் கிட்டியும் காதல் வயப்பட்டது களிப்பு. ஆன்னா காதல் வயப்பட்டது கொடுமை. இரண்டு காதலுமே அவற்றில் இருந்தவர்களாலும் தடுத்திர முடியாத மனிதக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாய்த்தான் இருக்கிறது.

இலக்கியக் காதலைப் பற்றிய இந்த ஏட்டு வரையறை படிப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் இதை ஒப்புக்கொள்வது எளிதல்லவே.

தேவதைகளாக, ‘காதலில் விழுந்தவர்களாக’, சாதாரண மக்களை விட உயர்ந்தவர்களாக, அற்புதமிக்கவராக மனத்தில் உருவகித்துள்ள காதலர்களைத் துன்பத்தால் கெடுபவர்களாகப் படிப்பது காதலைப் பற்றி நாம் எழுப்பியுள்ள மணல் கோட்டையைச் சரிப்பதாக இருக்கிறதே. பயமாகவும்தான்.

ஆம், எல்லாக் காதலும் மரணத்தில் முடிவதில்லை – லெவின்-கிட்டியின் காதலைப்போல். ஆனால் லெவின்-கிட்டியின் காதல், ஆன்னா காரனீனாவின் வலிமிக்க காதலுக்கு மருந்து போல்தான் அமைத்துள்ளாரோ? லெவின்-கிட்டியின் காதல் சிற்றலை, ஆன்னாவின் சுனாமியில் மறைந்து விடுகிறதே? காதல் தோல்வியின் வலியில்தான் எழுச்சி. வெற்றி பெற்ற காதல் சாதாரணத்துவத்திற்குள் விழுந்துவிடுகிறது.

‘காதல் மட்டுமே புரியவேண்டும், திருமணம் செய்து கொள்ளக் கூடாது’ ஆஸ்கர் வைல்ட்டின் கூற்று உண்மையோ?

https://springbackmagazine.com/wp-content/uploads/2019/01/anna-karenina-joe-wright-waltz.jpg

காதலைப்பற்றி நாம் கொண்டுள்ள மனப் பிம்பம் ஆன்னாவின் மரணத்தை உன்னதத் தியாகமாகப் பார்க்க வைக்கிறது. காதலுக்கு வாய்ப்பளிக்க ஆன்னா உயிரையும் பணயம் வைத்தது போலல்லவா இருக்கிறது? அப்படி யோசிப்பது, காதலுக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுக்கிறதன்றோ? ஆனால் இதைக் காவியம் என்பதை மறந்து ஒரு நிமிடம் நிஜம் என்று எண்ணிப் பார்ப்போம். ஆன்னாவின் காதலால் யாருக்கு என்ன நற்பயன்? ஆன்னாவிற்கு மட்டுமன்றி, அவள் காதலன் வ்ரொன்ஸ்கிக்கும் கணவன் கரெனினுக்கும் மகன் செர்யொழாவிற்கும் அல்லவா இது துயர முடிவாய் அமைகிறது?

காதலால் யாருக்கும் எதுவும் துயரமும் இல்லை, ஆன்னாவின் தற்கொலையால் மட்டுமே துயர முடிவு அமைந்தது என்று பதில் வாதம் செய்யலாம். ஆன்னா தற்கொலை செய்து கொண்டது சமூக, மதக் காரணங்களால் என்றும் காதலுக்கும் தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் விவாதிக்கலாம். சமூகம் பெண்ணிற்கும் ஆணிற்கும் வெவ்வேறு விதிகளை அமைப்பதால்தான் துயரம் ஏற்பட்டது, இல்லையெனில் வ்ரொன்ஸ்கியும் ஆன்னாவும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தியிருக்கக்கூடும் என்றும் கருதலாம். ஆனால் வாழ்க்கையின் சமகால நியதிகள் அன்றைய சமுதாயத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றியே அமையும் என்பது இயல்பு.

சரி, ஆன்னா காதலின் தியாகி இல்லை என்றால், அவள் யார்? ஆன்னாவின் தற்கொலையால் ஏமாற்றம் அடைந்த வாசகர்கள் அவளது குணத்தையும், அவளது தேர்வுகளையும், நோக்கங்களையுமே சந்தேகப்படுவர். அவளது மனப்போராட்டங்களை, அவளது நற்குணங்களைக் கவனிக்காமல் அவளைக் காமப்பித்து பிடித்த வன்மம் நிறைந்த எதிர்நாயகியாகப் பார்க்கின்றனர். ஆனால் அவளைக் ‘கெட்டவளாகப்’ பார்ப்பது அவளுக்கும் தல்ஸ்தோய்க்கும் செய்யும் அநீதி.

உலகில் நடக்கும் கேடுகள் பலவற்றிற்கும் காரணம் வன்மம் இல்லை, அறியாமைதான். ஆன்னா முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறாள்தான். ஆனால், அதற்கான காரணம், தான் செய்யும் காரியங்களின் விளைவுகளை முன்காண முடியாத அறியாமையால்தான். வ்ரான்ஸ்கியுடன் காதல் வயப்பட அலையும் காமப்பித்து கொண்டவள் அல்ல ஆன்னா. நாவலின் தொடக்கத்தில் தனது சகோதரன் ஸ்டிவாவை அவனது காதலியிடமிருந்து பிரித்து மனைவியுடன் சேர்க்கத்தான் மாஸ்கோ செல்கிறாள். அண்ணனின் இல்புறக் காதலைத் தவறென்று கருதிய அவளே வ்ரான்ஸ்கியிடம் இல்புறக் காதல் வயப்பட்டதால் (வாழ்க்கையின் முரணை எத்தனை அற்புதமாய்ப் புனைவினில் பிரதிபலிக்கிறார் தல்ஸ்தோய் என்று விளக்கமாய் வியந்து சுட்டுகையில்தான் எளிய வாசக மனநிலைகளுக்கு இவ்வகை இலக்கியப் படிமங்கள் புரியத் தொடங்குகிறது!) தன் மீதே அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் கூட அவளுடைய பிற்காலச் செயல்களுக்கு – அவை சரியா தவறா என்பதை மதிப்பிட நமக்கு உரிமை இல்லை – காரணமாக இருந்திருக்கலாம்.

ஆன்னாவுடைய வீழ்ச்சியில் அவளுடைய பங்கு என்ன என்பது தல்ஸ்தோய்க்கே புரியாமல் இருந்திருக்கலாம். நிஜ வாழ்க்கை ஆன்னாவின் கணவன் ஜெர்மன் ஆசிரியையுடன் கொண்ட தொடர்புக்கு அவளே எத்தனை தூரம் பொறுப்பு என்பது புரியாதது போல். வார் அண்டு பீஸ்-ஸில், போரில் தனியொரு போர்வீரனுடையப் பங்களிப்புப் புரியாதது போல்.

ஆனால் தனிமனிதன் வாழ்க்கையில் செய்யும் தேர்வுகள் அவனது சூழ்நிலைகளால் மட்டுமே உருப்பெறுகின்றன என்பதில் தல்ஸ்தோய் தெளிவாக இருக்கிறார். ஒருவருடைய குணநலன்களும் ஆளுமையும் சூழ்நிலையால் உருவாக்கப்படுபவையே என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

https://i.pinimg.com/originals/60/69/b1/6069b1a84008040cb14d763cb6b18441.jpg

உலகோடு ஒத்து வாழச் சில வரம்புகள் இருக்கின்றன என்பது உண்மையே. அதே போல மனம் தாங்கக்கூடிய உணர்வுகளுக்கும் வரம்புகள் உள்ளன. ஆன்னாவின் கதையில், நாற்புறங்களிலிருந்தும் வருபவற்றால் அவளுக்கு ஏற்படும் உணர்வுக் குவியல்கள் – வ்ரான்ஸ்கி மீது கொண்ட காதல், அலெக்ஸிஸ் மேல் கொண்ட கோபம், குழந்தை மேல் கொண்ட பாசம், தன் மேல் கொண்ட ஏமாற்றம், சமுதாயச் சட்டங்களின் மேல் கொண்ட எரிச்சல் சேர்ந்து அவளது வரம்பை உடைத்திருக்கலாம். இவற்றின் கலவையில் சில பல (அவளுக்கு) தவறான முடிவுகளுக்கு அவளைத் தள்ளியிருக்கலாம். தானே செய்தாளா இல்லை செய்வதற்கு உந்தப்பட்டாளா என்பது வாழ்க்கையின் விடையில்லாக் கேள்வி. எளிதாக விட்டுக்கொடு, வாழ்க்கையில் நீ ஒரு ஏனோதானோ, எதற்கெடுத்தாலும் போராடு, வாழ்க்கை உனக்கொரு பெருந்துயரம் மட்டுமே.

ஆன்னாவின் மரணத்திற்குப் பிறகு தல்ஸ்தோய் லெவினின் கதாபாத்திரம் மூலம் அன்பு, மகிழ்ச்சி, இன்பம் பற்றிய தன்னுடைய மனப்போராட்டங்களை தற்காலிகப் புரிதல்களை விளக்க முயல்கிறார். ஆன்னாவின் மனப்போராட்டங்கள் மரணத்தில் முடிந்தது போலல்லாமல், வாழ்க்கை என்பது தழைப்பதற்கு ஓரளவு அது உறையும் சமுதாயத்தை ஒத்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ‘புரிதலால்’ லெவினின் மனப்போர் அமைதியில் முடிகிறது.

ஆக, காதல் என்பது என்ன என்பதன் பதில் தேடி இந்த நாவலைப் படித்தால், பதில் கிடைக்காது என்பதே விளங்குகிறது. ஆன்னாவிற்குப் புரியாத அன்பின் சூத்திரம் லெவினுக்கு மட்டும் புரிந்ததா என்றால், இல்லை என்பதே ஆசிரியர் புனைவின் வழியே அலசும் மானுடப் பெருங்கேள்வி ஒன்றிற்கான விடை என்பது நாவலை ஊன்றி வாசிப்பவருக்குத் தெளிவு.

அன்பு என்ன என்பதை ஆராய்வதை விட அதை அந்த நொடியில் அனுபவிப்பதே மேல் என்பதைப் புரிந்துகொண்டதால் மட்டுமே லெவினால் மகிழ்ச்சியுடன் வாழ முடிந்தது.

இந்த ‘ஏனோதானோ தெளிவு’ உண்மையை ஆராயும் உறுதியில்லா ‘நழுவும்’ உத்தி எனப்படலாம். ஆனால் சில புரிதல்களின் காரணிகளைப் பகுத்தாய்ந்து அறிய முற்பட்டால் அமைதியாக வாழ்ந்திருக்க வேண்டிய நம் வாழ்க்கை ஆராய்ச்சியில் செலவழிந்து, அனுபவத்தில் இழந்து, அதுநாள் வரை மனப் போராட்டத்தினூடே நிலையற்றதாய்ச் சந்தேகித்த ஆதர்சங்களிடம் பிடிமானமற்ற ஒரு கையறு தினத்தில், ஆன்னா போன்று கண்மூடித்தனமாய் எதிர்ப்படும் வாழ்க்கையின் நிதர்சன வண்டியில் மோதி விழுந்து விடலாம்.

காதல் கொல்லுமா, வாழவும் வகை செய்யுமா? ஆன்னாவின் காதலுக்கான முடிவுடன் தல்ஸ்தோய் நாவலை முடிக்கவில்லை. அதற்குப் பிறகும் நூறு பக்கங்கள் எழுதி, லெவினின் காதல் சுட்டும் பாதையை வைத்தே நாவலை முடித்துள்ளார்.

ஆன்னா காரனீனா காலங்களை வென்ற இலக்கியப் புதையல். அதை ஓரிருமுறை படிப்பது கடல் ஆழத்தை, காலில் தொட்டுப் போகும் அலைக் கரையில் நின்று அளப்பது போலாகும். அந்தக் காதலுக்கும் அன்பிற்குமான ‘வார் அண்ட் பீஸ்’ காவியம் கதை மாந்தர்களின் எண்ணங்கள், உணர்வுகள், மனப் போராட்டங்கள், வருத்தங்கள், மன அமைதி அனைத்தும் மானுடத்தின் வாழ்வியல் புதிர்கள் விடைகளாய் வழிந்தோடும் அமுதசுரபி. காதலைப் போலவே. இந்த அமுதசுரபியிலிருந்து எதைப் பெறுகிறோம் என்பது வாசிப்போரின் மனங்களில் இருக்கிறது. காதலின் ஆழத்தைத் தேடும் மனங்களில்.

*

அருண் நரசிம்மன் எழுதிய அச்சுவை பெறினும் நாவலின் பகுதி. (வாஷிங்டன்னில் நடைபெற்ற ‘உலக இலக்கியங்களில் காதல்’ மாநாட்டில் வாசிக்கப்பட்ட வேதவல்லியின் ஆய்வுரையின் தமிழாக்கம்)

1 comment

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020 November 22, 2020 - 4:13 pm

[…] தல்ஸ்தோயின் காதல் – அருண் நரசிம்மன் […]

Comments are closed.