செவ்வியல் நாவல்களின் கட்டமைப்பை கவனித்துப் பார்க்கையில் ஒரு பொதுத்தன்மையை வாசகர்கள் கண்டுகொள்ள முடியும். நாவலை எழுவதற்கான தூண்டுதலை அவ்வமைப்பே ஆசிரியருக்கு அளித்திருக்கும். நீர்ப்பரப்பின் சுழிமையமென்று அதைச் சொல்லலாம். ஆற்றுநீர்த்துளிகள் அச்சுழி நோக்கி வருவதும் சுழியைத் தொட்டவுடன் அவை கொள்ளும் அலைவும், சுழிப்பும், அமிழ்வுமென அதன் கட்டமைப்பு இருக்கும். போரும் அமைதியும் நாவலில் அதை நெப்போலியனின் படையெடுப்பு என்றால் அன்னா கரீனினா நாவலில் வெரான்ஸ்கியுடன் அன்னா கிளம்பிச்செல்வது அதன் மையச்சுழி.
புத்துயிர்ப்பு நாவலை தல்ஸ்தோய் எழுதுவதற்கு அப்படியான உந்துதலை அவரது வக்கீல் நண்பரிடம் இருந்து பெற்றிருக்கிறார். வக்கீலின் நண்பரொருவர் சான்றாயராக (jury) இருந்த ஒரு வழக்கில் குற்றவாளியாக ஒரு வேசிப்பெண்ணை நீதிமன்றத்தில் காண்கிறார். முன்பு தன்னால் ஆசை காட்டப்பட்டு தன்னுடன் உறவுகொள்ள வைத்த பெண்ணை அந்நிலையில் பார்க்கையில் மனம் உடைகிறார். தண்டனை விதிக்கப்பட்ட அவளுடன் சேர்ந்து சைபீரியா செல்கிறார். இந்நிகழ்வு தல்ஸ்தோயை வெகுவாக பாதித்து அதன் மூலம் உருவானதுதான் புத்துயிர்ப்பு நாவல்.
நண்பர் கூறிய சம்பவம் கிட்டத்தட்ட அப்படியே நாவலில் இடம்பெறுகிறது. மையக் கதாபாத்திரமான நெஹ்லூதவ், கொலை வழக்கிற்காக கொண்டுவரப்பட்ட கத்யூஷாவை (மாஸ்லவா) நீதிமன்றத்தில் கண்டதும் அவருள் ஒன்று விழித்தெழுகிறது. தன் செயலின் கீழ்மையை உணர்ந்து தன் தவறை சரிசெய்ய முயல்கிறார். அப்பயணத்தின் ஊடாக நீதி என்கிற அமைப்பு, அதன் பின்னுள்ள தனிமனித நீதியுணர்ச்சி, அவ்வமைப்பைத் தாங்கும் அரசு அதிகாரிகள், அதன் பக்கபலமாக இருக்கும் மதம் என நாவலின் களம் விரிகிறது.
மூன்று திரிகளால் ஆனது இதன் கதையோட்டம். முதலாவது நெஹ்லூதவின் ஆன்மிகப் பயணம். பிரபு குலத்தில் பிறந்து இளமைக்கே உரிய தூய்மையும் இலட்சியவாத சிந்தனைகளும் கொண்டிருக்கிறார். கோடை விடுமுறையில் தன் அத்தையின் வீட்டில் வளரும் மாஸ்லவாவுடன் ஏற்படும் பரிச்சயம், அவரது இளமைக் காலத்து இனிய நினைவுகளில் ஒன்றாக அமைகிறது. பின் திரும்பிப் பார்க்கும்போது தூய அன்பு என்பது மனிதன் என்கிற இவ்வுயிர் உள்ளார்ந்த தீவிர தூண்டுதல் மூலம் அடையச் சாத்தியமான உயர்நிலை என அவருக்குப் புரிகிறது. அது அக்குறுகிய இளமைக் காலத்தில் அவளுடன் ஏற்படுகிறது.
மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் தன் அத்தையின் வீட்டிற்கு வருகிறார். அப்போது இருக்கும் நெஹ்லூதவ் வேறானவர். இராணுவ அதிகாரி. இராணுவம் என்கிற அமைப்பால் ’பண்படுத்தப்பட்டவர்’. அப்போது அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தன் அகம் சார்ந்தது அல்ல. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் தன் பணிபுரியும் அமைப்பையும் சார்ந்தது. அவர்களிடம், தான் ஏற்படுத்தும் மனப்பதிவுகள் சார்ந்தது. மேலும் இராணுவ அதிகாரி என்கிற நிலை அவரிடம் நுண்ணிய மாறுதலை ஏற்படுத்துகிறது. தன் கையருகில் இருப்பவற்றைக் கவர உரிமை அளிக்கிறது. இவ்வகையான மனநிலையில் மீண்டும் மாஸ்லவாவைச் சந்திக்கையில் அவளை வீழ்த்தி அதற்கீடாக ஒரு நூறு ரூபிளை கொடுத்துவிட்டுச் செல்கிறான்.
மேலும் பத்து வருடங்கள் கழித்து மூன்றாம் முறையாக நீதிமன்றத்தில் அவளைச் சந்திக்கும்போது அவன் நிலை முற்றிலும் வேறாக உள்ளது. இப்போது தன் மயக்கங்கள் அனைத்தும் ஓய்ந்த நிலையில் இருக்கிறான். இராணுவத்திலிருந்து சலித்து விலகி ஓவியக்கலை தனக்கானது என நினைத்து அதில் ஈடுபட்டு ஓராண்டாகியும் அதிலும் எதையும் நிறைவுசெய்யாமல் கிட்டத்தட்ட தன் உண்மை நிலையை உணர்ந்த நிலையில்தான் சான்றாயராக நீதிமன்றத்திற்குச் செல்கிறான். தன்னைப் பற்றிய மாயை விலகிய அந்த மனநிலையில்தான் தன்னுடைய செயலின் விளைவை அவனால் உணரமுடிகிறது. தன்னால் சாதாரணமாக செய்யப்படும் ஒன்று எப்படி விசையேறி கீழ்த்தளத்தில் இருப்பவர்களைத் தாக்குகிறது என அறிகிறான். ஒருவகையான கண்டடைதல் அது. அதற்கான பிழையீடாக தவறுதலாக குற்றம்சாட்டப்பட்ட மாஸ்லவாவை விடுவிக்க நினைக்கிறான்.
அங்கு ஆரம்பிக்கிறது அவனுடைய மீட்புக்கான பயணம். தன்னை அவ்வாறு விலகி நின்று பார்க்கையில்தான் சுற்றியிருக்கும் அபத்தம் அவனுக்குப் பிடிபடுகிறது. உயர்குடி வாழ்க்கையின் பாவனைகளும் தடித்தனங்களும் அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி தன் இளமையில் கொண்டிருந்த இலட்சியப் பார்வைகளைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது. தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள முதல் வேலையாக வாரிசு நிலங்களை அதில் பாடுபடும் விவசாயிகளுக்கே திருப்பி அளிக்கிறான். மேலும் தண்டனை வழங்கப்பட்டு நாடுகடத்தப்படும் மாஸ்லவாவின் பின்னாலேயே சைபீரியா செல்வதாக நாவல் முன்செல்கிறது.
இங்கு குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது நெஹ்லூதவ் கொள்ளும் மீட்பின் படிநிலைகள் பற்றி. அவன் கடக்க வேண்டிய முதல் தடையென்பது தன் தவறை பகிரங்கப்படுத்துவது. ஒரு பிரபு குலத்தவன் கீழ்நிலையிலுள்ள வேசித்தொழில் செய்யும் பெண்ணுடன் தனக்கிருந்த தொடர்பை வெளிப்படுத்துவது சாதரணமானது அல்ல. மானசீகமாக தன் பிம்பத்தை தானே சிதைப்பதைப் போலத்தான். மாஸ்லவாவின் விடுதலைக்காக பல்வேறு அதிகாரிகளையும் வக்கீல்களையும் சந்திக்கையில் தயங்காமல் தன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். மேலும் அவளின் தற்போதைய நிலைக்குத் தானே காரணம் எனவும் சொல்கிறான். இந்தத் தன்னுணர்வும் ஒப்புக்கொள்ளும் தைரியமும் அவனுள் உவகையை நிறைக்கிறது. தன்னால் கடக்க முடியாதென நினைத்த அகழியைக் கடந்ததன் திருப்தி அது.
அந்த நேர்நிலை உணர்வே அவனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. துணிச்சலுடன் தன் இளமைக்கால இலட்சியங்களில் ஒன்றை நிறைவேற்ற முயல்கிறான். நிலங்களை ஏழை விவசாயிகளிடம் கொடுத்துவிட்டு சைபீரியா செல்கிறான். இவற்றைச் செய்யும்போது அவன் தனக்குள் சொல்லிக்கொள்வதென்பது மாஸ்லவாவை துன்பத்திலிருந்து மீட்டெடுப்பதும் தேவையெனில் அவளை மணந்துகொள்வதும் தன் கடமை என்பதைத்தான். ஆனால், இறுதியில் அவள் அதை நிராகரித்து, தன் சக கைதியான சிமன்சனை விரும்புவதாகச் சொல்லும்போதுகூட அவனுக்கு மிகப்பெரும் ஏமாற்றம் இல்லை. ஏனெனில் அவன் தேடிச் செல்வது மேலும் பெரிய ஒன்றை நோக்கி என அப்போது உணர்ந்துகொள்கிறான். அதைத் தொடங்கி வைத்தவளாக அவள் இருந்திருக்கிறாள். பைபிளின் வரிகளில் தன் அடுத்த கட்டத்திற்கு நகர்வதில் நாவல் நிறைவுறுகிறது.
இந்நாவலின் முக்கியச் சிறப்பென்பது எந்நிலையிலும் அதன் யதார்த்தத் தளத்திலிருந்து வழுவாமலும் அதேசமயம் தனித்துவமான இடங்களைத் தொடுவதும்தான். உதாரணமாக, சிறையில் மீண்டும் மாஸ்லவாவைச் சந்திக்கையில் அவனை இனம்கண்டுகொள்ள அவள் மனம் மறுக்கிறது. அவனை உயர்குடிப் பிரபுவாக மட்டுமே காண்கிறது. அதன்மூலம் ஆதாயம் தேட முயல்கிறது. ஏனெனில், அவனைப் பற்றிய நினைவென்பது, தான் சரிந்து வந்த தொலைவைச் சொல்வது. அதன் மூலம் முற்றாக மறந்த தன் இளமையைத் திரும்பிப் பார்ப்பது. அந்தக் கனத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, தன் அழகில் மயங்கிய ஒருவனென அவனை எண்ணிக்கொண்டு நயந்து பத்து ரூபிள் பெற்றுக்கொண்டு சிறையில் கள்ளத்தனமாக வோட்கா வாங்கி அருந்துகிறாள்.
அதேபோல் மற்றொரு இடம் தன் நிலங்களை குடியானவர்களுக்கு குறைந்த விலையில் குத்தகைக்குக் கொடுக்கையில் முதலில் அதை வாங்க மறுக்கின்றனர். காலமெல்லாம் சுரண்டல்களை மட்டுமே கண்ட தரப்பிலிருந்து அத்தகைய நேரடியான நல்லியல்பை அவர்களால் இனம்காண முடியவில்லை. இன்னும் குறைத்துக் கேட்கின்றனர். தனியாகக் கூடிப் பேசிவிட்டு சொல்கிறோம் என்கின்றனர். அப்போது நெஹ்லூதவிடம் பணிபுரியும் பொறுப்பாளர் அவர்கள் கூட்டமாக இருக்கையில் எந்தப் புதிய விஷயங்களையும் சொல்ல முடியாது எனவும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அக்கூட்டத்திற்குக் கிடையாது எனவும் விளக்குகிறார். அவரது யோசனையின்படி நெஹ்லூதவ் அவர்களில் முக்கியமான இருவரை மட்டும் மறுநாள் அழைத்துப் பேசி நிலங்களை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். இப்படியான பல இடங்கள் மூலம் மானுட மனங்களை நோக்கிய வெளிச்சப் பாய்ச்சல்களை நாவல் முழுதும் நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறார் தல்ஸ்தோய்.
இரண்டாம் சரடென்பது உயர்குடிகளின் உலகம். நாவலின் படைப்பூக்கம் மிக்க பகுதி எனக் கூறலாம். விதவிதமான மனிதர்கள் தனித்த குணாதிசயங்களுடன் வருகிறார்கள். அதன்மூலம் அரசு அல்லது நீதி எனும் அமைப்பு அவர்களின் மேல் செலுத்தும் பாதிப்பையும் அதேசமயம் தனி மனிதன் தன் எல்லைகளினால் தனக்கேற்றவாறு அமைப்பை வளைப்பதையும் ஒருங்கே கூறுகிறது. உதாரணமாக மாஸ்லவா மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்மன்றம் செல்லும்போது அங்கு அரசு தரப்பு வக்கீலாக தனது பழைய நண்பனான செலெனினைப் பார்க்கிறான் நெஹ்லூதவ். அப்போது அவனைப் பற்றிய சுருக்கமான சித்திரம் வருகிறது. இளமையின் கனவுத்துடிப்புடன் அரசாங்க வேலையில் செலெனின் சேர்கிறான். அங்கு தன் திறமைக்கேற்ற வாய்ப்புகள் இல்லையென வேறு துறைக்கு மாற்றலாகிறான். ஆனால் அத்துறையில் அப்படியான பதவி ஒன்றுக்கு அவசியமே இல்லையெனத் தெரிய வருகிறது. அங்கிருந்து விலகுவதென்பது தனக்கு அங்கு வேலை ஏற்பாடு செய்தவரை அவமதிப்பதாகுமோ என எண்ணித் தயங்குகிறான்.
இதற்கிடையில் அவ்வேலையின் உயர்நிலை கொடுத்த சமுதாய பிம்பத்தாலும் அதன் மூலம் தன் அன்னை அவனுக்கு ஏற்பாடு செய்த திருமணத்தாலும் அப்பதவியிலேயே தங்கிவிடுகிறான். இவ்வகையான சிறு சமரசங்களால் மெல்ல தன் தனித்துவத்தை இழந்து ‘சரியான’ அரசதிகாரி ஆகிறான். வழக்கில் இருக்கும் நியாங்களைப் பாராமல் வறட்டு விதிமுறைகளின் அதன் நடைமுறைகளின் சரிகளை மட்டுமே பார்க்கும் இடத்திற்கு வந்துசேரும் சித்திரம் காட்டப்படுகிறது. அதேபோல் மேலவையில் நீதிபதியாக இருக்கும் இன்னொரு அதிகாரியின் வாழ்வும் இடைவெட்டாக விவரிக்கப்படுகிறது. இவரோ இறை நம்பிக்கையற்றவர். அதேசமயம் மக்களுக்கு இறைவன் வேண்டுமென நினைப்பவர். தன் போலல்லாமல் எளிய நிலையில் இருக்கும் ‘சாதாரண’ மக்களுக்கு அது தேவையென நினைக்கிறார். தன் வேலையின் ஒரு பகுதியாக இருக்கும் இறை வழிபாடுகள் நடக்கையில் அதில் கலந்துகொள்கிறார். ஆனால் பாசாங்குடன் அதில் ஈடுபடுவது கனவானான தனக்கு அழகல்ல என்று அந்த நேரத்துக்கு மட்டும் உண்மையாக நினைத்து அதில் ஈடுபடுகிறார். ஆனால், அடியாழத்தில் எதிலும் நம்பிக்கையற்றவரான அவர், எப்போதும் நன்றாக காட்சியளிக்க வேண்டி அம்முயற்சியிலேயே தன் காலத்தை வீணடித்த வாழ்வுகொண்டவராக இருக்கும் சித்திரமும் வருகிறது.
இவ்வகையான விதவிதமான சித்தரிப்புகள் மூலமாக நீதியமைப்பைப் பற்றியும் அதை இயக்கும் மனிதர்களைப் பற்றியும் கேள்விகளை தொடர்ந்து நம்மிடம் எழுப்பிக்கொண்டே இருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஆரம்பத்திலேயே நீதிமன்றம் இயங்கும் முறை பற்றிய அதிர்ச்சியூட்டும் சித்திரம் வருகிறது. உண்மையில் நீதிமன்றம் மற்றொரு எளிய குமாஸ்தா அலுவலகம் போலத்தான் இயங்குகிறது. அதில் குற்றவாளியாக நிற்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயம். ஆனால் அங்கு பணிபுரிபவர்களுக்கோ ஒரே வேலையை அனுதினமும் அலுப்புடன் மேற்கொள்ளும் எளிய செயல் மட்டுமே. ஒரு படிவத்தை நிரப்புவது போல அல்லது ஒரு அறிக்கையைத் தட்டச்சு செய்வதைப் போல. நீதிபதிகளுக்கே கூட அப்படித்தான். அவர்களது அன்றாட கவலைகள், எதிர்பார்ப்புகளுடன்தான் தீர்ப்பெழுத வருகிறார்கள்.
நீண்டநாள் கழித்து புதிய உறவாக ஏற்பட்டிருக்கும் சுவிஸ்காரியுடனான சந்திப்பிற்காக அவ்வழக்கினை மாலைக்குள் விரைவாகத் தீர்ப்பெழுதி முடிக்கும் அவசரத்தில் இருக்கிறார் ஒரு விவாகரத்தான நீதிபதி. மற்றொருவருக்கோ வாழ்வில் தன்னைத் தவிர அனைவருக்கும் சிறந்த மனைவி அமைந்து மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் தனக்கு மட்டுமே எப்போதும் சண்டையிடும் மனைவி வாய்த்துவிட்டதாகவும் துக்கத்துடன் எண்ணிக்கொண்டு மொத்த விசாரணை நேரத்திலும் அந்த நினைப்பாகவே இருக்கிறார். இப்படியான மனிதர்களால்தான் நீதித்துறை இயங்குகிறது. அதேபோல் தண்டனைகள் குறித்தும் நுட்பமான அவதானங்களை இந்த நாவல் முன்வைக்கிறது. தண்டனைகளை விதிப்பவர்களுக்கும் அதை இயற்றுபவர்களுக்கும் அது தவறே எனத் தெரிந்தாலும் அது குறித்த குற்றவுணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் அது அவர்கள் பதவியின் ஒரு பகுதி. தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் தன் மேலதிகாரியால் இடப்பட்ட தண்டனையை நிறைவேற்றுகிறார். அவ்வளவுதான். கிளர்ச்சியாளர்களான தன் தேச மக்களையே அடித்துக் கொல்லும் ஜெனரல்களும் அப்படியே. ஜார் மன்னரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதுதான் சிறந்த தேச பக்தனாகிய தன் கடமை.
அதிகார அமைப்புக்கு இணையாகவே மதத்தின் பங்கும் நாவலில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மதத்தின் இரண்டு முகங்கள் காட்டப்படுகின்றன. முதலாவது அரசாங்க நடவடிக்கைகளின் அங்கமாகவும் அதன் மூலம் சாமானிய மக்களின் மீது மீறமுடியாத ஆணையாகவும் அமர்கிறது. ஒரு அற்புதமான நீதிமன்றக் காட்சியின் மூலம் வாசகருக்கு இது காட்டப்படுகிறது. உயர்ந்த மேடையில் வெல்வெட் விரிப்பு மேஜையின் பின்னுள்ள நீதிபதிகளுக்கான உயர்ந்த முதுகுச்சாய்வு கொண்ட நாற்காலிகளுக்கு பின்னுள்ள சுவரில் ருஷ்யாவைக் காக்கும் ஜார் மன்னரின் ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு இடப்புறம் தலையில் முள்முடி கொண்ட இயேசுவின் உருவமும் அதற்கு முன்னால் சிறிய மேஜையில் பைபிளும் வைக்கப்பட்டு அங்கு மதபோதகர் இருக்கிறார். நீதிபதிகளின் அதே கவனமின்மையுடன் போதகரும் இயந்திரத்தனமான சடங்கை நிகழ்த்துகிறார். குற்றவாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் முன்னால் சான்றாயர்கள் உறுதியெடுத்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களுக்கு அச்சடங்கு இறைவனின் தீர்ப்பாகவே பொருளூட்டப்படுகிறது. அத்தீர்ப்பு சரியென்றாலும் தவறென்றாலும் அது இறைவனின் ஆணைக்கிணங்கவே அங்கு நிகழ்கிறது.
இதன் நேரெதிர் திசையில் மதத்தின் இன்னொரு நுட்பமான முகம் மற்றொரு இடத்தில் காட்டப்படுகிறது. பிரபு குலத்தவரின் தனிக் கூடுகையில் அது நடைபெறுகிறது. அங்கும் ஒரு மதபோதகர் வருகிறார். இவரோ மனிதனின் தவிர்க்கமுடியாத பாவச்செயல்களைப் பற்றிய வார்த்தைகளைக் கூறுகிறார். அவர் விளக்க விளக்க அங்கிருக்கும் அனைவரும் உறைந்து அமைதியாயிருக்கின்றனர். சிலர் விம்மி விம்மி அழுகின்றனர். ஏதோவொரு வகையில் தாங்கள் அனைவரும் அநீதியிழைக்கும் பாவிகள் என்கிற உள்ளுணர்ந்த நினைப்பிலிருந்து அவ்வழுகை அவர்களில் எழுகிறது. அவர்களை முழுதாக அழவிட்டு அப்புறம் அதிலிருந்து வெளியெடுக்கிறார். அவர்கள் பாவிகள் இல்லையென்றும் தன் கையிலிருக்கும் அப்பமும் வைனும் இயேசுவின் உடலும் இரத்தமாகும் என உணர்ச்சிகரமாக பிரசங்கம் செய்கிறார். எனவே இவற்றை உட்கொள்வதன் மூலம் இயேசு அவர்களின் பாவங்களை முழுதும் வாங்கிக்கொண்டு அவர்களை சுத்தப்படுத்துகிறார் எனக் கூறி சந்தோசத்துடன் உரையாற்றுகிறார். அம்மகிழ்ச்சி அவர்களையும் அடைய, மீண்டும் பழைய நிலைக்கு அவர்கள் திரும்பி, தங்களின் அதே இயல்பு வாழ்க்கையைத் தொடரும் காட்சி வருகிறது. இவ்வகையில் மதமென்பது சாதாரண மக்களின் மீது இறைவனின் ஆணையாக இருப்பதுடன் உயர்குடிகளுக்கு தங்கள் குற்றவுணர்வினைப் போக்கி மீண்டும் ஒத்திசைவுடன் வாழச்செய்யும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கைதிகளின் உலகம்தான் மூன்றாவது சரடு. முந்தையவற்றைப் போலவே இதிலும் வரும் விதவிதமான கதைமாந்தர்களே இதன் சிறப்பம்சம். இதில் இரண்டு முக்கியமான வகைகளைப் பார்க்கிறோம். முதல் வகையினர் எல்லைகள் மீறுவதையே தம் இயல்பெனக் கொண்டவர்கள். வாழ்க்கையோடும் தன் எதிர்காலத்தோடும் விளையாடிப் பார்க்கும் துடிப்பே அவர்களை இயக்குகிறது. அவர்கள் எங்கிருந்தாலும் திருடாமல் இருக்கமாட்டார்கள். கொலை என்பது தங்களை மீறி உள்ளிருந்து எழும் ஒன்றுக்கு அவர்கள் ஆட்பட்டு நிகழ்த்தும் ஒன்று. தன் வண்டியில் சவாரி செய்பவனை எக்காரணமும் இல்லாமல் கொலை செய்யும் வேட்கையைப் பற்றி ஒருவன் நெஹ்லூதவிடம் கூறுகிறான். அவனிடம் அதிக பணம் இருப்பது ஒரு காரணம் என்றாலும், தான் எவ்வளவு கட்டுப்படுத்தியும் கோடாரியை நோக்கி தன் கைகள் செல்வதை (அதை சாத்தானின் ஆணையாக அவன் சொல்கிறான்) விவரிக்கிறான்.
இன்னொரு வகையினர் இலட்சியவாதத்தால் உந்தப்பட்டவர்கள். அவர்கள் ‘அரசியல் கைதிகள்’-ஆக நாவலில் வருகின்றனர். தற்போதைய மன்னராட்சியை புரட்சி மூலம் அகற்றி மாற்று உலகை உருவாக்கும் கனவுகொண்டவர்கள். ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து தனக்குச் சரியானவற்றை மட்டுமே செய்பவர்கள். மேலான வாழ்க்கை வாழ்வதையே தங்களது அன்றாடமாக கொண்டவர்கள். அவர்களில் ஒருவனாக சிமன்சன் என்னும் கதாபாத்திரம் வருகிறான். ஆனால் அதிலும் எதிர்நிலை கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கொள்கை என்பது ஒரு முகமூடியே. அதன் மூலம் தங்களது வக்கிரங்களையும் சுயநலத்தையும் முன்வைப்பவர்கள். அவர்களிடம் வருங்காலத்திற்கான கனவு இல்லை. மாற்றாக தங்களது அறிவையும் கொள்கைகளையும் அப்போதைய சமூகநிலையின் கீழ்மையைச் சுட்டிக்காட்ட மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதன்மூலம், அதேபோலத்தான் எப்போதும் வாழ்க்கை இருக்கும் என்கிற வெறுப்பை தம்முள் சுமந்துகொண்டிருக்கின்றனர். நவதுவோரவ் என்கிற கதாபாத்திரம் இத்தகைய இயல்புடன் வருகிறான்.
ஒருவிதமான அறிமுகத்துக்காகவும் நாவலின் கவனம் எந்தெந்தப் புள்ளிகளில் இருக்கிறது என்பதைச் சுட்டுவதற்காகவும் இச்சரடுகளைப் பிரித்துக் கூறினாலும் உண்மையான கலையனுபவம் என்பது இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கொடுக்கும் அறிதல் கணங்களில்தான் இருக்கிறது. இக்கணங்கள் நாவலில் காத்திரமாக அமைவதற்குக் காரணம் ஆசிரியர் தன் முதன்மைக் கதாபாத்திரம் மூலமாக நிகழ்த்தும் தேடல். அவனுடன் நாம் உரையாடுவதன் மூலம் அவன் கொள்ளும் மாற்றங்களை மானசீகமாக நாமும் அடைகிறோம். நெஹ்லூதவின் தனி வாழ்க்கைக்கும், மாஸ்லவாவிற்காகவும் சிறைக் கைதிகளுக்காகவும் சென்று சந்திக்கும் அதிகாரிகளின் உலகிற்கும், சிறை வாழ்க்கைக்கும் மாறி மாறி பயணிக்கிறோம். இவ்வகையான பின்னல் கதையோட்டம் ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிலவற்றைக் கண்டடைகிறோம். அதில் முக்கியமான விஷயம் அரசு உருவாகி இயங்கும் முறை குறித்தானது.
அரசியல் கைதிகளைப் பற்றி பேசும் போது ஆள்வோரை முழுதாக அகற்றி அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கே போராடுகின்றனர். அதற்காக எத்தகைய தியாகத்திற்கும் சித்ரவதைக்கும் தயாராக இருக்கின்றனர். ஏனெனில் தற்போதைய அரசு தன்னைப் போன்றவர்களுக்கு அநீதி இழைக்கிறது என்பதே அவர்களது எண்ணம். ஆனால் இதே போன்ற வேறொரு காரணத்தைக் கொண்டுதான் தற்போதைய ஆட்சியாளர்கள் படைபலம் திரட்டி அவர்களுக்கு முந்தைய அரசை வீழ்த்தியிருப்பார்கள். அப்படியென்றால் இப்போதைய கிளர்ச்சியாளர்களும் பிற்பாடு அதே நிலையைத்தானே வந்தடைவர் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. அவ்வாறெனில், ஓர் அரசு தன்னை அமைக்கும்போதே அந்தச் சரிவு ஆரம்பிக்கிறது அல்லவா? அவர்கள் உருவாக்கும் ‘அமைப்பு’ என்கிற ஒன்று எல்லோரையும் தனக்கேற்றார் போல் ஆட்டிவைக்கிறதா? அந்த உருவில்லாத உயிரில்லாத ஒன்றின் பிடியில்தான் அரசை ஆள்வோரே சிக்கியிருக்கிறார்கள். அமைப்பு என்பதே அதன் நெறிகளால் ஆனது. மீறக்கூடாத விதிகளால் கட்டுண்டு இருப்பது. இந்தக் கண்ணுக்குப் புலப்படாத பொதுமைப்படுத்தல்தான் ஒவ்வொரு அரசும் எதிர்கொள்ளும் பிரச்சனை என்கிற இடத்திற்கு நாவல் வந்தடைகிறது.
இதனை இரு இடங்கள் வழியாக தல்ஸ்தோய் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறார். முதல் இடம், கந்தலுடுத்திய கிழட்டுக் கதாபாத்திரம் மூலம் புறவயமாகக் காட்டப்படுகிறது. இரண்டாவது இடம், நெஹ்லூதவ் பைபிளின் வரிகள் மூலம் பூடகமாக தன்னுள் அறிவது. இரண்டு இடங்களிலும் வாசகர்கள் உணர்வது யாதெனின் தம் அகத்தை நோக்கிய கேள்வியெழுப்புதல் மூலம் இதை எதிர்கொண்டு தாண்டிச் செல்லலாம் என்பதுதான். எது தன் அகச்சான்றுக்கு சரியானதோ அதைத் தேர்ந்தெடுப்பதுதான். நெஹ்லூதவ் சிறையதிகாரியைச் சந்திக்க படகில் செல்லும்போது அங்கு துறவியைப் போல் தோற்றமளிக்கும் அக்கிழவரைச் சந்திக்கிறான். பேச்சினிடையே எந்தச் சமயத்துறையைச் சேர்ந்தவன் எனக் கேட்கும்போது, தான் எந்தச் சமயத்தையும் சேர்ந்தவனில்லை என்கிறார். ஆன்மா சொல்வதை மட்டுமே கேட்பவன், மேலும் அனைவரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்கிறார்.
‘அவ்வாறு கேட்டு செய்யும் செயலில் தவறு நேர்ந்துவிட்டால்?’ என அருகிலிருப்பவர் கேட்கும் போது, அவர் கண்களைக் கூர்ந்து நோக்கி, இதுவரை அப்படி நடந்ததேயில்லை எனத் தீர்க்கமாகச் சொல்கிறார். ஏனெனில் பல்வேறு துறைகளாகப் பிரிந்து அவற்றின் தரப்புகளை ஏற்றுக்கொண்டு வாழும்போதே நாம் பிளவுபடுகிறோம். எல்லோரும் தனது ஆன்மாவின் குரலுக்குச் செவிகொடுத்தால் நாம் ஒன்றாவோம். ஏனெனில் ஆழத்தில் நமது அனைவரின் ஆன்மாவும் ஒன்றே. அது பிதாவின் ஆன்மாவோடு இணைந்துள்ளது என்கிறார். தல்ஸ்தோய் தனது கதாபாத்திரங்களின் மூலம் மேற்கொண்ட பயணத்தில் வந்து சேர்ந்த இடங்களில் ஒன்று இது. சமயத்துறைக்குப் பதிலாக கொள்கைத் தரப்புகளையும் இங்கு நிரப்பிக்கொள்ளலாம். லிபரல்கள், பழமைவாதிகள் என எந்தத் தரப்பினை வேண்டுமென்றாலும் அதில் பொருத்திப் பார்க்க முடியும்.
நாவலின் இறுதியில் நெஹ்லூதவ் பைபிளை வாசிக்கும் காட்சியை மற்றொரு இடமாகச் சுட்டலாம். எப்போதும் பைபிள் அவனுக்குப் புரிந்ததேயில்லை. பல்வேறு இடங்களை அர்த்தம் விளங்காமலேயே தாண்டியிருக்கிறான். ஆனால் அன்று படிக்கும் அவன் வேறு ஒருவன். மாஸ்லவாவால் நிராகரிக்கப்பட்டு அத்துயரத்திலிருந்து ஒரு வழியாக மீண்டதன் நிறைவோடு அதை எடுக்கிறான். அப்போது அதிலிருப்பது அவனுக்குப் புரிகிறது. அதிலுள்ள கருணையும் முடிவில்லாமல் தொடர்ந்து மன்னிக்கச் சொல்லும் வரிகளும் அவனுக்குச் சரியாகப் புரிகிறது. ஏனெனில் இப்போது அவனுக்கு அது வெற்று வரியல்ல. தண்டனை என்னும் அமைப்பு குற்றவாளிகளை என்ன செய்கிறது என்பதைப் பார்த்துவிட்டிருக்கிறான்.
முதல்முறை தவறு செய்பவனை தண்டனை என்ற பெயரில் மோசமான வாழ்க்கைச் சூழலில் தள்ளி, அவனைச் சுற்றிலும் இருள்கொண்ட மனிதர்களால் நிரப்பி, தன் வாழ்க்கை இனிமேல் இப்படித்தான் இவர்களுடன்தான் என நம்பிய நிலையில்தான் தண்டனை முடிந்து ஒருவன் வெளியேறுகிறான். ஒருமுறை தவறு செய்தவனை நிரந்தரக் குற்றவாளியாக்குவதையே சிறைச்சாலை செய்கிறது என நேரில் பார்த்து அறிந்திருந்தான். இப்போது இயேசுவின் வாசகங்கள் அவனுக்குப் புதிய ஒளியைக் கொடுக்கிறது. முடிவற்ற மன்னிப்பே மீட்புக்கான வழியெனக் கண்டுகொள்கிறான். எந்தச் சமயத்தரப்பையும் சேராமல் தன் ஆன்மாவைக் கொண்டு தனக்கான இயேசுவை உருவாக்கியெடுப்பதுடன் நாவல் நிறைவுறுகிறது.
நாவல் என்கிற வடிவத்தின் அதிகபட்ச சாத்தியங்களை எடுத்துக்கொண்டு உருவாகி இருப்பதே தல்ஸ்தோயின் பெரு நாவல்கள் அனைத்தும். விரிந்த காட்சிச் சித்தரிப்பு, விதவிதமான கதாபாத்திரங்கள், சூழலைக் குறித்த நேரடியான நுண்அவதானிப்புகள், அதன் மூலம் வாழ்க்கையின் அடிப்படை வினாக்களைச் சென்று தொடுதல் முதலிய அனைத்தும் கொண்டது அவரது நாவல்கள். இக்கட்டுரைக்காக மீண்டும் இரண்டாவது முறை முழுவாசிப்பு செய்தபோது கண்டுகொண்ட தனிச்சிறப்பென்பது நாவலின் கதையோட்டத்தை முன்னகர்த்த அவர் தேர்ந்தெடுக்கும் தருணங்களின் தன்மையை. ஒருவகையான பிரமிப்பை அவை ஏற்படுத்தின. முதற்பார்வையில் அது இயல்பானதும் இன்றியமையாததும் எனத் தோன்றுகையில் இரண்டாம் வாசிப்பில் அவை கொண்டுள்ள குறியீட்டு முக்கியத்துவம் அவற்றை நம் மனதில் பேருருவம் கொள்ளச்செய்கின்றன.
அப்படியான ஒரு காட்சிதான், சைபீரியாவிற்கு கைதிகளைக் கொண்டுசெல்லும் காட்சி. ருஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவிலிருந்து ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை சாலை நெடுக ஊர்வலமாக கொண்டுசெல்கிறார்கள். அவர்களை இணைத்துக் கட்டிய சங்கிலிகள் மண்ணில் இழுபட்டு புழுதியெழும் சித்திரத்துடன் அவர்கள் செல்வதை நகர்மக்கள் சன்னல்கள் வழியாகவும் வீட்டின் முன்னும் நின்றுகொண்டு இமைகள் வெறிக்கக் காண்கின்றனர். தன்னை அறியாமலே அவர்களை நோக்கிச் செல்லும் சிலரை உடனிருப்பவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். கைதிகளின் நிரை நெருங்கும் முன் சாலையைக் கடந்து விடவேண்டும் என கோமகன் ஒருவன் வண்டிக்காரனை விரைவுபடுத்தியும் சற்று பிந்திவிட அவர்களின் எதிரிலேயே நின்று மொத்தக் கூட்டமும் கடந்துசெல்வதைக் காண நேர்கிறது. வண்டிக்குள் இருக்கும் தன் குடும்பமும் அதை இமைக்காமல் பார்க்க அதனால் எரிச்சலுற்று வண்டிக்காரனை ஏசுகிறார். அவரால் அக்கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை.
இக்காட்சிகள் கூர்மையான படிமங்களாக மாறி நம்மை அதிரச்செய்கின்றன. ஒரு மக்கள் கூட்டத்தை தங்களிடையே வாழத் தகுதியில்லையென நாடு கடத்துகிறது ஒரு சமூகம். இதைச் செயல்படுத்துவதற்காக மன்னரில் ஆரம்பித்து அக்கைதிகளை கண்காணித்துச் செல்லும் காவலாளி வரை ஒரு முறைப்படுத்தப்பட்ட நடைமுறையும் அதைச் செயல்படுத்த ஒரு அமைப்பும் இருப்பதன் அவலத்தை வாசகர்களான நம்மிடம் ஏற்படுத்துகிறது. அதேபோல் சிறைச்சாலையின் வாராந்திர பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும் சித்திரமும் இதற்கு இணையான ஒன்று. மேலும் நாவலின் பல இடங்களில் இயேசுவின் உருவப்படம் தோன்றும் இடங்களை மட்டுமே வைத்து ஒரு வாசிப்புக் கோணத்தை உண்டாக்க முடியும்.
நாவல் முடிந்தவுடன் நமக்கெழும் கேள்வி மாஸ்லவா ஏன் சிமன்சனைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பது. ஒன்று மாஸ்லவாவே ஆரம்பத்தில் சொல்கிறாள். “முதலில் உங்கள் உடல் திருப்திக்கு என்னைப் பயன்படுத்தினீர்கள். இப்போது ஆன்ம திருப்திக்காக வந்திருக்கிறீர்களா?” அவனைப் புண்படுத்துவதற்காக இக்கூற்றை கூறியிருந்தாலும் இதன் நினைப்பு அவளைக் கடைசி வரை உறுத்திக்கொண்டேதான் இருந்திருக்கும். தனக்காக எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மேல்-கீழ் உறவை அழிக்க முடியாது என அவள் அறிந்திருப்பாள். அதேபோல் எப்படியிருந்தாலும் அவன் ஒரு கனவான், உடைமைகளை அவன் துறந்திருந்தாலும் தன் பழக்கவழக்கங்களில் அவன் கனவானாவே இருக்க முடியும். அவனுடைய இயல்பின் ஒரு கூறு அது.
இரண்டாவது காரணம் இன்னும் முக்கியமானது. நெஹ்லூதவின் இந்த அன்பு, முன்பு அவள் தன் அத்தையின் வீட்டின் பணிப்பெண்ணாக இருந்த போது ஏற்பட்டதன் நீட்சி. ஆனால் சிமன்சனுக்கு ஏற்படுவதோ அவள் வேசிப்பெண்ணாக சிறையில் இருக்கும் போதே ஏற்படுவது. அந்த நிலையிலும் தன்னிலுள்ள ஒன்று அவனை ஈர்த்துள்ளதை உணர்ந்ததால் அவளுக்கு சிமன்சனின் காதல் இன்னும் மேலானதாக உள்ளது. ஆனால் இவை மட்டும்தானா? இதைவிட மேலும் ஒன்று உள்ளது. விளக்க முடியாதது. ஒருமுறை முறிந்து மீண்டும் இணைய முடியாத அனைத்து உறவுகளுக்கும் பொதுவானது அந்த ஒன்று. அதை நாம் அந்தரங்கமாக அறிய முடிவது. அதை சரியாகத் தொட்டு நமக்குக் காட்டிவிடுவதால்தான் தல்ஸ்தோயை நாம் பேரிலக்கியவாதி என்கிறோம்.
நாவல் வெளியான இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இதை வாசிக்க வைக்கும் முதன்மை அம்சம் என்ன? அனைத்து செவ்வியல் நாவல்களுக்கும் இருக்கும் பொது அம்சம் அது. அதை சிறந்த வாழ்க்கைக்கான தேடல் எனலாம். இதன் இயங்குமுறை சற்று வினோதமானது. அந்தத் தேடலை அது மனிதனின் எல்லைகளினூடாக போதாமைகளினூடாக நிகழ்த்துகிறது. அவற்றை சொல்லிச் சொல்லி மிஞ்சுபவை என்ன எனப் பார்க்கிறது. குப்பைகளைக் கிளறிக் கிளறி மாணிக்கத்தைத் தேடுகிறது. நாவலை மேலோட்டமாக பார்த்தால் நமக்குத் தென்படுவதெல்லாம் மனிதர்களின் சுயநலங்களும், சூழல்களின் சீர்கேடுகளுமே. ஆனால் அதன் அடியோட்டமாக இருப்பவை மேன்மை நோக்கிய நாட்டம்தான். மலர்களை இணைத்துக் கட்டி உள்ளே மறைந்திருக்கும் நாராக படைப்பில் அது இருக்கிறது. அப்பயணத்தின் வழியில் தோன்றி மறையும் சிறு கண்டடைதல்களிலும் வெளிச்சங்களிலுமே தன் மகத்தான தேடல்களை நிகழ்த்துகிறது.
மானுடன் என்றென்றைக்குமாக கொண்டுள்ள தேடலின் திசையில் மேலும் ஒரு அடி முன்செல்ல வைப்பவை அவை. தனிப்பட்ட முறையில் வாசகனான எனக்கு அப்படிப்பட்ட வெளிச்சம் கொடுத்த இடம் ஒன்றுண்டு. அது வெறும் ஒரு அத்தியாயத்தில் மட்டுமே வந்து மறையும் லிதியா என்கிற கதாபாத்திரம். தனிக்கொட்டடிச் சிறையில் கைதியாக இருந்தவளை, தான் கொண்டுள்ள அதிகார மட்டத்து உறவுகளால் விடுதலை செய்ய உதவுகிறான் நெஹ்லூதவ். நேரில் அவள் வீட்டிற்குச் சென்று முதன்முறையாக சந்திக்கையில் அவளின் கைதுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்கிறான். அவள் சின்னம்மா தன்னிடம் வைத்திருக்குமாறு கொடுத்த ஒரு காகிதத்தால் அவள் கைதாகிறாள். சின்னம்மா அதற்கு வருந்தினாலும் அவள் தைரியமாகவே சிறைசெல்கிறாள். ஆனால் விசாரணையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு அவளைப் பெருமளவு வாட்டுகிறது. அந்த நிகழ்வை நினைத்தாலே வலிப்பு நோய் வந்து சரிந்துவிடுகிறாள். சின்னம்மா எவ்வளவு தடுத்தும் அதை நெஹ்லூதவிடம் லிதியா கூறுகிறாள். கைது செய்த விசாரணை அதிகாரி எவ்வளவு துளைத்துக் கேட்டும் அக்கடிதம் பற்றி அவள் எதுவும் கூற மறுக்கிறாள்.
முதல் காரணம் தன் சின்னம்மாவை எந்த நிலையிலும் காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பது. மற்றொரு காரணம் உண்மையிலேயே அதைத் தவிரை வேறெதுவும் தெரியாது என்பது. ஒருகட்டத்தில் சலிப்படைந்த அதிகாரி, “நீ எதுவும் கூறவேண்டாம். பேசாமல் இருந்தால் போதும்” எனக் கூறி சில நபர்களின் பெயர்களை எழுதிக்கொள்கிறான். அதில் எந்தத் தவறும் செய்யாத அவளுடைய நண்பனான நீத்தின் பெயரும் இருக்கிறது. அவ்வதிர்ச்சியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனிச்சிறையில் அவள் இருக்குந்தோறும் அவள் காதில் ஒரு இரகசியக் குரல், “காட்டிக்கொடுத்துவிட்டாய். ஆம், நீ காட்டிக்கொடுத்து விட்டாய்” என்கிறது. மேலும் தொடர்ந்து அதை நெஹ்லூதவிடம் சொல்ல முடியாமல் அங்கிருந்து ஓடி தன் அறைக்குள் புகுந்துகொள்கிறாள்.
மனிதன் கொள்ளும் உச்ச நிலைகளில் ஒன்றை அதில் காணமுடிகிறது. எந்தத் தவறும் செய்யாமலிருந்தும் அவளை வாட்டுவது எது? அவள் காதில் சொல்லும் அந்த இரகசியக் குரல் யாருடையது? இதுவரை மானுடனைக் கொண்டுசேர்த்த உயர்விழுமியங்களின் பிரதிநிதிதானே அது? அத்தகையதொரு குரல்தானே இயேசுவையும் விடாமல் துரத்தியது? கடைசியில் தன் சிலுவையை நோக்கி தான் செல்லும் வரை. அத்தருணத்தில் நமக்குத் தெளிவாகும் ஒன்றுண்டு. தனதென பிறர் துன்பத்தைக் கருதவைப்பது.
ஆம், இவ்வுலகம் கீழானவர்களால் நிறைந்ததுதான். சுயநலவாதிகளால் ஆனதுதான். ஆனாலும் இதைத் தாண்டி எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். இயல்பாகவே நன்மை நாடும் குணம் கொண்டவர்கள். எந்த உயர் கொள்கைகளாலோ தத்துவத்தினாலோ உந்தப்பட்டவர்களல்ல அவர்கள். அக்குணத்தால் மட்டுமே இருக்க முடிகிறவர்கள். அதுவல்லாத எதுவும் தங்களைத் துன்புறுத்தும் நிலையிலுள்ளவர்கள் அவர்கள். அவர்களுக்காகத்தான் இப்பூமி நிலைகொள்கிறது. அவர்களில் ஒருவனாக மாறும் பயணமே நெஹ்லூதவ் மேற்கொள்வது. ஒருவகையில் இயேசுவின் குணங்களைத் தன்னுள்ளும் கண்டுகொள்வதுதான் அது. ஏனெனில் இன்று நாம் வணங்கும் இயேசுவும் உயிர்த்தெழுந்து புத்துயிர்கொண்டு வந்தவர்தானே!
2 comments
[…] […]
நல்லக் கட்டுரை, நாவலின் சாராம்சத்தின் வெளிப்பாடாக விரிகிற குற்றவுணர்வின் பயணத்தை நானும் கதாபாத்திரத்தின் உள்ளிருந்து உணரும் படியாக டால்ஸ்டாய் உருவாக்கி இருப்பார்.இது அவருடைய நாவல்களில் மிக மிக முக்கியமானதும் கூட
Comments are closed.