தானச் சோறு

6 comments

ஆண்டிப் பண்டாரம் தெற்கே இருந்து நிலத்தை ஊடறுத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் சோர்ந்து போய் நடந்து வந்தார். மாட்டுக்கு எடுப்பதைப் போலத் தாங்கவியலாத் தாகம் எடுத்தது அவருக்கு. எதிரே இருக்கிற குன்றில், தாகம் தீர்க்கிற சொடக்குத் தக்காளிகளும் கள்ளிப் பழங்களும் கிடைக்குமென ஊகித்தார். குன்றினில் மெல்லத் தன் குச்சியை ஊன்றி மேல் நோக்கிப் பலத்தைத் திரட்டி, நடந்து போனார். பாலில் பனங்கற்கண்டைப் போட்டுக் காய்ச்சிய மணம் குன்றின் மீதிருந்து வீசியது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் போய்ச் சுருண்டது காற்று. ஆனாலும் அம்மணம் எதிர்க்காற்றை மீறிக்கொண்டு ஆண்டிப் பண்டாரத்தின் நாசியைத் துளைத்தது.

நின்று சுற்றிலும் கண்களைச் சுழற்றிப் பார்த்தார். மனித வாடையே அக்குன்றினில் இல்லை. உச்சியை அடைந்த அவரது கண்கள் கூசின. தலைக்கு மேல் நின்று சூரியன் சுட்டெரிக்கிற வெயிலில் அவர் இடுப்பு உயரத்திற்குக் குன்றின் உச்சியில் நின்றிருந்தது முருகன் சிலை. அதன் மேனியில் இருந்துதான் அம்மணம் உற்பத்தி ஆவதைக் கண்டார். சிலையைப் பார்த்தவுடன் அவருக்கு முதலில் திகைப்புதான் வந்தது. சாமியைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறார். ஆனால் அதுவே நேரில் தனியாய் வந்து நிற்கையில் ஏன் பயம் வருகிறது எனத் தன்னை ஆசுவாசப்படுத்தினார்.

சிலையை நெருங்கிப் போகையில் அதன் முகத்தின் வதனத்தில் இருந்த குறுமுறுவலைப் பார்த்தார். நெஞ்சைத் துளைத்துக்கொண்டு போனது பனங்கற்கண்டின் மணம். சிலையில் அப்படியே அதை உறைய வைக்கிற சக்தி பிரம்மனுக்கு மட்டுமே உண்டு. இதைச் செய்தது யார்? ஆண்டிப் பண்டாரம் உச்சியைச் சுற்றிக் கால்தட அடையாளங்களை நோட்டம் போட்டார். ஒரு அடி நீளத்திற்கு ஒற்றை முடிக் கற்றையொன்று அந்தக் காற்றிலும் பறக்காமல், பாறையில் ஒரு பாம்பைப் போல ஒட்டிக்கொண்டிருந்தது. அத்தனை அடர்த்தியான முடிக்கற்றையை அவர் அதுவரை பார்த்ததே இல்லை. பசுந்தழை மணம்சூடிக் குச்சியைப் போல இருந்த கற்றையைக் கையிலேந்தி ஆண்டிப் பண்டாரம் யோசிக்கையில், பெருஞ்சித்தன் ஒருத்தனின் சொத்தாக மட்டுமே அது இருக்க வேண்டுமென உணர்ந்தார். அந்தச் சிலையின் மணம் அவரது கையில் ஒரு குழந்தையைப் போலத் தவழ்ந்ததாக உணர்ந்தார்.

அவரது காலுக்குக் கீழே கிடந்த ஓலைச் சுவடியில், “கொடுமுடியில் வன்னி இலையெடுத்து காவிரியிலிருந்து நீர்மோந்து வந்து ஊற்று” என ஒரு அறிவிப்பு எழுதியிருந்தது. அதைக் கையில் ஏந்தியவுடனேயே அவரது உடலில் புதுச் சக்தி வந்தது போல் இருந்தது. அவரது தாகமெல்லாம் முற்றிலும் அடங்கியிருந்தது. குன்றினில் இருந்து தலைகுப்புற மேற்கு முகமாக இறங்கத் தொடங்கினார் ஆண்டிப் பண்டாரம். அத்தனையும் ஆயிரம் ஆண்டு புடம்போட்ட பாறைகளாக இருக்கும். புதரை விலக்கி அவர் தடம் கண்டறிந்து சுவடு பதித்து இறங்கினார், ஒரு யானையைப் போல. மனிதத் தடமே இல்லாத குன்றில் அவர் எதற்காக இந்தச் சிலையை வைத்தார் என்பதை யோசிக்கையில் வியப்பாகவும் விநோதமாகவும் இருந்தது. கடம்ப மரக் கூட்டம் குன்றையே தன் மணத்தால் போர்த்தியது. கீழே போன அவர் இன்னொரு ஊர் அங்கிருக்கக் கண்டார். நிலக்கடலைகளைப் போலச் சற்றே சிதறி ஆங்காங்கே தெரிந்தன சில தலைகள். கொடுமுடி தூரமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல அவருக்கு. கால்நடையாய்ப் போன அவரைக் கழுதை ஒன்று பின்தொடர்ந்தது.

அனுப்பி வைக்கப்பட்ட வாகனமோ அது என யோசித்தார். தன்னுடைய பையில் இருந்து சோள ரொட்டியை எடுத்து அதற்குக் கொடுத்தார். தயங்காமல் முன்னேறி வந்து வாங்கித் தின்றது. கடும்பசியில் இருந்திருக்குமோ? பிறகு அதன் முதுகைத் தடவிக் கொடுத்தார். ஏறி அமர்ந்த பிறகு எந்த மறுப்பையும் காட்டாமல், அந்தச் சோள ரொட்டியை மென்றபடி அதுவும் அவரைச் சுமந்து நடைபோட்டது.

கொடுமுடியில் அவர் யாரிடமும் மூச்சுக் காட்டவில்லை. சொன்னாலும் யாரும் நம்பவும் போவதில்லை, ஆண்டிப் பண்டாரம் சொல்தான் சபையில் ஏறுமா என்பதால், அவர் குறியெல்லாம் வன்னி மரத்தின் மீதே இருந்தது. அடித்து ஓடிக்கொண்டிருந்த காவிரியின் நெஞ்சுப் பகுதியில் நின்றது அந்த வன்னி மரம். அதில் இலையெடுத்து, காவிரியில் தண்ணீர் மோந்து அவரும் அந்தக் கழுதையும் குன்றை நோக்கித் திரும்பினர். அந்த மண் குடத்தில் நீர் தளும்பவே இல்லை. உள்ளே இருந்த நீரில் மிதந்த வன்னி இலைகள்கூட அசைவே இல்லாமல் அந்நீரில் பசைபோட்டதைப் போல ஒட்டிக் கிடந்தன. ஒருவேளை அமிர்தம் ஆகிவிட்டதோ? இனி சோற்றுக்குப் பஞ்சம் இருக்காது என ஆண்டிப் பண்டாரத்திற்கு அந்த வேளையில் தோன்றியது.

கழுதையும் அவரோடு இணைந்து குன்றேறியது. ஏற்கெனவே அந்தத் தடத்தை அது நன்றாக அறிந்து வைத்திருந்தைப் போல ஏறியது. அதை உணர்ந்து ஒருகணம் துணுக்குற்றார் ஆண்டிப் பண்டாரம். கொண்டுபோன நீரை சிலையின் தலையில் பக்தியோடு ஊற்றினார். உக்கிரமான வெயிலில், சிலையின் மேனியில் பட்ட நீரை வெப்பக் காற்று உடனேயே உறிஞ்சிக் குடித்தது. கருமையாய் அது தன்மேனியை ஒளியில் காட்டி நின்றது. கழுதையுமே கால்களை ஆட்டிக் கனைத்தது. சோர்வாய் உணர்ந்தவர், அங்கிருந்த மரத்தினடியில் தலைசாய்த்துப் படுத்தார். நிலவு வானில் ஏறுகிற சமயத்தில், அவரது கால்களை நனைத்து ஓடியது நீர்.

எங்கிருந்து அவ்வளவு நீர் ஊற்றைப் போலக் கிளம்பி வருகிறது? சிலையின் மேனியில் அந்த ஊற்று இருப்பதைப் போலத் தோன்றியது அவருக்கு. மறுநாளும் அதே மாதிரி நிலவேறுகிற சமயத்தில் சிலையில் இருந்து ஊற்றெடுப்பதைப் பார்த்தார். கண்டுபிடித்து விடலாம் எனக் கருதி, தன்னுடைய பையில் இருந்த பருத்தித் துணியைக் கிழித்து, சிலையின் இடுப்பில் கோவணமாகக் கட்டிவிட்டார். அதன் அடியில் பானையொன்றை வைத்துவிட்டு போய்ப் படுக்கப் போனார். கழுதை அவருக்கு முன்பாகவே உறங்கியிருந்தது.

அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னமே எழுந்தவர், அந்தப் பானை நிறைந்திருந்ததைக் கண்டார். தயக்கத்தோடு அந்த நீரை எடுத்து வாயில் சொட்டு வைத்துப் பார்த்தார். நுனி நாக்கில் கசப்பு பரவியது. ஆனால் உள்ளுக்குள் பனங்கற்கண்டு சுவை படர்ந்தது. கசப்பும் இனிப்பும் மாறி மாறி முன்னே வந்து முகம் காட்டின. இந்தச் சிலையில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டார்.

குன்றிறங்கிப் போனவர், மற்றவர்களிடமும் சிலையைப் பற்றிச் சொன்னார். உச்சியை ஏறியடையத் தெம்பு இருப்பவர்கள் எல்லாம் போட்டி போட்டு ஏறினார்கள். அங்கே இருந்த கழுதையின் கனைப்பைத் துயரமாய்க் கருதித் துரத்தி விரட்டினர். பண்டாரம் அதைத் தடுக்கக்கூட முயலவில்லை. கழுதைதானே என்கிற மாதிரி அவரை மீறி ஒருபார்வை பார்த்தார். அது அவரைத் துயரத்துடன் பார்த்தபடி மலையை விட்டு இறங்கியது. கடம்ப மரங்களில் ஊடுருவிய காற்று கனைப்புச் சத்தத்தை நெடுநேரம் மேல்நோக்கிக் கடத்தியது.

செய்தியறிந்து குன்றடிவாரத்தில் சுற்றுப் பட்டில் இருந்து வந்த ஜனங்கள் எல்லாம் குழுமியிருந்தார்கள். அதுவரை யார் கண்ணிலும் தட்டுப்பட்டேயிராத, போகச் சித்தன் செய்த சிலையது என எல்லோரும் பேசிக்கொண்டார்கள். வன்னி இலைகொண்டு காவிரி நீர் ஊற்றிய சொல்லை அவர்களிடம் கைமாற்றி விட்டு, அவர் அடிவாரத்திலேயே ஒதுங்கிக்கொண்டார். ஆண்டிப் பண்டாரத்திற்கு பிறகு மறுபடி மலையேறவே தோன்றவில்லை. அவர் மனதைக் கழுதையின் கனைப்புச் சத்தமே ஆக்கிரமித்திருந்தது. நாளாவட்டத்தில் அந்தச் சத்தமும் அருகி, பின் இல்லாமலும் போனது. அவர் அறிவதற்கென்று தனித்த சத்தங்களே இல்லை அங்கே.

குன்றைச் சுற்றி மனித நடமாட்டம் பெருகியதை அவர் உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். மாட்டு வண்டிச் சத்தம் அந்தத் தடத்தில் இருந்தபடியே இருந்தது. மேலே சிறுகோவில் ஒன்றை எழுப்பிவிட்டதாக மக்கள் அவர் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டார்கள். குன்றின் உச்சிக்குப் போகிற  பூஜைப் பயணப்பாடுகளுக்குக் கழுதைகளே அங்கே வாகனம் என்று ஒருத்தன் சொன்னதையும் கேட்டும் கேட்காத மாதிரி கால்மேல் கால் போட்டு மல்லாக்கப் படுத்துக் கிடந்தார். ஜனங்கள் மஞ்சள் எறும்புகளைப் போலச் சாரை சாரையாகக் குன்றை நோக்கி வரத் தொடங்கினார்கள். நிதமுமே திருவிழா கூட்டம் கூடியது. கூட்டத்திற்கு இணையாக, அவரது தலைமாட்டில் இருந்த அந்தத் திருவோட்டில் வந்து குவிந்தன சிலை குறித்த கதைகளும். இரவில் சிலையில் இருந்து பெருகும் வியர்வை நீரின் மகத்துவமறிந்த மனிதர்கள் அதையருந்த வெறிபிடித்துக் குன்றேறினார்கள். ஆண்டிப் பண்டாரம் உள்ளே மேற்கு பார்த்தபடி நிற்கும் சிலையின் குறுமுறுவலைக் குறித்து எண்ணிச் சிரித்துக்கொண்டார்.

அவர் படுத்துக்கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் அமர்ந்து செல்வாக்கானவன் ஒருத்தன், குடலைப் போலச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த துணியொன்றை எடுத்துப் பக்கத்தில் இருப்பவனிடம் காட்டிவிட்டுச் சொன்னான். “முருகன் கோவணம் இது. கிடைக்கிறதே கஷ்டம். கொள்ளக் காசு குடுத்து வாங்கிருக்கேன். இதை வீட்டுல வச்சா ஐஸ்வர்யம் பொங்கும்” என்றான். ஆண்டிப் பண்டாரம் திரும்பிப் பார்த்தார், மட்டமான காடா துணியொன்றைக் கையில் வைத்திருந்தான் அவன். காடா துணியை எண்ணெய் கலந்த நீரில் நனைத்து இப்படி அடிவாரத்தில் நிறையப் பேர் விற்றுக்கொண்டிருக்கும் விவரமும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

கோவணம் வேண்டும் என்று அவரிடமே நிறையப் பேர் வந்து நின்று இருக்கிறார்கள். “மனம் குளுர காசு தர்றேன். வயிராற வடை பாயாசத்தோட சோறும் போடறேன். எனக்கு ஒரு கோவணம் வாங்கித் தாங்க சாமி” என குடும்பஸ்தன் ஒருத்தன் வந்து நின்றான். இன்னொருத்தன் உடல்நலமில்லாமல் மருத்துவர் வசத்தில், உயிர் இழுபடப் படுத்திருக்கும் தன் பேரனுக்காகக் கோவணம் வாங்க வந்தேன் என்றான். இப்படி வருகிறவர்களை விரட்டுவதற்கென்றே தனியாக வேறொரு குச்சியை வைத்திருந்தார் ஆண்டிப் பண்டாரம். அந்தக் குச்சிக்கு வேலை இருந்துகொண்டே இருந்தது.

கோவணத்தை உருவ ஆட்கள் தோன்றியபடியே இருந்தார்கள். அதிகாரத்தை எல்லாம் பயன்படுத்திக் கோவணத்தை உருவிய காட்சிகளை எல்லாம் பார்த்து மனம் வெதும்பினார் ஆண்டிப் பண்டாரம். தான் அணிவித்தது செல்லாக் காசுக்குப் பெறாத பருத்தித் துணி. அந்தக் குண்டித் துணிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா எனத் தனக்குள் சிரித்துக்கொண்டார். ஆனால் நம்பிக்கைகள் அருகைப் போல எங்கும் நிறைந்தவை. சிறுபுல்தான் அதுவென்றாலும், வேர்பிடித்துவிட்டால், புயலாலும் அசைக்க முடியாது என்பதை அறிவார் ஆண்டிப் பண்டாரம்.

இரண்டொரு தடவை குன்றின் உச்சியை அடைய எட்டெடுத்து வைத்த போதும், மேலே போகத் தோன்றவே இல்லை அவருக்கு. அழைப்பில்லை போல என அதை இலகுவாக எடுத்துக்கொண்டு அடிவாரத்திலேயே திருவோடேந்தி அலைந்தார் ஆண்டிப் பண்டாரம். அவர் யாரிடமும் எதுவும் பேசிக்கொள்வதே இல்லை. குச்சி சாமியார் எனச் சிலர் அவரை அழைப்பதைக் கேட்டும் இருக்கிறார். அவர் படுத்திருக்கும் இடத்தில் குச்சிகளை வாங்கி வைத்து விட்டும் போவார்கள் சிலர்.

அடிவாரத்தில் சாமியைச் சாக்கிட்டு அளிக்கும் அன்னதானங்கள் நடந்தபடியே இருக்கும் என்பதால் பண்டாரத்தின் வயிறுக்குப் பங்கமில்லாமல் இருந்தது. விரைவிலேயே அவர் குன்றின் உச்சி குறித்து முற்றிலும் மறந்தே போனார். அது நினைவில் திரும்பாத நிகழ்வாக உப்புக் கரைசலைப் போலக் கரைந்தது. திரும்பத் திரும்பச் சொல்வதன் வழியாகவே எந்த ஒரு விஷயமும் ஆணிவேராக நிலைபெறுகிறது. சொல் ஊன்றாத நிலத்தில் எதுவும் பதிலுக்கு முளைப்பதேயில்லை. வாய்ச் சொற்களின் மீதான விருப்பமின்மை அவரைச் சூழ்ந்தது. நேர் எதிர் உணர்வாக அவருக்கு திடீரென உணவின் மீது பெருநாட்டம் கூடியது. அவரது வயிறு சோற்றிற்கு வாகாய் அருகைப் போல வளைந்து கொடுத்தது. அவர் மௌனமாய்த் தலைவாழை இலைக்குள் தலைவிட்டு மூழ்கி இருப்பதைப் பார்ப்பதற்கே கூட்டம் சேர்ந்தது. உண்ணும் போதைவிட, அதைப் பற்றிப் பேசுகையிலேயே சோறு இன்னமும் ருசிக்கிறது. சோற்றுப் பருக்கைகள் சொற்களாய்ச் சிதறின அங்கே.

மைல் கணக்காய்ச் சோற்றுக்காய் நடந்த காலமெல்லாம் அவரது நினைவிலேயே இல்லை. சாமிக்குப் படைக்கிற தானச் சோறென்றால், கும்பிட்டு அழைக்காவிட்டாலும் கிளம்பிப் போய்விடுவார். வறட்டாற்றுத் தண்ணீரால்தான் இவ்வளவு ருசி என நினைத்தும் கொள்வார். இலையில் சோற்றைப் பரப்பி, விரலில் நீரையெடுத்து அதன் மீது தெளித்துவிட்டு உண்ணத் தொடங்கும் அவர், கடைசி இனிப்பும் முடிந்த பிறகே நிமிர்ந்து தனக்கு உணவிட்டவனை, ஏப்பமிட்டுப் பார்ப்பார். அவர் கைநனைத்த, தானச் சோற்றினை இட்டவன் வீட்டில் நற்காரியங்கள் நிறைய நடப்பதாக எழும் கதைகளையும் அவர் அறிவார்.

அடிவாரத்தில் எந்நேரமும் தென்னந்தோப்புகளில் சோற்று மணம் புகையைப் போலச் சூழ்ந்திருக்கும். வயிற்றிற்கு ஒருபோதும் அந்தக் குன்று எவருக்கும் குறை வைத்ததில்லை. அன்னதானத்தில் வைக்கிற நெய் பனியாரத்திற்கு அவர் அடிமையாகவே மாறிப்போனார். ஒரு கட்டத்தில், அவர் விரும்பிச் சாப்பிடுகிறார் என்பதாலேயே விருந்துகளில் அதைப் போட்டார்கள். அவர் மனமெல்லாம் அதன் மணத்தின் மீதே இருந்தது. தானச் சோற்றை உண்டுவிட்டு, அவர் அந்தக் குச்சியை வைத்து விருந்தளித்தவனின் வயிற்றில் தட்டிச் சென்றால் ஆசீர்வாதம் என்று எவரோ சொல்ல, அதன்படி அவரை அப்படித் தட்டிச்செல்லவும் நிர்பந்தித்தார்கள். உடலில் சக்தி இருக்கிற வரை அவர் பல்லாயிரம் வயிறுகளை அவ்வாறு குச்சியால் தட்டினார். காலங்களைக் கடந்தும் அவரோடு ஒட்டி இருந்தது அக்குச்சி, அவரது உடலைப் போல. தானச் சோறு தின்று திரும்புகிற வழியில் ஒருநாள் பனியாரத்தை வேண்டா வெறுப்பாகச் சாக்கடைக்குள்ளும் தூக்கிப் போட்டார்.

அவர் அடிவாரத்திற்கு வந்து ஐம்பது வருடங்கள் ஆகியிருக்குமா என யோசித்துக்கொண்டே, உச்சி வெயிலில் நொண்டிக்கொண்டு நடந்து போனார் ஆண்டிப் பண்டாரம். இப்போதெல்லாம் சாப்பிடப் போவதற்கே ஆண்டிப் பண்டாரங்கள் காசு கேட்பதாக ஒருத்தர் வந்து அவரிடம் சொன்னார். மௌனமாகத் தலையை மட்டும் ஆட்டினார் ஆண்டிப் பண்டாரம். ஒடுங்கிய வயிறைத் தன்னியல்பாய் அப்போது தடவிக்கொண்டார். உடல் சுருங்குவதற்கு முன்பு வயிறுதான் முதலில் வற்றுகிறது என்பதை அனுபவத்தில் கண்டறிந்திருந்தார். இப்போதெல்லாம் அவரால் ஒரு கைப்பிடிச் சோற்றைக்கூட உண்ண முடியவில்லை. புதிய ஆட்கள் நிறையப் பேர் வந்துவிட்டதால், அவரை எல்லோரும் கிட்டத்தட்ட மறந்தும் போயிருந்தனர்.

படுக்கையில் கிடந்த அவரைப் பழைய ஞாபகங்கள் எல்லாம் மறுபடி இரவுகளில் சூழத் தொடங்கின. உப்பு முற்றும் தன்னைக் கரைக்காமல், மிச்சமாக உப்பரிந்த தடம் ஒன்றை வைத்திருந்தது உள்ளுக்குள். தன்னை நோக்கி அது வந்துகொண்டிருப்பதாய்த் தீர்மானமாய் உணர்ந்தார். ஒருநாள் இரவு அவரது நாக்கில் பழைய கசப்புச் சுவை தென்பட்டது. அவ்வளவு நாள் எங்கே மறைந்திருந்தது அது? நெஞ்சின் ஆழத்தில் ஊசிமுனையால் யாரோ குத்துவதைப் போலத் தோன்றியது. நினைவு தப்பினாலும், எதுவோ ஒன்று தன்மேல், மிச்சமிருக்கிற கிழிந்த கம்பளியைப் போலக் கனமாகப் போர்த்தியிருப்பதாக நினைத்து உடலை அசைத்துப் பார்த்தும், அவரால் முடியவில்லை. அடிவாரத்தில் மனித நடமாட்டம் அடங்கிய பின்னர் கழுதையின் கனைப்புச் சத்தம் அவரது காதிற்கு அருகில் கேட்டதும், பலத்தைத் திரட்டி எழுந்தமர்ந்த அவர், தன்னுடைய பையில் இருந்த முடிக் கற்றையை எடுத்துத் தடவிக்கொண்டு இருளைப் பார்த்தார். அங்கே அசைவொன்று தெரிந்தது அவருக்கு.

அன்றைக்கு வேண்டி விரும்பி, விருந்திற்குத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்து விழுந்துக் கும்பிட்டு அழைத்தாள் இரண்டு பொட்டைப் பிள்ளைகளைக் கையில் பிடித்துக்கொண்டு நின்ற ஒருத்தி. அவளது கண்ணில் துயரம் தோய்ந்திருந்தது. “புருஷனுக்கு சீக்கு. சாமி வந்து கை நனைக்கணும். ஒருத்தரும் வர மாட்டேங்குறாங்க. புள்ளைகளை கரை சேர்க்கணும். வயித்துப் பாட்டுக்குத்தானே இவ்வளவும்?” என்றாள். ஆண்டிப் பண்டாரத்திற்கு எழவே முடியவில்லை. கொஞ்சம் தண்ணீர் குடித்தால்கூடப் போதும் என்றே இருந்தது. ஆனாலும் குச்சியை ஊன்றி பலத்தைத் திரட்டித் தட்டுத் தடுமாறி நடந்து அவளைப் பின்தொடர்ந்து போனார். குத்துக்கல் ஒன்றிற்கு அருகில் சின்னச் சட்டிகளில் அவளே சமைத்துக்கொண்டு வந்திருந்தாள்.

பச்சையில் மஞ்சள் பூக்கத் தொடங்கிய இலையொன்றை விரித்து அதில் சோற்றையும் குழம்பையும் ஊற்றிய போது ஆண்டிப் பண்டாரத்திற்கு உண்ணவே தோன்றவில்லை. அடிவாரத்திற்கு அவர் தாகத்தோடு வந்து நின்ற நாள் அவரது நினைவில் எழுந்தது. ”குடிக்க மட்டும் ஏதாவது தா” என்று அவளிடம் சைகை காட்டினார். “அய்யோ சாமி. வெறும் பால்ல பனங்கற்கண்டு போட்டது மட்டும்தான் இருக்கு” என்று சொல்லி விட்டு ஊற்ற ஒன்றுமில்லாததால், திருவோட்டில் ஊற்றி அந்தக் குழந்தையிடம் கொடுத்தாள். அதை வாங்கக் கைநீட்டிய அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்தார்.

எழ முடியாமல் கிடந்த ஆண்டிப் பண்டாரத்தை மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் அவரது இடத்தில் போட்டார்கள். தலைமாட்டில் அப்படியே பால் அடங்கிய திருவோட்டினையும் வைத்துவிட்டுப் போனார்கள். நினைவு வருவதும் தப்புவதுமாய்ப் படுத்துக் கிடந்த பண்டாரத்தைச் சீண்டக்கூட ஆள் இல்லை அங்கே. அவரது நெஞ்சில் ஏக்கமொன்று விக்கலைப் போல விட்டுவிட்டு எழுந்தது. ஈயைக்கூட விரட்ட முடியாமல் படுத்துக் கிடக்கும் அவரால் அதை எப்படி விரட்ட இயலும்? ”உசுரு எதுக்கோ ஏங்கிக் கிடக்கு. அது தணிஞ்சா எந்நேரம் வேண்டுமானாலும் வேற கூட்டுக்கு பாஞ்சிரும்” என்று யாரோ சொன்னது அப்போது அவருக்கு நினைவு வந்திருந்ததால் சன்னமாகக் கேட்டது.

அவரது நினைவின் கடைசிக் காட்சியாய்க் குன்றில் காலடிச் சுவடுகள் தெரிந்தன. அவரது காலடியோடு இணைந்து இன்னொன்றும் இருக்கக் கண்டார். ஆசுவாசமானதைப் போல உணர்ந்தது அவருடைய மனம். படுத்தவாறே கைகளைத் துழாவி அந்த முடிக்கற்றையை வைத்திருந்த சிறுபையை இறுகப் பற்றிக்கொண்ட ஆண்டிப் பண்டாரம், கண்களை மூடி நினைவுகள் இல்லாத பெருவெளிக்குள் கரையத் தொடங்கினார்.

மறுபடி அவருக்கு நினைவு வந்தபோது, அவரது கால்களை மடியில் போட்டு அமர்ந்திருந்தார் அவர். தோளில் தொங்கிய முடிக் கற்றையுடன் இருந்தவர், “எங்கே அது? கைமாற்ற வேண்டும் அதை. அது இருக்கிற வரை சோறுண்டு இங்கே” என்றார். ஆண்டிப் பண்டாரம் அந்தப் பையை எடுத்து அவரிடம் தந்துவிட்டு எதுவும் பேசாமல் அந்த முகத்தையே பார்த்தார். “குச்சி என்னிடம் இருந்து உன்னிடத்திற்கு வந்தது. அது இப்போது இன்னொன்றிடம் போய்ச் சேரும். அது கடந்துகொண்டே இருக்கும். உடலில் பூக்கிற நீர்தான் சோறு. அந்த நீராய் நீயும் இருந்தாய். நிறைவாய் நிறைந்திடு” என்று சொல்லிவிட்டு, அவர் ஆண்டிப் பண்டாரத்தின் தலைமாட்டில் இருந்த பனங்கற்கண்டு போட்டுக் காய்ச்சிய பாலை எடுத்துக் குடித்தார். ஆண்டிப் பண்டாரத்தின் நினைவு இறுதிச் சுவையாய் அதையே கண்டது.

கண்ணும் காதும் வைத்த மாதிரி, விரைவாகவே ஆண்டிப் பண்டாரத்தைக் கொண்டுபோய்ப் புதைத்தார்கள். மரணத்தை அச்சமாகவும் அசூயையாகவும் பார்க்கிற கூட்டமும் அங்கே உருவாகி இருந்தது. அவருடைய சொல் அந்தக் கணத்தில் இருந்து அங்கே காணாமல் போனது. தானச் சோறு வைப்பவர்கள் எல்லோருமே விந்தையான ஒரு செய்தியை அங்கே பின்னர் சொல்லத் தொடங்கினார்கள். அதுவே இருளிற்குள் உருண்டு திரண்டு குன்றிற்கு இணையான உயரத்தில் ஒரு கதையாகவும் நின்றது.

தானச் சோறு போடுகிற இடத்திற்குப் பக்கத்தில் வந்து நின்று, பழுத்து முதிர்ந்த கழுதையொன்று விடாமல் கனைத்துக்கொண்டே இருக்கிறதாம். அதன் வாயில் வாலைப் போலத் தொங்குகிறது ஒரு மயிர்க் கற்றை.

6 comments

Renukadevi October 11, 2022 - 11:25 am

As usual i feel i am doing what Andi is doing. That is the effect Saravana will always give

Karthi October 11, 2022 - 11:26 am

Good writing

சந்தோஷ் குமார் October 11, 2022 - 11:28 am

சார் உங்க முருகர் பக்திக்கு அளவே இல்லையா? இங்க எல்லாமே வியாபாரமாக மாத்தி ரொம்ப நாள்ளாச்சு உங்களுக்கு நல்லாவே தெரியும். தானச் சோறு எல்லாம் இப்போ முன்ன மாறி இல்லை. எல்லா கோவிலும் சிறப்பு அன்னாதானம் தான். கதை படிக்க தூண்டியது. கடைசியில் ஒரு மேஜிக் நடக்கும் என நினைத்தேன். நடக்கவில்லை.

உவமையாக நிலக்கடலை போல சிதறியிருந்த வீடுகள், குடலைப் போலச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த துணிகள் , பனங்கற்கண்டு தண்ணீர்,
ஒவ்வொரு கோவிலும் இப்படித் தான் மக்களின் ஏதோ ஒரு நம்பிக்கையில் உருவாகி வருகிறது. அவன் வேண்டுவது கிடைத்தால் தொடர்ந்து அந்தக் கோவிலின் புகழ் பாடப்படுகிறது, இல்லையேன் அவன் வேறு கோவிலை நாடிச் செல்ல துவங்குகிறான். குறியீடாக இக்கதை சொல்லும் மனிதநேயம் தான் முக்கியம் பக்தி எப்போது வியாபாரம் ஆகிறது என்பது கூட்டம் அதிகம் சேரும் போது தான்.

S.Gomala October 11, 2022 - 6:25 pm

புனைவு ன்னு யோசிச்சாலும் இப்படிகூட நிகழ்ந்திருக்கலாம், உருவாகி இருக்கலாம் என்றே தோன்றுகிறது ..துளீத்துளியாக நல்ல விவரிப்பு நிறைய இடங்களில் ஆசிரியர் பார்வையாக வருகிற வார்த்தைகள் நிறைவாக இருக்கிறது..அந்ந அரூப கழுதைகளாய் தான் குன்றை தேடி வரும் ஆட்களோ…

நடராஜன் இளமணி October 11, 2022 - 9:06 pm

தேவை முடிந்ததும் விரட்டிவிடப்பட்ட
அந்தக் கழுதைதான் ஆரம்பத்திலிருந்து நினைவில் நின்றது, தெடர்ந்தது!

Manikandan October 12, 2022 - 9:47 pm

சிறப்பு சார்

Comments are closed.