எழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து

by த. கண்ணன்
2 comments

(1)

என்னை மிகவும் கவர்ந்த, என்மீது தாக்கம் செலுத்திய ரஷ்ய ஆக்கங்கள் பலவுள்ளன. ஆனால் என்னைக் கலைத்துப்போட்டவை இரண்டு. முதலாவது, தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலான நிலவறைக் குறிப்புகள். அது வெறுமையான வாழ்க்கைச் சுழலில் சிக்கியிருந்த ஒரு சாதாரண அலுவலனின் கீழ்மைகளையும் கசப்புகளையும் குவித்து இருத்தலியற் பின்புலத்தில் முன்வைத்த நாவல். நானும் முன்பு ஒரு நிறுவனத்தில் பணிசெய்துகொண்டு அப்படியான ஒரு நச்சுச்சுழலில் இருந்தபோது அதன் முதல்பகுதியின் பாதியைக்கூடக் கடக்க முடியாதவாறு என்னைச் சுட்டெரித்தது. அச்சுழலில் இருந்து விடுபட்டு வாழ்க்கைக்குப் புதிய பொருள் பிறந்த பிறகே அதனை மீண்டும் எடுத்து முடிக்க முடிந்தது.

இரண்டாவது நூல் லேவ் தல்ஸ்தோயின் ‘உம்மிடையே உள்ளது இறையாட்சி’ (The Kingdom of God is Within You). இந்நூலையும் படிக்கத் தொடங்கி பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னரே முடித்தேன். அதன் ஆழ்ந்த கருத்துகளை முழுவதும் உள்வாங்கிக்கொள்ள இப்பத்தாண்டுகளின் வாழ்வனுபவங்களும் வாசிப்பும் தேவைப்பட்டிருக்கின்றன. எங்கும் கசியும் இருண்மையை எளிதாகக் கடந்து மானுட மேன்மையை நோக்கி ஒளிகாட்டிச் செல்கிறது இந்நூல். இதுவரை இதன் மொழிபெயர்ப்பு தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. 

தல்ஸ்தோய் இதற்கு ஒன்பதாண்டுகள் முன்னர் எழுதிய ‘நான் நம்புவதென்ன’ (What I Believe) என்ற நூலுக்கு வந்த எதிர்வினைகளுக்குப் பதிலளித்து அங்கிருந்து விரிந்துசெல்லும் விதமாக அமைந்துள்ளது இந்நூல். இவற்றில் அரசமைப்புகளுக்கும், நிறுவனமாக்கப்பட்ட மதத்துக்கும் எதிரான பார்வையைத் தல்ஸ்தோய் பதிகிறார். கிறித்தவத் திருச்சபை வழிவந்த கிறித்தவத்தை முழுமுற்றாக மறுத்தெழுதுகிறார். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் உள்முரண்களையும் மிகைத் தொன்மங்களையும் களைந்து, அதன் மெய்ப்பொருளை மட்டும் கடைந்தெடுத்து, அதையே இயேசு கிறிஸ்துவின் உண்மை மறைநூலாக அளிக்கிறார்.

மதவாதிகளின் சொற்களிலும் சடங்குகளிலும் பொய்மைகளிலும் மாசுபடிந்துகிடந்த இயேசு கிறிஸ்துவின் சொற்களை மீட்டெடுத்து, அன்பே கடவுள் என்பதை நிறுவ முயல்கிறார். மலைப்பொழிவையே (Sermon on the Mount) இயேசுவின் போதனைகளின் உச்சமாகவும் சாரமாகவும் தல்ஸ்தோய் காண்கிறார். இயேசுவின் சுருக்கமான கருத்துகளை விரித்தெடுக்கிறார். தெளிவற்றவற்றிற்கு தெளிவுகூட்டுகிறார். அன்பும் அகிம்சையும் சமத்துவமுமே இயேசுவின் கிறித்தவத்துக்கு அடித்தளமானவை என்பதை அடையாளம் காண்கிறார். அதனோடு இயைந்திடாது வரும் அத்தனை கருத்துகளையும் கதைகளையும் முற்றாக நிராகரிக்கிறார். பழைய ஏற்பாட்டின் கணிசமான பகுதிகளை அவர் ஒதுக்குகிறார்.

தல்ஸ்தோயின் வாழ்வு தெளிவான இரண்டு அங்கங்களாகப் பிரிந்தமைந்தது. ஆன்னா காரனீனா, போரும் அமைதியும் போன்ற பெரும் புதினங்களை எழுதி உலகின் முன்னணி எழுத்தாளர்களின் நிரையில் முந்திநின்ற தல்ஸ்தோய். 1880களில் தனது பழைய படைப்புகளைப் புறந்தள்ளி, புனைவெழுத்தாளர் என்கிற அடையாளத்தையேகூடப் பெருமளவு உதறி, தான் பெற்ற, ஈட்டிய செல்வத்தைத் துறக்க முனைந்து – அதில் முற்றாக வெற்றி பெறமுடியாத போதிலும், தன்னை ஒரு சமூகச் சிந்தனையாளராக, மெய்யியல் அறிஞராக, இறையியல் ஞானியாக, களப்பணியாளராக, உணவீட்ட உழைப்பவராக, கிறித்தவ மதச் சீர்திருத்துனராக, அரசின்மைவாதியாக, பேராசானாக மாற்றியமைத்துக்கொண்டார். அது அவரது குடும்பத்தில் கடும் குழப்பங்களையும் பூசல்களையும் விளைவித்து அவரது இல்வாழ்வு துயர்மிகுந்ததாக மாறியது. எனினும் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் தொடர்ந்து பல சோதனைகளைச் செய்து வந்தார். அவர் அடைந்த புதிய அறிதல்களின் ஒளியில் பல முக்கியமான புனைவுகளையும் அல்புனைவுகளையும் இயற்றினார். 

இந்த இரண்டாவது காலகட்டத்தில்தான், ’நான் நம்புவதென்ன’ (What I believe), ’இனி நாம் செய்யவேண்டியதுதான் என்ன’ (What then must we do), பாவ அறிக்கை/சங்கீர்த்தனம் (Confession), சுவிசேஷங்களின் சுருக்கம் (The Gospel in Brief), கலையென்பது என்ன (What is Art?) போன்ற கட்டுரை நூல்களையும், இவான் இலியிச்சின் மரணம் (The Death of Ivan Ilych), ஹாஜி முரத் (Hadji Murad), புத்துயிர்ப்பு (Resurrection) போன்ற முக்கியமான புனைவுகளையும் பல சிறுகதைகளையும் எழுதினார்.  

தல்ஸ்தோயின் முதல் கட்டத்து நாவல்களிலேயே கூட அவரது அரசியல், தத்துவ, வரலாற்றுப் பார்வைகள் மிகுந்து வரவே செய்தன. விமர்சகரின் நிலைப்பாட்டினைப் பொறுத்து அது நிறையாகவோ குறையாகவோ சுட்டிக்காட்டப்பட்டது. போரும் அமைதியும் நாவல் முதல்தரமானது என்று விதந்தோதிய போதும், பிரெஞ்சு நாவலாசிரியரான குஸ்தேவ் ஃப்ளாபெர்ட், மூன்றாம் பாகத்தில் ‘அவர் மிகுதியாகத் தத்துவம் பேசுகிறார், கூறியது கூறுகிறார்’ என்றார். ஃப்ளாபெர்ட்டுக்கு அந்நாவலை அறிமுகப்படுத்திய இவான் துர்கனேவ், அவரது பிற படைப்புகளை நிராகரித்தார். தனது மரணப்படுக்கையிலிருந்து, ‘இறைத்தூதர் என்ற பொறுப்பைத் துறந்து, ரஷ்ய நிலத்தின் மகத்தான எழுத்தாளர் என்ற உமது உண்மையான தளத்துக்குத் திரும்புங்கள்,’ என்று தல்ஸ்தோயிடம் இரைஞ்சி ஒரு குறிப்பெழுதினார். தல்ஸ்தோயின் பிந்தைய புனைவுப்படைப்புகள் வெளிப்படையாகவே அவரது கருத்துகளைச் சாற்றும் ஊடகங்களாயின. எனினும் அப்படைப்புகள் பலவற்றிலும் அவரது கலைத்திறன் மிளிரவே செய்தது. ‘இவ்வெழுத்தாளர் ஒரு நல்ல சிந்தனையாளர் என்பதைவிடச் சிறந்த கலைஞராக இருக்கிறார் என்பது நமது நல்லூழ்,’ என்றார் நிக்கலாய் அக்சருமோவ் என்ற விமர்சகர். 1

ஆனால் தல்ஸ்தோய் இதுபோன்ற எளிய இலக்கிய மதிப்பீடுகளைக் கடந்த நிலைக்கு நகர்ந்துகொண்டிருந்தார். அவரது எழுத்துகளின் தாக்கம் இலக்கிய உலகைத் தாண்டி சமூகக்களத்துக்கும் ஆன்மீக உலகுக்கும் விரியும் கூர்கொண்டிருந்தது. அதில் முதன்மையானதொரு படைப்பாக, ‘உம்மிடையே உள்ளது இறையாட்சி’ அமைந்தது. “இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” (லூக்கா 17.21)2 என்ற விவிலிய வாசகத்திலிருந்து இத்தலைப்பு எழுந்தது. ‘மறைமெய்மைசார் மதமாக இல்லாமல், வாழ்க்கைக் கோட்பாடாகத் திகழும் கிறித்தவம்’ என்ற துணைத்தலைப்பை அறைகூவலாகக் கொண்டிருந்தது இது. “உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்,” என்ற இயேசுவின் சொற்களை மேற்கோளாகக்கொண்டு தொடங்குகிறது (யோவான் 8.32.)2

இந்நூலுக்கான முன்னுரையில் இதன் மொழிபெயர்ப்பாளரான கான்ஸ்டன்ஸ் கார்னெட், “தல்ஸ்தோயின் மேதைமை சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. நமது தலைமுறையின் மாபெரும் நாவலாசிரியராக இவரே இருக்கக்கூடும் என்று நாகரிக உலகம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அவரது பிந்தைய ஆண்டுகளில் வந்த மெய்யியல், மத நூல்கள் ஒருவித அலட்சியமான வரவேற்பையே பெற்றுள்ளன. எழுதியவர் அவர் என்பதாலேயே அவை அதிகம் பேசப்பட்டன. எனினும் தல்ஸ்தோயே முறையிடுவது போல, அவை தீவிர விவாதங்களுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்நூல் தொடர்பாக அவர் இப்புகாரைக் கூறவேண்டியிருக்காது என்றே நினைக்கிறேன். அவரது கருத்துகளோடு ஒருவர் முரண்படலாம். ஆனால் அவரது தனித்தன்மையையும், துணிவையும், இத்தனை தீர்க்கமான தர்க்கத்துடன் அவர் வளர்த்தெடுக்கும் சமூகக் கருத்தாக்கத்தின் ஆழத்தையும் எவரும் மறுக்கமுடியாது. நாவலாசிரியர் தல்ஸ்தோய் நிறைமொழி மாந்தரின் சமயம் சார்ந்த உளவெழுச்சியையும், ஆன்மீக உள்ளொளியையும் இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோழ்து சிந்தனையாளனில் கலைஞன் முழுவதுமாகத் தொலைந்து போய்விடவில்லை என்பதும் நமக்கு உவகையளிக்கிறது,” என்கிறார். மேலும், “தல்ஸ்தோய் போலவே பல தீவிர சிந்தனையாளர்கள் நமது சமூக அடுக்குமுறையின் முரண்களுக்குத் தீர்வுதேடிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவரைத் தமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுப்போற்றுவார்கள்,” என்றார். இந்நூலின் தாக்கத்தை இதைவிடத் துல்லியமாக எவரும் கணித்திருக்க முடியாது. 

தல்ஸ்தோயை நோக்கிப் பல சீடர்கள் வந்தடைந்தார்கள். ரஷ்யாவிலும் பிற நாடுகளிலும் அவரைப் பின்பற்றத்தொடங்கினார்கள். எளிமையான வாழ்க்கை, வன்முறையை முற்றாக விலக்கல், போர் எதிர்ப்பு, உணவீட்ட உடலுழைப்பு என்ற நெறிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். அவர்களுள் ஒருவர், 15000 கிலோமீட்டர்களுக்கப்பால், சிறையிலிருந்து கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படும்போதுகூட தனது கையில் ‘உம்மிடையே உள்ளது இறையாட்சி’ நூலையே வைத்திருந்தார்.3 அவர் மோகன்தாஸ் காந்தி. தென்னாப்பிரிக்கவில் அவரது நீண்ட அரசியல் போராட்டத்துக்கும் சத்திய சோதனைகளுக்கும் துணையாகவும் தூண்டுதலாகவும் இருந்தன தல்ஸ்தோயின் எழுத்துகள். குறிப்பாக இந்நூல். தல்ஸ்தோயால் ஈர்க்கப்பட்ட ஜெர்மானிய யூதரான ஹெர்மன் காலன்பாக் காந்தியின் மிக நெருங்கிய நண்பரானார். ஜொகனஸ்பெர்க் அருகே அவருக்கிருந்த 1100 ஏக்கர் நிலத்தை காந்தியின் சத்தியாகிரகப் பணிகளுக்காகவும் தல்ஸ்தோய முறையில் வாழவும் கொடையளித்தார். இருவரும் அதற்குத் தல்ஸ்தோய் பண்ணை என்றே பெயரிட்டனர். ஏற்கனவே ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (‘Unto this last’) நூலால் உந்தப்பட்டு, நடாலில் ஃபினிக்ஸ் பண்ணை அமைத்து, தன் குடும்பத்தோடு அங்கு குடிபெயர்ந்து எளிய வாழ்க்கைமுறையைத் தேர்ந்திருந்த காந்தியின் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தல்ஸ்தோயின் எழுத்துகள் வலுக்கூட்டின. 

இருபதாம் நூற்றாண்டின் மீது மிகப்பெரிய, ஆகச்சிறந்த தாக்கம் செலுத்தியவர் யாரென்ற கேள்விக்கு பெரும்பாலானோர் காந்தி என்றே சொல்லக்கூடும். அக்கேள்வி 1931ல் லண்டன் சென்றிருந்த காந்தியிடம் கேட்கப்பட்டபோது அவர், “தல்ஸ்தோய். அவர்மட்டுமே” என்று உறுதிபடக் கூறினார்.4 இந்நூலின் பல கருத்துகளோடு காந்தி உடன்பட்டும் முரண்பட்டும் வளர்த்தெடுத்தும் செல்வதை நாம் காணலாம். அக்கருத்துகள் ஏட்டளவில் தேங்கிவிடாமல் நடைமுறைச் சாத்தியம் கொண்டவை என்பதைப் பற்றிய நம்பிக்கையை உலகெங்கிலும் விதைத்தவர் காந்திதான். எனவே, இந்நூலை காந்தியின் வாழ்க்கைப் பாதையோடு இணைத்துக் காண்பது தவிர்க்கமுடியாதது ஆகிவிடுகிறது.

(2)

தல்ஸ்தோய் தனது பதின்ம வயதுகளிலிருந்தே மறுப்புவாதியாக (nihilist), எந்தவித நம்பிக்கைகளும் அற்றவராக இருந்திருப்பதாகக் கூறுகிறார். அவர் ஈடுபட்ட எல்லாத் துறைகளிலும் நிறைநிலை எட்டுவதில் மட்டுமே ஆர்வம்கொண்டிருந்தார்.  இளமையில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை உளவேதனையுடனே பின்னர் நினைவுகூர்கிறார். போர்களில் பிறரைக் கொன்றிருக்கிறார். இரட்டையர் தனிச்சண்டைக்குக் (Duel) கொலைநோக்குடன் சவால்விட்டு அழைத்திருக்கிறார். சூதாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். களிமகனாய்த் திரிந்திருக்கிறார். தனது பண்ணைக் குடியானவர்கள் மீது புகாரளித்து தண்டனை பெற்றுத்தந்திருக்கிறார். பல பெண்களோடு உடலுறவு வைத்திருக்கிறார். பிறரை ஏமாற்றியிருக்கிறார். தான் செய்யாத குற்றங்களே இல்லை என்கிறார். இருப்பினும் அவரது எழுத்துகள் மூலமாகப் புகழும் நல்ல மனிதர் என்ற பெயரும் அவரைத் தேடி வந்தன.6   

இவற்றுக்கெல்லாம் இடையில் ஆன்மத் தேடலைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். 

“நேற்று கடவுள், நம்பிக்கை ஆகியவை குறித்த ஓர் உரையாடலின் போது ஒரு மகத்தான எண்ணம் எழுந்தது. அதை நிறைவேற்றுவதற்காக எனது வாழ்வை என்னால் அர்ப்பணிக்கமுடியும் என்று உணர்ந்தேன் – ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிப்பதே அந்த எண்ணம். மனிதனின் பரிணாமத்துக்கு ஏற்றதாக, எந்த மதநம்பிக்கைகளும் மர்மங்களும் அற்றதாக, நடைமுறைக்கு உகந்த ஒரு கிறித்தவ மதமாக அது இருக்கும். எதிர்காலத்தில் நிலைப்பேற்றை உறுதியளிக்காது, இந்த உலகத்திலேயே எல்லா அருளையும் வழங்கும். இந்த மதத்தின் மூலமாக  மனிதர்களின் ஒன்றிணைவுக்கு முனைப்புடன் உழைக்க வேண்டும். இவ்வாறாகச் சென்ற என் எண்ணம் என்னைத் உயிர்த்திருக்கச் செய்யும் என்று நம்புகிறேன்,” என்று 27வது வயதிலேயே தனது நாள்குறிப்பில் எழுதினார்.7 

மனித இனம் தொடர்ந்து வளர்ந்து முன்னேறும் என்று அறிவுத்தளத்தில் இருந்த பொதுவான நம்பிக்கையை தல்ஸ்தோயும் பெற்றிருந்தார். ஒருமுறை பாரீஸ் சென்றிருந்தபோது அங்கு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கண்டிருக்கிறார். அதுவரை மட்டற்ற மனித முன்னேற்றத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை அப்போது சற்றே ஆட்டம் கண்டது. அது ஒரு வலுவற்ற மூடநம்பிக்கை என்றுணர்ந்தார். “உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு, பெட்டிக்குள் ஒவ்வொரு உடற்பகுதியும் தடாலென்று விழும் ஓசையைக் கேட்டபோது, இருத்தலின் பொருளையோ முன்னேற்றத்தையோ விளக்கும் எக்கோட்பாடும் இத்தகைய செயலை நியாயப்படுத்த முடியாது என்பதை அறிவினால் மட்டுமன்றி எனது உடலுயிராலும் புரிந்துகொண்டேன். இது ஏதேனும் கோட்பாட்டின்படி அவசியமானது என்று உலகம் படைக்கப்பட்ட நாள் முதலாக அத்தனை மக்களும் கருதினாலும்கூட, இது தேவையற்றது என்றும் தவறானது என்றும் நானறிவேன் என்பதை உணர்ந்தேன். எனவே மக்கள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கருதாமல், எது சரி, எது அவசியமானது என்பதன் அடிப்படையிலேயே எனது மதிப்பீடுகள் அமைய வேண்டும். முன்னேற்றத்தை வைத்து மதிப்பிடாமல் என் அகத்தின் உணர்வைக்கொண்டே நான் மதிப்பிடவேண்டும்,” என்று அந்நிகழ்வைப் பற்றிய நினைவுகளை ‘பாவ அறிக்கை’ நூலில் பதிவுசெய்கிறார். 

அவரது கதைமாந்தர்கள் பலரும் ஆன்மீகத் தேடலும் அலைக்கழிச்சலும் மிக்கவர்களாக இருந்தனர். அவரது கதைகளில் அவரது வாழ்க்கைக்குப் பொருள் தரக்கூடிய நல்ல செயல்களுக்கான ஏக்கங்களைப் பொதித்து வைத்ததாகக் கூறுகிறார். பிறிதொரு இடத்தில், அவரது திருமணத்துக்குப் பின்பான பதினைந்து ஆண்டுகளில், “எழுத்தை அற்பமான செயலாகக் கருதினாலும் தொடர்ந்து எழுதினேன். ஏற்கனவே எழுத்தாளனாக இருப்பதன்மீதான ஈர்ப்பையும், எனது பெறுமதியற்ற எழுத்துகளுக்குக் கிடைத்த பெரும் பொருளாதாரப் பலன்களும் பாராட்டும் ஏற்படுத்திய சபலத்தையும் சுவைத்திருந்தேன். எனது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ளவும், வாழ்வின் பொருள் குறித்தும் பொதுவாக வாழ்க்கை குறித்தும் ஆன்மாவுள் எழுந்த வினாக்களை முடக்குவதற்கான கருவியாகவும் கருதி எழுத்துக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்,” என்றார். எழுத்தை அற்பமாகக் கருதியதாகக் கூறும் இந்தக் காலகட்டத்தில்தான் போரும் அமைதியும் நாவலை அவர் எழுதியிருந்தார். 

அவர் ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ஆன்னா காரனீனா நாவலை எழுதி முடித்த காலகட்டத்தில், அவரது ஆன்ம உளைச்சல் உக்கிரமானது. ‘ஏன் இப்படி? அடுத்த என்ன?’ என்ற வினாக்கள் அவரை வதைக்கத்தொடங்கின. அவருடைய ‘சமரா’ பண்ணை விரிவடையும், ‘கோகல், புஷ்கின், ஷேக்ஸ்பியர், மொலியேர் ஆகியோரைவிட அவர் புகழடைவார்’ போன்ற விடைகள் அவருக்கு நிறைவு தரவில்லை. ‘அதனாலென்ன?’ என்ற கேள்வியே எழுந்தது. உலக மெய்யியல் நூல்களிலும் சமய நூல்களிலும் அவருக்கு ஏற்புடைய விடைகள் கிடைக்கவில்லை. பகுத்தறிவின் எல்லைகளை உணர்ந்தார். வாழ்வின் பொருளின்மை அவருள் உயிர்துறக்கும் விழைவையே ஏற்படுத்தியது. பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கையே பிறருக்கு வாழ்வின் பொருளை அளிப்பதைக் கண்டார். “கடவுள் என்ற கருத்தாக்கம் கடவுளாகாது. ஒரு கருத்தாக்கம் என்னுள் தோன்றுவது. கடவுள் என்ற கருத்தாக்கம் என் விருப்பப்படி எனக்குள் எழுப்பிக்கொள்ளும் ஒன்று. இதுவன்று நான் தேடுவது. அதுவன்றி வாழ்க்கை இருக்கமுடியாது என்பதான ஒன்றையே நான் தேடுகிறேன்,” என்ற உளப்போராட்டம் அவருள் நிகழ்ந்தது. 

“கடவுளை நாடி வாழ்; கடவுளின்றி வாழ்க்கை இல்லை,” என்ற முடிவுக்கு வந்தார். அவருள் ஓர் ஒளியை உணர்ந்தார். அந்த அறிதலே அவரைத் தற்கொலையிலிருந்து காத்தது என்கிறார். ஆனால் தனது வர்க்கத்தினரின் நம்பிக்கை பகட்டானதாகவும் பொய்யானதாகவும் அவர்களது வாழ்வுக்குத் தேவையற்றதாகவும் அவருக்குத் தோன்றியது. ஏழைகளின் கிறித்தவ நம்பிக்கையே அதுவன்றி வாழ்வில்லை என்னும்படியாக அவர்களது வாழ்வோடு பிணைந்திருந்தது.6

ஆப்டினோ என்ற இடத்திலிருந்த மடாலயத்துக்கு தல்ஸ்தோய் செல்லத் தொடங்கினார். கோகல் (Gogol), தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரும் அந்த மடாலயத்தை நாடிச்சென்றிருக்கின்றனர். தல்ஸ்தோய் தேவாலய வழிபாடுகளில் பங்கெடுக்கத் தொடங்கினார். கிறித்தவ மத நூல்களை ஆழமாகப் பயில்வதில் மூழ்கினார். “எல்லா நற்செய்திகளிலும் (Gospel), மலைப்பொழிவே என்னை மிகவும் ஈர்த்தது. பிறிதெவற்றையும்விட அதையே நான் மீளமீளப் படித்தேன். வேறெங்கும் கிறிஸ்து அத்தனை மாண்புடன் பேசுவதில்லை. வேறெங்கும் இவ்வளவு தெளிவான, புரியும்படியான, எல்லாருக்கும் ஏற்புடைய அறநெறிகளை வழங்குவதில்லை. கிறிஸ்தவத்தில் தெளிவான திடமான நெறிகள் ஏதேனும் இருந்தால், அவை இந்த மலைப்பொழிவிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும். மத்தேயு நற்செய்தியின் அந்த மூன்று அத்தியாயங்களில் எனது ஐயங்களுக்கான தீர்வுகளை நான் நாடினேன்,” என்றார். 5

https://cdni.rbth.com/rbthmedia/images/2019.10/original/5da8303815e9f93dc27ec241.jpg
தல்ஸ்தோய் பண்ணையில் காந்தி

விரைவிலேயே திருச்சபையின் கிறித்தவத்துக்கும் நற்செய்திகளின் கிறித்தவத்துக்குமிடையே இருந்த வேறுபாடுகள் தல்ஸ்தோயை உறுத்தத்தொடங்கின. நிறுவனமாக்கப்பட்ட கிறித்தவத்தையும் விவிலியத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் எளிமை அவருக்குக் கைக்கூடவில்லை. அவருடைய கூர்மதி பல நூற்றாண்டுகளாகப் பலரால் புனையப்பட்ட புனிதத்தைத் துளைத்து மெய்யறிவையே நாடியது; தூய பகுத்தறிவு சார்ந்த வரலாற்று அணுகுமுறையையும் தவிர்த்தார். “எனது வாசகர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். நற்செய்திகளைத் தூய ஆவியிலிருந்து உதித்த புனித மறைநூல்களாக நான் கருதவில்லை. அதேபோல, அவற்றைச் சமய இலக்கியத்தின் வரலாற்றுச் சின்னங்களாகவும் நான் நினைக்கவில்லை. நற்செய்திகள் குறித்த இறையியல் பார்வையையும் வரலாற்றுப் பார்வையையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் இதை முற்றிலும் வேறு கோணத்திலிருந்து அணுகுகிறேன். இறையியல் பார்வையாகட்டும், படித்தவர்கள் மத்தியில் பரவலாக உள்ள வரலாற்றுப் பார்வையாகட்டும், இரண்டு பார்வைகளைக்கொண்டும் எனது நூலை அணுகித் தடம்புரண்டுவிட வேண்டாம் என்று வாசகர்களைக் கோருகிறேன். நான் கிறித்தவத்தைத் தூய திருவெளிப்பாடாகவோ ஒரு வரலாற்றுப் போக்காகவோ கருதவில்லை. வாழ்க்கைக்குப் பொருள் நல்கும் ஒரே அறநெறியாகக் கிறித்தவத்தைக் கருதுகிறேன்,” என்றார்.

“நற்செய்திகளே கிறித்தவ போதனைகளின் தோற்றுவாய். அவற்றில்தான் மெய்யாகவே வாழ்வோரின் வாழ்க்கைக்கு உயிர்ப்பூட்டும் உணர்வுக்கான விளக்கம் கண்டேன். ஆனால் உயிரூட்டும் அத்தூய நீரின் ஓட்டத்தில் சேறும் சகதியும் கலந்துவிட்டிருந்ததை அறிந்தேன். இதுவே என்னை உண்மையான, தூய்மையான நீரைக் காணவிடாமற் செய்தது. உயர்ந்த கிறித்தவக் கட்டளைகளோடு யூத நெறிகளும் திருச்சபையின் போதனைகளும் கலந்துவிட்டன. இவை முன்னதற்கு அந்நியமானவை. எனவே தனக்குக் கிடைத்த ஒரு கழிவுப் பையில் மிகுந்த போராட்டத்துக்கும் கடின உழைப்புக்கும் பிறகு கழிவுகளிடையே எய்தற்கரிய முத்துகள் பலவும் இருப்பதைக் கண்டுபிடித்தவனது இடத்தில் என்னை உணர்ந்தேன்,” என்றார். 8

“நான் இறையியல் கேள்விக்கோ, வரலாற்று வினாவுக்கோ அல்ல, வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு தேட முனைந்தேன். அதனால்தான் இயேசு கிறிஸ்து கடவுளா இல்லையா, தூய ஆவி எவரிடமிருந்து எழும்புகிறது போன்றவற்றில் எனக்கு நாட்டமில்லை. எந்த நற்செய்தியை எவர் எப்போது எழுதினார்கள், இன்னின்ன நீதிக்கதைகளை இயேசுவே கூறினாரா இல்லையா என்பதையெல்லாம் அறிவதும் முக்கியமற்றது; தேவையற்றது. எனது தலையாய அக்கறை இந்த ஒளி குறித்ததுதான் – ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக மனித இனத்தின் மீதும், இன்னமும் என் மீதும் பொழிந்து வந்திருக்கும் இந்த ஒளி,” 8 என்ற சொற்களில் நம்மால் தல்ஸ்தோயை மேலும் அணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 

காந்தியும் மலைப்பொழிவையே விவிலியத்தில் தனக்கு மிகவும் பிடித்த பகுதி என்று குறிப்பிட்டார்.

“பழைய ஏற்பாட்டைப் படித்துப் புரிந்துகொள்ள என்னால் இயலவில்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பத்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால் பைபிளைப் படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள இயலவேண்டும் என்பதற்காக சிரமத்தோடேயே மற்ற பகுதிகளையும் மேலெழுந்தவாரியாகப் படித்து முடித்தேன். அதில் எனக்குக் கொஞ்சமும் சிரத்தை ஏற்படவில்லை. எனக்கு அது விளங்கவும் இல்லை. எண்ணாகமம் என்ற பகுதியைப் படிப்பதற்கே எனக்கு வெறுப்பாக இருந்தது.  ஆனால் புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக் கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ‘தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக்கொண்டுவிட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு’ என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன,” என்று சத்திய சோதனையில் எழுதினார். 9

தல்ஸ்தோய் வந்துசேர்ந்த இடத்துக்குத் தன்னுடைய ஆன்மீகத் தேடலின் போக்கில் தானும் வந்தடைந்ததால்தான் காந்தியைத் தல்ஸ்தோயின் நூல்கள் இத்தனை ஈர்த்திருக்கக்கூடும். 

“’உன்னுள்ளேயே ஆண்டவன் ராஜ்யம்’ என்ற டால்ஸ்டாயின் நூல் என்னைப் பரவசப்படுத்திவிட்டது. அதில் கண்ட கருத்துகள் என் உள்ளத்தில் பலமாகப் பதிந்துவிட்டன. அந்நூலில் கண்ட சுயேச்சையான சிந்தனை, மிகச் சிறந்த ஒழுக்கம், உண்மை ஆகியவற்றின் முன்பு ஸ்ரீ கோட்ஸ் எனக்குக் கொடுத்திருந்த புத்தகங்கள் எல்லாமே ஒளி இழந்து, அற்பமானவைகளாகத் தோன்றின. இவ்விதம் என்னுடைய ஆராய்ச்சி, கிறிஸ்தவ நண்பர்கள் எதிர்பாராத திக்குக்கு என்னைக் கொண்டுபோய்விட்டது,” என்றும், பிறிதோரிடத்தில், “டால்ஸ்டாயின் நூல்களையும் அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’, ‘செய்ய வேண்டியது யாது?’ என்ற நூல்களும் மற்றவைகளும் என் மனதைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்,” என்றும் எழுதினார். 9

(3)

மோசஸின் கட்டளைகளை மிகத் தெளிவாக மறுத்து மலைப்பொழிவின்போது இயேசு ஐந்து கட்டளைகளை வழங்கியிருக்கிறார் என்றும், இருவருடைய கட்டளைகளையும் ஒரே மதம் ஏற்கமுடியாதென்றும் தல்ஸ்தோய் வாதிடுகிறார். ஏற்கனவே நிலவும் அரசியல், சமூக அமைப்புகளைக் காப்பதற்கும், திருச்சபைகளின் இருப்பைத் தக்கவைக்கவும் இயேசுவின் முதன்மையான கட்டளைகள் தவறான பொருளில் கற்பிக்கப்படுகின்றன என்றும் பிற நெறிகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரத்தால் அவை மீறப்படுகின்றன என்ற முடிவுக்கு தல்ஸ்தோய் வந்துசேர்கிறார். மரபான உரைகளையும் விளக்கங்களையும் ஆய்ந்து, அவற்றுள் பலவற்றை மறுத்து, இயேசுவின் கட்டளைகளை விளக்கி ‘நான் நம்புவதென்ன?’ நூலிலும், நான்கு நற்செய்திகளிலிருந்து அவரது மொத்த வாழ்வையும் செய்தியையும் மீளுருவாக்கம் செய்து, ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ நூலிலும் தல்ஸ்தோய் படைக்கிறார். 

உண்மையில், மோசஸின் கட்டளைகளைப் பற்றிப் பேசுகிற அளவுக்கு கிறித்தவ இறையியிலாளர்கள் இயேசுவின் கட்டளைகளைப் பற்றிப் பேசுவதில்லை என்கிறார் தல்ஸ்தோய். மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் சில வாசகங்களை (5.21-48) இயேசுவின் கட்டளைகள் என்று கண்டடைந்ததே தன்னை ஆச்சரியப்படுத்தியது. காரணம், இயேசுவின் கட்டளைகள் இவையென்று எந்தத் தேவாலயத்திலும் கற்பிக்கப்படவில்லை என்கிறார். ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகும் பல உரைகளையும் பிரதிகளையும் ஒப்புநோக்கிய பிறகும், திரிக்கப்பட்டதாக அவர் கருதும் பகுதிகளைத் திருத்தி ஒவ்வொரு கட்டளையையும் வந்தடைகிறார். 5

“‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன். தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.” (மத்தேயு 5.38-40)2 என்ற வாசகங்கள்தாம் கிறித்தவ மெய்மையை அறிவதற்கான திறவுகோலாக அமைந்ததன என்கிறார் தல்ஸ்தோய். அவற்றைக் கிறிஸ்து வெறும் அணிமொழிகளாகக் கூறவில்லை. நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாக, எளிமையான நேரடியான பொருளிலேயே கூறியிருக்கிறார்.

மோசஸின் கட்டளையை நேருக்குநேர் மறுத்து, எந்நிலையிலும் தீமையை வன்முறையால் எதிர்க்காமை (non-resistance) என்பதை மாறாத உண்மையாக தல்ஸ்தோய் கொள்கிறார். அதையே இயேசுவின் முதன்மையான கட்டளையாக (வரிசையில் நான்காவதாக வந்தாலும்) முன்வைக்கிறார். இதைப் பின்பற்றும் போது இன்னல்கள் விளையவே செய்யும், அவற்றையும் பொறுத்தாக வேண்டும்  என்பதையே மறுகன்னத்தைக் காட்டுதல் குறிக்கிறது என்கிறார். இதை நம்மை நாமே வருத்திக்கொள்ள இயேசு சொல்லவில்லை. வேறெவ்வகையிலும் தீமையை எதிர்கொள்ள முடியாது என்கிறார். அரசு, நீதிமன்ற அமைப்பு மூலம் தண்டனை வழங்குவதும் தவறானதே என்றும் காவல்துறை, இராணுவம் என்ற எவையும் தேவையற்றவையே என்றும் தல்ஸ்தோய் கருதுகிறார். 

இயேசுவின் முதல் கட்டளை சினங்கொள்ளாதே என்பது (மத்தேயு 5.21-26). “எல்லாரிடமும் இணைக்கமாக இரு. எப்போதும் உனது சினத்தை நியாயமானது என்று கருதாதே. உனது சகோதரனின் சினத்தைக் காரணமற்றது என்றும் கருதாதே. எவர் உன்னிடம் சினந்திருந்தாலும், காரணமின்றியே சினந்திருந்தாலும், வழிபாட்டுக்கு முன் அவர்களோடு சமாதானமாகிவிடு. உனக்கும் பிறருக்குமிடையேயான எல்லாப் பகையையும் ஒழித்துவிடு. இன்றேல் பகை வளர்ந்து உன்னை அழித்துவிடும்,” என்று இயேசுவின் கட்டளையைத் தன் மொழியில் வழங்குகிறார் தல்ஸ்தோய். மேலும், தன் கடந்தகால வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து, வலியோரிடத்துச் சினங்காப்பதற்கு எளிது, எளியோரிடத்து விரைவில் சினம் கொண்டதாக உணர்கிறார். 

“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்”

என்ற குறளை எதிரொலிக்கும் வரிகளை எழுதுகிறார். 

தல்ஸ்தோய் அளிக்கும் இயேசுவின் இரண்டாவது கட்டளை நவீன மனங்கள் ஏற்கக் கடினமான ஒன்று. பிறன்மனை நோக்கக்கூடாது (மத்தேயு 5.27-32). மணவுறவுக்கு வெளியில் உறவுகொள்ளக்கூடாது. எந்நிலையிலும் மனைவியை மணவிலக்கம் செய்யக்கூடாது என்கிறார். முறையற்ற காமமும் பிறழ் உறவுகளுமே மிக அதிகப் பூசல்களை உலகில் நிகழ்த்தியுள்ளன என்கிறார். பெண் பிறனோடு உறவுகொள்ளும்போது மணவிலக்கம் செய்யலாம் என்று பழைய யூத நெறிகள் அளிக்கும் விதிவிலக்கையும் இயேசு மறுப்பதாக தல்ஸ்தோய் கூறுகிறார். 

மூன்றாவது கட்டளை எந்நிலையிலும் விண்ணுலகின் பெயராலோ மண்ணுலகின் பெயராலோ ஆணையிடக்கூடாது என்பது (மத்தேயு 5.33-37). மேலோட்டமாக இது சாதாரணமான கருத்தாகத் தெரிந்தாலும், தல்ஸ்தோய் இதற்கு ஆழ்ந்த பொருள் கூட்டுகிறார். விவிலியத்தின் பெயராலும் பிற மறைநூல்களின் பெயராலும் நீதிமன்றங்களிலும் அரசாங்கப் பதவியேற்கையிலும் ஆணையிட்டு உறுதிமொழியெடுப்பது பொதுவாக எல்லா இடங்களிலும் நடக்கக்கூடியது. இப்படி ஆணையிடுவதன் மூலமாகத்தான் தேசத்துக்கும் அரசுக்கும் நிறைவனங்களுக்கும் பற்றுடன் இருப்பதாக உறுதிவாங்கப்படுகிறது. இதுவே உண்மைக்குப் புறம்பாக நடக்கவும், அறமீறலுக்கும், பிறர்மீது வன்முறையைச் செலுத்தவும் வகை செய்கிறது. விவிலியத்தின் மீது ஆணையிடும்போதே, ஆணையிடுவதையே தடைசெய்த விவிலியத்திற்கு எதிராகச் செயல்படுகிறீர்கள்; சிலுவையை முத்தமிடும்போதே, ஆணையிடுவதைத் தடைசெய்த கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாலேயே சிலுவை புனிதமானது என்பதை மறந்துவிடுகிறீர்கள் என்கிறார் தல்ஸ்தோய். 

ஐந்தாவது கட்டளையாக இருப்பது ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்’ (மத்தேயு 5.43-48). நுண்ணிய சொல்லாய்வுக்குப் பின்னர், இங்கு பகைவர் என்பது தனிநபர்களைக் குறிக்காது, பகை நாட்டினரைக் குறிக்கும் என்பது தல்ஸ்தோயின் துணிபு. இதையும் போருக்கு எதிரான கட்டளையாகவே தல்ஸ்தோய் முன்வைக்கிறார்.   

காந்தி இக்கட்டளைகளோடு பெருமளவு ஒத்துப்போனார். தேசம் என்ற கட்டமைப்பை ஏற்றுக்கொண்ட போதிலும், மக்களின் நாட்டுப்பற்றைத் திரட்டியே பல்லாண்டுகள் போராடியபோதும், அவரது அன்பு தேச எல்லைகளைக் கடந்ததாக இருந்தது. நாட்டுப்பற்றின் பெயரால் அகிம்சைக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக நடந்துகொண்டது அவர் இங்கிலாந்தின் போர்களில் ஈடுபட்டபோதுதான். அதை முன்னிறுத்தி தல்ஸ்தோய் சீடர்களோடு அவருக்கு விவாதம் நிகழ்ந்திருக்கிறது. 1930ம் ஆண்டு செர்க்காஃப்புடன் (V.Tcherkoff) நடந்த ஒரு கடிதப் பரிமாற்றத்தில், ஒரு கட்டுரையில் போரில் கலந்துகொண்டதை காந்தி நியாயப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி செர்க்காஃப் விளக்கம் கேட்டார். காந்தி தன் நிலைப்பாட்டை இவ்வாறு விளக்குகிறார்:

https://i.pinimg.com/474x/2a/89/d3/2a89d3af97cbeae84684777cfcb79392--lambs-sunshine-quotes.jpg

“எனது நாட்டினருடன் இணைந்து செயலாற்றியது எங்கள் தளைகளை உடைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. அத்தளைகளை உடைத்த பின்னர் என்ன உணர்வோம், எப்படிச் செயல்படுவோம் என்பதை அவர்களோ நானோ இப்போது அறியமுடியாது.

தல்ஸ்தோய் என்னுடைய இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கணிப்பது பலனற்றது. ஐரோப்பாவிலுள்ள எனது நண்பர்களுக்கு நான் ஓர் உறுதியளிக்கிறேன் – எனது எந்தவொரு செயலும் வன்முறையை ஆதரிப்பதாகவோ, எனது கொள்கையில் சமரசம் செய்துகொள்வதாகவோ அமைந்ததில்லை. போயர் போரிலும், ஜூலூ எழுச்சியின்போதும் இங்கிலாந்தின் தரப்பில் நான் பங்காற்றியது வன்முறைக்கு ஏற்பளித்தது போன்ற தோற்றம் தந்தாலும், அது தவிர்க்கமுடியாத ஒரு சூழலை அகிம்சையின் பொருட்டு அங்கீகரித்ததே ஆகும். எனது பலவீனத்தாலும்  உலகப்பொது நெறியான அகிம்சை குறித்த அறியாமையாலும் நான் அவ்வாறு பங்கெடுத்திருக்கக்கூடும். ஆனால் அப்படியான பலவீனமும் அறியாமையும் என்னிடம் இருந்ததாக நான் அப்போது நம்பவில்லை; இப்போதும் நம்பவில்லை. 

ஓர் அகிம்சாவாதி வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அமைப்பில் வேறு வழியின்றி அங்கம்வகிக்கும்போது, மறைமுகமாகப் பங்காற்றுவதைவிட நேரடியாகப் பங்காற்றுவதையே தேர்ந்தெடுப்பான். பகுதியளவேனும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டுள்ள ஓர் உலகைச் சார்ந்துள்ளேன். ராணுவ வீரர்கள் என் அண்டைநாட்டினரைக் கொல்வதற்குப் பணம் கொடுப்பதும், நானே ராணுவ வீரனாக இருப்பதுமே என்முன் உள்ள தெரிவுகள் என்றால், எனது கொள்கைகளின்படி நான் ராணுவத்தில்தான் சேரவேண்டும்; வன்முறைச் சக்திகளைக் கட்டுப்படுத்தி என் தோழர்களையும்கூட மனமாற்றம் புரியமுடியும் என்ற நம்பிக்கையுடன் ராணுவத்தில் சேர்வேன்.

தேசிய விடுதலை என்பது புனைவன்று. தனிமனித விடுதலை அளவுக்கு அதுவும் அவசியமானதே. ஆனால் அவை அகிம்சையின் அடிப்படையில் அமைந்திருந்தால், நாட்டுக்கும் தனிமனிதனுக்கும் சமமான சுதந்திரம் இருப்பது ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இருக்காது. உலகளாவிய விடுதலையும் அவ்வாறே. ‘உனது உடைமையை மற்றவர்களின் உடைமைக்குத் தீங்கு நேராதபடி பயன்படுத்தலாம்’ என்ற சட்டக்கொள்கை அறம் சார்ந்ததாகவும் உள்ளது. பிரபஞ்சம் அணுவில் அடக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அணுவுக்கு ஒரு சட்டம் பிரபஞ்சத்துக்குப் பிறிதொரு சட்டம் என்றில்லை.” 10

இங்கு காந்தி ஒரு புலம்பெயர் சமூகத்தின் தலைவராக, நாட்டின் தலைவராக நடைமுறைச் சிக்கல்களை அங்கீகரித்து, அவை சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பதைக் காணலாம். காந்தி இராணுவம் கூடாதென்ற போதும், காவல்துறை கூடாதென்று அத்தனை உறுதியாகக் கூறவில்லை. சுதந்திர இந்தியாவில் உடனே இராணுவத்தைக் கலைக்கவும் அவர் கோரவில்லை. காஷ்மீரில் பாகிஸ்தானிலிருந்து அப்ரிதி இனக்குழுத் தாக்குதல் நடந்தபோது, இராணுவத்தை அனுப்புவதையும் எதிர்க்கவில்லை. ஆனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியப் படையெடுப்பை அகிம்சை வழியில் எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை ஒதிஸாவில் செய்யத்தொடங்கினார்.  தல்ஸ்தோய் எந்நிலையிலும் இராணுவத்துடன் ஒத்துழைக்கக்கூடாது என்றே கருதினார். எந்த விதமான நாட்டுப்பற்றும் தீங்கானது என்றார். எனினும் அடிமைப்பட்ட நாடுகள் விடுதலை பெறுவதே முதன்மையானது என்பதையும் ஏற்றுக்கொண்டார். இந்தியா அடிமைப்பட்டதன் காரணங்களையும் விடுதலைக்கான வழிமுறைகளையும் ‘ஓர் இந்துவுக்குக் கடிதம்’ என்று தாரக்நாத் தாஸுக்கு எழுதினார். காந்தி அதைப் பதிப்பித்தார். குஜராத்தியிலும் மொழிபெயர்த்தார்.  இதன்பொருட்டே காந்திக்கும் தல்ஸ்தோய்க்குமான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. 

“ஒரு வணிக நிறுவனம் 20 கோடி மக்களைக்கொண்ட நாட்டை அடிமைப்படுத்தியது. மூடநம்பிக்கையற்ற எந்த மனிதனிடமாவது இதைச் சொல்லிப்பாருங்கள் – இச்சொற்களுக்கான பொருளை அவனால் புரிந்துகொள்ளமுடியாது. வெறும் 30000 பேர் – பலசாலிகள் அல்லர்; வலுவற்றவர்கள், சாதாரணமானவர்கள் – துடிப்பும், அறிவும், திறமையும், விடுதலை வேட்கையும் கொண்ட 20 கோடி மக்களை அடிமைகொண்டார்களா? இந்தியர்களை அடிமைப்படுத்தியது ஆங்கிலயர் அல்லர்; இந்தியர்கள் தம்மைத்தாமே அடிமைப்படுத்திவிட்டார்கள் என்பதை இந்த எண்ணிக்கையே நமக்குத் தெரிவிக்கவில்லையா? […]

இந்திய மக்கள் வன்முறையால் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம், அவர்களே வன்முறையால் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான்; மானுடத்தின் உள்ளுறையும் மாறாநெறியான அன்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. […]

மனிதர்கள் தங்கள் உள்ளங்களின் இயல்பான அன்புநெறியின்படி வாழட்டும். அந்நெறியின்படி வன்முறை சார்ந்த எந்த எதிர்ப்பும் கூடாது; வன்முறையில் பங்கேற்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்; இது நடந்தவுடனேயே, நூற்றுவர் பல கோடி மக்களை அடிமை செய்யமுடியாது; பல கோடி மக்கள் இணைந்தாலும் ஒரு தனிமனிதரைக் கூட அடிமைப்படுத்தமுடியாது. தீங்கிழைப்பவரை (வன்முறையால்) எதிர்க்கவேண்டாம் – அப்படி எதிர்க்காமலிருக்கும்போது, நீதிமன்றங்கள், வரிகளை வசூலிப்பது, அனைத்துக்கும் மேல் இராணுவத்தில் ஈடுபடுவது என்று நிர்வாகத்தின் எந்தவிதமான வன்முறைச் செயல்களிலும் பங்கெடுக்கவேண்டாம். உலகில் எவராலும் உங்களை அடிமைப்படுத்த முடியாது,” என்று தல்ஸ்தோய் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.11

எதிர்க்காமை, செயலறு எதிர்ப்பு (passive resistance) ஆகிய சொற்கள் காந்திக்கு உவப்பாக இல்லை. அவற்றுக்கு மாற்றாகவே சத்தியாகிரகம் (truth force or soul force), அகிம்சை (non-violence) போன்ற சொற்களைத் தேர்ந்தெடுத்தார். “செயலறு எதிர்ப்பு என்ற சொற்றொடர் எனக்குப் பிடிக்கவில்லை. நான் நினைப்பதை அது முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. அது ஒரு வழிவகையை விளக்குகிறது. ஆனால் அது சிறு அங்கமாகவே இருக்கும் ஒட்டுமொத்த நெறியை விளக்குவதில்லை. தீமைக்கு எதிராக நன்மையைச் செய்வதில்தான் மெய்யான அழகு உள்ளது; அதுதான் என் குறிக்கோள்,” என்றார்.  

(4)

1884ம் ஆண்டு தல்ஸ்தோய் ‘நாம் நம்புவதென்ன’ நூலை எழுதிமுடித்திருந்தார். தணிக்கைக் குழுக்கள் அதைத் தடைசெய்தன. ஆனால் அவருக்கிருந்த பெரும்புகழால் அந்நூல் பல வடிவங்களில் ரஷ்யாவிலும் உலகின் பலபகுதிகளிலும் படிக்கப்பட்டது. அந்நூலை எழுதியபோது மெனனைட்டுகள், ஹெர்ன்ஹட்டகர்கள், குவாக்கர்கள் போன்ற கிறித்தவப் பிரிவுகள் வன்முறையை முற்றொதுக்கினர் என்பதை அவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை. இந்நூலுக்குப் பிறகு வந்த எதிர்வினைகள் அவருக்கு அப்படியான குறுங்குழுக்களைப் பற்றியும் தனிநபர்களைப் பற்றியும் அறிவதற்கு வாய்ப்பளித்தன. 1893ல் அவர் எழுதிய ‘உம்மிடையே உள்ளது இறையாட்சி’ நூலில் இவர்களைப் பற்றி விரிவாக எழுதினார். முதல் அத்தியாயம் முழுவதுமே எதிர்ப்பின்மையையும் செயலறு எதிர்ப்பையும் முன்னெடுத்தவர்களின் கருத்துகளையும் வரலாறுகளையும் தருகிறார். 

பின்னாளில் குவாக்கர்கள் (Quakers) சிலர் காந்திய இயக்கத்திலும் ஈடுபட்டனர். ஹொரேஸ் அலெக்சேண்டர், அகதா ஹாரிசன், மர்ஜோரி சைக்ஸ், லாரி பேக்கர் போன்றவர்கள் காந்தியுடன் தொடர்பில் வந்தனர்.

வில்லியம் லாய்ட் காரிசன் (William Lloyd Garrison) அமெரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். 1838ம் ஆண்டிலேயே அவர் அமைதி மாநாடு ஒன்றை நடத்தி, தீமையை வன்முறையால் எதிர்க்காமை குறித்த அறிக்கையை வெளியிட்டார். ‘எதிர்க்காமைக் கழகம்’ (Society for non-Resistance) என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ‘எதிர்க்காமை’ என்ற இதழையும் நடத்தினார். ஆனால் இந்த இதழ் அவர்களது கறுப்பின விடுதலை நடவடிக்கைகளுக்கு இடையூறாக மாறலாம் என்று அஞ்சி அதனை நிறுத்திவிட்டனர். 

அடின் பலோவ் (Adin Ballou) ‘எதிர்க்காமையின் விளக்க ஏடு’ ஒன்றை வெளியிட்டார். அரசாங்கத்திலும், தேர்தலிலும், இராணுவத்திலும், நீதிமன்றங்களிலும் பங்கெடுப்பது வன்முறையில் பங்கெடுப்பதற்கு இணையானது என்பதால் அவற்றைத் தவிர்க்கவேண்டும் என்றது அந்த ஏடு. ஐம்பது ஆண்டுகள் பலோவ் தொடர்ந்து எதிர்க்காமை குறித்து எழுதிவந்தார்.

ஜெர்மானியப் பேராசிரியர் ஒருவர் அதுவரை அச்சில் வெளிவராத செக் மொழி நூலைப் பற்றி எழுதினார். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெல்சிட்ஸ்கி என்பவர் ‘நம்பிக்கை வலை’ என்ற அந்நூலை எழுதியிருந்தார். அது தல்ஸ்தோயின் ‘நான் நம்புவதென்ன’ நூலின் கருத்துகளைப் பெருமளவு ஒத்திருந்தது. 

இக்குறிப்புகளையெல்லாம் ஓர் ஆய்வாளருக்குரிய பொறுமையுடனும் சிரத்தையுடனும் தொகுத்து முதல் அத்தியாயத்தில் வழங்கினார் தல்ஸ்தோய். அவரடைந்த முடிவுகளைப் பிறரும் அடைந்திருக்கிறார்கள் என்பதை நிறுவினார். அவருடைய எழுத்துகளைப் போலவே இவையும் பல காலமாக அதிகம் கண்டுகொள்ளப்படாமலே விடப்பட்டிருந்தன. தல்ஸ்தோயுமே முந்தைய நூலை எழுதிய பிறகுதான் அறிந்துகொண்டார். 

காந்தி பலோவின் நூலையும் காரிசனின் வாழ்க்கை வரலாற்றை நூலையும் தேடிப் படித்திருக்கிறார் என்பதற்கான குறிப்புகள் அவரது ஒரு கடிதத்திலும் கட்டுரையிலும் கிடைக்கின்றன. இந்திய சுயராச்சியம் நூலில் காந்தி, “இந்தியாவில் பொதுவாகவே வாழ்வின் எல்லாத் தளங்களிலும் செயலறு எதிர்ப்பைப் பயன்படுத்தியுள்ளனர். எங்களது ஆட்சியாளர்களிடம் மனக்குறை கொள்ளும்போது அவர்களோடு ஒத்துழைப்பதை நிறுத்திவிடுவோம். இதுவே செயலறு எதிர்ப்பு,” என்று எழுதினார். பிறகு இவ்வரிகளைத் தொடர்ந்து சென்ற காந்தியரான தரம்பால் பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை சென்னையிலும் காசியிலும் இந்தியாவின் பிற இடங்களிலும் நடந்த ஒத்துழையாமைப் போராட்டங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்திருக்கிறார். 12

உடலுழைப்பு – சொல்லும் செயலும் ஒன்றென நிறைதல்

ஒருபுறம், தல்ஸ்தோயின் கருத்துகளை ஏற்றும் வலுசேர்த்தும் சான்றளித்தும் வந்த மறுமொழிகள் ‘நான் நம்புவதென்ன’ நூலுக்குக் கிடைத்தபோதும், மறுபுறம் கடுமையான எதிர்வினைகளும் வந்தன. தடைசெய்யப்பட்ட அந்நூலுக்கு வந்த அந்த எதிர்வினைகள் எவையும் ரஷ்யாவில் தணிக்கை செய்யப்படவில்லை என்பதன் நகைமுரணை தல்ஸ்தோய் கவனிக்கத் தவறவில்லை. அப்படியான எதிர்வினைகளையும் இந்நூலில் விரிவாக அலசுகிறார். இருதரப்புகளில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. முதல்தரப்பில் திருச்சபையைப் பின்பற்றும் கிறித்தவர்கள் இருந்தனர். இரண்டாம் தரப்பில் மதச்சார்பற்றவர்களும் இறைமறுப்பாளர்களும் சுதந்திரச் சிந்தனையாளர்களும் தாராளவாதிகளும் முற்போக்காளர்களும் இருந்தனர். தல்ஸ்தோயின் முதன்மையான குற்றச்சாட்டு வன்முறை மூலம் தீமையை எதிர்க்காமை என்ற இயேசுவின் கட்டளையைக் கிறித்தவர்கள் கடைப்பிடிக்காதது குறித்தது. இதற்கு முதல் தரப்பினரின் எதிர்வினைகள் பலவாறாக அமைந்தன:

  1. வன்முறையைப் பயன்படுத்துவது கிறித்தவத்துக்கு எதிரானதன்று.
  2. தீங்கிழைப்பவர்களைத் தடுக்க வன்முறை தேவைப்படுகிறது.
  3. தீங்கிழைப்போரிடமிருந்து அண்டை அயலாரைக் காப்பதற்காக வன்முறை தேவைப்படுகிறது.
  4. இயேசு இக்கட்டளையிட்டது உண்மைதான்; ஆனால் இது அப்படியொன்றும் முதன்மையானதன்று.
  5. இக்கேள்விக்கு வெகுகாலம் முன்னரே பதிலளிக்கப்பட்டுவிட்டது. இதை விவாதித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. 

இவற்றைத் தொகுத்து, அலசி, விரிவான பதில்களை தல்ஸ்தோய் வழங்குகிறார். திருச்சபையின் போதகர்கள் விவிலியத்தின் வேறு கட்டளைகளை மீறுவதை ஆதரிப்பதில்லை. ஆனால் தீமையை எதிர்க்காமைக்கு மட்டும், ‘இதை அப்படியே நேரடிப் பொருளில் எடுத்துக்கொள்ளக்கூடாது. சில சந்தர்ப்பங்களில் இதற்கு நேரெதிராகச் செயல்படவேண்டியிருக்கும். சட்டத்தை நாடியும், எதிர்த்துப் போராடியும் தண்டிக்கவேண்டியும் இருக்கும். இக்கட்டளையை நிறைவேற்றுவது கடினமானது,’ என்று பல்வேறு சமாதானங்களைக் கூறி மழுப்புகிறார்கள். சிறைச்சாலைகள், போர்க்கலங்கள், படைகள், போர்கள் என்று எல்லாமே திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. திருச்சபை போதகர்கள் இக்கட்டளையை மற்ற கட்டளைகளுக்கு இணையானதாகப் பார்க்கவில்லை என்பதே உண்மை. இதனை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கி அதை மறைக்க முயல்கிறார்கள் என்று தல்ஸ்தோய் குற்றம்சாட்டுகிறார். 

இரண்டாம் தரப்பினர், மலைப்பொழிவைப் போன்ற வெகுளியான கொள்கை மனிதர்களை வழிநடத்தமுடியும் என்பதை நம்புவது தல்ஸ்தோய்க்கு இது குறித்து போதிய அறிதல் இன்மையையும், வரலாற்றைப் பற்றிய அறியாமையையும், மலைப்பொழிவைப் பின்பற்ற முயன்று தோல்வியுற்றவர்களின் வரலாற்றைப் பற்றிய அறியாமையும், மாந்தர்குலம் அடைந்துள்ள அறிவியல் வளர்ச்சியையும் பண்பாட்டின் மேன்மையையும் புரிந்துகொள்ளாமையையும் வெளிப்படுத்துகின்றன என்றனர். “கிறிஸ்துவின் கருத்துகள் நமக்குப் பயனற்றவை; தொழிலகக் காலத்துக்கு ஒவ்வாதவை,” என்று இறைமறுப்பாளர் இங்கர்சால் கூறினார். 

இவர்களது வாதங்களையும் தொகுத்துக்கொண்ட தல்ஸ்தோய், “கிறிஸ்துவின் கருத்துகள் பயனற்றவை; ஏனெனில், அவற்றை நடைமுறைப்படுத்தினால், வாழ்க்கை இன்றுபோல் தொடர முடியாது,” என்பதைத்தான் அவர்கள் சொல்லாமற் சொல்கிறார்கள் என்பதாகப் புரிந்துகொண்டார். 

அவர்களைத் தல்ஸ்தோய் இவ்விதம் எதிர்கொள்கிறார்- “சிலர் நன்மை என்று நினைப்பதைப் பிறர் தீமை என்று கருதுகிறார்களே. இப்பூசலை எப்படித் தீர்ப்பது? நான் எதைத் தீமை என்று கருதுகிறேனோ அதுவே தீமை. என் எதிராளி அதை நன்மை என்று நினைத்தால் அது ஒரு பொருட்டல்ல என்பது இச்சிக்கலுக்கான தீர்வன்று. இரண்டே தீர்வுகள்தாம் உள்ளன. ஒன்று, எது தீமை  என்பதை மறுக்கவியலாதபடி வரையறுப்பது. மற்றது, வன்முறையால் தீமையை எதிர்க்காமல் இருப்பது. முதல் வழி வரலாறு தொடங்கிய காலம் முதலே முயன்று பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த வெற்றிகரமான முடிவுகளுக்கும் இட்டுச்செல்லவில்லை. இரண்டாவது வழி – தீமைக்கான உலகளாவிய வரையறையை அடையும்வரை, நாம் தீமையென்று எண்ணுவதை வன்முறையால் எதிர்க்காமல் இருப்பது – அதுவே கிறிஸ்து வழங்கிய தீர்வு.” 

கிறிஸ்துவின் பதில் நமக்கு நிறைவளிக்காது போகலாம். தீமைக்கு உலகளாவிய வரையறைகளை நாம் அடையலாம். ஆனால் இவ்வினாவே இல்லாதது போலவோ, இதற்கு ஏற்கனவே நாம் விடைகண்டுவிட்டது போலவோ நடிக்க முடியாது. திருச்சபையினராகட்டும், சுதந்திரச் சிந்தனை கொண்ட விமர்சகர்களாகட்டும், கிறிஸ்து கற்பித்ததைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அவர் தீர்வுகண்ட வினாவையே இவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிறார் தல்ஸ்தோய். 

“நற்செய்தியின் சிறப்பை ஆத்திகர்களிடமிருந்து திருச்சபையும், நாத்திகர்களிடமிருந்து அறிவியலும் மறைக்கின்றன,” என்று இருதரப்பினரையும் இடித்துரைக்கிறார். 

(5)

இறையாட்சியை மண்ணில் நிகழ்த்தும் பொருட்டு தகர்த்தாக வேண்டிய அமைப்புகள் என்று சிலவற்றைத் தல்ஸ்தோய் அடையாளப்படுத்துகிறார். அவற்றில் தலையாயவை நிறுவனமாக்கப்பட்ட மதம், நாடு, அரசாட்சி, இராணுவம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், தனியுடைமை ஆகியவை. நாமறிந்த வாழ்வை முற்றாக மாற்றியமைக்க வல்ல மாற்றங்கள் இவை. தனியுடைமை இருப்பதால் செல்வந்தர்களைக் காக்கும் பொருட்டு நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் தேவைப்படுகின்றன; இராணுவம் அமைகிறது; இராணுவத்தின் துணைகொண்டு அரசாங்கம் அமைகிறது; அரசு, தேசம் ஆகிய கருத்தாக்கங்களுக்கு மத நிறுவனங்கள் இறை அங்கீகாரம் வழங்குகின்றன. இவைதாம் வன்முறையின் ஊற்றுமுகமாக இருக்கின்றன. 

மதங்களின் துணைகொண்டும் வன்முறையாலும் அரசுகள் எப்படி அதிகாரம் செலுத்தினவோ அதே போல அறிவியலின் துணைகொண்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பதையும் தல்ஸ்தோய் கணிக்கிறார். ஆட்சியாளர்கள் ‘தந்திக் கட்டமைப்பு கொண்ட செங்கிஸ் கான்’ களாவார்கள் என்று அஞ்சுகிறார்- “நம்காலத்தின் அரசாங்கங்கள் – அனைத்து வகை அரசாங்கங்களும், முற்றதிகார அரசாயினும் தாராளவாத அரசாயினும் – ஹெர்சென் மிகச்சரியாகக் கூறியதுபோல தந்தியுடைய செங்கிஸ் கான் ஆகிவிட்டன; இவை கொடுங்கோன்மையன்றிப் பிறிதொரு கொள்கையில்லாத வன்முறை அமைப்புகள்; அதே வேளையில் சுதந்திரமான சமத்துவமான மனிதர்களின் அமைதியான கூட்டுச் சமூக நடவடிக்கைகளுக்காக அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை கருவிகளையும் தங்கள் குடிகளை அடிமைப்படுத்தவும் ஒடுக்கவும் பயன்படுத்துகின்றன.” மேலும் 125 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் அரசு அடக்குமுறைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்புகுறித்த தல்ஸ்தோயின் அச்சம் இன்று மேலும் பேருருவெடுத்திருக்கிறது. 

“தேசங்களாகவே இதுவரை எல்லா நாடுகளும் வளர்ச்சியடைந்திருப்பதால், இந்த அமைப்பு மனித குலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஏற்பாடு என்று மக்கள் நம்புகிறார்கள்; இது முழுவதும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது போலவும், வேறு சான்றே தேவையில்லை என்பதுபோலும் திடமாக நம்புகிறார்கள்,” என்று தேசம் என்ற கருத்தாக்கத்தையே உடைக்க முயல்கிறார். வேறு கட்டுரைகளிலும், நாட்டுப்பற்றில் நல்லது தீயது என்ற ஏதுமில்லை; எல்லா நாட்டுப்பற்றும் தீயதுதான்; நாட்டுப்பற்றே எல்லாப் போர்களையும் வன்முறையையும் நியாயப்படுத்துவதற்கு உதவியுள்ளது என்று சாடுகிறார். 13

படை வீரர்களின் எண்ணிக்கை இன்று பல கோடிகளை எட்டியுள்ளதன் காரணம் படைகள்கொண்டு அண்டை நாடுகளிடமிருந்து தற்காப்பதற்காக மட்டுமன்று; குடிகளின் புரட்சி எழுந்தால் அப்புரட்சியை அடக்குவதே படைகளின் முதன்மைப் பணி என்பதைப் பலவாறாகக் கூறுகிறார். 

https://www.tolstoytherapy.com/wp-content/uploads/2012/08/11.gif

“அரசுகள் அமைந்ததே தனிநபர்களுக்கிடையிலான பூசல்களின் கொடுமையிலிருந்து மனிதர்களுக்கு விடுதலை அளித்து, நிலையான அரசுமுறைமையால் பாதுகாப்பளிப்பதற்குத்தான். ஆனால், அவை அதைச் செய்யாமல், தனிமனிதர்களைப் பூசல்களுக்கு மீண்டும் உட்படுத்துகின்றன; தனிமனிதப் பூசல்களுக்குப் பதிலாக அண்டை நாடுகளுடனான போர்களைப் பதிலீடு செய்கின்றன. தனிமனிதனுக்கும் நாட்டுக்குமேகூட அழிவும் பாதிப்புகளும் ஏற்படக்கூடுமென்ற ஆபத்து அப்படியே விடப்படுகிறது,” என்றும் பொருமுகிறார். அதிலும் குறிப்பாக, அப்போது ஐரோப்பாவில் பரவலாக இருந்த கட்டாய இராணுவப் பணியை மிகக்கடுமையாகக் கடிந்து எழுதுகிறார்.  

நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் எக்காரணத்துக்காக இயங்குகின்றனவோ அதற்கு முற்றிலும் மாறான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. குற்றம் புரிந்தவர்களைத் திருத்துவதற்கும் உளமாற்றம் நிகழ்த்துவதற்கும் மாறாக தண்டிக்க மட்டுமே செய்கின்றன என்கிறார். புத்துயிர்ப்பு (Resurrection) நாவலில் இச்சிக்கலை மிக விரிவாக எடுத்தாண்டிருப்பார். 

அறிவியலை அரசுகள் தம் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளவும் தற்காத்துக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்வது போலவே, அரசுகளின் தேவையை அகற்ற மக்களும் பயன்படுத்தலாம் என்று மறுமுனையில் நின்றும் எண்ணினார். “ஒரு காலத்தில் மக்கள் மிகவும் சிதறியிருந்தபோது தகவல்களையும் எண்ணங்களையும் பரிமாறிக்கொள்ள அவர்களுக்கு எந்த வழிவகைகளும் இல்லை; அரசு என்ற அமைப்பு மையத்தில் இல்லாமல் வணிகம், பொருளாதாரம், கல்வி போன்ற எத்துறையிலும் ஒன்றிணைந்து ஒத்துழைக்கவும், பொதுச் செயல்பாடுகளுக்கு உடன்படவும் அவர்களால் இயலவில்லை. இணைந்து செயலாற்ற இயலாத நிலை இப்போது இல்லை. தகவல்தொடர்புக்கும் சிந்தனைப் பரிமாற்றத்துக்குமான வழிவகைகள் பெரிதும் விரிவடைந்துள்ளதால், அறிவியல் பொருளாதார அரசியல் நோக்கங்களுக்காக சங்கங்கள், கழகங்கள், குழுமங்கள், நிறுவனங்கள், மாநாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கு அரசுகளின் உதவிக்கான தேவையை மக்களால் முற்றிலும் உதற முடிந்திருக்கிறது. உண்மையில், இந்நோக்கங்களை அடைய அரசாங்கங்கள் உதவியாக இருப்பதைவிடப் பெரும்பாலும் தடையாகவே இருக்கின்றன,” என்றார்.

“கிறித்தவம் அரசாட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்,” என்கிறார் தல்ஸ்தோய். “தொடக்கத்தில் அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்பட்டது. அதனால்தான் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். கிறித்தவ அரசுகளை நியாயப்படுத்தத் தேவையற்ற எல்லோராலும் அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்பட்டது. புறவயமாகப் பெயரளவிலான கிறித்தவத்தை அரசுகளின் தலைவர்கள் தரிக்கத் தொடங்கிய போதிருந்துதான், அரசாட்சியைக் கிறித்தவத்துக்கு ஏற்புடையதாக நிறுவும் பல வஞ்சகமான கோட்பாடுகளை உருவாக்கத் தொடங்கினர். ஆனால் பணிவு, தீமையை மன்னித்தல், அன்பு ஆகியவற்றை நெறிகளாகக் கொண்ட உண்மையான கிறித்தவமும், பகட்டும், வன்முறையும், கொலைத் தண்டனைகளும், போர்களும் நிறைந்த அரசுகளும் ஒருபோதும் பொருந்த முடியாது என்பதைக் காண்பதை நம் காலத்தின் எந்தவொரு நேர்மையான தீவிர சிந்தனையுடைய மனிதரும் தவிர்க்கவியலாது. உண்மையான கிறித்தவத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறினால், அரசாட்சியை அங்கீகரிப்பதே சாத்தியமில்லை; மேலும், கிறித்தவம் அரசாட்சியின் அடித்தளத்தையே அழிக்கிறது.”  

“அப்படி கிறித்தவமும் அரசாட்சியும் இயைந்துபோக முடியாது என்பது சரியென்றால், இயல்பாகவே அடுத்த கேள்வி எழுகிறது: மானுட நன்மைக்கு எது தேவையானது – அரசாட்சியா கிறித்தவமா? எதன்மூலம் மாந்தரின் மகிழ்ச்சி மிகும் – அரசாங்க அமைப்புகளைத் தக்கவைப்பதன் மூலமாகவா அவற்றை அழித்து கிறித்தவத்தை ஏற்பதன் மூலமாகவா?” என்ற வினவுகிறார். கிறித்தவத்துக்கு ஆதரவாக விடைகாணவும் செய்கிறார். 

(6)

தேசம் குறித்த கருத்துகளில் தல்ஸ்தோய்க்கும் காந்திக்கும் பல ஒற்றுமைகளும், குறிப்பிடத்தக்க வேற்றுமைகளும் இருந்தன. நாடு என்ற அமைப்பை காந்தி முற்றிலும் மறுக்கவில்லை. இந்தியா என்ற பெரும் நாடு உருவாவதில் அவரது பங்கு முதன்மையானது. ஆனால் பிற தேசியவாதிகளிடமிருந்தும் அவரை விலக்கிக்காட்டும் பல கருத்துகளையும் கொண்டிருந்தார். 

காந்தி தனது தேசபக்தி பிரித்தானியர்களுக்குப் பதிலாக இந்திய மன்னர்களின் காலடியில் மக்கள் நசுக்கப்படுவதை அனுமதிக்காது; தேசபக்தி என்ற சொல்லின் மூலம் அனைத்து மக்களின் நலனையுமே கருத்தில்கொள்வதாகவும் ஆங்கிலேயர்கள் மூலமாக அப்படியொரு நலம் விளைந்தால், அவர்களுக்குத் தலை வணங்கத் தயார் என்றும் சொன்னார். முற்றதிகாரத்தை எதிர்த்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து இந்நிலத்துக்காகப் பாடுபடும் எந்த ஆங்கிலேயனையும் இந்தியனாக ஏற்று வரவேற்கத் தயார் என்று அறிவித்தார். 14

அதிகாரம் மையத்தில் குவியக்கூடாது. பரவலாக்கப்படவேண்டும். கிராமங்கள் தன்னாட்சி பெறவேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட்ட அமைப்பைக் காக்க வன்முறை தேவையில்லை. ஹிட்லரே விரும்பினாலும் ஒரு இலட்சம் கிராமங்களை அழிக்கமுடியாது. “ஒரு கிராமத்தானாக இருப்பதால், கிராமங்களின் நிலை எனக்குத் தெரியும். கிராமப் பொருளாதாரம் எனக்குத் தெரியும். மேலிருந்து வரும் அழுத்தம் கீழே உள்ளவர்களை நசுக்கிவிடுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்கள் முதுகுகளிலிருந்து இறங்குவதுதான்,” என்றார் காந்தி. இதில் கடைசி வரி அவர் தல்ஸ்தோயிடமிருந்து பெற்றது. அதைப் பல இடங்களில் மேற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார். “நம் அண்டை அயலாரின் முதுகளிலிருந்து இறங்கிவிட்டாலே நம்மிடமிருந்து வேறெந்த உதவியும் பெறாமலே உலகம் சரியாகிவிடும் என்று தல்ஸ்தோய் ஒருமுறை கூறினார்.”15

“உலக நலனுக்காக நாடு மடிவது தேவையெனில் அப்படி மடிவதற்காக முதலில் நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது – மனித இனம் வாழ்வதற்குத் தேவையெனில் நாடு முழுமையும் மடியட்டும். இன வெறுப்புக்கு இங்கு இடமே கிடையாது. அதுவே நம் தேசியமாக இருக்கட்டும்,” என்றார். “நம் சேவைகளை தேச எல்லைகளைக் கடந்து வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. கடவுள் இந்த எல்லைகளை உருவாக்கவில்லை,” என்ற முக்கியமான கருத்தையும் தெரிவித்தார். “அகிம்சை முறையில் தனது சுதந்திரத்தையும் காத்து, அதன் மூலமாக தனது நாட்டின் சுதந்திரத்தையும், இறுதியில் உலக மக்கள் அனைவரின் சுதந்திரத்தையும் காப்பவனே உண்மையான ஜனநாயகவாதி,” என்று ஒரு ஜனநாயக தேசியத்துக்கான வரையறையை காந்தி தந்தார்.14

(7)

தல்ஸ்தோய் கிறித்தவர்களின் அடிப்படை நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துகிறார். திரித்துவத்தையும் (Trinity), இயேசு ஆண்டவனின் மகன் என்பதையும், திருத்தூதர்களில் தூய ஆவி செயலாற்றுதலையும், திருவெளிப்பாடுகளையும் (Revelations), அற்புதச் செயல்களையும், உயிர்த்தெழுதலையும் புறம்தள்ளுகிறார் தல்ஸ்தோய். திருச்சபைகளை கிறிஸ்து நிறுவவில்லை என்றும், தங்களின் இருப்பை நியாயப்படுத்தவும் தக்கவைக்கவும் திருச்சபைகள் கிறித்தவத்தைத் திரித்துவிட்டனர் என்றும் கூறுகிறார். காட்ஃபிரைட் ஆர்னால்ட் (Gottfried Arnold) என்பவர் 1729ல் எழுதிய அதிகம் அறியப்படாத ஒரு நூலைப் பற்றி தல்ஸ்தோய் குறிப்பிடுகிறார். அது சமய நிந்தனைகளின் வரலாற்றைச் சொல்வதன் மூலமாக கிறித்தவத்தின் வரலாற்றை எழுத முயன்ற நூல் என்கிறார்.

“சரியான காரணத்துடனேயே வால்டேர் திருச்சபை இகழ்பெற்றது என்கிறார்: […] சரியான காரணத்துடனேயே திருச்சபையின் வரலாறு மிகப்பெரும் கொடுமைகள் பயங்கரங்கள் ஆகியவற்றின் வரலாறாக உள்ளது,” என்றார். ”திருச்சபை ஒரு கிறித்தவ நிறுவனம் என்ற தவறான பார்வையும் சமய நிந்தனை மீது வெறுப்பும் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்ட நமக்கு இது விந்தையாகத்தான் தோன்றும். சமய நிந்தனை என்று எது அழைக்கப்பட்டதோ அதில்தான் உண்மையான நகர்வு இருந்தது; அதாவது, அதில் உண்மையான கிறித்தவம் இருந்தது; அச்சமய நிந்தனைகள் தம் நகர்வை நிறுத்திவிட்டு தாமும் வேறு நிலையான திருச்சபைகளாக மாறி இறுகியபோது அவையும் உண்மையான கிறித்தவமாக நீடிக்காமற் போயின.”

ஏதேனும் மதச்சின்னங்களையோ சிலைகளையோ திருச்சபையையோ குறைகூறினால் சமயநிந்தனை புரிவதாகச் சொல்லிக் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்வார்கள். ஆனால், கிறிஸ்துவின் முதன்மையான கட்டளையான தீமையை எதிர்க்காமையைப் பழித்தும் பகடிசெய்தும் பேசினால் திருச்சபையினர் எதிர்ப்பதில்லை; ஊக்குவிக்கவும்கூடச் செய்கிறனர் என்பதில் உள்ள அவலமுரணைச் சுட்டிக்காட்டுகிறார். 

“மனிதன் தனது மதத்தைத் தவிர வேறு எந்த மாற்று மதத்தினரையும் பார்க்காமலிருந்தது வரை எல்லாம் சரிதான்; தனது மதம்தான் ஒரே உண்மையான வடிவம் என்று நம்பியிருந்தான். ஆனால் இப்போது தொடர்ந்து நடப்பதுபோல, சிந்திக்கும் திறனுள்ள எந்தவொரு மனிதனும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களோடு – தம்மளவே நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் இருப்பவர்களோடு – தொடர்புக்கு வந்தால், தனது நம்பிக்கையின் உண்மைத்தன்மையை ஐயமுறத் தொடங்கிவிடுவான். இந்நாட்களில், முழு அறியாமையிலுள்ள ஒரு மனிதனோ, சமயம் தேரும் வினாக்களில் துளியும் ஆர்வமில்லாதவனோதான் திருச்சபையில் நம்பிக்கையுடையவனாக இருக்கமுடியும்,” என்று தயங்காமல் கூறுகிறார்.

குழந்தைகளை ஏமாற்றுவதுதான் திருச்சபைகளின் பணிகளிலேயே மிக மோசமானது என்கிறார் தல்ஸ்தோய். தாங்களே நம்பாத கதைகளை எல்லாம் குழந்தைகளிடம் விதைத்துவிடுகிறார்கள். அதுவே குழந்தைகளின் இயல்போடு கலந்துவிடுகிறது. வாழ்வின் முதன்மையான மெய்ப்பொருளைப் பற்றியும் ஏமாற்றிவிடுகிறார்கள். பிறகு அவர்கள் வளரும்போது நடைமுறை உண்மைகளும் அறிவியலும் அவர்களுக்குத் தெரியவரும்போது, அவற்றுக்கும் தங்கள் நம்பிக்கைகளுக்கும் உள்ள முரண்களைக் களைவதற்குத் தடுமாறுகிறார்கள். 

“திருச்சபை மக்களை அறிதுயிலில் ஆழ்த்துவதையும், குழந்தைகளை ஏமாற்றுவதையும் சிறு பொழுதுக்கேனும் நிறுத்தட்டும்; மனிதர்கள் உடனே கிறிஸ்து கற்பித்ததைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் அப்படிப் புரிந்துகொள்ளும்போது, அதுவே திருச்சபைகளின் இறுதியாகவும் அவற்றின் ஆதிக்கத்தின் முடிவாகவும் அமைந்துவிடும். எனவே திருச்சபைகள் ஒரு நொடிப்பொழுதும் வளர்ந்தவர்களை அறிதுயிலில் ஆழ்த்தும், குழந்தைகளை ஏமாற்றும் தொழிலில் காட்டும் ஊக்கத்தைத் தளரவிட மாட்டார்கள். மனிதர்களிடம் கிறிஸ்துவின் போதனைகளைப் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தி, நம்பிக்கையுள்ளவர்கள் என்றறியப்படுபவர்களில் பெரும்பாலானவர்களிடம் மெய்யான புரிதல் ஏற்பாடாமல் தடுப்பதுதான் திருச்சபைகளின் பணி,” என்று தல்ஸ்தோய் திருச்சபைகள் மீதான தாக்குதலைத் தொடர்கிறார். உலகின் எல்லா மதங்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் அவர் சொல்வது பொருந்தும் என்பது வெளிப்படை. 

மெய்யான கிறித்தவத்தைப் பற்றிய தவறான புரிதலுக்குத் திருச்சபைகள் ஒரு காரணமெனில், மதத்தைப் பற்றிய அறிவியலின் பிழையான புரிதலை மறுகாரணமாகக் காண்கிறார் தல்ஸ்தோய்.  “முதலாவதாக, அறிவியல் கற்பனை செய்வதுபோல, மதம் என்பது ஒருகாலத்தில் மானுட வளர்ச்சியோடு ஒத்தமைந்து பின்னர் பின்தங்கிவிட்ட ஒரு நெறிமுறை அன்று. அது எப்போதும் மானுட வாழ்வில் உட்பொதிந்த நெறிமுறை; எப்போதும்போல் இப்போதும் அது மானுடத்துட் பொதிந்தே உள்ளது; நீக்க முடியாததாகவே உள்ளது. இரண்டாவதாக, மதக் கோட்பாடுகளும் வழக்கங்களும் எதிர்காலத்துக்குரியவை; கடந்தகாலத்தைச் சேர்ந்தவை அல்ல; எனவே, கடந்தகால நெறிமுறைகளை ஆராய்வதன் மூலம் மதத்தின் சாரத்தை உள்வாங்க இயலாது என்பது தெளிவாகிறது,” என்கிறார். 

“தாழ்நிலைப் புரிதலில் உள்ளவர்கள் உயர்நிலையில் உள்ள கருத்துகளோடு தொடர்புக்கு வரும்போது, அவற்றைப் புரிந்துகொள்ள முயலாமல், அப்பொருளைக் காண்பதற்கேற்ற நோக்குநிலைக்குத் தங்களை உயர்த்தாமல், தங்கள் தாழ்நிலையில் இருந்தே அதை எடைபோடுகின்றனர்; எந்த அளவுக்குத் தாங்கள் பேசுவதைப் பற்றிக் குறைவாகப் புரிந்துகொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அதைக் குறித்த தீர்ப்புகளை உறுதியுடனும் தயக்கமின்றியும் வழங்குகிறார்கள்,” என்றும் சொல்கிறார். 

தல்ஸ்தோய் திருச்சபையோடும் அறிவியலாளர்களோடும் ஒரே நேரத்தில் வாதிடுகிறார். இவரை எந்தக் குப்பியிலும் அடைத்துப் புரிந்துகொள்வது கடினம்தான். தல்ஸ்தோயின் கடவுள் எத்தகையவர் என்று வகுப்பதும் எளிதான செயலாக இல்லை. 

காந்தி உண்மையே கடவுள் என்பார். தல்ஸ்தோய் அன்பே கடவுள் என்கிறார். காந்திக்கு வீடுபேறிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை இருந்தது. தல்ஸ்தோய் அவற்றை நிராகரித்தார். தல்ஸ்தோய் ஓர் இந்துவுக்குக் கடிதத்தில் மறுபிறப்புக் கொள்கையை மறுத்து எழுதியவற்றை, தான் அக்கடிதத்தைப் பதிப்பிக்கும்போது நீக்கிவிட அனுமதி கோரி அவருக்கு எழுதிய மடலில் காந்தி விண்ணப்பித்திருந்தார். “மறுபிறப்பைப் பொறுத்தவரை, என்னளவில் நான் எதையும் விடமாட்டேன். நிலைபெற்ற ஆன்மா மீதான நம்பிக்கை, புனித மெய்மை மீதும் அன்பு மீதுமான மீதான நம்பிக்கை ஆகியவை அளவுக்கு மனிதர்களிடம் மறுபிறப்பு குறித்த நம்பிக்கை ஒருபோதும் அழமான வேர் பிடித்து அவர்களைக் கட்டுப்படுத்த இயலாது. எனினும், நீங்கள் விரும்பினால் அந்தப் பத்திகளை நீக்கிக்கொள்ள உங்களுக்காக ஒப்புக்கொள்கிறேன்,” என்று பதிலிறுத்தார். இக்கூற்றிலும் தனது நம்பிக்கையைப் பற்றி அவர் சொல்லவில்லை. மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கை குறித்தே பேசுகிறார். 

இந்திய, சீன, யூத, கிரேக்க, ரோமானியத் தத்துவங்கள் என்று எல்லா சமயங்களாலும் அன்புநெறி இயம்பப்பட்டிருக்கிறது. ஆனால் கிறிஸ்துதான் அதை மிகத்தெளிவாக வெளிப்படுத்தினார். உலகியல் நன்மைகளுக்காகவே மக்கள் வாழ்வது இயல்பானது. அந்த நன்மைகளை வன்முறையால் காக்க அனுமதிப்பது ஆபத்தானது. அன்பு வன்முறைக்குத் துணையாக முடியாது என்பதை இயேசு உறுதியாக அறிந்திருந்தார். எனவேதான் எந்நிலையிலும் வன்முறையை அனுமதிப்பதை அவர் ஏற்கவில்லை என்று காந்திக்கு தல்ஸ்தோய் எழுதிய இறுதிக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். 

காந்திக்கு வழிபாட்டில் நம்பிக்கை இருந்தது. கூட்டு வழிபாட்டின் மூலமும் அப்போது அவர் ஆற்றிய உரைகள் மூலமும் அவரது இயக்கத்துக்குப் பெரும் வலிமை சேர்த்தார். இந்நூல்களைப் படிக்கும்போது தல்ஸ்தோய்க்கு வழிபாட்டிலும் நம்பிக்கை இருந்ததாகத் தோன்றவில்லை. தேவாலயங்களின் வழிபாட்டுப் பாடல்களையுமே இடித்துரைக்கவே செய்கிறார். தல்ஸ்தோய் கடவுளிடம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் உட்பட்டே அவரது நம்பிக்கை இயங்குகிறது. கடவுளின் குரல் கேட்டதாகவோ கடவுள் தண்டிப்பார் என்றோ மன்னிப்பார் என்றோ அரவணைப்பார் என்றோ எதுவுமே சொல்வதில்லை. கடவுளின் குரலாக மனிதர்களிடம் இருப்பது அவர்களது மனச்சான்றும் அன்பும் மட்டுமே. தல்ஸ்தோய்க்கும் கடவுளுக்குமான உறவு முழுக்க முழுக்க எதிர்பார்ப்புகளற்ற ஒன்றாக உள்ளது. 

தல்ஸ்தோயின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கையைவிட மானுடம் தழுவிய அன்புநெறியை நிலைநாட்ட கடவுளின் தேவையை அவர் உரைக்கும் விதம் சுவையானது. 

ஒரு மனிதன் தன்னைத்தான் விரும்புவது, தன் குடியின்மீதும் இனத்தின் மீதும் அன்புசெலுத்துவதும் பொதுவாக நிகழ்வதே. தன் மதத்தினர் மீதும் தன் மொழியினர் மீதும் அன்புகொள்ளுதலும் இயல்வதே. ஆனால் துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷ்யா என்று ஒரு நாட்டின் மீது அன்பு கொள்ளுதல் – அது கிட்டத்தட்ட இயலாத ஒன்று. மிகுந்த முனைப்புடன் இது வளர்க்கப்படுகிறதெனினும், இது ஒரு கற்பனையான உணர்வுதான்; நிதர்சனத்தில் அதற்கு இடமில்லை என்கிறார் தல்ஸ்தோய். “மானுடம்! மானுடத்தின் வரையறை என்ன? எங்கே தொடங்கி எங்கே முடிகிறது? காட்டாள், முட்டாள், குடிவெறியன், பித்தன் போன்றோருடன் மானுடம் முடிகிறதா? கீழ்மக்களை மானுடத்திலிருந்து விலக்கிவிட்டால் எங்கே கோடு போடுவது? அமெரிக்கர்கள் போல கறுப்பினத்தவரையும், சில ஆங்கிலேயர் போல இந்துக்களையும், வேறு சிலரைப் போல யூதர்களையும் விலக்கலாமா? எல்லா மனிதர்களையும் எந்த விலக்கும் இல்லாமல் சேர்த்துக்கொண்டால், உயர்விலங்குகளையும் சேர்க்கலாகாதா – அவற்றில் பலவும் மனித இனத்தின் கீழானவர்களைவிட உயர்வானவைதாமே?” என்று மானுடத்தை விரும்புகிறவன் உண்மையில் யார்யாரை விரும்புவான் என்ற ஐயத்தை எழுப்புகிறார். மானுடம் என்ற திண்ணமான கருத்தாக்கம் ஒன்றில்லை. மானுடத்தை விரும்புவது அற்புதமானது; ஆனால் அது ஒருபோதும் சாத்தியமாகாது. ஏனெனில் வாழ்க்கை குறித்த தனிமனிதப் பார்வையோ சமூகப் பார்வையோ தேசத்தைத் தாண்டி உயர்வதில்லை என்கிறார்.

“கிறித்தவக் கோட்பாடு மனிதனுக்கு அவனது ஆன்மாவின் சாரம் அன்பே என்பதைக் காட்டுகிறது – அவனது மகிழ்ச்சி இப்பொருளையோ அப்பொருளையோ நேசிப்பதைச் சார்ந்திருப்பதில்லை; முழுமையை – கடவுளை – நேசிப்பதைச் சார்ந்துள்ளது. கடவுளையே அவன் தனக்குள் அன்பென்று உணர்கிறான்; எனவே எல்லாப் பொருள்களையும் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறான்,” என்று இறைவனின் இருப்புக்கும் தேவைக்கும் புதிய பொருள் கற்பிக்கிறார். உட்கலந்த சோதியை, என்னிலே இருந்தஒன்றை (அன்பென்று) யானறிந்து கொண்டபின் மானுடத்தை நேசிக்க முடியும்; வாடிய பயிரைக் கண்டும் வாடலாம் என்று தமிழ்ச்சித்தர் சொற்களில் தல்ஸ்தோயைக் காணலாம். 

(8)

தல்ஸ்தோயின் கிறித்தவம் மனித வாழ்க்கைமுறையைப் புரட்டிப் போடக்கூடிய அடிப்படை மாற்றங்களைக் கோருகிறது. பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொண்டிருந்த அறக் கொள்களைகளுக்கு முற்றிலும் எதிரானதாக அடிமைமுறை இருந்தது; எனினும் இருவரும் அதை நோக்கவில்லை. ஏனெனில் அடிமைமுறையை ஒழிப்பதென்பது அவர்கள் வாழ்ந்துவந்த வாழ்க்கைமுறையைச் சிதைக்கவல்லது. அதையே நாம் நவீன உலகிலும் காண்கிறோம். நம் காலத்தில் பாட்டாளி வர்க்கத்தினரின் நிலை பண்டைய காலத்தில் போரில் வெற்றிகொள்ளப்பட்ட அடிமைகளின் நிலையைவிட மேலானதாக இல்லை என்றார் தல்ஸ்தோய். ஆனால் அன்றைக்கு அடிமைகள் தங்களை அடிமைகள் என்றும், மன்னர்கள் இறைவழி வந்தவர்கள் என்றும் இது ஆண்டவன் ஆணை என்றும் அறத்தாறு இதுவென்றும் கருதினர். 

“இன்றைய மனிதன் சகோதரத்துவம், மானுடம், நீதி, அறிவியல் என்ற கொள்கைகளை ஆதரித்துவிட்டு, பாட்டாளி மக்களின் ஒடுக்குமுறையைச் சார்ந்தே வாழ்கிறான்; இதை அவனே கண்டிக்கவும் செய்கிறான்; எனினும் அவனது முழு வாழ்வும் இந்த ஒடுக்குமுறையால் கிடைத்த ஆதாயங்களாலேயே அமைந்துள்ளது. மேலும் அவனது நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான இதே நிலையைப் பேணுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறான்.”

“வரலாற்றின் உண்மைகளை நினைவுகூர்வோம் – பல்வேறு அரசவழியினரின் வரலாற்றையன்று. மெய்யான வரலாற்றை, பெரும்பான்மையினரை மிகச்சிலர் ஒடுக்கிய வரலாற்றை – ஏழைகளோடு ஒப்புநோக்க, செல்வந்தர்களிடமிருந்த அனுகூலங்கள் என்பவை சாட்டையடியையும், சிறைப்படுத்தலையும், கொலையையும் சார்ந்திருந்தவைதாம்.”

“இன்று ஒருவரது கருத்துகளும் கல்விநிலையும் என்னவாக இருந்தாலும், அவரது தாராளவாதத்தின் நிறம் என்னவாக இருந்தாலும், மெய்யியலோ அறிவியலோ பொருளாதாரமோ எந்தச் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்திருந்தாலும், எத்தனை அறியாமையுடனும் மூடநம்பிக்கையுடனும் இருந்தாலும், வாழ்வுக்கும் வாழ்வின் நல்லவை அனைத்துக்கும் எல்லாருக்கும் சம உரிமை இருக்கின்றதென்றும் மக்களில் ஒரு தரப்பினர் மறுதரப்பினரைவிட மேலானவரோ கீழானவரோ அல்லர் என்றும் எல்லாரும் ஒன்றே என்றும் ஒவ்வொருவருக்கும் தெரியும். எல்லாரும் இதை ஐயம்திரிபற அறிவார்கள்; எல்லாரும் இதைத் தங்கள் உடலுயிராலும் உணர்கிறார்கள். எனினும் அதே வேளையில் தம்மைச் சுற்றிலும் மனிதர்கள் இரண்டு சாதிகளாகப் பிரிந்திருப்பதைக் காண்கிறார்கள் – உழைத்தும், ஒடுக்கப்பட்டும், ஏழ்மையில் உழன்றும், அல்லற்பட்டும் ஒரு சாதி; ஒடுக்கியும், செல்வச்செழிப்பில் திளைத்தும், ஊதாரிகளாகவும் மறு சாதி. இதைக் காண்பதோடு மட்டுமல்லாமல், தாமாக விரும்பியோ வலிந்தோ, ஏதேனும் வகையில் ஒவ்வொருவரும் தம் மனச்சான்று கடிந்துகொள்ளும் இந்தப் பாகுபாட்டைப் பேணுவதில் பங்கெடுக்கின்றனர். இந்த முரண் பற்றிய உணர்வினாலும் அதைப் பேணுவதில் இருக்கும் தமது பங்கினாலும் ஒவ்வொருவரும் அல்லற்படுகின்றனர். ஆண்டையோ அடிமையோ, இன்றைய மனிதர் தமது மனச்சான்றுக்கும் உண்மை வாழ்வுக்கும் இடையே உள்ள இடர்ப்படுத்தும் மாறுபாட்டை எப்போதும் உணர்ந்துகொண்டிருப்பதைத் தவிர்க்கவியலாது,” என்கிறார்.  

https://cdni.rbth.com/rbthmedia/images/2017.12/article/5a410c7115e9f942cb314d9d.jpg

இத்தகைய துயரத்திலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, மனச்சான்றை மழுங்கடிப்பது; ஆனால் மனச்சான்றை மழுங்கடிப்பதில் வெற்றிபெறுபவர்களும் தங்கள் அச்சங்களை வெல்லமுடிவதில்லை. அச்சத்தாலும் வெறுப்பாலும் நிறைந்துவிடுகிறார்கள். உழைக்கும் மக்களும் தாங்கள் உறிஞ்சப்படுகிறோம் என்றறிவார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியும். செல்வர் தம் செல்வத்தைப் பண்டைய மனிதர்கள் போல உரிமையுணர்வுடன் அனுபவிக்க முடியாது. உளச்சான்றின் உறுத்தல்களாலோ அச்சத்தாலோ பீடிக்கப்படுகின்றனர். வசதிபடைத்தவர் தாம் வசதிபடைத்தவர் என்ற உண்மையாலேயே குற்றமிழைப்பதை உணர்கிறார்கள். அவர்களது குற்றவுணர்வைக் குறைக்க அறிவியலுக்கும் கலைக்கும் கொடை அளிக்கிறார்கள்; தியாகம் செய்கிறார்கள் – முன்னாளில் தேவாலயங்களுக்குப் பலியிட்டு தமது பாவங்களைக் கழுவியது போல, என்கிறார் தல்ஸ்தோய். 

இந்தச் சமச்சீரற்ற நிலையைக் கலைந்துபோகாமல் காக்கவே அரசாங்கமும் நீதிமன்றங்களும் படைகளும் போர்களும் தேவைப்படுகின்றன. 

ஐரோப்பாவில் ஒரு பெரும்போரும் வன்முறைப் புரட்சியும் நிகழ்வதற்கான சூழல் உருவாகிவந்ததை தல்ஸ்தோய் மிகச்சரியாகவே கணித்திருக்கிறார். ஜெர்மனியின் மன்னனாக இருந்த வில்லியம் (William II) குறித்தும் ஒரு துல்லியமான சித்திரத்தை வழங்குகிறார். “இந்த மனிதர் சொல்வதைத்தான் சூழ்மதி கொண்ட எல்லா ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள்; ஆனால் கவனமாக மறைக்கிறார்கள். இராணுவ வீரர்கள் அனைவரும் அவரது சேவையில் இருப்பதாகவும், அவர் பணித்ததைச் செய்வார்களென்றும், அவரது நலனுக்காகத் தங்கள் உடன்பிறந்தாரையும் தந்தையரையும் கொல்லத் துணிவார்கள் என்றும் வெளிப்படையாகவே கூறுகிறார். மனிதர்கள் இராணுவத்தில் சேரும்போது புரியத் தயாராக இருக்கும் எல்லாக் கொடூரங்களையும் குற்றங்களையும், கீழ்ப்படிதலை உறுதியளித்து அவர்கள் வீழ்ந்திடும் கீழ்மையின் ஆழங்களையும் வில்லியம் மூர்க்கமான சொற்களில் நேரடியாகவே அம்பலப்படுத்துகிறார். ஒரு துணிந்த அறிதுயில் வல்லுனன் போல அறிதுயிலாழ்ந்தவனின் உணர்வின்மையின் அளவைச் சோதித்துப் பார்க்கிறார். செந்தழல் இரும்பால் அவனது சருமத்தைத் தொடுகிறார்; சருமம் கருகிச் சுட்டெரிகிறது; எனினும் துயில்பவன் விழிப்பதில்லை.” முதலாம் உலகப்போர் மூள்வதற்கு இருபதாண்டுகளுக்குமுன் இந்த எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறார் தல்ஸ்தோய். ஆனால் வில்லியமின் தலைமையில் ஜெர்மனி முதலாம் உலகப்போருக்குள் தள்ளப்பட்டு பெருஞ்சேதங்களையும் தோல்வியையும் சந்தித்தது. இரண்டாம் உலகப்போருக்குத் தயாரானது.

கட்டாயமாகப் பணியமர்த்தப்பட்ட ஒரு படைவீரனின் நோக்கிலிருந்தும் இந்நிலையைக் காண்கிறார் தல்ஸ்தோய். “மூடத் தலைவர் எவரேனும் முட்டாள்தனமாக ஏதேனும் கூறி, மறுதரப்பிலும் எவரேனும் அதே உணர்வோடு மறுமொழி தந்தால், கொல்லப்படுவதற்கு ஆயத்தமாகவேண்டும். பிறரைக் கொல்லவும் துணிய வேண்டும் – எனக்கு எத்தீங்கும் இழைத்திருக்காதோரை, என் அன்புக்குரியோரை. இது நடப்பதற்கரிய நிகழ்ச்சியன்று. இதற்காகவே அணியமாகிக்கொண்டிருக்கிறோம். இது நிகழக்கூடியது மட்டுமன்று; நிகழ்ந்தே தீரும் என்ற உறுதிப்பாடு பூண்டுள்ளது. இதைத் தெளிவாக உணர்ந்துகொள்வது ஒரு மனிதனை நிலையழிந்து போகச்செய்து, தன்னையே சுட்டு மாய்த்துக்கொள்ளச் செய்கிறது. இதுதான் நடக்கவும் செய்கிறது; குறிப்பாக, இராணுவ வீரர்களிடையே ஒரு கணம் தன்னுணர்வு பெற்றுவிட்டால் இத்தகைய முடிவை நோக்கி உந்தித்தள்ளப்படுவார்கள்.” 

இந்திய இராணுவத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இது போர்களிலும் பிற தாக்குதல்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

(9)

தல்ஸ்தோய் காட்டும் கிறித்தவத்தின் அன்புவழியை உலகெலாம் தழுவுவதற்கான வழிகள் சிலவற்றையும் முன்னிடுகிறார். 

மாற்றம் தனிமனிதனிலிருந்து தொடங்கவேண்டும் என்கிறார். பொருள்முதல்வாதக் கொள்கையை மறுக்கிறார். படிப்படியாகப் புறச்சூழலை மாற்றுவதன் மூலமே மனித வாழ்வு மேம்படும் என்றும் புறச்சூழலை மாற்றுவதற்கே நாம் முதன்மையாக முயலவேண்டும் என்றும் கூறுவதை மறுக்கிறார். தனிமனிதன் மெய்மையை ஏற்றுப் பின்பற்றிப் பிறரையும் ஊக்குவிப்பதிலிருந்தே மாற்றம் தொடங்கும் என்பதே தல்ஸ்தோயின் துணிபு. 

“பறக்கக்கூடிய ஒவ்வொரு தேனீயும் பறக்க முயலாமலே இருந்தால், பிற தேனீக்களுக்கும் தூண்டுதல் இருக்காது; தேனீத்திரள் நிலைமாறாது. வாழ்க்கை குறித்த கிறித்தவக் கருத்தாக்கத்தை ஊன்றியறிந்த ஒருவர் மற்றவர்களும் அதையொட்டி வாழத் தொடங்குவதற்காகக் காத்திருந்தால், மாந்தர் இனம் தன் நிலையிலிருந்து மாறவே மாறாது. ஆனால் ஒற்றைத் தேனீ தன் சிறகுகளை விரித்துப் புறப்பட்டுப் பறந்துவிட்டால், அவளுக்குப் பின்னால் இன்னொன்று, இன்னொன்று என்று கிளம்பும்; கூட்டில் பிணைந்து ஒடுங்கியிருந்த தொகை சுதந்திரமாகப் பறக்கும் தேனீக்களின் திரளாகிவிடும். அதேபோல, கிறித்தவம் கற்றுத்தரும் வழியில் ஒற்றை ஆள் வாழ்க்கையைப் பார்க்கட்டும், அவன் பின் இன்னொருவன், மேலுமொருவன் அவ்வாறே செய்யட்டும்; நாடு என்ற கருத்தாக்கத்தின்படி அமைந்த வாழ்க்கை எனும் மாய வட்டத்திலிருந்து தப்ப வழியே இல்லை என்னும் நிலைமாறி, அதை உடைத்து வெளியேறுவர்.”

பேரரசுகளை அமைப்பதனூடாக முடியாத செயலை தனிமனித முன்மாதிரிகளை ஏற்படுத்திச் சாதிக்க முடியும் என்கிறார். 

“கிறித்தவ உலகத்துக்கு வெளியில் உள்ள எல்லா நாடுகளையும் கானுறைவோரையும் […] கிறித்தவத்தின் கீழ் கொண்டுவர ஒரே வழிதான் உள்ளது. இந்நாடுகளில் கிறித்தவ இலட்சிய சமூகத்தைப் பற்றிப் பரப்பவேண்டும்; (கிறித்தவ நாடுகளில்) கிறித்தவ வாழ்வு, கிறித்தவச் செயல்பாடுகள், கிறித்தவ முன்னுதாரணங்கள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அதை அடைய முடியும்.” 

எந்நிலையிலும் இராணுவத்தில் சேரவும், அரசுக்குக் கீழ்ப்படியும் உறுதிமொழிகளை எடுக்கவும், நீதிமன்றங்களில் பணியாற்றவும், வன்முறைக்குப் பயன்படும் வரிகளைக் கட்டவும் வசூலிக்கவும், தீமையை வன்முறையால் எதிர்க்கவும் மறுக்கவேண்டும் என்கிறார். தனியுடைமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் – நிலக்கிழார்கள் தமது நிலங்கள் மொத்தத்தையுமோ பெரும்பகுதியையோ உழுபவர்களுக்கே கொடுத்துவிடவேண்டும் என்கிறார். 

குறைந்தபட்சமாக, ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்குச் செவிசாய்க்கவேண்டும். தாம் அங்கம் வகிக்கும் அமைப்பில் உட்பொதிந்த அநீதியை உணரவேண்டும். அதில் தமது பங்கு என்ன என்பதை அறியவேண்டும். அரசு அலுவலர்களும் இராணுவ வீரர்களும் பிறர்மீது வன்முறை செலுத்தும்படியான ஆணைகளைப் புறந்தள்ள வேண்டும்.  உண்மையை உணர வேண்டும். உணர்ந்ததன்படிச் செயல்படுவதை நோக்கி நகரத் தொடங்கவேண்டும் என்கிறார் தல்ஸ்தோய். 

https://pictolic.com/img/2020/a-gambler-a-saint-or-a/a-gambler-a-saint-or-a-9.jpg

தல்ஸ்தோயின் முதன்மையான பங்களிப்பாக நான் காண்பது தீமையை வரையறை செய்வது குறித்த கருத்துகளைத்தான்:

“ஆதி காலத்திலிருந்தே மனிதன் தீமையை வரையறை செய்து எல்லாருக்கும் பொதுவாக்கியிருக்கிறான். இந்த வரையறைகள் சட்டங்களின் வடிவெடுத்தன – இவை இறைவனிடமிருந்து கிடைத்தவையாகவோ, பிழையா அரசர்களாலும் குழுக்களாலும் அமைக்கப்பட்டவையாகவோ கருதப்பட்டன. மனிதர்கள் பிறர்மீது வன்முறை செலுத்தினர்; தங்களையும் பிறரையும் அது தீமைக்கெதிரான வன்முறை என்று நம்பவைத்தனர். […] ஆனால் நாள்பட்ட உலகில் மனித உறவுகள் அதிக சிக்கலானவையாக மாறவும், ஒவ்வொருவரும் தீமை என்றெண்ணியதை வன்முறைகொண்டு எதிர்ப்பது பகுத்தறிவற்றது என்பது கண்கூடாகியது; அதனால் எவ்வகையிலும் மோதல்கள் குறையவில்லை. மாந்தரின் வரையறைகள் எவற்றாலும் சிலர் தீமையெனக் கருதுவதை எல்லாரையும் ஏற்கச்செய்வதில் வெற்றிபெற இயலாது. […] நீரோவும் கலிகுலாவும் தீமையென்று கருதியதைப் பிறர் தீமையென்று ஏற்கமுடியாது. 

இப்போது மனிதர்கள் தீமைக்கான பொது வரையறையைக் கண்டறிந்து நிறுவுவது சாத்தியம் என்றோ விரும்பத்தக்கதென்றோகூட நம்புவதை நிறுத்திவிடும் இடத்துக்கு வந்துவிட்டார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்குப் பிடிக்காததைத் தீமை என்கிறார்கள்; அவர்களது குடிகள் அவர்களது செயல்களைத் தீமைக்கு எதிரானவை என்பதாலன்றி, தங்களுக்கு வேறுவழியில்லை என்பதால் ஏற்றுக் கீழ்ப்படிகிறார்கள். 

சோசியலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவ அமைப்பைத் தீங்கானது என்றும், அரசின்மையாளர்கள் எல்லாவகை அரசுகளையும் தீங்கானவையென்றும், முடியாட்சி சார்பாளரும் மரபுச்சார்பாளரும் முதலாளித்துவர்களும் எந்தவொரு சோசியலிச அமைப்பையோ பொதுவுடைமை அமைப்பையோ அரசின்மைவாதத்தையோ தீங்கானவை என்றும் நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பிறரது ஒப்புதலைப் பெற வன்முறையைத் தவிர வேறு வழிமுறையைக் கொள்வதில்லை. இவர்களில் எவர் தமது திட்டங்களைச் செயல்படுத்துவதில் வெற்றிபெற்றாலும், தற்போதைய வன்முறை வழிவகைகளைச் சார்ந்தோ புதியன கண்டுபிடித்தோ அவர்களது அதிகாரத்தை நிறுவ வேண்டும். 

புதியதொரு மக்கள் குழு ஒடுக்கப்பட்டோராக இருப்பார்கள். அச்சுறுத்தல்கள் புதிய வடிவம் எடுக்கலாம். ஆனால் வன்முறையும் ஒடுக்குமுறையும் மாறாதிருக்கும்; அவை மேலும் கொடூரமாகலாம். ஏனெனில், (ஆயுதமேந்திய) போராட்டம் வெறுப்பைப் பெருக்கியிருக்கும்; புதிய வகை ஒடுக்குமுறைகள் படைக்கப்பட்டிருக்கும். எல்லா புரட்சிகளுக்கும் புரட்சிக்கான முயற்சிகளுக்கும் சதித்திட்டங்களுக்கும் வன்முறையால் அரசுகள் மாற்றப்பட்டதற்கும் பிறகு எப்போதும் இப்படித்தான் நடந்திருக்கிறது. ஒவ்வொரு மோதலும் தற்சமயம் அதிகாரத்தில் இருப்பவர்களின் கரங்களில் ஒடுக்குமுறைக் கருவிகளை வலுப்படுத்துகின்றன.”  

தீமையை எல்லாருக்கும் பொதுவான வகையில் வரையறை செய்ய முடியாது என்பதே தல்ஸ்தோயின் முடிபு. அதனால்தான் கிறிஸ்து தீமையை எதிர்க்காமை என்ற கொள்கையை வகுத்தார். இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். அதே சமயம் இன்னா செய்வாரை வன்முறையால் எதிர்க்காமல், ஒறுக்காமல் இனியவே செய்திட வேண்டும். வள்ளுவன் சொல்லும் சால்பும், இயேசுவும் தல்ஸ்தோயும் கூறும் கிறித்தவமும், காந்தியின் அகிம்சையும் சந்திக்கும் புள்ளி இதுதான்.

(10)

தல்ஸ்தோய் கிறித்தவ மெய்ப்பொருளை உணர்ந்ததாகக் கருதியபிறகு தனது வாழ்வைப் பெருமளவு அக்கருத்துகளின் படியே அமைத்துக்கொண்டார். அதில் பல சவால்களையும் சந்தித்தார். மண்ணில் வியனுலகு அமைவதற்காக ஒரு கனவை இந்நூலிலும் பிற நூல்களிலும் விதைத்தார். பேணும் நல்லறம் பேசும் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்குப் புதிய பொலிவு கொடுத்தார். எனினும் அவர் அளித்தது ஒரு முழுமையான திட்டமாக வளரவில்லை என்றுதான் கூறவேண்டும். தனிமனித மாற்றத்துக்கான உந்துதலையும் நியாயங்களையும் திடமாக ஏற்படுத்திவிடுகிறபோதும், சமூக மாற்றத்துக்கான திட்டங்கள் தல்ஸ்தோயில் முழுமை பெறாமலேயே இருந்தன. இயேசுவின் கனவுக்கு அடுத்தகட்டப் பாய்ச்சல் நிகழ 1800 ஆண்டுகள் ஆயின. ஆனால் தல்ஸ்தோயின் கனவுக்கு அடுத்தகட்டப் பாய்ச்சல் அவரது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளிலேயே காந்தியின் மூலம் தொடங்கிவிட்டது. 

காந்தியும் தல்ஸ்தோயைப் போலவே மாற்றம் தனிமனிதனிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று கருதினார். இருப்பினும் சமூக மாற்றத்துக்கான ஒரு வரைவையும் செயல்திட்டத்தையும் அவர் அளித்தார்.

தீமையை வன்முறையால் எதிர்க்காமையை தல்ஸ்தோய் வலியுறுத்திய அளவு அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றித் தெளியவில்லை. காந்தியின் சத்தியாகிரகம் அக்குறையை நிறைவு செய்தது. தல்ஸ்தோயின் முறையில் இருந்த எதிர்ப்பின்மையையும் செயலறு எதிர்ப்பையும் காந்தியால் ஆற்றல் மிகு அகிம்சைப் போராக மாற்றமுடிந்தது. 

தேச எல்லைகளைத் தகர்ப்பதன் மூலம் அதிகார மையங்களைத் தகர்க்க வேண்டும் என்றார் தல்ஸ்தோய். கிராம சுய ராச்சியத்தின் மூலம் தேச எல்லையை சிறு குமுகங்களுக்குள் குறுக்க விரும்பினார் காந்தி. மையத்திலிருக்கும் அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம் அதைத் தகர்ப்பதற்கு வழிகூறினார். 

https://www.deccanherald.com/sites/dh/files/styles/article_detail/public/article_images/2016/12/17/587145.jpg?itok=MGdmpocb

தல்ஸ்தோய் உணவுக்கான உடலுழைப்பை மேற்கொள்ளச் சொன்னார். Bread Labor என்ற சொற்றொரடரை  தல்ஸ்தோயிடமிருந்து பெற்றுக்கொண்ட காந்தி இராட்டையில் நூல் நூற்று கதராடை நெய்வதை அறிமுகப்படுத்தி உடலுழைப்பையும் அகிம்சைப் போராட்டத்துக்கான முதன்மைக் கருவிகளில் ஒன்றாக்கினார். வர்க்க முரண்கள் மட்டுமன்றி சாதிப் படிநிலைகளும் தீண்டாமையும் கொண்ட இந்தியச் சமூகத்தில் உடலுழைப்பின் மீதான மேல்தட்டினரின் இழிவுணர்ச்சியைப் பெருமளவு மட்டுப்படுத்தினார். 

தல்ஸ்தோய் தனியுடைமையை எதிர்த்தார். பொருளாதாரச் சுரண்டல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என்றார். நிலக்கிழார்கள் நிலத்தைக் குடியானவர்களுக்குப் பிரித்து வழங்கிவிட வேண்டும் என்றார். காந்தி செல்வந்தர் அனைவரும் அறங்காவலர் ஆகவேண்டும் என்றார். விடுதலைக்குப் பின் காந்தியின் சீடரான வினோபாவின் வழிகாட்டலில் நடந்த பூமிதான இயக்கத்தின் மூலம் 41.6 லட்சம் ஏக்கர் நிலம் கொடையாகப் பெறப்பட்டது. அதில் 25 லட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது.16 முழுமையான வெற்றி பெறாவிட்டாலும் இவ்வியக்கம் மிக அரிய வரலாற்று நிகழ்வு. காந்தியின் கிராமப் பொருளாதாரக் கொள்கை தற்சார்பையும் தன்னிறைவையும் வலியுறுத்தியது. தல்ஸ்தோய் இடித்துரைக்கும் முதலாளித்துவத்துக்கும் வன்முறை சார்ந்த பொதுவுடைமைப் புரட்சிக்கும் தொழிற்புரட்சிக்கும் மாற்றான ஒரு பாதையை காந்தியும் அவரது இன்னொரு சீடரான குமரப்பாவும் கண்டனர். ‘கடவுளையே தனக்குள் அன்பென்று உணர்வதன்மூலம் எல்லாப் பொருள்களையும் எல்லா மனிதர்களையும் நேசித்தல்’ என்ற தல்ஸ்தோயின் கூற்று இன்று உலகை அச்சுறுத்தும் பருவச்சூழல் நெருக்கடிநிலையில் புதிய பொருள் கொள்கிறது. பருவச்சூழலைச் சிதைக்காத வளங்குன்றா வாழ்க்கைக்கான (sustainable life) சாத்தியம் கொண்ட காந்தியின் தற்சார்பான கிராமப் பொருளாதாரமே இந்நெருக்கடியை எதிர்கொள்ள நம்முன் தெரியும் மிகச்சிறந்த பாதையாக, நாம் ஏற்றாகவேண்டிய வழியாக உள்ளது. 

“உங்கள் கடிதமும், உங்கள் புத்தகமான இந்திய சுய ராச்சியமும் கிடைத்தது. உங்கள் புத்தகத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் படித்தேன்; காரணம், நீங்கள் இந்த நூலில் எதிர்கொண்டிருக்கும் கேள்வி இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதகுலம் முழுமைக்கும் முக்கியமானது என்று நினைக்கிறேன்,” என்று காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் கூறுகிறார் தல்ஸ்தோய். காந்தியத்தின் சாரமாக இந்திய சுயராச்சியம் நூலைக் கொள்ளலாம். 1909ல் இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கப்பலில் வந்தபோது காந்தி இந்திய சுய ராச்சியத்தை எழுதினார். அதே பயணத்தின் போதுதான் தல்ஸ்தோயின் ஓர் இந்துவுக்குக் கடிதத்தையும் குஜராத்தியில் மொழிபெயர்த்து, அதற்கான முன்னுரைகளை ஆங்கிலத்திலும் குஜராத்தியிலும் எழுதினார். 

“கிறிஸ்து நமக்கான இலக்குகளை வழங்கினார். மகாத்மா காந்தி வழிவகைகளை வழங்கினார். மானுடம் முன்னேற வேண்டுமெனில், காந்தி தவிர்க்கமுடியாதவர். அமைதியும் ஒத்திசைவும் கொண்ட உலகை நோக்கி மானுடம் பரிணாமம் கொள்வதைக் காணும் தொலைநோக்கினால் அகத்தூண்டல் பெற்றுச் செயல்பட்டார், சிந்தித்தார், வாழ்ந்தார். நாம் அவரைப் புறக்கணிக்கவே முடியாது,” என்றார் மார்டின் லூதர் கிங். அவர் கிறிஸ்துவுக்குச் சொன்னது தல்ஸ்தோய்க்கும் பொருந்தும். கிறிஸ்துவின் இலக்குகளுக்கு விளக்கமளித்துச் செறிவூட்டித் தெளிவாக்கினார் தல்ஸ்தோய். 

(11)

“குடும்ப, சமூக வாழ்வின் கொள்கைகள் இன்றைக்கு நமக்குத் தோன்றுவது போல, கிறித்தவக் கொள்கைகளான சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடைமை, தீமையை வன்முறையால் எதிர்க்காமை ஆகியவை இயல்பானவையாக எளிதானவையாகத் தோன்றும் காலம் வரும் – ஏற்கனவே வந்துகொண்டிருக்கிறது,” என்று நம்பிக்கையுடன் முன்னறிவிக்கிறார் தல்ஸ்தோய். 

தல்ஸ்தோயின் நூல் தணிக்கையாளர்களால் தடைசெய்யப்பட்ட போதும் சரியான வாசகரை அடைந்தது. காந்தி என்ற ஒற்றை மனிதரை அந்நூல் பாதித்ததால், உலக வரலாற்றையே மாற்றும் கருவிகளில் ஒன்றானது. 

காந்தியைப் போலவே வேறு சில கூர்மையான வாசகர்களையும் தல்ஸ்தோயின் கருத்துகள் சென்றடைந்தன.

பெர்னார்ட் ஷா தொடக்க கால கிறித்தவர்களுக்கும் ரோமானியர்களுக்கும் நடந்த பூசல்களை மையப்படுத்தி, ஈசாப் கதையொன்றைத் தழுவி, ’ஏண்டிரக்கில்ஸும் சிங்கமும்’ (Androcles and the Lion) என்ற நாடகத்தை எழுதினார். அந்நாடகத்தைவிட நீளமாக அவர் எழுதிய முன்னுரையில், விவிலியத்தை வரலாற்று நோக்கில் விரிவாக அலசினார். அதில் தல்ஸ்தோயின் தாக்கத்தைக் காணலாம். 

“இக்கோட்பாடுகள் கிறிஸ்துவுக்கே தனித்துவமானவை என்று கூறமாட்டேன். […]  கிறித்தவம் அறத்தின் பரிணாமத்தில் ஒரு படி; அது எந்த ஒரு தனிப்பட்ட போதகரையும் சார்ந்ததல்ல. இயேசு என்ற ஒருவர் வாழ்ந்திருக்காமலே போயிருந்தாலும்கூட (ஷேக்‌ஸ்பியரின் ஹாம்லட்டைப் போலன்றி வேறேதேனும் வகையில் இயேசு இருந்திருக்கிறாரா என்ற கேள்வி தீவிரமாக எழுப்பப்பட்டுள்ளது), தல்ஸ்தோய் இதே கொள்கைகளைச் சிந்தித்தடைந்து, பயிற்றுவித்திருப்பார்; ரஷ்யாவின் கிரேக்கத் திருச்சபையோடு பொருதியிருப்பார்,” என்றார் ஷா.17

விவிலியத்திலிருந்து பெர்னார்ட் ஷா அடைந்த முடிவுகளும் தல்ஸ்தோயின் முடிவுகளோடு பெருமளவு ஒத்துப்போயின.  இயேசுவை கம்யூனிஸ்ட் என்றே ஷா வகைப்படுத்தினார். கிறித்தவ உலகம் இயேசுவைக் கைவிட்டு பாரபாஸையே இருபது நூற்றாண்டுகளாக ஏற்றுநிற்பதாகக் குற்றம்சாட்டினார். இயேசு செய்ததாகப் புனையப்பட்ட அற்புதங்கள் அவரது செய்தியின் ஆற்றலில் நம்பிக்கைகொள்ளாமல் அதை மலினப்படுத்துவதாகக் கூறினார்.

  1. “இறையாட்சி உம்மிடையே உள்ளது. நீங்கள் ஆண்டவனின் மைந்தர்; ஆண்டவன் உங்களின் மைந்தர். நீங்கள் இறைவனின் பணியைச் செய்யவே இங்குள்ளீர்கள். நீங்களும் இறைவனும் ஒன்றே என்றார்.
  2. உடைமையை உதறுங்கள். எல்லாச் செல்வத்தையும் பொதுவுடைமையாக்குங்கள். பணப்பரிமாற்றங்களிலிருந்து அறவே விலகுங்கள். தனியொரு குழுந்தைக்கு உணவிலையெனில் நீங்கள் கடவுளைப் பட்டினியாக விடுகிறீர்கள். நாளைக்கான உணவு உடை பற்றிய கவலைகளை விட்டொழியுங்கள். ஏனெனில், ஆண்டவன், கொடுஞ்செல்வம் (Mammon) ஆகிய இரண்டு ஆண்டைகளுக்கு நீங்கள் பணியாற்றமுடியாது.
  3. நீதிபதிகள், தண்டனை, வஞ்சம் ஆகிய அனைத்தையும் தொலைத்துவிடுங்கள். அண்டை அயலவரை உங்களை நீங்கள் நேசிப்பது போலவே நேசியுங்கள்; அவர்களும் உங்களில் ஒரு பகுதியே. உங்கள் பகைவர்மீதும் அன்புசெலுத்துங்கள்; அவர்கள் உங்களுக்கு அண்டை அயலவரே. 
  4. குடும்பத் தளைகளை விட்டொழியுங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு அன்னையும் உம்மையீன்ற அன்னைக்கு இணையானவரே. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் உம் உடன்பிறந்தாரே. குடும்பத்தாரின் ஈமச்சடங்களுக்குச் சென்று காலத்தை வீணடிக்காதீர்; மரணத்தையல்லாமல் வாழ்வைக் கொண்டாடுங்கள் […] உம்மிடையே இருக்கும் விண்ணரசில் திருமணமே இல்லை. உம்மால் இரண்டு திவ்வியப் பேராற்றல்களுக்கு உமது வாழ்வை அர்ப்பணிக்க முடியாது- ஆண்டவனுக்கும் உம்மை மணந்தவருக்கும்.”17

கடைசிப் புள்ளியில் மட்டும் இருவரும் எதிரெதிர் திசையில் திரும்பியதைக் காணலாம். மண உறவை ஒருபோதும் முறிக்கவே கூடாது என்று இயேசு சொன்னதாய் உரைகண்ட தல்ஸ்தோய், எத்தனையோ சச்சரவுகளுக்கு மத்தியிலும் மனைவியைவிட்டுப் பிரியாது, இறுதியில்தான் அஸ்தபோவாவில் தன்னந்தனியாக மடிந்தார்.

https://media.salon.com/2015/06/gandhi_wheel.jpg

காந்தி கீதையைக் கையாண்டவிதமும் ராமநாமத்தைப் பயன்படுத்திய விதமும் தல்ஸ்தோய் விவிலியத்தை அணுகியமுறைக்குச் சமானமாகவே இருந்தன. காந்தியின் கீதை போர்க்களத்தில் செயலற்று நின்ற பார்த்தனைப் போர்புரியத் தூண்டும் கிருஷ்ணனின் கீதையல்ல. “குருட்சேத்திரம் பார்த்தனும் கண்ணனும் உரையாடுவதற்கான தருணத்தை அமைத்துக் கொடுத்தது. உண்மையான குருட்சேத்திரம் மனித உள்ளம்தான்; இறைவனின் உறைவிடமாகக் கண்டு அவனை அதனை உரிமைகொள்ள அழைத்தால், உள்ளமே தர்மச்சேத்திரமும் ஆகும். நாள்தோறும் ஏதேனும் போர் நிகழும் போர்க்களமும் அதுவே. அப்போர்கள் அனைத்தும் எனது உனது, எம்மவர் அயலவர் என்று வேறுபடுத்திப்பார்ப்பதால் நிகழ்வன,” என்றார் காந்தி.18 அதுவரை யாரும் செய்யாத வகையில் வன்முறைக்கெதிரான கொள்கைகளை வகுத்துக்கொள்ள காந்திக்கு உதவிய நூல் கீதை; அக்கொள்கைகளை மக்களிடம் அவர்களுக்குப் புரியும் மொழியில் கொண்டு சேர்க்க, அனைத்துச் சாதிகளும் சமமென்று கூற, அனைத்துப் பணிகளும் ஒத்தவை என்று நிறுவ, விளைவை எண்ணாது கருதிய கருமம் புரிந்திட உதவியது. அதே போல காந்தியின் இராமனும் தசரதன் மகனாகப் பிறந்த அயோத்தியின் வரலாற்று இராமனல்லன். எல்லாருக்கும் பொதுவானவனாக அவரால் முன்வைக்கப்பட்டவன். தன்னிடமும் மக்களிடமும் ஆன்ம ஆற்றலைத் திரட்டுவதற்கு அவருக்குதவிய பெயர் இராமன். காந்தி படித்த நூல்கள் அனைத்திலும் அவர் காண விரும்பியதை மட்டுமே எடுத்துக்கொண்டார். ரஸ்கினிடமும் தல்ஸ்தோயிடமிருந்துமே தன் கொள்கைக்குகந்த கருத்துகளை மட்டுமே உள்வாங்கிக்கொண்டார் என்பதை அந்நூல்களைப் பற்றிய அவரது எழுத்துகளைக் கூர்ந்து படிக்கையில் தோன்றும். 

தல்ஸ்தோயும் தான் காணவிரும்பியதையே இயேசுவிடம் கண்டடைந்தார். அவரது உள்ளத்தைத் துளைத்துக்கொண்டிருந்த ஆதாரக் கேள்விகளுக்கான விடைகளை அவர் கிறிஸ்துவின் கருத்துகளில் கண்டபோது, ஐயங்களுடன் தான் வந்தடைந்த இடம் சரியானதுதான் என்று உறுதிசெய்துவிட்ட உற்சாகமே அவரது எழுத்துகளில் தெரிகின்றது. அதனாலேயே அவரது தருக்கத்திற்குப் பொருந்தாதனவற்றை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, உடன்படுவனவற்றை மட்டுமே இயேசுவின் சொற்களிலேயே முன்வைக்கிறார். தல்ஸ்தோயின் கைகளில் இயேசுவின் எளிமையான ஆழமான ஆணைகள் அவரது படைப்பாற்றலாலும் தருக்க அறிவாலும் செப்பனிடப்பட்டு விரிவடைகின்றன. மேலும் மெருகேறி பட்டை தீட்டிய வைரங்களாகின்றன. தல்ஸ்தோய் கூறியது கூறத் தயங்குவதேயில்லை. அதுவுமே தல்ஸ்தோயின் எழுத்தில் ஓர் அழகையும் அழுத்ததையும் பெறுகிறது. அவர் கண்டடைந்த உண்மையை மீளமீளப் பல்வேறு கோணங்களில் அயராது சொல்கிறார்.

ஒவ்வொரு முறை அவர் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிமுடித்துவிட்டார் என்று நினைக்கும்போதும் நாம் எண்ணியிராத கோணத்தில் மேலும் சில கூரிய சொற்கள் வந்துவிழுகின்றன. அவரும் நாமும் எட்டுவதற்குச் சில உச்சங்கள் மிச்சமிருக்கின்றன. புதிய திசையில் எண்ணங்கள் எழுந்து செல்கின்றன. தொடர்ந்து கிறித்தவர்களைப் பற்றியே பேசினாலும், ஒவ்வொரு சொல்லும் எல்லாருக்கும் பொதுவானதாகவே ஒலிக்கிறது. உலகப் பொது அறங்களையே தல்ஸ்தோய் கிறித்தவத்தின் பெயரால் பேசுகிறார். தல்ஸ்தோயின் கிறித்தவம் அற்புதங்களும் சடங்குகளும் அற்றது. நான் நம்புவதென்ன, சுவிசேஷங்களின் சுருக்கம், உம்மிடையே உள்ளது இறையாட்சி ஆகிய அனைத்து நூல்களும் இத்தகைய அற்புதங்களைப் பெருமளவு நீக்கியவையாக உள்ளன. சடங்குகளையும் சின்னங்களையும் கைக்கொண்டு, கிறித்தவத்தின் அடிப்படை மெய்மைகளை கிறித்தவர்கள் ஒதுக்கிவிட்டதை தல்ஸ்தோய் சாடுகிறார். அவர் கண்ட மெய்ப்பொருளையே கிறித்தவத்தின் மெய்யான பங்களிப்பாகவும், இன்றைய உலகுக்கும் மாந்தரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையானதாகவும் சாற்றுகிறார்.

“ஒரு பேராசான் என்ன செய்ய முடியும் – நான் இறைவனான கிறிஸ்துவைச் சொல்லவில்லை – ஆனால் ஒரு பேராசான், ஓர் ஆசிரியர், இத்தகைய மக்களுக்குப் பயிற்றவிக்கும்போது என்ன செய்யமுடியும்? வாழ்வில் அனைத்துமே – ஒவ்வொரு சிறு பகுதியும், ஒரு திருச்சட்டத்தால் வகுக்கப்படும்போது அக்கடப்பாடுகளை அழித்தொழிக்காமல் என்ன செய்யமுடியும்? எந்த இறைவாக்கினரும் செய்யக்கூடியதையே கிறிஸ்துவும் செய்கிறார். மக்கள் புனிதமானதென்று கருதும் பழைய திருச்சட்டங்களிலிருந்து உண்மையான இறைச்சட்டங்களை எடுத்துக்கொள்கிறார். அடிப்படைக் கொள்கைகளை எடுத்துக்கொண்டு, பிறவற்றை ஒதுக்கி, நிலைபெற்ற நெறிகள் குறித்த தனது உள்ளொளியை அவற்றோடு சேர்க்கிறார்,” என்று தல்ஸ்தோய் இயேசுவின் வழிமுறையை விளக்குகிறார். 

“திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்,” என்று கூறிய இயேசு10, மோசஸின் கட்டளைகளுக்கு முற்றிலும் எதிரான கட்டளைகளை அளித்துச் சென்றதையே தல்ஸ்தோய் காட்டுகிறார். 

இயேசுவைக் குறித்து தல்ஸ்தோய் கூறுவது போலவே, தல்ஸ்தோயும் விவிலியத்திலிருந்து தனக்கு ஏற்புடையனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்; பிறவற்றை விலக்குகிறார். மெய்யான மறைநூலின் நெறிகளையே தான் பேசுவதாகவும் தன்னையே உண்மையான கிறித்தவனாகவும் சித்தரித்தார். எனினும் தனித்துவமான கிறித்தவனாகவே இருந்தார். அவர் கூறிய அறங்கள் பகுத்தறிவாளரும், இறைமறுப்பாளரும், அனைத்து மதப்பற்றாளர்களும் அணைத்தேற்கக்கூடிய அறங்களாகவே உள்ளன.

காந்தியும் தன்னை ஓர் உண்மையான சனாதனியாக முன்வைத்தார். ஆனால் தன் கொள்கைக்குப் புறம்பான மதநெறிகளை ஒதுக்கினார். உண்மைக்கும் மதநூல்களுக்குமிடையே முரண்பாடிருந்தால் உண்மையின் பக்கமே நிற்பேன் என்றார். அவரும் தனித்துவமான சனாதனியாகவே இருந்தார். எனினும் எல்லா இந்தியருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானராக ஆனார். 

இயேசுவுக்குச் சிலுவை கிடைத்தது. தல்ஸ்தோய்க்கு மதவிலக்கமும் அஸ்தபோவாவும் கிடைத்தன. காந்திக்குச் சனாதனிகளின் கறுப்புக்கொடிகளும் கோட்சேவின் குண்டுகளும் கிடைத்தன. 

ஆனால் அவர்கள் எழுப்ப விரும்பிய விண்ணரசின் ஒளிச்சாரலை மண்ணில் தூவிச் சென்றார்கள். மாந்தரினம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அந்த அன்புவழியில் அவர்களின் ஒளியிலேயே செல்லமுடியும்.

குறிப்புகள்:

  1. The Hedgehog and the Fox, Isaiah Berlin
  2. திருவிவிலியம், பொது மொழிபெயர்ப்பு, விவிலியச் சங்கங்களின் இணையம், வத்திக்கான் ஒன்றிப்புச் செயலகம், 1995.
  3. Who can go to Gaol?, Indian Opinion, 5-6-1909, Collected Works of Mahatma Gandhi (CWMG)
  4. Speech at Chatham House Meeting, London, October 20, 1931, CWMG
  5. What I Believe, Leo Tolstoy
  6. Confession, Leo Tolstoy
  7. From the Introduction by Richard Pevear to What is Art, Leo Tolstoy. 
  8. The Gospel in Brief, Leo Tolstoy
  9. மகாத்மா காந்தியின் சுய சரிதை- சத்திய சோதனை- தமிழாக்கம்: ரா.வெங்கடராஜுலு
  10. Difficulty of Practice, Young India, 30-1-1930, CWMG
  11. Mahatma Gandhi and Leo Tolstoy Letters, B.Srinivasa Murthy
  12. Civil Disobedience in Indian Tradition, Dharampal, http://www.gandhitoday.in/2013/07/1.html
  13. ‘Patriotism and Government’, Leo Tolstoy
  14. காந்தியின் தேசியம், த.கண்ணன், காலச்சுவடு இதழ், ஜனவரி 2020.
  15. Neither a Saint nor a Politician, Young India, 12-5-1920, CWMG. 
  16. Bhoodan-Gramdan Movement: An Overview, Dr. Parag Cholkar, http://www.gandhiashramsevagram.org/gandhi-articles/bhoodan-gramdan-movement.php
  17.  Androcles and the Lion, Bernard Shaw
  18. Discourses on Gita, Gandhi

2 comments

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020 November 22, 2020 - 4:14 pm

[…] எழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்த… – த. கண்ணன் […]

எழுத்தில் விரியும் வியனுலகம் – தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து | உரக்கச June 27, 2021 - 8:15 am

[…] (தமிழினி மின்னிதழிலும் சர்வோதயம் மலர்கிறது இதழிலும் வெளிவந்த கட்டுரை) […]

Comments are closed.