ஓருயர்ந்த ஒப்பற்ற படைப்பாளிக்கும்கூட வாழ்க்கை அர்த்தப்படாதது வியப்புதான். தல்ஸ்தோயின் ‘வாக்குமூலம்’ அவரது சொந்த மெய்ஞானத் தேடலின் தடங்கள் நமக்கு உரைப்பதென்ன என்ற ஆர்வம் மேலிட டேவிட் பாட்டர்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. மரபுவழி கிறிஸ்துவத்தில் திரித்துவ நம்பிக்கையைக் கொண்டிருந்தார் தல்ஸ்தோய். 1879ல் கீவ் நகரிலிருந்த குகை மடங்களில் தங்கியிருந்த ஆதிகிறிஸ்துவ வழியில் வசித்துவந்த துறவிகளின் எளிய வாழ்முறையோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
ஆகமங்களின்படி தேவாலயங்கள் நடத்தப்படவில்லை என்பதை அறிந்து மதம்சார்ந்த பற்றுகளைக் கைவிட்டார். அதன் சட்டதிட்டங்களைச் சாடினார். எல்லையற்றதை அனுபூதியாய் உணர இயலும் என்றும் ஒன்றுமற்றதில் அடங்கியிருக்கிறது இப்பிரபஞ்சம் என்றும் இறுதியில் ஒரு கனவின் வழி உரைத்துப்போகிறார். கிட்டத்தட்ட பைபிளின் கடைசி நூலான ‘வெளிப்படுத்தின சுவிசேஷத்திற்கு இணையானதொரு படிமக்கனவு.
ஆதியோடு ஒன்றும் அறிவைப் பெறுவதுதான் நீதியார் செய்த தவம் என்கிறது ஒளவைக்குறள். தனது 51வது வயதில் போரும் அமைதியும் (1869), ஆன்னா காரனீனா (1877) எனும் இரு நாவல்களை எழுதிய தல்ஸ்தோய், தான் எதையும் சாதிக்கவில்லை, வாழ்க்கை அர்த்தமற்றதென எண்ணலானார். அப்போது ‘நான் யார்’ எனும் சுயசரிதையின் மூலம் தன் தேடலைப்பற்றியும், தான் கண்டறிந்தவற்றையும் எழுதினார். 1882ல் ரஷிய சஞ்சிகையில் வெளியானாலும் பிறகு ‘வாக்குமூலம்’ என 1884ல் ஜெனீவாவில் பிரசுரமானது. அந்நூல் தனக்குள்ளான விசுவாசம் சார்ந்த மனப்போராட்டங்களை, ஆதியிலிருந்து பல மகான்களால் தேடப்பட்ட அல்லது அத்தேடல்களின்வழி மகான்களான, வாழ்வின் அர்த்தம் பற்றிய கேள்விகளினூடே தன்னறிதலைப் பகிர்ந்துகொண்டார். அவரது மெய்ஞானத் தேடலின் சுருக்கம்.
தன் மெய்வழிப்பாதையில் ஆர்தர் ஷோப்பனவர், சாக்கியமுனி புத்தர், சாக்ரடீஸ், பழைய ஏற்பாட்டின் சாலமன் ஆகியோரை எதிர்கொண்டார். பழைய ஏற்பாட்டின் நீதிமொழிகளில் சாலமனின் ‘எல்லாம் விருதா’ எனும் கூற்றையே ஆரம்பத்தில் அவரால் உணர முடிந்தது. அவ்வறிதல் கசப்பானதாகவே இருந்தது. உண்மையிலிருந்து விலகி அதலபாதாளத்திற்குள் செல்வதாய் உணர்ந்தார்.
அதன் சாரத்தைப் பேசுகிறார். ‘ஒன்றுமின்மை பற்றிய நமது அச்சமே வாழவேண்டுமெனும் அவாவாகப் பரிணமிக்கிறது. ஒருவிதத்தில் நிஜமென உணரப்படும் இப்பிரபஞ்சமேகூட ஒன்றுமின்மையாகத்தான் திகழ்கிறது என்று உற்றறிந்தார் தல்ஸ்தோய். சாலமன் கூறுகிறான், ‘சூரியனுக்கீழே மனிதனின் அத்தனை உழல்வுக்குமான லாபம்தான் என்ன? ஒரு சந்ததி கழிய அடுத்தது தழைக்கிறது. எனினும் பூமி என்றைக்குமாய் நீள்கிறது. இங்கு எதுவுமே புதிதல்ல.’ இம்மாமனிதர்களைப் போன்றே நானும் எண்ணுகிறேன். கால தேச வர்த்தமானங்களுக்கும் காரண காரியங்களுக்கும் உட்பட்டும் அப்பாற்பட்டும் இங்கு எதுவுமில்லை என்பதே என் பதில்.
பகுத்தறிவால் கண்டதென்னவோ எல்லைக்குட்பட்டதை எல்லைக்குட்பட்டதுடனும் அதற்கு அப்பாற்பட்டதை அதனுடனும் ஒப்பிட்டு பொருண்மை பொருண்மையாகவும், ஆற்றல் ஆற்றலாகவும் அவா அவாவாகவும் எல்லைக்குட்பட்டது எல்லைக்குட்பட்டதாகவும், ஒன்றுமின்மை ஒன்றுமின்மையாகவுமே தொடர்கின்றன. அதுதாண்டிப் போக இயலவில்லை. வாழ்க்கை அர்த்தமற்றதாயினும் அவ்வாழ்வுக்கான நம்பிக்கை அதற்கான அர்த்தத்தையும் வாழ்வதற்கான சாத்தியத்தையும் பெற்றுத்தருவதாக அறிந்தேன் என்கிறார்.
‘செறிந்து அறிந்து நாடிச் செவ்விதாயுள்ள அறிந்தரனை ஆய்ந்து கொளல்’ என ஒளவைக்குறள் உரைப்பதுபோல் ஆரம்பம் முதலே எல்லைக்குட்பட்டதற்கும் அதற்கு அப்பாற்பட்டதற்கும் இடையிலான உறவை வார்த்தைக்குட்படுத்த முயல்வதே மானுடத்தின் தேடலாக இருந்துவருகிறது’ என்றறிகிறார்.
‘அனைத்தின் தோற்றம் போல, அனைத்தைப் பற்றிய விளக்கமும் மறைபொருளாய் எல்லையற்றதில் பொதிந்திருக்க வேண்டுமென்பதை நானறிவேன். எனினும் தவிர்க்கவியலாமல் உய்த்ததுணர முடியாத நிலைக்கு ஆளாவேன் என்பதால் அதைப்பற்றி அறிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. உய்த்ததுணர முடியாதவை அப்படியே இருக்கட்டுமென்றே விரும்புகிறேன். நுண்ணறிவு அத்தனை திடமானதல்ல என்பதால் அல்ல (அது திடமானதுதான் ஆனால் அதற்கு அப்பால் அதுபற்றி என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை). ஆனால் நுண்ணறிவு எல்லைக்குட்பட்டது என்பதால்தான். உய்த்ததுணர இயலா தருணங்கள் வாய்க்கையில் அது காரணகாரியங்களின் தேவையைக் கொண்டதாக இருக்கவேண்டுமே தவிர நம்பிக்கையின் எதிர்பார்ப்பாக இருத்தல் கூடாது என்பதாலேயே நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.’
வெறும் அறிவின் வழியன்றி உணர்வின் வாயிலாகவும் மெய்ஞானப் பயணம் தொடர்தல் சித்தர்வழி. திருமந்திரம் பாடலொன்று ‘வெளியில் வெளிபோய் விரவிய வாறும், அளியில் அளிபோய் அடங்கிய வாறும், ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறுந்தெளியும் அவரே சிவசித்தர் தாமே’ என்கிறது. பிரபஞ்ச உணர்வு வெளியில் வியாபித்து அன்பில் நெகிழ்ந்தடங்கி ஞானப் பேரொளியில் அமிழ்ந்து தெளிந்துணரும் சித்தரே அவராகிறார்.
ரூமி பாடுகிறார்:
ஒரு நிலவெளியுள்ளது
அங்கு உனைச் சந்திப்பேன்
அப்புல்வெளியில் ஆன்மா
படுத்திருக்கையில்
எதுபற்றியும் பேசுவதற்கு அன்றி
உலகம் வெகுவாய் நிரம்பிக்கிடக்கிறது
கருத்துகள், மொழி
அவற்றின் வழியான சொற்றொடர்
எவ்வொன்றும்
புலப்படுவதாய் இல்லை.
அவ்வகண்ட பரப்பின் வெளியில்தான் தல்ஸ்தோய் எனும் மகானும் உலவுகிறார்.
1 comment
சிந்தனை தெளிவுமிக்க கட்டுரை நன்றி.
Comments are closed.