அரச விரலும் குழந்தைக் குரலும்

2 comments

மாரியம்மன் கோவிலில் கம்பம் சுத்தி ஆடுகிற அரைக்கால் சட்டைப் பையன்கள் நாங்கள். மேளச்சத்தம் எதுவும் கேட்டுவிட்டால், கூச்சலிட்டபடியே வீட்டுக்குள்ளிருந்து தெருவுக்கு ஓடி வருகிறவர்கள். சாவு வீடுகளில் நாக்கை மடித்துக்கொண்டு அடவு கட்டும் நரைமீசைக் கிழவர்களின் மாணவ மணிகள். ’இளமையில் வறுமை’ குழுவைச் சேர்ந்த எங்களை, இப்படி ’இளமையின் இனிமை’ என்று நினைத்துப் பார்க்க வைப்பதில் ஒலிவடிவாக பெரும்பங்கைச் செலுத்தியவர் அய்யா ’திரையிசை’ அவர்கள்தான். அவர்தான் கல்யாண வீடுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் கட்டும் கூம்பொலிப் பெருக்கிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் சந்தோஷ அணில்களை எங்கள் தோள்களில் ஏற்றிவிட்டார். அவைகளோ எங்கள் செவிகளுக்குள் குட்டிகளை ஈன்றுகொண்டேயிருந்தன. 

’மாமே(ன்) ஒரு நா(ள்) மல்லியப்பூ கொடுத்தா(ன்)….’

இப்படி ஒரு பாட்டு ஓடியது. நாங்கள் அதைக் கொண்டாடினோம். ஏனென்றால் அந்தப் பாட்டுக்குள் எங்கள் வீட்டுப் பானைகள் இருந்தன. சோற்றுத்தட்டுகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் தாளம் கொட்டி விளையாடும் தகர டப்பாக்கள் இருந்தன. அந்தப் பாட்டுக்குள் வேடிக்கைப் பார்க்க வெவ்வேறு சித்திரங்கள் இருந்தன. நையாண்டி இருந்தது. ஒரு நாடகம் இருந்தது. அந்தப் பாட்டுக்குள் குரலொன்றும் இருந்தது. அந்தக் குரலுக்கு எங்களைப் போலவே பித்துப் பிடித்திருந்தது. அதுவும் எங்களைப் போலவே அரைக்கால் சட்டையை அரைஞாண் கயிறுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, பின்னந்தலைக்கு ஒரு கையும், இடுப்புக்கு ஒரு கையும் கொடுத்து டப்பாக் கூத்தாடியது. அந்தக் குரலுக்கும் எங்கள் குரலில் இருந்தது போலவே பொய்ப்பிசிறு இருந்தது. அந்தப் பைத்தியம் தேங்காய்ப் பூவாகச் சிரித்துக்கொண்டே இருந்தது. காலங்கள் தோறும் அணில்கள் எங்கள் முதுகை வருடிக்கொண்டேயிருந்தன. 

வேறு ஒரு காலம். மேல் உதடுகளில் மீசை மயிருக்கு மாற்றாக வியர்வை முத்துகள் பூத்துக்கொள்கிற பருவம்.

தேநீர் அருந்துவதாக பேர் பண்ணிக்கொண்டு புகை ருசிக்காக ஒதுங்கியபோது ஓலைக்கொட்டிலின் மூலையில் ஒலிப்பெருக்கிகளின் கூடுதல் அதிர்வுக்கெனக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த மண் பானைக்குள்ளிருந்து குதிரைகள் எழுந்து வந்தன. சப்தசுரங்களின் பிடரிப் பொன்னரும்புகள் காற்றில் சிலும்பிப் பறக்க, தேர்க்குடையடியில் அமர்ந்திருந்த அரூப ராஜ குமாரர்களை நாங்கள் பார்த்தோம். பெருமையிலும், பொறாமையிலும் நாங்கள் அவர்களுக்குச் செல்லப்பெயரிட்டோம். ‘மொட்டையும், குண்டனும்!’  

இருவரிலொருவர் எங்களைப் பார்த்து ’எடுத்து நான் விடவா’ என்று கேட்க, ஒப்புக்கொண்டு நாங்கள் தலையசைக்க, அந்தப் பாட்டுக்கு இடையில் ஒரு அதிசயம் நடந்தது.

சப்தப் பிக்குவான மொட்டைத் தலையர் ஒரே ஒரு தடவை உற்சாகமாக ’சபாஷ்’ என்றார். உடனே அத்தனை வயலின் குருவிகளும் சொல்லிவைத்தது போல

சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் – சபசப 

சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் 

என்று அநியாயத்திற்கு கூட்டுக்குரலில் ஒத்துப்பாடின. 

நம்பவே முடியாமல் திரும்பத் திரும்ப  வயலின்களைக் கேட்டு உறுதி செய்துகொண்டோம். ஆடுகளைக் கோலேந்தி மேய்க்கிற பையனாக வாத்தியங்களை மேய்க்கும் ராசாவையும், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கூடவே நடக்கும் அவரது  நகரத்தோழன் பாலுவையும் எங்களது பிரதிகளாகவே கண்டோம். ஆர்வமிகுதியில் நாங்களும் முயன்று,

த…. த…. தகிட,   தி…தி… திமித,   கி…கி… கிடத

என்று முக்கித் திணறியபோது தலையைத் தடவி, “ரொம்பத் திக்குதா?” என்று ஆதரவாகக் கேட்டார் திருக்குண்டர். தோற்றுப்போன தினவு தீர, அந்தாளின் தொப்பையைக் கட்டிக்கொண்டோம். மறுபடியும் சாகசக்காரர்களின் சைக்கிளை எடுத்து குரங்குப்பெடல் போட யத்தனித்து குப்புற விழுந்தோம். 

தண்ணீர் என்பது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் இரண்டும் சேர்ந்த நீர்ம வடிவம் என்பதை நினைவில்கொள்ள ராசய்யாவின் இசையலையும், பாலய்யாவின் குரல் துடுப்பும் சேர்ந்த சித்திரம்தான் அந்த மோகன முகம் என்று ஒப்புமைப்படுத்திக்கொண்ட தலைமுறையான நாங்கள், மனப்பாடமான ’மன்றம் வந்த தென்றலை’ வரிவரியாகச் சொல்வோம். 

‘சொந்தங்களே இல்லாமல்

பந்தபாசம் கொள்ளாமல்

பூவே உன் வாழ்க்கைதான் என்ன? சொல்’

’விண்ணோடுதான் உலாவும் 

வெள்ளி வண்ண நிலாவும் 

என்னோடு நீ வந்தால் என்ன? வா’ 

’சொல்’ மூணு தடவைதான். ஆனா, ’வா’ நாலு தடவை தெரியுமா?’ 

சரண முடிவுகளில் விரவி நிற்கும் அந்த ’சொல்’லையும் ’வா’ வையும் அவைகளின் குட்டிகளான எதிரொலிகளையும் எங்கெங்கெல்லாம் தேடியிருக்கிறோம் தெரியுமா? வீடுகளுக்குச் சுண்ணம்பூசும் வகுப்புத் தோழன், ஆளும் பொருளும் இல்லாத அறைகளுக்குள் அவைகளைக் கண்டதாகச் சொன்னான். காலிக் குடங்களினுள்ளேயும், கிணற்றுப் படிகளிலுங்கூட அவற்றைத் தேடியிருக்கிறோம். கிடைக்காத இடங்களில் தளராமல் நாங்களே அதை முயலும்போது எங்காவது படுத்திருக்கும் ஒரு நாய்க்குட்டியின் சமநிலையாகிலும் குலையும் என்பது கண்கூடு.   

’க, ம, ரி,…’ என்று உச்சந்தலையைக் கீறித் துவங்கும் ’வேதம் அணுவிலும் ஒரு நாதம்’ போன்ற சாஸ்திரிய சங்கீத அடிப்படையில் அமைந்த மெட்டுகள் ஒலிக்கும் போதெல்லாம், பயத்தில் வாத்தியார் கணிதச் சூத்திரத்தை விளக்கும்போது முகத்தை வைத்திருப்பது போல வைத்துக்கொண்டிருப்போம். ’ஆயிரம்தான் இருந்தாலும், இவ்வளவுதூரம் ’ஒண்ணா மண்ணா’ பழகிவிட்டு இப்படி நீங்கள் அநியாயம் செய்திருக்கக்கூடாது எங்களுக்கு’ என்று மானசீகமாக அவர்களிடம் கோபித்துக்கொள்வோம். பயமுறுத்தும் ஜதிசுரங்களை அது ஏதோ வேறொரு தேசத்து மொழி என்றுதான் ரொம்ப வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தோம். ஆசான்கள் விடாப்பிடியாக ‘கூட்டத்திலே கோயில் புறா’, ’சங்கீத ஜாதி முல்லை’ என்றெல்லாம் தொடர்ச்சியாக காதுவழிக் கல்வியைப் புகட்டியதால் பிழைத்தோம்.

சில வருடங்களுக்கு முன்பு ஆர்வமுள்ள எல்லோரும் பாடலாம் என்று சொன்ன ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியின் தற்கால வடிவம்தானே smule? பழுப்பேறிவிட்ட பழைய நாட்களில் வீட்டையும், நண்பர்களையும் தாண்டினால் எங்களது பாடும் ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளும்படியான ஒரே வழியும், உச்ச இலட்சியமும் மெல்லிசைக் குழுக்களில் சேர்வதுதான்! ஒத்திகை பார்க்கும் மும்முரத்தில் முதல் பார்வையிலேயே எங்களை நிராகரித்துவிடும் அவர்களது அறையை ஏக்கத்தோடு பார்த்தபடி, பிளேடை சரியாகக் கையாளத் தெரியாத அரைகுறை ஜேப்படிகள் இரண்டு பேர், முதுகில் செவ்வரிகளோடு, காவல் நிலையத்துக்குள் குத்தவைத்துக்கொண்டு, ஜெகஜ்ஜாலத் திருடர்கள் இருவரின் சாகஸங்களை சிலாகித்துக்கொள்வதைப் போல நானும் என் நண்பனும் பேசிக்கொள்வோம். அப்போதும் இப்போதும் எங்களைப் போன்றவர்களின் பேச்சில் நின்று, நிறைந்து, பொங்கி வழிகிற அந்த இரண்டு பேரும் ஆக்கிரமித்துக்கொண்ட இரவுகள்தான் எத்தனை! பாடல்கள் எத்தனை! பரவசம் எத்தனை! கண்ணீர் எத்தனை!

திருமண வரவேற்பில் மணமக்கள் வாழ்த்துகளை, ஆசிகளை ஏற்றுக்கொள்வதில் கவனமாயிருக்க, துணைப்பெண்ணும் துணை மாப்பிள்ளையும் நூல் விட்டுக்கொள்வதைக் கவனிக்கும் ஒரு கூட்டமுண்டு. ராஜா வீட்டுக் கல்யாணங்களைப் பொறுத்தவரை மணமக்களைத் தவிர 

தந்திவாத்தியம் – துளைக்கருவி, 

கொட்டுவாத்தியம் – கன கருவி   

இப்படி மொத்த மண்டபமும் இணையிணையாக ஆடிக்கொண்டிருக்கும். இதற்கிடையில் மணமகன், ’நான்தான் மாப்பிள்ளை!’ என்று சாகசம் நிகழ்த்த வேண்டும். நிகழ்த்துவார் மணமகன் பாலு! இன்ன பாடல் என்றில்லை. எத்தனை வகையாகப் பட்டியலிடுவது? காதலுக்கு ஒரு குரல், சோகத்துக்கு ஒரு குரல், எழுச்சிக்கு ஒரு குரல், தாபத்துக்கு ஒரு குரல், தெய்வீகத்திற்கு ஒரு குரல், தாலாட்ட ஒரு குரல், கொண்டாட்டத்திற்கு ஒரு குரல், சீண்டலுக்கு ஒரு குரல் என்று இளையராஜாவின் பாடகர்களைப் பிரித்து வைத்துக் கேட்கலாம். இரண்டு மூன்று வகைகளுக்குப் பொருந்திப்போகிற ஓரிருவர் உண்டுதான். ஆனால் அத்தனை பாவங்களுக்கும் பொருந்துகிற ஒரே குரல் எது? ’பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுதான்!’ அவர்கள், உடலிரண்டு பாடலொன்றாக பணியாற்றிய கலைஞர்கள். என்னுடன் கற்பனையாக ஒரு விளையாட்டுக்கு ஆயத்தமாகிறீர்களா? எனக்குப் பள்ளித்தாளாளர் வேடம். சரியா? நீங்கள்தான் இந்த இருவரின் பெற்றோராம்! நம்மை இந்தக் கதிக்கு ஆளாக்கிய இருவரும் கைகளைக் கட்டிக்கொண்டு அப்பாவிகளாக நிற்கிறார்கள். நான் குற்றப்பட்டியலை வாசிக்கட்டுமா? 

’பார்த்தீர்களா இந்தப் பையன்கள் செய்து வைத்திருக்கும் காரியங்களை? எனக்கு எல்லாவற்றையும் சொல்ல அவகாசமில்லை….

அட மாப்பிள்ள… சும்மா மொறைக்காதே மச்சான் சொன்னா கேளு’ 

ஓரங்கா ஸ்ரீ லங்கா கொப்பரைத் தேங்கா

ஏ அய்யா சாமீ…. அட நீ ஆளக் காமி

மாமா ஒம் பொண்ணக் குடு’ 

நம்ம கடை வீதி கலகலக்கும்

அண்ணாத்தே ஆடுறார்

இதுபோல இந்த இரண்டுபேர் மட்டும் சேர்ந்து போட்ட கும்மாளத்திற்கு அளவேயில்லை. சில நேரங்களில் மைதானத்தில், குறிப்பிட்ட எல்லைக்குள் விளையாடுகிற பிள்ளைகள் போல, 

’சந்தைக்கு வந்த கிளி’

மாங்குயிலே

மாடத்திலே கன்னி மாடத்திலே

‘அடுக்கு மல்லிகை…. ஆள் புடிக்குது’

சிவகாமி நினைப்பினிலே

மயிலாடும் பாறையில

 ‘ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா?’

இப்படி இருக்கிறார்கள். பல சமயங்களில் வீட்டுப்பாடம் செய்துவிட்டு, கைகட்டி உட்கார்ந்திருக்கும் நல்ல பிள்ளைகளாக,

முத்தாடுதே முத்தாடுதே

’பேசக் கூடாது…’

பெண்மானே சங்கீதம்

மாலை சூடும் வேளை

ஓ வசந்தராஜா

சந்தனக் காற்றே

இப்படியும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வேஷம் போடுவதில் இருவரும் கில்லாடிகள். விபூதி பூசிக்கொண்டு அப்படியே கோவிலுக்குள் அமர்ந்திருப்பது போல,

’வந்தாள் மகாலக்ஷ்மியே’

இளஞ்சோலை பூத்ததா

’வெள்ளிச் சலங்கைகள்’

பூவில் வண்டு கூடும்

தோகை இளமயில்

ராக தீபம் ஏற்றும் நேரம்’  

என்று இருக்கிற இவர்கள் செய்கிற இன்னொரு காரியம் தெரியுமா? அத்துமீறி சுவர் ஏறிக்குதித்து விடுகிறார்கள். அங்கே இருதயம் என்றொரு குழந்தை இருக்கிறான். அவனைப் பிடித்து அமுக்கி, 

இதயமே இதயமே

வானுயர்ந்த சோலையிலே

உச்சி வகுந்தெடுத்து

பாடிப் பறந்த கிளி

ஒன்ன நெனச்சே

போகுதே போகுதே

’வைகரையில் வைகைக் கரையில்’

உதயகீதம் பாடுவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

என்றெல்லாம் இருவருமாக சேர்ந்து குத்திக் கிழித்துவிட்டு வந்து ஒன்றுமே தெரியாதவர்கள் போல இருப்பார்கள். பாவம் அந்தக் குழந்தை! ஆறாத காயத்தோடு பதைபதைத்தபடியே இருப்பான். பிரச்சினை என்னவென்றால் அவனை அப்படியே இருக்கவும் விடமாட்டார்கள். தூக்கி மடியில் போட்டுக்கொண்டு,

நிலவே முகம் காட்டு

நலம் வாழ எந்நாளும்‘

‘தேனே தென் பாண்டி மீனே

எல்லோரும் சொல்லும் பாட்டு

மலையோரம் வீசும் காத்து

‘பச்சமலைப் பூவு ’

என்று தலை கோதுகிறவர்களும் இவர்கள்தான்.

நீங்களே பாருங்கள். அரச உடையணிந்து டாம்பீகமாக மேடையேறி வந்து, 

’காதல் மகராணி ‘

காவிரியே கவிக்குயிலே

வானம் கீழே வந்தால் என்ன?

பூ மாலை ஒரு பாவை

ஏய் உன்னைத்தானே

‘மேகம் கொட்டட்டும்’

என்றால் பெருமிதமாகத்தான் இருக்கிறது. நெஞ்செல்லாம் விரிந்து கொள்கிறது. ஆனால் சமயங்களில், ’சிங்காரிச் சரக்கு’ என்று லுங்கியை மடித்துக்கொண்டு புழுதி கிளப்பவும் செய்கிறார்கள். நம்மால் நம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்க முடிவதில்லை. இப்போதும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்தான் இப்படி விதவிதமாய்ப் புலம்புகிறோம். மூன்று தலைமுறைக்குப் பாடிய பின்னரும் தன் பாடலின் சுருதியை, தாள வேகத்தை குறைத்துக்கொள்ளாமல் ராஜாவாகவே இருந்து, போகும் போதும் ராஜாவாகவே போனார் பாலு.

நமது வீதியில் வசிக்கிற 60 வயது பெரியவர் ஒருவர், ’கக காகி கீகூக்கு கக்கக்கே குக்குக்கு கேக்கே’ என்று பாடுவதாக வலிந்து கற்பனை செய்தாலும் மனம் பொருந்துவதில்லை. எழுபதைத் தாண்டியும் சாரீரம் தளரவேயில்லையே இருவருக்கும்? குறிப்பிட்ட காலகட்டத்தில் கேரளத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் எந்த ஆண்பிள்ளை பாடினாலும் அதில் யேசுதாஸின் பாதிப்பு இல்லாமல் இருக்காது. அதே காலகட்டத்தில் தமிழகத்திலும், ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் பிறந்த ஒருவரையும் ’சுப்பிரமணி’ விட்டு வைக்கவில்லை. ’ராசுக்குட்டி’யோ இதில் எந்த மாநிலத்தையும்  மிச்சம் வைக்கவில்லை. இளையராஜா என்றாலும் சின்னராசு என்றாலும் பாலசுப்பிரமணியம் என்றாலும் குட்டிப்பையன் என்றாலும் பொருள் ஒன்றுதான். மற்ற பாடல்களைப் பாடும்போது பாலுவாகவே இருக்கிறவர் ராஜபாலுவாக ரூபங்கொள்வது எப்போது என்பதை நாமறிவோம்.

’எனக்காக அவர் பிறந்தார். அவருக்காகவே நான் பிறந்தேன்’ என்று அவரே சொல்கிறார். ‘இசை என்பது ’நறுக்கப்பட்ட சத்தம்’ அல்லது ’காற்றைத் தவிர வேறொன்றுமில்லை’ என்பார் ராசய்யா. அவர் கட்டியமைத்த பாடல்களில் முன்னணிக் கருவிகள் மூச்செடுக்கும் இடைவெளிகளில் தாளக் கோவைகள் புடைத்தெழும் அழகை நமது செவிகளறியும். போலவே நிசப்தங்களின் பேரழகையும் அனுபவித்திருக்கிறோம். பாலய்யா மருத்துவமனையிலிருந்த போது அவரை எழுந்து வரச்சொல்லி ராசய்யா அழைப்பு விடுத்தார். திரைப்படங்களுக்குப் பணிபுரிவதற்கு முன்பாகவே மேடை மெல்லிசைக் கலைஞர்களாகவே இருவரும் இணைந்துவிட்டதைக் குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தவர், எதையோ யோசித்தவராக, வார்த்தைகள் கிடைக்காமல், ’பாலு………………’ என்று ஒரு இடைவெளி விட்டார். அப்படியொரு நிசப்தத்தின் கொடூரத்தை வாழ்நாளில் இதுவரை அனுபவித்தேனில்லை.

உலகப் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவிகள் எல்லாமும் மனிதர்களால் உருவாக்கப்படுகிறவை. குரல்வளை? ராசய்யா என்கிற சுரபூபதியின் தர்பாரில் தலைசிறந்து விளங்கிய வாத்தியம் ஒன்று நேரடியாக கடவுளின் கையால் செய்யப்பட்டது.  

வாழ்க மொட்டை! வாழ்க குண்டன்!

2 comments

Rafiq June 2, 2021 - 2:10 pm

ஆஹா அபாரம்

n.sathayn June 7, 2021 - 1:14 pm

வாழ்வின் தீராத பக்கங்களை….., பாடும் குரலும், ஸ்வரம் மீட்டும் விரலும்,… வெட்டவெளி மோனக்கிறக்கமாய், அநாதியாய் காற்றில் தலையசைக்கும், மலையுச்சி தவமரமாய்,… நம்முள் மெல்லக்கரைந்து,… நம் வாழ்வை ….உணர்வுகளின் ரசவாதமாய், நிகழ்வுகளின் பிரசாதமாய், ஆக்கி வைத்திருக்கும்… அற்புதத்தை சிலாகிக்க வார்த்தைகளில்லை…. மொட்டையும் குண்டனும் வாசிக்க வேண்டிய படைப்பு …..சொற்கள் தீர்ந்துபோய் ,நான் அந்தாளின் தொப்பையை கட்டிக்கொள்கிறேன் …..
சத்யன் நீலகண்டன்

Comments are closed.