அதிகாலையில் ஒலிக்கப்படும் இசையில் குளிர் இருக்கிறது. மென்குளிரில் நீர்நிலையில் மேல் ஏற்படும் சிறு அதிர்வை ஒத்திருக்கிறது. காதுகளுக்குள் நுழையும்போது இதமான குளிருடன் நுழைகிறது. அந்தக் குளிர், பனிபடர்ந்த உயரத்திலும் அந்தரத்திலும் உடலைத் தூக்கிச் செல்கிறது. இனிய மதுவை முகர்ந்து பார்க்கும் சிலிர்ப்பு, சிறுதுளியாக உதடுகளில் விழுந்து வயிறை அடையும் பிரம்மாண்ட தருணம் இசையின் தொடக்கம். மேலேறும் வயலினின் ஓட்டத்தை இடைநுழைந்து அலகுகளாகப் பிரிக்கும் பியானோவின் இசை, இவற்றை குதிரை ஓட்டத்தோடு பின்தொடர்கிறது தபலா. 

எங்கே நிற்கிறேன்? என்னை மறந்து தூங்கும் கனவுலகத்தின் அமைதியோடு நிற்கிறேன்.

வெவ்வேறு வகையான ஓசைகள் ஒன்றிணைந்து அழகிய இசைத் தொகுதியாக மாறுவதுபோல் தெரிகிறது. ஆண் குரல் ஒன்று இசையில் தனித்து ஒலிக்கையில் பெண்குரல் சேர்ந்து ஒலிப்பது அதன் தாளத்தில் புரிகிறது. தாளம் இப்போது ஏறியிறங்கும்போது பொருளற்ற ஓசை குறுக்கிடுவதைக் கண்டு திடுக்கிட்டார். ஆழ்ந்த கனவில் ஏற்படும் பயம்போல, அவ்வோசை தன்னை நோக்கி வருவதை உணர்ந்தார். அந்தத் திடுக்கிடலை முன்பே அறிந்ததால் கனவுலகை வேகமாக கலைக்க ஆரம்பித்தார். நேரமாகிவிட்டதா? குளிரை உறிஞ்சி, இருள் போர்வையை எடுத்துக்கொண்டுவிட்டதா புதிய ஒளி? 

புதிய தாளம் இன்னும் வேகமாக குறுக்கிட திடுக்கிட்டு கண்விழித்தார் சுந்தரலிங்கம். வெளிச்சம் முழுமையாக வந்துவிட்டிருந்தது. கண்கள் கூசின. இசைக் கருவியை அணைக்க வேகமாக எழுந்தார். நினைவுமீள சட்டென தன் உடல்மொழியை மாற்றி மெல்ல தள்ளாடியபடி நடந்துசென்று அதன் ஒலியைக் குறைத்தார். அதற்குள் சரியாக சர்மிளா வந்திருந்தாள். அவள் அணிந்திருந்த சுடிதார் காற்றில் ஆடுமளவிற்கு வேகமாகப் படியேறி வந்திருந்தாள். அவள் கண்கள் பெரிதாகி கலங்குமளவிற்கு இருந்தன. அவளுக்கு மூச்சு இறைக்க, அதே வேகத்தில் பேசினாள். 

“மாமா, மாமான்னு எத்தனவாட்டி உங்கள கூப்பிறது? இந்த சத்தத்துக்கு ஒரு அளவேயில்லையா? ஏன் இப்படி காலங்காத்தால உயிர வாங்குறீங்க? கீழ வந்து கேட்டுப் பாருங்க இந்த சத்தத்த.. தலைல இடி உழுந்தமாதிரி இருக்கு. சை…”

அங்கே நின்றால் மேலும் வாக்குவாதம் தொடரும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று பயந்து அதே வேகத்தில் கீழே சென்றுவிட்டாள். படிகளின் அதிர்வு மீண்டும் இசையை நினைவுபடுத்தியது.

“ஏங்க, அப்பாகிட்ட எத்தன முறை சொல்றது? தெனமும் சொல்லணுமா அவருக்கு? நீங்க எல்லோருக்கும் நல்லவரு.. உங்க அப்பாகிட்ட எதுவும் கேட்க மாட்டீங்க.”

“கேட்டா.. என்ன சொல்லப் போறாரு? அதே பல்லவியத்தான் பாடுவாரு”. சாய் சுதன் தன் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தார்.

“ராத்திரி தூங்கும்போது இடிவிழும், சாயந்தரம் புள்ளைங்க படிக்கும்போது இடிவிழும். காலங்காத்தால திருப்பியும் இப்படி பண்ணா என்னதாங்க பண்ணுவேன்?”

கீழே பேசுவது தெளிவாகக் கேட்டது. சுந்தரலிங்கம் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தார். அவளுக்கு வீடென்பது அமைதியாக இருக்கும் இடம். ஓசையற்ற பெருவெளியை அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை. தன்னிடமிருந்து இசையைப் பிரித்தால் தன்னால் வாழவே முடியாது எனத் தோன்றியது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, துயரம், நெகிழ்வு என்று எல்லாத் தருணங்களும் இசையால் மட்டுமே நிறைவுபெறும். ஏனோ இது மனிதர்களுக்குப் புரிவதேயில்லை. மருமகளின் செய்கையை வேகமாக மறக்க நினைத்தார். கண்களின் மேல் மெல்லிய படலம் ஒன்று படிந்திருந்தது. அது தூக்கத்தை அழைத்தபடி இருந்தது.

பரமு எப்போது வருவான் என யோசிக்க ஆரம்பித்தார். அவன் சரியான நேரத்திற்கு வந்ததேயில்லை. எப்போதும் தாமதம்தான். வழியில் இவனைப் பார்த்தேன், அவனைப் பார்த்தேன் என்பான். தப்பிக்க அவன் சொல்லும் காரணமோ என நினைப்பார். ஆனால் அவனது நட்புவட்டத்தை நினைக்கும்போது சொல்வது சரிதான் எனத் தோன்றும். 

எழுந்து சவரம் செய்து குளித்து முடித்து வேட்டியை அணிந்துகொண்டு படிக்கட்டுக்கு வந்தார். படிக்கட்டின் கடைசியில் இரு பாத்திரங்கள் இருந்தன. கிணற்றின் அடியாழத்தில் இருக்கும் நிலவொளி போலத் தெரிந்தது. அத்தனை கீழே இறங்க வேண்டுமா எனத் தோன்றியது. மெதுவாக கீழே இறங்கி மூடியிட்ட இரு பாத்திரங்களை எடுத்துவந்தார். ஒன்று ஹாட்பேக் என்பதால் இட்லியின் சூட்டைத் தக்கவைத்திருந்தது. தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு எதிரே டீபாயில் இருந்த டம்ளரில் தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

இட்லியைப் பிட்டு சட்னியில் தோய்த்து வாயில் இட்டார். சுவையில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று பார்த்தார். பெரிதாக மாற்றமில்லை. வாய்ச்சண்டைக்குப் பின் எப்போதும் சுமாராகத்தான் எதையாவது செய்துவைப்பாள். இன்று அப்படி எதுவும் தெரியவில்லை எனச் சமாதானமடைந்ததும் தொலைக்காட்சியில் கவனம்கொண்டார்.

கையைக் கழுவும்போது படிகளில் ஓசை கேட்டது. படிகளின் ஓசையை வைத்து கண்டுபிடித்துவிட முடியும், பரமுதான் வருகிறான். அப்பாடா என்றிருந்தது. இன்றைய காலை நிகழ்விலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அது அமையும். ஆனால் அவன் வருவதை எதிர்பார்ப்பது போல அவர் காட்டிக்கொள்ளவில்லை. ஏதோ வேலையில் மூழ்கியிருப்பவர் போல கைகளை டவல் கொண்டு துடைத்தபடி தொலைக்காட்சியைப் பார்க்கும் கண்களில் தீவிரத்தன்மையை வரவழைத்துக்கொண்டார்.

படிக்கட்டு முடியும் அறையில் இடப்பக்கம் திரும்பி வேட்டி சரசரக்க “சுந்தர…ம்” என்று அழைத்தபடி வந்தார் பரமசிவம். மெதுவாக கண்களைத் தொலைக்காட்சியிலிருந்து எடுத்து பரமசிவத்தைப் பார்த்தார். “வா பரமு, உட்கார்” என்று நாற்காலியைக் காட்டினார். பரமசிவத்தின் முகத்தில் தெரிந்த உற்சாகம் அவரைத் துணுக்குற வைத்தது. என்றுமிருக்கும் உற்சாகத்தைவிட இன்று அதிகம். 

“என்ன பரமு… எங்க கிளம்பிட்ட?” என்றார். 

“என்ன சுந்தரம் மறந்துட்டியா, இன்னைக்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தோட சந்திப்பு இல்ல?” 

சுவரில் தொங்கும் மாதக் காலண்டரை திரும்பிப் பார்த்தார், “ஆமாம், மறந்துட்டேன்”.

பரமசிவம் கதர் வேட்டியும் கதர் சட்டையும் அணிந்திருந்தார். சட்டைப் பையில் விலைகுறைந்த வண்ணப் பேனாக்கள் தொங்கியபடி இருந்தன. அவற்றின் பின்னால் ஒரு சின்ன டயரி இருந்தது. அதில் தினசரி குறிப்புகளோடு, என்னென்ன நிகழ்வுகள் வரவிருக்கின்றன போன்றவைகளோடு நண்பர்களின் தொலைபேசி எண்கள், பிறந்த நாட்கள் என்று சில கலவையான செய்திகள் இருக்கும். எதையாவது கேட்டால் டயரியில் ஆர்வத்தோடு தேடிப்பார்க்க ஆரம்பித்துவிடுவான்.

“நா இப்பதான் சத்துமாவு கஞ்சிய குடிச்சிட்டு வரேன். நீ சாப்டியா?” என்றார்.

தான் கேட்க வேண்டியதென்ன என்பது அவருக்கு மறந்துவிட்டது. அதை நினைவுக்குக் கொண்டுவர முயன்றார். “ஆமா பரமு, இப்பதான் சாப்பிட்டேன். இட்லியும் சட்னியும். இனிமே மாத்திரைய போடனும்”.

“சரி, முதல்ல மாத்திரைய போடு, அப்புறம் விஷயத்த சொல்றேன்” என்றார்.

“மொதல்ல சொல்லு” என்று சொன்னபடி மெதுவாக நடந்துசென்று பச்சை வண்ண டப்பாவை எடுத்தார் அதில் பல அறைகள் இருந்தன. காலைக்கான அறைகளிலிருந்து வரிசையாக ஆறு மாத்திரைகளை எடுத்தார். மதியம் நான்கு மாத்திரைகள், இரவிற்கு ஆறு மாத்திரகள் உண்டு.

“ம்.. சொல்லு” என்றபடி அமர்ந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தார். பரசிவம் எதையோ டைரியில் எழுதிக்கொண்டிருந்தார். இரண்டிரண்டு மாத்திரையாக உள்ளே போட்டு தண்ணீரை விட்டார். பரமுவிற்கு மெல்லிய உடல். அதனாலேயே உயரமானவனாகத் தெரிந்தார். தலையில் உள்ள எல்லா முடிகளும் வெள்ளை. பின்மண்டை வழுக்கை வேறு. டை அடிக்கும் நினைப்பு அவரிடம் இருந்ததில்லை. வளரும் புற்கள் போல புள்ளிப்புள்ளியாக வெள்ளை முடிகள் கன்னத்தில். மீசை எடுத்த முகம். மூக்கிற்குக் கீழே இருந்த பள்ளம் உள்ளிருக்கும் பற்களின் ஒழுங்கின்மையைக் காட்டியது. 

“உனக்கு ராஜசேகரன நினைவிருக்கா? ஒல்லியா கண்ணாடி போட்டுகிட்டு இருப்பானே? அவன் மீட்டிங் வெக்கணும்னு ஆசப்பட்டான். நம்ம ஸ்கூல்ல 62-63ல எஸ்.எஸ்.எல்.சி படிச்ச செட்ட மீட்டிங் வைப்போம்னு பேசிக்கிட்டோம். முன்னாள் மாணவர்கள் சங்கத்தில இந்த முடிவ எடுத்திருக்கோம். இதாம் மொதோ வாட்டியா, ரொம்ப பழைய மாணவர்கள் சந்திக்கிற சந்திப்பு”.

“நீ அன்னைக்கு சொன்ன, ஆனா தேதிதான் மறந்துடுச்சு.”

ஆர்வம் நிரம்பிய கண்களோடு சுந்தரத்தை நோக்கினார் பரமசிவம். ‘ஒன்னும் பெருசா இல்லையே’ என்பது போல மெதுவாக இமைக்கும் கண்களோடு அவரைப் பார்த்தார் சுந்தரம். 

“இதுக்கு யாராவது வருவாங்களா என்ன?”

“என்ன இப்படி கேட்டுட்ட? உனக்கு நினைவு இருக்கா இல்லயான்னு தெரியல. ஜெயராமன்னு ஒருத்தன்.. மரக்கட ஜெயராமன் இல்ல, பழக்கடை ஜெயராமன். பெங்களூர்ல கொஞ்சநா வேல பாத்தாரு, அப்புறம் அமெரிக்கா போயிட்டாரு. அங்க சயிண்டிஸ்டா இருந்து ரிடையர்ட் ஆயி அங்கனயே செட்டில் ஆயிட்டவரு. அவரு வராரு. கே.என். கலியமூர்த்தி சென்னைல ஏஜிஎஸ்ல இருந்து ரிடையர்ட் ஆனவரு. அவரு வராரு. வி.பி.கிருஷ்ணையர் கல்யாண்ல இருக்காரு. அவரு வராரு, இது போதாதா?”

பரமசிவத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரலிங்கம். எத்தனை நினைவாற்றல்! எளிமையான உள்ளர்த்தமற்ற நேரடிப் பேச்சுகளைக் கொண்ட வார்த்தைகள். எந்த ஆண்டிலிருந்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள், இங்கிருந்து போனபோது அவர்களின் வயது, எத்தனை பிள்ளைகள், எங்கே அவர்கள் இருக்கிறார்கள், அவர்களின் பெயர், உத்தியோகம் முதற்கொண்டு அனைத்தையும் நினைவிற்கு கொண்டுவர முடிகிறது. 

கோஆப்பரேட்டிவில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து கிளர்க்காகி ரிடையர்ட் ஆனவர் பரமசிவம். தேவாரம், திருவாசகம் வகுப்புகள், சனிக்கிழமைகளில் சிலப்பதிகார வகுப்பு, மாதம் ஒருமுறை நண்பர்களுடன் கோயில் உலா என எல்லாமே அவருக்கு சாத்தியமாகிறது. முன்னாள் மாணவர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், லைப்ரரியில் வாசிப்பு சங்கம் என எல்லாவற்றிலும் உறுப்பினர், தலைவர், உப தலைவர் என்று என்னென்னவோ பதவிகள். வழியில் கிடைக்கும் அனைத்தையும் உண்கிறார். வாழ்க்கையில் அவருக்கென்று எந்தப் புகார்களும் இருப்பதில்லை.

“ஆமா பரமு, உன் ஒய்ஃப் செத்து எத்தன வருஷமாகுது?” என்றார் சுந்தரலிங்கம். 

இதுவரை கேட்காத கேள்வியினால் சற்று தடுமாறினார் பரமசிவம். இலேசாக சிரித்தபடி, “நாலு வருசம் ஆவுது” என்றார்.

திடீரென பேசும் விஷயத்தை மாற்றி வேறொன்றைக் கேட்டது ஏன் என்று அவருக்குப் புரியவில்லை. “ஏன் இப்ப இத கேட்குற?” என்றார். 

“இல்ல…” என்று சற்று தடுமாறியவர், “உன் பொண்டாட்டி செத்தது உனக்குப் பெரிய கவலையா தெரியலயோன்னு நினைச்சேன்.”

“அப்படியா நினைக்குற? நா ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியுதா?”

“ஆமா அப்படித்தான் தெரியுதுன்னு வெச்சுக்கயேன், சிரிச்சுக்கிட்டே ஊர் சுத்துறியே?”

சற்று நேரம் அமைதியாக இருந்தார். சட்டென பேச ஆரம்பித்தார்.

“நீ படிப்பு, வேலை, வீடுன்னு இருந்தவன்… நா அப்படி இல்லையே? அப்பலேந்தே எதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன். இப்ப எனக்கு இருக்குற வேலையவிட அப்போ அதிகம். வேலைக்குப் போயிட்டு வந்துட்டு உடனே டியூசன் எடுக்கப் போயிடுவேன். விசேஷத்திற்கு பாத்திரங்களை வாடகைக்கு விடற வேலை வீட்டுல இருந்துச்சு. தெருவில கல்யாணம், சாவுன்னாலும் நாந்தான் இருக்கணும். அப்படி வரலேன்னா வீடுதேடி ஆளு வந்துடும், அதனால இப்படியே பழகிடுச்சு சுந்தரம்.”

“ம்ம்…”

“நீ தஞ்சாவூரு கோர்ட்ல வக்கீலா இருந்து ஜட்ஜாயி ரிடையர்ட் ஆனவன். உனக்கு அந்த வேலையே சரியா இருந்திருக்கும். கட்டுக்கட்டா புத்தகத்த படிக்கணும், குறிப்பெடுக்கணும், நேரத்துக்கு வேலைக்கு போகணும், அதெல்லாம் என்னால முடியுமா? உன்னளவுக்கு அறிவுள்ளவனா நானு? சொல்லு…”

அவர் சொன்னதில் சற்று பெருமையடைந்து நிமிர்ந்து அமர்ந்தார் சுந்தரலிங்கம். ஆனால் பரமுவிடம் இப்படியொரு குணம் இருக்கிறது. எல்லோரிடமும் அவர்கள் பெருமையை சொல்லிக்கொண்டிருப்பான். அது உண்மையா? காரியமாக எதாவது சொல்கிறானா? எளிய புரிதலை தன்வாழ்கையில் கொண்டிருப்பவனா? இதுவரை அவருக்குப் புரிந்ததில்லை.

“நீ வர்ற இல்ல? எப்பவும் போல கால்வலி, செக்கப் இருக்குன்னு எதாவது சொல்லாத.. கண்டிப்பா வா. எல்லாருக்கும் கார்டு, மெசேஜு, மெயிலு அப்புறம் வாட்சப் எல்லாம் அனுப்புறோம். பெரிய விழாவா இருக்கும். நாள் முச்சூடும் இருக்கும்.”

“நாள் முச்சூடுமா?”

“பத்துலேந்து நாலு மணிவரைக்கும். அங்கேயே சாப்பாடு உண்டு. உனக்கு முடியல்லண்ணா ரெண்டு மணிக்கு வந்துடு.”

“அப்ப சரி, வரேன்”

வரேன் என்று சொல்வது அவர் வழக்கம். வராமல் இருந்துவிடுவதுதான் நிகழ்ந்திருக்கிறது. எப்போதும் இம்மாதிரியான நிகழ்வுகள் சொன்ன நேரத்திலிருந்து ஒருமணி நேரம் பின்தங்கியே ஆரம்பமாகும். அந்த எரிச்சலாலேயே அவர் போவதில்லை. அதீதமாக பேச்சுகள் நீளும் இடங்கள் இவை. எப்படி மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வார். இன்று அப்படிச் சொல்ல முடியவில்லை. 

“சரி, பேண்ட் சட்டையை போட்டுக்கிட்டு கிளம்பு” என்றார்.

ஆட்டோவிற்கு சொல்லி வரவழைத்தார் சுந்தரலிங்கம். தனக்கான ஒரு செட் மாத்திரைகள், தண்ணீர் பாட்டில், சின்னப்பை என்று புறப்பட்டார். நன்கு அயர்ன் செய்த தூய வெள்ளைச் சட்டை. சாம்பல்வண்ண கால்சராயின் மேல் கறுப்பு பெல்ட். தொப்பை இருந்தாலும் பேண்ட் உடலில் சரியாகப் பொருந்தியிருந்தது. பெல்ட்டின் கருமைபோலவே நன்கு பாலீஷ் செய்யப்பட்ட கறுப்பு ஷூ அணிந்திருந்தார். அதனாலேயே மிடுக்கு வந்ததுபோல படிகளில் இறங்கிவந்தார். பரமு எப்போதும் போல கதர் வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தார். வெள்ளைச் சட்டை ஆங்காங்கே பழுப்பு வண்ணத்தைப் பெற்றிருந்தது. மஞ்சள் பையை கையில் வைத்திருந்தார். நெற்றிநிறைய விபூதி பூசியிருக்க, தலையில் காந்தி தொப்பி.

“நீ கோர்ட்க்கு போற மாதிரியே வர்றப்பா” என்றார் பரமசிவம். புன்சிரிப்போடு பேசாமல் வந்தார்.

ஆட்டோ குலுங்கலுடன் போய் இறங்கியபோது கரையான் அரித்த பலகையின் வாசனையை நினைவுபடுத்தியது பள்ளி. அந்நாட்களில் பள்ளியின் முகப்பு வேறுமாதிரி இருந்தது. அவர்கள் சென்றிறங்கிய போதே ஒரு சிறுகூட்டம் கட்டிடம் முன் கூடியிருந்தது. வயதான முதியவர்கள் மட்டும் கூடும் கூட்டம் போலிருக்க, ஒவ்வொரும் மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களின் பழைய முக அடையாளங்களைத் தேடுவது போலிருந்தது. தனித்தன்மைகள் கொண்ட எந்த அம்சமும் அவர் நினைவிற்கு வரவில்லை. இருந்தாலும், அவராக முகங்களைப் பொருத்திப் பார்க்க முயன்றுகொண்டிருந்தார். பரமு அவர்களைச் சுலபமாகக் கண்டறிந்தார் அல்லது அவர்களுடன் பழக்கத்தில் இருந்தார். 

“என்ன ராமு.. எப்படி இருக்க? நடுவில எத்தனைமுறை கூப்பிட்டிருக்கோம்? இவர் யார் தெரியுதா? சுந்தரலிங்கம், நெட்ட சுந்தரம், ஜட்ஜா இருந்து ரிட்டையர்டு ஆனவரு” எனச் சொன்னதும் அவர் முகத்தில் அத்தனை ஆச்சரிய சந்தோஷங்கள். “என்னப்பா, எப்படி இருக்க?” என்று கட்டிக்கொண்டார். 

உள்ளே போனபோது வேறு சில நண்பர்கள் இருந்தார்கள். தங்கள் மாணவப் பருவத்திற்குத் திரும்பிவிட்டது போன்ற நிறைவு அவர்களது முகங்களில் தெரிந்தது. தான் எங்கே அமர்ந்திருந்தேன் என ஒவ்வொருவரும் அவரவர் வகுப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஜன்னல் கம்பிகளைப் பிடித்து வெளியே மைதானத்தை வேடிக்கை பார்த்தார்கள் சிலர். அவர்கள் மாணவர்களாக இருந்த சமயத்தில் இதைத்தான் செய்திருப்பார்கள். பூக்களைத் தேடும் வண்டைப்போல நினைவுகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

“வாப்பா, உட்காருப்பா… உட்காருப்பா” என்று சுந்தரத்தை அழைத்துச்சென்று தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார் மூர்த்தி. சரியாகப் படிக்காத மாணவன் மூர்த்தி. ஆனால் ஆற்றுவெள்ளத்தில் சொருவல் அடிப்பதில் தீரன். “இப்பையும் ஆத்துல சொருவல் அடிப்பியா மூர்த்தி?” எனக் கேட்டார். அவர் தன் ஆச்சரியத்தைக் கண்களில் வெளிப்படுத்தினார். “எங்கப்பா..” என்றார்.

எத்தனை குழந்தைகள், என்ன செய்கிறார்கள் என்று கேட்ட மூர்த்தி, தன் மனைவியைப் பற்றிக் கேட்கவில்லை என யோசித்துக்கொண்டார் சுந்தரம். அவரே கடைசியில், ‘அவ செத்து இருவது வருசம் ஆயிடுச்சு’ என்று சலிப்புடன் சொன்னார். ஆனால், தான் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பதாக காட்டிக்கொண்டார். ஒவ்வொரு சொல்லையும் யோசிக்கும்போது மூர்த்தி வேகமாக பேசியபடியே சென்றார். கடந்தகாலத்தைப் பற்றி மூர்த்தி எதையுமே பேசவில்லை. தன் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார்.

பள்ளி வகுப்பின் பெஞ்சுகள் சிறுவர்களுக்குரியவை. அதில் அமரமுடியாமல் சிரமப்பட்டார் சுந்தரம். அந்த அறை ஐந்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு என்று எழுதியிருந்தது. கரும்பலகையில் ‘முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சந்திப்பு’ என்று வருடமும் எழுதியிருந்தது. பலவண்ண சாக்பீஸால் அலங்காரமாக எழுதி, சுற்றி வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. பிறகு சேதுராமனுடன் பேசிக்கொண்டிருந்தார். அவரை ‘சோத்துராமன்’ என்று அழைத்தது நினைவிற்கு வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வர ஒவ்வொருவரையும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவென்று சில இருந்தார்கள். அதிலும் பரமுவைக் கையில் பிடிக்கமுடியவில்லை. இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தார். சில பெண்களை அறிமுகப்படுத்தியபோது மிகத் தெளிவாக அவர்களின் சிறுவயது முகங்கள் நினைவிற்கு வந்தன.

ஆனால் அவர்களின் முகங்களில் இன்றைய கவலைகளும் தோல்விகளும் விரக்திகளும் உடல் பிரச்சனைகளும் பிரதிபலித்தன. ஒரே ஒரு பெண் மட்டும் பரமுவைப் போல மிக உற்சாகமாக இருந்தாள். சிறிய குங்குமப் பொட்டு, விபூதி, சந்தனம் என்று கலவையான நெற்றி, நீண்ட கூந்தல், கேசம் புரளும் முன்நெற்றியில் அழுத்தமான வாகு, காதுகளில் அழகிய தொங்கும் சிறிய ஜிமிக்கி. உற்சாகத் திரும்பல்களை அந்த ஜிமிக்கிகள் ஆடிக்காட்டின.

மேடைப் பேச்சுகள் தொடர்ந்தன. பரமு ஒன்றைச் சொல்லி தொடங்கி வைக்க ஒவ்வொருவராகப் பேசினார்கள். பலருக்கும் தங்களின் நினைவுகளை அழகாக மீட்டெடுக்க முடிந்தது. பணியின்போது, தான் செய்த சாதனைகளைச் சொல்லி பேசமுற்பட்டார் சுந்தரம். ஆனால் யாருக்கும் அது புரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் மதிய உணவு சாப்பிட ஆயத்தமானார்கள். 

இந்நிகழ்வை அவரால் நம்பமுடியவில்லை. நினைத்ததுபோல சீக்கிரத்தில் கிளம்பவும் அவரால் முடியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இருப்போமே எனத் தோன்றியது. ஜிமிக்கி பெண் வந்து, “என்ன சுந்தரம்? என்னைய அடையாளம் தெரியலையா?” என்றாள். சற்று நேரம் யோசித்தார். அவளது உதடுகள் தேக்கியிருந்த சிரிப்பை எதிர்கொள்ள முடியாமல், வேறுபக்கம் திரும்பியபடியே, “எனக்கு முகம் ஞாபகமிருக்கு. பெயர் சரியா நினைவில்லை” என்று கம்பீரமாக பதிலளித்தார். ஆனால் அது தன் இயலாமையை வெளிப்படுத்தும் விகார செய்கையாகத் தெரிந்தது.

“என்னை மாஸ்டர்ட்ட மாட்டிவிட்டுட்டனு ஒரு நா ஸ்கூல் முடிஞ்சி வெளிய வந்ததும், உன் மண்டைல கொட்டிட்டு ஓடிப்போன விஜயலெட்சுமி நாந்தான்.” 

“இப்ப ஞாபகம் வந்துடுச்சு.”

“அப்பாடா…”

அவருக்கு சிரிப்பு வந்தது. வேடிக்கையாகச் சொல்வது போலிருந்தாலும் அவள் சொல்வது உண்மைதான். அழுக்கு நிறைந்த தலைமுடியும் கறுத்த வசீகர முகமுமாக விஜயலெட்சுமி நினைவில் இருந்தாள். ஆனால் இப்போதைய முகம் வெளுப்பில் இருந்தது. சுருக்கங்கள் பொதுவாக இல்லை. சிரிக்கும்போது தெரிந்த பற்களின் ஒழுங்கு அவள் திடமான பெண்போல மாறிவிட்டிருப்பது தெரிந்தது. பத்துமுதல் பதினைந்து வயதுவரை பார்த்துப் பழகிய பெண் அவள். இன்று வேறு உலகத்தில் வாழும் அவளது பாட்டிபோல் இருந்தாள்.

“எனக்கு மூனு பிள்ளைங்க. எல்லாம் வெளியூர்ல இருக்காங்க. நா மட்டும்தான் இங்க இருக்கேன். அவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும் சொல்லு.. வீட்டுக்காரர் ரொம்ப நல்லவரு. பத்துவருசம் முன்னே செத்துட்டாரு. இப்ப தனியாத்தான் இருக்கேன். சொந்த வீடு இருக்கு. அவர் பென்சன் வருது.. அதுமில்லாம புள்ளைங்க அனுப்புறாங்க. போதுந்தானே? தனியா சந்தோஷமா தின்னுட்டு சாவ வேண்டியதுதான் பாக்கி.”

அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலுமுள்ள கிண்டலும் தன்னை மற்றவர்முன் விமர்சித்து வைத்து மகிழ்ச்சி கொள்வதில் இருக்கும் அழகும், மிக நீண்ட நாட்களுக்குப்பின் அவர் காண்பது. அவரால் வேகமாக பதிலளிக்க முடியவில்லை. ஆனால் அவளது உற்சாகம் தொற்றிக்கொண்டது. தன் முகம் சிரிப்பில் இருப்பதை அவரே உணர்ந்தார். காலவரிசையில் ஒவ்வொன்றையும் எடுத்து வைக்கும்போது சுந்தரத்தின் முகவடிவை அவள் கவனிக்கத் தவறவில்லை. அவர் சிரிக்குமிடங்களிலெல்லாம் அவளும் சிரித்தாள். அவர் சிரிக்காத விஷயங்களைத் தாண்டிச் சென்றாள்.

எதையாவது சொல்லி அவளைச் சிரிக்க வைக்க வேண்டுமென நினைத்தார். அவர் எதுசொன்னாலும் அது அவருக்கே ஜோக்காக இல்லாமல் இருந்தது. இதுவரை அதிகாரத்தின் சக்தியை வெளிப்படுத்தும் முகத்தைக் காட்டியே பழக்கப்பட்ட அவருக்கு முதன்முறையாக அன்பை வெளிப்படுத்தும் முகத்தைக் காட்டமுடியாமல் திணறினார்.

எங்கிருந்தோ பரமுவும் வந்து சேர்ந்துகொண்டார். “ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வா, வான்னு கூப்பிடறேன். வரமாட்டேங்கிறாரு. நீ வந்தாதான் அவரு வருவாராம். என்னான்னு கேளு விஜி” என்றார்.

“ஆமா சுந்தரம், பரமு நிகழ்ச்சிகளை நல்லா ஒருங்கிணைக்கிறாராமே? இலக்கியம், புத்தகம்னு நிறைய சொல்றாரு. நீங்களும் வாங்க” என்றாள்.

“ம். வரேன்”.

“திரும்பி நல்ல நட்பு உருவாக இந்த நிகழ்ச்சி காரணமா அமையட்டுமே? என்ன சொல்ற பரமு?” என்றாள்.

“ஆமா, விஜி. ஆனா பாரு, பொண்டாட்டி செத்து இருவது வருசமாச்சு. அப்பயிலேந்து சுந்தரம் இப்படித்தான். எங்கேயும் வரதில்ல. வேலை, கட்சிக்காரன், கோர்ட்ன்னே இருந்துட்டாரு. இப்பையும் அப்படியேதான், எங்கையும் வெளிய வர்றதில்ல.”

அவள் சுந்தரத்தைப் பார்த்தாள். “நானும் டீச்சரா இருந்துதான் ரிட்டயர்ட் ஆனேன் சுந்தரம். அதெல்லாம் விடுங்க, இந்த மாதிரி கலந்துக்கிட்டாதான் மனசுக்குத் தெம்பா இருக்கும்.”

“ஆமாம், உண்மைதான். இனிமே வரணும்” என்று சாதாரணமாகச் சொல்வதுபோல் சொல்லிக்கொண்டார். 

“பொண்டாட்டி போயிட்டா ஆம்பளைங்க ஏன் தங்கள சுருக்கிக்கறாங்க? எப்பையும் போல இருக்க வேண்டியதுதான் சுந்தரம்.” 

“வேற கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லிப் பார்த்தேன், கேட்கல.” என்றார் பரமசிவம்.

“ஏன் பொண்ணு கிடைக்கலயா? சொல்லு, நா வேணா உன்னைய கட்டிக்கிறேன்” என்றாள் விஜயலெட்சுமி. அப்படிச் சொல்லும்போது அவள் உதடுகள் விரிந்து கன்னத்தை மறைத்தன. எந்த மனித அழுக்குமில்லாத குழந்தையின் அழகிய சிரிப்பு. வெட்கத்தில் அவரும் சிரித்தபடி நின்றார். பெரிய சிரிப்பலை அங்கே பரவியது. அப்போதுதான் கவனித்தார். மொத்த ஆட்களும் அவர்களையே கவனிக்கிறார்கள் என்று. “இதுதான் சான்சு சுந்தரம், சரின்னு சொல்லிடு” என்று பின்னாலிருந்து ஒரு குரல். மீண்டும் சிரிப்பலைகள். ஏதேதோ பேச்சுகள், நேரம் செல்லச்செல்ல சிரிப்பலைகள் அடங்க அதிகநேரம் எடுத்தது. “சாப்ட்டு போங்க” என்று விஜயலெட்சுமி கூற, மறுக்க முடியாமல் அவள் பக்கத்திலேயே அமர்ந்து உணவருந்தினார். 

வாழையிலையில் இருந்த இனிப்புகளை ஒரு பையில் போட்டுக்கொண்டாள். எந்த உணர்ச்சியும் அவளிடமில்லை. மிக நிதானமாகச் சாப்பிட்டாள். நடுநடுவே, “இது நல்லா இருக்குல்ல?” என்று சுந்தரத்திடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் அமர்ந்ததே அவருக்குப் பெருமையாக இருந்தது. தன் பக்கத்தில் அமர்வதற்காக மற்ற மனிதர்கள் துடித்துக்கொண்டிருந்த காலத்தை நினைத்தபோது அவருக்கே சிரிப்பாக இருந்தது.

மாலைவரை அனைவரிடமும் உற்சாகம் கொஞ்சமும் குறையவில்லை. பள்ளியின் வாசலில் மீண்டும் பேச்சுகள். வீட்டிற்கு அவர் எப்படி வந்தார் என்ற நினைவேயில்லை. வீட்டிற்கு வந்தபோது வீடு மழையில் நனைந்ததுபோல் தனித்து நின்றிருந்தது. சர்மிளாவையும் சுதனையும் நீண்ட வருடங்களுக்குப்பின் சந்திப்பது போன்றிருந்தது. அவர்கள் இந்த உலகத்தில் எப்படி வந்தார்கள் என்றுகூடத் தோன்றியது. பேரனைப் பார்த்தபோது அவன் யாரென்றே தெரியவில்லை. முகங்களில் சிநேகம் வழிய அவர்கள் அவருடன் பேச நினைத்தார்கள். “எப்படி இருந்தது நிகழ்ச்சி?” என்றார்கள். வீட்டைவிட்டுச் சென்று எட்டு மணிநேரதிற்குப்பின் அவர் வருகிறார். இதுவரை இப்படி வந்ததில்லை. சட்டை கலைந்திருந்தது, தலை கலைந்து, முகம் கறுத்திருந்தது. ஆனால் அவர்களுடன் ஒரு சொல்கூட பேச மனமில்லை. அவர்களைத் தவிர்த்தபடி படியேறினார்.

படிகளில் ஏறும்போது அவர்களின் விழிகள் தன் முதுகில் இருப்பதை உணர்ந்தார். மேலே சென்று உடைகளைக் களைந்து சிறு குளியல் போட்டார். துண்டை எடுத்து துடைத்துக்கொண்டு வேட்டியுடன் அமர்ந்தபோது பேரன் வந்து, “தாத்தா, சாப்பிட என்ன வேணும்னு அப்பா கேட்டாரு” என்றார். அவனையே பார்த்தார் சுந்தரம். பிறகு, “ஒன்னும் வேணாம்னு சொல்லிடு” என்றார்.

உடலில் பவுடர் அடித்துக்கொண்டு அமர்ந்தார். இசை கேட்க வேண்டும் என மனம் ஆர்வம்கொண்டது. குறிப்பாக அவர் காலத்தில் சிவாஜி – சாவித்திரி பாடும் அந்தப் பாடல் பிரபலமாக இருந்தது. கல்லூரியில் பிரியும் மாணவர்கள் பாடும் பாடல். அந்தப் பாடல் என்ன என்று நினைவிற்கு கொண்டுவரமுடியவில்லை. தொலைக்காட்சியில் அந்தப் பாடலை போடலாம் அல்லது தன் சேகரிப்பில் இருக்கும் பாடல் தொகுப்பில் இருக்கலாம். தேட வேண்டும். ஆங்கில ஆசிரியர் அறிமுகப்படுத்தியதால், தான் அப்போது படித்த ஆங்கில நாவல் எங்கிருக்கிறது? அதை எடுத்து படிக்க வேண்டும் எனத் தோன்றியது. பரண்மேல் இருந்த கார்ட்போட் பெட்டியில் அது இருக்கலாம். அதை இறக்குவோமா என நினைத்தார். ஆனால் எதிலும் மனம் இலயிக்கவில்லை.

பள்ளியை கட்டடித்து நாள் தவறாமல் நண்பர்களுடன் குழுவாகச் சென்று யாகப்பாவில் இங்கிரிட் பெர்க்மன் நடித்த படத்தைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. அவளது அழகை அப்போது சிலாகித்துப் பேசினார்கள். அவரே உருகி உருகி வர்ணித்து நண்பர்களிடம் பேசியிருக்கிறார். விஜயலெட்சுமியின் முகம் அவ்வாறானதுதானா என யோசித்தார். வெட்கப்படாத துடிப்பான முகம். பேச்சுகள்கூட அப்படித்தான் இருந்தன. கொஞ்ச நேரத்தில் எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டாளே? தன் உயரத்திற்கு இருக்கிறாள். அந்த வயது பெண்கள் இத்தனை உயரம் கொண்டவர்களில்லை. நேராக நிற்கிறாள், முந்தானையின் ஒரு முனையை அழகாக எடுத்து இடதுபக்க இடுப்பில் சொருகியிருக்கிறாள், முடி கலையாமல் நேராக இருந்தது. ஒன்று புரிந்தது, அவள் யாரையும் சார்ந்து இல்லை. முக்கியமாக, அவளுக்கு கடந்தகாலம் பற்றிய ஏக்கமில்லை. அதில் பெருமைப்படவோ சிறுமைப்படவோ எதுவுமில்லை என்று தோன்றியது.

எல்லா விளக்குகளையும் அணைத்தபோது அங்கு இருள் வந்து அமர்ந்துகொண்டது. கூடவே மெளனமாகிப்போன ஒலிகள். அக்கம்பக்கத்தில் எங்கும் சிறு ஒலி இல்லை என்பதை உணர்ந்தார். அந்த மெளனம் அவருக்குப் பிடித்திருந்தது. வேறெதையும் நினையாமல் கட்டிலில் படுத்துக்கொண்டார்.

4 comments

Lakshmi Thilagam December 22, 2020 - 1:40 pm

மிக அருமை. பழைய பள்ளி நண்பர்களை சந்திக்கும் போது ஏற்படும் உணர்வுகளை மிக ஆழமாய் வெளிப்படுத்தி உள்ளார்.

கே.ஜே. அசோக்குமார் December 26, 2020 - 12:27 pm

மிக்க நன்றி.

Renu Sathish December 22, 2020 - 8:25 pm

வாழ்க்கையை பற்றிய புகார்கள் அற்ற பரமுவுக்கும் இசையை பிடித்து கொண்டு தனிமையை விரட்ட நினைக்கும் சுந்தரதிற்கும் மான நட்பு சுந்தரத்தை மீண்டு எழ முயற்சிக்கின்றது.

பொது வெளியின் கம்பீரத்தை, பணிக்காலத்தில் தனக்கான மரியாதையை, சுய மதிபீட்டின்
நிலையை பொதுவெளியில் எதிர்பார்ப்பதை விஜி உடைத்து விடுகிறார். வாழ்வின் எதார்த்தம் சுந்தரத்தை மாற்றுகிறது. அருமையான சிறுகதை

கே.ஜே. அசோக்குமார் December 26, 2020 - 12:28 pm

சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி.

Comments are closed.