கலை வேட்கையின் நெருக்கடிகளும் தொலையும் யதார்த்தமும் 

by அத்தியா
1 comment

கடந்த வருட சென்னைத் திரைப்பட விழாவில் மிகவும் ஈர்த்த திரைப்படங்களுள் Sibyl (2019) பிரதானமானது. குறிப்பாக, படைப்பாளியாகவிருப்பவர்கள் பாலின வேறுபாடின்றி தன் படைப்பை வழங்குவதற்காக, இயன்றவரை மேற்கொள்ளும் முயற்சிகளும் படைப்பு நெருக்கடிகளும் சுரண்டல்களும் விமர்சிக்கப்படுகின்ற அதேவேளையில், தனிப்பட்ட வாழ்க்கையில் குணப்படுத்த முடியாத காயங்கள், ஒரு படைப்பை உருவாக்குவதன் மூலம் அதைக் கடக்க முயலுதல், தன் அடையாளத்தை நோக்கிய தேடலின்பால் முன்னகர்தல் என்றவாறு திரைப்படத்தின் பார்வைகள் விரிந்துசெல்கின்றன. திரைப்படம் பெண்மையப் புனைவின் வழி நகர்ந்து, முழுக்க முழுக்க படைப்புசார் சுயவிமர்சனப் போக்குகளுடன் (Meta-fiction, Meta-cinema) அமைந்திருகின்றது. “எழுத்தாளர்கள் குறைந்த செல்வாக்கையே கொண்டுள்ளனர்” எனும் அம்சத்தின் பல இழைகளை சமப்படுத்த இத்திரைப்படம் போராடுகின்றது. இந்நவீன யுகத்தில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் அடையாளத்திற்கும் அங்கீகாரத்திற்கும் திரைக்கலைஞர் அல்லது இயக்குநருக்குக் கிடைக்கும் அங்கீகாரத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை இப்படம் சூசகமாக ஆராய்வதை உணர முடிந்தது. இத்திரைப்படத்துடன் ஒன்றிப்போகும் பல தருணங்களையும் கருத்தியல்களையும் Another Woman (1988), Nonfiction (2018) ஆகிய இரு திரைப்படங்களிலும் காண நேர்ந்ததினால், இத்திரைப்படங்களைத் தொடர்புபடுத்தி ஒரு ஒப்பீட்டுப் பார்வையை வழங்கவேண்டிய தேவையிருக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில்சார் வாழ்க்கைக்குமிடையே எழும் நெருக்கடிகளை சமநிலைப்படுத்த முனைவதில் பெண்கள் எதிர்கொள்ளும் உணர்வெழுச்சியையும் ஏக்கங்களையும் ஃபிரெஞ்சு இயக்குநர் Justine Triet தனது திரைப்படங்களில் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். புனைவெழுத்தின் மீது பேரார்வம்கொண்ட ஒரு பெண், தனக்குக் கிடைக்கும் வளங்களையும் மனித உணர்வுகளையும் தன் கதைக்கருவுக்கான தேவை நிமித்தம் கருத்திற்கொண்டு குற்றவுணர்வுடன் பயன்படுத்திக்கொள்வதை இருள்நகையுடன் கூடிய (Dark Comedy) துன்பியல் நாடகமாக ‘Sibyl’ திரைப்படம் சித்தரிக்கின்றது. ஒரு பெண் படைப்பாளி தன் ஆரம்பப் புள்ளியிலிருந்து எழும் கேள்விகளையும் நடுத்தர வயதில் சந்திக்கும் முரண்களையும் எவ்வாறு கையாள்கிறார் என்றும் தன் தற்போதைய அடையாளம், அவற்றின் வேர்கள், அவற்றை மறக்கும் வழிமுறைகள், தன்னைப் புதுப்பிக்கும் முயற்சிகள் என்னென்ன என்பனவற்றைப் பற்றியும் இத்திரைப்படம் கவனம்கொள்கிறது. எழுத்து தன்னை மீண்டும் கண்டுபிடிக்க உதவுவதால் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறையாகவும் துன்பியல் நிறைந்ததாகவும் அது மாறிவிடுகின்றது.

தன்னுடைய நாவலை எழுதத் தீர்மானித்ததன் பிற்பாடு ‘சிபில்’ என்னும் உளவியல் நிபுணர், தன் உணர்வுகளுக்கும் கதைக்கருவுக்கும் நெருக்கமான கதாபாத்திரங்களைத் தெரிவுசெய்து அவர்களின் உடல், உணர்வு நெருக்கடிகளைத் திருடி அல்லது உள்வாங்கி நாவலொன்றை எழுத யத்தனிக்கும் படைப்பு நெருக்கடியின் தந்திரோபாய யுக்தி, சமகாலத் தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, கருக்கலைப்பு செய்துகொள்ள முனையும் தாய், தாயை இழந்த சிறுவன் போன்ற நிஜ மனிதர்களை- தன்னால் பொருத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களை- தன் கதைக்கான உந்துதலுக்காகத் தேர்வுசெய்திருப்பார் சிபில். ஒரு பெண் இயக்குநர், ஒரு நடிகை, ஒரு பெண் எழுத்தாளர் என ஒவ்வொருவரும் கலையை உருவாக்க முனையும் இடத்திலும் சரி, தத்தம் யதார்த்த வாழ்விலும் சரி, எந்தளவுக்கு இரு இடங்களிலும் சமரசம் செய்துகொள்ளவோ ஒன்றிப்போகவோ முடியாமல் இருமைத்தன்மை கொண்டு துன்புறுகின்றனர் என்னும் போக்கு இத்திரைப்படத்தில் பிரதானமானது.

முன்மாதிரியான பெண்களை நிறுவி, பெண்ணியப் போக்கை மதிப்பிடுவது ஒரு பாணி எனில், அவர்களின் சுதந்திர வெளியில் நிலவும் இருள்பகுதிகளை, அவர்களுக்குள்ளிருக்கும் முரண்களை வெளிப்படுத்திப் பேசுவது வேறொரு பாணி. தற்கால மேற்கத்திய பெண்ணிய அணுகுமுறைகளின்படி, ஒட்டுமொத்தப் பெண்களுக்கான தீர்ப்பை இயக்குநர் முன்வைக்காமல், ஒவ்வொரு பெண்ணின் தனியுரிமையுடனும் சுதந்திரத்துடனும் இணைத்துப் பேச முனைந்திருக்கிறார். இத்திரைப்படத்தில் மூன்று பெண்களை அடையாளப்படுத்தியிருப்பினும் மூவரின் தொழில் வேட்கையும் உடலியல் உணர்வுத்தேவைகளும் அதன் நியாயங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை மட்டுமல்லாது முரணானவையும்கூட. யாருடைய தனிப்பட்ட சிக்கலையும் முழுமையாக மதிப்பிட்டுத் தீர்ப்பு சொல்லவோ விடுதலை வழங்கவோ முடியவில்லை. ஒருவர் மற்றொருவரில் தன்னையொரு பகுதியாக அடையாளம் கண்டுகொள்ளலாமே ஒழிய அனைவரும் ஒன்றல்ல. 

Another Woman திரைப்படத்துடனான ஒப்பீடு.

Sibyl திரைப்படத்தின் கதைக்கருவை நோக்கினால் இயக்குநர் Woody Allen-இன் Another Woman (1988) திரைப்படத்தின் கூறுகள் சிலவற்றை  அவதானிக்கலாம். திரைப்படத்தின் பிரதான பெண் எழுத்தாளர் கதாபாத்திரமானது ஓர் அந்நியப் பெண்ணின் மனமுறிவுக் கூறுகளை இரகசியமாக கிரகித்து, தன் இறந்தகால வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து, தன்னை அப்பெண்ணின் சிக்கல்களுடன் இணைத்து, தற்போதைய தன் நிலையையும் தன் அடையாளத்தையும் இனங்கான முயன்றிருப்பதாக அமைந்திருக்கும். அதே போன்றதொரு போக்கை மையமாக வைத்து தன் திரைக்கதையை எழுதுவதற்கான யோசனையை Another Woman திரைப்படத்திலிருந்து பெற்றுக்கொண்டதாக, ஓர் உரையாடலில், இயக்குநர் Justine Triet குறிப்பிடுகிறார்.  

Another Woman (1988)

ஒரு பெண்ணைக் குறித்து அவதானித்து, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்தரங்கமான விஷயங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் யோசனை என்பது பெரும்பாலான பெண்களுக்குப் பொருந்திப்போகக் கூடியது. எந்த அடிப்படையில் என்றால், பெண்களை ஒரு நேர்கோட்டுப் புள்ளியில் இணைக்கும் பொதுப்படையான அம்சங்களான உணர்வுப்பூர்வமான காதல், தாய்மை, நடுத்தர வயது நெருக்கடிகள், படைப்பு நெருக்கடி, தொழில் வேட்கை போன்றவைகளை அடையாளப்படுத்தலாம். சிபில் திரைப்படத்தில் இடம்பெறும் தொழில் வேட்கையுடன் கூடிய மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களும், தனிப்பட்ட முறையில், “தாய்மை” என்னும் புள்ளியில் ஒருவிதப் புரிதலை வெவ்வேறு மட்டத்தில் அடைகின்றன. காதலனின் விருப்பத்திற்கு மாறாக குழந்தையைப் பெற்றெடுக்கும் எழுத்தாளர், நடிப்பை எதிர்காலமாகக்கொண்டு கருவைக் கலைக்க முனையும் இளம் நடிகை, குழந்தை பெற நாட்டமிருந்தும் தன் தொழிலில் சாதிக்க வேண்டியதன் நிமித்தம் பின்னர் பெற்றெடுக்கலாம் என முடிவெடுத்த சினிமா இயக்குநர் என்கிற அடிப்படையில் ஒரே புள்ளியில் மூன்று கதாபாத்திரங்களும் இணைகின்றன.

குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் மனவார்ப்பானது தன்னுடைய துணை, பொருளியல், தொழில் வேட்கை, தான் விரும்பும் கால- வயது இடைவெளி போன்றவைகளின் அடிப்படையில் ஒருவித ஆன்ம விடுவிப்பாக நிகழ்த்தப்பட வேண்டியதே அன்றி உடனிருக்கும் ஆண்களின் அல்லது சமூகத்தின்  திணிப்பு நெருக்கடிகளால் நிகழ்த்தப்படுவதல்ல. கருக்கலைப்பும் அவ்வாறே. இத்திரைப்படத்தின் சிபில் கதாபாத்திரம் தன் முன்னாள் காதலன் மூலம் தனக்கொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஆனால், காதலனோ அதை வெறுக்கிறார். மார்கோட் (Margot) கதாபாத்திரம் தன் தொழிலின் வேட்கை நிமித்தம் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பவில்லை. அவரது காதலனோ அந்த முடிவுக்கு எதிராக அவளை நிர்ப்பந்திக்கிறார். மிக்கேலா (Mikaela) என்கிற இயக்குநர், தன்னுடைய வேலை நிமித்தமாக, தான் விரும்பும் வயதிலும் கால இடைவெளியிலும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். அவரது காதலன், இலகுவாக அவளைப் புறக்கணித்துவிட்டு மார்கோட்டுடன் உறவுகொள்கிறார். இத்தகையதொரு புள்ளியில் இந்தப் படத்தின் ஒவ்வொரு பெண்ணையும் மாறி மாறி இணைத்துப் பார்த்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக, கருக்கலைப்பு தொடர்பான விடயத்தை Another Woman திரைப்படத்திலும் இனங்காணலாம். இத்திரைப்படத்தின் பிரதான பெண் கதாபாத்திரம், தன் இளம் வயதில் தனக்குப் பாடமெடுத்தவரும் பெரும் வயது வித்தியாசம் கொண்டவருமான பேராசிரியரைக் காதலித்தும் உறவுகொண்டும் கர்ப்பம் தரித்துவிடுவார். தன் எழுத்து வேட்கை, வயது, கால இடைவெளியைக் கருத்திற்கொண்டு அப்பெண் அதைக் கருக்கலைப்பு செய்ய முனைய, குழந்தையைப் பெற்றெடுக்குமாறு அவரது கணவர் வற்புறுத்துவார். பின்னாளில் அவ்வுறவு நீர்த்துப்போய் அக்கணவர் தற்கொலை செய்ததை நினைவூட்டிப் பார்க்கையில் அந்தத் தற்கொலைக்கு தானுமொரு காரணமாக இருக்கலாம் என்கிற குற்றவுணர்வுக்குள் அப்பெண் கதாபாத்திரம் மூழ்கிவிடும். கருக்கலைப்பினால் ஏற்பட்ட உறவுப்பிறழ்வும் அதன்பின் நிகழ்ந்த தற்கொலையும் தனிப்பட்ட முறையில் அப்பெண்ணின் குற்றவுணர்வாகப் பரிணமிக்கும். 

அதேவேளையில், சிபில் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரம்,  காதலன்மீது கொண்ட வேட்கை நிமித்தம் குழந்தையைப்  பெற்றுக்கொண்டதன் பிற்பாடு அவ்வுறவு நீர்த்துப்போக, அந்தக் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் தன் முன்னாள் காதலனை நினைவூட்டிக்கொள்வதென்பது ஒருவிதமான குற்றவுணர்வுடன்கூடிய வேதனையாகவே வெளிப்படுகின்றது. குற்றவுணர்வானது இங்கே பெண்களது பெண்மையுடன் (Femininity) தொடர்புடையதும் அவர்தம் உடலியல்சார் தனிப்பட்ட வாழ்கையில் பின்தொடரக்கூடியதுமான ஒன்றாகவே காணப்படுகிறது. ஆண்களுக்கு உடலியல் ரீதியாக இத்தகைய சவால்கள் இல்லை என்பதனால் திரைப்படத்தின் இப்போக்கு முழுக்க முழுக்கப் பெண்மையப் பார்வையைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது.

படைப்பு நெருக்கடியில் குற்றவுணர்வு.

குற்றவுணர்வு என்கிற விஷயத்தை நெருங்கி அணுகும்போது சில தெளிவுகள் ஏற்படுகின்றன. சமூகம் கட்டியெழுப்பிய நெறிமுறைமைகளுக்குள் அடக்கி ஒடுக்கப்படும்போது மேலெழும் உணர்வானது அதன் ஒரு பகுதியெனில், மனிதத்தின் பிரதான வெளிப்பாட்டுப் பண்புகளில் ஒன்றாக அல்லது இருத்தலியல் உண்மையாக (Existential fact) வெளிப்பட்டு நிற்கின்றது இன்னொரு பகுதி. 

பாலின ரீதியாக ஒப்பீட்டளவில் அவதானிக்கும்போது, இந்தச் சமூகத்தில் ஓர் ஆணின் ஆண்மைக்கும் (Masculinity) சமூகம் கட்டமைத்த நெறிமுறைமைக்கும் (Morality) இடையிலுள்ள தூர இடைவெளியைக் காட்டிலும் ஒரு பெண்ணின்  பெண்மைத்தன்மைக்கும் சமூகம் கட்டமைத்த நெறிமுறைமைக்கும் இடையிலிருக்கும் இடைவெளியானது மிகவும் அதிகம். இத்தகைய நெறிமுறைமைகள் பெரும்பாலும் ஆண்களுக்குச் சாதகமாக இருப்பதால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இயல்பாகவே குற்றவுணர்வு அதீதமானது என்றும் எடுத்துக்கொள்ள முடியும். மனிதர்கள் மனித உணர்வுகளின் முக்கியத்துவம் குறித்து பல கருத்துகளை முன்வைத்தாலும் அவ்வுணர்வுகள் கட்டமைக்கப்பட்ட இடத்தில் அந்தந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கும் நெறிமுறைமைக் கருத்தியல்கள்தான் (Morality) முன்னிற்கின்றன.

ஒரு பெண் தன்னளவில் பெண்மையை அல்லது தாய்மையுணர்வை (Motherliness) வெளிப்படுத்திக்கொண்டு அல்லது தக்கவைத்துக்கொண்டு ஏதேனுமொரு படைப்பை உருவாக்க முனைகையில்தான் தனக்கெனவிருக்கும் விதி, நெறிமுறைகள் என அனைத்தின் எல்லைகளையும் மீற வேண்டியிருக்கும். இங்கிருக்கும் முரண்களாக, பெண்மை சார்பாக தனக்குத் தேவையான விடயங்கள் ஒருபுறம் எனில் படைப்புருவாக்கத்தில் தன்னளவில் உடைக்க வேண்டிய  விதிமுறைகள் மறுபுறம். பெண்மைய அல்லது தாய்மையுணர்வுகளுக்குச் சரியாக வடிகாலமைத்துத் தராவிடின், தன்னுடனே தன்னால் வாழ முடியாது. விதிமுறைகளைக் களைந்து தன்னளவில் படைப்பை உருவாக்காவிடில் தன் இருப்பே அர்த்தமற்றதாகிவிடும். ஆக, ஒரு பெண் இவையிரண்டுக்கும் நடுவில் ஒரு சமநிலையை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. தன்னுடைய பெண்மை உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய அதே நேரம், படைப்புருவாக்கத்தில், தான் மீறும் ஒழுக்க விதிமுறைகளினால் சமூகம் தன்னை வெறுத்து ஒதுக்கிவிடக்கூடாது என்னும் உணர்வும் ஒருவகையில் தொக்கி நிற்கின்றது. 

உதாரணமாக, சிபில், ஒரு குடும்ப அமைப்பிற்குள் இருந்துகொண்டே தன் முன்னாள் காதலனுடன் குழந்தை பெற்றுக்கொள்வதைச் சொல்லலாம். தன் தனிப்பட்ட பெண்மை, காதல் குறித்து அவளுக்கிருக்கும் தேவை ஒருபுறமெனில், படைப்புருவாக்கச் செயல்பாட்டினால் அந்தப் புனைவுக்குள் மூழ்கி, தான் தேர்வுசெய்த காதலனுக்கு இணையாகப் புனையப்பட்ட கதாபாத்திரத்துடன் உறவுகொள்வதில் சிபில் அடையும் குற்றவுணர்வு மறுபுறம். புனைவுக்குள் இதனை ‘ஆசிரியர் வேட்டையாடப்படுதல்’ எனலாம். அதே சூழல் பின்புலத்தில், படைப்புருவாக்கத்தின்போது ஆண் ஆசிரியர் ஒருவர் வேட்டையாடப்பட்டால், இதே போன்றதொரு குற்றவுணர்வு எழுமா என்பது கேள்வியே! 

மற்றவர் அறியாதவண்ணம் இத்திரைப்படத்தின் பிரதான பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒரே ஆணுடன் பாலுறவுகொண்டு, அதன் காரணமாக வெறுப்புக்கும் குற்றவுணர்வுக்கும் உள்ளாவதும், துரோகத்தினை உணர்வதும், அதனைத் தடுமாற்றங்களுடன் கையாளத் தெரிந்திருந்தும் அந்த வலியின் சுவடுகள் ஆங்காங்கே எஞ்சியிருக்க, அந்த ஆண் எவ்விதக் குற்றவுணர்வுமின்றி முன்னகர்வதாக காண்பிக்கப்பட்டிருக்கும். காமம், குற்றவுணர்வு ஆகிய விடயங்களில் ஆண்களின் பக்கங்களைப் புரட்டிக்காட்ட வேண்டிய அவசியம் குறித்து இயக்குநர் அக்கறைப்படவில்லை என்றும் கூறலாம். 

கலை வேட்கையைப் பற்றிக்கொண்டு, தமக்கிருக்கும் கடந்தகால காயங்கள், குற்றவுணர்வு, மனத்துயரம் ஆகிய அனைத்தையும் கடந்து, ஒரு விடுவிப்பை அடையலாம் (Escape) என்பது காலங்காலமாக படைப்பாளிகள் முன்வைக்கும் ஓர் உன்னதக் கூற்று. சக மனிதருடனான உறவுகள், அவற்றை அவர்கள் கையாளும் விதங்கள், அதற்கு அவர்களிடும் முற்றுப்புள்ளி போன்றவை அவர்களுக்குத் தருகிற மன அமைதியைக் காட்டிலும், தங்களைச் சூழ்ந்துள்ள சிக்கல்களை கலை வேட்கையினால் சரிசெய்து கடந்துவிட முடியும் என்னும் கருத்தியல் நிலவுகிறது. அது பொய்யானது என்றும் பெரும்பாலும் கலை அவர்களுக்கு உதவப்போவதில்லை என்றும் இத்திரைப்படம் உணர்த்தியது. ஒருவகையில், இது பெண்மைய உணர்வுக்கே உரித்தான மிகத் தனித்துவமான பண்பாகத் தோன்றியது.

படைப்பாளர் எனும் பட்சத்தில், ஆண்களைப் பொறுத்தமட்டில், யார் உடனிருக்கிறாரோ இல்லையோ, கலையை உருவாக்க தனக்கிருக்கும் தனிமையையும் துன்பியல்களையும் (suffering) ரொமாண்டிசைஸ் செய்து, மனிதர்களைவிட்டு தூர ஓடும்போக்கும் படைப்பிற்குத் தன்னையே அர்ப்பணித்து பிறதைப் புறந்தள்ளுவதும் இயல்பானது. நீண்ட காலத்திற்கு மனிதத் தொடர்புகள் இல்லாமலேயே அதையொரு மிகையுணர்வாகக் கட்டமைத்து அவர்களால் வாழ்ந்துவிட முடியும். முன்னர் கூறியதைப்போல, உடலியல் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பொறுப்புகளும் ஆண்களுக்கு நிர்ப்பந்திக்கப்படவில்லை என்பதனால் கலையை உருவாக்குவதில் எந்த எல்லைக்கும் குற்றவுணர்வின்றி முன்னகர்ந்திட முடியும். இந்த இடத்தில்தான் பெண்மை உணர்வுகளும் கலை வேட்கைகளில் ஈடுபடுவதும் பல இடங்களில் முரண்படுகிறது. இத்தகைய முரண்கள்தான் அவர்களுக்குள் எழும் குற்றவுணர்வுக்கான அடிப்படை. அதே முரண்கள்தான் அவர்களின் இருத்தலியல் உண்மையை வெளிப்படுத்தக்கோரி, எழுதும் அல்லது படைப்பை உருவாக்கி வெளித்தள்ளும் இடத்திற்கு முன்னகர்த்திச் செல்கிறது.

(ஆண் படைப்புலகத்திலிருந்து விலகி, பெண் படைப்புலகம் பெரும்பாலும் மாற்றுக்கருத்தியல்களையே கொண்டுள்ளது என்பதை இத்திரைப்படத்திற்குள்ளிருந்து வேறுபடுத்திக்காட்டவே இத்தகைய ஒப்பீடன்றி, இது ஒட்டுமொத்தப் படைப்பாளிகளுக்கானவை அல்ல)

Non-fiction திரைப்படத்துடனான ஒப்பீடு.

இன்றைய இணைய யுகத்தில் இளம் தலைமுறையினர் இலக்கியத்தைக் கற்றுக்கொள்வதிலும் கலையை வளர்ப்பதிலும் வாசிப்பதிலும் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளனர்? நவீனத் தொடர்பு சார்ந்த ஊடகங்கள் மனிதனை அறிவியல் ரீதியில் உண்மையில் முன்னேற்றம் அடையச் செய்கின்றதா என்பது போன்ற மிகச் சிக்கலான கேள்விகளை முன்வைத்து, இயக்குநர் Olivier Assayas தனது Non-fiction (2018) திரைப்படத்தில், படைப்பையும் படைப்பாளரையும் படைப்பை வெளியிடுவதிலுள்ள முரண்களையும் காட்டமாக விமர்சித்திருப்பார். கூடவே, படைப்பாளியின் நெருக்கடி, உறவுகளின் போலித்தன்மை என்பனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அந்த வகையில் சிபில் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியான நவீன உலகில் இலக்கியத்தின் வீழ்ச்சி குறித்த உரையாடலிலும் உறவின் போலித்தனங்களுடன் வாழ்க்கையை முன்னகர்த்திச் செல்லும் காட்சிகளைப் பதவிசாகப் புனைந்த விதத்திலும் Non-fiction திரைப்படத்துடன் ஒத்திசைந்துவிடுகிறது.

https://www.indiewire.com/wp-content/uploads/2018/08/DkFjp4SXgAATXzj.jpg

இத்திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களாக ஒரு நடிகை, புத்தக வெளியீட்டளாரான அவரது கணவர், ஒரு எழுத்தாளர், அரசியல் பிரச்சாரப் பணிகளில் பங்கெடுக்கும் எழுத்தாளரின் மனைவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கிடையே நிகழும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில்முறை வாழ்க்கைக்குமான சம்பவங்கள் ஒன்றோடொன்று தொடர்பற்று விளங்குகின்றன. அதேவேளையில், படைப்பாளிகளுக்கும் கருத்துகளைப் பகிரும் பார்வையாளர்களுக்குமிடையே நிகழும் உரையாடலில் முக்கியக் கவனம் செலுத்தப்படுகின்றது. அறிவார்ந்த தோரணைகளெனக் கருதப்படும்- ஃபிரெஞ்சுத் திரைப்படக் கதாபாத்திரங்களுக்கே உரிய குணாதிசியங்களான- குடித்துக்கொண்டே இலக்கியம், சினிமா, சமூகம் சார்ந்து பேசும் பாணியை விமர்சித்தும் அவர்களது அறிவார்ந்த மேன்மைத்தன்மையை (Intellectual Superiority) மட்டுப்படுத்தியும் ஃபிரெஞ்சுக்காரர்கள் தம்மைக் குறித்துப் பெருமிதங்கொள்ளும் போக்கைத் தடுக்கும் முயற்சியை Non-fiction திரைப்படத்தில் இயக்குநர் மேற்கொண்டிருக்கிறார்.

“எழுத்தாளர்கள் குறைந்த செல்வாக்குடையவர்கள்”

சமூகத்தில் அந்தஸ்தெனக் கருதப்படும் பதவியிலிருக்கும் ஒருவர் முற்றாக அதனைத் துறந்துவிட்டு எழுத்தின் மூலம் தன் இருப்பை நிறுவவோ அல்லது தன் ஆன்மத் திருப்தியை நாடி முழுமூச்சாக எழுத்தில் மூழ்கவோ நேரிட்டால் அந்நபர் சந்திக்கும் நெருக்கடிகளும் சவால்களும் ஏராளம். எந்தவொரு தொழில் முனைப்பிற்கும் ஆதாரவளிக்கும் குடும்பமும் ஜனரஞ்சக சமூகமும் அதை எழுத்துக்கும் எழுத்தாளருக்கும் வழங்குவதில்லை. அந்நபரின் சுய முடிவில் சுய சந்தேகங்கள் மேலோங்கும் முகமாக, ஆயிரம் உபதேசங்கள் பொழிவிக்கப்பட்டு, குறிப்பாக, “எழுதுவதால் என்ன வருமானம் கிடைக்கின்றது?” என்னும் கேள்வியுடனேயே அந்நபரை உயிர்வாழத் தகுதியற்றவர் போல சுற்றமும் நட்பும் நோக்கும். (இது மேற்கத்திய நாடுகளில் எந்தளவிற்கு நிதர்சனம் எனப் புரியவில்லை. தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்கள் வறுமையின் அடையாளமாகவே இருந்துவந்திருகின்றனர்)

இன்றைய சமூகத்தொடர்பாடல்கள் அனைத்துமே வலைத்தளங்களால் ஆட்கொள்ளப்பட்டு மக்களின் மனமும் சிந்தனைகளும் வெறும் தகவல்களாலேயே நிரம்பியிருக்கிறது. நவீன கருத்தியல்களையும் மரபுசார் கருத்தியல்களையும் இலகுவில் கொண்டுசெல்வதற்கான வழிவகைகள் இன்னமும் இங்குண்டுதான் என்பதை மறுக்கவியலாது. எழுதுபவரும் சரி, நூலைப் பதிப்பித்து வெளியிடுபவரும் சரி, எவ்வாறு மக்களின் தேவைக்கேற்ப தங்கள் எழுத்துகளையும் அதனை வெளியிடுவதற்கான தளங்களையும் தகவமைத்துக்கொண்டுள்ளனர்? இருபத்தோராம் நூற்றாண்டின் எழுத்தாளர்களால் எதிர்கொள்ளப்படும் பெரும் சவால் இதுதான் எனலாம். முன்னர் தனக்காகவும் தன் சுய ஆன்மத் திருப்திக்காகவும் மட்டும் எழுதிக்கொண்டிருந்தவர்கள், இன்றைய காலகட்டத்தில், எவ்வாறு வாசகர்களையும் சாதாரண பொதுமக்களையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அன்றாடம் நாடும் விடயங்களையும் மையப்படுத்தி எழுதுகிறார்கள்? அதைக் குறித்தான அறிவும் புரிதலும் எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் இடையில் ஒருவிதமான நெருக்கத்தையும் பிணைப்பையும்  ஏற்படுத்தி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்ற அதேவேளையில், முடிவுக்குக் கொண்டுவர முடியாத முரண்களினாலும் எதிர்ப்பரசியலினாலும் காழ்ப்புணர்வுகளைப் பொதுவெளியில் உமிழ்ந்துவிடுவதும் இலகுவாக நிகழ்ந்துவிடுகின்றது. எழுத்துப் பிரதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொதுவெளியில் பகிரப்படும் அரசியல்- சமூக நிலைப்பாடுகளை அல்லது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை முன்வைத்து எழுத்தாளரை ஓரங்கட்டும் நிலையும் மேலோங்கிக் காணப்படுகின்றது. இவை எழுத்தாளர் குறித்த கண்மூடித்தனமான வழிபாட்டு மனநிலையிலிருந்து விலகி, ஒருவித விமர்சன மதிப்பீட்டுப் போக்கையும் உருவாக்கி விடுகின்றது. “எழுத்தாளர் உலகத்தரமான தலைசிறந்த படைப்புகளை வழங்குபவராக இருப்பினும் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல” என்னும் பார்வை இங்கு எழுகின்றது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான கருத்தியல்களையும் சிந்தனைகளையும் புலம்பல்களையும் வெறும் தகவல்களாகவேனும் சமூக வலைத்தளங்களில் காணொளியாகவோ எழுத்தாகவோ வெளிப்படுத்துவற்கான இடம் வந்ததன் பிற்பாடு, முழுநேர அல்லது எழுத்தை வேட்கையாகக் கொண்ட எழுத்தாளர்களுக்கான நெருக்கடி அதிகரித்திருப்பது கண்கூடு. தனக்குத் தேவையான எழுத்தை யார் எழுதுகிறாரோ அவரைப் பின்பற்றியும் போற்றியும் கொண்டாடும் பாணி சமூக வலைத்தளங்களில் அதிகரித்திருப்பதைக் காணலாம். இதற்காக சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் அத்தனை பேருக்கும் ‘நுண்ணிய வாசகர்கள்’ என்னும் முத்திரையைக் குத்திவிட முடியாது. அந்த வகையில், எவரும் எவரது எழுத்துகளையும் குறைகூற முடியாதபடி, வெறும் முகநூல் வாசகர் கூட்டமும் யூ ட்யூப் பார்வையாளர்களும் பெருவாரியாக அதிகரித்து வருகின்றனர். தற்காலத்தில் அசல் பிரதி (original text) அல்லது தொடர்ச்சியாக எழுத்தாளர் என்று நிறுவப்படுபவரின் முழுமையானதும் விரிவானதுமான எழுத்துகளைப் புறந்தள்ளிவிட்டு அவற்றின் தொகுப்பு, சாரம் போன்றவற்றை இலகுவாக்கப்பட்ட விளக்கவுரைகள் வடிவில் எழுதியோ பேசியோ குவித்துவிடுகிறார்கள். அத்தகைய கருத்தியல்கள் அசல் பிரதியிலிருந்து எந்தளவுக்கு வேறுபடுகின்றன அல்லது சரியா தவறா என்பதைச் சரிபார்க்கும் அளவிற்குக்கூட மனிதர்களுக்கு நேரமிருப்பதில்லை. அதற்கான தேவையுமில்லை என்று தற்கால எழுத்தின் அல்லது சிந்தனைகளின் மத்தியஸ்தர்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் முகநூல்வாசிகள் / யூ ட்யூப் வாசிகள், தங்கள் தேவைக்கேற்ப மனிதர்களின் தேவையையும் ஆர்வத்தையும் மட்டுப்படுத்திவிடுகின்றனரா என்னும் கேள்வியும் எழுகிறது.

‘வாசிப்பிற்கான தேவை யாரிடமிருக்கின்றது? இன்று யார் வாசிக்கிறார்கள்? ஆர்வத்துடன் எதை வாசிக்கின்றனர்?’ என்பது போன்ற கேள்விகளை முன்வைக்குமிடத்து, எழுதுபவர்களைத் தவிர்த்து வாசிப்பிற்கான தேவை அருகிவிட்டிருப்பதனை அவதானிக்கலாம். எழுத்தாளர்களே வாசகர்கள் என்னும் நிலைக்கு நகர்கின்றனரோ? 

அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களை மையமாக வைத்து ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்ள முடியும் என்றாலும் அதே நூல், அவரவர் தேவைநிமித்தம் தேவையான வடிவங்களில், வாசிப்பதற்கு இலவசமாக கிடைக்கப்பெறுகையில், புள்ளிவிபரப் போக்கும் தோல்வியடைகிறது. இலகுவாக ஒருவிடயம் கிடைக்கும்போது அத்தகைய வளங்களை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க வேண்டிய தேவை மக்களுக்கு இருக்காது. காலத்தின் தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பல்வேறு வலைத்தளங்களில் பல்வேறு வடிவங்களில் தங்கள் படைப்புகளை முன்னிறுவ முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள். E-book, Kindle, Audio book, pdf என்றவாறு பல்வேறு வடிவங்களில் அவர்தம் நூல்களை மக்களிடம் கொண்டுசெல்லவும் மக்கள் எடுத்துக்கொள்ளவும் வழி  சமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய முறையான அச்சு நூலானது இணையக் கலாச்சார மக்களை எந்தளவுக்கு ஆட்கொண்டுள்ளது என்பது குறித்து ஆராய முற்படுவது தற்காலத்தில் சற்று சிக்கலான போக்கு.  

அனைத்து விதமான தகவல்களும் புனைவுசார் உணர்வுப் பரிமாற்றங்களும் பெரும்பாலும் காட்சி ஊடகங்களில் மட்டுமே சுருங்கிப்போவதென்பது பெருகியுள்ள நிலையில், எழுத்தாளராக நாம் அடையாளம் காண்பவர்களைப் பொதுவெளியில் அறிமுகப்படுத்துவதோடு மட்டுமின்றி அவர்களைத் தயக்கமின்றி அங்கீகரிக்கவும் செய்கிறோம். எழுத்தாளராக முயல்பவர்களின் கருத்துகளும் புதிய சிந்தனைகளும் அதிகமாக நுகரப்பட்டு பலரும் எழுத்தாளராகும் சங்கதிகளும் நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் / முகநூல் எழுத்தாளர் லேபிளைக் குத்திக்கொண்டு, எவ்வித வருமானமுமின்றி எழுதுவதை, தொடர்ச்சியாக எழுதுபவர்கள் விரும்புகிறார்களா? எழுத்தாளன் என்னும் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக இலவசமாகவே தன் அன்றாட நேரத்தைச் செலவிட்டு எழுதுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லையா? இதனையெல்லாம் எழுத்துக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் எதிர்கொள்ளும் மாபெரும் சிக்கல்கள் எனக் கருதவேண்டியுள்ளது.

இணைய யுகத்தைப் பொறுத்தமட்டில் மக்கள் வெறுமனே தெரிந்துகொள்வதிலும் கருத்துகளைப் பகிர்வதிலும் எதிர்வினையாற்றுவதிலும்தான் ஆர்வமாய் உள்ளனர். ஆனால் எழுத்தை வாழ்வியல் ஜீவனோபாயமாகக் கொண்டு எழுத முனையும்- எழுத்தாளரென அடையாளப்படுத்தப்பட்டவரது எழுத்தையும் சமூக வலைத்தளங்களில் எழுதுபவரின் எழுத்தையும் ஒரே தராசில் சமமான பிரதியாய் வைத்து மதிப்பிடுவதுடன், வாசிக்கக் கிடைக்கப்பெறும் அனைத்தும் இலவசமாக இருப்பதையே தங்களுக்கான வசதியாகவும் வாசிப்பதைச் சுமையற்ற ஒன்றாகவும் கருத முடிகின்றதோ என்னவோ? முன்னர் குறிப்பிட்டது போன்று காட்சிப்படிமங்களை உள்வாங்கிக்கொள்ள இன்றைய மக்களின் மனமும் தேவையும்  தகவமைக்கப்பட்டிருப்பது கண்கூடு. காட்சிப்படிமமாக பெரும்பாலான விடயங்களை உள்வாங்கிக்கொள்வதற்கு சினிமாவின் பங்கு அளப்பரியதுதான் என்றாலும் வாசிப்பே இல்லாத சினிமாவின் விபரீதங்களைக் கவனத்திற்கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

எழுத்தாளருக்கு இருக்கும் அடையாளத்திற்கும் அங்கீகாரத்திற்கும், திரைக்கலைஞர் அல்லது இயக்குநருக்கு கிடைக்கும் அங்கீகாரத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் பாரதூரமானவை. உதாரணமாக,  சிபில் திரைப்படத்தில், மார்கோட் கதாபாத்திரத்தை வைத்து ஒருவர் புனைகதை எழுதுகிறார். மற்றொருவர் திரைப்படத்தை இயக்குகிறார். இறுதியில் படைப்பு வெளியிடப்பட்ட பின், இருவருக்கும் கிடைக்கும் அங்கீகாரத்தையும் புறக்கணிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பாரிய ஏற்றத்தாழ்வுகளை இனங்காணலாம். இருப்பினும், ஒருவரேனும் தன் புத்தகத்தை வாசித்துப் பாராட்டினால், அதைத் தன் ஆன்மத் திருப்திக்கு இணையான ஒன்றாகக் கருதி, தன் அடுத்தப் புத்தகத்தை எழுதுவதற்கு அதுவொன்றே அந்த எழுத்தாளருக்கு உந்துதலாக அமைந்துவிடுகின்றது.

கதை சொல்லும்பாங்கு 

திரைப்படத்தின் கதை சொல்லும்பாங்கு Meta-fiction / Meta-cinema வகையறாவில் அமைந்திருக்கிறது. தன் படைப்பை தானே விமர்சிக்கும் போக்கு பழமையான ஒன்றாக இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவான பின்நவீனத்துவ படைப்பாக்கத்தில் இந்தப் போக்கு பிரதானமாக வளர்ச்சியடைந்தது. கலைக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் இடையிலான எல்லை வழியாக ஒரு படைப்பில் சுய விவரணையை உருவாக்குவதுடன், பிரக்ஞைபூர்வமாக தன் படைப்புமீது சுய விமர்சனத்தையும் முன்வைக்கும் பாங்கினை ‘மீபுனைதல்’ (Meta-fiction / Meta-cinema) எனலாம். ஒரு படைப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை வாசகர்களும் பார்வையாளர்களும் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளும்படி, அதன் சொந்தக் கட்டமைப்பையும் உருவாக்கத்தையும் வலியுறுத்திக்கொண்டவாறே, படைப்பவரே இங்கு விமர்சகராக இருப்பதென்பது பிரதானமானது. நேரடியாகவோ மறைமுகமாகவோ இலக்கிய- சினிமா மரபுகளை மதிப்பீட்டிற்கு உட்படுத்தும் அளவீடாகவும் யதார்த்த வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையிலான உறவை ஆராயும் ஒரு கருவியாகவும் Meta-fiction / Meta-cinema அமைகின்றது. தானே தன் படைப்பை அளந்து மதிப்பிட்டு விமர்சிக்கக்கூடிய பெருங்கதையாடல் முறையானது, படைப்பையும் படைப்பாளரையும் எந்த இடத்தில் பார்வையாளர் அல்லது வாசகர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டேயிருக்கும்.

யதார்த்தவாதத்தின் கட்டுடைப்பு 

“கலை இலக்கியங்கள் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும்” என நவீனத்துவம் முன்வைத்த- யதார்த்தவாதம் கோரும்- கருத்தியலைப் பின்நவீனத்துவம் புறக்கணித்தது. ஒரு படைப்பானது யதார்த்தத்திலிருந்து தன் அடையாளத்தைக் கண்டடைந்து, சுகமளிக்கும் போக்கிற்குப் பதிலாக அதிரவைத்து, மனிதர்தம் அடையாளத்தைக் கேள்விக்குட்படுத்தி, கருத்து ஒருமிப்பைக் காட்டிலும் கருத்து வேறுபடும் உரிமையையே பின்நவீனத்துவக் கலைகள் கோரி நின்றன. அந்த வகையில், சிபில் திரைப்படம்,  நிகழ்வுகளை விதியாகச் சுருக்கிவிடாமல் கருத்தொருமிப்பு, கருத்து முரண்பாடு, பிரதிபலிப்பு, பிரதிநிதியாக்கம் என இயக்கத்தை உயிர்ப்புடன் தக்கவைக்கும் முயற்சிகளை முன்னிறுத்துகின்றது. முன்முடிவுடன் யதார்த்தத்தை அணுகிப் பகுத்து, தன்னை மாத்திரம் அடையாளங்கண்டு தன்னுடன் பொருந்தாதவைகளை ஒதுக்கித்தள்ளுகிற பகுப்பாய்வாக இல்லாமல், மற்றமைகளையும் இணைத்து அணுகும் இத்திரைப்படத்தின் இணைப்பாய்வுப் போக்கு கவனிக்கத்தக்கது. போலித்தன்மைகளால் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கையானது “யதார்த்தம்” என்ற தன்னிலையிலிருந்தும் நம்பவைக்கப்பட்டவைகளிருந்தும் விலகி, முரண்பட்ட கூறுகளுடன் இணைந்து, “எவை யதார்த்தம்?” என்னும் கேள்வியை எழுப்புகின்றது.

இதே நிலையை Non-fiction திரைப்படத்திலும் அவதானிக்கலாம். இத்திரைப்படத்தில் ஒரு புனைவை எழுதும் எழுத்தாளர் முதற்கொண்டு நடிகை, பதிப்பாளர் என விரிந்துசெல்லும் கதாபாத்திரங்கள்வரை அனைவருமே அவரவர் கட்டமைத்த உறவுகளைப் போலியாகப் பற்றிக்கொண்டு இன்னபிற உறவுகளுடன் வாழ்க்கையை உயிர்ப்பின்றி முன்னகர்த்திச் செல்கிறார்கள். இங்கே யதார்த்தம் என்பது, வரையறுக்க முடியாத வகையில், தன்னிலையில் இயங்காமல் முழுக்க முழுக்க மற்றமைகளின் முரண்பட்ட இணைப்பாய்வாக இருக்கிறது. 

படைப்புச் சுரண்டல் 

ஒரு படைப்பை உருவாக்கும்போது ஒரு கலைஞர் இயல்பாக எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளையும் வலிந்து தானாகத் திணித்து உருவாக்கிக்கொள்ளும் நெருக்கடிகளையும் வேறுபடுத்தி கவனிக்க வேண்டியுள்ளது. “கலையை உருவாக்கும் போது கலைஞரிடம் கலை கோரும் அழிவுக்கோரிக்கைகளில் கட்டாயமான நீதி- உயிர்வாழ்வதும் மரிப்பதும் அக்கலைக்காகவே“. இதன் அடிப்படையில் ஒரு கலைஞன் தன்னையே தன் கலைக்காக முழுவதும் அர்ப்பணிப்பதில் நியாயம் இருக்கலாம். ஆனால் பிறரை அர்ப்பணிப்பதோ அர்ப்பணிக்கும்படி நெருக்குவதோ விமர்சனத்திற்குரியது. அவை ஒருவிதச் சுரண்டலாகவே இருக்கின்றபோதிலும், படைப்பாளி தன் படைப்பின் தரத்தைக் காட்டி அதற்கு நியாயம் கற்பித்து, பிற விமர்சனங்களைப் புறந்தள்ளுவதென்பது அப்படைப்பாளியின் படைப்பையே கேள்விக்குள்ளாக்கும் நிலைக்குத் தள்ளிவிடுகின்றது. பாலின வேறுபாடுகளின்றி ‘படைப்பாளிகள்’ என்னும் அடையாளத்திற்குள் இருப்பவர்கள் இதனை நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

எழுத்துத் துறையில் நிகழ்த்தப்படும் சுரண்டலைப் பொறுத்தவரை, ‘தான் எவ்வாறு இன்னொருவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறேன்’ என்கிற சுய மதிப்பீட்டின் அடிப்படையில் அதற்கான எதிர்ப்பும் வரவேற்பும் கிடைத்துவிடுகின்றது. உதாரணமாக, சிபில் திரைப்படத்தில், மார்கோட்டின் அனுமதியின்றி அவளைக் குறித்து சிபில் எழுதிய புனைவுக்கு அவள் எவ்விதமான எதிர்ப்பும் காட்டுவதில்லை. மாறாக, பெருமிதப்பட்டுக்கொள்கிறாள். ஆனால், Non-fiction திரைப்படத்தில் இடம்பெறுகிற புனைவெழுதும் ஓர் ஆண் கதாபாத்திரம், தன்னுடன் இரகசிய உறவிலிருக்கும் நடிகை குறித்து அவருக்கே தெரியாமல் எழுதுகிறார். அந்த நூலை வாசிக்கும் நடிகை, ஆவேசம் மேலோங்கி எழுத்தாளரைக் கடிந்துகொண்டு, தங்களுக்குள் இருக்கும் உறவை முறித்துக்கொள்கிறார்.

எழுத்துச் சுரண்டல்களைக் காட்டிலும் திரைப்பட உருவாக்கத்தில் நிகழ்த்தப்படும் சுரண்டல்கள் ஆழமான நேரடி பாதிப்பைக் கொண்டவை. உண்மைக்கு நெருக்கமான உணர்வுகளைத் திரைப்படத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக நடிகர்களை உள நெருக்கடிக்குள்ளாக்கிச் சுரண்டுவது ஒருபுறம், தனிப்பட்ட பாலியல் தேவைக்காக சுரண்டுவது மறுபுறம் என்றவாறு அது நீண்டு செல்கின்றது. Last Tango in Paris (1972) திரைப்படத்தில் மரியா ஷ்னெய்டர் என்கிற நடிகையின் அனுமதியின்றி நிகழ்த்தப்பட்ட வன்புணர்வை இத்தகைய சுரண்டலுக்கு மாபெரும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். தற்காலத்தில், ‘Metoo’ இயக்கத்தின் மூலமாக, பெண்கள் சுரண்டப்படுவது வெளிக்கொணரப்பட்டு வருகின்றது. திரைப்பட இயக்குநர்களும் வழங்குநர்களும் பெண்களை வைத்து இயக்கும்- ‘உலகத்தரம்’ என முத்திரை குத்தப்பட்ட- திரைப்படங்களில் நடிகைகளைக் கையாளும் விதம் குறித்தும் அந்தச் சுரண்டல்களின் தீவிரம் பற்றியும் அவர்களின் விளிம்புநிலை குறித்து ஆராய்ந்தும் மிக முக்கியமான விமர்சனங்களை முன்வைத்தது Nina wu (2019) என்கிற தாய்வான் நாட்டுத் திரைப்படம். Sex is Comedy (2002) திரைப்படத்தில் ஒரு ஆண் நடிகரால் ஒரு பெண் இயக்குநர் சுரண்டப்பட்டு அலைக்கழிக்கப்படுவது குறித்து விமர்சிக்கப்பட்டிருக்கும். இவை படைப்புருவாக்கத்தில் பாலின ரீதியாக நிகழும் power dynamics-ஐ ஆராய முற்படுகின்றன. இத்தகைய நேரடியான சுரண்டல்களையும் ஒடுக்குமுறைகளையும் திரைப்படங்களின் போர்வையில் பதுக்கிக்கொண்டு தம் உலகத்தரத்தைப் பொதுவெளியில் பறைசாற்றிக்கொள்வதென்பது ஒரு முரண். 

”படைப்புருவாக்கம் என்பது எந்த விதிகளும் எல்லைகளுமற்ற விளையாட்டைப் போன்றது” என்னும் படைப்பாளர் சார்பாகவுள்ள கூற்று விமர்சிக்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் புறக்கணிக்க முடியாதது. அந்த வகையில் Meta-fiction, Meta-cinema என்னும் ஒன்றிலொன்று தொடர்புபட்ட இரு வகையான கதைசொல்லல் கூறுகளும் சிபில் திரைப்படத்தில் இயங்குகின்றன. படைப்பாளரே படைப்பை விமர்சிக்கும் அல்லது நியாயப்படுத்தும் போக்கையுடைய இத்தகைய Meta-fiction பாணியில் எழுதப்பட்ட நாவல்களைத் திரைப்படமாக்கிய அனைத்து திரைப்படங்களும் இதற்குள் அடங்கும். இது தவிர்த்து சினிமா, ஓவியம், இன்னபிற கலைப் படைப்புகளை உருவாக்க முனைகையில் கலைஞர்கள் சந்திக்கும் நெருக்கடிகளையும் சுய விமர்சனங்களையும் கொண்ட பல்வேறு படைப்புகளை உதாரணமாகக் கொள்ளமுடியும்- Contempt(1963), Day for night (1973), Sex is comedy (2002) , The man who killed Don Quixote (2018), Nina wu (2019), Non-fiction (2018), Mother (2017), Misery (1990), The house that Jack built (2018), The hours (2002), Delta of Venus (1995), Peeping Tom (1960), Frida (2002), etc.

இத்திரைப்படத்தின் சாரம் இதுதான். படைப்பாளியின் கலையும் வாழ்க்கையும் விடுதலையை நாடியோ திருப்தியை நாடியோ இல்லை. எழுத்தாளர்கள் தத்தம் படைப்புகளில் தங்களை முழுவதுமாக முதலீடு செய்து, அன்றாட வாழ்வில் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போக முடியாமல் தத்தளிக்கிறார்கள். அதனால், தாங்கள் அடையும் குற்றவுணர்வுகளில் இருந்து மீளமுடியாமல் சுய அழிப்பில் ஈடுபடுவதென்பது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. இவைகளைத் தாண்டிச்சென்று மீண்டு வருகையில், ‘உண்மையில் கலை அல்லது படைப்பு என்பது என்ன? வாழ்க்கை என்பது என்ன?’ என்கிற கேள்விகளுடனேயே எஞ்சி  நிற்கின்றது அவர்களது மீதி வாழ்க்கை. ஒரு படைப்பை உருவாக்குவதற்காக அத்தனை போலித்தனங்களையும் துரோகங்களையும் வலிகளையும் கடந்து, குறைந்தபட்சம் தனக்கான உணர்வுகளுக்குத் தானே நியாயம் செய்யாமல் யாருக்கோ எழுதி என்ன பயன்? எழுத்தின் மூலம் தன்னைக் கண்டடையவும் புதுப்பிக்கவும் முடியுமா என்கிற கேள்விகள் சிபில் திரைப்படத்தின் சாரமாயிருக்க, அக்கேள்விகளுக்கு விடை காணவாவது மீண்டும் எழுதுவதென்பது சிபிலுக்கு அவசியமாயிருந்துவிடுகின்றது.

1 comment

Nanban February 17, 2021 - 5:16 pm

❤️

Comments are closed.