நகரத்தில் ஒரு விருந்து – மார்சல் ப்ரூஸ்ட்

0 comment

“ஆனால் ஃபாண்டானிஸ், அந்த உணவின் மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்துகொண்டவர் யார்? நான் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.”
(ஹொரேஸி)

1

ஹொனோயே தாமதமாக வந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும் தானறிந்த அதிதிகளுக்கும் முகமன் கூறியபின், பிறருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். தனது மேசை நோக்கிச் சென்று அமர்ந்தவரிடம், சிறிது நேரம் சென்றபின், அருகிலிருந்த இளைஞன் விருந்தினர்களின் பெயர்களைச் சொல்லச் சொல்லி கேட்டான். தொடர்ந்து அவர்களைப் பற்றி ஏதோ சிலவற்றைச் சொன்னான். ஹொனோயே அவனை இதுவரை குழுமத்தில் பார்த்ததில்லை. அவன் மிகவும் அழகாயிருந்தான். தொகுப்பாளர் அவனைத் தீயுமிழும் விழிகளுடன் வெறித்துக்கொண்டிருந்ததைக் காணும்போது அவனுக்கு அழைப்பு வந்திருந்ததற்கான காரணம் தெளிவாகவே புரிந்தது. அவன் விரைவிலேயே அவளது வட்டத்தின் அங்கமாகிவிடுவான் என்பதை அது குறிப்புணர்த்தியது. அவனுக்குள் தனது வருங்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்வதற்கான திறன் இருப்பதை ஹொனோயேவால் உணரமுடிந்தது. ஆயினும், எத்தகைய பொறாமையுணர்வுமின்றி, பணிவும் அன்பும்கொண்டு அவனுக்குப் பதிலிறுக்க வேண்டியது தனது கடமை என்றே எண்ணினார். சுற்றிலும் பார்த்தார்.

எதிரே இருந்த இரண்டு அருகமர்ந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர்கள், குழப்பமான நன்னோக்கங்களின் அடிப்படையில் ஒருசேர அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவருமே இலக்கியச் செயல்பாட்டாளர்கள் என்பதால் அருகருகே அமரவும் வைக்கப்பட்டிருந்தனர். ஒருவரையொருவர் வெறுத்துக்கொள்ள இந்த முதன்மையான காரணம் போதுமென்றாலும் இன்னும் தனித்துவமான காரணமும் அவர்களுக்கு இருந்தது. எம். பவுல் தெஜார்தின், எம்.டி.வோக் ஆகியோரின் சொந்தக்காரரான – இருமடங்கு உறக்கக் குவிவடைந்த – வயதில் மூத்த இலக்கியவாதி தனது ஏளனமான மெளனத்தைக் காட்டுவதன் வழியே இளையவரை காயப்படுத்திக்கொண்டிருக்க, எம். மோரிஸ் பேர்ரஸின் ஆஸ்தான சீடராகிய இளையவர் ஒருவித அலட்சியப் புன்னகையுடனேயே மூத்தவரைப் பொருட்படுத்திக்கொண்டிருந்தான். மேலும் இருவரும் ஒருவர் பிறரது இச்சைகளுக்கு எதிராகக் கொண்டிருந்த வெறுப்புணர்வு பிறரது முக்கியத்துவத்தைப் பெருக்கியபடியே இருந்தது. முரடர்களின் முதல்வன் மூட அரசர்களின் தொகையுடன் சமரிட அழுத்தம் தரப்பட்டதைப் போல இருந்தது. இதைக் கடந்து கடுங்கோப முகத்துடன் ஒரு அழகிய ஸ்பானியப் பெண் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஒரு தீவிர த்வனி கொண்ட ஆளாக இருந்த அவள், இத்தகைய பகட்டான வீட்டில் நிகழும் விருந்தில் கலந்துகொள்வதன் மூலம் தனது சமூகப் போக்கினை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதன் தகவிற்காக தயக்கமேயின்றி தன் காதலனுடனான சந்திப்பைத் தவிர்த்துவிட்டு வந்திருக்கிறாள். அவள் சரியான தேர்வையே மேற்கொண்டிருக்கிறாள் என்பதற்கான அடையாளங்கள் நிச்சயம் இருக்கவே செய்தன. 

திருமதி ஃப்ரெமெர் அவளது பெண் தோழிகளிடமும் அவளது பெண் தோழிகள் திருமதி ஃப்ரெமெரிடமும் என பகட்டிறுமாப்பைக் காட்டிக்கொண்டிருந்தனர். பொதுமக்கள் பூர்ஷ்வாத்தனத்தோடு பரஸ்பரமாக காப்பீடு செய்துகொண்டிருப்பதை போல இருந்தன அவர்களது செயல்பாடுகள். தன் சொத்துகளின் பகுதியை விற்பனை மேற்கொள்ளவிருந்த திருமதி ஃப்ரெமெருக்கு காலம் கைகூடி வந்தது. இந்த மாலையில், இதற்கு முன்பு விருந்துக்கு அழைக்க முடியாமல் போயிருந்த பலரையும், வெவ்வேறு காரணங்களுக்காக யதேச்சையாகத் தேர்வுசெய்து உண்மையான பணிவுகாட்ட விழைந்தவர்களுடன் விருந்தை ஒருங்கிணைத்திருந்தாள். இந்த ஒட்டுமொத்த கூடுகையுமே சீமாட்டியின் வருகையால் மகுடம் சூட்டப்பட்டது போலானது இன்னும் பொருத்தமாயிருந்தது. ஸ்பானியப் பெண்ணிற்கு ஏற்கனவே அறிமுகம் இருந்ததால், சீமாட்டி குறித்து அவளுக்குப் பெரிய ஆர்வமில்லை. 

’என்னைக் கொஞ்சம் சீமானிடம் அறிமுகப்படுத்தி வைக்க இயலுமா?’ சீமானிடம் சென்ற பிறகு, ‘தகைவாளரே, என்னைக் கொஞ்சம் சீமாட்டியின்பால் அறிமுகம் செய்துவைக்க முடியுமா?’ என்று கேட்பது. இத்தகைய மாலைநேர வரவேற்புகளின் போது வழமையாக அடித்தொண்டை குரலிலிருந்து வெளிப்படும் சொற்றொடர்கள் பற்றி தனது சினப்பார்வையைத் தன் கணவனும் அவளும் ஒருவர் மீதொருவர் அவ்வப்போது பரிமாறிக்கொண்டிருந்தனர். (ஒவ்வொரு வேண்டுதலுக்குப் பிறகும், வேறு சில சின்னச் சின்ன வேலைகளைச் செய்வதற்கென ஐந்து நிமிட இடைவெளிகள் எடுத்துக்கொண்டனர்.) கடைசியில் சீமாட்டியிடம் சென்றதும், ’சீமாட்டி அவர்களே என் மனைவியை அறிமுகம் செய்து வைக்க என்னை அனுமதிப்பீரா?’ என்று கேட்பது. நேரத்தை வீணடிப்பதில் இத்தனை ஆர்வத்துடன் செயல்பட்டுவிட்ட பின்னரும்கூட, தன் அருகிருக்கும் வீட்டுரிமையாளரின் உதவியாளருடன் உரையாடலைத் தொடங்கும் பொருட்டு, தானே அங்கிருந்து விலகிக்கொள்வார். ஓராண்டிற்கும் மேலாக ஃப்ரெமர் தன் மனைவியிடம் இந்த நபரை அழைக்க வேண்டி கெஞ்சிக்கொண்டிருந்தார். கடைசியாக அதற்கு மனமொத்த அவள் அவரை ஒரு மானுடவாதிக்கும் ஸ்பானியப் பெண்ணின் கணவனுக்கும் இடையில் பொருத்திவிட்டிருந்தாள். அனைத்தையும் வாசிக்கக் கூடியவரான அந்த மனிதநேயவாதி அனைத்துண்ணியாகவும் இருந்தார். அவரது உதடுகளிலிருந்து மேற்கோள்களும் ஏப்பங்களும் வெளியேறியபடியே இருந்தன. 

அவருக்கடுத்து அமர்ந்திருந்த உயர்குடிப் பெண்ணாகிய திருமதி லினோயருக்கு இந்த இரண்டு ஏற்கமுடியாத குணவெளிப்பாடுகளின் மீதும் சரிசமமான ஒவ்வாமை ஏற்பட்டிருந்தது. அவள் விரைவிலேயே, தகோமேயில் இளவரசர் தே புவேரி பெற்றிருந்த வெற்றிகள் பற்றி உரையாடலைத் திசைதிருப்பினாள். ‘அன்புக்குரிய சிறுவனே, அவர் தன் குடும்பத்தைப் பெருமை கொள்ளச் செய்வதைப் பார்த்து நான் எத்தனை குதூகலிக்கிறேன், பாரேன்!’ அவள் புவேரியின் ஒன்றுவிட்ட சகோதரி. அவளை விடவும் வயதில் சிறியவன் என்பதாலும் அரச குடும்பத்துடனான அவள் உறவினாலும் அவளது பெரும் சொத்தின் காரணமாகவும் மூன்று திருமணங்களிலும் தவறாது தொடரும் அவளின் மலட்டுத்தன்மையின் பேரிலும் புவேரி அவளிடம் மரியாதையுடனேயே நடந்துகொள்கிறார். ஒட்டுமொத்த புவேரி குலத்திடமும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடும்ப ரீதியான உணர்வுகளை அவள் கடத்திவிட்டிருந்தாள். அவர்களில் யாரேனும் ஒருவர் இவளிடம் தவறாக நடந்துகொண்டார்கள் எனில் அவனை சட்டரீதியான முறையில் கைதுசெய்யும் வரை, அதை உள்ளார்ந்த புண்படுத்துதலாக எடுத்துக்கொள்ளக் கூடியவளாக இருந்தாள். அவளது வலப்புருவத்தின் மேற்புறமாக, ஆர்லியான் பாணியில் சீவப்பட்டிருந்த கூந்தலின் வகிட்டில், இராணுவத் தளபதியாக இருந்த தனது குடும்ப அங்கத்தினர் ஒருவரின் வெற்றிச் சின்னத்தினை அணிந்திருந்தது அவளுக்கு இயல்பாக பொருந்தியிருந்தது. 

தொடக்கத்தில் அழையா நபராக இருந்து, இதுவரை குடும்பத்தின் வெளியாளாக இருந்து வந்தவள், இறந்த கணவனிடமிருந்து உரிமைகளைப் பெற்றபின், இப்போது அதன் தலையாகவே மாறியிருக்கிறாள். நவீன சமூகத்தில் தன்னை நாடு கடத்தப்பட்டவளாக உணர்ந்தவள், எப்போதும், ‘கடந்த காலத்தின் கனவான்கள்’ மீது பாசத்துடன் நினைவேக்கத்தை வெளிப்படுத்துபவளாக இருந்தாள். அவளது பகட்டிறுமாப்பு அவளது கற்பனையில் மட்டுமே இருந்தது. சொல்லப்போனால், அவளது கற்பனையில் வேறேதுவுமே இல்லை. வரலாறிலும் பெருமிதங்களிலும் திளைத்த பெயர்கள்தான் அவளது உணர்ச்சிவசப்படுகின்ற மனதில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தும் ஒரே விசயம். அதன் மீது துளியும் தன்னார்வமின்றிகூட அவளால் இளவரசர்களுடன் உண்டுகளிக்கவும் ஃப்ரான்ஸின் பண்டைய அரசாங்க அமைப்பு பற்றிய நினைவுக் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கவும் முடிகிறது. ரெய்சின் அலங்காரம் செய்யப்பட்ட தொப்பியை எப்போதும் சூடியிருந்தாள். அவளது கொள்கைகளைப் போல அதுவும் மாறிலியாகவே இருந்தது. அவள் விழிகள் வெறுமையால் ஒளிர்ந்தன. அவளது புன்னகை முகம் கருணையுடன் இருக்க, அவள் வெளிப்பாடுகள் மிகைபடுத்தப்பட்டவையாகவும் அர்த்தமற்றவையாகவும் இருந்தன. அவளது கடவுள் நம்பிக்கை தீவிரமானது. சோலை விருந்திலோ அல்லது புரட்சியிலோ இருப்பவளைப் போன்ற த்வனியுடன் தளராத நம்பிக்கையுடன் படபடத்துக்கொண்டிருந்தவள், எம்பிக் குதிப்பதைப் போன்ற அசைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தாள். அவளைக் காண்போருக்கு அடிப்படைவாதிகளையோ மோசமான வானிலையையோ துரத்தியடித்துக்கொண்டிருப்பவள் போலத் தோன்றும். 

அவளது அருகாமையில் இருந்த மனிதநேயவாதி, தனது சோர்வூட்டக்கூடிய நாவன்மையுடனும் சரியான விதிமுறைகளுக்கான அத்தனை இலட்சணங்களுடன் அச்சமூட்டக்கூடிய எளிமையுடனும் பேசிக்கொண்டிருந்தான். தனது குடிகாரத்தனத்தையும் பெருந்தீனி உண்ணலையும் மறைக்கும் பொருட்டு பிறர் பார்வைக்காக ஹொரேஸியைத் தொடர்ந்து மேற்கொள் காட்டிக்கொண்டும், அத்தோடு தனது பிழைகளில் இருந்து தன்னையே மறைக்கும் விதமாக அவ்வுரையாடலுக்கு கவித்துவ ஒளியைச் சிந்தவிட்டபடியும் இருந்தான். பார்வைக்குப்படாத, புதிதாக பறிக்கப்பட்ட பழங்காலத்து ரோஜாக்கள் அவனது குறுகிய புருவத்தில் சரமாக இருந்தன. அதற்குச் சரிசமமாக தனக்கு எளிதாகக் கைவரும் பணிவுடன், இக்காலத்தில் அருகிப் போய்விட்ட பழைய பழக்கங்களுக்கு மரியாதையளிக்கும் விதமாகவும், தனது செல்வாக்கை காட்டும் வகையிலும், திருமதி லினோயர் ஏறத்தாழ ஐந்து நிமிடங்களுக்கொருமுறை ஃப்ரெமரின் துணையாளருடன் திரும்பி பேசிக்கொண்டிருந்தாள். பின்னவருக்கு இது துன்பமளிக்கும் அளவிற்கு எந்தக் காரணமும் இல்லை. மேசையின் மற்றொரு புறமிருந்து திருமதி ஃப்ரெமர் மிகுந்த கவர்ச்சிகரமான பாராட்டுகளுடன் அவருடன் முகமலர்ந்துகொண்டிருந்தாள். 

அவள் இம்மாலை விருந்து ஆண்டாண்டுகளுக்கு நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கவேண்டுமென விரும்பினாள். அதுமட்டுமின்றி இந்தத் தீவற்றியை நீண்டகாலத்திற்கு அழைப்புவிடுக்கப் போவதில்லை என்றும் தீர்மானித்திருந்தாள். பாராட்டு மாலைகளின் அடியில் அவனைப் புதைத்துக்கொண்டிருந்தாள். ஃப்ரெமரைப் பற்றிச் சொல்லவேண்டும். நாள் முழுதும் தனது வங்கியில் பணியாற்றிவிட்டு வருபவரை மாலைகளில் அவரது மனைவி சமூகக் கூட்டங்களுக்குள் இழுத்துவிடுவதும் வரவேற்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதாக இருந்தால் அவரை வீட்டிலேயே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதுமாக இருந்தாள். அவர் எப்போதும் யாரையேனும் உயிரோடு தின்றுவிடத் தயாராகவே இருந்தார் என்றபோதும் குழப்பமான மனநிலையிலேயே இருந்தார். இதனால் எரிச்சலுடன் கூடிய நாவடக்கம், பிணக்கத்துடன் கூடிய விலகல், அரைகுறையாக கட்டுப்படுத்தப்பட்ட ஆர்வம், ஆழமான மிருகத்தனம் ஆகியவற்றின் கூட்டுருவமாகவும் இயல்பான தினசரி சூழல்களில் தன்னைப் பொருத்திக்கொள்ள முயல்பவராகவும் இருந்தார்.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட மாலையில் இந்தப் பணக்காரரின் முகத்தில் இருந்த உணர்வுகள், ஒவ்வொரு முறையும் தனது துணையாளரைக் காண்கையில் மனப்பூர்வமான திருப்தியைப் பறைசாற்றுவதாக இருந்தது. சாதாரணமான செயல்பாடுகளின் போது அவரால் அவனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றபோதும் விரைவாகவே இங்கு அவன்மீது நிஜ நேசம் வளர்ந்துவருவதைக் கண்டுகொண்டார். தனது செல்வச் செழிப்பால் யாரையும் திகைக்கவைக்க முடியும் என்பதால் அந்த அன்பு வளரவில்லை. மாறாக, வெளிநாட்டில் இருக்கையில் நமக்கு முன்பு வந்து நிற்கும் ஃப்ரெஞ்சுக்காரனைப் பார்த்து – அவன் வெறுக்கத்தக்கவன் என்றபோதும் – வரக்கூடிய குழப்பமான இனவுணர்வைப் போன்றதுதான் அது. 

ஒவ்வொரு மாலையும் அவர் பலவந்தமாக தனது பழக்கங்களிலிருந்து கிழித்தெறியப்படுகிறார். கருணையே இன்றி பிடுங்கப்படுகிறார். தனக்கு வந்து சேரவேண்டியவைகளில் இருந்து விலக்கப்பட்டவனாகிறார். இறுதியில் பொதுவாக அவருக்குள் வன்மமான எரிச்சலுணர்வால் நிரப்பப்படும் ஒன்றுடன், மிக வலுவாக பிணைக்கப்படுகிறார். அதன் வழியாகவே அவர் யாரோ ஒருவருடன் அணுக்கமாக உணர்கிறார். அதுவே அவருக்கு இந்தத் தீரா மனக்கசப்பிலிருந்தும் ஆற்றொணா தனிமையிலிருந்தும் மீட்பாகத் தோன்றுகிறது. அவரெதிரே திருமதி ஃப்ரெமர் தனது வயப்படுத்தும் பொன்னெழிலைப் பிறரது விழிகள் எதிரொலிக்க அனுமதித்திருந்தாள்.

அவளைச் சுற்றியிருக்கும் இந்த இரட்டைப் புகழொளி, மயக்கம் தரும் ஒரு முப்பட்டகம், அதன் வழியே பலரும் அவளது தோற்றத்தை அவளது நிஜமான குணநலன்களிலிருந்து பிரித்துப்பார்க்க விரும்பினர். இலக்கு வைத்து நகர்பவள், சூழ்ச்சிக்காரி, சாகசக்காரி என்றெல்லாம் – இத்தகைய புத்திசாலித்தனமான உலகிற்குள் நுழைய வேண்டி, கைவிட்டுவிட்டு வெளியேறிவந்த பணம்புழங்கும் உலகத்தில் – சிலருக்குத் தோன்றினாள்.

அதற்கு நேரெதிராக ஃபாபர்க், அரச குடும்பத்தின் பார்வையில் (தனது உயர்வான அறிவினால் அவர்களது மனங்களை வென்றிருந்தாள்), நன்னெறியும் நற்குணமும் நிறைந்த தேவதையாகக் காட்சிதந்தாள். அதுமட்டுமின்றி அவள் தனது பழைய மரியாதை குணமிக்க நண்பர்களை மறந்துவிடாமல், அவர்கள் எப்போதெல்லாம் நலமற்றும் துயருற்றும் போவார்கள் என்பதை நினைவில் வைத்திருப்பவளாக இருந்தாள். அந்த உருக்கமான சூழ்நிலைகளில், வீட்டிலேயே இருக்கிறார்களே என்ற பரிதாபத்துடன் அவர்களை யாரும் விருந்துக் கூடுகைகளுக்கு அழைக்கப்போவதில்லை என்பது அவளுக்கு மேலதிக அனுகூலமாகிவிடுகிறது. அதனால் தனது வள்ளல் மனப்பான்மைக்கும் மரணப்படுக்கையில் உறவினர்களுடனோ அல்லது மதகுருக்களோடோ பேசும் உரையாடல்களுக்கும் முழு இடம் கொடுத்தவாறிருக்கிறாள். அவள் கபடமற்ற கண்ணீர்த்துளிகளை உகுக்கிறாள். அதன் வழியே அதீதமாக அனைத்தும் கிடைக்கும் வாழ்வின் பலனாக தன் தூய இதயத்தில் ஏற்படத்தக்க மனச்சோர்வை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றுவிடுகிறாள்.  

அங்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தது இளைய சீமாட்டிதான். அவளது தெளிந்த, விழிப்புகூடிய, ஒருபோதும் தடுமாற்றமோ குழப்பமோ அடையாத மனதிற்கு எதிரான சித்திரத்தையே அவள் புறங்கள் காட்டின. சிகிச்சையளிக்கவே முடியாத துயரம் ததும்பும் அவளது இன்விழிகள், அவள் உதடுகளில் திகழும் நம்பிக்கையின்மை, அளவிலா தேய்வுகொண்ட உன்னத கரங்கள். வாழ்வை – அன்பு, இலக்கியம், நாடகம், நடிப்பு, நட்புபாராட்டல் என – அதன் அத்தனை வடிவத்திலும் அமைப்புகளிலும் உள்ளபடியே நேசிக்கும் இந்த ஆற்றல்காரி, தனது சிவந்த கவினுதடுகளை, ஒரு மலரைப் போல ஒதுக்கி, வீணாக்கிவிடாதவாறு தொடர்ந்து கடித்தபடியே இருந்தாள். அதன் முனைகளில் வசியமற்றிருந்த மென்னகை எப்போதேனும் எழுந்தெழுந்து அமர்ந்தபடி இருந்தது. அவளது விழிகளோ விசனத்தின் நோய்மையில் அடித்தளம் அமைக்கப்பட்ட நீர்நிலையில் நீந்தும் மனதைச் சுட்டுவதாக இருந்தன. எத்தனை முறை தெருக்களில், நாடக அரங்குகளில் அந்த மின்னும் தாரகைகளை ஆவலுடன் பார்த்தவர்கள் தங்கள் கனவுகளை அதன் உதவியால் ஒளியூட்டிக்கொண்டிருக்கிறார்கள்! பல்சுவை நாடகத்தை நினைவில் மீட்டெடுத்தபடியோ, புதிய ஒரு அலங்காரத்தைச் சிந்தனையில் உருவாக்கியபடியோ இருக்கும் சீமாட்டி இப்போதுதான், தனது எழிலொழுகும் விரல்களைச் சொடுக்கிட்டு விலகலும் சிந்தனையில் ஆழ்தலுமாகத் தோன்றினாள்.

தனது விழிகளில் ஆழமும் பொருட்டின்மையும் ஒருசேர, சுற்றிப் பார்வைவீசி, அங்கிருந்த துயரங்களின் நீர்பெயலுக்குள் மூழ்கிக்கிடந்த விருந்தினர்களைப் பார்த்தாள். அலட்சியமான அடித்தளத்தில் நின்றபடி, அவளது நேர்த்தியான உரையாடல்கள் பழமையான நம்பிக்கையின்மைவாதத்தினூடே கவர்ச்சிகரமாக முன்னகர்ந்துகொண்டிருந்தது. அங்கு இப்போதுதான் சூடான விவாதம் நடந்துகொண்டிருந்தது. இந்தப் பெண்மணியோ, வாழ்வின் முழுமையறிந்தவளாக, அனைவரிடமும் ஒரேயொரு வகையான உடையணிதல்தான் பொருந்தும் என்று நிறுவிக்கொண்டிருந்தாள். அதையே பலதரப்பட்ட எண்ணங்கள் கொண்டவரிடமும் மீண்டும் மீண்டும் சொல்லவும் செய்தாள். ‘ஏன் ஒருவரால் அனைத்தையும் சிந்திக்கவும் பேசவும் இயலாது? நான் சரியாக இருக்கக்கூடும், அப்படியே நீங்களும். கருத்து சொல்வதென்பது எத்தனை பயங்கரமான குறுகிய மனப்பான்மை?’ அவள் மனம் அவளது உடலைப் போல நவீன உடையை அணிந்திருக்கவில்லை. அவள் குறியீட்டுவாதிகளையும் உற்சாகவாதிகளையும் சீண்டுவது வெகு எளிது என்று அறிந்திருந்தாள். ஆனால் பழைய உடைகளில்கூட அழகாகவும் உயிரோட்டமாகவும் தெரியக்கூடிய பெண்மணிகளின் மனத்தை ஒத்திருந்தது அவளின் எண்ணங்கள். எப்படி நோக்கினாலும் அது வேண்டுமென்றே பொழுதுபோக்கிற்காக போக்கு காட்டும் குணம்தான். சில நிறங்கள் தனது சருமத்திற்குப் பொருந்தாமல் போய்விடும் என்று அவள் நினைப்பதைப் போன்று, சில அதீத பண்பற்ற கருத்துகள் அவளது மூளையைச் செயலிழக்கச் செய்திருக்கக்கூடும். 

https://i.pinimg.com/originals/cb/9f/16/cb9f16a4b0f8fa6169aa53c1d84faf05.jpg

ஹொனோயே தன்னருகில் அமர்ந்திருந்த அழகனிடம் இந்த வித்தியாசமான ஆட்களைப் பற்றி ஒரு கோட்டுச் சித்திரத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு பண்பு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் இடையில் இருந்த ஆழமான வேறுபாடுகளையும் கடந்து, புத்திசாலித்தனமான திருமதி டொரெனோ வெடுக்கென பேசும் சீமாட்டி, அழகான திருமதி லினோயர் என அவர்கள் அனைவரும் ஒன்றே போலிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் இருந்த ஒரேயொரு குணாதிசியத்தை – அதை  ஒருவித கூட்டுவெறி என்றும் குறிப்பிடலாம் – அவன் தெளிவுபடுத்தவில்லை. பரவலாகவே அவர்களது பகட்டுநிலையில் இருக்கும் அதே பெருநோய்தான்- இறுமாப்பு. அவர்களுடைய வேறுபட்ட இயல்புகளுக்கு ஏற்ப இந்த இறுமாப்பு வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தது என்பது உண்மைதான். திருமதி லினோயரின் கற்பனைத்திறன் மிகுந்த கவித்துவமான இறுமாப்பிற்கும் அனைத்தையும் வென்றெடுக்கும் திருமதி டொரெனோவின் இறுமாப்பிற்கும் ஆழித்தொலைவு உண்டு.

பின்னவர் உச்சநிலைகளுக்குச் செல்ல எந்த அளவிற்கும் போகத் தயாராக இருக்கும் ஆட்சிப் பணியாளர்களை ஒத்த உத்வேகமுடையவர். அப்படியிருந்தும், அந்தப் பயங்கரமான பெண்மணிக்கு மீண்டும் தன்னை மறுமானிடராக்கிக்கொள்ளும் திறனும் இருக்கிறது. அவளருகாமையில் இருந்தவன், அவளது மகளை பார்க் மான்ஸியில் பார்த்து மிகவும் மெச்சியதாக விதந்தோதிவிட்டிருந்தான். உடனடியாக அவள் தனது சின மெளனத்தை உடைத்துவிட்டாள். இந்தத் தெளிவற்ற கணக்காளரிடம் தூய நட்புணர்வைப் பாராட்டத் தொடங்கிவிட்ட அவள் நிச்சயம் இதை ஒரு இளவரசனிடம் செய்திருக்கமாட்டாள். இப்போது அவர்கள் பழைய நண்பர்களைப் போல கதையளந்துகொண்டிருக்கின்றனர். உரையாடலை ஆக்கிரமிப்புடன் செய்துகொண்டிருக்கும் அவள், தான் கருதிக்கொண்டிருக்கும் உயர்ந்த காரியத்தின் ஊற்றிலிருந்து கிளம்பிய திருப்தியை தன் வதனத்தில் தெளிவாக காண்பித்தாள். 

மகத்தான எழுத்தாளர்களின் அறிமுகங்களுக்குப் பழகிப் போயிருந்த சீமாட்டி, சர்வ வல்லமைகொண்ட வெளிநாட்டு தூதமைச்சர் ஒருவர்- நெறிமுறை கடைபிடிப்புகளில்கூட மனவெழுச்சியுடன் செயல்படுவதைக் கண்டபடி இருந்தாள். எது எப்படியிருந்தாலும் உரையாடல் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது. விருந்தில், அவர்கள் தங்களருகே அமர்ந்திருந்த பெண்மணிகளின் முழங்காலைத் தீண்டும் அல்லது அவர்களது இலக்கிய விருப்பங்களை விசாரிக்கும் தருணத்திற்கு வந்துசேர்ந்திருந்தனர். அது அவர்களது கல்வியையும் மனோபாவங்களையும் பொருத்ததாக இருந்தது. இன்னும் குறிப்பாக தனக்கருகே இருந்த பெண்ணைப் பொருத்ததாகவும் இருந்தது. ஒரு நிமிடத்தில் பொதுவெளியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கில் தடுமாற்றம் நிகழ்வது தவிர்க்கவியலாதது.

ஹொனோயேவின் அருகிலிருந்த அழகான வாலிபன் தன் வயதின் பொறுப்பற்றதனத்திற்கு ஏற்ப, மறைமுகச் சீண்டல் தரும் வகையில், ஹெரிடியாவின் படைப்புகளில் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரானதைவிட அதிகமான கருத்தாக்கங்கள் நிறைந்திருக்கின்றன என்றான். கருத்துகளை வீசியடிப்பதையே பழக்கதோஷமாக கொண்டிருந்த விருந்தினர்கள் அந்தக் குறிப்பினால் மென்சினமுற்றனர். ஆனால் திருமதி ஃப்ரெமர் உடனடியாக வியப்புடன், ‘அதற்கு எதிரிடையான பார்வையில் அவர்கள் அனைவரும் மெச்சத்தக்க கணநேரத் தோற்றங்களாகவும் ஆடம்பர மிடுக்குகளாகவும் குறையேதுமற்ற ஆபரணங்களாகவும் மட்டுமே இருப்பவர்கள்’ என்றதும் அத்தனை முகங்களிலும் உயிரோட்டமும் உற்சாகமும் மீண்டும் தோற்றமளித்தன. அரசின்மைவாதிகளைக் குறித்த விவாதம் இன்னமும் தீவிரமான சாராம்சம் கொண்டிருந்தது. ஆனால் திருமதி ஃப்ரெமர் ஏதோவொரு இயற்கையை இயக்கும் விதிக்கு முன்பு தலைதாழ்த்துவது போல பணிந்து சிறுவிலகலுடன் மெல்லச் சொன்னாள். ‘அவை அனைத்தின் பலன்தான் என்ன? நம்மிடையே ஏழைகளும் செல்வமுடையோரும் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்’. அங்கிருந்த அனைவரும், நூறாயிரம் பவுண்டுகள் செல்வத்துடன் இருக்கும் கடைசி ஏழை உட்பட, இந்தக் குறிப்பின் உண்மையால் தாக்குண்டு பின் தங்கள் தடுமாற்றங்களிலிருந்து விடுதலை அடைந்தனர். அவர்கள் தங்களது கடைசிக் குடுவை ஷேம்பெய்னை மிதமான மகிழ்வுடன் காலியாக்கினர். 

2

(விருந்துக்குப் பிறகு)

வெவ்வேறு ஒயின்களின் கலப்புதான் தனது மெல்லிய தலைச்சுற்றலுக்குக் காரணமென உணர்ந்திருந்த ஹொனோயே, பிரியாவிடை பகறாமலேயே வெளியேறினார். தன் புறச்சட்டையை கீழ்த்தளத்தில் இருந்து எடுத்துக்கொண்டு சாம்ப்ஸ் எலிசே வழியாக நடைபோட்டவர் பரவசத்தால் நிறைந்திருந்தார். நம் இச்சைகள், கனவுகள் ஆகியவற்றை யதார்த்தத்திலிருந்து பிரித்துக்காட்டும் சாத்தியமின்மையின் தடைகள் உடைந்துவிட்டிருந்தன. அவரது எண்ணங்கள் தன் போக்கில் அடையமுடியாமையின் வனாந்திரத்தில் பெருமகிழ்வுடன் மிகையோட்டம் கொண்டிருந்தன.

ஒரு மனிதனுக்கும் இன்னொருவனுக்கும் இடையில் நீண்டு கிடக்கும் மர்மமான பாதைகளின் துருவ முனையில், ஒவ்வொரு மாலையும் சந்தேகத்திற்கிடமற்றபடி மகிழ்வின் அல்லது சிதைவுகளின் கிரணங்கள் தம்மை நோக்கி அவரை ஈர்த்துக்கொண்டிருக்கக்கூடும். உடனுக்குடன் அவரது சிந்தையெழுந்த மனிதர்கள் அனைவரும் தடையின்றி விரும்பத்தக்கவர்களாகவே இருந்தனர். ஒவ்வொரு தெருவினைக் கடந்தபடியே செல்லும் போதும் அவர்களை முனைத்திருப்பத்தில் கண்டுவிட வேண்டுமே என்ற நம்பிக்கையுடன் நடந்தார். தனது எதிர்பார்ப்பினை முற்றிலும் தன்னுணர்ந்து கொண்டிருப்பாராயின் முன்னகரும்தோறும் அந்நியர்களையும் அறிமுகமற்ற பாதசாரிகளையும் கண்டு, அச்சமின்றி மென்மையாக, எதிர்பார்ப்பின் இன்நடுக்கத்தோடு முகமன் செய்திருப்பார். இப்போது அவருக்கு மிகவும் அருகில் பொருத்தப்பட்டிருந்த மேடையமைப்பு கீழே வீழ்ந்தது. அங்கிருந்த புதுமையிலும் மர்மத்திலும் இன்முகத்துடன் சைகை காட்டும் நிலக்காட்சிகளிலும் வாழ்வு அவரையும் முந்தி தொலைவில் நடைபோட்டுக்கொண்டிருந்தது. இது கானல் நீர், ஒற்றை மாலை என்ற யதார்த்த எண்ணம் அலைக்கழித்து தளர்விற்குத் தள்ளியது. இனி இன்று உண்டருந்தியது போலவே இனியும் செய்ய வேண்டுமென உறுதி சொல்லிக்கொண்டார்.

https://images.fineartamerica.com/images/artworkimages/mediumlarge/2/the-dinner-party-ferencz-paczka.jpg

அவ்விதம், இன்று காண்பது போல் என்றென்றும் அனைத்திலும் உள்ள பரவின்பத்தை பருகமுடியும் என்று நினைத்தார். இங்கு புள்ளிகளாக கிடக்கும் சகலத்தையும் ஒரே மூச்சில் தழுவிக்கொள்ள முடியாது என்பதால், இருப்பின் முடிவற்ற தன்மையையும் நீண்டிருக்கும் தொலைவின் பிரம்மாண்டம் பற்றியும் எண்ணி வலிகொண்டார். அதற்குப் பின்னர் கால்மணி நேரமாக கொஞ்சம் அடிகட்டிய கரகரப்பான குரலில், ‘வாழ்வு துயரகரமானது, எத்தனை மூடத்தனம்!’ என்று தானே அரற்றியபடி இருப்பதை அறிந்தார். (தனது வலது புயம் சடுதியசைவு கொள்ள, இந்தக் கடைசி சொல் அழுத்தமாய் வெளிப்படுகிறது. தனது ஊன்றுகோல் திடீரென்று தடுமாறுவதை அவர் கவனித்தார்.) இந்த இயந்திரகதியான சொற்கள் எல்லாம் தன்னை வெளிப்படுத்தப் பயன்படாத தரிசனங்களின் மொழியாக்கம் மட்டுமே என்று தனக்குத்தானே துயருடன் சொல்லிக்கொண்டார். 

’அய்யோ! எனது மகிழ்ச்சியோ துயரமோ அதன் செறிவு நூறுமடங்கு பெருகிவிட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை என்றபோதும் அறிவின் சரக்கு அப்படியே இருக்கிறது. எனது மகிழ்வு ஒரு பீறிடல், அது தனிப்பட்டது, வேறு எவருக்கும் மொழிபெயர்த்து தரவியலாதது, இப்போது நான் எழுதத் துவங்கினால் எனது பாணியில் இதே குணநலன்கள் நிறைந்திருக்கும். இதே குற்றங்களும்கூட, அந்தோ! பொதுவெளி குணங்களோ அப்படியே இயல்பாக இருந்துகொண்டிருக்கும்.’ ஆனால், அவர் தன்னுணர்ந்து கொண்டிருக்கும் உடல்நலமோ, அதுபற்றி பெரிய அளவில் சிந்திப்பதற்குத் தடைபோட்டது. உடனடியாக அவர்மீது அந்த மறதி எனும் ஆக்கிரமிப்புணர்வு பரவி ஆற்றுபடுத்தியது. அரண்கள் இருந்த இடத்திற்கு அவர் வந்துசேர்ந்திருந்தார். அங்கு உலவிக்கொண்டிருந்த மக்களிடம் நிச்சயம் திரும்ப கிடைக்கும் என்ற திண்ணத்துடன் தனது இன் உணர்வுகளை முன்வைத்தார். அவர்களுக்கான போற்றலுக்குரிய முன்மாதிரி தான்தான் என்று அவர் கருதினார். தனது புறச்சட்டையைத் திறந்து அவருக்குப் பொருத்தமாக இருந்த மாலைநேரத்து சட்டையின் மிளிரும் வெண்ணிறத்தையும் பொத்தான் துளையில் இருந்த இருள்சிவப்பு மலரையும் அவர்கள் அனைவரும் பார்க்கவேண்டுமென காட்டினார். இவ்வாறு அவர் பாதசாரிகளின் மெச்சுதலுக்காகவும் தீராயின்பத்துடன் அவர்களோடு பகிர்ந்துகொள்ளும் அன்பிற்காகவும் தன்னைத்தானே முன்வைத்தார்.

ஆங்கில மூலம்: A dinner in town by Marcel Proust. Edition: Pleasures and Days, June 2004, Hesperus Press.