காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்

7 comments

ஒருமுறை காந்தியப் பொருளாதாரம் பற்றிய உரையாடலில், நண்பர்களில் ஒருவர், “அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராதுங்க.. இன்னிக்கு எவன் உக்காந்து நூல் நூத்துகிட்டு இருக்கப் போறான்”, என்றார்.

இது வழக்கமாகக் கேள்விப்படும் ஒரு வாதம்தான்..

நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. மாறாக, இன்னொரு கேள்வி கேட்டேன்.

‘இந்தியாவின் மிகப்பெரும் உணவு வணிக நிறுவனம் எது?’

நண்பர்கள், ‘ஐடிசி, ப்ரிட்டானியா, நெஸ்ட்லே…’ எனப் பல பதில்களைச் சொன்னார்கள்.

நான் சொன்னேன், “இல்லை. இந்தியாவின் மிகப் பெரும் உணவு வணிக நிறுவனம், அமுல். அது காந்தியப் பொருளியல் அடிப்படையில் இயங்கும் வெற்றிகரமான வணிக நிறுவனம்.”

ஒருவரும் நம்பவில்லை.

அமுலின் இந்த ஆண்டு வருமானம் 52000 கோடி. ஐடிசி உணவுத் துறை – 10800 கோடி, நெஸ்ட்லே – 12000 கோடி, ப்ரிட்டானியா 11500 கோடி.

அமுல் ஒரு பெரிய நிறுவனம் என்பதைத் தெரிந்த மனிதர்களுக்குக்கூட அது காந்தியப் பொருளியல் அடிப்படையில் இயங்கும் நிறுவனம் என்பது தெரிவதில்லை. காந்தியப் பொருளியலின் அடிப்படை – production by masses and not mass production. அமுலின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் சிறு  உற்பத்தியாளர்கள். மொத்தம் 36 லட்சம் பேர்.  

காந்தியப் பொருளியல் என்று பேசினாலே, படித்த உயர்வர்க்க நண்பர்களும், ஏன் பொருளியல் அறிஞர்களுமே அதை ஏதோ சிறுபிள்ளைக் கனவு என்பது போல ஏளனமாகப் பார்ப்பார்கள். ஒரு நண்பர் சொன்னார் – ‘It is a romanticized version of village life‘ என்று. 

நம்மில் பலருக்குமே அப்படி ஒரு மனச்சாய்வு உள்ளது. காந்தி என்பவர் ஏதோ அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு சரித்திர மனிதர். இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தந்தார். ஆனால், அவர் கொள்கைகள் இன்றைய உலகுக்குச் சரி வராது என்பதாக. காந்தியம், பழங்காலத்தில் உறைந்து போன ஒரு கருதுகோள் என்பதாக. இது அப்படியே இருக்கட்டும். நாம் கொஞ்ச காலம் பின்னால் போய், காந்தியப் பொருளியல் உருவான பின்னணியில் சில விஷயங்களை அறிந்துகொள்வோம்.

1926ஆம் ஆண்டு, மும்பையில் பட்டயக்கணக்காளராக இருந்த குமரப்பா, அமெரிக்காவுக்கு, தன் மூத்த சகோதரர் வீட்டுக்கு, விடுமுறைக்காகச் சென்றார். அங்கே, கொஞ்சகால அவகாசம் கிடைக்க, சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையும் பொதுநிதியும் பயின்றார். அவரை  கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க அவரது பேராசிரியர் ஆலோசனை சொல்லி அனுப்பினார். கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் செலிக்மேனின் கீழ், முதுநிலைப் பொதுநிதி பட்டம் பெறுகிறார். “இந்தியாவின் நிதிநிலையும் (ஏழ்மையும்), அரசின் பொதுநிதிக் கொள்கையும்” என்னும் தலைப்பில் தன் பட்டப்படிப்பிற்கான ஆய்வறிக்கையை எழுதினார்.

அந்த அறிக்கை, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கை எப்படிப் பிற்போக்காக இருக்கிறது என்பதைப் பேசுவதாகும். இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் வரிவிதிப்புக் கொள்கை, விவசாய வரியையே முக்கியமாக நம்பியிருந்தது. ஏழைகளுக்கு மிகவும் தேவையான உப்பு போன்ற பொருட்களின் மீதான அதீத வரிகள், இவற்றை வசூலிக்க நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கான அதீத ஊதியம் – இதையெல்லாம் அந்த ஆய்வறிக்கை விரிவாகப் பேசியிருந்தது.

படிப்பு முடிந்து, இந்தியா திரும்பியதும், இந்த ஆய்வறிக்கையை புத்தகமாக வெளியிடலாமென்று யோசித்தார். நண்பர் சுபாரிவாலாவிடம் ஆலோசனை கேட்டார். அவர், ‘காந்தியைப் போய்ப் பாருங்க.. அவர் உதவுவார்’ என்று சொன்னார். 1929ஆம் ஆண்டு மே மாத இறுதியில் சபர்மதி ஆசிரமம் சென்று காந்தியைச் சந்திக்கிறார் குமரப்பா. 

குமரப்பாவின் ஆய்வறிக்கையைப் பாராட்டிய காந்தி (அவர் மகாதேவ் தேசாய் மூலமாக குமரப்பாவின் அறிக்கையை அறிந்திருந்தார்), அது யங் இந்தியாவில் தொடராக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கிறார். காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்தின் பின்னணியில், குமரப்பாவின் ஆய்வறிக்கையும் ஒரு தரவாக இருந்தது.

சந்திப்பின் இறுதியில், காந்தி குமரப்பாவை, கிராமப்புறப் பொருளாதார ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். கிராமப் பொருளாதாரத்தை, அறிவியற்பூர்வமாக ஆராய வேண்டும் என்பது காந்தியின் திட்டங்களுள் ஒன்று. குமரப்பா அவரைச் சந்திப்பதற்குச் சில காலம் முன்பு, காந்தி, குஜராத் வித்யாபீடத்தின் தலைவரான கலேல்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

”In an informal note which Gandhiji handed to me, he had expressed a desire that Indian Economics should be built from the bottom by a posteriori method of securing rock bottom facts and drawing therefrom, by the most rigid process of reasoning, scientific conclusions which no amount of jugglery could controvert. He gave in that note a number of practical hints for the conduct of such a survey”. 

காந்தி ஏன் ‘jugglery’ என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்? அவர் எதையும் உண்மைக்குப் புறம்பாகவோ, மிகைப்படுத்தியோ சொல்பவர் அல்லர். அதிகாரத்தின் அருகில் இருக்கும் மூலதன சக்திகள், இடைத்தரகர்கள், நிர்வாக அமைப்பின் ஊழியர்கள் – இவர்கள் அனைவரும் அரசின் கொள்கைகளை, திட்டங்களை, தரவுகளை- தங்கள் சாதிய வர்க்க நலன்களுக்கு ஆதரவாக வளைப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். எனவேதான் அந்த வார்த்தைகளைச் சொன்னார். அன்று மாபெரும் பொருளாதார சக்தியாக எழுந்து வந்துகொண்டிருந்த முதலாளித்துவ / மூலதன சக்திகளுக்கு மாற்றாக, அசைக்க முடியாத உண்மைகளைக்கொண்டு ஒரு மாற்று சமூகப் பொருளியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அவர் திட்டம்.  

https://assets.telegraphindia.com/telegraph/0210kasturba.jpg

காந்தி அப்படி எண்ணம் கொண்டிருந்த காலத்தில்தான் குமரப்பா அவரைச் சந்திக்கிறார். மிகச்சரியான தருணத்தில், குமரப்பா காந்தியிடம் வந்துசேர்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். 

யங் இந்தியாவில் குமரப்பாவின் ஆய்வறிக்கை தொடராக வெளியிடப்படுகிறது.

1929ஆம் ஆண்டு இறுதியில், குஜராத்தி வித்யாபீடத்தில் இணைந்து, ‘மட்டார்’ என்னும் தாலுகாவில் ஒரு முழுமையான பொருளியல் ஆய்வைச் செய்கிறார்.

அவர் வழக்கமான பொருளியல் ஆய்வாளர்கள் போல, புள்ளி விவரங்களை மட்டும் சேகரிக்கவில்லை. அவற்றுடன், ஒரு சராசரி கிராம அலகின் (வேளாண்மை, கைத்தொழில்) வரவுசெலவை  ஆராய்கிறார். குமரப்பா பொருளியல் அறிஞர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பட்டயக் கணக்காளர், மேலாண்மைப் பட்டதாரி (எம்பிஏ) என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வறிக்கையில், மட்டார் தாலுகா உழவரை, அமெரிக்காவின் உழைப்பாளக் குடும்பத்துடன் ஒப்பிட்டு, அமெரிக்க உழைப்பாளர், தன் வருமானத்தில், ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாக உணவுக்கும் உடைக்கும் செலவுசெய்கிறார். ஆனால், மட்டார் தாலுகா உழவர் தன் வருமானத்தில் 85% உணவுக்கும் உடைக்கும் செலவுசெய்ய நேரிடுகிறது. எனவே, வீடு, கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு அவர்களிடம் பணம் இருப்பதில்லை எனச் சொல்கிறார்.

இந்தக் கணக்கெடுப்பில் ஆய்வு செய்யப்பட்ட 51 கிராமங்களில், 1213  குடும்பங்களில், 14 குடும்பங்கள் மட்டுமே குறைந்தபட்ச வருட வருவாயான 600 ரூபாயை எட்டியிருந்தார்கள். அன்று சராசரிக் குடும்பம் என்பது 5 பேர். 800 குடும்பங்கள் நஷ்டத்திலும், 40% மக்கள் 100 ரூபாய்க்கும் குறைவான வருமானத்திலும் இருந்திருக்கிறார்கள். வருஷம் 100 ரூபாயெனில், மாதம் 8 ரூபாய். அதாவது, ஒரு மனிதருக்கு மாதம் 1.6 ரூபாய்தான் வருமானம். மூன்று வேளை உணவுக்கும், குறைந்தபட்சத் தேவைகளுக்கும் தேவைப்படும் சராசரி வருமானம் ஒருவருக்கு மாதம் எட்டு ரூபாய் எனில், தலைக்கு 1.60 ரூபாய் என்பது எவ்வளவு வறுமையான சூழல் என்பதை உணர்ந்துகொள்ளலாம். மொத்தத்தில் 98.8% மக்கள், குறைந்தபட்சத் தேவைக்கும் குறைவான வருமானத்தில் உயிர் வாழ்ந்துவந்தார்கள்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மிக முக்கியமான வரி வருவாய், இந்த பஞ்சைப் பராரிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் விவசாய வரியே.  இந்த வரியை வசூலிக்க நியமிக்கப்பட்ட உதவி கலெக்டரின் சம்பளம் சராசரி குடும்ப வருவாயைப் போல 90 மடங்கு. கலெக்டரின் சம்பளம் 450 மடங்கு. ஒரு சராசரி உழவர் குடும்பத்தின் வருட வருமானம் 100-150 என்னும் நிலையில், அவரிடம் இருந்து வரி வசூல் செய்யும் உதவி கலெக்டரின் வருட வருமானம் 13,500 ரூ. கலெக்டரின் வருட வருமானம் 67,500 ரூ.

இந்த நிர்வாகிகள் பெரும்பாலும் வெள்ளையர்கள் ஆதலால், தங்கள் சம்பளத்தைச் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார்கள். அது இந்தியப் பொருளாதாரத்துக்கு நிகர நஷ்டம்.

https://media.gettyimages.com/photos/gandhi-mahatma-0210186930011948politiker-indienfuehrer-der-indischen-picture-id541808591?k=6&m=541808591&s=612x612&w=0&h=5pKycw6qszdylQLaCoFuQ3wfFamWqItR6dVFCcesohQ=

இந்தப் பின்னணியில்தான், 1930ஆம் ஆண்டு ஜனவரியில், காந்தி வைசிராய்க்கு, நில வரி, உப்பு வரி, மது விலக்கு, அரசு நிர்வாகிகளின் அதீத ஊதியம் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்து ஒரு கடிதம் எழுதுகிறார். அவை நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டம் நடத்த நேரிடும் என எச்சரிக்கிறார். வைசிராய் அதைக் கண்டுகொள்ளாமல் போகவே, உப்புச் சத்தியாகிரகம் துவங்குகிறது.

உப்புச் சத்தியாகிரகம், காந்தியை, சத்தியாகிரகப் போராட்டத்தை, உலக நாடுகளின் அரசியல் சொல்லாடல்களில் கொண்டு சேர்த்தது.

வழக்கமாக, உப்புச் சத்தியாகிரகத்தைப் பேசுபவர்கள், காந்தி தன் உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதைப் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திவிட்டார் என்றோ உப்புச் சத்தியாகிரகம் அவரது உள்ளுணர்வில் இருந்து எழுந்த ஒரு அற்புதம் என்பது போன்ற  சொல்லாடலையோ, காந்தி என்னும் ஆளுமையின் மீது ஏற்றிச் சொல்லிவிடுகிறார்கள்.. 

காந்தியர்கள், காந்தி ஒரு அதிமானுடர் என்னும் பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அந்த அதிமானுட பிம்ப வெளிச்சத்தில் காந்தியத்தின் அறிவியல் அடிப்படைகள் மங்கிவிடுகின்றன. அந்த அதிமானுட பிம்பம்தான் இந்தியர்களை ஒன்றிணைத்து இந்திய விடுதலையைச் சாத்தியமாக்கியது. உப்பு வரி என்னும் எளிமையான ஆயுதத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசேர்த்தது. அதைக் குறைசொல்லவில்லை.  

ஆனால் அந்த அதிமானுடரின் வழிமுறைகள், வலுவான தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்தத் தரவுகளின் அறிவியல் அடிப்படைகளை விவாதித்து, இன்றைய காலத்துக்குப் பொருத்தமாக மாற்றி எடுத்துச்செல்ல வேண்டும்.  இதைத்தான் ஒரு அறிவார்ந்த சமூகமாக நாம் செய்ய வேண்டும்.

கல்வி கற்பதைப் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுதுகையில் இரண்டு கருதுகோள்களை முன்வைக்கிறார்- Scientific approach and Religious approach. 

எந்த விஷயத்தையும் வலுவான தரவுகளின் அடிப்படையை வைத்து மட்டுமே முன்னெடுப்பது Scientific Approach. அந்தத் தரவுகளைச் சேகரிப்பதையும், அவற்றைக்கொண்டு ஒரு குறிக்கோளை முன்னெடுப்பதையும், முழுமையான ஈடுபாட்டோடு, ஆன்ம சுத்தியோடு, ஒரு பக்தர் கடவுளை எவ்வாறு அணுகுவாரோ அது போல அணுகுவது religious approach.  

காந்தியின் அணுகுமுறையும் இந்த இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ளவைதான். துரதிருஷ்டவசமாக, அந்த scientific approach குறித்து பேசாமல், religious approach-ஐ மட்டும் போற்றிக்கொண்டிருக்கிறோம். அக்டோபர் 2ஆம் தேதி இராட்டை சுற்றுகிறோம். வைஷ்ணவ ஜனதோ பாடுகிறோம். கழிவறையைச் சுத்தம் செய்தார் என்று பேசுகிறோம். எளிமையின் சின்னம் என்று கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட ஏசு கிறிஸ்து போல் அவரை மாற்றிவிட்டோம். 

காந்தி மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தப் புனித பிம்பத்தைப் பிளந்து உள்ளே போய், அவரது அணுகுமுறையின் அறிவியல் அடிப்படைகளைப் பேச வேண்டும். அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்துகொள்ள வேண்டும். அதுதான் இன்றைக்கு முக்கியமானது.

https://media.gettyimages.com/photos/the-rumble-of-revolt-in-india-with-gandhi-in-the-leadstirring-march-picture-id515167376?k=6&m=515167376&s=612x612&w=0&h=0ghY9lwnNMRZTBVb-PlC8ZoXnGXnym6zR-mexkdOgfo=

உப்பு வரி, ஆங்கில அரசின் முக்கியமான வரி வருமானம். கிட்டத்தட்ட 10%. அதே போலத்தான், அந்நியத் துணி பகிஷ்கரிப்பும். காந்தி அதை முன்னெடுத்த அந்த வருடம் இந்தியாவின் அந்நியத் துணி இறக்குமதி 50% குறைந்தது. அந்த ஆண்டு இந்திய அரசு, பட்ஜெட்டில் 86 லட்சம் உபரி வரும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, 13.50 கோடி துண்டு விழுந்தது. வன்முறையின் மூலம் எதிரிக்கு ஏற்படும் நஷ்டத்தைவிட, பல மடங்கு நஷ்டத்தை, காந்தியின் சத்தியாகிரகம் விளைவித்தது. 

மட்டார் தாலுகா பொருளியல் ஆய்வு மூலம், குமரப்பா என்னும் மேல்தட்டு மனிதருக்கு, ஊரகச் சூழலின் உண்மையான நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், வேளாண்மை, சிறு தொழில் போன்றவற்றைப் பற்றிய நேரடியான அறிதல் ஏற்பட்டது. இந்தத் தரவுகள், காந்திய கிராம மறுசீரமைப்புத் திட்டங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தன. நிர்மாணப் பணிகள் (Constructive program) என்னும் மாபெரும் இலட்சியத்தை காங்கிரஸின் முன்வைத்தார் காந்தி.

பல்லாயிரமாண்டு மேலாதிக்கத்தால், பாதிக்கப்பட்ட கீழ்நிலைச் சமூக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், சமூகத்தை மறுசீரமைப்பதைத் திட்டமிட்டார். வருடம் குறைந்தபட்சம் 600 ரூபாய் வருமானம் பெற வேண்டிய நிலையில், 90% குடும்பங்கள் 100 – 150 ரூபாய் வருமானம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதை எப்படி சரிசெய்து, பொருளாதாரத்தின் கடைநிலையில் இருக்கும் இந்தியர் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வருமானம் பெறும் வகையில், நவீன இந்தியா வலிமையாக்கப்பட்ட இந்த அலகுகளின் மீது கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே அவர் குறிக்கோள். இந்த அணுகுமுறை கீழிருந்து மேல் எனச் சொல்லலாம். இதை விடுத்து, பெரும்தொழில்மயமாக்கல் பிரச்சனைகளைத் தீர்க்காது என நம்பினார். அது மேலிருந்து கீழ் என்னும் அணுகுமுறை. நாடு வளர்ந்தால், மக்கள் முன்னேற்றம் தானே வரும் என்னும் பார்வை. பொருளாதாரம் வளரும் போது, அதன் trickle-down effect மூலமாக, மக்கள் முன்னேற்றம் வரும். ஆனால், அது அனைத்து மக்களுக்குமான ஒரு முழுமையான முன்னேற்றமாக இருக்காது என காந்தி நினைத்தார்.

இந்த மேலிருந்து கீழ் அணுகுமுறைக்கு மாற்றாக, ஊரகத் தொழில்களைச் சீரமைக்க, அகில இந்திய ஊரகத் தொழில் கட்டமைப்பு (All India Village Industries Association) என்னும் நிறுவனத்தை உருவாக்கும் தீர்மானத்தை, 1934 வாரணாசி காங்கிரசில் காந்தி கொண்டுவந்தார். அதன் தலைவராக காந்தியும், செயலராக குமரப்பாவும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், காங்கிரஸின் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் இதைப் பெரிதாக விரும்பவில்லை. அவர்கள் நோக்கம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவது மட்டுமே. விடுதலை பெற்றவுடன், ஐரோப்பா போல பெரும்தொழில்மயமாக்கம், நகர்மயமாக்கம், மேல்நாட்டுக் கல்விமுறை என்னும் எளிமையான ப்ரிஸ்கிருப்ஷனை பின்பற்றினார்கள். ஆனால், ஐரோப்பாவின் பெரும் தொழில் குழுமங்களும், தொழில்நுட்பமும், காலனியாதிக்கம் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தாலும் மூலப்பொருட்களினாலும்தான் வெற்றிபெற்றன என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் தரைகள் வேகப் பந்து வீச்சுக்கு ஏற்றவை. இந்தியாவின் கிரிக்கெட் தரைகள், சுழல் பந்து வீச்சுக்கு ஏற்றவை. எனவே, உண்மையான தலைவர் மைதானத்தின் நிலையை அறிந்து அதற்கேற்றாற் போல அணியையும் திட்டத்தையும் உருவாக்குவார்.

அதைப் போல, இந்தியச் சூழலை நன்கு ஆராய்ந்து, அதன் அடிப்படையில், இந்தியாவுக்கான தனித்துவமான திட்டங்களை, வழிமுறைகளை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என நினைத்தார் காந்தி. அந்த அடிப்படையில் இந்த ஊரகத் தொழில் கூட்டமைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இளம் வயதில் ஜே.சி.குமரப்பா

இந்த நிறுவனம், ஆராய்ச்சி, உற்பத்தி, பயிற்சி, விரிவாக்கம், பதிப்பகம், பிரச்சாரம் என ஐந்து பிரிவுகளாக உருவாக்கப்பட்டது. காந்தி இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். ஊரகத் தொழில் கட்டமைப்பு முன்வைத்த பாலீஷ் செய்யப்படாத அரிசி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை ஆராய்ச்சி செய்யுமாறு ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக்கொண்டார். ஊரகத் தொழில்களையும் வேளாண்மையையும் மேம்படுத்தும் முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

1936ஆம் ஆண்டு நடந்த லக்னோ காங்கிரசில், ஊரகத் தொழில் கூட்டமைப்பு, 12 வகையான ஊரகத் தொழில்கள், 16 வகை காதிச் செயல்முறைகள், 21 விதமான ஊரகக் கைவினைபொருட்கள் என அதன் இரண்டாண்டுச் செயல்பாட்டின் வெற்றிகளை முன்வைத்தது.

கிராமத் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்க, ‘கிராம் சேவக் வித்யாலயா’ என்னும் பயிற்சிப் பள்ளியும் துவங்கப்பட்டு, ஓராண்டு காலப் பயிற்சி அளிக்கப்பட்டது. குமரப்பாவின் சகோதர் பரதன் குமரப்பா இந்தப் பள்ளிக்குப் பொறுப்பேற்றார்.

குமரப்பா பிரச்சாரம், விரிவாக்கப் பணிகளுக்குப் பொறுப்பேற்று, நாடெங்கும் பயணித்தார். அவருடைய பேச்சுகள், ’கிராமிய இயக்கத்தின் மெய்யியல்’, ‘ஏன் கிராமிய இயக்கம் வேண்டும்’ என இரண்டு புத்தகங்களாக இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன. 

எல்லாத் துறைகளையும் பெரும்தொழில்மயமாக்குதல், ஊரகத் தொழில்களை அழித்து, ஊரக வேலையின்மையை உருவாக்கி, நிலையை மோசமாக்கும் என குமரப்பா எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர்களால் முன்வைக்கப்ப்ட்டு, பின்னர் இந்தியத் தொழில் முனைவர்களால் முன்னெடுக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரைத் தொழிலை எடுத்துக்கொள்வோம். குமரப்பா, வெல்லம்- நாட்டுச்சக்கரை உற்பத்தி செய்யும் தொழிலின் அளவைக் கணக்கெடுத்தார். வெள்ளைச் சக்கரை ஆலையை அரசு ஊக்குவித்தால், நாட்டுச் சர்க்கரை உற்பத்தியாளர்களுக்குப் பெரும் நஷ்டம் வரும் என அளவிட்டுச் சொன்னார். பெரும் அலகு என்பதால், பெரும் இயந்திரங்கள் உபயோகிக்கப்படுகையில், வேலைவாய்ப்பு குறையும் என்றும் தரவுகளை முன்வைத்து வாதிட்டார். வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரையைவிடக் குறைவான தரம் என அறிவியற்பூர்வமான பரிசோதனைகளின் முடிவுகளை முன்வைத்தார். ஆனால், அரசு அதைக் கண்டுகொள்ளாமல், மானியங்களை அளித்து பெரும் ஆலைகளை ஊக்குவித்தது. 

காந்தியின் மரணத்துக்குப்பின், மதுரை திரும்பிய குமரப்பா இதே போன்ற அநீதிக்கு எதிராகப் போராடுகிறார். 1952ஆம் ஆண்டு. மதுரைக்கு அருகில் உள்ள நிலக்கோட்டைத் தாலுகாவில், ஒரு சர்க்கரை ஆலை கரும்பு கிடைக்காமல் திண்டாடுகிறது. அப்போது, மதுரை ஆட்சியர், நிலக்கோட்டைத் தாலுகாவில் உள்ள உழவர்கள் வெல்லம் காய்ச்சுவதற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் என்னும் ஒரு சாமர்த்தியமான அரசு விதியைக் கொண்டுவருகிறார் – வெல்லம் காய்ச்சுவதற்காக கரும்பு வெட்ட ஆட்கள் தோட்டங்களுக்குள் வந்த பிறகு. லைசென்ஸ் இல்லாத வெல்லம் காய்ச்சும் இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படும் நிலை உருவாகி, வேறு வழியின்றி வெட்டப்படும் கரும்பு, கரும்பு ஆலைக்கு குறைந்த விலையில் விற்கப்படும் அவலம் நேர்கிறது.

இதனால், நிலக்கோட்டைத் தாலுகா உழவர்களுக்கு மட்டும் ஏற்படப்போகும் நஷ்டம் 12 லட்சம் ரூபாய் என்பதைக் கணித்த குமரப்பா போராட்டத்தில் இறங்குகிறார். குறைந்த விலையில் கரும்பை விற்பதால், பல ஆயிரம் உழவர்களுக்கு 12 லட்சம் நஷ்டம். குறைந்த விலையில் கரும்பை வாங்குவதால், ஒரு கரும்பு மில் முதலாளிக்கு 12 லட்சம் லாபம். அரசின் இந்தப் பாரபட்சமான, தொழில்துறைக்குச் சாதகமான விதிமுறைகளை, அரசின் தொழில்கொள்கைகளை எதிர்த்துதான் குமரப்பா இறுதிவரை போராடினார். துரதிருஷ்டவசமாக, அவரின் தரப்பில், நியாயத்தின் தரப்பில் நின்றிருக்க வேண்டிய காந்தி அன்று உயிருடன் இல்லை.

இந்த அபத்தமான நிர்வாக உத்தரவை எதிர்த்து, 37 வயதான  ஜெகன்னாதன், குமரப்பா, கெய்த்தான் ஆகியோரது ஆதரவோடு களத்தில் இறங்கினார். உழவர்கள் வெல்லம் காய்ச்சுவதற்காகக் கொண்டுவந்திருந்த இயந்திரங்களையும் பாத்திரங்களையும் போலீஸ் ஜப்தி செய்து வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றபோது, சாலையின் மத்தியில் அமர்ந்து மறியலைத் துவங்கினார்.

ஜெகன்னாதன்

பகல் சென்று, மாலை கவியத்துவங்கும் முன்பு, களத்தில் பொதுமக்கள் மூவாயிரம் பேர் கூடிவிட்டனர். கூட்டத்தைக் கண்ட போலீஸ், தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு, பின்வாங்கிச் சென்றது. அடுத்த நாள், அரசின் அமைச்சர் ஒருவர் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் துவங்குகின்றன. இறுதியில், உழவர்கள் வெல்லம் காய்ச்சுவதை அரசு தடுக்காது என்றும், கரும்பு ஆலைக்கு எதிராக காந்தியர்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறது. 

இதுதான் விடுதலை கிடைத்த காலத்தில், உள்ளூர் சிறுதொழில்கள் எதிர்கொண்ட சிக்கல். பெரும் முதலாளித்துவ / அரசு முதலீடுகளுக்கு மாற்றாக, தலைமையும், மூலதனமும், சந்தைக்குக் கொண்டு செல்லும் திறனும், அலகும் இல்லாமல், பல ஊரகத் தொழில்கள் சிதைந்தன.  

இன்றைய காந்திகள் புத்தகத்தில், அர்விந்த் கண் மருத்துவக் குழுமத்தைப் பற்றிய கட்டுரை ஒன்று உண்டு. அர்விந்த் கண் மருத்துவக் குழுமம், உலகின் மிகப்பெரும் மருத்துவ நிறுவனம். வருடம் கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இது இங்கிலாந்து நாட்டின் பொதுநலக் கண் மருத்துவத் துறையுடன் ஒப்பிடத்தக்க அலகு. உலகின் மிகப்பெரும் பொதுநல மருத்துவமனையான ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை, வருடம் இரண்டு இலட்சம் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் செய்கிறது.

தரம்? மருத்துவ சிகிச்சையில் தரத்தை எப்படி மதிப்பிடுகிறார்கள்? சிகிச்சையில் நிகழும் குறைபாடுகளின் அளவை வைத்து. அதாவது குறைபாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அது தரமான சிகிச்சை. அந்த அலகில், அர்விந்த் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை இங்கிலாந்து நாட்டின் பொது மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சையைவிட மேலானது எனப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இப்போது இந்தத் தொழில் எவ்வளவு லாபகரமானது எனப் பார்ப்போம். அர்விந்த் கண் மருத்துவக் குழுமம், தான் செய்யும் 5 லட்சம் சிகிச்சைகளில் 30 சதத்தை இலவசமாக அளிக்கிறது. மேலும் 30% சிகிச்சைகளை, சந்தை விலையின் 95% சலுகை விலையில் அளிக்கிறது. மீதி உள்ள 40% சிகிச்சைகளை, 50% சலுகை விலையில் அளிக்கிறது. இப்படி ஒரு வணிகத்தை நடத்துபவர்களை உலகம் என்ன சொல்லும்? உலகம் தெரியாத முட்டாள்கள் என. ஆனால், நாம் சொல்கிறோம், ‘அவர்கள் உலகத் தரத்தில் சிகிச்சை அளிக்கும், மிக இலாபகரமான, செயல்திறன் மிகுந்த நிறுவனம்’ என.. எப்படி?

வணிகம் என்பது இலாபத்தை அடிப்படையாகக்கொண்டது என்பதே நம் பொதுப்புத்தியில் உள்ளது. ஆனால், அப்படி அல்ல என்கிறார், மேலாண்மை மெய்யியலை உருவாக்கிய பிதாமகர்களுள்  ஒருவரான பீட்டர் ட்ரக்கர். ஒரு நிறுவனத்தின் உண்மையான நோக்கம், தனது நுகர்வோரின் தேவைகளை அறிந்துகொண்டு, அந்தத் தேவைகளை, செயல்திறன் மிக்க வகையில் நிறைவேற்றுவதே என்கிறார். அப்படியானால், இலாபம்? அது, அந்த நிறுவனம் செயல்திறனோடு செயல்பட்டு வருகிறது என்பதன் அடையாளம் என்கிறார்.

அர்விந்த் மருத்துவக் குழுமத்தை நிறுவிய, டாக்டர் வெங்கடசாமி அப்படித்தான் யோசித்தார். சமூகத்தில் அன்று பெரும் பிரச்சனையாக, ஆனால், எளிதில் சரிசெய்யக் கூடிய கண் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்று நினைத்தார். அவரது நுகர்வோரில் பெரும்பாலும் ஏழைகள், கொஞ்சம் பேர் கீழ் மத்திய வர்க்கம் என இருந்தார்கள். மிக ஏழை மக்களுக்கு இலவசமாகவும், கீழ் மத்திய வர்க்கத்துக்கு மானிய விலையிலும், பணம் கட்ட இயல்வோருக்கு சகாய விலையிலும் சிகிச்சை அளிக்கும் முறைகளை உருவாக்கிக்கொண்டார்கள்.

https://lh5.googleusercontent.com/6hiy3NS4l5hE2tROlKglEd19Hg4GRuXcFrhHsvVYynrU7sYlufCk18R5VLMQh-p-TXsT-T3OYgByUJNFFTaVDYT1t7qCdlqn5JkuLsqNT4KOCvxQq3kyeYg5jSyVUMTEO9Ra1lP2
டாக்டர் கோவிந்தப்ப வெங்கடசாமி

இப்படிப்பட்ட நிறுவனத்தின் இலாபம் என்னவாக இருக்கும்? இலாபத்தை EBITDA (Earnings Before Interest, Taxes, Depreciation, and Amortization) என்னும் முதல் நிலை அலகில் நிதிநிபுணர்கள் அழைக்கிறார்கள். அதாவது செலவுகள் போக மீதி நிற்கும் உபரி – முதல் நிலை வருமானம். இந்தியாவின் தனியார் மருத்துவக் குழுமங்களில் ஒன்றின் EBITDA 14%. அர்விந்தின் EBITDA 39%. 

இதுதான் காந்தியப் பொருளாதார நிறுவனத்தின் செயல்திறன்.

இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவக் குழுமம், காந்தியப் பொருளியல் அடிப்படையில் இயங்குகிறது. அதன் சிகிச்சை உலகத்தரம் வாய்ந்தது. ஏழைகளுக்கு அதன் சேவை இலவசமாகக் கிடைக்கிறது. அதன் இலாப சதவீதம் தனியார் துறையை விட 2.5 மடங்கு, அதாவது 250% அதிகமானது.

ஆனால், பொதுப்புத்தியில் உள்ள நம்பிக்கை என்ன? ‘தனியார் துறை மிகவும் செயல்திறன் மிக்கது. காந்தியத் தொழில்முறை இன்றைய சூழலுக்கு சரிவராது. அது நவீன அறிவியலுக்கு எதிரானது.’ எவ்வளவு மூடநம்பிக்கைகள் நமது சமூகத்தில் இருக்கின்றன என யோசிக்க வியப்பாக இருக்கிறது. அதுவும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று 2000 வருஷத்துக்கு முன்பு பேசிய சமூகத்தில்…

மிகத் துரதிருஷ்டவசமாக, அன்றைய இந்தியத் தலைவர்கள் அனைவருமே காந்திய அணுகுமுறைக்கு முற்றிலும் எதிரான மனநிலையில் இருந்தார்கள். அவர்கள் இந்தியாவில் மிகப்பெரும் தொழிற்சாலைகளை, மிகப்பெரும் நீர்த்தேக்கங்களை நிறுவுவதன் மூலம் பொருளாதாரம் வளரும், தானிய உற்பத்தி பெருகும், மக்கள் வறுமையில் இருந்து மேலெழுந்து வருவார்கள் என யோசித்தார்கள். அது நடந்தது. ஆனால் வறுமை அகலவில்லை.

“வரப்புயர நீருயரும், நீருயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும்”

என்பது வெறும் பழம்பாடல் மட்டுமல்ல.

ஆனால், இதை விடுத்து, அன்றைய நமது தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களில் கவனத்தைச் செலுத்தினார்கள். கோன் உயர்ந்தான். நாடு உயர்ந்தது. ஆனால், நாட்டில் 50% குடிகள் உயரவில்லை. இதுதான் இன்றைய நிலையும்கூட.

‘இன்றைய காந்திகள்’ புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இன்னொரு உதாரணம் – அமுல். கூட்டுறவுத் தொழில் மாதிரியின் கதை. 1964ஆம் ஆண்டு, பிரதமர் சாஸ்திரி, அமுல் என்னும் பால் உற்பத்திக் கூட்டுறவைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே சென்று, ஒரு கிராமத்தில், உற்பத்தியாளர்களுடன் பேசுகிறார். அன்றிரவு அங்கேயே தங்குகிறார். அமுலின் வெற்றிக்கு, பால் உற்பத்தியிலிருந்து நுகர்வோரை அடையும்வரை உள்ள வணிகச் சங்கிலி மொத்தமும், உழவர்கள் மேலாண்மையில் உள்ளதே என உணர்கிறார். அடுத்த நாள், அமுலின் மேலாண் இயக்குநர் குரியனை அழைத்து, இந்தத் தொழில் மாதிரியை நாடெங்கும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்.

அவருக்கு அடுத்து வந்த பிரதமர் இந்திரா காந்தியின் உதவியோடு, வெண்மைப் புரட்சித் திட்டம் துவங்குகிறது. 1950களில் 17 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, இன்று 170 மில்லியன் டன்னைத் தாண்டிவிட்டது. உலகின் மிகப்பெரும் பால் உற்பத்தியாளர் இந்தியாதான். இன்று இந்தியாவின் மிக மதிப்புமிக்க வேளாண் துறை பால்தான். உணவு தானியங்கள் அல்ல.

22 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஆவின், தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. தமிழகத்தின் 35% தேவையை அது பூர்த்தி செய்கிறது. தமிழகத்தின் மிகப்பெரும் உணவு நிறுவனம் ஆவின்தான். இதில் பல குறைகள் உண்டு. லஞ்சம், ஊழல் ஆங்காங்கே உண்டு. ஆனாலும், தினமும் 35 இலட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்து, அதற்கான பணத்தை கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, தவறாமல் அளித்துவரும் ஒரு வணிகத் தொடர்புச் சங்கிலி. இதற்கு இணையாக உழவர்களுக்கு நலன் பயக்கும் நிறுவனம் இன்றில்லை.

இதை இன்னும் மேம்படுத்த முடியும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள உற்பத்தியாளர்கள், ‘இது நமது நிறுவனம். இதன் மேலாண்மையில் நாம் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்,’ என இணைந்து, நிறுவனத்தின் மேலாண்மையை அரசிடம் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்தும் பெற முடியும். 

சமீபத்தில், அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என காவிரிப்படுகையை அறிவித்தது. அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என ஒரு வரைவை எழுதுமாறு தமிழ் இந்து கேட்டுக்கொண்டது. அந்த வரைவில், உழவர்கள் தாங்களே தங்கள் உற்பத்தியை நுகர்வோரிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் முறையைப் பரிந்துரைத்தேன்.

ஒரு எளிமையான அலசலில் சொல்ல வேண்டுமெனில், இந்தக் கூட்டுறவு முறையைப் பின்பற்றி, உழவர்கள் நெல்லை அரிசியாக்கி, பால் போல, நேரடியாக நுகர்வோரை அடையும் ஒரு நிறுவன அமைப்பை ஏற்படுத்தினால், இன்று அரசிடம் பெறும் விலையைவிட 30-40% அதிகம் பெற முடியும். வருடம் 2500 – 3000 கோடி ரூபாய் அதிகமாக நெல் உற்பத்தியாளர்களைச் சென்றடையும். 

இதைச் செய்ய முடியுமா எனக் கேள்வி எழலாம். கறந்து மூன்று மணி நேரத்தில் கெட்டுப் போகக்கூடிய பாலை, கடந்த 70 ஆண்டுகளாக, கூட்டுறவுச் சங்கங்கள், அறிவியல் முறையில் பதப்படுத்தி, 400-500 கிலோ மீட்டர் தொலைவு கடந்து, வெற்றிகரமாக நேரடியாக, தினமும் காலையில் நுகர்வோர் வீட்டு வாசலுக்குக் கொண்டுசெல்ல முடியும்  என்றால், அரிசியைக் கொண்டு செல்வது, அதைவிட எளிதானது. அரிசி விரைவில் கெட்டுப் போகாது. நுகர்வோருக்குத் தினமும் கொண்டுசென்று கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நம் உழவர்களுக்கு மிக முக்கியமான தேவை தொழில்நுட்பமோ, வட்டியில்லாக் கடனோ, அரசு மானியமோ, கொள்முதலோ அல்ல. 

நம் உழவர்களுக்குத் தேவை, விலை கொடுத்து வாங்க முடியாத இரண்டு பொருட்கள் – ஒன்று பொருளியல்- வணிகம் குறித்த அறிதல். இன்னொன்று ஒன்றிணைதல். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. 

ஏன் ஒன்றிணைய வேண்டும்? ஒரு சிறு பால் உற்பத்தியாளர் வருடம் 50-60 ஆயிரம் மதிப்புள்ள பாலை உற்பத்தி செய்யும் வணிகர். அவரால், தன் சிற்றூரிலிருந்து சென்னை தியாகராய நகரில் வசிக்கும் நுகர்வோருக்கு தினமும் பாலைக் கொண்டுசேர்க்க முடியாது. அவர், பெரும் வணிக நிறுவனமான 3500 கோடி விற்பனை செய்யும் ஆரோக்யா போன்ற நிறுவனங்களுடன், அவர்களின் நிதியாதாரங்களுடன் போட்டியிட்டு வெல்ல முடியாது.

தமிழ் சினிமா ஜோக் மாதிரி சொல்ல வேண்டுமெனில் – முடியாது.. ஆனால் முடியும். எப்படி முடியும் என்றால், 22 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் ஒன்று சேரும்போது, அது ஆவின் என்னும் 8000 கோடி நிறுவனமாக உருவெடுக்கிறது. ஆரோக்யா என்னும் நிறுவனம் 3500 கோடிதான்.

ஆவினின் வருமானம், 22 இலட்சம் உறுப்பினர்களுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஆரோக்யாவின் வருமானம், அதை நிறுவியவருக்கு மட்டும் செல்கிறது. 

அதே போல்தான், இரண்டு ஏக்கர் நெல் விளையும் நிலம் வைத்திருப்பவர் 1.25 இலட்சம் மதிப்புள்ள நெல் உற்பத்தி செய்யும் வணிகர். 10 இலட்சம் உற்பத்தியாளர்கள் ஒன்றிணையும் போது, அது 8000 முதல் 9000 கோடி மதிப்புள்ள வணிக நிறுவனமாக உருவெடுக்கும்.

உழவர்கள் ஒன்றிணைந்து, ஒரு நிறுவனத்தை உருவாக்கி.. அதைச் சரியான முறையில் நிர்வாகம் செய்தால், இப்போது கிடைக்கும் விலையைவிட (19-22 ரூபாய்) குறைந்தபட்சம் 30-40% அதிகம் கிடைக்க வழி பிறக்கும். இந்த 30-40% பணம் தற்போது இடைத்தரகர்களிடம் வணிக இலாபமாகச் செல்கிறது. அது செல்லாமல் தடுக்கப்பட்டு, உற்பத்தியாளர்களுக்குச் சென்று சேரும். இதனால், நுகர்வோருக்கு  எந்தப் பாதிப்பும் இருக்காது. உழவர்கள் அரசுக் கொள்முதலை வேண்டித் தவமிருக்க வேண்டியும் இருக்காது. மிக முக்கியமாக, இன்று செயற்கையாக வருத்தப்பட்டு மானிய பாரம் சுமக்கும் வேலை அரசுக்கும் இருக்காது.

ஆனால், ஒன்று. இந்தக் கனவிற்கு எல்லையும் உண்டு. இந்த முறையில் வருமானம் கூடுதலாகும். வருடாவருடம் உழவரின் வருமானம் உறுதி செய்யப்படும். இரண்டு ஏக்கர் உழவர் இரண்டு போகத்தில் 6000 கிலோ நெல் விளைவிக்கும் உழவர், தற்போது 1.25 இலட்சம் வருமானம் பெறுகிறார். அந்த வருமானம் 30-40 ஆயிரம் வரை உயரும். இதே போல அவர்கள் விளைவிக்கும் உளுந்துக்கும் நல்ல விலை கிடைக்கும்.

https://thannaram.in/wp-content/uploads/2019/10/Indraya-Gandhigal-Book-Wrapper-FIN.jpg

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகளில், இன்று தனியார் துறை இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவே தனியார் துறையினால்தான் நடக்கிறது என்னும் மயக்கமும் இருக்கிறது. இந்தியா, சுதந்திரச் சந்தை என்னும் கருதுகோளில் துவங்கி, இன்று, ஒட்டுண்ணி முதலாளித்துவப் பாதையில் செல்லத் துவங்கியிருக்கிறது. இந்தச் சூழலிலும், இந்தியாவின் மிகப் பெரும் மருத்துவக் குழுமம் காந்தியப் பொருளியல் விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஒன்று. இந்தியாவின் மிகப்பெரும் உணவுத் தொழில் நிறுவனமும், காந்தியப் பொருளியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் ஒன்றாகும். இந்த இரு உதாரணங்கள் (இன்னும் சில உதாரணங்களும் இன்றைய காந்திகள் புத்தகத்தில் உள்ளன), காந்தியப் பொருளியலின் வலுவான அடிப்படைகளை நிரூபிக்கின்றன. 

காந்தியப் பொருளியல் அல்லது தொழில் அமைப்புகளின் முக்கியக் கூறுகள் இவையே:

  1. Production by masses and not mass production. பலகோடி சிறு உற்பத்தியாளர்கள் இணைந்து உருவாக்குவதே காந்தியத் தொழில் முறை.
  2. பொருளாதார நிலையில் கடைக்கோடியில் இருப்பவரின் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்.
  3. உற்பத்தியாளரும், நுகர்வோரும் எந்த இடைத்தரகரும் இல்லாமல், சந்திக்கும் முறை. இருவர் நலனும் முக்கியம் என எண்ணும் ஒரு தொழில்முறை.
  4. இயற்கை வளங்களை நீடித்து நிலைக்கும் வகையில் பயன்படுத்திக்கொள்ளும், செயல் ிறன் மிக்க ஒரு வழிமுறை.
  5. முழுமையான அணுகுமுறை. 

கட்டற்ற நுகர்வினால் திரும்ப வழியின்றி இயற்கை வளஙக்ளைச் சூறையாடும் முதலாளித்துவ பொருளியல் அணுகுமுறைக்கும், அதே வழியை அரசின் அதிகாரம் கொண்டு முன்வைக்கும் சோஷலிச / கம்யூனிச அணுகுமுறைக்கும் மாற்றாக, மக்கள் பங்களிப்போடு நடக்கும் ஒரு ஜனநாயகத் தொழில்முறை காந்தியத் தொழில் முறை.

காந்தியப் பொருளியல் என்பது நம்மில் பலரும் நம்புவது போல ஒரு பகற்கனவல்ல. இயற்கையுடன் மனிதர்களும் இணைந்து, அனைவரும் தங்கள் அடிப்படைத் தேவைகளை, நீடித்து நிற்கும் வகையில் பூர்த்திசெய்யும் வழிகளை, செயல்திறன் மிக்க வகையில் முன்னிறுத்தும் மாபெரும் பொருளியல் கோட்பாடு. 

*

காந்தியப் பொருளியல் குறித்து ‘இன்றைய காந்திகள்’ நூலாசிரியர் பாலா ஆற்றிய ஓர் உரையின் கட்டுரை வடிவம் இது.

7 comments

Sudhagar December 23, 2020 - 7:49 am

அருமையான விளக்கம். இன்றைய சமூகத்தின் மிக முக்கிய தேவையான சிந்தனை

அல்மாஸ் அகமது நு December 24, 2020 - 11:58 am

அருமையான இந்தக் கட்டுரை “காந்தியப் பொருளாதாரம்” குறித்து அறிய உதவியது. நன்றி!

இந்தக் கட்டுரை பாதுகாக்கப்பட வேண்டியது என்பதால், நூல் வடிவில்/அச்சு வடிவில் (Paper print) கிடைத்தால் நன்றாக இருக்கும்.
கிடைக்குமெனில் தகவல் தரவும்.

ரமேஷ் கல்யாண் December 26, 2020 - 2:22 pm

நல்ல கட்டுரை. இந்தியா போன்ற மக்கள்தொகையும் அதிக கிராமப்புற சூழலும் வேளாண்மையும் உள்ள நிலைமை என்பது சுமையல்ல அது ஒரு ரிசோர்ஸ் என்ற அணுகுமுறை அவசியம். பயன்பாடு, நுகர்வு என்பது வணிகத்தின் முக்கிய நோக்கமாக இருப்பது மாறிப்போய் சந்தைப்படுத்தல் முன்னிறுத்தப்படுகிறது. எந்த பொருள் உற்பத்திக்கும் மூலப்பொருள் கச்சாப்பொருள் மிக அவசியம். நிலமும் தட்பவெப்பமும் மனித திறனும் இந்தியாவின் மூலப்பொருட்களாக விசைகளாக இருந்தும் அவற்றை பொருளாதார ரீதியாக உயர்வு காண எல்லா அரசுமே தவறுகிறது. அப்ரூவல் அதிகாரங்கள் இருப்பதால்தான் அரசை நம்ப வேண்டி இருக்கிறது. அதை முற்றிலும் தவராக கையாள்கிறது அரசுகள். குரியன் மீதே கல்லெறிந்ததும் இந்த அரசியல்வாதிகள்தான். அரசு இயந்திரத்தின் மீது சற்று கடுமையாகவே செயல்பட்டவர் அவர். கூட்டுறவு பால்பண்ணை என்பதை உருவாக்கினாலும், உற்பத்தியையும் சந்தைப்படுத்தளையும் தேவைகளையும் ஒன்றிணைத் தவர் . அதே சமயம் எனக்கு நுகர்வோரை விட விவசாயிதான் முன்னுரிமை என்றவர்.

காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும் | எழுத்தாளர் ஜெயமோகன் September 8, 2021 - 12:03 am

[…] காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும்… […]

பொன்.முத்துக்குமார் September 8, 2021 - 2:33 am

மிக நல்ல கட்டுரை திரு.பாலா அவர்களே.

உழவர் கூட்டுறவு முறை என்பது சாத்தியமாகக்கூடியதுதான். அதற்கான அக்கறையும் செயல்படுத்தும் உறுதியும் கொண்ட குரியன் போன்ற செயல்தலைவரோடு கூடிய அணி – அமுல் போல ஒரு Farmers Union-ஆக – அமையவேண்டும். (அரிசி கெட்டுப்போகாது எனினும், அதிக மழை, வெள்ளத்தால் சேதாரம் ஆகக்கூடியது. அதுகுறித்தான மேலாண்மை தேவை)

இதை தமிழக அளவில் நாம் முன்னெடுத்து சாதித்துவிட்டோமென்றால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாக விளங்கும். திரு.ஸ்டாலின் அவர்களது பெயர் தமிழக வரலாற்றில் அழுத்தமாக இடம்பெறும்.

S Balasubramanian September 8, 2021 - 12:03 pm

A very possible and feasible thing. Farmers can definitely join and do this on co-operative society basis without waiting for any political initiative and intervention. As has been brought out lucidly, Amul is an exemplary example and Aavin is also a success story. Hope this becomes a reality – a win-win situation for both producers and consumers.

Sanjeevi September 9, 2021 - 1:25 pm

Very good researched view on Gandhuan model

Comments are closed.