தல்ஸ்தோயின் பாடுகள்

1 comment

நவீன இலக்கிய விமர்சனத்தை உவமைகளைக் கூறியோ, சம்பவங்களையும் கதைத் துணுக்குகளையும் சொல்லியோ, மேற்கோள்களையும் தகவல்களையும் உதிரிகளையும் நிறைத்தோ, இருண்மைப் பதங்களைக் கையாண்டோ, கோட்பாடுகளைக் கொண்டோ, வரலாறை மட்டும் கொண்டோ, வாசகரின் எளிமையை நினைத்து பரிதாபம்கொண்டோ, கவித்துவக் கூற்றுகளைப் பெய்தோ, இன்னபிற கட்டுரைத் தன்மைகளைக் கைக்கொண்டோ மேற்கொள்ளக்கூடாது என்பது பொதுவான விதி. தெளிவாகவும் கூர்மையாகவும் நேரடியாகவும் தாட்சண்யமற்றும் இந்த விமர்சனம் இருக்க வேண்டும். ஆனால் தல்ஸ்தோய் போன்ற மகத்தான ஆளுமையைப் பற்றி முழுமையாகவும் நிறைவாகவும் தீர்மானமாகவும் நேர்முறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ, பிடித்தமானதை மட்டுமே சொல்லிவிடமுடியாது என்பதால் இந்தக் கட்டுரைத் தன்மைகளோடே அல்லாட / மல்லாட வேண்டியிருக்கிறது. தல்ஸ்தோய் (1829-1910) போன்ற ஆளுமைகளை எதிர்கொண்டு பேசுகையில் நம் இயல்புகள், இயலாமைகள், போதாமைகள்தான் வெளிப்படையாகும். 

தல்ஸ்தோய் ஒருசமயம் தன் பண்ணைத் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது, மண்பாதையின் ஓரத்தில் ஒரு மல வண்டு தன் சேமிப்பை உருட்டிக்கொண்டு செல்வதைப் பார்த்து, நின்று அதைக் கவனிக்கலானார். உடனே அந்த வண்டு அவசர அவசரமாக உருட்டிச்செல்ல முயன்றது. ‘கேவலம், உன் உணவை அபகரித்துக்கொள்வான் இந்த அற்பன் என்று எண்ணியா இந்தப் பாடுபடுகிறாய்?’ என்று கண்களில் நீர் பெருக நின்றிருந்தாராம் தல்ஸ்தோய். அவரது கற்பனை ஓட்டம், நுட்பம், நுணுக்கம், தன்போதம், எளிமை, மிகை, அபத்தம், உணர்ச்சிப் பெருக்கு போன்ற பலதையும் இந்தச் சம்பவத்தை வைத்தே மதிப்பிட்டுவிடலாம்.

சீசரின் ஆட்சிப் பகுதியிலிருந்தோ லிதுவேனியப் பகுதியிலிருந்தோ வந்தவர்கள் தஸ்ல்தோயின் அதிமுன்னோர்கள் என்பார்கள். ருஷ்ய சனாதன கிறிஸ்தவத்துக்கு மாறியவர்கள். மகா பீட்டர்தான் தல்ஸ்தோயின் முன்னோருக்கு ‘கவுண்ட்’ பட்டம் தந்தாராம். ருஷ்யக் கிறிஸ்தவப் பெயரல்லாத தல்ஸ்தோய் என்ற பெயருக்கு ருஷ்ய மொழியில் ‘கொழுத்த’ (Fat) என்ற பொருளும் உண்டாம். தல்ஸ்தோயின் உயர்குடிப் பிறப்பின் வசதி வாய்ப்புகளைப் பற்றிப் பேசுபவர்கள் அவைகளுக்கு பிரதானம் தருபவர்கள்தாம். அவைகளைத் துச்சமென மதித்து விலகியதைக் காணும் போதமற்றவர்கள்தாம். 

லேவ் தல்ஸ்தோயின் ‘குழந்தைப்பருவம்’ என்ற முதல் படைப்பு 1852-லேயே வெளிவந்துவிட்டது. யாஸ்னயா போல்யானா என்ற வளமான பண்ணையில் வசித்துவந்தார். அங்குதான் 1861-ல் தன் இலட்சிய 13 பள்ளிகளைத் தொடங்கி, பலதையும் தொடர்ந்து நடத்தமுடியாமல் மூடினார் (அவருக்கு 13 பிள்ளைகள், அவைகளில் 8 மட்டுமே நிலைத்தனவாம்). தனக்கு அறிமுகமான பிரௌதானின் La Guerre et la Paix / போரும் சமாதானமும்’ என்ற வெளியீட்டுக்கு வெளிவரும்முன் 1861-ல் ஒரு மதிப்புரை எழுதி, அந்த பிரெஞ்சுத் தலைப்பை ருஷ்ய மொழிப்படுத்தி, தன் காவிய நாவலுக்கு வைத்துக்கொண்டார். திருமணம் நடந்தது 1862-ல். தன் ஆன்னா காரனீனா (1899) மட்டுமே தனது முதல் நாவல் என்றும் அதற்கு முந்திய ‘வோய்னா ஐ மீர்’ (1869, போரும் அமைதியும்) ஒரு நாவலல்ல, உரைநடையிலான காவியம் என்றுமே தல்ஸ்தோய் கருதியுள்ளார். 580 பாத்திரங்களுள்ளது இது. எனவே ஆன்னா போல் கச்சிதமானதல்ல. காவியத்துக்கே உரிய இணைப்புக் கண்ணிகளின் பாலைவெளிகளையும் உடையது. மேற்கில் ‘epic’ என்ற ஒரே சொல்லால், நாம் காவியம் (காப்பியம்), இதிகாசம் என்று பிரித்துக்காட்டுவதை இணைத்துச் சொல்கிறார்கள். போரும் அமைதியும் புனைவை இதிகாச நாவல் என்றுதான் சொல்ல வேண்டும். 

பொதுவாக ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படைப்புகளை (ஏறக்குறைய) அந்தந்த மொழி உச்சரிப்புகளிலேயே தமிழில் எழுத வேண்டும். ஆங்கில மொழிபெயர்ப்பையே தலைப்பாகக் குறிப்பிடக்கூடாது. தேவையென்றால் மட்டுமே மொழிபெயர்ப்பில் இப்பெயர் என்று குறிப்பிடலாம். 

தல்ஸ்தோயும் அவரது மகளும்

தஸ்தாயெவ்ஸ்கி வறுமையில் உழன்றவர். ஆனால், செல்வாக்கான வாழ்வை வாழ முனைந்தவர். செல்வாக்கில் பிறந்து வாழ்ந்து அதை மறுக்கத் துணிந்த தல்ஸ்தோய்க்கு நேர் எதிர். கலையுணர்விலும் கலைநுட்பத்திலும் கிறிஸ்தவப் பார்வையிலும் நேர் எதிர். இருப்பவனை இல்லாதவன் கொன்று பிடுங்கி வாழ்ந்துவிடமுடியாது என்பதால்தான், கம்யூனிசத்தின் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தியதால்தான் குற்றமும் தண்டனையும் நாவல் அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டது. கொலை செய்வது என்பது எல்லோராலும் முடியக்கூடியதல்ல. திருடுவதற்குக்கூட அதற்கான தகுதியும் திறமையும் மனப்பாங்கும் வேண்டும். தஸ்தாயெவ்ஸ்கி ஒரு கிறிஸ்தவராக ராஸ்கோல் நிகோவ் என்ற கிறிஸ்தவனைப் படைத்துள்ளாரே தவிர கலைஞனாக அல்ல – உண்மையான கொலையாளியை அல்ல என்பதே அவர்மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. பாவமன்னிப்பு பற்றிய தல்ஸ்தோயின் பார்வை வேறு. கடவுளிடம் பாவ மன்னிப்பு பெற்று, குற்றவுணர்விலிருந்து மீள முடியாது, வாழ்வைப் பணயம் வைக்கவேண்டியிருக்கும் என்பதுதான் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு நாவலின் கதாபாத்திரமான நெஹ்லுயுதோவ்வும் க்ராய்ட்சர் சொனாடாவின் போஸ்ட்னிஷெவ்வும் காட்டும் நியதி. சொனாடாவில் தன் குற்றத்தை ஒப்புதல் செய்பவன் ஒரு சாதாரண மனிதனாகவே காட்டப்படுகிறான், கிறிஸ்தவனாக அல்ல. (பஞ்சமா பாதகங்களுக்கு மேலான கணவனைக் கொன்ற பாவத்தை எந்த மத வழிபாட்டாலும் நீக்க முடியாமல் புத்தநெறியில் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டு நிவர்த்தி பெற்று குண்டலகேசியான பத்ராவை இங்கே நினைத்துக்கொள்ளலாம்). 

இந்தச் சமூக வாழ்க்கை உருவாக்கிய பெண்ணையே சித்தர்கள் முதலானோர் நிந்திக்கிறார்கள். அபூர்வமாகவே விடுதலை பெற்ற பெண் இந்தச் சமூகத்தில் உருவாக முடியும். அதாவது குடும்ப, சமூக வாழ்க்கையை உதறியவர்களே சுதந்திரமான பெண்களாக முடியும். குடும்பத்தில், சமூக வாழ்க்கையில், இந்த உலகத்தில் இருந்துகொண்டே பற்றற்று தாமரையிலை நீராக வாழ்ந்த ஞானவான்களும் ஞானவதிகளும் உண்டு. இந்த வாழ்க்கையில் உழன்று அலைமோதும் எளியவர்களுக்கு வாழ்க்கையில்லையா, அதைக் கொடுக்கப் பாடுபடுவதுதான் நமது தர்மமில்லையா என்று கேட்டுப் பயனில்லை. தல்ஸ்தோய் அப்படித்தான் வாழ முனைந்தார். பரிகசிக்கவும், மதத்தால்- அரசால்- குடும்பத்தால் ஒதுக்கிவைக்கவும் பட்டார். அபிமானிகளால்தான் ஆதர்சிக்கப்பட்டு நீடிக்கிறார்.  

ஆனால் சீர்திருத்தம் அல்ல, புனர்நிர்மாணம் அல்ல முற்றான வழி. வெறுப்பல்ல மறுப்பு. எதிர்ப்போ ஏற்போ அற்ற நடுவழி. முற்றான விடுதலையையும் முழுமையையும் படிப்படியாகவோ, பயிற்சியாலோ அடையவே முடியாது என்பது ஜென் நெறி. சட்டென்று விட்டு விடுதலையாகி அடையக்கூடிய சடோரி ஞானத்தைப் பற்றியும் அது கூறுகிறது. இந்த உலகம், இந்த ஞானம் பொய்யானது – மாயையாலானது – பிரதிக் கடவுளால் படைக்கப்பட்டது என்று உண்மையான ஞானத்தை (Gnosis), உண்மையான கடவுளைப் பற்றிப் பேசும் நாஸ்டிசிசம் இன்னொரு வகை. இந்தக் கிறிஸ்தவத்தையோ இவருக்குச் சிறிது பிந்திய சமகாலத்தவரான ரஸ்புடீனையோ (1869-1916, கோமாளியாகச் சித்தரிக்கப்படும் இவருக்கு இரகசிய ஞான மார்க்கத்தில் முதன்மை தருவதுண்டு), குர்ஜீப் (1866-1949) வழிவந்த கிறிஸ்தவ மறைமுக ஞான மரபையோ தல்ஸ்தோய் பரிசீலிக்கவில்லை என்று தெரிகிறது.

வரலாற்று இயேசுவை இல்லாமலாக்கிய எஸ்ஸென்னெஸ் என்ற யூத மதக் கலகக்காரப் பிரிவைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்காது. குவேக்கர்களையும் பிரீமேசனரிகள் பற்றி அறிந்திருந்தார் என்று தெரிகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் கிறிஸ்தவம் அவருக்குப் பொருட்டானதில்லை. பௌத்தத்தை, கீதையை, திருக்குறளை அறிந்திருந்தார் என்றாலும் அவருக்கு கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற முடியவில்லை. அதைச் செதுக்கிப் புதுப்பிக்கவே நினைத்தார். இந்த வகையில் தல்ஸ்தோய் ஆன்மீகவாதி அல்ல. நடைமுறை மதமொன்றை உருவாக்க முயன்ற மதவாதிதான். இங்கு அவரது நிகிலசப் பிடிப்பு என்பது மதநிறுவன மறுப்பு நிகிலிசமாகவே வாய்த்தது. எனவே ருஷ்ய சனாதன கிறிஸ்தவத் திருச்சபையின் விலகலுக்கும் விலக்குக்கும் ஆளானார். 

கிரேக்க கிறிஸ்தவத் திருச்சபை கிழக்கத்திய திருச்சபையாக கிளைபடர்ந்தபோது தோன்றி தனித் திருச்சபையாக ஸ்தாபிதம் பெற்றதே ருஷ்யாவின் சனாதன கிறிஸ்தவத் திருச்சபை என்பது. இது ஐரோப்பாவை அடக்கியாண்ட ரோமானிய கத்தோலிக்கத் திருச்சபை போன்றே ருஷ்ய அரசையும் சமூகத்தையும் ஆட்கொண்ட மதநிறுவனம். 

தல்ஸ்தோயின் கையெழுத்து

தன் வாழ்வைச் சாதாரணமாக வாழ்ந்து கலையிலும் கருத்தியலிலும் அறிவியலிலும் தத்துவத்திலும் சாதித்தவர்கள் ஒருவகை என்றால் வாழ்வையும் போதனையையும் ஒன்றாக்கிய ஞானவான்கள் வேறுவகை. அவர்கள்தாம் விடுபட்டவர்கள். மனிதனாகப் பிறந்து மிருகமாகிறான் அல்லது மிருகமாகப் பிறந்து மனிதனாகிறான் என்ற வால்டேர்-ரூசோ கருத்துமோதல்களோ ஷோபனேரின் ஆன்மீக இருத்தலியலோ தல்ஸ்தோய்க்கு பரிச்சயமானதுதான். 

தல்ஸ்தோய் அன்பை எல்லாவற்றுக்குமான தீர்வாக முன்மொழிகிறார். ஆனால் அவரது வாழ்வையும் கலையையும் குற்றவுணர்ச்சி என்பதுதான் பிரதானமாகச் சூழ்ந்து வட்டமிடுகிறது. குற்றவுணர்ச்சிதான் இரக்கத்தைத் தோற்றுவிக்கிறது. ஆனால் மகான்கள் எனப்படுவோர் இந்த இரக்க உணர்ச்சியால் செயல்படுவதில்லை. அவர்களிடம் பெருகிவழிந்து நிறைவது கருணை, அன்பல்ல. தர்மத்தையும் அறவுணர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டவர்கள் அல்லர் மகாத்மாக்கள். தர்மம் அதர்மம் என்பது சாதாரண மனிதர்களுக்குரியது. தர்மாதர்மத்தைக் கடந்து செயல்படுபவர்கள் மாமனிதர்கள். இது ‘அமாரல்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதாகலாம். ஆனால் மகான்களின் எச்செயலும் அறத்தை மட்டுமே நிலைநாட்டும். (தர்மத்தை அடிப்படையாக்கிய காந்தி இந்த உண்மையான அர்த்தத்தில் மகாத்மா அல்ல என்ற பார்வையும் உண்டு. இலட்சியமாக மட்டுமே மிஞ்சிய தல்ஸ்தோய் வழியை செயலாக்கிக்காட்டியவர் காந்தி). 

கலையில் ‘இம்பெர்சனல்’ செயல்பட வேண்டும் என்பதும் இதன் ஒருவகைதான். போதனையாளராகச் செயல்படும் தல்ஸ்தோய் தன் கலைநேர்த்தியின் உச்சங்களில் இம்பெர்சனலாகவே வெளிப்பாடு கொண்டுள்ளார். உண்மையான அழகியல் உணர்வு என்பதே உயர்ந்தபட்சமான தார்மீக உணர்விலிருந்து பிறப்பதுதானே? இந்த உயர்ந்தபட்ச அறவுணர்வே தல்ஸ்தோயின் உச்சபட்ச கலைத்தருணங்களில் வெளிப்படுகிறது. தன் பாத்திரங்களை உன்னதப்படுத்தாமல் சாதாரணமானவர்கள் ஆக்குவது, சோபியாவைக் கையாள்வது – இந்தக் கருணையின் இரக்கமற்ற செயல்பாட்டால்தான். இவை அவரது சிலுவைப்பாடு.  பண்ணையைப் பகிர்ந்தளிக்கவும் (ஜார்ஜிசம்), காப்பிரைட்டை மக்களுக்கு உரித்தாக்கவும் செய்தார் தல்ஸ்தோய். (அவரது மறைவுக்குப்பின் காப்பிரைட்டை – காப்புரிமையை – ஜார் அரசு மக்களிடமிருந்து பிடுங்கி சோபியாவுக்கே மீண்டும் கையளித்தது) 

புத்தர் தம் செல்வத்தை, குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார். அவரைவிட அதிக செல்வத்தை, லோககுரு ஸ்தானத்தை விட்டு வெளியே வருகிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தம் செல்வத்தையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறத் துணிந்த தல்ஸ்தோய்க்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? மத, ஆன்மீக வாழ்வையும் விட்டு அவர்கள் வெளியேறினார்கள். தனது சொந்த மதத்துக்காக, ஆன்ம வாழ்வுக்காக வெளியேறினார் தல்ஸ்தோய். எனவே அவர்கள் முழுமை பெற்ற மாமனிதர்கள் ஆனார்கள். தல்ஸ்தோய் தனித்துவம் மிக்க மனிதராகவே எஞ்சினார். அதை நாம் அவரது கலைஞன் என்ற ஆகிருதிகொண்டு நிறைவுசெய்ய முனைகிறோம். தல்ஸ்தோயை அவரது மத, சமூக, குடும்ப, அரசு நிறுவனங்களுக்கு (இலக்கிய நிறுவனத்திலும்தான்) எதிராகக் கைக்கொண்ட நிகிலிசத்துக்காகவே இன்று கவனம்கொள்கிறோம்.  

அசாதாரணமான தல்ஸ்தோயின் சோபியா ஒரு சாதாரணமான பெண். நவீன நோக்குகள் பிரமாதப்படுத்தலாம். லிலித் எனலாம். சோபியாவின் டைரியும் நெடுங்கதையும் கூட இந்தச் சாதாரணத்தையே காட்டுகின்றன. இந்த வாழ்க்கைப் போக்கை, சமூக நிறுவனத்தை, மத நிறுவனத்தை, குடும்ப நிறுவனத்தை, காதலை, கடமைகள் என்ற பாசங்களை மீறியவர் தல்ஸ்தோய் என்பதை லௌகீக சோபியாவால் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிந்ததில்லை. சோபியா அறியத்தான் சொனடா நெடுங்கதை எழுத்துருப் பெறுகிறது. வளர்ப்புமிருகமாகப் புலியையும் கொள்வதில் அவர் சுணங்கியதில்லை. தன்னையோ சோபியாவையோ உருமாற்றி மாற்றிப் படைப்பதில், அறுத்துக் கூறுபோட்டுக் கற்பனை செய்துபார்ப்பதில் அவர் தயங்கியதில்லை. (ஆன்னாவும் ஒரு நீதிபோதனைக் கதைதான்) 

புத்தரின் யசோதரை, ஐன்ஸ்டீனின் குடும்ப வாழ்க்கை, பிக்காசோவின் காதலிகள், சித்தர்களின் பெண்ணாகி வந்த மாயப் பைசாசம் பற்றிய நவீன பார்வைகளின் வழியே தல்ஸ்தோயின் சோபியாவும் பார்க்க வைக்கப்படுகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் டைப்பிஸ்ட்டையோ சனாதன ஐசக் பாஷவிஸ் சிங்கரின் டைப்பிஸ்ட்டுகளையோ பற்றி யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. தல்ஸ்தோயை எதிர்நிலையில் வைத்துப் பார்ப்பவர்கள், நவீனத்துவம் பேசினாலும், பெரும்பாலும் இந்தச் சமூக நிறுவனத்தை, குடும்ப அமைப்பை, மதத்துக்குத் திரும்புதலை, தேசியத்துக்குத் திரும்புதலை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் பிரசன்னர்கள்தாம்.  

இவான் புனின், தமது கற்பனையில் பிரம்மாண்டமான தோற்றம் கொண்டிருந்த தல்ஸ்தோயை நேரில் பார்த்தபோது, சிறு கதவினூடே சிற்றுருவாக அவர் வெளிவந்ததைக் கண்டு அதிர்ந்தாராம். எல்லோரையும் போல தல்ஸ்தோயும் வாழ்வையும் மரணத்தையும்தான் காட்டினார். ஆனால் மற்றவர்கள் தம் படைப்பில் வாசகருக்குத் தொலைவில் காட்டும் மனிதர்களை தல்ஸ்தோய் கைப்பிடித்து அழைத்துச்சென்று அருகில் காட்டினார் என்பார்கள். அமைதியற்ற ஆன்மாவான தல்ஸ்தோய், போரை மட்டுமல்ல அமைதியையும் காட்டினார். திருமணத்துக்குப்பின் தல்ஸ்தோயின் வாழ்க்கை ஒரு கட்டுக்குள் வந்தது. வளம்மிக்க சொத்தும் வளம்மிக்க எழுத்தும் கொண்டிருந்தவர் அவர். பன்மய சாகச எழுத்து அவருடையது. கலையின் உச்சபட்சத்தை அடைந்துவிட்டார். ஆனால் பிற்காலத்தில் அமைதியான வாழ்வையும் பிரவாகித்த இலக்கியத்தையும் துறந்தார். நகர்ப்புற புலனுணர்வு வாழ்வைத் துறந்து நாட்டுப்புற எளிய சாதாரண வாழ்வை மேற்கொண்டார். பௌத்தத்தின் பரிநிர்வாணமும் புதிய ஏற்பாட்டின் மலைப்பிரசங்க புரட்சிகர நடைமுறைக்கு உகந்த கிறிஸ்தவமும் ஆட்கொள்ள, தன்னுணர்வும் அறவுணர்வும் அழகியலுணர்வை வென்றது. ஆனாலும் ‘இவான் இலியிச்‘சில் அறத்தின் அழகியலைக் கண்டடைந்தார் எனலாம். போதனைக் கதைகளிலும் உச்சத்தை அடையவே முனைகிறார். கலை என்பது கற்பனையானது- எனவே ஏமாற்று, கற்பிதப் போலிமை, உண்மையற்றது என்பதைக் கண்டுகொண்டார். எழுத்தின் கற்பனையில் உண்மையைக் காண்பதைவிட வாழ்வில் உண்மையைக் காண அலைந்தார். வாழ்க்கையும் ஒரு போர்க்களம்தான் அவருக்கு. புறத்திலும் அகத்திலும் எழும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம். மடம் நோக்கிய ரயில் பயணம் மரணத்தைத் தந்தது. அழகியலில் மரணமின்மை பெற்றார். 

புவர்மேன்ஸ் பிலாசபர் ஆன, ஏராளமாக எழுதிக் குவித்த காலின் வில்சன் வான்கோ, நிஜின்ஸ்கி போன்ற கலைஞர்களை அந்நியர்களாக விளக்கி எழுதி கலைஞர்களின் இருத்தலியலை பிரபலப்படுத்தினார் (The Outsider, 1956 & Introduction to the New Existentialism, 1966). இவர்கள் கிறிஸ்தவத்தின் பாவத்தில் பிறந்த சிருஷ்டிகள். பாவத்தின் சம்பளத்தைப் பெற்றவர்களாக குற்றவுணர்ச்சியில் அலைந்தவர்கள். கலை மூலம் தப்பிக்க நினைத்தவர்கள். தல்ஸ்தோய் ஒரு அந்நியர்தான். அபத்தத்தை கலகத்தால் வெல்ல முயன்றார். கலை மூலம் மட்டுமல்ல, வாழ்க்கை மூலமும் தப்பிக்க நினைத்தவர். சித்தாந்தமான மதத்தை, அரசியலை, சமூகத்தை, வாழ்க்கையை, குடும்பத்தை, கலையை வேதாந்தப்படுத்த முனைந்தார். அவரது கிறிஸ்தவ மனம், கிறிஸ்தவத்தைச் சுருக்கிப் புதுப்பித்து ஜந்து கட்டளைகளை ஆக்கியதே தவிர அதை முற்றாக விட்டு வெளியேற மறுத்தது. பௌத்தத்தின் நான்கு உண்மைகளும் எட்டு நெறிமுறைகளும் அவற்றினும் மேலானவைதானே?

உயிரியலில் செல்லின் அறுதி இலட்சியமே இனப்பெருக்கம்தான் என்கிறது அறிவியல். விலங்குகளின் காமம் இனப்பெருக்கத்துக்கானதே. மனிதனின் பகுத்தறியும் மனம் காமத்தைப் பிரதானப்படுத்திவிட்டது. மதமும் சமுதாயமும் அதைக் கட்டுக்குள் வைக்கப் போராடுகிறது. அதை மீறுகிறவனாகவும் ஏமாற்றுகிறவனாகவும் சலுகை கொள்கிறவனாகவும் இருக்கிறான் ஆண்மகன். அவனும் சமூகத்தின் உருவாக்கம்தான். ஆனால் பிறர் கட்டுப்பாடு கூடாதே தவிர சுயக்கட்டுப்பாடு அவசியம். சுயக்கட்டுப்பாடுதான் சுதந்திரத்தை ஈட்டும். பெண்ணையல்ல, இந்தச் சுயமற்ற பெண்ணைத்தான் சித்தர்கள் இடித்துரைக்கிறார்கள். நிலவுடமை அவளை தெய்வமாக்கி அடிமைகொள்ள நினைக்கிறது. சமுதாயம் புறத்தில் பெண்ணை அடிமைப்படுத்தலாம் (தீசிஸ்). சமுதாயத்தின் அகத்தில் பெண்ணே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறாள் (anti-thesis). சமப்படுத்தித் தொகுப்பன எவ்வகை? கடைவீதியிலுள்ள அத்தனையும் பெண்ணுக்கானவை. அப்படிப் பலிவாங்குகிறாள் பெண் என்று சொனாடா கதையில் தல்ஸ்தோய் பாத்திரக்கூற்றாகச் சொல்வது பிரபலமான நோக்கு.

இருப்பதை இல்லாததாக்கக்கூடாது. எதையும் பிடுங்கிச் சமப்படுத்த முடியாது. இல்லாததை இருப்பதாக்க வேண்டும். இல்லாமையில்லை, எனவே கொடுப்பாருமில்லை என்ற நிலை. சொல்வது சுலபம். செயல்முறை என்ன? தல்ஸ்தோய் அலைமோதியது இப்படித்தான், இவைகளில்தான்.

கலைஞன் நீதிபோதனையிலும் கலைத்தரத்தை சமைக்க முடியும். ஞானாதிகள், நீதிபோதனைக் கதைகளையே சொல்ல முடியும். முதல்பட்சமான சலனமின்மை கைவரப்பெற்ற அவர்களுக்கு கலைத்தரம் தேவையற்றது. கலக்கினால் கழிவு பல காட்டும் கலைஞனின் இரண்டாம்பட்சமான சலன மனமே கலையைச் சாதிக்கும். தல்ஸ்தோயின் சலன மனம் சலனமின்மைக்கு, எட்டாக்கனிக்கு ஆசைப்பட்டது. அவசமும் அவஸ்தையும் இதில்தான்.

முதல்நிலையில் வைக்கப்படும் கவிஞரான ரிம்போ இளமைக்குப் பிறகு இலக்கியத்தின் பக்கமே திரும்பவில்லை. காஃப்கா தன் எழுத்துகளை எரிக்கச்சொன்னதற்கும் தல்ஸ்தோய் தன் எழுத்துகளை மறுத்ததற்கும் வேறுபாடு உண்டு. மரணத்தறுவாயில் தன் வாழ்வின் அர்த்தமின்மையைப் பல பெரியோர்கள் உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள். சாக்ரடீஸ் விஷத்தை ஏற்றுப் பருகியதில்கூட இதுதான் தெரிகிறது. இயேசுவின் லாமா லாமா சபக்தானியில் இதைத்தான் காணவேண்டும். 

நித்ய சைதன்ய யதியின் உதகை ஆசிரமத்தில், அவரது மறைவின் முதல் நினைவுதினத்தில், எழுத்தாளர்கள் சிலரும் வாசகர்களும் அன்பர்களும் மாலையில் ஆசிரமத்துக்கு வெளிப்புறப் பாதையில் சிதறிக் குழுமிப் பேசிக்கொண்டிருந்தபோது, யதியின் மரணப்படுக்கையின்போது அருகிருந்தவரான விநய சைதன்யா என்ற சந்நியாசி அதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நான் இதுவரை செய்த செயல்களெல்லாம் அர்த்தமற்றவை என்று இப்போதுதான் தெரிகிறது’ என்று யதி கசந்த முறுவலுடன் சொன்னதாகக் கூறினார். ஆங்கிலத்தில்தான் சொல்லிக்கொண்டிருந்தார். எத்தனை பேருக்கு மனதில் பதிந்ததோ தெரியவில்லை. கண்டுகொள்ளாத பாவனைதான் தெரிந்தது. துணுக்குற்ற நினைவு எனக்கு இருக்கிறது. (அந்தச் சமயத்தில் எடுத்த, நானும் கூட உள்ள, ஒரு புகைப்படம் இணையதளத்தில் பின்பு வந்தது. அதைத் தரவிறக்கிச் சேமித்தபோது இந்த நினைவே மேலெழுந்தது).   

குடும்பம் என்ற அகப் பூசலைச் சித்தரித்தது போலவே சமூக வாழ்க்கை, அரசு, போர் முதலிய புறப் பூசலையும் தல்ஸ்தோய் சித்தரித்துள்ளார். ஆம், வாழ்க்கையின் அகமும் புறமும் போராட்டம்தான். சமநிலையற்றதுதான். கருணையற்றதுதான். அபத்தங்கள்தான். சராசரியானதுதான். இந்தச் சமரின் இக்கண வாழ்க்கைதான் தல்ஸ்தோயின் (முறையே) ஆன்னா காரனீனா, போரும் அமைதியும் நாவல்களும் இவான் இலியிச்சின் மரணம் நெடுங்கதை ஆகிய மகத்தான படைப்புகளின் கதைக்களமும் கருவும் கூறுகளும். முற்றிலும் இல்லாவிட்டாலும் பல தருணங்களைச் சிறப்பாகச் சித்தரித்த வகையில் புத்துயிப்பு / புனர்ஜன்மம் நாவல், க்ராய்ட்சர்  சொனடா, ஹாஜி முராத் நெடுங்கதைகள், பல சிறுகதைகள் கவனம்பெறுகின்றன. தல்ஸ்தோயின் இரு நாவல்களின் கலைநுட்பச் சாதனைகளைக் கருத்தில் கொள்வோர் அவரது போதனையைக் கலையாக்கிய புனைகதைகளை இரண்டாம்பட்சமாகக் கருதுகிறார்கள். போதனையைப் போதனையாகவே எழுதிய கதைகளை அசட்டை செய்யத் துணிகிறார்கள். (அதிக விமர்சனத்துக்கு ஆளானவை அவரது கட்டுரை நூல்கள்தான்). ஆனால் எல்லாமே தல்ஸ்தோயின் விதவிதத் தோற்றங்கள்தாம். ஒன்று மற்றொன்றைவிடச் சிறப்பு என்று இன்றுள்ள இலக்கியக் கோட்பாடுகளின் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் காட்டுகிறோம். தல்ஸ்தோயின் கலைச்சிகரங்களென போற்றப்படும் ஆன்னாவிலும் போரும் அமைதியிலுமே சில நேரங்களில் தல்ஸ்தோய் போதனை செய்யத்தான் செய்கிறார். நாமும் நமட்டுச் சிரிப்புடன் அமைதியாகக் கைகட்டி ‘முடிக்கட்டும்’ என்று காத்திருக்கிறோம்.

பொதுவாக மொழிபெயர்ப்பில் எப்படிச் சாதித்தாலும் நாற்பது சதவீதத்தைத்தான் கொண்டுவர முடிந்துள்ளது. கவிதையில் பத்து சதவீதம் வந்தாலே பெரிது. கவிதையை மொழிபெயர்ப்பில் படிக்கவே கூடாது (தி.ஜ.ரங்கநாதன் என்ற முன்னோடி மொழிபெயர்ப்பாளர் இதை ‘முழிபெயர்ப்பு’ என்று முதலில் சொன்னவர். ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதை மொழிபெயர்ப்புகளை ‘உயிரற்ற சவம்’ என்றார். நடைபிணம் / ஜோம்பி எனலாமா?). இதுபோலவே நவீன புனைகதையும் (நாவலும் சிறுகதையும்) மொழியின் அஸ்திவாரத்தில் மேற்கட்டுமானம் கொண்டது. எனவே மூன்றாம் கையளிப்பாக, போஸ்ட்மார்ட்டம் செய்த தல்ஸ்தோயை ஆங்கிலத்திலோ தமிழிலோ தாய்மொழியிலோ படித்துவிட்டுத்தான் நாம் அவரது இலக்கியச் சிறப்பைக் கண்டடைந்துவிட்டதாக குதூகலிக்கிறோம். நிழலில் பருந்தைக் கண்டடைந்து விட்டதாக, யானை பார்த்த விழியற்றவர்களாக, கழறுகிறோம். ஒருநாவலின் உள்ளடக்கம் எப்போதுமே இரண்டாம் பட்சம்தான். வடிவம்தான் நாவல் கொடுக்கும் (புனைவு) அனுபவம், முதுகுத் தண்டின் சகஸ்ராரச் சிலிர்ப்பு. உள்ளடக்கமும் உருவமும் பிரிக்கமுடியாமல் இரண்டறக் கலந்து எழுந்த படைப்புகள்தான் சிகரச் சாதனைகள். ஆனால் மொழிபெயர்ப்பில் பிரதியாக்க முடியாதவை. எனவேதான் மொழியாக்கம், கனிபலிய (தின்று ஜீரணித்த) மொழியாக்கம் பற்றியெல்லாம் பரவுகிறார்கள். வாழ்க்கையை நாவலில் பிரத்தியட்சமாகக் காண முயற்சி செய்தால், முயல் கொம்பே. (அரிஸ்டாட்டிலிய பிரதிபலிப்புக் கொள்கையை மீறித்தானே இன்றைய பின்நவீனத்துவ / அமைப்பியல் ஆட்டக் கொள்கைகள் வந்து தேய்ந்திறுதல் பெற்றுள்ளன. இதில் சாம்ஸ்கியின் ஆக்கமுறை மொழியியல்தான் இன்று உயரத்தில். என்ன செய்வதிந்த வடிவத் தொல்லையை? கையைக் காலாக்க முடியாது). மொழிபெயர்ப்பு நம் காலடியில் கிடத்துவது நிழலைத் (சாயையை) தான். வாழ்வின் (ஞானத்தின்) உச்சிவெயிலில் இந்த நிழல்கள் சாஸ்வதமல்ல. வெளிச்சத்தின் உதயத்திலும் அந்தியிலும் இவை நம்மோடு அலைமோதும்.  

Leonid Pasternak வரைந்த ஓவியம் 

உலகத்தில், நவீனப் புனைகதை வளர்ச்சி வரலாற்றில், தல்ஸ்தோய் சிக்கலற்ற எளிய நேரடி யதார்த்த வடிவத்தைக் கையாண்டவராகவே கருதப்படுகிறார். மேடம் பவாரியின் இலக்கண சுத்தமான யதார்த்தவியலின் கச்சிதம், அமரத்துவம் பெற்ற ஆன்னாவிடம் கிடையாது.  நாசூக்கற்ற நகாசு அற்ற வடிவம். முந்திய டேனியல் டீஃபோ, லாரன்ஸ் ஸ்டெர்ன், நதானியல் ஹாத்தார்ன், தாக்கரே, சார்லஸ் டிக்கன்ஸ், தாமஸ் ஹார்டி என்று (ஆங்கிலம் என்பதால் நேரடியாக) தெரியவரும் படைப்பாளிகளின் செய்நேர்த்தியைப் பார்த்திருக்கிறோம். ருஷ்ய மொழியில் அத்திவாரத்தில் எழுந்த முன்னவர்களான புஷ்கின், லெர்மாண்டோவ், சமகாலத்தவர்களான கோகேல், துர்கனேவ், செகாவ், தஸ்தாயெவ்ஸ்கி, பின்வந்த புல்காகோவ் பற்றி நேரடியாக இல்லாமல் திரை வழியாக, பராபரியாகக் கேள்விப்படுகிறோம். தமது இரண்டு மூன்று படைப்புகள் மூலமே இவர்களையெல்லாம் விஞ்சி தல்ஸ்தோய் நிற்பது எப்படி? ருஷ்ய மொழியில் அவை என்னவாயிருக்கும் என்று தெரியாது. கார்னெட்டின் மொழிபெயர்ப்பை நபக்கவ் மிகக்கடுமையாகவே சாடுகிறார். பின்பு திருத்திப் பதிப்பிக்கப்பட்ட கார்னெட் மூலமே நாம் ஆன்னாவை அறிந்துள்ளோம். தல்ஸ்தோய் உடன் நேரடிப் பரிச்சயம் கொண்டிருந்த Aylmer and Lousie Maude மொழிபெயர்ப்பே பரவாயில்லை ரகம் என்கிறார் நபக்கவ். (என்னிடம் என்றோ வாங்கிய மோட் பதிப்பித்த ஒட்டுமொத்தத் தொகுதிகளின் சில தொகுப்புகள் உள்ளன. சிறந்த மொழிபெயர்ப்புகளைத் தேர்ந்தெடுத்து பிரமாண்டமான வடிவில் தந்திருக்கும் ‘Leo Tolstoy: Collection of 78 Classic Works with analysis and historical background (Annotated and Illustrated). Ed, Rose Polak, Annotated Classics. P.5173’ என்ற நூலும் உசாத்துணைக்கு உள்ளது.)  

இப்போதைய இந்தக் கலையே உருமாறி வேறாகும் எதிர்காலத்தில் இந்தக் கலை உச்சங்களுக்கு என்ன மதிப்பு? எதிர்காலமொன்றில் இந்த இலக்கிய வகை மாறி பழையனவாகி வேறொரு கலை வகை புதியனவாக வியாபகம் கொண்டால், என்ன செய்யமுடியும்? இன்றே இலக்கியத்தின் வேறு வேறு வகைகளை, மற்றமைகளை ஏற்கும் நவீன அளவீட்டின்படி எப்படி எதிர்கொண்டிருக்கிறோம்? அறிவியலாலேயே இந்த வாழ்வின் உண்மையை அறுதியிட முடியாது எனும்போது இலக்கியத்தால் எதுவரை போக முடியும்? கலையின் பெறுமதி என்ன? வாழ்க்கையின் பெறுமதிதான் என்னவாக இருக்கிறது?

தல்ஸ்தோய் கலைஞராக, இந்தச் சமுதாயத்தின் உருவாக்கமான ஆன்னா (புனைவு), சோபியா (நடப்பு) இருவரையும் கையாண்டதை கவனத்தில் ஏற்கவேண்டும். இரக்கமின்மையின் கருணை. 

சோபியாவுக்கு ருஷ்ய வழக்கப்படி ‘சோன்யா’ என்ற செல்லப் பெயரும் உண்டு. சோபியாவுக்கு தந்தையின் பெயரான ஆன்ட்ரீவ்யனா சேர்ந்திருந்தது. சோபியா தல்ஸ்தோய் என்றுதான் குறிப்பிடுவார்களே தவிர தல்ஸ்தோயினா (இது மேடையில் ஆடுபவருக்கு உரியது) என்றோ தல்ஸ்தோயா என்ற குடும்பப் பெயரிட்டோ அழைக்கப்படுவதில்லை. தல்ஸ்தோயின் ஒரு சகோதரி பெயர் லெவோவ்னா தல்ஸ்தோயா. பொதுவாக பெண்களின் பெயர் ‘னா’-வில் முடியும். ’அன்னா’ (‘ஆன்னா’) என்பதுபோல். எனவே தந்தை பெயரையோ குடும்பப் பெயரையோ இட்டு அழைக்கும் போதுதான் ’யினா’, ‘னா’, ’யா’ என்று முடிப்பிப்பார்கள். ‘னினா’ என்று முடிப்பித்து அழைப்பது அவைக்கள நடன மங்கையினருக்கே உரியது. கணவரின் பெயரை இட்டு அழைக்கும் போது இப்படி இறுதி எதுவும் மாறுவதில்லை. திருமதி என்பதன்பின் கணவர் பெயரை அப்படியே தருவதுதான் நவீன மேற்கத்திய வழக்கம். எனவேதான் ‘ஆன்னா காரனீனா ’ நாவலைப் பற்றி மிகச்சிறப்பான ஒரு விரிவுரையைத் தந்துள்ள (ருஷ்ய மொழிநடையிலும் ஆங்கில மொழிநடையிலும் மேதையான) விளாடீமர் நபக்கோவ், “ஆன்னா காரனீன்” என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். இதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வீம்பாக மறுத்து நியாயங்களைப் பேசுகிறார்கள். மூலத்திலும் ‘காரனீனா’ என்று தவறாக வந்துவிட்டதுதான் இதில் சங்கடம். 

ஆறுமுறை போரும் அமைதியும் படைப்பினை, தனக்கு மட்டுமே புரியும் தல்ஸ்தோயின் கையெழுத்துப் பிரதியை, செப்பமாக எழுதியதாக திருமதி சோபியா குறிப்பிட்டுள்ளார். (Rose Polak தொகுத்துப் பதிப்பித்த பெருந்தொகுப்பில் ஒன்பதாவது திருத்தப் பிரதியின் ஒரு பக்கம் காட்டப்பட்டுள்ளது).  

அவரது நாவலை சொந்த வெளியீடு செய்து தாமே விற்பனை செய்துள்ளார். அந்தக் காலத்திலேயே லட்சம் ரூபிள்கள் பதிப்புரிமை தருவதாக ஒரு பதிப்பாளர் சொன்னதை வற்புறுத்தி தல்ஸ்தோயை கடைசிக் காலத்தில் இணங்கச் செய்யப்படாதபாடு பட்டிருக்கிறார் சோபியா. தல்ஸ்தோயின் படைப்புகளை மக்களுக்கு உரிமையாக்க வேண்டும் என்ற தல்ஸ்தோயர்களின் கட்டாயத்திலேயே இரகசியமாக அந்த உயிலை எழுதினார் தல்ஸ்தோய். புஷ்கினின் காப்டன் மகள் நாவலில் வரும் கசாக் கலகத் தலைவன் புகாசோவ், ‘இதில் ஈடுபட்டாயிற்று, இனி எதிர்த்துப் போராடி அதன் வெள்ள இழுவையில் சென்று மரணத்தை எதிர்கொள்வதுதான் செய்யக்கூடியது’ என்பது போலத்தான் தல்ஸ்தோயின் தவிர்க்க முடியாத நிலை என்பது உதவியாளர் புல்காகோவின் டைரி மூலமும் Last Station திரைப்படம் மூலமும் நமக்குப் புரிகிறது. தல்ஸ்தோயர்கள் எனப்பட்ட அவரைப் பின்பற்றுவோரின் பிடிவாதம், சர்வாதிகாரம், துல்லியம், வறட்சி அவரை கூட்டத்தில் சிக்கித் தள்ளுண்டே முன்னேறுதல் போன்று கட்டாயப்படுத்தியும் உள்ளது. 

ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். கலைஞனின் மூலத்தையும்தான். பொதுவாக, கலைஞர்கள் காம உணர்வு மிக்கவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. தல்ஸ்தோயும் இதில் மிகச் சேர்த்திதான். இராணுவத்தில் பணிபுரிந்து போரின் நிதர்சனத்தைத் தரிசித்துக் கலையாக்கியது போலவே வாழ்விலும் காமத்தில் கரைகண்டு கலையாக்கினார். போரிலும் காமத்திலும் முக்குளித்துக் கரைகண்ட வேறு எந்த எழுத்தாளரும் படைக்காத போர்க்கள அனுபவமும், பாலுணர்வுச் சித்தரிப்பும் தல்ஸ்தோயின் கலைநேர்த்தியில் அகப்பட்டது எங்ஙனமோ? அதற்காகத்தான் அவரை உச்சிமேல் கொள்கிறோம். ‘Gandhi’s truth’ எழுதிய உளவியலாளர் எரிக் எரிக்சனோ, தல்ஸ்தோயின் பாலுணர்வு வாழ்க்கை (Sofiya Tolstoy’s Defense by Sophie Pinkham போன்றவர்கள்) பற்றி எழுதியவர்களோ தீர்மானமாக எதையும் நிறுவிவிடவில்லை. தம் பார்வைகளையே வெளியிட்டார்கள். அவர்களில் மட்டும் அடங்கியதல்ல இந்த வாழ்க்கை. மானிட உளவியல், என்றைக்குமான ஆன்மீகப் பார்வை, உண்மையான பெண் விடுதலை, இன்றைய கருத்தியல்கள், நிபுணர்கள் எல்லோருமே எல்லாமே முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்தாம். 

கேத்தி மில்லட் (Sexual Politics by Kate Millett, 1970) விமர்சனத்துக்கு நார்மன் மெய்லர் எழுதிய (The Prisoner of Sex by Norman Mailer) பதில், செக்சுவல் ரெவல்யூசன் விளைவுகளை ஆராய்ந்து பெண்ணியத்தை மறுநிர்ணயப்படுத்த முயன்ற (பிரபல விக்டர் ஃபிராங்கிளின் சகோதரர், உளமருத்துவர்) ஜார்ஜ் ஃபிராங்கிள் (The Failure of the Sexual Revolution by George Frankl) போன்ற ஆண் மையவாதிகளின் பார்வைகள், பெண்ணியப் புயல்காற்றில் காணாமல் போயே போய்விட்டனவே?     

இன்றையவர்கள் ‘ஆன்னா’ என்று சரியாக உச்சரிக்கப் பார்க்க, அன்றையவர்கள் எல்லோரும் ‘அன்னா’ என்றே அழைத்துவந்துள்ளனர். ’ஆன்னா‘ என்ற மேற்கத்திய உச்சரிப்பை ‘அன்னா’ என்றே தமிழுக்கேற்ப அழைக்கலாம் என்றே தோன்றுகிறது. (தமிழக்கு, யாரையும்விட மொழிபெயர்ப்பு நூல்களை அர்ப்பணிப்புடன் வெளியிட்டு சேவை செய்தும் இன்று யாராலும் நினைவுகூறப்படாத அ.கி.ஜெயராமனின்) தமிழ்ச்சுடர் நிலையம், வெ.சந்தானம் தமிழாக்கத்தில் வெளியிட்ட நூலின் தலைப்பு ‘அன்னா கரீனா’ என்ற இப்படியுமில்லாத அப்படியுமில்லாத தலைப்பு. இந்த எளிமைப்படுத்தலுக்கான விளக்கமும் நூலின் முன்னுரையில் உள்ளது. இன்றைய இந்தப் பெயர்க் குழப்பம் பற்றித் தெரியாமலேயே, ‘காரனீனா ’ என்று கஷ்டப்பட்டு உச்சரிப்பது தமிழ் வாசகர்களுக்கு இயல்பாக இருக்காது என்று எளிமைப்படுத்தி மாற்றியதாக சமாதானம் சொல்லப்பட்டுள்ளது. (‘காரனீனா’வைவிட ‘கரீனா’ தேவலாம் என்றே தோன்றுகிறதல்லவா?). ருஷ்யனிலிருந்து நேரடியாக பல மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ள, இப்போது ஆன்னாவையும் மொழிபெயர்த்துள்ள நா.தர்மராஜன், ‘அன்னா கரீனினா’ என்றுதான் ருஷ்யத் தலைப்பை உச்சரித்துப் பயன்படுத்தியுள்ளார் – ‘ஆன்னா’ என்றல்ல.

நபக்கவின் ‘ஆன்னா காரனீன்‘ தொடர்பாக மேலதிகக் குறிப்பு. நபக்கவ்வின் ஆரம்பகால நாவல்கள் ருஷ்ய மொழியில் அமைந்தவை. பிறகுதான் அவர் (இளமையிலிருந்தே பழகிய) ஆங்கிலத்துக்கு மாறினார். ஆங்கில மொழிநடையில் ஷேக்ஸ்பியருக்கும் ஜேம்ஸ் ஜாய்ஸ்-க்கும் பிறகு தோன்றிய மேதமையாளராகக் கருதப்படுபவர். அவர் பிற்காலத்தில் சில ருஷ்ய மொழிச் சிகரப்படைப்புகளை ஆங்கிலத்துக்கும் ஆங்கில மொழியின் உன்னதங்களை ருஷ்ய மொழிக்கும் கொண்டுசெல்ல முயன்றார். அவரது புஷ்கினின் ‘யூஜின் ஒனிஜின்‘ என்ற (காவிய) கவிதையில் அமைந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு (இரு பாகங்கள்), இதுவரைக்குமான மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் உன்னதமான முதலிடம் பெறுவது. புஷ்கினை நூற்றுக்கு நூறு கொண்டுவர முயன்ற சாதனை அது. அவரது பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களுக்காக நிகழ்த்திய நூற்றுக்கணக்கான நாவல் பற்றி விரிவுரைகளில் (இரு தொகுப்புகளாக அவற்றில் சில பின்பு பதிப்பு செய்யப்பட்டன) “ஆன்னா காரனீன்” பற்றிய சொற்பொழிவுதான் சிகரம். இந்நாவலையே உலக நாவல்களில் தலையாயது, அமரத்துவம் பெற்றது என்கிறார் அவர். போரும் அமைதியும் நாவலை இரண்டாவதாகவே கருதுகிறார். நுட்பமான பதிப்புக் குறிப்புகளுடன் ஒனிஜின் போலவே ஆன்னாவை நபக்கவ் மொழிபெயர்த்துப் பதிப்பிக்க நினைத்தது கைகூடவில்லை.  

இலியட்டின் விக்டரைப் போலவோ மகாபாரத்தின் கர்ணனைப் போலவோ ஒரு துன்பியல் (டிராஜிக்) பாத்திரம்தான் ஆன்னா. ஆன்னாவை அவளுக்கு முந்தைய மேடம் பவாரி (1856), பிந்திய லேடி சாட்டர்லீ (1928) போன்ற இலக்கியப் பாத்திரப் படைப்புகளுடன் ஒப்பிட முனைவார்கள். இலட்சிய யதார்த்த புத்துயிர்ப்பைப் பொறுத்தவரை, அதன் கதைக்கருவுக்கு முன்னோடியாக நத்தானியல் ஹாத்தார்னின் செவ்வியல் புனைவு ரொமான்ஸ் ஆன ‘The Scarlet Letter’ (1850) நாவலைக் குறிப்பிடலாம். ஹெஸ்டரும் மதகுரு டிம்மஸ்டேலும் காத்துஷ்யாவும் ஜூரி நெஹ்லுயுடோவ் உடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தகுந்தவர்கள். (தமிழில் ‘அவமானச் சின்னம்’ என்று அது தமிழ்ச்சுடர் நிலையத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜெயகாந்தனின் ’சிலநேரங்களில் சில மனிதர்கள்’ தல்ஸ்தோயின் ‘புத்துயிர்ப்பு’வின் பாதிப்பு கொண்டதுதான்). 

விளாடிமிர் நபக்கவ்

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஒரு அனுபவமே அடுத்து அதேபோலவே நிகழ்கையில் வேறானதாகவும் புதிதாகவும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே இலக்கியப் புனைவு தரும் வாழ்க்கை அனுபவங்கள் நம்மைச் சிலிர்க்கவும் நுட்பமாக்கவும் மற்றமையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் வழங்குமே தவிர நம் வாழ்வின் அர்த்தத்தை அடையச் செய்யாது. நம் வாழ்க்கையை நாமே வாழ்ந்து நமக்கான அனுபவங்களைப் பெற்றுத்தான் அர்த்தப்படுத்திக் கொள்ளவோ எதிர்கொள்ளவோ வாய்க்கும். தல்ஸ்தோய் இக்கண சாவதானத்துடன் தரும் அபூர்வ தரிசனங்களும் அவரது போதனைகளும் எந்தவிதத்திலும் நம்மிடம் முழுமைகொள்ளாது. அதற்கான பக்குவம் உள்ளவர்களுக்கே (காந்தியைப் போல) பாதிப்பை அளிக்கக்கூடும். ரமணர் பெரிய புராணத்தைப் படித்தால் (சகஜ) சமாதிநிலையை அடைந்துவிடுவாராம். நாம் பெரிய புராணத்தைப் படித்தால் கொட்டாவிதான் வரும். இலக்கியப் படைப்பு உருவாகும் போக்கு நம் கோட்பாடுகளுக்கு அடங்காதது. எழுத முனைந்தது உருமாறியே, மொழியின் தற்செயல் விளைவுகளைக்கொண்டே வெளிப்படும். கண்டதை விண்டவரில்லை. விண்டவர் கண்டதுமில்லை. தியானத்துக் காணும் மெய்ஞானமல்ல இலக்கிய ஞானம், இலக்கியவாதியின் தியானம். 

காந்தி போன்ற மகாத்மாக்கள் மெய்ஞானிகள் அல்ல. சங்கரர், ஓஷோ, யதி போன்றவர்களும் குருமார்கள்தான். இயேசு, நபி, கண்ணன், ராமகிருஷ்ணர் போன்ற இறையருளாளர்களும் (மத) குருமார்கள்தாம். மெய்யான ஞானத்துக்கு வழிகாட்டும் புத்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற மிகச் சில ஞானவான்களையாவது மெய்ஞானிகள் என்று வழிமொழியலாமா? ஞானம் எதோ தனியான வஸ்துவல்ல. ஞானத்தை அடையமுடியாது. இன்மை கண்டறிந்த, தேடாதே என்ற புரிதலின்படி, பயிற்சியாலோ படிப்படியாகவோ மற்ற யார் அருளாலோ ஞானத்தை அடையவும் முடியாது.  சிலருக்கு ‘இண்டலக்சுவல் அண்டர்ஸ்டேண்டிங்’ என்பது மட்டுமே சித்திக்கும். அது முழுமை அல்ல. சிந்தனையால் பெறும் அறிவு அல்ல,  செயல்படும்போது பிறக்கும் சிந்தனையே உண்மையை அறியத் தரலாம். இந்தப் புரிதல்களுடன் தல்ஸ்தோயை அணுகினால், அவர் சில கலைச் சிகர சாதனைகளால் மகா கலைஞர், தம் போதனைக்குத் தம் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் எனக் காணலாம். அற்ப மானிடப் பதர்கள் நாம். ஒருவர், தான் தர்மம் என்று நினைப்பதை அடிப்படையாகக் கொண்டு அதன்படியே ஒழுகலாம். ஒருசிலருக்கு அது அதர்மமாக விளங்கலாம். சனாதனமோ நவீனத்துவமோ, பழையன கழிதலோ புதியன புகுதலோ வழு அல்ல, கால வகையினானே.   

தல்ஸ்தோய் பற்றி இப்படிச் சிதறலாகவும் சுருக்கமாகவும் இப்போதைக்கு சொல்ல நேர்ந்தது. சாவதானமாக இவற்றை விரித்துரைக்க வேண்டும்.

*

தமிழில் தல்ஸ்தோய்

தமிழில் அச்சுப் புத்தகப் பதிப்புப் பண்பாட்டின், பாடப் புத்தகப் பதிப்புப் பண்பாட்டின் பகுதியாகவே தல்ஸ்தோய் நுழைகிறார். காந்தியின் தல்ஸ்தோய் அனுசரிப்பு காங்கிரஸ்காரர்களிடம் ஏற்படுத்திய தாக்கமும் திருச்சபைக் கிறிஸ்தவத்துக்கு எதிரான புரொட்டஸ்டண்டு கிறிஸ்தவத்தின் (பங்காளிக்கு எதிரி பங்காளி என்ற தன்மையில்) முன்னெடுப்புமாக இது நிகழ்ந்துள்ளது. இப்போதைக்குத் தெரியவருகின்ற தரவுகளின்படி 1926-ல் காங்கிரஸ் அபிமானமுள்ள ஒரு அந்தண ஆசிரியரின் பாடப்புத்தக பதிப்பாகவே தல்ஸ்தோயின் நீதிபோதகக் கதை(கள்) மொழிபெயர்த்துத் தரப்பட்டிருக்கிறது. 

பதிப்பில் புதுமைகளைச் சாதித்த வை.கோவிந்தனின் சக்தி பிரசுராலயம், கு.ப.ரா. என்ற தமிழின் முக்கிய சிறுகதையாசிரியரைக் கொண்டும் (1942),  பிறரைக் கொண்டும் தல்ஸ்தோயின் போதனைக் கதைகளுக்கு முந்தைய கலைத்தரமான சிறுகதைகளையும் கொண்டுவந்திருக்கிறது. வருமானத்தின் நிமித்தம் சில வங்க நாவல்களை மொழிபெயர்த்த கு.ப.ரா இதையும் செய்திருக்கிறார். ஆனால் ’டாஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்’  என்ற அவரது கட்டுரை தல்ஸ்தோயின் மீதான அவரது ஈடுபாட்டைக் காட்டுகிறது. கோவிந்தன் இடதுசாரி அல்ல என்றாலும் அனுதாபி. காந்தி, பாரதி மேல் ஈர்ப்புள்ளவர். அவரது புத்தக சாதனைகளுள் ஒன்றாக தல்ஸ்தோயின் போரும் அமைதியும் என்ற பிரம்மாண்டான படைப்பைக் கொண்டுவரத் துணிகிறார். சிறந்த பத்திரிகையாசிரியரான சொக்கலிங்கம் என்ற காங்கிரஸ்காரர், சிறுகதைகளில் சாதனையாளரான புதுமைப்பித்தனின் நண்பர், சில சிறுகதைகளை எழுதிப் பார்த்தும் திருப்தி தராமல் இப்படியாவது ஒரு சாதனை செய்யலாம் என்று நினைத்தோ என்னவோ போரும் அமைதியும் நாவலைச் சிறப்பாக மொழிபெயர்க்கிறார். அதன் மூன்றாவது பாகத்தை வெளியிடுவதற்குள் கோவிந்தன் தன் பதிப்புத்தொழிலில் நொடித்துப்போய் (1951), பின்பு ‘நியூ சென்சுரி புக் ஹவுஸ்’ என்ற கம்யூனிஸ்ட் கட்சி புத்தக நிறுவனத்தின் மூலம் கொண்டுவந்ததாக நினைவு.

அதற்குள் மொழிபெயப்பில் இதுவரையும் இல்லாத சாதனைகளை நிகழ்த்திய அ.கி.ஜெயராமனின் தமிழ்ச்சுடர் நிலையம், ‘அன்னா கரீனா’ (1947) நாவலை சுதந்திரமடைந்த ஆண்டில், வி.சந்தானம் என்ற காங்கிரஸ்காரரை வைத்து மொழிபெயர்த்துக் கொண்டுவந்துவிட்டது. வி.சந்தானம் வடமொழியிலிருந்தும் பல மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்.

வாணீசரணன் மொழிபெயர்ப்பில் ‘புத்துயிர்ப்பு’ (1952) நாவலும் தமிழ்ச்சுடர் நிலையம் வெளியிட்டது. (பின்பகுதி சிறிது சுருக்கப்பட்ட இந்நூல் ‘புனர்ஜன்மம்’ என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. நானும் அந்தப் பெயரில்தான் படித்ததாக நினைவு).

புதுமைப்பித்தன் வருமான நிமித்தமாகவே மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்க வேண்டும். தல்ஸ்தோயை அவரது இலக்கிய நண்பர்களான கு.ப.ரா.வும் பேனாமன்னர் சொக்கலிங்கமும் வெளிக்கொண்டுவிட்டதால், இயல்பாகவே யதார்த்தப் படைப்புகளைவிட புனைவியல் சார்ந்த படைப்புகளையே மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளும் பு.பி., தாம் வெளியிட்ட ‘பளிங்குச்சிலை’, ‘முதலும் முடிவும்’ என்ற மொழிபெயர்ப்புத் தொகுதிகளில் வேறு சில ருஷ்ய எழுத்தாளர்களையே எடுத்தாண்டிருக்கிறார். அவர்களுள் செகாவ் மட்டுமே பெயர் தெரிந்தவராயிருக்கிறார். சக்தி காரியாலயம் மறைந்து ஸ்டார் பிரசுரம், தமிழ்ச்சுடர் நிலையம் போன்றவை எழுச்சிபெற்ற காலத்தில் இவை வெளிவந்துள்ளன. (இவற்றின் முதல் பதிப்பு, நாற்பதுகளின் பிற்பகுதியாக இருக்கலாம். 1952ஆம் ஆண்டில் ஸ்டார் பிரசுரத்தில் வெளியான இவற்றின் இரண்டாம் பதிப்புத் தகவலே என்னிடமுள்ளது.) தமிழ்ச்சுடர் நிலையம் குப்ரின் என்ற ருஷ்ய எழுத்தாளரின் ‘பலிபீடம்’ (1951) என்ற நாவலின் ஒரு பகுதியை பு.பி மொழிபெயர்ப்பில் வெளியிட்டது. தஸ்தாயெவ்ஸ்கி நாற்பதுகளுக்குப் பின்பே தமிழில் தெரியவந்தார். சக்தி பிரசுராலயத்தில் புதுமைப்பித்தனின் வாரிசுகளான ரகுநாதனும் கு.அழகிரிசாமியும் பணிபுரிந்தபோது, இடதுசாரியான ரகுநாதனின் பாதிப்பால் இடது அனுதாபியான அழகிரிசாமி பல ருஷ்யக் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அதிகமாக கார்க்கி போன்ற சோசலிச யதார்த்தவாத எழுத்துகளையே அவர் கவனம்கொண்டிருக்கிறார். தல்ஸ்தோய் அவருக்கும் உவப்பில்லை போலும்.

இந்தச் சமயத்தில் பல்வேறு பதிப்பகங்களும் பல்வேறு தரப்பினரும் தல்ஸ்தோயை வெளியிட ஆரம்பித்துவிட்டன. 

நியூசென்சுரி நிறுவனமும் தம் வெளியீடுகளாக பல தல்ஸ்தோய் படைப்புகளை வெளியிட்டது. தல்ஸ்தோய் நினைவுநாளில் (1971) வெளியிடப்பட்டவை இதில் குறிப்பிடத்தகுந்தவை. 

ருஷ்ய நாட்டுக்கே நியமன முறையில் சென்று சிலர் பணியாற்றியபோது முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் வழியே ஏராளமான ருஷ்ய நூல்கள் வெளிவந்தன. யாந்திரீகமான, வறட்டுத்தன மொழிபெயர்ப்புக்குச் சிறந்த உதாரணங்கள் இவை. முன்பு வெளிவந்தவைகளே மறுபடியும் மலிவு மொழிபெயர்ப்பில் மலிவு விலையில் அழகிய பதிப்பில் வெளிவந்தன. ‘புத்துயிர்ப்பு’ மட்டும் முழுமையாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. கம்யூனிசக் கொள்கைகளுக்கு ஒவ்வாதவர்கள் என்பதால் தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கியின் சிறந்த படைப்புகள் தமிழில் வெளிவரவில்லை. (ஆங்கிலத்தில் எல்லாமே வந்தன. அதன் அரசியல் தனி).

எண்பதுகளில் கோணங்கியின் ‘கல்குதிரை’ சிறுபத்திரிகை, தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழ் வெளியிட்டது. குறியியல், அமைப்பியலில் ருஷ்ய வொலசீனொவ் அல்லது பக்தின் அறுபதுகளில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டதும், தஸ்தாயெவ்ஸ்கியை அவர் (ரெபலைசின் கார்னிவல் கொண்டாட்ட மனநிலையுடன்) கொண்டாடியதும் (Problems of Dostoevsky’s Poetics by Bakhtin) எண்பதுகளில் பின்அமைப்பியம் பேசிய நாகார்ஜுனன் மீதான கோணங்கியின் அபிமானமும் கோணங்கியின் தனிப்பட்ட ஈடுபாடும் இதற்குக் காரணம். (நானும்கூட இந்த இதழுக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை மட்டம் தட்டி எழுதியிருந்த நபக்கவ்வின் கட்டுரையை மொழிபெயர்த்துத் தருவதாகக் கூறி, வழக்கம்போல் சுணங்கிவிட்டேன். பிரமிளின் தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய மாக்ஸ் ஜேக்கப்பின் மொழிபெயர்ப்புக் கவிதையைத் தந்துவிட்டுத் தப்பித்துக்கொண்டேன்) சில தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி நூல்களும் லேசர் பிரிண்ட் தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பதிப்பு எழுச்சியில் மறுபிரசுரம் கண்டன. வஉசி நூலகம் இளையபாரதி என்ற பதிப்பாளர் இந்த இருவரின் பல நூல்களையும் மறுபிரசுரம் செய்தார். ‘போரும் அமைதியும்’ சீதை பதிப்பகம் வழி மலிவாக வெளிவந்தது.

பின்பு ஜெயமோகன் தன் கட்டுரைகளிலும் நாவல் பற்றிய நூலிலும் தல்ஸ்தோயைப் பற்றி பிரச்சார யாத்திரையே மேற்கொண்டு, அவரது ஏராளமான வாசகர் கூட்டத்தை ஞான ஸ்நானமே செய்வித்துவிட்டார் எனலாம்.   

*

தமிழில் தல்ஸ்தோய் நூல்களின் பிரசுர விபரம் (1926லிருந்து ஏறத்தாழ 2000 வரை):

  1. டால்ஸ்டாய் சிறுகதைகள் -முதலாம் பாகம். கே.விஸ்வநாத ஐயர். 1926. சென்னை: கிறிஸ்டியன் லிட்டரெரி சொசைட்டி ஃபார் இந்தியா. (பக். 90).
  2. டால்ஸ்டாயின் இரண்டு யாத்திரைக்காரர்கள் (Tolstoy’s Two Pilgrims). 1926. கே.விஸ்வநாத ஐயர், பி.ஏ., எல்.டி. சென்னை: இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட். (பக். 75). 
  3. தல்ஸ்தோய் பிற்காலத்தில் சிறார்களுக்காக எழுதிய நீதிக்கதைகள், மதபோதனைக் கதைகள் (Fables and Parables) போன்றவற்றிலிருந்து முதல் புத்தகத்தில் 1. மனிதர்கள் எதனால் ஜீவிக்கிறார்கள்? 2. ஞானகுமாரன் 3. அரசன் அசர்ஹாதன் 4. மனிதர்களினும் விவேகமுள்ள சிறுமிகள் 5. தொழிலும் மனிதனும் வியாதியும் – ஆகிய கதைகள் அமைந்துள்ளன. [What Men Live By (1881), Little Girls Wiser than Men (1885), The Godson (1886), Esarhaddon, King of Assyria (1903), Work, Death, and Sickness (1903)].முதல் புத்தகத்தில் அறிமுக முன்னுரை உள்ளது. அதில் ‘ருஷ்ய மஹான் டால்ஸ்டாய் எழுதிய சிறுகதைகள், ஆங்கிலப் பயிற்சியில்லாத ஸ்திரீ புருஷர்களும் நீதிவழிகளை உணர்தற்குரிய வாலிபப் பருவத்து மாணவர்களும்… இக்கதைகளைப் படித்தும் கேட்டும், இவைகளினின்று பிரகாசிக்கும் ஞானக்கிரணங்களின் வாயிலாக நன்மார்க்க வழிகளைத் தேடித் தெரிந்து உய்யவேண்டும் என்ற உள்ளக்கருத்துடன் தமிழில் அமைத்தெழுதியதாக’ ஆசிரியர் குறித்துள்ளார். புத்தக உருப்பெற்ற 1926க்கு முன்பே இக்கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துவிட்டதாகவும் தெரிகிறது. அ.மாதவய்யாவின் பஞ்சாமிர்தம் பத்திரிகையிலும் சுதேசமித்திரன் தினசரியிலும் இதிலுள்ள கதைகளை வெளிவந்ததாகத் தகவல் உள்ளது. இரண்டாம் புத்தகத்தில் தனியாக ‘இரண்டு யாத்திரைக்காரர்கள் அல்லது இரு பெரியவர்கள்’ (Two Old Men, 1885) நீண்ட கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 30க்கும் மேற்பட்ட பக்கமுள்ள கதை அது. இந்த இரண்டாவது மொழிபெயர்ப்பு நூலில் எந்த அறிமுக உரையும் இல்லை. கதையின் தொடக்கத்தில் இருக்கவேண்டிய யோவான் (v,19-23) சுவிசேஷ மேற்கோள் (நீண்டது என்பதால்) தமிழில் இல்லை. இவை தல்ஸ்தோயே ‘கலை என்றால் என்ன?’ என்ற நூலில் வகைப்படுத்தும் போதனைக் கதைகளுள் (Universal Art, Religious Art) சில. எளிமையான சரளமான மொழிபெயர்ப்பு. அநேகமாக டால்ஸ்டாய் சிறுகதைகள் முதலாம் பாகம் என்பதற்கு அடுத்து வந்த இரண்டாம் புத்தகமாக ‘யாத்திரைக்காரர்கள்’ (பதிப்பகம் வேறாக இருந்தாலும்) இருக்கலாம். இந்த இரு நூல்களும் இணையத்தில் பிடிஎஃப்-ஆகக் கிடைக்கின்றன. எப்படியும் இவர்தான் டால்ஸ்டாய் சிறுகதைகளை முதலில் மொழிபெயர்த்தவர் என்று தெரிகிறது. சித்தூர் கவர்மெண்ட் ட்ரெயினிங் ஸ்கூல் உபாத்தியாயர். இவை பாடத்திட்டத்தின் நிமித்தம் எழுதப்பட்டதாயிருக்கலாம். பள்ளிப் பாடத்திட்டத்தில் உள்ள நூல்களை அன்று பல பதிப்பகங்கள் வேறு வேறு பதிப்புகள் வெளியிடும். காங்கிரஸ் லீக் கோரிக்கைகளும் அதிகாரி வர்க்கத்தின் தவறும். சென்னை: 1918. சுதேசமித்திரன் பவர் பிரஸ். பக். 80. / ராஜசேவையும் இந்தியரும். 1917. சென்னை: ஸ்ரீனிவாச வரதாசாரி & கோ. பக்.320. ஆகிய புத்தகங்களை மொழிபெயர்த்த கே.விசுவநாத ஐயரும் இவரும் ஒருவராகவே இருக்க வேண்டும். காந்திய அனுதாபி என்று தெரிகிறது.
  4. கதைக்கொத்து. டால்ஸ்டாய். கே.கோதண்டபாணி பிள்ளை. (1930, 1947) 1953. மதுரை: இ.எம். கோபாலகிருஷ்ண கோன். (பக். 100).
  5. ஆறடி நிலம். 1934. சென்னை: சுதந்திரச் சங்கு காரியாலயம். (பக். 30).
  6. காலி டமாரம். ஆக்கூர் அனந்தாசாரியார். (1937 இ.ப.) 1958. சென்னை: அமுத நிலையம். (பக். [116] 92). 
  7. டால்ஸ்டாய் சிறுகதைகள். ஆக்கூர் அனந்தாசாரியார். 1937 இ.ப. (சென்னை: அமுத நிலையம்). (பக். 116).
  8. இனி நாம் செய்ய வேண்டுவது யாது? (What Then Must We do?). ரா.வீழிநாதன். பிரமாதி வருடம் (1940). சென்னை : சக்தி காரியாலயம். (பக். 211).
  9. டால்ஸ்டாய் கதைகள். கு.ப.ராஜகோபாலன், ரா.விசுவநாதன். (1942, விருஷ வருடம்) 1950 (மூ.ப.). சென்னை : சக்தி காரியாலயம். (பக். 138).
  10. டால்ஸ்டாய் கதைகள் (2ஆம் பகுதி). ரா.விசுவநாதன், பி.குருசாமி. (1942) 1950. சென்னை : சக்தி காரியாலயம்.
  11. டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்’. (நெடுங்கட்டுரை). கு.ப.ராஜகோபாலன்.  
  12. படையெடுப்பு (அந்தக் காலத்திலே, ஆண்டானும் அடிமையும்) (The Raid, The Grain that was like on Egg, The Master and Man). சுப.நாராயணன். 1942. சக்தி காரியாலயம். (பக். 152). 
  13. இருளின் வலிமை. நா.வானமாமலை. 1942. சென்னை : இன்ப நிலையம். (பக். 152).
  14. ரஷியக் கதைகள். (பலர்). எம்.எல்.சபரிராஜன். 1943. சென்னை : சக்தி காரியாலயம். (பக். 297).
  15. தவறிய துறவி. ஜே.ஜான்துரைராஜ். 1948. சென்னை : ராயன். (பக். 72).
  16. ஆறு நவீனங்கள். வெ.சு.அருணன். 1946. சென்னை : ஸ்டார் பிரசுரம். (பக். 44). (அன்னா ஹெரினா).
  17. அன்னா கரினா. வி.சந்தானம். 1947. சென்னை : தமிழ்ச்சுடர் நிலையம்.  
  18. மந்திரவாதி முதலிய ரஷியக் கதைகள். டால்ஸடாய். எம்.எல்.சபரிராஜன். 1949. சென்னை : நவயுகப் பிரசுராலயம். 
  19. குடும்ப இன்பம். நா.வானமாமலை. 1951. ராமச்சந்திரபுரம் : கார்த்திகேயினி பிரசுரம்.
  20. போரும் காதலும் (வோஜ்னா இமிர்). பி.திருகூடசுந்தரம். 1951, 1952 (இரு பகுதிகள்). சென்னை : கமர்ஷியல் பிரிண்டிங் பப்ளிஷிங் ஹவுஸ் . (பக். 124).
  21. போரும் வாழ்வும். டி.எஸ்.சொக்கலிங்கம். 1951 (மூன்று பகுதிகள்). சென்னை: சக்தி காரியாலயம். (பக். 750+764+715).  
  22. புத்துயிர் (புனர்ஜென்மம்). வாணீசரணன். 1952. சென்னை : தமிழ்ச்சுடர் நிலையம். (பக். 436).
  23. மோகினி (The Devil). ஆர்.வெங்கட்ராமன். 1952. சென்னை : கற்பக நிலையம். (பக். 112).
  24. கதைப்புதையல். மொ.அ.துரைஅரங்கசாமி. 1956. சென்னை. (பக். 292).
  25. டால்ஸ்டாய் கதைகள். வல்லிக்கண்ணன். 1956. சென்னை : அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி. (பக். 158). (இரண்டு பேர் : 127 பக்கக் குறுநாவல், இரு சிறுகதைகள்)
  26. வாழ்க்கை. ப.ராமஸ்வாமி. (1956) 1961. சென்னை : பழநியப்பா பிரதர்ஸ். (பக். 165).
  27. இரண்டு பெரியவர்கள். அநாமதேயம். 1958. சென்னை : அமுத நிலையம். (பக். 87).
  28. வாழ்க்கையும் கலையும் அல்லது கலையும் வாழ்வும். டி.சி.ராமசாமி. 1958. (கோவை : மல்லிகை பதிப்பகம்). (பக். 243).
  29. ‘அந்தக் காலம்’. லியோ டால்ஸ்டாய். தீபம் (17 ரஷ்யக் கதைகள் தொகுதி). 1958. சென்னை : சாந்தி நிலையம். (பக். 304). 
  30. மலைநாட்டுக் காதலி. எஸ். சங்கரன். 1958. சென்னை : தேனருவி பதிப்பகம். (பக். 256).
  31. உலகத்து சிறந்த நாவல்கள். க.நா.சுப்ரமணியம். 1960. சென்னை : பாரதி பதிப்பகம். (நிகோலை கோகால் – டாரஸ் புல்பா, டால்ஸ்டாய் – அன்னா கரீனீனா, பெடார் டாஸ்டாவஸ்கி – கரமஸாவ் பிரதர்ஸ்).
  32. நீதிபதி ஐலிக். வி.எஸ்.வெங்கடேசன். 1962. சென்னை : பாரதி பதிப்பகம். (பக். 124).
  33. புனித வாழ்க்கை (5 குறுநாவல்கள்). வி.எஸ்.வெங்கடேசன். 1962. பெண்ணாடகம் : புதுமைப் பிரசுராலயம். (பக். 258).
  34. நீதிக்கதைகள் (ராஸ்காஜீ). ப.ராமஸ்வாமி. 1963. சென்னை : கலை நிலையம். (பக். 90).
  35. டால்ஸ்டாய் கட்டுரைகள். ராமநாதன் செட்டியார். 1963 (நா.ப.). சென்னை : இன்ப நிலையம். (பக்.164).
  36. ஒளி வழியே (While there was a Light  Walk in the Light). ப.ராமஸ்வாமி. 1964. சென்னை : குயிலன் பதிப்பகம். (பக். 127).
  37. வாலிபச் சீமான். 1965. சென்னை : விசாலாட்சி பதிப்பகம். (பக். 148).   
  38. துறவியின் சோதனை. ப.ராமஸ்வாமி. 1965. சென்னை : பழநியப்பா பிரதர்ஸ். (பக். 124).
  39. ராணுவ வாழ்க்கை. வி.எஸ்.வெங்கடேசன். 1966. சென்னை : காவிரிப் புத்தக நிலையம். (பக். 247).
  40. பாவத்தின் விதை. கா.அப்பாத்துரை. 1967 (இ.ப.). சிதம்பரம் : மணிவாசகர் நூலகம். (பக். 28).
  41. டால்ஸ்டாயைப் பற்றிய கட்டுரைகள். லெனின். ஆர்.கே.பாண்டுரங்கள். 1968. சென்னை : என்.சி.பி.கெச். (பக். 60).
  42. டால்ஸ்டாயின் “குழந்தைகள் அறிவு”. தி.ஜ.ர. 1970 (இ.ப.). சென்னை : வானதி பதிப்பகம்.
  43. மோகனராகம்.  தா.பாண்டியன். 1971. சென்னை : என்.சி.பி.கெச். (பக். 160).
  44. நீதிபதியின் மரணம். கே.ராமநாதன். 1971. சென்னை : என்.சி.பி.கெச். (பக். 70).
  45. நடனத்திற்குப் பின். கார்த்தி. 1971. சென்னை : என்.சி.பி.கெச். (பக். 95).
  46. துறவியின் மோகம். 1971. சென்னை : என்.சி.பி.கெச்.  
  47. தந்தையும் மகனும். சென்னை : என்.சி.பி.கெச்.   
  48. லேவ் தல்ஸ்தோய் : சிறுகதைகளும் குறுநாவல்களும். 1984. நா.தர்மராஜன். மாஸ்கோ :  ராதுகா பதிப்பகம். (பக். 902)
  49. புத்துயிர்ப்பு. மாஸ்கோ :  ராதுகா பதிப்பகம். 
  50. கஸாக்குகள். மாஸ்கோ :  ராதுகா பதிப்பகம்.  
  51. குழந்தைகளுக்கான சிறுகதைகள். டால்ஸ்டாய். ப.சோமசுந்தரம். சென்னை : என்.சி.பி.கெச்.  
  52. புத்துணர்ச்சி (வோஸ்கிரேசினே). வி.என்.ராமஸ்வாமி. சென்னை : ஸ்ரீமகள் கம்பெனி. (பக்.142).
  53. இளம் பிராயத்திலே (டெஸ்டனோ ஓட்ரோ செஸ்ட்போ ஜுனோஸ்ட்). கார்த்தி. சென்னை  :  என்.சி.பி.கெச். (பக். 408). 
  54. அன்னா கரீனினா. நா.தர்மராஜன். சென்னை : என்.சி.பி.கெச்.

(தற்போது பதிப்பில் உள்ளவையும் புதியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை) 

1 comment

சாதிக் December 22, 2020 - 2:22 pm

முக்கியமான கட்டுரை

Comments are closed.