மிஷல் வெய்ல்பெக் (Michel Houellebecq) தற்கால ஃபிரெஞ்சு நாவலாசிரியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர். அவரை மகத்தான ஃபிரெஞ்சு நாவலாசிரியர் எனக் கருதுகிறவர்களும் உண்டு. அது உண்மையா என்பதற்கு பின்னால் வருவோம். வெய்ல்பெக்கின் Submission நாவல் பற்றி ஸிஸெக் ஓரிடத்தில் குறிப்பிட, அது ஏற்படுத்திய ஆர்வத்தில் நான் உடனே வாங்கிப் படித்தேன். இதையடுத்து வெய்ல்பெக்கின் வேறு சில நாவல்களையும் படித்தேன். இந்தக் குறிப்பை நான் எழுதுவதற்குக் காரணம் வெய்ல்பெக் எழுதுவது போன்ற நாவல்களின் சாத்தியங்களை நாம் தமிழில் பரிசீலிப்பது இல்லை எனச் சுட்டத்தான்.
பொதுவாக தமிழ்ப் புனைவுகள் சில பத்தாண்டுகளுக்கோ ஒரு நூற்றாண்டுக்கோ பின்னால் சென்று ஒரு கதையை மீளுருவாக்கம் பண்ணும் (ஈழப்போர் / புலம்பெயர் இலக்கியத்தில்கூட அநேகமாய் இதுவே நடந்தது). அது வரலாறாகவோ சுய அனுபவக் கதையாகவோ இருக்கும். சமகாலத்தை நாம் எழுதும் போதுகூட அது தனிமனித அல்லல்களைத் தாண்டி சமூக நகர்வுகளை, அரசியல் கலாச்சார சிடுக்குகளைப் பரிசீலிப்பதில்லை என்பது பரவலாக வைக்கப்படும் புகார். இது ஏன்?
ஜெயமோகனைப் போன்றோர் சமகாலத்தை இலக்கியப் படைப்பாக்க முயலவே கூடாது என்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், அவர்கள் நம்புகிற பத்தொன்பதாம் நூற்றாண்டின் தாராள மானுட நோக்குவாதம் (Liberal Humanism. கூடவே Formalism) எனும் விமர்சனப் பள்ளியில் இருந்து வருகிறது. டெரி ஈகிள்டன், டி.எஸ்.எலியட் போன்றோர் இலக்கிய வடிவத்துக்கு, அதன் மரபுக்கு, கலாச்சாரத் தொன்மங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர். இதன்படி ஏற்கனவே எழுதப்பட்ட மகத்தான இலக்கியப் படிமங்களின் சாயலில்தான் அடுத்தடுத்து சிறந்த படைப்புகள் தோன்ற முடியும். ஒரு சிந்தனை அல்லது உணர்வு மக்கள் மனத்தில் ஒரு உருவகமாகப் படிந்து பின்னர் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட படைப்புகள் மூலம் ஆற்றல் மிக்க குறியீடுகளாகவோ படிமங்களாகவோ ஆகும். உ.தா. தமிழ் இலக்கியத்தைவிட ஈழப்போர் இலக்கியத்தில் “மண்” என்பது ஒரு தீவிரமான குறியீடாக – அது பிளவுபட்ட மண், குருதி சிந்தின மண், இழந்த மண் இப்படி பலவாக இருக்கலாம். அது பெண்ணுடலாகவும் உள்ளது.
ஒருவர் ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அங்குள்ள சாலைகள், மால்களைவிட ஏதோவொரு மண்ணைப் பற்றி, தனக்கான பூமியைப் பற்றி எழுதும் போதே அதுவொரு ஆழமான தாக்கத்தை வாசகர்களிடம் ஏற்படுத்துகிறது என இந்த விமர்சகர்கள் நம்புகிறார்கள். தங்களது இந்தப் பார்வையை நியாயப்படுத்த கார்ல் யுங்கின் கூட்டு நனவிலியையும் மூலப்படிமத்தையும் பயன்படுத்துவார்கள். இதனாலேயே சமகாலத்தை எழுதலாகாது, எழுத்தாளன் செய்தித்தாள் படிப்பது, அரசியல் சமூக விவாதங்களில் காலம் கழிப்பது வீண் எனும் நிலைப்பாட்டுக்கு வந்துசேர்கிறார்கள். (ஏனென்றால் சமகால மொழியில் மூலப்படிமம் தோன்றாது என நினைக்கிறார்கள்) என்னைப் பொறுத்தமட்டில் இதுவொரு அபத்தமான கருதுகோள். (ஏன் என மற்றொரு கட்டுரையில் எழுதுகிறேன்)
தமிழில் சமகால இலக்கியமும் உள்ளது. இமையத்தின் “வாழ்க வாழ்க”, “பெத்தவன்” போன்ற பல படைப்புகள் சமகாலத்துடன் தீவிரமாக உரையாடுகின்றன. விநாயக முருகனின் “ராஜீவ் காந்தி சாலை” போன்ற வேறு சில நாவல்களும் (இ.பா.வின் “குருதிப்புனல்” ஒரு தட்டையான நாவல் என்றாலும்) நினைவுக்கு வருகின்றன. ஆனால் தமிழில் இதுவொரு மிகச்சிறிய வட்டமே. நினைவேக்கக் கதைகள், குடும்பக் கதைகள் எனும் பெயரில் சாதி வரலாறுகள், தனிமனிதன் சிக்கல்களைப் பேசும் கதைகளே இங்கு அதிகமாக எழுதப்படுகின்றன. இன்று நீங்கள் டிக் டாக், யூ டியூப் போன்ற தளங்களில் காண்கிற வாழ்நிலை மாற்றம், சிதைவான கேளிக்கை உலகம், முரண்பட்ட மனநிலைகள் நம் இலக்கியத்தில் வெளிப்படுவதில்லை. இதையொரு குறையாக அல்ல, ஒரு பதிவாகவே முன்வைக்கிறேன்.
இதற்கு நேர்மாறாக, மேற்கில் சமகால உலகை உடனுக்குடன் பதிவுசெய்யும் போக்கும் வருங்காலத்தை கற்பனை செய்யும் futuristic போக்கும் நீண்ட காலமாகவே காணப்படுகிறது. ஆர்வலின் “விலங்குப் பண்ணை”, “1984”, எலிசனின் “Invisible Man”, ஹக்ஸிலியின் “Brave New World”, ஜோசப் ஹெல்லரின் “Catch 22” ஆகியவை நல்ல உதாரணங்கள். அதே போல கூட்ஸியின் நாவல்கள் இப்போதைய தென்னாப்பிரிக்க அரசியல் சமூக நிலையின் உள்ளார்ந்த முரண்களை ஒரு வெள்ளையின ஆணின் பார்வையில் இருந்து எந்தச் சமரசமும் பாவனையும் இல்லாமல் முன்வைப்பவை. அதற்குக் காரணம் ஐரோப்பாவில் மத அமைப்புகள், மரபின் பிடிகள் கழன்று போய் சிலபல நூற்றாண்டுகள் ஆகின்றன. அதனால் அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், நவ தாராளவாத நகரமயமாக்கலின் விளைவுகளை ஐரோப்பியர்கள் தமது மரபான சிந்தனைகளுடன் முரண்பட வைத்து, அந்த மோதலின், கொந்தளிப்பின் விளைவாக புதிய தத்துவ, இலக்கியப் படைப்புகளை அங்கு தோன்றச் செய்கிறார்கள். ஆசிய சிந்தனைப் புலத்தில், இலக்கியத்தில் இது நிகழாதபடி மரபின், மதத்தின், சாதி, பாலினப் படிநிலையின் பிடி வலுவாக இருக்கிறது. நமது சமூகங்கள் நகரத்தில் உடலையும் கிராமத்தில் மனதையும் வைத்திருக்கின்றன. இதனால் சமகாலத்தை சிந்திப்பது, எழுதுவது ஐரோப்பியர்களுக்கு இயல்பாக இருக்கிறது. சமகால அரசியல், கலாச்சார, அறிவியல் சூழலைப் பரிசீலிக்கும் இலக்கியங்களும் அங்கு அதிகமாகத் தோன்றுகின்றன. ஆனால் நமக்கு அது குறித்த ஒவ்வாமை உள்ளது.
இந்த விரிவான பின்னணியில் வெய்ல்பெக்கின் ‘Submission’ போன்ற நாவல்களை விவாதிப்பது உதவும். ஏனென்றால் அந்நாவல் ஒரு கற்பனையான எதிர்கால ஃபிரான்ஸில் நடக்கிறது. இஸ்லாமியர், ஆசியர்கள், கறுப்பர்கள் தம் நிலத்தை ஆக்கிரமித்து, அதிகாரத்தைக் கைப்பற்றி, தம்மைச் சிறுபான்மை ஆக்கிவிடுவார்கள் எனும் அச்சம் ஐரோப்பிய சமூகங்களின் அடிமனத்தில் உள்ளது. இதை ‘Great Replacement Theory‘ என்கிறார்கள் (ஆர்.எஸ்.எஸ் இதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அங்கிருந்து கடன்வாங்கி இங்குள்ள இந்து மக்களிடம் இஸ்லாமியர் குறித்த அச்சத்தை விதைத்தார்கள்). 2015இல் வெளியான இந்நாவலில் 2022ஆம் ஆண்டில் ஃபிரான்ஸில் நிகழும் தேர்தல் கற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் களத்தில் இஸ்லாமிய சமூகம் ஒரு வலுவான கட்சியை வைத்திருக்கிறது. அதற்கு இடதுசாரிக் கட்சி உள்ளிட்ட சிலர் ஆதரவளிக்கிறார்கள். தேசியக் கட்சி அதற்கு எதிராக நிற்கிறது. Ben Abbes எனும் வசீகரமான இஸ்லாமியத் தலைவரை முன்வைத்து நடக்கும் பிரச்சாரம் வெற்றி பெற்று இஸ்லாமியர் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். இதனால் சமூகத்தில் ஏற்படும் கலாச்சார மாற்றங்களை Francois எனும் வயதான வெள்ளையினப் பேராசிரியரின் பார்வையில் இருந்து சித்தரிக்கிறார் வெய்ல்பெக். அத்துடன் Francois-இன் தனிப்பட்ட நெருக்கடியான வாழ்க்கை, எதிர்காலம் மீதான அவநம்பிக்கை, திசையின்மை, குழப்பங்கள், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு இந்த அரசியல் சமூக மாற்றங்கள் எப்படித் தீர்வளிக்கின்றன என்று சொல்லி நாவலை முடிக்கிறார் வெய்ல்பெக்.
இந்த நாவல் பல இலட்சம் பிரதிகள் விற்று பெரும் வணிக வெற்றியைப் பெற்றது. அத்துடன், இதில் தென்படும் இஸ்லாமிய வெறுப்பு, தேய்வழக்கான நோக்கு, ஆண்-மைய வாதம், பிற்போக்குச் சிந்தனை ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. நாவலின் முதல் பாதியில் சராசரி ஐரோப்பியருக்கு இஸ்லாமிய ஆக்கிரமிப்பு குறித்துள்ள அச்சம், தேய்வழக்கு சிந்தனைகள் வெளிப்பட்டால், பிற்பகுதியிலோ இதே இஸ்லாமிய ஆதிக்கத்தின் ஒரு நேர்மறையான (அதேநேரம் தட்டையான தேய்வழக்கான) சித்திரமும் உள்ளது. இந்த நாவலின் சுவாரஸ்யம் என்பது இந்த வெளிப்படையான தன்மைதான்.
ஐரோப்பாவில் நகரமயமாக்கலின், தாராளவாதத்தின் தாக்கம் வெகுமுன்பே உணரப்பட்டதனால் அங்கு குடும்ப அமைப்பு சிதைந்து ஒருவித அவநம்பிக்கை, சுயமோக, அனார்க்கிச கலாச்சாரம் ஏற்பட்டது எனும் விமர்சனம் நீண்டகாலமாய் உள்ளது. இதற்கு கிறித்தவத்தை ஒரு தத்துவ அடிப்படையாக வைத்து விமர்சித்தவர் நீட்ஷே. ‘Fordism‘ எனச் சொல்லப்படும் பெரு உற்பத்தி சார்ந்த எந்திரமயமாக்கல் வாழ்வில், இருத்தலில் / உளவாதலில் ஏற்படுத்தும் பிளவுண்ட தன்மையை ஹைடெக்கர் விமர்சித்து தன் தத்துவத்தை உருவாக்கினார். இந்தப் பின்னணியில் இருந்தே தன் நாவலை ஆரம்பிக்கும் வெய்ல்பெக்கின் நாயகன் கத்தோலிக்க கிறித்தவ மீட்புவாதத்தில் தனக்கு மீட்சி கிடைக்குமா எனத் தேடுகிறான். ஆனால் அது அங்கே வெறுமையாக மட்டுமே இருக்கிறது. அப்போதுதான் இஸ்லாமிய ஆதிக்க அரசியல் ஃபிரான்ஸில் நடைமுறைக்கு, அதிகாரத்துக்கு வருகிறது.
சவூதி அரேபிப வணிகப் பெருமுதலாளிகள் பெரும் முதலீட்டையும், அதன்வழி தங்களது கலாச்சார, மத இறக்குமதியையும் செய்கிறார்கள். ஃபிரான்ஸ் தலைகீழாக உருமாறுகிறது. கிறித்தவர் என்ற காரணத்துக்காக பல்கலைக்கழகத்தில் Francois-க்கு கட்டாய ஓய்வு கொடுக்கிறார்கள். இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்கு உடனடியாய் பதவி உயர்வுகள் கிடைக்கின்றன. பெண்கள் புர்கா அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பலதார மணம் சட்டப்பூர்வமாகிறது. Francois-ஐ பின்னாளில் சந்திக்கும் பல்கலைக்கழக முக்கிய நிர்வாகி அவரை இஸ்லாத்துக்கு மாறும்படி ஊக்கப்படுத்துகிறார். அதன் பிரதிபலன்களாக அதிக சம்பளம், நிறைய மனைவிகள், உறுதியான குடும்ப அமைப்பு, ஆண்-மைய சமூக அமைப்பு ஆகியவை கிடைக்கும் என Francois-க்குத் தோன்றுகிறது. அவர் மதம் மாறுவதற்கு உடன்படுவதுடன், இனிமேல் ஐரோப்பிய சமூகங்களுக்கு இதுவே சிறந்த தீர்வாக இருக்கும் எனப் பரிந்துரைப்பதுடன் நாவல் முடிகிறது.
இந்த விஷயங்களை பெரிய கவனச்சிதறல்கள் இன்றி கோர்வையாக, சரளமாக, நகைச்சுவையாக, நகைமுரணுடன் விவாதிப்பதே இந்நாவலின் சிறப்பு. Francois-இன் இந்த மதமாற்ற முடிவும்கூட மேலோட்டமானதே. அடுத்து ஒரு அரசியல் மாற்றம் வந்தால் அவர் திரும்பவும் கத்தோலிக்க மதத்துக்குத் தாவி, இஸ்லாமிய விரோதியாகிவிட ரொம்ப யோசிக்க மாட்டார் என்பதையும் இந்நாவல் குறிப்புணர்த்துகிறது. அதுவும் நன்கு படித்த எழுத்தாளரான ஒரு பேராசிரியர் இப்படி மேம்போக்காக சிந்திக்கும் அளவிலேயே கலாச்சாரம் இருக்கிறது எனக் காட்டுவதே இந்நாவலின் உச்ச பகடி. வெய்ல்பெக்கின் மொழிநடை சற்றே ஹாருகி முரகாமி, ஆல்பர்ட் காமு போன்றோரை நினைவுபடுத்துவது. அன்றாடங்களின் சாதாரணத்துவத்தை முக்கியப்படுத்துவது. Francois ஒரு புராதன கத்தோலிக்க மடாலயத்துக்கு செல்லும்போது அவர் ஒரு மகத்தான மெய்யியல் அனுபவத்தை அங்கு நாடினாலும் அவரது மனம் அங்குள்ள குளிர், புகைபிடிக்க வசதி இல்லாத அவலம், அங்கு கிடைக்கும் உணவு ஆகியவற்றால்தான் ஆக்கிரமிக்கப்படுகிறது.
அவர் “இஸ்லாம் மீதான கேள்விகள்” எனும் பிரசித்தி பெற்ற மதபோதக நூலைப் படிக்கும் போது ‘பலதார மணம்’ எனும் அத்தியாயத்துக்கே முதலில் செல்கிறார். தன் காதலியை நினைவுகூறும் போது அவளது முகம் அல்ல, பின்பகுதியே தனது மனத்தில் முதலில் தோன்றுகிறது என்பதை அவர் மறைப்பதில்லை. தத்துவம், இலக்கியம் எனச் சிந்தித்து உரையாடினாலும் அவரது மன இயக்கத்தை இவை பாதிப்பதில்லை – செக்ஸ், உணவு, பொருளியல் வசதிகள் போன்றவைதான் தனக்கு முக்கியம் எனக் காட்டுகிறார். இந்த முரண் சுவாரஸ்யமாக இருக்கிறது. இன்னொரு வசீகரம் இதில் இழையோடும் நகைமுரண். இது தென்னாப்பிரிக்க நாவலாசிரியர் கூட்ஸியின் Disgrace நாவலை நினைவுபடுத்துகிறது. ஆனால் மனித மனத்தின் சற்றும் எதிர்பார்க்க முடியாத முன்னுக்குப்பின் முரணான சிந்தனையை, உணர்வுச் சிக்கல்களை கூட்ஸி அளவுக்கு வெய்ல்பெக்கால் சித்தரிக்க முடிவதில்லை என்பதே இந்நாவலின் வீழ்ச்சிக்கு காரணம் எனத் தோன்றுகிறது.
இஸ்லாம் அரச மதமானால் எல்லா ஆண்களுக்கும் மூன்று நான்கு இளம் மனைவிகள் கிடைப்பார்கள், குடும்ப அமைப்பு வலுப்பெறும், ஆண் சமூகத்துக்கு உளவியல் சிதைவோ அவநம்பிக்கையோ இராது என இதன் கதைசொல்லி பத்தாம்பசலியாக நம்பிவிடுகிறார். இஸ்லாமிய சமூகங்களும் வேறு சமூகங்களின் அளவுக்கு நவீன சமூகத்தின் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்பவைதாம். எல்லா இஸ்லாமிய மக்களும் பலதார மணம் பண்ணுவதில்லை என நாம் அறிவோம். இந்த மிகை, பத்தாம்பசலித்தனம், எளிமைப்படுத்தல் இந்நாவலின் பிற்பகுதியை சிக்கல்களோ ஊடுபாவல்களோ இன்றி மிகவும் தட்டையாக்கிவிடுகிறது.
சமகால நகர்மய வாழ்வின் நெருக்கடிகளைப் பேசும் நாவல்களைப் படிக்க விரும்புவோருக்கு இந்நாவலைப் பரிந்துரைக்கிறேன். இதன் 320 பக்கங்களை நீங்கள் ஒன்றிரண்டு நாட்களில் வாசித்துவிடும் அளவுக்கு சரளமான மொழிநடை. ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிக்கிறேன் – மிஷல் வெய்ல்பெக் நிச்சயமாய் மகத்தான எழுத்தாளர் அல்ல. ஆனாலும் சமகாலத்தை எழுதுவதன் சவால்களை எதிர்கொண்டமைக்காக அவரைப் பாராட்டலாம். ஏனென்றால் அரை நூற்றாண்டுக்கு அல்லது சில பத்தாண்டுகளுக்குப் பின் சென்று எழுதும்போது நாம் வரலாறாகிவிட்ட ஒன்றின்மீது மற்றொரு வரலாற்றுக் கதையாடலை கட்டியெழுப்புகிறோம். அது எந்தளவுக்கு உண்மை என்றுதான் மறுப்பு வரும். ஆனால், ‘இதை நீ எப்படி எழுதலாம்?’ எனக் கேட்க மாட்டார்கள். அதனாலேயே, சமகாலத்தின் சாட்சியாக நின்று ஒன்றைச் சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். உங்களைத் தவறாகவும் தலைகீழாகவும் புரிந்துகொண்டு சாடுவார்கள், தூற்றுவார்கள். உங்கள் வழக்குக்கு நீங்கள் மட்டுமே சாட்சியாக இருப்பதைப் போன்றது இது.
மேலும் கடந்த காலத்தை எழுதும்போது நாம் ஓர் இடைவெளியை நம் இருப்புக்கும் புனைவுக்கும் இடையில் உண்டு பண்ணுகிறோம். உ.தா. “பெத்தவன்” கதையை சற்றே மாற்றி அது அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்ததாக இமையம் சித்தரித்திருந்தால் அதை நாம் சுலபத்தில் கடந்திருப்போம். அது நம் மனசாட்சியை உலுக்கியிருக்காது. அதே போல, கடந்த காலம் குறித்த ஏக்கமும் மயக்கமும் சிலாகிப்பும் இத்தகைய படைப்புகள் மீது ஏற்படுகிறது. இது ஒரு கற்பனாவாதத்தை சிலநேரம் தோற்றுவிக்கிறது. ஜெயமோகனின் “காடு”, “வெள்ளை யானை” போன்றவை என்னதான் நுட்பமான படைப்புகளாக இருந்தாலும் மேற்சொன்ன நேர்மறை / எதிர்மறை கற்பனாவாத சித்தரிப்புகளுக்கு உதாரணங்களாகவும் உள்ளன. ஆனால், “Submission”, “Disgrace” போன்ற சமகால அரசியல், சமூகப் பிரச்சனைகளைப் பேசும் புனைவுகள் நம்மை ஒரு சமூகமாக நமது அபத்தங்களையும் உள்முரண்களையும் ஒரு கண்ணாடியாகக் காட்டுகின்றன. அவை காட்டும் சித்திரத்தை நாம் ஏற்றுக்கொண்டோ மறுத்தோ ஆக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்குகின்றன. வரலாறு எனும் துடைப்பத்தால் காலத்துக்கு வெகுபின்னால் பெருக்கித் தள்ளி யதார்த்தத்தில் இருந்து தப்பிக்க அவை அனுமதிப்பதில்லை. அதனாலேயே தனி முக்கியத்துவம் பெறுகின்றன.