பச்சைப்பட்டு

4 comments

“மக்ளே, முகூர்த்தப்பட்டு பச்சக் கலர்தான?”

“ஆமா பெரிப்பா.”

“செரி, அதையும் ஒனக்க பட்டு வேட்டி சட்டையையும் ஒரு தாம்பாளத்துல எடுக்கணும், மறந்துறாத.”

“செரி, பெரிப்பா.”

“சம்பங்கியும் ரோசும் நல்லா கனமா போட்டு கெட்டச் சொல்லு, என்னா? மொத்தம் ரெண்டு பெரிய மாலை, நாலடியோ அஞ்சடியோ இருக்கமாரி பாத்துக்கோ. பொறவு, பிச்சிப்பூ சரம் ரெண்டு பந்து, கிரேந்தி மாலை சின்னது ஒரு அஞ்சு, உதிரிப்பூ நெறைய வாங்கிக்கோ.”

குதப்பிய வெற்றிலையைத் துப்புவதற்காக எழுந்து சென்றார் பெரியப்பா. 

ஆச்சியின் குழி வாசலில் சென்று ஒரு சிறப்பு செய்துவிட்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. ஆச்சியின் குழிதான் எங்கள் குலசாமி குடியிருக்கும் கோவில். பக்கத்திலேயே மாடனும் பேச்சியும் உண்டு. பிறகு, சில வாதைகள். ஒவ்வொன்றும் சிறு சிறு குத்துக் கற்களாக நிறுவப்பட்டிருக்கும். பெரியப்பாதான் பூசாரியும் சாமிகொண்டாடியும். ஒவ்வொரு குத்துக்கல்லையும் பார்த்து ஒவ்வொரு பெயராக அழைத்து உரையாடி சுத்தம் செய்து அவர்களை பூசைக்குத் தயார்செய்து கொண்டிருப்பார். கண்கள் நீங்கலாக முகத்தை முற்றிலும் மறைத்து வேறு யாரையும் பார்க்காமல் பேசாமல் எல்லாவற்றையும் சைகையில் கடத்திக்கொண்டிருப்பார். பூசை முடிவில் ஆராசனை வந்து பல்வேறு உருவங்களாக உருமாறி தரையில் உருண்டு, துள்ளிக் குதித்து, நாக்கைத் துருத்தியும் மடக்கிக் கடித்தும், ஊளையிட்டும் பின் இறுதியில் கண்கள் நிலைகுத்தி நிற்க எல்லோருக்கும் முகத்தில் தண்ணீர் அடித்து திருநீறு பூசிவிட்டு, ஆச்சியின் குழியின் பின்புறமுள்ள கிணற்றில் சென்று குதித்து எழுந்துவருவார். மற்ற நேரங்களில் காணக் கிடைக்கின்ற புன்னகை மாறா முகம் பூசை நாட்களில் மட்டும் காணாமல் போய்விடும். ஒரு கம்பீரம், கௌரவம். திமிராக நெஞ்சை நிமிர்த்தித் திரிவார். 

ஆச்சியின் கதையை ஒவ்வொரு முறை பெரியப்பா சொல்லும்போதும் அப்போதுதான் புதிதாகக் கேட்பதைப் போல இருக்கும். என்னவொரு வாழ்க்கை! திரண்டதும் திருமணம். முரட்டுத் தாத்தா தொழிலென்று என்ன செய்தாரோ என்னமோ? என்ன அவசரமோ? ஊருக்குக் கிழக்காக கிடக்கும் பேச்சிக்குளக் கரையில் இரத்த வாந்தி எடுத்துக் கிடந்தாராம். என்ன நடந்தது, எப்படிப் போனார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. தனியொருத்தியாக பெரியப்பாவையும், அப்பாவையும், மூன்று அத்தைமாரையும் வளர்த்து நிமிரச்செய்து எங்கள் குலச்சாமியாகியிருக்கிறாள் ஆச்சி. நானெல்லாம் ஆச்சியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. எங்கள் யார் வீட்டிலும் ஒரு புகைப்படமும் கிடையாது. ஆச்சி என்றால் எங்கள் பிறையில் இருக்கும் ஒரு எலுமிச்சையளவு சிவப்புப் பொட்டுதான். 

“பொறவு, சைக்கிள் பிராண்ட் பத்தி ஒரு ரெண்டு பாக்கெட்டு, சந்தனம், குங்குமம், கந்தவிலாஸ் திருநீறு, களபம், எல்லாம் குழி பூசைக்குன்னு சொன்னா அவனே தந்துருவான். ஆங்… மறந்துட்டேன் பாரு… கொஞ்சம் போல தொளசியும் பச்சயும் வாங்கிக்கோ…”

“செரி பெரிப்பா. அப்ப நா போய்ட்டு வந்துர்றேன். மாமாட்ட ஒரு வார்த்த சொல்லு பெரிப்பா. நா கூப்ட்டாச்சு. வர மாட்டேன்னு நெலையா நிக்கான்.”

பெரியப்பா அடுத்த வெற்றிலையை மடித்து வாய்க்குள் திணித்தவாறு தலையை ஆட்டினார். 

“அப்டியே போயி பத்திரிக்க காப்பி வாங்கிட்டு வந்துறவா பெரிப்பா? ஆச்சிக்கி வைக்கணும்லா?”

ஒரு துளி புகையிலையை கூடுதலாக கன்னத்திற்குள் தள்ளிவிட்டு, “பறக்கல்லா செய்யான்? கல்யாண நாளு வர கொஞ்சம் நிதானமா நடக்கணும், பாத்துக்கோ டே. சும்மா பைக்ல வெரட்டிட்டு கெடக்கப்படாது, என்னா?” என்று முறைத்தார் பெரியப்பா. 

அப்பாவும் அதே பேச்சிக்குளக் கரையில் இரத்த வாந்தி எடுத்துக் கிடந்தபோது பறக்கப் பறக்க ஓடி நான்தான் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்றேன். அப்பாவிற்கு போதமிருந்தது. என்னவெல்லாமோ புலம்பிக்கொண்டிருந்தார். ஏதோ பழங்காலத் தமிழ் மாதிரி இருந்தது. ஒன்றும் புரியாமலிருந்தாலும் அவர் புலம்பியதைக் கேட்கும்போது என்னையறியாமல் என்னுடல் சிலிர்த்துக்கொண்டிருந்தது. அப்பாவின் இறுதிச் சடங்கு முடிந்து பதினாறு நாள் காரியம் செய்யும்வரை சிலிர்ப்பு அடங்கவில்லை. பெரியப்பாவிடமோ வேறு யாரிடமோ எதற்கும் எந்த விளக்கமும் இல்லை.

என்னதான் முகத்திற்கு முன் சிரிக்கப் பேசி மரியாதையாக இருந்தாலும், எங்கள் குடும்பத்தை இந்த ஊரில் ஒருவிதமாகத்தான் பார்க்கிறார்கள். நேரில் சொல்வதற்கோ, இல்லை அவர்களுக்குள் சொல்லிக் கொள்ளவோ தைரியம் இல்லாததைப் போல ஊரின் ஒவ்வொரு தனி மனிதனும் சொல்லித் திரியும் ஒரு இரகசியம் போல. என் நண்பர்கள் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும் என்னவாக இருக்கும் என்கிற ஆர்வம் எப்போதும் அடங்கவில்லை. யாரிடம்தான் பதில் கிடைக்கும் பார்க்கலாம் என்று நானும் காத்திருந்தேன். 

அப்பாவைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருவர் என முதல் இரண்டு மாமாக்களும் இறந்துபோக, மொத்தக் குடும்பமும் சோகத்திலும் குழப்பத்திலும் இருண்டு போனது. ஆனால், என் அத்தைகளுக்கு ஏதோ தெரிந்திருந்தது. மாமாக்களின் இறப்பை மிக இயல்பாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. முறைப்படி எல்லா சடங்குகளையும் கண்ணீரோடு செய்துமுடித்தாலும் அவர்கள் அடுத்தது என்ன என்பதில் தீர்க்கமாக இருந்தார்கள். 

“ஹலோ… என்ன மாமா?”

“எங்கடே இருக்க? அந்த ப்ளெக்ஸ் என்னாச்சின்னு கேட்டியா?”

“போ மாமா, ஒன்ட்ட எத்தன தடவ சொன்னேன், ப்ளெக்ஸ்லாம் வேண்டான்னு. எல்லாவனும் என்ன ஓட்டப் போறான்.”

“எவன் என்ன சொல்லுகான்னு நாம் பாக்கேன். அந்த பேக்ரவுண்ட் மேட்டர மறந்துறாத, பாத்துக்கோ.”

“செரி, செரி, ஒன்னக் கொண்டு கழியல்ல மாமா. அதெல்லாம் செரி, மரியாதயா குழி பூசைக்கு வந்துரு பாத்துக்கோ. சும்மா எதாஞ் சொல்லிட்டுக் கெடக்காத, பொறவு செம கடுப்பாயிருவேன்.”

“பாப்போம், பாப்போம்.”

“மாமா, வெளயாடாத. பொறவு நான் தாலிய கையால தொட மாட்டேம் பாத்துக்கோ. நீ பூசைக்கு வந்தாதான் நானும் போவேன்.”

“செரி, செரி. ஒங்கக்கா இங்கருந்து மொறைக்க ஆரம்பிச்சாச்சு. நீ வண்டி ஓட்டிட்டே பேசாத, நா வைக்கேன்.” 

உள்ளூரிலேயே மாப்பிள்ளை பார்க்கலாம் என்று காத்திருந்து ஒன்றும் அமையாத போதே எனக்கு உறைத்திருக்க வேண்டும். கடைசியில் அக்காவை என் தாய் மாமாவிற்கே திருமணம் செய்து வைத்தோம். அக்காவும் மிக மகிழ்ச்சியாக இருந்தாள். நான் அந்த யோசனையைச் சொன்னபோது அம்மாவைத் தவிர யாரும் மறுத்துப் பேசவில்லை. 

“மக்ளே, நான் சொன்னா கேளு, வேற எந்த ஊர்லயாம் நல்ல விசாரிச்சு ஏதும் எடம் பாப்போம். கொஞ்சம் கூட பொறுத்துப் பாப்போம் மக்ளே. தம்பிக்கு கெட்டி வைக்காண்டாம்” என்றாள் அம்மா முகத்தைத் திருப்பிக்கொண்டு. 

“லூசு மாதி பேசாதம்மா. மாமாக்கு என்ன கொற? ஊர்ல அவன மாதி ஒரு ஆளக் காட்டு, பாப்போம். சும்மா எதயாம் பொலம்பிட்டுக் கெடக்காதம்மா.”

“அவனுக்கு என்ன மக்ளே கொற? ஒன்னும் கொறஞ்சிற வேண்டான்னு தான் நா நெனைக்கேன்” என்று சொல்லியவள் அடுக்களைக்குள் சென்று அழ ஆரம்பித்துவிட்டாள். பிறகு நான் எவ்வளவு கேட்டும் அவள் திறந்து பேசவில்லை. பின், பெரியப்பா உறுதியாக முடிவுசெய்ய, அம்மா தன் ஓயாத சிந்தனைக்குள் ஆழ்ந்து போனாள். அக்காவின் வீட்டிற்கு ஒருமுறைகூட செல்வதில்லை. அக்கா இங்கே வந்தாலும் ஏதோ கடமைக்கென்று கவனிப்பதைப் போலவிருக்கும். 

*

குலச்சாமியின் முன் பெரியப்பா கைகூப்பி நின்று சத்தமாகப் பாடினார். 

மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ

எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ

பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி

சுட்ட சொல்லு வெலக்கு தாயி

புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே

நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன்

பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன்

கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ

குழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன்

பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி

கருமாரி முத்தாரம்மா

பத்ரகாளி காட்டாளம்மா

கொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்த காத்து நில்லு

கொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்த காத்து நில்லு.”  

பின், பெரியப்பா மாப்பு மந்திரம் சொல்ல நாங்கள் எல்லோரும் திரும்பச் சொன்னோம்.

“அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் 

செஞ்ச தப்பு செய்யாத் தப்பு 

வந்த தப்பு வாராத தப்பு 

என்ன தப்பு செஞ்சாலும் ஏத்துக்கோ எஞ்சாமி 

மாப்பு கொடு மாப்பு கொடு 

ஒம் மக்களுக்கு மாப்பு கொடு.” 

*

ஆச்சியின் குழிவாசலில் படையலிட்டு பூசை முடித்து பெரியப்பா எல்லோருக்கும் திருநீறு பூசிவிட்டார். நான் அவர் காலில் விழுந்து எழுந்தபோது திருநீற்றுக் கொப்பரையில் கையை வைத்து அப்படியே மெல்ல ஆடி நின்றார். தலை தாழ்த்தி கையால் வாய்பொத்தி நான் காத்து நின்றேன். பெரியப்பா குறி சொல்வதைப் போல முனகினார். தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தவர் திடீரென்று ‘ஓ’வென கத்தியவாறு ஆச்சியின் குழியையும் சிறுதெய்வக் கற்களையும் சுற்றிச் சுற்றி ஓடினார். பலமுறை ஓடித் தளர்ந்து நின்றவர் ஆச்சியின் குழிமேட்டின் மீது விழுந்து அங்குமிங்கும் உருண்டார். முழங்கால் போட்டு நின்று தன் மார்பில் ஓங்கி ஓங்கி குத்திக்கொண்டே ஊளையிட்டார். கண்கள் நிலைகுத்தி இருக்க ஆடிக்கொண்டே கத்தினார். 

“ஏய், ஏய் பண்டாரக் கொடலுருவி..பண்டாரக் கொடலுருவி…

வாய்மண்ணு, எச்சிமண்ணு…

குதிர, காள, காட்டு நாயி…

மலையேறிக் கொடலுருவி பண்டாரக் கொடலுருவி 

பச்சப்புள்ள கன்னிப்புள்ள…”

பெரும் துக்கத்தில் கதறி அழுவதைப் போல ஓலமிட்டார் பெரியப்பா. நானும் குடும்பத்தில் எல்லோரும் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தோம். தேம்பித் தேம்பி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்த பெரியப்பா நிமிர்ந்து எங்கள் ஒவ்வொருவர் முகமாகப் பார்த்தார்.

“பண்டாரக் கொடலுருவி, பண்டாரக் கொடலுருவி..” என்றவாறு எழுந்து விறுவிறுவென்று பேச்சிக்குளத்தை நோக்கி நடந்தார். 

நான் மெல்லத் திரும்பி அக்காவைப் பார்த்தேன். அக்கா தலைகுனிந்தவாறு நின்றவிடத்தில் மெல்ல முன்னும் பின்னும் அசைந்துகொண்டிருந்தாள். அவள் மெல்ல முனகியது போலிருந்தது. எனக்காக அக்கா செய்து வைத்திருந்த தாலி ஆச்சியின் குழியின் முன் ஒரு தாம்பாளத்தில் சிதறிக் கிடந்தது. 

தாய்மாமா எவ்வளவு சொல்லியும் பூசைக்கு வரவில்லை. 

*

செண்பகராமன்புரத்துக் கொட்டாரம் நள்ளிரவில் சீவிடுகளின் பாடலினூடே ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. இளவரசியின் மேல்மாடத்தில் மெல்லிய தீற்றலென ஒரு சிறு வெளிச்சம். பச்சைப் பட்டுடுத்தி தலை நிறைய பூச்சூடி நெற்றித் திலகம் குமிழ் விளக்காக ஜொலிக்க மாடத்தின் தூணில் சாய்ந்து நின்றாள் இளவரசி. கொட்டாரத்து காவல் மாடத்திலிருந்து தன் குறுவாளின் பிரதிபலிப்பை இளவரசியின் மாடத்திற்குத் தூதுவிட்டுக்கொண்டிருந்தான் ஆண் களிறு போலிருந்த தூதன் ஒருவன். மாந்திரீகத்தில் எதுவும் சாத்தியமென்று பேர் பெற்றவன், நிகரில்லா வீரன். ஆணழகன். இராஜ லட்சணம் உள்ளவன். தூது முடிந்த இரவுகளில் தன் மாடத்திலிருந்து அவனது நிழல் மட்டும் இறங்கிச்சென்று இளவரசியின் நிழல் தொட்டு வருமாறு ஒரு தகடு பதித்து வைத்திருந்தான். 

செண்பகராமன்புதூரில் இளவரசியின் முகம் பார்க்கும் உரிமை பெற்றவர்கள் பெரிய ராஜாவும், அம்மையும்தான். மற்றெவரும் எதிர் செல்லவோ, பேசவோ அனுமதியில்லை. இளவரசியே விரும்பினால் மட்டும் தரையில் மண்டியிட்டு எவரும் பதிலளிக்க முடியும். இந்த தர்மத்தை மீறுவது இராஜ துரோகம். தற்செயலாக எதிர்வந்தோ பேச முற்பட்டோ சிறைக் கிடங்குகளில் தவித்திருப்பவர்களும் உண்டு.  

சித்திரைப் பௌர்ணமி தினம். ஊர்சனம் மொத்தத்திற்கும் விருந்து வைத்து தன் யானையின் மேல் பெருமிதமாக வலம்வந்து கொட்டாரத்தில் இறங்கினான் பெரிய ராஜன். கைகட்டித் தலைவணங்கி அவனருகே வந்த கணக்குப்பிள்ளை முத்தையா பாண்டியன் ராஜனின் அருகே சென்று ஓர் இரகசியம் பகர்ந்தான். ராஜனின் முகம் சட்டெனச் சிவக்க அவனது கை உடைவாளை உருவச் சென்றது. கணக்குப்பிள்ளை மேலும் ஏதோ சொல்ல, சினம் அடங்கி ராஜன் முன்சென்றான். கையில் ஏடுகளைச் சுமந்தவாறு பின்சென்றான் முத்தையா பாண்டியன். 

“நீங்கள் சொல்வதும் சரிதான் பாண்டியரே. அவன் தூதன்தான். ராஜமுறைப்படி அவனைச் சிறையிலடைக்க முடியும். ஆனால், அவன் ஒரு மாந்திரீகன் அல்லவா? பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ தெரியவில்லையே?”

“பெரியவாள் சிந்தனைக்கு.. தவறாக இருப்பின் தயைகூர்ந்து மன்னியுங்கள்.”

“சொல்லும் பாண்டியரே.. என் அன்பு எப்போதும் உமக்கு..” 

“என்னதான் வேற்றொருவன் பார்வை நம் மாடத்தில் விழுந்தாலும், நள்ளிரவில் நம் மாடம் ஒளிர்வதும், இளவரசி வான் நோக்கி நிற்பதும் எனக்கு விளங்கவில்லை. சொன்னவர் தப்பில்லை, சேதி நிச்சயம். ஒருவேளை…”

“புரிகிறது… இரும்.. இதோ வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்தப்புரம் நோக்கிச் சென்றான் பெரிய ராஜன். 

*

திரும்பி வந்த பெரியப்பா எதுவும் பேசாமல் ஆச்சியின் குழியின் முன் மண்டியிட்டு வணங்கினார். மெல்ல எழுந்து நின்று எதையோ தேடினார். காலடியில் கிடந்த கொப்பரையை எடுத்து திருநீறை தன் விரல்களில் தோய்த்து சில மந்திரங்களை முனகினார். என்னை அருகே அழைத்து என் தலையில் சிறிது திருநீறைப் போட்டு நெற்றியில் பூசிவிட்டார்.

எல்லோரும் அப்படியே உட்கார்ந்து பேச்சற்றிருந்தோம். என் ஃபோன் அடித்தது. குளத்தாங்கரைப் பிள்ளையார் கோவில் பூசாரி. அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றிக்கொண்டு கண்கள் இருண்டு வந்தன. ஃபோன் என் கையிலிருந்து நழுவி விழுந்து தெறித்தது.

*

திரும்பி வந்த பெரிய ராஜனின் முகம் குழப்பத்தில் உறைந்திருந்தது. சிறிது நேரம் சலனமற்று உட்கார்ந்தவன், “பாண்டியரே.. நம் கெட்ட காலமோ என்னவோ? நீங்கள் நினைத்தது சரிதான்.. இளவரசியும் தூதனை எண்ணியிருக்கிறாள்.. என்ன செய்வது, எனக்குக் குழப்பமாக இருக்கிறது..” என்றான். 

“எனக்குச் சரியெனப்பட்டதைச் சொல்கிறேன் தேவரே. இது மிகப்பெரிய தவறாகிவிடும். மானக்கேடு. உங்கள் குலப்பெருமை என்னவாகும்? சுற்றித் திரியும் ஒரு தூதன் நம் இளவரசிக்கு இணையா? உலகம் தூற்றும் தேவரே. பெரும் அவமானமாகிவிடும்.. பின், இந்தக் கொட்டாரத்தின் வாரிசு யார்?”

“ம்ம்.. என்ன தான் செய்வது பாண்டியரே? என் செல்ல மகளின் வாழ்க்கையல்லவா?”

“தந்தையாக நீங்கள் நினைப்பது சரிதான் தேவரே. ஆனால், இந்நிலத்தின் தலைவன் நீங்கள். உங்கள் செயல்தான் இங்கே வருங்காலத்தில் பொது முறைமையும் சட்டமும் ஆகும்..”

“சரிதான்.. உங்கள் யோசனை என்ன பாண்டியரே?”

“பெரியவாள் தவறென்றால் மன்னியுங்கள். என் மகளுக்கு இப்படியொரு எண்ணம் வந்தால் அவளை என் வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்துவிடுவேன். அப்படியொரு ஈன வாழ்வு என் மகளுக்குத் தேவையில்லை என்றே நான் நினைப்பேன். என் மனைவியும், ஏன், மொத்தக் கூட்டமும் அப்படியே முடிவுசெய்வோம்.”

பெரிய ராஜனின் முகம் கருமைகொண்டது. தலையை மெதுவாக மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான். நீண்ட மௌனத்தின் முடிவில், கணக்குப்பிள்ளையை அருகே அழைத்து இரகசியமாக ஏதோ சொன்னான். 

*

தாய்மாமா பேச்சிக்குளக்கரையில் மயங்கிக் கிடந்தான். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழிநெடுக முனகிக்கொண்டே இருந்தான். கையும் காலும் ஒருபுறமாக இழுத்துக்கொண்டு வெட்டின. அவ்வப்போது கண்களை இலேசாகத் திறந்து என்னைப் பார்த்து ஏதோவொரு வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொன்னான். அருகே உட்கார்ந்திருந்த அக்கா இன்னும் முனகியவாறு முன்னும் பின்னும் அசைந்துகொண்டிருந்தாள். 

*

கணக்குப்பிள்ளையும் அவனது மூன்று சகோதரர்களும் செண்பகராமன்புதூரின் குளக்கரையில் ஆழக்குழி ஒன்றை தோண்டிக்கொண்டிருந்தனர். அருகே தலைவாழை இலை மீது பச்சைப் பட்டுடுத்தி பூவும் பொட்டுமாக அரை மயக்கத்தில் நெளிந்து கிடந்தாள் இளவரசி. அவள் காலசைவின் கொலுசோசை விட்டுவிட்டு துடித்தது. குழி தோண்டி முடித்ததும் எல்லோரும் தங்கள் முகங்களை சிவப்புத் துணியால் மறைத்து கட்டிக்கொண்டனர். முத்தையா பாண்டியன் அருகிருந்த மரத்தடியில் கால் கட்டப்பட்டுக் கிடந்த ஒரு சேவலை எடுத்துவந்து இளையவன் கையில் கொடுத்தான். அதை மார்போடு அணைத்து இளவரசியின் உடலை மூன்று முறை சுற்றி வந்தவன் அந்தக் குழியின் குறுக்காக அதன் கழுத்தை நீட்டிப் பிடித்துக்கொள்ள பாண்டியன் தன் கத்தியால் அதை அறுத்து அதன் இரத்தத்தை அக்குழியின் உள்ளும் சுற்றிலும் தெளித்தான். பின், அச்சேவலை குழிக்குள் போட்டு நால்வரும் பூப்போட்டு வணங்கினர். 

ஆளுக்கொரு கையும் காலுமாகப் பிடித்துத் தூக்கி இளவரசியை உள்ளிறக்கி ஏதோ மந்திரங்களை முனகியவாறே மண்ணைப் போட்டு மூட ஆரம்பித்தனர். இடை வரை  மண் மூடிய நிலையில் மயக்கம் தெளிந்த இளவரசி கணக்குப்பிள்ளையின் முகத்தை வெறித்துப் பார்த்தாள். உள்ளிறங்கும் கூர்மைகொண்ட அப்பார்வையின் முன் நிற்க முடியாமல் கணக்குப்பிள்ளை நடுங்க, இளவரசி கொடுந்தமிழில் நான்கு வரிகள் அவனுக்கு மட்டுமே கேட்குமாறு சொல்லி மடிந்தாள்.

இரவோடு இரவாக முத்தையா பாண்டியனின் மொத்தக் குடும்பமும் தாடகை வனத்தின் குறும்பாதைகளில் மறைந்து செல்ல, வெறிகொண்டு விரட்டி வந்தான் மாந்திரீகத் தூதன். வனம் கடந்து ஓர் ஆதி கிராமத்தின் வழிபுகுந்து செல்லும்போது தூதன் நெருங்கிவிட்டான். 

கருநிழல் கூட்டத்தைக் கண்டுவிட்ட சிறுமியொருத்தி பயத்தில் கத்த, அவளைத் தன் சிவப்புத் துணியால் மறைத்து நெருக்கினான் முத்தையா பாண்டியன். வாசம் பிடித்த தூதனின் வாளொளி இவர்கள் அருகாமையை அடையும் முன் அச்சிறுமியின் கழுத்தைத் திருகி தூக்கியெறிந்து விட்டிருந்தனர்.  

வனம் பல, மலை பல கடந்து நால்வகை நிலம் சூழ்ந்த நீலியூர் பொத்தையின் அடிவாரத்தில் வந்து குடிகொண்டது முத்தையா பாண்டியனின் குடும்பம்.

*

தாய்மாமாவின் சடலத்தைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, மாலையிட்டுக் கிடத்தியிருந்தோம். முறை சுற்றிப் பானையுடைத்து, அரிசி, சந்தனச் சுள்ளியோடு ஒற்றை நாணயத்தையும் போட்டு முடித்து மாமாவின் கால் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்காக குனிந்த அக்கா திடீரென ஊளையிட்டுக் கதறி தலைவிரித்தாட ஆரம்பித்தாள். அத்தைமாரும் நானும் குறுக்கே சென்று அவளை இறுக்கிப் பிடித்தோம். அடக்க முடியா பெரும் வலிமைகொண்ட காளியாக வீறுகொண்டு ஆடி நின்றாள் அக்கா. 

என் திருமணம் முறிந்து போயிருக்க வேண்டியதுதான். பெரியப்பாவின் முயற்சியால் ஒரு வருடம் தள்ளிப்போனது. மாமாவின் மறைவிற்குப் பிறகு பெரியப்பா பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார். அக்காவின் முன்பின்னான ஆட்டம் இன்னும் நின்றபாடில்லை. 

*

திருமணத்திற்கு முந்தைய நாள் நண்பகல். காலையிலிருந்தே எனக்குள் ஓர் எண்ணம், ஓர் அழைப்பு. ஆச்சியின் குழிக்குச் சென்று வரவேண்டும். தனியாக. இரண்டு பெரிய மாலைகளை வாங்கிக்கொண்டு நீலியூர் பொத்தையடிக்குச் சென்று ஆச்சியின் குழியின் முன்நின்று வணங்கினேன். எல்லா சிறுதெய்வங்களையும் வணங்கிவிட்டு மாடனுக்கும் பேச்சிக்கும் மாலையிட்டு விழுந்து வணங்கினேன். மனம் தெளிவடைந்தது போன்று தோன்றியது. திரும்பி வரும்போது பேச்சிக்குளம் செல்லும் வழியாக தன்னிச்சையாக நடந்தேன். பேச்சிக்குளக் கரையைக் கடக்கும் போது அப்பாவின் முகமும் மாமாவின் முகமும் என்னுள் வந்துபோனது. அவர்களது ‘மக்ளே’ எனும் குரல் காதருகே நிச்சயமாகக் கேட்டது. தற்செயலாக குளக்கரையின் ஓரத்தில் நின்ற ஒற்றைப் பனைமரம் என் கண்ணில்பட்டது. ஏதோவொன்று என்னைப் பிடித்து இழுத்ததைப் போல அதை நோக்கிச் சென்றேன்.

அருகே செல்லச் செல்ல என் கட்டுப்பாடின்றி என் வாய் படபடத்தது, ஏதோ முனக ஆரம்பித்தேன். பனைமரத்தின் அடியில் சென்று நின்றேன். பனைமர மூட்டில் இரண்டு குத்துக்கற்கள். ஒன்றிற்கு பச்சைப் பட்டும் மற்றதற்கு சிவப்புப் பாவாடையும் கட்டி சம்பங்கியோடு ரோஜாப் பூக்கள் சேர்த்துக் கட்டிய நாலடி மாலையிட்டு அவற்றின் அடியில் படையல் இடப்பட்டிருந்தது. வளையலும், பிச்சிப்பூச் சரமும், கறிச்சோறும், தடியங்காயும், முட்டையும்… பக்கத்தில் ஒரு பனையோலைக் கிலுக்கு.. படையலின் மீது தெளிக்கப்பட்ட இரத்தத் துளிகள் கறுத்து காய்ந்து போயிருந்தன. இரத்தத் துளிகளின் ஊடே பாதி திறந்த நிலையில் கிடந்தது என் திருமணப் பத்திரிகை. என் தலை மெல்ல மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்க, சட்டெனப் பாய்ந்து அப்படையலின் மீது விழுந்து அந்தக் கறிச்சோறை அள்ளியள்ளி விழுங்க ஆரம்பித்தேன்.

4 comments

yahooramji January 27, 2021 - 9:00 am

என்ன ஒரு அற்புதமான க்ளாஸிக் படைப்பு .
ஆயிரம் கிளிஞ்சல்களுக்கு இடையே ஒரு நன்முத்து வந்து விடுகிறது.
——
கனக்கச்சிதமான கதை- கூடவோ குறையவோ ஒரு சொல் தொடுக்க வில்லை.- சுஷில் குமார்
——
இங்கே சிறு தெய்வமா, பெரும் தெய்வமா என்ற வெட்டி அரட்டைகளில் நாம் நேரத்தை வீண் அடித்துக் கொண்டு இருக்கையில்.
சத்தமில்லாமல் , சிறு தெய்வங்கள், தமிழ் மொழி வழிபாடு , தமிழ் மொழி மாப்பு ஸ்லோகம் என அற்புதமாகப் படைத்து இருக்கிறார், சுஷில் குமார்.
அதிலும் அந்த ராஜ குடும்பத்துக் கதை, ஒரு சம்சாரி வீட்டுக் கதை இரண்டையும் அழகாக இணைத்து இருக்கிறார். உத்தம வில்லனில் கமலஹாசனால் அழகாகச் செய்ய முடியாததை

Kasturi G October 16, 2021 - 5:48 pm

Excellent story on rural down south Indian Districts cultural mores and belief system brought to fore with poignant dialogues.
Very well written portrait on hardned 19th centuruy values which embraced communities of that time .
Congrats to the author Shushil Kumar for a riveting story penned crisply.
Thanks

Comments are closed.