செவ்வந்தி – ஜான் ஸ்டெயின்பெக்

0 comment

கூதிர்காலம். உச்சியில் மூடுபனிச் சாம்பல் நிற இழையாகப் படர்ந்து விசும்பில் இருந்தும் உலகின் பிற பகுதிகளில் இருந்தும் சாலினாஸ் மலைச்சரிவைத் தனிமைப்படுத்துவதைப் போலப் போர்த்தியது. அனைத்து திசை மலைகளின் மீதும் ஒற்றை மூடி என உட்கார்ந்து, மாபெரும் பள்ளத்தாக்கை ஒரு மூடிய பானையென அது உருமாற்றியது. அகண்ட பார்வைக் கோணத்தில் ஆழமாக உழுத கருந்துண்டாக நிலம் காட்சியளித்தது. ஆங்காங்கே கீறல்பட்ட உலோகமெனத் தரை மின்னியது. சாலினாஸ் நதியின் குறுக்கே மலையடிவாரத்தில் இருந்த பண்ணை நிலத்தில் குறுந்தண்டுகள் முளைத்த மஞ்சள் நிலம், குளிரில் வடிகட்டிய வெளிறிய கதிரொளியில் நனைந்தது போல் எப்போதும் தோன்றும். ஆனால் இப்போது டிசம்பர் திங்களில் வெயிலின் மிளிர்வை அறவே காண இயலாது. நதிக்கரை நெடுக அடர்ந்து வளர்ந்திருந்த அலரிப்புதர்க்கூட்டம் தன் கூரிய மஞ்சள் இலைகளுடன் தீப்பிழம்பெனச் சுடர்ந்தது.

அந்நொடி அமைதியையும் காத்திருப்பையும் சூடியிருந்தது. வளி குளிர்ந்து கனிவுடன் இருந்தது. தென்மேற்கில் இருந்து வீசிய மென்வளி கூடிய விரைவில் வரவிருக்கும் மழையைக் குறிப்புணர்த்தி விவசாயிகளுக்குத் தெம்பூட்டியது. ஆனால் மூடுபனியும் மென்மழையும் ஒன்றோடொன்று பொருந்துபவை அல்ல.

நதியின் குறுக்கே இருந்த ஹென்றி ஆலனுடைய மலையடிவார உழுநிலத்தில் சிறிய வேலை இருந்தது. வைக்கோல் வெட்டப்பட்டு ஒருங்கியிருந்தது. மழை வருகையில் அதை ஏந்தும் பொருட்டு பழத்தோட்டம் உழுதிருந்தது. உயர் சரிவுகளில் இருக்கும் கால்நடைகள் யாவும் கரடுமுரடாகவும் வறண்ட தோல் கொண்டவையாகவும் இருந்தன. 

தன் பூந்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த எலிசா ஆலன், தொலைவில் களத்தில் நின்றபடி தொழில்முறை அங்கி அணிந்த இருவரோடு பேசிக்கொண்டிருந்த தனது கொழுநர் ஹென்றியைத் தலைதாழ்த்திப் பார்த்தாள். அவர்கள் மூவரும் ஃபோர்ட்சன் இழுவை வண்டி நின்ற பந்தலில், ஆளுக்கொரு காலை அதன் மீது வைத்து நின்றபடி உரையாடினர். சிகரெட் புகைத்தபடியே பேசிய அவர்கள் அந்த எந்திரத்தை அவ்வப்போது கவனித்தும் வந்தனர். 

அவர்களை ஒரு கணப்பொழுது பார்த்துவிட்டு எலிசா மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தாள். அவளுக்கு அகவை முப்பத்தைந்து. அவள் முகம் ஒல்லியாகவும் வலுவாகவும் இருக்க, அவளது விழிகள் நீரைப் போல் தெளிந்திருந்தன. தோட்டக்கார அங்கி அணிந்திருந்ததால் அவள் எடைமிக்கவளாகத் தோற்றமளித்தாள். ஆடவர் அணியும் தொப்பியைத் தன் விழிகள் வரை இழுத்துவிட்டிருந்தாள். பெரிய பருத்த சப்பாத்துகள், கத்தரிகள், அவற்றை வைக்கும் அளவு பெரிதாக நான்கு பைகள் கொண்ட வன்பருத்தியாலான கவச உடை, அவ்வுடையால் பகுதி மூடப்பட்ட படங்கள் அச்சிடப்பட்ட ஆடை, கரணை, தேய்ப்பான், கத்தி ஆகியவற்றோடு காட்சியளித்தவள், தன் கையில் விதைகளை வைத்தபடி தோட்டப்பணியைச் செய்தாள். தன் கரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு வன்தோலால் ஆன கையுறைகள் அணிந்திருந்தாள்.

கடந்த ஆண்டின் செவ்வந்தித் தண்டுகளைச் சிறிய கூரிய கத்தரிகளால் வெட்டினாள். பணியிடையே பந்தலில் நின்ற ஆடவர்களைப் பார்த்தாள். அவள் முகம் ஆர்வமும் முதிர்ச்சியும் அழகும் கூடியதாக இருந்தது. அவள் கத்தரியைக் கையாண்ட விதமும் தெள்முதிர்ச்சியுடனும் வலுவானதாகவும் இருந்தது. அவளது ஆற்றலுக்கு முன் செவ்வந்தித் தண்டுகள் எளிதில் வெட்டுப்பட்டன.

தன் விழியை மூடிய கூந்தல் கற்றையைக் கையுறையின் பின்புறத்தால் ஒருக்கிவிட்டாள். அப்படிச் செய்யும்போது நிலத்தின் கறை அவளது வாளிப்பான கன்னத்தின் மேற்பகுதியில் படிந்தது. அவளுக்குப் பின்னால் அழகிய வெள்ளை நிறப் பண்ணை வீடு தன் சாளரம் வரை வளர்ந்து உயர்ந்திருந்த சிவப்பு ஜெரானியங்களால் சூழப்பட்டிருந்தது. நன்கு பெருக்கப்பட்ட தூய வீடு அது. சாளரங்கள் நன்கு மெருகேற்றப்பட்டிருந்தது. முன் வாயில் படிகளின் மேல் சேற்றுக் கறையே இல்லாத மிதியடி விரிக்கப்பட்டிருந்தது.

எலிசா இன்னொரு முறை பந்தலைப் பார்த்தாள். புதிய ஆடவர்கள் தமது ஃபோர்ட் மகிழுந்தில் ஏறினர். அவள் தன் கையுறையைக் கழற்றிப் பழைய செவ்வந்தி வேர்களைச் சுற்றி நுண்காடென வளர்ந்திருக்கும் புதிய வேர்முண்டுகளைத் தன் வலுவான விரல்களால் அழுத்திப் பார்த்தாள். இலைகளை விரித்து அருகருகே வளரும் தண்டுகளை நோக்கினாள். ஒட்டுண்ணிகளோ, வண்டுகளோ, நத்தைகளோ, புழுக்களோ அங்கு இல்லை. வேட்டை நாயைப் போன்ற அவளது விரல்கள் இத்தகைய பூச்சிகள் உருவாகும் முன்பே நசுக்கிவிடக்கூடியன.

தன் கொழுநரின் குரலைக் கேட்டு நிமிர்ந்தாள். அவர் அமைதியாக அவள் அருகே வந்து, அவளது பூந்தோட்டத்தைக் கால்நடைகளிடமிருந்து காத்துவந்த கம்பி வேலியின் மீது சாய்ந்தார்.

‘மறுபடியும்!’ என்றார். ‘நீ மீண்டும் புதிய வலுவான விளைபொருளை உருவாக்குகிறாய்!’

தன் முதுகை நிமிர்த்திய எலிசா மீண்டும் தன் தோட்டக் கையுறையை நீக்கினாள். ‘ஆமாம். இந்த ஆண்டு இது வலிமையாகவே இருக்கும்.’ அவள் தொனியிலும் முகத்திலும் சிறிது அற்பத் திருப்தி தோன்றியது.

’நீ இதற்காகவே வரம் வாங்கியவள்’ என்று ஹென்றி பாராட்டினார். ‘இந்த ஆண்டு நீ விளைவித்த சில மஞ்சள் மலர்கள் பத்து இஞ்ச் வரை நீண்டிருந்தன. நீ பழப்பொழிலிலும் வேலை செய்து அத்தனை பெரிய ஆப்பிள்களை விளைவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.’

அவள் விழிகள் கூர்மை அடைந்தன. ‘ஆமாம். நான் அதைக்கூடச் செய்யலாம்தாம். எனக்கு வரம் இருக்கிறது என்பதும் சரியே. என் அம்மாவுக்கும் அது இருந்தது. அவர்களால் தரையில் எதைச் செருகியும் வளர வைக்க முடியும். தோட்டக்காரர்களின் கைகளே அந்த விதத்தை அறிந்திருக்கும் என்று அவர்கள் சொல்வதுண்டு.’

‘ஆம். கண்டிப்பாக நீ சொல்வது மலர்களுக்குப் பொருந்தும்’ என்றார் ஹென்றி.

‘ஹென்றி நீங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர்கள் யார்?’

’ஆம். அதைப் பற்றிச் சொல்லத்தான் வந்தேன். அவர்கள் வெஸ்டர்ன் மீட் என்ற நிறுவனத்தில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்றாண்டு முடிந்த மாடுகள் முப்பது உருப்படிகளை விற்றுவிட்டேன். போதுமான விலையும் போனது.’

’நன்று’ என்றாள். 

‘இருப்பினும்…’ என்று தொடர்ந்தார். ‘…இதைக் கொண்டாடும் விதமாக – இன்று சனி பிற்பகல் என்பதாலும் – சாலினாஸில் ஒரு உணவகத்திற்குச் சென்று உண்டு மகிழ்வோம். பிறகு ஒரு திரைப்படம் பார்ப்போம்.’

‘நல்லது’ என்று பதிலளித்தாள். ‘ஆம். அது மிக நன்றாக இருக்கும்.’

ஹென்றி பகடியான தொனியில் சொன்னார். ‘இன்றிரவு சண்டை ஆட்டங்கள் உள்ளன. சண்டைகளைப் பார்க்க விரும்புகிறாயா?’

அவள் மூச்சிரைத்து, ‘அய்யய்யோ வேண்டாம். எனக்குச் சண்டையாட்டங்கள் பிடிக்காது’ என்று பதறினாள்.

‘விளையாட்டாகத்தான் சொன்னேன் எலிசா. நாம் திரைப்படத்திற்குச் செல்வோம். இப்போது மணி இரண்டு. ஸ்காட்டியை அழைத்துக்கொண்டு மலையில் இருந்து காளைகளை இறக்க வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் ஆகலாம். நகரத்திற்கு ஐந்து மணியளவில் சென்று கோமினோஸ் விடுதியில் மாலையுணவு உண்போம். சரியா?’

‘கண்டிப்பாக! எனக்குப் பிடித்திருக்கிறது. வெளியே சென்று உண்பது அலாதியானது.’

‘சரி. நான் சென்று குதிரைகளைப் பிடிக்கிறேன்.’

அவள், ‘இந்தப் பயிர்களை இடம் மாற்றுவதற்கு எனக்கு நிறைய அவகாசம் கிடைக்குமென நினைக்கிறேன்’ என்று சொன்னாள்.

கீழே கொட்டகையில் ஸ்காட்டியைத் தன் கணவர் விளிப்பது அவளுக்குக் கேட்டது. சற்று நேரத்தில் இருவரும் இளங்காளைகளைத் தேடி மஞ்சள் மலையில் குதிரையில் செல்வதைக் கண்டாள்.

செவ்வந்தியின் வேர்களுக்காக ஒரு சதுர மண்மேடு அமைக்கப்படுவதுண்டு. தன் கரணையால் அவள் மண்ணை மீண்டும் மீண்டும் கிளறிப் பதமாகத் தட்டிக் கடினப்படுத்தினாள். அதன் பிறகு விதைகளை இடுவதற்கு ஏற்ப பத்து இணைக் குழிகளை வெட்டினாள். செவ்வந்தி மேட்டில் சிறிய மிருதுவான தளிர்களை எடுத்து அவற்றின் இலைகளைத் தன் கத்தரியால் வெட்டி நீக்கி வரிசையாகக் குவித்து அடுக்கினாள்.

சக்கரங்களின் கீச்சிடல்களும் குளம்படி ஒலிகளும் சாலையில் இருந்து வந்தன. எலிசா நிமிர்ந்து பார்த்தாள். நாட்டுச்சாலை நதிக்கரையில் இருந்த அலரிப்புதர் வழியாகவும் பருத்திக் காட்டின் வாயிலாகவும் ஒழுகி வந்தது. அச்சாலையின் வழியாக  ஆர்வமூட்டும் ஒரு புதிய வாகனம் வந்தது. அதுவொரு பழைய சுருள்வில் வண்டி. புல்வெளிப் பிரதேசங்களில் காற்றைத் தடுக்க விரித்த விரிப்பைப் போல அந்த வண்டியின் மேல்பகுதி மூடப்பட்டிருந்தது. ஒரு முதிய பழுப்பு நிறக் குதிரையாலும் ஒரு கழுதையாலும் அது இழுத்து வரப்பட்டது. மழித்து சில நாட்களில் வளர்ந்திருந்த குறுமயிர் தாடியுடன் இருந்த ஒரு பெரிய ஆள் விரிப்புகளின் இடையில் அமர்ந்து வண்டியை இழுக்கும் விலங்குகளை லாகவமாகக் கையாண்டார். வண்டிக்கு அடியில் பின் சக்கரங்களிடையே ஒரு மெலிந்த, நீண்ட கால்களை உடைய கலப்பின நாய் ஒன்று அரைத்தூக்கத்தில் இருப்பது போல அசைந்தது. துணியில் அழகற்ற குழப்பமான எழுத்துகளில் சொற்கள் எழுதப்பட்டிருந்தன: ‘பானைகள், சட்டிகள், கத்திகள், கத்தரிகள், புல்வெட்டிகள் யாவும் சரியாக்கப்படும்.’ இரண்டு வரிகளில் எழுதப்பட்டிருந்த பொருட்களின் விபரங்களுக்குக் கீழே வெற்றிகரமாகக் கொட்டை எழுத்துகளில் ‘சரியாக்கப்படும்’ என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. ஒவ்வொரு எழுத்தின் கீழ்புறத்திலும் கருப்பு மை வழிந்து கூர்மையாக நீண்டிருந்தது.

நிலத்தில் குத்தவைத்து அமர்ந்திருந்த எலிசா இந்தத் தள்ளாடும் வண்டி நகர்வதைக் கண்டாள். அது கடந்துசெல்லவில்லை. அவளது வீட்டின் முன்னால் இருந்த வயல்சாலையில் திரும்பி, தன் பழைய வளைச்சக்கரங்கள் சறுக்கிக் கீச்சிட்டுத் தள்ளாடி நின்றது. நீள்கால்கள் உடைய நாய் சக்கரங்களிடையிருந்து குதித்து முன்னால் ஓடியது. உடனடியாக இரு பண்ணை மேய்ப்பர்கள் அதைத் துரத்தின. பிறகு மூன்றும் நின்று தம் விறைப்பான நடுங்கும் வால்கள், நீண்ட தளராத கால்கள், தூதனுக்குரிய கண்ணியம் ஆகியவற்றுடன் மெல்ல நகர்ந்தன. இரண்டு மேய்ப்பரும் மெதுவாக அதை முகர்ந்தபடி கச்சிதமாகச் சுற்றி வளைத்தன. அறையுந்து எலிசாவின் கம்பிவேலி வரை வந்து நின்றது. இப்போது புதிய வரவாக இருந்த நாய் எண்ணிக்கையில் வலுவிழந்ததை உணர்ந்தது போலக் காணப்பட்டது. தன் வாலைத் தாழ்த்தி வண்டிக்கடியில் பின்வாங்கி கழுத்தை உயர்த்திப் பல்லைக் காட்டியது.

வண்டியோட்டி, ‘சண்டையைத் தொடங்கிவிட்டு பின்வாங்கும் இது ஒரு மோசமான நாய்’ என்று சொன்னார்.

எலிசா சிரித்தாள். ‘ஆமாம். வழக்கமாக எத்தனை விரைவில் அவன் சண்டையைத் தொடங்குவான்?’

வண்டியோட்டி அவளது சிரிப்பால் ஈர்க்கப்பட்டு தானும் மனப்பூர்வமாக எதிரொலித்தார். ‘சில நேரங்களில் வாரக்கணக்கில் காத்திருந்துதான் தொடங்குவான்!’ சக்கரத்தில் கால்வைத்து தீர்க்கமாக இறங்கினார். குதிரையும் கழுதையும் நீரூற்றப்படாத மலரைப் போலத் தலை தொங்கின.

அவர் மிகப்பெரிய ஆகிருதி உடைய மனிதர் என்பதை எலிசா கண்டாள். அவரது தலைமுடியும் தாடியும் நரைத்திருந்தபோதும் அத்தனை முதுமையான தோற்றம் இல்லை. அவரது நைந்த கறுப்பு அங்கி சுருங்கி எண்ணெய்ப் பிசுக்குடனும் இருந்தது. குரலில் சிரிப்பு ஓய்ந்த கணமே முகத்திலிருந்தும் விழியிலிருந்தும் அகன்றது. அவர் விழிகள் கருமையாக – அணிவீரர்களுக்கும் கடலோடிகளுக்கும் இருப்பதைப் போல அடைகாக்கும் விழிகளாக – இருந்தன. அவர் கம்பிவேலி மீது வைத்த தடித்த கைகள் விரிசலுற்றிருந்தன. ஒவ்வொரு விரிசலிலும் கறுப்புக் கோடு இருந்தது. அவர் தனது நசிந்த தொப்பியைக் கழற்றினார்.

’நான் என் வழக்கமான சாலையில் இருந்து தவறியிருக்கிறேன்’ என்றார். ‘இந்த அழுக்கான சாலை நதியின் குறுக்கே சென்று லாஸ் ஏஞ்செலஸ் நெடுஞ்சாலையைச் சென்று சேருமா?’ என வினவினார்.

எலிசா எழுந்து தனது தடித்த கத்தரிக்கோலை மேலங்கி பைக்குள் திணித்தாள். ‘ஆம். இது அப்படித்தான் சென்று சேரும். ஆனால் சுற்றிச் சுழன்று நதியின் மீதேறி கடந்துசெல்ல வேண்டியிருக்கும். உங்கள் அணியால் மணலைத் தாக்குப்பிடித்து இழுத்துச் செல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.’

அவர் சிறிய கடுகடுப்புடன் ‘இந்த விலங்குகள் எதையெல்லாம் இழுக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிந்தால் உண்மையில் வியப்பீர்கள்’ என்று சொன்னார்.

‘அவை ஆரம்பித்த பிறகுதானே?’ என்று பரிகாசமாகக் கேட்டாள்.

அவர் ஒரு நொடி இளநகை செய்தார். ‘ஆம். அவை ஆரம்பித்த பிறகுதான்.’

’சரி’ என்றாள் எலிசா. ‘நீங்கள் சாலினாஸ் சாலையை அடைந்து அவ்வழியாக நெடுஞ்சாலைக்குச் செல்வது உங்கள் நேரத்தைச் சேமிக்குமென நான் கருதுகிறேன்.’

தனது கட்டை விரலைக் கோழிக்கூண்டின் கம்பியில் நிமிண்டி இசைபோல ஒலி எழுப்பினார். ’எனக்கு ஒன்றும் அவசரமில்லை அம்மணி. நான் சியாட்டலில் இருந்து சாண்டியாகோ வரை ஆண்டுதோறும் பயணம் செய்பவன். அதுவே என் முழு நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு திசையிலும் ஆறு மாதங்கள். நல்ல பருவநிலையை மட்டுமே நான் விழைந்து பின்தொடர்வேன்.’

எலிசா தன் கையுறையைக் கழற்றி அவற்றையும் கத்தரிக்கோல் இருந்த அங்கிப் பையில் திணித்தாள். அவள் தனது தொப்பியின் கீழ்முனையைத் தொட்டு விலகிச்செல்லும் மயிரிழைகளைத் தொட்டாள். ’உங்களுடையது இனிமையான வாழ்க்கை முறை என்று தோன்றுகிறது’ என்று சொன்னாள்.

அவர் கமுக்கமாக வேலி மீது சாய்ந்தார். ‘என் பாரவண்டியில் எழுதியிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நான் பானைகளை ஒட்டுவேன். கத்தி, கத்தரிகளைத் தீட்டுவேன். உங்களுக்கு அப்படி ஏதும் தேவை இருக்கிறதா?’

‘இல்லை இல்லை’ என்று உடனடியாகச் சொன்னாள். ‘அப்படி ஏதும் இல்லை.’ அவள் விழிகள் மறுப்புணர்வால் இறுகியது.

’கத்தரிகள்தான் மிக மோசமான பொருட்கள்’ என்று அவர் விவரித்தார். ‘பலரும் அதைத் தீட்டுகிறேன் என்று வீணடித்திடுவார்கள். ஆனால் எனக்கு அந்த வித்தை தெரியும். என்னிடம் தனித்துவமான கருவி இருக்கிறது. அது சிறியது. காப்புரிமைக்கு உட்பட்டது. ஆனால் உண்மையில் பலனளிப்பது.’

‘வேண்டாம். என் கத்தரிகள் யாவும் கூர்மையானவை.’

‘அப்படியானால் சரி. பானையை எடுங்கள்’ என்று மதிப்புடன் கோரினார். ‘வளைந்த பானை, ஓட்டைப் பானை எதுவாக இருந்தாலும். அதைப் புதியதாக மின்ன வைப்பேன். நீங்கள் புதியது ஏதும் வாங்கத் தேவையில்லை. அந்தப் பணத்தைச் சேமித்துக்கொள்ளலாம்.’

’வேண்டாம்’ என்று சட்டெனச் சொன்னாள். ‘உங்களிடம் சரிசெய்வதற்கு எதுவும் என்னிடம் இல்லை.’

அவர் முகம் மிகை சோகத்தைச் சூடிக்கொண்டது. அவர் குரல் சிணுங்கலுடன் வெளிப்பட்டது. ‘இன்று முழுவதும் எனக்குப் போனியே ஆகவில்லை. இன்றிரவு பட்டினி என்றே நினைக்கிறேன். நான் வழக்கமான பாதையையும் தவறவிட்டுள்ளேன். சியாட்டல் – சாண்டியாகோ நெடுஞ்சாலையில் நிறைய ஆட்களை எனக்குத் தெரியும். நான் நல்ல வேலைக்காரன் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதாலும் என்னால் தங்கள் பணத்தைச் சேமிக்க முடியும் என்பதாலும் அவர்கள் சில பொருட்களை எடுத்து வைத்திருப்பார்கள்.’

எலிசா எரிச்சலுடன், ‘உங்களுக்கு வேலை தர என்னிடம் ஏதுமில்லை. மன்னிக்க வேண்டும்’ என்றாள்.

அவரது விழிகள் அவள் முகத்தில் இருந்து அகன்று நிலத்தில் எதையோ தேடியது. அவள் வேலைசெய்த செவ்வந்தி மேட்டுக்கு வந்துசேரும் வரை அது மெல்லச் சுற்றியலைந்தது. ‘இது என்ன செடி அம்மணி?’

தயக்கமும் எரிச்சலும் எலிசாவின் முகத்தில் இருந்து உருகியோடியது. ‘ஓ, இவையெல்லாம் செவ்வந்திகள். வெள்ளையிலும் மஞ்சளிலும் வளரும் பெரிய மலர்கள். இங்கிருக்கும் யாரைவிடவும் நான் இவற்றைப் பெரியனவாக வளர்த்து வருகிறேன்.’

அவர் வினவினார். ’நீண்ட தண்டுடைய மலர் வகையா? நிறமேற்றப்பட்ட புகையை ஊதித் தள்ளியதுபோல இருக்கிறதே?’

‘அதேதான். மிகப் பொருத்தமான உவமை.’

’உங்கள் நாசி பழகும் வரை இந்த நெடியைச் சகித்துக்கொண்டாக வேண்டும்.’

அவள் பதிலாக, ‘இது ஒரு விதமான திரிந்த மணம் அவ்வளவே. நெடியெல்லாம் இல்லை’ என்று சொன்னாள்.

அவர் உடனடியாகத் தன் தொனியை மாற்றினார். ‘ஆம் நானும் இந்த மணத்தை ரசிக்கிறேன்.’

’இந்த ஆண்டு பத்து அங்குலம் நீண்ட மலர்களை நான் விளைவித்திருக்கிறேன்’ என்றாள்.

அவர் வேலியின் மீது நன்றாகச் சாய்ந்தார். ‘இதோ பாருங்கள். நான் செல்லும் சாலையருகே ஒரு பெண் இருக்கிறாள். அவளுடைய தோட்டம் அநேகமாக இதுவரை நீங்கள் கண்டவற்றிலேயே சிறப்பானதாக இருக்கும். அதில் எல்லா வகை மலர்களும் இருக்கின்றன; செவ்வந்தியைத் தவிர. சென்ற முறை தாமிரக்கலம் ஒன்றினை அவளுக்காக நான் சரிசெய்தபோது – அது கடினமான வேலைதான் எனினும் நான் மிக நன்றாகச் செய்வேன் – அவள் என்னிடம் ”எப்போதாவது நல்ல செவ்வந்தியைப் பார்க்க நேர்ந்தால் எனக்காக ஒரு சில விதைகளைக் கொண்டு வாங்களேன்” என்று கோரினாள்’ என்றார்.

எலிசாவின் விழிகளில் ஆர்வமும் கவனமும் மிகுந்தன. ‘அவளுக்குச் செவ்வந்தியைப் பற்றி நன்றாகத் தெரிய வாய்ப்பில்லை. விதையிட்டு அவற்றை வளர்க்கலாம் என்றபோதும் – இதோ அங்கு தெரிகிறதே – அந்த முளைப்பாரிகளைக் கொண்டு வளர்ப்பது இன்னும் எளிதானது.’

‘அப்படியா! எனில் அவளுக்காக நான் இங்கிருந்து எதையும் கொண்டுசெல்ல முடியாதென்று கருதுகிறேன்’ என்று சொன்னார்.

எலிசா, ‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நிச்சயம் கொண்டு செல்லாம்’ என்று கத்தினாள். ‘நான் கொஞ்சம் ஈரமணல் தருகிறேன். நீங்கள் அதை எடுத்துச்செல்லலாம். ஈரமாகவே வைத்திருந்தால் அது தொட்டியில் வேர்விட்டு வளரும். அதன்பிறகு அவள் அதை எங்கு வேண்டுமானாலும் மாற்றி நடலாம்.’

‘அவள் நிச்சயம் மகிழ்வாள். இவைதான் சிறப்பான செவ்வந்தி என்பீர்களா?’

‘அற்புதமானவை’ என்றாள். ‘ஆம். மிகவும் அழகானவை.’ அவள் விழிகள் மின்னின. நசிந்த தொப்பியைக் கழற்றியவள் தனது கருமையான செழிகூந்தலை உலுக்கினாள். ‘இப்போதே அதை நான் மலர்த்தொட்டியில் வைக்கிறேன். நீங்கள் எடுத்துச்செல்லலாம். முற்றத்துக்கு வாருங்கள்.’

மறித்திருக்கும் வேலியின் ஊடாக அவர் நுழைந்ததும் வீட்டின் பின்புறத்தில் இருந்த ஜெரானிய மலர்கள் எல்லை அமைத்திருந்த ஒரு பாதையின் வழியாக எலிசா உற்சாகத்துடன் நடந்தாள். ஒரு பெரிய மலர்த்தொட்டியுடன் திரும்பி வந்தாள். கையுறைகளை மறந்திருந்தாள். பாத்தி அமைந்திருந்த இடத்தில் இருந்த நிலத்தில் மண்டியிட்டுத் தன் விரலால் மணலைக் கிளறி கையளவு வழித்து எடுத்து தொட்டிக்குள் வைத்தாள். பின்னர் அவள் அணியமாக வைத்திருந்த சிறு தளிர்கள் இருந்த குவியலை எடுத்தாள். தனது வலுவான விரல்களால் அவற்றை ஒவ்வொன்றாக மண்ணில் ஊன்றித் தன் விரல் முட்டிகளால் சுற்றி அழுத்தினாள். அந்த முதியவர் அங்கேயே நின்றிருந்தார். அவள் ‘நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை நான் சொல்லித் தருகிறேன். நீங்கள் அதை நினைவில் வைத்து அந்தப் பெண்ணிடம் சொல்லிவிடுங்கள்’ என்றாள்.

‘நிச்சயமாக. அதை நினைவில் நிறுத்த முயல்வேன்.’

‘சரி. இதோ பாருங்கள். இவை ஒரு மாதத்திற்குள் வேர்விடும். அப்போது அவள் இதைக் கண்டிப்பாக எடுத்து இதைப் போன்ற உயிர்ப்புள்ள நிலத்தில் ஒரு அடி இடைவெளிகளில் ஊன்ற வேண்டும். புரிகிறதா?’ அவள் கரிய நிறத்தில் இருக்கும் மண்ணை எடுத்து அவருக்குக் காண்பித்தாள். ‘இவை வேகமாகவும் உயரமாகவும் வளரும். இதை நன்கு நினைவில் வையுங்கள். ஜூலைத் திங்களில் இதை அறுக்கச் சொல்லுங்கள். நிலத்தில் இருந்து எட்டு அங்குல உயரம் வளர்ந்ததும் வெட்ட வேண்டும்.’

’அவை மலர்வதற்கு முன்பாகவே வெட்ட வேண்டுமா?’ என வினவினார்.

‘ஆம். அவை மலர்வதற்கு முன்பாகத்தான்.’ அவள் விழிகள் உற்சாகத்தில் துள்ளின. ‘அவை மீண்டும் வளரத் தொடங்கும். செப்டம்பர் இறுதி வாக்கில் மொட்டவிழும்.’

பேச்சை நிறுத்தியவள் குழம்பிக் காணப்பட்டாள். ‘மொட்டவிழும் காலமே அதிகக் கவனத்தைக் கோருவது’ என்று தயக்கத்துடன் சொன்னாள். ‘இதை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.’ அவர் விழியின் ஆழத்தை நோக்கி எதையோ தேடினாள். அவள் வாய் சற்றுத் திறந்தது. அவள் எதையோ கவனித்தாள். ‘அதைச் சொல்ல முயல்கிறேன்’ என்றாள். ‘கைகள் சுயமாக நடுவது என்று கேள்விபட்டிருக்கிறீர்களா?’

‘கேள்விப்பட்டதாகத் தோன்றவில்லை அம்மணி.’

’சரி. அதை எப்படி உணர்வது என்பதை மட்டும் சொல்ல முடியும் என நினைக்கிறேன். நீங்கள் விரும்பாத மொட்டுகளைப் பிடுங்கும்போது அதை உணரலாம். எல்லாமே உங்கள் விரல்நுனிகளில் வந்து முடியும். உங்கள் விரல்கள் வேலை செய்வதை நீங்களே காண்பீர்கள். அவை தானாக இயங்கும். அந்த விசித்திரத்தை உணர முடியும். அவை தொடர்ந்து முண்டுகளைப் பிடுங்கியபடி இருக்கும். ஒரு பிழையும் ஏற்படாது. கைகள் தாவரத்தோடு பிணைந்துவிடும். புரிகிறதா? உம் விரல்களும் செடியும் சேர்ந்த ஒருவித லயம். உங்கள் மேற்புஜம் வரை அதை உணர முடியும். அவைகளுக்கும் தெரியும். ஒருபோதும் பிழையே ஏற்படுவதில்லை. நீங்களும் அதை உணர முடியும். அந்த நிலையில் உங்களால் எதையுமே தவறாகச் செய்ய இயலாது. புரிகிறதா? உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?’

நிலத்தில் மண்டியிட்டபடி அவரை நிமிர்ந்து பார்த்தாள். அவள் மார்பு கனிவுடன் வீங்கியது. 

அவரது விழிகள் சுருங்கின. தன்னுணர்வுடன் அவர் வேறு பக்கம் பார்த்தார். ‘ஒருவேளை எனக்கும் அது தெரியக்கூடும்’ என்றார். ’சில நேரங்களில், இரவுகளில் அந்த பாரவண்டியில் இருக்கும்போது…’

எலிசாவின் குரல் நசிந்து மெலிதானது. அவரிடம் மனம் திறந்தாள். ‘நீங்கள் வாழ்வதைப் போல் நான் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. ஆனால் நீங்கள் சொல்வதன் ஆழம் எனக்கும் தெரியும். இரவு கருத்திருக்கும்போது – அப்போது விண்மீன்கள் ஏன் மிகக் கூரியதாக இருக்கின்றனவோ – மெளனமும் செறிந்திருக்கும். நீங்கள் உயரே உயரே செல்கிறீர்கள். ஒவ்வொரு கூரிய விண்மீனும் உங்கள் உடலுக்குள் புகுந்துகொள்ளும். அப்படித்தான் அது இருக்கும். சூடாக, கூரியதாக, விரும்பத்தக்கதாக.’

மண்டியிட்ட நிலையிலேயே அவளது கைகள் அவரது எண்ணெய்ப் பிசுக்கு படிந்த கால்சராய்களை நோக்கி நீண்டன. தயக்கம் நிறைந்த அவளது விரல்கள் அநேகமாய் துணியைத் தொட்டுவிடுவது போல் அருகே வந்தன. அதன்பிறகு அவளது கைகள் தரையில் விழுந்தன. அவள் குட்டிபோட்ட நாயைப் போலச் சுருங்கி விழுந்தாள்.

அவர், ‘நீங்கள் சொல்வதைப் போலவே அது இனிமையானது. இரவு உணவுக்கு வழி இல்லாதபோது மட்டும் அத்துணை இனிமையாக இராது’ என்றார். 

அவள் எழுந்து நிமிர்ந்து நின்றாள். அவள் முகத்தில் நாணம் தெரிந்தது. மலர்த்தொட்டியை நீட்டி அவர் கையில் நிதானமாக ஒப்படைத்தாள். ‘இதோ. இதை உங்கள் வண்டியின் இருக்கையில் வையுங்கள். அப்போதுதான் அதைப் பார்த்தபடியே கவனமாக இருக்க முடியும். உங்களுக்கு வேலை தரும் ஏதோவொன்றை நான் தருகிறேன்.’

கொல்லைப்புறம் சென்றவள் பெரிய கலத்திற்குள் கிடந்த இரண்டு பழைய அலுமினிய சாமான்களைத் தேடி எடுத்து வந்து அவரிடம் தந்தாள். ‘இதோ தங்களால் முடிந்தால் இவற்றைச் சரிசெய்யுங்களேன்.’

அவரது பாங்கு மாறியது. சடுதியில் தொழில்முறை பணியாளரென உருமாறினார். ‘நல்லது. இதைப் புதியதென என்னால் மாற்ற முடியும்.’ தனது பாரவண்டியின் பின்புறத்தில் பட்டறைக்கல்லை நிறுவி எண்ணெய்ப் பிசுக்கு கொண்ட கருவிப் பையில் இருந்து சிறிய சுத்தியலை எடுத்தார். கெண்டியின் ஒடுக்குகளை அவர் நயமாக சரிசெய்து அடிப்பதைப் பார்ப்பதற்காக வாயிலைக் கடந்து வந்தாள் எலிசா. அவரது வாய் தீர்க்கமாக தெளிந்திருந்தது. பணியின் கடினமான பகுதியின்போது தன் கீழுதட்டை உள்ளிழுத்து வைத்திருந்தார். 

எலிசா அவரிடம், ‘நீங்கள் பாரவண்டியிலேயே உறங்குவீர்களா?’ என்று கேட்டாள்.

‘ஆம். வண்டியிலேயேதான். மழையோ வெயிலோ உள்ளே உலர்ந்த பசுவைப் போலக் கிடப்பேன்.’

‘அது இனிமையாக இருக்குமென நினைக்கிறேன். நிச்சயம் இனிமையாகத்தான் இருக்கும். பெண்களும் இத்தகைய இன்பம் தரும் செயல்களைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.’

‘இது பெண்களுக்கு எவ்விதத்திலும் பொருந்தாத வாழ்வு.’

அவளது மேலுதடு சற்றே உயர்ந்தபோது பற்கள் வெளிப்பட்டன. ‘அதெப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கள் எப்படிச் சொல்லலாம்?’ என்று கேட்டாள்.

‘எனக்குத் தெரியாது அம்மணி’ என்று அவர் எதிர்வினை அளித்தார். ‘ஆம் எனக்குத் தெரியாது. இதோ உங்களது கொண்டி. முடிந்தது. இனி புதியதை வாங்கத் தேவையில்லை.’

‘எவ்வளவு?’

 ’ஐம்பது செண்டுகள் போதும். எப்போதும் குறைந்த விலையும் நிறைவான சேவையுமே என் குறிக்கோள். அதனால்தான் நெடுஞ்சாலையின் மேலும் கீழும் ஏகப்பட்ட திருப்தியான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறேன்.’

வீட்டிலிருந்து ஐம்பது செண்டுகளை எடுத்து வந்து அவர் கையில் போட்டாள். ‘உங்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு போட்டியாளர் வரக்கூடும். எனக்கும் கத்தரிக்கோல்களை நன்றாகச் சாணை பிடிக்கத் தெரியும். சிறிய சட்டிகளில் இருக்கும் ஒடுக்குகளையும் நேர் செய்வேன். ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்பதை உங்களுக்குக் காட்ட முடியும்.’

அவர் தனது சுத்தியலை மீண்டும் கருவிப் பைக்குள் வைத்தார். சிறிய பட்டறைக்கல்லை ஒளித்தார். ‘பெண்களுக்கு மிகத் தனிமையைத் தரக்கூடிய பணியாக இருக்கும் அம்மணி. அச்சமூட்டும் பணியும்தான். இரவெல்லாம் மிருகங்கள் வண்டிக்கு அடியில் ஓடும்.’ அவர் ஒற்றை மரத்தின் வேரில் ஏறி, நிலையாக நின்று வண்டியின் பின்புறத்தில் கால்வைத்து ஏறினார். தன் இருக்கையில் அமர்ந்து, ‘அம்மணிக்கு மிக்க நன்றி’ என்றார். ‘நீங்கள் சொன்னதைப் போல கிளம்பிச் சென்று சாலினாஸ் சாலையை அடைவேன்.’

‘கவனம். நெடுநேரப் பயணம் என்றால் மணலை ஈரமாகவே வைத்திருக்க வேண்டும்’ என்று சொன்னாள்.

‘மணலா அம்மணி? மணல்? ஆம். கண்டிப்பாக. செவ்வந்தித் தண்டு ஊன்றிய மணலைச் சொல்கிறீர்கள். கண்டிப்பாகச் செய்வேன்.’ நாவில் சப்புக் கொட்டினார். மிருகங்கள் தனக்கான இடத்தில் ஒருங்கின. நாய் பின் சக்கரங்களுக்கிடையே இருந்த தன் இடத்தைப் பற்றிக்கொண்டது. பாரவண்டி திரும்பி அணுகுசாலையினருகே ஊர்ந்து ஆற்றின் நெடுகே தான் வந்த வழியில் சென்றது.

வண்டி செல்வதைப் பார்த்தபடி தன் வேலியின் அருகே நின்றாள் எலிசா. அவளது தோள்கள் நிமிர்ந்து இருந்தன. தலை பின்னோக்கி நகர்ந்திருந்தது. விழிகள் பாதி மூடியிருந்ததால் காட்சி தெளிவற்றதாய் உள் நுழைந்தது. அவளது அதரங்கள் மெளனத்தில் இருந்து ‘சென்று வருக. சென்று வருக’ என்ற சொற்களாகக் குழைந்தன. அதன் பிறகு ‘மிக வெளிச்சமான திசை அது. அங்கே ஒரு ஜொலிப்பு தோன்றுகிறது’ என்று முணுமுணுத்தாள். அவளது மென்குரலே அவளைத் துணுக்குறச் செய்தது. தன் தலையை உலுக்கிக்கொண்டு யாரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டாள். நாய்களின் ஊளைச்சத்தம் மட்டுமே கேட்டது. புழுதியில் உறங்கிய அவை தம் தலைகளை உயர்த்தி அவளைப் பார்த்த பிறகு தம் தாடைகளை நீட்டி முறித்து மீண்டும் உறங்கின. எலிசா திரும்பி விரைந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

சமையலறையில் அடுப்புக்குப் பின்னால் கைவிட்டு நீர்த்தொட்டியைத் தடவினாள். மதிய சமையலின் காரணமாக அதில் கொதிநீர் நிறைந்திருந்தது. குளியலறையில் தனது மண் படிந்த உடைகளைக் கழற்றி மூலையில் எறிந்தாள். பின்னர் தன் கால்கள், தொடைகள், இடுப்பு, மார்பு, கைகள் என்று உடலின் ஒவ்வொரு பகுதியாகச் சிவந்து தோல் நோகும் வரை படிகக்கல்லால் தேய்த்தாள். துண்டால் துடைத்து ஈரம் நீங்கியபின் படுக்கையறையின் நிலைக்கண்ணாடியில் தன் உடலைப் பார்த்தாள். தன் முலைகள் வெளிப்புறமாகப் புடைத்திருக்குமாறு வயிற்றை உள்ளிழுத்துப் பிடித்தாள். தன் தோளின் பின்பகுதியைத் திருப்பிப் பார்த்தாள்.

சற்று நேரத்திற்குப் பிறகு மெதுவாக உடையணிந்தாள். தன்னிடம் இருந்த புதிய உள்ளாடையையும் தன் அழகைக் கூட்டிக் காட்டும் இறுக்கமான காலுறைகளையும் அணிந்தாள். தலையை அழகாக வாரி, புருவத்திற்கு மையிட்டு, அதரங்களைச் சிவப்பாக்கினாள்.

ஒப்பனையை முடிப்பதற்குள் ஹென்றியும் அவரது உதவியாளரும் காளைகளை ஓட்டி வருவதை இடியோசை போன்ற குளம்படிகளாலும் கத்தல்களாலும் அறிந்தாள். வாயில் இழுத்து மூடப்படுவதைக் கேட்டதும் ஹென்றியின் வருகைக்காக அணியமானாள்.

அவரது காலடிச் சத்தம் தாழ்வரையில் கேட்டது. ‘எலிசா எங்கே இருக்கிறாய்?’ என்று விழித்தபடி அவர் உள்ளே நுழைந்தார்.

‘என் அறையில். உடையணிந்துகொண்டிருக்கிறேன். முற்றிலும் நான் அணியமாகவில்லை. நீங்கள் குளிக்கக் கொதிநீர் இருக்கிறது. நேரமாகிறது.’

அவர் குளிக்கும் சத்தம் கேட்டபோது எலிசா அவரது கரிய புற உடையைக் கட்டில் மீது வைத்தாள். அதனருகே காலுறைகள், மேற்சட்டை, தொங்கி அனைத்தையும் வைத்தாள். கட்டிலுக்கு அருகே கீழே பளபளப்பாக்கப்பட்ட சப்பாத்துகளையும் வைத்தாள். திண்ணைக்குச் சென்றவள் விறைப்பாக அமர்ந்தாள். நதிச்சாலையை நோக்கியபோது அலரிப்புதர்களின் வரிசை மஞ்சளாகப் பழுத்த இலைகளால் தொடர்ந்து நிரையாக நின்றது சாம்பல் நிற மூடுபனியினூடே மெல்லிய சூரிய ஒளிப்பட்டையாகக் காட்சியளித்தது. சாம்பல் மதியத்தில் இது மட்டுமே நிறமாக இருந்தது. அவள் நகராமல் நெடுநேரம் அமர்ந்திருந்தாள். அவள் விழிகள் அரிதாகச் சிமிட்டின.

ஹென்றி கதவைத் திடுமெனத் திறந்து தன் தொங்கியை உட்சட்டைக்குள் திணித்தபடி வெளியே வந்தார். எலிசா இன்னும் விறைப்பாக உடலை வைத்துக்கொண்டதும் முகம் இறுக்கமடைந்தது. ஹென்றி முன்கூட்டியே நின்று அவளைப் பார்த்து, ‘எலிசா? என்னவாயிற்று இன்று? நீ மிகவும் நயமாக இருக்கிறாயே!’ என்றார்.

’நயமாகவா? நான் நயமாக இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ‘நயம்’ என்றால் என்ன பொருள்?’

ஹென்றி தடுமாறி, ‘தெரியவில்லை. ஆனால் வித்தியாசமாக இருக்கிறாய். வலுவாகவும் மகிழ்ச்சியாகவும்’ என்றார்.

‘நான் வலுவாக இருக்கிறேனா? ஆம். வலுவாக. வலு என்பதை என்ன பொருளில் சொல்கிறீர்கள்?’

அவர் குழம்பினார். தடுமாற்றத்துடன், ‘நீ ஏதோ ஒருவகை விளையாட்டு ஆடுகிறாய்’ என்றார். ‘ஆம். விளையாட்டு. கன்றுக்குட்டி ஒன்றைக் காலால் முட்டி உடைப்பவள் போல வலுவாகவும் இருக்கிறாய். அதேசமயம் அக்கன்றைத் தர்பூசணியைப் போலத் தின்றுவிடக் கூடிய அளவு உற்சாகத்துடனும் இருக்கிறாய்.’

ஒரு நொடி தன் விறைப்பை அவள் தளரவிட்டாள். ‘ஹென்றி அப்படிப் பேசாதீர்கள். நீங்கள் சொல்வது என்னவென்று நீங்களே அறியமாட்டீர்கள்.’ அவள் மீண்டும் முழுமையைச் சூடிக்கொண்டாள். ‘நான் வலுவானவள்’ என்று செருக்குடன் சொன்னாள். ‘ஆனால் எத்தனை வலுவானவள் என்பதை இதுவரை அறியாமலே இருந்தேன்.’

இழுவை வண்டி நின்ற பந்தலை நோக்கித் தாழப் பார்த்துவிட்டு அவளை நோக்கித் தன் பார்வையைத் திருப்பிய ஹென்றி, ‘நான் மகிழுந்தை எடுத்து வருகிறேன். நீ மேலங்கி அணிந்து வா’ என்றார்.

எலிசா வீட்டிற்குள் சென்றாள். அவர் வண்டியை ஓட்டி வாயிலுக்கு வந்ததையும் வண்டியின் இயந்திரம் ஒலி குறைவதையும் கேட்டாள். ஆயினும் தொப்பியை அணிய நெடுநேரம் எடுத்துக்கொண்டாள். அதைக் கழற்றினாள். திருப்பினாள். ஒருபக்கம் அழுத்தினாள். ஹென்றி மகிழுந்தை நிறுத்தியதும் அவள் மேலங்கி அணிந்து வெளியே வந்தாள். 

சிறிய வண்டி புழுதியிலும் மேடு பள்ளங்களிலும் ஏறியிறங்கி நதிச்சாலையில் பயணம் செய்தது. அதன் ஒலியாலும் நகர்வாலும் சில பறவைகள் பறந்தன. சில முயல்கள் புதர்களுக்குள் மிரண்டு ஓடின. இரண்டு நாரைகள் இறக்கைகள் படபடக்க அலரி வரிசையின் மேல் பறந்து நதிப்படுகையில் இறங்கின.

நெடுந்தொலைவில் ஒரு கருமையான கட்டினை எலிசா பார்த்தாள். அவளுக்கு அது என்னவென்று தெரிந்துவிட்டது.

அவர்கள் கடந்துசெல்லச் செல்லப் பார்க்காமல் இருக்க முயன்றாள். ஆனால் அவளது விழிகள் அவளுக்குக் கீழ்படியவில்லை. அவள் சோகமாக, ‘சாலையின் ஓரத்தில் அவர் இவற்றைத் தூக்கி எறிந்திருக்கக்கூடும். இவற்றால் அவருக்கு ஒன்றும் பலன் இருக்கப் போவதில்லை என்பதால் மலர்த்தொட்டியை மட்டும் வைத்துக்கொண்டிருப்பார்’ என்று முனகலுடன் தனக்குள்ளேயே விவரித்துக்கொண்டாள். ‘அவர் மலர்த்தொட்டியைப் பாதுகாப்பாக வைக்கத் தேவை இருக்கும். அதனால்தான் அவரால் தூக்கி எறிய முடியவில்லை.’

மகிழுந்து ஒரு வளைவில் திரும்புகையில் அவள் முன் சென்ற பாரவண்டியைக் கண்டாள். மூடுதுணியிட்டிருந்த வண்டியும் அதில் இருக்கும் அணியினரும் மகிழுந்து கடப்பதைப் பார்த்துவிடாதபடி அவள் முழுமையாகத் தன் கணவரை நோக்கித் திரும்பினாள்.

ஒரு நொடியில் எல்லாம் கடந்துவிட்டது. அச்செயல் நடந்து முடிந்துவிட்டது. அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

வண்டியின் இயந்திரச் சத்தத்தை மீறிய ஒலியில், ‘இன்றிரவு இனிமையாக இருக்கும். நல்ல இரவுணவு கிட்டும்’ என்று கத்தினாள்.

‘இப்போது மீண்டும் மாறிவிட்டாய்’ என்று ஹென்றி செல்லமாகக் குறைபட்டுக்கொண்டார். அவர் சக்கரத்தில் இருந்து ஒரு கையை எடுத்து அவள் கால் மூட்டைத் தட்டிக்கொடுத்தார். ‘நான் உன்னை அடிக்கடி உணவகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அது நம் இருவருக்குமே நன்மை பயக்கும். நிலத்தில் பணியாற்றி நாம் மிகவும் இறுக்கமடைந்து விடுகிறோம்.’

’ஹென்றி உணவின்போது நாம் ஒயின் அருந்தலாமா?’ என்று கேட்டாள். 

‘கண்டிப்பாக. அதில் ஒன்றும் பிழையில்லை. அருந்தலாம்.’

சிறிது நேரம் அவள் அமைதி காத்தாள். பிறகு, ‘ஹென்றி அந்த பணயச் சண்டையில் ஆண்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொள்வார்களா?’ எனக் கேட்டாள். 

‘சில நேரங்களில் சின்னக் காயங்கள் ஏற்படும். அடிக்கடி இல்லை. ஏன்?’

‘அவர்கள் எப்படி மூக்கை உடைத்துக்கொள்வார்கள், மார்பில் எப்படி ரத்தம் ஒழுகும், கையுறைகள் எப்படி கணத்து குருதியால் நிறையும் என்றெல்லாம் படித்திருக்கிறேன்.’

அவளைப் பார்த்துவிட்டு, ‘என்னவாயிற்று எலிசா? நீ இவற்றையெல்லாம் படிக்கிறாய் என்று எனக்குத் தெரியாதே’ என்றார். அவர் மகிழுந்தை ஒரு நிறுத்தத்தில் மெதுவாக்கி வலதுபுறம் இருந்த சாலினாஸ் நதிப்பாலத்தில் திருப்பினார்.

‘பெண்கள் இந்தச் சண்டைகளுக்கு வருவார்களா?’ என்று கேட்டாள்.

‘கண்டிப்பாக… சிலர் வருவார்கள். என்ன எலிசா? நீயும் போக விரும்புகிறாயா? உனக்கு அது பிடிக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் நீ விரும்பினால் நிச்சயம் அழைத்துச் செல்வேன்.’

அவள் இருக்கையில் தளர்வாக அமர்ந்தாள். ‘இல்லை இல்லை. எனக்குச் செல்ல விருப்பமில்லை. கண்டிப்பாக இல்லை.’ அவள் முகம் அவரிடமிருந்து வேறு திசைக்குத் திரும்பியது. ‘நாம் ஒயின் அருந்துவதே போதுமானது. அதுவே அதிகம்.’ ஒரு முதியவளைப் போலத் தான் வலுவிழந்து அழுவதைத் தன் கணவன் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகத் தனது மேலங்கியின் கழுத்துப்பட்டையை நிமிர்த்தினாள்.

*

ஆங்கில மூலம்: The Chrysanthemums by John Steinbeck, John Steinbeck’s Short Stories (Bloom’s Modern Critical Interpretations), Published by Checkmark Books, May 2011 Edition.