மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 6): இளையராஜாவும் எஸ்.பி.பியும் – வரலாற்றில் இருவர்

by ஆத்மார்த்தி
0 comment

தேவைப்படுகிற துல்லியத்தில் எந்தவொரு பாடலையும் பதிவு செய்வதுதான் இசையமைத்தலின் முக்கியக் கட்டம். ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கென நிலையான செல்திசைப் பின்னணி ஒன்று அமையும். மேடைக் கச்சேரிகளிலோ நேர்முகப் பேட்டியிலோ இசையுடனோ இன்றியோ பாட முனையும்போது அந்தப் பாடலின் பதிவுக் கணத்திற்குத் திரும்பச் சென்று அங்கே நின்றபடி பாடுவதுதான் துல்லியமான மறுநிகழ்தலை வாய்த்துத் தரும். பாடல்களை அவற்றின் பதிவுத் துல்லியத்தோடு எப்போதும் பாடுவது இயந்திரத்தாலன்றி மனித எத்தனத்தால் முடியாத ஒன்றுதான். முன்பே சொல்கிறாற் போல் எந்தப் பாடலையுமே அதனதன் யதார்த்தப் புள்ளியிலிருந்து இடவல விலக்கங்களினூடேதான் அடுத்தடுத்த முறைகளில் பாட முடியும் என்பது பாடலின் தன்மை. உலக அளவில் மாபெரும் குரல் மேதைகள் தாம் பாடிய கானங்களை தம் குரலொப்பங்களாகவே மாற்றி எப்போதும் ஸ்ருதியும் லயமும் பிசகாமல் தொனியும் அழுத்தமும் குன்றிக் கூடாமல் அதே துல்லியத்தை மீட்டெடுத்தபடி பாடுவதை சாகசமாக அல்ல, இயல்பாகவே மாற்றிக்கொள்வர். இந்தியத் திரையுலகம் கண்டெடுத்த பூரணக் குரல் வைரம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குமான தொழில் பந்தத்தைச் சற்று அருகே சென்று நோக்கலாம். இருவரும் இணைந்து 350 படங்கள் வரை பணியாற்றி இருக்கக்கூடும். பாலுவின் குரலில் இந்தி, மலையாளம் இரண்டு மொழிகளிலும் மிகவும் குறைவான பாடல்களையே இசைத்திருக்கும் ராஜா, தமிழிலும் தெலுங்கிலும் மிக அதிகமான பாடல்களை பாலுவுடனான இணைவில் உருவாக்கி உள்ளார். கன்னடத்தில் ராஜா இசையமைத்த நாற்பதுக்கும் குறைவான படங்களில் பெரும்பாலான படங்களில் பாலு பாடிய பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

எஸ்.பி.பி பாடவந்த முதல் ஏழு வருடங்களில் பிற இசையமைப்பாளர்களுக்கும் அவருக்குமான பாடல் பந்தம் குறிப்பிடத்தகுந்தது. புறந்தள்ள முடியாத புதிய குரல்வாகுடனான பாலுவின் குரலை இசையமைப்பாளர்கள் எல்லோருமே அங்கீகரித்தனர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், வி.குமார், சங்கர் கணேஷ் ஆகியோர் வழங்கிய பல பாடல்களைப் பாடி எழுபதுகளின் தொடக்கத்திலேயே கவனத்துக்குரிய பாடகரானார் பாலு. இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையிலான அறிமுகம் கிட்டத்தட்ட பாலுவின் இந்த முதல் ஏழு வருடங்களில் தொடங்கியதாக கருத முடிகிறது. இளையராஜா உப இசைஞராகப் படங்களிலும் மேடை கச்சேரிகள், தனியிசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற இசைக்குழுவின் மூலமாக நிகழ்த்திக்கொண்டிருந்த அன்னக்கிளிக்கு முந்தைய காலத்தில் அவருக்கு நெருக்கமாகத் திகழ்ந்த நண்பர்களில் பாலுவும் ஒருவர். இளையராஜா இசையில் அதிகப் பாடல்களைப் பாடிய பாடகர்களில் பாலு முதன்மையானவர். 

அவருக்கு அடுத்து டி.எம்.சௌந்தர்ராஜன், ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், மனோ, ஹரிஹரன் ஆகிய பாடகர்கள் அதிகம் பாடியுள்ளனர். ஷங்கர் மகாதேவன், கார்த்திக், திப்பு, தேவன் துவங்கி சமீபத்திய பாடகரான சித் ஸ்ரீராம் வரை இளம் தலைமுறைப் பாடகர்களும் ராஜாவின் பாடல்களைப் பாடியுள்ளனர். இளையராஜா தன் சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் தவிர எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன், ப்ரேம்ஜி அமரன், வெங்கட்பிரபு ஆகியோரும் அவரது இசையில் பாடியிருப்பது விஷயமே. இன்னும் கூடுதல் சுவைக்கு இதனைச் சொல்லலாம். 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னால் இளையராஜா இசையமைத்த படங்கள் சுமார் 200 எனக் கொண்டால் அவற்றில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள் எத்தனை இருக்கும்? இருபது பாடல்கள்கூட இல்லை என்பதுதான் அந்தத் தகவல். பாலசுப்ரமணியத்துடனான இளையராஜாவின் பயணம் கிட்டத்தட்ட 18 வருட காலம், அதாவது 1978 முதல் 1995 வரை அதிகம் பின்னிப் பிணைந்திருந்ததாகக் கொள்ளமுடியும்.

பாலுவின் குரல் விசேஷங்களாலும் விநோதங்களாலும் நிரம்பி தென்னிந்தியத் தன்மை கொண்டு மிளிர்ந்தது. தென் திசையின் நான்கு மொழிகளைப் பாடும் போதும் அந்தந்த நிலத்தின் மனவோட்டத்தைத் தக்கவைத்தபடி அவரால் பாட முடிந்தது. பாலு பாடிய இந்திப் பாடல்கள் நன்கு ஒலித்தவையே என்றாலும் இந்திப் பாடல்களைப் பாடும் போது பாலுவின் குரல் ஓரிடத்தில் நின்றுகொண்டது. சல்மான் கானின் பல படங்களுக்கு அவர் பாடினார். எனினும், அதே சல்மானுக்கான நிரந்தரக் குரல் தேர்வாக அவரைச் சொல்ல முடியவில்லை. பாலுவை விடவும் அதிகப் பாடல்களை சல்மானுக்காகப் பாடியவர்கள் உள்ளனர். இந்திப் பாடல்களின் பொது நகர்தல் முறைமை சற்றே மூக்கிலிருந்து பாடுகிறாற் போல் முன்தள்ளிப் பாடுவது. குமார் ஸானு ஓர் உதாரணம். அப்படியான நிலத்தில் பாலு இத்தனை தொலைவு சென்றதென்பதே கடினமான சாதனைதான்.

பாலுவின் குரல் எழுபதுகளின் இறுதியில் வந்தடைந்த இடம் நுட்பமானது. அன்னக்கிளியில் பாலு ஒரு பாடலையும் பாடவில்லை. ராஜாவின் முதல் மூன்று படங்களை இயக்கியவர்கள் தேவராஜ்-மோகன் இயக்குநர் இணை. இரண்டாம் மூன்றாம் படங்களில் பாலு பாடிய பாடல்கள் பேசப்பட்டன. அதுவரையிலான தசாப்தத்தில் அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் மித கன வகைமைப் பாட்டுகள். மெலடி- அதன் சார்புடைய பாடல்கள். கனத்து ஒலிக்கக்கூடிய குரலாக டி.எம்.எஸ் அன்றைய முக்கிய நடிகர்கள் நாயகர்கள் அனைவருக்குமான ஒரே குரல் சரணாக விளங்கி வந்திருந்தார். இன்னொரு புறம் ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற சீனியர்கள் துவங்கி கே.ஜே.யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் ஆகியோரும் நிறைய பாடல்களை எழுபதுகளில் கவனப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் இளையராஜாவின் வருகை திரையிசை மீதான புதிய கவனக் குவியமாக முன்னெழுந்தது.

ராஜா பாலுவுக்கு 1980ஆம் ஆண்டுவரை பாடத் தந்த பாடல்கள் ஒவ்வொன்றுமே குறைந்தபட்ச சவாலுடன் இருந்தது. பாலுவின் குரலை அப்பாடலின் இயல்பான அங்கமாகவே கருதவேண்டிய முன்தேவை ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. இளையராஜா, தான் இசைக்க வந்த காலத்தில் அதுவரையிலான பாடலின் தோற்றம், கட்டுமானம், செல்திசை, இடையிசை, உபகுரல்கள், தொனி, சரணங்களுக்கு இடையிலான இசைமாற்றம், பாடலிடை மௌனம் எனப் பலவகைகளிலும் மாற்றங்களை முயன்றவண்ணம் இருந்தார். பாடலின் சூழல், அதன் உட்பொருள், குரலில் நிலவ வேண்டிய நடுக்கம், சாய்வு, குரல் அடைய வேண்டிய திரிபுகள் ஆகியவற்றையும் பாடலின் உருவாக்க முறைக்குள் கொணர்ந்தார். மௌனம், புறச் சப்தங்கள் ஆகியவற்றையெல்லாம் பாடலுக்குட்படுத்தி அவற்றைப் பாடலின் உப அணிகலனாக மாற்றுவதையும் செய்துபார்த்தார். அப்படியான பல பாடல்களை இளையராஜா பாடுவதற்கான பெரும்தேர்வாக பாலுவின் குரலைத் தேர்ந்தெடுத்தார் என்பது கூறவந்த செய்தி.

‘ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்’ என்ற பாடல் உறவாடும் நெஞ்சம் படத்தில் இடம்பெறுவது. ராஜாவின் ஆரம்பகாலப் பாடல். இதில் மைய இசைச்சரட்டினை உற்று நோக்கினால் ஒரு புறச்சப்தம் ஒழுங்கற்ற ஒழுங்கோடு பாடல் முழுவதிலும் ஒலிப்பதை உணரலாம். பாடலைக் கேட்கிற நேயரின் மனக்கவனம் பாடல் ஆரம்பிக்கையில் அந்த முரண் ஓசையில் குவியும். அதனை கவனிக்கத் தொடங்குவதிலிருந்தே பாடலுக்குள் ஆழ்வதற்கான அழைப்பாக அந்த ஓசை மாற்றம் பெற்று மெல்ல இசையில் சூழ்ந்து அந்தச் சப்தம் பாடலுக்குள் இருந்துகொண்டே அழிவதைக் காணலாம். அப்படி அழியும் இடத்தில் பாடலுக்குள் நுழைவதற்கான ஒழுங்கான நகர்தலைத் தயாரித்துத் தந்திருப்பதை உணர முடியும். இணைப்பிசைச் சரடுகள் தொன்மமும் புத்தம் தன்மையும் சரிவிகிதத்தில் கலத்து நிரடியபடி சோகச் சாய்வோடு சரணத்தினுள் புகுவது பாடலின் யவ்வனம். இந்தப் பாடலை ஜானகி சற்றே ஓங்கியும் பாலு சிறிது அடங்கியும் பாடியிருப்பது கூறத்தக்கது. “ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்” என்பதை பாலு விரித்து வியாபிப்பது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வண்ணமாய் நிறைவது எழில். மொத்தப் பாடலுமே ஆனந்தக் கலக்கத்தில் ஆழ்கிற மனவோசையாகவே புரிந்து நிறைவது சிறப்பு.

நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை என்ற பாடல் பாலூட்டி வளர்த்த கிளி படத்தில் இடம்பெறுவது. ஜானகியும் பாலுவும் பாடிய டூயட். இந்தப் பாடல் பல்லவியின் இரண்டாம் அடியின் நகர்தல், பாலு இசையமைத்த சிகரம் படப்பாடலான ‘இதோ இதோ என் பல்லவி’ பாடலில், ‘நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா‘ என்ற வரியின் நகர்தலோடு அப்படியே ஒத்துப்போவது ரசம். பாலு பாடிய ‘நான் பேசவந்தேன்‘ பாடல் அப்போதைய வழக்கங்களை மீறிய திருப்புதல்களோடு வளைந்து நெளிந்து இறங்குகிற மலை நதி ஒன்றின் பெருவரவாக நிகழ்ந்தது. சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற ‘என் கண்மணி என் காதலி இளமாங்கனி பாடல் அனாயாசமான உயரத்தை அடைந்தது. பாடல் நிகழும் சூழலை அப்படியே உள்வாங்கிப் பிரதிபலித்த பாடலின் உரு பெரிதும் பேசப்பட்டது. பேருந்துப் பயணத்தில் இடம்பெறும் பாடலுக்குள் பயணத்தின் சப்தங்களும் குரல்களும் துல்லியம் வழுவாமல் இடம்பெற்றன. ரேடியோக்களில் அதிகம் கேட்புக்கு உள்ளான பாடல்களில் ஒன்றான இதனை சுசீலாவுடன் இணைந்து பாடினார் பாலு. 

சுசீலாவுடன் பாலு பாடிய இன்னொரு பாடல் அச்சாணி படத்தில் இடம்பெற்ற ‘தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு’. பாலு இந்தப் பாடலைப் பாடிய குரலில் சன்னமும் துல்லியமும் ஒருங்கே பெருக்கெடுத்தது. இதன் இன்னோர் சிறப்பம்சம் பாடலினூடாக பாலு படர்த்தியிருக்கும் சின்னஞ்சிறு நடுக்கம். பொதுவாக எழுபதுகளின் இறுதிக்கு முன்னால் அப்படியான சிறு-நுட்ப-நிரவல்களை முன்னெடுத்த பாடல்கள் யாவற்றிலும் அப்படியான சங்கதி பாடலின் மைய ஈர்ப்புப் புள்ளியாகவே மாற்றப்பட்டிருக்கும். ‘ஓராயிரம் பார்வையிலே’ என்ற பாடலாகட்டும், ‘காதோடுதான் நான் பாடுவேன்’ பாடலாகட்டும், இப்படி நிறைய பாடல்களை உதாரணப்படுத்த முடியும். இந்தப் பாடல் எங்கே எங்ஙனம் தனிக்கிறதென்றால் பாலு படர்த்திய நடுக்கம் பாடலின் உள்ளே உறையுமே தவிர துருத்திக்கொண்டு முன்னகர்ந்து விடாமல் மேலாண்மை செய்யப்பட்டிருக்கும். இதன் பொதுப்பலனை இளையராஜா, பாலசுப்ரமணியம் இருவருக்குமே பகிர்ந்தளிக்க இயலும்.

ரஜினி அப்போதுதான் வரவான நட்சத்திரம். அவர் தன்னுடைய நடிக வாழ்க்கையில் பலவிதமான வேடங்களேற்று நடித்த முதல் நான்கு வருடப் படங்களைச் சொல்ல வேண்டும். எதிர்நாயகனாகவும் நண்பனாகவும் தியாகம் செய்யும் அண்ணனாகவும் மனம் நொந்த மனிதனாகவும் பலவிதக் குற்றங்களை நியாயப்படுத்துகிறவனாகவும் அவருடைய வேடமேற்றல்கள் நிகழ்ந்துகொண்டிருந்த போது அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்ட படங்களிலொன்று ‘புவனா ஒரு கேள்விக்குறி‘. எண்பதுகளில் தன் சமகால சகாக்கள் எல்லோரையும் முந்திச்சென்று முதலிடத்தைப் பற்றிக்கொண்டவர் ரஜினி. எண்பதாம் ஆண்டுவாக்கில் தமிழின் உச்ச நட்சத்திரக் குரலாக மாற்றம் அடைந்தவர் பாலு. தென்னிந்தியத் திரையுலகின் அடுத்த தசாப்தத்தின் அதிகத் தேடலுக்கான நட்சத்திர இசைஞராக பரிணமித்தவர் இளையராஜா. இந்த மூவருமே அந்தந்த இடங்களை நோக்கிய பயண நகர்தல் காலமாகவே எழுபதுகளின் பிற்பாதி ஐந்து வருடங்களைக் கருதவேண்டியிருக்கிறது.

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் ‘விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது’ என்ற பாடலை நாயகத்துவம் ஏதும் தொனிக்காமல் சாமான்யமும் சன்னமும் குழைந்த குரலில் ரஜினிக்காகப் பாடினார் பாலு. அதே குரலில் சோகம் சேர்த்துப் பாடிய பாடல் ‘ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள’ என்ற பாடல். இசை சற்றே வலிந்து பெருகுகிற அதே சமயத்தில் குரலை இருளுறையும் தனித்த ஆழத்தில் நிலைக்கச் செய்து பாடிய விதம் பரவசம்.

இன்னொரு ரஜினி பாடல் முள்ளும் மலரும் படத்தில் இடம்கொண்ட ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’. ரஜினியின் இரசிகர்களுக்கு ஆரம்பகால ரஜினியை மீண்டும் மீண்டும் நினைவிலாழ்த்திய முதல் சில பெருவிருப்பப் பாடல்களுள் இதுவும் ஒன்று. முந்தைய பாடலின் குரலுக்கு நேர்மாற்றத் திசையில் விட்டேற்றித்தனமும் ‘என்ன நடந்தால் என்ன?’ என்கிற விரக்தியும் பாடல் முழுவதிலும் தொனிக்கும் அதே வேளையில், தற்கணத்தை வாழ்கிற பற்றறுதலின் கேளிக்கை ஒன்றினையும் பிரதிநிதித்துவப்படுத்தியது அந்தப் பாடல்.

இதே காலகட்டத்தில் கமல்ஹாசனுக்கு இளையராஜா இசைத்த சட்டம் என் கையில் படத்தின் ‘சொர்க்கம் மதுவிலே’ பாடலில் மனவாட்டத்தை, குடியில் தன்னை ஆழ்த்திக்கொள்கிறவனின் தோல்விக் கேவலை, சொல்ல முடியாத இரகசியத்தின் சொல்லக்கூடிய சைகைகளை, கடந்தே ஆகவேண்டிய வதங்கல் காலத்தின் முட்பரவல் கணங்களை, ஒரு கொண்டாட்டத்தின் ஆரவாரத்துக்குள் சூசகமாய் தன் கையறுநிலையைக் கலந்து நிசப்தித்துக்கொள்கிற தனியனின் வதைபெருகும் சூழலை என எல்லாவற்றையும் தன் குரலில் பிரதிபலித்தார் பாலு. ஆட்டமும் வேக இசையும் கமல்ஹாசன் என்கிற யுவ-விருப்ப நாயகனின் நளினம் கலந்த நடனமும் இளையராஜாவின் பெருக்கெடுக்கும் இசையும் உள்ளும் புறமுமாய் கலந்த பிற்பாடும் இன்றளவும் ‘சொர்க்கம் மதுவிலே’ பாலுவின் குரலொப்பப் பாடல்களில் ஒன்றாக நீடிக்கிறதென்றால் அதன் பின்னே அவர் உள்ளிட்ட தன் திறன் சொற்பமல்ல. நோய்மையின் இறுதியில் ஊசலாடுகிற உயிரொன்றின் ஈசீஜி கோடுகளைப் போல் ஏற்ற இறக்கங்கள் நிரம்பித் தொனித்தது அந்தப் பாடல். மலைவாழ்வில் நன்கு பழகியவன் குதிரை பவனியில் விரைகிற இலாவகத்தோடு அதனைப் பாடினார் பாலு. பல படங்களில் கமலுக்காக பாலு பாடிய பாடல்கள் காலகட்டக் காற்றை ஆட்சி செய்தன.

பிற்காலத்தில் ராஜா இசையில் இளமை ஊஞ்சலாடுகிறது, மீண்டும் கோகிலா, ராம்லட்சுமண் ஆகிய படங்களில் கமலுக்காக பாலு பாடிய பாடல்கள் எல்லாமே பிரபலமாகின. உல்லாசப் பறவைகளுக்காக பாலு பாடிய ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’ ஒரு கவிதை. குரு படத்தின் ‘பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா’ பாடல் காற்றை தன் பிடிக்குள் கொணர்ந்த டூயட். எண்பதுகளில் சாகர சங்கமம், ஸ்வாதிமுத்யம், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம், எனக்குள் ஒருவன், காக்கிச்சட்டை, அந்த ஒரு நிமிடம், விக்ரம், காதல் பரிசு, பேர் சொல்லும் பிள்ளை, உன்னால் முடியும் தம்பி போன்றவற்றில் கமல்ஹாசனுக்காக ராஜா இசையில் பாலு பாடியவை பிரகாசித்தன. இதே காலகட்டத்தில் பாலு பாடாத பல கமல் படங்களும் இளையராஜா இசையில் வெளியாகின. பாலுவின் குரல் கமலுக்குப் பெரிதும் பொருந்தியதாகவே இரசிகர்களின் விருப்பமும் ஏற்பும் இருந்தது. புன்னகை மன்னனில் பாலு-கமல்-ராஜா கூட்டணி விண்ணைத் தொட்டது. அந்தப் படத்தில் கமலாகவே மாறி கமலுக்கான பாட்டுகளை வழங்கினார் பாலு. 

https://overseasrights.com/uploads/news_gallary/110867485620190527155733sp-balu-ilaya.jpg

சத்யா படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை’ பாடலை பாலு பாடிய விதம் அலாதியானது. சிந்துபைரவி ராகத்தில் இளையராஜா உருவாக்கிய பாடல்களின் சரளிவரிசையில் இது அலாதியான இன்பத்தை நிகழ்த்தி ஒலிக்கிறது. இதனை பாலுவுடன் இணைந்து பாடியவர் லதா மங்கேஷ்கர். அவருடைய மழலைத் தமிழுடன் தன் குரலை அடங்கிச் செல்லும் வண்ணம் ஒலித்தார் பாலு. அனேகமாக பாலுவின் கடைசி இருபது பாடல்களில் ஒன்றாக இடம்பெறக்கூடிய தெலுங்குப் பாடல் ஒன்று- டிஸ்கோ ராஜா (2020) என்ற படத்துக்காக எஸ்.தமன் இசையமைத்த ‘நுவ்வு நாதோ ஏமன்னாவோ’. இந்தப் பாடல் மொத்தமும் இயைந்து நகர்கிற மைய இசைக்கோர்வை, இளையராஜா இசையமைப்பில் பாலு பாடிய ‘வளையோசை கலகலகலவென‘ பாடலின் மைய இசைச்சரடு என்பதை உணர முடிகிறது. இடையில் 23 வருடங்களில் அதே பாலுவால் எத்தனை ஆயிரம் பாடல்களுக்கு அப்பால் அதே ட்யூனுக்குள் இன்னொரு முறை குரல் நாட்டியமாட முடிந்திருக்கிறது..? சத்யா படத்தின் வளையோசை பாடலுக்காக ராஜா அளித்த அழிவற்ற இசையை இன்னும் வியக்க முடிகிறதல்லவா?

டி.எம்.எஸ்ஸூக்கும் பாலுவுக்குமான பிரதான வேறுபாடு ஒன்றுண்டு. டி.எம்.எஸ், தான் பாடுகிற முகங்களுக்காக தனித்தனிக் குரல்களைத் தன்னுள்ளிருந்தே தயாரித்து அளித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மற்றுமல்லாது ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர் வரைக்கும் அது நீண்டுகொண்டே சென்றது. ஒரு காலகட்டத்தில் அந்த யுக்தி பெருவெற்றி அடையாமல் இல்லை. கால மாற்றத்திற்கப்பால் கமல், ரஜினி ஆகிய புதிய நட்சத்திர உதய காலத்தில் டி.எம்.எஸ்ஸால் தன் முன்காலப் பலிதத்தை அப்படியே தொடர்ந்தெடுக்க இயலாமற் போனது. இந்த வெற்றிடம் வெளித்தெரியாதது. இங்கே டி.எம்.எஸை தொடர்ந்து உருவாகிவந்த பாலு, அதே போல் தனக்கான யுக்தியைத் தயாரித்திருந்தாரேயானால் அதற்கேற்ப வெற்றி, தோல்வி, மையச் சமநிலை என இவற்றில் எதையும் மாறி மாறி உருவாக்கிவிடுபவராக இருந்திருக்கக்கூடும். இங்கேதான் பாலு வேறுபட்டார். தான் பாடுகிற நடிகர்களின் முகமொழி, உடல்வாகு இவற்றிலிருந்து தன் மனத்தை அவர்களுக்கேற்ப மாற்றி அங்கேயிருந்து பாட ஆரம்பித்தார். பருவத்திற்கேற்ப அந்தந்த நடிகர்களின் உடல், மனம், முகம், பாத்திரம் இன்னபிறவெல்லாம் எங்கனம் மாறுகிறதோ அப்படி தன் குரலையும் மாற்றங்களுக்கு ஆட்படுத்தியபடி அவர்களைத் தன் குரலால் தொடர்ந்தார். பேசும் போது “லிப்-சிங்க்” எனும் உதட்டசைவு, பின்குரல் இரண்டும் ஒத்திசைகிற பாங்கு பற்றிய ஓர்மை உண்டல்லவா? அப்படி தன் மனதை ரஜினி, கமல், சிவக்குமார் தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய சிங்கங்கள் வரைக்கும் மாற்றி மாற்றிப் பாடலானார். இது எண்பதுகளின் ஆரம்பம் வரைக்கும் தொடர்ந்தது.

அங்கேயும் ஒரு திருப்பம். டி.எம்.எஸ் என்ற மகா பாடகனுக்கு வாய்க்காத மற்றொன்று எஸ்.பி.பிக்கு வாய்த்தது. அதனைச் சாத்தியப்படுத்தியவர் இளையராஜா. இரண்டு பேர் பகிர்ந்துகொண்ட குதிரைச்சவாரி அது. பத்தாண்டு காலம் நீடித்தது. அந்தச் சவாரி இந்தியத் திரையுலகத்தில் இன்றளவும் மறக்கவோ மறுக்கவோ முடியாத பல பாடல்களைப் பேசுபொருளாக மாற்றித் தந்தது. தமிழ் மனங்களின் கூட்டு இரசனையில் மாபெரிய ஆட்டமொன்றை இந்த இருவரும் சேர்ந்தாடினர். அந்த ஆட்டத்தின் பெயர் மோகன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் குரலுக்கான முகமாக மோகனை நிலைநாட்டினார். தன் இசையால் மேற்படி நிகழ்தலை முழுவதும் இயக்கியவர் இளையராஜா. எல்லா நடிகர்களுக்குமான குரலாக தன் மன அகழ்தல் மூலமாக அவரவர்க்கான பாடலைப் பாடிக்கொண்டிருந்த பாலு, மோகன் என்ற நடிகருக்குப் பாடிய பாடல்கள் விதிவிலக்கானவை. பாலுவின் குரலுக்கான முகமாக மோகனை எண்ணச் செய்தார் இளையராஜா. பாடலைக் கேட்கும் யார் மனத்திலும் பாலுவின் குரல் மோகனின் முகமாக மாறியது. உண்மையில் பாடல்களில் நடித்தவர் எஸ்.பி.பி. இயக்கியவர் இளையராஜா. படத்தில் அதனை வாங்கி போலச் செய்தவர் மோகன். மோகனுக்கு மனோ, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் தொடங்கி இளையராஜா, கங்கை அமரன் வரை பலர் பாடிய பாடல்களும் வரலாறெங்கும் உண்டு. ஆனாலும் மோகன் என்றால் நினைவை நிறைப்பதும் அளிப்பதுமான ஒற்றைக் குரல் பாலு. மோகனுக்கு கே.வி.மகாதேவன், சங்கர்-கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன், சந்திரபோஸ் தொடங்கி தேவா வரைக்கும் பலரும் இசைத்துத் தந்த பாடல்களும் வரலாறெங்கும் உண்டு. ஆனாலும் மோகன் என்றால் நினைவை நிறைப்பதும் அளிப்பதுமான ஒற்றை இசைஞர் இளையராஜா. இப்படி தத்தம் சுயத்தை இருவரும் விண்டு பகிர்ந்து உருவாக்கித் தந்த மோகன் பாடல்கள் எண்பதுகளெங்கும் நிறைந்து ததும்பின. பின்வரும் காலத்திலும் அவற்றின் இல்லாமையைப் போற்றுகிற யாவரின் மனவோட்டமும் ஒன்றுதான். அது மோகன் பாடல்களுக்கு மாற்றே இல்லை என்பதுதான். பாலு இசையமைத்தார். இளையராஜா பாடினார். இருவருமே மோகன் தாண்டிய பலருக்காகவும் இயங்கிக்கொண்டே இருந்தார்கள். இருந்தாலும், மோகன் என்ற நடிகனின் பாடல்களிலிருந்து இந்த இரண்டு மனிதர்களை நீக்கம் செய்து பார்த்தால் எஞ்சுகிற எல்லாவற்றையும் மொத்தம் செய்து நோக்கினாலும் அவை தராசுத் தட்டைத் தாழச் செய்வதற்குப் போதாது என்பது உண்மை.

மோகன் நல்ல நடிகர். அனாயாசமான நடிப்புத்திறன் கொண்டவர். மென்மையான காதலன் பாத்திரத்தில் நளினமும் நவீனமும் நிரம்பியவர். எண்பதுகளில் அவருடைய புகழ்க்கொடி அடைந்த உயரம் அசாதாரணமானது. மேற்சொன்ன வாசகங்கள் அவரை மதிப்புக் குறைத்து மலினம் செய்வதற்காக எழுதப்பட்டதல்ல. நானே பெரிய மோகன் இரசிகன். பாடல்களைப் பொறுத்தளவில் மோகன் கணக்கில் செய்யப்பட்ட விளைச்சலின் அபாரமானது இந்த இரண்டு மகாவுருக்கள் சேர்ந்து இயங்கிய மொத்தக் காலகட்டத்திலும் செய்த மற்ற எல்லா இணைவினைகள் யாவற்றை விடவும் அதிகம் என்பதையே அழுத்தமாய்ச் சுட்ட விழைகிறேன்.

பல நடிகர்களும் மைக் பிடித்துப் பாடுகிற காட்சிகள் நிறையவே தமிழ்ப்படங்களில் இடம்பெற்ற காலம் என எண்பதுகளைச் சொல்லலாம். இளையராஜாவின் இசையை ஒரு வழிபாட்டுப் பொருளாக மாற்றித் தந்ததில் பாலு உள்ளிட்ட பாடற்கலைஞர்களின் பங்கு அளப்பரியது. பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் என்று பலவற்றை இன்றும் சுட்டுகிறோம். அவற்றிலெல்லாம் பாலுவும் சேர்ந்து ஒலித்தார். பாடல் பாடுவதென்பது எண்பதுகளுக்கு முன்பாக தமிழ் வாழ்வில் ஒரு கூடுதல் கிரீடம் போல் பிறழ்ந்து தனித்து எங்கோ தூர உயரத்தில் எப்போதாவது தென்படுகிற துருவ நட்சத்திரமாகத்தான் இயங்கி வந்திருந்தது. மேடையில் மைக் பாடுகிற திறன், பாடற்பயிற்சி, பாடகராக வாழ்வது, பாடல் புனைவது, இசைக்கலையை- அதன் விதவிதக் கருவிகளைப் பயில்வது, நடனக்கலை கற்பது இவையெல்லாமும் முழுநீளப் படங்களுக்கான கதையளிக்கும் திறப்பாக எண்பதுகளுக்கு முன்பு இருந்த இடமும் அளவும் வேறு. எண்பதுகளுக்கு அப்பால் இசையை மையப்படுத்தியும் பாடுவதைச் சுற்றியும் பின்னப்பட்ட பல கதைகள் நெய்யப்பட்டன. பல நாயகர்கள் பாடும் திறன்கொண்டு, பாடகராகும் ஆர்வம்கொண்டு, பாடி ஆடி அது சார்ந்த கடினங்களில் உழன்றுகொண்டிந்தார்கள். ஆடுவதிலும் இசைப்பதிலும் தீராத ஆர்வத்தோடு கண்களில் கனவைத் தேக்கிக் வலம் வந்தனர். அவர்களுக்கு உதவுகிற நாயகன், நண்பன், நாயகி, தோழி எனப் பல பாத்திரங்கள் இடம்பெற்றன. 

மோகனுக்கு இத்தகைய பாத்திரங்கள் திரும்பத் திரும்ப அருளப்பட்டன. அவரைத் தாண்டிப் பலரும் இப்படியான வேடந்தோன்றிகளாக உருவானார்கள். மோகன்- ராஜா- பாலு கூட்டில் உருவான படங்களில் நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, அன்பே ஓடிவா, உதயகீதம், தென்றலே என்னைத் தொடு, பாடு நிலாவே, இதயக்கோயில், மௌன ராகம், மெல்லத் திறந்தது கதவு, தீர்த்தக் கரையினிலே போன்ற படங்களில் மோகனுக்கான பாலுவின் பாடல்களை இசைத்தளித்தார் இளையராஜா. இவை தவிரவும் பல படங்களில் பிற பாடகர்களோடு ஒரு பாடல் மட்டுமாவது பாலு மோகனுக்காகப் பாடி இடம்பெற்றது. அப்படியான ஒரு பாடல் ஜோதி என்ற படத்திலுள்ள ‘சிரிச்சா கொல்லிமலைக் குயிலு’. பாலுவுடன் இதனை இணைந்து பாடியவர் புதிய பாடகி, பெயர் B.R.சாயா. இந்தப் பாடலில் பாலு அட்டகாசம் செய்தார். ஆனந்தம் என்ற சொல் உண்டல்லவா? அதனைக் குரலால் உண்டாக்கித் தோன்றச் செய்தார் பாலு. ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடல் மேற்கத்திய இசைக்கருவியான கிடாரை தமிழ் நிலமெங்கும் பிரபலப்படுத்தியது. வைரமுத்து எழுதிய வரிகள் ஒவ்வொன்றும் இரசிக்கப்பட்டது.

எண்பதுகளில் தமிழ்த் திரையின் தவிர்க்கவே முடியாத பல வெற்றிப் படங்களை பல இயக்குநர்கள் உருவாக்கினார்கள். அப்படியான படங்களின் வெற்றிக்கான முதற்காரணமாக நடிகர், இயக்குநர் இருவரும் ஒருவரையொருவர் சுட்டுவதற்குப் பதிலாக இளையராஜாவின் இசையை முதன்மைப்படுத்தத் தொடங்கினார்கள். அந்த வழக்கத்திற்கான காரணங்கள் பல. இசையமைப்பதற்கு இளையராஜா எடுத்துக்கொண்ட காலம், உருவாக்கிய பாடல்களின் வெற்றிகரம் இரண்டும் முதன்மையான காரணங்கள். மேலும் தன் பல பாடல்களிலும் பாடலைத் தாண்டி இரசிப்பதற்காக அவர் எடுத்து வைத்த உட்பொருள் கவனம் அபாரமானது. பாடல்களை அவை இடம்பெறுகிற படங்களின் ஓட்ட காலத்திலிருந்து விடுவித்து அவற்றுக்கான ஒலித்தல் காலமொன்றை வேறாக்கி அமைப்பதில் முந்தைய மேதைகளுக்கு எவ்விதத்திலும் குறைவற்ற அடைதலை சாத்தியம் செய்தார் இளையராஜா. அவருடைய பாடல்கள் என்ற அடைமொழியைத் தாண்டிய பிறகுதான் நடிகர், இயக்குநர், தயாரிப்பு நிறுவனம், பாடலாசிரியர், பாடகர் போன்ற நிறுவன வழமைகள் யாவும் இடமடைந்தன. இந்த நிலை தொண்ணூறுகளின் மத்தி வரை நீடித்திருந்தது.

முந்தைய டி.எம்.எஸ் காலகட்டத்தில் அவருடைய அதே வெற்றிபெறுதலை பாலுவும் பெற்றார். ரஜினி, கமல், மோகன் ஆகிய முன்வரிசை மூவரின் எல்லாப் படங்களிலும் பாலு பாடியே தீரவேண்டும் என்கிற தோற்றத்தை நிலைநிறுத்தினார். உண்மையில் ரஜினியின் முதல் பதினைந்து வருடங்களில் பாலுவுக்கு இணையாக ரஜினிக்கான முகம்போற்றும் பாடல்கள் பலவற்றைப் பாடிய இன்னொரு பாடகர் மலேசியா வாசுதேவன். ஜேசுதாஸ், மனோ உள்ளிட்டவர்களுடன் இளையராஜாவும் ரஜினிக்காக பல பாடல்களைப் பாடினார். ரஜினி என்கிற நடிகனின் நாற்பத்தி நான்கு வருடத் திரைக்காலத்தில் அவருக்காக எஸ்.பி.பி பாடிய பாடல்கள் மொத்தம் எத்தனை இருக்கும் என நினைக்கிறீர்கள்? இதனை எழுதும் முன் நிறைய பாடல்களைக் கேட்கிற, இசை இரசிகர்கள் என்ற வரையறைக்குள் வரக்கூடிய, என் நண்பர்கள் ஆறேழு பேர்களிடம் வினவினேன். எல்லோரும் ஆயிரம் இருக்கும் என்பதில் தொடங்கி குறைந்தபட்சம் அறுநூறு, எழுநூறு என்றார்கள். உண்மை அதுவல்ல. மொத்தம் 138 பாடல்களை மட்டுமே தமிழில் ரஜினிக்காகப் பாடியுள்ளார் பாலு. துல்லியம் ஒன்றிரண்டு கூடலாம். குறைவதற்கு வாய்ப்பில்லை. இது என் கணக்கு. பிறமொழிகளில் ரஜினிக்கே பாடல்கள் குறைவாகவே அளிக்கப்பட்டன. அவற்றைச் சேர்த்தாலும் பெரிதாக கணக்கேதும் மாறிவிடாது.

150 பாடல்களுக்குக் குறைவாக ஒரு நடிகனுக்குப் பாடியிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பாடகர்தான் இன்றளவும் ரஜினிக்கான பெரும்பொருத்தக் குரலாக கருதப்படுகிறார் என்பது வியப்புக்குரிய உண்மை. பாலு மொழிவழி தெலுங்கர். ரஜினி கன்னடர். இருவருமே வந்துசேர்ந்த கரை தமிழ். பாலுவின் தமிழ் உச்சரிப்பும் அதில் அவர் காட்டிய ஆர்வமும் அளவற்றது. ரஜினி தனக்கென்று தனித்த இலாவகமொன்றை, தனி உச்சரிப்புப் பாணி ஒன்றினை, எல்லோர் மனத்துள்ளும் நிறைத்தவர். இங்கே பாலுவின் நயம் எதுவெனில் தன் சுயத்தைத் திருகிக்கொண்டு ரஜினியின் அடைதலைத் தானும் சென்றடைந்து ரஜினிக்கான மனத்தை உருப்படுத்தியபடி அவருக்கான பாடல்களைப் பாடியதுதான். விஜய்பாஸ்கர் இசையில் ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’ என்ற பாடல். பொல்லாதவன் படத்தில் ‘அதோ வாராண்டி வாராண்டி’ என்ற எம்.எஸ்.வி இசையிலான பாடல். ஏற்கனவே ரஜினியின் குரலாய்த் தன்னுடையதை அட்சரப் பிசகின்றி மாற்றித் தந்த அதே பாலுவை தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ‘காதலின் தீபம் ஒன்று’ எனப் பாடச் செய்தார் இளையராஜா. அந்தப் பாடல் ஒரு காணாச்சிற்பம். கானவைரம். அதே படத்தில் ‘என் வாழ்விலே வரும் அன்பே வா‘வைக் கண்மூடிக் கேட்டால் மெல்ல மனத்துள் உருப்பெறும் சித்திரம் ரஜினியுடையதாகத்தான் இருக்கும். ‘மாமா உன் பொண்ணக் குடு’ என்று எடுத்த எடுப்பிலேயே ரஜினியாக மாறுவார் பாலு. சிவாவில் அட மாப்புள்ள சும்மா மொறக்காதே மச்சான் சொன்னாக் கேளு’, தர்மதுரையில் “சந்தைக்கி வந்த கிளி” போன்ற பாடல்களில் ரஜினியின் சின்னச்சின்ன குணாதிசயங்களைக்கூட தன் குரலில் நிகழ்த்திக்காட்டினார் பாலு.

எஜமான் படத்தில் ‘நிலவே முகம் காட்டு’ இன்னொரு கோமேதகம். தளபதியில் ‘ராக்கம்மா கையத் தட்டு’ விண்ணை எட்டியது. அதே படத்தில் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடல் கடக்க முடியாத மாயக் கடல். எத்தனை நனைந்தாலும் தீராமழை. இவற்றையெல்லாம் திரைப்பாடல்கள் என்று எளிதாய் எடுத்துக்கொள்ள இயலாமல் ஒரு தலைமுறை இரசிகன் நிலைகுலைந்திருப்பது நிதர்சனம். பரவசத்தை ஏந்தியும் தேம்பியுமாக ஆனந்தக் கண்ணீர் என்கிற பதத்தைத் தன் வாழ்வில் கண்ணுற நேர்ந்த நேய மனதினர் பலர். ரஜினி என்கிற முதலிடக் கலைஞனின் படப்பாடல்கள் என்பதற்கு அப்பால் இசைத்த விரலும் பாடிய குரலும் பல்லாயிரம் மனங்களில் நிறைந்து உறைந்தன.

வீராவில் “கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட” பாடலை பாலு பாடிய விதம் பரவசத்தில் ஆழ்த்துகிறது. ரஜினியை மனதிலிருத்தி அதனைப் பாடாமல் முத்துவீரப்பன் என்கிற அந்தப் பாத்திரத்தை மட்டும் வரித்துப் பாடிய பாடல். ஒரு பாடலில் வாழ்வே மாறப் போகிறது என்பதை முற்றிலும் உணராமல் ஒளிரப் போகும் விளக்குகள் எத்தனை எத்தனை என்பதைப் பற்றிய முன்னறிதல் ஏதுமின்றி அந்தக் கணத்தின் இருள் விலகாதா என்கிற தவிப்பை மட்டும் மனதில் நிறுத்தி பல்லவியையும் முதல் சரணத்தையும் பாடியிருப்பார் பாலு. இதே பாடலின் அடுத்த சரணத்தை ரஜினி பாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ரோஜா கனாக்காட்சியில் நினைத்துப் பார்ப்பார். அங்கே ரஜினி தோன்றிப் பாடுவதாகக் காட்சி விரியும். அந்தக் குரலில் சிறு கம்பீரத்தைக் கலந்து பாடிவிட்டு மறுபடியும் பல்லவியில் முந்தைய குழப்பத்தை மீண்டும் நிரடியபடி தொடர்ந்திருப்பார். ரஜினிக்காக பாலு பாடிய ஸ்பெஷலான வெகு சில பாடல்களில் இது நிச்சயம் இடம்பெறும்.

ரஜினியின் பொது-பிம்ப-குணாம்சம் குழந்தைமை, விட்டேற்றித்தனம், தன்னடக்கம், பதின்மத்தின் குதூகலம், இருத்தலின் தற்கணத்தைக் கொண்டாடுகிற மனோபாவம் போன்றவை. நன்கு நோக்குங்கால் இத்தனையும் நிஜ ரஜினியின் குணங்களா என்பது வேறு வினாதானே? அதைத் தாண்டி இவற்றில் பெரும்பாலானவை எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்கிற பெருங்கலைஞனின் இயல்புகளாக அவர் நிகழ்த்திக் காட்டியவை. ஐம்பது வருடங்களுக்கு மேலாக இவற்றைத் தன் பிம்பங்களாக அல்ல இயல்புகளாக அணிந்துகொண்டவர் பாலு. அந்த இயல்புகளை வெளிப்படுத்துகிற பாடல்களை ஒருபுறமும் அதற்கு மாற்றான ஜரிகைப்புனைவும் பொய்யும் ததும்புகிற, கவிந்த மனம் கொண்ட, இறுக்கமான ஆணவம் மிகுந்த பாடல்களை மறுபுறமும் கலந்து வழங்கியதன் மூலம் ராஜா பாலுவைப் பாடச் செய்கிற ஒவ்வொரு பாடலின் பின்னாலும் சவாலும் திறப்பின் புதுத்தன்மையும் எப்போதும் நிலவின.

கமல்ஹாசன் தயாரித்து எழுதி நடித்த அபூர்வ சகோதரர்கள் எண்பதுகளின் இறுதியில் வெளிவந்து தேசிய கவனத்தை ஈர்த்தது. உயரம் குன்றிய அப்பு பாத்திரத்தில் கமலின் நடிப்பு பேசப்பட்டது. இந்தப் படத்தில் அனேகப் பாடல்களைப் பாடினார் பாலு. வாலி எழுதிய ‘உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்‘ பாடல் அவற்றுள் முக்கியமானது.

கதை நகர்ந்து அந்தப் பாடலோடு வந்துநின்ற புள்ளி நுட்பமானது. அப்பு கதைப்படி ஒரு சர்க்கஸ் கலைஞன். சாகசமே வாழ்க்கையாகிப் போனாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலிமிகுந்தே நிகழ்வதைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்துவருகிறான் அப்பு. புதியதாய் சமீபித்துத் தோன்றிய காதல் குமிழ் சட்டென்று உடைந்து காற்றே கேலியாக, கண்ணீர் மாலையாக ஆனதைத் தாளவொண்ணாமல் பாடுகிற பாட்டு இது. தான் விரும்பிய நாயகி விரும்பாமற் போனதற்குத் தன் உடற்குறை காரணம் என்று தன்னை நொந்துகொள்கிற அப்புவின் “பிறரைப் போல் நான் சாதாரணமாக இல்லாமற் போனேனே” என்ற ஆதங்கம், “தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?” என்ற சோகக்கூடல், இவையெல்லாம் சூழலாகையில் ஒலிக்கத் தொடங்கும் பாட்டு.

பாடலின் மையப்பொருளாக அப்புவின் தாளவொண்ணாத வாதையை வார்த்தைகளினூடாக சாட்சியம் செய்தார் வாலி. இளையராஜா ஏற்படுத்திய உணர்வு விநோதங்களின் கூடுகை. அதுவரையிலான கதாநதி வந்துநிற்கிற தலத்திலிருந்து பாடலை இசைக்காமல் அதற்கு முன்பின்னாய்க் கதை அதுவரைக்கும் நகர்ந்து வந்ததற்கான காரணங்களையும் இசைக்குட்படுத்தினார். கீரவாணி ராகத்தில் சன்னத் தூறலாய்த் தொடங்கி பெரியதோர் மழையாய் ஓங்கி ஒலித்தது இசை. சோகம், ஆத்திரம், அழுகை, இயலாமை, தோல்வி இத்தனையும் தன்பெருக்கிக் கண்ணாடியின் மூலம் விரிவடைந்து வெளியே பேருருக் கொண்டாற் போல் இந்தப் பாடலின் இசைக்கோர்வைகள் அமைந்தன.

இந்தப் பாடலளவு சவால் நிறைந்த இன்னொரு பாடல் வேறெந்தத் தொழில்முறைப் பாடகருக்காவது பாடக் கிடைத்திருக்குமா? மழைப்பொழிவும் மண்சரிதலும் ஒருங்கே நிகழ்ந்துகொண்டிருக்கையில் எரிபொருளும் சொற்பமே உள்ளிருக்கிறது என்ற நிலையில் மலைப்பாதையில் ஏறிச்செல்கிற வாகனப் பயண விநோதத்தை ஒத்தது. பாலு இந்தப் பாடலைப் பாடிய விதம் நுட்பமானது. இந்தப் பாடலின் விளைவாக உலகம் எதையும் அப்புவுக்கு நிகழ்த்தப் போவதில்லையென்ற நிதர்சனத்துக்கு அப்பாலும் உடைந்து சிதறிய மனத்தின் கேவலை, செல்வதற்கேதும் இடமற்றுப் போன வாழ்வின் முடக்கத்தை, நிறுவ முடியாத பேரன்பை, சுற்றியிருக்கிற இருளின் பரிகசித்தலை, குரலறுந்த துக்கத்தை, இயலாமையின் கையறு நிலையை, தீர்ந்து போன வார்த்தைகளை, தன்னிரக்கத்தை- எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னால் எதுவும் செய்யவியலாத தன் உடற்குறையை என இவை அனைத்தையும் தன் குரலில் படர்த்திப் பாடினார் பாலு. இந்தியத் திரையுலகில் தயாரித்தளிக்கப்பட்ட எத்தனையோ சோகப் பாடல்கள் உண்டு. அநேகப் பாடல்கள் அவை வெளியாகும் காலத்தை முழுவதுமாகத் தன் கரப்பிடிக்குள் வைத்திருந்தவையே. பிறிதொரு நாள் அவை ஒலிப்பது மெல்ல குறைந்து போய் மௌனச் சேற்றினுள் ஆழ்ந்து மறைந்துபோவதும் நிகழ்வதே. அழியாமல் தன்னை நிலைத்துக்கொண்டு காலத்தின் அடுத்தடுத்த பக்கங்களுக்குத் தம்மை மேலெழுதித் தப்புகிற வெகு சில பாடல்களே சாகாவரப் பாடல்கள் என்று புகழுரு காண்பவை. எண்பது வருடத் திரையிசையின் சரிதத்தில் அப்படியான இருபது பாடல்கள் தேறுவதே கடினம். உயிரைத் திரியாக்கி, குரலை எரிபொருளாக்கி, தன் ஆன்மாவிலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய விதத்தால் “உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்” பாடல் சாஸ்வதப் பாடலாயிற்று.

https://www.thehindu.com/entertainment/music/1doivn/article27749442.ece/ALTERNATES/LANDSCAPE_1200/07bgfrrajaGAN6972jpg

எண்பதுகளில் ரஜினி, கமல் இவர்களுக்கு அடுத்தாற் போல் விஜய்காந்த் தனக்கென்று அழியாத நற்கனிகளைப் பறித்தார். பல புதிய நடிகர்கள், கார்த்திக், சத்யராஜ், பிரபு எனப் பலரும் உருக்கொண்டு வந்தார்கள். முரளி, அர்ஜூன் எனப் புதிய வரவுகள் நிகழ்ந்தன. பாக்யராஜ், பார்த்திபன் போன்ற பட இயக்குநர்கள் நடிகவதாரம் மேற்கொண்டு வென்றார்கள். இவர்கள் யாவருக்கும் இளையராஜா இசையில்  படங்கள் அமைந்தன. அவற்றிலெல்லாம் பாலு பிரதான குரலளிப்பாளராக இருந்தார். இந்த இருவர் இணைந்து உருவாக்கிய சில நூறு பாடல்கள் தமிழ்த் திரையிசையின் பொற்காலச் சித்திரத்தின் மாற்ற முடியாத கோடுகளாய் நிறைந்தவை. கண்ணறியாப் புள்ளிகளாய் அத்தனை கோலங்களிலும் ராஜாவின் இசையும் பாலுவின் குரலும் தளும்புகின்றது. பாலுவைத் தவிர எண்பதுகளெங்கும் இளையராஜா இசையமைப்பில் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், மனோ, மலேசியா வாசுதேவன் முதலிய பாடகர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடிய பிற பாடகர்கள். இதே காலகட்டத்தில் ஜாலி ஆப்ரஹாம், கிருஷ்ணச்சந்திரன், ராஜ் சீதாராமன், உன்னிமேனன், தீபன் சக்கரவர்த்தி, டி.கே.எஸ்.கலைவாணன், டி.எல்.மகராஜன், அருண்மொழி, எஸ்.என்.சுரேந்தர், சந்திரஷேகர் எனப் பலரும் இளையராஜா இசையில் பாடியவர்களே.

நட்சத்திர பிம்பங்களுக்குப் பாடுகிற இலாவகம் வேறு. அப்படியான பிம்பச்சுமை எதையும் சார்ந்திடாத நடிகர்களுக்குப் பாடுவதென்பது முற்றிலும் வேறான ஒன்றல்லவா? எஸ்.பி.பாலசுப்ரமணியம் அப்படியான பல பாடல்களை ராஜா இசையில் நல்கினார். நிறம் மாறாத பூக்களில் “முதன்முதலாக காதல் டூயட் பாட வந்தேனே”, மூன்றாம் பிறையில் “வானெங்கும் தங்க மீன்கள்”, ஒரு ஓடை நதியாகிறது படத்தில் “தலையைக் குனியும் தாமரையே”, ஆராதனையில் “ஒரு குங்குமச் செங்கமலம்”, அன்பே சங்கீதாவில் தேங்காய் சீனிவாசனுக்காக குரலளித்துப் பாடிய “சின்னப்புறா ஒன்று”, அழகே உன்னை ஆராதிக்கிறேனில் “அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க”, கிராமத்து அத்தியாயம் படத்தில் “வாடாத ரோசாப்பூ”, நிழல் தேடும் நெஞ்சங்கள் படத்தில் ஒலிக்கும் “பூக்கள் சிந்துங்கள் கொஞ்சும் தேவ சொந்தங்கள்”, ஆனந்தக் கும்மியில் “தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி”, மண் வாசனையில் “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”, கொக்கரக்கோ படத்தின் “கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்”, வெள்ளை ரோஜா படத்தில் “சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்”, கொம்பேறி மூக்கனில் “ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்”, முதல் வசந்தத்தில் “பொன்னி நதி வெள்ளம் இன்று”, அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் “தேன் பூவே பூவே வா”, இல்லம் படத்தில் ஒலிக்கும் “நந்தவனம் பூத்திருக்குது”, பூந்தோட்டக் காவல்காரனில் “என் உயிரே வா”, வண்ண வண்ணப் பூக்களில் “கோழி கூவும் நேரத்தில”, இன்னிசை மழையில் “தூரி தூரி மனதில் ஒரு தூரி”, மீராவில் “ஓ பட்டர்ஃப்ளை “, மறுபடியும் படத்தில் “நலம் வாழ எந்நாளும்”, கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் “சிவகாமி நினைப்பினிலே”, ஐ லவ் இந்தியா படத்தில் “குறுக்கு பாதையிலே”, அதர்மம் படத்தில் “முத்துமணி முத்துமணி”, ப்ரியங்காவில் “வனக்குயிலே குயில் தரும் கவியே” பாடல், வனஜா கிரிஜாவில் “முன்னம் செய்த தவம்”, பாட்டுப்பாடவா படத்தில் “சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக்கண்ணனே”, உள்ளே வெளியே படத்தில் “சக்கரக்கட்டி சக்கரக்கட்டி”, ராமன் அப்துல்லாவில் “முத்தமிழே முத்தமிழே”, மீண்டும் ஒரு காதல் கதையில் “அதிகாலை நேரமே” போன்றவை அவற்றில் சில.

பல்வேறு புதிர்மை மிகுந்த பாடல்களை இந்த இணை உருவாக்கியது இசையினூடான கொடுப்பினை. “இளமை இதோ இதோ” என்கிற சகலகலா வல்லவன் படத்தின் பாடல் புதுவருடங்களை அலங்கரிக்கிற முதற்பாட்டாக நிரந்தரமான ஒன்று. கரகாட்டக்காரன் படத்தில் ஒலிக்கிற “மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு” பாடலின் ஒலிவாழ்வு பேருருக் கொண்டது. சின்னத்தம்பி படத்தில் “போவோமா ஊர்கோலம்” பாடல் அத்தனை முகவரிகளிலும் ஒலித்த பாடலன்றோ?

பி.சுசீலாவுடன் பாலு இணைந்து பாடிய “முத்துமணி மாலை” ஒரு மாயஜீனிப் பாட்டு. தொட்டால் விரிந்துகொண்டே செல்லக்கூடிய மாயப்பாதையின் இருளை இசைத்தாற் போலொரு தொடக்க இசை. பாலு பாடலை ஆரம்பிக்கிற இடத்தில் சின்னதோர் நகாசு ஒன்றைத் தூவியிருப்பார் ராஜா. முன்னர் பார்த்த அதே முரணொலி மந்திரம்தான். ஒத்துச் சப்தத்தை பாட்டு முடிகிற வரை ஒழுங்கற்ற வருகைகளோடு இடம்பெறச் செய்திருப்பார். அதனைத் தனியே உணர இந்தப் பாடலை நூற்றுக்கணக்கான முறைகள் கேட்க வேண்டியிருந்தது. பின்னரும் அது தன்னை அழித்துக்கொண்டு மறுமுறை கேட்கும் போது சாதாரணமாக தன்னை குன்றச் செய்துவிட்டது. கை அல்லது காலில் சில தினங்களே தோன்றி தழும்பற்று மறைகிற சிறுகாயம் ஒன்றினைப் போல் அந்த மணிச்சப்தத்தை இந்தப் பாடலின் மேனியில் பதியச் செய்தார் ராஜா. இதே பாடலில் “மேகந்தான் நிலவை மூடுமா மவுசுதான் கொறையுமா” என்ற வரியை மட்டும் துக்கமும் சந்தோஷமும் கலந்தாற் போல் கடந்திருப்பார் பாலு. மீண்டும் பல்லவிக்குள் சென்று “வெட்கத்துல சேலை” என்ற வார்த்தைகளைத் தாண்டுகையில் இலேசாய்ச் சிரித்து முந்தைய துக்கத்தை அழிப்பான் கொண்டு அழித்தபடி நகர்வார். “முத்துமணி மாலை” என்ற சொற்கூட்டை சுசீலா ஒவ்வொரு முறை பாடும்போதும் அதனைத் தன் சொந்தச் செல்வந்தமாகவே மாற்றிக்கொண்டு போயிருப்பார். பாடல் முடிகிற இடத்தில் குரல்களும் இசையும் தீர்மானம் கொண்டு நிறைவது பேரழகு.

டி.எம்.எஸ், ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், மனோ என சமகால சகாக்கள் பலருடனும் இணைந்து பாலுவைப் பாடச்செய்தார் இளையராஜா. அப்படியான பாடல்களில் மிகை ஒளிர்தலோடு கூடுதல் கவனத்தைத் திருப்பியவை அதிகம். “சோழர் குலச்செங்கவை” (உடன்பிறப்பு), “வழிவிடு வழிவிடு” (பாட்டுப் பாடவா), “எடுத்து நான் விடவா என் பாட்டை” (புதுப்புது அர்த்தங்கள்) போன்ற பாடல்களில் ராஜாவும் பாலுவும் நட்பைக் குரலாக்கி, இசையாக்கி, குழைத்துத் தந்திருப்பதை இன்றும் உணரமுடிகிறது.

https://static.moviecrow.com/marquee/come-back-soon-balu---ilayarajas-emotional-note-about-spbs-health/179904_thumb_665.jpg

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழில் அநேக நடிகர்களுக்குப் பாடியிருக்கிறார். நடிகர்களுக்குப் பாடுவதில் ஒரு சின்ன கண்மறைவு சாத்தியப்படும். ஆனால் மேற்காணப்படுகிற பத்தியில் இடம்பெற்றிருக்கிற அத்தனை பாடல்களுமே நடிக பிம்பத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடல்கள் அல்ல. இந்தப் பாடல்களில் ராஜாவும் பாலுவும் செய்தளித்த மந்திர ஜாலங்கள் நெடிய கட்டுரை ஒன்றிற்கான இடுபொருளாய் விரியத்தக்கவை.

மகாநதி படத்தில் இடம்பெறுகிற “ஸ்ரீரங்கரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி” பாடலை நோக்கலாம். மகாநதி படமும் அதில் கமல் ஏற்ற கிருஷ்ணசுவாமி எனும் பாத்திரமும் அதுவரையிலான கமல் என்னும் நட்சத்திர நடிகர் பொதுமனங்களுக்குள் நேர்ப்பித்திருந்த பிம்பத்தை முற்றிலும் அழித்துச் செய்யப்பட்டது. கதை நெடுக என்னவெல்லாம் நிகழப் போகிறது என்பதை யூகிக்கக்கூட இயலாத பெருவலி ஒன்றினைத் திரையாக்கிய படம். அந்தப் பாடலை கமல் என்ற நன்கறிந்த மனிதருக்காக உருவாக்கவில்லை. ராஜாவும் சரி பாலுவும் சரி கமல் ஏற்ற அந்தப் பாத்திரத்தை மட்டுமே மனத்திலிருத்தி இசைக்கவும் பாடவும் செய்த பாடல் அது. பாலு பாடிய பாடல்களில் இத்தனை உலர்ந்த இன்னொரு பாடலைச் சுட்டவே முடியாது. இதற்கென்றே தன் குரலைத் தனி ஓர்மையுடன் தயாரித்துப் பாடினார் பாலு. அந்த உலர்தல் இன்னொரு பாடலில் திரும்பவும் நிகழாமல் பார்த்துக்கொண்டதுதான் பாலு என்கிற ராட்சசனின் மேதமையை நிறுவுகிறது.

தனக்குப் பாடும்போதும் தன் சொந்தக் குரலில் பாடினாரா பாலு?

அதென்ன சொந்தக் குரல்..? சுயத்தின் அருகமைந்த, தான் பேசும்- உணரும்- தனது வாழ்வின் குரலை கடைசிவரைக்கும் பாடுவதற்காகப் பயன்படுத்தாத கலைஞனாகவே பாலுவைப் புரியத்தர விரும்புகிறேன். பாடுவதை தொழில்திறன், இரசனை, வரம் என்பதையெல்லாம் தாண்டி அதன் உட்புறக் கட்டுமானம், அதன் ஆதார வேர்ப்புறம் வரை எல்லாவற்றையும் நன்கு அறிந்துகொள்வதிலும் தன் குரல்கொண்டு பாடலைச் சிறப்பிப்பதையுமே தன் ஒரே நோக்கமாக மாற்றிக்கொண்ட ஒருவராகத்தான் பாலுவைச் சுட்ட விழைகிறேன். அவர் பாடிய அத்தனை ஆயிரம் பாடல்களும் அவருடைய ஒரே அல்லது சொந்தக் குரலால் அல்ல என்று சொல்லலாமா..? அவருடைய ஆன்மாவுக்கான குரலை அவர் வேடமேற்று நடித்த கேளடி கண்மணி படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம்பெற்ற “மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ “, பாலு இசையமைத்த- சிகரத்தில் இடம்பெற்ற “இதோ இதோ என் பல்லவி”, “வண்ணம் கொண்ட வெண்ணிலவே” உட்பட எந்தவொரு பாடலையுமே “இதுதான் நான் – இதுதான் என் ஆன்மா” என்று தனித்துணரும் வண்ணம் அவர் பாடவே இல்லை என்பது வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒன்று.

பாலுவால் தரமுடியாத குரல் என்று எதுவுமே இருந்திடவில்லை. தன் முன் கொட்டப்பட்ட அத்தனை சூழல்களையும் அத்தனை அத்தனை பாடல்களையும் பாடிய பாலு, இந்தியாவின் மாபெரும் குரல்விண்மீன். அப்படியானவருடன் எத்தனை பாடல்களில் இணைந்தார் என்பதைத் தாண்டி பாலு பாடுவதற்கான எத்தனை சவால்களை உருவாக்கித் தந்தார் என்பதுதான் ராஜவேலை. அந்தப் புள்ளியிலிருந்து நோக்குகையில் இரண்டு பேர் சதாசர்வகாலமும் தங்களது பாடல்களினூடாக தமக்குள் உரையாடிக்கொண்டே இருந்ததை உணரமுடிகிறது. பாடல்களினூடாக வாழ முடிந்திருக்கிறது என்பதுதான் செய்தி. எல்லா ரசங்களையும் தமக்கிடையிலான பாடல்களைக்கொண்டே செய்துபார்த்த சகாக்கள் பாலுவும் ராஜாவும் .

இந்த இரண்டு பேருக்கும் இடையில் நிலவியது புரவிப்போட்டி அல்ல.

இளையராஜாவின் இசையில் அவரோடு பரிவர்த்தனை நிகழ்த்திய அத்தனை ஆளுமைகளிலும் ராஜாவின் மனத்தருகே ஓரிடத்தில் பாலுதான் அமர்ந்திருக்க முடியும். சினிமா என்பது கலையும் விலையும் கலந்து பிசையவேண்டிய பண்டம். இந்த வினாவும் அதற்கான விடையறிதலும் கலை அணிகிற கிரீடத்தில் நடுவே பதிகிற வைரம் போன்றது. இன்னும் சூசகத்தை உடைத்துப் பேசினால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்கிற மகா குரலாளன் வாழ்வில் அவருக்கு இசையமைத்த இசைஞர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தாலும் அப்படியொரு இடத்தில் இளையராஜாவின் பேரைத்தான் எழுத வேண்டியிருக்கும். 

ராஜாவும் பாலுவும் வரலாற்றில் இருவர்.

-தொடரும்.

*

முந்தைய பகுதிகள்: