Editor’s Picks

0 comment

The Disciple (2020), Chaitanya Tamhane

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைய இவ்வுலகில் நித்ய காலமும் நீடித்து வாழ்வதற்கான சிறிய வாய்ப்பைக் கலை வழங்குகிறது. அது சாளரத்தைத் திறந்து வைப்பதில்லை. மன விரிவின் விழைவுக்கேற்ப ஆகாசத்தில் பறக்க விடுவதில்லை. வெளியேறுவதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்ட வீட்டில் ஒரு எலிப்பொந்தைக் காட்டுகிறது. நமது தனித்தன்மைகள், பலவீனங்கள், உணர்வெழுச்சிகள், பரவசங்கள், தயக்கங்கள் அத்தனையையும் குறுக்கிக்கொண்டு அதனுள் உட்புகத் தயாராக இருக்க வேண்டும். பல்லாண்டுகள் தேவைப்பட்டாலும் பொந்தின் சுவரைச் சுரண்டிச் சுரண்டி கொஞ்சம் கொஞ்சமாக தன் வழியைத் தானே உருவாக்கிக்கொள்ளும் அதீத தன்முனைப்பு வேண்டும். அதன் மறுபக்கம் தலைநீட்டிப் பார்க்கும்போது தென்படுவது காட்டுப்பாதையானாலும் பசித்திருக்கும் பாம்புகள் நெளியும் புதர்மண்டிய கைவிடப்பட்ட நிலமானாலும் அதைக் கசப்பின்றி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

சராசரித்தனங்களில் இருந்து தம்மைத் துண்டித்துக்கொள்வதே கலை வாழ்வின் முதல் அடி. ஏனெனில், கலை என்பது திறந்த வெளியில் அம்பை எய்தி குறுக்கே ஓடும் இலக்கை எதிர்பாராத விதமாகச் சாய்ப்பதல்ல. குத்தீட்டியை விட்டெறிந்து மையத்தைத் துல்லியமாகத் துளைத்து நிற்பது! அதை ஈடேற்றத் தேவைப்படும் நுண்மையான மனத்தைத் தொடர்ச்சியாகப் பழக்க வேண்டியிருக்கிறது. பழக்கிப் பழக்கி கலைச் செயல்பாடென்பது எந்தச் சிரமமுமின்றி சீராக மூச்சுவிடுவது போல ஆகிவிட வேண்டும். நமது பிரக்ஞையின் குறுக்கீடின்றித் தன்னிச்சையாகவே உச்சங்களில் திகழ வேண்டும். அந்தக் கச்சிதத்தைச் சாத்தியப்படுத்தியவர்களே காலத்தில் நிலைபெறுவார்கள். அத்தகைய சீர்மைக்காக மன்றாடியவர்களையே காலம் தொழுதேற்கும்.

அதே சமயத்தில், கலை என்பது வெறுமனே பயிற்சி விளையாட்டு மட்டுமல்ல. அது நமது தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட உக்கிரமான மனச்சிதறல்கள் வழியாகச் செயல்படுகிறது. ஒருமுறை பிடிபட்ட முழுமையின் முதிர்நிலையை எதனால் மறுபடியும் அதே கற்பனா சக்தியுடன் எட்டிப்பிடிக்க முடிவதில்லை? ஒன்று, அந்த அபூர்வ தருணத்தின் மீதான வியப்பு குன்றிவிடுகிறது. இரண்டு, தன்னைவிடப் பிரம்மாண்டமான ஒன்றைக் கைக்கொள்ள நினைக்கும் மனித ஆற்றலின் எல்லையை அறிந்துகொண்டு சரணடைய நேரிடுகிறது.

ஒரு சிறந்த படைப்பை எழுதியவர்களால், ஒரு செவ்வியல் இசைக்கோப்பை உருவாக்கியவர்களால் மீண்டும் அதே போன்றதோர் அற்புதத்தை நிகழ்த்த முடிந்ததில்லை என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. இவர்களுள் அநேகம் பேர் கலையுச்சத்தைத் தங்களது இளமையிலேயே கண்டடைந்திருப்பார்கள். அதற்குப் பிறகான அவர்களது அலைக்கழிப்புகள் பலவும் அந்த ஒற்றை உச்சக்கணத்தின் இழுவையான ஆலாபனைதான். இவர்கள் ஏதோவொரு பொன் கணத்தில், ஒரு சொல்லின் முழுமையில், ஒரு தீற்றலின் பரிபூரணத்தில், ஒரு கமறலின் ஒலியழகில் தன்னைக் கலைஞனாக உணர்ந்துகொண்டவர்கள். பயிற்சியின் போதோ, தனிமையிலோ, அந்தரங்கக் கனவிலோ, தடதடக்கிற ரயில் மாதிரி அந்தக் கணம் சடுதியில் அவர்களைக் கடந்து சென்றுவிட்டிருக்கும். அது ஏற்படுத்திய அதிர்வுகள் முன் அவர்கள் விக்கித்துப் போயிருப்பார்கள். ஒருமுறை தன்னைக் கலைஞனாக உணர்ந்தவனால் அந்த நிலையிலிருந்து கீழிறங்க இயலாது. மீண்டும் மீண்டும் அந்த மாயத் தருணத்திற்காக ஏங்கியபடி அவர்கள் காத்திருப்பார்கள். அதை எண்ணி எண்ணி தங்கள் வாழ்வை இழப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுவார்கள். கலையுடன் சமரிட்டு தம் வாழ்வைப் பணயம் வைக்கத் தயாராகிவிடுவார்கள். ‘வீணாகிப் போனாலும் நான் கலைஞன்’ என வெட்டி இறுமாப்பு கொண்டுவிடுவார்கள். அதற்காகவா இவ்வாழ்வு விதிக்கப்பட்டு இருக்கிறது?

இப்படத்தின் கதாநாயகனான சரத்துக்கு அப்படியொரு வாழ்வு அமைந்திருக்கிறது. சாஸ்திரிய சங்கீதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவன். பத்து பதினைந்து வருடங்களை அதற்காகவே தீவிரமாகச் செலவிட்டவன். தன் இளமைக்காலம் மொத்தத்தையும் கலைத்தீக்குப் பொசுங்கக் கொடுத்த பிறகே, தான் உண்மையிலேயே கலைஞன்தானா என்கிற சந்தேகம் அவனுள் எழுகிறது. அந்த அவலத்தைக் கண்டபோது எனக்கு உளைச்சலாக இருந்தது. இந்த இழப்பை எதைக்கொண்டு ஈடுசெய்ய முடியும்? ஒரு பெண்ணுடலைச் சுகித்ததில்லை. எந்தப் பெண்ணும் இவனை ஏறிட்டுப் பார்த்ததில்லை. குரலைப் பேண வேண்டியிருந்ததால் மது அருந்தியதில்லை. சில்லென பழச்சாறுகூட குடித்ததில்லை. இன்னபிற லாகிரி வஸ்துகளைத் தொட முடியாது. இந்திய குரு சிஷ்ய மரபில் ஒழுக்கம் மிகவும் அவசியம். இசையைக் கற்றுக்கொடுக்கிற ஆசானுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும். தைலம் தேய்த்துவிட வேண்டும். இதமாகக் கால் பிடித்துவிட வேண்டும். இவை எல்லாவற்றையும் சரத் மனமுவந்துதான் செய்கிறான். இவற்றிற்கு ஈடாக அவன் அடைந்ததென்ன? கலையில் தோல்வி. கலைக்கு முன் மண்டியிட்டதைக் காட்டிலும் காமத்தில் சீரழிந்திருந்தாலாவது அவனுக்கு ஏதேனும் பலன் கிட்டியிருக்கும் எனத் தோன்றாமல் இல்லை.

படத்தைப் பார்த்தபோது இசைக்கலைஞர்கள் குறித்து எடுக்கப்பட்ட Inside Llewyn Davis படமும் Whiplash படமும் உடனடியாக நினைவுக்கு வந்தன. அவ்விரண்டு படங்களைவிடவும் ‘The Disciple’-ஐ மேலான படமெனத் தயங்காமல் சொல்வேன். அந்த ஆங்கிலப் படங்களில் அதன் நாயகர்களுக்கு தங்களது கலைத்திறமை மீது எள்ளளவும் சந்தேகம் இல்லை. உள்முரண்கள் ஏதுமில்லை. அவர்களுடைய சிக்கல்கள் எல்லாமே தம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்துடனான- உறவுகளுடனான பிணக்குகள் மட்டுமே. மேலும், அந்தக் கலைஞர்களுடைய மனத்தின் போக்குகள் பற்றிய சின்னஞ்சிறிய தடயங்கள்கூட அப்படங்களில் இல்லை. மனம் பற்றிய அக்கறையோ கவனக்குவிப்போ இன்றி மேம்போக்காக எடுக்கப்பட்ட புறச்சித்தரிப்புகளின் தொகுப்புகள் அவை. மாறாக, ‘The Disciple’-இல் சரத்தின் மனவோட்டம் இடைவெளியின்றி அலையடித்துக்கொண்டே இருக்கிறது. புயல்காற்றில் அல்லலுறும் பாய்மரக் கப்பல் என்கிற சாதாரண நிலையிலிருந்து மேவி எழுந்து பாலைவன மணலில் பாதி புதையுண்டிருக்கும் கப்பலைக் கண்ணுறுகையில் தோன்றும் விசித்திரத்தையும் அபத்தத்தையும் இப்படம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணியில் தொடர்ந்து ஒலிக்கும் ரீங்காரமானது தியானத்தின் போது ஆழுள்ளம் கொண்டுவருகிற அமைதி அல்ல. அரைத்தூக்கத்தில் கனவுகள் புரட்டியெடுக்கிற உள்ளக்கிடக்கையின் தீராத கொந்தளிப்பு.

ஒரு கட்டத்தில் சபையில் பாடிக்கொண்டிருப்பதைப் பாதியில் நிறுத்திவிட்டு சரத் வெளியேறுகிறான். இனிமேல் கலை தனக்கு வசப்படாது என்பதை அவன் புரிந்துகொண்ட தருணம். இனி அவன் பாடப்போவதில்லை. வேறு கதியின்றி, தான் வெறுத்து ஒதுக்கிய சராசரி வாழ்வுக்கு அவன் திரும்பியாக வேண்டும். காலம் கடந்து செல்கிறது. சரத் கல்யாணம் செய்துகொண்டு குடும்பஸ்தனாகி ரயிலில் பயணிப்பதைக் காட்டுகிறார்கள். அப்போது ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வருகிறான். தாளம், லயம், சுருதி குறித்த கவலையின்றி- கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாகப் பாடப்படும் பாடல். அந்தப் பிச்சைக்காரனுக்கு சங்கீத நுணுக்கங்கள் தெரியாது. உன்னதங்கள் தேவையில்லை. பாடும்போது கிட்டுகிற மகிழ்ச்சி போதும். சில சில்லறைகள் போதும். கண்களில் எவ்விதமான உணர்ச்சியுமின்றி சில நொடிகள் சரத் அவனை வெறித்துப் பார்க்கிறான். பிறகு தன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறான். படம் முடிந்ததும் துக்கமாக இருந்தது!

*

Beautiful days (1955), Masaki Kobayashi

ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டு பத்தாண்டுகள் கழித்து வெளியான திரைப்படம். திடீரென மறைவிலிருந்து வெளிப்பட்டு உயிரை வழிப்பறி செய்துகொண்டு போகிற மரணத்தைப் பற்றின பயம் சற்று மட்டுப்பட்டிருக்கின்ற காலம். யுத்தங்களுக்கு இடையே இறைஞ்சுகிற வாழ்வாசை என்பது உயிர் தப்பித்தலுக்கான நெருக்கடி மட்டுமே. அதில் மகிழ்ச்சியோ வேட்கையோ இல்லை. தன் ஆயுளைச் சிறிது நீட்டித்து வைக்கப் போராடுகிற முனைப்பின் நடுக்கமே முன்னிற்கிறது. ஆனால், போரின் வடுக்கள் மறைந்து பதற்றம் தணிந்தவுடன் மனிதர்கள் தங்களது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் திரும்புகிறார்கள். அப்படித் திரும்பும்போது அவர்கள் ஒரு பேருண்மையைக் கண்டுகொள்கிறார்கள். போர் கொண்டுவருகிற மரணமானது ஒற்றைப் பெரும்பூதம் போல எல்லோரையும் ஒரே மூச்சில் விழுங்கிச் செரிக்கிறது. அன்றாடத்தில் நிகழ்வதோ குட்டிக் குட்டி மரணங்கள். முன்னது நெஞ்சில் செருகப்படுகிற கத்தி. பின்னது உடலெங்கும் கீறுகிற நகவெட்டி.

சில சமயங்களில் மனிதர்களை நான் சுடுமணலில் நிற்க வைக்கப்பட்டிருக்கிற சிறுவர்கள் எனக் கற்பனை செய்துகொள்வேன். ஒரு கால் மரணம், மற்றொரு கால் வாழ்வு. ஒரே சமயத்தில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி வைத்துச் சமாளித்து தவித்துக்கொண்டிருக்கும் போது நம்மை ஆட்டுவிப்பவர் எவரோ தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்ப்பதாகத் தோன்றியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தபோது அவ்வெண்ணத்தைத் திருத்திக்கொள்ளலாம் என்றும் வாழ்க்கை மீது கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம் என்றும் நினைத்தேன். சுடுமணலில் வெந்துகொண்டிருக்கும் கால்களுக்குக் கடலைக் காட்டித் தந்ததைப் போலிருந்தது.

இயக்குநர் கோபயாஷி தன்னுடைய தலைசிறந்த படங்களுக்கான வெள்ளோட்டமாக இப்படத்தை எடுத்திருக்கிறார். அவர் மனிதர்களை நெருங்கி அறிந்து நம்முன் உண்மைகளைப் பகுத்துச் செல்லும்போது வாழ்க்கை மெல்ல மெல்ல ஒளிரத் தொடங்குகிறது. அந்த உண்மைகள் ஒரு மெய்யியலாளனின் கறார்தன்மையுள்ள அகாடமிக் உண்மைகளாக கட்டுமானத்திற்குள் அடைக்கப்பட்டு நிறுவப்படுவதில்லை. அவை பழுத்த லௌகீகவாதியின் நெகிழ்ச்சி கொண்டவை. தற்சமயம் ஞானியாகிவிட்ட பழைய கொலைகாரன் தன் முன்னே நிறுத்தப்படும் ஒரு திருடனை எப்படி அணுகுவானோ அப்படியிருக்கும் விசாலமான பார்வையுடையவை. அப்பழுக்கற்ற மனிதர்களின் இறுக்கத்தையும் குற்றேவல் புரிகிறவர்களின் கரிசனத்தையும் உயிர்ப்பாடுகளுக்கு நடுவே விரித்துச் சென்று கோபயாஷி படத்தை முற்றுவிக்கிற போது நாம் கண்டடைவது வாழ்தலுக்கான எளிய சூத்திரத்தை அல்ல. பற்றுதலை, கடைத்தேற்றுதலை, விடுதலையை!

கோபயாஷியின் எல்லாப் படங்களிலும் இத்தகைய பொதுவான குணாம்சத்தைக் காண முடிகிறது. மனிதர்கள் மகத்தானவர்கள் எனும் நிலைப்பாடு மீது அவருக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அந்த மகத்துவத்தை அவர்கள் எய்துவது கடுமையான துயரத்தின் வழியாக! சுயவதையின் வழியாக! தன் உடலின் வெட்டுக்காயத்தை தானே ஊசியால் தைப்பதைப் போல. வயிற்றில் குத்தப்பட்டிருக்கும் துருப்பிடித்த கத்தியை நிதானமான கவனத்துடன் உருவியெடுப்பதைப் போல. அவர்களுக்கு அற விழுமியங்களைப் பேணுவதில் பிடிவாதமும் சந்தேகங்களும் உள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட இந்தச் சமூகத்தின் மீது அவநம்பிக்கை உருவாகிறது. அதனாலேயே அவர்கள் இவ்வமைப்பின் பகுதியாகப் பொருந்திப் போவதில் தடுமாறுபவர்களாக இருக்கிறார்கள். முடிந்த வரை போராடித் தோற்று வெளியேறுகிறார்கள் அல்லது எதிர்த்துச் சண்டையிட்டு மரணிக்கிறார்கள்.

Beautiful Days படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகச் சாதாரணமாகத் தொடங்கி மனிதர்களின் இனிய களங்கமற்றத் தன்மையில் நிலைகொண்டு ஒருவிதமான மன விகாசத்துடன் முடிகிறது. ஒரு காட்சியைக்கூட வீணடிப்பு எனச் சொல்ல முடியாது. ஒரு மனிதரின் இருப்புகூட காட்சிச் சட்டகத்தில் தேவையின்றி அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும், திரைக்கதையின் கட்டமைப்பில் கண்டிப்பான ஒழுங்குகளோ விறைப்போ இல்லை. மிக இலகுவான பறத்தலைக் கொண்டு இரம்மியமான மனநிலையைத் தக்கவைக்க கோபயாஷியால் முடிந்திருக்கிறது. அது நிலத்திலிருந்து எம்பிய பறத்தல் அல்ல. மின்சாரக் கம்பி மீது தத்தித் தத்தி நடந்தபின் சட்டென மேலெழும்புகிற சிறகசைப்பு. அதற்கொரு மனப்பயிற்சி தேவைப்படுகிறது. சூட்சுமமான முதிர்ந்த விவேகம் அவசியமாகிறது. கோபயாஷி போன்ற மேதைகளுக்கே அது கைவசப்படும்.

ஒரு மருத்துவன், நைட் க்ளப்பில் ட்ரம்ஸ் வாசிப்பவன், தொழிற்சாலையின் கடைநிலை ஊழியன் ஆகிய மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. இவர்களுக்குப் பொதுவாக இருந்த நண்பன் போரில் கொல்லப்பட்டிருக்கிறான். அதற்குப் பிறகு அந்த மரணம் உண்டாக்கிய அழுத்தத்தால் அவர்கள் வாழ்வின் சமநிலை குலைந்து சிடுசிடுப்பான பிறழ்வு நிரந்தரமாகிவிடுகிறது. அது அவர்களைச் சார்ந்திருக்கும் பெண்கள்மீது எதிரொலிக்கத் தொடங்குகிறது. அந்த மூன்று ஆண்களும் தங்களுடைய மனத்தின் அங்கமாகிவிட்ட முள்ளைப் பிடுங்கி எறியப் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்து தங்களது வெறுமையுணர்வை சக மனிதர்கள் மீதான பரிவுணர்ச்சி மூலமாகக் கடந்து செல்கிறார்கள். தயக்கத்தையும் குழப்பங்களையும் அன்பின் துணைகொண்டு களைகிறார்கள்.

அச்சமும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றின தடுமாற்றங்களும் மலிந்திருக்கும் காலகட்டத்தைத்தான் ‘அழகான நாட்கள்’ என்கிறார் கோபயாஷி. துயர் வாட்டியெடுப்பதால் அந்நாட்கள் அழகானதாக மாறுவதில்லை. துயரை மீறிச்செல்ல மனிதர்கள் முயன்றபடியே இருப்பதால், நேரீட்டுத் துணிவுடன் நாம் போராடுவதால் அவை அழகாகின்றன எனச் சொல்கிறார். அந்த நேர்நிலை அம்சமே பணம் வாங்காமல் வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவனைத் தூண்டுகிறது. மருத்துவமனை நிர்வாகம் அதற்கு ஆட்சேபிக்கும் போது எந்த யோசனையுமின்றி அவனால் தன் வேலையை ராஜினாமா செய்துவிட முடிகிறது. ட்ரம்ஸ் வாசிப்பவனுக்கு குழந்தையுடன் வாழும் விதவைப் பெண் மீது மையல் ஏற்படுகிறது. அவளது குடும்பத்திற்காகத் தன் கையிருப்பைச் செலவழித்து நண்பர்களிடம் கடன்வாங்கியும் போதாமல் ஓர் அந்நியன் முன் கூனிச் சிறுத்து இரந்து நிற்கையில்தான் ‘தனக்கு அவள் மேல் இருப்பது காதலா இரக்கமா?’ என்கிற சந்தேகம் எழுகிறது. ‘உன் இயல்பு இது. வேற்று ஆட்களுக்காக எதிர்பார்ப்பின்றி உதவுவது உன் சுபாவம்’ என்று இன்னொரு நண்பன் அவனை நல்வழிப்படுத்துகிறான். அவனை அவனுக்கே அடையாளம் காட்டுகிறான்.

இப்படத்தின் இன்னொரு முக்கியமான அவதானிப்பாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குற்றவுணர்ச்சியும் ஆன்மீகத் தளத்திலான ஊசலாட்டங்களும் ஆண்களுக்கு மட்டுமே உரித்ததாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு குற்றவுணர்வே இல்லை அல்லது நடைமுறையில் மிகக் குறுகிய காலத்திற்குள் அதனை எளிதாகத் தாண்டிச்செல்ல பெண்களால் முடிகிறது. பெண்களின் கவனம் முழுக்கத் தங்களது அன்றாடக் கவலைகளிலேயே தோய்ந்திருக்கிறது. ஆண்களுக்கோ வருங்காலத்தில்!

இப்படம் கையாள்கிற உணர்ச்சிகளில் மலினமான செண்டிமெண்ட் இல்லை என்பதால் அது நம்பகமான பிணைப்பை உருவாக்கியது. ஒன்றையொன்று கோர்த்துக்கொண்டு போய் மானுடர் அனைவருக்கும் பொதுவான விடைபெறல் காட்சியில் படம் முடிந்தபோது திருப்திகரமான அனுபவம் மெய்ப்பட்டிருந்தது. படத்தின் சாராம்சமென ஒன்றை வகுக்க வேண்டுமெனில் இப்படிச் சொல்வேன்- இருட்பாதையின் முடிவில் தென்படும் பிரகாசத்திற்காகத் திரிந்தழியாதே. பாதையெங்கும் நீயே ஒளி, நீயே இருள்.