உற்ற நண்பனிடம்கூடப் பகிர முடியாமல் போன அக்காதலை என்னவென்று சொல்ல? அக்கா என்றே அவளை அழைத்து வந்தேன். கிஞ்சித்தும் அப்படியொரு கெடுசிந்தை ஆரம்பத்திலில்லை. சத்தியமாக. பரிதாபத்தில் தொடங்கி பரிதவிப்பில் முடிந்தது. தேவி பத்மாவதி கணக்குப் பாடத்தில் முழுதாய் நூறு எடுப்பவள். என் கணக்கு நோட்டைப் படித்துப் பார்க்கிறேன் என்று எடுத்து வைத்துக்கொண்டதன் அர்த்தம் முழுதாய்ப் புரிய இரண்டு மூன்று மாதங்களாயின. என்னை ஆங்கில இலக்கணம் கற்றுக்கொடுக்கப் பணித்தாள். தொன் போஸ்கோ பள்ளியில் பாதிரிமார்கள் ஆங்கில இலக்கணம் நன்றாகச் சொல்லித் தந்திருந்தார்கள். அவளுடனான பழக்கம் நீடித்தது. ‘கணக்கைப் படிக்க முடியாது. டிரைவ்தான் பண்ணலாம்’ என்பாள். புத்திக்கு அது எட்டினாலும் மூளை வேலை செய்யாது. கணக்கு ஆசிரியர்களைக் கண்டாலே ஆகாது. அவர்களில்தான் எத்தனை விதம். நேரே வந்து கரும்பலகையில் வரிவரியாக ஈகுவேஷன் போட்டுப்போவது, ஹோம் ஒர்க் கொடுத்து செய்யாதவர்களைப் பிரம்பால் விளாசுவது, வீட்டில் கூடுதல் டியூஷன் நடத்துவது… எப்படி சொல்லிக்கொடுத்தாலும் ஏதோ புரிந்தமாதிரி இருக்கும், பிறகு மறந்துபோகும்.
தேவி ‘சரியான மக்கு’ எனும்போதெல்லாம் எனக்குக் கணக்குப் பாடம் வராததைப் பற்றியே என நினைத்திருந்தேன். எப்படியெப்படி எல்லாமோ சூசகமாகவும் சூட்சுமமாகவும் குறிப்புணர்த்திக் காண்பித்திருக்கிறாள். ஏதேதோ கேள்விகள் வரும். ஒன்றும் புரியாது. அவள் குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தபோது பக்கத்து அறையில் பார்த்த யாரோவொரு இளந்தம்பதியினரின் நெருக்கக் காட்சிகளைப்பற்றி தன் வகுப்புத்தோழியிடம் என் முன்னே கூறுவாள். சிரிப்பார்கள். அவளது தம்பி சுகுவுடன் சிலநேரம் எங்கள் உரையாடலைப் பகிர்ந்தேன். அவள் என்னைத் தனியே அழைத்து அப்படி யாரிடமும் பகிர்தல் ஆகாது என்பாள். முதலில் அவளது அண்ணன் தற்கொலை செய்தபோதுதான் அவ்வீட்டிற்குச் சென்றேன். ஏராளமான கும்பல். ஒரே தெருவில் இருவர் ஒரே நேரத்தில் தற்கொலை. அப்பெண்ணோ மணமானவள்.
‘அண்ணா… ரெய் அண்ணா…’ எனத் தெலுங்கில் தொடர்ந்து அரற்றி அழுதபடியே இருந்தாள். அவள் அழுவதையே பார்த்திருந்தேன். மிக திடமான, உடல் உறுதிமிக்க அண்ணன். எனது அண்ணன்களுக்கு நண்பன் வேறு. ‘கம்பன் ஏமாந்தான்’ என்பதை ‘கந்தன் ஏமாந்தான்’ எனப் பாடியே அவரை கலாட்டா செய்வார்கள். எங்கள் மொட்டை மாடியில் அண்ணனும் அவரது நண்பர்களும் உடற்பயிற்சி செய்வார்கள். தண்டால் எடுக்கவெனச் செங்கல்லால் வடிவமைத்த கருவியும், கர்லா கட்டையும், டம்பெல்களும் இருக்கும். அவர் இயல்பிலேயே உடற்கட்டு மிக்கவராய் வசீகரமாய் இருப்பார். நண்பர் கூட்டத்துடன் ஒருமுறை லோகோ ஒர்க்ஸுக்கு அந்தப் பக்கம் உள்ள பட்மேடு பகுதியில் ஸ்பெஷல் சாராயம் எதையோ குடித்துவிட்டு, போதை தாங்காமல் ஏழு பேரும் சரிய, அப்படியே இரு சைக்கிள் ரிக்சாக்களில் யாருக்கும் தெரியாமல் தெரு அடங்கியபின் ராத்திரியில் வீடு வந்து சேர்த்தது அவர்தான். நைனாவுக்குத் தெரியாமல் கீழறையில் ஏழு பேரையும் கிடத்திவிட்டு காவலுக்கு முழு இரவும் நின்றார். அவர் குடிக்கவில்லை. அதிலொருவன் காலையில் சத்தமாக உளற அண்ணன் காலால் அவனது குரல்வளையை மிதித்ததைப் பிறகு எங்களிடம் கூறிச் சிரித்தார் சிங்கப்பல் தெரிய. அவருக்கு அது அழகு சேர்த்தது. அது மூடி இருந்தது இப்போது. தீரா அழுகை. பார்க்கப் பாவமாக இருந்தது. அன்றெல்லாம் அங்கேயே இருந்தேன்.
தொடர்ந்து அங்கு போக ஆரம்பித்தேன். அவளது தம்பி சுகு எங்கிருந்தோவொரு கிளியைப் பிடித்து வைத்திருந்தான். அதன் இறக்கைகளை வெட்டி, அது பேசவேண்டும் என்பதற்காக நாக்கைச் சுரண்டி ஏதேதோ செய்தான். அது பேசவேயில்லை. வட்டப் பெருங்கண்கள். வெளிர் செவ்வட்ட வளையத்திற்குள் கருவிழிகள் உருண்டையாய் உருளும். அடிக்கடி விழிமூடும் வெண்திரை. இளந்தளிர் நிற மேனி. நிதானமாக அசைந்து போகும் கர்வமிகு எழில் நடை. முகத்திற்குப் பொருந்தாமல் பெரிய அளவாக அமைந்தாலும் உறுதிகொண்ட அடர்சிவப்பு வளை அலகு, அனைத்திற்கும் மேலான அதன் மிழற்றும் குரல் என உள்ளம் கவரும் கிளிப்பிள்ளை. கூண்டுக்குள் அதற்குத் தக்காளி, கோவைப்பழம் தர அழகாக கொத்தித் தின்னும். சிலசமயம் அக்கிளியைத் தேவி என் கையில் அமர வைப்பாள். அதன் அழகின் நளினம், கர்வமான பார்வை. மிக இலேசாக இருக்கும். இத்தனை வனப்புமிகு கிளி நெருங்கி உடனிருப்பது இனிமையாகத் தோன்றும். அதன் கர்வம் உள்ளுக்குள் நமக்கும் ஒட்டிக்கொள்ளும். ஒருநாள் அது பறந்தோடிவிட்டது எல்லோருக்குமே ஏமாற்றமாகவே இருந்தது. அது திரும்ப வரவேயில்லை. சிலகாலம் தலைக்குமேல் கத்திப்போகும் உள்ளூர்க் கிளிகளைக் கண்டால் அக்குறிப்பிட்ட கிளியைக் கண்கள் தேடும்.
அவளது வீட்டாருடன் சடுதியில் நெருக்கமுண்டாயிற்று. சுகு இல்லாதபோதும் அங்கே செல்ல முடிந்தது. தேவியும் பத்தாம் வகுப்பென்பதால் பரஸ்பரம் பாடங்களைப் பகிர்தல், சந்தேகம் தீர்த்தல் எனத் தொடங்கி, சங்கடமானதொரு உறவுக்குள் நீண்டு சுழித்து நின்றது. மறுநாள் தேர்வென்பதால் இரவு ஒருநாள் வெகுநேரம் அவளுடன் கணக்குப்பாடம் படித்திருக்க அவளது அம்மா அவளை உணவு பரிமாறச் சொன்னார்கள். வீட்டார் அனைவரும் சாப்பிட்டுவிட்டு கூடத்திற்குப் போய்விட்டதால் தனியே எனக்கென அடுப்பங்கரையிலேயே இலையில் பரிமாறினாள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே இலையிலிருந்த சாதத்தை யாரும் பார்க்காவண்ணம் அருகமர்ந்து அவளும் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். சாதத்தோடு சேர்த்து பயம் அப்பிக்கொண்டது. அன்றிரவுதான் புது வெள்ளம் புணையை அடித்துத் தூக்கிப் போனது. கவிதைகளும் முளைத்தன.
எத்தனையோ தனியான சந்தர்ப்பங்கள் உருவாகியிருந்தன. அவளால் உருவாக்கப்பட்டதா எனவும் சந்தேகம். அவளது வீட்டுத் தனியறையில் பல சமயம் பாடம் கற்போம். வெள்ளிக்கிழமைகளில் பிற விசேஷ நாட்களில் பூஜைப்பொருட்கள் சுத்தப்படுத்தப்பட்டு காயவைக்கப்பட்டு பின் நீண்ட நேரம் பூஜையும் நடக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தனியாய் ஓலைப்பாயில் தட்டு தம்ளருடன் ஒதுக்கி வைக்கப்படுவர். அச்சமயங்களில் வீட்டார் அனைவரும் கோவிலுக்கோ வேறெந்த சுப நிகழ்வுக்கோ சினிமாவுக்கோகூட செல்லும்போது அவள் தனித்திருப்பாள். நிறைய நொறுக்குத்தீனிகள் தருவாள். வறுத்த வேர்க்கடலை தருவாள். உலர்ந்த நார்த்தங்காய் ஊறுகாய் அத்தனை ருசியாய் இருக்கும். மண் ஜாடியில் நிறைந்திருக்கும் ஊறுகாய். நிறைய எடுத்துத் தருவாள். சேவியருக்கும் நியாஸுக்கும் பாட்சாவுக்கும் அதைப் பகிர்வேன்.
கிடார் கற்றுக்கொள்ள அச்சமயம் விருப்பாயிற்று. பெரம்பூரில் ஒருவரிடம் பாடம் கற்க முடிந்தது. மியூசி மியூசிக்கில் நைனா கிடார் வாங்கித் தந்தார். ஆனால் ஆசிரியர் குடிபோதையில் கற்றுத்தருவது பிடிக்காமல் போனது. மேலும் நேராகப் பாடலை வாசிக்க கற்றுக்கொடுக்காமல் நொடேஷன் தந்தார். மொட்டை மாடியில் அமர்ந்து ஹாலோ கிடாரில் ‘இளைய நிலா பொழிகிறதே, இதயம்வரை நனைகிறதே’ பாடலை நானே வாசித்துப் பழகினேன். அந்த ஒரு பாடலை வைத்துக்கொண்டே சிறிதுகாலம் ஒப்பேற்ற முடிந்தது. தேவி வீட்டிலும் வாசித்து, அவளிடம் பாராட்டு கிடைக்க புளகாங்கிதம் உண்டானது. குறிக்கோள் நிறைவேறிற்று.
எதிர்பாராத நேரங்களில் ராஜன் அண்ணாச்சி கடைக்கு முன்னால் ஒரு நரை மூதாட்டி புல்புல்தாரங் வாசித்துப் போவாள். டைப்ரைட்டர் கீ போல எதிரெதிராக சில பட்டன்களும் கம்பியிழையும் கொண்டு வானம்பாடியின் ஒலி அலைகளென இசைபாடும் கருவி. ஜப்பானிய டைசோகோடோ கருவியை ஒத்தது. மிகத் துரிதமாகவும் இலாவகமாகவும் நின்றவாறே மடியில் வைத்து இசைப்பாள். பணத்தைப் பெற்றுக்கொண்டு போவாள். பேசவோ சிரிக்கவோ மாட்டாள். தினமும் வராததால் சட்டென்று கையில் காசிருக்காது கொடுக்க. அவளிடம் அவ்விசையைக் கற்க ஆசையாய் இருந்தது. ஆனாலும் அவளது இசைக்கும் பாங்கும் தீவிரம் காட்டும் முகமும் நினைவில் நிற்கும். ‘மேரே சப்புனோன்கி ராணிகபு ஆயே கீது’ எனும் ஒரு ஹிந்தி பாடலையும் ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்’ என்கிற பாடலையும்தான் எப்போதும் வாசிப்பாள். அதனால்தான் இடைவெளிவிட்டு வருவாள் போல. அவளின் பின்னால் அக்கம்பக்கத்துக் கடைகளுக்குக் கூடவே சென்று அவள் விரல்களின் துரிதகதியையும் அந்த எஃகுக் கருவியிலிருந்து புறப்படும் பாடலிசையைக் கேட்டும் மனம் பூரித்து வருவேன்.
பள்ளிக்கூடத்தில் நவமணி பி.டி மாஸ்டர் மௌத் ஆர்கன் வாசிப்பார். அதையும் வாசிக்க விரும்பி கையடக்கமாய் ஒன்றை வாங்கி வாசித்துக்கொண்டிருந்தேன். ‘மூன்று முடிச்சு’ படப்பாடலால் அது இன்னும் பரவலாகப் பிரபலமானது.
தேவியின் அப்பாவை வளர்த்த பெற்றோர் வேறு போல. அந்தத் தாத்தா இராணுவத்தில் பணியாற்றியவர். எப்போதும் தெருவில்தான் குடித்துக் கிடப்பார். சுருட்டு புகைப்பார். அவரைப் ‘புட்ட தாத்தா’ என்றழைப்போம். விரை வீக்கம் வெகுவாய் இருக்கும். உட்கார்ந்தால் வெளியே அப்படியே தெரியும். அவர் இறந்த பிறகு அவரது மனைவி அவ்வப்போது குடிப்பார். அந்த அவ்வாவைத் துணைக்கு வைத்துவிட்டுப் போகும் சமயம் அவள் தனித்திருக்க நேரும். தேவி முத்தம் கேட்பாள். நாளைக்குப் பார்க்கலாமென எப்படியெல்லாமோ மறுத்து ஒதுங்கித் தப்பித்ததுண்டு. செல்லமாகத் திட்டுவாள்.
பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் உள்ளுக்குள் கனன்று நின்றது காதல். பார்க்காமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருக்க இயலவில்லை. அக்கா என்று அழைத்தவளை எப்படி விரும்புதலாயிற்று?
எங்கே பிறழ்ந்தது? பெருங்குற்றம் ஆயிற்றே. ‘பேதமையுள் எல்லாம் பேதமை காதன்மை கையல்லதன் கண் செயல்.’ காதலே பேதமைதான். அதிலும் பேரளவானது இது. எங்கே போய் யாரிடம் முறையிட? சேவியருக்கு இதெல்லாம் புரியாது. புரிந்தாலும் இதை என்னவென்று சொல்ல? அவமானம். பாவகரமான செயலாயிற்றே? ஆனாலும் விடமுடியவில்லை. ஐந்து வீடு தள்ளி அவளது வீடு. என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து சாடையில் பேசிக்கொள்ளலாம். அத்தனை ஒட்டியொட்டி நிற்கும் வீடுகள். மாடிகளைத் தாண்டித் தாண்டி அங்கே போய்விட முடியும். இருவருக்குமே பாதி மொட்டை மாடி, பாதியளவு வீடு. ஆனால் பேச முடியாது. அவ்வப்போது கம்பிகளற்ற வெறும் சன்னலில் அவள் அமர்ந்துகொள்வாள். நான் வெளியே நாற்காலியிட்டு படிக்கத் தொடங்குவேன். சில குறிப்புச் சைககளுண்டு. அந்தச் சன்னலின் மேல் சுருண்டு தொங்கும் சாக்குத் திரைச்சீலையை விரித்து மூடினால் உணவு அல்லது தூக்க நேரம் அல்லது வெளியே செல்லக்கூடும் என்று அர்த்தமாகும்.
அவளுக்காகக் காத்திருக்கும் சமயம் கையில் கிடைக்கும் எதையாவது படிக்கலாமென நைனாவின் புத்தகங்களை அவ்வப்போது புரட்டுவேன். ஒருநாள் கலீல் கிப்ரானின் கவிதைப் புத்தகம் கிடைத்தது. மிகவும் பிடித்தது ‘டியர்ஸ் அண்ட் லாப்டர்’ தலைப்பிட்ட அதன் அட்டையில் ஆணும் பெண்ணுமாய், நிர்வாணம் தழைச் சித்திரத்தால் மறைத்தபடி இருந்தது. மீண்டும் மீண்டும் படித்தேன். தமிழில் மொழிபெயர்க்கவும் செய்தேன். பள்ளி இலக்கியக் கையேட்டில் பிரசுரமானது. மக்சீம் கார்க்கியின் சிறுகதைத் தொகுப்பொன்று. கடற்புறம் சார்ந்த கதைகள் அவை. அதன் அட்டையும் அச்சுக் காகிதமும் அலைமேற்புறமன்ன பளபளத்தன. லியோ டால்ஸ்டாயின் ‘கடவுளுக்குத் தெரியும், ஆனால் காத்திருப்பார்’ சிறுகதையில் அக்சியானவ் சைபீரியச் சிறையில் வாழ்நாளெல்லாம் கிடந்து மடிவது மனதை அறுத்தது. என்ன மாதிரியான நீதியிது என்றிருந்தது. அதைப் பள்ளி ஆண்டு விழாவில் நாடகமாக எழுதித் தந்திருந்தேன்.
அப்போதிலிருந்து மொட்டை மாடியே வீடானது. வானம் துணை நின்றது. ஏக்கங்களும் தவிப்புகளும் அன்றாடமாகின. அவளில்லாத பொழுதுகளில் வெயிலும் மழையும் பேச்சுத்துணையாக வந்துபோயின. திரைப்பாடல்கள் ஆறுதல் கூறின. கவிதைகள் எழுந்தன.
இருவருக்குமிடையே இரை தேடிவரும் மயில்கள் சிலவேளை மாடி மதில் சுவர்களில் உலவும். அழகின் அதியற்புதக் கோலம். நீள்கூந்தலாய்த் தோகை. நடையில் ஒயில். மென்கழுத்தசைவில் நளினம். சிகையேறிய பூவெனத் தலைக்கொண்டை. அதியழகே பேருவகை என்றான் கீட்ஸ். மயிலின் கழுத்து போலவே அவளுடைய முகமும் மாயாஜாலமாய் ஈர்க்கும். டர்கிஸ் புளூ வண்ண முன்னுடல் கதிரொளிபட்டு நிறமாலையுற்று வர்ணஜாலம் காட்டும். இதுதான் என்று நினைவில் பதிந்திருந்த அவள் முகம் மறுமுறை பார்க்கையில் வேறு சாயல்கொள்ளும். வேறொரு கோணத்தில் வேறு முகம். ஆயிரம் முகங்கள். முழுநிலவுக்கேது இணை? நீரோரன்ன சாயல் என்றான் சங்கப் புலவன்.
தண்ணென்ற அடர்நீரில் நீந்தும் கருமீன்கள் நின் நினைவு
அவை வாய் குவித்துண்ணும் சுவர்ப்பாசி நின் வருகை
நீரிறைப்பின் மென்சுழிப்பதிர்வு நின் ஸ்பரிசம்
இடுக்கினில் நுழைந்து கிளைத்தோங்கத் துடிக்கும் அரசு நின் அன்பு
மேலோடும் வேம்பின் பிரதிமை நின் உறவு
பார்வையும் மனமும் உறவுமுறையும் மாறிய பிறகு நேராக முகம்பார்த்துப் பேச முடியவில்லை. அங்கே போகவும் முடியவில்லை. போகாமலிருக்கவும் இயலவில்லை. தயக்கம், பயம், குற்றவுணர்வு. அவளது அம்மாவையும் அண்ணிகளையும் எப்படி எதிர்கொள்வது? தொடர்பு விலகியது, உறவு நெருங்கியது. சாதாரணமாகச் செல்லக் கூடியதான அவள் வீட்டிற்குப் போவதே பெரிய சங்கடமும் பதைப்புமாய்ப் போனது. சுகுவுக்கு சற்றே புரிந்து என்னோடு பேச்சைக் குறைத்துக்கொண்டான். வீட்டிற்குக் கூட்டிச் செல்லவில்லை. அது மேலும் அவமானமாயிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக சேவியரிடமிருந்து மறைப்பதும், அவனைத் தவிர்த்துவிட்டு அங்கே செல்வதும் கூடாத காரியமாய் இருந்தது. அவனுக்கு சற்றே சந்தேகம் வந்திருக்க வாய்ப்புண்டு என்பதை ஊகித்தேன். இறுதியில் அந்த வீட்டிற்கே போவது முற்றாக நின்றது. அங்கேயும் எல்லோருக்கும் ஏதோ புரிந்துபோயிற்று. பள்ளி செல்லும் வழியில் மிகச்சொற்பமாக சில நொடிகள் பேசலாம். பெரும்பாலும் புன்னகையோடும் பார்வையோடுமே போய்விடும் பொழுதுகள்.
அவளுடைய மூத்த அண்ணன் பிராட்வே தியேட்டரில் ஆபரேட்டராகப் பணியாற்றினார். வீட்டில் 16-எம்எம் புரொஜெக்டர் வைத்திருந்தார். படவொளிக்கான எரிந்துபோன கார்பன் கட்டிகளை சுகு வைத்து விளையாடுவான். புரொஜெக்டரின் உட்பாகங்களை அறிவதும் அதன் காட்சிப்படுத்தும் நுட்பங்களைக் காண்பதும் ஊக்கமாயிருந்தது. ஆர்வம் கூட்டியது. பிறகு ஆர்வம் வேறாயிற்று. எல்லாமே அவளாயிற்று. அவர் தன்னியல்பானதொரு மனிதர். வெளியுலகம் பற்றி பிரக்ஞை கொள்ளாதவர் என்பதால் அவருடன் சைக்கிளில் தேவி பின்னமர்ந்து செல்லும்போதெல்லாம் என்னையும் பின்னே வர அழைப்பாள். தொடர்ந்து செல்ல புரசைவாக்கம் மதார்ஷா துணிக்கடை, வெல்கம் ஹோட்டல் எனச் சுற்றிவிட்டு இரவு வீடு திரும்ப நேரிடும். சமிக்ஞையும் புன்முறுவலுமாய் மாலையும் இருளும் கடந்துபோகும் சாலையில்.
பத்தாம் வகுப்பு விடுமுறையில் கொஞ்சம் தூரமாயுள்ள, சக நண்பர்கள் சேர்ந்து பயிலும் கேபிடல் லெட்டர் தட்டச்சு இன்ஸ்டிடியூட்டில் பயில நானும் சேவியரும் சென்றோம். தேவியோ பக்கத்துத் தெருவில் உள்ள லட்சுமி இன்ஸ்டிடியூட்டில், அருகே உள்ளதால், சேர்க்கப்பட்டாள். நண்பர்களை விட்டு அவள் பயிலும் வேறொரு இன்ஸ்டிடியூட்டிற்கு என்னால் செல்ல முடியவில்லை. அப்போது அபிராமி தியேட்டரில் புதிதாய் வெளிவந்த கமல் படத்திற்கு அவளது வகுப்புத் தோழிகளுடன் செல்ல, என்னையும் வருமாறு வற்புறுத்தினாள். அச்சமயம் ஒரு முழு பேண்ட்கூட இல்லை. அரைக்கால் டிரௌசருடன் எப்படிச் செல்ல? மேலும் அவர்களுடன் திரையரங்கத்திற்குச் செல்வது திகைப்பாய் இருந்தது. மழுப்பிவிட்டேன். எப்போதாவது பள்ளிக்கூடத்திற்கு வரச் சொல்வாள். நானும் ஓடுவேன். மதியம் பள்ளிப்பக்கம் வர வேண்டுமாய் அவள் சாடை காட்ட, வீறுகொண்டெழும் வேகம். ஆனால், பத்துமுறை சென்று நின்றால் ஒருமுறை அவள் வெளியே வந்து பேச வாய்ப்புண்டாகும். அவளும் தினமும் சும்மா பெண்கள் பள்ளியிலிருந்து வெளியேவர முடியாது. அதுவும் ஓரிரு நிமிடங்கள்தான். பக்கத்தில் உணவு முடித்துத் திரும்பும் மாணவிகள் ஆசிரியர்கள் சிலரைத் தவிர்ப்பது கடினம். என்றாலும் அவளின் அழைப்பொன்றே பேருவகை தந்தது. அப்படித்தான் ஒருமுறை சாலையில் பைக் ஒன்றில் என் சைக்கிள் மோதி விபத்தானது. காலில் அடி. வலது தொடை எலும்பில் விரிசல். ஒருமாத காலமானது குணமடைய.
இப்படிப் பொறுப்பற்று அடிபட்டு வந்ததால் நைனா எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஒருமாதகாலம் நடக்கமுடியாமல் பெருத்த சங்கடம். நான் நொண்டுவதைப் பார்த்து டாமியும் சில சமயம் கூடவே நொண்டி நொண்டி வருவான். கிண்டல் செய்கிறானா அல்லது என் வலியை அவனும் சுமக்கிறானா என்று தெரியாது. கே.எம்.சி.யில் கொடுத்த தைலத்தைத் தேய்த்து முட்டி பெரிதாய் வீங்கியிருந்தது. என் அவஸ்தையைப் பார்த்து நைனாவே ரயில்வே மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார். அப்போதுதான் அவருடைய ஆளுமையையும் புகழையும் கொஞ்சம் உணர முடிந்தது. மருத்துவர்களும் செவிலியர்களும் ஆளுக்காள் வந்து சேவை செய்தனர்.
முட்டியைப் பரிசோதித்துவிட்டு நேரே ஆபரேஷன் தியேட்டருக்குள் கூட்டிச் சென்றனர். காலையும் கையையும் படுக்கைக் கம்பியோடு கட்டிவிட்டு, இரண்டு தடித்த வெறும் ஊசிகளை முட்டிக்குள் செருகி சதையைப் பிழிய கருரத்தம் வழிந்தது. வலியான வலி. செவிலியர்களின் முன் கத்தக் கூச்சம் வேறு. ஏதோ நரகத்தில் பாவத்திற்கான தண்டனையாய்த் தோன்றியது. சேகரித்த இரத்தத்தை மருத்துவர் காண்பித்தார். கருஞ்சிவப்பாய்க் கட்டிதட்டிப் போய் இருந்தது. தொடர்ந்து பிசியோதெரபி வரச்சொன்னார். தப்பித்தோம் பிழைத்தோமென அந்தப் பக்கமே போகவில்லை பிறகு.
வள்ளுவர் கோட்டம் அருகில் தேவியின் பெரியப்பா வாழ்ந்தார். அடிக்கடி தேவி வீட்டிற்கு வருவார். அவருக்கு நைனாவை நன்றாகத் தெரியுமென்பதால் என்னுடன் மிக அன்பாகப் பழகினார். எங்கள் வீட்டிற்கும் வந்து பேசிப்போவார். ஒருநாள் அதிகாலை அவர் இறந்ததாகக் கனவு வந்தது. காலை எழுந்ததும் மாடியிலிருந்து எட்டிப்பார்க்க தேவியின் வீட்டில் எச்சலனமும் தென்படவில்லை. எப்படிப் போய்க் கேட்பது என்ற தயக்கம். அவளின் வீட்டாரிடமிருந்து விலகிய தருணம். எதிர்பாராமல் சட்டென தேவி வெளியே தென்பட கை சாடையில் அவளது பெரியப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்க குழப்பத்துடன் எதுவும் புரியாமல் என்ன என்றாள். சற்றைக்கெல்லாம் பெரியப்பா வீட்டிலிருந்து யாரோ வந்து விபரம் சொல்ல குடும்பமாய்க் கிளம்பினர். தேவி மட்டும் உனக்கு எப்படித் தெரியும் என்பதுபோல் ஆழ்ந்து பார்த்துப்போனாள்.
மழைக்காலத்தில் மட்டும் மொட்டைமாடியில் பொழுதுகழிக்க முடியாது போகும். மழை முடிந்து பனி தொடங்கும் டிசம்பர் இறுதியிலிருந்து மொட்டைமாடியில் போர்வையால் கூடாரம் அமைத்து உறங்குவோம். அதிகாலை இறங்கும் மூடுபனி பரவசம் தரும். அக்கம்பக்கத்து வீடுகள் மறைவுறும். தேவி இப்போது என்ன செய்வாள், இப்பனியினூடே இங்கே வந்து அமர்ந்தால் எப்படி இருக்கும், என்னவெல்லாம் தோன்றும், எதுவெல்லாம் பேசிக் களிக்கலாம், உவகை கூட்டலாம், பனிக்குளிரில் காதலைப் பெருக்கி இன்புறலாம் என்றெல்லாம் தோன்றும். மயக்கமும் தாபமுமாய் பனியில் கரையும் அதிகாலை.
*
தேவியின் தம்பி சுகுமாருக்குக் காற்றாடியைத் தவிர வேறொன்றுமே தெரியாது. மற்றபடி எப்போதுமே அவன் நமக்குக் கிடைப்பான், அதாவது எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் போக உடன் வருபவன். அவனது ஒரே பொழுதுபோக்கு காற்றாடி விடுவது மட்டுமே. பொழுதுபோக்கல்ல, அவனது தீவிரமான ஒரே விளையாட்டு அது. படிப்பெல்லாம் மூன்றாம் நான்காம்பட்சம். காற்றாடிப் பருவத்தில் கைகள் பரபரக்க வானத்திலேயே அவனது கவனமிருக்கும். விண்ணை நோக்கியே கிடக்கும் கண்கள், மனம், பொழுதுகள். இரவுத் தூக்கத்தில்கூட காற்றாடிக் கனவில்தான் சுகு இருந்திருக்க வேண்டும்.
சுகுவின் கையில் காற்றாடி மேலுயர்ந்து நடனம் புரியும், நெளியும், தடம் மாறும், எதிர்க்காற்றில் பாயும். அவனது கைவிரல்கள் நூலை மீட்டுவது அலாதியானது. வீணை போல மீட்டிப்போவான். விரல் நர்த்தனத்தில் தவிக்கும் காற்றாடி, இவன் எவ்வாறெல்லாம் தன்னை ஆட்டுவிப்பானோ என்று! அதனாலேயே அவனை அவ்வளவு பிடிக்கும். அவனது காற்றாடிப் பைத்தியம் எங்களது ஆச்சர்யம். என்னதான் படித்தாலும் எங்களால் அவனைப்போல ஒருபோதும் காற்றாடி விட முடியவில்லை என்பது எப்போதுமே பெருங்குறைதான். ஒவ்வொருமுறை மாஞ்சா போட்டதும் யாருடைய காற்றாடியையாவது வானில் வெட்டிப் பார்க்கத் துணிவான், கத்தியைக் கூர் பார்ப்பதுபோல. வெட்டுவதுதான் ‘டீல்’ போடுவது. யாருடைய காற்றாடியையாவது வம்படியாக வெட்டிவிடுவான். சிலசமயம் ஆசையாய் கற்றுக்குட்டிகள் விடும் காற்றாடியை ஒரே வெட்டில் சாய்த்துப்போட்டுப் போவான். அச்சின்னக் காற்றாடி சரிந்து வீழும். அச்சமயம் புளியந்தோப்பில் ஸ்கூட்டரில் சென்ற ஒருவர் அறுந்து விழுந்த மாஞ்சா நூலில் கழுத்தறுபட்டு இறந்துவிட்டிருந்தார். அதனால் சிலகாலம் போலீஸ் கெடுபிடி நிலவியது. டவுட்டனில் புறாக்கள் நூல் பட்டு இறந்திருக்கின்றன. இறக்கைகள் துண்டாகியுள்ளன.
அவன் தாராபூர் பள்ளியில் படித்த ஒரு கிறிஸ்தவப் பெண்ணை ஒருதலையாய்க் காதலித்தான். கடைசிவரையில் காதல் நிறைவேறாமலே போயிற்று. அவளின் அப்பாவிற்குத் தெரியவர அடிக்காத குறையாக அவனை முறைத்தும் கண்காணித்தும் வந்தார். தினமும் அவளைப் பாதுகாப்பாக பைக்கில் பள்ளிக்கு விட்டும் அழைத்தும் போனார். ‘அப்பனே வில்லனாயிட்டாம்பா’ என்று நண்பர்களிடம் சுகு முறையிட்டுத் திரிந்தான். பிறகு மெல்ல ஒதுங்கியும்விட்டான்.
அப்பகுதியில் தெருவோரம் வசிக்கும் ஒரு கிழவரிடத்தில்தான் பெரும்பாலானோர் காற்றாடி வாங்குவார்கள், அவனும்தான். முட்டிவரையில் தொங்கும் காக்கி கால்சட்டை, முண்டா வெள்ளை பனியன், கிட்டத்தட்ட வெள்ளைத் தலைமயிர், முறுக்கிவிட்ட மீசை. முன்பற்களுக்கிடையில் எப்போதும் பீடி. அதிலிருந்து கிளர்ந்தெழும் புகை. கையில் எடுக்காமலேயே உதட்டிலும் பற்களாலும் கடித்துப் பிடித்தபடி புகைக்கும் கர்வமிகு பாணி. அதிகம் பேச்சின்றி, காற்றாடி கேட்டு வருபவர் விளக்காமலேயே அவர்களுக்குப் பிடித்ததை, வண்ணத்தை, வடிவத்தை, அளவை, குஞ்சம் போன்ற அலங்காரத்தைக் குறிப்புணர்ந்து அமைத்துத் தருவதில் அவரின் வினைத்திறன் அலாதியானது.
மூங்கில் வெட்டுவது, மெல்லிய குச்சிகளாகச் சீவி, வளைவடிவை, எடையைப் பகுப்பாய்ந்து, வண்ணக் காகிதங்களை அந்தளவில் வெட்டிக் கத்தரித்து, தரையில் வைத்து ஒட்டி, கால் கட்டைவிரலில் பிடித்துக் கறைபடியாது சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஒன்றென விதவிதமான காற்றாடிகளை உருவாக்கிக் கொணர்ந்து தருவார். பெறுபவர் முகத்தில் தென்படும் களிப்பில் மனநிறைவு அடைந்து, சில்லறைகளைப் பெற்றுக்கொள்வதில் அவருக்கு நிகரில்லை. நாமம், ஒற்றைக்கண், இரட்டைக்கண், பாணா, குஞ்சம், ஒற்றை, இரட்டைவால் என இரக இரகமாய் வடிவமைக்கப்படும் காற்றாடிகள். அவர் பெறும் காசு தயாரிக்கப்படும் காற்றாடிகளின் கலைநேர்த்திக்கு எவ்விதத்திலும் ஈடாகாது. அது ஊருக்கே தெரியும். காசு கொடுப்பதைக்கூட எண்ணிப்பார்ப்பதில்லை. அதில் கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை என்று மட்டும் உறுதியாகத் தெரியும். சிறுவர்களும் இளைஞர்களும் மகிழ்கிறார்கள், அதுதான் அவர் வேண்டுவது போல. அதிகமாக ஒன்றும் தயாரிக்க மாட்டார். ஒருநாளைக்கு ஐந்து அல்லது ஆறு, அவ்வளவே. ஓய்ந்த பிற சமயங்களில் பீடி புகைப்பது, அவ்வப்போது தேநீர். அவருக்கு வீடிருந்ததா, குடும்பம் மக்களுண்டா? யாருக்கும் எதுவும் தெரியாது.
அவரின் கைவண்ணக் காற்றாடி வானில் தனித்துத் தெரியும், விடிவெள்ளி போல. சீறும், விரைவுற்று விண்ணேறும். கரணமடிக்கும். அண்மைக் காற்றாடிகளைச் சண்டைக்கிழுக்கும். முட்டும், வா வாவென வம்பு செய்யும். செங்குத்தாகக் கீழிறங்கி சிறுவட்டம் பெருவட்டமடித்து நின்று நிதானித்து வெட்டும். காற்றாடிகளுக்குப் பல முக பாவங்களுண்டு. கூர்மையாய், கர்வமாய், தயவாய், எழிலாய் என. அதில் அக்கிழவரின் தொழில் நிபுணத்துவமும் செல்வாக்கும் தென்படும். வானில் சொல்லப்படாத ஒரு விதி இருந்தது. அவர் செய்த காற்றாடிகள் தமக்குள் வெட்டிக்கொள்ளாது. ஆதரவும் ஊக்கமுமாய் ஒன்றுக்கொன்று நட்பைப் பகிர்ந்துகொள்ளும். ஒருபோதும் அவற்றினிடையே மோதலேதும் இருக்காது.
நூலுக்கு மாஞ்சா போடுவதே ஒரு தனிக் கலை, யுக்தி. மாஞ்சாவில் கண்ணாடித் தூள்தான் பிரதானம். மின்சார வாரியத்திலுள்ள தெரிந்தவர் ஒருவரின் உதவியில் வெற்றுக் குழல்விளக்குகளை வாங்கிவந்து உடைத்து, இடித்து, நுணுக்கி, தூளை வெண்துணியில் கட்டி, மெல்லென உதற, கண்ணாடித் தூள் புகையென நுண்ணிய பொடியாய்த் தரையில் விரித்த காகிதத்தில் படியும். அதைச் சேகரித்து, வண்ணப்பொடி, மைதா, நீர் சேர்த்த சட்டியில் கொட்டி, கஞ்சியாகக் காய்ச்சி, சிலநேரம் கொஞ்சம் குதிரைச் சாணமும், ஓணான் இரத்தமும் சேர்க்கப்படும். கைப்பக்குவச் சூட்டில் நூல்கண்டை அதில் அமிழ்த்தி, குடுவை வாயைக் கையால் மூடியபடி, மேலேற்றப்பட்ட காற்றாடியில் நூலை முடிச்சிட்டு இணைத்து வானில் ஏற்றி நூலில் மாஞ்சா சாரமேற்றிக் காயவைக்கப்படும். சிலநேரம் இரு மரத்தினிடையில் அல்லது கம்பத்தில் சுற்றப்பட்டும் மாஞ்சா போடப்படும். காற்றாடி வானேறும் வேகத்தில் மாஞ்சாவில் மிதக்கும் நூல்கண்டு விரைவாய்க் கைக்குள் உருள சட்டை, முகத்திலெல்லாம் விர்ரெனக் கோடாய்த் தெளித்துப்போகும். முதலில் மாஞ்சா ஈரத்தில் தொய்வுற்றுக் கிடக்கும் நூல் மெல்ல காயக் காய நிமிர்ந்து விறைத்துக் கையிலிருந்து பீறிட்டுக் கிளம்பி, பலசமயம் விரல்களை அறுத்துச் சீறும். காற்றாடி வானில் இன்னொரு தருமம் உண்டு. மாஞ்சா காயும் காற்றாடியை யாரும் வெட்டக்கூடாது. அப்போதுதான் பூப்பெய்திய பெண்பிள்ளை மாதிரி. அது முதிர நேரம் தரவேண்டும். அப்படி ஒருவேளை விபத்தாக நடந்தாலும் சண்டை முற்றிவிடும். வஞ்சம், பழி வாங்கல் வானில் நிகழும். ஊர்ச்சண்டையாகவும் கூடும்.
அன்று பிளஸ் டூ கடைசித் தேர்வு. அறிவியல் குழுவுக்கான எனது தேர்வுகள் முடிந்திருந்தன. அவளுக்கு வரலாறு. பள்ளிக்கு வருமாறு மாடியிலிருந்து அவள் சமிக்ஞை செய்ய ஏதேதோ எதிர்பார்த்து கனவுடன் சரியாக ஒரு மணிக்கு பள்ளி வாசலுக்கெதிரே சற்றே தள்ளி சைக்கிளை நிறுத்தியாயிற்று. தேர்வு சமயமென்பதால் பிரச்சனை எதுவுமிருக்காது. சாதாரணமாக பள்ளி நாட்களில் சில சமயம் போலீஸ் ஜீப் வந்துபோகும். பயம் பீடிக்கும். மெல்ல சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நகர வேண்டியிருக்கும். வகுப்பு நண்பனின் தங்கையும் என் சொந்தக்காரப் பெண்ணொருத்தியும் அங்கேதான் படித்தனர். பார்த்தால் சிரித்துப்போவார்கள். சொந்தக்காரப் பெண் மட்டும் வீட்டிற்கு வந்துபோனால் கிண்டலடிப்பாள். சமாளித்துவிடலாம்.
பள்ளியின் கேட் தாண்டி அவள் வந்ததைப் பார்த்தேன். எதிர்த்திசையில் நடக்க மெல்ல சைக்கிளைத் திருப்பிப் பின்தொடர்ந்தேன். அவள் முகம் மிகவும் இருண்டிருந்தது. தேர்வை சரியாக எழுதவில்லை போலும். வெங்கடேசபுரம் காலனியின் குறுக்குத்தெருவில் நுழைந்ததும் யாரும் தெரிந்தவர்கள் இல்லை என்பதை உறுதிசெய்தபின் என்னைத் திரும்பிப் பார்ப்பாள். முன்பு ஒருமுறை அவளது வகுப்பாசிரியை எதிரே வந்துவிட நேரே வேகமாக நடந்து சென்று அடுத்த சந்தில் நுழைந்தாள். அதிலிருந்து இப்படியொரு திட்டம், திரும்பிப் பார்த்ததும் பேச நெருங்குவதென்று.
சைக்கிளை அழுத்திக் கிட்டே நெருங்கியதும் இறங்கிக் கூடவே நடந்தேன். பேசாமலே வந்தாள். ‘என்ன எக்ஸாம் நல்லா எழுதலியா?’ என்றேன். ‘இல்ல, அது ஈசிதான்’ என்றாள். ‘பின்னே ஏன் சோகம்?’ பெருமூச்சுடன் என்னை ஆழ்ந்து நோக்கினாள். ‘என்ன, என்ன பிரச்சனை? நம்ம விஷயம் ஏதும் தெரிஞ்சிபோச்சா?’ சட்டென பேச்சை மாற்றினாள். ‘சரி எந்த காலேஜ் சேரப்போற?’ துணுக்குற்றேன். ‘ஏன் பேச்சை மாத்துற? சரி நீ எங்க சேரப்போற?’ தெருமுனை வந்துவிட்டது. அதற்குப் பிறகு கொன்னூர் நெடுஞ்சாலை என்பதால் வந்த வழியே திரும்பவேண்டி வந்தது. இவ்வளவு தூரம் நடந்து இதுவரையில் பேசியதில்லை. ‘கேட்டேனே, என்ன பிரச்சனை?’ ‘நான் பெயில்தான். இங்கிலீஷ் சரியா எழுதல. சொல்லிக் கொடுக்க நீயுமில்ல.’ அவள் சற்றே முறுவலிக்க நானும் சிரித்தேன். பத்தாம் வகுப்பில் அவளெனக்கு கணக்குப்பாடம் கற்றுத்தர பதிலுக்கு ஆங்கிலப் பாடம் என்னிடம் பெற்றுக்கொண்டாள்.
பத்தாம் வகுப்பில் இருவரும் தேறிவிட்டிருந்தோம். அப்புறம்தான் அவள் வீட்டுக்குப் போகவில்லையே. ‘சரி விஷயமென்ன, அதச் சொல்லு’ என வலியுறுத்த மீண்டும் மௌனமானாள். பத்தடி அமைதியுடன் நடக்க சற்றே திகிலானது. சைக்கிள் கனமாய் உணர்த்திற்று. ‘எனக்குக் கல்யாணம் பாக்குறாங்க. மாமா பையன்.’ என் வயிறும் தொண்டையும் இறுகின. நேரே பார்த்தபடி வேகமாக நடந்தாள். அவள் என்னைப் பார்க்கவே இல்லை. என்னால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடக்கமுடியவில்லை. அப்படியே சைக்கிளில் ஏறிப்போய்விடலாமா என்றிருந்தது. இருந்தாலும் முடிவு தொக்கி நிற்கிறதே என்பதால் வலுகூட்டி நடந்தேன். பேச முடியவில்லை. கூடவே நடந்தேன். தெருவின் அடுத்த முனை வந்துவிடும். முடிக்கவேண்டும் உரையாடலை. உறவாடலுக்கு அவகாசமில்லை.
‘சரி என்ன செய்ய….’ என தைரியம் கொண்டு கேட்டு முடிப்பதற்குள் நேரே என்னைப் பார்த்தபடி ‘ஒன்னும் செய்ய முடியாது. ஆனா இனி இப்படியே மரக்கட்டையாதான் வாழ்வேன்’ என்றாள்.
மீண்டும் பள்ளிக்கூடத்திற்கருகில் வந்துவிட அவள் கண்கலங்கியபடி தெருவைக் கடந்து அப்பக்கம் நடந்து பள்ளிக்குள் புகுந்தாள். துக்கமும் கோபமும் ஒருசேரப் பிடித்து அழுத்த அதே வலியாற்றல் கொண்டு பெடலேறி மிதித்து சீட்டிலமர்ந்து பள்ளியைக் கடந்து போனது சைக்கிள். அதற்குப் பிறகு முற்றிலுமன்றி, ஆனால், அவளுடன் உறவறுந்தது.
அவளுக்காகப் படித்தபடி ஏக்கத்துடன் மாடியில் காத்திருக்கும் தருணங்களில் ஒருசமயம் கல்மழை பெய்தது. படபடவென தலையில் கொட்டி உருண்டது. அந்நீர் மணிகளைச் சேகரித்து வாயில்போட்டு விளையாடினோம். ஒருமுறை வானில் வட்டவட்ட வானவில் நிறங்கள் எழுந்து மறைந்தன. வானவில் வட்டமாய் வளைந்துவிட்டதுபோல. வானில் அக்காட்சி பரவசப்படுத்தியது. அக்காட்சி பின்னர் ஒருபோதும் தோன்றவில்லை.
உயிரியல் பிராக்டிகலுக்கு ரயில்வே பசுமைப்பகுதியில் சேவியருடன் சென்று விதவிதமான பட்டாம்பூச்சிகளைப் தேடிப்பிடித்து இன்செக்டேரியம் எனும் பூச்சிப்பெட்டி தயாரித்தோம். எழில்வண்ணப் பூச்சிகளை வெயிலில் பதப்படுத்தி குண்டூசியால் முதுகில் குத்தி தெர்மகோல் அட்டையில் பதித்து அவற்றின் உயிரியல் பெயர்களை எழுதி வைத்தோம். பெட்டியைக் கண்ணாடி சவ்வுத்தாள் கொண்டு மூடி ஆய்வகத்தில் சமர்ப்பிக்க முடிந்தது. அதே போல தாவரவியல் பாடத்திற்கு அரிய செடிகளை அவற்றின் பூப்பூக்கும் பருவத்தில் கத்தரித்து வந்து செய்தித்தாள்களுக்குள் சீராக விரித்தமைத்து புத்தக அடுக்குகளின் அடியில் அழுத்தி வைத்தோம். தினமும் வெளியெடுத்து காற்றில் உலர்த்தி மடிந்த நுனிகளைச் சீராக்கி ஹெர்பேரியம் தயாரித்துச் சமர்ப்பிக்க முடிந்தது.
மனத்திற்குப் பிடித்த பிராந்தியத்தில் இரசித்து வியந்த தாவரங்களையும் உயிர்களையும் கொன்று பெட்டகப்படுத்தியது போல காதலும் பேழைக்குள் செத்து வளர்ந்தது. துயர் செறிந்தது.
அருமையானவளே
நசுக்கிக் கிடக்கும்
பச்சைப் புழுக்களின் வயிற்றில்
என் பயிர்க்கட்டுக் கனவுகளின்
கதி காண்
இடித்துக் கட்டிய களஞ்சியம் நிரம்பாதிருக்கிறது
முன்னிலும் குறைவாய்
நீ பயணப்படாத பிரதேசங்களிலும்
வழி சமைத்து காத்துக் கிடக்கிறேன்
முழுமைபெறாப் பிண்டமாகத்
தெருவோரம் கிடக்கிறது
காதல் போலொன்று
பின்மதிய வேளையில் வெயிலும் மழையாய் மின்னித் தெறிக்கும் மொட்டைமாடியில் பக்கத்துவீட்டுச் சுவரோரம் ஒடுங்கி நின்று அவள் வரக் காத்திருப்பேன். ஏமாற்றப்பட்டேனோ என துக்கம் மேலிடும். அச்செவ்விள வளைக்கரம் கம்பிகளற்ற சன்னல்வழி வெளி நீண்டு மழையை ஏந்தி இரசித்தது. குழிந்த உள்ளங்கையில் நீர்பட்டுத் தெறித்தது. வழிந்து சொட்டுகளாய் விழுந்தது. பிறகு கரங்கள் மெல்ல மேலுயர்ந்து சாக்குத் திரையை மடலவிழ்க்க, சரிந்து மூடியது சன்னல். வீட்டிற்குள் ஒளிந்துகொண்டன. சுவர் மறைவில் தலைவழியே சொட்டியது மழை. பாடப்புத்தகம் நனையாதவாறு நெஞ்சில் புதைந்திருந்தது. அவளுந்தான்.
சொன்னமாதிரியே அவள் ஆங்கிலத்தில் பெயிலாகி ஆனால் ஏதோவொரு பாடத்தில் பள்ளியில் முதலாவதாக வந்து பரிசு பெற்றாள். அடுத்த வருடம் தேறி காயிதே மில்லத் கல்லூரியில் சேர்ந்ததாகத் தெரிந்தது. இடையில் தட்டச்சும் தையற்கலையும் கற்றாள். வழியில் பார்க்கையில் மௌனமாய் வாய்மூடி மெலிதாய் சிரித்துப்போனோம். அவள் பயின்ற இடங்களைக் கடக்கையில் தவறாமல் சைக்கிள் மெதுவாகி அவளைத் தேடும். சிலசமயம் அவள் இருந்தால் ஓரிரு வட்டங்கள் அடித்துவிட்டு, பின் துவண்டு நகரும்.
வானில் இரண்டு காற்றாடிகள் மோதின. டீல் போட்டு மோதும்போது இரண்டின் நூல்பட்டதும் இரு காற்றாடிக்காரர்களும் சரசரவென நூலை அவிழ்த்தனுப்ப வேண்டும். இரண்டு நூல்கயிறும் உராய்ந்தபடி வானோடும். ஒருநொடிப்பொழுது நிறுத்தம் கண்டால்கூட அடுத்த நூல் அதை அறுத்துவிடும். வெற்றிகொண்ட காற்றாடியைக் கீழிறக்கிப் பார்க்கையில் நூல் ஆங்காங்கே இழையறுந்து விழுப்புண்களாய்த் தென்படும். அப்பகுதியை அறுத்துப் போட வேண்டும். சிலர் அதற்கு நுண்மையான முடிச்சு போடுவார்கள். அது ஆபத்தானது. அடுத்த மோதலில் எதிர்க்காற்றாடியின் நூல் அம்முடிச்சின் கழுத்தில் பட்டால் சட்டென அறுந்துவிடக்கூடும். அறுந்த காற்றாடி ஆடியாடி காற்றில் அலைந்து மிதந்து வரும். காற்றின் போக்கில் நீந்தித் தன்வயமிழந்து செல்லும். மெல்ல தரை தட்டும். சிலர் தரையில் அதைப் பிடிக்க ஓடிக்கொண்டே இருப்பார்கள். யார் வீட்டுக்கூரையிலோ மாடியிலோ விழுந்தால் அவ்வீட்டாருக்கு பாக்கியம். தெருவில் விழப்போனால் ஏகப்பட்ட கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகிவிடும்.
வாலறுந்துபோன காற்றாடி தரை விழுந்து கிடப்பதுபோல மனம்தான் மாயையின் வலிமையற்று சும்மா அடங்கும்படி அருள் வேண்டுகிறார் தாயுமானவர்.
‘வாலற்ற பட்டமென மாயா மனப்படலம் காலற்று வாழவும் முக்கண்ணுடையாய் காண்பேனோ?’ மனமும் உடலும் வலுவற்று வீழ்வுற்றுக் கிடந்தது.
அந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக நேரத்திற்கு முன்பாகவே திருப்பதி குடை விஸ்வநாதர் கோவிலுக்கு வந்து நிற்க அண்மையில் குடைகளின் அழகை இரசிக்க வாய்த்த சந்தர்ப்பத்தில் திரும்பிப் பார்த்தால் மிக அருகில் தேவி, அவள் வீட்டாருடன். எதிர்பாரா தெய்வப் பரிசு. யாரும் கவனிக்கவில்லை. பிளஸ் டூ கடைசித் தேர்வுக்குப்பின் இவ்வளவு அருகில் பார்க்க வாய்த்ததேயில்லை. வானின் கட்புலனாகா தெய்வத்தைப் பார்ப்பதா, இவ்வுடல் கொண்ட தேவதையைப் பார்ப்பதா? காதலுக்கு முன் எந்தக் கடவுளரும் ஜெயித்ததில்லை, காதல் தோற்றுப் போகுமென்றாலும். இப்போது மட்டும் தேவதைகள் அருள்வாராயின் இதோ குண்டுக்கட்டாக அவ்வழகுக் குடைகளைத் தூக்கிச் சுமந்தோடுவது போல அவளைத் தோளேற்றி ஓடியிருக்கலாம்.
அக்கணத்தில் ஏமாற்றமும் கோபமும் விலகி மீண்டும் காதல் மீதுற்றது. உள்ளக்கிடக்கைகள் பொங்கி எழுந்தன. மோகித்து நின்றது காதல். தாவணியில், கண்ணாடி வளையலில், கூந்தல் வெண்பூவில் எழிலே வடிவாயிருந்தாள். கிறுக்கேறிற்று. யாருமே கவனிக்கவில்லை. கவனம் பூராவும் வான் நோக்கி குடையைக் கண்டிருந்த கூட்ட வெள்ளத்தில், பின்புறமாகப் போய் அவளது புறங்கையைக் கிள்ளிப் போனது திருப்பதி குடையை இன்றளவும் மறக்க முடியாததின் பெருங்காரணம். கிள்ளியதில் பயந்து ஓடிப்போனதும் திரும்பிக்கூடப் பார்க்காததும் நான்தான். யாரும் பார்த்தார்களா, அவள்தான் பார்த்தாளா, கண்டுகொண்டளா, ஒன்றுமே தெரியாது, எங்களுக்கான காதல்போல.
*
தேவிக்கு அத்தை மகனுடன் திருமணம் நடந்தது. நண்பர்களுடன் வேறுவழியின்றி செல்ல நேர்ந்தது. ஆனால், தாலி கட்டியதும், சாப்பிடாமல் கல்லூரியில் இன்டெர்னல் தேர்வு இருப்பதாகச் சொல்லி நகர்ந்துவிட்டேன். நெஞ்சில் கசந்தது. யாருக்காவது தெரிந்திருக்குமோவென யாரையும் நேரிட்டுப் பார்க்க இயலவில்லை. சேவியர் என்ன நினைக்கிறான், தெரியவில்லை. ஒரு வாரம் அவ்வளவாக யாரிடமும் பேசாதிருந்தேன். தேர்வுக் காலமாய் இருந்ததால் அப்படியே காலம் கடந்துபோக சற்றே மறதி வந்து காப்பாற்றிப் போனது.
சில மாதங்களுக்குப் பிறகு கல்லூரி நண்பர்கள் வீட்டிற்கு வந்தபோது நானெழுதி வைத்திருந்த காதல் கவிதைகளைப் பற்றியும் குறிப்பாக எத்தனை வலியுடன் எழுதியிருக்கிறான், யாரந்தப் பெண் என்றும் கேட்க, மாட்டிக்கொண்டாயிற்று. சேவியர் என்னை நிமிர்ந்து பார்த்தான். வெறுமனே சிரித்தேன். டைரியில் எழுதிய கவிதைகளை நண்பர்கள் மீண்டும் படிக்க சேவியர் நெருங்கி அமர்ந்துகொண்டான் நினைவின் இரணங்கள் ஆறிப்போகும்படி.
இன்பியல் துன்பியல் கணங்களை
ஒரு சுவரொட்டிக்காரனைப்போல
ஒட்டிவிட்டு நகர்ந்து விடுகிறாய்
பழஞ்சுவரில் அதிகாலை
புதுப்படம் திரையிடப்படுகிறது
அல்லால்
மேலுமொரு சுவரொட்டி
பசை தடவப்படுகிறது
நேரம் இடம்
காட்சிகளின் தொடர் சுழற்சிக்குள்
சில நாட்களில் நீ
சாண்டா க்ளாஸ்
எனினும்
இரணச் சந்துகளில்
விரல் நுழைத்து வெளியேறும்
நீ
தோமாவின் தோழனாகிறாய்
எப்போதும்
அசௌகரியத்துடன் என் கையைப் பற்றிக்கொண்டான். நண்பர்களிடம் ‘அது ஒரு விபத்து’ என்றேன். எல்லோரும் சிரித்தனர். சேவியருக்கும் எனக்கும்தான் தெரியும் நான் குறிப்பிட்டது அவளைப் பார்க்கப் போய் நிகழ்ந்த அந்த சாலை விபத்தென்று.
*
போன வாரம்தான் தேவியின் இரண்டாவது அண்ணன் திருமணத்தில் அவளைச் சந்தித்திருந்தேன். கையில் பெண் குழந்தையொன்றை தேவி தூக்கி வைத்திருந்தாள். வடக்கத்திப் பெண்போல சேலையணிந்து பொட்டு, வளையல் எல்லாமே அப்படியாகத் தென்பட்டாள். அவளது கணவன் இராணுவ சிவில் அலுவலராக சண்டிகரில் பணியிலிருக்க திருமணமாகிய ஓரிரு மாதங்களில் அங்கு போய்விட்டாள். அதன் வெளிப்பாடாயிருந்தது அவளது தோற்றம். பேச ஆசையாய் இருந்தது. பார்த்தும் பார்க்காதது போலிருந்தாள்.
தேவியின் திருமணத்திற்குப் பின் உள்ளூரக் குமைந்தேன். யாருமறியாமல் மருகினேன். எதுவுமே என்னால் செய்யக் கூடாதிருந்தது. எல்லாமே இவ்வுறவில் சிக்கல், தலைகீழ். அவளாலும் ஒன்றும் செய்யவியலாது போனது. எப்படியும் அது தடம் மாறிய உறவு. அப்படியே இடம் மாறிப்போய்விட்டது.
பெருமூச்சோடு நாட்கள் கழிந்தன. அவளுக்காக அப்போது மடலேற முடியுமா என்ன? பனைமட்டைக் குதிரையில் ஊர்ந்து, எருக்கம்பூச் சூடி, சாம்பல் பூசி, அவளது உருவக்கிழியை ஏந்தி மேட்டுத்தெருவைச் சுற்றிவர இயலுமா? மடல் கொடுத்திருக்கலாம். மனதில் தீர்க்கமாய்த் தீர்மானித்து வைத்து அவள் பேசியதாய்ப் பட்டது. அதற்கு அவள் எந்த அவகாசமும் தரவில்லை என்பது கூர்முனை ஒடிந்து உள்நின்ற முள்ளாய் உறுத்தியது. அப்படித் தெருமுனையில் வைத்துச் சொல்லிப் போனபிறகு, ‘எப்படி வாழ்வேன், மரக்கட்டையாய்க் கிடந்து மடிவேன்’ என்பதுவரை சிந்தித்து வைத்து பேசிவிட்டவளிடம் இனி எதுவும் எடுத்துக்கூற, அவகாசம் கேட்க அப்போது அர்த்தமிருந்ததாகத் தெரியவில்லை. கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். நிறைய சோகக் கவிதைகள் ஒரு டைரி முழுதும் எழுதித் தீர்த்தேன். நா.காமராசன், மு.மேத்தா கல்லூரிக்கு வந்தபோது சில கவிதைகளை வாசித்துக் காண்பித்தேன்.
நரம்புகளின் நெடுஞ்சாலையில்
பளுவூர்தியுன் நினைவு
அழுத்தி நகர்கிறது
சற்றே களைப்பாயிருக்கிறது
உன்னில் களிகூர்கிறேன்
இருப்பின் திறவுகோலாய் நீயிருக்கிறாய்
கீறலாய் மயிரிழையாய் விரிசலுற
வேர் நுழைத்துப் பிழைத்திருப்பேன்
முடிவுபரியந்தம் பசுமையாய்
அழுகையின் கண்ணீரில்
தாவ இயலாமல்
வழுக்கி வழுக்கி வீழ்கிறது காலம்
என்னோடு அண்மையில்
மிக நெருக்கத்தில்
இதோ வெற்றிடம்
இடையில் ஒருமுறை சயானி தியேட்டர் வாசலில் தேவியைக் கர்ப்பவதியாகப் பார்த்திருந்தேன். வயிற்றிலிருந்த அக்குழந்தைதான் அவள் கையில் இப்போது.
பத்தாவது கோடை விடுமுறையில் திருச்சி காட்டூரில் இருந்த தேவராஜ் அண்ணன் வீட்டிற்கு ஒரு மாதம் போயிருந்த சமயம் பிரிவைத் தாங்க முடியாமல் அவளுக்குக் கடிதமொன்று எழுதினேன். அப்போது காட்டூர் சரோஜா தியேட்டரில் ‘ஒருதலை ராகம்’ பார்த்தது வேறு நெஞ்சைப் பிசைந்தது. முராரி ராகம் இசைத்துக்கொண்டிருந்தேன். அவள் வீட்டருகே வாடகைக்குக் குடியிருந்த ஒரு பையனின் விலாசத்திற்கு அனுப்பிவைத்தேன், கடிதத்தைக் கொடுத்துவிடச் சொல்லி. என்ன ஆனதென்றே தெரியவில்லை. திரும்பி வந்து கேட்டபோது அவன் கொடுத்தேன் என்று ஒருமாதிரி உளறினான். அவள் பெற்றதாக எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அதிலிருந்து அவள் வீட்டார் என்னைத் தவிர்த்தனர் என்று மட்டும் புரிந்தது. சட்டென அவ்வீட்டார் தொடர்பறுந்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் அவர்களை நேருக்கு நேர் சந்திக்கிறேன்.
சற்று நேரத்தில் அவளது அண்ணி அக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள். சிரித்தேன். அவள் அண்ணியும் சிரித்தபடி, ‘இது யார் தெரியுதா?’ என்றாள். தேவி வீட்டில் அவளுடைய சின்ன வயது போட்டோ மாட்டியிருந்தது நினைவில்வர ‘தெரியுது’ என்றேன். ‘அங்கிள சூடு, இக்கட சூடு’ என்றாள். குழந்தை சிணுங்கிற்று. அம்மாவைத் தேடிற்று. தேவி எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நான் மெல்ல எழுந்தேன். குழந்தையை வாங்கிக்கொண்டாள். அண்ணி ‘நல்லா இருக்கியாப்பா?’ என்று கேட்டவாறே யாரையோ அழைக்கும் பாவனையில் அகன்றார். சுற்றிலும் மக்கள் கூட்டம், தெரிந்தவர் தெரியாதவரென. நண்பர்கள் வேறு. சேவியர் நண்பர்களை அழைத்துக்கொண்டு வேறுபக்கம் நகர்ந்தான்.
அவளிடம் சென்றதும் குழந்தை சிரித்தது. ‘ஒங்க அம்மாதான் எனக்கு கணக்கு டீச்சர்’ என்று சொல்ல வேண்டுமாய் இருந்தது. எப்போதுமே அவளிடம் பேசத் தயக்கம்தான். காதல் ஏகமாய்த் திரண்டது. ஆனால் அவளை வேறுவிதமாகப் பார்க்க அவ்வயதில் தோன்றாதிருந்தது. மூத்த வயதும் அது சார்ந்த மரியாதையின் நிமித்தமும்கூட என்று நினைக்கிறேன். கடந்து செல்வதுபோல் நெருங்கி சுற்றுமுற்றும் பார்த்து நின்றாள். ‘என்ன எப்படி இருக்க?’ என்றாள். ‘நீ?’ என்றேன். ‘ஏதோ போகுது. எல்லாத்தையும் மறந்துடு’ எனக் கூறி முடிக்க, அவளது அண்ணி மறுபடி அங்கே வந்தாள்.
‘எப்படி மறக்க?’ என்பதற்குள் ‘சாரி’ என்றபடி குழந்தையை நெஞ்சோடு அழுத்தி அணைத்தபடி அண்ணியிடம் சென்றாள். ‘எம்மார்க்கமும் தோற்றிலதென் செய்கேன்’ என்பதாய் சேவியரைத் தேடி வெளிநடந்தேன்.
சிலசமயம் வேறெங்கோ வெகுதூரத்திலிருந்து மிக உயரத்தில் பறந்து வெட்டுப்பட்டு வீட்டுமாடியில் வந்து சேரும் காற்றாடிகளும் உண்டு. ஒரு மதிய வேளையில் உம்மென்று அடிக்கும் வெய்யிலில் சுவர் நிழலில் படித்துக்கொண்டிருக்க மேலே நிழலாடும். அறுபட்ட காற்றாடியொன்று தலைக்குமேல் வட்டமிட்டு, பின் தரை தாழ்ந்து சரிந்து அமரும். காற்றாடி விட்டவனின், காற்றாடி நூலின் தொடர்பறுந்து வானில் அலைந்து தோற்று கீழே கிடக்கிறது. காற்றின் தூண்டுதலில் மெல்ல எழ முனைந்து இயலாமல்போய் பின் தவழ்ந்து அப்படியே தரைபடிந்து படுத்துவிடும். அக்கம்பக்கத்தில் யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். வானேறி கர்வத்துடன் சீறிப்பறந்த அக்காற்றாடியின் பிந்தைய அவலம் எப்படி இருந்திருக்கும் என்று இப்போது உணரமுடிகிறது.
ரூமி பாடுகிறார்:
“சரி தப்புகளெனும் கருத்துகளுக்கப்பால்
ஒரு நிலவெளியுள்ளது
அங்கு உனைச் சந்திப்பேன்
அப்புல்வெளியில் ஆன்மா
படுத்திருக்கையில்
எதுபற்றியும் பேசுவதற்கு இன்றி
உலகம் வெகுவாய் நிரம்பிக்கிடக்கிறது
கருத்துகள், மொழி
அவற்றின் வழியான சொற்றொடர்
எவ்வொன்றும் எதையும்
புலப்படுத்துவதாய் இல்லை.“
அந்நிலவெளி எது? அதை நோக்கி நகர இயலுமா?
5 comments
ஒரு எதார்த்தமான, கவித்துவம் , குறிப்புகள் நிறைந்த எழுத்து!
அருமை அருமை
விமலன் மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.அரும்பிய முதல் காதலின் அத்தனை தவிப்பும் கதை முழுவதும் பரவி அந்த ஆழ் வருத்தத்தை தெரிவிக்கிறது.
Fantastic story
Salutations to Authour V. Amalan Stanley for his magical narration of the story.
Good luck
Thanks .
மிகவும் அருமையான நடை . நல்ல நினைவுகள் . எழுத்தாளர் சுகா வை நினைவு படுத்தும் இசை அனுபவம்
Comments are closed.