அன்பின் வழியது

0 comment

‘அப்பாடா என்ன வெயில்’ என்று அலுத்தபடியே குறட்டுப் படியேறிய சபாபதிப் பிள்ளை தலையிலிருந்து துண்டை அவிழ்த்து உதறியபடி வாசற்படியில் செருப்பைக் கழற்றிவிட்டு ‘பர்வதம்’ என்று குரல் கொடுத்தார். கூடவே ‘ஒரு சொம்புல தண்ணி கொண்டா’ என்றார்.

சற்று நேரத்தில் பர்வதம் செம்பில் நீருடன் வெளியே வந்தாள். செம்பை வாங்கி முகத்தை கைகால்களைக் கழுவியபடி ‘இன்னைக்காவது மணியார்டர் வந்துதா’ என்று கேட்டார்.

‘மணியார்டர் தானே, வந்துட கிந்துடப் போவுது’ என்று வேண்டாவெறுப்பாகச் சிடுசிடுப்போடு பதிலளித்துவிட்டு செம்பை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். 

முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டு காலைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த சபாபதிப் பிள்ளை ‘கழுதை என்ன பண்றான்… சம்பளம் வந்து எப்பிடியும் மூணு நாலு நாளாவது ஆயிருக்கும். ஒரு தகவலும் இல்லையே…’ என்று தனக்குள் முனகியபடியே மேசைக்கடியிலிருந்த இராட்டையை இழுத்து வைத்து நூற்பதற்காக அமர்ந்தார். வலது கை இராட்டைச் சக்கரத்தைச் சுற்ற இடது கை பஞ்சுப் பட்டையைப் பிடித்து இலாவகமாக இழுத்து நூலாக்கி முறுக்கி, கதிரில் ஏற்றிக்கொண்டிருந்தது.

சபாபதிப் பிள்ளை வாழ்க்கையில் அதிகம் அடிபட்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர். ஆனால் இப்படிப்பட்ட நிலைக்காக ஒருபோதும் அவர் கவலைப்பட்டதில்லை. அவர் நினைத்திருந்தால் வாழ்க்கையை ஒழுங்காகச் சீர்படுத்தி ஓரளவேனும் நிம்மதியாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் கூடவே பிறந்த முன்கோபம், மூர்க்க சுபாவம், கடுகடுத்த சுபாவம் அவரைக் கரையேற விடாமல் அலைக்கழித்து வந்தது.

காந்தியம் அது இது என்று சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் வாலிப வயதில் கலந்துகொண்டவர். சத்தியாகிரக இயக்கம் நடைபெற்ற போதெல்லாம் ஊர்வலங்களில் முன்வரிசையில் கொடி பிடித்துக்கொண்டு ஊர் ஊராக அலைந்தவர். கொஞ்சங்கூட பொறுப்பில்லாமல் இப்படி அலைகிறானே என்று பெற்றவர்கள் வருத்தப்பட்டார்கள். அதை எதுவும் இவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை.  

அந்தப் போராட்டக் களத்தில் அவருக்கு அறிமுகமானவள்தான் ரமாபாய். அவள் எதைக் கண்டு இவர் மேல் பிரியம் வைத்தாளோ… இவரும் அவள் மேலேயே பிரேமை கொண்டவராய் இருந்தார். அவள் வேறு சாதிதான். என்றாலும் அவள் வீட்டில் எந்த எதிர்ப்புமில்லை, பூரண சம்மதத்துடன் மணம் முடித்துவிட்டார்கள். சொந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் போதுதான் பெற்ற தந்தை சீறினார். எங்கேயோ போய் எவளையோ இழுத்து வந்துவிட்டானே என்று ஆத்திரப்பட்டார். உள்ளே நுழையவிடவில்லை. ‘படி ஏறாதடா’ என்று உறுமினார். ‘எங்கேயும் போய் எக்கேடும் கெட்டுத்தொலை’ என்று வாழ்த்தி விரட்டியடித்தார்.

இளம் மனைவியை அழைத்துக்கொண்டு வீராப்புடன் அன்று வீட்டைவிட்டு வெளியேறியவர்தான். யார் யாரோ வந்து எவ்வளவோ சொல்லி அவரை சமாதானப்படுத்தப் பார்த்தார்கள். ‘இருக்கிற சொத்து சுதந்தரத்தை விட்டு ஏம்பா இப்படி அநாதையாட்டம் வந்து அவதிப்படணும்? ஊர் வந்து சேர்’ என்றார்கள்.

‘இவரை நம்பியா நான் கலியாணம் பண்ணேன். போவட்டுமே… யாருக்கு வேணும் அந்தச் சொத்து’ என்று விட்டுக்கொடுக்காமல் வைராக்கியத்துடன் சொல்லியனுப்பிவிடுவார்.

எந்த ஆதரவுமின்றி நிர்க்கதியாய் வெறும் மனத் துணிச்சலுடன் வெளியேறியவர் முதன்முதலில் ஒரு கட்டட காண்ட்ராக்டரிடம் மேஸ்திரி வேலைக்கமர்ந்தார். சேர்ந்து இரண்டு மூன்று மாதம்கூட ஆகியிருக்காது. காந்தியம் என்றும் அவரை விடாது தொடர்ந்தது. கொடி, போராட்டம், ஊர்வலம் என்று பழையபடி ஆரம்பித்துவிட்டார். இளம் மனைவி வீட்டில் அடுத்த வேளைக்கு வழி என்ன என்று ஏங்கி நிற்க இவர் ஊர் சேவையில் இருந்தார். அந்த மனவேதனையிலும் அவஸ்தையிலும் மணமான மூன்றாவது வருஷமே அவள் மண்டையைப் போட்டாள். சும்மாயில்லை, ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்று கைக்குழந்தைகளை விட்டுப்போனாள்.

இந்த இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அவர் இன்ன கஷ்டம்தான் பட்டிருப்பார் என்று சொல்ல முடியாது. விடிவு காலம் போல சுதந்திரம் கிடைத்தது. காந்தியவாதிகளுக்கு சமூகத்திலும் அக்கம்பக்கத்திலும் மேலிடங்களிலும் கொஞ்சம் மதிப்பு ஏற்பட்டது. அவரவர்களும் பிழைப்புக்கு வேலை தேட இவருக்கும் மொத்த வியாபாரி ஒருவரிடம் கணக்கு எழுதும் உத்தியோகம் கிடைத்தது.

கூடவே ‘இந்த ரெண்டு கொழந்தைகளையும் வச்சிக்னு எப்படி சமாளிப்பார்’ என்று கூட இருந்தவர்கள் நச்சரித்துத் துளைக்க, எப்படியும் ஒரு துணையிருந்தால் நல்லதுதானே என்று இவருக்கும் தோன்ற, பெண் தேடி எங்கும் அலையாமல், சொந்தத்திலேயே ஒரு பெண்ணைப் பார்த்து நாலு பேரை வரவழைத்து சிக்கனமாய் ஒரு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இப்படி வந்து வாய்த்தவள்தான் பர்வதம்.

பர்வதம் கொடுமைக்காரியென்றோ மாற்றாந்தாய் மனோபாவம் கொண்டவள் என்றோ சொல்ல முடியாது. கொஞ்சம் எதையும் மறைக்காத ஓட்டை வாய். எந்த நேரத்தில் எது எது எப்படி என்று விதரணை போதாதவள். இதனால் முதல் தாரத்துக் குழந்தைகளுக்கும் பர்வதத்துக்கும் இடையே அவ்வப்போது நடக்கும் போராட்டத்துக்கு இவர் மத்தியஸ்தர். அதில் தலைக்குமேல் கோபம் பொங்கும். 

ஒரு நாள் வயதுவந்த பெண்தானே என்றுகூடப் பாராமல் மூத்த பெண்ணை அடித்துவிட்டார். அடி என்றால் சாதாரண அடி இல்லை. பயங்கரமான அடி. பொழுது விடிந்து பார்த்தபோது அவள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருந்தாள்.

பதினைந்து வருஷங்களுக்கும் மேலாக காந்தியத்தில் ஊறித் திளைத்தவரானாலும், அவரோடே பிறந்த முன் கோபத்தையும் முரட்டுத்தனத்தையும் வீராப்பையும் அவர் விடுவதாக இல்லை. சுட்டுப் போட்டாலும் இதெல்லாம் மாறாது போலிருந்தது என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படுமளவுக்கு நிலைமை சென்றபோதும்கூட அவர் தன்னை உணர்ந்து அதை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை.

மகள் அநியாயமாக இறந்த பிறகும்கூட அவர் சுபாவம் மாறவில்லை. பையனையாவது உருப்படியாக வளர்க்க வேண்டும் என்று அவனைக் கண்டிப்புடன் வளர்த்தார். பையனுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் நுணுகி நுணுகி ரோஜாப் பதியன் போடுவது மாதிரி கண்காணித்து கறாராய் வளர்த்தார். அவன் எஸ்.எஸ்.எல்.சி. தேறியபிறகு ஆசிரியப் பயிற்சிக்கு அனுப்பி படிக்க வைத்தார்.  

போன மாதம்தான் புதுச்சேரிக்குப் பக்கத்தில் ஒரு சிற்றூரில் வேலை கிடைத்தது. இவரே பையனை அழைத்துக்கொண்டு போய் தங்க, சாப்பிட என்று எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு, முதல் மாதம் சம்பளம் வாங்கியதும் எடுத்துக்கொண்டு நேராக வீட்டுக்கு வா என்று புத்திமதியெல்லாம் சொல்லிவிட்டு வந்திருந்தார்.

இதோ தேதி ஆறு ஆகிறது. இரண்டு தேதி வரைக்கும் வருவான் வருவான் என்று எதிர்பார்த்தது… ஆளையே காணோம். ஒருவேளை பணமாவது அனுப்பி இருக்கிறானோ என்றால் அதையும் காணோம்.

நூற்றுக்கொண்டிருந்த சபாபதி வெகுநேரம் பையனைப் பற்றியே என்னென்னமோ விட்டேத்தியாக யோசித்துக்கொண்டிருந்தார். கதிர் நிறைய நூல் நிரம்பி மேலும் சுற்றுகள் ஏற இடமில்லாமல் வழிந்து இறங்கியது. நூற்பதை நிறுத்தி வீசனத்தை எடுத்து ‘கண்ணி’ கட்டியபடியே பர்வதத்தை அழைத்து, ‘எதிர் வீட்லனா ஒரு அஞ்சு ரூபா கடன் கேட்டுப் பாரு… நானாவது போய் பார்த்துக்னு வர்றேன். கழுதை என்னாச்சின்னே ஒன்னுந் தெரியல’ என்றார்.

‘இதுவேற ஒரு வெட்டிச் செலவு. தான்தான் ஒஸ்தின்னு அதுக்கு ஒரு இது. யாரியும் மதிக்காம…’ என்று சலித்துக்கொண்டாள் பர்வதம். 

பிறந்ததிலிருந்து முழுசாகப் பத்து ரூபாயைத் தன் இஷ்டத்துக்குச் செலவு செய்தறியாதவன் மணிவேல். ஒரு நாளாவது அவனைத் தன்னிஷ்டத்துக்கு விட்டிருப்பாரா சபாபதிப் பிள்ளை? சொக்காய் போட்டுக்கொள்வதிலிருந்து முடி வெட்டிக்கொள்வது வரை எல்லாவற்றையும் அவன் அப்பா இஷ்டத்துக்குத்தான் செய்துகொள்ள வேண்டும் அவன்.

சம்பளப் பணம் நூற்று எண்பது ரூபாயையும் மொத்தமாக எண்ணி வாங்கும்போது அவனுக்கு மகிழ்ச்சியால் விரல்கள் நடுங்கின. அப்பாவும் வீடும் எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. உல்லாசமான சுதந்திரமான வாழ்வின் வாசல்கள் யாவும் அவனுக்காக விரியத் திறந்து விடப்பட்டுவிட்டன. இனி எது பற்றியும் அவன் கவலைப்பட்டுக்கொள்ளத் தேவையில்லை.

எத்தனை நாட்கள் அவன் தன்னையொத்த இளைஞர்களின் தன்விருப்பமான, சுகமான, சொகுசான வாழ்க்கையை எண்ணி எண்ணி ஏங்கியிருக்கிறான்! உள்ளூரவே புழுங்கிப் புழுங்கிப் பெருமூச்செறிந்திருக்கிறான். அதற்கெல்லாம் முடிவு கட்டப்பட்டு, விடிவு ஏற்பட்டுவிட்டதாக நினைத்தான் மணிவேல்.

சம்பளம் வாங்கியதுமே நேரே டவுனுக்குப் புறப்பட்டுவிட்டான்.  ஜவுளிக்கடையில் நுழைந்து விதவிதமான துணிமணிகள் எடுத்தான். பொருள்கள் வாங்கினான். ஹோட்டலில் புகுந்து பிரியப்பட்டதை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டான். பணம் பெருமளவு செலவாகித் தீர்ந்து மிகுந்து கிடந்த சொற்பப் பணத்தோடு படுக்கையில் விழுந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. சிறிது சிறிதாக ஏதேதோ நினைவுகள் ஊற்றெடுக்க கர்ணகடூரமான தந்தையின் முகம் முன்னே வந்துநின்றது. தந்தைக்கு என்ன பதில் சொல்வது? எங்காவது கொஞ்சம் பணம் கடன் வாங்கி தற்போதைக்கு வீட்டுக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் அடுத்த மாதச் சம்பளத்தில் எப்படியும் சரிக்கட்டிவிடலாம்.

ஜவுளிக் கடையில் எடுத்த துணிகள் நெஞ்சுக்கு நிறைவையளித்தன. புதிய உடைகளுடன் நவநாகரிகமான பாணியில் அவனது தோற்றம் மனக்கண் முன்னே உற்சாகமூட்டியது. இந்த மகிழ்ச்சி இழைகளினூடே தந்தையின் நினைவும் கூர்மையான கத்தியாக வந்தறுத்தது. ஏதோ ஆர்வத்தில் எதை எதையோ வாங்கிக் குவித்துக்கொண்டானே தவிர, யோசிக்கும் போதுதான் நிலைமையின் அபாயம் புரிந்தது.

குழப்பத்துடனும் அரைகுறை நிம்மதியுடனும் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். இரண்டு நாட்கள் கழிந்தன. வீட்டுக்கு தபால் எதுவும் எழுதவேண்டும் என்ற எண்ணம்கூடத் தோன்றவில்லை. என்ன எழுதுவது…?

தைத்து வந்த புதுத் துணிகளை உடுத்தி இரண்டு நாள் ஸ்கூலுக்கும் போய் வந்துகொண்டிருந்தான். அவனைப் பொறுத்தவரைக்கும் அவனுடைய ஆசைகள் நிறைவேறியது போல, மனதுக்குப் பிடித்த சுதந்திரமான வாழ்வை அனுபவித்துக்கொண்டிருந்தான். அதை முழுமையடைய விடாமல் தந்தையின் நினைவு அடிக்கடி வந்து அசுரத்தனமாய் பயமுறுத்தியது.

அன்று பொழுது இன்னும் முழுமையாய் விடிந்திருக்காது. இருட்டோடு இருட்டாக யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது.  மணிவேலனுக்கு ‘திக்’கென்றது. தந்தைதானோ? அவராகத்தான் இருக்கும்.

மீண்டும் கதவைத் தட்டும் ஓசை. ‘மணி… மணி…’ தந்தையேதான். நேரே வந்துவிட்டார். என்ன செய்வது? பக்கத்தில் படுத்திருந்த சக ஆசிரியரை படபடப்போடு எழுப்பினான். ‘சார், எங்க ஃபாதர் வந்திருக்காரு. நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி அனுப்பணும். ரொம்ப முன் கோபம். பயமாயிருக்கு’ என்று கிசுகிசுத்தான்.

‘கவலைப்படாதீங்க சார். இப்ப என்ன ஆயிருச்சு?’ என்று பதில் அளித்தபடியே எழுந்து கதவைத் திறந்தார் அவர். சொக்காய் கசங்கி தலையெல்லாம் கலைந்திருக்க, சிவந்த கண்ணோடு சபாபதிப் பிள்ளை உள்ளே நுழைந்தார். 

‘என்னப்பா, காலங்காத்தால… நைட்டே வந்துட்டீங்களா…’

‘நேத்து சாயங்காலமே புறப்பட்டேன். பாண்டிக்கு வந்து பார்த்தா இந்தப் பக்கம் வர்றதுக்கு பஸ்ஸே இல்ல. காத்தாலைக்குத்தான்னான். அப்புறம் பஸ் ஸ்டாண்ட்லியே படுத்து கெடந்துட்டு காலையில ஃபர்ஸ்ட் பஸ்ஸை பிடிச்சு வர்றேன்’ என்றார் சபாபதி.

‘எப்படி வீட்டுல எல்லாம் சௌக்கியமா சார்?’ நண்பர் கேட்டார்.

‘ம்…ம்…’

அதற்குமேல் சக ஆசிரியருக்கு ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. சபாபதிப் பிள்ளையும் ஒன்றும் பேசவேயில்லை. தந்தையும் மகனும்கூட எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெடிக்கப் போகும் எரிமலை உள்ளுக்குள்ளே குமுறும் பகட்டான அமைதி அப்போது அவர் முகத்தில் பூச்சுப் பூசினாற்போல் மறைந்திருந்தது.

ஏதோ நடக்கப்போகிறது என்ற பீதி மட்டும் மணியை ஆட்டிப்படைத்தது. அந்த அமைதியே அவனை அதிகம் பயங்கொள்ளச் செய்தது. அது சீக்கிரமே நடந்து முடிந்துவிட்டால் தேவலாம் என்றிருந்தது.

மூவரும் ஒன்றாகவே சவுக்கைத் தோப்புப் பக்கம் வெளியே போனார்கள். கிணற்றுக்குப் போய் பல் துலக்கி குளித்து முடித்து ஓட்டலில் டிபன் சாப்பிட்டு அறைக்குத் திரும்பினார்கள். வழியிலும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

மணிக்கு ஸ்கூலுக்கு நேரமாகியது. சபாபதி அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். கொடியில் புதிய டெரி காட்டன் சட்டைகளும் டெரிலின் பேண்டுகளும் தொங்கின.

அவனுக்கு பக்… பக்… என்றிருந்தது. அதில் எதையும் எடுத்து உடுத்தத் துணிவில்லாதவனாக, ஒரு பழைய கதர் சட்டையையும், நாலு முழ வேட்டியையும் உடுத்திக்கொண்டு ‘ஸ்கூலுக்கு நேரமாவுதுப்பா… போவட்டுமா?’ என்றான்.

‘டாய்…’ என்று அறையே அதிர்ந்து கிடுகிடுக்கும்படி ஒரு கர்ஜனை செய்தார் சபாபதி.

மணி நடுநடுங்கி ஒடுங்கினான்.

‘சம்பளம் வாங்கிட்டியா?’

‘ம்…’ என்ற பாவனையில் தலையை மட்டும் ஆட்டினான்.  

‘எங்க சம்பளம்? பணம் எங்க?’ என்று கேட்டபடியே எழுந்து அவனை நெருங்கினார். இரவெல்லாம் கண்விழித்த வெறிக்கோலத்தில் இரத்தச் சிவப்பேறிய கண்களைக் கண்டு பக்கத்திலிருந்த ஆசிரியர்கூட கொஞ்சம் அரண்டுதான் நின்றார்.

‘எங்கடா?’ என்று மீண்டும் கேட்டபடி ஆவேசமாக அவன் தலைமயிரைப் பிடித்து இழுத்து சற்றும் எதிர்பாராதவிதமாக பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். பக்கத்திலிருந்தவர் தடுக்க முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது. முரட்டுத்தனமாக அவனை அறைந்து சுவரில் தலையை மோதி கழுத்தை நெட்டி வெளியே தள்ளிவிட்டு பெட்டியைக் குடைந்தார்.

அவர் தள்ளிய வேகத்தில் வெளியே வந்து இடறி விழுந்த மணி பயத்தாலும் அவமானத்தாலும் கூனிக் குறுகி உடம்பெல்லாம் நடுக்கமுற எழுந்து நின்றான்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கமிருந்தவர்கள் ஓடிவந்து குழுமி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.  

உள்ளேயிருந்து ‘லடா புடா’ என்று சத்தம் வந்தது. அதைத் தொடர்ந்து புதுத் துணிமணிகளும் வெளியே வந்து விழுந்து தெருப் புழுதியில் புரண்டன. இவையெல்லாவற்றையும் தூக்கியெறிந்த சபாபதி ஆவேசத்துடன் வெளியே வந்தார். பெட்டியிலிருந்து எகிறி விழுந்த கூலிங் கிளாஸ் கண்ணில்பட, அவருக்கு இரத்தம் சூடேறியது. ‘அங்க கூழுக்கு வழியில்லை. தொரைக்கு கூலிங் கிளாஸ் ஒரு கேடு’ என்று அதைத் தூக்கி ஒரு கல்லில் ஓங்கி அறைந்தார்.

‘டேய், உன்னெல்லாம் உயிரோட வெட்டிப் பொதைக்கணும்’. குரல்வளையைப் பிடிக்க நெருங்கினார்.

‘சார்… சார்… இருங்க. அவசரப்படாதீங்க. ஏதோ தெரியாம செஞ்சிடுச்சி, சின்னப்புள்ளதானே…’

‘என்னய்யா சின்னப்புள்ள…’ என்று ஆரம்பித்து குடும்பப் பூர்வீகங்களையெல்லாம், அவர்பட்ட பாடுகளையெல்லாம் அவிழ்த்துவிட்டார். ‘இவன எப்படியெல்லாம் நான் காப்பாத்தியிருப்பேன். மொத சம்பளத்தையே இப்படிப் பண்ணிட்டானே? அப்பறம் இவன் எங்க எம் புள்ளைகளுக்கு கஞ்சி ஊத்தப் போறான்?’

‘எதுவும் வெளில பேசாதீங்க சார். பாக்கறவங்க என்ன நெனப்பாங்க? நமக்குத்தான் கேவலம். பொறுங்க. எதுவும் ஆற அமர பேசிக்கலாம்.’

யாராரோ என்னென்னவோ சமாதானம் சொல்லிப் பார்த்தார்கள். எதுவும் அவருக்கு எட்டவில்லை.

‘எங்கப்பன் சொத்தையெல்லாம்கூட எதிர்பார்க்காம நான் ஏன் இப்படியெல்லாம் வந்து கஷ்டப்படணும்? நம்ம புள்ளைங்க வளர்ந்து பெரிசாயி எங்க அப்பனையெல்லாம் மூஞ்சில அடிக்கணும்னு பாத்தா… இவன் இப்பவே இப்படி… இவன…’ என்று மறுபடியும் நெருங்கினார்.

அவருக்கு குமுறிக் குமுறி நினைத்து நினைத்து ஆத்திரம் பொங்கி வந்தது.

‘வேணா… நீ இனிமே இங்க இருக்க வேணவே வேணா. இந்த வேலையும் உனக்கு வேணா. இந்த வேல போனா மசுராச்சி. கண் மறவாயிருந்தா உருப்படியில்லாமதான் பூடுவே. வா நீ’ என்று பள்ளிக்கூடம்கூடப் போகவிடாமல் யார் தடுத்தும் கேளாமல், அவனுடைய சாமான் செட்டுகளையெல்லாம் கட்டிக்கொண்டு ஊருக்கே அழைத்து வந்துவிட்டார். அழுது வற்றிய கண்களுடன் மணி ஊர் வந்துசேர்ந்தான். 

அவனுக்கென்று நாற்பது பிள்ளைகளை ட்யூஷனுக்கு அமர்த்திக்கொடுத்துவிட்டார் சபாபதி. காலையில் எழுந்ததும் முகம் கழுவிக்கொண்டு பிரைவேட் ட்யூஷன் சொல்லிக் கொடுக்க வேண்டும், எட்டு மணி வரை. பசங்கள் போன பிறகு குளியல். பிறகு பலகாரம். மத்தியானம் சாப்பாடு வரை நூற்பு. சாப்பிட்ட பிறகும் இராட்டையை கட்டிக்கொண்டு அழ வேண்டும். பிறகு சாயங்காலமும் ட்யூஷன். இரவு சாப்பாடு, படுக்கை. இப்படி அவனை அடக்கி ஒடுக்கி கால அட்டவணை போட்டுக் கொடுத்து வாழ வைத்தார் சபாபதிப் பிள்ளை.

‘வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்குற இந்தக் காலத்துல வந்த வேலையிலிருந்து இழுத்துக்னு வந்துட்டானே. என்ன மனுஷனா இருப்பானோ’ என்று எவ்வளவோ பேர் பலதும் சொன்னார்கள். எதையும் சபாபதி காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

எல்லோருக்கும் அவரின் ஒரே பதில் ‘அவன் வெளியில போய் இருநூறு சம்பாதிக்கறதைவிட கண்ணெதிரே நூறு சம்பாரிச்சு கட்டுக்கடங்கி வளரட்டும்’ என்பதுதான். 

இருளும் ஏக்கமும் நிறைந்த மணியின் வாழ்வில் நடுவில் ஒரு மாதம் மின்னலைப் போல ஒளிவீசி மறைந்துவிட்டது. மீண்டும் இருள். ஆனால் முன்பைவிடக் கொடியது. அவன் வாயே திறப்பதில்லை. அவன் எதுவும் பேசுவதேயில்லை. முகத்தில் ஒளியென்பதே மருந்துக்குமில்லை. இந்த நிர்பந்தத்தில் ஒருநாள் இரவு ஹரிக்கேன் விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. சபாபதியும் பர்வதமும் பிள்ளைகளும் ஒருபக்கம் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஏதோ பெட்டி உருட்டும் சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட சபாபதி தலையைத் தூக்கிப் பார்த்தார்.

எதிரே மணி மிரட்சியுடன் நின்றிருந்தான்.

‘என்னடா அது?’

‘ஒன்னுமில்லப்பா. தண்ணி குடிக்க…’

‘தண்ணியா…? தண்ணி குடிக்கறவன் இங்க என்னடா…’ அவருக்கு நம்பிக்கையில்லை. சந்தேகத்துடன் எழுந்தார். விளக்கைப் பெரிதாக்கிப் பார்த்தார். பெட்டி திறந்து கிடந்தது. துணிமணிகள் கலைந்து கிடந்தன. பெட்டி மறைவில் ஒரு கைப்பை. அதில் மணியினுடைய துணிமணிகள், சர்டிபிகேட்டுகள், கொஞ்சம் சில்லறைக் காசுகள் எல்லாம் இருந்தன.

‘திருட்டுக் கழுதை… சொல்லிக்கொள்ளாம எங்கனா ஓடிடலாம்னு பாக்கறியா? எவ்வளவு நாளாடா இந்த புத்தி? உருப்படாத பயலே’ என்று அந்த இரவு முழுக்க கர்ஜித்தார். ‘இங்கியே கண்ணெதுர வெட்டிப் போட்டாலும் போடுவேனே தவிர, இன்னொரு இடம் ஓடிப்போய்த் தனியா வாழ்ந்துடலாம்னு நெனைக்காதே. இந்த சர்டிபிகேட் தெம்புலதான நீ ஓடப் பாக்கற? இரு. இந்த உள்ளூர் மேனேஜ்மெண்டுலியே ஒரு வேலை பாத்து வாங்கி, இங்கியே உன்னை வச்சி வசக்கி நரம்பை அத்துடறேன் பாரு’ என்று ஏதோ ஜென்மப் பழி வாங்குவதைப் போலச் சொல்லி, சர்டிபிகேட்டை எடுத்து பத்திரமாக பெட்டியில் வைத்துப் பூட்டி சாவியை அரைஞாண் கயிற்றில் முடிந்துகொண்டு விசனமின்றிப் படுத்தார் சபாபதி. நல்லவேளை, அடி விழாமல் தப்பித்தான் மணி.

நிர்மூலமான எண்ணங்களால், அழிந்தொழிந்த கனவுகளால், அந்தக் கொடுமையான இரவில், வாழ்வில் கொஞ்சநஞ்சமிருந்த நம்பிக்கைளும் இற்றுப்போய் முற்றாக சோர்வடைந்தவனாய் படுக்கையில் வந்து விழுந்தான் மணி.

பொழுது விடிந்து தந்தையின் முகத்தை ஏறிட்டு நோக்கவும் அவனுக்குக் கசந்தது. தாயில்லாக் குறைக்காகவும் இப்படிப்பட்ட தந்தைக்கு மகனாக வாய்த்ததற்காகவும் பல நேரங்களில் உள்ளூரவே அழுவான். இப்போது அந்த அழுகை விரக்தியாகப் பரிணமித்தது. 

நாலைந்து நாள் ட்யூஷனும் நூற்பும் ஒழுங்காகவே நடந்தன. அதற்குப் பிறகு ஒரு நாள் காலை ட்யூஷன் நடக்கவில்லை. படுக்கை காலியாகக் கிடந்தது. மணியைக் காணவில்லை. சபாபதிப் பிள்ளை சந்தேகத்தோடு தோட்டப் பக்கம் தெருப்பக்கம் அவனைத் தேடிப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாக ஓடிப்போய் பெட்டியைத் திறந்து பார்த்தார். அன்று உறைக்குள் போட்டு வைத்த ‘சர்டிபிகேட்’ பத்திரமாகவே இருந்தது.

‘எங்க போயிருப்பான்? சர்டிபிகேட் கூட இருக்கிறதே… எங்காவது அவசரமாய்ப் போயிருப்பான். வந்துவிடுவான் கழுதை’ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் சபாபதி.

இது நடந்து எத்தனையோ நாட்கள் உருண்டோடிவிட்டன. மணி திரும்பவேயில்லை. எங்கு போனான், என்ன ஆனான் என்றே தெரியவில்லை.

சர்டிபிகேட்…! 

அது வைத்தது வைத்தவாக்கில் அப்படியே பத்திரமாகத்தான் இருக்கிறது பெட்டியில். அவருக்குத் தெரியுமா… வாழ்க்கை அதற்குள் மட்டுமே அடங்குவதல்ல என்பது.