இரண்டு திருமணங்களும் ஒரு விவாகரத்தும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

by எஸ்.கயல்
0 comment

செருப்பு தைக்கிறவனிடம் எடுபிடி வேலை செய்துகொண்டிருந்த ஒருவனுக்கு ஒரு சமையல்காரியோடு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. ஆனால் அவளோ மனைவியை இழந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்த துரோகத்தால் மனமுடைந்த அவன் இலையுதிர் கால நாளொன்றில் க்ரோச்மல்ணா சாலையில் தற்கொலை செய்துகொண்டான். க்ரோச்மல்ணா சாலை முழுதும் இதே பேச்சாக இருந்தது. யூதச்சமய மக்கள்கூட ராட்ஜிமினர் பாடசாலையில் இது குறித்து விவாதித்தனர். ஒவ்வொரு மாதத்திலும் இரு வாரங்களுக்கு இயல்பான மனநிலையிலும் மீதமுள்ள இரு வாரங்களுக்கு மனம் பிறழ்ந்தும் காணப்படும் திருநங்கையான மெயர், ட்ரகோமா எனும் கண் நோயின் பாதிப்பால் இரவும் பகலும் குளிர் கண்ணாடி அணிந்து காட்சிதரும் முதியவனான லெவி இட்சோக், அர்மைக் மொழி தெரியாதபோதும் தினமும் ஐம்பது பக்கங்கள் ஜோஹர் பாராயணம் செய்கிற- ஜன்னல்களுக்குக் கண்ணாடிகள் பொருத்தும் வேலை செய்துவந்த எளிய மனிதனான ஜால்மன் ஆகிய மூவரும் அங்கிருந்தனர்.

ஒரு நாள் இளைஞன் ஒருவன், “இந்தக் காதல் விவகாரங்கள் எல்லாம் நாவல்கள் எனப்படும் தெய்வ பக்தியற்ற ‌நூல்கள் காரணமாகவே நடக்கின்றன. முன்பு இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நூல்கள் இல்லாதபோது இவ்வாறான மோசமான நிகழ்வுகள் நடைபெற்றதில்லை” என்றான். 

“இல்லவே இல்லை. கடவுள் மறுப்பாளரான எலிஷா பென் அயுவாஹ்வின் அங்கியிலிருந்து சமயச் சார்பற்ற நூல்கள் கீழே விழுந்ததாக டால்முட் (யூதர்களின் சட்டத் தொகுதி) சொல்கிறது. ஏபிரகாம் காலத்திலேயே மதத்தை நிந்தனை செய்பவர்களும் கேலி பேசுபவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்” என்றான் லெவி இட்சோக்.

எழுச்சியுற்ற நகத்துடனிருந்த தன் ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி ஜால்மன் பேசத் துவங்கினான். “கடவுளுக்கு அஞ்சியவர்கள்கூட காதலித்திருக்கிறார்கள். எங்கள் ரேடோசைக் கிராமத்தைச் சேர்ந்த ஹசிட் பிரிவைச் சார்ந்த இளைஞன் ஒருவனுக்கு, அவனுக்கு எந்த வகையிலும் தகுதியற்ற ஒரு விபச்சாரியின் மீது பித்துப் பிடித்தாற் போல காதல் ஏற்பட்டுவிட்டது. அவன் பெரும் பணக்காரரும் ஹசிட் யூதப் பிரிவை மிகத் தீவிரமாக பின்தொடர்ந்தவருமான திரு.ஷ்ரகா குட்னரின் ஒரே மகன். திரு.ஷ்ரகாவின் மனைவியும் அவர்களுடைய மற்ற குழந்தைகளும் இறந்துவிட்டனர். அநாதையான ஒரு பதினேழு வயதுப் பெண்ணை இந்த வயதான காலத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். அவள் ஆரோன் டேவிட் எனும் இவனைப் பெற்றெடுத்துவிட்டு இறந்துவிட்டாள். நாளுக்கு நாள் உடல் தளர்ந்துவந்த திரு.ஷ்ரகா, தான் இறப்பதற்கு முன் தன் மகனைத் திருமணக் கோலத்தில் பார்ப்பதற்கு ஆசைப்பட்டார். மிக இளம் வயதில் இருந்தாலும் பரவாயில்லை என்று தன் மகனுக்கேற்ற ஒரு பெண்ணைத் தேடுமாறு திருமணத் தரகர்களிடம் சொன்னார்.

“அந்தக் காலத்திலெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் மணமகனுடைய வீட்டுக்கு ஆசிரியர்களை அனுப்பி டோரா (இறை போதித்த நூலாக யூத மதம் கருதுவது) குறித்த மணமகனின் அறிவை அறிந்துகொண்ட பிறகே வரனை முடிவுசெய்தார்கள். ஆரோன் டேவிட் சிறந்த கல்விமானாக அறியப்பட்டான். பிற்காலத்தில் அவன் யூதச் சமயக் கல்லூரி ஒன்றிற்குத் தலைமை வகிப்பான் என்று யூத மதகுரு கணித்திருந்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ ஆரோன் டேவிட்டிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவன் சரியான பதில்களைச் சொல்லவில்லை. அவனுக்குப் பைபிளைப் பற்றி மிகக்குறைந்த அளவே தெரிந்திருந்தது. அவன் மிஷ்னாவையும் (யூத வாய்மொழிச் சட்ட நூல்) கெமாராவையும் (யூத மத குருக்களின் கலந்துரையாடல்கள்) புரிந்துகொள்வதில் அப்பட்டமான தவறுகள் செய்தான். தேர்வு நடத்துபவர்களையும் அவர்களின் தீர்ப்பையும் கண்டு தன் மகன் பயந்து குழம்பிவிடுவதாக முதலில் நினைத்த திரு.ஷ்ரகா, தேர்வாளர்களைப் பொறுமையாக இருக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார். திருமணத்தில் கிடைக்கும் வரதட்சணையில் ஆசிரியர்களுக்கும் ஒரு சிறிய அளவு பங்கு தரப்படும் என்பதால் அவன் தேர்வில் தேர்ச்சி பெறுவதையே ஆசிரியர்கள் விரும்புவர் என்று ஆரோனிடமும் விளக்கினார். ஆனால் இவை எதுவுமே பலனளிக்கவில்லை. பயங்கர வெறுப்புற்ற சில தேர்வாளர்கள் அவன் செய்த முட்டாள்தனமான தவறுகளை ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் சிரிப்பாய்ச் சிரித்து, அவதூறு பேசினர். இதனால் தனக்கு மிகுந்த அவமதிப்பு ஏற்பட்டதாக திரு.ஷ்ரகா உணர்ந்தார். 

“பிறகு நடந்த இன்னொரு தேர்வில் ஆரோன் டேவிட் ஈப்ரூ மொழி பத்தி ஒன்றைப் படு அபத்தமாக மொழிபெயர்த்ததில் திரு.ஷ்ரகாவுக்குத் தன் மகன் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறானோ என்று சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் இளம் மாணவனாகிய அவன் எதற்காகத் தன்னை முட்டாளாகக் காட்டிக்கொண்டு அவமானப்பட வேண்டும்? அவனை நூலகத்திற்குள் அழைத்துச்சென்றவர், அறையை உள்ளே பூட்டிக்கொண்டு, “மகனே, எனக்கு வயதாகிவிட்டதுடன் நோயால் வேறு அவதியுறுகிறேன். என்னுடைய ஒரு கால் ஏற்கனவே இடுகாட்டைத் தொட்டபடி இருக்கிறது. நீ மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்ப்பதற்காக மட்டுமே இன்னும் இந்த உலகில் என் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறேன். இப்போதாவது உண்மையைச் சொல். உனக்காக நான் பார்க்கும் ஒவ்வொரு சம்பந்தத்தையும் நீ எதற்காகக் கெடுத்துவிடுகிறாய்?” என்று கேட்டார்.

“இதைக் கேட்டதும் அவன் கதறி அழுதான். தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவள் தனக்கு மனைவியாக வராவிட்டால் தான் தனியாகவே வாழ விரும்புவதாகவும் தன் தந்தையிடம் உண்மையை ஒப்புக்கொண்டான். பதினான்கு வயதுகூட நிரம்பாத ஒரு சிறுவன் இவ்வாறு சொல்வானா? திரு.ஷ்ரகாவால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. “யார் அந்தப் பெண்?” என்று கேட்டார். அவன், “அவள் யார் என்று நான் சொன்ன பிறகு எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீங்கள் நினைப்பீர்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் என்னால் அவளை மறக்க முடியாது” என்றான்.

“சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேனே. கை கால்கள் இல்லாது முடமாகப் பிறந்த ஃபரடல் எனும் பெண்ணின் மீது ஆரோன் காதல் வயப்பட்டுவிட்டான். அவளுக்கு கால்களுக்குப் பதிலாக மீனுக்கு இருப்பது போன்ற துடுப்புகள்தான் இருக்கும். அதனால் ஊன்றுகோலும் பயன்படுத்த இயலாத இந்த நிலையில் அவளால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது. சக்கர வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டுதான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அவளை அழைத்துப் போகவேண்டும். அவளை எனக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய பெற்றோருக்கும் திரு.ஷ்ரகாவுக்கும் தண்ணீர் கொண்டுவந்து தருபவரான ‘உறைபனி’ ஷிம்மெலேதான் அவளுடைய தந்தை. பனிக்காலத்தில் பனி கொட்டும்போது அவனுடைய தாடியில் இருந்து கீழே விழும் உறைபனி சில நேரங்களில் அவனுடைய வாளிகளுக்குள்ளோ அல்லது அவன் வாடிக்கையாளருக்குக் கொண்டுபோகும் தண்ணீர்ப் பீப்பாய்க்குள்ளோ விழுந்துவிடும். இதிலிருந்துதான் அவனுக்கு இந்தச் செல்லப்பெயர் கிடைத்தது. அவன் முரட்டுத்தனமும் விசித்திரமான நடத்தையும் கொண்டவனாக ஊருக்குள் அறியப்பட்டான். அவனுடைய மனைவி அவனைப் பிரிந்து போய்விட்டதால், விசித்திரப் பிறவியான தன் மகளை, தானே வளர்த்து ஆளாக்கினான். அவளுடைய முகம் கறுஞ்சிவப்புக் கண்களுடன் மிக அழகாக இருக்கும். பெரும்பேச்சுக்காரியான அவள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் சரமாரியாகப் பொழியும். அவர்கள் இருவரும் ப்ரிட்ஜ் தெருவில் பாதி சேதமுற்றிருந்த ஒரு குடிசையில் வசித்தார்கள்.

“சம்பவம் நடந்தது இப்படித்தான். ஒரு முறை ப்யூரிம் (யூதப் பண்டிகை) தினத்தன்று திரு.ஷ்ரகாவுக்காக ஷிம்மெலே ஒரு பரிசைக் கொண்டுவந்தான். அப்போது திரு.ஷ்ரகா வீட்டில் இல்லை. அந்த ஊரைச் சேர்ந்த யாரோ ஒருவர் திரு.ஷ்ரகாவுக்காக கொடுத்தனுப்பிய பரிசைத் தருவதற்காக ஷிம்மெலே வந்திருப்பதாக ஆரோன் நினைத்துக்கொண்டான். அதனால் அவனுக்கு இந்த வேலைக்காக ஒரு செப்பு நாணயத்தை அன்பளிப்பாகத் தர நினைத்தான். ஆனால் ஷிம்மெலேவோ, “இது என்னுடைய அருமையான மகள் உங்களுக்காகத் தந்தனுப்பிய பரிசு” என்றான். வியப்புற்ற ஆரோன், “எனக்கு எதற்குப் பரிசு?” என்று கேட்டான். ஷிம்மெலே, “உன்னுடைய நீலக் கண்களுக்காகவும் சுருள் கிருதாவுக்காகவும்” என்றான். எனக்கு இந்த மொத்தக் கதையும் தெரியும். இதை ஆரோனே என் மாமா லைபுஷிடம் சொல்லியிருக்கிறான். ஒரு சிவப்பு ஆப்பிள், செயிண்ட் ஜான் பிரெட், ஒரு பெப்பர்மிண்ட் இனிப்பு ஆகியவற்றை அவள் பரிசாக அனுப்பி வைத்திருந்தாள்.

“அப்பாவிடம் இதைப் பற்றி எதுவும் சொல்லாதே. சொன்னால் அவர் உன்னைச் சவுக்கால் அடித்தாலும் அடிப்பார். வாயே திறக்காதே. இல்லையென்றால் பெண்களைத் துரத்தும் போக்கிரி என்ற பெயர் உனக்கு வந்துவிடும்” என்றான். ஷிம்மெலே போனபிறகு ஆரோன் தீவிரமாகச் சிந்தித்தான். அறிமுகமற்ற ஒரு ஆணுக்குப் பரிசுகளை அனுப்பும் பெண்ணைப் பற்றி யார்தான் கேள்விப்பட்டிருக்க முடியும்? தானும் ஃபரடலுக்கு ஒரு ப்யூரிம் பரிசு தரவேண்டும் என்று சிறிது நேரத்திற்குப் பிறகு முடிவுசெய்த ஆரோன், அதை எப்படி அவளிடம் சேர்ப்பது என்று யோசித்தான். வேலையாளிடம் தந்தனுப்பினால், ஊர் மொத்தத்துக்கும் தெரிந்துவிடும் என்பதால், சில ஆரஞ்சு பழங்கள், சில பிஸ்கட்டுகள், தேனில் நனைத்த ஒரு துண்டு இனிப்பு ரொட்டி ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து, ஒரு சிறிய துண்டால் மூடி, அவனே ஃபரடலிடம் எடுத்துக்கொண்டு போனான். அந்த சாகசக்காரி மனம் வருடும் சொற்களைப் பேசி அவனை வசியம் செய்துவிட்டது போலிருந்தது. ‘தீய சக்தியை சுலபத்தில் திருப்தியுற வைக்க இயலாது’ என்றொரு பழமொழி உண்டு. யாருக்குத் தெரியும்? அவள் அவன் இரத்தத்தைச் சூடேற்றும் நச்சு கலந்த மது பானத்தைப் போன்று அன்று நடந்துகொண்டாள். ஒரு பெண் தண்ணீரையும் சப்பாத் மதுவையும் கலந்து தன் மார்புகளை நீராட்டி, பிறகு அதை ஒரு ஆணுக்கு அருந்தத் தருகிறபோது, தன் மீது அவனுக்குள்ள ஏக்கத்தை அவள் மேலும் தூண்டுகிறாள். நிறைய பேரின் காதல் இவ்விதம் உருவானவையே.

“இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திரு.ஷ்ரகா இதனால் விளையக்கூடிய ஆபத்து குறித்து தன் மகனை எச்சரித்தார். ப்யூரிம் பரிசு பற்றி அவரிடம் ஆரோன் எதுவும் சொல்லாமல் அவளை ஜன்னல் வழியாகப் பார்த்ததாக மட்டுமே சொன்னான். இந்த மொத்த விஷயமும் திரு.ஷ்ரகாவுக்கு ஒரு மிகப்பெரிய அடி. ஷிம்மெலே முரடன் என்றும் உளறுவாயன் என்றும் ஊருக்குள் பெயர் வாங்கியிருந்தான். இந்த மோகத்திலிருந்து தன் மகனை எப்படி விடுவிப்பது என்று ஆலோசனை பெறுவதற்காக திரு.ஷ்ரகா தன் மதகுருவிடம் சென்றார். அந்த மதகுரு ஆசீர்வாதமும் ஒரு தாயத்தும் கொடுத்தார். ஆனால் இவை எதுவுமே பயனளிக்கவில்லை. ஆரோன்  அவளைத் தவிர வேறு பெண்ணை மணக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான். தன்னுடைய இறுதிக் காலம் நெருங்கிவிட்டதையும், தன் மகன் இந்தக் காதல் பித்திலிருந்து எப்போதும் மீளப் போவதில்லை என்பதையும் உணர்ந்த திரு.ஷ்ரகா,  இது இறைவன் தனக்குத் தரும் தண்டனை அல்லது தான் பணிந்தேற்க வேண்டிய ஒரு சாபம் என்று முடிவு கட்டினார். “கடந்து போக முடியவில்லை எனில் தாழ்ந்து போ” என்றொரு பழமொழி இருக்கிறதே. அவமானம் பூசிய தன் தொப்பியைக் கழற்றி வீசியவர், திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படி தன் உறவினர்களிடம் கூறினார்.

“இந்தத் திருமணத்தைப் பற்றி ரேடோசைக் மக்கள் கேள்விப்பட்டபோது பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. சிலர் அழுதனர், சிலர் சிரித்தனர், வேறு சிலர் காறித் துப்பினர். அப்பாவியான அந்தச் சிறுவனை ஃபரடல் சூனியம் வைத்து மயக்கிவிட்டதாகப் பெண்கள் அனைவரும் குற்றம்சாட்டினர். ஆனால் காலப்போக்கில் மிக விசித்திரமான விஷயங்களுக்குக்கூட நாம் பழகிவிடுகிறோம். கன்னிமைத்தன்மையுடைய மணப்பெண்களுக்கு நடக்கும் திருமணங்களைப் போலவே யூதத் திருக்கோயில் சபையில் இந்தத் திருமணத்திற்கும் வழக்கப்படி பந்தல் முகப்பு அமைக்கப்பட்டது. மனத் துயரத்தால் தன் கால்களின் பலம் முழுவதையும் ஷ்ரகா இழந்துவிட்டிருந்தார். ஆகவே, ஃபரடலை மட்டுமின்றி அவரையும் யாராவது தூக்கிச் சுமந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மக்களை மகிழ்விப்பதற்கெனப் பணியமர்த்தப்பட்ட தொழில்முறைக் கோமாளிகளின் நகைச்சுவையுடனும், இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடனும் திருமண நிகழ்வு சிறப்பாக நடந்தது. மோசமான குணமுடைய அந்த மணமக்கள் இருவரும் இத்திருமணத்தை தம் வாழ்வின் மிக உயர்ந்த புள்ளியாக நினைத்து ஆடிப் பாடி, குடித்துக் களித்தார்கள். ஊரில் வறியவர்கள் விடுதி ஒன்றிருந்தது. அதில் வசித்த பிச்சைக்காரர்களுக்காக திருமண விருந்தொன்றை திரு.ஷ்ரகா ஏற்பாடு செய்திருந்தார். ருசியான ரொட்டியும், பெரிய வகை மீனும், மதுவும் அதில் பரிமாறப்பட்டன. ஷிம்மெலே தலை முதல் கால் வரை தொங்கிய தன் நீண்ட மேலங்கியின் பக்கவாட்டுப் பகுதியை உயர்த்திப் பிடித்தபடி கொசேட்ஸ்கே என்றழைக்கப்படும் நடனத்தை ஆடினான்.

“ஆரோனுக்குத் திருமணமான சிறிது காலத்திலேயே திரு.ஷ்ரகாவின் உயிர் பிரிந்தது. ஃபரடல் போன்ற ஒரு உடல் ஊனமுற்றவளால் தாயாக முடியாது என்று ஊர் மக்கள் கணித்தனர். ஆனால் வெகு விரைவிலேயே அவளுக்குக் குழந்தை பிறந்தது. சில வருடங்களில் அவள் ஐந்து பெண் குழந்தைகளுக்கு தாயாகியதோடு, அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய இன்னொரு குழந்தையைவிட அழகாக இருந்தது. அவள் கடமை உணர்ச்சி மிக்க ஒரு இல்லத்தரசியாகத் திகழ்ந்தாள். அவளுக்கு ஊழியம் செய்வதற்காக ஆரோன் இரு பணிப்பெண்களை அமர்த்தியிருந்தான். ஃபரடல் தன் படுக்கையில் படுத்தபடி அவர்களுக்கு ஆணைகள் இடுவாள். தன் வீட்டில் இருந்த எல்லாமே பளபளவென்று இருக்க வேண்டும் என்பாள். அங்கிருந்த செம்புப் பாத்திரங்கள்கூட பொன்னைப் போல மின்னின. அவளுடைய மகள்கள் வளரத் துவங்கியதும் தன் மனச்சலனங்கள்  ஒவ்வொன்றையும் அவள் நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.

“ப்ரிட்ஜ் தெருவைச் சேர்ந்த பெண்கள் அவளைப் பார்ப்பதற்கு வரும்பொழுது எல்லாவிதமான புரளியையும் உடனழைத்து வருவதுடன், அவர்கள் அவளைச் சந்தைக்கும் கொண்டுபோவார்கள். விலை மலிவான நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு அங்கு போகும் ஃபரடல், மிகுந்த விருப்பத்துடன் கடைக்காரர்களிடம் பேரம் பேசுவாள். அவர்களிடம் ஏகப்பட்ட பணம் இருந்தது. முதுமை எய்திய பிறகும்கூட திரு.ஷ்ரகா மிகச்சிறந்த வியாபாரியாகத் திகழ்ந்தார். அவரிடம் ஒரு பெரிய கடை இருந்தது. லுப்லின், நேலக்ஜோவ், லெம்பெர்க் ஆகிய இடங்களில் நடைபெற்ற வணிகப் பொருட்காட்சிகளுக்கு அவர் செல்வார். ஆரோனைப் பொறுத்தவரை அவன் உலக ஆசைகளைத் துறந்த டால்முட் அறிஞனாகவே இருந்தான். தன் தந்தையிடமிருந்து தனக்குக் கிடைத்த சொத்துகளை வைத்தே வாழ்க்கையை ஓட்டினான். அவன் தன்னுடைய மனைவியை உண்மையாக நேசித்திருக்கிறான். ஆகவேதான் அவள் இறந்த பிறகு அவன் மறுமணம் செய்துகொள்ளவில்லை.

ஃபரடலின் மரணம் மிக விநோதமான முறையில் இருந்தது. கை கால்களுக்குப் பதிலாக, துடுப்புகளும் செதில்களும் அவளுக்கிருந்தன என்று உனக்கு நான் முன்பே கூறியிருந்தேன். அவளுடைய தோலின் மீது திடீரென செதில்கள் வளர்ந்தன. ஆரோன் லுப்லினில் இருந்தும் வார்சாவில் இருந்தும் மருத்துவர்களை வரவழைத்தான். அவளுடைய உடல்நலக் கோளாறை ஆய்வுசெய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக செதில்களை நீக்க முயற்சி செய்தனர். ஆனால் அவளுடைய உடல் முழுவதையும் மூடுமளவுக்கு அவை அதிவேகமாக வளர்ந்தன. அந்த ஊர்ப் பெரும்புள்ளிகளின் காமக்கிழத்திகள் சிலர் அவள் ஒரு கோஷர் மீனாக மாறிவிட்டதாகக் கிண்டலடித்தனர். ஏனெனில் ஒரு மீன் கோஷர் மீனாக மாறுவதற்குத் துடுப்புகளும் செதில்களுமே தேவை. இந்த நோய் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. நான் அவளை அந்தக் காலகட்டத்தில் பார்க்கவில்லை. ஆனால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து அவளைப் பார்ப்பதற்காக நிறைய பேர் மிகுந்த ஆவலுடன் வந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவளுடைய அம்மா ஒரு மீனுடன் பாவச் செயலில் ஈடுபட்டாள் என்றும் அதன் மூலமாகப் பிறந்தவள்தான் ஃபரடல் என்றும் சிலர் நம்பினார்கள்” என்றான் ஜால்மன். 

லெவி இட்சோக், “என்ன? இப்படிப்பட்ட பாலியல் முறைகேடுகள் ஊழிக்கால சந்ததிகளின் இடையேகூட நடைபெற்றதில்லை” என்றான்.

பாடசாலை வெகுநேரம் அமைதியாக இருந்தது. வெறும் காற்றின் ‌ஒலி மட்டுமே கேட்டது. திருநங்கையான மெயர், தன் தாடியிலிருந்த ஒரு ரோமத்தின் வேரைத் தேடுவது போல் தன் தாடையை இறுகப் பிடித்தார். மரத்தால் செய்யப்பட்ட அலங்காரமான மூக்குப் பொடிப் பெட்டிக்குள் தன் மூக்கை நுழைத்த லெவி இட்சோக் , ஒரு இழுப்பு இழுத்தபடி, “காதல் என்பதெல்லாம் வெறும் கற்பனைதான். அது, முட்டாள்தனமான  எண்ணமொன்று நம் சிந்தனையில் ஒரு ஆப்பை அடித்தது போல சிக்கிக்கொள்வதற்கு இணையானது. அல்லது அது சாத்தானுடைய வேலையாகவும் இருக்கலாம். தீமைக்கென ஒரு சக்தி உண்டு. லிலித்தின் (இரவில் உலவும் பெண் பேயின்) மகள்கள் இரவுகளில் வௌவால்களைப் போல பறந்து திரிந்து ஆண்களை ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. துறவிகளும்கூடத் தங்கள் புனித உடலில் இருந்து விந்து வெளிப்படுதலால் உண்டாகும் தீட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் உண்மைக் காதலின் பிறப்பிடம்  தூய்மையானது. 

“திரு.பிஞ்சோஸ் எடல்வீய்ஸ் எனும் பெயருடைய, டால்முட்டைத் தீவிரமாகப் பின்பற்றும் செல்வந்தர் ஒருவர், பேரிசோ நகரில் வசித்தார். அவர் தனித்துவமிக்க மதகுருவான மோஷே ஐசர்லசின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஊர்ப் பெரியவர்கள் அவரைத் தங்களுடைய மதகுருவாக்கிக்கொள்ள விரும்பினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவர் எதற்காக மதகுருவாக வேண்டும்? அவரிடம் சொந்தமான காடுகள், மரம் அறுக்கும் ஆலை, எனக்குத் தெரிந்து ஒரு நீர்வீழ்ச்சிகூட அவருக்குச் சொந்தமாக இருந்தது. அவர் விஸ்டுலா நதியில் மரத்தோணிகள் மூலமாகப் பயணித்து டாண்சிங் துறைமுக நகரை அடைவார். தன்னுடைய நாளை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, அங்கிருக்கும் மிகச் சிலருடன் அதிகாலையில் பிரார்த்தனை செய்வார். உதயத்திலிருந்து நண்பகல்வரை டால்முட், ரெஸ்போன்சா, மிட்ராஷ், ஜோஹர் ஆகியவற்றைப் படிப்பார். மதிய உணவுக்குப் பிறகு தன்னுடைய தொழிலைக் கவனிப்பார். அப்போது தன் குதிரை வண்டியை ஓட்டிச்செல்லும் காட்சி, துரைகள் குதிரையில் பயணிப்பது போல கம்பீரமாக இருக்கும். கணக்காளர், காசாளர், மரங்களை வெட்டி சுமையாகக் கட்டுவதற்கென மரவெட்டிகள் ஆகியோரைப் பணியமர்த்தி இருந்தார். அவருடைய மனைவி அடா ஜில்லாஹ் அவரைவிடவும் உயர்குடியில் பிறந்தவள். போலிஷ் மொழியிலும் ஜெர்மன் மொழியிலும் பேசக் கற்றிருந்த அவள், கடிதமெழுதும் அளவுக்கு ஹீப்ரூ மொழியைக் கற்றிருந்தாள். அவர்களுக்கிருந்த ஒரே குறை ஒரு குழந்தையில்லை என்பதுதான். அட! நான் சொல்ல மறந்துவிட்டேன். பிஞ்சோசின் ஒரு தம்பி நன்னெறி தவறிப்போய் சிலருடைய கையெழுத்துகளை இட்டு, பெருமளவு பணத்தைக் கையாடல் செய்து அமெரிக்காவுக்கு ஓடிவிட்டான். அக்காலத்தில், நமக்குத் தெரிந்த யாராவது அமெரிக்காவில் வசிப்பது நம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறியதற்கோ தற்கொலை செய்துகொண்டதற்கோ சமமானது. 

“ஒரு நாள் பிஞ்சோசுக்குத் திடீரென உடல்நலம் குன்றியது. எந்த மருந்தும் அவருக்கு உதவவில்லை. சிறந்த மருத்துவர்களை நாடி அவர் வெனிசுக்குச் சென்றார். ஆனால் அவர்கள் அனைவரும் அவரைக் கைவிட்டுவிட்டார்கள். தான் இறந்துவிட்டால் மறுமணம் செய்துகொள்ள அனுமதி பெறுவதற்காக, தன் விதவை மனைவி சாலிடாஸ் எனும் சடங்கைத் தன்னுடைய கொழுந்தனுடன் செய்யவேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவளை மறுமணம் செய்துகொள்ள ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பது, அதிலும் குறிப்பாக சாகச குணநலன்கள் கொண்ட ஒருவரை அமெரிக்காவில் கண்டடைவதென்பது அவ்வளவு எளிய காரியமில்லை. ஆகவே திரு.பிஞ்சோஸ், தான் இறப்பதற்கு முன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட முடிவுசெய்தார். இதன் மூலம் அவள் மறுமணம் புரியவேண்டி அவருடைய சகோதரனிடமிருந்து அனுமதி பெறத் தேவையிருக்காது என்று நினைத்தார். கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தார்கள். தன்னுடைய கணவரின் விவாகரத்துத் திட்டத்தை அறிந்ததும் அவள் துயருற்று அழுதாள். தான் இன்னொருவரை மணக்க முடியாது என்று திடமாகக் கூறினாள். அவர், “நீ உன்னுடைய வாழ்க்கையை ஏன் தனிமையில் கழிக்க வேண்டும்? நீ இளமையாக இருக்கிறாய். இன்னொரு கணவனுடன் உனக்குக் குழந்தைகள் பிறக்கலாம்” என்றார். ஆனாலும் அவள் மறுத்தாள்.

“அவள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று புரிந்ததும் அவளுக்குத் தெரியாமல் அவரே மதகுருவிடம் சென்று விவாகரத்துப் பத்திரம் ஒன்றை எழுதுமாறு வேண்டினார். தன்னுடைய சொத்தில் சரி பாதியை அடா சில்லாஹ்வின் பெயரிலும் மற்றொரு பாதியை சில தொண்டு நிறுவனங்களுக்கும் உயில் எழுதி வைத்தார். இவை அனைத்தும் இரகசியமாக நடந்தேறின. அடுத்தநாள் தன் மனைவியையும் தன்னுடைய இரு பணியாளர்களையும் இதற்கு சாட்சிகளாக அழைத்து விவாகரத்துப் பத்திரத்தில் உள்ள வார்த்தைகளைச் சத்தமாகப் படித்த பிறகு, அதை  அவளிடம் அளித்தார். அவர் வாசித்த சொற்களைக் கூர்ந்து கவனித்து வந்த அடா சில்லாஹ் விவாகரத்துப் பத்திரத்தைக் கண்களால் கண்டதும் மயங்கிச் சரிந்தாள். கண் விழித்ததும் புத்தக அலமாரியில் இருந்து ஒரு மதநூலை எடுத்து தன்னுடைய கைகளை உயர்த்தி, “பிஞ்சோஸ்! வல்லமை பொருந்திய இறை மீது ஆணையாக, புனித நூலின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் வேறு ஒருவருக்கு உரிமையாக மாட்டேன்” என்றவள் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறினாள்.

“விவாகரத்தான கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வசிப்பதற்கு சட்டம் அனுமதிப்பதில்லை என்பது உனக்குத் தெரியும். ஆகவே பிஞ்சோஸ் மற்றொரு வீட்டில் தனக்கென ஒரு அறையை ஏற்பாடு செய்துகொண்டார். ஆனால் மிகுந்த மனத் துயரடைந்த அடா சில்லாஹ் தன் பிரார்த்தனை நூலையும் வேண்டுதல்  நூலையும், சில லினன் வகை ஆடைகளையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு வறியவர்கள் வசிக்கும் விடுதியை நோக்கி வேகமாக ஓடினாள். அங்கிருந்த பிச்சைக்காரர்கள் சீமாட்டியான அடா சில்லாஹ்வின் கையிலிருக்கும் மூட்டையைப் பார்த்தனர். அவள் அங்கு தங்கப் போவதாகச் சொன்னதும் அங்கு பயங்கரமான ஒப்பாரி எழுந்தது. அவர்கள் அனைவருக்கும் அவளைத் தெரியும். அங்கு வசித்த நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவள் தினமும் கோழி சூப்பும், புல் அரிசியையும் அனுப்புவதுண்டு. மனச் சோர்வுற்றவர்களிடம் ஆறுதலாகப் பேசுவதற்காகவும் தான தர்மங்கள் செய்வதற்காகவும் அவளே நேராக அங்கு செல்வாள். ஊரின் முக்கியப் புள்ளிகளான ஆண்களும் பெண்களும் ஓடோடிச் சென்று அவள் தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்ளக்கூடாது என்று அவளிடம் கெஞ்சிக் கேட்டனர். அவள், “தாயின் கருவறையிலிருந்து ஆடையின்றி இவ்வுலகத்திற்கு வந்தேன். அவ்வாறே மீண்டும் திரும்பச் செல்கிறேன்” என்று ஜாப் எழுதிய வரிகளைக் கூறினாள். தன்னுடைய கணவனின் உயிலைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்தாள்.

” அடா சில்லாஹ் பிடிவாதமாக இருப்பதைப் பார்த்த வறியவர்கள் தங்கும் விடுதியின் பணியாளர், லினன் துணியாலான ஒரு படுக்கையை அவளுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் அவளோ, “இங்குள்ளவர்கள் வைக்கோல் போரின் மீதுதானே உறங்குகிறார்கள்! நானும் அவ்விதமே உறங்குகிறேன்” என்றாள். புல்லால் ஆன ஒரு தலையணையும் ஒரு கட்டு வைக்கோலும் அவளுக்குத் தரப்பட்டது. அவள் தன் பட்டாடையுடன் அதன் மீதமர்ந்து நோய்மையிலும் துயரமான வேளையிலும் சொல்லப்படும், “இறைவா, என் இரட்சகரே, என் ஆன்மா பிரச்சினைகளால் நிறைந்திருப்பதாலும் என் வாழ்வு கல்லறைக்குக் கீழே புதைந்துபோய்விட்டதாலும் நான் இரவு பகலாக உங்கள் முன் அழுகிறேன். என் மீது கருணை கொள்ளுங்கள். ஏனெனில் என் இறைவனே, நான் பலவீனமானவள். என் எலும்புகள் தளர்ந்து போய்விட்டன. என்னை இரட்சியுங்கள்” என்கிற அத்தியாயங்களை ஜபிக்கத் துவங்கினாள்.

“அத்தகையதொரு சூழலில் அந்தப் பிரார்த்தனை சொர்க்கத்தையே பிளக்கவல்லதாக இருந்தது. ஒருவேளை ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டதாகவும்கூட இருக்கலாம். அன்று திரு.பிஞ்சோஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்குத் தொண்டையில் புண் இருந்ததாகக் கருதப்பட்டது. அவர் தொடர்ந்து பலமாக இருமியதில் தொண்டையில் என்ன இருந்ததோ அது வெடித்துச் சீழாக வடிந்து வெளியேறிவிட்டது. பிஞ்சோசின் உயிருக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கிவிட்டது என்றும் அவர் இப்போது அடா சில்லாஹ்வை மறுமணம் செய்துகொள்ளலாம் என்றும் அனைவரும் பேசிக்கொண்டனர். ஆனால் திரு.பிஞ்சோஸ், யூதத் திருக்கோயிலின் சேவக சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அடா சில்லாஹ் தன் முன்னாள் மனைவியாகவே இருந்தாலும், விவாகரத்தான ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொள்ள அவருக்கு அனுமதியில்லை என்பது அவர்களுக்கு நினைவு வந்தது. அவரைப் பார்க்க வந்த நண்பர்கள் அவர் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்தியபோது மனமுடைந்திருந்த திரு.பிஞ்சோஸ் ,”விரைந்து மரணமடைய வேண்டும் என்று என்னை வாழ்த்துங்கள். அதுவே நல்லது” என்றார். ஆனால் ஒருவன் வாழத் தகுதியானவனா சாக வேண்டியவனா என்பதில் மானுடன் ஒருவனின் தீர்ப்பை சொர்க்கத்தோர் கேட்பதில்லை. பிஞ்சோஸ் முழுமையாக நலம் அடைந்தார்.  கடவுள் மறுப்பாளராக இருந்த உள்ளூர் மருத்துவர் இந்த அதிசயத்தைப் பார்த்ததும் தீவிர இறை நம்பிக்கையாளராக மாறிப்போனார்.

“திரு.பிஞ்சோஸ் ஏழைகள் வசிக்கும் விடுதிக்குப் போய் அடா சில்லாஹ்வின் காலில் விழுந்து, தன் வீட்டை எடுத்துக்கொள்ளுமாறும் வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ளுமாறும் மன்றாடிக் கேட்டார். விரக்தியான மனநிலையில் அவள் செய்த சத்தியத்தைத் திரும்பப் பெறுவதற்கு மதகுரு தயாராக இருந்தார். ஆனால் அடா சில்லாஹ்வோ, “என்னுடைய சத்தியம் எப்போதும் நிலைத்திருக்கும். எனக்கு அந்த வீடு தேவையில்லை. நீங்கள் மறுமணம் செய்துகொள்ளுங்கள், பிஞ்சோஸ். தரிசு நிலமாக நான்தான் இருப்பேனே தவிர நீங்கள் அவ்வாறு இருப்பதற்கு வாய்ப்பில்லை. உங்களிடமிருந்து ஒரு சந்ததி வளர வேண்டும் என்று வானுலகம் விரும்புகிறது. ஆகவேதான் இத்தகைய பெருந்துயர் நம் வாழ்வில் நிகழ்ந்தது. குழந்தை பெறத் தகுதியுள்ள ஒரு இளம்பெண்ணை நீங்கள் கண்டுபிடித்துத் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தைகளை என் சொந்தக் குழந்தைகளைப் போல நான் நேசிப்பேன்” என்றாள்.

ஜன்னல்களுக்குக் கண்ணாடிகள் பொருத்தும் பணிசெய்து வந்த ஜால்மன், “அவர் மறுமணம் செய்துகொண்டாரா?” என்று கேட்டான். 

“இல்லை. உண்மை என்னவென்றால் அவர் சட்டத்தை மீறிவிட்டார். நற்பயன்களை விளைவிக்காத, குழந்தைகளைப் பெற்றெடுக்காத ஒருவர் தன் மனைவியுடன் வாழ முடியாது என்ற கட்டளையை அவர் நிறைவேற்றவில்லை. பிஞ்சோஸ் சட்டத்தை மீறிவிட்டதாக மதகுரு  கூறினார். ஆனால் பிஞ்சோஸ் “கெஹனா (ஜெருசலேம் அருகிருக்கும் பள்ளத்தாக்கு) மக்களுக்கானதே தவிர விலங்குகளுக்கானது இல்லை” என்று பதில் கூறினார். பிறகு தன் மொத்த வியாபாரத்தையும் தலைமுழுகிவிட்டு துறவியாகிவிட்டார். அடா சில்லாஹ்வுக்குப் பிறகொரு சமயம் தேவைப்படலாம் என்பதற்காகத் தன் வீட்டையும் தோட்டத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு தன்னிடமிருந்த மற்ற அனைத்தையும் தானமாகத் தந்துவிட்டார். புனித இடங்களுக்கு அவளை அனுப்பி வைத்தால்  அவளுடைய மனதிற்கு அமைதி கிடைக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அடா சில்லாஹ், “நான் உங்களுடன் ஒரு கூரையின் கீழ் வசிக்கத்தான் அனுமதியில்லை. ஒரே வானத்தின் கீழாவது நான் உங்களுடன் இருக்கிறேனே” என்றாள். பிஞ்சோஸ் தன் மதகுருவிடம் சென்று, “நான் உயிருடன் இருக்கும்வரை அடா சில்லாஹ்வின் அருகே செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கள் உயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்தபிறகு நாங்கள் இருவரும் அடுத்தடுத்த கல்லறைகளில் கிடப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம்” என்றார். மதகுருவால் இதைத் தனியாக முடிவுசெய்ய இயலவில்லை. ஆகவே அவர் இந்த விசயத்தை மூன்று மதகுருக்கள் கொண்ட திருச்சபைக் குழுவிடம் கொண்டுபோனார். விவாகரத்தான கணவனும் மனைவியும் அவர்களுடைய மரணத்துக்குப் பிறகு பக்கத்துப் பக்கத்துக் கல்லறைகளில் புதைக்கப்படலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

“திரு.பிஞ்சோஸ் இறந்துவிட்டார். நான் அந்தச் சமயத்தில் ஊரில் இல்லை. ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருந்தபோது மருந்துகள் தந்தும், மருத்துவர்கள் பரிந்துரைத்த பத்திய சமையல் செய்தும்  அடா சில்லாஹ் அவரை கவனித்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். அவள் இந்த விசயத்தில் சட்டப்படி நடந்துகொண்டாளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு சட்டத்தின் பின்னும் கருணை ஒளிந்துகொண்டிருக்கிறது. பிஞ்சோஸ் இறந்து, தான் உயிரோடிருந்த அந்தச் சில வருடங்களின் எல்லா வார நாட்களிலும், கோடையிலும் குளிர்காலத்திலும், அடா சில்லாஹ் அவருடைய கல்லறைக்குத் தவறாது சென்று அதன் மீது தலை வைத்து விழுந்து வணங்கினாள். அவருடைய கல்லறைக்கு அடுத்து தன்னுடைய கல்லறைக் கல்லை நட்டுவைத்து “இறைப்பற்றுடைய திரு.பிஞ்சோசின் விசுவாசமான மனைவி அடா சில்லாஹ் இங்கு துயில் கொள்கிறாள்” என்ற எழுத்துகளை அதில் பொறித்து வைத்தாள். இறப்புத் தேதி மட்டும் குறிப்பிடாமல் அதற்குத் தேவையான அளவு இடம்விட்டு வைத்தாள். அவள் புதைக்கப்பட்ட சிறிது காலத்திலேயே ஒரு வில்லோ மரம் அவளுடைய கல்லறையில் இருந்து முளைத்தெழத் துவங்கியதாக நான் கேள்வியுற்றேன். அதிவேகமாக மிகப் பெரிதாக வளர்ந்த அந்த மரம் தன் கிளைகளை விரித்து இரு கல்லறைகளையும் மூடி அவை இரண்டும் ஒன்றாகத் தோன்றும்படி வளைந்து கிடந்தது. விவாகரத்துச் சட்டங்கள் மனித உடல்களுக்கு மட்டுமே. ஆன்மாக்களுக்கு விவாகரத்து இல்லை.”

அவன் பேசுவதை மெயர் சில நொடிகள் கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான். தன்னால் தீர்க்கவே இயலாத, மறக்கவே முடியாத, எதனாலோ புதிருற்றது போல முகஞ்சுழித்தவன், தன் தலையை மேலும் கீழும் ஆட்டினான். பிறகு, “ஜால்மன்! நீங்கள் சொல்லும் விஷயங்கள் தினமும் நடக்கின்றன. குருடர்கள், செவிடர்கள், கூன் முதுகுடையவர்கள், ஏன் குஷ்ட ரோகிகளை மணக்கக்கூட ஆட்கள் இருக்கிறார்கள். குழந்தை பிறப்பதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பே, ஒருவருக்குப் பிறக்கப்போகும் பெண் குழந்தை இன்னொருவரின் மகனை மணக்க வேண்டும் என்று தேவதை அறிவிக்கிறபோதே, இது போல நடக்கும் என்பது உறுதியாகிவிடுகிறது. இறைவனின் சாம்ராஜ்ஜியம் விசித்திரமான இணைகளைச் சேர்த்துவைக்கிறது. அது நடந்துகொள்வதைப் பார்த்தால் தரகர்களின் செயல்பாடுகளைப் போலிருக்கிறது. இயற்கையின் நியதிக்குப்பின் மறைந்துகொள்ளாமல் இருந்தால் எல்லா மக்களும் துறவிகளாகத்தான் இருப்பார்கள். தேர்ந்தெடுக்கும் உரிமை யாருக்கும் இருக்காது. லெவி இட்சோக், நீ சொன்ன தகவல்களில் இருந்து, “கெஹனா மக்களுக்கானது. விலங்குகளுக்கானது அல்ல” என்ற வரிதான் எனக்கு மிகவும் பிடித்தது. கெஹனா ஆன்மாவைத் தூய்மையாக்கும். தூய்மையாக்குதல் என்பது மனங்களைக் கருணை கொள்ளச்செய்தல். உடலானது தன்னை மட்டுமே நேசிக்கும். இதுவும்கூட ஒரு மாயத் தோற்றம்தான். சதை என்பது ஆடையே தவிர வேறில்லை. ஆன்மாவுக்கு ஒரு புத்தாடை தேவைப்படும் போது பழைய ஆடையில் புழுதி படிந்துவிடுகிறது. இதுதான் மறுபிறப்பின் மர்மம். நாம் இதற்கு முன்பே ஆணாக, பெண்ணாக, ஆடு மாடுகளாக, மரங்களாக, புல்லாக இருந்திருக்கிறோம். இறைவனின் படைப்பில் முழுமையான படைப்பான ஆதாம், ஆண் பெண் ஆகிய இரு பாலினக் கூறுகளும் கொண்ட ஒரு பிறப்பு. ஆதியாகமத்தில் இது குறித்த குறிப்புகள் உள்ளன. ஆதாமும் ஏவாளும் தமக்குள் பாலியல் உறவுகொண்டார்கள்.

“இந்தக் கதையை நான் என் தாத்தாவிடம் இருந்தும் அவன் அவனுடைய தாத்தாவிடம் இருந்தும் கேட்டிருக்கிறான். ப்ரெகா நகரில் திரு.பிசாலெல் அஷ்கெனாசி என்ற ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு எலைக்கிம் என்றொரு மகன் இருந்தான். அவனொரு இளம் மேதை. தன் நான்கு வயதிலேயே பைபிள், மிஸ்னாஹ், கெமாராவின் சில பகுதிகள் ஆகியவற்றை அவன் கற்றிருந்தான். அவனுக்கு ஏழு வயதாகும் போது ப்ரெகாவின் யூதத் திருக்கோயிலில் அவன் செய்த சமயச் சொற்பொழிவைக் கேட்பதற்காக அறிஞர்கள் ‌வந்திருந்தனர். எனுகாக்கள் பெரும்பாலும் ஆண் பெண் ஆகிய இரு பாலினக் கூறுகளுடனேயே பிறக்கின்றனர். நவீன யூத இறை ஞான மார்க்கமான கபாலாவைப் பொறுத்தவரை அது சரிதான். ஏனெனில் எல்லா உயர்ந்த ஆன்மாக்களும் இரு பாலினத்தின் சங்கமமாகவே இருக்கின்றன. எலைக்கிம் மிகுந்த புத்திசாலியாக இருப்பதைக் கண்டு அவனுக்கு நிறைய வரன்கள் வந்தன. ஆனால் அவனோ, “நேரம் வரும்போது சரியான மணப்பெண் என்னுடன் இருப்பாள்” என்றான். அவனுக்கு நீளமான தலைமுடி இருந்தது. அவன் தாடி வளர்க்கவில்லை. தான் உலகில் அதுவரை கேட்டறியாத பாடல்களை அவன் ஆண் பெண் ஆகிய இரு குரல்களில் பாடினான். முந்தைய பிறப்பில் செய்த பெருந்தவறைச் சரிப்படுத்துவதற்காக எனுகா வானில் இருந்து பூமிக்கு இறங்கி வருகிறான். அந்த நோக்கம் நிறைவேறிய பிறகு அவன் வானில் உள்ள மாளிகைக்குத் திரும்பிச்செல்லத் தயாராக இருக்கிறான். முதல் நாள் கறுப்பாக இருக்கும் எலைக்கிமின் தலைமுடி அடுத்த நாள் வெண்ணிறமாக மாறிவிடும்.

“அவனுக்கு மணமாகியிருக்கவில்லை. மணமாகாத ஆண் பிரார்த்தனை சால்வை அணிந்துகொள்வது வழக்கம்தான் என்றாலும் அவன் தன் பிரார்த்தனை சால்வையைத் தன்னுடைய உடலைச் சுற்றிக்கொண்டு அமர்ந்து, மறை வாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழையைத் தன்னுடைய கைகளில் வைத்துக்கொண்டு, தன் தலையை ஆதிகாலத் தலைவர்களைப் போல் உயர்த்தி வைத்தபடி நாள் முழுக்க அமர்ந்திருப்பான். அவனுடைய பெற்றோர் எப்போதோ இறந்துவிட்டிருந்தனர். கடும் வைதீக முறைகளைக் கொண்ட யூத மதம் அக்காலகட்டத்தில் இல்லை. அதாவது ப்ரெகாவில் இல்லை. ஆனால் அவனை ஒரு அற்புதமான மதகுருவாக நினைத்த மக்கள் அவனைத் தேடிவந்தனர். அவன் மஞ்சள் நிற அரக்குப் பிசின் துண்டுகளின் எதிரே அமர்ந்து மந்திரங்களை அழுத்தம் திருத்தமாக உச்சாடனம் செய்தான்.

“தங்கள் குழந்தையை அவனிடம் காட்டி ஆசீர்வாதம் பெறுவதற்காகத் தாய்மார்கள் அவனுடைய வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். ஹீப்ருவில் எழுதப்பட்ட ஆதியாகத்தை அவன் வாசித்தபோது அதன் பக்கங்கள் தானாகவே நகர்ந்ததாகக் கண்ணால் கண்ட சாட்சிகள் கூறின. அவன் சில குறிப்புகளை ஒரு ஆவணச் சுருளின் பக்க விளிம்பில் எழுத விரும்பிய போது பறவை இறகாலான எழுதுகோள் அவனுடைய கைகளுக்குள் தானாகவே துள்ளி விழுந்தது. வாழ்வின் துவக்கப்புள்ளியில் நம்பிக்கையுடைய ஆதிகாலத்தவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறார்கள். கிறித்துவச் சபை ஊழியரான எனுகாவுடைய வீட்டின் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டிய அவசியமே குளிர்காலத்தில் ‌இருக்காது. ஏனெனில் செந்தழல் நிறத்தில் ஒரு பிரகாசமான ஒளி அவனிடமிருந்து வெளிப்பட்டது. அந்தக் காட்சி ஒளிசிந்தும் வானுலக தேவன் அங்கு அமர்ந்திருப்பது போலிருந்தது. அவன் பெரும்பாலும் எதையும் உண்ணவில்லை, அறுபது நொடிகளுக்கு மேல் உறங்கவில்லை. அவன் பூமியில் இல்லாமல் சொர்க்கத்தில் இருப்பது போலவே காட்சியளித்தான்.

“ஒரு நாள் அவன் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறினான். அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் ‌அனைவரும் இதைக் கேட்டதும் ‌அதிர்ச்சியடைந்துவிட்டனர். அவன் எப்படித் திருமணம் செய்துகொள்ளலாம்? பூலோகத்தைச் சேர்ந்த எந்தப் பெண் அவனுக்கு மனைவியாகத் தகுதியானவள்? அவன் பத்து முதிய ஆண்களை மட்டுமே திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று கூறியிருந்தான். அவர்கள் அனைவரும் இறைவனின் ஊழியர்கள். அவர்களில் ஒருவர் திருமண விழாவின் சமயச் சடங்குகளை நடத்த வேண்டியிருந்தது. குறிப்பிட்ட தினத்தன்று மணப்பெண்ணையும் உறவினர்களையும் தூக்கிவரும் பல்லக்குகளைப் பார்ப்பதற்காக கோயில் பணியாளர் ஒருவர் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தார். யாருமே வரவில்லை. முன்பு சொன்னது போலவே மாலைநேரப் பிரார்த்தனையின்போது அழைக்கப்பட்டிருந்த பத்து முதியவர்கள் அவனுடைய வீட்டில் கூடினர். அவர்களில் ஒருவர் கெடுபாவை எழுதினார். மணப்பெண் என்ற பெயருக்கு நேராக ஒரு வெற்றிடத்தை விட்டுவைத்தார். மற்ற நால்வரும் நான்கு தூண்கள் தாங்கிய ஒரு மணப்பந்தலை அமைத்தனர். மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. குவளைகளில் மது நிரப்பி வைக்கப்பட்டது. இவையாவும் நடந்து கொண்டிருக்கையில்  அவன் பூட்டப்பட்ட தன்னுடைய அறைக்குள் அமர்ந்திருந்தான். அங்கிருந்த சில ஆண்கள் பூட்டப்பட்ட அறைக்குள் என்ன நடக்கிறது என்று உற்று கவனித்தனர். எதுவும் கேட்கவில்லை. புனிதத்தன்மையுடன் உலக விஷயங்களில் இருந்து ஒதுங்கியிருக்கும் அவன் தன் திருமணத்தை மறந்துவிட்டானோ என்று அவர்கள் யோசித்தனர்.

“மிகச் சரியாக அதே தருணத்தில் அவனுடைய அறைக்கதவு திறந்தது. அவன் ஒரு வெண்ணிற மேலாடையும் தலை மீது ஒரு வெண்ணிற மூடாக்கும் இட்டு ஒரு சவம் போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தான். அவனுக்குப் பின்னால் வெண்ணிற ஆடை அணிந்த ஒரு மணப்பெண் கனமான முக்காட்டுடன் வெளியே வந்தாள். அவளுடைய முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. ஆனால் அவளுடைய ஆடைகள் மின்னலைப் போல ஒளிவீசின. அங்கிருந்த முதியவர்கள் வியப்பின் உச்சியில் இருந்தனர். அவர்களால் அங்கு நிற்க முடியவில்லை. அவர்களுடைய பாதம் தரையிலிருந்து நழுவுவது போலிருந்தது. கெடுபாவை எழுதியவர் மட்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மணப்பெண்ணிடம் அவள் பெயரைக்  கேட்டார். அவள் “எலைக்கிம்” என்றாள். மணமகனுக்கும் மணப்பெண்ணுக்கும் ஒரே பெயர் இருந்ததுடன் அவர்களுடைய தந்தையரின் பெயரும் ஒன்றாக இருந்தது. விழா சட்டப்பூர்வமாக நடைபெற்றது.

மதச்சடங்குகளை நடத்தியவர் கெடுபாவை வாசித்து வாழ்த்துப் பாடல்களைப் பாடினார். மணமகன் மணமகளின் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்து, “இந்த மோதிரத்தின் மூலம் மோசஸ், இஸ்ரேல் ஆகிய இரு சட்டங்களின்படி நீ எனக்காகத் தியாகம் செய்யப்படுகிறாய்” என்று சொன்னான். மது அருந்துவதற்காக மணமகள் தன்னுடைய தலையில் இட்டிருந்த மணமகளுக்கான முக்காட்டை உயர்த்தினாள். அப்போது அங்கிருந்த அனைவரும் இரண்டு எனுகாக்களைப் பார்த்தார்கள். அந்த இருவருடைய முகங்களும் முத்துகளைப் போல வெண்ணிறமாக இருந்தன. கண்கள் அன்பின் பெருமிதத்துடன் மின்னின. அவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகளைப் போல ஒன்றாக இருந்தனர். வாழ்த்துப் பாடல்கள் நிறைவுற்ற பிறகு யூத முறையில் அவர்களுக்கு நல்வாழ்த்துகள் சொல்லப்பட்டன. ஆனால் அவர்கள் தங்களுடைய அறைக்கு மௌனமாகத் திரும்பிச்சென்றார்கள். 

லெவி இட்சோக், “இதுபோன்ற ஒரு திருமணம், யூதர்களின் கடுமையான சட்டத்திற்கு எதிரானது இல்லையா?” என்று கேட்டான்.

“அவை சொர்க்கத்தில் இருக்கின்றன. பூமியில் இல்லை” என்று மெயர் பதிலளித்தான்.

“அதற்குப் பிறகு என்ன நடந்தது?”

“அன்று இரவே எனுகா சொர்க்கத்தில் இயங்கும் யூதச் சமய குருக்களுக்கான பயிற்றுநர் பாடசாலையில் சேர்ந்துவிட்டான்”

ஜால்மன், “அதற்குப் பிறகு அந்த மணமகளுக்கு என்ன ஆயிற்று? அவளும் இறந்துவிட்டாளா?” என்று கேட்டான் .

மெயர் தன் தோள்களைக் குலுக்கி, கண்களை மூடி, தூங்குவது போல காட்சியளித்தான். பிறகு எழுந்து முன்னும் பின்னும் நடக்கத் துவங்கினான். தன்னுடைய உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொண்டு தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்தான். இடையிடையே அடிக்கடி சத்தமாகச் சிரித்தான். கெரோசீன் விளக்கு அணைந்துவிட்டது. மெழுகுவர்த்தி வைக்கும் மெழுகுத் தண்டில் வைக்கப்பட்டிருந்த ஒற்றை மெழுகுவர்த்தி மினுக் மினுக் என்று முதலில் எரிந்து, பிறகு வெளிச்சத்தைத் துப்பியது. அதன் பிறகு அந்த அறை நிழல்களால் நிறைந்திருந்தது. ஜால்மன் ஜன்னலின் வழியே வெளியே பார்த்தான். வானில் முழு நிலா தெரிந்தது. “இது பௌர்ணமி! மாதத்தின் முதல் பாதி நாட்கள், மெயர் குழப்பமாக இருக்கும் பொழுது துவங்குகிறது” என்றான்.

*

ஆங்கில மூலம்: Two Weddings and One Divorce, The Collected Stories, Isaac Bashevis Singer, Library of America, November 2015 Edition.