தலைமைக் காவலரின் மனைவி – பால்சாக்

by இல. சுபத்ரா
0 comment

அர்மனாக்கின் தலைமைக் காவலதிகாரி தான் விரும்பியது போன்ற வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் பொருட்டு கோமாட்டி ‘பான்’-ஐ மணம் முடித்தார். அப்பெண்ணோ, அதற்கு முன்பே, மன்னர் ஆறாம் சார்லஸின் அரண்மனை காரியஸ்தருடைய மகனாகிய இளைய சர்வஸியிடம் தன் மனதைப் பறிகொடுத்திருந்தார்.

தீரமிக்கப் போர்வீரனான தலைமைக் காவலதிகாரி அழகற்றவராகவும் கடுமையானவராகவும் அடர் தாடியுடனும் எப்போது பார்த்தாலும் சினத்தில் வார்த்தைகளை உமிழ்பவராகவும் தூக்கிலிடுவதையே தொழிலாய்க் கொண்டிருப்பவராகவும் போர்க்களச் சிந்தையிலோ அல்லது காதல் தவிர்த்த பிற விஷயங்களிலோ மூழ்கியிருப்பவராகவும் இருந்தார். திருமண வாழ்வின் இனிமையை அதிகரிக்க எந்தக் கவனமும் செலுத்தாத அவர், வசீகரமிக்க தன் மனைவியை உயர்சிந்தை கொண்ட ஆண்களின் வழியில் கையாண்டார். ஆனால் படுக்கையின் சட்டங்கள் மட்டுமே அவர்களது அன்பையும் வெறுப்பையும் அளவிடும் காரணியாய் கருதப்படுவது பெண்களை எப்போதும் அச்சுறுத்தியே வந்திருக்கிறது.  

வசீகரமிக்க அந்தக் கோமாட்டி இத்தகைய காவலருடன் தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்ட உடனேயே, மேற்கூறிய கனவானுடனான தன் காதலை மேலும் தீவிரமாகத் தொடரத் தொடங்கினாள். அவனும் அதனை மிகத்தெளிவாக உள்வாங்கி அங்கீகரித்தான்.

தங்கள் ஆர்வத்தை ஒரே திசையில் செலுத்த விரும்பிய அவ்விருவரும் இணைந்து சித்திர எழுத்துகளைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டனர். அதன் பொருட்டு, பல்கலைக்கழக உத்தரவின் பேரில் அவனது தந்தையின் தங்குமிடம் இடிக்கப்பட்டதனால் அவர்  புனித. பால் விடுதியில் தங்கியிருந்த போதும், சர்வஸியின் குதிரைகள் பெரும்பாலும் அர்மக்னாக்கின் வீட்டிலேயே சேணம் இடப்பட்டன. இவ்விஷயம் கோமாட்டியின் உறவினரான மகாராணி இசபெல்லாவிற்கு மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது.  

விவேகமும் ஞானமுமுடைய இந்த இளவரசி, ஆசீர்வாதத்தை வழங்கத் தயாராய் இருக்கும் ஒரு பாதிரியாரைப் போல, தலைமைக் காவலன் எப்போதும் தனது கூர்வாளைக் காற்றில் சுழற்றத் தயாராய் இருப்பவன் என்பதை அறிந்திருந்தார். எனவே தன் உறவுப்பெண்  எதிர்காலத்தில் விரும்பத்தகாத சாகசங்களை எதிர்கொள்ள நேருமோ என்கிற அச்சம் கொண்டு, சர்வஸியுடன் மாலைப் பிரார்த்தனை முடித்து தீர்த்தம் பெற்றுக்கொண்டிருந்த கோமாட்டியிடம் “என் அன்பே, அந்தத் தீர்த்தத்தில் குருதி இருப்பது போல் தெரியவில்லையா உனக்கு?” என வினவினார்.

அதற்கு, “ஆனால், அன்பிற்குக் குருதி எப்போதும் விருப்பமானது ராணி” என்றார் சர்வஸி.

மகாராணிக்கு இதுவொரு சிறந்த பதிலாகப்பட்டது. அதை அவர் எழுத்தில் கொணர்ந்தார். பின்பு, மன்னனாகிய அவரது கணவர் இவரது காதலர்களில் ஒருவனைக் காயப்படுத்தியபோது அதைச் செயலிலும் கண்டார். இக்கதையில் நாம் அதைத்தான் காணவிருக்கிறோம்.

பலமுறை உங்களது அனுபவத்தில் நீங்களே கண்டிருப்பீர்கள். காதலின் துவக்க காலத்தில் தன் இதயத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவதற்கு இணையர் இருவருமே அதிகத் தயக்கம் கொள்ளுவர்.  காதலை வெளிப்படுத்தும் இனிய தந்திரங்களில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு யார் தன்னை அதிகம் ஒளித்துக்கொள்வது என்கிற விளையாட்டிற்கான விவேகத்தையும் வளர்த்துக்கொள்வர். ஆனால் ஒரேயொரு தினத்தின் மெய்மறத்தல்கூட அந்த அத்தனை தின ஒளிந்துகொள்ளும் முயற்சிகளையும் முடிவிற்குக் கொண்டுவரப் போதுமானதாகி விடுகிறது. அதீத மகிழ்ச்சியில் இருக்கும் ஒரு பெண்ணைப் பலி கொள்வது, ஒரு சுருக்குக் கயிறால் கால்நடைகளைப் பிணைப்பது போல், மிகச் சுலபமானதாய் இருக்கிறது. காதலுற்ற அவள் மனம் ஏதேனும் ஒரு வகையில் காதலனது இருப்பையோ இன்மையையோ வெளிக்காட்டி விடுகிறது. மறந்து அவன் விட்டுச்செல்கிற கழுத்துத் துணியோ தாற்றுக்கோளோ, அத்தனை நாள் மகிழ்ச்சியின் தருணங்களால் அவர்கள் பின்னிய மகத்தான காதல் வலையை அறுத்தெறிகிற வாள்வீச்சை வரவழைத்துவிடுகின்றன. ஆனால் வாழ்வில் திருப்தியடைந்துவிட்ட ஒருவன் மரணத்தின் முன்பு முறுக்கிக்கொள்வது கூடாது. மகிழ்ச்சியான மரணம் என்கிற ஒன்று இருக்குமாயின், மகத்தான ஒரு காதலனுக்கு கணவனின் வாள் மூலமாக அன்றி வேறெப்படி அது கிடைக்க வாய்க்கும்! அப்படித்தான் தலைமைக் காவலனின் மனைவி கொண்டிருந்த களிப்புமிக்க காதல்களையும் விதி முடிவிற்குக் கொணர்ந்தது.

ஒரு நாள், பர்கண்டியின் தளபதி, லாக்னியை விட்டுத் தப்பியோடியதால் கிடைத்த தாராளமான ஓய்வு நேரத்தை மனைவிக்கு நன்னாள் வாழ்த்து தெரிவித்துக் கழிக்கலாம் என எண்ணிய தலைமைக் காவலர், உறங்கிக்கொண்டிருந்த அவளை எரிச்சலுறாதபடிக்கு மிக மென்மையாக எழுப்ப முயன்றார். ஆனால் ஆழ்ந்த அதிகாலை உறக்கத்தில் இருந்த அவள், “என்னைத் தனியே விடு சார்லஸ்” எனப் பதிலுரைத்தாள்.

“ஓஹோ!” தங்களது காவல் தெய்வமல்லாத ஒரு புனிதரின் பெயரை அவள் உச்சரிப்பதைக் கேட்ட காவலர், “யாரந்த சார்லஸ் என்று எனக்குத் தெரியும்!” என்றார்.

மனைவியிடமிருந்து விலகி படுக்கையை விட்டுக் குதித்தவர், கோபத்தில் பற்றி எரியும் முகமும் வீசத் தயாரான வாளுமாக கோமாட்டியின் பணிப்பெண் உறங்கும் மாடி அறையை நோக்கி ஓடினார். இவ்விஷயத்தில் நிச்சயம் அவளுக்கும் சம்பந்தம் இருக்கும் என நம்பினார்.

”ஏய், ஏய், வேலைக்கார நாயே!” தன் உணர்ச்சிகள் அனைத்தையும் கொட்டிவிடும் எத்தனத்துடன், “உன் இறுதிப் பிரார்த்தனையைச் சொல்லிக்கொள். இங்கே இரகசியமாக வந்துசெல்கிற சார்லஸ் சார்ந்த விஷயத்திற்காக உன்னை இப்போதே கொல்லப் போகிறேன்..” என்றார்.

“ஐயோ எஜமானே! உங்களுக்கு யார் இதைப் பற்றிச் சொன்னார்கள்?” எனக் கேட்டாள் அவள்.

“ஒழுங்காக நில். இங்கே நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அவை செயல்படுத்தப்படுகிற நேரத்தையும் விதத்தையும் பற்றி இப்போதே நீ ஒப்பிக்கவில்லை எனில் ஒரே அடியில் உன்னைச் சிதைத்து வீசியெறிந்து விடுவேன். வாயை மூடிக்கொண்டு இருந்தாலோ தயங்கினாலோ கத்தியைச் சொருகிவிடுவேன்.”

“குத்திக்கொள்ளுங்கள். பிறகு, உங்களால் என்னிடமிருந்து எதையும் கறக்க முடியாது” என்றாள் அவள்.

கோபத்தில் சித்தம் கலங்கியது போலாகியிருந்த அவர், அவளது புத்திசாலித்தனமான பதிலைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாமல் அங்கேயே அவளைக் கொன்றுவிட்டு தன் மனைவியின் அறைக்குத் திரும்பினார். அப்பெண்ணின் அலறலால் விழித்திருந்த அவளிடம், “மேலே சென்று பார், பில்லட்டிற்கு நான் நன்றாகப் பாடம் புகட்டியிருக்கிறேன்” என்றார்.

மீண்டும் மனைவியின் முன் தோன்றும் முன்பு, ஒரு குழந்தையைப் போல் உறங்கிக்கொண்டிருந்த மகனைத் தரதரவென்று இழுத்துவந்தார். தன் குழந்தையின் அலறலைக் கேட்டால்  அன்னையின் கண்கள் எப்படித் திகைப்புறும் என்பதை நீங்களே அறிவீர்கள். முழுக்க இரத்தம் படிந்திருந்த வலது கையோடு தன்னையும் மகனையும் முறைத்தபடி நிற்கின்ற கணவனைக் கண்டு அவள் மிரண்டு போனாள்.

“ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என வினவினாள்.

அவசரக்காரனான அவன், “இந்தக் குழந்தை… இவன்… எனக்குப் பிறந்தவன்தானா அல்லது உன் காதலன் சர்வஸிக்குப் பிறந்தவனா?” என்றான்.

இக்கேள்வியால் முகம் வெளிறிய பான், பயம்கொண்ட தவளை நீருக்குள் பாய்வதைப் போல, தன் மகன் மீது பாய்ந்து கட்டிக்கொண்டு, “ஐயோ, அவன் நிஜமாகவே நமக்குப் பிறந்தவன்தான்” என்றாள். 

“அவன் தலை உன் காலடியில் உருண்டு விழக்கூடாதென்று நீ நிஜமாகவே விரும்பினால் எதையும் மழுப்பாமல் தவறையெல்லாம் ஒத்துக்கொள். நீ ஒரு காவலனனின் பெயரைச் சொல்லி இருக்கிறாய்.”

“நிஜம்தான்.!”

“யார் அவன்?”

“அது சர்வஸி அல்ல. எனக்குத் தெரியாத ஒருவரின் பெயரை நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்.” 

இதைக் கேட்டு எழுந்துகொண்ட தலைமைக் காவலன் தன் மனைவியின் கரத்தைப் பற்றி இழுத்து வாள்வீச்சால் அவள் பேச்சைத் துண்டிக்கப் பார்த்தான். ஆனால் ஒரு அதிகாரமிக்க பார்வையால் அவள் அவனை நோக்கியபடி, “வேண்டுமென்றால் என்னைக் கொன்றுகொள். ஆனால், தொடாதே” என்றாள்.

“சரி, நான் உன்னை உயிரோடு விடுகிறேன். மரணத்தைவிடவும் பெரிய பரிசொன்றை உனக்கு நான் தருவேன்.”

இதுபோன்ற ஆபத்தான சூழல்களைச் சமாளிக்கவென, இரவு பகலாக தனியேயும் தங்களுக்குள்ளும் பெண்கள் சிந்தித்து வைத்திருக்கிற கற்பனைகள், வாதங்கள், தந்திரங்களைத் தவிர்க்க எண்ணிய அவர், அதே கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். உடனடியாக அவர் தனது பணியாளர்கள் அனைவரையும் வரவழைத்து கடுமையும் அதிகாரமும் மிக்க பாவத்துடன் விசாரணை நடத்தினார். இறுதித் தீர்ப்பு நாளில் பிதாவிடம் தங்களது வாழ்க்கைக் கணக்கை ஒப்படைக்கிற பணிவுடன் அவர்கள் அதற்குப் பதிலளித்தனர்.

நூதனமான இந்தத் திடீர் விசாரணை- விவாதங்களுக்குப் பின்னிருந்த அபாயமான மோசடி பற்றி அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. விசாரணையின் இறுதியில், தோட்டத்தைக் கவனிக்கிற பொறுப்பில் இருந்த ஒருவனைத் தவிர தன் கீழிருக்கும் எந்த ஆணிற்கும் இவ்விஷயத்தில் தொடர்பில்லை என்பதை அவர் கண்டுகொண்டார். பதில் சொல்ல மறுத்து ஊமையாய் இருந்த அவனது கழுத்தை நெரித்துக் கொன்றார். இறுதியாக, பின்புறமிருக்கும் நீர்ப்பரப்பின் அருகிலுள்ள வாசலை மட்டுமே வழியாய்க் கொண்டிருக்கும் தோட்டத்தின் மூலமாகத்தான் மனைவியைச் சந்திக்க வரும் அந்த மற்றொரு காவலன் உள்நுழைந்திருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தார்.

புனித பால் ராஜ இல்லங்களுக்கு அருகே அர்மனாக் விடுதி அமைந்திருக்கும் விதம் பற்றி அறியாதவர்களுக்கு, அதை விளக்கிச் சொல்ல வேண்டியது அவசியமாகும். லாங்க்வீல் விடுதியும் இப்பகுதியில்தான் அமைந்திருக்கிறது. அர்மனாக் விடுதியின் வலிமைமிக்க கற்தூண்களாலான முகப்பு புனித அந்தோணியர் தெருவில் திறக்கிறது. பின்புறம் சிறிய கோபுர அமைப்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிற உயர்ந்த சுவர்கள், தற்போது லா க்ரீவ் துறைமுகம் அமைந்திருக்கிற தெருவை நோக்கியபடி, நதிப்புறம் அமைந்துள்ளன. இவ்வீட்டின் வடிவமைப்பானது மன்னரது தளபதி துப்ராவின் இல்லத்தில் நீண்ட நாட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தன் மூளையைத் துருவித்துருவி ஆராய்ந்த காவலர் அர்மனாக், அதன் ஆழத்தில், தற்போதைய பிரச்சினைக்கு மிகச் சரியாக ஒத்துப்போகக் கூடிய சரியான பதிலை தனது சிறப்பான தந்திர புத்தியால் கண்டடைந்தார். ஒரு முயலைப் போல கண்ணி வைத்து எளிதாக அவனைக் கண்டறிந்துவிடலாம் என உணர்ந்தும் கொண்டார். “தெய்வத்தின் மேல் ஆணை, என்னை அவன் எப்படி ஏமாற்றினானென்று நான் கண்டறிந்துவிட்டேன். அவனை எப்படித் தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதையும் நான் சரியாகத் திட்டமிடுவேன்” எனச் சூளுரைத்தார்.

இப்படியாக, தளபதி ழீன் சான் பர்-ற்கு எதிரான பெருமைமிகு போரினை வழிநடத்திய கம்பீரமான காவலனது தற்போதைய பணி இந்த இரகசிய எதிரியைக் கொல்வதற்கான போரை வழிநடத்துவது என்பதாகிற்று. திறமையும் விசுவாசமுமிக்க வில் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை துறைமுகப் பகுதியில் அணிவகுக்கச் செய்தார். தன் மனைவியைத் தவிர வேறு யாரேனும், பகலானாலும் இரவானாலும், தோட்டத்தை விட்டு வெளியே செல்லவோ உள்நுழையவோ முயன்றால் பாரபட்சமின்றி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என ஆணையிட்டார். புனித அந்தோணியர் தெருவிலிருக்கும் முகப்புப் பகுதியிலும் இதே போன்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதிரியார் உட்பட, வீட்டிலிருக்கும் எவரும் வெளியே செல்லக்கூடாதென மரணத்தின் பெயரால் அச்சுறுத்தப்பட்டனர். வழக்கமான பாதுகாவலர்களுடன், பீரங்கியுடன் கூடிய படைவீரர்களும் இருபுறமும் பணியில் அமர்த்தப்பட்டு தெருக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதில், தலைமைக் காவலரை ஏமாற்றியவன், அவரது சட்டப்பூர்வ உரிமையான கோமாட்டியின் மனதில் காதலை ஆழமாக விதைக்கும் பொருட்டு வழக்கமான சமயத்தில் இவை எதையும் அறியாமல் வரும்போது, மிகச்சுலபமாக மாட்டிக்கொள்வான் என்பது உறுதியானது. 

சமுத்திரமும் நிலத்தைப் போலவே உறுதியானதுதானா எனச் சோதிக்கிற ஆர்வத்துடன் புனித பீட்டர் கடலின் ஆழத்திற்குள் செல்ல முயன்றபோது தேவன் அவரைத் தடுத்து நிறுத்திய அளவிற்கு மிகப்பலமான பாதுகாப்பை விதியானது வழங்காதபட்சத்தில் எவ்வளவு திறமையானவனும் கண்டிப்பாக சிக்கியே தீரும்படியாகப் பின்னப்பட்டிருந்தது இக்கண்ணி. 

தலைமைக் காவலருக்கு பாஸியின் மக்களுடன் சற்று வேலை இருந்தது. இரவுணவிற்குப் பின்னர் சேணத்திற்குச் செல்லும் கடமை இருந்தது. அதையறிந்து கொண்ட கோமாட்டி பான், எப்போதும் தான் வெல்கிற அந்த வசீகரமான மல்யுத்தத்திற்கு, அன்றிரவு தன் காதலனை அழைக்கத் திட்டமிட்டாள். 

எந்தப் புறமிருந்து அந்த வீரன் வருவான் என்பது தெரியாததால் தன் விடுதி முழுவதையுமே ஒற்றர்களது மரணத்தின் வலையால் தலைமைக் காவலன் சூழச் செய்திருக்க, அவனது மனைவியோ வரவிருக்கிற துயரம் பற்றியோ அதனை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்தோ எதையும் சிந்தித்திருக்கவில்லை. முதலில், கத்தியால் குத்தப்பட்ட வேலைக்காரி தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொண்டு தரையில் உடலை இழுத்தபடி தலைவியிடம் வந்தாள். சினம் மூண்டிருக்கும் தலைவியின் கணவருக்கு உண்மை எதுவும் தெரியாதென்றும், மரணத்திற்குத் தன்னைத் தரும் முன்பு, அதுசார்ந்து சில விஷயங்களைத் தலைவியிடம் தெரிவிக்க விரும்பியதாகவும் கூறினாள். விடுதியில் துவைக்கும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் தனது சகோதரி, கவுன்சில் சேம்பர் முதல் ட்ரஹாய் க்ராஸ் வரையிலான சுற்றுப்புறத்தில் வசிக்கும் பொதுமக்களிலேயே கைதேர்ந்தவளும் கயமை நிரம்பியவளுமாவாள் என்றும், இதுபோன்ற சிக்கல் மிகுந்த காதல் விவகாரங்களில் புதுமையான தீர்வுகளை வாரி வழங்கக்கூடியவள் என்றும் கூறியவள், அவளைத் தலைவி தாராளமாக நம்பலாம் என்றும் உறுதி கூறினாள். போலவே தலைவிக்காகத் தன் உடலை இறைச்சியைப் போல் கூறாக்கிக்கொள்ளவும் தான் தயாராய் இருந்ததாகவும் தெரிவித்தாள். 

விசுவாசமிக்க தன் பணிப்பெண்ணின் இழப்பிற்காக கண்ணீர் விட்டபடி, வேலைகளை அப்படியே போட்டுவிட்டு வரச்சொல்லி சலவைக்காரிக்கு ஆள் அனுப்பினாள் கோமாட்டி. தன் பாதுகாப்பையும்கூடப் பொருட்படுத்தாமல், அவளுடன் இணைந்து சர்வஸியைக் காக்கும் வழி குறித்த தந்திரங்களை ஆராய முற்பட்டாள். 

முதலில் இங்கே தலைமைக் காவலருக்கு ஏற்பட்டுவிட்ட சந்தேகம் பற்றித் தெரியப்படுத்தி அவனை எச்சரிக்கையாக இருக்கும்படி கூற இருவரும் முடிவுசெய்தனர்.

இதோ பாருங்கள், தன் துணிப்பெட்டியை ஒரு கழுதையைப் போல் சுமந்தபடி விடுதியைவிட்டு வெளியேற முயல்கிற சலவைக்காரியை! ஆனால் வாசலில் இருந்த ஆயுதக்காரன் அவளது கொஞ்சல்களுக்கும் கெஞ்சல்களுக்கும் சற்றும் செவிசாய்க்கவில்லை. தன் பணியை முடித்தே தீர வேண்டும் என முடிவுசெய்திருந்த அவள், கொஞ்சல்கள் மூலம் அவனது பலவீனத்தைத் தூண்டினாள். அதற்கு அவன் சிறப்பாகவே இசைந்த போதும் போருக்குத் தயாராக கவனமுடனும் இருந்தான். ஆனால் இந்தச் சிறு விளையாட்டு முடிந்த பின்பும் அவன் அவளை அனுமதிக்க மறுத்துவிட்டான். உள்ளதிலேயே அழகான அதிகாரியிடம் கடவுச்சீட்டு பெற்றபின்னும் அவளால் வெளிச்செல்ல முடியவில்லை. வில்வீரர்களோ, ஆயுதக்காரர்களோ வேறு எவரோவும்கூட அவளுக்காக அவ்வீட்டின் சிறிய கதவைத் திறக்கும் தைரியம் கொண்டிருக்கவில்லை. “எனக்குத் தேவையான உதவியைச் செய்ய மறுக்கிறீர்களே? தந்திரக்காரர்களும் நன்றிகெட்டவர்களுமடா நீங்கள்!” எனப் புலம்பினாள் அவள்.

ஆனால் இந்த முயற்சிகளின் நல்விளைவாக அவள் எல்லா ஏற்பாடுகள் குறித்தும் தெளிவாகத் தெரிந்துகொண்டாள். தனது எஜமானியிடம் ஓடிவந்தவள், அங்கே வகுக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான சூழ்ச்சி குறித்து விவரித்தாள். மீண்டும் முதலிலிருந்து, இருமுறை அல்லேலுயா பாடுவதற்கு ஆகிற நேரத்தை எடுத்துக்கொண்டு ஆலோசனை மேற்கொண்ட இரு பெண்களும், பாவம் அந்தக் காதலனுக்கு வரவிருக்கிற இந்தப் பிரத்யேக அபாயம் குறித்து பெண்களுக்கென அருளப்பட்டிருக்கிற ஆறாம் அறிவால் உணர்ந்துகொள்ளும் வரை, போர் போன்ற சூழலையோ கண்காணிப்பையோ பாதுகாப்பு ஏற்பாடுகளையோ மிகவும் சாதாரணமாகத் தோற்றமளிக்கிற- ஆனால்- கொடூரமான ஆணைகளையோ நடத்தைகளையோ பொருட்படுத்தியிருக்கவில்லை. 

தான் மட்டுமே வீட்டிலிருந்து வெளியே செல்லமுடியும் என்பதை உணர்ந்துகொண்ட கோமாட்டி, உடனடியாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினாள். ஆனால் நான்கு பணியாட்களையும் இரண்டு உதவியாளர்களையும் அவளுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று தலைமைக் காவலதிகாரி ஆணையிட்டிருந்ததால், அவளால் அதிலும் அதிக சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை. இதையறிந்து அறைக்குத் திரும்பிய அந்தப் பாவப்பட்ட பெண், தேவாலயச் சித்திரங்களில் காணப்படக்கூடிய அத்தனை மாக்டலீன்களும் சேர்ந்து அழுகிற அளவிற்கு அழுது தீர்த்தாள்.

“ஐயோ! என் காதலன் மரிக்கப் போகிறான். இனி நான் அவனை ஒருபோதும் காண முடியாது! இனிமையான வார்த்தைகளைப் பேசுகிறவனும் நளினமான நடத்தைகளைக் கொண்டவனும் எத்தனையோ முறை என் முழங்காலில் தன் அழகிய சிரசைப் பதித்தவனும் இப்போது சிதைந்து போகப் போகின்றான். வசீகரமும் மதிப்பும் வாய்ந்த அவனது சிரம் சிதைவதற்கு நான் காரணமாக வேண்டுமா? அதற்குப் பதிலாக அதுவொரு உபயோகமற்ற காலியான சிரசாக இருக்கக்கூடாதா! காதல் நிரம்பிய தலைக்குப் பதிலாக வெறுப்புமிக்க ஒரு தலை, சுகந்தம் மிக்க தலைக்குப் பதிலாக சுவாரஸ்யங்களற்ற ஒரு தலை!”

”அட்டகாசம் எஜமானியாரே!” எனக் கூவிய சலவைக்காரி, ”என் மீது பித்தாய் இருக்கும், எப்போதும் என்னை சள்ளை செய்யும் வேலைக்காரன் மகன் ஒருவனை நாம் ராஜ ஆடை தரித்து பின்வாசல் வழியே அனுப்பினால் என்ன?” என்றாள்.

ஒரு நொடி இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் வஞ்சகம் நிறைந்த பார்வையால் பார்த்துக்கொண்டனர். 

“இப்படியொருவனை அனுப்பி கொலை செய்துவிட்டால், எல்லாக் காவலர்களும் வாத்துகள் போல பறந்து போய்விடுவார்கள்” என்றாள் பெருமாட்டி.

“ஆனால், தலைமைக் காவலருக்கு அவனை அடையாளம் தெரிந்துவிட்டால்?”

மாரில் அடித்துக்கொண்ட எஜமானி, “ஆமாம். இங்கே உயர்குடியைச் சேர்ந்த ஒருவனின் இரத்தம்தான் சிந்தப்பட வேண்டும்” என்றாள்.

சற்று நேரம் யோசித்து, குதூகலத்தில் குதித்து சலவைக்காரியை முத்தமிட்ட எஜமானி, “உனது யோசனையால் நான் எனது காதலனின் உயிரைக் காப்பாற்றப் போவதால் மரணிக்கும்வரை நான் உனக்குக் கடன்பட்டிருப்பேன்” என்றாள்.

எழுந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சீமாட்டி, ஒரு மணப்பெண்ணைப் போல் உடையணிந்து தனது சிறிய பையையும் பிரார்த்தனைப் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு அன்றைய இறுதிப் பிரார்த்தனையை அறிவிக்கும்படி மணியோசை ஒலித்த புனித பால் தேவாலயத்தை நோக்கி நடக்கத் துவங்கினாள். அடிப்படையிலேயே பகட்டான பெண்மணியான அவள், எல்லா மேல்வர்க்கத்துப் பெண்களையும் போலவே, இதுபோன்ற பக்தியில் ஒருபோதும் குறைவைப்பதில்லை. அதுவொரு முழுமையான அலங்காரப் பூசை என்றே அழைக்கப்பட்டது. ஏனென்றால் பகட்டையும் நவீனத்தையும் அணிந்து வாசனைத் திரவியம் தடவிக்கொண்ட இளம் ஆண்களும் பெண்களும் மட்டுமே இதில் கலந்துகொண்டார்கள். உண்மையில், தங்க முலாம் பூசப்படாத தாற்று முள்ளையோ போர்க்கவசம் அலங்கரிக்காத ஆடையையோ நீங்கள் அங்கு காணவே முடியாது.

ஆச்சரியமடைந்த சலவைக்காரியை கவனமுடன் அறையிலேயே இருக்கச் சொன்ன சீமாட்டி வேலையாட்கள், பாதுகாவலர்கள், ஆயுதக்காரர்கள் சூழ ஆடம்பரமாக தேவாலயத்திற்குக் கிளம்பினாள். பிரார்த்தனைக்கு வரும் பெண்களிடம் வழிகிற வீரர்களின் குழுவில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் கோமாட்டி பான் மூலம் மகிழ்ச்சியடைகிறவர்களாக இருந்தார்கள். பிரார்த்தனைக்கு வருகிற அத்தனை பெண்களில் ஒரே ஒருவரது கவனத்தையேனும் வென்றுவிடும் பெருமையின் பொருட்டு தங்களைத் தாழ்த்திக்கொள்ளத் தயாராய் இருப்பதே அப்போதைய நடப்பாய் இருந்ததால் அவர்கள் அவளிடம் தங்கள் இதயத்தைப் பறிகொடுத்திருந்தனர். தேவாலயத்தின் பீடத்தையோ பாதிரியாரையோ கவனிப்பதை விடுத்து கீழிருக்கும் இருக்கைகளையும் வரிசைகளையுமே வாயைத் திறந்தபடி பார்க்கிற இந்த அழகான பறவைக் கூட்டத்தில், கோமாட்டியின் அவ்வப்போதைய நோட்டத்தினைக் கொடையாய்ப் பெற்றிருந்த வீரன் ஒருவனும் இருந்தான். அடிபட்டது போன்ற பாவனையையும் குறைவான விளையாட்டுத்தனத்தையும் அவன் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.

மிகுந்த கூச்சம் உடையவனான அவன் எப்போதும் அந்த ஒரே தூணில் ஒட்டியபடியும் தான் தன்னுடையதெனத் தேர்ந்தெடுத்திருக்கிற இவளது ஒரே பார்வையில் உடனடியாக உவகை கொண்டுவிடுகிறவனாகவும் இருந்தான். அவனது வெளிறிய முகம் மெல்லிய சோகத்தை அணிந்திருந்தது. அவனது நற்குணத்தை வெளிப்படுத்துகிற முகத்தோற்றத்தில், தீவிரமான அன்பைப் பராமரித்து காதலின் சாகசங்களுக்குள் மகிழ்ச்சியுடன் களமிறங்குகிற சாயலும் கலந்திருந்தது. இதுபோன்றவர்கள் வெகு சிலரே. ஏனென்றால், ஆன்மாவின் ஆழத்தில் நிச்சயமற்ற வெற்றிகளைப் போஷித்துக் கொண்டாடுவதைவிட, உறுதியாக அடைய முடிகிற வெற்றிகளையே பலரும் விரும்புகின்றனர்.

உயர்தர ஆடைகளை அவன் அணிந்திருந்தான். அவை தூய்மையாகவும் அழகாகவும்கூட இருந்தன. நல்ல இரசனை உடையவனாகவும் தெரிந்தான். ஆனால் காவலரின் மனைவிக்கு, வெகு தொலைவிலிருந்து வளமான எதிர்காலத்தைத் தேடி தன் மேன்மையை மட்டுமே பங்காகக் கொணர்ந்திருக்கிற ஒருவனாகத்தான் அவன் தெரிந்தான். அவனது அந்தரங்க ஏழ்மை பொருட்டு பாதியும், அவளை அவன் வெகுவாக நேசித்ததன் பொருட்டும் மீதியும் அவனது  சிறந்த தோற்றத்தின் பொருட்டு கொஞ்சமும் (அழகான முகமும் கருமுடியும் நல்ல உடற்கட்டும் கொண்டிருந்தான்) எப்போதும் பணிவையும் பவ்யத்தையும் அணிந்திருந்ததன் பொருட்டு கொஞ்சமும் என, இத்தனை காரணங்களுக்காக, அவனுக்கு ஒரு பெண்ணின் ஆதரவும் செல்வத்தின் பலமும் அளிக்கப்பட வேண்டும் என நம் கோமாட்டி விரும்பியிருந்தாள். அவனது மேன்மையும் வீரமும் உபயோகமற்றுப் போய்விடக்கூடாதென்று எண்ணிய அவள், ஒரு சிறந்த இல்லத்தரசியின் சிந்தையோடு, தான் விரும்பியபடியெல்லாம் அவனது கற்பனைகளைத் தூண்டி வளரவிட்டாள். அவ்வப்போது அவனை நோக்கி அவள் விசிறிய சிறிய சகாயங்களும் பார்வைகளும் ஒரு விரியனின் விஷம் போல் அவனுக்குள் ஏறின. கடைநிலை வீரனைவிட மதிப்புமிக்க ஒரு பொருளுடன் விளையாடுகிற ஒரு இளவரசியின் அசட்டையுடன் அவள் அவனது மகிழ்ச்சியுடன் விளையாடினாள். உண்மையில் அவளது கணவன், சூதாட்டக்களத்தில் வெறும் ஒரு பென்னியைப் பணயம் வைக்கிற அலட்சியத்துடன், அவள் பொருட்டு தனது ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியத்தையுமே பணயம் வைத்திருந்தான். சமீபத்தில், மூன்று நாட்களுக்கு முன்புதான், பிரார்த்தனைக் கூட்டத்தின் முடிவில், தன் மேல் காதல் கொண்டிருந்த இந்த வீரனைச் சுட்டிக்காட்டிச் சிரித்தபடி, மகாராணியிடம் , “இவன் ஒரு முதல்தர ஆண்” எனக் குறிப்பிட்டாள் பான்.

மொழியின் புழக்கத்தில் இந்த வாக்கியம் அப்படியே நிலைத்துவிட்டது. பிற்காலத்தில், அவையைச் சேர்ந்த கனவான்களை கௌரவப்படுத்தும் அடையாளமாக இவ்வாக்கியமே பயன்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட வசீகரமான சொற்றொடருக்கு, ஃபிரெஞ்சு மொழி, அர்மனாக்கின் தலைமைக் காவலரது மனைவிக்கே அன்றி வேறெவருக்கும் கடன்படவில்லை.

இந்தக் கனவானைப் பற்றி அவள் அவ்வாறு குறிப்பிட்டது அதிர்ஷ்டவசமாக மிகப் பொருத்தமாகப் போய்விட்டது. பிரத்யேக அடையாளங்களற்றிருந்த அவன், ஜூலியன் பாஸ் பர்டன் என்ற பெயரினைக் கொண்டிருந்தான். மரணித்துவிட்ட அவனது அன்னை கொடையாய் அளித்திருந்த நற்குணம் என்பதைத் தாண்டி சிறு துரும்பினைக்கூடச் சொந்தமாக்கும் சொத்து எதுவும் அவனுக்குக் கையளிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே தனது செல்வத்தினை அவையில் ஈட்டும் முயற்சியில் அவன் ஈடுபட்டான். செல்வத்தின் மீது பெண்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதையும் அப்படிப்பட்ட செல்வந்தர்களால் நெருக்கமாகவும் மரியாதையாகவும் நடத்தப்படுவதை இரட்டை இலாபமாகக் கருதினார்கள் என்பதையும் அவன் அறிந்திருந்தான். ஆனால் பெண்களை தங்களது வெற்றிக்கான குறுக்கு வழியாகப் பயன்படுத்திய பலரிலிருந்து மாறுபட்டு, கணக்கீடுகளின் அடிப்படையில் தன் அன்பைச் செலவழிக்காமல் தன்னை அவளுக்கு முழுவதுமாகக் கையளித்தான். முதன்முறையாக அலங்காரப் பூசையில் சீமாட்டி பான்–இன் அசாத்திய அழகைக் கண்டவன், அப்போதே அவள் மீது காதலில் விழுந்தான். இந்தக் காதல் அவனது தகுதிக்கு மீறியதென்பதால் அதன் பொருட்டு அவன் பசியையும் தாகத்தையும் இழந்தான். காதல் மிக மோசமானது- காதலின் மீதான பசியின் பொருட்டு ஒருவன் பசியின் மீதான காதலைத் துறக்கிறான். இவை இரண்டில் ஏதோ ஒன்றே அந்த மனிதனைக் கொல்லப் போதுமானதாய் இருக்கிறது.

மரணத்தைக் கையளிக்கும் பொருட்டு இந்த நற்கோதை விரைந்து நெருங்கி வந்த அந்த இளம் கோமான் அப்படிப்பட்டவனாய் இருந்தான்.

தேவாலயத்திற்குள் நுழைந்தபோதே, பரிதாபமான அந்தக் குதிரை வீரன் மிகுந்த ஆவலுடன் தூணில் சாய்ந்தபடி, நோயுற்ற ஒருவன் வசந்த காலத்தின் அதிகாலைச் சூரியனுக்காகக் காத்திருப்பதைப் போல, தனக்காகக் காத்திருப்பதைக் கண்டாள் பான். அவன் மீது பரிதாபம் தோன்றவே, அவனிடமிருந்து பார்வையை விலக்கி ராணியிடம் சென்று இச்சிக்கலான பிரச்சினையைத் தீர்த்துவைக்க உதவும்படி கோர நினைத்தபோது, ஒரு தளபதி அவளிடம் வந்து, “பெருமாட்டி, உங்களை ராணியுடனோ பாவமன்னிப்புக்கான பாதிரியாரிடமோ என எந்த ஆணிடமும் பெண்ணிடமும் பேச அனுமதிக்கக் கூடாதென எங்களுக்கு ஆணை இடப்பட்டிருக்கிறது. எங்கள் அனைவரது வாழ்வும் ஆபத்தில் இருக்கிறதென்பதை தயைகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்” என்றான்.

“மரணிப்பது உங்கள் கடமைதானே?” என்றாள் அவள்.

“ஆணைக்கு அடிபணிவதும் எங்கள் கடமைதான்,” என்றான் அந்த வீரன்.

தனது வழக்கமான இடத்தில் முழங்காலிட்டுக்கொண்டவள், விசுவாசமிக்க தன் அடிமையின் முகத்தினை நோட்டமிட்டாள். அவனது முகம் ரொம்பவும் மெலிந்திருக்க அதில் ஆழ்ந்த வரிகள் ஓடியிருந்தன. 

“ஹ்ம்! அவன் இறந்தால் நான் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏற்கனவே அவன் பாதி மரணித்தது போல்தான் இருக்கிறான்” என நினைத்தாள்.

இத்தகைய எண்ணத்துடன் அவள் அவன்மீது இளவரசிகளாலும் வேசிகளாலும் மட்டுமே அருள முடிகிற காதற்பார்வையை வீசினாள். அவளது இந்தப் பொய்யான காதற்பார்வையானது தூணில் சாய்ந்து நின்றிருந்த வீரனின் மனதில் ஆழமான வேட்கையைக் கிளர்த்தியது. வாழ்க்கை அப்படித் தன்னை மகிழ்ச்சியால் சூழ்ந்து முழுவதுமாய் மூழ்கடிப்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

அவளது கவனம் அவனில் ஏற்படுத்திய ஒட்டுமொத்தத் தாக்கத்தையும் வார்த்தைகளின்றியே அந்தக் குதிரை வீரன் வெளிப்படுத்தியதை பெண்களுக்கேயுரிய மகிழ்ச்சியுடன் அவள் அங்கீகரித்தாள். சொல்லப்போனால், அவனது முகத்தில் தோன்றிய வெட்கத்தின் ஊதாவண்ணம் மிகச்சிறந்த கிரேக்க- இலத்தீன் சொற்பொழிவாளர்களைவிடச் சிறப்பாகப் பேசியது, புரிந்துகொள்ளவும் பட்டது. இதை அவன் வெறும் விளையாட்டாய் எடுத்துக்கொள்ளக் கூடாதென எச்சரிக்கை கொண்ட சீமாட்டி, தன் பார்வையின் வலிமை எத்தனை தூரம் வரை செல்லக்கூடியதெனச் சோதிக்கும் விதமாக கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்ட தடவைகள் தன் பார்வையால் அவனில் சூடேற்றியபின் அவன் அவளுக்காக தைரியமாக உயிரையும் கொடுப்பான் எனும் தன் நம்பிக்கையை உறுதிசெய்து கொண்டாள். இந்த எண்ணம் அவளை வெகுவாக நெகிழச் செய்ததில், பிரார்த்தனையை மூன்றுமுறை திரும்ப ஒப்புவித்த அந்த நேரத்தில், ஒரு ஆணின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிகளையும் ஒன்றாய்ச் சேர்த்து, தன் ஒற்றைக் காதற் பார்வையால் அவை எல்லாவற்றையும் அவன் பொருட்டு ஈடுசெய்துவிட முடியாதா என ஆசை கொண்டாள். ஏனென்றால் இந்தக் கனவானுடைய உயிரை மட்டுமின்றி அவனது மகிழ்ச்சிகளையும் இல்லாமல் செய்துவிட்டதான நிந்தனை தன்னை என்றேனும் ஒருநாள் தாக்கிவிடுமோ என அவள் அஞ்சினாள்.

நன்றாக அலங்காரம் செய்து அணிவகுத்திருந்த அந்த மந்தைக்கு, “இதோ நீங்கள் கிளம்பலாம்..” என்கிற பிரார்த்தனை நிறைவுப் பாடலைப் பாடும் பொருட்டு பாதிரியார் திரும்பிய போது, தனது பாதையிலிருந்து விலகி, காதலன் நின்றுகொண்டிருந்த அந்தத் தூணின் அருகே சென்று அவனை நோக்கியவள், தன்னைப் பின்தொடருமாறு கண் ஜாடை காட்டினாள். அவன் அதனைப் புரிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் பொருட்டு, சற்று தூரம் சென்ற பிறகு, மீண்டும் நின்று திரும்பி அவனுக்குக் கண்ஜாடை காட்டி, தன்னைப் பின்தொடருமாறு அறிவுறுத்தினாள் அந்த மாணிக்கப் பதுமை. தன் இடத்திலிருந்து சற்றே நகர்ந்து, பின் பணிவின் காரணமாக தொடந்து முன்வரத் தயங்கிய அந்த வீரன், இந்த இரண்டாவது சமிக்ஞையைக் கண்டதும் தைரியமுற்று, தான் ஒன்றும் அதீத நம்பிக்கை கொண்டுவிடவில்லை என்பதை தனக்குள் உறுதிசெய்தபடி கூட்டத்தினூடாகக் கலந்து சிறிய சப்தமற்ற அடிகளை எடுத்துவைத்து அவளைப் பின்தொடரத் துவங்கினான். உலகம் தீயதெனப் பெயரிட்டிருக்கிற ஒரு நற்தலத்திற்குள் நுழைகிற அப்பாவியைப் போல் இருந்தது அவனது தோற்றம். அவன் அவளுக்குப் பின்புறம் நடந்தானா, அல்லது முன்புறமா அல்லது வலப்புறமா இடப்புறமா என்பது குறித்தெல்லாம் கவலையில்லை. தூண்டிற்புழுவைச் சொருகுகிற ஒரு மீனவனின் இலாவகத்துடன், அவன் தேவதை அவன் மீது காதற் பார்வையை வீசியிருக்கிறாள். சுருக்கமாகச் சொன்னால், வாடிக்கையாளரை தங்களது வலையில் விழச்செய்யும் பொருட்டு விலைமகளிர் மேற்கொள்கிற சமிக்ஞைகள் அத்தனையையும் பயன்படுத்தி இச்சீமாட்டி அவனைத் தன் பின்னே வரவழைத்திருந்தாள்.

விலைமாதுவேகூட இம்மேற்குடிப் பெண்ணிடம் தோற்றுவிடக்கூடும் என்று யாரேனும் சொல்லக்கூடும். தனது விடுதியின் முகப்பை அடைந்ததும், அப்படியே உள்நுழைந்துவிடத் தயங்கிய சீமாட்டி திரும்பி அந்த வீரனின் முகத்தை நோக்கி, தன்னுடன் வருமாறு ஜாடை காட்டினாள். அந்த ஜாடையின் அதிகாரத்தில் கட்டுண்டு ஓடிச்சென்ற அவன், தன்னை நோக்கி நீண்ட அவளது கரத்துடன் இணைந்துகொண்டான். வெவ்வேறு காரணங்களுக்காக உள்ளுக்குள் கொதித்தபடியும் நடுங்கியபடியும் இருவரும் விடுதிக்குள் நுழைந்தனர். இந்தச் சபிக்கப்பட்ட தருணத்தில், தான் ஒரு வேசியைப் போல் நடந்துகொண்டு மரணத்தின் பால் ஒருவனை அழைத்து வந்தது குறித்தும் சர்வஸியைக் காக்கும் பொருட்டு அவனுக்கே துரோகம் செய்துவிட்டது குறித்தும் அவள் வெட்கம் கொண்டாள். ஆனால் இந்த வருத்தமானது ரொம்பவும் தாமதமானதும் பயனற்றதுமாகும். எல்லாம் தயாராக இருப்பதைக் கண்டுகொண்ட சீமாட்டி, அடிமையின் கரத்தில் நன்றாகச் சாய்ந்தபடி, “சீக்கிரம் எனது அறைக்கு வா. நான் உடனடியாக உன்னிடம் பேச வேண்டியது அவசியம்” என்றாள்.

தன் வாழ்வு ஆபத்தில் இருக்கிறதென்பதை அறியாத அவன், தான் அடையப் போகிற மகிழ்ச்சி பற்றிய நம்பிக்கையில் வாயடைத்து வார்த்தைகளற்று நின்றான். மிகச் சீக்கிரமாக வலையில் விழுந்துவிட்ட இந்த அழகான கனவானைக் கண்ட சலவைக்காரி, “அட்டகாசம்! மேல்குடிப் பெண்கள் இது மாதிரி விஷயங்களில் கைதேர்ந்தவர்கள்” என்றாள். பின்பு, வந்திருந்த வீரனுக்கு வணக்கம் வைத்து மரியாதை செலுத்தினாள். மிகச் சாதாரணமான ஒரு விஷயத்திற்காக மிகத் தைரியமாக உயிரைத் தரத் துணியும் ஒருவரை நோக்கி எழுகிற பரிகாசமும் அதில் அடங்கியிருந்தது. 

சலவைக்காரியின் பாவாடையைப் பிடித்து அருகில் அழைத்த தலைமைக் காவலனின் மனைவி, “பிக்கார், அவனது மென்மையான காதலுக்கும் பெண்களது நேர்மை குறித்த நம்பிக்கைக்கும் பதிலாக நான் என்ன பரிசளிக்கப் போகிறேன் என்பதை அவனிடம் ஒப்புக்கொள்ள எனக்குத் தைரியமே இல்லை” என்றாள்.

“ஐயே! அதை எதற்காகச் சொல்ல வேண்டும்? அவனை நன்றாகத் திருப்திப்படுத்தி பின்வாசல் வழியாக அனுப்பி வையுங்கள். போரில் காரணமேயில்லாமல் எத்தனையோ பேர் மடிகிறார்கள், இவனுக்கேனும் ஒரு காரணம் இருக்கிறதே! உங்களது திருப்திக்கு வேண்டுமானால் இவனைப் போன்ற இன்னொருவனையும் நான் அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்றாள்.

”சேச்சே, நான் அவனிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளப் போகிறேன். அதுதான் என் பாவங்களுக்கான தண்டனையாகும்” என்றாள்.

தங்கள் இருவரது தனிமையின் போது தொந்தரவு எதுவும் நேராமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை வேலைக்காரியுடன் செய்துகொண்டிருக்கிறாள் கோமாட்டி என்றெண்ணிய வீரன், சற்று தூரத்தில், சிறிய பூச்சிகள் பறப்பதை வேடிக்கைப் பார்த்தபடி நின்றான். சீமாட்டி மிகவும் துணிவுமிக்கவள் எனக் கருதினாலும் அவளை நியாயப்படுத்துவதற்காக அவன் ஆயிரம் காரணங்களை யோசித்தான். “அப்படியொரு துணிவினைத் தூண்டும் அளவிற்கு தான் தகுதியானவனா?” என்பதாகவும் எண்ணிக்கொண்டான். தலைமைக் காவலனின் மனைவி தனது அறையைத் திறந்து உள்ளே அழைக்கும் வரை அவன் இதுபோன்ற இனிமையான சிந்தனைகளில் மூழ்கியிருந்தான். தன் செல்வத்தைப் பறைசாற்றும் அத்தனை ஆபரணங்களையும் துறந்து அவனது காலடியில் ஒரு எளிமையான பெண்ணாக அவள் அப்போது அமர்ந்திருந்தாள்.

“ஐயோ! இனிமையானவரே” என்றவள், “நான் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டுவிட்டேன். கவனியுங்கள். இந்த வீட்டிலிருந்து கிளம்பும்போது நீங்கள் உங்கள் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். இன்னொருவரின் மேல் நான் கொண்டிருக்கும் அன்பானது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அவரது உயிரைக் காக்கும் பொருட்டு, நீங்கள் கொலைகாரர்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த மகிழ்ச்சியைத்தான் நான் உங்களுக்குத் தரப்போகிறேன்.”

இதயத்தின் ஆழத்தில் ஒரு துயர்மிக்க ஏமாற்றம் படர, “உங்களுக்குச் சொந்தமான ஒரு பொருளெனக் கருதி நீங்கள் என்னைப் பயன்படுத்திக்கொண்டதற்கு மிக்க நன்றி. ஆம், நான் உங்களை அவ்வளவு தீவிரமாக நேசிக்கிறேன். ஒருவரால் ஒரே ஒரு முறை மட்டுமே அளிக்க முடிகிற பரிசொன்றை உங்களுக்குத் தர வேண்டும் என நான் தினமும் கனவு கண்டிருக்கிறேன். இதோ, எடுத்துக்கொள்ளுங்கள், என் உயிர் உங்களுக்கானதுதான்” என்றான்.

இதைக் கூறியபடியே அவன் அவளைப் பார்த்த பார்வை, வாழ்நாள் முழுவதும் அவளுடன் வாழ வாய்ப்பு கிடைத்திருந்தால்  செலுத்தியிருக்கக்கூடிய அத்தனை பார்வைகளையும் ஈடுசெய்வதாய் இருந்தது. தைரியமும் அன்பும் மிக்க இந்த வரிகளைக் கேட்டதும் சட்டென எழுந்து கொண்ட பான், “ஐயோ! சர்வஸியை மட்டும் காதலிக்காமல் இருந்திருந்தால், உன்னை எவ்வளவு நேசித்திருப்பேன் நான்!” என்றாள்.

“போதுமே! என் பிறவி பயனடைந்துவிட்டது” என்றான் பாஸ் பர்டன். “ஒரு உயர்குடிப் பெண்ணின் காதலுக்காகத்தான் நான் மரணிப்பேன் என்று என் ஜாதகத்தில் இருந்தது” எனக் கூறியவன், தனது வாளை கரத்தில் எடுத்தபடி, ”கடவுளே! இப்போதே நான் என்னை மாய்த்துக்கொள்வேன். ஆனால் நான் நேசிக்கிற பெண் என் மரணத்தால் மகிழ்ச்சி கொள்கிறாள் என்பதைக் கேட்டு அந்த திருப்தியுடன்தான் நான் மரணிப்பேன். நிஜத்தில் அவளுடன் வாழ்வதைவிட அவள் நினைவுகளில் வாழ்வதையே நான் விரும்புகிறேன்” என்றான். வீரம் மிக்க அவனது இந்த நடத்தையும் ஒளிரும் முகமும் தலைமைக் காவலனது மனைவியின் இதயத்தை ஆழமாகத் தைத்தது. ஆனால் எந்தவொரு சிறிய உபகாரமும் கோராமல் அவன் அப்படியே அங்கிருந்து கிளம்ப முற்பட்டது அவளை ரொம்பவும் வருத்தியது. 

“வா, நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன்” எனக் கூறியபடி அவனை முத்தமிட முயன்றாள்.

“ஆ! என் காதலே”, தன் கண்களின் ஜ்வாலையைச் சிறிது கண்ணீரால் மினுங்கச் செய்தபடி, “இப்படியொரு விலைமதிப்பற்ற விஷயத்தை எனக்களிப்பதன் மூலம் என் வாழ்வை மரணம் தீண்ட முடியாததாக ஆக்கப் போகிறாய் நீ!” என்றான்.

“வா!” மிகத் தீவிரமான இந்தக் காதலால் தோற்கடிக்கப்பட்ட அவள், “வா, இதன் விளைவு என்னவாகுமென எனக்குத் தெரியவில்லை. ஆனால் வா. அதன்பிறகு நாம் இருவரும் இணைந்து பின்வாசல் சென்று நம்மை மாய்த்துக்கொள்வோம்” என்றாள்.

இருவரது இதயத்திலும் ஒரே ஜ்வாலை கிளர்ந்தது. இருவரது எண்ணங்களும் ஒன்றாகக் கலந்தன. அப்படியான மோகத்தின் பித்துநிலையில் பேரானந்தம் பொங்க அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். அதன் இனிமை எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதை நீங்களே அறிவீர்கள் என நம்புகிறேன். சர்வஸிக்கு வரவிருக்கும் ஆபத்தை மறந்தனர், தங்களை மறந்தனர், தலைமைக் காவலனை மறந்தனர், வாழ்வை, மரணத்தை, மற்ற எல்லாவற்றையும் துறக்கிற மறதிக்குள் ஆழ்ந்தனர்.  

இதனிடையே, முகப்பு வாயிலின் காவலன், இந்த வீரனின் வருகையைப் பற்றியும், அவனது அழிவினைத் தடுக்கும் பொருட்டு பிரார்த்தனையின் போதும் வரும் வழியிலும் சீமாட்டி கொடுத்த ஜாடைகளையெல்லாம் அவன் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை என்பதையும் கூறுவதற்காக தலைமைக் காவலனைத் தேடிச் சென்றான். ஆனால் அவர்களது எஜமான் பின்வாசற்புறம் நோக்கி மிக அவசரமாகச் செல்வதைக் கண்டான். ஏனென்றால் துறைமுக வாயிலில் இருந்த வில்வீரர்கள், “திரு. சர்வஸி உள்ளே நுழைந்திருக்கிறார்” என அவருக்கு ஒலியெழுப்பி அறிவித்திருந்தனர். 

எல்லாக் காதலர்களையும் போலவே, தன் காதலியைப் பற்றி மட்டுமே யோசித்தபடி வந்த சர்வஸி, சுற்றி நிறுத்தப்பட்டிருந்த ஒற்றர்களைக் கவனிக்காமல் குறித்த நேரத்தில் பின்வாசல் வழியே உள்நுழைந்திருந்தான். ஒரே நேரத்தில் நிகழ்ந்துவிட்ட இந்தக் குழப்பத்தால், புனித அந்தோணியர் தெருப்புறமிருந்து வந்த காவலர்களிடம் மிகுந்த உறுதியுடன், “அந்த மிருகத்தை சிறைப்படுத்தியாகி விட்டது என்று எனக்குத் தெரியும்” எனக் கூறினார் தலைமைக் காவலர். அதை மறுப்பது சரி என அவர்களுக்கும் தோன்றவில்லை.

எனவே, “கொல்லுங்கள் அவனை! கொல்லுங்கள் அவனை” எனச் சப்தமெழுப்பியபடி ஆயுதக்காரர்கள், வில்வீரர்கள், தலைமைக் காவலர், அவனது தளபதிகள் என அத்தனை பேரும் பின்வாசற்புறம் நோக்கி ஓடினர். விநோதமான இச்சூழலில், கோமாட்டியின் ஜன்னற்புறம் மன்னரது மருமகனான சர்வஸி தாக்கப்பட்டுக்கொண்டிருக்க, அவனது வலிமிகுந்த சப்தங்களும் வீரர்களது கூச்சல்களும் பயத்தில் வேகமாக இயங்கிக்கொண்டிருந்த மோகம்கொண்ட காதல் இணையரின் பெருமூச்சுகளும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கலந்து ஒலித்தன. 

“ஐயோ!” பயத்தில் முகம் வெளிற, “சர்வஸி எனக்காக மரணித்துக்கொண்டிருக்கிறான்” என்றாள் கோமாட்டி.

“ஆனால் நான் உனக்காக வாழ்வேன்,” என்றான் பாஸ் பர்டன். “நான் அடைந்த மகிழ்ச்சிக்காக அவன் அளித்த அதே விலையை அளிப்பதையும் பெருமையாகக் கருதுவேன்” என்றான்.

“எழுந்து துணிப்பெட்டிக்குப்பின் மறைந்துகொள். தலைமைக் காவலன் வருவது கேட்கிறது” என்றாள் அவள்.

இரத்தம் வழிகிற சர்வஸியின் தலையைக் கையில் பிடித்தபடி அங்கே தோன்றிய அர்மனாக்கின் தலைமைக் காவலன், இரத்தப் பிசுக்கோடு அதைக் கவச அலமாரியில் வைத்தபடி, “பார் சீமாட்டி, கணவனுக்கு ஒரு மனைவி செலுத்த வேண்டிய கடமைகள் பற்றி இது உனக்குக் கற்றுத்தரும்” என்றான்.

எவ்வித உணர்ச்சிகளுமின்றி, “நீ குற்றமற்ற ஒருவனைக் கொன்றுவிட்டாய்” என்றாள் கோமாட்டி. “சர்வஸி எனது காதலன் அல்ல.”  

இவ்வாறு கூறியபடி மிகப் பெருமையாக தலைமைக் காவலனைப் பார்த்தவள் முகத்தில் பாசாங்கும் தைரியமும் ஒருசேரத் தோன்ற, கணவனோ எத்தனையோ பேர் பார்த்திருக்கும் போது அவமானத்தை எதிர்கொள்ள நேர்ந்துவிட்ட ஒரு சிறுமியின் முட்டாள்தனத்துடன், ‘தவறு செய்துவிட்டேனோ’ என்கிற அச்சம் பிரதிபலிக்க நின்றுகொண்டிருந்தான்.

“அப்படியென்றால் இன்றைக்கு காலையில் யாரை நினைத்துக்கொண்டிருந்தாய்?” என வினவினான் தலைமைக் காவலன்.

”என் கனவில் மன்னர் வந்தார்” என்றாள் அவள்.

“அன்பே, நீ ஏன் என்னிடம் அதைப் பற்றி முன்னமே சொல்லவில்லை?”

“உங்களுக்கு வெறிபிடித்தாற் போல ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் நான் அப்படிச் சொல்லியிருந்தால் நீங்கள் நம்பியிருப்பீர்களா என்ன?”

காதைச் சொறிந்துகொண்ட தலைமைக் காவலன், “ஆனால் பின்வாசல் கதவின் சாவி சர்வஸிக்கு எப்படிக் கிடைத்தது?” என்றான்.

“எனக்கெப்படித் தெரியும்?” என்றாள் சுருக்கமாக. “நல்ல மனதிருந்தால் நான் சொல்வதை நம்புங்கள்”.

எடையற்ற காற்றுத் திசைகாட்டி காற்றில் அசைவதைப் போல, குதிகாலை மெலிதாகத் திருப்பிய அவனது மனைவி, வீட்டு வேலைகளைக் கவனிக்கச் செல்வது போல் சென்றுவிட்டாள். குற்றமற்ற சர்வஸியின் தலையை வைத்தபடி அர்மனாக்கின் காவலன் எவ்வளவு தர்மசங்கடமாக உணர்ந்திருப்பான் என்பதையும் சீமாட்டி பேசிய அத்தனையையும் கேட்டபடி இருந்த பாஸ் பர்டன் சப்தமெழுப்பாமல் தனக்குள் என்ன மாதிரி வார்த்தைகளையெல்லாம் உறுமிக்கொண்டிருந்திருப்பான் என்பதையும் நீங்களே கற்பனை செய்துகொள்ள முடியும். இறுதியாக மேஜையின் மேல் இருமுறை ஓங்கிக் குத்திய தலைமைக் காவலன், “இப்போது பாஸியின் குடிகளை நான் தாக்கப் போகிறேன்” என்றான். அப்படியாக அவன் கிளம்பிய பிறகு, இரவானதும் பாஸ் பர்டன் ஏதோவொரு மாறுவேடத்தில் அங்கிருந்து தப்பினான்.

பாவம், சர்வஸியின் மரணமானது அவனது காதலியால் மிகத் தீவிரமாக துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அவளும் தன் காதலனைக் காக்க ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துவிட்டாள். ஆனால் காலப்போக்கில் அவனது மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாமே என்றுதான் அவள் விரும்பினாள். ஏனென்றால் இந்த சாகசம் குறித்து ராணி இசபெல்லாவிடம் கோமாட்டி விளக்கிய பிறகு, அவர் பாஸ் பர்டனைத் தன்வயப்படுத்தி தனது சேவைக்கு வைத்துக்கொண்டார். அவனது உறுதியாலும் குணாதிசயத்தாலும் தைரியத்தாலும் அவர் அவ்வளவு ஈர்க்கப்பட்டிருந்தார்.

பாஸ் பர்டனை இந்தப் பெண்களிடம் அறிமுகப்படுத்தியது அபாயத்தின் வேலையாய்த்தான் இருக்க வேண்டும். மகாராணி அவனுக்காக அமைத்துக் கொடுத்திருந்த ராஜ வாழ்விற்கு அவன் மிகத் தகுதியானவனாகத்தான் நடந்துகொண்டான். ஆனால் அவன் மீது பொறாமை கொண்ட அவையினர், மன்னர் தெளிவான மனநிலையில் இருந்த சமயத்தில், அவரிடம் அவனது துரோகம் குறித்து புகாரளித்ததும் அடுத்த நொடியே சாக்கில் கட்டப்பட்டு சாரண்டன் அருகிருக்கும் படகொன்றிலிருந்து செய்ன் நதியில் வீசப்பட்டுவிட்டான். அது அனைவருக்குமே தெரியும். எந்த முன்யோசனையுமின்றி கத்தியைக் கையிலெடுக்கிற குணத்தை தலைமைக் காவலன் வெளிப்படுத்திய போதெல்லாம் அவரால் நிகழ்ந்துவிட்ட இந்த இரண்டு மரணங்களைப் பற்றியும் முகத்திற்கு நேராக சொல்லிச் சொல்லி பூனையின் பாதம் போல் மென்மையானவராய் அவரை மாற்றி குடும்பத்தின் வழிக்குக் கொணர்ந்துவிட்டாள் கோமாட்டி பான் என்பதைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவரும் தன் மனைவியை, அவளது உண்மையான குணத்தின்படி, நேர்மையும் நன்னடத்தையும் கொண்ட மனைவியெனவே உலகிற்கு அறிவித்தார்.

பழம்பெரும் எழுத்தாளர்களது வாக்கின்படி ஒவ்வொரு கதையின் நகைச்சுவையையும் வாசிப்பு இனிமையையும் தாண்டி அதில் பொருளும் சேர்க்க வேண்டியிருப்பதால், இக்கதையின் சாரம் என நான் பின்வருவதைப் பணிவுடன் அறிவிக்கிறேன். தீவிரமான பிரச்சினைகளில் பெண்கள் எப்போதும் தங்களது சிரத்தினை இழக்க வேண்டியிருப்பதில்லை. அதிலும் குறிப்பாக அவர்கள் அழகானவர்களாகவும் இளமையானவர்களாகவும் உயர்குடியில் பிறந்தவர்களாகவும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டியதில்லை. எனவே தீரம் மிக்க ஆண்கள் காதற்காரியங்களில் ஈடுபடும் போது, எல்லா நேரமும் மெய்மறந்தபடியே இருக்காமல் அருகிலிருக்கும் புதைகுழியில் விழச்செய்யும் கண்ணிகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும்படி கவனமாக இருத்தல் வேண்டும். ஏனென்றால், ஒரு சிறந்த பெண்ணிற்கு அடுத்ததாக, ரொம்பவும் விலைமதிப்புமிக்க ஒரு விஷயம் என்னவென்றால் அதுவொரு அழகான கனவான்தான்.

*

ஆங்கில மூலம்: The High Constable’s Wife