திரிபுகால ஞானி

by போகன் சங்கர்
0 comment

தவறாகக் கால் வைத்துவிட்டோமோ

என்று பதறி

ஒரு கட்டம் பின்வாங்குகிறேன் நான்.

“சிப்பாய்க்கு பின்வாங்கல் அனுமதி கிடையாது”

என்று நகைக்கிறாள் ராணி.

*

ஆம் என்றால் ஆம் என்றும்

இல்லை என்றால் இல்லை என்றும்

பொருள் தரும் ஒரு உறவில் இருந்த வரை

இரவுக்குப் பிறகு பகல் வந்தது.

கடிகாரத்தின் முகம் வட்டமாய் இருந்தது.

இப்போது எல்லாம் குழப்பம்.

எவ்வளவு பேசியும் எதையும் பேசவில்லை

என்ற உணர்வு.

எதையும் பேசாவிட்டாலும் எதையோ

சொல்லிவிட்டாற்போல் ஒரு களிப்பு.

நிலவென்றோ கதிரென்றோ

சொல்லிவிட முடியாத ஒரு வெளிச்சம்

இந்தக் கிணற்றுக்குள் எப்போதும்.

கூர்தல் மிகும்போது இருட்டென்றும் கூட

தயக்கமின்றிச் சொல்லிவிடலாம்தான் இதை.

*

ஒரு கனவு

லாங்க் ஷாட்;

ஒரு பெரிய கோட்டை மதில்.

அதில் புள்ளி போல் ஏறிக்கொண்டு இருக்கும் ஒரு உருவம்

மிடில் ஷாட்;

அது ஒரு மதில் அல்ல.

க்ளோஸ் ஷாட்;

அது ஒரு கடலை மிட்டாய்.

அதன் மேல் ஏறுவது ஒரு எறும்பு.

ஜும் ஷாட்; 

அதில் ஏறிக்கொண்டிருப்பது எறும்பல்ல. 

நான்தான்.

*

காதலில்

உடல்

மெல்ல மெல்ல

மனதின் வளைவுகளை அடைகிறது.

புன்னகை இடையாகிறது.

உன் மனத் திடம் தாடையாகிறது.

குறும்பு செவியாகிறது.

கண்ணீர்த்துளி மார்பாகிறது.

*

சிலர் சிலரைவிட

நன்றாக ஓடுகிறார்கள்.

ஆனால்

எல்லோரும் எங்காவது

நின்றுவிடுகிறார்கள்.

எப்போதும்

நடுவில் நிறுத்தப்பட்டு விடுகிற

ஒரு விளையாட்டில்

ராஜாவுமில்லை

சிப்பாயும் இல்லை.

*

இப்போதெல்லாம்

என்னைப் பற்றி

எவ்வளவு பிழையாக

நீ நினைத்துக் கொள்ளமுடியுமோ

அவ்வளவும் நினைத்துக்கொள்ள

நான் உன்னை அனுமதிக்கிறேன்.

திருத்த முயல்வதில்லை.

நீ

இதை அன்பு என்று கருதவில்லையா?

*

பூனைக்குப் பக்கத்திலேயே

அதன் நிழலும்

அமர்ந்திருப்பது போல

உன் மீதான விருப்பத்தின்

அருகிலேயே

அமர்ந்திருக்கும்

உன் மீதான இந்த வெறுப்பு.

உடல்

உடல் மூடிக் கிடந்த பின்பு

மனதில் தோன்றும் இந்த வெறுமை.

அறுத்தெறிந்த சங்கிலியை

நீண்ட பெருமூச்சுடன்

பாகனை எழுப்பி

மீண்டும் மாட்டிக்கொள்ளும்

மதம் தீர்ந்த யானை.

*

கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை.

அது எளிய விஷயங்களை நேசிக்கிறது.

சற்றே தயக்கத்துடன் உங்கள்

தோட்டத்தில் முளைத்திருக்கும்

நீங்கள் விதைத்திராத புதிய தாவரம்.

சுவர் மீது கால் வைத்து

நீங்கள் பந்து விளையாடுவதையே

தலை சாய்த்துப் பார்க்கும் பக்கத்து வீட்டு நாய்.

ரயிலில் மடியில் உறங்கும் சிறுமியைத்

தட்டிக் கொடுத்துக்கொண்டே

மறுகையில் புத்தகம் படிக்கும் அன்னை.

பிளாட்பாரத்தில் வடை விற்பவன் பின்னால்

நடந்து போகும் காகம்.

கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை.

ஏற்கெனவே நிகழ்ந்துகொண்டிருக்கும்

ஒரு பெரிய அற்புதத்தைக்

கைசுண்டிக் காண்பிக்கிறது.

*

கவிதை,

காற்று கடந்து

வெகு நேரம் ஆனபின்பு

சலசலக்கும் ஞாபக இலை.

பூமி அதிரும்முன்பே

சுவரிலிருந்து

கழன்று வீழும் படம்.

கரையில் கிடந்து

துள்ளும் மீனின்

கடைவாய்நீர்.

*

புவியில்

எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை

நான்

கடவுளாகாமல் பார்த்துக் கொள்வது.

நான் அதைச் சரியாகவே செய்தேன்.

வேலை முடிந்ததும்

மீண்டும் கடவுளிடம் சென்றேன்.

அவர்

நான் என் நாயைச் செய்வது போல

என் தலையைத் தடவினார்.

ஒரு கருந்துளைக்கு என் பெயர் இடப்பட்டு

பரிசாக எனக்குத் தரப்பட்டது.

நான் அதற்குள் சென்று

யாரும் காணாதபடிக்கு அழுதேன்.