மகுடேசுவரன் கவிதைகள்

by மகுடேசுவரன்
0 comment

ஆண் என்பவனை
எப்படி வரையறுப்பது ?
அவன் நூறு நிலங்களின்
முட்கள் ஏறிய
காலடிகளால் ஆனவன்.
அவன் நூறு நோக்கங்களின்
எடைதாளாது
எப்போது வேண்டுமானாலும்
அச்சு இறும் நெஞ்சினன்.
அவன் நூறு கனவுகளின் வானத்தில்
தனது நீலத்தைப் பிழிந்து
குடிக்க முடியாத
உவர்த்த வாயினன்.
அவன் நூறு துன்பங்களின்
தூண்மண்டபத்திடையே
சாய்ந்தமர முடியாத நெரிசலில்
சிக்கிக்கொண்டு தவிப்பவன்.
அவன் நூறு வாய்ப்புகளைத்
துரத்திச் சென்றும்
ஒன்றும் கிட்டாத தளர்ச்சியை
வெளிக்காட்டாமல் முகங்கழுவுபவன்.
அவன் நூறு விழுப்புண்களின்
தழும்புகளோடு
வலிதாங்கிக்கொண்டே
வாளாவிருக்க முயன்று
கண்ணீர் அடக்குபவன்.
அவன்
நூறன்று
ஒரே ஒரு பெண்பாலின்
தூய அன்பினாலன்றி
வேறெதனாலும்
உயிர்ப்படையத் தெரியாத
மெல்லுயிரன்.

*

எழுதியெழுதி நிகழ்த்தப்படும்
காதல் உரையாடல்களில்
ஒருவரையொருவர்
சொற்களால்
தெரிவித்துக்கொள்கின்றனர்.
அங்கே சிந்தப்படும்
நூற்றுக்கணக்கான மகரமெய்களில் (ம்ம்)
ஈக்கள் மொய்க்கின்றன.
திட்டல்களில் தீஞ்சாறு வடிகிறது.
முதலில் ஒருவர்
பன்மையைவிட்டு இறங்கி
ஒருமைக்குள்
அடியெடுத்து வைக்கையில்
எதிர்த்தரப்பின் நெஞ்சில்
மதுச்சிதறல்.
ஒரு முடிவினை
அடையக்கூடாது என்று
ஆயிரம் “அப்புறம்”கள்
தோற்றுவிக்கப்படுகின்றன.
கேள்விக்குறிகளும்
நகைக்குறிகளும்
புதிது புதிதாய்க் கண்டறியப்பட்டு
எடுத்தாளப்படுகின்றன.
அவை
மயக்குறு சொற்களைப்போல
அவ்வளவு பொருள் பொதிந்தனவாய்
இருக்கின்றன.
“ஏன் என்னை…” என்ற கேள்விக்கு
எவ்விடையும் கிடைப்பதில்லை.
திரைப்பாடல்கள்
கவிதைகள் படங்கள்
பகிரப்படுகின்றன.

*

வங்கி அலுவலரோடு
உரையாடியபடி அமர்ந்திருந்தேன்.

தயங்கியபடி
எம்மிடையே வந்த ஓர் இளைஞர்
கசங்கிய உடையிலிருந்தார்.

நீர் உகுத்துவிடுமோ என்னும்
ஈரக்கண்கள்.

கிளிப்பிள்ளையின்
கழுத்து வளைவுபோல்
தங்க வளையல்கள் இரண்டு
அவர் கைகளில்.

அஞ்சும் குரலில்
“இதை அடமானம்
வெக்கணுமுங்க” என்றார்.

தவழப் பழகாத மழலையின்
கைவளைகள் அவை.
தாய்மாமனோ பாட்டியோ
முத்தமிட்டு அணிவித்தவை.

நிறுத்துப் பார்த்த அலுவலர்
”இது ஒன்றரைப் பவுன்கூட
இல்லையே” என்றார்.

“ஆமாங்க… ஒன்னரைக்கு
ஒரு குண்டுமணி குறைதான்.
அடமானம் வெக்கணும்.”
குரல் கூசிக் குன்றியது.

“இல்லைங்க.
குறைஞ்சது இரண்டு பவுன்
இருந்தாதான்
அடமானம் வெக்க முடியும்.
இத வைக்க முடியாது” என்று
திருப்பிக் கொடுத்தார் அலுவலர்.

தம் காலடி நிலம் பிளந்ததுபோல்
செயல்மறந்து நின்றார் இளைஞர்.

அடுத்தோர் ஏறிடலுக்கு
அங்கே இருக்கவியலாது
எழுந்தேன்.

*

“எப்படி நம்புவது?” என்று
கேட்கிறாய்.
ஆயிரம் சல்லிவேர்களும்
ஆணிவேருமாய்
நிலத்தைப் பற்றிக்கொண்டு
களிறு முட்டினும்
சாயா உறுதியுடன்
ஓங்கி வளர்ந்து
எத்திசையும் கிளைபரப்பி நின்று
புயலெதிர்த்துப் பூத்துக் காய்த்த
கனிமரத்தின்
காம்பினைத்தான் ஐயுறுகிறாய்.

*

தம் பெயரனுக்கு
எழுதுபலகை வாங்க
கடைக்கு வந்த தாத்தா
கறுப்பு விளிம்பிட்ட
கண்ணாடி போட்டிருந்தார்.
காக்கிச் சட்டை அணிந்திருந்தார்.

“பச்சைச் சட்டம் போட்டதுன்னா
அவனுக்குப் பிடிக்குமே” என்று
ஒன்றைத் தேர்ந்தார்.

தாமே குழந்தையாகி
இசைக்கருவி மீட்டுவோனைப்போல்
இடக்கையால்
இடத்தோளில் ஒட்டிப்பிடித்து
கற்பனைக்குச்சி கொண்டு
எழுதியும் பார்த்தார்.

”இதையே எடுத்துக்கிறேன்” என்றவாறு
விலையைக் கேட்டார்.

கடையாள் சொன்ன
விலைக்குத் தயங்கியவர்
கைப்பேசியில்
யாரையோ அழைத்தார்.

“எண்பது ரூவாயாம்.
என்கிட்ட ஐம்பதுதானே
குடுத்துவிட்டே” என்னும்
முறையீடு இருந்தது.

தம் வழித்தோன்றலை
இம்முழுநிலா நாளில்
முதல் அகரம் எழுத வைக்கும்
மூத்த தலைமுறையின்
கடன்மை விழைவின்முன்
நம் கைப்பொருளுக்கு
என்ன பெறுமதி
இருக்க முடியும் ?

கடைப்பையன்
காதைக் கடித்து
“அவர் கேட்கும் விலைக்கே
கொடுத்துவிடு.
மீதத்தை
என்னிடம் பெறு” என்றேன்.

“ஐயா…
அம்பதே கொடுங்க” என்று
எழுதுபலகையை
விற்றனுப்பினார் கடைக்காரர்.

மீதத்தோடு
நான் வாங்கிய
சிறுபொருளுக்குத் தொகை தந்து
அகன்றேன்.

நிறைவின்
விலைமதிப்பில்லாச் சுமையால்
என் கைப்பையின் எடை
கூடியிருந்தது.

*

எப்போதும் பெண்ணுக்கு
இரண்டு மனம்.

குழந்தைமையிலிருந்து
தாய்மைக்கு நகரும்
எதிர்ப்பெயர்ச்சியே
அவள் வாழ்வு.

இருபுலப்பான்மையே
அவள் இயல்பு.

அன்பினையும்
அன்பின்மையையும்
அடையாளம் காண
முயன்று முயன்று
தளர்ந்த கண்ணுடைமை.

அறிவுணர்ந்தும்
உணர்வறிந்தும்
பிரித்தறிந்து பேணாமை.

அடையும் முன்பு
அடையத் துடிக்கும் துடிப்பு
அடைந்த பின்பு
அடைந்து பெற்ற தவிப்பு.

உண்டு என்னும் முன்
இல்லையென்னும் இதழ்
இல்லை என்னும் முன்
உண்டென்னும் உள்ளம்.

ஏற்றருளிய மாற்றத்தோடு
எஞ்ஞான்றும் போராட்டம்.

முன்வைத்த காலோடு
முடிவுறாத பின்வைப்பு.

நெடுந்தொலைவு
உடன்வரவேண்டிய
நீள்நடையின் நடுவில்
திடுமென்று திரும்பல்.

ஒப்புக்கொண்ட உறுதிகளில்
ஒப்பாத சிறுமுறிவு.

தீர்வென்று கொண்டவற்றில்
தீராத ஐயுறல்கள்.

தேர்ந்து கண்டவற்றில்
தெளியாக் கண்ணோட்டம்.

இருமனப் பெண்மையிடம்
தமையிழந்த ஆடவர்கள்
நாடெங்கும் ஆயிரத்தார்
கண்ணீரால் நாள்வளர்த்தார்!

*

எல்லா உறுப்புகளையும்
இயற்கை நோக்கினின்று
பிறழ்த்திப் பயன்படுத்தியதுதான்
நாகரிகக் குற்றம்.

சுவையரும்புகளால் ஆன
நாக்கு
பேசுவதற்கானதன்று
சுவைப்பதற்கானது.

அவ்வாறே
உதடுகள்
ஒலிப்பதற்கானவையல்ல
முத்தத்திற்கானவை.

*

சொற்களால்
சிறைப்படுத்த வேண்டும் என்றெழும்
ஆணின் செல்ல விளிமொழிகள்
“தெரியாது” என்னும் விடைகளால்
மழுங்குகின்றன.

புகழ்ச்சியால்
இன்று துவள வேண்டும் என்றெழும்
பெண்ணின் வினாக்கள்
இறுதியில் வெட்கத்தால்
குழைந்து உருகுகின்றன.

முற்காலத்தின்
தழும்புகளைக் கூறுகையில்
மறுமுனை அழுகிறது.

எதிர்காலத்தின்
கனவுகளைக் கூறுகையில்
முத்தச்சித்திரங்கள்
மெய்ம்மறந்து இறைக்கப்படுகின்றன.

இவ்வாறாக
ஒரு காதலுரையாடல்
அதன் பெருந்தடத்தை
நோக்கித் திரும்புகிறது.

ஒருவரையொருவர்
நேரிற் காணும் பொற்பொழுதுக்காகக்
காத்திருக்கத் தொடங்குகின்றனர்.

*

பிழைப்பூருக்குச் சென்றவர்
நாள் கிழமை நல்லது கெட்டதுக்குப்
பிறப்பூர் வரவில்லையென்றால்
பெயர்ந்ததன் பெருமை குன்றும்.

வீட்டாரும் மற்றாரும்
கேட்டனவற்றை
ஒவ்வொன்றாக வாங்கிச்
சேர்த்தெடுத்தாயிற்று.

பழைய பைகளிலும்
புதுப்பைகளிலுமாய்த் திணித்துக்கொண்டு
பேருந்து நிலையம் வந்தால்
தந்தைக்கோ
தங்கையின் மூத்த மகளுக்கோ
வாங்க வேண்டிய
ஒற்றை வேட்டியும் பூவாடையும்
மறந்திருக்கும்.

வழியோரத்தில்
கட்டில் கடை போட்டிருப்பவர்
கனிந்து அழைக்க
இரண்டு வேட்டிகளையும்
சிறுமித் துணியையும் வாங்கிக்கொண்டு
ஊர்போகும் பேருந்தினைத் தேடினால்
அதற்கு வேறோர் இடத்தில்
புது நிறுத்தம் போட்டிருப்பர்.

அங்கே போய்
ஊர்செல்லும் பேருந்தினைக் கண்டு
தன்னை நுழைப்பதற்கு
இடமில்லையெனினும்
இருக்கைகளின் அடியில்
பைகளை நுழைத்து வைத்து
படிக்கூட்டத்தோடு
பயணம் தொடங்குகிறது.

நகரைத் தாண்டியதும்
மழைக்காட்டுப் புதுக்காற்று
படியோனின் உடலெங்கும்
பட்டுக் குளிர்த்தும்போது
எங்கோ ஓர் ஆலமரத்தில்
உறுதியான விழுதொன்று
மண்ணைத் தொட்டு
வேர்பிடிக்கின்றது.