பூடபெஸ்டை அடைதல் – நோவயலட் புலவாயோ

by சசிகலா பாபு
0 comment

நாங்கள் பூடபெஸ்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம் – பாஸ்டர்ட், சிபோ, காட்நோஸ், ஸ்போ, ஸ்டினா, நான். மிட்சிலிகாஸி சாலையைக் கடக்க எங்களுக்கு அனுமதி கிடையாது, பாஸ்டர்ட் தனது குட்டித்தங்கை பிராக்‌ஷனை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது, நாங்கள் செல்வது தெரிந்தால் என் தாய் என்னைக் கொன்றேவிடுவார், இவற்றையெல்லாம் மீறி நாங்கள் பூடபெஸ்ட் செல்கிறோம். அங்கு சென்றே தீருவோம். நாங்கள் திருடி உண்ண பூடபெஸ்டில் நிறைய கொய்யாக்கள் உள்ளன. இப்போதைக்கு அந்த கொய்யாக்களுக்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். காலையில் இருந்து நாங்கள் எதையுமே உண்ணவில்லை. என் வயிற்றுக்குள்ளிருந்த அனைத்தையும் யாரோ மண்வெட்டியால் வாரியெடுத்துவிட்டதைப் போல உணர்கின்றேன்.

கூந்தலை வாரிக்கொண்டே அரட்டையடிப்பதில் எங்கள் தாய்மார்கள் மும்முரமாக இருந்தனர். அவர்கள் செய்யும் ஒரே வேலையும் அதுதான் என்பதால் பாரடைஸில் இருந்து வெளியேறுவது எங்களுக்கு அப்படியொன்றும் கடினமான காரியமில்லை. குடிசைகளைக் கடந்து நாங்கள் வரிசையாகச் செல்வதை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு அவர்கள் மீண்டும் தம் தலையைத் திருப்பிக்கொள்வர். ஜகராண்டா மரத்தின் கீழே தாயம் விளையாடும் ஆண்களோ ஆட்டத்தில் இருந்து தம் கண்களை விலக்குவதேயில்லை. எனவே அவர்களைப் பற்றியும் நாங்கள் கவலைபடத் தேவையில்லை. ஆனால் நாங்கள் செல்வதை பார்த்ததும் எங்களைப் பின்தொடர்ந்துவர முயலும் குழந்தைகள்தான் எங்களின் ஒரே பிரச்சினை. அவர்களில் முதலில் நிற்கும் நிர்வாணக் குழந்தையின் பெருத்த தலையின்மீது பாஸ்டர்ட் கைமுட்டியால் ஓங்கிக் குட்டுவைத்ததும் அவர்கள் அனைவரும் திரும்பி ஓடிவிடுவர்.

புதர்க்காட்டை அடைந்ததும் நாங்கள் மிகுந்த உற்சாகமடைந்தோம். எங்கள் குரல்களில் இருந்த சக்கரங்கள் எங்களின் ஓட்டத்தை வேகப்படுத்துமென உத்தேசித்து உரக்கப் பாடினோம். பாடலை ஸ்போதான் துவங்கினாள்: “யார் இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்தார்?” உடனே நாங்கள் அனைவரும் “வாஸ்கோ ட காமா! வாஸ்கோ ட காமா! வாஸ்கோ ட காமா!” எனச் சேர்ந்து பாடினோம். இன்று நாங்கள் ஆடிய கிராமப்புற விளையாட்டொன்றில் பாஸ்டர்ட் வென்றுவிட்டான். அதனாலேயே அவன் தன்னை நாட்டின் அதிபரைப் போல எண்ணிக்கொண்டு எங்கள் அனைவருக்கும் முன்னால் சென்றான். அடுத்து நான், காட்நோஸ், ஸ்டினா, ஸ்போ செல்ல சிபோ கடைசியாக வந்தாள். பாரடைஸில் இருந்த அனைவரையும்விட வேகமாக ஓடுபவளாக இருந்த சிபோவால் இனி அவ்வாறு ஓடமுடியாது. ஏனெனில் அவளை யாரோ கர்ப்பமாக்கி விட்டனர்.

மிட்சிலிகாஸியைக் கடந்து மற்றொரு புதர்க்காட்டுக்குள் நுழைந்து ஹோப் வீதியின் வழியாக விரைந்தோம். நாங்கள் அமர அனுமதிக்கப்படாத மினுமினுக்கும் பெஞ்சுகள் நிறைந்த பெரிய அரங்கையும் கடந்து, இறுதியாக பூடபெஸ்டை அடைந்தோம். பெருத்த வயிறுடன் சிபோ ஓய்வெடுப்பதற்கென மட்டும் நாங்கள் ஒருமுறை நின்றோம். வயிறு வலிக்கும்போதெல்லாம் அவள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. 

“எப்போதுதான் அவளுக்குக் குழந்தை பிறக்கும்?” என பாஸ்டர்ட் கேட்டான். சிபோவின் வயிற்றைக் காரணம்காட்டி நாங்கள் தாமதிப்பது பாஸ்டர்டுக்கு பிடிக்கவேயில்லை. அவளுடன் நாங்கள் விளையாடுவதைக்கூட அவன் தடுக்க முயன்றான்.

“என்றேனும் ஒருநாள் அவள் பெற்றெடுக்கத்தான் போகிறாள்,” என சிபோவிற்கு நான் பதில் கூறினேன். ஏனெனில் இப்போதெல்லாம் அவள் பேசுவதேயில்லை. அவளொன்றும் ஊமையாகி விடவில்லை. அவள் வயிறு பெரிதாக வளரத் துவங்கியதில் இருந்துதான் அவள் பேசுவதை நிறுத்திவிட்டாள். எனினும் அவள் எப்போதும்போல் எங்களுடன் விளையாடினாள், மற்ற காரியங்களையும் செய்தாள், மிக மிக அவசியமாக ஏதேனும் பேசியே ஆகவேண்டுமெனும்போது மட்டும் தன் கைகளால் சைகைகள் செய்வாள்.

“என்றேனும் ஒரு நாள் என்றால்? வியாழனன்றா? நாளையா? அடுத்த வாரத்திலா?”

“அவள் வயிறு சிறிதாக இருப்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா? குழந்தை இன்னும் வளர வேண்டும்.”

“குழந்தை வயிற்றின் உள்ளே வளர்வதில்லை, ‘வெளியே‘தான் அவை வளர்கின்றன. அதற்காகத்தான் அவை பிறக்கின்றன. பின்னரே அவர்கள் பெரியவர்களாக வளர்கின்றனர்.”

“அப்படியே இருந்தாலும், அதற்கான நேரம்  இன்னும் வரவில்லை. அதனாலேதான் குழந்தை இன்னும் வயிற்றினுள்ளேயே இருக்கிறது.”

“குழந்தை ஆணா பெண்ணா?”

“ஆண். முதல் குழந்தை ஆணாகத்தான் இருக்கவேண்டும்.”

“அறிவாளியே, நீயொரு பெண்ணாயிற்றே? நீதானே உங்கள் வீட்டில் முதலில் பிறந்தவள்.”

“ஆணாக இருக்கவேண்டும் எனத்தானே நான் கூறினேன்.”

“உன்னுடைய சாக்கடை வாயை மூடு, இதுவொன்றும் உன் வயிறு இல்லை.”

அது பெண் குழந்தையெனத்தான் நினைக்கிறேன். என் கைகளை அவள் வயிற்றின் மீது வைத்துப் பார்த்திருக்கிறேன். ஒருமுறைகூட அது எட்டி உதைத்ததேயில்லை. ஆமாம், உதைப்பதையும் குத்துவதையும் தலையால் முட்டுவதையும் ஆண்கள்தான் செய்வார்கள். அவற்றில்தான் அவர்கள் சிறந்தவர்கள்.

“அவளுக்கு ஆண்குழந்தை வேண்டுமா?”

“ஆமாம். இல்லை. இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.”

“எந்த வழியாக குழந்தை வெளியே வரும்?”

“எந்த வழியாக உள்ளே சென்றதோ அந்த வழியாகத்தான்.”

“எப்படி அது வயிற்றினுள் சென்றது?”

“முதலில் இயேசுவின் தாயார் அதை அங்கு வைக்க வேண்டும்.”

“இல்லை, இயேசுவின் தாயாரல்ல. ஒரு ஆண்தான் அதை உள்ளே வைக்கவேண்டுமென என் உறவினப் பெண் முசா கூறினாள். அவள் எனியாவிடம் கூறியபோது நானும் அங்கிருந்ததால் இதைக் கேட்டேன்.”

“அப்படியானால் யார் அதை அங்கு வைத்தது?”

“அவளாக அதைக் கூறாதவரை நமக்கு எப்படித் தெரியும்?”

“யார் அதை உனக்குள்ளே வைத்தது, சிபோ? எங்களிடம் கூறு, நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம்.”

சிபோ வானைப் பார்த்தாள். அவளுடைய ஒரு விழியில் மட்டும் ஒற்றைக் கண்ணீர்த்துளி துளிர்த்தது, மிகச்சிறிய துளி.

“ஒரு ஆண் அதை உள்ளே வைத்தானெனில் ஏன் அவனே அதை வெளியே எடுப்பதில்லை?”

“ஏனெனில் பெண்கள்தான் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும், மரமண்டையே! அதனாலேதான் குழந்தைக்குப் பாலூட்ட பெண்களுக்கு மார்புகள் உள்ளன.”

“ஆனால் சிபோவின் மார்பகங்கள் சிறியதாக உள்ளன. கற்களைப் போல.”

“அதுவொன்றும் பிரச்சினையில்லை. குழந்தை பிறந்தவுடனே அவை வளர்ந்துவிடும். நாம் கிளம்பலாம், சிபோ, நாம் செல்லலாமா?” எனக் கேட்டேன். பதிலேதும் கூறாமல் சிபோ கிளம்பினாள். அவளைப் பின்தொடர்ந்து நாங்கள் ஓடினோம். பூடபெஸ்டின் நடுப்பகுதியை அடைந்ததும் நின்றோம். இந்த இடம் பாரடைஸைப் போலில்லை, முற்றிலும் வித்தியாசமான நாடாக இது இருந்தது. எங்களைப் போன்ற மக்கள் வாழாத நல்லதொரு நாடு இது. ஆனால் இங்கு மனிதர்கள் வாழ்வதற்கான எந்த அறிகுறியையும் காண முடியவில்லை; காற்றுகூட வெறுமையாகவே இருந்தது; சுவையான உணவுகளின் சமையலில்லை, மணங்கள் இல்லை, ஓசைகள் இல்லை. எதுவுமேயில்லை.

பூடபெஸ்டில் இருந்த பெரிய பெரிய வீடுகளின் கூரைகளில் சாட்டிலைட் டிஷ்கள் இருந்தன. நேர்த்தியான சரளைக்கல் பாதைகளும் புல்வெளிகளும் இருந்தன, உயரமான வேலிகளும் மதிற்சுவர்களும் மலர்களும் இருந்தன, இங்கிருக்கும் வேறெவெருமே பழங்கள் நிறைந்துகிடந்த மரங்களைச் சீண்டாததால் அவை எங்களுக்காய் காத்துக்கிடந்தன. அந்தப் பழங்கள்தான் அங்கு வருவதற்கான துணிவையும் எங்களுக்குக் கொடுத்திருந்தன. அங்கிருந்த சுத்தமான சாலைகள் எந்நேரத்தில் வேண்டுமானாலும் எங்கள் மீது காறியுமிழ்ந்து விரட்டியடிக்கக்கூடும் என எதிர்பார்த்தேன்.

ஸ்டினாவின் மாமா தற்போது பிரிட்டனில் வசிக்கிறார். இங்கிருந்த அவருக்குச் சொந்தமான மரத்தில்தான் முதலில் திருடினோம். அதைத் திருட்டு எனக் கூற முடியாது. ஏனெனில் அது ஸ்டினாவின் மாமாவின் மரம்தானே? யாரோவொரு அந்நியருடையது அல்லவே. இரண்டுக்கும் வேறுபாடு உண்டுதானே? அம்மரத்தில் இருந்த அனைத்து பழங்களையும் தின்றுதீர்த்ததும் மற்ற வீடுகள் நோக்கியும் நாங்கள் நகர வேண்டிவந்தது. எத்தனை வீடுகளில் திருடியுள்ளோம் என்ற கணக்குகூட என்னிடமில்லை. ஏதேனுமொரு தெருவைத் தேர்வுசெய்து, அங்கிருந்த அனைத்து வீடுகளுக்கும் நாங்கள் சென்றுவரும்வரை அங்கேயே இருக்கவேண்டுமென பாஸ்டர்ட் கூறியுள்ளான். பிறகு நாங்கள் மற்ற தெருக்களுக்குச் செல்வோம். இதன்மூலம் எங்கு சென்றோம், அடுத்து எங்கு செல்லப்போகிறோம் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க முடிந்தது. இதுவொரு ஒழுங்குமுறை போல பின்பற்றப்பட்டது. நாங்கள் சிறந்த திருடர்களாக உருவாக இம்முறை உதவுமென பாஸ்டர்ட் கூறினான்.

இன்று நாங்கள் புதிய தெருவொன்றுக்குச் செல்லவிருந்தோம். எனவே மிகக் கவனமாக நோட்டமிட்டபடியே திரிந்தோம். இரண்டோ மூன்றோ வாரங்களுக்கு முன்னர் ஒரு கொய்யா மரத்தையும் விடாமல் நாங்கள் மொட்டையடித்துவிட்ட சிமுரெங்கா தெருவின் வழியாகச் சென்றபோது, சிறகுகள் கொண்ட சிறுவனொருவன் சிறுநீர் கழிப்பதைப்போல வடிவமைக்கப்பட்டிருந்த சலவைக்கல் கொண்ட, க்ரீம் வண்ண வீட்டின் ஜன்னல்களின் வெண்ணிறத் திரைச்சீலைகளை விலக்கி முகமொன்று எங்களைப் பார்ப்பதைக் கண்டோம். அந்த முகம் அடுத்து என்ன செய்யப்போகிறதென்பதைப் பார்த்தபடி நாங்கள் அங்கேயே நின்றபோது ஜன்னல் திறந்துகொண்டது. உள்ளிருந்து வேடிக்கையான, மெல்லிய குரலொன்று எங்களை நிற்கும்படி உரக்கக் கூறியது. நாங்கள் அப்படியே நின்றோம். அந்தக் குரல் கூறியதால் அல்ல, எங்களில் எவருமே ஓடத்துவங்காததாலும் அது ஆபத்தான குரலாக தோன்றாததாலும்தான் நாங்கள் நின்றோம். ஜன்னல் வழியாகத் தெருவில் இசை வழிந்தது. அது க்வாய்டோ அல்ல, நடன அரங்கமல்ல, அது வீடுமல்ல. நாங்கள் அறிந்த எதுவாகவும் அது இருக்கவில்லை.

மெலிந்த உயரமான பெண்ணொருத்தி கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவள் ஏதோ பண்டத்தை தின்றுகொண்டிருந்ததுதான் எங்கள் கண்களில் முதலில் பட்டது. எங்களைப் பார்த்து கையசைத்தபடியே வந்தவள் மிக ஒல்லியாய் இருந்தாள். எனவே அவளைக் கண்டு நாங்கள் பயந்து ஓடத்தேவையில்லை. அவள் எதற்காய் சிரிக்கிறாள், எங்களிடம் எதைக் கண்டு சிரிக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள அங்கேயே நின்றோம். வாயிலின் அருகேயே அவள் நின்றுவிட்டாள்; அது பூட்டப்பட்டிருந்தது. அவள் சாவிகளை எடுத்துவரவில்லை.

“கடவுளே, இந்தக் கொடூரமான வெயிலையும் கரடுமுரடான நிலத்தையும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. எப்படித்தான் நீங்கள் இங்கு சமாளிக்கிறீர்களோ?” எனக் கேட்ட அவளது குரலில் ஆபத்தேதும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. சிரித்தபடியே தன் கையில் வைத்திருந்த அந்தப் பண்டத்தை ஒரு கடி கடித்துக்கொண்டாள். இளஞ்சிவப்பு நிறக் கேமரா ஒன்று அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த நீளமான பாவாடையின் கீழிருந்து எட்டிப்பார்த்த அவளுடைய பாதங்களையே நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். குழந்தையினுடையவை போல அவை அத்தனை சுத்தமாகவும் அழகாகவும் இருந்தன. ஊதாவண்ண நகப்பூச்சு பூசப்பட்டிருந்த கால் பெருவிரல்களை அசைத்தபடியே இருந்தாள். என் நினைவுதெரிந்து அவளுடையதைப் போன்று என் பாதங்கள் இருந்ததேயில்லை. நான் பிறந்தபோது வேண்டுமானால் அவை அவ்வாறு இருந்திருக்கலாம்.

அவளுடைய சிவந்த வாய் எதையோ மென்றுகொண்டிருந்தது. அவள் கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய கயிறுகளின் அசைவுகளையும், அவள் சப்புகொட்டி சுவைப்பதையும் கண்டபோது அவள் உண்ணும் அந்தப் பண்டம் நிச்சயம் மிகுந்த ருசியுடையதாகத்தான் இருக்க வேண்டுமென யூகித்தேன். அவளுடைய நீண்ட கைகளில் இருந்த அந்த உணவை உற்றுப்பார்த்தேன். தட்டையாக இருந்த அதன் வெளிப்புறம் மொறுமொறுப்பாக இருந்தது. க்ரீம் இருந்த அதன் மேற்பகுதி பஞ்சுபோல மென்மையாக இருந்தது. தீக்காயங்களின் ஆழ்ந்த இளஞ்சிவப்பு வண்ணத்தில் நாணயங்கள் போல் ஏதோ அதன் மேலே ஒட்டியிருந்தன. சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களில் அந்தப் பண்டத்தின் மீது எதுவோ தூவப்பட்டிருந்ததையும், முகப்பருக்களைப் போலே பழுப்புவண்ணப் புடைப்புகள் அதன்மீது இருந்ததையும் கண்டேன்.

சிபோ அதைச் சுட்டிக்காட்டி அது என்ன? எனக் கேட்பதுபோல காற்றில் கையை ஆட்டி, மறுகையால் தன் வயிறைத் தடவிக்கொண்டாள். அவள் கருவுற்றது முதலே இப்படித்தான் தன் வயிறை பொம்மைபோல நினைத்து விளையாடுகிறாள். தற்போது அவளுடைய வயிறு ஒரு கால்பந்தின் அளவிலேயே உள்ளது, அப்படியொன்றும் பெரிதாகவில்லை. அந்தப் பெண் என்ன பதிலளிக்கப் போகிறாள் என்பதையே எதிர்பார்த்து அவள் வாயையே நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். 

“ஓ, இதுவா? இது கேமரா,” என்றாள் அந்தப் பெண். அது கேமரா என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அது கேமரா என்பது இங்கிருக்கும் கல்லுக்குக் கூடத்தெரியும். அந்தப் பெண் கையை தன் பாவாடையில் துடைத்துக்கொண்டாள். கேமராவைத் தட்டியபடியே கதவின் அருகில் இருந்த குப்பைக்கூடையை நோக்கி மீதமிருந்த அந்தத் தின்பண்டத்தை விட்டெறிந்தாள். அது குறிதவறி கீழே விழுந்ததும் பைத்தியக்காரியைப் போல தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். அவளோடு சேர்ந்து நாங்கள் சிரிக்கவேண்டுமென எதிர்பார்த்து எங்களைப் பார்த்தாள். நாங்களோ செத்த பறவையைப் போல நிலம்மோதி கீழே விழுந்த அந்தப் பண்டம் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தோம். அது ஏதோ பெயர் தெரியாத பொருளாகவே இருந்தபோதும், எவரும் உணவுப்பொருளை வீசியெறிவதை நாங்கள் இதுவரை கண்டதேயில்லை. ஓடிச்சென்று அதை எடுத்துக்கொள்ள சிபோ விரும்புவதாகத் தோன்றியது. அந்தப் பெண் மெல்வதை நிறுத்தி உணவை விழுங்கினாள். நானும் அவளோடு சேர்ந்து விழுங்கினேன், தொண்டை கூசியது. 

ஏதோ இதற்கு முன்னர் கர்ப்பிணியைத் தன் வாழ்நாளில் பார்த்தேயிராதது போல் அப்பெண் சிபோவின் வயிறை உற்றுப்பார்த்தபடியே “உன் வயது என்ன?” எனக் கேட்டாள்.

“அவளுக்குப் பதினோரு வயதாகிறது” என சிபோவிற்கு பதிலாக காட்நோஸ் அப்பெண்ணிற்கு பதிலளித்தான். என்னையும் அவனையும் சுட்டிக்காட்டி “எங்கள் இருவருக்கும் பத்து வயதாகிறது, இரட்டையர்கள் போல” என்றான். “பாஸ்டர்டுக்கு பதினோரு வயதும், ஸ்போவிற்கு ஒன்பது வயதும் ஆகின்றது. ஸ்டினாவிற்கு பிறப்புச் சான்றிதழ் இல்லையாதலால் அவன் வயது எங்களுக்குத் தெரியவில்லை,” என்றான்.

“வாவ்,” என்றாள் அந்தப் பெண். நானும் வாவ் என்றேன். வாவ் வாவ் வாவ், ஆனால் என் மனதிற்குள்ளேயே கூறிக்கொண்டேன். இந்த வார்த்தையை இப்போதுதான் முதன்முறையாகக் கேட்கிறேன். அதற்கு என்ன அர்த்தமெனக் கண்டுபிடிக்க முயன்றேன். ஆனால் யோசித்து யோசித்து என் மூளை களைப்படைந்ததால் அம்முயற்சியைக் கைவிட்டேன்.

“உங்களுக்கு என்ன வயதாகிறது?” என காட்நோஸ் அப்பெண்ணைப் பார்த்துக் கேட்டான். “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” எனவும் கேட்டான். காட்நோசின் இந்த அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகளுக்காய் என்றேனும் ஒருநாள் அவன் அறைவாங்கக் கூடுமென நினைத்துக்கொண்டேன்.

“எனக்கா? எனக்கு முப்பத்து மூன்று வயதாகிறது. நான் லண்டனைச் சேர்ந்தவள். என் தந்தையின் நாட்டிற்கு நான் வருவது இதுவே முதன்முறை,” தன் கழுத்துச்சங்கிலியை முறுக்கியபடியே கூறினாள். பொன்னாலான சிறு ஆப்பிரிக்க வரைபடம் அந்தச் சங்கிலியில் தொங்கியது. 

“நான் லண்டனை அறிவேன். ஒருமுறை அங்கிருந்து கொடுத்தனுப்பப்பட்ட இனிப்புகளை உண்டிருக்கிறேன். முதலில் தித்திப்பாக இருந்து பிறகு புளிப்பாக மாறிவிடும் சுவைகொண்டவை. முதன்முதலாக லண்டன் சென்றபோது வுசா பெரியப்பா அவற்றை அனுப்பிவைத்தார். ஆனால் இது நிகழ்ந்தது நீண்ட காலத்திற்கு முன்பு. இப்போதெல்லாம் அவர் எதையுமே அனுப்புவதில்லை” என்றான் காட்நோஸ். இதைக் கூறியதும், அவனது பெரியப்பா பிளேனில் ஏறிவந்து அவனுக்கு இனிப்புகள் வழங்கவேண்டுமென எதிர்பார்ப்பதைப்போல காட்நோஸ் வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

“ஆனால் உங்களைப் பார்த்தால் பதினைந்து வயதுப் பெண் போல்தான் தோற்றமளிக்கிறீர்கள்,” என அப்பெண்ணைப் பார்த்து காட்நோஸ் கூறினான். இதைக் கேட்டதும் அப்பெண் அவன் வாயிலேயே அறையப் போகிறார் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவன் கூறியதொன்றும் அவமரியாதைக்குரியதல்ல என்பதுபோல் அப்பெண் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“நன்றி, இப்போதுதான் நான் இயேசுவின் உணவை உண்டுமுடித்து வந்தேன்,” என்று அவள் மகிழ்வுடன் கூறினாள். உடனே நான் அவளை உற்றுப் பார்த்தேன். “இதில் நன்றிகூற என்னவிருக்கிறது? ஆமாம், அதுவென்ன இயேசுவின் உணவு? நிஜ பிதாமகன் இயேசுவையா இப்பெண் குறிப்பிடுகிறார்?” போன்ற கேள்விகள் என்னுள் எழுந்தன.

எங்கள் அனைவரின் சிந்தனைகளிலும் இவள் விசித்திரமானவள் என ஓடிக்கொண்டிருந்ததை எங்களின் முகங்களிலிருந்தும் மௌனத்திலிருந்தும் அறிந்துகொண்டேன். அலங்கோலமாய்க் கிடந்த தன் பறட்டைக் கூந்தலுக்குள் அவள் கைகளை விட்டு அளைந்தாள். நான் மட்டும் பூடபெஸ்டில் வசிப்பவளாக இருந்திருந்தால், தினமும் சுத்தமாகக் குளித்து எனது கூந்தலைப் படிய வாரி, சிறந்ததொரு பகுதியில் வசிக்கும் சிறந்த பெண்ணாக என்னைக் காட்டிக்கொள்வேன். சிக்கும் சிடுக்குமாக, காட்டுத்தனமாகக் கிடந்த கூந்தலுடன், பூட்டிய கதவின் பின்னே அவள் நிற்பதைக் காண்கையில், கூண்டிலடைக்கப்பட்ட விலங்கொன்றைப் பார்ப்பதைப் போலவே இருந்தது. அந்தக் கதவைத் தாண்டிக்குதித்து அவள் எங்களை நோக்கி வந்துவிட்டால் என்ன செய்வதென யோசித்துக்கொண்டிருந்தேன். 

“உங்களையெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவா?” என அப்பெண் கேட்டாள். இதுவரை எதற்காகவும் பெரியவர்கள் எங்களிடம் அனுமதி கேட்டதில்லை என்பதால் நாங்கள் பதில்கூறாமலேயே நின்றோம். அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவளது முரட்டுக்கூந்தலையும் அவள் நடந்தபோது நிலத்தை தழுவிச்சென்ற நீளப்பாவாடையையும் அதனுள்ளிருந்து எட்டிப்பார்த்த அவளது அழகிய பாதங்களையும் பொன்னாலான ஆப்பிரிக்காவையும் அவளது பெரிய விழிகளையும் அவள் மனிதப் பிறவிதான் என நிரூபிக்கவல்ல சிறு தழும்புகூட இல்லாத அவளது மென்மையான சருமத்தையும் அவள் அணிந்திருந்த மூக்குத்தியையும் ‘தர்பரைக் காப்போம்’ என எழுதப்பட்டிருந்த அவளது டிசர்ட்டையுமே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“பிரமாதம், இப்போது அனைவரும் ஒன்றாக நெருங்கி நில்லுங்கள்,” என்றாள் அவள்.

“ஏய், நெட்டையானவனே, நீ பின்னால் போ. நீ, ஆமாம் உன்னைத்தான், ஏய் உன்னையும்தான், நீங்கள் இந்தப் பக்கம் வாருங்கள், இல்லையில்லை, உன்னைச் சொன்னேன், ஓட்டைப் பல்லா… உன்னைத்தான் சொல்கிறேன், என்னைப் பார்,” எனக் கூறிக்கொண்டே கம்பிகளைத் தாண்டி எங்களை நோக்கி கைகளை நீட்டினாள்.

“குட், குட், இப்போது சீஸ் எனக் கூறுங்கள், சீஸ், சீஸ், சீஈஈஈஈஈஸ்-” என அவள் எங்களுக்கு உற்சாகமூட்டியதும், நாங்கள் அனைவருமே சீஸ் என்றோம், சீஸ் என்றால் என்ன அர்த்தமென நான் தீவிரமாக யோசித்தபடி இருந்ததால் அதை நான் கூறவில்லை. ’டுடு’ என்ற பறவையின் கதையை நேற்று போன்சின் அம்மா எங்களுக்குக் கூறினார். தனக்கு அர்த்தம் தெரியாத புதிய பாடலொன்றை டுடு பாடியதாம். உடனே மக்கள் அதைப் பிடித்துக்கொன்று சமைத்துவிட்டனராம். ஏனெனில் தன்னைப் பிடித்துக் கொன்று சமைக்குமாறு வேண்டிக்கொள்ளும் பொருள்கொண்ட பாடலைத்தான் அப்பறவை பாடியதாம்.

அப்பெண் என்னைச் சுட்டிக்காட்டியபடியே சீஸ் எனச் சொல்லச் சொன்னாள். ஏதோ என்னையும் என் தாயையும் நன்கு அறிந்திருந்தவளைப் போல அவள் என்னைப் பார்த்து அத்தனை அன்னியோன்யமாகச் சிரித்ததால், நானும் சீஸ் எனக் கூறினேன். முதலில் மெதுவாகக் கூறினேன், பின்னர் சீஸ், சீஸ் என்றேன், தொடர்ந்து சீஸ் சீஈஈஈஈஈஸ் என்றேன், என்னோடு சேர்ந்து அனைவரும் சீஸ் சீஸ் சீஸ் என ராகம் போடத் துவங்கினர். கேமரா கிளிக் கிளிக் கிளிக்கென எங்களைப் படமெடுத்தபடியே இருந்தது. எப்போதும் அமைதியாகவே இருக்கும் ஸ்டினா அங்கிருந்து கிளம்பினான். புகைப்படமெடுத்துக்கொண்டிருந்த அப்பெண், “ஏய், எங்கே போகிறாய்?” எனக் கேட்டாள். ஆனால் அவன் அதைக்கேட்டு நிற்கவுமில்லை, அவளைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. ஸ்டினாவைத் தொடர்ந்து சிபோவும் அங்கிருந்து கிளம்பினாள். நாங்களும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம்.

நாங்கள் செல்வதையும் அப்பெண் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாள். விக்டோரியா சந்திக்கு வந்தபோது பாஸ்டர்ட் நின்று, அப்பெண்ணைத் திரும்பிப் பார்த்து வசைபாடினான். எங்களுக்கு வேண்டுமா என்றுகூடக் கேட்காமல் அந்தத் தின்பண்டத்தை அப்பெண் வீசியெறிந்தது அப்போது நினைவிற்கு வர நானும் அவளைப் பார்த்துக் கத்தினேன். மற்றவர்களும் எங்களோடு சேர்ந்துகொண்டு கத்தினர். கத்தினோம், கத்தினோம், கத்திக்கொண்டே இருந்தோம். அவள் சாப்பிட்ட அந்தப் பண்டம் எங்களுக்கும் வேண்டும். எங்கள் குரல் உரத்து ஒலிப்பதை நாங்கள் கேட்க வேண்டும். எங்கள் பசி மறைய வேண்டும். இதற்கு முன்னர் எவருமே அவளைப் பார்த்து கத்தியதில்லை போலிருக்கிறது. எங்களைக் குழப்பத்துடன் பார்த்துவிட்டு விரைவாகத் திரும்பி வீட்டிற்குள் சென்றுவிட்டாள். நாங்களோ தொடர்ந்து அவளைப் பார்த்துக் கத்திக்கொண்டே இருந்தோம். எங்கள் தொண்டைக்குழிக்குள் இரத்தம் கசிந்து கூசும்வரை கத்திக்கொண்டே இருந்தோம்.

நாங்கள் பெரியவர்களானதும் கொய்யாக்கள் திருடுவதை நிறுத்திவிட்டு வீடுபுகுந்து அங்கிருக்கும் விலைமதிப்புள்ள பொருட்களைத் திருட வேண்டுமென பாஸ்டர்ட் கூறினான். அவன் கூறியதை நான் பொருட்படுத்தவேயில்லை. ஏனெனில் பெரியவளானதும் நான் அங்கு இருக்கப் போவதில்லை. என் அத்தை போஸ்தலினாவுடன் அப்போது நான் அமெரிக்காவில் இருப்பேன். சிறந்த உணவை உண்டபடி, திருட்டை விடவும் சிறந்ததொரு தொழிலைச் செய்துகொண்டிருப்பேன். ஆனால் இப்போது எனக்கு கொய்யாக்கள் வேண்டும். ராபர்ட் தெருவில் மலைபோல் இருந்த பெரிய வெண்ணிற வீட்டை நோக்கிச் சென்றோம். பெரிய பெரிய ஜன்னல்களும் மின்னிடும் பொருட்களும் கொண்டிருந்த அவ்வீட்டின் முன்னே சிவப்புநிற நீச்சல் குளமொன்று இருந்தது. அக்குளத்தைச் சுற்றிலும் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்த அனைத்துமே அழகாக இருந்தன. ஆனால் அந்த அழகைப் பார்த்து இரசித்துக்கொண்டே இருக்கலாமே தவிர அதனுடன் வாழ முடியாது.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் கொல்லைப்புறத்தில்தான் வீடு அமைந்திருந்தது. நாங்கள் வருவதையறிந்து எங்களைச் சந்திக்க ஓடோடி வந்ததைப் போல கொய்யாக்கள் முற்பகுதியில் காய்த்து தொங்கிக்கொண்டிருந்தன. சுற்றுச்சுவர் மேல் தாவியேறி, மரத்தை அடைந்து, கொய்யாக்களை விரைவாகப் பறித்துப்போட்டு எங்கள் பிளாஸ்டிக் பைகளை நிரப்பிக்கொண்டோம். இன்று எங்களுக்கு காளை கொய்யாக்கள் கிடைத்துள்ளன. இவை ஆணொருவனின் மடக்கிய முஷ்டியளவுப் பெரிதாக இருக்கும். மற்ற கொய்யாக்களைப் போல இவை பழுத்து மஞ்சளாவதில்லை. வெளிப்புறத்தில் பச்சையாகவும் உட்புறத்தில் பஞ்சுபோன்ற மென்மையுடன் இளஞ்சிவப்பாகவும் இருக்கும் இக்கொய்யாக்களின் ருசியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

பாரடைஸில் நாங்கள் ஓடுவதேயில்லை. பூடபெஸ்டும் இப்போது எங்கள் நாடுதான் என்பதைப் போலவும், நாங்கள்தான் அதை உருவாக்கியவர்களே என்பதைப் போலவும் சாவகாசமாக நடந்தோம். கொய்யாக்களைக் கடித்து அதன் தோல்களை வழியெங்கும் துப்பி அசுத்தம் செய்தபடியே நடந்தோம். அப்போது சிபோ வாயிலெடுத்தாள். எனவே தெருமுனையில் நின்றோம். எதையாவது உண்டாலே அவள் வாயிலெடுத்துவிடுகிறாள். இன்று அவள் வாயிலெடுத்தது சிறுநீரைப் போலிருந்தது. அதை மண்போட்டு மூடாமல் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

நன்கு பழுத்த கொய்யாவைக் கடித்தபடியே, “ஒருநாள் நான் இதே போன்ற வீட்டில் இங்கு வாழ்வேன்,” என ஸ்போ கூறினாள். நீண்ட படிக்கட்டுகளும் சுற்றிலும் மலர்களும் கொண்ட பெரிய நீலநிற வீட்டைக் காட்டியபடியே கூறினாள். அழகான வீடுதான். ஆனால் இந்த கொய்யாக்களை நாங்கள் திருடிய வீட்டின் அளவிற்கு இதுவொன்றும் அழகாயில்லை. ஸ்போவின் குரல் அழுத்தமாக ஒலித்ததில் இருந்து அவள் அதை விளையாட்டாக கூறவில்லை என அறிந்துகொண்டோம். கன்னங்கள் உப்பிட, அவள் மெல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதை விழுங்கிவிட்டு மீதமிருந்த கொய்யாவின் தோலை பற்களால் கடித்திழுத்தாள். 

“எப்படி அதைச் செய்வாய்?” எனக் கேட்டேன். ஸ்போ தோலைத் துப்பிவிட்டு, தன் பெரிய கண்கள் விரிய, “அதை எப்படிச் செய்வதென எனக்குத் தெரியும்,” என்றாள்.

“கனவில்தான் அவளால் அதைச் செய்ய முடியும்,” என வானைப் பார்த்துக் கூறிய பாஸ்டர்ட், ஸ்போ குறிப்பிட்ட வீட்டின் சுற்றுச்சுவர் மீது கொய்யாவொன்றை வீசியெறிந்தான். சுவரில் பட்டுத்தெறித்த கொய்யா அங்கு கறையை உண்டாக்கியது. நல்ல இனிப்பான கொய்யாவொன்றைக் கடித்தேன.காளை கொய்யாவின் விதைகளை நான் மெல்வதில்லை. அவை மிகக்கடினமாக இருப்பதோடு, அவற்றை மென்று உண்ண நீண்டநேரம் ஆகுமென்பதால் மிக இலேசாக மெல்லுவேன் அல்லது அப்படியே விதைகளை முழுதாக விழுங்கிவிடுவேன். அப்படிச் செய்தால் பிறகு மலங்கழிக்கும்போது என்னவாகும் எனத் தெரிந்தேதான் அதைச் செய்தேன்.

தனது வீட்டின் சுற்றுச்சுவரில் கறைபடித்துவிட்டதைக் கண்ட ஸ்போ, ‘ஏன்டா இப்படிச் செய்தாய்?’ என பாஸ்டர்டை பார்த்துக் கேட்டாள். அப்போது அவள் முகம் நிஜப்பெண்ணைப் போலவே அகோரமாக மாறியது.

“ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்டேன்!” என்ற ஸ்போவின் குரலில் அனல் தெறித்தது. ஆத்திரத்தில் அவள் பாஸ்டர்டை அடித்துவிடுவாளோ எனத் தோன்றியது. ஆனால் அவளால் அது முடியாது. ஏனெனில் பாஸ்டர்ட் அவளை விடப் பெரியவனாக, வலுவானவனாக இருந்தான். அனைத்திற்கும் மேலாக அவனொரு ஆண். அவன் ஸ்போவை முன்னர் அடித்திருக்கிறான். என்னை, சிபோவை, காட்நோசையும்கூட அடித்திருக்கிறான். ஸ்டினாவைத் தவிர அவன் எங்கள் அனைவரையுமே அடித்திருக்கிறான்.

“ஏனெனில் என்னால் அது முடியும், கோணக்காலே! இதில் உனக்கென்ன வந்தது?” என பாஸ்டர்ட் கேட்டான்.

“ஏனென்றால், அந்த வீட்டை எனக்குப் பிடித்திருக்கிறது எனத் தெரிந்துகொண்ட பின்னரும் இதை நீ செய்திருக்கக்கூடாது. நான் விரும்பாத எத்தனையோ வீடுகள் இங்கிருக்கின்றன. அவற்றிலொன்றின் மீது நீ இதை வீசியிருக்கலாமே!” என ஸ்போ கூறினாள்.

“அதுசரி, நீ விரும்பியதாலேயே அதுவொன்றும் உன் வீடு ஆகிவிடாது!” என்ற பாஸ்டர்ட் கருநிற ட்ராக்ஸ் பேண்ட்டும், வெளிரிய ஆரஞ்சுவண்ண டிசர்ட்டும் அணிந்திருந்தான். அதன் மீது ‘கர்னல்’ என எழுதியிருந்தது. அந்தச் சட்டையைக் கழற்றி தன் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டான். அது அவனை அழகாகக் காட்டியதா அசிங்கமாகக் காட்டியதா எனத் தெரியவில்லை. அதை அணிந்துகொண்டதும் அவன் ஆண்போல் தோன்றினானா பெண் போல் தோன்றினானா எனவும் எனக்குத் தெரியவில்லை. அவன் நடப்பதை நிறுத்திவிட்டு, ஸ்போவை நோக்கி திரும்பிவந்தான். அவனுடன் சண்டையிடுபவர்கள் அவனை நேருக்கு நேராகச் சந்திக்கவேண்டுமென அவன் எப்போதுமே விரும்புவான். 

“பூடபெஸ்ட் ஒன்றும் பாரடைஸைப் போலில்லை. யார் வேண்டுமானாலும் நுழைந்துவிடக்கூடிய பொதுக்கழிவறையல்ல பூடபெஸ்ட். உன்னால் இங்கு வசிக்கவே முடியாது” எனக் கூறினான்.

“பூடபெஸ்டைச் சேர்ந்த ஆணொருவனைத்தான் நான் மணந்துகொள்ளப் போகிறேன். அவன் என்னைப் பாரடைஸில் இருந்து மீட்பான். அந்தக் குடிசைகளில் இருந்து, ஹெவன்வேயில் இருந்து, பாம்பேகியில் இருந்து, அனைத்திலிருந்தும் அவன் என்னை மீட்டுவிடுவான்,” என்றாள் ஸ்போ.

“ஹா ஹா, ஓட்டைப்பல்லி… உன்னை எவனாவது மணந்துகொள்வானா? நானே கூட உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன்,” என காட்நோஸ் தனது எலும்புகள் துருத்திய தோள்களைக் குலுக்கியபடி கூறினான். அவனும், சிபோவும், ஸ்டினாவும் எங்களுக்கு முன்னே சென்றனர். காட்நோஸ் அணிந்திருந்த அரைக்காற்சட்டையைப் பார்த்தேன். பின்பக்கம் கிழிந்திருந்த ஓட்டை வழியாக அவனது புட்டம் தெரிந்தது. அழுக்கு வெள்ளைத் துணிக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் விசித்திரக் கண்கள் போல அது தோன்றியது.

“நானொன்றும் உன்னுடன் பேசவில்லை, வெடித்த புட்டமே!” ஸ்போ காட்நோசைப் பார்த்துக் கத்தினாள். “எனது பற்கள் வளர்ந்துவிடும். நான் மேலும் அழகாகிவிடுவேன் என என் அம்மா கூறியிருக்கிறார்!” என்றாள்.

காட்நோஸ் தன் கைகளை ஆட்டி, “எனக்கென்ன வந்தது!” என்பது போல் சைகை செய்தான். ஏனெனில் அவளுக்கு அவனால் பதிலளிக்க முடியவில்லை. ஸ்போ அழகானவள், எங்கள் அனைவரையும்விட அழகானவள், பாரடைஸில் இருக்கும் அனைத்து சிறுமிகளை விடவும் அவள் அழகானவள் என்பதை அங்கிருக்கும் கற்கள்கூட அறிந்திருந்தன. அதை நாங்கள் அறியாததைப் போல சில சமயங்களில் அவள் பேசும்போதெல்லாம் அவளுடன் விளையாட நாங்கள் மறுத்த சம்பவங்களுமுண்டு.

“போகட்டும், எனக்குக் கவலையில்லை. பொதுக்கழிவறை போன்ற இந்நாட்டைவிட்டு எப்படியும் நானாகவே வெளியேறத்தான் போகிறேன். பிறகு கைநிறைய பணம் சம்பாதித்துவிட்டுத் திரும்பிவந்து இதே பூடபெஸ்டில் வீட்டை வாங்குவேன் அல்லது பல வீடுகளை வாங்குவேன்– பூடபெஸ்டில் ஒன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் ஒன்று, பாரீஸில் ஒன்று வாங்குவேன். எனக்குத் தோன்றுமிடங்களிலெல்லாம் வாங்குவேன்,” என பாஸ்டர்ட் கூறினான்.

“நாம் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பணம் சம்பாதிக்க படிப்பு வேண்டுமென என் ஆசிரியர் மிஸ்டர். கோனோ கூறினார்,” என பாஸ்டர்டைப் பார்த்து ஸ்டினா கூறினான். “இப்போதோ நாம் பள்ளிக்கே செல்லாத சூழலில், எப்படி நீ சம்பாதிப்பாய்?” என்றும் அவன் கேட்டான். ஸ்டினா நிறைய பேசமாட்டான். எனவே அவன் வாயைத் திறந்தாலே அது ஏதேனும் முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.

“பணம் சம்பாதிக்க எனக்கு எந்தக் கழிவறைப் பள்ளிக்கூடமும் தேவையில்லை, ஆட்டுப்பல்லே!” என்றான் பாஸ்டர்ட்.

ஸ்டினாவின் மூக்கைக் கடித்துத் துப்பிவிடுவதைப் போல அவன் தன் முகத்தை அருகில் கொண்டு சென்றான். ஸ்டினா விரும்பினால் பாஸ்டர்டுடன் சண்டை போடலாம்தான். ஆனால் அவன் பாஸ்டர்டை விட்டேத்தியாகப் பார்த்துவிட்டு தன் கையில் மீதமிருந்த கொய்யாவை மென்றான். எங்களிடமிருந்து விலகி வேகமாக முன்னே செல்லத் துவங்கினான்.

“எனது அத்தை போஸ்தலினாவோடு சேர்ந்து வாழ்வதற்கு கூடிய விரைவிலேயே நான் அமெரிக்காவிற்குச் சென்றுவிடுவேன். அதையும் நீ பார்க்கத்தான் போகிறாய்,” என அனைவருக்கும் கேட்கும்படி உரக்கக் கூறினேன். கூறியதும், புத்தம்புதிய கொய்யாவொன்றை கொறிக்கத் துவங்கினேன். வெறும் மூன்றே கடிகளில் கொய்யா முழுவதையும் தீர்த்துவிட்டேன். அத்தனை இனிப்பாய் இருந்தது அந்தக் கொய்யா. அதன் விதைகளை மெல்லாமலேயே விழுங்கிவிட்டேன்.

“அமெரிக்கா வெகு தொலைவில் இருக்கிறது, குள்ளச்சியே!” என்றான் பாஸ்டர்ட். “விமானம் மூலமாய் போகக்கூடிய எந்தவொரு இடத்திற்கும் நான் போகமாட்டேன். அங்கு சென்று சேர்ந்தபிறகு, அதுவொரு கேடுகெட்ட இடமெனத் தெரியவந்தால் நான் அங்கேயே சிக்கிக்கொள்ள வேண்டியிருக்குமே, எப்படி திரும்பிவருவேன்? நான் ஜோகன்னஸ்பர்க் செல்லப்போகிறேன். அங்கு ஏதேனும் பிரச்சினை வந்தால், உடனே எவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் நான்பாட்டிற்கு சாலை மார்க்கமாக நடந்து வந்துவிடுவேன். திரும்பி வரக்கூடிய இடங்களுக்குதான் நாம் செல்ல வேண்டும்,” என்றான்.

பாஸ்டர்டுக்கு என்ன பதிலளிப்பது என எண்ணியபடியே அவனைப் பார்த்தேன். ஈறுகளுக்கும் கடைவாய்ப் பல்லுக்கும் இடையே சிக்கிக்கொண்ட கொய்யா விதையொன்றை என் நாவால் நெம்பி எடுக்க முயன்றேன். கடைசியாக விரலால் அதை எடுத்தேன். அதன் சுவை காதுக்குரும்பி போலிருந்தது.

“அமெரிக்கா தொலைவில் இருப்பது உண்மைதான். நீ விமானத்தில் பயணிக்கும்போது விமானத்திற்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வாய்? தீவிரவாதிகள் இருந்தால் என்னாவது?” என பாஸ்டர்டுக்கு ஆதரவாக காட்நோசும் கேட்டான்.

சப்பை மூஞ்சியும் எட்டிப்பார்க்கும் புட்டமும் கொண்ட அந்த காட்நோஸ் கோரமுகன் பாஸ்டர்டை குளிர்விக்கவே அவ்வாறு கூறுகிறான் என நினைத்துக்கொண்டேன். கண்களால் காட்நோசுக்கு பதிலளித்துவிட்டு புதிய கொய்யாவொன்றை ருசிக்கத் துவங்கினேன்.

“அதைப்பற்றி எனக்கென்ன கவலை, நான் போகிறேன்,” எனக் கூறிவிட்டு, சிபோவுடனும் ஸ்டினாவுடனும் சேர்ந்துகொள்ள விரைந்தேன். பாஸ்டர்டும் காட்நோசும் சேர்ந்து இதுபோல் என்மேல் பாய்ந்தால் அந்த உரையாடல் எங்கு சென்று முடியுமென்பதை நானறிவேன்.

“சரி சரி, போ, அமெரிக்காவிற்குப் போய் மருத்துவமனைகளில் ஆயம்மாவாக வேலை செய். அதைத்தான் உன் அத்தை போஸ்தலினாவும் அங்கு செய்கிறாள் என எங்களுக்குத் தெரியும். உடல்நலமற்று படுத்தபடுக்கையாகக் கிடக்கும் ஏதோவொரு கிழவனுக்கு இந்நேரம் உன் அத்தை மலம் துடைத்து விட்டுக்கொண்டிருப்பாள். எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்துக்கொண்டாயோ?” என பாஸ்டர்ட் என்னைப் பார்த்துக் கத்தினான். நான் திரும்பிப்பாராமல் நடந்தேன்.

எனது அத்தை போஸ்தலினாவையும் என் அமெரிக்காவையும் அவன் தூற்றியதற்காக, எனக்கு மட்டும் உறுதியான உடலிருந்திருந்தால், திரும்பிச்சென்று பாஸ்டர்டை நையப் புடைத்திருப்பேன். அவனை அறைந்திருப்பேன், அவனது பெருத்த முன்னெற்றியை இடித்துத்தள்ளி அவனது வாயில் என் முஷ்டியால் ஒரு குத்துவிட்டு, அவன் பல்லைப் பெயர்த்திருப்பேன், அவன் உண்ட கொய்யாக்களையெல்லாம் வாயிலெடுக்கும்வரை அவன் வயிற்றில் குத்தியிருப்பேன். அவனைத் தரையில் தள்ளி, என் கால்முட்டியை அவன் முதுகில் குத்திவைத்து அழுத்தி, அவன் கைகளைப் பின்னால் வளைத்து, தன்னை விட்டுவிடுமாறு அவன் கெஞ்சும்வரை அவன் தலைமுடியைப் பற்றி அவன் தலையைப் பின்புறமாய் இழுப்பேன். இதையெல்லாம் நான் செய்ய விரும்பினேன். ஆனால் ஏதும் செய்யாமல் வெறுமனே நடந்தேன். பொறாமையால்தான் அவன் இதைக் கூறுகிறான் என அறிவேன். அத்தை போஸ்தலினா அவனுக்கு அத்தையல்ல என்பதால் அப்படிக் கூறுகிறான். அவன் பாஸ்டர்ட் அப்படித்தான் பேசுவான். நானோ டார்லிங். 

பாரடைஸுக்கு நாங்கள் சென்று சேர்வதற்குள்ளாக அனைத்து கொய்யாக்களையும் தின்று தீர்த்துவிட்டோம். எங்கள் வயிறுகள் புடைத்துக்கொண்டிருந்தன. கஷ்டப்பட்டு நடந்தோம். நிறைய உண்டுவிட்டதால் மலம் கழிக்க புதர்பக்கமாக ஒதுங்கினோம். இருட்டுவதற்கு முன்னரே இதைச் செய்துவிடுவதுதான் உசிதமானது. இருட்டிவிட்டால் யாரும் நமக்குத் துணையாக வரமாட்டார்கள். இருட்டிய பிறகு தனியாகச் செல்வது பீதியளிக்கும். ஏனெனில் ஹெவன்வேயின் கல்லறைத் தோட்டத்தைக் கடந்துதான் புதருக்குச் செல்லவேண்டுமென்பதால், வழியில் பேயைச் சந்திக்க நேரிட்டுவிடலாம். கடந்த மாதம் இறந்துபோன மோசஸின் தந்தையார், மஞ்சள்நிற பார்சிலோனா கால்பந்து ஜெர்சியை அணிந்தபடி, இரவுகளில் பாரடைஸைச் சுற்றிவருவதாகவும் ஒரு பேச்சிருக்கிறது.

ஆளாளுக்கு எங்களுக்கென இடம்பிடித்துக்கொண்டோம். ஒரு பாறையின் பின்னே நான் குந்திக்கொண்டேன். கொய்யாக்கள் உண்பதில் பெருஞ்சிக்கலே இதுதான். அதிகளவில் அவற்றை உண்ணும்போது விதைகளெல்லாம் சேர்ந்து அடைத்துக்கொண்டு மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். யாருமே அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரியும், எங்கள் அனைவருக்குமே மலச்சிக்கல் உண்டாகியிருந்தது. எவருமே பேசவில்லை, எழுந்துசெல்ல முயலவுமில்லை என்பதில் இருந்து இது நிரூபணமாகியது. எங்கள் பசியைக் கொல்வதற்கான ஒரே வழி அதுதான் என்பதாலேயே நாங்கள் அதிகளவு கொய்யாக்கள் உண்கிறோம். ஆனால் மலம் கழிக்கும்போதோ ஒரு நாட்டையே பிரசவித்து வெளித்தள்ளுவதைப் போல வலியுடன் போராடுகிறோம்.

வெவ்வேறு பகுதிகளில் நாங்கள் குந்தி அமர்ந்திருந்தோம். வலியை விரட்ட என் தொடைகளில் முஷ்டியால் நான் ஓங்கிக் குத்திக்கொண்டிருந்த போதுதான் யாரோ அலறும் சத்தம் கேட்டது. மிகக் கஷ்டப்பட்டு முக்கி, கொய்யா விதைகள் ஆசனவாயைக் கிழித்துக்கொண்டு வரும்போது எழும் அலறலைப் போலில்லை அது. ‘இங்கே வந்து பாருங்களேன்’ என்பதைப் போலிருந்தது. எனவே முக்குவதை நிறுத்திவிட்டு என் காற்சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு பாறையை விட்டு வெளியே வந்தேன். குத்தவைத்து அமர்ந்தபடி இருந்த சிபோதான் அலறினாள். புதருக்குள் எதையோ நோக்கிக் கைகாட்டினாள். அங்கிருந்த மரத்தில் விசித்திரப் பழம் போலொன்று நெட்டையாய் தொங்கிக்கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தபோது அது பொருளல்ல மனிதரெனத் தெரிந்தது. மேலும் உற்று பார்த்தபோது அதுவொரு பெண்ணுடல் எனத் தெரிந்துகொண்டோம்.

“அது என்னது?” என எங்களில் யாரோ கிசுகிசுப்பாய் கேட்டார்கள். அது என்னவென்பதை நாங்கள் கண்முன்னே பார்த்துக்கொண்டிருந்ததால் யாருமே பதிலளிக்கவில்லை. மரத்தின் உயரக்கிளையில் இருந்து தொங்கிய பச்சைவண்ணக் கயிற்றில் ஒல்லிப்பெண்ணின் உடல் ஊசலாடியது. மர இலைகளின் ஊடாகப் பொழிந்த சிவந்த சூரியவொளி அங்கிருந்த அனைத்திற்கும் விசித்திர வண்ணமூட்டியது. அனைத்துமே அழகாய் மிளிர்ந்தன. அப்பெண்ணின் வெளிரிய சருமமும்கூட மின்னியது. எனினும் அங்கிருந்த அனைத்துமே திகிலூட்டின. எனக்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் தனியாக ஓடவும் முடியவில்லை.

அந்தப் பெண்ணின் மெலிந்த கரங்கள் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருந்தன. அவளது கால்களும் பாதமும் நிலத்தை நோக்கியிருந்தன. அனைத்துமே நேராக இருந்தன. காற்றில் வரையப்பட்ட நேர்க்கோடு போல் அவள் தோன்றினாள். அவளுடைய விழிகள்தான் மிகுந்த திகிலூட்டின. முழுக்க வெண்மையாக இருந்த அவை வெளியே பிதுங்கி வந்துவிடுவதைப் போலத் தோன்றின. அவள் எதையோ சொல்ல வாயெடுத்துப் பாதியிலேயே நிறுத்திவிட்டாற்போல பெரிய ‘O’ போல அவள் வாய் திறந்துகிடந்தது. மஞ்சள்நிற ஆடை அணிந்திருந்தாள். அவளது சிவப்புநிற ஷூக்களை புற்கள் தடவிக்கொண்டிருந்தன. அவளையே வெறித்தபடி அங்கேயே நின்றிருந்தோம்.

“வாருங்கள், ஓடிவிடுவோம்!” என ஸ்டினா கூறியதும், நான் ஓடத் துவங்கினேன்.

“அவள் தூக்கிட்டு இறந்துவிட்டாள். உங்களுக்கு அது தெரியவில்லையா?” என்றபடியே ஒரு கல்லை அந்த உடல் மேல் பாஸ்டர்ட் விட்டெறிந்தான். அது அந்தப் பெண்ணின் தொடையில் பட்டது. ஏதேனும் நடக்கக்கூடுமென எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. அந்தப் பெண் அசையவில்லை, அவள் ஆடை மட்டுமே அசைந்தது. குழந்தை தேவதையொன்று அவ்வுடலைத் தள்ளிவிட்டு விளையாடுவதைப் போல அது காற்றில் மெல்ல அசைந்தது.

“பார்த்தீர்களா, அவள் இறந்துவிட்டாள் எனச் சொன்னேன் அல்லவா!” என்றான் பாஸ்டர்ட். எங்களுக்கெல்லாம் அவனே தலைவன் என உணர்த்தும்படி பேசும்போதெல்லாம் அவன் உபயோகிக்கும் அதே குரலிலேயே இதையும் கூறினான்.

“இதற்காய் கடவுள் உன்னைத் தண்டிப்பார்” என காட்நோஸ் கூறினான். மற்றொரு கல்லை எடுத்து பாஸ்டர்ட் வீசினான். அது அந்தப் பெண்ணின் காலின்மீதுபட்டது. அப்போதும் அவள் அசையவில்லை. உடைந்த பொம்மைபோல அவள் தொங்கிக்கொண்டிருந்தாள். எனக்கு பயமாக இருந்தது. வெளிறிப்போய் பிதுங்கிக்கொண்டிருந்த விழிகளின் ஓரத்தில் அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போலிருந்தது. நான் ஏதேனும் செய்யவேண்டி அவள் காத்திருப்பதைப் போல அப்பார்வை இருந்தது. ஆனால் என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை.

“கடவுள் இங்கு வாழவில்லை, முட்டாளே,” என பாஸ்டர்ட் கூறினான். அவன் மீண்டும் கல்லை விட்டெறிந்தான். அது அந்தப் பெண்ணின் உடையை மட்டும் உரசிச் சென்றது. அவனது குறி தவறியதைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தேன்.

“நான் சென்று என் தாயிடம் இதைக் கூறப்போகிறேன்,” எனக் கூறிய ஸ்போவின் குரல் அவள் எந்நேரத்திலும் உடைந்து அழுதுவிடுவாள் என்பதைப் போல ஒலித்தது. ஸ்டினா அங்கிருந்து கிளம்பினான். சிபோவும் ஸ்போவும் காட்நோசும் நானும் அவளைப் பின்தொடர்ந்து சென்றோம். பாஸ்டர்ட் மட்டும் அங்கேயே சிறிதுநேரம் நின்றுகொண்டிருந்தான். ஆனால் நான் திரும்பி பார்த்தபோது அவனும் எங்களின் பின்னால் வந்துகொண்டிருந்தான். பயமில்லாதவனைப் போலத் தன்னைக் காட்டிக்கொள்ள அவன் முயன்றாலும், அந்தப் பெண்ணுடலோடு அவன் மட்டும் புதருக்குள் தனியாக இருக்கமாட்டான் என அறிந்தே இருந்தேன். நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பாஸ்டர்ட் திடீரென எங்கள் முன்னால் வந்து எங்களைத் தடுத்து நிறுத்தினான்.

“இருங்கள், உங்களில் யாருக்கு நல்ல ரொட்டி வேண்டும்?” கர்னல் டிசர்ட்டை தலையைச் சுற்றி இறுக்கியபடியே, புன்னகையுடன் எங்களைப் பார்த்துக் கேட்டான். அவனது இடது மார்பின் கீழேயிருந்த காயத்தையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். கொய்யாவின் உட்பகுதியைப் போல அது இளஞ்சிவப்பாக இருந்தது.

“எங்கே இருக்கிறது ரொட்டி?” எனக் கேட்டேன்.

“அங்கே பாருங்கள், அந்தப் பெண்ணின் ஷூக்கள் புத்தம்புதியவையாக இருப்பதைக் கவனித்தீர்களா? அவற்றைக் கொண்டுபோய் விற்றால் கிடைக்கும் பணத்தில் ஒன்றோ, ஒன்றரையோ முழு ரொட்டிகளை வாங்கலாம்.”

நாங்கள் அனைவரும் திரும்பி பாஸ்டர்டைத் தொடர்ந்து மீண்டும் புதருக்குள் சென்றோம். லோபெல்ஸ் ரொட்டியின் வசீகர மணம் எங்களைச் சுற்றிலும் இப்போது கமழத் துவங்கியது. நாங்கள் விரைந்தோம், நாங்கள் ஓடினோம், சிரித்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே ஓடினோம்.

*

ஆசிரியர் குறிப்பு: நோவயலட் புலவாயோ: (10, திசம்பர், 1981)

ஸிம்பாப்வேவைச் சேர்ந்தவரான நோவயலட் புலவாயோ (Noviolet Bulawayo) ஆப்பிரிக்காவின் முன்னணி 100 எழுத்தாளர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார். “We Need New Names” எனும் புகழ்பெற்ற நாவலின் ஆசிரியர். முதன்முதலாக தன் பாட்டி தனக்குக் கூறிய கதைகளைக் கேட்டே வளர்ந்த நோவயலட்டினுள் கதைகள் எழுத வேண்டுமெனும் எண்ணத்தைத் தூண்டியவர் அவரே. படிப்பதில் மிகுந்த ஆர்வம்கொண்ட நோவயலட் சிறுவயதில் புத்தகங்களைத் திருடிப் படித்திருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறார். புத்தகங்கள் மீதான இந்தத் தீராத தாகமே அவரை ஆப்பிரிக்காவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது எனலாம். PEN/Hemingway Award, Guardian First Book Award ஆகிய விருதுகளை வென்றுள்ள நோவயலட் புக்கர் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

https://www.afroellemagazine.com/wp-content/uploads/2016/08/Picture3y-990x500.png

“பூடபெஸ்டை அடைதல்” எனும் இச்சிறுகதையில் நோவயலட் தனது கதாபாத்திரங்களுக்கும் இடங்களுக்கும் சூட்டியிருக்கும் பெயர்கள் துவங்கி நாட்டின் குரூர நிஜம் நம் முகத்தில் அறைகிறது. ஒரு சிறுமி சர்வசாதாரணமாக வன்புணரப்படும் சூழல் நிலவும் அதே நாட்டில்தான் ஆப்பிரிக்க வரைபடத்தைப் பொன்னால் செய்து கழுத்துச் சங்கிலியில் மாட்டிக்கொள்ளும் மேட்டிமையும் இருக்கிறது என்கிறார் நோவயலட். வயிறார உண்ண, நல்ல உடை உடுத்த, தனக்கென வீடு என ஒன்றைக் கட்டிக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுதான் உழைக்கவேண்டும், சொந்த மண்ணில் அதற்கான வாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு இல்லை என்கிறார். வெளிநாட்டுக்குச் சென்றாலும் அங்கு அவர்களுக்குக் காத்திருப்பதும் வெகு சாதாரண, கீழ்நிலை பணிகளே என்பதையும் சொல்லத் தவறவில்லை. ஆப்பிரிக்காவின் அவலநிலையை, அங்கு பிறந்து வளரும் குழந்தைகளின் மனநிலையை வெகு இயல்பாக, அழுத்தமாக இக்கதையில் நோவயலட் பதிந்துள்ளார்.

*

ஆங்கில மூலம்: Hitting Budapest