மௌனத்திற்குத் திரும்புதல் – Everlasting Moments (2008)
சுவீடன் தேசத்து இயக்குநர் யான் ட்ரோவெலுக்கு (Jan Troell) வாழ்வு சாசுவதமானது எனும் நம்பிக்கையின் மீது அதீத பற்று உண்டு. ஆகாசத்திற்கு விரையும் ஊஞ்சல் ஆடி ஓயும் கணத்திற்காக காத்திருப்பவர். வண்டி எதிர்நோக்கிச் செல்லும் பாதையைப் போலவே அது சேறில் பதித்துச்சென்ற தடங்களும் அவருக்கு அத்தியாவசியமானவை. சாதாரண மனிதர்களின் சாகசமற்ற வாழ்க்கையைத் துழாவி காவியப் பரிமாணங்களைக் கண்டடைபவர்.
தீர்மானமாக ஒன்றைக் காட்டிவிட வேண்டும் என்ற கட்டுப்பெட்டித்தனமான எண்ணம் ஏதும் இல்லாததாலேயே ட்ரோவெலின் படங்கள் வாழ்வுக்கு அணுக்கமாகிவிடுகின்றன. பார்வையில் இடறுவது அத்தனையும் காட்சியில் வரட்டுமே என்கிறார். நிலைத்திருப்பதைக் காட்டிலும் அலைவுறுதலே போதையேற்றுவது அல்லவா? இவர் தனக்குக் கிட்டும் தருணங்களை எல்லாம் பந்தயப் பொருட்களாக்கி, வெல்வது நிச்சயமாகிவிட்ட நிதானத்துடன், பார்வையாளர் முன்னிலையில் சூதாடுகிறார். தம்மை ஒப்புக்கொடுத்துவிட்ட பாவனையில் கரித்துக் கொட்டியவாறே தருணங்கள் களைத்து நீண்டு கிடக்கின்றன. ஒளிர்ந்தும் மறைந்தும் குவிந்தும் சிதறியும் உணர்வுகளின் தீவிரம் துடிக்கிறது.

நம்பகத்தன்மை வாய்ந்த புறச்சூழலும் மிகையில்லாத உணர்ச்சிகளும் ட்ரோவெல் படங்களின் பொதுக்கூறுகள். ஓர் ஆவணப்படத்திற்கு அவசியப்படும் விரிவான பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட புறக்காரணிகள். திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவையும் சின்னச் சின்ன பிம்பங்கள் வழியாக தன்னைத் திரட்டி உருவாகும் உலகமும் சந்திக்கும் புள்ளியில் அவை ஒத்திசைவு கொள்கின்றன. அதில் உள்ளங்கள் மோதி தன்போக்கில் கட்டுப்பாடின்றி வெளிப்படும் அபாரமான தருணங்களை முகக் குறிப்புணர்த்துதல்கள் வழியாக நமக்குக் கடத்துவதே இவரது தலையாய நோக்கம். அதற்காகவே ஏராளமான அண்மைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவரே தனது படங்களுக்கான ஒளிப்பதிவாளருமாததால் (சில படங்கள் மட்டும் மிஷா காவ்ரஸோவுடன் இணைந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டவை) காட்சிகளுள் துலங்கி வரும் எதிர்பாராத சாத்தியங்களை தாமதிக்காமல் களவாடும் சாமர்த்தியமும் பார்வையாளராக விலகி நின்று அவதானிக்கக்கூடிய அனுகூலமும் உண்டு.
தவிர்க்கவியலாத சமூக உருமாற்றங்களின் வழி மேலெழும் கருத்தாக்கங்களையும் கனவுகளையும் தனது திரைப்படங்களின் வாயிலாக நெருக்கமாகப் பின்தொடர விரும்பும் ட்ரோவெல், அதன் சாத்தியப்பாடுகளை ஆராயத்தக்க வகையில், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தை கதைக் களங்களாகத் (வலுவான பின்னணி!) தேர்வுசெய்கிறார். இவர் இயக்கிவற்றுள் The Emigrants (1971), The New Land (1972) ஆகிய படங்கள் இதற்கான மிகச்சிறந்த உதாரணங்கள். அவற்றைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன்.
இவரது கதை மாந்தர்கள் அனைவரும் துயர் கவியும் அன்றாடப் பொழுதுகளிலிருந்தும் சிறுமையை உணரச் செய்யும் லௌகீகத் தந்திரங்களிலிருந்தும் தம்மை அறுத்துக்கொண்டு கொஞ்சமேனும் நகர்த்திக்கொள்ளத் தவிக்கிறார்கள். ஆயிரமாயிரம் வலைப்பின்னல்கள் அருகருகே அமைந்துவிட்ட சதிப்பெருக்கில் வெளியேறி வீழ்வதென்னவோ இரத்த உருசி அறிந்திருக்கும் கூர்வாளின் நிழலில்தான். புதிய நம்பிக்கைகளின் வசீகரம் தரும் குறுகுறுப்பானது நீர்க்குமிழி உடைந்து இல்லாமல் போகும் அவகாசத்தில் பாதிக்குக்கூட நிலைபெறுவதில்லை. ஏறி நிற்க யத்தனிக்கும் போதே பலகை எட்டி உதைக்கப்படுகிறது. எனினும் காலடியில் நழுவும் நிலத்தைப் பற்றிக்கொள்ளும் திராணி குறித்து பறத்தலின் சுகம் கண்டவர் கவலைப்படுவதில்லை. ஒரு நொடி பறந்தாலும் ஒட்டுமொத்த வாழ்விற்கும் அது போதுமானது எனும் எண்ணம் உடைய மனிதர்கள். குத்திக் கிழித்து இரணமாக்கும் காலத்தின் கோரப் பற்களிடையே புகவிருக்கும் மனிதரைக்கூட எப்போதும் புன்னகையைத் தவழவிடச் செய்கிறார் என்பதில்தான் ட்ரோவெலின் மேன்மை அடங்கியிருக்கிறது. வெந்தழலில் துளிர்க்கும் நீரின் கருணை. பனி இறுகிய நிலத்தில் முளைக்கும் பைந்தளிரின் வேட்கை.

இவரது இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான Everlasting Moments திரைப்படம் மேற்கூறிய பொதுப் பண்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட விதிவிலக்கல்ல. மரியா லார்சன் புகைப்படக் கலை பயிலத்துவங்குவது ஒரு விபத்துதான். அதன் மூலமாக அவள் விரும்பும் விடுதலையை அடைய முற்படுவது நிறைவேறக் கூடியதுதானா என்பதை சுய விசாரணை செய்கிறது இப்படம். கலையினால் மனிதனுக்கு எதையும் கற்றுத்தர முடியாது என அறுதியிட்டுச் சொல்லும் தர்க்காவ்ஸ்கி அதன் நடைமுறைப் பயன் என்பது நம்மை மரணத்திற்குத் தயார்படுத்துவது மட்டும்தான் என்கிறார். கலைச் செயல்பாடுகள் மனிதரிடையே நல்லதை பயிற்றுவிக்கும் என நம்புவது ஒரு மாபெரும் ஜோக். நம்மால் இயல்வதெல்லாம் கலை தரும் அனுபவங்களுக்கு நம்மை முற்றாக ஒப்புக்கொடுப்பதே. அது தரும் மயக்கங்களின் ஊடாக மேலானதொரு வாழ்வை வாழ்ந்து பார்க்கலாம். விளைவுகளின் முன் பக்குவம் கொண்டு எதிர்வினையாற்றலாம் அல்லது பரந்த மனத்துடன் உள்வாங்கிக்கொள்ளலாம். ஆனால் தூய விடுதலை என்பது கலைகளுக்கு அப்பாற்பட்டது.
இந்தத் திரைப்படம் கலைகளின் எல்லைக்குட்பட்ட வரம்புகளை வகுக்கத் துணிகிறது. காற்றைக் காற்றால் அளைவது போல. அதே சமயத்தில் நம்மை ஆட்கொள்ளும் கலையானது நம் பிடரியைப் பிடித்து உந்தும் அவாவைக் கண்டு குதூகலிக்கிறது. கலை மீதான பிடிப்பு, வேறுபல அன்றாட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தராத வகையில் நம் மனத்தைப் பழக்குவது குறித்தறிந்த பின் உள்ளத்தில் பொங்கும் கிளர்ச்சியையும் பேராவலுடன் உற்று நோக்குகிறது. 16MMல் படமாக்கப்பட்டு 35MMக்கு மாற்றப்பட்டதால் ஒருவிதமான கனவுதத்தன்மை படம் முழுவதும் வியாபித்திருக்கிறது. மரியாவின் மகள் மாயாதான் (Maja) நமக்கு இந்தக் கதையை சொல்லத் தொடங்குகிறாள். Voice-Over-இல் படம் நகர்வது அலுப்பூட்டக்கூடிய பழைய உத்தியாக முதலில் தோன்றினாலும் ‘Camera Lens’ எனும் பிறிதொன்றினை கொழுகொம்பாக நாடி வாழ்வின் முழுமை நோக்கி அடியெடுத்து வைத்தவளின் கதையை இன்னொருவரின் பார்வையில் கூறக் கேட்பதைக் காட்டிலும் பொருத்தமான வழிமுறை இருந்திருக்க முடியாது.
நினைவேக்கப் பொக்கிஷங்களைப் புகைப்படங்களாகப் பத்திரப்படுத்தியவளின் வாழ்வை நினைவில் மீட்டுதல். மாயா பார்த்த மரியா. அதில் பார்வையாளர்கள் கண்டுணர வேண்டிய பிரத்யேக கோணமும் மிச்சமுள்ளது. காமெராவின் கண் சிமிட்டலில் கிறக்கம் கொண்டு உறைந்து போகும் காட்சிகளின் ஊடாகவே மரியாவின் உலகம் விரிகிறது. வீடு தரும் மூச்சுத்திணறல்களுக்கு நடுவே நுரையீரல் நிரம்பி வெளியேறும் மெல்லிய ஆசுவாசம். அறிதலின் பொற்கணங்கள் இடைவெளியின்றி தாக்கும் திக்குமுக்காடல். அதுகாறும் அடியாழத்தில் மறைந்து விட்டிருந்த ஆச்சரியங்கள் வெளிச்சத்திற்கு வந்து தம்மை வெளிக்காட்டிக்கொண்டு விட்டதில் ஏற்படும் புல்லரிப்பு. பிடிமானம் தரும் அளப்பரிய நம்பிக்கையும் புதிதாய்ப் பிறந்துவிட்டதில் விழித்துக்கொள்ளும் அழகுணர்ச்சியும் சந்தித்துக்கொள்ளும் கொண்டாட்டம். இவை அனைத்திற்கும் மேலாக, தன்னிலை மறந்து கடமைகள் பிறழ்கையில் விதிர்க்கும் பதற்றமும் தவிப்பும். கலை ரீதியிலான சிக்கல்கள் ஒரு தளத்திலும் உணர்வுரீதியிலான கொந்தளிப்புகள் இன்னொரு தளத்திலும் இயங்குகின்றன. இரண்டையும் இணைத்ததில் இறுகும் முடிச்சுகள். அவற்றை அவிழ்த்து பலவந்தமாக ஒரு முடிவு நோக்கித் தள்ளாததில் இயக்குநரின் பக்குவம் தெரிகிறது. இப்படம் ‘அம்மா-பிள்ளை’ உறவே உன்னதமானது போன்ற வசதியான கற்பிதங்கள் மேல் பரிகாசம் புரிகிறது. மனத்தை இழுத்துச்செல்லும் விசைகள் அத்தனையையும் கண்காணித்தபடியே ஒரு மூலையில் வீற்றிருப்பது வாழ்வது அல்ல. திடும்மென நெஞ்சம் அதிர சன்னதம் கொண்ட மனம் நாம் அறிந்திராத நமது இரகசிய முகமூடிகளை தனிமையில் அம்பலப்படுத்தும் போது அதற்கு ஒரு திகைப்பை பரிசாக வழங்கலாம். நம்மால் அவ்வளவுதான் இயலும். மரியாவுக்கு அங்ஙனம் நேர்கிறது.

கணவன் மீதான ஆற்றாமை வெறுப்புடன் நொதித்து பிறக்கவிருக்கும் கருவின் மேல் கொப்பளிக்கிறது. அவள் குறித்து அதுவரை புனையப்பட்டிருந்த சித்திரம் சட்டென்று குலைந்து நடுக்கம் கொள்கிறது. அவள் எளிய பெண்ணல்ல எனும் புரிதல் எட்டிப்பார்க்கிறது. கற்பனையின் உப விளைவான அசட்டுத்துணிச்சல் உக்கிரங்கொண்டு எழுந்தாடும் தருணமது. அவசரகதியில் தீர்ப்பு எழுதிவிடக்கூடிய எல்லா வாய்ப்புகளுமுள்ள இந்தச் சம்பவத்தை காருண்யத்துடன் அணுகிய விதம் என்றென்றைக்குமான பாடம்.
எண்ணற்ற இடையூறுகள் ஏற்படும் சமயங்களிலும் நெருப்பில் விழும் அந்துப்பூச்சி போல கலையானது மரியாவைக் கவர்ந்து ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. படத்தில் திருமண உறவை மீறிய காதல்கள் கிறங்கிக் கிடக்கின்றன. எல்லைகளுக்குள் நின்றவாறு ஊசிமுனைகளை மட்டும் நீட்டி உரசிக்கொள்ளும் பசப்பல்கள். தீ மூளாது எனத் தெளிந்துவிட்டதில் தணியும் குற்றவுணர்ச்சி. மூண்டால்தான் என்ன என அறிவுசார் துணை மீது நெகிழும் அன்பு. அவளது துணையே புகைப்படக் கலையின் நீட்சியான சினிமாவை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். குடும்பத்துடன் சாப்ளின் படம் (Easy Street) பார்க்கச் செல்கிறாள். காட்சிகள் உண்டாக்கும் உடனடித் தாக்கத்தை பிரமிப்புடன் உள்வாங்குகிறாள். சலனமற்று மிதந்திருந்த விழிகளில் ஒரு துள்ளல். திமிறித் ததும்பும் நீரூற்று பீய்ச்சியடிக்கும் பரவசம்.
முதலாம் உலகப்போரின் போது நிலவிய சுவீடன் சமூகத்து குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் பதிவாகி உள்ளது. அந்த வெறுமையை சாப்ளின் படங்கள் அல்லது பிற கலைகள் வழியாக மீறிச் செல்ல முனைந்ததன் வரலாறும். ஆகவே, முடிவாக, எதையெதையோ தொட்டுச் செல்லும் திரைக்கதையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட துருத்திக்கொண்டிருக்கும் மெனக்கெடல் ஏதுமில்லை என்பதே ஓர் ஆச்சரியம். ஓர் இறகு மிதந்து வருவதைப் போல இத்தனை இலகுவாக விஷயங்களைக் கையாள்வது என்பது ஒரு கனிந்த மனத்திற்கே சாத்தியமாகக்கூடும். நாம் கரைந்து காணாமற் போவதற்கு திரையில் ஒரு வாழ்வு மின்னுகிறது. இவ்வாறு நிகழும் ஒவ்வொரு தருணமும் அபூர்வமானது. அத்தகைய கணங்களை மரியா புகைப்படங்களாக பத்திரப்படுத்தி வைத்தாள். நாம் நினைவுகளில் சுமந்தலைவோம்.
*
பரவசங்களின் திரையாடல்- Blue is the Warmest Color (2013)
சம்பவங்களின் கோர்வையாக நெய்யப்படும் திரைப்படங்களில் இருந்து விலகி, முற்றிலும் உணர்ச்சிக் குவியல்களின் தொகுப்பாக எரிந்து கனியும் இத்திரைப்படம் 2013ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதினை வென்றது. வெறுமனே பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் படமாகவோ பார்வையாளனை அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கும் படமாகவோ அல்லாமல் அழகியலின் உச்சபட்ச சாத்தியங்களைத் திரை மொழியில் உள்ளடக்கியிருக்கிறது இப்படம். இதன் மையக்கருவும் படமாக்கல் முறைமையும் Pornography அல்லது Erotic வகைமைகளுக்குள் அடங்காது தனித்து நிற்கிறது. தற்பால் ஈர்ப்புள்ளவர்களைப் பற்றிய திரைப்படங்களின் கூறல்முறையானது மையக் கதாபாத்திரங்களின் மனநிலைகளை அவர்களுக்கிடையேயா உடலுறவுக் காட்சிகள் அளவுக்குத் தீவிரமாக கையாள்வதில்லை. அவை பெரும்பாலும் சமூகப் புறக்கணிப்புகளையும் ஒவ்வாமைகளையும் சுட்டிக்காட்டுகின்றன அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களின் அரசியல் செயற்பாட்டினை விவரிக்கின்றன (Milk, The Normal Heart). Stranger by the Lake போல பிறப்புறுப்புகளைக் காட்டுவதையே பிரதான நோக்கமாகக் கொண்ட சவலையான படங்களும் அதீத கவனம் பெறுவதுண்டு.
ஜூலி மரோவின் சித்திர நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படம், இரு பெண்களுக்கிடையேயான (எம்மா – அடெல்) உறவின் கொந்தளிப்பையும் காதலையும் உரத்துச் சொல்கிறது. 179 நிமிடங்கள் ஓடும் படத்தில் பதின்பருவத்துப் பெண்ணின் பாலியல் மலர்தலும் தடுமாற்றங்களும் காவியத்தன்மையுடனும் தீவிரத்துடனும் திரண்டெழுகின்றன. உடல்கள் ஒன்றையொன்று அறியும் பேராவலுடன் கிளர்ந்து மோகிக்கின்றன. சீறும் மூச்சொலிகளின் வெம்மை திரையில் படர்ந்து, வெளியேற வழியின்றித் திகைத்து, சுழன்றடிக்கிறது. கரங்களின் தழுவல் நீண்டு நீண்டு மேகங்களற்ற நீல வானத்தின் பெருவெளியைத் தொட்டு, முடிவின்மையின் அபத்தங்களை உணர்ந்து தடுமாறுகின்றன. தீண்டலின் சுவையை நமது கண்கள் உணர்ந்து திடுக்கிடுகின்றன. எத்தனை எத்தனை அருகாமைக் காட்சிகள்!! திரைக்கும் பார்வையாளனுக்கும் இடையேயான எல்லைகள் நழுவி, காலப்பருக்கள் உதிர்ந்து, அந்தரத்தில் நடனமாடுகின்றன. ஸ்பரிசத்தின் மென்மையும் நுகர்வின் திளைப்பும் நம்மைப் பரவசத்திற்குள்ளாக்குகின்றன. பேரின்பத்தின் பிரம்மாண்ட வாயிலில் நாம் அலைவுருகிறோம். திறப்பிற்கு அப்பால் காத்திருப்பவை எல்லாம் நம்மை மூழ்கடிக்க வல்லவை. நாம் அடெலை காதலிக்கத் துவங்குகிறோம்.

ஃபிரெஞ்சுக் கலாச்சாரத்தின் புதிய போக்குகளுடைய நுனியும் வேரும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக முயங்கிப் பின்னிப் பிணைந்திருக்கின்றது. இடதுசாரிக் கட்சியினது பாடல் பின்னணியில் ஒலிக்க, வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மாணவர்கள் நடத்தும் பேரணியிலும் ஒருபால் விருப்பமுள்ளவர்களின் உரிமைக் கோரல் போராட்டத்திலும் (LGBT Pride March) எத்தனை துள்ளல்! திகட்டாத இளமையின் தினவு பெரும் உற்சாகத்துடன் பீறிடுகிறது. பன்மைக் கலாச்சாரத்தின் காயங்களற்ற மோதல். வண்ணக்கலவைகளின் பேயாட்டம். கண்டதும் காதல் குறித்த இலக்கியப் பாடங்கள் வகுப்பறைகளில் நடத்தப்படுகின்றன. ஓர் ஆசிரியையாக பணிபுரிய விரும்பும் அடெல், எம்மாவைக் கண்டதும் காதல் கொள்கிறாள். வாழ்க்கையின் மீது படிந்திருக்கும் விலக்கவே முடியாத துயரத்தின் இருப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. சார்த்தர் மேற்கோள் காட்டப்படுகிறார். நீல நிற உடைகளையே விரும்பி அணியும் அடெல், பிரிவின் துயரம் மறக்க கடலின் அரவணைப்பையே நாடுகிறாள். நீல திரைச்சீலைகள் காமத்தின் மௌன சாட்சியாகின்றன.
உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவளான எம்மா, எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்பவளாகவும் பக்குவப்பட்டவளாகவும் இருக்கிறாள். எம்மாவின் தற்பால் ஈர்ப்பு குறித்து அவளது பெற்றோரும் நண்பர்களும் அறிந்தே இருக்கின்றனர். மாறாக, மத்திய வர்க்கத்து அடெல் தத்தளிப்புகளுடனும் இன்னதென்று பிரித்தறிய இயலாத குழப்பங்களுடனும் சோர்ந்து போகிறாள். உடைந்து அழுகிறாள். அடெலின் பெற்றோர், எம்மாவை தங்களது மகளின் தோழி என்று மட்டுமே அறிகிறார்கள். அதற்கு அப்பால் சிந்திக்கத் துணியும் மனப்போக்கு அற்றவர்களாக இருக்கிறார்கள். நட்பு வட்டாரங்களில், தன்னை ஒரு லெஸ்பியனாக அடையாளப்படுத்துவதை அறவே விரும்பாதவளாக இருக்கிறாள். பயங்களும் தயக்கங்களும் அவளுள் பாரமாகின்றன. அவளது பாலியல் அடையாளம் நண்பர்களால் கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அடெலின் தேவையை அவளே அறிந்திருப்பதில்லை. தனது பாலுணர்வெழுச்சியின் திசைமாற்றங்களையும் ஊசலாட்டங்களையும் (Identity Crisis) காம விருப்புகளின் தடங்களையும் பின்தொடர்கையிலேயே தொலைந்து போகிறாள். அடெலின் இத்தெளிவின்மையே அவர்களுக்கு இடையேயான உறவுச் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது.

காதலின் தொடக்க நாட்கள் பேரன்புடன் நுரைத்து நிரம்பித் ததும்புகின்றன. அடெலும் எம்மாவும் வெட்கமும் காதலுமாக சாலைகளில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மகிழ்ச்சி அன்றி வேறு எதையும் அறியாத அதன் பருவங்களை, காதலர்தம் மனநிலைகளை இத்தனை கொண்டாட்டங்களுடன் பதிவுசெய்த படம் சமீபத்தில் பிறிதில்லை. நடன அசைவுகளின் இலயம். சிகரத்தின் உச்சியில் பரவி விளையாடத் துவங்கும் அதிகாலை ஒளியின் கன்னிமை. இருவருக்கும் இடையேயான உறவுச் சமநிலையில் முகிழ்க்கும், பார்வைகள் இடறி வெவ்வேறு உணர்வுகள் மேலெழும்பும் அபூர்வ கணங்கள் உட்பட, எந்தவொரு தருணத்தையும் இயக்குநர் தவறவிடுவதில்லை. ஒரு தேர்ந்த இலக்கிய ஆசிரியனைப் போல நிதானமாகவும் நுட்பமாகவும் பெண் – பெண் உறவினை காட்சிப்படுத்துகிறார். பாலியல் மீறல்கள் ஒழுக்கம் சார்ந்ததாக பாவிக்கப்படாமல் உறவு சார்ந்ததாக வாழ்வின் சஞ்சலங்களாக மட்டும் கருதப்படுகின்றன.
உரையாடல்கள் வழியாகவும் உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாகவும் இயக்குநர் Abdellatif Kechiche கட்டமைக்கும் புறச்சூழல் நேர்த்தியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது. பொதுவாக இவ்வகைப் படங்களில் கனன்றுகொண்டிருக்கும் பிரச்சார உத்திகள் எதுவும் இப்படத்தில் இல்லை. கதாபாத்திரங்களின் இரசனையுலகமும் கதைப்போக்கில் பெரும் பங்கு வகிக்கிறது. கலை – தத்துவ ஈடுபாடு அவர்களது இயல்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இயக்குநரின் ஆழ்மனம் சார்ந்த அகவயப் பார்வையானது அடெலின் தனிமையையும் பாலுணர்வின் தத்தளிப்புகளையும் இயல்பாக அரவணைத்துச் செல்கிறது. காமத்தின் சரிவுகளை, நீர் நோக்கிப் பாயும் வேரினது இயல்பான பயணம் போல சித்தரிக்கையில் இயக்குநர் எனும் படிநிலையில் இருந்து படைப்பாளியாக (Auteur) உயர்கிறார் அப்தலடிப் கெசிச்.

படத்தின் மூலமான சித்திர நாவலில், எம்மாவுடனான பிரிவிற்குப் பின்னர், அடெல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போகிறாள். இத்திரைப்படத்திலோ உணர்வுகளுடனான சமரில் உறவின் எல்லைகளை அடெல் அறிந்து கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறாள். Adele Exarchopoulos (அடெல்) & Lea Seydoux (எம்மா) ஆகியோரது நடிப்பு, இயக்குநரின் பங்களிப்பிற்கு நிகரானதாக கருதப்பட்டதனாலேயே, கான் விழாவில் தங்கப்பனை விருது மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இலக்கியமும் திரைப்படமும் எதிரெதிர் துருவங்கள் எனும் போதிலும் விமர்சன தளத்தில் இவ்விரண்டுக்குமான ஒப்பீடுகள் எப்போதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. காமச் செயல்பாடுகளின் காட்சித் துணுக்குகளில் இலக்கிய விவரணைகள் கோரும் வாசகனின் கற்பனைக்கு இடமில்லை எனினும், பிம்பங்களின் நேரடித் தாக்கத்தின் முன் வரிகளின் போதாமை வெளிப்படையானது. அதுவும் உடல்களைக் காட்டிலும் உணர்வெழுச்சிகள் பிரதான நோக்கமாக உக்கிரம் கொள்ளும் திரைப்படங்களின் முன் இலக்கியப் படைப்பு ஒரு படி கீழிறங்குகிறது. அத்தகைய அனுபவத்தினை சமரசமின்றி பார்வையாளனுக்குக் கடத்தும் காட்சிப்பிரதி இப்படம்.
*
தழும்பின் இரணம்- Gett, the trial of Viviane Amsalem (2014)
நீதிமன்ற அறைக்குள் விவியனைத் தவிர மற்ற அனைவரும் ஆண்கள். பல வருடங்களாக நீளும் விவாகரத்து வழக்கு. அவர்களது குரலும் விசாரிப்புத் தோரணையும் அவள் மனத்தைத் திருகிப் பிசைந்துகொண்டே இருக்கிறது. தீராத காத்திருப்புகளின் வேதனை உடலெங்கும் பரவி அச்சுறுத்துகிறது. அவர்களுக்குள் ஒளிந்துகொண்டு இளிக்கும் அற்பத்தனத்தை இனியும் சகித்துக்கொண்டு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கண்களில் நிறுத்தப்பட்ட நீர் எரியத் தொடங்குகிறது. நிதானமான அடிக்குரலில் தன்னைத் திரட்டி தனது உரிமையை விவியன் தெளிவுபடுத்துகிறாள். தன் ஆத்மாவின் சீற்றத்தை வெற்றுக் கூச்சல்களாக்காமல் கனிந்த பக்குவத்துடன் அணுகி முன்வைக்கிறாள். அவளின் ஆவேசமற்ற உறுதியில் திடுமென அறைக்குள் அமைதி பரவுகிறது. நிசப்தத்தின் பேரிரைச்சல் தாள முடியாததாகிறது. நெருங்கி வரும் உண்மையின் பயங்கரத்தைக் கண்டு ஒரு சொல்கூட எடுக்கத் திராணியின்றி திகைத்து நிற்கிறார்கள். குற்றவுணர்ச்சியின் இறுக்கத்தில் இருந்து தங்களை விடுவிக்க வழிகளின்றி திணறுகிறார்கள். தப்புவித்துக்கொள்ள ஏதேனும் காரணம் கிடைக்காதா என ஆண்களின் மனது அடித்துக்கொள்கிறது. ஒருவரையொருவர் ஏறிட்டு நோக்க முடியாத இயலாமை அவர்தம் அகம்பாவத்தைச் சீண்டி பதற்றமடையச் செய்கிறது. அந்தச் சூழலின் பதைபதைப்பும் தவிப்பும் நம்மையும் வந்து தொட்டுவிடுவது ஒரு நல்ல திரைக்கதையின் வலிமைக்குச் சான்று. ஒரு யுகம் நீண்ட அந்த ஒரு கணம்தான். எதிர்த்தரப்பு வக்கீல் ‘உனக்கு வேறொருவனுடன் தொடர்பு இருக்கிறது’ எனப் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். நீதிபதிகள் ஆசுவாசமடைகிறார்கள். ‘அப்படியா சங்கதி?’ எனச் சரிந்துவிட்ட தராசை தூக்கி நிறுத்துகிறார்கள். குல்லாக்களை சரியாகப் பொருத்திக்கொள்கிறார்கள். நீதிமன்ற அறையின் இறுக்கம் தளர்ந்து அது தனது இயல்புக்குத் திரும்புகிறது.
பெரும்பாலான காட்சிகள் ஓர் அறைக்குள் நிகழும் படங்களின் வரிசையை பட்டியலிட்டால் Zoltan Fabri-யின் The Fifth Seal (1976)–க்கே முதலிடம் தருவேன். அது வலுவான பின்னணியும் தத்துவார்த்த தளமும் உடையது. எளிதில் சலிப்புத் தட்டிவிடக்கூடிய அபாயங்கள் நிரம்பிய உரையாடல்கள் வழி திரண்டு வரும் கதை வடிவைத் தேர்வு செய்துகொண்டது. அறிவுப்பூர்வமான காட்சிகளும் குறியீடுகளும் புழக்கத்திற்கு வந்துவிட்ட திரைப்படத் துறையில் பழசாகிப் போன வசன பாமரத்தனங்களை கட்டிக்கொண்டு அழுவானேன் என உச் கொட்டுபவர்கள் Gett படத்தைப் பார்த்துவிடவும். வசனங்களாலேயே கதை நகர்வதால் தமிழ்ப் படங்கள் போல இது மலினமான ட்ராமா அல்ல. இது பறந்துசென்று தொடும் உயரங்கள் எந்தவிதமான புத்திஜீவிப் படங்களுக்கும் சளைத்ததும் அல்ல. ஃபாப்ரியின் படத்திற்கு அடுத்த இடத்தில் இதுதான் வரும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ரோனித்தும் ஷ்லோமியும் இணைந்து படத்தை இயக்கியிருக்கிறார்கள். விவியனாக நடித்திருப்பவர் படத்தின் இயக்குநர்களுள் ஒருவரான ரோனித் எல்கபெட்ஸ்தான்.

ஒரு பெண் விடுதலை அடைவது குறித்த அச்சம் நிலவும் சூழலை இதைவிட ஆணித்தரமாக சொல்லிவிட முடியாது. இது ஆண்களின் உலகம் என பீடத்தில் வீற்றிருப்பவர்களை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஓர் அடிகூட அவர்களிடையே பதற்றத்தை உண்டாக்குகிறது. மத அடிப்படைவாதிகளிடம் தீர்ப்பெழுதும் அதிகாரம் இருக்கும் பட்சத்தில் தராசின் முள் இன்னும் வேகமாக அடித்துக்கொள்கிறது. அதில் அசட்டுப் பெண்ணிய முத்திரைகள், க்ளிஷே ஆண் பிம்பங்கள், அநீதிக்கு எதிரான போராட்டம் என நீதி போதனை வகுப்பெடுக்காமல் அசலான நடைமுறையை பாசாங்குகளின்றி பிரதிபலித்திருக்கிறார்கள். ஒரு பெண்ணின் ஆளுமையை சரியாக உள்வாங்கிக்கொள்ள எந்தச் சமூகமும் கற்றுக்கொள்ளவில்லை. அவளை எதிர்கொள்வதில் ஆண்களுக்கு உள்ள சிரமங்களை மனச்சாய்வுகளின்றி படமாக்கியதில் மெய்யான நோக்கங்கள் தென்படுகின்றன. திரையில் வந்துபோகும் பலவீனமான மனிதர்களின் ஊசலாட்டங்களை நாம் அவதானித்தபடியே இருக்கின்றோம். எனது முன்முடிவுகளும் கதாபாத்திரங்களைப் பற்றிய தீர்மானங்களும் படம் முடிவதற்குள் மாறியிருப்பதை நினைத்துப் பார்த்தபோது விசித்திரமாக இருந்தது. வரையறை செய்யப்பட்ட சட்டகங்களுக்குள் எவரையும் அடைத்துவிட இயலாது என்பது இன்னொரு முறை ருசுவானது.
படத்தின் முதல் எட்டு காட்சித் துளிகள் விவியனின் பார்வையில் நிகழ்கின்றன. தனது விதியை அந்நியர்களின் குரூரக் கைகளில் ஒப்படைத்துவிட்டு நடக்கவிருப்பதை ஏற்கனவே உள்ளுள்ளம் உணர்ந்துவிட்ட பார்வை. அதில் ஆர்வமும் எதிர்பார்ப்பும் எப்போதோ தீர்ந்துவிட்டன. ஒவ்வொருவரின் நோக்கத்தையும் தொட்டெடுத்து அதன் இசைவுக்கேற்ப தன்னை நகர்த்திக்கொள்ளும் காமெரா. ஓர் அறைக்குள் சொற்ப முகங்களைத்தான் மீண்டும் மீண்டும் சுற்றிச்சுற்றி வந்து நிலைத்தாக வேண்டும். ஆனால் அதன் நேர்த்தியில் துளியும் சோர்வு இல்லை. தீவிரமான பாவனையுடன் முகங்களைத் துழாவி எண்ணவோட்டங்களை காட்டிக் கொடுத்தபடியே இருக்கிறது. சின்னச் சின்ன உடலசைவுகள், உரையாடல்கள் மூலமாகவே ஒட்டுமொத்த கதையுலகமும் பெரிய மெனக்கெடல்கள் இன்றி திரண்டு வந்துவிடுகிறது. தனது வழவழப்பான முழங்கால்களை நகர்த்திக் காட்டி பிறழ் சாட்சியை தடுமாறச் செய்யும் விவியன், குல்லா அணியாத கார்மெல், கூந்தலை அவிழ்த்து நெஞ்சில் பரப்பியவாறு சட்டைப் பொத்தானை நீக்கி நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கும் காட்சி என இந்த இஸ்ரேலியத் திரைப்படத்தில் ஓர் அறைக்குள் எல்லாம் இருக்கிறது. எல்லாமும் தனித்தன்மையுடன் துலங்குகிறது.
கதவுகளை அறைந்து சாத்தி வைக்கும் வாழ்க்கைக்குள் சாவிகளை விருப்பத்துடன் தொலைக்கக் கொடுத்துவிட்டு வெளியேற விரும்பாமல் அடைந்துகொள்ளும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதற்குண்டான நியாயங்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் அடைத்து வைக்கும் அமைப்பை உடைத்துக்கொண்டு போகத் தெம்பு வேண்டும். அது அவ்வளவு எளிதானதும் அல்ல. தொடர்ச்சியான போராட்டத்தால் சோர்ந்து வீழாத மனங்களின் அலைச்சல் தோல்வியில்தான் நிறுத்தப்படுகின்றது. அது அளிக்கும் விரக்தியில் பெருங்களத்தில் எழும் அபயக்குரல் சாபங்களாக வெளிப்படுகிறது. தெய்வங்களும் சட்டமும் கைவிட்ட பின் விவியனும் சாபமிடுகிறாள். உடைந்துவிட்ட மனக் கண்ணாடியை உள்முகமாய் திருப்பி வைத்துக்கொள்கிறாள். அதில் நிரந்தரமாய் படிந்துவிட்ட இழப்பின் நகக்கீறல்கள் அவளது கண்களை எப்போதும் உசாவுகின்றன.

கடந்த காலம் பற்றிய ஏக்கங்கள் இல்லாதவளாகிறாள். அது இல்லாதவர்களுக்கு நிகழ்காலமும் எதிர்காலமும்கூட இல்லை. துன்பமே நோயும் நோய்க்கு மருந்துமான பின்பு மற்றவர் வாழ்வில் இருந்து வெட்டிக்கொண்டு போக வேண்டிய நிர்பந்தம். நின்றுவிட்ட வாழ்வை நகர்த்திக்கொண்டு போகும் துயரம் மன அழுத்தத்தைக் கூட்டுகிறது. துக்கத்தை தரித்திரமாக்கிவிடும் வாழ்வின் அல்லாட்டதை துண்டுத் துண்டான காட்சித் துளிகளின் ஊடாக ஆரவாரமின்றி காட்டிச் செல்கிறார்கள். அந்த முகத்தின் அமைதியில் தீவிரம், சங்கடம், அவஸ்தை என அனைத்தையும் கொண்டுவந்து விடுகிறார்கள். முகங்களை அணுகி உணர்ச்சிகளை தெரிவுகொள்ள வேண்டிய கட்டாயத்தினால் Cross Cutting, ஷாட்/Counter shot , மாண்டேஜ் போன்ற வழக்கமான எடிட்டிங் உத்திகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி இருக்கிறார்கள். கனத்த மௌனமும் வெறுமையும் அறைக்குள் நிலவும் புழுக்கமும் இசையாகிறது.
ஒரு குறிப்பிட்ட நாட்டின் நல்ல திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன் அந்நாட்டின் சமூகவியல்- வரலாறு குறித்த வாசிப்புப் பயிற்சி இன்றியமையாதது என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போதுதான் படத்தின் நுட்பங்களை பிரக்ஞையுடன் உள்வாங்கிக் கொள்ள முடியுமாம். இக்கூற்று திரைப்படக் கலையின் சாத்தியங்களைக் குறைத்து மதிப்பிடுகிறது என்பதோடல்லாமல் அதன் வெளிப்பாட்டு உத்திகளைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி மேம்போக்காக உளறப்பட்டது எனலாம். உதாரணமாக, இஸ்ரேலில் திருமணமும் திருமண முறிவும் Rabbi-க்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை Gett படத்தைப் ‘பார்த்து’ மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். தேர்வுக்குத் தயாராவது போல புத்தகங்களில் தலை புதைத்துக்கொள்ளத் தேவையில்லை. உண்மையில், ஒரு நல்ல படத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய புறத்தகவல்களின் அடையாளங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கோடிழுத்துக் காட்டப்பட்டிருக்கும். அப்பேற்பட்ட நான்கு கோடுகளை இணைத்துப் பார்த்து சித்திரம் வரைந்துவிடக்கூடிய அளவுக்கு அறிவு இருந்தால் போதுமானது. சிக்கலான பின்புலங்களின் முகாந்திரங்களைக்கூட தன்னகத்தே அது பொதிந்து வைத்திருக்கும். அதன் நீட்சியாக மேலதிக ஆழங்களுக்குள் சென்று அறிய விருப்பம் உள்ளவர்களுக்கு வாசிப்பு பயன் தரும், இல்லாவிட்டால் நட்டமில்லை.
இந்தப் படத்தின் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையேயான முரண்களும் மதப் பின்னணியும் அதன் உட்பிரிவுகளும்கூட துல்லியமாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. மொழியும் உடையும் அதற்குத் துணை நிற்கின்றன. எலிஷாவும் விவியனும் ஹீப்ரூவிற்கு நடுவே ஃபிரெஞ்சில் உரையாடுவதை நூல் பிடித்துச் செல்ல வேண்டும். ருஷ்ய அகதிகளைப் பற்றி ரேச்சல் உமிழும் வெறுப்பில் அவள் யார், எந்தப் பிரிவு என எளிதாகப் புரிந்துவிடுகிறது. ரேச்சலின் கருத்திற்கு வெடித்துச் சிரிக்கும் விவியனில் வெளிப்படுவது நாம் கண்டுணர வேண்டிய இன்னொரு கோணம். இரண்டு மணி நேரப் படத்திற்குள் ஹரேதிகளுக்கும் ருஷ்யர்களுக்குமான உறவை 1980களில் இருந்து விவரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அந்தக் கலையின் மீதான வன்முறை அன்றி வேறில்லை.

அபாரமான நாடகீயத் தருணங்கள், அதிகாரத்தின் சின்னங்களான மதமும் ஆண்களும், பெண்ணின் மீதான விசாரணை, அந்தப் பெண்ணின் கண்களுக்கு மேல் நிலைகொள்ளும் காமெரா என எல்லாம் கச்சிதமாகப் பொருந்தி இன்னொரு படத்தையும் திரைப்பட மேதையையும் நினைவூட்டின. ஆம், The Passion of Joan of Arc (1928) தான். ட்ரெயரின் காவியங்களுள் ஒன்று. அந்தப் படத்தைப் போலவே இதிலும் சில distance close up–களும் odd angle shot-களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கதையின் போக்கில் வளரும் கதாபாத்திரங்கள் தங்களைப் புதிதாகப் புனைந்தவாறு முன்வைக்கின்றன. மேதைமை கொண்ட கண்களால் மட்டுமே அவற்றைப் படைத்து படமாக்கியிருக்க முடியும். மத – அரசியல் ரீதியிலான விடுதலையை கோரி நிற்பவர்களுக்கு – குறிப்பாய் பெண்களுக்கு – அதிகாரம் தரும் அழுத்தங்களை அதன் புளித்துப்போன அரைவேக்காட்டு பழமைவாதத்தை அப்பட்டமாய் சொல்லிவிடுகிறார்கள்.
உலகெங்கும் உள்ள பொதுத்தளங்களுடன் இணைத்துக்கொண்டு தனது பிரத்யேக தனித்தன்மையையும் காத்துக்கொள்வதாலேயே இது உலகப் படமாகிறது. அத்தனை சங்கிலிகளையும் அறுத்துக்கொண்டு தனிமையில் உழல்வதற்கு தயாராகும் மனத்தை உக்கிரத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வன்மம் கொண்டு எப்படியாவது எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு சக்கையாகத் துப்பும் அமைப்பில் இருந்து வெளியேறுவது என்பது ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்து இன்னொன்றில் விழுவதற்கான முன்னோட்டம்தான். வெளியேறிவிட்டேன் எனும் நினைப்பு தரும் வீம்பு மிச்ச வாழ்க்கையைக் கடத்திவிடுவதற்கான ஊக்கமாக அமையக்கூடும். திருமணமான பெண்ணை ஹீப்ரூவில் ‘agunah’ என்றழைக்கிறார்கள். அதற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டவள் என்று பொருள்.