ஆகமம், அரசு, அரசியல்: ஜயந்த பட்டாவின் ஆகமடம்பரத்தை முன்வைத்து

1 comment

ஜயந்த பட்டா எழுதிய ஆகமடம்ரம் என்னும் வடமொழி நாடகம் தன்னளவில் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. இது தவிர ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நாடகம் அக்காலகட்டத்தில் வலிமையாக இருந்த மதப் பிரிவுகள், அவற்றிற்கு இடையே இருந்த பிணக்குகள்- இணக்கங்கள் ஆகியவற்றைக் குறித்த ஒரு விரிவான சித்திரத்தையும் தருகிறது. இதனாலேயே இந்நாடகம் இன்றளவும் இந்து சமய வரலாறைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு பிரதியாகப் பயன்படுகிறது .

நான் இக்கட்டுரையைக் கீழ்க்கண்டவாறு கட்டமைக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். முதல் பகுதியில் நாடகாசிரியரைக் குறித்தும், பிறகு அவரை ஆதரித்த மன்னரைக் குறித்தும் அதன் பிறகு ஆகமடம்பர நாடகத்தின் உள்ளடக்கம் குறித்தும் அதற்கு அடுத்தபடியாக அந்நாடகத்தின் சில சிறப்பியல்புகளைக் குறித்தும் எழுதலாம் என்றும் இறுதிப் பகுதியில் இந்நாடகம் தரும் சமய சமூகச் செய்திகளையும் இந்நாடக ஆசிரியர் எத்தகைய சமய சகிப்புத்தன்மையை முன்வைக்கிறார் என்பதைக் குறித்தும் எழுதலாம் என்றிருக்கிறேன்.

*

ஜயந்த பட்டா அல்லது பட்ட ஜயந்தனை பெரும்பாலான இந்தியவியலாளர்கள் அவரது ‘நியாய மஞ்சரி” என்னும் நூலுக்காக நினைவுகூர்வார்கள். நியாய மஞ்சரி நியாய சித்தாந்தத்தை விளக்கும் சுதந்திர நூல். அக்காலகட்டத்தில் பெரும்பாலும் விளக்கவுரைகள்தான் எழுதப்பட்டு வந்தன. ஆனால் ஜயந்தர் வேறொரு நியாய நூலுக்கு விளக்கவுரை எழுதாமல் தாமே ஒரு அடிப்படை நூலை எழுதினார். நியாய சித்தாந்தத்தைச் சார்ந்தவர்கள் அதனை உண்மையைக் கண்டறிய உதவும் கருவியாகவே கருதினர். ஆனால் ஜயந்தர் வேதத்தை, வேதச் சடங்குகளைக் காக்கும் ஆயுதமாக நியாய நுட்பங்களைப் பயன்படுத்த விரும்பினார். அதனால் இவரை நியாயிகர் என்று வகைப்படுத்துவதைவிட மீமாம்சகர் என்று வகைப்படுத்துவதே சரியாக இருக்கும். ஜயந்தர் தத்துவ ரீதியாக இவ்வாறு நியாய – மீமாம்சக சார்புடையவராக இருந்தாலும் இறையியல் ரீதியில் ஶிவ பக்தராக இருந்தார் .

அவரது நியாய மஞ்சரியில் அவரே தனது பூர்வீகத்தைக் குறித்து எழுதியுள்ளார். அதிலிருந்தும் அவரது மகன் எழுதிய காதம்பரி கதாசாரத்தில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் இவை: அ) ஜயந்த பட்டர் பராசர கோத்திரத்தைச் சார்ந்த கெளட அந்தணர். ஆ) அவர் தனது பதின்ம வயதிலேயே பாணினியின் அஷ்ட அத்யாயிக்கு ஒரு புது விளக்கவுரை எழுதியவர். இது அவரது அபார பாண்டித்யத்தைக் காட்டுகிறது. இ) அவரது குடும்பம் அரசவை தொடர்புடைய குடும்பம். அவரது பாட்டனார் சக்தி ஸ்வாமி, காஷ்மீர் அரசன் லலிதாதித்ய முக்தபீடனின் அமைச்சராக இருந்தவர்.

ஜயந்தரும் அரச குலத்தோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்தான் .

ஜயந்த பட்டரின் புரவலரான சங்கர வர்மனைக் (882-902) குறித்து நமக்குக் கிடைக்கும் செய்திகள் நல்லவிதமாக இல்லை. கல்ஹணர் தனது ராஜ தரங்கிணியில் சங்கர வர்மனைத் திட்டித் தீர்க்கிறார். சங்கர வர்மனை ஏறத்தாழ ஒரு கொடுங்கோலனாகவே அவர் சித்தரிக்கிறார். கடுமையான வரிச் சுமையை மக்கள் மீது ஏற்றி நாட்டில் தரித்திரத்தை உருவாக்கியவன் என்கிறார். இது மட்டும் அல்லாமல் கோவில்களில் இருந்த செல்வத்தையும் கூசாமல் கொள்ளையடித்தவன் என்கிறார். சுமார் 64 கோவில்களுக்கு அரசு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து அவர்கள் வழியாக அக்கோவில்களில் உள்ள செல்வத்தை அரசு கஜானாவிற்குத் திருப்பினார் சங்கரவர்மன். ஆன மட்டும் கோவில்களை இவர் சுரண்டினார் என்பதே கல்ஹணராது கூற்று. அதாவது கோவில்களில் பயன்படுத்தப்படும் எடைக்கற்களில் மோசடி செய்துகூட கோவில்களின் செல்வங்களைத் திருடினான் என்ற குற்றச்சாட்டினையும் இவர்மேல் வைக்கிறார் கல்ஹணர்.

சங்கர வர்மனின் தந்தை ஏராளமான புலவர்களை ஆதரித்தவர். ஆனால், சங்கர வர்மன் ஒரு காசுகூட எந்தப் புலவருக்கும் கொடுத்ததில்லை. சொல்லப்போனால், புலவர்களைச் சந்தித்தால் எதாவது கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களைச் சந்திப்பதையே சங்கர வர்மன் தவிர்த்தான் என்கிறது ராஜ தரங்கிணி. இலக்கியத் தரம் வாய்ந்த வடமொழியில் பேசினால்தானே இந்தப் புலவர்கள் கவிதை, காவியம் என்று வருவார்கள் என்று எண்ணியோ என்னவோ கொச்சை வடிவமான அபராம்ச வடிவைத்தான் சங்கர வர்மன் பயன்படுத்தினார். கல்ஹணர் இதனை சங்கர வர்மனின் சிறுமதிக்கு ஓர் உதாரணமாகக் காட்டுகிறார் .

இப்பேர்ப்பட்ட அரசனை ஆதரித்து எழுதவேண்டிய துரதிர்ஷ்டம் மட்டும் இல்லை, அவன் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியது என்றும் நிறுவ வேண்டிய கட்டாயம் ஜயந்த பட்டருக்கு இருந்தது. அதை ஓரளவு வெற்றிகரமாக ஜயந்த பட்டர் செய்யவும் செய்கிறார். ஜயந்த பட்டர் சங்கர வர்மனை ஒரு சிறந்த சைவராகச் சித்தரிக்கிறார். ஊதாரித்தனத்தைப் பொறுத்துக்கொள்ளாத, சமய சகிப்புத்தன்மை கொண்ட ஒரு மன்னனாக சங்கர வர்மன் இருந்தார் என்பதே ஜயந்த பட்டரின் வாதம். இப்படியெல்லாம் ஜயந்த பட்டர் சங்கர வர்மனை ஆதரித்து எழுதினாலும் அவருக்கும் சங்கர வர்மனுக்கும் இடையே இருந்த உறவிலும் ஏதேதோ பிரச்சினைகள் இருந்தன என்று பட்டரின் நூல்கள் வழியாகவே அறிய முடிகிறது. பட்டர், தன்னுடைய நியாய மஞ்சரியில், தான் அந்த நூலை சங்கர வர்மனால் நாடு கடத்தப்பட்ட காலத்தில் எழுதியதாகக் கூறுகிறார். தண்டனையா கட்டாயப் பணியிட மாற்றமா என்று தெரியாவிட்டாலும் இச்செய்தி வாயிலாக சங்கர வர்மனுக்கும் பட்டருக்கும் இடையேயான உறவு எல்லாக் காலத்திலும் சுமூகமாக இருந்ததில்லை என்று புரிந்துகொள்ளலாம்.

*

ஆகமடம்பரம் நான்கு அங்கங்களைக் கொண்டது. வேதத்தின் பெருமையை ஸ்தாபிக்க ஏராளமான வாதங்களில் ஈடுபடும் மீமாம்சகனான சங்கர்ஷணன்தான் கதாநாயகன். சங்கர்ஷணன் ஜயந்த பட்டரின் சாயையில் உருவாக்கப்பட்டுள்ளார். முதல் அங்கத்தில் சங்கர்ஷணன் ஒரு பௌத்தத் துறவியை வாதத்தில் தோற்கடிக்கிறார். இரண்டாவது அங்கத்தில் மோதுவது ஒரு ஜைனத் துறவியுடன். மூன்றாவது அங்கத்தில் சங்கர்ஷணன் ஒரு சைவ சித்தாந்த அறிஞருடன் இணைந்து சார்வாகன் ஒருவனை வாதத்தில் வெல்கிறார். நான்காவது அங்கம்தான் சுவாரஸ்யமானது. சங்கர்ஷணன் பாஞ்சராத்ர தரப்புடன் மோத வேண்டிய அவசியம் வருகிறது. சங்கர்ஷணனுக்கு விஷ்ணு பக்தி உண்டு. போதாக்குறைக்கு மஹா ராணி பாஞ்சராத்ர சமயத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கிறார். இந்நிலையில் அவர்களுடன் வாதிடுவது எந்த அளவிற்குச் சரியாக இருக்கும் என்ற தயக்கம் சங்கர்ஷணனுக்கு ஏற்படுகிறது. அந்த வாதத்திற்கு நடுவராக வரும் தைரியராசி என்னும் நியாய அறிஞர் சங்கர்ஷணனது குழப்பங்களைத் தீர்த்து வைக்கிறார். வைதீக மதங்கள் மட்டும் அல்லாமல் பௌத்தம், ஜைனம் போன்ற மதங்களுடனும்கூட உரசல் இல்லாமல் இருக்க வழியுண்டு என்கிறார். இவரது பேருரை ஜயந்த பாட்டர் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு.

ஷண்மத நாடகம் என்றும் அழைக்கப்படும் ஆகமடம்பரத்தை வாசிப்பவர்களுக்கு மஹேந்திர வர்மனின் (571– 630CE) மத்தவிலாசம் நினைவிற்கு வரக்கூடும். ஆனால் இந்த நாடகம் மத்தவிலாசத்தைவிட காத்திரமான ஒன்று. தவிரவும் இந்த நாடகத்தில் காணப்படும் நகைச்சுவையம் விசேஷமானது. முதல் காட்சியில் சூத்ரகாரகன் (நாடகத்தின் இயக்குநர்) மேடையில் தோன்றி தன் தலையெழுத்தை எண்ணிப் புலம்புகிறார். அவரது உதவியாளர் என்ன பிரச்சினை என்று கேட்கும்போது, “எவனோ பட்ட ஜயந்தானாம். சிறு வயதிலேயே நியாய சாஸ்திரம் தொடர்பான முக்கிய நூலை எழுதிவிட்டானாம். அது போதாது என்று தன்னைப் பெரிய நகைச்சுவையாளன் என்று எண்ணி ஒரு நாடகத்தை எழுதித் தொலைத்திருக்கிறான். நாடகத்தில் செவ்வியல் தன்மையும் இல்லை, ஜனரஞ்சகமான தன்மையும் இல்லை. இதையெல்லாம் அரங்கேற்ற வேண்டும் என்று அவரது சீடர்கள் கழுத்தறுக்கிறார்கள்” என்று பதிலளிக்கிறார். இந்த வகை சுயபகடியைத்தான் பின்நவீனத்துவ திறனாய்வாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாடகத்தில் வரும் நேரடியான தத்துவ இறையியல் விவாதங்கள் தாண்டி இதில் வரும் தத்துவம் சாராத ஒழுக்கம் / ஆச்சாரம் சார்ந்த தாக்குதல்கள் சுவாரசியமானவை. தத்துவ முரண்கள் தொடர்பான விவாதங்களை நம் தத்துவ நூல்களில் இருந்து நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அக்காலத்தில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது எத்தகைய அவதூறுகளை வைத்தனர் என்பது எளிதில் தெரியும் விஷயம் அல்ல. சமூகவியலும் சமயவியலும் இணையும் ஆய்வுகளில் இத்தகைய அவதூறுகள் குறித்த செய்தி மிக முக்கியமான இடம் வகிக்கிறது. ஆகமடம்பரத்தின் மையத்தில் சமய விவாதங்களும் விளிம்புகளில் சமய அவதூறுகளும் காணக் கிடைக்கின்றன. இவற்றைக் குறித்துப் பார்ப்போம்.

கதாநாயகனான சங்கர்ஷணனும் அவனது உதவியாளனும் மறைந்து இருந்து புத்தப் பிக்ஷுக்கள் உணவருந்துவதைப் பார்க்கின்றனர். சங்கர்ஷணன், “இந்தப் பிக்ஷுக்கள் செய்யும் உணவருந்துவதற்கு முன்பான சடங்குகள் சூத்திரர்கள் செய்யும் சடங்குகளை ஒத்ததாக இருக்கிறது” என்று நக்கல் செய்கிறார். உணவருந்துவதற்கு முன் பிக்ஷுக்கள் ஆசமநீயம், பரிசேஷணம் போன்ற சிலவற்றைச் செய்கின்றனர். இது அந்தணர்களும் செய்வதுதான். ஆனால் புத்தப் பிக்ஷுக்கள் செய்வது சூத்திரர்கள் செய்வதற்கு ஒப்பாக இருக்கிறது என்கிறார். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. 1) அக்காலகட்டத்தில் காஷ்மீரியத்தில் வாழ்ந்த சூத்திரர்களுக்கும் ஆசமநீயம் முதலான சடங்குகள் இருந்திருக்கின்றன. 2) வர்ண தர்மத்தை பிக்ஷுக்கள் கடைபிடிப்பதில்லை என கிசுகிசு சொல்வதில் இருந்து மற்றொரு விஷயம் தெளிவாகிறது. அக்காலகட்டத்தில் பௌத்தம் தன்னை வர்ண முறைகளுக்கு எதிரான பிரிவு எனப் பிரகடனம் செய்துகொள்ளவில்லை. அது வேறு சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டாக மட்டும்தான் இருந்திருக்கிறது.

பிக்ஷுக்கள் அசைவ உணவு உண்பதும் அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது. இவர்கள் தங்களைச் சாக பக்ஷிணிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அசைவத்தை உண்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து பிக்ஷுக்கள் அக்காலகட்டத்தில் சைவ உணவு உண்பவர்களாகத்தான் கருதப்பட்டார்கள் என்று புரிகிறது. பிக்ஷு தனது பிச்சைப் பாத்திரத்தில் விழும் உணவு, அது சைவமோ அசைவமோ, உண்ணலாம் என்பது அக்காலகட்டத்தில் அதிகம் புழக்கத்தில் இல்லை என்று கருதவேண்டியுள்ளது. பழரசம் என்ற பெயரில் மது அருந்துகிறார்கள் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. புத்தப் பிக்ஷுக்கள் மடாலயத்தில் பெண்களை மோகத்துடன் பார்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. மது, மங்கை ஆகியவற்றை எதிரியைப் பழிக்கப் பயன்படுத்துவது என்பது இன்றளவும் சாதாரணமாக உள்ள விஷயம்தான்.

சமணர்களைக் குறித்த பகுதியில், விதூஷகன் ஒருவன் மூலம், சமண மடாலயங்களில் இருந்த ஆண் துறவிகள் அங்கிருந்த பெண் துறவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் வழக்கம் உண்டு என நிறுவ முயல்கிறார் நாடக ஆசிரியர். மேலும் சமணர்களின் நனி சைவ உணவு, வாழ்க்கை முறை குறித்தும் ஒரு குறிப்பு வருகிறது. இப்பகுதியில் வேறு ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைக்கிறது. சங்கர்ஷணனிடம் உரையாடும் சமணத் துறவி ஒருவர், அவரது சமயத்தைச் சார்ந்த வெவ்வேறு பிரிவினரைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார். திகம்பரர்கள், ஸ்வீதம்பரர்கள் போன்றவர்களைக் குறித்துச் சொல்வதுடன் நிற்காமல் காவி உடை அணிந்திருக்கும் ஒரு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இவர்கள் “அந்தணத் துறவிகள் / மாணவர்கள்” என்கிறார். சமணர்கள் இடையே அந்தத் துறவிகள் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. பாகவதத்தில் சமணராக மதம் மாறிய அந்தணன் திரும்பி வைணவத்திற்குள் வந்தால் அவனுக்கு அனுமதி அளிக்கலாம் என்பது போன்ற வசனங்கள் உண்டு. அடுத்த வரியில் ஹம்சர்கள் என்னும் துறவுப் பிரிவைக் குறித்துச் சொல்லப்படுகிறது. சமணத் துறவிகளிலும் ஹம்சா பட்டத்துடன் கூடியவர்கள் இருந்தார்களா அல்லது ஜயந்த பட்டர் வேதாந்தத் துறவுப் பிரிவுகளைக் குறித்து தெரிந்துகொள்ளலாமல் வேதாந்தத் துறவிகளுக்கும் சமணர்களுக்கும் பொதுவாக இருக்கும் கடும் கொல்லாமை நோன்பு, நான்கு மாத நோன்பு ஆகியவற்றால் குழம்பி இருவரையும் ஒரே பிரிவிற்குள் அடைத்தாரா என்று தெரியவில்லை.

அடுத்ததாக, நீலாம்பரர்கள் எனும் சமயப்பிரிவைக் குறித்த வர்ணனைகள் வருகின்றன. இப்பிரிவு யாதென்று சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வாம மார்க்கத்தை அனுசரிக்கும் ஒரு பிரிவு இதுவென்று அவர்களைக் குறித்த வர்ணனைகள் வாயிலாகப் புரிகிறது. ஆனால் இவைகளைக் குறித்து வேறு எந்த நூலிலும் எந்தக் குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே கருநீலவண்ணப் போர்வையை ஆணும் பெண்ணும் சேர்ந்து போர்த்திக்கொண்டு நடமாடுவதே இவர்களது வாடிக்கை என்கிறார் ஜயந்த பட்டர். மதுவருந்துதல், முயங்குதல் ஆகியவையே சாதனா மார்க்கம். இவ்வுலகிலும் அவ்வுலகிலும் இன்பம் என்பதே குறிக்கோள். கதாநாயகன், “இது என்ன புது வகையான மஹா விரதமா?” என்று கேட்கிறான். இங்கு சொல்லப்படும் மகா விரதம், பாசுபதர்களின் மஹா விரதமாக இருக்க வாய்ப்பில்லை. தைத்திரியத்தில் ஒரு மஹாவிரதச் சடங்கு சொல்லப்படுகிறது. ஒரு வருட காலம் பிரம்மச்சரியம் அனுஷ்டித்த பிறகு விலைமகளுடன் கூடும் வளமைக்கான சடங்கு அது. அநேகமாக இச்சடங்கை மனதில் வைத்தே பட்டர் “இது என்ன புது வகையான மஹாவிரதமா?” என்னும் கேள்வியை எழுப்பியிருப்பார். இந்த நீலாம்பரர்களை இப்படியே விட்டால் பெண்கள் ஒழுக்கம் கெட்டுவிடுவார்கள் என ஆத்திரப்படும் கதாநாயகன், கட்டாயமாக இவர்களைத் தனது அரசன் ஒழித்துக் காட்டுவார் என்று எண்ணி சமாதானமடைகிறான்.

இதைத் தொடந்து இரண்டு காபாலிகர்கள் இடையேயான உரையாடல் வருகிறது. இந்த உரையாடல் மூலமாக, நீலாம்பரர்களைக் குறித்த தகவல்களை ஜயந்த பட்டர் வாயிலாக சங்கர்ஷணன் அரசனின் கவனத்திற்குக் கொண்டுசென்றதும், அரசன் நீலாம்பரர்களைத் தண்டித்து நாடுகடத்தியதும் தெரியவருகிறது. மேலும் அரசன் சங்கர்ஷணனுக்குத் திருமணம் செய்துவைத்து அவனை மத விவகாரங்களைக் கவனிக்கும் தர்மாதிகாரியாக நியமித்த விஷயமும் தெரிய வருகிறது. தாங்களும் மது, மாமிசம், மங்கை என்று இருப்பதால் அடுத்து தங்களைத்தான் சங்கர்ஷணன் குறிவைப்பான் என்று எண்ணி இருவரும் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு குருவாக இருக்கும் கபாலிகையை அணுகி அபாயம் கேட்கலாம் என முதலில் எண்ணுகிறார்கள். பிறகு அதில் பயன் இருக்காது என்ற முடிவிற்கு வந்து இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பெண் காபாலிகத் துறவிகளைக் குறித்தும் அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்ததைக் குறித்தும் சில தந்திர நூல்களில் செய்திகள் உள்ளன. அந்த மரபு ஜயந்த பட்டர் காலம் வரையிலும் இருந்திருக்கிறது என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

சங்கர்ஷணனது உதவியாளன், அவனிடம் ஒரு செய்தியைச் சொல்லுகிறான். நீலாம்பரர்களுக்கு நேர்ந்த கதியை அறிந்த வேறு பல சைவப் பிரிவினர், தங்களுக்கும் அத்தகைய விதிதானோ என்று எண்ணி வருந்துவதாகச் சொல்கிறான். வாம மார்க்கத்தைக் கைக்கொள்ளும் நீலாம்பரர்கள், காபலிகர்கள் போன்றோர்தான் அரசனுக்கு அஞ்ச வேண்டும் என்றும், பிறர் அரசனுக்கு அஞ்ச வேண்டியதில்லை என்றும் அரசனே பெரும் சைவன்தான் என்றும் சங்கர்ஷணன் விளக்குகிறார். இந்தக் காட்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் பயத்தையும் போக்குவதற்காக எழுதப்பட்ட ஒன்று.

இந்த நிலைப்பாட்டை விளக்க சங்கர்ஷணன் தர்ம சிவ பட்டாரகர் என்னும் சைவ குருவின் ஆசிரமத்திற்குச் செல்கிறான். அங்கு தர்ம சிவனுடன் உரையாடுகிறான். தர்ம சிவ பட்டாரகர் தனக்கு அரசன் மீது எந்தச் சந்தேகமும் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார். சங்கர்ஷணன், தர்மசிவ பாட்டரகருடன் வாதம் புரியவரும் சார்வாகன் ஒருவனை வாதத்தில் தோற்கடிக்கிறார். தர்ம சிவனும் சங்கர்ஷணனும் எதிரெதிர் பிரிவைச் சார்ந்தவர்கள். சங்கர்ஷணனுக்கு வேதமே பிரமாணம். தர்ம சிவ பட்டாரகருக்கோ ஆகமம்தான் பிரமாணம். இருப்பினும் வைதீக முறைக்கு எதிரான சார்வாகப் பிரிவைச் சார்ந்தவரை பொது எதிரியாகக் கருதி அவனை இருவரும் சேர்ந்து எதிர்க்கின்றனர். பொது எதிரிக்கு எதிராக இணைந்து செயல்படுதல் என்பது சின்ஹா நாடகத்தின் மையக் கருத்துகளில் ஒன்று. இக்காட்சியின் இறுதியில் சைவர்கள், பாசுபதர்கள், காளாமுகர்கள், மஹா விரதர்கள் போன்ற பிரிவினருக்கு அரசரால் எந்தத் தொல்லையும் வராது என்று உறுதி கூறுகிறார்.

அடுத்த அங்கத்தின் துவக்கத்தில் இரண்டு வைதீகர்களது உரையாடல் வருகிறது. அதில் ஒருவர் பாஞ்சராத்ரிகர்களைக் குறித்து குற்றம்சொல்கிறார். (பாஞ்சராத்ர சமயப்பிரிவு மிகவும் தொன்மையானது. சங்கரர் தனது பிரம்மசூத்ர பாஷ்யத்தில் இவர்களை எதிர்த்தரப்பாகக் கருதி கண்டித்திருக்கிறார். இதிலிருந்து ஆதி சங்கரர் காலத்திற்கு முன்பாகவே இவர்கள் ஒரு குறிப்பிடத்தக்கப் பிரிவாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அத்வைதிகளைக் குறித்து எந்தக் குறிப்பும் இல்லாத இந்த நாடகத்திலும் பாஞ்சராத்ரப் பிரிவைச் சார்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க சமயப்பிரிவாக முன்வைக்கப்படுவதை கவனத்தில்கொள்ள வேண்டும்.)

“பாஞ்சராத்ர பிரிவினர் தங்களை அந்தணர்கள் என்று சொல்லிக்கொள்கின்றனர். வேத மந்திரங்களைக் கூறுகின்றனர். அவர்களது ஆகம நூல்களையும் ஸ்வரத்தோடு ஓதுகின்றனர்… சைவர்களாவது பரவாயில்லை. தங்களை வைதீகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் சொல்லிக்கொள்கின்றனர். வர்ணாஸ்ரம கோட்பாட்டைக் குறித்துப் பேசுவதில்லை. ஆனால் பாஞ்சராத்ரிகர்களோ தங்களைப் பிறப்பிலேயே   அந்தணர்கள் என்றும் வைதீகர்கள் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்” என்கிறார் ஒரு வைதீகர். அவருக்குச் சமாதானம் சொல்லும் மற்றொரு வைதீகர், “காலம் காலமாக கற்றல், கற்பித்தல், திருமண உறவு போன்றவற்றில் நாம் அவர்களுக்கு ஓரளவு அங்கீகாரம் கொடுத்திருக்கிறோம். அதனால் இதுவொரு பெரிய பிரச்சினை இல்லை” என்கிறார். மேலும் “பாஞ்சராத்ரிகர்கள் முழுமையாக வேதத்தைக் கற்றுக்கொள்ளப் போவதோ யாகங்களை நடத்தப்போவதோ இல்லை. சிறிதளவு மந்திரங்களை மட்டும் கற்றுக்கொண்டு வாழப்போகிறார்கள். ஏதாவது வீழ்ந்த அந்தணப் பெண்ணைத் திருமணம் செய்தால் பிரதிலோம குற்றத்தில் சிக்குவார்கள்” என்கிறார். 

அர்ச்சகப் பணியைச் செய்யும் அந்தணர்கள், தேவாலகர்கள் ஆகி, மூன்று வருடங்களில் தங்கள் அந்தணத்தன்மையை இழப்பார்கள் என்று சில ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. தவிரவும் உடலில் சங்கு சக்ர முத்திரைகளைப் பதித்துக்கொள்வது ஸ்ம்ருதி விரோதம் என்ற வாதமும் உண்டு. இதன் காரணமாக பாஞ்சராத்ர அர்ச்சகர்கள் அந்தணர்கள் அல்ல என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கலாம்.

இப்பகுதி மிக முக்கியமானது. இது தரும் மானுடவியல் சார்ந்த செய்தி குறிப்பிடத்தக்கது. இன்றளவும் பாஞ்சராத்ர அந்தணர்கள் தமிழகத்தில் தனிப்பிரிவினராகவே இருக்கின்றனர் (தமிழகத்தைத் தாண்டி பாஞ்சராத்ர அந்தணக் குடிகள் வேறு எங்கும் பெரிய அளவில் இருப்பதாகத் தெரியவில்லை). அவர்களுடன் நெருக்கமான சமய உறவு பாராட்டும் அய்யங்கார்கள்கூட அவர்களுடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொள்வது இல்லை. பலர் எண்ணுவது போல இந்தப் பாஞ்சராத்ர அர்ச்சகக் குடியினர் ராமானுஜ வைணவர்கள் அல்ல. இவர்கள் ராமானுஜர் காலத்திற்கும் முன்னதாகவே தங்களுக்கென்று ஒரு தனி சமய வழியைக் கொண்ட குடியினராக இருந்தனர். ராமானுஜரும் வேறு பல வைணவப் பிரிவைச் சார்ந்தவர்களும் இவர்களது கோட்பாடுகள் பலவற்றை ஏற்று உள்வாங்கி தங்களது சமயப் பள்ளிகளை ஸ்தாபித்தனர். ராமானுஜர் காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்னர் எழுதப்பட்ட இந்த நாடகத்திலும் இவர்கள் அந்தணர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவதைப் பார்க்கிறோம். இதையும் ராமானுஜர் அந்தணர் அல்லாதவரை அந்தணர்களாக மாற்றினார் என்ற வாதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒருவேளை, ராமானுஜர் பாஞ்சராத்ர கொள்கைகளை ஓரளவு ஏற்றுக்கொண்டதால் இந்த வாதம் வந்திருக்கக்கூடும் ராமானுஜர் தனது வைணவப் பிரிவினரை இவர்களுடன் மண உறவு கொள்ள ஊக்குவிக்கவில்லை என்பது இன்றளவும் இவர்கள் தனிக்குடியாக இருப்பதில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரம், அக்காலகட்டத்திலேயே வைதீகர்களில் ஒரு பிரிவினருக்கு இவர்களை அந்தணர்களாக ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை என்பதும் இந்த நாடகத்திலேயே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், சைவர்கள் தங்களை வைதீகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்ற வரி. நூலாதாரங்களின் அடிப்படையில் ஆகம சைவர்கள், பாசுபத சைவர்கள் போன்றோர் வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொண்டனர் என்று தெரிகிறது. அந்த அடிப்படையில் சிந்திக்கும் போது, இங்கு கூறப்படுவது வேறு ஏதாவது ஒரு சைவப் பிரிவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்றளவும் வைகாநஸர், பாஞ்சராத்ர பட்டர்கள், ஆதி சைவர்கள் ஆகியோர் அந்தணர்களுக்கு உள்ளேயே விளிம்புநிலைக் குடியினராக இருக்கின்றனர். இந்த நிலை 1300 ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமே.

அடுத்து சங்கர்ஷணன் பாஞ்சராத்ர பாகவதர்கள் இருக்கும் சபைக்குச் செல்கிறான். அவர்களது கோட்பாட்டை சங்கர்ஷணனால் ஏற்க முடியவில்லை. ஆனால் அவர்களைக் கண்டிக்கவும் விஷ்ணு பக்தனான சங்கர்ஷணனுக்கு மனம் வரவில்லை (சங்கர்ஷணன் என்ற பெயருடைய ஒருவர் பாஞ்சராத்ரத்தைக் கண்டிப்பதென்பது சுவையான முரணாக இருந்திருக்கும்). சங்கர்ஷணனது தயக்கத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு. பாஞ்சராத்ர வைணவர்கள் மகாராணியின் ஆதரவைப் பெற்றவர்கள். அவர்களைக் கண்டித்தால் அது மகாராணியைக் கண்டித்தது போலாகிவிடும். மனக்குழப்பத்துடன் சங்கர்ஷணன் அருகில் இருக்கும் விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று மஹா விஷ்ணுவிடம் முறையிடுகிறான்.

பஞ்சராத்ரிகர்களுடனான விவாதத்தில் நடுவராக இருக்க தைரிய ராசி என்னும் நியாயிகர் வருகிறார் (ராசி என்னும் பெயர் விகுதி சைவர்களுக்கு, அதிலும் குறிப்பாக, பாசுபத சைவர்களுக்கு மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது என்னும் கல்வெட்டு ஆய்வாளர்களின் கருத்திற்கு மாறாக இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் அமைந்துள்ளது). தைரிய ராசி மீமாம்சத்திகர்களுக்கும் பஞ்சராத்ரிகர்களுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்துகிறார். அவர் ஒரு ஒட்டுமொத்த சமரச வாதத்தை முன்வைக்கிறார். அவரவர்களுக்கு அவரவர் நம்பும் விஷயம் சத்தியம் என்று விளக்குகிறார்.

தைரிய ராசியின் விளக்கத்தை சங்கர்ஷணன் பாராட்டுகிறான். சபையோரிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறான். அவை- அ) ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரது சடங்குகளை, கோட்பாடுகளைக் கைக்கொண்டு குழப்பம் விளைவிக்கக்கூடாது. ஆ) தங்கள் பிரிவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி குழப்பம் விளைவிப்பவர்களைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது. இதற்குப் பதிலளிக்கும் சபையோர், மனு சொன்ன அஹிம்சை முதலியவற்றை மட்டுமே தாங்கள் பொதுவானதாகக் கருதுவதாகவும் பிற விஷயங்களில் ஒருவர் மற்றொருவர் வழியைக் கைக்கொள்வதில்லை என்றும் சொல்லி சங்கர்ஷணனது கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர். இத்துடன் நாடகம் நிறைவடைகிறது.

*

இந்த நாடகம் நான்கு தளங்களில் அழகியலுக்கு அப்பாற்பட்ட முக்கியத்துவம் உடையது. அ) இந்த நாடகம் ஒன்பதாம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் இருந்த சமய-சமூக நிலை குறித்த ஒரு குறுக்குவெட்டுப் பார்வையை அளிக்கிறது. ஆ) பல்வேறு சமயப்பிரிவினர் எவ்வாறு இணைந்தும் பிரிந்தும் செயல்பட்டனர் என்பதைக் காட்டுகிறது. தங்களுக்குள் முரண்படும் மீமாம்சகமும் சைவமும் சார்வாகத்திற்கு எதிராக ஒன்றிணைவது ஓர் எடுத்துக்காட்டு. (இறையியல் ரீதியாக ஜயந்த பட்டர் சைவர்தான். ஆனால் தத்துவ ரீதியாக சைவர் அல்ல. அதனாலேயே அரசனது சைவம் அவருக்கு ஏற்புடையதாக இருந்திருக்காது) இ) அரசன் சைவன். அரசி பாஞ்சராத்ர வைணவர். அமைச்சர் மீமாம்சகர். எனினும் அந்த நாட்டில் ஓரளவுக்காவது சமயச் சுதந்திரம் பாராட்டப்பட்டது என்று ஜயந்த பட்டர் இந்த நாடகம் மூலம் விளக்குகிறார். பௌத்தம், சமணம் போன்ற அவைதீக மதங்கள்கூட ஒதுக்கப்படவில்லை. பொது அமைதிக்கும் பொது ஒழுக்கத்திற்கும் குந்தகம் வராத வரை சமய விவகாரங்களில் அரசு தலையிடாது என்பதே ஜயந்த பட்டரின் வாதம். ஈ) கடைசியாக, ஒரு சமயப்பிரிவைச் சார்ந்தவர் மற்றொரு சமயப்பிரிவைச் சார்ந்த அரசனிடம் பணிபுரிய வேண்டிய சூழல் வரும்போது மத அரசியலை அரசவையில் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்ற கேள்விக்கும் இந்த நாடகத்தில் பதில் இருக்கிறது. நாடகத்தின் இறுதியில் தைரிய ராசி பேசும் சமரச வாதம் பார்வையாளர்களுக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல. அது சைவ அரசனிடமும் வைணவ அரசியிடமும் பணிபுரிய வேண்டிய நிலையில் இருந்த மீமாம்சக நியாயிகரான ஜயந்த பட்டர் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சமாதானமும்தான் .

*

கட்டுரைக்கு உதவிய நூல்கள் / மேலும் வாசிக்க: 

  1. Agamadambara of Jayanta Bhatta, Ed: Raghavan, V.Mithila Institute, 1964
  2. Much Ado About Religion by Bhatta Jayantha, Edited and Translated by Csaba Dezso, New York University Press, 2005. 

1 comment

K Chitra April 16, 2021 - 3:32 pm

செம

Comments are closed.